ரத்த ராணி

13. எலிசபெத் பாதோரி

வரலாற்றைப் படிப்பவர்களுக்கு கொள்கைக்காகவும் சொந்த ஆதாயத்துக்காகவும்  மக்களைக் கொன்று குவித்த வில்லன்கள் அடிக்கடி தென்படுவார்கள்.  இப்படிப்பட்ட வில்லன்களை விட தனிப்பட்ட சந்தோஷத்துக்காக ஒரு சில பத்து பேரைக் கொன்ற தொடர் கொலையாளிகள் (serial killers) தான் மக்களிடையே பிரபலமாக இருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் சீரியல் கில்லர், சைக்கோபாத் போன்ற வார்த்தைகளெல்லாம் உருவாக்கப்பட்டன என்றாலும் வரலாற்றில் அதற்கு பல காலம் முன்னரே தொடர் கொலையாளிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுள் பெண்களும் அடக்கம்.   இவர்கள் வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆன பின்னரும் அவர்களைப் பற்றிய கதைகள் மட்டும் இன்னும் உலா வந்து கொண்டிருக்கினறன.  காலப்போக்கில் ஊதிப் பெரிதாக்கப்பட்டு ஈறு பேனாகி, பேன் பெருமாளானது போல இன்று பல மொழி இலக்கியங்களுக்கும் கற்பனைப் பாத்திரங்களுக்கும் அடிப்படையாகிப் போயிருக்கின்றன.  இப்படி இலக்கியத்தில் அமரத்துவம் பெற்ற தொடர் கொலையாளிகளில் ஒருவரான எலிசபெத் பாதோரி தான் இந்த வார வில்லி.

வரலாற்றில் எப்போதும் கிழக்கு ஐரோப்பாவுக்கென ஒரு தனி இடம் உண்டு. மேற்கு    மற்றும் தெற்கு ஐரோப்பியப் பகுதிகள் பழம் நாகரிங்களுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பெயர் போனவை. ஆனால் கிழக்கு ஐரோப்பா என்றுமே வரலாற்றில் “இருண்ட பிரதேச” மாகத் தான் இருந்துள்ளது. .  இப்பிராந்தியத்தின் அமானுஷ்யக் கதைகள் மிகப் பிரபலம். மேற்கு ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகள் வாழுமிடம் எனக் கருதிய ஆசியாவின் எல்லையில் அமைந்திருப்பதோ என்னமோ கிழக்கு ஐரோப்பாவென்றால் பேய் பிசாசு இன்ன பிற இரத்த வெறி பிடித்த ஐட்டங்கள் அலையும் இடம் என்றொரு பிம்பம் உருவாகி விட்டது.  இந்த கருத்துருவாக்கத்துக்கு தீனி போடுவது போல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பல வில்லன்களும் வில்லிகளும் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுள் அதிக பிரபலமானவர் விளாட் டிராக்கூல்.  டிராகுலா கதைக்கு மூல காரணம் என்று சொல்லப்படுபவர். இவருக்கு அடுத்தபடியாக அதிக பிரபலமாக இருக்கும் வில்லி, ஹங்கேரியின் எலிசபெத் பாதோரி. 650  இளம் பெண்களைக் கொலை செய்து அவர்களது இரத்ததில் குளித்து “இரத்த ராணி” என்றும் “பெண் டிராகுலா”  என்றும் பெயர் பெற்றவர்.

எலிசெபெத் 1560ம் ஆண்டு ஹங்கேரி ராஜ்ஜியத்தின் பலம் வாய்ந்த பாதோரிக் குடும்பத்தில் பிறந்தார். பாதோரி பிரபுக்கள் குறுநில மன்னர்கள். ஹங்கேரியில் பல துறைகளிலும் முக்கிய பதவிகளை வகித்தவர்கள்.  அந்தக் காலத்தில் ஹங்கேரியில் நில அடிமைத்துவம் (serfdom) அமலில் இருந்தது. இம்முறையில் ஒரு பகுதியின் குறுநில மன்னருக்கே அப்பகுதி நிலமனைத்தும் சொந்தம். அப்பகுதி மக்கள் அனைவரும் ஒரு வகையில் அவருடைய அடிமைகளே. அவரே அப்பகுதியில் காவல்துறை, நீதித்துறை எல்லாம். அவர் வைத்தது தான் சட்டம். ஒரு  பிரபு தன் கட்டுப்பாட்டிலுள்ள நில அடிமைகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் கேட்க முடியாது.  ஒரு பிரபு தன்னை விட மேலதிகாரத்தில் உள்ள மற்றொரு பிரபுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். கீழிருப்பவர்களைக் கண்டு கொள்ளத் தேவையில்லை. பாதோரி குடும்பத்தினர் இந்த நில அடிமை அதிகார அடுக்கில் பல நிலைகளை வகித்தனர்.

பிரபுக்களின் குடும்பங்கள் பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் தான் தங்கள் அரசியல் கூட்டணிகளைப் புதுப்பித்தும் பலப்படுத்தியும் வந்தன. அது போல பதினைந்து வயதான எலிசபெத்தையும் அவரது பெற்றோர் நிச்சயித்தது போலவே நாடாஸ்டி பிரபு குடும்பத்தில் உறுப்பினரான ஃபெரென்க் நாடாஸ்டிக்கு மணமுடித்தனர்.  ஃபெரென்க்கும் ஹங்கேரி அரசியலில் பெரும் புள்ளி. தனது புதிய மனைவிக்கு திருமணப் பரிசாக ஒரு பெரிய கோட்டையினையும் அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களையும் வழங்கினார். இப்பகுதி முழுவதும் நாடாஸ்டி குடும்பத் தனிச்சொத்தாக இருந்ததால் இங்கு ஹங்கேரியின் சட்ட திட்டங்கள் செல்லாது. எலிசபெத்தும் அவரது கணவனும் வைத்தது தான் சட்டம். கணவன் இல்லையென்றால் எலிசபெத்து தான் இப்பகுதிக்கு முழு சொந்தக்காரி என்ற நிலை இருந்தது.

இங்கு தான் அடுத்த பல ஆண்டுகள் எலிசபெத் வாழ்ந்தார். கணவர் ஃபெரென்க் ஹங்கேரியின் ராணுவத்தில் உயர் பதவி வகித்தவர். அடிக்கடி படைகளுக்குத் தலைமை தாங்கி தளபதியாகப் பணியாற்ற பல போர்முனைகளுக்குச் சென்று விடுவார். தனித்து விடப்பட்ட எலிசபெத் கணவர் இல்லாத நேரங்களில் குடும்ப விவகாரங்களைக் கவனித்துக் கொள்வார். குடும்ப நிலங்களின் நிர்வாகம், கீழிருக்கும் பிரபுக்களுக்கும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நில அடிமைகளுக்கும் ஏற்படும் சிக்கல்களுக்கு பஞ்சாயத்து செய்து தீர்ப்பு சொல்லுதல் போன்ற பொறுப்புகள் அனைத்தையும் எலிசபெத்தே ஏற்று செய்தார். இப்படியே முப்பது ஆண்டுகள் கழிந்தன.

எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த போது மெதுவாக பாதோரி குடும்ப நிலங்களிலிருந்து வெளியுலகுக்கு பயங்கர வதந்திகள் கசியத் தொடங்கின. பாதோரி குடும்பக் கோட்டையில் சொல்ல முடியாத கொடூரங்கள் நடக்கின்றன, சாத்தானிய பில்லி சூனிய வேலைகள், ரத்த மாந்திரீகம் போன்றவையும் நிகழ்கின்றன என பலவாறாக பேசப்பட்டது.  இதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாதோரி மற்றும் நாடாஸ்டி குடும்பத்தின் அரசியல் எதிரிகள் வதந்திகளில் உண்மையுள்ளதா என்று தோண்டித் துருவினர். விசாரணையில் கேள்விப்பட்ட விஷயங்கள் அவர்களைக் குலை நடுங்க வைத்தன. கணவர் ஊரில் இல்லாத போது எலிசபெத் தங்கள் குடும்ப நிலங்களை நிர்வாகம் செய்வதோடு மட்டும் நிற்கவில்லை நூற்றுக்கணக்கான கொலைகளையும் செய்திருந்தார்.  கணவரின்றி தனித்து விடப்பட்ட எலிசபெத்துக்கு போரடித்த வாழ்க்கை சூனியமாக இருந்தது.  பொழுது போக்குவதற்காக முதலில் தனது பணிப்பெண்களை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அடி உதையுடன் நின்று போன சித்திரவதைகள் போகப் போக கடுமையாகின.  பணிப்பெண்களைத் தனது கோட்டையில் உள்ள நிலவறையில் நிர்வாணமாகக் கட்டி வைத்து வகை வகையாக சித்தரவதை செய்து மகிழ்ந்தார். அதுவும் யாராவது அழகான பெண் எலிசபெத்தின் கண்ணில் பட்டு விட்டால் போதும் அவரது வெறி தலைக்கேறி விடும். அப்பெண்ணைக் கட்டைகளால் அடித்தும், ஊசிகளால் குத்தியும், முகத்தை சிதைத்தும் துன்புறுத்துவார்.  வெறியேறிய பின் தீயினால் சுட்டு ரசிப்பார். தன்னை விட அழகான அப்பெண் அவலட்சணமாகி துடிதுடித்து சாகும் வரை எலிசபெத்தின் வெறி அடங்காது.

எலிசபெத்தின் இந்த மனநோய் விரைவில் வேறு திசையில் திரும்பியது.  அவருக்கு வயது அதிகமாக அதிகமாக தனது அழகை இழந்து விடுவோம் என்ற பயம் பிடித்துக் கொண்டது.  எப்படியாவது இளமையையும் அழகினையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற வெறி மூண்டது. ஏற்கனவே எலிசபெத்தின் வெறியாட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த பில்லி சூனியக்காரர்கள் அவரது புது இளமை மோகத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். கன்னிப் பெண்களின் ரத்தத்தில் அடிக்கடி குளித்தால் இழந்த இளமையினை மீண்டும் பெறலாம் என்று அவரது காதில் போட்டு வைத்தனர். அவ்வளவு தான், பாதோரி குடும்ப நிலங்களில் இளம் பெண்கள் காணாமல் போவது திடீரென்று அதிகரித்தது. முன்பு பணிப்பெண்களை அடித்துக் கொல்வதோடு திருப்தியடைந்திருந்த எலிசபெத், இப்போது தனது “இளமைக் குளிய”லுக்காக  பிற இளம்பெண்களையும் கொண்டு வர தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார்.   இந்த இளம் பெண்களை முன்பு போல துன்புறுத்தி கொலை செய்த பின்னர் அவர்களது உடம்பில் உள்ள ரத்தத்தினை வடித்து அதில் குளிக்கத் தொடங்கினார் எலிசபெத்.

தங்கள் எஜமானியின் கோட்டையில் வேலைக்கு சேரும் பெண்கள் யாரும் உயிருடன் திரும்பி வருவதில்லை என்பதைக் கண்டுகொண்ட குடியானவர்கள் தங்கள் பெண்களை அக்கோட்டைக்கு அனுப்ப மாட்டோம் என்று முரண்டு பிடிக்கத் தொடங்கினர். இதனால் எலிசபெத்தின் அடியாட்கள் அக்கம் பக்கத்திலிருந்த பெண்களைக் கடத்தி வந்து தங்கள் எஜமானியின் இரத்த பசிக்கு தீனி போடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு அதிகமாகி எலிசபெத்தின் அட்டூழியங்கள் பற்றிய வதந்திகள் ஹங்கேரியின் பிற பகுதிகளுக்குப் பரவின. இதைக் கேள்விப்பட்டுத் தான் பாதோரி மற்றும் நாடாஸ்டி குடும்பங்களின் அரசியல் விரோதிகள் தங்கள் விசாரணையைத் தொடங்கினர். வதந்திகள் உண்மையென உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு ஹங்கேரியின் அரசரிடம் விஷயத்தைப் போட்டு உடைத்தனர்.  அரசர் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு குழுவினை அமைத்தார். அவர்கள் எலிசபெத்தின் கோட்டையைச் சோதனையிட்டனர். அங்கு அவர்கள் கண்ட ஒரு இளம்பெண்ணின் பிணம் குற்றச்சாட்டினை உறுதிபடுத்தியது. மேலும்

அக்கம் பக்கமுள்ள கிராமங்களில் விசாரித்ததில் எலிசபெத்தின் அட்டூழியங்கள் பற்றிய முழு உண்மைகள் மெதுவாக வெளியே வந்தன.  எலிசபெத்தும் அவருடைய அடியாட்களும் கைது செய்யப்பட்டனர். எலிசபெத் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை வீட்டுக் காவலில் மட்டும் வைத்தனர். அடியாட்களைச் சிறையில் அடைத்து விசாரித்ததில் சுமார் 650 இளம்பெண்களை எலிசபெத் 30 ஆண்டுகளில் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

எலிசபெத் கொலைகாரி என்பது உறுதியான பின்னரும் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. பிரபு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சாதாரண மக்களைக் கொலை செய்ததற்காகத் தண்டித்தால் தவறான (!) முன்னுதாரணமாக ஆகி விடும் என்பதற்காகவும், பலம் வாய்ந்த பாதோரி குடும்பத்தின் பிற கிளைகளை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவரை தண்டிக்கவில்லை. அவரது அடியாட்கள் மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர்.  எலிசபெத் தனது மீதி வாழ்நாளை வீட்டுச் சிறையிலேயே கழித்தார். அவரது கொடூர குற்ற சரித்தரம் கதைகளோடு கலந்து விட்டது. டிராகுலா கதைகளிலும் மாந்திரீகப் புனைவுகளிலும் இன்று எலிசபெத் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

போகுமிடம்

கடைத்தெரு. எதிரெதிரே நடந்துவந்த இரண்டு ஜென் துறவிகள் சந்தித்துக்கொண்டார்கள்.

முதல் துறவி கேட்டார். ‘ஐயா, வணக்கம். நலம்தானே? எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

’இந்தக் காற்று என்னை எங்கே அழைத்துச்செல்கிறதோ, அங்கே செல்கிறேன்’ என்றார் இரண்டாவது துறவி.

அன்றுமுழுவதும் முதல் துறவி இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். அந்த இன்னொரு துறவியை மடக்கும்படி ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

கடைசியாக, அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘ஒருவேளை காற்றே இல்லாவிட்டால்? அப்போது என்ன செய்வீர்கள்?’

இந்தக் கேள்வியை மனப்பாடம் செய்துகொண்டு மறுநாள் அதே கடைத்தெருவுக்குச் சென்றார் இவர். அதே துறவியைச் சந்தித்தார். அதே கேள்வியைக் கேட்டார். ‘எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

‘என்னுடைய கால்கள் என்னை எங்கே அழைத்துச்செல்கின்றனவோ, அங்கே செல்கிறேன்’ என்றார் இரண்டாவது துறவி.

அவ்வளவுதான். முதல் துறவிக்குக் கை காலெல்லாம் உதறிவிட்டது. அவர் நாள்முழுக்கக் கஷ்டப்பட்டு யோசித்துவைத்திருந்த கேள்வி பயன்படாமல் போய்விட்டது. வருத்தத்துடன் தன்னுடைய ஆசிரமத்துக்குத் திரும்பினார். மீண்டும் யோசிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக, அவருக்கு இன்னொரு நல்ல கேள்வி மாட்டியது. ‘ஒருவேளை உங்களுக்குக் காலே இல்லாவிட்டால்? அப்போது எங்கே செல்வீர்கள்?‘

மறுபடியும் இந்தப் புதுக் கேள்வியை மனப்பாடம் செய்துகொண்டு அவர் கடைத்தெருவுக்குச் சென்றார். அதே துறவியைச் சந்தித்தார். அதே கேள்வியைக் கேட்டார். ‘எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

அவர் அமைதியாக பதில் சொன்னார். ‘நந்தவனத்துக்குப் பூப்பறிக்கச் செல்கிறேன்!’

நாம் எத்தனை யோசித்து நம்மைத் தயார் செய்துகொண்டால் என்ன? அதைவிட அதிவேகத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அந்த நீரோட்டத்துடன் மிதந்து செல்லப் பழகிக்கொள்ளாவிட்டால், தேவையில்லாத முன்தயாரிப்புகளிலேயே நம் வாழ்க்கை வீணாகிவிடும்!