பூக்கள் பூக்கும் தருணம்

ஒரு ஜென் துறவி. சிறு மலைக்குன்று ஒன்றின் அடிவாரத்தில் அவரது அழகிய ஆசிரமம் அமைந்திருந்தது.

அந்தத் துறவியின் சீடர்கள் ஆசிரமத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட மலர்ச் செடிகளை வளர்த்திருந்தார்கள். அங்கே வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாள்களும் பல வண்ணங்களில் அழகழகான செடிகள் தென்படும்.

துறவிக்கு அந்த மலர்த் தோட்டம் மிகவும் பிடித்திருந்தது. தினமும் அங்கே சில மணி நேரங்களைச் செலவிடுவார். ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றுவார். பூக்களோடும் இலைகளோடும் பேசிக்கொண்டிருப்பார்.

இதைப் பார்த்த ஒருவர் துறவியிடம் ஆச்சர்யமாகக் கேட்டார். ‘ஐயா, இந்தச் சாதாரணமான தோட்ட வேலையை நீங்கள்தான் செய்யவேண்டுமா? உங்களுடைய சீடர்களிடம் சொன்னால் செய்யமாட்டார்களா? அவர்கள் செய்யாவிட்டாலும் காசை வீசி எறிந்தால் நூறு பேர் ஓடி வருவார்களே!’

துறவி சிரித்தார். ‘ஏன்? நானே இந்த வேலையைச் செய்தால் என்ன தப்பு?’

‘தப்பில்லை. ஆனால் நீங்கள் பெரிய சிந்தனையாளர். உங்களுடைய நேரத்தை வேறு உருப்படியான வேலைகளில் செலவிடலாமே!’

‘நண்பரே, நான் தோட்ட வேலை செய்வதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் உண்மையில் நான் இங்கே தியானம் செய்கிறேன்’ என்றார் துறவி. ‘ஒவ்வொரு நாளும் இந்தச் சில மணி நேரங்களுக்காகவே நான் ஏங்குகிறேன். இங்கேதான் வேறு சிந்தனைகளே இல்லாமல் இந்தச் செடிகளோடு மட்டுமே என் நேரத்தைச் செலவிடமுடிகிறது. அந்தக் கவனக்கூர்மை வேறு எங்கேயும், எப்போதும் சாத்தியப்படுவதில்லை!’

காதல் புராணம் 15

15. மாதொருபாகன்

பேரிளம்பெண் [வயது : 31-40]

 

141

இன்னும் கண்ணீர் மிச்சமுண்டு

ஆதரவாய்ச் சாய்ந்தழ‌வென உன்

கடிதோளிருக்கும் தைரியத்தில்.

 

142

முதலாம் காதலனும்

கடைசிக் கணவனும்

எனக்கு நீ தான்.

 

143

உன் கண்களை நேருக்கு நேராய்ப்

பார்த்து விட‌ வேண்டுமெனக்கு –

சாவதற்குள் ஒரு முறையேனும்.

 

144

ரத்தமும் சதையுமாய் நீயிருக்க‌

விசித்திரமாய்த்தானிருக்கிறது –

கோயிலில் கடவுளைத்தேடுவது.

 

145

உன்னிடம் பொறாமை

கொள்ளும் ஒரே விஷயம் –

உன் மீதான என் காதலை

விட‌ அழகான ஆழமான

என் மீதான உன் காதல்.

 

146

ரத்தந்தளர்ந்த முதிர்பிராயத்தின்

பொன்னந்திப்பொழுதுகளிலுன்

தோள்சாய்ந்தபடி சுவாசிக்கும்

ஆக்ஸிஜனிலிருக்கிறது காதல்.

 

147

தொன்னூறு வயதிலும் நீ

தொட வெட்கப்படுவேன் –

அது என் பிறவிச்சாபம்.

 

148

உனக்கெந்தன் தாய்மையின்

கருவறைக்கதகதப்புத் தராத

துக்கமுண்டு என்றுமெனக்கு.

 

149

உனக்கு முன்னால் நானெனில்

எனக்கு நீ நீராட்ட வேண்டும்;

எனக்கு முன்னால் நீயெனில்

உனக்கு நான் தீமூட்ட வேண்டும்.

 

150

அனுபவித்தவள் சொல்லிது:

எஞ்சோட்டுச்சிறுபெண்டிரே,

கவிஞர்களைக் காதலிக்காதீர் –

ஊண் பிளந்து உயிர் அளந்து

சந்தோஷ‌த்தில் மூழ்கடித்தே

சாகடிப்பார்கள், ஜாக்கிரதை!

[முற்றும்]

பி.கு: காதலர் தினம் தொடங்கி, பதினைந்து நாள்களாக இக்காதல் புராணத்தை எழுதி வந்தவர் சி.எஸ்.கே என்கிற சி. சரவண கார்த்திகேயன்.

தோழர்

அத்தியாயம் 17

 

போராடும் பிரிட்டிஷ் மக்கள்

எங்கெல்ஸுக்கு இப்போது பிரிட்டனில் பல நண்பர்கள் உருவாகியிருந்தனர். சாகன இயக்கத்துடனும் நல்ல தொடர்பு ஏற்பட்டிருந்தது. இயக்கத்தில் உள்ள பலரிடம் எங்கெல்ஸ் நெருங்கிப் பழகி, தன் கரூத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தார். இயக்கத்தின் பத்திரிகைக்கு எங்கெல்ஸ் கட்டுரைகள் எழுதித் தந்தார்.  சாசன இயக்கத்தில் அவர் ஓர் உறுப்பினர் கிடையாது என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

ராபர்ட் ஓவனின் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்லும் சோஷலிச அமைப்பு ஒன்று பிரிட்டனில் செயல்பட்டு வந்தது. (ஓவனின் சோஷலிசத்தை கற்பனாவாத சோஷலிசம் என்று அழைக்கலாம். எதிர்கால சமூகம் குறித்து ஓவன் உருவாக்கிய கருத்தாக்கம், நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்ததால் இந்தப் பெயர் கிடைத்தது). எங்கெல்ஸ் இவர்களையும் சென்று சந்தித்தார். சாசன இயக்கம் முன்வைத்த புரட்சிகர கருத்துகளும் ஓவனின் சோஷலிச சிந்தனைகள்   மான்செஸ்டரில் பல பகுதிகளில் பரவியிருந்ததை எங்கெல்ஸ் கண்டுகொண்டார்.

தன் அனுபவங்களை ஒரு ஜூரிச் இதழக்கு மே தொடங்கி ஜூன் 1843 வரை தொடர்ச்சியாக எழுதி அனுப்பினார் எங்கெல்ஸ். ‘இங்கிலாந்தில் இருந்து கடிதங்கள்’ என்னும் தலைப்பில் அவை வெளிவந்தன. உழைக்கும் மக்களிடம் இருந்தும் அவர்களுடைய போராட்டத்தில் இருந்தும் என் கட்டுரைகள் பலம் பெறுகின்றன என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். சோஷலிஸ்டுகளையும் சாசன இயக்கத்தினரையும் எங்கெல்ஸ் பாராட்டி எழுதினார். ரூஸோ, வால்டேர் ஆகிய 18ம் நூற்றாண்டு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே என்றார்.

அதே சமயம், இந்த இரு இயக்கத்தின் குறைபாடுகளையும் எங்கெல்ஸ் கண்டறிந்து வெளிப்படுத்தினார். சாசன இயக்கமும் சோஷலிச இயக்கமும் பிரிட்டனைச் சுற்றியே இயங்கி வருகின்றன. பிரிட்டனில் நடைபெறும் போராட்டங்களையும், பிரிட்டிஷ் தொழிலாளர்களின் பிரச்னைகளையும் அவை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஆனால், தொழிலாளர்களின் போராட்டக் களம் மிகப் பெரியது. ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இயக்கம் பரவிக்கொண்டிருக்கிறது. அதை நாம் கண்காணிக்கவேண்டும். கற்றுக்கொள்ளவேண்டும். நம் பார்வையை விரிவாக்கிக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகமாகியிருக்கும் சோஷலிச சிந்தனைகளை பிரிட்டனின் சாசன இயக்கத்தினரும் சோஷலிச இயக்கத்தினரும் கிரகித்துக்கொள்ளவேண்டும் என்று எங்கெல்ஸ் விரும்பினார். வெவ்வேறு நிலப்பரப்புகளில் பரவியிருக்கும் ஒத்த கருத்தாக்கம் கொண்டிருப்பவர்கள் ஒன்றிணைந்து விவாதிக்கும்போது அறிவுப்பரப்பு மேலும் விரிவாகும் என்று எங்கெல்ஸ் நம்பினார்.

நவம்பர் 1843ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய ஒரு கட்டுரை கம்யூனிசம் குறித்த அவருடைய தொடக்ககால சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. பிரிட்டிஷ் சோஷலிச இயக்கத்தின் ஆங்கில ஏடான The New Moral World-ல் வெளியான அந்தக் கட்டுரையின் தலைப்பு, Progress of Social Reform on the Continent. பிரிட்டன் சோஷலிஸ்டுகள் மத்தியில் இந்தக் கட்டுரைக்கு உவப்பான வரவேற்பு கிடைத்தது. அதே ஆண்டு, தி நார்தர்ன் ஸ்டார் என்னும் பத்திரிகை இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்தது.

ஐரோப்பாவின் மூன்று முக்கிய நாடுகளை மேற்கூறிய கட்டுரையில் எங்கெல்ஸ் ஆராய்ந்தார். ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ். இந்த மூன்று நாடுகளும் தொழில்மயமாக்கலில் ஆர்வம் செலுத்துகின்றன. கனரக தொழிற்சாலைகள் பலவற்றை இந்த நாடுகள் உருவாக்கி வருகின்றன. பெரும் செல்வந்தர்களும் அரசுக் குடும்பத்தினரும் இந்நாடுகளில் பகட்டாக வசிக்கின்றனர். மற்றொரு பக்கம், உணவுக்கு வழியின்றி ஏழைகள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சமனற்ற நிலை. கொடூரமான சுரண்டல். விளைவாக, உழைப்பாளிகளுக்கும் ஆலை அதிபர்களுக்கும் இடையில் போராட்டங்கள் வெடிக்கின்றன. பொருளாதார மாற்றம் வேண்டியும் அரசியல் மாற்றம் வேண்டியும் போராட்டங்கள் வலுக்கின்றன. நிலவிவரும் சமூக நிலை மாறவேண்டும் என்று இந்த மூன்று நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் விரும்புகின்றனர். புரட்சி மட்டும்தான் அதை சாத்தியமாக்கும் என்று அவர்கள் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

எங்கெல்ஸை ஆச்சரியப்படுத்திய விஷயம் புரட்சி குறித்து அவர்கள் எடுத்த முடிவு. ஒரே சமயத்தில், பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனியும் இந்த முடிவை எடுத்திருக்கிறது வியப்பல்லவா? எப்படிச் சாத்தியமானது? இத்தனைக்கும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த மூன்று நாடுகளுக்கு இடையில் எந்தத் தொடர்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனில், இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? கம்யூனிசம் என்பது மறுக்கமுடியாத நிதர்சனம். தவிர்க்கமுடியாத விளைவு. கம்யூனிசம் குறிப்பிட்ட நாட்டுக்குத்தான் ஒத்துவரும் என்பது போன்ற கருத்துகள் தவறானவை. சமூகச் சூழல்தான் கருத்தாக்கங்களை உருவாக்குகிறது.

நடைபெற்றுக்கொண்டிருப்பது பொருளாதார சமநிலைக்கான போராட்டம். சமூகப் போராட்டம். உரிமைகளுக்கான போராட்டம். அந்த வகையில், இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் ஒன்றிணையவேண்டும். விவாதிக்கவேண்டும். அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும். மூன்று நாடுகளையும் ஒன்றிணைக்கும் விஷயங்கள் என்னென்ன, பிரிக்கும் விஷயங்கள் என்னென்ன போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.

எங்கெல்ஸ் தொடங்கிவைத்தார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளிலும் பரவியிருக்கும் வெவ்வேறு விதமான கற்பனாவாத சோஷலிச, கம்யூனிச சிந்தனைகளைத் திரட்டி சேகரித்து வாசித்தார். ஒவ்வொன்றிலும் உள்ள நிறை, குறைகளை சீர்தூக்கிப் பார்த்தார். பிரான்ஸில், செயிண்ட் சைமன், சார்லஸ் ஃபூரியர் இருவருடைய சிந்தனைகளையும் எங்கெல்ஸ் ஆர்வத்துடன் வாசித்தார். சைமனின் எழுத்துகளில் படர்ந்திருக்கும்  உள்ளுணர்வு சார்ந்த விஷயங்கள் அவர் சிந்தனைகளை பலவீனமாக்கியுள்ளன என்றார் எங்கெல்ஸ். பொருளாதாரச் சிந்தனைகளில் உள்ள குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். ஃபூரியரின் சமூகத் தத்துவத்தால் எங்கெல்ஸ் கவரப்பட்டார். அதே சமயம், சொத்துடைமை குறித்து அவர் வந்தடைந்த முடிவுகள் தவறானவை என்றார். இருவருக்கும் பொதுவான ஒரு குறைபாட்டை எங்கெல்ஸ் கண்டறிந்தார். செயிண்ட் சைமன், ஃபூரியர் இருவரும் அரசியல் துறையை நிராகரித்துவிட்டனர். எனவே, அவர்களுடைய வழிமுறைகள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவையாக அமைந்துவிட்டன.

மற்றொரு முக்கியச் சிந்தனையாளரான, பிரௌதனின் சிந்தனைகளால் எங்கெல்ஸ் ஈர்க்கப்பட்டார். தனிச்சொத்துடைமை குறித்தும் போட்டி மனப்பான்மை குறித்தும் ஏழைமை குறித்தும் பிரௌதன் கொண்டிருந்த கருத்துகள் புரட்சிகரமானவை என்று அவர் நம்பினார். விரைவில் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. முதலாளித்துவ சமூகத்தை புரோதன் விமரிசனம் செய்திருந்தாலும், தொழிலாளர்களுக்காக அவர் முன்வைத்த தீர்வு யதார்த்தத்தை மீறியதாக இருந்தது. அந்த வகையில், பிரௌதனின் தத்துவமும் கற்பனாவாதத் தன்மை கொண்டிருந்தது.

ஜெர்மானிய சிந்தனையாளரான, வில்ஹெம் வீட்லிங் (Wilhelm Weitling) செல்வாக்கு மிக்கவராக இருந்தார். கற்பனாவாத சோஷலிசத்தையே அவரும் முன்வைத்தார் என்றாலும், ஜெர்மானிய கம்யூனிச சிந்தனையின் தொடக்கப்புள்ளி அவரே என்று பாராட்டினார் எங்கெல்ஸ். மற்றபடி, ஜெர்மனியின் இளம் ஹெகலியவாதிகளின் கருத்துகள் எங்கெல்ஸுக்கு முன்னரே பரிச்சயமாகியிருந்தன. இவர்கள் போக, ஜெர்மனியின் முக்கியச் சிந்தனையாளர்கள் என்று எங்கெல்ஸ் சிலரை ஏற்றுக்கொண்டார். ஹெஸ், ரூஜ், ஹெர்வே,‘மார்க்ஸ் மற்றும் நான்.’

League of the Just என்னும் ரகசிய அமைப்பின் தலைவர்களை 1843ம் ஆண்டு மே மாதம் எங்கெல்ஸ் சந்தித்தார். பல ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்களில் மூவரை எங்கெல்ஸ் சந்தித்து உரையாடினார். ஒருவர் அச்சு கோக்கும் பணியில் இருந்தவர். இரண்டாமவர், செருப்பு தைப்பவர். மூன்றாமவர், கடிகாரம் செய்பவர். ‘நான் முதல் முதலில் சந்தித்த மூன்று  புரட்சிகர தொழிலாளர்கள் இவர்களே. அவர்களுடைய கருத்துகளை என்னால் ஏற்கமுடியாமல் போனாலும், மூவரும் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களை என்னால் மறக்கவே முடியாது.’  எங்கெல்ஸ் அவர்களுடைய பெயர்களை நன்றியுடன் குறித்து வைத்தார். Karl Schapper, Heinrich Bauer, Joseph Moll. எங்களுடன் சேர்ந்துவிடுங்கள் என்று இந்த ரகசிய இயக்கத்தினர் கேட்டுக்கொண்டபோது எங்கெல்ஸ் மறுத்துவிட்டார். மன்னிக்கவும், நாம் வெவ்வேறு பாதையில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம்.

கற்பனாவாதத்தை எங்கெல்ஸ் முற்றாக இன்னமும் நிராகரிக்கவில்லை. கம்யூனிசத்தின் மீது அவருக்கு நாட்டம் இருந்தாலும், மயக்கம் அளிக்கும் கற்பனாவாத சோஷலிச உலகத்தின் மாயையில் இருந்தும் அவர் மீளவில்லை. ஓவனின் சோஷலிசம், சாசன இயக்கம், நாத்திகவாதம், பொருள்முதல்வாதம் என்று பல சிந்தனைகளின் தாக்கத்துக்கு ஆளாகியிருந்த எங்கெல்ஸ், கம்யூனிசம் குறித்து ஒரு தெளிவான பாதையை அமைத்துக்கொண்டார். பிரிட்டன் அளித்த அபூர்வமான அனுபவங்கள் அதைச் சாத்தியமாக்கின.

(தொடரும்)

அல்வா

அத்தியாயம் 22

தோஹா இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்றது போர்டு. டாக்ஸியில் இருந்து இறங்கினான் அமீர். சாம்பல் நிற சூட் அணிந்திருந்தான். கடந்த வாரத்தில் இருந்த தாடி மழிக்கப்பட்டிருந்தது. கையில் ஒரு டெல் லாப்டாப் பேக். அதைத் தோளுக்குக் கொடுத்துவிட்டு ட்ராலியைத் தேடினான். காருக்கருகே கொண்டு வந்து இரண்டு பெட்டிகளையும் டாக்ஸியில் இருந்து இறக்கினான்.  சாம்சங் எல் ஈ டி டிவி என்றது அட்டைப்பெட்டிகள்.

ட்ராலியைத் தள்ளிக்கொண்டு ஏர்போர்ட் உள்ளே நுழைந்தான். அமெரிக்கப் பயணிகள் செக் இன் ஏரியா C என்றிருந்த போர்டைத் தொடர்ந்து Cஐத் தேடினான். கோட் பாக்கெட்டில் இருந்து பாஸ்போர்ட்டையும் டிக்கட் காகிதத்தையும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டான்.

பெட்டிகள் இரண்டையும் கன்வேயரில் தள்ளி, சுவாதீனமாக ஷூ, மொபைல் ஃபோன் கையில் இருந்த சாவிகள், சில்லறை எல்லாவற்றையும் லாப்டாப் பேகில் போட்டு, லேப்டாப்பைத் தனியாக எடுத்து வெளியே வைத்தான். மெட்டல் டிடெக்டர் இவன் நுழைந்ததற்கு எந்த சுவாரஸ்யமும் காட்டாமல் தேமே என்றிருந்தது.

புதிய ட்ராலியை இழுத்து அட்டைப்பெட்டிகளை எடுத்து வைக்கப் போனபோது செக்யூரிட்டி நிறுத்தினான். கைகாட்டினான் – சூப்பர்வைஸரிடம் பேசு.

அமீருக்கு வியர்த்தது. கோட் பாக்கெட்டில் இருந்து டிஷ்யூ எடுத்துத் துடைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ‘சலாம் அலேக்கும்’ என்றான் சூப்பர்வைஸரைப்பார்த்து.

ஸ்கான் செய்யும் கன்வேயர் நின்றுவிட்டிருந்தது. சூப்பர்வைஸர் கம்ப்யூட்டர் திரையைப் பின்னகர்த்தி “என்ன இது” என்றான்.

சர்க்யூட்கள் ஒரு அட்டைப்பெட்டியில் தெளிவாகத் தெரிந்தது. இன்னொன்றில் பேட்டரிகள்.

“எலக்ட்ரானிக் பார்ட்ஸ். டிஃபெக்டிவ். அமெரிக்காவில் ஃபேக்டரி இருக்கிறது, அங்கே கொண்டு செல்லவேண்டும்.”

”அந்தப்பெட்டி ரெண்டையும் ஓரமா வை..” என்று செக்யூரிட்டியிடம் சொன்னவன் “நீங்கள் கொஞ்சம் வெயிட் பண்ணவேண்டி இருக்கும்”

“ஏன்? ஹாண்ட் கேரி இல்லை. செக் இன் பேகேஜ்தான்.”

“ஸ்னிஃபர் ஸ்க்வாடு வரும். அவர்கள் க்ளியரன்ஸ் வேண்டும். நிறைய எலக்ட்ரானிக் சாமான்கள் இருந்தால் இது ஸ்டாண்டர்ட் ப்ராக்டீஸ். பேப்பர்ஸ் காட்டுங்க”

அமீர் பதட்டத்தை மறைக்கப் பாடுபட்டான். பேகில் இருந்து எடுத்த காகிதத்தில் “To Whom It May Concern” என்று லெட்டர் பேடில் அடித்திருந்தது.

கன்றுக்குட்டி சைஸில் இரண்டு நாய்களை பேட்ஜ் உடை எல்லாம் போட்டுக்கொண்டு கூட்டிக்கொண்டு வந்தார்கள். சூப்பர்வைஸர் “இந்தப்பெட்டிகள்” என்று கைகாட்ட  நாய்களை அந்தப்பக்கம் திருப்பினார்கள். நாலு புறமும் திருப்பித் திருப்பி மோப்பம் பார்த்தன. “இட்ஸ் க்ளீன்”

“வி அபாலஜைஸ் ஃபார் த டிலே” என்று சூப்பர்வைஸர் பேப்பர்களைக் கொடுத்தபின்தான் அமீருக்கு மூச்சு திரும்பியது.

பெட்டிகளை செக் இன் செய்து, பாஸ்போர்ட் கண்ட்ரோலையும் தாண்டிய பிறகு கலீலுக்கு ஃபோன் செய்து சொன்னான். “வீ ஆர் த்ரூ.. “

“ஒன்றும் விசேஷமாக நடக்கவில்லையே”

“ஸ்கானில் நிறுத்தினார்கள். ஸ்னிஃபர் நாய்கள் வந்து மோந்து பார்த்தன.”

கலீல் பயந்தான். “அப்புறம்?”

“இது என்ன டி என் டியா, ஆர் டி எக்ஸா? நாய் கண்டுபிடிக்க..போய்விட்டன”

“நேரா செக் இன் பண்ணிடலாம்னு நினைச்சேன்”

“ நான் அப்பவே சொன்னேன். எல்லாத்தையும் ஒரு பெட்டிலே போடவேணாம்னு”

“தட்ஸ் வாட்டர் ஓவர் த ப்ரிட்ஜ்.”

”சரி. நியூயார்க் போய் சேர்ந்ததும் கால் பண்றேன்”

கேட்டில் “நவ் போர்டிங்” ஒளிர்ந்தது. அமீர் கேட்டிற்குச் சென்றான்.
***

லிஸா டெலிவிஷனை உறைந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரவியின் உடல் ஆம்புலன்ஸில் ஏறியதை அவன் குண்டு மனைவி கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னணியில் “நேற்றுவரை கத்தாரில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தவர் இயக்குநர் ரவி. அவர் இப்படிக் கொடூரமான கொலை செய்ததற்கு கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர் மனைவி” எடிட்டிங்கில் ரவியின் மனைவி பேசியது காட்டப்பட்டது.

“அவர் ஒரு ஜீனியஸ். ஹாலிவுட்டில் அடுத்த படம் எடுப்பதாக இருந்தார். இப்போது எடுத்துக்கொண்டிருந்த விளம்ப்ரத்தின் பட்ஜெட் அதிகமானது என்று ப்ரொட்யூஸருடன் சண்டை, நாளை நான் திரும்புகிறேன் என்று சொன்னார்”

“யார் மேலாவது சந்தேகம் இருக்கிறதா?”

“சொல்வதற்கில்லை.. அந்த ப்ரொட்யூஸரே கூட..”

”இவர் சந்தேகங்களுக்குக் காவல் துறை விளக்கமளிக்குமா? நவிமும்பை டிவிக்காக களத்திலிருந்து..”

நிச்சயம் இவனாகத்தான் இருக்கும். லிஸா முடிவெடுத்துவிட்டாள்.  ஃபோனைத் துழாவி “எட்வர்ட்?”

“லிஸா! வாட் அ சர்ப்ரைஸ்”

“அதெல்லாம் பிறகு.. எனக்கு ஒரு அவசர உதவி வேண்டும். செய்வாயா?”

“என்ன இப்படிக் கேட்கிறாய்? ஆர்டர் மீ”

”எனக்கு..” ஐந்து நிமிடம் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே பேசினாள். யாரும் வரவில்லை.

ஃபோனை அணைத்தவுடன் அடுத்த நம்பரைப்போட்டாள். “கொஞ்சம் வருகிறாயா? மால் வரை போகவேண்டும். வழக்கம் போலத்தான்”

வேலைக்காரப்பெண் வந்தாள். அவள் கையில் காசைக் கொடுத்தாள். “நீ மாலுக்குள் செல், செகண்ட் ஃப்ளோர் சேஞ்சிங் ரூம். போய்ச் சேர்ந்ததும் கால் அடி”

பத்து நிமிடம் கழித்து பாடிகார்டை அழைத்து.. “மாலுக்குப் போகவேண்டும். காரை வரச்சொல்”

மாலில் தேவையில்லாத கடைகளில் நோட்டம் விட்டாள். சந்தேகம் வராமல் இருக்க ஒரு ட்ராலியில் சாமான்களை வாங்கி நிரப்பினாள். கால் வந்தது.

இரண்டாம் மாடிக்கு லிஃப்டில் ட்ராலியைத் தள்ளிக்கொண்டே சென்றாள். சேஞ்சிங் ரூமுக்குள் சென்று பர்தாவைக் கழட்டி காத்திருந்தவளிடம் கொடுக்க, அவள் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு வெளியே சென்றாள்.

பத்துநிமிடம் காத்திருந்தாள். வெளியேறினாள் வேகமாக. டாக்ஸி ஸ்டாண்டுக்குச் சென்று “ஏர்போர்ட்” என்றாள்.
***

டேனி இரண்டு சிவப்பு அட்டை கே எஃப்சி பேக்கட்களுடன் அந்தச் சின்ன அறைக்குள் நுழைந்தான். டெரி மோட்டுவளையை வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். ரெனே பழைய பேப்பர் ஒன்றில் சுடோகு போட்டுக்கொண்டிருந்தான்.

“இந்தாங்க.. சாப்பிடுங்க” என்றான்.

“யாருக்கு வேண்டும் உன் சாப்பாடு” டெரிக்கு இன்னும் கோபமும் வருத்தமும் அடங்கவில்லை.

“எங்கே வைத்திருக்கிறீர்கள் எங்களை? எங்கள் சைட் டீல் இஸ் ஓவர். எங்களை அலெக்ஸாண்டிரியாவில் விடுங்கள். நான் உங்களுக்கு வேல்யூஸ் ஈ மெயிலில் அனுப்பிவிடுகிறேன்”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அமீர் வந்து சொல்லவேண்டும். அதுவரை இங்கேதான் நீங்கள் இருக்கவேண்டும்”

“இன்னும் எவ்வளவு நாள்?”

“தெரியாது” டேனி சுருக்கமாகப்பேசி வெளியேறிவிட்டான்.

ரெனே டெரியைப் பார்த்தான். “நடந்தது நடந்துவிட்டது. வருத்தப்படாதீர்கள்”

“நீ செய்த வேலைக்கு அவர்கள் உன்னை வெளியே விடுவார்கள் என்று நினைக்கிறாயா?”

ரெனே பொறுமையாக கதவின் துவாரம் வழியாகப் பார்த்தான். திரும்பிவந்து ரூமில் இருந்த டெலிவிஷன் சப்தத்தை அதிகப்படுத்தினான்.

“இப்போது நடிக்கவேண்டாம் டெரி. யாரும் நம் பேச்சைக் கேட்க முடியாது”

டெரியின் கவலைக்கோடுகள் மறைந்தன. மெல்லிய சிரிப்பு வந்தது. “என்னதான் ப்ளான்?”

“ஆட்கள் அதிகம் இல்லை. டேனியோடு சேர்த்து நான்கு பேர்தான். நான் சமாளித்துவிடுவேன். வரும்போதே கவனித்தேன், இது சிட்டிக்குள் உள்ள இடம்தான். வெளியேறிவிட்டால் போதும், தப்பித்துவிடலாம்”

“எப்போது?”

“ஒரு சிக்னலுக்காக வெயிட்டிங்.. யாரோ வரும் சத்தம் கேட்கிறது” டெலிவிஷன் சத்தத்தைக் குறைத்தான்.

டெரி மீண்டும் கவலையானார்.
****

நியூ யார்க் விமான நிலையத்தில் இருந்து ட்ராலி தள்ளிக்கொண்டு வெளியே வந்தான் அமீர்.

டாக்ஸியில் பெட்டிகளை வைத்து “கார்ல்டன் அவென்யூ, ப்ரூக்ளின்” என்றான்.

டாக்ஸி நின்ற இடத்தில் ”லாக் அவே செல்ஃப் ஸ்டோரேஜ்” என்றது ஐந்து மாடிக்கட்டடம்.

“பத்து நிமிடம் வெயிட் செய்வாயா? திரும்ப ஏர்போர்ட் போகவேண்டும்” என்றான் அமீர் டாக்ஸி ட்ரைவரிடம்.

“வில் காஸ்ட் யூ 10 பக்ஸ் மோர்”

“நோ ப்ராப்ளம்” என்று இரண்டு பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு ஸ்டோரேஜ் கட்டடத்துள் சென்றான்.

ரிசப்ஷனில் பொருந்தாத புன்னைகையுடன் ஒரு குண்டுப்பெண் ”உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்?”

“க்ளாசெட் ஸ்டோரேஜ்.. ஒரு மாதத்திற்கு”

“இந்த இரண்டு பெட்டிகளுக்காகவா? அது பெரிய க்ளாஸெட்..”

“பரவாயில்லை..”

“தட் வில் பீ 79 டாலர்ஸ்”

காசைக்கொடுத்து சாவியை வாங்கினான். “தர்ட் ஃப்ளோர், 318 க்ளாசெட் எண்”

இரண்டே நிமிடத்தில் வெளியே வந்தான்.

காத்திருந்த டாக்ஸி ஏறி, “டெர்மினல் 4, டிபார்ச்சர்ஸ்” என்றான். டாக்ஸி வேகமெடுத்தது.
***

ஜுலியன் காரை சாலிஸ் ஹெட்குவார்ட்டர்ஸ் வாசலில் நிறுத்தி அவசரமாக இறங்கி நடந்தான். தடுத்த செக்யூரிட்டியிடன் “மிஸ் ஆனியுடன் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது” என்றான்.

செக்யூரிட்டி கணினியைத் தட்டி “ஜுலியன் கார்டிஸ்? ஐடி ப்ளீஸ்”

கார்டை எடுத்துக்காட்ட, கதவு திறந்தது. பெரிய செக்யூரிட்டி. முழுசாக ஒரு விஞ்ஞானியைக் சுலபமாகத் தாரைவார்த்த செக்யூரிட்டி. ஜூலியனுக்குப் பதட்டத்திலும் சிரிப்பு வந்தது.

ஆனியின் கேபின் ஐந்தாவது மாடியில் இருந்தது. உள்ளே செல்லும் முன் செகரட்டரி ஒருமுறை ஐடி பார்த்தாள்.

உள்ளே நுழைந்த ஜூலியனுக்கு அதிர்ச்சி. ஆனி தனியாக இல்லை. அலெக்கும் கூட இருந்தான்.

“ஹாய் ஜூலியன்.. ஹியர் வீ மீட் அகெய்ன்” ஆனியின் கைகுலுக்கல் அழுத்தமாக இருந்தது.

அலெக் ஜூலியனைக் கூர்மையாகப் பார்த்தான். “என்ன முக்கியமான விஷயம்”

“நான் அப்பாவின் குறிப்புகளைக் க்ளோஸாக ஃபாலோ செய்தேன். அதன்படி ஒரு பேட்டரியும் தயார் செய்தேன்.”

”சரி..வொர்க் செய்ததா?”

“எதிர்பார்த்த அளவு வேலை செய்யவில்லை”

“அப்படித்தானே ஆகும்? அவருடைய வொண்டர் பவுடரைத்தான் ரெனே எடுத்துச் சென்றுவிட்டானே”

”இல்லை. அதே கெமிகல் கான்ஃபிகரேஷன்.”

“எதிர்பார்த்த அளவு வேலை செய்யவில்லை என்றால், பவர் குறைவாக இருக்கிறதா?”

“இல்லை. வேறு விதமான ரியாக்‌ஷன்ஸ் ஏற்படுகின்றன. டேஞ்சரஸ் ரியாக்‌ஷன்ஸ்”

அலெக் ஆனியைப் பார்த்தான். “வேறு வழியில்லை. ஜூலியன் மஸ்ட் நோ”

ஜூலியன் ஆச்சரியமானான். வேறு என்ன புதிய விஷயம்?

“அப்படி என்றால்.. என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விஷயம் ரெனேவுக்கும் மீக்குக்கும் தெரியுமா?”

ஆனி ஜூலியனைக் கண்டுகொள்ளாமல் அலெக்கைப் பார்த்தாள். “க்ளியரன்ஸ் இல்லாமல் சொல்ல முடியாது”

“க்ளியரன்ஸ் வாங்கிவிடலாம். ஏன்.. அவரையே கூப்பிட்டுவிடலாம், சொல்லிவிடட்டும்”

ஜூலியனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. குழப்பம் அதிகம்தான் ஆகிறது.
– தொடரும்

ஈ இஸ் ஈக்வல் டு எம்சி ஸ்கொயர்

ஒளியின் வேகத்தை மிஞ்சிவிட்டோம்!”

பூமி கிரகத்தின் ஜனாதிபதியும், இன்ன பிற கேபினெட் மந்திரிகளும் வீற்றிருந்த விவேகானந்தா ஆடிட்டோரியத்தின் மையத்திடலில் நின்று கொண்டு, சர்வதேச விஞ்ஞான கழகத்தின் தலைவரும், மூன்று முறை நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ரே, மிகத் திட்டமாக மிகத் தீர்க்கமாக அறிவித்த போது, அங்கு குழுமியிருந்த பெளதீகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஐந்நூற்று சொச்சம் விஞ்ஞானிகளால் நம்பாமல் இருக்க முடியவில்லை; நம்பவும் முடியவில்லை.

ஒரு கணம் ஆழ்ந்த அமைதிக்குப் பின், அந்த‌ வாசகம் ஏற்படுத்திய மெல்லிய அதிர்வுகளும், அதன் ரிப்பிள் எஃபெக்ட் சலசல‌ப்புகளும் அரங்கில் முழுமையாய் விலகாத நிலையில் கடைசி மிடறு நீரை அருந்தி விட்டு டாக்டர் ரே தொடர்ந்தார்.

ஒளியின் வேகத்தை மிஞ்சுவது என்பது மனித குலத்தின் இருநூறு வருடக்கனவு. 1905ல் ஐன்ஸ்டைனின் Does the inertia of a body depend upon its energy-content?” என்ற ஆராய்ச்சிக்கட்டுரையில் தொடங்குகிறது அது. இப்போது கடைசியாய் அதை அடைந்தே விட்டோம். நாம் வாழும் காலத்தின் மகத்தான சாதனை இது.

செயற்கை நீரடைத்த‌ ப்ளாஸ்ட்டிக்‌ புட்டியைக் கொண்டு வந்து ஒயிலாய் அருகில் வைத்து நகர்ந்த‌ காரியதரிசி மீராவை சுலபமாய் அலட்சியப்படுத்தி விட்டு, கூடியிருந்தவர்களைப் பார்த்து ஓர் இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்ந்தார்.

மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனையை நடத்த‌த் திட்டமிட்டோம். நிறையற்ற ஃபோட்டான் துகள்களை ஒளியின் வேகத்தை மிஞ்சச்செய்வது முதல் கட்டம். எலெக்ட்ரான் போன்ற நிறையுள்ள பருத்துகள்களை அந்த‌ வேகத்தை கடக்கச்செய்வது இரண்டாம் கட்டம். உயிரின‌ங்களை அந்த வேகத்தில் பயணிக்க‌ வைப்பது மூன்றாவது மற்றும் கடைசிக் கட்டம்.

அந்த லீப் வருட ஃபிப்ரவரியின் அழகிய‌ பின்மாலைப்பொழுது ஒன்றினில், அது வரை மடிக்கணிணியில் உள்ளீடு செய்தவற்றை கண்ட்ரோல் மற்றும் எஸ் விசைகளை அழுத்தி கோப்பினில் சேமித்து விட்டு, தலையில் கை வைத்து அமர்ந்தார் சுஜாதா என்ற புனைப்பெயர் கொண்ட அந்தப் பிரபல எழுத்தாளர்.

எழுத ஆரம்பிக்கும் போதே இந்தக் கதை வேறு ஜாதி என்று தெரிந்து விட்டது. கொஞ்ச காலமாய்த் தலை காட்டாதிருந்த ஒற்றைத் தலைவலியைமைக்ரேன்மீண்டும் தந்தது. உடம்புக்கு வயதாவதை அடிக்கடி இது போன்ற உபாதைகள் ஞாபகப்படுத்தியபடியே இருக்கின்றன. கதையை எழுதி முடிக்க முடியுமா?

 

முதலிரண்டு கட்ட‌ங்களையும் வெற்றிகரமாய்க்கடந்து தற்போது மூன்றாவது கட்டத்தின் முனையில் நிற்கிறோம். ஏற்கனவே ஆச்சார்யா என்கிற சிம்பன்ஸி குரங்கினை கடந்த மாதம் டாக்கியான்1 என்ற பிரத்யேகக்கலம் மூலம் ஒளியின் வேகத்தை மிஞ்சி பயணிக்கச் செய்தாயிற்று. அதன் தொழில்நுட்ப விவரணைகள், அறிவியல் முறைககள் அடங்கிய வொய்ட் பேப்பர் விரைவில் பிரசுரிக்கப்படும்.

இன்னும் மனிதனை பயணிக்க வைப்பது மட்டும் தான் பாக்கி. இப்போதைய கூட்டம் அதைப்பற்றியது தான். அடுத்து ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் டாக்கியான்2 என்ற புதிய கலத்தில் அனுப்புவதாகத்திட்டம். இந்தப்பரிசோதனை வெற்றி பெற்றால் பல ஒளி ஆண்டுகள் தூரமிருக்கும் ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளுக்கெல்லாம் சில மாதமாதப்பயணத்தில் மனிதன் சென்று வரலாம்.

இந்தப் பரிசோதனைக்காக‌ ஏற்கனவே நம்மிடம் உள்ள‌ அஸ்ட்ராநாட்களைப் பயன்படுத்தாமல், நம் பொது மக்களிலிருந்தே புதிதாய் இருவரைத் தேர்ந்தெடுத்து, பயிற்சியளித்து, பயன்படுத்த நம் அரசு முடிவு செய்திருக்கிறது. சாமானியனும் சரித்திரத்தில் இடம் பெற இந்த நல்லாட்சி வகுத்த வழிமுறை இது. இப்போது நம் மாண்புமிகு ஜனாதிபதி நூறு கோடி பேரிலிருந்து அந்த இரண்டு அதிர்ஷ்ட சாலிகளைத் தேர்ந்தெடுப்பார். அரங்கில் மெல்லிய கைதட்டல்கள் எழுந்தன.

 

யோசித்துப்பார்த்தார். ஆத்மாவையும் நித்யாவையும் இதில் பயன்படுத்தலாம்.

கதையின் தலைப்பை எழுதினார்ஆத்மா, நித்யா மற்றும் ஐன்ஸ்டைன்”.

 

இருபத்தியிரண்டாம் நூற்றாண்டின் விளிம்பில் நின்ற அந்தக் கோடை காலையில், மூன்றாம் உலகப்போருக்குத் தப்பிய நூறு கோடி உலக மக்கட்தொகையும் தத்தம் வீட்டிலிருந்தபடி இதை பிரம்மாண்ட முப்பரிமாண ரெட்டினாத் திரையில் நேரடி ஒளி/ஒலி/ருசி/மணம் பரப்பாய் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரசாங்கச் செய்திகளை ஒவ்வொரு பிரஜையும் வாரம் ஏழு மணி நேரம் வீதம் கவனிக்க வேண்டும் என்பது அரச கட்டளை. மீறுப‌வர்களுக்கு தண்டனையும் உண்டு. ஆண்களென்றால் ஆசன வாயில் குறைந்த சக்தி லேசர் பாய்ச்சுவார்கள். பெண்களென்றால் தண்டனை வேறு தினுசு. பயந்தே புத்தி வளர்க்கிறார்கள்.

ஜனாதிபதி மெல்லக் கை நீட்டி, தன் எதிரேயிருந்த அந்த ரேண்டம் நம்பர் ஜெனரேட்டரின் விசையை அழுத்த மேடையிலிருந்த AMOLED திரையில் பத்து இலக்க எண்கள் அதிவேகமாய் ஓடி இறுதியில் இரண்டு எண்களை தேர்ந்தெடுத்து கடமையுணர்வுடன் ஓர் எலக்ட்ரானிக் குரல் அறிவித்தது.

பிரஜை எண் 4953690164ஆத்மா

பிரஜை எண் 5281377948நித்யா

ப்ளாஸ்க்கில் இருந்த ஏலக்காயிட்ட மிதச்சுடு தேநீரை ஊற்றி உறிஞ்சினார்.

அற்புதமானதொரு கருவும், நல்லதொரு துவக்கமும் கிடைத்தும், கதையின் போக்கு சரியாய்ப் பிடிபடவில்லை. இந்த நாற்பது வருட எழுத்து வாழ்வில் இது போன்ற குழப்பங்கள் மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றன‌. ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் சிந்தனையில் வந்து போனது. ஒருவரை கதையின் முடிவில் கொன்று விட வேண்டும் என்பதே அது. ஆத்மா, நித்யா இருவரில் ஒருவரை.

 

தங்கள் வீட்டிலிருந்த தொலைக்காட்சித் திரையில் பார்த்துக்கொண்டிருந்த ஆத்மாவும் நித்யாவும் பிரம்மித்தார்கள். உற்சாகத்தில், நித்யா கிட்டத்தட்ட சப்தமாய்க் கத்தியே விட்டாள் (ஹுர்ர்ரேஏஏ!”). என்னவொரு வாய்ப்பு. சாதாரணர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பா இது. நித்யா ஐ.ஐ.டி.க்கு விண்ணப்பித்தே கிடைக்கவில்லை அதுவும் மூன்று முறை. ஆனால் இப்போது அதையெல்லாம் விட பெரிய பாக்கியம் கிடைத்திருக்கிறது.

தேனிலவுக்கு நிலவுக்கு போய் வந்ததோடு சரி. அதற்கு பிறகு ஆத்மா அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை. பணி நிமித்தம் ஒரு முறை ஜூபிடர் வரை போயிருக்கிறாள். அவ்வளவு தான் அவளது சுற்றுலா வரலாறு. இதோ இந்தப் பரிசோதனைப்பயணத்தில் ஆண்ட்ரமீடா வரை போலாம் என்கிறார்கள்.

இந்த அரசு வாழ்க; இதன் விஞ்ஞானம் வாழ்க; இதன் தொழில்நுட்பம் வாழ்க; குறிப்பாய் அந்த ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் வாழ்க. இந்த அரசையா 10G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் செய்தது என்று சில நக்சல்பாரி ஊடகங்கள் குற்றம் சாட்டி பதவி விலகக் கோரின! பாவம், முட்டாள்கள்.

ஆத்மாவுக்கு உலகமே தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத்தோன்றியது. அரசாங்கத் தொலைக்காட்சியினர் அதற்குள் வீடு தேடி பேட்டியெடுப்பதற்கு வந்துவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எப்படி உணர்கிறீர்கள்?”, “மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”, “அரசாங்கத்தைப்பற்றி ஓரிரு வார்த்தைகள்?” போன்ற அசட்டு சம்பிரதாயக் கேள்விகளுக்கு உற்சாகமாய்ப் பதிலளித்தார்கள்.

ஜனாதிபதி அந்தரங்கமாகச் சந்திக்க விரும்புவதாக பூமி அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து அரசாங்க முத்திரையிட்ட குரல் மின் மடல் அழைப்பு வந்தது. அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தார்கள். அரசாங்கம் வழங்கி யிருந்த‌ ரேஷன் மதுவை அதிகம் குடித்தார்கள். சம்போகத்திற்கு அனுமதியற்ற காலமாதலால் அன்றைய‌ இரவு ஆத்மா நித்யாவை அழுந்த முத்தமிட்டான்.

 

மனசு கேட்கவேயில்லை. ஆத்மா நித்யா இருவரில் ஒருவரைக் கொல்வதா. என்ன இது. கிட்டதட்ட ஒரு துரோகம் போல். எத்தனை வருடங்களாக என் புனைவுகளின் பாத்திரங்களாக‌ ஆத்மாவும் நித்யாவும் இருந்திருக்கிறார்கள். அவர்களில்ஒருவரை போய்க் கொல்வதாவது. நடக்காது. மீண்டும் மைக்ரேன் சிந்தனையை ஆக்ரமித்தது.

 

பூமியின் ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகச்சம்பிரதாயமாய், மிகச்சுருக்கமாய் நிகழ்ந்தது. உடன் டாக்டர் ரே இருந்தார். ஜனாதிபதி அரசுத் தொலைக்காட்சியில் பேசும் அதே மின்காந்தம் தோய்ந்த‌ கரகர‌த்த குரலில் துல்லியமாய்ப் பேசினார்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நிலவுப்பயணத்துக்கு ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் தேர்ந்தெடுக்கப்பட்டதைப்போல், செவ்வாய்க்கு ராமன், அப்துல்லா தேர்ந்தெடுக்கப் பட்டதைப்போல் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். சரித்திரம் உங்களை நினைவிற் கொள்ளும். பூமி அரசின் பிரதிநிதியாக உங்களை வாழ்த்துகிறேன்

நன்றி தெரிவித்து, விடைபெற்று கிளம்புகையில் டாக்டர் ரே புன்னகைத்தார்.

நாளை உங்கள் பயிற்சி தொடங்குகிறது.

ஆர்வத்தில் படபடக்கும் அவர்களின் நான்கு கண்களையும் பார்த்து சொன்னார்.

தயாராகுங்கள், உங்கள் வாழ்நாளின் பொற்கணங்களை அனுபவிக்க.”

திருமதி சுஜாதா எடுத்துத்தந்த மாத்திரையைப் போட்டுத் தண்ணீர் குடித்தார்.

என்ன தான் இப்படிப் போட்டு யோசிக்கிறீர்கள்?

சொல்வதா வேண்டாமா என யோசித்துத் தயங்கிப் பின் சொன்னார்.

 

ஆத்மாவுக்கும் நித்யாவுக்கும் பயணத்திற்கான பயிற்சி தலைநகரின் தெற்கே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த சர்வதேச அஸ்ட்ரோநாட் பயிற்சி மையத்தில் தொடங்கியது. ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வீதம் மிகக்கடுமையான மூன்று மாத காலப்பயிற்சி (பாதியில் பேசாமல் ஓடிப் போய் விடலாமா?” என்று ஆத்மாவிடம் நித்யா ரகசியமாய்க் கேட்டாள்).

முதலில் ஒளியின் வேகம், அதைப்பற்றிய அறிவியல் சித்தாந்தங்கள், அவர்கள் செல்லவிருக்கும் கலம் போன்றவற்றைப்ப‌ற்றி பாடம் எடுத்தார்கள். ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி, க்வாண்டம் டன்னலிங், ப்ளாங்க் லெந்த், ஈ.பி.ஆர் பாரடாக்ஸ், ஸ்ட்ரிங் தியரி, ஸ்பேஸ் ஒபேரா என்று புரியாத பாஷையில் பேசினார்கள். பாதிக்கு மேல் புரியாது; இருந்தாலும் சொல்லித் தர வேண்டியது எங்கள் கடமை என்ற முன்னறிவிப்புடன் தான் ஆரம்பித்தார்கள் பேராசிரியர்கள்.

எழுபத்தைந்து மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளத்தில், விண்வெளிக்கான உடைகளும், டென்னிஸ் ஷூக்களும் அணிந்து கொண்டு, சைடு ஸ்ட்ரோக் முறையில் மூன்று முறை தொடர்ச்சியாக நீந்த வைத்தார்கள். நீருக்குள் பத்து நிமிடம் மூச்சடக்கி இருக்கச்சொன்னார்கள். இருபது நொடிகளுக்கு எடையற்ற சூழ்நிலையில் இருக்க‌ச் செய்தார்கள்இப்படி ஒரு நாளைக்கு நாற்பது முறை.

கணேஷ், வசந்த் இருவரில் ஒருவரை சாகடிக்க வேண்டும் என்றால் கூட சுலபமாகத் தீர்மானித்து விடுவேன்வசந்த் என்று. ஆனால் இந்த ஆத்மாவும் நித்யாவும் ரொம்பவே படுத்துகிறார்கள்”, என்றார் மோவாயைத் தடவியபடி.

படுத்துவது ஆத்மாவா? நித்யாவா?”

இருவருமே.

 

கடைசியாய் பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளைப் பற்றியும், அந்தப் பயணத்தின் அறிவியல் முக்கியத்துவம் தவிர்த்து அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்தும் ஒரு வயதான வழுக்கைத்தலைப் பெண் சிரத்தையாக‌ப் பாடம் நடத்தினாள். கிரக‌ப்பற்று, இறையாண்மை இத்யாதி.

பயிற்சி முடியும் தறுவாயில் ஆத்மாவும் நித்யாவும் முழு உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். டிஎன்ஏ ப்ளூப்ரிண்ட் எடுத்து பிசிறுள்ள ஜீனோடைப்புகள் ஜெனிட்டிக் ரீஎஞ்சினியரிங் மூலம் திருத்தி நார்மல் என முத்திரை குத்தினார்கள்.

பயிற்சியிலிருந்த மூன்று மாதங்களில் ஒரு நாள் கூட டாக்டர் ரே கண்ணில் படவில்லை. அவருக்குக்கீழ் நேரடிப்பயிற்சி பெறுவோம் என்று எண்ணியிருந்த‌ இருவருக்கும் அது சற்றே ஏமாற்றமளித்தது. பயணம் பற்றிய எதிர்ப்பார்ப்பும் சந்தோஷமும் எல்லாவற்றையும் மறக்கச் செய்தது. ஆத்மாவும் நித்யாவும் மெல்ல மெல்ல, தட்டுத்தடுமாறி தயாரானார்கள். அந்த மஹாநாளும் வந்தது.

பேசாமல் ஆத்மாவைக் கொன்று விடுங்கள்.

என்ன‌, ஃபெமினிஸமா?”

இல்லை. இன்ஃபாக்ட், இது மேல்ஷாவனிஸம்

எப்படி?”

உங்கள் எதிர்கால எழுத்துக்களுக்கு நித்யா என்பதன் கிளுகிளுப்பு தேவைப்படும்.

 

அந்த நவீன ஏவுதளத்தைப் போர்த்தியிருந்த அதிகாலைப்பனியை உருக்கியபடி பரிதியின் கதிர்கள் பிரவாகித்துப்பாய்ந்தன. வேலை நிமித்தம் மட்டுமேயான பரபரப்புக் குரல்கள் அவசரம் காட்டின. கிட்டத்தட்ட எல்லோருமே ஒருவித ஆன்மீகம் தடவிய‌ பதட்டத்தில் இருந்தார்கள்புய‌லுக்குக் காத்திருக்குமொரு கப்பல் மாலுமியின் பதட்டம். நேரம் சத்தமின்றி நழுவிக் கொண்டிருந்தது.

ஆத்மாவும் நித்யாவும் டாக்கியான்2 என்ற அந்த வினோத வடிவுடைய‌, ஒளிர் வெண்ணிற கலத்தில் புறப்படத்தயாராய் அமர்ந்திருந்தார்கள். பதட்டமில்லாமல் ஏதோ பக்கத்திலிருக்கும் செவ்வாய் கிரகத்துக்கு வார இறுதி விடுமுறையைக் கழிக்க‌ கிளம்புபவர்கள் மாதிரி உதட்டில் ஒரு புன்னகையை ஒட்டியிருந்தார்கள்.

மிஷன் கவுண்ட் டவுன் தொடங்கியது 9 8 7 6 5 4 3 2 1 0

அந்தக்கலம் ஏவுதளத்தை விட்டு சீறிப்பாய்ந்தது. அதன் வேகத்தை ஒப்பிட அதற்கு முந்தைய கணம் வரையிலான பூமி சரித்திரத்தில் உவமையில்லை. நூற்றாண்டுகளாய் மனித இன‌ம் வாசித்துக் கொண்டிருந்த சித்தாந்தங்களை மாற்ற வல்ல ஒரு பயணம். உலகமே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தது.

தம் வாழ்நாளின் மறக்க முடியாத கொண்டாட்டம் ஒன்றிற்கு ஆயத்தமானார்கள் பூமிக்கிரகத்தின் பொதுமக்கள். வரலாற்றாசிரியர்கள் புதிய அத்தியாயம் எழுதத் தயாரானார்கள். விஞ்ஞானிகள் கடவுளை ஒரு கணம் ரத்து செய்தார்கள்.

இதில் இவ்வளவு குழம்ப ஏதுமில்லை.”

“…”

ஒரு கதையில் சாகடித்து விட்டு, அடுத்த‌ கதையில் அதே கதாபாத்திரத்தை உயிருடன் காட்டுவது விஞ்ஞானக் கதைகளுக்கோ, உங்களுக்கோ புதிதில்லை.

ஜீனோவைச் சொல்கிறாயா? ப்ரியாவைச் சொல்கிறாயா? அவை வேறு

ஆத்மா நித்யா பாத்திரங்கள் ஒரே ஆட்களை குறிப்பதல்ல. உங்கள் சில அறிவியல் கதைகளில் ஆத்மா, நித்யா என்ற‌ பெயர் கொண்ட‌ பாத்திரங்கள் வருகின்றன. அவ்வளவே. உற்றுப் பார்த்தால் அவை கதைக்குக் கதை வேறுபடுகின்றன. ஆத்மா நித்யா என்பவை ஓர் அடையாளம் மட்டுமே.

அதனால் தான் அதை அழிக்க பயப்படுகிறேன்.

 

ஐசக் நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், சங்கர் முனியசாமி ஆகியோர் முன்பு அமர்ந்திருந்த கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியின் கணிதத் துறை லூகாஸியன் பேராசிரியர் நாற்காலியில் அமர்ந்தபடி, மேசையோடு ஒருங்கிணைக்கப்பட்ட‌ தொடுகணிணித்திரையில் டாக்கியான்2 கிளம்பி நகர்வதையும் அதன் வேகக் கணக்கையும் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் ரேவை அவரது அந்தரங்கக் காரியதரிசி மீராவின் உற்சாகக் கீச்சுக்குரல் பரிசுத்தமாய்க் கலைத்தது.

கடைசியாய் சாதித்து விட்டீர்கள் டாக்டர் ரே

அவளை உற்றுப்பார்த்தார் டாக்டர் ரே.

அதில் உனக்கு இவ்வளவு சந்துஷ்டியா?”

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? ஐ லிவ் ஃபார் யூ, டாக்டர் ரே.

மீரா! உன் இளமையை என் போன்ற ஒரு கிழவனோடு வீணடித்து விட்டாய்

இல்லை ரே. என்ன இது புதிதாய்? நானாய் விரும்பித்தானே எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்தேன். உங்கள் ஆராய்ச்சிக்காக திருமணமே செய்யாமல் இருந்தீர்கள். இயற்பியலின் மேல் பற்று கொண்ட இந்தக் கத்துக்குட்டிக்கு அதன் பிதாமகரான நீங்கள் ஆதர்ஷ புருஷன். உங்களுக்கு எப்படியோ, எனக்கு நீங்கள் காதலன் தான். இதை விட மகிழ்ச்சியான வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்க சாத்தியமில்லை

மூச்சு விடாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவள் நிதானமாகித் தொடர்ந்தாள்.

உங்களையும் என்னையும் தொடர்புபடுத்தி என் காதுபட பேசியவர்களின் வார்த்தைகளை நான் ரசிக்கவே செய்தேன். உங்களின் அறிவிக்கப்படாத காதலியாய் இருப்பதில் எனக்கு உள்ளூர ஒரு வித‌ பெருமையே. இருபதாம் நூற்றாண்டிற்கு ஒரு ஐன்ஸ்டைன் போல் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு நீங்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில் உலகமே இதைத் தான் சொல்லும்.

என்னை இவ்வளவு நேசிக்கிறவளிடம் ஓர் உண்மையை சொல்ல வேண்டும்

கடைசியாய் பக்கத்து வீட்டு நாயிடம் கூட கேட்டுப்பார்த்தாயிற்று. பவ் பவ் பவ் என சற்று விரோதமாய் அல்லது ஏளனமாய்க் குரைத்து விட்டு படுத்துக்கொண்டது.

இவனுக்கு வேறு வேலை இல்லை என்று சொல்லாமல் சொல்வதாய்ப்பட்டது.

 

“இந்த ஆராய்ச்சி வெற்றி பெறவில்லை மீரா. பூமி அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் நான் அப்படி சொல்ல வேண்டியதாகிவிட்டது. இன்றைய அரசாங்கத்தின் மேல் ஏராள‌மான ஊழல் குற்றச்சாட்டுகள். முக்கியமாய் இந்த 10G ஸ்பெக்ட்ர‌ம் ஒதுக்கீடு. மில்லியன் பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது என்கிறார்கள். அவர்களுக்கு பொதுமக்களின் கவன‌த்தை திசை திருப்ப ஏதாவது விஷயம் தேவைப்பட்டது. இந்தத் தேதிக்கு விஞ்ஞானம் மட்டும் தான் அத்தகைய ஈர்ப்பினை ஏற்படுத்த வல்லது. அதனாலேயே இந்த ஆராய்ச்சியை முடுக்கி விட்டார்கள். என்னை இந்தத் திட்டப்பணிக்குத் தலைவராக‌ நியமித்தார்கள்.

ஆரம்பத்தில் நிஜமாகவே முயற்சி செய்து பார்த்தோம். பின் புரிந்து விட்டது. என் நாற்பத்தியிரண்டு வருட கற்றலில் சொல்கிறேன் ஒளியின் வேகத்தை மிஞ்சவே முடியாது. ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பொய்க்கவே செய்யாது. E=mc2 என்கிற நிறை ஆற்றல் சமன்பாடு தான் சதி செய்கிறது.

பரிசோதனை வெற்றி பெறாது என்பதால் தான் அரசாங்கத்தின் முடிவுப்படி சாதாரணர்களான ஆத்மாவும் நித்யாவும் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  அவர்கள் பயணிக்கும் கலம், ஒளியின் வேகத்தைத் தொட முனைகையில் வெளிப்படும் உயர் ஆற்றலின் காரணமாக‌ வெடித்துச்சிதறும். A giant explosion.

ஆத்மாவும் நித்யாவும் பயிற்சியிலிருந்த போது கிடைத்த மூன்று மாத கால அவகாசத்தில் என்னால் ஒரே ஒரு விஷயம் செய்ய முடிந்தது. கலம் வெடித்துச் சிதறுகையில் இருவரில் ஒருவர் உயிர் பிழைக்கும் வகையில் ஒரு சிறிய‌ உபகலத்தை இணைத்திருக்கிறேன். அத்தகைய இரண்டு கலங்களை இணைத்து இரண்டு பேரையுமே காப்பாற்றி விடுவது தான் எனது ஆரம்பத் திட்டம். ஆனால் நேரம் போதாமையால் இரண்டாவது கலத்தை செய்ய‌ முடியாமலே போய் விட்டது. பூமி அரசாங்கத்தை எவ்வளவோ முறை மன்றாடியும் பரிசோதனை தேதியை மாற்றுவதற்கு மட்டும் மறுத்து விட்டார்கள்.

எல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டி செய்யப்படும் அரசியல். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. இந்தப்பதவியிலிருந்து கொண்டு தெரிந்தே ஓருயிரைப் பலி வாங்க ஒத்துழைத்ததை ஏற்கவே முடியவில்லை. நான் சர்வதேச விஞ்ஞான கழகத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.”

அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்த மீரா விரக்தியாய்ச் சொன்னாள்.

“உங்கள் ராஜினாமாவால் எந்த உயிரையும் திருப்பித்தர முடியாது டாக்டர் ரே.”

ஆத்மா, நித்யா மற்றும் ஐன்ஸ்டைன் என்ற தலைப்பை அடித்து விட்டு “E=mc2” என்று எழுதினார் சுஜாதா.

 

வினாடிகளும் அதற்குள்ளிருக்கும் சிறுபிரிவுகளும் வேகமாய்த் தெறித்து ஓடிக்கொண்டிருந்தன. ரே கனத்த‌ மெளனத்துக்குள் ஒளிந்திருந்தார். அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும் இருந்தார்கள். அந்த நிசப்தத்தில் அவர்களின் இருதயத்துடிப்பு அவர்களுக்கே மிகத் தெளிவாய்க் கேட்டது.

சகிக்கவொண்ணா மௌனம். மீரா தன் வார்த்தைகளால் அதைத் தகர்த்தாள்.

“கடைசியாய் ஒரே ஒரு கேள்வி டாக்டர் ரே.”

என்ன என்பது போல் பார்த்தார் ரே.

“ஆத்மா நித்யா இருவரில் யார் சாகப்போகிறார்?”

“Survival of the fittest”

பெருமூச்சுடன் சொல்லிவிட்டு அவர் தன் கண்களை மூடிக்கொண்டார்.

திருமதி சுஜாதா அருகே வந்து நின்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டார்.

யாரை சாகடிக்கப்போகிறீர்கள்? அல்லது யாரை காப்பற்றப்போகிறீர்கள்?”

கிட்டத்தட்ட இருவரையுமே காப்பாற்றிவிடுவேன் எனத்தோன்றுகிறது

எப்படி?”

சுஜாதா புன்னகைத்தார்.

 

செரன்கோவ், அஸ்கார்யன், காசிமிர், ஸ்கேர்ன்ஹாஸ்ட், ஹார்ட்மான் ஆகிய‌ விளைவுகளை ஏற்படுத்தி விரைந்தது கலம். அதன் நியான் எலெக்ட்ரோ‍-லூமினன்ஸ் பச்சை, வினாடிக்கு மீட்டர்களில் காட்டிய கலத்தின் வேகத்தை ஆத்மாவும் நித்யாவும் கண்ணிமைக்காம‌ல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

299792453
299792454
299792455
299792456
299792457

நீங்கள் ஓர் இயற்பியல் மாணவராக இருந்திருந்தால் இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் – நூற்றாண்டுகளாய் கண்ணாமூச்சி காட்டி வரும் ஒளியின் வேகம் என்கிற அந்த மாய எண்ணை ஆத்மாவும் நித்யாவும் பயணிக்கும் டாக்கியான்-2 முத்தமிட‌ இன்னும் வினாடிக்கு ஒரு மீட்டர் அதிக வேகம் தேவை.

அப்போது…

அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட இந்த ஒரு வாரத்தில் எதுவுமே எழுதவில்லை. சோர்வு மிகவும் அழுத்தியது. இந்த சூழ்நிலையே கூட ஒருவனை நோயாளியாக்கி விடும். எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். நோயாளிகள் என்றாலே எப்போதும் தனி மரியாதை தான். அதுவும் பிரபல நோயாளிகள் என்றால் கூடுதல்.

இன்றாவது ஆத்மா, நித்யா கதையை எழுதி முடித்து விட‌ வேண்டும். ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்து விடலாம். இன்று தேதி என்ன? வெகு சுத்தமான மருத்துவமனைச் சுவரில் அறையப்பட்டிருந்த துருவேறாத இரும்பு ஆணியின் வசம் தொங்கிக் கொண்டிருந்த அந்த தினசரி கிழிபடும் கேல‌ண்டரைப் பார்த்தார்.

27 ஃபிப்ரவரி 2008.


[இன்று சுஜாதா நினைவு நாள்.]

 


 


 

ஒளியின் வேகத்தை மிஞ்சிவிட்டோம்!”

பூமி கிரகத்தின் ஜனாதிபதியும், இன்ன பிற கேபினெட் மந்திரிகளும் வீற்றிருந்த விவேகானந்தா ஆடிட்டோரியத்தின் மையத்திடலில் நின்று கொண்டு, சர்வதேச விஞ்ஞான கழகத்தின் தலைவரும், மூன்று முறை நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ரே, மிகத் திட்டமாக மிகத் தீர்க்கமாக அறிவித்த போது, அங்கு குழுமி

யிருந்த பெளதீகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஐந்நூற்று சொச்சம் விஞ்ஞானிகளால் நம்பாமல் இருக்க முடியவில்லை; நம்பவும் முடியவில்லை.

ஒரு கணம் ஆழ்ந்த அமைதிக்குப் பின், அந்த‌ வாசகம் ஏற்படுத்திய மெல்லிய அதிர்வுகளும், அதன் ரிப்பிள் எஃபெக்ட் சலசல‌ப்புகளும் அரங்கில் முழுமையாய் விலகாத நிலையில் கடைசி மிடறு நீரை அருந்தி விட்டு டாக்டர் ரே தொடர்ந்தார்.

ஒளியின் வேகத்தை மிஞ்சுவது என்பது மனித குலத்தின் இருநூறு வருடக்கனவு. 1905ல் ஐன்ஸ்டைனின் Does the inertia of a body depend upon its energy-content?” என்ற ஆராய்ச்சிக்கட்டுரையில் தொடங்குகிறது அது. இப்போது கடைசியாய் அதை அடைந்தே விட்டோம். நாம் வாழும் காலத்தின் மகத்தான சாதனை இது.

செயற்கை நீரடைத்த‌ ப்ளாஸ்ட்டிக்‌ புட்டியைக் கொண்டு வந்து ஒயிலாய் அருகில் வைத்து நகர்ந்த‌ காரியதரிசி மீராவை சுலபமாய் அலட்சியப்படுத்தி விட்டு, கூடியிருந்தவர்களைப் பார்த்து ஓர் இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்ந்தார்.

மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனையை நடத்த‌த் திட்டமிட்டோம். நிறையற்ற ஃபோட்டான் துகள்களை ஒளியின் வேகத்தை மிஞ்சச்செய்வது முதல் கட்டம். எலெக்ட்ரான் போன்ற நிறையுள்ள பருத்துகள்களை அந்த‌ வேகத்தை கடக்கச்செய்வது இரண்டாம் கட்டம். உயிரின‌ங்களை அந்த வேகத்தில் பயணிக்க‌ வைப்பது மூன்றாவது மற்றும் கடைசிக் கட்டம்.

காதல் புராணம் 14

14. புத்ர‌

தெரிவை [வயது : 26-31]

 

131

பயமாய் இருக்கிறது –

உன்னைக் குறித்து

இன்னும் பேசினால்

அழுகை வருமோ என.

 

132

பனிக்குடமுடைந்தோர் உயிரை

யான் ஈன்று புறந்தருகையில்

அருகிருந்து காண‌வேண்டும் நீ.

 

133

இன்னமும் இனித்துக்கிடக்கிறது –

உன்னை நினைத்துக்கொண்டே

அடுக்களையில் சமைக்கையில்

விரலறுத்துக் கசிந்த செங்குருதி.

 

134

உந்தன் கோபத்தின்

மௌனம் போலன்றி

எனைக்கிழித்தெறிவது

வேறொன்றுமில்லை.

 

135

அதிரப்புணர்ந்த பின்

திரும்பிப்படுக்காமல்

அணைத்துறங்குவாயே,

அதன் பெயர் சொர்க்கம்.

 

136

நீ தலைகோதி விடும்

சுகத்திற்காகவே

உனை ஆயுள் முழுக்க‌

காதலிக்ககலாம்.

 

137

எனது உச்சங்கள்

நீ புணர்கையிலல்ல‌

உனை உணர்கையில்.

 

138

புணர்ந்த களைப்பின் அணைப்பழுத்தத்தில்

உன் வேர்வை வாசனை ஞாபகப்படுத்தும்

நானிருந்த இருட்டுக்கருவறை வாசனை.‌

 

139

உன் ஒற்றை ஸ்பரிசத்திற்காய்த்

தவமிருந்த கணங்களனைத்தும்

பசும்புல்நுனிப்பனித்துளி போல்

பொய்யாய்ப்பழங்கதையானதுவே

நித்தம் நீயென்னைப் புணருமிந்த‌

நீண்ட இரவுகளின் நிசப்தத்தில்.

 

140

என் இருதயத்தினை

லேசாக்குபவையுன்

காதலின் கனமும்

 

ஆத்மார்த்தம்

சீனாவில் ஒரு மன்னன். அவனுடைய அரசவைக்குப் பல இசைக் கலைஞர்கள், நடனமணிகள் வருவார்கள். தங்களுடைய திறமையைக் காண்பித்துப் பரிசு பெற்றுச் செல்வார்கள்.

ஒருநாள், அங்கே மென்ஜன் என்ற ஜென் மாஸ்டர் வந்திருந்தார். அவர் ஒரு இசை மேதை!

வந்தவரை முறைப்படி வரவேற்ற அரசன், ‘ஐயா, நீங்கள் எங்களுக்காக ஒரு சங்கீதக் கச்சேரி செய்யவேண்டும்!’ என்று கேட்டுக்கொண்டான். ‘என்னுடைய சபையினரும் பொதுமக்களும் உங்களது பாட்டைக் கேட்க ஆவலாக இருக்கிறார்கள்!’

மென்ஜன் ஒப்புக்கொண்டார். அன்று மாலை அவருடைய கச்சேரி நடைபெற்றது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்குமேல் மக்கள் கண்மூடித் தாளம் போட்டு ரசித்தார்கள். அவருடைய குரல் அழகையும் சங்கீத ஞானத்தையும் வியந்து பாராட்டினார்கள்.

கச்சேரியின் முடிவில் அரசன் சொன்னான். ‘குருவே, நான் எத்தனையோ பேருடைய பாட்டைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு தெய்வீகமான இசையைக் கேட்டது கிடையாது, நீங்கள்தான் இந்த உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்’ என்று பாராட்டினான்.

‘இல்லையப்பா’ என்றார் மென்ஜன். ‘எனக்குச் சங்கீதம் கற்றுத்தந்த குருநாதர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த பாடகர்!’ என்றார்.

’ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’

’நான் மனிதர்களுக்காகப் பாடுகிறேன், மன்னர்களுக்காகப் பாடுகிறேன். ஆனால் அவர், இறைவனுக்காகப் பாடுகிறார், இயற்கையான ஆத்மார்த்த உணர்வோடு இசையில் தன்னைக் கரைத்துக்கொள்கிறார். அதுதான் காரணம்!’