இனவெறி

20. டூட்சிக்களும் ஹுட்டுக்களும்

ஒரு சின்ன கதையைக் கேளுங்கள். இரண்டு குழுக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வந்தன.  ஆரம்பத்திலிருந்தே இரு குழுக்களுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு குழு நாங்களே இந்த மண்ணின் மைந்தர்கள், அவனுங்க வந்தேறிகள், இந்த மண்ணின் மீது உரிமை இல்லதாவங்க என்று மார் தட்டிக் கொள்ளும். இன்னொரு குழுவோ அவனுங்க சுத்த சோம்பேறிங்க,  ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவனுங்க, இந்த நாட்டை வளப்படுத்துன நாங்க தான் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசு என்று உரிமை கொண்டாடும்.  இரு தரப்பிலும் இனகலப்பு இருக்கக் கூடாது, தங்கள் இளைய சமுதாயத்தினர் அடுத்த இனத்தில் போய் கல்யாணம் செய்து விடக்கூடாது என்று என்று ரொம்ப கண்டிப்பாக இருப்பார்கள். அவ்வப்போது இரு குழுக்களுக்கும் இடையே உரசல்கள் இருக்கும்.  உங்க தரப்பு மாடு எங்க வயலில் மேய்ந்துவிட்டது, உங்க பையன் எங்க பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான் போன்ற சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, நாட்டு அரசியலில் தங்களக்கு சேர வேண்டிய இடத்தை அடுத்தவர் ஆக்கிரமித்துள்ளனர் போன்ற பெரிய விஷயங்கள் வரை சின்ன சின்ன புகைச்சல்கள் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் கைகலப்பும் உயிர்ச்சேதமும் ஏற்படுவதுண்டு.

என்ன இதுவரை சொன்ன கதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா. எல்லா நாடுகளில், சமூகங்களில் இது மாதிரி ஆயிரக்கணக்கான கதைகள் உண்டு. எங்கெல்லாம் மனித நாகரிகம் தழைத்திருக்கிறதோ அங்கெல்லாம் இந்த கதை பல வகைகளில் அரங்கேறியுள்ளது, இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மிகப் பெரும்பாலான கேசுகளில் வாய்ச்சண்டைகளோடும் சிறு கைகலப்புகளோடும் இந்த மோதல் நின்று போகும்.  ஆனால் ஆயிரத்தில் ஒன்றாக ஒரு தரப்பு இன்னொரு தரப்பை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்து இனப்படுகொலை செய்யவும் முயன்றதுண்டு.  லட்சக்கணக்கில் உயிர்களைக் காவு கேட்டுள்ள ருவாண்ட இனப்படுகொலை இப்படியொரு முயற்சி.  சேர்ந்து வாழ முடியாவிட்டாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போகாமல் அடுத்த இனத்தையே தீர்த்துக் கட்ட முயன்ற / முயன்று கொண்டிருக்கும் ஆப்பிரிக்க டுட்சி, ஹுட்டு இன மக்களே இந்த வார வில்லர்கள்.

டுட்சிக்களும் ஹுட்டுக்களும் மத்திய ஆப்பிரிக்கப் பகுதியில் வாழும் இரு இனக்குழுக்கள். பல நூறு ஆண்டுகளாக பெரும் ஏரிகள் பகுதி (Great lakes region) என்று தற்போது அழைக்கப்படும் பகுதியில் தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆப்பிரிக்காவின் பிற இனக்குழுக்களைப் போலவே அவர்களுள் சிறு சிறு மோதல்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. இரு குழுக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஊதிப் பெரிதாக்கியப் பெருமை காலனியாதிக்கத்தைச் சாரும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆப்பிரிக்காவில் காலனிகளை உருவாக்கின.  இந்த காலனியாக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு – அக்கண்டத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதிலிருந்து பக்கத்து நாட்டுக்காரனை விட பெரிய நிலப்பரப்பைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற வெத்து ஜம்ப நினைப்பு வரை.  இதனையே வரலாற்றாளர்கள் ஆப்பிரிக்காவிற்கான அடிதடி (the scramble for Africa) என்று அழைக்கின்றனர்.  ஆப்பிரிக்காவின் எதார்த்த நிலையைப் பொருட்படுத்தாமல் ஐரோப்ப்பாவில் உட்கார்ந்து கொண்டு ஆப்பிரிக்க வரைபடத்தில் கோடு கிழித்தனர் ஐரோப்பிய அரசியல்வாதிகள். இதனால் ஆப்பிரிக்காவில் சம்பந்தமில்லாமல் நாடுகள் உருவாகி விட்டன.  பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இனக்குழுக்கள் ஐரோப்பியர் வரைந்த எல்லைகளால் பிளவுபட்டன.  அதே போல பல நூற்றாண்டுகளாக சண்டையிட்டுக் கொண்டிருந்த இனக்குழுக்கள் ஒரே நாட்டில் அருகருகே வாழும்படியும் ஆனது.  இந்த குழப்படி வேலையில் உருவானைவை தான் ருவாண்டா மற்றும் புரூண்டி நாடுகள்.  இவ்விரு நாடுகளும் ஜெர்மனியின் காலனிகளாக மாறின. இதற்கு முன்பே இப்பகுதி பல நூறு ஆண்டுகளாக டுட்சி இன மன்னராட்சியின் கீழ் இருந்தது.  டுட்சிக்கள் எண்ணிக்கையில் ஹுட்டுக்களை விட குறைவென்றாலும், ஆட்சி அதிகாரங்கள் அவர்களது கையில் தான் இருந்தன. ஜெர்மனியின் காலனிய ஆட்சியாளர்களும் டுட்சிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டதால், அவர்களது அரசிலும் டுட்சிகளே உயர் பதவிகளை வகித்தனர். டுட்சிகள் தான் மரபணு அடிப்படையில் உயர்ந்த இனம் என்ற எண்ணம் கொண்டிருந்த ஜெர்மானியர்களின் கொள்கைகள் அதுவரை சிறிய அளவில் புகைந்து கொண்டிருந்த இனவெறுப்பை நன்றாக ஊதி விட்டன.  எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இரண்டாம் தரக் குடிமக்கள் போலவே ஹுட்டுக்கள் வாழ நேரிட்டது.   இதனால் அவர்களுக்கு டுட்சிக்களின் மேலிருந்த கோபம் வெறுப்பாக மாறியது.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றதால்,  ருவாண்டாவும் புருண்டியும் பெல்ஜியத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. பெல்ஜியமும் ஜெர்மனியின் இனவாதக் கொள்கைகளை மேலும் விரிவுபடுத்தி டுட்சிக்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது.  இப்பகுதி மக்களுக்கு இன அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் அளவுக்கு காலனிய ஆட்சியாளர்கள் இனவாதக் கொள்கையைப் பின்பற்றினர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆப்பிரிக்கா மீதான ஐரோப்பிய பிடி தளர்ந்தது.  ஆப்பிரிக்கா முழுவதும் தேசியவாதம் தழைத்தோங்கி எல்லா நாடுகளிலும் விடுதலை இயக்கங்கள் தோன்றின. ருவாண்டாவிலும் புரூண்டியிலும், ஹுட்டு இன மக்களளே விடுதலை இயக்கங்களில் பெரும் பங்காற்றினர். நாடு விடுதலை அடைந்துவிட்டால், இதுவரை கிடைக்காத அரசியல் அதிகாரம் தங்கள் கைக்கு வரும் என்பது அவர்களது கணக்கு.  மக்களாட்சி முறையில் எண்ணிக்கையில் அதிகமானோருக்கே அரசு அமைக்க முடியும் என்பதால் இரு நாட்டு ஹுட்டுக்களுக்கும் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டனர். ஆனால் டுட்சிக்கள் நாடுகள் விடுதலை அடைவது பற்றி அவ்வளவு உற்சாகம் கொள்ள வில்லை. காலனியாட்சி போய் மக்களாட்சி வந்துவிட்டால், எண்ணிக்கையில் குறைந்த தங்கள் இனம் அதுவரை அனுபவித்து வந்த ஆட்சியும் அதிகாரமும்   இழந்து ஹுட்டுக்களின் தயவில் வாழ வேண்டுமே என்று அஞ்சினர். இதனால் விடுதலை இயக்கங்களில் பங்கேற்கவில்லை. இரு நாடுகளும் 1960களில் விடுதலையடைந்து மக்களாட்சி முறையில் தேர்தல்கள் நடந்தன. மக்கள் தொகையில் சுமார் 80 சதவிகிதம் இருந்த ஹூட்டுகள் ருவாண்டாவில் எளிதில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர்.  அதிகாரத்தை இழந்த டுட்சிக்கள் எப்படி மீண்டும் அதனைக் கைப்பற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கினர். ஆனால் அண்டை நாடான புரூண்டியில் டுட்சிக்களின் ராணுவ ஆட்சியே நடந்து வந்தது.

1960களில் ஆப்பிரிக்காவெங்கும் காணப்பட்ட அரசியல் நிலையின்மையும் அடிக்கடி நிகழும் இராணுவப்புரட்சிகளும், ருவாண்டாவில் தங்கள் இன மக்களின் வெற்றியும் புரூண்டியின் ஹுட்டுக்களுக்கு அதிகாரத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்ளலாம் என்ற தைரியத்தைக் கொடுத்தன. 1972ல் புரூண்டியில் ஹூட்டுக்களின் புரட்சி வெடிததது. சில ஆயிரம் டுட்சிக்கள் புரட்சியால் விளைந்த கலவரங்களில் கொல்லப்பட்டனர். ஆத்திரம் அடைந்த டுட்சி அரசு பதிலுக்கு ஹுட்டுக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியது.  திட்டமிட்டு ஹுட்டு இனத்தை அழிக்க முயன்றது. இக்காலகட்டத்தில் டுட்சி அரசின் முழு ஒத்துழைப்போடு நடந்த  படுகொலைகளில் ஒன்றரை லட்சம் ஹுட்டுக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சில லட்சம் பேர் தப்பித்து ஓடி அண்டை நாடுகளில் அகதிகளானார்கள்.  அதுவரை இரு இனங்களுக்குமிடையே சிறு சிறு மோதல்கள் நடைபெற்று வந்தாலும் ஒரு இனம் கவனமாகத் திட்டமிட்டு அடுத்த இனத்தை முழுவதும் அழிக்க முயன்றது இதுவே முதல் முறை. இந்த முயற்சி வெற்றி பெறவில்லையென்றாலும் சம்பந்தப்பட்டவர்களது மனதுகளில் இனவொழிப்பு செய்துவிடலாம் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றச் செய்தது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ருவாண்டாவிலும் புரூண்டியிலும் பெரிய அளவு கலவரங்கள் எதுவுமின்றி அமைதியாக இருந்தது. எனினும் ருவாண்டாவின் ஹுட்டு பெரும்பான்மை அரசை வீழ்த்த டுட்சி போராளிக் குழுக்கள் ஆயுதமேந்தி போராடி வந்தன. உகாண்டா, செயர் போன்ற அண்டை நாடுகளில் இருந்து ருவாண்டா மீது தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தன. 1990களில் இந்த மோதல்கள் பெரிய அளவில் உள்நாட்டுப் போராக வெடித்தன.  உள்நாட்டுப் போர் மூண்டவுடன் பிற நாடுகள் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசின. ஆட்சி அதிகாரத்தில் டுட்சிப் போராளிகளுக்கு பங்கு கொடுக்கும் படி ஹுட்டு அரசை வற்புறுத்தின.

இத்தனை நாள் அதிகாரமற்று இருந்த நாங்கள் இப்போது கொஞ்ச நாளாகத் தான் அதிகாரத்தை அனுபவித்து வருகிறோம். அதுவும் பொறுக்காமல் அதைப் பிடுங்கி டுட்சிகளுக்கு கொடுக்கச் சொல்கிறார்களே என்று ஹுட்டுக்களுக்கு ஆத்திரம் மூண்டது. இந்தப் பிரச்சனையே டுட்சிக்கள் இருந்தால் தானே. அவர்களை வேரோடு அழித்து விட்டால் அவர்களுக்கு அதிகாரத்தில் பங்காவது மண்ணாவது என்று ஹுட்டுக்களுக்குத் தோன்றியது. மேலும் 1972ல் புரூண்டியில் டுட்சிக்கள் செய்ய முயன்று தோற்ற இனவொழிப்பை இந்த முறை தாங்கள் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.  இனவொழிப்புக்கான ஆயத்தங்களைத் தொடங்கினர்.  ஏப்ரல் 1994ல் ருவாண்டா மற்றும் புரூண்டி நாடுகளின் குடியரசுத் தலைவர்கள் பயணம் செய்த விமானம் ருவாண்டா நாட்டுத் தலைநகர் கிகாலியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருவரும் இதில் மரணமடைந்தனர்.  இனவொழிப்பைத் தொடங்க ஹுட்டுக்கள் தேடிக்கொண்டிருந்த காரணம் அவர்களுக்கு கிடைத்து விட்டது.  எப்படியும் டுட்சிக்கள் நம்மை ஆள விடமாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்ய இது வசதியாகப் போனது. (யார் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள் என்று இன்றுவரை சர்ச்சையாகவே உள்ளது.  டுட்சிப் போராளிக் குழுக்கள் தான் செய்தன என்று ஹுட்டுக்களும், ஹுட்டு தீவிரவாதிகளே இனவொழிப்பைத் தொடங்குவதற்க்காக இதைச் செய்தனர் என்று டுட்சிக்களும் இன்று வரை மாறி மாறி  குற்றம் சாட்டி வருகின்றனர்)

யார் ஆரம்பித்தார்களோ அடுத்து நிகழ்ந்த பயங்கரம் இதுவரை உலக வரலாற்றில் யாரும் கண்டிராதது.  ருவாண்டாவின் ஊடகங்கள் டுட்சி இனத்தவரின் மீது வெறுப்பினை உமிழ்ந்தன.  ஹுட்டு மக்களின் ரத்தம் கொதிக்கும் படி டுட்சிக்களின் சதிகளையும் துரோகங்களையும் பற்றி அவதூறுகளைப் பரப்பின. டுட்சிக்கள் கரப்பான் பூச்சிகள் போன்றவர்கள். அடியோடு நசுக்கா விட்டால், பல்கிப் பரவி தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள் என்று மக்களை உசுப்பேத்தின.  அடுத்து நிகழவிருந்த இனக்கொலைக்குத் தேவையான கத்திகளை லட்சக்கணக்கில் அரசு இறக்குமதி செய்து, ஹுட்டுக்களுக்கு வினியோகம் செய்தது.  ஓவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் டுட்சி குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை யார் கொல்ல வேண்டுமென்று “பொறுப்புகள்” பிரிக்கப்பட்டன..  ஹுட்டு இளைஞர்களைக் கொண்டு கொலை படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.  டுட்சிக்களை எளிதில அடையாளம் கண்டுகொள்ள மக்கள் அனைவரும் இனத்தின் அடிப்படையில் தனித்தனியே அடையாள அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஏப்ரல் 7, 1994ல் டுட்சி இனப்படுகொலை தொடங்கியது. குழந்தைகள் வயதானோர், ஊனமடைந்தவர்கள் என யாரும் விட்டுவைக்கப்படவில்லை.  ஒரு ஊரில் வாழ்ந்த டுட்சிக்களை அவர்களது பகுதியில் வாழ்ந்த ஹுட்டுக்களே அடையாளம் கண்டு கொன்றனர்.  படுகொலையில் பங்கெடுக்க மறுத்த ஹுட்டுக்களுக்கும் டுட்சிகளின் கதியே நேர்ந்தது.  தப்பியோடி ஒளிந்த டுட்சிக்களைக் கொல்ல கொலைப்படைகள் நாடெங்கும் அலைந்தன. தேவாலயங்கள், பள்ளிகள் என எங்கு ஒளிந்திருந்தாலும் டுட்சிக்களைத் தேடிப்பிடித்து கொலை செய்தன. ஜூலை மாத இறுதி வரை இந்த வெறியாட்டம் தொடர்ந்தது. ஐந்து லட்சத்திலிருந்து பதினோரு லட்சம் டுட்சிக்கள் இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நிமிடத்துக்கும் 7 டுட்சிக்கள் வீதம் கொலை செய்யப்பட்டிருந்தனர்.   இப்படியொரு படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த போது ஐக்கிய நாடுகளும், பன்னாட்டு சமுதாயமும் ஏதோ உள்நாட்டுத் தகராறு நடக்கிறது என்று சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. டுட்சி போராளிக் குழுக்கள் தங்கள் இன மக்கள் சாவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை, படைதிரட்டி ருவாண்டா நாட்டைக் கைப்பற்றி ஹுட்டு அரசை பதவியிலிருந்து விரட்டி விட்டன.  பல லட்சம் ஹுட்டுக்களும் டுட்சி அரசு தங்களைப் பழிவாங்கிவிடும் என்று பயந்து நாட்டை விட்டு அகதிகளாக ஓடிவிட்டனர்.

இப்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது. டுட்சி அரசு ருவாண்டாவை இரும்புப் பிடியுடன் ஆளுகிறது. ஹுட்டு போராளிப் படைகள் பக்கத்து நாடுகளில் இருந்து கொண்டு ருவாண்டாவைத் தாக்கி வருகின்றன. அவற்றை ஒழிக்கிறேன் பேர்வழி என்று ருவாண்டா பக்கத்து நாடான செயருக்குள் அவ்வப்போது படையெடுத்து அங்கு உள்நாட்டுப் போரை தூண்டி விடுகிறது. லட்சக்கணக்கில் மக்கள் இறந்தும், இன்னும் பல லட்சம் பேர் வீடிழந்து அகதிகளாகியும் இரு தரப்பிலும் வெறி தணியாமல் இன்னும் பகைமை வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஓடு

டொஷிஹிகோ செகோ என்பவர் ஜப்பானைச் சேர்ந்த பிரபலமான தடகள வீரர். பல்வேறு மாரத்தான் பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்!

இவருடைய காலத்தில், மற்ற தடகள வீரர்கள் எல்லோரும் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்கள். எந்த ஊர் மாரத்தானை ஜெயிக்க என்னமாதிரியான திறமைகள் தேவை என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, நிபுணர்களின் ஆலோசனைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால், டொஷிஹிகோ அதுபோல் எந்த விசேஷ முயற்சியிலும் ஈடுபடவில்லை. உண்மையில், அவருடைய பயிற்சித் திட்டத்தை ‘ஜென் எக்ஸர்சைஸ்’ என்றே சொல்லிவிடலாம். அப்படி ஓர் எளிமை. அப்படி ஒரு நேரடித்தன்மையோடு இருந்தது அது, நல்ல பலனையும் கொடுத்தது!

அதென்ன ஜென் எக்ஸர்ஸைஸ்?

இதை டொஷிஹிகோவே விளக்கிச் சொல்லியிருக்கிறார். ‘எனக்கு ஓட்டத்தின் அறிவியலெல்லாம் தெரியாது. ஆனால் தினமும் காலையில் பத்து கிலோமீட்டர் ஓடுவேன், மாலையில் இருபது கிலோமீட்டர் ஓடுவேன், அவ்வளவுதான்!’

நிஜமாகவே அவ்வளவுதானா? நம்பக் கஷ்டமாக இருக்கிறதே!

’ஒரு விஷயம், நான் வருடம் 365 நாளும் எந்தக் காலநிலையிலும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தினசரி முப்பது கிலோமீட்டர் தவறாமல் ஓடுவேன். அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்த பயிற்சி. அதுமட்டுமே எனக்கு எல்லா வெற்றிகளையும் தேடித் தந்தது!’