வாசலுக்குப் போ!

மலைமேலே ஓர் ஆசிரமம். அங்கே ஓர் இளைஞர் வந்துசேர்ந்தார். ‘நான் குருநாதரைச் சந்திக்கவேண்டும்’ என்றார்.

‘எதற்காக?’

‘நான் ஞானத்தைத் தேடி வந்திருக்கிறேன்’ என்றார் அந்த இளைஞர். ‘தயவுசெய்து என்னை உங்களுடைய குருநாதரிடம் அழைத்துச்செல்லுங்கள்!’

சிறிது நேரத்தில் அவர் குருநாதர் முன்பாக நிறுத்தப்பட்டார். அவருக்கு முறைப்படி வணக்கம் சொல்லிவிட்டு. ‘ஐயா, எனக்கு நீங்கள்தான் ஜென் வாசலைக் காட்டவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

‘ஜென் வாசலா? அது எதற்கு?’

‘அதுதானே ஞானத்துக்கான வழியை நமக்குக் காண்பிக்கும்?’

’உண்மைதான்’ என்று தாடியைத் தடவிக்கொண்டே யோசித்தார் துறவி. ‘வரும்வழியில் நீ ஒரு நதியைக் கடந்து வந்தாயா?’

‘ஆம் குருவே!’

’அந்த நதியின் பாடல் உனக்குக் கேட்டதா?’

இளைஞர் யோசித்தார். நதியில் தண்ணீர் ஓடுகிற சத்தம் கேட்டது. அதையா குருநாதர் ‘பாடல்’ என்கிறார்? எதற்கும் இருக்கட்டும் என்று மெல்லத் தலையாட்டிவைத்தார். ‘ஆமாம் குருவே, நதியின் பாடலை நான் கேட்டேன்!’

’அற்புதம்! அந்தப் பாடல் தொடங்கும் இடத்தில்தான் ஜென் வாசல் இருக்கிறது. அங்கே திரும்பிச் சென்று ஞானத்துக்குள் நுழைந்துகொள்’ என்றார் குருநாதர்.

இதைக் கேட்ட இளைஞர் அதிர்ந்துபோனார். அவமானத்துடன் தலையைக் குனிந்துகொண்டார்.

குருநாதர் அவருடைய தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார். ‘ஜென் வாசல் என்பது ஒரு குறியீடுதான். அங்கே கதவுகள்கூடக் கிடையாது. உலகம்முழுக்க இயற்கை பரந்து விரிந்திருக்கிறது. அதைப் பார்த்து ரசிக்கத் தெரிந்தவனுக்கு ஜென் வாசல் எங்கேயும் திறந்து கிடக்கிறது. போய் அனுபவி! தேடாதே!’

Fair, Slim, Beautiful Girl.

fair

பெரும்பாலான உயிரினங்களில் ஆண் உயிரினங்களே கண்கவர் வண்ணங்கள், இனிமையான குரல் போன்ற சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கின்றன. இனப்பெருக்கத்துக்கு பெண்ணை அழைக்க வேண்டிய தேவை இருப்பதால் ஆண் உயிரினங்கள் இயற்கையிலேயே சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. ஆண் மயில் அழகிய தோகையை விரித்து நடனமாடி, குடும்பம் நடத்த பெண்ணை அழைக்கும். இனப்பெருக்கக் காலங்களில் ஸ்டிக்கில் பேக் என்ற ஆண் மீன், பெண் மீனைக் கண்டவுடன் உடல் நிறங்களை மாற்றிக்கொண்டு நடனமாடி, பெண்ணைக் கவர்ந்திழுக்கும். ஆண் குயில் பெண் குயிலை அழைக்க இனிமையாகப் பாடும். ஆண் வெட்டுக்கிளிகளும் இதே போலச் செய்கின்றன. ஆண் சிங்கம் பிடரிமயிருடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும். கோழியை விட சேவல் வண்ணங்கள் நிறைந்தும் கொண்டையுடனும் தோற்றம் தரும். அதே போலத்தான் மனிதனும். ஆனால் ஆண்கள் உலகம் ‘அழகு’ என்ற வார்த்தைக்குள் பெண்களைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது.

**

திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் மணமக்களைப் பார்க்க எல்லோருக்கும் ஆர்வம். அவர்களே ஜோடி சேர்ந்துவிட்ட பிறகு, மற்றவர்கள் ஜோடி பொருத்தம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பார்கள்.

‘பொண்ணு நல்லா இல்லை. கறுப்பா, குண்டா இருக்கு… வயசு அதிகமோ… இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா பார்த்திருக்கலாம்…’

’என் பொண்ணு மாநிறமா இருந்தாலும் லட்சணமா இருக்கும். ஆனா அந்தப் பொண்ணுக்கு நிறமும் இல்ல, லட்சணமும் இல்ல…’

’என் பையன் நல்ல பர்சனாலிட்டி. மருமக கொஞ்சம் மட்டுதான்…’

இப்படி அன்றாடம் உரையாடல்களைக் கேட்க முடிகிறது.

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில், ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! உங்களை ரொம்பப் பிடிக்கும்’ என்ற வசனத்தைக் கேட்காமல் இருக்க முடியாது.

**

slim

பள்ளியில் இருந்து உற்சாகத்துடன் வரும் தன் மகள், அன்று முகம் வாடி வந்ததைப் பார்த்து விசாரித்தார் தோழி. ஆனால் குழந்தை பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து தோழியிடம் வந்து, ‘அம்மா, எனக்கு எக்சர்ஸைஸ் சொல்லித் தர்றீங்களா?’ என்று கேட்டது குழந்தை.

எக்சர்ஸைஸா? எதுக்கு?’

‘ஒண்ணும் இல்லை…’

இன்னும் சிறிது நேரம் கழித்து, ‘அம்மா, எனக்கு நாளையிலிருந்து ஓட்ஸ் கஞ்சியோ, கார்ன் ஃப்ளேக்ஸோ கொடுங்க…’

‘என்ன ஆச்சு உனக்கு? வெயிட் குறைக்கிற விஷயமா சொல்ற?’

‘அந்த ப்ரமோத் என்னை குண்டுன்னு கூப்பிடறான்’ சொல்லும்போதே கண்ணீர் கொட்டியது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் பேசியதைக் கேட்ட தோழி பதறிப் போனார். குழந்தையைச் சமாதானம் செய்ய நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது என்றார்.

**

கிருத்திகாவுக்கு சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருந்தது. பெரிய பெண் சாருவுக்கு ஒன்பது வயது. குழந்தை பிறந்துவிட்டது என்று சொன்னவுடன், சாரு கேட்ட முதல் கேள்வி, ‘பாப்பா சிவப்பா இருக்காளா?’

பின்விளைவுகளை யோசிக்காத அவளுடைய பாட்டி, ‘ஆமாம். நல்லவேளை உன் தங்கச்சி உன்னை மாதிரி இல்லை. நல்லா செவசெவன்னு இருக்கா… அழகா இருக்கா…’ என்றார்.

அவ்வளவுதான்! சாருவின் முகம் சுருங்கிவிட்டது. சிறிது நேரம் கழித்து குழந்தையைப் பார்க்கப் போனாள்.

‘நான் கறுப்பா இருக்கேன்… இவ மட்டும் ஏன் வெள்ளையா பிறந்தாள்?’ என்று கேட்டாள்.

’பிறந்தப்ப நீயும் இப்படித்தான் இருந்த. வளர வளர கலர் குறைஞ்சிடும்’ என்று கிருத்திகா சமாதானம் செய்தார்.

பார்க்க வருகிற உறவினர்களும், ‘பாப்பா பக்கத்துல கூட சாரு வரமுடியாது… போடி கருவாச்சி…’ என்று அவளைக் கிண்டல் செய்ய, சாருவுக்கு அழுகையே வந்துவிட்டது.

‘இவதான் அழகா? அப்ப நான் அழகில்லையா? என்னையும் நீ அழகா பெத்திருக்கலாமே? இப்படி எல்லாம் ஆகும்னு அன்னிக்கு நீ குங்குமப்பூ சாப்பிடறப்பவே நினைச்சேன். எனக்கு மட்டும் ஏன் சாப்பிடாமல் விட்டே?’ என்று மருத்துவமனையிலேயே ரகளை.

இன்று சின்னக் குழந்தையைச் சாதாரணமாகக் கவனித்தால் கூட, அவள் அழகு என்பதால் எல்லோரும் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள் என்ற நினைப்பு அவளுக்கு இருக்கிறது. ஆசையோடு தங்கையை எதிர்பார்த்திருந்த சாரு, இன்று அவளை விரோதியாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறாள்.

**

beautiful girl

Fair, Slim, Beautiful Girl.

இந்த வார்த்தைகள் இல்லாத திருமணம் விளம்பரங்கள் மிக மிகக் குறைவு. ஆண்கள் கேட்டால் Fair Slim Beautiful Girl வேண்டும் என்றும் பெண்கள் தகவல் கொடுத்தால் Fair Slim Beautiful Girl ஆக இருக்கிறேன் என்றும் விளம்பரம் செய்கிறார்கள்.

சமீபத்தில் டெல்லியில் நடத்திய ஆய்வில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் நல்ல வேலையில் இருக்கும் கணவர்களைக் கேட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மணமகன் (அவர்கள் மொழியில் சொல்வதென்றால்) கறுப்பாக, லட்சணம் குறைந்து இருந்தாலும் தங்களுக்கு வரும் மனைவி அழகாக, சிவப்பா இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

’பார்ட்டி, வெளிநாடுன்னு போறப்ப அழகான மனைவியைக் கூட்டிட்டுப் போறதுதான் மதிப்பா இருக்கும். அத்தோடு பிறக்கப் போற குழந்தைகளாவது அழகாக இருக்கட்டுமேன்னுதான் அழகான பெண்ணைத் தேடுறோம். அப்படிப்பட்ட பொண்ணா இருந்தா, நாங்க வரதட்சணை கூடக் கேட்க மாட்டோம்…’

அதுவே நிறம் குறைவான பெண்ணாக இருந்தால், ‘எங்க பையன் களையா இருக்கான். அவனுக்கு நான் நீன்னு போட்டிப் போட்டுட்டு பொண்ணு கொடுக்கத் தயாரா இருக்காங்க. நிறம் கம்மியா இருக்கறதால கூட ஒரு ஐஞ்சு பவுனும் ஒரு டூவீலரும் வாங்கிக் கொடுத்துடுங்க…’ என்கிறார்கள்.

இப்படிப் பேசும்போது அந்தப் பெண்ணின் உணர்வு எப்படி இருக்கும்? ஆண்கள் எல்லாம் ஐஸ்வர்யா ராயாக மனைவி அமைய வேண்டும் என்று நினைத்தால், பெண்கள் எல்லாம் அபிஷேக்பச்சன்களை எதிர்பார்க்க மாட்டார்களா?

ஒரு பொருளை விலை பேசி விறபது போலத்தான் இருக்கிறது இங்கு பெண்களின் திருமணம். இப்போது அழகு இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. பணம்தான் பிரதானம். பணம் இருந்தால் குறையாக நினைக்கும் அனைத்தையும் சரி செய்துவிடலாம்.

அழகு என்பதில் இன்னோர் ஆபத்தும் இருக்கிறது. தான் அழகு என்று நினைக்கும் பெண்கள் அல்லது மற்றவர்களால் போற்றப்படும் பெண்கள் தங்களை அறியாமலே கர்வம் கொள்கிறார்கள். சமுதாயக் கண்ணோட்டத்தில் அழகு குறைவாகக் கருதப்படும் பெண்கள் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்கிறார்கள்.

**

மக்களுக்கு இருக்கும் வெள்ளைத் தோல் மீதுள்ள ஈர்ப்பை வியாபார நிறுவனங்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. இல்லாவிட்டால், ஒரு க்ரீமைப் பூசிக்கொள்வதால் மூன்று வாரங்களில் சிவப்பாகி விடலாம் என்று கதைவிட்டுக்கொண்டு, பல ஆண்டுகளாக வியாபாரத்தில் நிலைத்து நிற்க முடியுமா?

அவர்கள் சொல்வது போல மூன்றே வாரங்களில் சிவப்பாகி விடுவது உணமை என்றால், இன்று இந்தியாவில் பாதிப்பேராவது வெள்ளையாகியிருக்க வேண்டாமா? க்ரீமைப் பயன்படுத்தி வெள்ளையாக முடியாதவர்கள் காலப்போக்கில் அந்தப் பொருளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அல்லது அவர்கள் வெறுத்துப் போய் விட்டுவிட்டாலும், அந்த கீரிமை வாங்குவதற்கு அடுத்த செட் ஆள்கள் தயாராகி விடுகிறார்கள். அதற்கு ஏற்ப விளம்பரங்களில் ஜாலம் காட்ட வேண்டியதுதான். (டாக்டர், அழகுக்கலை நிபுணர் பரிந்துரைகள், எளிதில் புரியாத அறிவியல் சொற்கள் என்று…)

இங்கு என்னதான் செக்கச் சிவப்பாக இருந்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கறுப்பர்கள் என்றுதான் அழைக்கிறார்கள்! வெள்ளை, மாநிறம், கறுப்பு என்ற பேதம் எல்லாம் இல்லை. அவர்களைத் தவிர, பிறர் எல்லாம் கறுப்பர்களே!

கறுப்பு என்பது குறைபாடா? தோலுக்கு நிறத்தை அளிக்கும் மெலனின் என்ற நிறமி அதிகமாகச் சுரந்தால் கறுப்பாகவும் குறைவாகச் சுரந்தால் வெள்ளையாகவும் மாறுகிறது. சூரியக் கதிர்வீச்சு அதிகம் இருக்கும் நாடுகளில் இந்த நிறமி அதிகமாகச் சுரந்து தோலை நோய்களிடமிருந்து பாதுகாக்கிறது. அதனால்தான் வெப்பப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் கறுப்பாகவும், குளிர்ப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் வெள்ளையாகவும் இருக்கிறார்கள்.

அடுத்து ஸ்லிம்.

ஒல்லியாக இருக்கும் பெண்களைக் கண்டால், ‘இது என்ன ஒட்டடக்குச்சி மாதிரி இருக்கு! கொஞ்சம் சதைப் போட்டால் நல்லா இருக்கும்’ என்பார்கள். இதுவே கொஞ்சம் பூசினார் போல இருந்தால், ‘குண்டா இருக்கு… கொஞ்சம் குறைச்சா நல்லா இருக்கும்…’ என்பார்கள்.

இப்படி எல்லாம் பேசுவதற்கு முடிவு வந்துவிட்டது. பெண் என்றால் இது இது இத்தனை அங்குலம் இருக்க வேண்டும் என்று வரையறுத்து விட்டார்கள். இதற்கு மேல் அளவோ, எடையோ இருந்தால் குண்டு. குறைந்தால் சைஸ் ஸீரோ.

பத்திரிகைகள், விளம்பரங்கள் என்று எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு விஷயங்கள்தான் பிரதானப்படுத்தப்படுகின்றன. இளம் பெண்களையும் இல்லத்தரசிகளையும் உடல் எடை விஷயம் பாடாய்படுத்தி வருகிறது. தினமும் இருவேளை குறிப்பிட்ட கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் மூன்றே வாரங்களில் இத்தனை கிலோ எடை குறைவு என்று மூளைச் சலவை செய்கின்றனர். இன்னும் சில விளம்பரங்கள் மாத்திரைகளை விழுங்கவும் மருந்துகளைத் தேய்க்கவும் சொல்கின்றன. சில ஆயிரங்களில் ஆரம்பித்து பல ஆயிரங்களைத் தொடும் உடல் குறைப்பு இயந்திரங்களை வாங்கச் சொல்கின்றன.

வசதியுள்ளவர்கள் டயட்டீஷியனைப் பார்த்து, தங்கள் உடலுக்கு ஏற்ற உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள். ஜிம் செல்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தொலைகாட்சியில் பார்த்து, பத்திரிகைகளில் படித்து அவர்களாகவே உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள் சொல்லும் மெனுவைப் பார்த்தால், நாள் முழுவதும் வீட்டில் அமர்ந்து கொண்டு, ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை காய்க்றி, சூப், ஓட்ஸ், பழங்கள், சப்பாத்தி, சுண்டல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். (அரிசி அதிகமாக விளையும் ஒரு நாட்டில் அந்த அரிசியை ஒதுக்கச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?)

ஆனால் வெளியில் செல்பவர்கள்? தங்கள் வசதிப்படி அவர்களாகவே எதையாவது, கூட்டிக் குறைத்து உடல் எடை குறைக்க முயற்சி செய்கிறார்கள். இது அசிடிட்டி, அல்சர், அனீமியா, பலவீனம் என்று பல நோய்களுக்குக் கொண்டு வந்துவிடுகிறது.

அதிக எடை நோய்க்கு வழிவகுக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சரிதான். எண்ணெய், உப்பு, காரம் குறைத்து, உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியுமே! அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? எடை குறைக்கும் மருந்துகளால் ஏற்படும் ஏராளமான பக்க விளைவுகளுக்கு யார் பொறுப்பு?

**

காலம் காலமாக சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் பெண் உடலைப் பற்றிய பிம்பத்தின் பிரதிபலிப்பாகத்தான் இலக்கியங்கள், கலைகள், திரைப்படங்கள், ஊடகங்கள் எல்லாம் விளங்கி வருகின்றன.

சமூகத்தில் வெள்ளை நிறத்துக்கு உள்ள மோகம் திரைப்படங்களில் அப்படியே வெளிப்படுகிறது. ஹீரோ கறுப்பாக, ரவுடியாக இருந்தாலும், வெள்ளைத்தோலும் அழகும் நிறைந்த பெண்ணைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கி விடுவான். ஹீரோ அந்தப் பெண்ணைக் காதலிக்க ஆயிரத்தி எட்டு காரணங்கள் இருக்கலாம். அந்தப் பெண் ஹீரோ மீது காதல் கொள்ள ஒரு காரணம் கூட இருக்காது. ஆண் எப்படி இருந்தாலும் (குணம், உருவம்) அழகை ஆராதிக்கலாம் என்று சொல்லிக் கொடுக்கின்றன.

இது பெண்களை உயிருள்ள மனுஷிகளாகப் பார்க்காமல் வெறும் உடலாகப் பார்க்கும் பார்வை. அந்தப் பார்வைதான் அழகாக இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. அதனால்தான்   பத்திரிகைகள் எல்லாம் அழகான பெண்களின் படங்களைப் போட்டு வியாபாரம் செய்கின்றன. ஆண்களின் உள்ளாடை விளம்பரத்தில் கூட பெண்களையே பயன்படுத்துகின்றன. யதார்த்தத்தைச் சொல்லும் சினிமாவாக இருந்தாலும் அழகிகள் குத்துப் பாட்டுக்கு நடனமாடுகிறார்கள். உலக அளவில், இந்திய அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்த அழகிப் போட்டிகள் எல்லாம் உள்ளூர் அளவில் வந்துவிட்டன. எந்த நாட்டில் அழகு சாதனங்களுக்கு விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ அந்த நாட்டுக்கு உலக அழகி பட்டம் கொடுத்து, புதிய சந்தையை உருவாக்குகிறார்கள்.

அழகு என்பதற்கு இதுதான் அர்த்தம் என்று யாராலும் சொல்லிவிட முடியாது என்றெல்லாம் இல்லை. நாம் எதை அழகாக நினைக்கிறோம் என்பதே முக்கியம். ஆணோ, பெண்ணோ குணம், அன்பு, சிந்தனை, அறிவு, செயல் போன்றவற்றில் நல்லவிதமாகத் தன்னை வெளிப்படுத்தும்போது அழகனாகவோ, அழகியாகவோ மாறிவிடுகிறார்கள். இந்தக் குணங்களுடன் சமூக அக்கறையும் சேர்ந்துகொள்ளும்போது பேரழகனாகவும் பேரழகிகளாகவும் ஆகிறார்கள்.

வரும் தலைமுறைக்கு அழகி, அழகன் என்றால் கிளியோபாட்ரா, மர்லின் மன்றோ, ஐஸ்வர்யா ராய் என்று சொல்லித் தராமல், சாவித்ரிபாய் புலே, ஜான்சி ராணி, மேரி க்யூரி, வாங்கரி மாத்தாய், ரோசா பார்க்ஸ், காந்தி, அம்பேத்கர், பெரியார், லெனின், மார்க்ஸ், ஐன்ஸ்டைன், நியூட்டன், பாரதி, டால்ஸ்டாய், மொஸார்ட் என்று சொல்லித் தருவோம். அப்படிச் சொல்லித் தரும்போது வெள்ளை உடலையோ, வசீகரமான முகத்தையோ பார்த்தவுடன் மணி அடிக்காது; கண்டதும் காதல் கொள்ள வைக்காது.