சிரி

ஜென் துறவி ஒருவர். அவசரமாக டெல்லிக்குப் பயணம் செய்யவேண்டியிருந்தது. டாக்ஸியில் விமான நிலையத்துக்குப் புறப்பட்டார்.

அவர்கள் சிறிது தூரம் சென்றதும், பின்பக்கமிருந்து ஏதோ சத்தம். டாக்ஸியை நிறுத்திப் பார்த்தால், டயர் பஞ்சர்.

’ஸாரிங்க, நான் ஸ்டெப்னி டயர்கூடக் கொண்டுவரலை! இனிமே ந்ஆம ஒரு மெக்கானிக் ஷாப்பைக் கண்டுபிடிச்சு டயருக்குப் பஞ்சர் போடறதுக்குள்ள உங்க ஃப்ளைட் போயிடும்’ என்றார் டிரைவர். ‘வேணும்ன்னா உங்களுக்கு நான் ஒரு ஆட்டோ பிடிச்சுக் கொடுக்கட்டுமா?’

’சரி’ என்றார் ஜென் துறவி. இருவரும் அந்தப் பக்கமாகச் சென்ற ஆட்டோக்களைக் கை காட்டி நிறுத்த முயன்றார்கள்.

ஆனால், அவர்கள் கிட்டத்தட்ட கால் மணி நேரம் முயற்சி செய்தும் ஒரு வண்டிகூட நிற்கவில்லை. பெரும்பாலான ஆட்டோக்களில் ஏற்கெனவே ஆள்கள் இருந்தார்கள். மற்ற ஆட்டோக்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் பறந்தன.

டாக்ஸி டிரைவர் வருத்தமாகச் சொன்னார். ‘என்னால உங்க  பயணம் பாதிக்கப்பட்டுடுமோ-ன்னு பயமா இருக்கு சாமி!’

ஆனால், அந்தத் துறவி அவனைக் கோபிக்கவில்லை. சிரித்தார். முதலில் மெதுவாக, பின்னர் பலமாக.

‘ஏன் சாமி சிரிக்கறீங்க? சாபம் கொடுக்கப்போறீங்களா?’

’இல்லை தம்பி, என் நிலைமையை நினைச்சுச் சிரிச்சேன்!’

‘அதெப்படி சாமி இந்த டென்ஷனான நேரத்திலயும் உங்களால சிரிக்கமுடியுது?’

’இதுமாதிரி எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கறதுதான்’ என்றார் அந்த ஜென் துறவி. ‘ஆனா, நாம அந்தச்  சம்பவத்துக்கு உள்ளே இருந்து யோசிச்சா வெறும் பதற்றம்தான் மிஞ்சும், அதிலிருந்து விலகி, கொஞ்சம் வெளியே நின்னு பார்த்தா, சிரிப்பு வரும், மனம் லேசாகும், டென்ஷனில்லாம, இந்த நிலைமையைச் சரி பண்ணறதுக்கு என்ன செய்யணும்ன்னு நிதானமா யோசிக்கமுடியும்!’

ங்கா

உறவினர் ஒருவர் சில நாள்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கும் அவர் மனைவிக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாது என்றும் தன் மனைவியிடம் பேசிப் பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும் கூறினார்.

‘அத்தை உங்களுக்கு மாமா மகள்தானே? அவங்களை விரும்பித்தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?’

‘எனக்கு அவளைப் பிடிக்கலை. மாட்டேன்னுதான் சொன்னேன். அவளுக்கு மாப்பிள்ளை அமையலை. கடைசியில என் தலையில் கட்டிட்டாங்க. நானும் மனசைத் தேத்திக்கிட்டு, அவளுடன் வாழத்தான் விரும்பினேன். ஆனால் எதுக்கெடுத்தாலும் சண்டை. கல்யாணம் ஆன ஆறு மாதத்திலேயே பேச்சு வார்த்தை இல்லை. ஊருக்குத்தான் கணவன் – மனைவி. மூணு பிள்ளைகளுக்காகத்தான் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டியிருக்கு…’

**

பக்கத்து வீட்டுக்கு வேலை செய்ய வருவார் கலா. அன்று அவருடைய முகம் அழுது வீங்கியிருந்தது.

‘பாழாப் போன மனுசன் கல்யாணம் ஆனதிலிருந்தே தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கிறார். சம்பாதிக்கிற பணமெல்லாம் குடிக்கே போயிடுது. என்னோட சம்பாத்தியத்துலதாம்மா குடும்பம் ஓடுது. ரெண்டு பொண்ணுங்க. இப்பப் பொறக்கப் போறது என்னன்னு தெரியலை. அந்த ஆளு திருந்தற மாதிரி தெரியலை. செத்து ஒழிஞ்சாலாவது நிம்மதியா இருக்கலாம்…’

‘இவ்வளவு கஷ்டத்துலயும் ஏன் இத்தனைக் குழந்தைகள்…?’

‘அந்த ஆளுக்கு ஆண் குழந்தை வேணும்னு சொல்லி, என்னைக் குடும்பக் கட்டுப்பாடு செய்ய விடாமல் பண்ணிட்டார். அந்த ஆளோட சேர்ந்து வாழ விருப்பமில்லைன்னும் சொல்லிப் பார்த்துட்டேன். போன வருஷம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கூடப் போயிருக்கேன். ஒண்ணுக்கும் அந்த ஆளு சரி வரல. பொண்டாட்டிய புருஷன் கூப்பிடறப்ப என்னம்மா பண்ணறது? எல்லாம் என் தலைவிதி…’

**

அனிதா – ராகுல் இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள்.

‘அனிதா, அம்மா போன் செஞ்சாங்க.’

‘என்ன சொன்னாங்க?’

‘என்ன சொல்வாங்க? கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சே. எப்ப பேரனையோ, பேத்தியையோ கண்ல காட்டப் போறீங்கன்னு கேட்கறாங்க. என்ன சொல்லட்டும்?’

‘ரெண்டு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம்னு நாம ஏற்கெனவே முடிவு பண்ணிருக்கோமே ராகுல்…’

’அப்ப சொன்னேன்… ஆனா?’

‘என்ன ஆனா? எனக்கு இது முக்கியமான காலகட்டம். ரெண்டு வருஷத்துல பெரிய பொறுப்புக்கு வந்துடுவேன். அதுக்காகத்தான் இவ்வளவு நாளா கஷ்டப்பட்டு உழைச்சிட்டு வரேன். இந்த நேரத்துல குழந்தை உண்டாகி, லீவு போட்டு, பெத்து வளர்க்கறதுங்கறது ரொம்பக் கஷ்டம். என்னால ரெண்டுலயும் ஒரே நேரத்துல அதிகக் கவனம் கொடுக்க முடியாது…’

‘ரெண்டு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கிட்டாலும் நீ வேலையை விட்டு, பிரேக் எடுத்துக்கத்தானே போறே? அதுக்கு ஏன் இவ்வளவு சிரமப்படறே அனிதா?’

‘என்ன சொல்றீங்க? மெட்டர்னிட்டி லீவ் போட்டுட்டு, அப்பறம் வேலையில் சேர்ந்துடுவேன்…’

‘இங்க பாரு அனிதா, கொஞ்சம் ப்ராக்டிகலா பேசு. எனக்கு நல்ல சம்பளம். சொந்த வீடு இருக்கு. நீ சம்பாதித்துதான் இங்க எதுவும் நடக்கணும்னு ஒண்ணும் இல்லை. உன் விருப்பப்படி ஒரு வருஷம் கழிச்சுக் கூட குழந்தை பெத்துக்கலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா குழந்தை உண்டானதுக்குப் பிறகு நீ வீட்ல ஓய்வு எடுத்து, சந்தோஷமா இருந்தால்தானே குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்…’

‘உன் குழந்தையைப் பெத்து, வளர்க்கறதுதான் முக்கியம்னா இவ்வளவு படிச்சு, வேலையில் இருக்கிற என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டே ராகுல்? நீ சொல்றது உனக்கே அநியாயமா தோணலையா?’

‘கோபப்படாதே. மெட்டர்னிட்டி லீவுக்குப் பிறகு நீ வேலைக்குப் போனா உங்க அம்மாவோ, எங்க அம்மாவோதன் வந்து பார்த்துக்கணும். எங்க அம்மாவுக்குப் பார்த்துக்க முடியாது. உங்க அம்மாவால இங்க வர முடியாது. ஆளைத்தான் வச்சிக்கணும். அவங்க நல்லா பார்த்துப்பாங்கன்னு என்ன நிச்சயம்? நாம சம்பாதிக்கறதே நம்ம குழந்தை சந்தோஷமா, நல்லவிதமா வளர்க்கணும்கறதுக்காகத்தானே?’

‘என் படிப்பு… என் திறமை எல்லாம் என்ன ஆனாலும் உனக்குக் கவலை இல்லையா?’

‘குழந்தைக்கு மூணு, நாலு வயசு ஆனதுக்குப் பிறகு நீ வேலைக்குப் போகலாம் அனிதா. உன்னை என்ன வீட்டிலேயே இருக்கணும்னா சொல்றேன்…’

‘நீயும் நானும் ஒரே படிப்பு… கிட்டத்தட்ட ஒரே சம்பளம்… வேலையை விட்டுட்டோ அல்லது வீட்டிலிருந்தபடியே ஏதாவது வேலை செஞ்சிட்டோ ஏன் நீ குழந்தையைப் பார்த்துக்கக் கூடாது?’

‘என்ன சொல்ற? குழந்தையைப் பெத்துக்கற சக்தி பெண்கள் கிட்ட மட்டும்தான் இருக்கு. ஒரு அம்மா மாதிரி அப்பாவால குழந்தையைக் கவனிச்சுக்க முடியுமா அனிதா?’

‘குழந்தை பெத்துக்கறது மட்டும்தான் பெண்களுக்கு இயற்கை கொடுத்த விஷயம். பெத்ததுக்குப் பின்னால பெண்தான் வளர்க்கணும்கிறது என்ன கட்டாயம் ராகுல்?’

‘குழந்தை பெத்துக்கறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லை அனிதா. தாய்மைங்கிறது ரொம்பப் பெரிய விஷயம். குழந்தையை எப்படித் தூக்கணும், எதுக்காக அழுது, உடம்பு சரியில்லைன்னா என்ன செய்யணும்… எதுவுமே எனக்குத் தெரியாது. எனக்கு மட்டும் இல்லை, ஆம்பிள்ளைகளுக்குத் தெரியாது…’

’நாங்க மட்டும் பிறக்கும்போதே இதெல்லாம் கத்துக்கிட்டேவா பிறந்தோம் ராகுல்? நீ வீட்டிலிருந்து குழந்தையைக் கவனிச்சிக்கிறதுன்னா அடுத்த வருஷமே கூட குழந்தை பெத்துக்கலாம். என்ன சொல்ற?’

‘என்ன சீரியஸாவே பேசறீயா?’

‘இதுல என்ன விளையாட்டு?’

‘நான் வேலையை விடணும்ங்கிற பேச்சை விட்டுடு. உலகத்துல யாருமே செய்யாததை நான் உன்கிட்ட கேட்கலை அனிதா. ஒரு சராசரி ஆணுக்கு இருக்கிற எதிர்பார்ப்புதான். இதை நீ தப்புன்னு சொல்ல முடியாது.’

‘சரி. குழந்தை பெத்துக்கறதும் வளர்க்கறதும் பெண்களோட பொறுப்புன்னு சொல்ற இல்லையா? அப்ப குழந்தை பெத்துக்கற விருப்பத்தையும் என்கிட்டேயே விட்டுடு ராகுல்…’

‘குழந்தைங்கிறது நம்ம ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் அனிதா…’

‘மாத்தி மாத்தி சொல்லாதே. குழந்தை பெத்துக்கிறது என்னோட பொறுப்பு, வளர்க்கிறது உன்னோட பொறுப்பா?’

‘இல்ல… இல்ல…’

‘அப்ப குழந்தை விஷயத்தை என் விருப்பப்படி விட்டுடு…’

‘நீ விதண்டாவாதம் செய்யறே. உங்க அம்மா, அக்கா, ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிப்பாரு.’

‘நான் ஏன் அவங்ககிட்ட பேசணும் ராகுல்? உன்னைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். கல்யாணத்துக்கு முன்னால ’சரிசமமா நடத்துறேன், உன் விருப்பத்தை மதிக்கிறேன்’னு எல்லாம் சொன்னீயே?’

‘மத்த புருஷன்கள் மாதிரி உங்கிட்ட நான் நடந்துக்கிறேனா? நீ சமைச்சா சாப்பிடறேன். இல்லைன்னா உனக்கும் சேர்த்து ஹோட்டல்ல வாங்கிட்டு வரேன். அதைச் செய், இதைச் செய்யாதேன்னு எதுவும் சொல்லறதில்லை.’

‘ஆமாம் ராகுல், நீ எவ்வளவு பெரிய தியாகி! எத்தனை நாள் வெளியில் சாப்பிட்டிருக்க… எவ்வளவு பெருந்தன்மையா நடந்திருக்க… உண்மையிலேயே நீ சமமா நினைச்சிருந்தா நான் செய்யற வேலைகளை நீயும் பகிர்ந்து செய்திருக்கணும். உன்னைத் தப்பா சொல்லலை ராகுல். ஆண்களுக்கே உரிய குணம் இது. படிச்சு, பெரிய பொறுப்புல இருக்கறதால நீ மத்த ஆண்கள் மாதிரி நேரடியா உங்க குணத்தைக் காட்டிக்கிறது இல்ல…’

‘எந்த ஆம்பிள்ளையும் பிள்ளைப் பெத்துக்கறதுக்காக இவ்வளவு நேரம் மனைவிகிட்ட கெஞ்சிட்டு இருந்திருக்க மாட்டான். என்னைப் புரிஞ்சுக்க அனிதா…’

‘சாரி ராகுல். இதுல நான் விட்டுத் தர்றதா இல்லை.’

அன்று முழுவதும் மெளனமாகக் கழிந்தது. மறுநாள் காலை. அனிதா, ராகுலின் பெற்றோர் வந்து சேர்ந்தனர். தான் தோற்கப் போகிறோம் என்பது அனிதாவுக்குப் புரிந்துவிட்டது. மாமியார் கோபமாக இருந்தார். மாமனார் ஒன்றும் பேசவில்லை.

அனிதாவின் அம்மா அழுதார். அப்பா மிரட்டினார்.

‘வாழ்க்கைக்காகத்தான் வேலை. வேலைக்காக வாழ்க்கையைத் தொலைச்சிடாதே அனிதா. நல்ல மாப்பிள்ளை. நல்ல குடும்பம்…’

எல்லோரும் பேசிய பேச்சுகளுக்குப் பிறகு, அனிதாவுக்கே தான் ஏதோ கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிட்டது. கடைசியில் அனிதா சம்மதித்தாள். ராகுல் நன்றி சொன்னான்.

‘டெலிவரிக்கு முன்னால உனக்கு எவ்வளவு நாள் வேலை செய்ய முடியுமோ அவ்வளவு நாள் நீ ஆபிஸ் போகலாம்’ என்று சலுகை காட்டினார் மாமியார்.

**

பல ஆண்டுகள் கணவன் – மனைவி பேசிக்கொள்ளாமல் இருந்தாலும்,. போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்று கணவர் மீது புகார் கொடுத்தாலும் பெண்ணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கிறது.

பெண்ணும் ஆணும் சேர்ந்து அன்பும் காதலும் கலந்து குழந்தை பெற்றுக்கொள்வது என்பது நம் சமூகத்தில் பெரும்பாலும் இல்லை. அன்புக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லாமல்தான் இங்கு குழந்தை பிறப்பு நடைபெறுகிறது. தன்னிடம் பேசாத, தன்னை வெறுக்கும் கணவனாக இருந்தாலும் பெண் எப்படிக் குழந்தை பெற்றுக்கொள்ளத் துணிகிறாள்?

குழந்தை பிறப்பு என்பது இங்கு பெண்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இல்லை. அவள் குழந்தை பெற்றுத் தரும் ஓர் இயந்திரம். அந்த இயந்திரத்துக்கு அன்பு, காதல், சுயமரியாதை எல்லாம் இருக்க வேண்டியதில்லை.

குழந்தையை எப்போது பெற்றுக்கொள்வது, எத்தனைக் குழந்தைகள் வேண்டும் என்பதெல்லாம் இங்கு கணவன் மற்றும் கணவனின் பெற்றோர் சார்ந்த விஷயங்களாகவே பார்க்கப்படுகிறது.

திருமணமாகி நான்கு மாதங்கள் வரை அமைதியாக இருப்பார்கள். அதற்குப் பிறகு மெதுவாக மகன், மருமகளிடம் விசாரிப்பார்கள்.

‘முதல் குழந்தையைத் தள்ளிப் போடாதீங்க. அடுத்தது வேணா லேட்டா பெத்துக்கலாம்…’

ஓராண்டில் குழந்தை பிறக்கவில்லை என்றால், ஜோசியம், ஜாதகம், ஆலமரம், சாமி, சாமியார், விரதம் என்று ஆரம்பித்துவிடுவார்கள். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பிறக்கவில்லை என்றால், அறிந்தவர்கள், அறியாதவர்கள் யார் வேண்டுமானாலும் அறிவுரை, ஆலோசனை சொல்லத் தொடங்கிவிடுவார்கள்.

‘கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு? டாக்டர் கிட்ட போனீங்களா? யார்கிட்ட குறை? அந்த டாக்டர் ரொம்ப ராசியானவர்… இந்தச் சாமிகிட்ட வேண்டிகிட்டா கட்டாயம் குழந்தை பிறக்கும்…’

இப்படி விவஸ்தை இன்றி கேள்வி கேட்பார்கள்.

ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இல்லாவிட்டால்…? முன்பெல்லாம் பெண்ணுக்கு ’மலடி’ என்று பட்டம் கட்டி, கணவனுக்கு வேறொரு கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள்.

இன்று?

ஊருக்கு ஊர் கரு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் ஆரம்பித்து இருக்கிறார்கள். மற்ற எந்த மருத்துவமனைகளையும் விட இதுபோன்ற குழந்தைப்பேறு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்ய மக்கள் தயங்குவதில்லை. ‘எப்பாடு பட்டாவது எங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறந்துடணும்’ என்ற ஆசையை மருத்துவ உலகம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறது.

குழந்தை பெற்றுக்கொள்ளலாமா, எப்போது பெற்றுக்கொள்வது என்ற அடிப்படை உரிமைகள் கூட வளர்ச்சி பெற்றதாகச் சொல்லும் இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்குக் கிடையாது. ஆண்கள் மட்டுமின்றி, பெண்களே அது தனக்கான உரிமை என்று நினைப்பதும் இல்லை; அதைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை; அவர்களைச் சிந்திக்க விடுவதும் இல்லை.

இதுபோன்ற சூழலில் ஒரு பெண், தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து, ஒரு குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் என்ன ஆகும்? (இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் தத்தெடுக்கிறார்கள். சிலர் இரண்டாவது குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்கிறார்கள்.) அவள் அனிதாவைப் போல வாழ்க்கைக்காக விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். அல்லது தன் விருப்பத்துக்காக வாழ்க்கையை விட்டுக்கொடுக்க வேண்டும்.