தோழர்

அத்தியாயம் 15

ஜார்ஜ் வீரத்

மான்செஸ்டரில் அயர்லாந்து மக்கள் பரவலாகக் குடியேறியிருந்தனர். பிழைப்புக்காக தங்கள் நாட்டைவிட்டு இவர்கள் வெளியேறி பிரிட்டனை வந்தடைந்திருந்தனர். பெரும்பாலானோர் தொழிலாளர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள். பெரும் தொழில் நகரமாக அறியப்பட்டிருந்த மான்செஸ்டரை நோக்கி எறும்பு வரிசை போல் சாரைச் சாரையாக வந்து குவிந்துகொண்டிருந்தனர். இவர்கள் பிரிட்டனைக் கடவுளாகப் பார்த்தனர். கடுமையான பணி, மோசமான குடியிருப்பு, இரண்டாம்தர  வாழ்விடம் எதுவும் இவர்களை அசைக்கவில்லை. மேரி பர்ன்ஸ் அவர்களில் ஒருவர்.

எங்கெல்ஸ் குமாஸ்தாவாகப் பணியாற்றி வந்த அதே தொழிற்சாலையில்தான், மேரி பர்ன்ஸும் வேலை செய்து செய்து வந்தார். சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்டவர். மான்செஸ்டர் நகருக்கு அருகிலுள்ள சால்ஃபோர்ட் என்னும் பகுதியில் இவர் வசித்து வந்தார். எங்கெல்ஸ், தொழிலாளர்கள் மீது வெளிப்படுத்திய பரிவும், அன்பும் அவரைத் திகைக்கவைத்தது.  தொழிற்சாலையில் மட்டுமல்ல, வெளியிலும்கூட எங்கெல்ஸ் அவர்கள் பற்றியே சிந்தித்து வந்தார் என்பதை அறிந்தபோது மேரி பர்ன்ஸ் மகிழ்ச்சியடைந்தார்.

மேரியிடம் தென்பட்ட ஒளிக்கீற்று எங்கெல்ஸைக் கவர்ந்தது. உதவும் குணம் கொண்டவராகவும், எந்த விஷயத்தையும் கறாராக விமரிசிப்பவராகவும் தொழிலாளர்கள் மத்தியில் மேரி அறியப்பட்டிருந்தனர். பணி நேரம் முடிந்ததும், தொழிலாளர் குடியிருப்புக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்த எங்கெல்ஸ், மேரி பர்ன்ஸை அப்படிப்பட்ட ஒரு பயணத்தின் போது 1843ம் ஆண்டு சந்தித்தார். ஐரிஷ் தொழிலாளர்களின் வாழ்நிலை குறித்து பல விஷயங்களை எங்கெல்ஸிடம் பகிர்ந்து கொண்டார் மேரி.

எங்கெல்ஸைக் காட்டிலும் மேரி பிரிட்டனை நன்கு அறிந்திருந்தார். குறிப்பாக, மான்செஸ்டரின்  தொழிலாளர் வீதிகள் அனைத்தும் அவருக்குத் தெரியும். உங்களுக்கு என்னால் உதவ முடியும் என்று மேரி உற்சாகத்துடன் முன்வந்தபோது, எங்கெல்ஸ் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அது முதல், மேரி எங்கெல்ஸுடன் இணைந்துகொண்டார். விடுமுறை தினங்களில், மான்செஸ்டரை இருவரும் சுற்றி வருவார்கள். எங்கெல்ஸ் அதற்கு முன் பார்த்திராத பல குடியிருப்புகளுக்கு மேரி அவரை அழைத்துச்சென்றார்.

மான்செஸ்டரில் ஐரிஷ் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அந்நகரமே லிட்டில் அயர்லாந்து என்றும் ஐரிஷ்டவுன் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இடிபாடுகளுக்கு இடையே வசித்து வந்த ஐரிஷ் தொழிலாளர் வர்க்கத்தை அருகில் சென்று பார்த்து, புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எங்கெல்ஸின் ஆய்வுக்கு இந்தப் பயணங்கள் மிகவும் உதவிகரமாக இருந்தன. குறிப்பாக, மேரி வசித்து வந்த சால்ஃபோர்ட் அவரைத் திடுக்கிட வைத்தது.

டிசம்பர் 1983ல் ஜார்ஜ் வீர்த் (Georg Weerth) என்னும் ஜெர்மானிய கவிஞரை எங்கெல்ஸ் சந்தித்தார். பிரிட்டனின் வடக்குப் பகுதியில் உள்ள பிராட்ஃபோர்ட் என்னும் பகுதியில் ஜார்ஜ் வசித்து வந்தார். ஒரு ஜெர்மானிய நிறுவனத்தின் ஏஜெண்டாக இவர் பணியாற்றி வந்தார்.

எங்கெல்ஸைப் போலபே ஜார்ஜும், தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்டவர். இயற்கை, காதல், கடவுள் என்றில்லாமல், தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து இவர் கவிதைகள் எழுதி வந்தார். எங்கெல்ஸைப் போலவே, இவரையும் மான்செஸ்டர் ஆழமாகப் பாதித்தது. தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம் இவரை உத்வேகம் கொள்ள வைத்தது. தொழிலாளர்கள் ஒன்றுபட்டால், ஒரு வர்க்கமாக அவர்கள் திரண்டால், முதலாளித்துவத்தின் கோரப் பிடியைத் தகர்க்கமுடியும் என்று அவர் நம்பினார். தன் நம்பிக்கையை கவிதைகளில் பதிவு செய்து வந்தார்.

கவிதைகளில் இருந்து கட்டுரைகளுக்கு ஜார்ஜ் திரும்பியதற்குக் காரணம் ரைன் ஜர்னல். கார்ல் மார்க்ஸ் ஆசிரியராக இருந்தபோது, ஜார்ஜ் வீர்த், தன் படைப்புகள் அவரிடம் அனுப்பி வைத்தார். அவற்றில் சில மார்க்ஸால் பதிப்பிக்கப்பட்டன. தொடர்ந்து பல கட்டுரைகள் வெளிவந்தன. சில கட்டுரைகளை ஜார்ஜ் திருத்தியும் கொடுத்தார்.

அதே இதழ்களில் வெளிவந்த எங்கெல்ஸின் கட்டுரைகளை வாசித்து பெரிதும் கவரப்பட்டார் ஜார்ஜ். ஓர் உண்மை புரிந்தது. தொழிலாளர்களைக் கனவுகளுடனும் கவித்துவத்துடனும் அணுகுவதில் பயனில்லை. கனவு தெளிந்து, நிஜம் புரிந்து அவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் தனி நபர்கள் அல்லர். ஒரு வர்க்கமாகத் திரளவேண்டியவர்கள். பிரஷ்யா, பிரிட்டன் எங்கு சென்றாலும் அவர்கள் சந்திக்கநேரும் பிரச்னைகள் ஒன்றுதான். முதலாளித்துவம்.

சாசன இயக்கத்தின் பலம், பலவீனம் பற்றிய எங்கெல்ஸின் ஆய்வு ஜார்ஜை பெரிதும் கவர்ந்தது. மான்செஸ்டரில் தங்கியிருந்த எங்கெல்ஸை ஆர்வத்துடன் வந்து சந்தித்தார் ஜார்ஜ். அவருடன் கைகுலுக்கிக்கொண்டார். மான்செஸ்டர் நகரில் எங்கெல்ஸ் மேற்கொண்டு வரும் பயணங்களைப் பற்றி விலாவரியாகக் கேட்டறிந்துகொண்டார். எங்கெல்ஸின் ஆய்வையும் அவரது அணுகுமுறையையும் பற்றி விவாதித்தார். நானும் உங்களுடன் வரலாமா என்று கேட்டு, தன்னையும் எங்கெல்ஸின் குழுவில் ஒருவராக இணைத்துக்கொண்டார். எங்கெல்ஸ், மேரி, ஜார்ஜ் மூவரும் ஒரு புள்ளியில் ஒன்று குவிந்தனர்.

1845ம் ஆண்டு, எங்கெல்ஸைப் பற்றி ஜார்ஜ் ரைன் ஜர்னலில் எழுதிய குறிப்பு இது.

‘பிரிட்டனின் தொழிலாளர் வர்க்கம் பற்றி எங்கெல்ஸ் புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஜெர்மனியின் தலைசிறந்த தத்துவ அறிஞர்களில் ஒருவர் எங்கெல்ஸ். அந்த வகையில், இந்தப் புத்தகம் பெரும் மதிப்பு வாய்ந்தது, முக்கியத்துவம் பெற்றது. பிரச்னையின் தீவிரத்தை என்னைவிட  தெளிவாகவும், சீராகவும் எங்கெல்ஸ் முன்வைப்பார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. உழைக்கும் வர்க்கத்தின் தொட்டிலாகத் திகழும் மான்செஸ்டரில் நீண்ட காலமாக அவர் மேற்கொண்டு வரும் பயணங்கள் அவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.’

மான்செஸ்டரில் இரண்டாண்டு காலம் மேற்கொண்ட ஆய்வுகள் சில உண்மைகளை எங்கெல்ஸுக்கு உணர்த்தின. உழைக்கும் மக்கள் கடும் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் வாழ்நிலை மோசமாக இருக்கிறது. முதலாளிகளால் அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். இதில் சந்தேகம் எதுவும் இல்லை. அதே சமயம், உழைப்பாளி வர்க்கம் துன்புறும் ஒரு வர்க்கம் மட்டுமல்ல. அந்தத் துன்பத்தை எதிர்த்து போராடக்கூடிய போர்க்குணம் கொண்ட ஒரு வர்க்கமும்கூட. தொழிலாளர்கள். எதிர்காலத்தை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்தும் பலகீனமானவர்கள் அல்லர். எதிர்காலத்தை  மாற்றியமைப்பதற்கான பலத்தையும் உத்வேகத்தையும் பெற்றவர்கள். ஆம், அவர்கள் போராளிகள்.

முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்த கருத்துகளுக்கு முரணானதாக இருந்தது எங்கெல்ஸின் முழக்கம். தொழிலாளர் நலன் சார்ந்த சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்பதே அவர்களுடைய வாதமாக இருந்தது. எங்கெல்ஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிலாளர்களுக்கு முதலாளிகளின் பரிதாப உணர்வோ, மன்னிக்கும் குணமோ, கருணையோ தேவையில்லை என்றார் எங்கெல்ஸ்.

எனில், அவர்களுடைய தேவைதான் என்ன? எங்கெல்ஸ் தீர்மானமாக பதிலளித்தார். தங்களுக்குத் தேவையானதை அவர்களே போராடிப் பெற்றுக்கொள்வார்கள்! அவர்களை யாராலும் தடுக்க முடியாது.

(தொடரும்)

எனக்கு ஏழு வயசு

தாஹுய் ஜொன்காவ் என்பவர் புகழ் பெற்ற ஜென் துறவி. சீனாவைச் சேர்ந்தவர்.

இவரிடம் ஒருமுறை யாரோ கேட்டார்கள். ‘குருவே, உங்கள் வயது என்ன?’

தாஹுய் ஜொன்காவ் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதில், ‘ஏழு வயது!’

’என்னது? ஏழு வயதா? நம்பமுடியவில்லையே!’

‘நம்புங்கள்’ என்றார் தாஹுய் ஜொன்காவ். ‘என்னுடைய முதல் ஐம்பது வருடங்களுக்குமேல் ஞானத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் வீணாகக் கழித்தேன். அதன்பிறகுதான் எனக்கு ஒரு நல்ல குருநாதர் கிடைத்தார், சரியான பாதை கிடைத்தது, ஞானத்தைத் தேடத் தொடங்கினேன், இயற்கையை, இறைவனை, உலகத்தை, இவை ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவிக்கிற மனோநிலை கிடைத்தது. அதன்பிறகு வாழ்ந்த ஏழு வருடங்களைமட்டுமே நான் என்னுடைய உண்மையான வாழ்நாளாகக் கருதுகிறேன். அதனால்தான் என் வயது ஏழு என்று சொன்னேன்!’

உங்கள் வயது என்ன?

அல்வா

அத்தியாயம் 20

கலீல் ஸ்விம்மிங் உடையில் இருந்தான்.  மாளிகையின் வரவேற்பறையைத் தாண்டி உள்ளே செல்லும் பாதையிலேயே இருந்தது நீச்சல்குளம். மூன்று மாடிகளுக்கு மேலிருந்த சீலிங்கும் சுற்றி இருந்த கண்ணாடி ஜன்னல்களும் சூரிய வெளிச்சத்தைத் தடையின்றி அளித்துக்கொண்டிருந்தது. ஆரஞ்சுத்துண்டு செருகிற நீண்ட கோப்பையில் இருந்து திரவத்தை உறிஞ்சிக் கொண்டான்.

மீக் முழு உடையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து லேப்டாப் உபயோகித்துக்கொண்டிருந்தான். ஆஷ்ட்ரேவில் கவனிக்கப்படாத சிகரெட் சோம்பேறிதனமாக புகை விட்டுக்கொண்டிருக்க “கலீல், ஒன் மினிட்” என்றான்.

கலீலுக்கு பெயர் சொல்லி அழைக்கும் நண்பர்கள் கல்லூரி காலத்தோடு வழக்கொழிந்து விட்டிருந்தார்கள். சார், சாப், மாலிக், அரபாப் என்று மரியாதை மிக்க அடைமொழிகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்தவனுக்கு மீக் பெயர் சொல்லி அழைத்தது முதலில் வித்தியாசமாகத்தான் இருந்தது. அதே நேரத்தில், பிடித்தும் இருந்ததால் தடை செய்யவில்லை. ப்ளாக்மெயிலர் போல அறிமுகமானவனோடு நட்பு வந்ததும் அவனுக்கே ஆச்சரியம். மீக்கின் காரணங்கள் வலுவாக இருந்தன. சாலிஸ் கொடுத்த பிச்சைக்காரச் சம்பளம், செட்டில் ஆகத்தேவையான பணம்..

கலீலின் எடைக்கு நீச்சல்குளக் கம்பிகள் அபாயகரமாக ஆடின. “சொல்லு மீக்” என்றான் பக்கத்து நாற்காலியில் உடம்பைச் சாய்த்து.

“நாளை காலைதானே நீ அவர்களைச் சந்திக்கப் போகவேண்டும்?”

“பேட்டரிகள் தயார் ஆகிவிட்டால்”

“அமீர் எதாவது அப்டேட் செய்தானா?”

”இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கேயே வந்துவிடுவான். ”

“குட். இந்த டாகுமெண்டை ஒரு கோ-த்ரூ செய்துவிடு.”

“என்ன இது?” தலையைச் சாய்த்துக்கொண்டு காதுமடல்களின் பின்பக்கம் தடவிக்கொண்டிருந்தான்.

“ஸ்ட்ராடஜி. கேம்ப்ளான்”

“நீயே சொல்லிவிடு. இப்போது படிக்க முடியாது.” காதில் இருந்து தண்ணீர் கொட்டியவுடன் “அப்பாடா” என்றான்.

மீக் தொண்டையைக் கனைத்துக்கொள்ள.. “வெயிட்.. அதோ அமீரே வந்துவிட்டான்.”

அமீர் மீக்கைப் பார்த்த பார்வையில் நட்பு இல்லை.

“அமீர்! குட் ஜாப் இன் சிராக்கூஸ். அங்கே ஒரு தடயமும் இல்லை. க்ளீன் ஜாப். உன்னைப்பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்.” என்றான் மீக். அமீருக்குக் கொஞ்சம் குளிர்ந்தது.

துண்டை இடுப்பில் முடிந்துகொண்டான்  கலீல். “நீங்கள் இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவது நல்லது. யெஸ் அமீர், உனக்கு ஈகோ இருக்கும்தான். ஆனால் மீக்கும் எனக்கு முக்கியம்”

”கலீல், நீ இன்னொரு லேப் ஸ்விம் பண்ணிவிட்டு வா. நான் அமீரை இதுவரை அப்டேட் செய்துவிடுகிறேன்.”

கலீல் கொஞ்ச நேரம் கழித்து சொட்டச் சொட்ட வந்தான்.

“இப்ப நாளைக்கு மீட்டிங்லே கலீல் என்ன பண்ணப்போறார் தெரியுமா?” என்றான் மீக்.

”எனக்கே தெரியாது” என்றான் கலீல்.

“நாம் அவர்களுடம் ஒரு பேட்டரியையும் கொடுக்கப்போவதில்லை”

“சரிதான். யாருடன் விளையாடுகிறாய் தெரியுமா? ஷேக்!”

“இந்த பயத்தை முதலில் விடு கலீல். யெஸ், அவர்கள் பவர்ஃபுல், அவர்கள் விளையாட்டுக்கு எந்த ரூல்ஸும் கிடையாது.. ஆனால் உன்னிடம் இருக்கும் பொருள் அவர்களுக்கு அவசியம், அவசரம்.”

“அவசியம் சரி, அவசரம்?” அமீர் மீக்குடன் சகஜமாகிவிட்டான்.

“மிகமிகமிகமிக அவசரம். அதுதான் இப்போது நான் கண்டுபிடித்த முக்கியமான தகவல். போன வருடம் லிபியாவில் ட்ரிபோலி போலீஸ் சந்தேகத்துக்கு இடமானவர்கள் என்று நான்கு பேரைக் கைது செய்தது. கைது செய்த விவரம் பேப்பரில் இருக்கிறது. ஆனால் மேல் விவரம் எதுவும் இல்லை. என்ன சந்தேகம், என்ன கேஸ், என்ன தீர்ப்பு எந்த விவரமுமே இல்லை.”

“அதற்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?”

“வருகிறேன்.. இந்த நான்கு பேரையும் அமெரிக்கா கேட்கிறது, லிபியா தரமறுக்கிறது”

“ஏன்?”

“லிபியா நாட்டுக் கைதிகளை அமெரிக்காவுக்குத் தர எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தம் வேண்டும் இல்லையா? இப்போதைக்கு எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீட்டி இல்லை. அதனால்தான்.”

“அந்த நான்கு பேரும்?”

“யெஸ், அமீர் கெஸ்ட் இட் ரைட். அந்த நான்குபேரும் உன் நண்பன் ஷேக்கின் நண்பர்கள். லிபியா இப்போதைக்கு அவர்களை அமெரிக்காவிடமும் தரவில்லை, சுதந்திரமாகவும் விடவில்லை. ஆனால்..”

“சொல்லு..”

“இன்னும் இரண்டு மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி லிபியா வருகிறார். பல பேச்சுவார்த்தைகள் நடக்கும், எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீட்டியும் கையெழுத்தாகும்..”

“ஸோ, ஷேக்குக்கு இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன” அமீர் மீக்கின் சிகரெட் பாக்கெட்டில் இருந்து சுவாதீனமாக ஒன்றை எடுத்துப் பற்றவைத்தான்.

”ஆமாம். அதற்குள் எதாவது பெரிய வேலை செய்து இவர்கள் விடுதலையை டிமாண்ட் செய்வார்கள். பேட்டரியை வைத்து பயமுறுத்தலாம். ஒன்றிரண்டு இடங்களை வெடிக்கலாம். பெரிய லெவல் ப்ளானிங் தேவைப்படும் வேலை இது. சுத்தமாக அவர்களிடம் நேரம் இல்லை”

“ஓக்கே.. அதனால் நமக்கு என்ன?”

“நீ டிலே ஆகிறதாகக் காட்டினாலே போதும், விலையை எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றலாம். இப்போதைக்கு உன்னை அவர்களால் பகைத்துக்கொள்ள முடியாது. டெமோ வேறு பார்த்திருக்கிறார்கள்”

கலீல் சிரித்தான். “உனக்குத் தெரியாத அந்த டெமோ பற்றி?”

“இன்னொரு விஷயம் .. டெரி ஒரு புத்திசாலி. கிடைத்த கொஞ்ச கேப்பில் ப்ரெயிலில் கோட் எழுதி வைத்துவிட்டான். ஏமாற்றத் தயங்க மாட்டான்.. ஏமாறாமல் இருக்க ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்”

கலீல் யோசித்தான். ”உண்மைதான். எப்படி டெஸ்ட் செய்யலாம்?”

“சிம்பிள். டெரியின் பேட்டரியை வைத்து, நாமே செக் செய்துவிடலாம். யாருக்கும் ஏமாற்று ஏற்பாடுகள் செய்ய வாய்ப்பே அளிக்காமல்.”

அமீர் சொன்னான். ”அங்குதான் ஒரு சின்னக் குழப்பம்”

கலீல் புருவத்தை உயர்த்தினான். “என்ன?”

“ஒரு அசிஸ்டண்ட் கொண்டு வந்தோம் இல்லையா? அவன் ஸ்மார்ட்டாக இருக்கிறான். உயிருக்கு உத்தரவாதம் வேண்டுமாம்”

“அசிஸ்டண்ட்? ” மீக் வியப்பாகக் கேட்டான். டெரிக்கு ஒரு அசிஸ்டண்ட் இருப்பதாக ஜூலியன் சொல்லவில்லையே. ஒருவேளை ஜூலியனேதானோ? டக்கென்று விளக்கெரிந்தது.  ரிக்கில் பார்த்த கையின் டாட்டு.

“ரெனே என்று ஒருவன். ஆராய்ச்சியில் டெரிக்கு வலதுகையாம்.”

மீக்குக்கு உள்ளுக்குள் சிரிப்பு. ரெனேவுக்கு பாஸிடிவ் நெகடிவ் டெர்மினலாவது தெரியுமா பேட்டரியில்? சொல்லிவிடலாமா என்று யோசித்தான். இப்போதைக்கு வேண்டாம். ஆனால் அவனையும் முடித்துவிட அருமையான சந்தர்ப்பம்.

“உயிருக்கு எப்படி உத்தரவாதம் வேண்டுமாம்?”

“பேட்டரி தயாரித்துத் தருவார்களாம். அல்மோஸ்ட் இப்போது முடிந்திருக்கும். ஆனால் சர்க்யூட் ப்ரொகிராம் செய்ய மாட்டார்களாம்.”

”ஓஹோ” ரெனேவின் புத்திசாலித்தனத்துக்கு என்ன குறை. ஆனால் என்னிடம் இப்போது மாட்டினாய் தம்பி நீ.

“அலெக்சாண்ட்ரியா போய்ச் சேர்ந்து சேஃப் ஆனதும் ப்ரொகிராம் வேல்யூஸ் தருவார்களாம்..”

”இவர்களை உயிருடன் விடமுடியுமா? சான்ஸே இல்லை” கலீல் தீர்மானமாகச் சொன்னான்.

மீக் கனைத்துக்கொண்டான்.”யெஸ். அவங்க சொல்ற மாதிரி கேட்டுறலாம்.”

அமீர் கோபமாக மீக்கைப் பார்த்தான். “இவர் யார் கட்சி பாஸ்?”

கலீலும் ஆச்சரியமாகப் பார்த்தான்.

மீக் சிரித்தான். “கேட்டுறலாம். செஞ்சுடலாம்னு சொல்லலியே. என்ன பெரிய ப்ரொகிராம் வேல்யூஸ்? அதை கண்டுபிடிக்கறதெல்லாம் ஒண்ணும் பெரிய கஷ்டமில்லை.  லீவ் தட் டு மீ”

“தென்?”

“அவங்களை வேலை செய்ய விடுங்க. ஒரு டெமோ கொடுக்கணும்னு ஏற்பாடு பண்ணுங்க. ஆஃப்டர் டெமோ, அலெக்ஸாண்ட்ரியான்னு சொல்லிட்டு..”

“ஐ கெட் இட்.. “

“ஆனா, இந்த ரெண்டு மாசம்.. அதாவது அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் லிபியா வரவரைக்கும்.. அவங்களை வேற இடத்துல சேஃப்கார்ட் பண்ணி வைக்கணும். அது முடிஞ்சவுடனே..”

“ம்ம்.. அப்ப அவங்க லைஃப் எதிர்பாராத விதமாக ரெண்டு மாசம் ஏறிடுச்சா?” கலீல் சிரித்தான். அமீரின் ஃபோன் அடித்தது.

எடுத்து குசுகுசுப்பாக “யெஸ்.. ஓக்கே.. சொன்ன மாதிரிதான்.. நோ ட்ரெய்ல்ஸ்” வைத்துவிட்டான்.

***

”யெஸ், நோ ட்ரெய்ல்ஸ்.. ஆஸ் எவர்” என்று ஃபோனைப் பாக்கெட்டுக்குள் வைத்தவன் மும்பை ஏர்போர்ட் அருகே சஹார் ரோடு எக்ஸிட்டில் காரை நிறுத்தி இருந்தான்.

காருக்கு உள்ளே இருந்தவன் “என்ன சொல்றாங்க?” என்றான்.

“முடிச்சுர வேண்டியதுதான்.” என்றவன் சத்தம் போட்டுச் சிரித்தான்.

“என்னடா சிரிப்பு?”

“ஒரே வேலைக்கு ரெண்டு இடத்துல காசு! பொண்டாட்டியும் காசு கொடுத்திருக்கா, அந்தப்பக்கமும் காசு வருது.”

ரவியின் ஃபோட்டோவை மறுபடி எடுத்துப் பார்த்தான். “இந்த சொட்டையனுக்கா இவ்ளோ ஃபிகர் செட் ஆகுது?”

ஃபோன் அடித்தது.

பேசிவிட்டு வைத்தவன் “காரை ஸ்டார்ட் செஞ்சுக்க. கார் ஏறிட்டானாம். ப்ளாக் டவேரா. க்ளோஸா ஃபாலோ பண்ணு.”

மெதுவாகக் கார் ஒடத்தொடங்கியது. கறுப்புக்கலர் டவேராவை முன்னே விட்டு பொறுமையாகப் பின் தொடர்ந்தது.

”குர்லா ரோட் வரப்போவுது.. அதுக்கு முன்னால க்ராஸ் பண்ணிடு”

ஹோட்டல் லீலாவைக் கடக்கும்போது டவேராவைக் கடந்து நின்றது.

உள்ளே இருந்தவன் இறங்கியபோதுதான் தெரிந்தது, போலீஸ் உடை அணிந்திருந்தான்.

டவேராவைக் கைகாட்டி நிறுத்தும்போது இயல்பாக பானைத் துப்பினான். நிஜப் போலீஸ் தோற்றான். தொப்பை கூட இருந்தது.

ரவி இறங்கினான். பெருமூச்சு விட்டான்.

அதுதான் கடைசி.

– தொடரும்

காதல் புராணம்

பருவம் 1: பேதை / அலகிலா விளையாட்டு


1

நீ வந்திடாத‌ நாட்களின்

அம்மா அப்பா ஆட்டத்தில்

அம்மாவாய் நடித்திருக்க‌ச்

சுகிப்பதில்லையெனக்கு.

2

கவட்டைக்கால் கணக்கு வாத்தியாரிடம்

நீ வாங்கும் பிரம்படியில் கண்ணீர் முட்டி

நனைந்தழுகிறதென் பாவாடைச்சீருடை.

3

கண்ணுக்குக் கருமையோ

விரலுக்கு மருதாணியோ

அம்மா வைத்தனுப்பினால்

உன் முன்னால் வந்து நிற்க‌

வெட்கமாயிருக்கிறதெனக்கு.

4

நீ தந்த ஒற்றை மயிலிறகு

பத்திரமாய் உறங்குகிறதென்

தமிழ்ப்பாட புத்தகத்தின்

வாசனைக் கதகதப்பில் –

என்றேனும் ஈனுமென்ற‌

நம்பிக்கைத் தீற்றலுடன்.

5

நீ வாங்கித்தரும் இலந்தை வடைக்கு

எப்போதுமிருக்கிறதொரு வசீகர ருசி –

ஆளை வீழ்த்துமுன் புன்னகை போல்.

6

நீ கட்டி விடுவதற்காய்

அடிக்கடி அவிழ்கிறதென்

பட்டுப்பாவாடை நாடா.

7

என் அப்பாவைப் போல்

முறுக்கு மீசையிருந்தால்

இன்னும் அழகாயிருப்பாய்.

8

தெருவோரம் நின்ற வாக்கில்

சுவற்றோவியம் வரைந்தபடி

வெளிர்மஞ்சள் நிற‌ச் சிறுநீர்

கழிக்குமுந்தன் சௌகரியம்

பொறாமை தருகிறதெனக்கு.

9

எப்படியோவுன் தோட்டத்து

மருதாணியெனில் மட்டும்

கருக்காமல் சிவக்கிறதென்

புதுநிறச்சிறுவிரல் நுனிகள்.

10

அதிகம் அழுதேனெனில்

அதிகம் கிள்ளுவாயென

அதிகம் அழுகின்றேன்.‌

[இக்கவிதைத் தொடர் ஆரம்பிக்கும் தினம் காதலர்களுடையதாக இருப்பது ஒரு தற்செயல். ஆனால் கவிஞர் யாரெனத் தெரிவிக்காதிருப்பது தற்செயல் அல்ல.]