இன்றே இங்கே இப்போதே.

சீனாவில் ஓர் அரசர். தன்னுடைய அமைச்சரை அழைத்தார். ‘நம்ம நாட்டில் பசுமை குறைஞ்சுகிட்டே வருதே, கவனிச்சீங்களா?’ என்றார்.

‘ஆமாம் அரசே, மக்கள் சொந்த லாபத்துக்காகக் காடுகளை அழிக்கறாங்க’ என்றார் அமைச்சர். ’ஆனா அவங்களையும் நாம பெருசாக் குத்தம் சொல்லமுடியாது. வீடுகளைக் கட்டறது, பாலங்களை அமைக்கறது, தொழிற்சாலைகளைக் கட்டறதுன்னு எல்லாத்துக்கும் மரங்கள் தேவைப்படுது. நாம மரம் வெட்டறதைத் தடை செஞ்சுட்டா, முன்னேற்றம் கெட்டுப்போகும்.’

’வருங்கால முன்னேற்றத்துக்காக நம் நிகழ்காலத்தைத் தியாகம் செய்யக்கூடாது அமைச்சரே’ என்றார் அரசர். ‘அதேசமயம், நீங்க சொல்ற விஷயம் எனக்குப் புரியுது. நாம மரம் வெட்டறதைத் தடை செய்யவேண்டாம். கட்டுப்படுத்துவோம். கூடவே நம்ம நாடுமுழுக்க எல்லா இடத்திலயும் மரம் வளர்க்கணும்’ என்று உத்தரவிட்டார்.

‘ஆனா, இதெல்லாம் செஞ்சு முடிக்கறதுக்குப் பல வருஷமாகுமே!’ என்று தயங்கினார் அமைச்சர்.

‘உண்மைதான். அதனால நாம ஒரு விநாடியைக்கூட வீணடிக்கக்கூடாது. இப்பவே மரக்கன்றுகளை நட ஆரம்பித்துவிடுங்கள்!’

நேரம் இல்லை என்பதற்காகச் சிறிய, பெரிய வேலைகளைத் தள்ளிப்போடுகிறவர்களுக்குப் பாடம் சொல்லும் ஜென்  கதை இது. அப்படி நினைத்து நேரத்தை வீணடிப்பதைவிட, வேலையில் இறங்குங்கள், நாடுமுழுவதும் பசுமை பரப்ப எத்தனை வருஷம் ஆகுமோ என்று யோசித்துக் கவலைப்படுவதற்குப் பதிலாக, இந்த விநாடியில் சில மரக்கன்றுகளையேனும் நட்டு முடித்து மன நிறைவு அடையலாம்!

மார்ச்சு `வரி`

Q: What’s the difference between an I.R.S. agent and a mosquito?
A: One is a bloodsucking parasite, the other is an insect.

அமெரிக்காவின் வருமான வரி துறையின் பெயர் உள்ளூர் வருவாய் சேவை (Internal Revenue Service). அதைப் பற்றிய ஏராளமான ஜோக்குகளில் ஒன்றுதான் மேலே சொன்னது. இது அமெரிக்க இன்கம்டாக்ஸ் ஆட்களுக்கு மட்டுமல்ல. எல்லா ஊருக்கும் வரி என்றாலே `உவ்வே` என்கிற உணர்வு தான். வரியும், இறப்பும் நிச்சயம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

மார்ச் இந்தியாவில் பலபேருக்கு இரத்தக் கொதிப்பினை அதிகரிக்கும் மாதம். மார்ச் 31 என்பது நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும், அந்த நிதியாண்டின் வருமானவரியினை செலுத்தும் இறுதி நாள். இப்போது நாம் பிப்ரவரியில் இருக்கிறோம். இப்போதிலிருந்தே திட்டமிட்டால் மார்ச் இறுதிநாள் ஹார்ட் அட்டாக்கினை தவிர்க்கலாம்.

வரி செலுத்துதல் என்பது ஒன்று. வரி விலக்குகள் என்பது இன்னொன்று. இந்தியாவில், வருமான வரி விலக்கு என்பது பல சலுகைகளாக பரவிக் கிடக்கிறது. என்னென்ன வகையில் வரி சலுகைகள் இந்தியாவில் இருக்கிறது என்பதற்கான கையேடு இது.

  • காப்பீடு
  • வீட்டு வாடகை
  • வீட்டுக் கடன்
  • ப்ராவிடண்ட் பண்ட்
  • பென்ஷன் திட்டம் (NPS)
  • பங்கு சார்ந்த காப்பீடு திட்டங்கள் (ULIPs)
  • பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள் (ELSS)
  • கட்டமைப்பு கடன் பத்திரங்கள்
  • கல்விக் கடன்
  • கல்வி – ட்யூஷன் தொகை

காப்பீடு

இந்தியாவில் தொடர்ச்சியாக தவறாக மார்க்கெட் செய்யப்படும் நிதி விஷயங்களில், காப்பீட்டுக்குதான் முதலிடம். ஏஜெண்ட்கள் கமிஷன்களுக்காக, நம்மை டபாய்த்து காப்பீடினை எடுக்க வைத்து விடுகிறார்கள். முதலீடும், காப்பீடும் வெவ்வேறு. நீங்கள், உங்கள் குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட வாழ்வியல் காப்பீட்டின்(Life Insurance Policy) ப்ரீமியத்தினை வரிச் சலுகையாக பயன்படுத்தலாம். செக்‌ஷன் 80C யின் கீழ் ஒரு லட்சம் வரை நீங்கள் வரிச் சலுகை கோரலாம்.

அதே போல மெடிக்கல் காப்பீட்டிலும் செக்‌ஷன் 80D யின் கீழ் ரூ.15,000 வரை வரிச் சலுகைக்குப் பயன்படுத்தலாம். உங்களின் பெற்றோர்களுக்கான மெடிக்கல் காப்பீட்டில் இன்னொரு ரூ.15000 வரை சலுகையுண்டு.

வீட்டு வாடகை

பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய தொழிலாளர்களுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் (HRA – House Rent Allowance) இருப்பதைப் போலத் தான் சம்பளத்தினை நிர்ணயிப்பார்கள். இது வரிச் சலுகைக்கு உரியது. ஒரு வேளை HRA இல்லையென்றால், உங்களின் அடிப்படைச் சம்பளத்திலிருந்து 40% வரைக்கும் (நகரங்களில் இது 50%) நீங்கள் சலுகைகள் கோரலாம். செக்‌ஷன் 80GG யின் கீழ் இது சாத்தியம்.

ஒரு வேளை நீங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு, வருமானம் ஈட்டினால், அதன் வருடாந்திர வருமானத்திலிருந்து 30% வரை கழிப்பினை (deduction) செக்‌ஷன் 24 வழியாக கோரலாம். மேலும், கழிவுநீர் வரி, வீட்டு வரி போன்ற முனிசபல் வரிகளையும் அதிலிருந்து கழித்து விட்டு, மீதம் வரும் தொகைக்கு மட்டும் வரிக் கட்டலாம்.

வீட்டுக் கடன்

என்னதான் நச்சுபிடித்த மனைவியாய் இருந்தாலும், வீட்டுக் கடன் எடுக்கும் போது இருவருமாய் சேர்ந்தெடுப்பது நலம். நீங்கள் மட்டுமே கடன்காரராய் இருந்தால், வீட்டுக் கடனுக்காக நீங்கள் மாதாமாதம் கட்டும் EMIயின் வருடாந்திரத் தொகையில் ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் விலக்கு கோரலாம். இருவருமாய் சேர்ந்து கடனை எடுத்திருந்தால், தனித்தனியாய் 1.5 லட்சம் வரைக்கும் செக்‌ஷன் 24B யின் கீழ் கோரலாம். இரடிப்பு லாபமது.

ப்ராவிடண்ட் பண்ட்

மாதாமாதம் உங்கள் சம்பளத்திலிருந்து போகும் ப்ராவிடண்ட் பண்ட் தொகையும் வரி சலுகைக்கு உதவும். ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோரலாம். இது பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF)க்கும் உண்டு. ஆனால், அதிகப்பட்ச கழிப்பு ரூ.70,000.

தேசிய பென்ஷன் திட்டம் (National Pension Scheme – NPS)

நல்ல படங்களின் தியேட்டர்கள் காற்று வாங்கும். அந்த மாதிரி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிக நல்லத் திட்டம் தேசிய பென்ஷன் திட்டம். யாருக்குமே தெரியாது. உங்கள் ஆடிட்டரையும் சேர்த்து, யாருமே சொல்ல மாட்டார்கள். தேசிய பென்ஷன் திட்டம் என்பது உங்களின் ரிட்டயர்மெண்ட் பணத்தினை சேர்க்கும் திட்டம். அதில் வரிச் சலுகைகளும் உண்டு. இதில் போடப்படும் பணத்தில், ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோர முடியும்.

பங்கு சார்ந்த காப்பீடு திட்டங்கள் (Unit Linked Insurance Plans – ULIPs)

தனிப்பட்ட ரீதியில் எந்நாளும் யூலிப்களை நான் பரிந்துரை செய்வது கிடையாது. காப்பீடு வேறு. முதலீடு வேறு. ஆனாலும், இந்தியாவின் எல்லா முன்னோடி நிதி நிறுவனங்களும் சந்தையில் யூலிப்களை இறக்கி, மக்களை வாங்க வைத்து விட்டார்கள். அதிலும் எல்.ஐ.சி 2007களில் செய்தது அநியாயம். இப்போது காப்பீடு கண்காணிப்பு அதாரிட்டியால் (IRDA – Insurance Regulatory Development Authority) ஒரளவுக்கு இதன் அயோக்கியத்தனங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிகப்பட்சமாய் ஒரு லட்சம் வரை செக்‌ஷன் 80C யின் கீழ் கழிப்பினைக் கோரலாம்.
எச்சரிக்கை: ஏப்ரல் 2012க்கு பிறகு நேரடி வரி குறியீட்டின் (Direct Tax Code) வரைவுப் படி, இந்த சலுகைகளைக் கோர முடியாது.

பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள் (Equity Linked Savings Scheme – ELSS)

யூலிப்பினையும், தேசிய பென்ஷன் திட்டத்தையும் விட மேம்பட்ட திட்டமிது. இதில் நேரடியாக சந்தையில் பங்குப் பெறும் வாய்ப்புகள் அதிகம். அதனால் ரிஸ்க்கும் அதிகம். இதன் பெரிய லாபம், ஒரு பக்கம் பங்குச் சந்தையின் மேம்பாட்டில், போட்ட காசும் பெருகும்; இன்னொரு பக்கம், வரிச் சலுகைகளும் கோர முடியும். அதிகப்பட்சமாக ஒரு லட்சம் வரைக்கும் கோரலாம்.
எச்சரிக்கை: ஏப்ரல் 2012க்கு பிறகு நேரடி வரி குறியீட்டின் (Direct Tax Code) வரைவுப் படி, இந்த சலுகைகளைக் கோர முடியாது.

இப்போதைக்கு கண்ணுக்குத் தெரிந்தவரை முதலீடும், வரி சலுகைகளும் நிரம்ப இருக்கும் ஒரே விஷயமாக தேசிய பென்ஷன் திட்டம் தெரிகிறது. போன வருட நேரடி வரி குறியீடு மறுசீராக்கத்தில், தே.பெ.திட்டம் EEE ஸ்டேட்டஸையும் பெற்று விட்டது.

EEE – Exempt-Exempt-Exempt என்பது வரி, உங்கள் பணத்தின் எதிர்கால ஸ்டேட்டஸ் என்பதைப் பற்றியானது. இந்தியாவின் பெரும்பாலான வரிச்சலுகை சமாச்சாரங்கள் EET (Exempt Exempt Tax). அதாவது, ஒரு திட்டத்தில் நீங்கள் பணம் போடும்போது அது வரிக்குள் வராது. இது முதல் E. (விலக்கு) அந்தத் திட்டத்தில் முதலீடாய் உங்கள் பணம் இருக்கும்போது வரி வராது. இது இரண்டாவது E. (விலக்கு) ஆனால், அந்தப் பணத்தினை பின்னாளில் எடுக்கும்போது, எடுத்த பணத்துக்கு வரி வருமா, வராதா என்பது தான் மூன்றாவது E / T. (விலக்கு / வரி) அதனாலேயே EEE பெற்றிருக்கும் தேசிய பென்ஷன் திட்டம் முக்கியமானதாகிறது. ஆக, இதுவரை தே.பெ.திட்டம் பற்றி யோசிக்கவில்லையானால், உங்களின் வங்கியினை அணுகுங்கள். எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இதை செய்ய முடியும்.

கட்டமைப்பு கடன் பத்திரங்கள் (Infrastructure Bonds)

மேற்சொன்ன விஷயங்களில் நீங்கள் ஏற்கனவே ஒரு லட்சம் அதிகப்பட்ச தொகையை தாண்டிவிட்டால், கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். இந்தியாவில் கட்டமைப்பு என்பது நீங்கள் ரிட்டயர் ஆகும் வரை நடக்கக்கூடிய விஷயம். அடுத்த 30-40 ஆண்டுகள், இது இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. செக்‌ஷன் 80C யின் கீழ் ரூ.20,000 கூடுதலாக கழிப்பினை, கட்டமைப்பு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதின் மூலம் பெறலாம். சராசரியாக எல்லா கட்டமைப்பு கடன் பத்திரங்களும் 8% மேலான ரிடர்னை வழங்குகின்றன. ஆக, சலுகைக்கு சலுகையுமாச்சு. போட்டப் பணமும் 8% பாதுகாப்பாக வளரும் வழியுமாச்சு.

கல்வி – ட்யூஷன் கட்டணம்

செக்‌ஷன் 80C யின் கீழ், ஒரு லட்சம் வரையிலானக் கழிப்பினை உங்களின் இரண்டு குழந்தைகளுக்குப் பெறலாம். உ.தா. பொறியியல் படிப்பு படிக்கும் மகன்/ள் இருந்தால், அவர்களின் ட்யூஷன் பீஸ்ஸினை ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும், உங்கள் வருமானத்திலிருந்து கழிப்பு செய்து பயன் பெறலாம். ட்யூஷன் பீஸ் என்பது மொத்த பொறியியல் படிப்பின் கட்டணைத்தை சாராது. உ-தா ஹாஸ்டல் கட்டணங்கள், பேருந்து கட்டணங்கள்

கல்விக்கடன்

நீங்களோ, உங்கள் மனைவியோ, குழந்தைகளோ மேற்படிப்புக்காகக் கல்விக் கடன் வாங்கியிருந்தால், அதன் வட்டித் தொகையினை வரிக் கழிப்பிற்கு செக்‌ஷன் 80E யின் கீழ் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மேலே சொன்ன, செக்‌ஷன் 80C யின் கீழ் வந்த ஒரு லட்சத்திற்கும் மேலே பயன்படக்கூடியது. கல்விக்கடனில் கட்டும் வட்டிக்கு மட்டுமே இந்த கழிப்புச் சலுகையுண்டு. அசலுக்கு இல்லை.

சுருக்கமான கையேடு

https://spreadsheets.google.com/pub?key=0ArPLzwxPc2HfdFBnQlZYOGh5bXlrQXc5ZUNzMElMT1E&hl=en_GB&output=html

நன்றி: பிஸினஸ் டூடே