உப்பு

பவித்ரா புதிதாகக் கார் வாங்கியிருந்தார். அதை அவர் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். தினந்தோறும் மிக அக்கறையாக வண்டி ஓட்டிக்கொண்டு அலுவலகம் சென்றார், எந்த விபத்தும் இல்லாமல் பத்திரமாக வீடு திரும்பினார்.

சில மாதங்கள் கழித்து ஒருநாள், அவர் எங்கோ ஷாப்பிங் சென்றிருந்தபோது ஒரு சின்ன விபத்து. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் படவில்லை. வண்டிக்கும் எந்தச் சேதமும் இல்லை.

ஆனாலும், இந்தச் சம்பவம் பவித்ராவை உலுக்கிவிட்டது. நேராகத் தன்னுடைய பெற்றோரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். ‘வண்டியை எடுக்கறதுக்கே பயமா இருக்குப்பா, ஒருவேளை ஏதாவது பெரிய ஆக்ஸிடென்ட் நடந்திருந்தா?’ என்று பதறினார்.

பவித்ராவின் தாய் அவருக்கு ஆறுதல் சொன்னார். ‘விடும்மா, சின்ன விபத்துதானே, அதை மறந்துடு!’

‘ம்ஹூம். மறக்கக்கூடாது!’ என்றார் பவித்ராவின் தந்தை. ‘நிச்சயமா நீ இந்த விபத்தை மறக்கவேகூடாது பவித்ரா!’

’ஏன் மறக்கக்கூடாது? வழக்கம்போல ஏதாவது ஜென் தத்துவம் சொல்லப்போறீங்களா?’ என்று கிண்டலடித்தார் அவருடைய மனைவி. ‘உங்க ஏட்டுச் சுரைக்காயையெல்லாம் நீங்களே வெச்சுக்கோங்க, இந்த விஷயத்தில அது பயன்படாது!’

‘யார் சொன்னது? ஜென் உப்பு மாதிரி, எல்லாச் சமையலுக்கும் பொருந்தும், அதை எந்த அளவு சேர்த்துக்கறோம்ங்கறது மட்டும்தான் வித்தியாசப்படும்!’ என்றார் அவர். ‘பவித்ரா, இது ஒரு சின்ன விபத்தா இருக்கலாம், ஆபத்து குறைவா இருக்கலாம், சேதமே இல்லாம இருக்கலாம், ஆனா அதுக்காக நீ இதைச் சாதாரணமா நினைச்சு மறந்துட்டேன்னா, நாளைக்கு உன்னால கவனமா வண்டி ஓட்டமுடியாது. அதுல ஓர் அலட்சியம் வந்துடும். புரியுதா?’

‘அப்படீன்னா, வண்டி ஓட்டும்போதெல்லாம் இதையே நினைச்சு பயந்துகிட்டிருக்கணும்-ன்னு சொல்றீங்களா?’

‘இல்லை. வண்டி ஓட்டும்போது உன் புத்திமுழுக்க அதிலதான் இருக்கணும். அந்தப் பயணத்தை, சுற்றியிருக்கிற காட்சிகளை, மனிதர்களை, அனுபவத்தை முழுமையா ரசிச்சு அனுபவிக்கணும். அதேசமயம், மனசோட ஒரு மூலையில இந்த விபத்து அனுபவமும் இருக்கணும், அதுமாதிரி இன்னொரு விபத்து, அது சின்னதோ, பெரிசோ, நடந்துடக்கூடாதுங்கற கவனமும் இருக்கணும். புரிஞ்சதா?’

ஆழி பெரிது!

14. சரஸ்வதி : சில நவீன ஆராய்ச்சிகள்

சரஸ்வதி நதி குறித்த விவரணங்கள் வேத இலக்கியங்களுடன் நின்றுவிடவில்லை. புராணங்களிலும் நீள்கின்றன. சரஸ்வதியை வரலாற்றில் ஓடிய நதியாக நாம் ஏற்றுக்கொண்டால், ஒரு பழமையான உண்மை குறித்த நினைவு எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம மாற்றங்கள் அடைகிறது என்பதை காண முடியும். உதாரணமாக மிகவும் முக்கியமான முதன்மையான புராணமாகக் கூறப்படும் விஷ்ணு புராணத்தில் சரஸ்வதி நதி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. ஆனால் மார்கண்டேய புராணத்தில் அந்த நதி வேதத்தில் சரஸ்வதி எந்த வரிசையில் கூறப்படுகிறதோ அதே வரிசையில்தான் கூறப்படுகிறது. பத்மபுராணம் மற்றொரு சுவாரசியமான விஷயத்தை சொல்கிறது. அனைத்தையும் விழுங்கும் அக்னி பரவையதால் சரஸ்வதி நதி மறைந்ததாக அது சொல்கிறது.  இங்கு அக்னி என கூறப்படுவது அந்த நிலப்பரப்பு முழுக்க பரந்து விழுங்கிய ஒரு வறட்சியை குறித்த நினைவாக இருக்கலாம்.

நவீன ஆராய்ச்சிகளில் சரஸ்வதி நதி ஒரு மர்மத்தின் ஊற்றுக்கண்ணாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். நிலத்தகடுகளின் இயக்கம் குறித்த ஆராய்ச்சியும் செயற்கைகோள் தூர-புகைப்படத் துறையும் இந்த நதியின் இருப்பில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தின. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரு தேச பண்பாடு தன் நினைவுகளில் பதிவு செய்து வைத்திருந்த தொன்ம நதி அது. அறிவியல் – தொழில்நுட்பத்தின் உதவியுடன் அது மக்கள் நினைவில் மீண்டும் ஒரு ஆராய்ச்சித் தேடலாக பிரவாகிக்கத் தொடங்கியது. இத்தேடலின் தொடக்கப்புள்ளியான ஆராய்ச்சி தாள் விஞ்ஞானி யஷ்பால்-ஆராய்ச்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டது: ‘Remote Sensing of the ‘Lost’ Sarasvati River’.

சரஸ்வதி நதி குறித்த அறிவியல் ஆராய்ச்சி பலதுறை நிபுணத்துவமில்லாமல் செய்யப்பட முடியாத ஒன்று.. இன்னும் சொன்னால் பல துறைகளிலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு,  அந்த ஆராய்ச்சிகளின் போது கிடைத்த தரவுகள் ஒருங்கிணைந்து சரஸ்வதியின் தேடலை மேலும் மேலும் விரிவாக்குகின்றன. உதாரணமாக ராஜஸ்தானின் ஜெய்ஸால்மிர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் நிலத்தடி நீரில் ஒரு தனித்தன்மையை காண்கின்றனர். மழை நீர் சேகரிப்பினால் ஒரு இயக்கமற்ற  ஒரு தேக்கமாக இருக்க வேண்டிய நிலத்தடி நீர் ஒரு நீர் பிரவாகமாக ஓடிக்கொண்டிருப்பதை அவர்கள் காண்கிறார்கள். அது அண்மைக்கால மழைநீர் சேகரிப்பிலிருந்து பெறப்பட்டதல்ல மாறாக ஹிமாலய நதி நீர்களின் தன்மை கொண்டதாக இருப்பதை ஐஸடோப் ஆய்வுகள் மூலமாக அறிகிறார்கள். தொன்ம நதி ஒன்று ஐஸோடோப் ஆராய்ச்சியின் மூலம் உருபெறும் ஆராய்ச்சி அரங்கேறுகிறது.

நிலத்தடி நீர் பம்புகள் மூலம் வெளிக்கொணரப் படும் போது சில இடங்களில் நாற்பதாண்டுகளாக நீர் தங்கு தடையின்றி வந்துகொண்டே இருக்கிறது. 1999 இல் மற்றொரு ஆராய்ச்சி நிலத்தடி நீர் மட்டம் இந்த பாலைவனப்பகுதியில் குறையாமல் நீரோட்டமாக ஒரே அளவில் இருந்து வருவதைக் காட்டுகிறது. மகாபாரத்த்தின் கவித்துவ வரிகளை வேத சரஸ்வதி நதியை   “பூமியின் உள் உறுப்புகளூடாக ஓடும் கண்ணுக்குத் தெரியாத பிரவாகம்”  என்றல்லவா வர்ணித்தது! ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகள் இன்னும் உறுதியாக இதுதான் சரஸ்வதி நதி என தீர்மானித்துவிடவில்லைதான். அப்படி தீர்மானித்துவிட முடிந்த ஒற்றைக் கோட்டு சமாச்சாரமும் இல்லை இது. இதற்கிடையில் அரசியலும் புகுந்து கொண்டு விட்டது துரதிர்ஷ்டவசமானது.

சரஸ்வதி ஏன் மறைந்தாள்?  உண்மையில் மறைந்துவிட்டாளா என்ன?

இன்று ஹரப்பன் பண்பாடு என அகழ்வாராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில் சரஸ்வதி நதி ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவேதான் பல அகழ்வாராய்ச்சியாளர்கள் அதை சரஸ்வதி-சிந்து பண்பாடு என அழைக்க தயங்குவதில்லை. இந்த நதிப்படுகை நாகரிகத்துடன் நம் இன்றைய பாரத சமுதாயம் தொடர்ச்சியான பண்பாட்டு உறவு கொண்டுள்ளது. மேலே கூறியது போல இன்றைக்கும் ராஜஸ்தான் ஆழ்கிணறுகளுக்கு சரஸ்வதி நதியின் நிலத்தடி பிரவாகம் நன்னீர் அளித்து வருவது போல பாரத பண்பாட்டுக்கு ஊற்றுக்கண்களாக சரஸ்வதி பண்பாடு இருந்து வருகிறது. அதன் நினைவு நம் கூட்டு நனவிலியில்.

ஆனால் இந்த மகாநதியின் வரலாற்றில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த அந்த இயற்கை நிகழ்வுதான் என்ன? அது திடீரென நிகழ்ந்த பெருநிகழ்வா அல்லது நூற்றாண்டுகளாக நிகழ்ந்த ஒரு மெதுவான மாற்றமா? அண்மையில் வெளியான நூலில் இந்திய பண்பாட்டு ஆர்வலரான மிஷேல் தனினோ சரஸ்வதி பாய்ந்ததாகக் கருதப்படும் பிரதேசங்களில் செய்யப்பட்ட அனைத்து துறை ஆராய்ச்சிகளையும் தொகுத்து ஒரு சுவாரசியமான நூலாக தந்திருக்கிறார். அவர் இந்த நிலவியல், தொல்-தட்பவெப்பவியல், அகழ்வாராய்ச்சிகள் ஆகிய பலதுறை ஆராய்ச்சிகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அவர் பின்வருமாறு சரஸ்வதியின் மறைவினைக் காண்கிறார்:

பழங்கால தட்பவெப்ப சூழலை ஆராய்ச்சி செய்த ஏழு ஆராய்ச்சி முடிவுகள் ஹரப்பா பண்பாட்டு முதிர்ச்சி அடைந்த காலக்கட்டத்தை தொடர்ந்து அங்கு வறண்ட சூழல் நிலவியதென முடிவுக்கு வருகின்றன. இன்னும் ஏழு ஆராய்ச்சிகளோ அதே காலகட்டத்தில் அங்கு அதீத மழைச்சூழல் நிலவியதென முடிவுக்கு வருகின்றன இரண்டுமே நிகழ்ந்திருக்கலாம் அதீத மழை அதீத வறட்சி. நிலத்தடுக்குகளின் உராய்வு என  அனைத்துமே சரஸ்வதியின் “விநாசனத்தை” ஏற்படுத்தியிருக்கலாம் என கூறுகிறார் தனினோ.

அதன் கிளைகள் வேறு நதிகளுடன் இணைந்தன. ஒரு நதி மறைந்தது. அது வளர்த்த ஒரு பண்பாடு தடுமாறியது. வீழ்ச்சியடைந்தது. கடும் பிரயத்தனங்களின் பின்னால் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு மீண்டது.

ஸ்ரீ அரவிந்தர் ஒரு கேள்வியை எழுப்புகிறார். வேத கால கட்டத்தில் சரஸ்வதி நதியாக மட்டுமில்லாமல் வாக் தேவதையாக, உள்ளுணர்வின் இறைவியாக சித்தரிக்கப்பட்டாள். வேத கால கவிகளுக்கு ஏழு நதிகள் தெரிந்திருந்தன. ஆனால் சரஸ்வதி மட்டுமே ஏன் வாக்காக வெளிப்படும் உள்ளுணர்வின் இறைவியாக சித்தரிக்கப்பட்டாள்?

மேலும் அறிய:

இந்த கட்டுரையின் அறிவியல் தரவுகள் மிஷேல் தனினோவின் The Lost River –On the trail of the Sarasvati (Penguin Books, 2010) எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.