ஆழி பெரிது!

13. சூத்திரனின் சரஸ்வதி

அதிகாலை. சூரியனின் ஒளிக்கதிர்களில் ஒருசிலவே அந்த நதி நீரைத் தொட்டு ஆங்காங்கே கோலப்புள்ளிகளை போட்டிருக்கின்றன. நதி தீரங்களில் ஆங்காங்கே பச்சை பசுமை உண்டு. ஆனால் சற்று தொலைவிலேயே பாலை ஆரம்பித்துவிடும் அந்த நிலப்பரப்பில் அந்த நீரோட்டமே தெய்வம். அந்த நதியின் தீரத்தில் ஒரு சிறிய கூட்டம். புரோகிதர்கள். வேத வேள்வி தொடங்க உள்ளது. அந்த ரிஷிகள் வந்து அமர்கின்றனர். சோமத்தை உருவாக்குவோம். தேவர்களுக்கு அளிப்போம். ஒருவரையொருவர் பேணி வாழ்வோம். செழிப்போம். மெல்ல ஆதவன் மேலெழுகிறான். அதிகாலையிலேயே வெப்பமும் அதிகரிக்கிறது. முன்பு போல் இல்லை. பருவங்கள் மாற ஆரம்பித்துவிட்டன. இதோ இந்த நதி கூட முன்பு எப்படி பிரவாகித்து ஓடியது! ஆனால் இன்றைக்கு இதுவும் இல்லை என்றால் இங்கு மனிதப் பண்பாடே அழிந்துவிடக்கூடும். இந்த வேள்வியாவது நம்மை காக்கட்டும். நம் தெய்வங்கள் நம்மிடம் அன்பாக இருக்கட்டும்.

புரோகிதர்கள் வந்து அமர்கிறார்கள் ரிஷிகளின் வழிகளில் வந்தவர்கள். விஸ்வாமித்திரர், வாம தேவர், அத்ரி, பரத்வாஜர் ஆகிய மகாமேதைகளின் வழித்தோன்றல்கள். அதனாலேயே பெருமை பெற்றவர்கள். ஞானத்தின் வாரிசுகள். ஆனால் இதென்ன!

இவர் யார்? இல்லை இவன் யார்? கவஷ மகரிஷி. இல்லை கவஷன். இவன் தகப்பனை நாம் அறிவோம். அவன் ஒரு சூதாடி. அவன் தாய் ஒரு தாசிப்பெண். இவன் அதிகபட்சம் ஒரு சூத்திரன். நாங்கள் பெருமுனிகளின் வழி வந்த ஞானத்தின் வாரிசுகள். இவனை இங்கே இருக்க செய்தவர்கள் யார்? இவனை இங்கிருந்து விரட்டி அடியுங்கள். தீட்டாகிவிட்டது யாகசாலை. யாக சாலையிலிருந்து மட்டுமல்ல இந்த பிரதேசம் முடிந்து பாலைவனம் தொடங்குகிறதே அங்கே கொண்டு போடுங்கள். சோமபானமல்ல சொட்டு நீர் கூட இல்லாமல் இவன் தவித்து இறக்க வேண்டும்.

பிறகு நடந்தவற்றில் எது உண்மை எது தொன்மக்கற்பனை என்பதை நாம் பிரித்தறிந்து கொள்ளலாம். தகிக்கும் சூரியனில் வறண்டு காய்ந்து அணு அணுவாக இறந்து கொண்டிருந்த கவஷரின் அகத்தில் மந்திரங்கள் தோன்றின. அவற்றின் எழுச்சியால் அந்த நதி தன் திசையை மாற்றிக்கொண்டு அவரிடம் வந்தாள். மகரிஷிகளின் வழித்தோன்றல்கள் தங்களிடம் இருப்பது பரம்பரையில் செருக்கு மட்டுமே என்பதையும் அந்த சூதாடிக்கும் தாசிக்கும் பிறந்த சூத்திரனிடம் சரஸ்வதியின் அருள் இருக்கிறது என்பதையும் புரிந்து அவனிடம் மன்னிப்பு கேட்டு உய்வுற்றார்கள். வேத வேள்வியின் அக்னி மீண்டும் பிரகாசித்தது என்கிறது ரிக் வேதத்தின் ஐத்ரேய பிராமணம்.

அந்த நதி சரஸ்வதி.

சரஸ்வதி நதி இன்றைக்கும் இந்திய பொது மனதில் பண்பாட்டு பிரவாகமாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. நிலவியலாளர்களின் உபகரணங்கள் பூமியின் அடியாழங்களில் தேடி அதனை கண்டடைவார்களா? அல்லது வெறும் பழமையான கற்பனை நதியா அல்லது அதன் ஆன்மீக பண்பாட்டு குறியீட்டு முக்கியத்துவமா? தார் பாலை வனத்திலும் இமயம் முதல் குஜராத் வரை நீண்டுகிடக்கும் வறண்ட நதிப் படுகையிலும் அடி ஆழத்தில் இதற்கான பதில்கள் துயில் கொண்டிருக்கலாம்.

அண்மைக்காலங்களில் செயற்கைகோள் புகைப்படத்தின் விளைவாகவே சரஸ்வதி கண்டுபிடிக்கப்பட்டதாக தவறாக சில இந்துத்துவ வட்டங்களில் ஒரு கதை புழங்குகிறது. ஆனால் இது தவறு. 1862 இன் பிரிட்டிஷ் இந்திய வரைபடம் காகர் நதியின் இணை நதியை சூர்ஸ்வதி (‘Soorsutty’)  என கூறுகிறது. அந்த நதிப்படுகையைச் சுற்றிலும் இருக்கும் நாட்டார்  வழக்குகளில் சரஸ்வதி  ஒரு சாஸ்வத நினைவாகவே இருந்து வந்துள்ளது. ”மறைந்த நதி”  என இந்த வறண்ட நதிப் படுகையை மகாபாரதமும் வேதங்களும் கூறுவதைச் சரஸ்வதியுடன் இணைத்துப் பேசுகிறார் காலனிய ஆட்சியின் போது நிலவரையியலாளராக இருந்த சி.எஃப்.ஓல்தம், வேதங்களும் சரி பின்னாட்களின் இதிகாசமான மகாபாரதமும் சரி  சரஸ்வதி குறித்து கூறும் விவரணஙகள்  ”அந்தந்த காலகட்டங்களைச் சார்ந்த உண்மையாகவே இருந்திருக்க வேண்டும்” என அவர் கூறுகிறார்

இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களும்  கூட சரஸ்வதி குறித்த செய்திகளை அளிக்கின்றன. 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தாரிக் ஈ முபாரக் ஷாஹி எனும் நூலில் சரஸ்வதி எங்கே ஓடியிருக்க வேண்டும் என்பது குறித்து கூறப்படுகிறது.

நவீன காலங்களில்  சரஸ்வதி நதி குறித்து செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு வரலாம். நிலத்தகடுகளின் இயக்கம் குறித்த ஆராய்ச்சியும் செயற்கைகோள் தூர-புகைப்படத் துறையும் எப்படி இந்த நதியின் இருப்பில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தின. இத்தேடலின் தொடக்கப்புள்ளியான ஆராய்ச்சி தாள் விஞ்ஞானி யஷ்பால்-ஆராய்ச்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டது ‘Remote Sensing of the ‘Lost’ Sarasvati River’. ஆனால் அது நாம் பெரும்பாலான எளிய வரைப்படங்களில் காண்பது போல ஒற்றை வரி ஓட்டம் அல்ல. அதன் சிக்கலான அமைப்பு அந்த பிரதேசத்தின் வரலாற்றின் சிக்கலான நீரோட்டத்தை நினைவுப்படுத்துவது.

சரஸ்வதி நதி குறித்த அறிவியல் ஆராய்ச்சி பலதுறை நிபுணத்துவத்தைக் கோருகிறது. உண்மையில் பலதுறைகளும் அவையவற்றின் பணிகளின் போது கிடைத்த தரவுகள் ஒருங்கிணைந்து சரஸ்வதியின் தேடலை மேலும் மேலும் விரிவாக்குகின்றன.

இங்கு மற்றொரு சுவாரசியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான கே.எம்.பணிக்கர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு ஒரு கோரிக்கை குறிப்பினை அனுப்புகிறார். ”ஒரு காலத்தில் சரஸ்வதி நதி பாய்ந்தோடி கட்ச் வளைகுடா பகுதிக்குள் பாய்ந்த பாதையில் இருக்கும் பைகானூர் ஜெய்சால்மீர் ஆகிய பாலைவனப்பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சிகளை இந்திய அகழ்வாராய்ச்சி கழகம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” ஜவஹர்லால் நேரு இந்த சரஸ்வதி நதி அகழ்வாராய்ச்சி திட்டத்தை அமுல்படுத்துகிறார்.. ஆக சரஸ்வதி நதி அகழ்வாராய்ச்சி என்றதுமே “ஹிந்துத்துவ கற்பனை” என கூறுவோர் அந்த கற்பனையையும் ஹிந்துத்துவத்தையும் நேருவிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

சரஸ்வதி  குறித்து அத்தனை வேத-புராண தரவுகளையும் அது குறித்து வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து இந்திய-வரலாற்று ஆர்வலர் மிச்சேல் தனினோ ஒரு நூலை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். மிகைப்படுத்தல்கள் இல்லாத அறிவியல் தேடலாக மட்டுமே அந்த நூல் அமைந்துள்ளது.

வேதம் தன் பாடல்களில் இந்த நதியை  நதிகளில் சிறந்தவளாக, அன்னைகளில் சிறந்தவளாக, தெய்வங்களில் சிறந்தவளாக- என்றென்றைக்குமாக குடியேற்றி வணங்கியது. அவளே அறிவைத் தந்தாள். அவளே நம் பண்பாட்டை உருவாக்கினாள். அவள் பாரதத்தின் கூட்டு மனதில் நனவிலும் கூட்டு நனவிலியிலும் வாக்தேவதையாக, கலையரசியாக உருவெடுத்தாள்.  இந்த நதி குறித்து வேதமும் இன்றைய ஆய்வுகளும் சர்ச்சைகளும் என்ன சொல்கின்றன என்பதை அடுத்து காணலாம்

– தொடரும்

10 ரூபாய் மகிழ்ச்சி

பள்ளி ஆண்டு விழா. மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களுமாக ஏகப்பட்ட கூட்டம். பரபரப்பு. உற்சாகம். மகிழ்ச்சித் தாண்டவம்.

அன்றைய விழாவுக்குத் தலைமை தாங்குவதற்காக ஒரு ஜென் குருநாதர் வந்திருந்தார். குழந்தைகளுக்குப் புரியும்விதத்தில் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை விளக்கிப் பேசினார்.

கடைசியாக, அவர் ஒரு விஷயம் சொன்னார். ‘குழந்தைகளே, நாங்கள் ஏழை எளிய மக்களுக்காக ஒரு மருத்துவமனை கட்டிக்கொண்டிருக்கிறோம். அதற்காக உங்களுடைய உதவியை எதிர்பார்க்கிறோம்.’

‘இன்னும் சிறிது நேரத்தில் எங்களுடைய ஆசிரமத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உங்களிடம் உண்டியல் குலுக்கி வருவார்கள். உங்களிடம் உள்ளதை மகிழ்ச்சியோடு கொடுங்கள். அப்போதுதான் கடவுள் உங்களை விரும்புவார்!’

இதைக் கேட்டுக்கொண்டிருந்த வெங்கடேசன் தன்னுடைய மகனை அழைத்தார். அவனிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டும், ஒரு பத்து ரூபாய் நோட்டும் கொடுத்தார். ‘இந்த ரெண்டுல ஏதாவது ஒண்ணை அந்த உண்டியல்ல போட்டுடு, இன்னொண்ணை நீ வெச்சுக்கோ!’ என்றார்.

வெங்கடேசனின் மனைவி கேட்டார். ’எதுக்குங்க அவனுக்கு ரெண்டு நோட்டைக் கொடுக்கறீங்க?’

’அது ஒரு சின்ன டெஸ்ட்’ என்று கண்ணடித்தார் வெங்கடேசன். ‘அவன் பத்து ரூபாயை வெச்சுகிட்டு நூறு ரூபாயை உண்டியல்ல போட்டா, நல்ல பையன்னு அர்த்தம். நூறு ரூபாயை வெச்சுகிட்டுப் பத்து ரூபாயை உண்டியல்ல போட்டா, கெட்ட பையன்னு அர்த்தம்!’

சிறிது நேரத்தில் அங்கே ஒருவர் உண்டியலோடு வந்தார். வெங்கடேசனின் மகன் அந்த உண்டியலில் பத்து ரூபாயை மட்டும் போட்டான்.

வெங்கடேசனுக்குக் கோபம். மகனை அழைத்தார். ‘ஏண்டா, சாமியார் சொன்னதைக் கேட்கலையா? நல்ல விஷயத்துக்காக நூறு ரூபாய் கொடுக்க மனசு வரலையா உனக்கு?’ என்று கத்தினார்.

‘நான் சாமியார் சொன்னபடிதான்ப்பா செஞ்சேன்!’ என்றான் மகன்.

‘என்னடா உளர்றே?’

‘நம்மகிட்ட உள்ளதை மகிழ்ச்சியோட கொடுத்தால்தான் கடவுள் நம்மை விரும்புவார்-ன்னு சாமியார் சொன்னார்ல?’

‘ஆமா, அதுக்கென்ன இப்போ?’

‘என்னால பத்து ரூபாயைதான்ப்பா மகிழ்ச்சியோட கொடுக்கமுடிஞ்சது. நூறு ரூபாயைக் கொடுத்திருந்தா, வருத்தத்தோட கொடுத்திருப்பேன். கடவுள் என்னை விரும்பியிருக்கமாட்டார்!’