கோபம் எங்கே?

அன்றைக்குப் புத்த பூர்ணிமா. அந்த ஆசிரமம் எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு ஜென் துறவி தியானத்தில் அமர்ந்திருந்தார். அவர் பெயர் பான்கேய்.

அப்போது அந்த ஆசிரமத்துக்கு ஒரு பெண்மணி வந்தார். அவருடைய முகத்தில் பெரும் கவலை. அந்தத் துறவி தியானம் கலைந்து எழுகிறவரையில் பொறுமையாகக் காத்திருந்து வணங்கினார். தன்னுடைய பிரச்னையைச் சொன்னார். ‘எனக்கு நிறைய கோவம் வருது சாமி. நான் என்ன செய்யறது?’

‘கோவமா? அது எப்படி இருக்கும்?’ என்றார் அந்தத் துறவி. ‘நான் அந்தக் கோவத்தைப் பார்க்கணுமே. கொஞ்சம் காட்டுங்க!’

‘இப்பவா?’

‘ஆமாம்!’ என்றார் துறவி பான்கேய். ‘உங்ககிட்டதான் நிறைய கோவம் இருக்கு-ன்னு சொன்னீங்களே. அதுல கொஞ்சத்தை எடுத்துக் காட்டுங்க. நான் பார்க்கறேன்!’

’அதெப்படி சாமி முடியும்? இப்ப எனக்குக் கோவம் வரலையே!’

‘சரி. இனி எப்போ உங்களுக்குக் கோவம் வருதோ, அப்போ என்கிட்டே ஓடி வாங்க. கோவத்தைக் காட்டுங்க!’

’அதுவும் முடியாது சாமி’ என்றார் அவர். ‘இங்கே வர்றதுக்குள்ள அந்தக் கோவம் கரைஞ்சு காணாமபோயிடுமே!’

‘ஆக, நான் கேட்கும்போதெல்லாம் உங்களால அதைக் காட்டமுடியாது. அதுவா வந்தாலும் ரொம்ப நேரம் தங்காது. அப்டீன்னா என்ன அர்த்தம்?’ என்றார் பான்கேய். ‘கோவப்படறது உங்க இயல்பு இல்லை, இந்தக் கோவம் உங்களுக்குச் சொந்தமானது இல்லை. வேற யாரோ எதுவோதான் அதை உங்கமேல சுமத்தறாங்க. நீங்க ஏன் ஏன் அதை ஏத்துக்கறீங்க? முடியாதுன்னு மறுத்துடுங்க. அது உங்க கையிலதான் இருக்கு. இந்த விஷயத்தில வேற யாரும் உங்களுக்கு உதவமுடியாது’ என்றவர் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

அல்வா

அத்தியாயம் 18

பெரிய வொர்க்‌ஷாப்பின் மூலையில் கதவோடு சில அவசரத்தட்டிகளை வைத்து குட்டிபோட்ட வொர்க்‌ஷாப்பாக இருந்தது. அக்ரிலிக் ஷீட் போட்ட நீளமான டேபிள், அதன் முனையில் ஒரு மெக்கானிகல் வைஸ். கனெக்‌ஷன் கொடுக்கப்பட்ட ஒரு கையில் தூக்கக்கூடிய ட்ரில்லிங் மெஷின், கவரால் போட்டிருந்த டெர்ரி ரெனே.

அட்டைப்பெட்டிகளைப் பிரித்து உள்ளே இருந்த பாலிதீன் கவர்களை மேஜை மேல் அடுக்கிக்கொண்டிருந்தான் ரெனே.

“எல்லாம் வந்துவிட்டதா?” டேனி உறுமலுக்குப் பதில் சொல்லாமல் டெரி கையில் ஒரு பேப்பரை வைத்து சாமான்களைச் சரிபார்த்துக்கொண்டிருந்தார்.

“ஏறத்தாழ.. இப்போதுதானே செக் செய்துகொண்டிருக்கிறோம்” என்றான் ரெனே.

“ஒரு தம் அடிச்சுட்டு வந்துடறேன். சத்தம் போட எல்லாம் முயற்சி செய்யாதீங்க, யாருக்கும் கேட்காது.”

“எதாவது சாமான் இல்லைன்னு சொல்லி இழுக்கடிக்கலாமா?” டேனி வெளியே போய்விட்டான் என்று தெரிந்தாலும் டெரி குசுகுசுப்பாய்தான் கேட்டார்.

“வேண்டாம். சீக்கிரம் வேலையை முடித்துவிடலாம். அவனுங்களோட ப்ளான் இன்னும் சரியாத் தெரியலை” ரெனே குசுகுசுக்கவில்லை, மெதுவாகப் பேசினான். குசுகுசுப்பு தூரத்தில் இருந்தும் கேட்கும். மெதுவாகப் பேசுவது இன்னும் பாதுகாப்பு.

“விட்டா வைக்கப் போறாங்க்? வேலையை முடிச்சவுடனே நம்ம வேலையை முடிச்சிருவானுங்க”

“அப்படி எல்லாம் நடக்காது. நான் வந்துட்டேனில்ல. பயப்படாதீங்க” வார்த்தைதான் வேகமாக வந்து விழுந்ததே ஒழிய ரெனேவின் குரலில் தைரியம் இல்லை. எந்த ஹீரோத்தனமும் செய்யக்கூடிய இடம் இல்லை இது.

டேனி வந்துவிட்டான். “என்ன பேச்சு? எல்லாம் வந்தாச்சா?”

உற்சாகத்தைக் குரலில் ஏற்றிச் சொன்னான் ரெனே “எல்லாம் வந்தாச்சு. கொஞ்சம் டூல்ஸ் வேணும். இங்கேயே கிடைக்கும்னுதான் நினைக்கிறேன். கிடைச்சா வேலையை ரெண்டே நாள்லே முடிச்சுடலாம்.”

“என்ன டூல்ஸ்?”

“கொஞ்சம் சால்டரிங் ஐரன், க்ரைண்டிங் வீல், ரெண்டு ஸ்பானர், நோஸ் ப்ளையர், மல்டி மீட்டர், 36 கேஜ் வயர்” வேகமாகச் சொன்னார் டெரி. ரெனே திக்கினால் அவனுக்கு டெக்னிகல் சமாசாரங்கள் தெரியாது என்பது தெரிந்துவிடுமே.

பயப்பட்டிருக்க வேண்டியதில்லை. டேனியும் சூனியம்தான் என்பதை நிரூபித்தான். வாக்கிடாக்கியை எடுத்து “இவங்க என்னவோ டூல்ஸ் வேணும்னு கேக்கறாங்க. ஒண்ணும் புரியலை. நீங்க கேட்டு ஏற்பாடு செய்ங்க” கல்மோஷ் குரல் ஆமோதித்ததும் டெரியிடம் கொடுத்தான்.

டெரி பேசி முடித்து கோபமாக வைத்தார். “எல்லாம் ஏற்பாடு செய்யறாங்களாம்.. ஒண்ணைத்தவிர.”

“என்ன ஒண்ணு?”

“க்ரீஸ். ஆண்டி ஆக்ஸிடண்ட் க்ரீஸ். அதானே இந்த பேட்டரியை சேஃப் ஆ வைக்கப்போற சமாச்சாரம்”

டேனிக்கு ஒரு விவரமும் தெரியாது. “அப்ப இந்த பேட்டரி சேஃப் இல்லையா?”

“செய்யும்போது சேஃப்தான். ஆனா சர்க்யூட்லே கனெக்ட் செஞ்சு லோட் கொடுத்தா, க்ரீஸ் இல்லாட்டி வெடிச்சிரும்”

பேட்டரி சைஸைப் பார்த்தான் டேனி. “என்ன ஒரு ஒத்தைப்பட்டாசு மாதிரி வெடிக்குமா?”

ரெனே சிரித்தான். “ஒத்தைப்பட்டாசுதான். ஆனா இந்த ரிக்கையே தூக்கிடும்..”

டேனிக்கு எதோ புரிந்ததுபோல இருந்தது. பேட்டரியை வைத்துக்கொண்டு ஏகே என்ன செய்யப்போகிறார்? ரிமோட்டுக்குப் போட்டு சானல் மாற்றவா பேட்டரி செய்யும் ஆளைக் கடத்தி இருக்கிறார்.. எதோ விஷயம் இருக்கிறது. கல்மோஷுக்கும் அமீருக்கும் தெரிந்தும் இருக்கிறது.

“சொன்ன பேச்சைக் கேட்டு சொல்லச் சொன்ன மாதிரி செய்ங்க”
***

“சொன்ன மாதிரி செய்ங்க” கலீல் ஆஃபீஸில் இரண்டு பேர் பவர் பாயிண்ட் காட்டிக் கொண்டிருந்தார்கள். பண விவகாரம்.எல்லா க்ராஃப்களும் சரேலெனக் கீழே சரிந்துகொண்டிருந்தன.

“உங்க பர்சனல் கணக்குலதான் வரும் சார், அந்த ஹார்ஸ் ஆக்‌ஷன் பணம் எல்லாம்”

“அதனால? அதை வச்சு கார்ப்போரேட் லாஸை சமாளிக்க முடியாதா?”

ஏன்தான் சின்ன அக்கவுண்டிங் விஷயங்கள்கூடத் தெரியாமல் இருக்கிறார்களோ இந்த முதலாளிகள்.. பெருமூச்சு விட்டுக்கொண்டு அக்கவுண்டண்ட் சொன்னான். “செய்யலாம் சார்.. ஆடிட்லே ப்ராப்ளம் வரும்”

“எப்படி செய்யணுமோ அப்படி செய்ங்க..” ஃபோன் அடிக்க பட்டனை அமுக்கினான்.

“சார்.. அந்த AA ஆள் மறுபடி லைனில் இருக்கிறார்”

”ஒன் செகண்ட்” என்று அக்கவுண்ட் ஆட்களைப் பார்த்தான். “கேன் யூ எக்ஸ்க்யூஸ் மீ..” எழுந்து உள் அறைக்குச் சென்று இன்னொரு ஃபோனில், “இங்கே கொடு, செக்யூர் லைன்” என்றான்.

“மிஸ்டர் கலீல்?” என்றது எதிர்முனை.

“வாட் இஸ் திஸ் அபவுட்? நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன்”

“இதெல்லாம் வேண்டாமே மிஸ்டர் கலீல். முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் ஆள் ஒரே ஒரு AA என்ற வார்த்தைக்காக மீட்டிங்கைக் கலைத்து வெளியே வந்து பேசுகிறீர்கள். அப்படியென்றால் இது அதையும் விட முக்கியம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனக்கும்”

கலீலுக்கு வியர்த்தது. இது ப்ரொஃபஷனல் குரல். “ஓக்கே.. கீப் இட் ஷார்ட்”

“அதுதான் எனக்கும் நல்லது. ஃபோன் பூத்தில் இருந்துதான் பேசுகிறேன், என்றாலும் ரொம்ப நேரம் பேசுவது என் உடல்நலத்துக்கும் நல்லதில்லை”

“விஷயத்துக்கு வா”

“டெரி கார்டிஸ் என்று அமெரிக்காவில் ஒரு விஞ்ஞானி இருந்தார். அவர் கடத்தப்பட்டார். அவர் எங்கே இருக்கிறார் தெரியுமா?”

“வாட் இஸ் திஸ்? எனக்கு அந்தப் பெயரில் யாரையும் தெரியாது”

“அப்படியா, சரி. நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். உங்கள் ஆட்கள்தான் உங்களுக்குத் தெரியாமல் அவரைக் கடத்திவிட்டார்கள் போல இருக்கிறது. நான் போலீஸிடமே சொல்லிவிடுகிறேன்.”

“இரு இரு.. யார் நீ”

எதிர்முனை சிரித்தது. “கவலைப்படாதீர்கள். போலீஸிடம் செல்வதில் எனக்கும் எந்த ஆதாயமும் இல்லை. நான் உங்கள் நண்பன்தான். எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும். அதற்குப் பதிலாக”

கலீல் வார்த்தையைக் கவனமாகக் கோர்த்தான். “நீ யார் என்பது தெரியாதவரை மேலே பேச முடியாது. குட்பை”

“வெயிட் வெயிட். ஃபோனை வைத்துவிடாதீர்கள். நான் யார் என்பதை ரகசியமாக வைத்துக்கொள்ளப்போகிறேன் என்று நான் சொன்னேனா? எந்த ரகசியமும் இல்லை. உங்களை நேரில் சந்திக்கவே தயாராக இருக்கிறேன்.அதேபோல நீங்கள் எனக்குத் தரப்போகும் பணமும் ப்ளாக்மெயிலுக்காக இல்லை. சர்வீஸஸ்.. ப்ரொஃபஷனல் சர்வீஸஸ்க்கான சார்ஜஸ்.”

“யார் நீ?”

“சொல்கிறேன். நேரில் உங்களைப் பார்க்க வேண்டும். அப்போது”

“இப்போதேகூட ஆஃபீஸுக்கு வரலாமே”

”உங்கள் குகைக்கா? ப்ரொஃபஷனல் என்று என்னை எப்படி சொல்லிக்கொள்ள முடியும், அவ்வளவு சுலபமாக மாட்டிக்கொள்ப்வனாக இருந்தால்?”

“பின்னே?”

“உங்கள் இன்னொரு குகை. வாட்டர்ஃப்ரண்ட் மால். இன்னும் பத்து நிமிஷத்தில், தனியாக வரமுடியுமா?”

“எனக்கு வேலை இருக்கிறது”

மறுபடியும் சிரிப்புச் சத்தம். “இந்த வேலை அதிக முக்கியம். அது உங்களுக்கும் தெரியும்” ஃபோன் கட்டாகி கொர் என்றது.

அமீர் எங்கே இருக்கிறான்? இந்த ஆபரேஷனில் ஆட்கள் குறைவாக இருக்கவேண்டும் என்று வைத்ததில் இப்போது பாடிகார்டுக்கும் பஞ்சம்.

”ரிக்கில்தான் இருக்கிறேன் பாஸ்” என்றான் அமீர்.

ஃபோன் வந்ததைச் சொன்னான் கலீல்.

அமீர் கொஞ்சம் யோசித்தான். “கவலைப்படவேண்டாம் பாஸ். இப்போதைக்கு அந்த ஆள் யாராக இருந்தாலும் அவனிடம் ஆதாரங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. மே பி அவன் யூகத்தில் விளையாடுபவனாக இருக்கலாம். ஒரு பாடிகார்டுடன் போய்ப்பாருங்கள். என்ன சொல்கிறான் என்பதைக் கேளுங்கள், அப்புறம் முடிவெடுத்துக்கொள்ளலாம். இன்று இரவு நான் பொருளுடன் கிளம்பிவிடுவேன்.”

கலீல் யோசித்தான். என்ன பயம்? அந்த ஃபோன் ஆசாமியே போலீஸுக்குப் போக பயப்படுகிறான்.

காரில் ஏறி அமர்ந்து “வாட்டர்ஃப்ரண்ட் மால் போ” என்றான். எதற்கும் இருக்கட்டும் என்று திரையை விலக்கி ட்ரைவரைப்பார்த்தான். அழித்தால் ஆறு ஆள் செய்யலாம் போல இருந்தான். தைரியம் அதிகமானது.

மாலுக்குள் எங்கே என்று சொல்லவில்லையே என்ற எண்ணமே உள்ளே நுழைந்தவுடன்தான் வந்தது.

செல்ஃபோன் மணியடித்தது. செகரட்டரி.

“சார், அந்த ஆள் மறுபடி பேசினார். நீங்கள் வெளியே கிளம்பி இருப்பீர்கள் என்று தெரிந்து வைத்திருந்தார். உங்கள் மொபைல் எண் கேட்டார்.”

“கொடுத்தாயா?”

“இல்லை. உங்கள் பர்மிஷன் இல்லாமல்..”

“அடுத்த முறை கொடுத்துவிடு”

ஐந்து நிமிடத்தில் மறுபடி மணி அடித்தது. “வெல்கம் மிஸ்டர் கலீல். உங்கள் சொந்த மாலுக்குள் உங்களை வரவேற்கிறேன்”

“வேர் ஆர் யூ?”

“சொல்கிறேன். அந்த மனிதன்ஷேப்பில் தயார் செய்திருக்கிறீர்களே ஒரு ஜயண்ட் சைஸ் ரிப்ளிகா, அவனை ஒதுக்கிவிட்டு வாருங்கள், ஐரிஷ் வில்லேஜ் பக்கம்”

ஐரிஷ் வில்லேஜ். பப். அதற்குள் நான் போவதா? இமேஜ் என்ன ஆகும்?

“கவலைப்படாதீர்கள், உள்ளே போக வேண்டாம். அந்தப்பக்கம் வாருங்கள், அடுத்த இடம் சொல்கிறேன்”

சாயங்காலக் கூட்டத்தில் மாலில் எவனைப்பார்த்தாலும் குரலுடன் வைத்து ஒப்பிடத் தோன்றியது. இவனாக இருக்குமோ.. செயற்கை ஈச்ச மரங்கள் நியான் ஒளி பாய்ச்ச ஐரிஷ் வில்லேஜ் வாசலில் இருந்த ஆட்கள் யாரும் அவனிடம் வரவில்லை. போன்தான் அடித்தது.

“சாரி மிஸ்டர் கலீல். நீங்கள் இன்னமும் உங்கள் பாடிகார்ட் உடன்தான் இருக்கிறீர்கள். இரண்டாம் மாடிக்குத் தனியாக வந்தால் பெனெட்டன் ஷோரும் எதிரே..”

என்னை அலைக்கழிக்கிறானா இவன்? கலீலுக்குக் கோபம் ஏறியது.

“ஹலோ.. நீ எப்படி என் குகைக்கு வரமுடியாது என்று சொன்னாயோ அதே கதைதான். நான் மட்டும் எப்படி உன்னிடம் தனியாக வரமுடியும்?”

“ஃபேர் எனஃப். இதை நீங்கள் முன்பே சொல்லி இருக்கலாமே. நானும் இன்னொரு ஆளுடன் வருகிறேன். எனக்கும் சேஃப்டி வேண்டுமே.நேராக நடந்தால் மாலின் ஹோட்டல் ஸ்விட் வரும். அங்கே லாபியில் உங்களுக்காகக் காத்திருப்பேன். க்ரே கலர் டக்சிடோ”

க்ரே கலர் சூட்டுடன் அங்கே நிறையப்பேர் இல்லை. ஒரே ஒரு ஆள் நின்றான். மரியாதையான தூரத்தில் இன்னொரு ஆறரை அடி ஆசாமி கண்ணில் விரோதத்தோடு நின்றுகொண்டிருந்தான்.

கலீல் வந்ததும் வேகமாக வந்து அவன் கையைக் குலுக்கினான்.

“ஹலோ, என் பெயர் மீக், மீக் ரிப்பர்”

-தொடரும்

தோழர்

அத்தியாயம் 13

எங்கெல்ஸ் வர்த்தகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அவர் தந்தை அவரை லண்டனுக்கு அனுப்பிவைத்தார். மான்செஸ்டரில் உள்ள  எர்மென் அண்ட் எங்கெல்ஸ் என்னும் நிறுவனத்தில் இணைந்து, நெசவுத் தொழிலின் சூட்சங்களை எங்கெல்ஸ்  கற்றுக்கொள்ளவேண்டும் என்பது பிரெட்ரிக்கின் விருப்பம். ஏற்கெனவே பலமுறை முயன்று பார்த்தவர்தான் என்றாலும் மீண்டும் ஒருமுறை முயன்று பார்க்கத் துணிந்தார் பிரெட்ரிக்.

வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. எங்கெல்ஸின் நடவடிக்கைகள் அச்சமூட்டுவதாக இருந்தன. தத்துவமும் உக்கிரமான அரசியலும் பேசி வந்தவர்களிடம் எங்கெல்ஸ் நெருங்கி பழகிவந்ததைக் கண்டு பிரெட்ரிக் பயந்து போனார். இப்படிப்பட்ட சிநேகம், தன் மகனுக்கு மட்டுமல்ல குடும்பத்துக்கே பல இக்கட்டுகளை ஏற்படுத்தும் என்பது அவர் அச்சம். வணிகத்தில் எங்கெல்ஸ் கவனம் செலுத்தாதன் காரணம் இதுபோன்ற சிநேகிதர்கள் தானோ?

அரசியல் எவ்வளவு ஆபத்தான களம் என்பதை அவர் அறிவார். ஜெர்மனியில் இருக்கும்வரை எங்கெல்ஸின் அரசியல் ஆர்வம் குறையப்போவதில்லை. படிப்பது, உரையாடுவது, எழுதுவது எதுவும் குறையப்போவதில்லை. ஜெர்மனியைவிட்டு எவ்வளவு தொலைவு அனுப்பமுடியுமோ அவ்வளவு தொலைவு அனுப்பினால்தான் எங்கெல்ஸ் அரசியலை மறப்பான். எனவே, லண்டனைத் தேர்வு செய்தார் பிரெட்ரிக். ஆனால், இந்த முறையும் எங்கெல்ஸ் தன் தந்தையின் கனவைப் பொய்யாக்கினார். சாசன இயக்கத்திலும் மக்கள் போராட்டத்திலும் காட்டிய அக்கறையை அவர் வர்த்தகத்தில் காட்டவில்லை. பிரெட்ரிக்கின் எதிர்பார்ப்பை முற்றிலும் பொய்யாக்கும்படி, லண்டன் எங்கெல்ஸின் அரசியல் ஆர்வத்தை அதிகரிக்கவே செய்தது.

இந்த லண்டன் பயணம் பல வழிகளிலும் எங்கெல்ஸின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. லண்டன் செல்லும் வழியில்தான் 1842ல் முதல் முறையாக கார்ல் மார்க்ஸைச் சந்தித்தார் எங்கெல்ஸ். கொலோனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ரைன் ஜர்னலின் ஆசிரியர் என்னும் முறையில் மார்க்ஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார் எங்கெல்ஸ். இயல்பான, இன்னும் சொல்லப்போனால் மிக சாதாரணமான ஒரு நிகழ்வு அது.  பின்னர் இந்த நிகழ்வை நினைவுகூறும்போது, ‘இறுக்கமான ஒரு சந்திப்பு’ என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.

உரையாடல் ரைன் ஜர்னல் பற்றியே இருந்தது. ரைன் ஜர்னலின் நோக்கம் என்ன என்பதை மார்க்ஸ் விவரித்தார். ‘மதம் தொடர்பான கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும். நாத்திகவாதத்தைப் பிரசாரம் செய்யும் ஒரு வாகனமாக ரைன் ஜர்னல் இருக்கவேண்டும்’ என்றார் மார்க்ஸ்.  ‘அரசியல் விவாதங்களையும், செயல்பாடுகளையும்’ விவாதித்தால் நன்றாக இருக்குமே என்றார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இதை ஒப்புக்கொள்ளவில்லை. அரசியல் செயல்பாடுகளைக் காட்டிலும் மதம் முக்கியமான ஒரு துறை என்பது அவர் அபிப்பிராயம். ஆனால், எங்கெல்ஸ் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அபிப்பிராய பேதத்துடன் இந்த உரையாடல் முடிவுக்கு வந்தது.

ரைன் ஜர்னலுடனான உறவு தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இங்கிருந்தபடியே பல கட்டுரைகளை எழுதி மார்க்ஸுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் எங்கெல்ஸ். இங்கிலாந்து வந்த பிறகே எங்கெல்ஸ் ஒரு சோஷலிஸ்டாக பரிமாண வளர்ச்சி அடைந்தார் என்று குறிப்பிட்டார் லெனின். இரண்டு ஆண்டுகள் எங்கெல்ஸ் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். இந்த இரு ஆண்டுகளும் அவர் வாழ்வில் முக்கியமானவை. இங்கிலாந்து மக்களின் வாழ்நிலையை ஆராய்வதற்கும், தான் கற்ற விஷயங்களை இங்கிலாந்தோடு பொருத்திப் பார்க்கவும் எங்கெல்ஸுக்கு இங்கே வாய்ப்பு கிடைத்தது.

ஐரோப்பிய ஆதிக்கத்தின் வரலாறில் தொழில் புரட்சி ஒரு முக்கியமான அத்தியாயம்.  இதன் பலன்கள் முதலில் தென்பட்டது இங்கிலாந்தில்.  இங்கிலாந்தின் செழிப்புக்குக் காரணம் அதன் காலனிகளும் தொழில்புரட்சியின் விளைவால் ஏற்பட்ட தொழில் முன்னேற்றங்களும். குறிப்பாக நான்கு தொழில் பிரிவுகளில் இங்கிலாந்து வெற்றிகரகமாக இருந்தது.  பஞ்சு, கரி, இரும்பு மற்றும் கப்பல் கட்டுமானம்.  (பஞ்சு உற்பத்தி 1785ம் ஆண்டுக்கும் 1850ம் ஆண்டுக்கும் இடையில் 50 மடங்கு அதிகரித்தது.) இந்த நான்கைச் சுற்றி பெரும் தொழிற்சாலைகளும், வங்கிகளும் நிர்மாணிக்கப்பட்டன.  பிற ஐரோப்பிய நாடுகளும்கூட தொழில் முன்னேற்றத்தில் இங்கிலாந்தை எட்டிப்பிடிக்க முயன்றன என்றாலும் அவர்களிடம் இங்கிலாந்தடம் இருந்ததைப் போன்ற கப்பல் பலம் இல்லாததால், சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடமுடியவில்லை.  இங்கிலாந்தின் கப்பல்களையே அவர்களும் நம்பியிருக்கவேண்டியிருந்தது.  இங்கிலாந்தின் கப்பல்கள் உலகம் முழுவதும் மிதந்து சென்றன.

செழிப்பும் பலமும் கூடிக்கொண்டே போனது. இங்கிலாந்தின் உயர் வர்க்கமும் நடுத்தர வர்க்கமும் பெருகி வளர்ந்தன.  இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் பெரும் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டன.  பணம் படைத்தவர்கள் வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்தனர்.  முழுமையான தொழில் நகரமாக இங்கிலாந்து மாறியபிறகு, புதிய தொழில் முயற்சிகளுக்குப் புதிய இடங்களைத் தேடத் தொடங்கினார்கள்.  இங்கிலாந்தின் காலனி நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று அவர்கள் கவனமும் களமும் விரிந்தது.  அமெரிக்கா, இங்கிலாந்து முதலாளிகளை வரவேற்றது.  ரயில் பாதைகளும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டன.  தென் அமெரிக்காவில், குறிப்பாக அர்ஜெண்டினாவில் பெரும் தோட்டங்களை இங்கிலாந்து வாங்கியது.  கனடாவும் ஆஸ்திரேலியாவும்  இங்கிலாந்தால் வளர்ச்சிபெற்றன.  இந்தியாவை இங்கிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது.

உலகின் வர்த்தக மையமாக லண்டன் திகழ்ந்தது.  உலகுக்குக் கடன் கொடுக்கும் நாடாக இங்கிலாந்து இருந்தது.  உலகம் முழுவதும் ரயில்வே, தொழிற்சாலைகள் போன்ற துறைகளில் பெரும் முதலீடுகளை இங்கிலாந்து செய்தது.  இங்கிலாந்தின் தயாரிப்புகள் இங்கே பயன்படுத்தப்பட்டன.  உதாரணத்துக்கு, ஒரு நாட்டில் ரயில் பாதை அமைக்கப்பட்டால், அதற்குத் தேவையான இரும்பை இங்கிலாந்து அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்.  தொழில் முயற்சியை ஆரம்பித்தது இங்கிலாந்து.  அதற்காக முதலீடு செய்தது இங்கிலாந்து.  அதனால் லாபம் அடைந்ததும் இங்கிலாந்துதான்.  இங்கிலாந்தை வரவேற்ற நாடுகளுக்கு ஆதிக்கத்துடன் இணைந்த முன்னேற்றங்கள் கிடைத்தன.  தேயிலை தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் முதலீடு செய்த செல்வந்தர்கள் பெரும் லாபம் ஈட்டினர்.

பிற நாடுகளுக்கு அளித்த கடனுதவிகளை இங்கிலாந்து வட்டியுடன் திரும்பப்பெற்றுக்கொண்டது.  பணமாக அல்ல, பொருளாக.  தம்மிடம் இல்லாத பொருள்களாகப் பார்த்து இங்கிலாந்து  பெற்றுக்கொண்டது.  கோதுமை, தேயிலை, காபி, இறைச்சி, பழங்கள், வைன், பருத்தி என்று அந்தப் பட்டில் நீளும்.  19ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் செழிப்புக்கும் இந்த இறக்குமதிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.  முதலீடுகளைக் காட்டிலும் அதிக லாபத்தை இங்கிலாந்து இவ்வாறு சம்பாதித்துக்கொண்டது.  மற்றொரு பக்கம், காலனி நாடுகளில் இங்கிலாந்து செய்த முதலீடுகள் லாபம் அளிக்க ஆரம்பித்தன.  அந்த லாபத்தை மீண்டும் அங்கேயே மறுமுதலீடு செய்தது இங்கிலாந்து.  மீண்டும் லாபம்.  இந்தியாவில் ரயில்வே போன்ற துறைகளில் இங்கிலாந்து செய்த முதலீடுகள் இந்த வகையைச் சேர்ந்தது.

எனவே, வளம் கொழிக்கும் தொழில் நகரமாக இங்கிலாந்து பரவலாக அறியப்பட்டிருந்தது. பலர், அதனை சொர்க்கமாகவும் கருதி வந்தனர். இங்கிலாந்து எந்தப் பிரச்னையும் அற்ற ஒரு செழிப்பான நிலம் என்று அவர்கள் நம்பினர். சுற்றுலா பயணிகள் லண்டன் நகரில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். முன்பொருமுறை எங்கெல்ஸும் ஒரு சுற்றுலாப் பயணியாகவே லண்டன் வந்திருந்தார். லண்டனின் பளபளப்பும் அழகும்  மட்டுமே அவர் கண்களில் பட்டது.

ஆனால், இந்த முறை அவர் கண்டது வித்தியாசமான லண்டனை. இந்தக் காலகட்டத்தில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை இவை.  The English View of the Internal Crisis, The Internal Crisis, The Position of the Political Parties, The Condition of the Working Class in England, The Corn Laws. இங்கிலாந்து பற்றி பொதுப்புத்தியில் உரைந்திருந்த பல கருத்தாக்கங்களை எங்கெல்ஸ் இந்தக் கட்டுரைகள் வாயிலாகச் சிதறடித்தார்.

இங்கிலாந்தில் காணப்படும் முரண்பாடுகளை எங்கெல்ஸ் வெளிச்சம் போட்டு காட்டினார். லண்டனின் செழிப்பை அவர் கேள்விக்கு உட்படுத்தினார். இங்கிலாந்து பணக்காரர்களின் தேசம் என்னும் பிம்பத்தை எங்கெல்ஸ் துணிவுடன் கலைத்தார்.  வெளிப்பார்வைக்கு அகப்படாமல் இருந்த சாமானியர்களை எங்கெல்ஸ் தன் கட்டுரைகளில் வெளிக்கொணர்ந்தார். எளிய மக்களின் வாழ்க்கையை, அவர்களது சமூக உறவுமுறைகளை எங்கெல்ஸ் அருகிலிருந்து கண்டார். பிரஷ்யாவுக்கும் லண்டனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை உணர்ந்தார். அடித்தட்டு மக்கள் எங்கும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். அவர்கள் நிழல் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதிகம் அறியப்படாதவர்களாக, பெரும்பாலானோரால் உதாசீனம் செய்யப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், இங்கிலாந்தின் செழிப்பான மக்கள் கூட்டம். லண்டன் நகரின் சீமான்கள், சீமாட்டிகள். அவர்கள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். உணவு குறித்தும் உறைவிடம் குறித்தும் அவர்கள் சிந்திக்கவேண்டியதில்லை. ஏவல் புரிய அவர்களிடம் வேலைக்காரர்கள் இருந்தார்கள். எண்ணி மாளாத அளவுக்கு செல்வம் அவர்கள் இல்லங்களில் குவிந்திருந்தது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. அமையும் அரசு அவர்களுக்குச் சாதகமாக செயல்பட்டது.  சாசன இயக்கத்தை எதிர்ப்பவர்களாகவும் சமத்துவத்தை விரும்பாதவர்களாகவும் இவர்கள் இருந்தனர்.

இங்கிலாந்தை கவனமாகவும் சலனமற்றும் ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படத் தொடங்கும் என்றார் எங்கெல்ஸ்.  இங்கிலாந்தின் அடித்தளம் உண்மையில் பலவீனமானது. அதன் பகட்டும் செழுமையும் போலியானது, சமமற்றது. ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் தக்கையான ஓர் அடித்தளத்தில்தான் இங்கிலாந்து என்னும் பிரமாண்டமான கோட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இங்குள்ள அரசியல்வாதிகள் மக்களிடம் போலியான பிரசங்கங்களையே அளித்துக்கொண்டிருக்கிறார்கள். வளமான ஒரு எதிர்காலம் அனைவருக்கும் அமையும் என்று நம்பிக்கை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குறைபாடுகளை, குருட்டுத்தனத்தை, இயலாமையை, பாவங்களைச் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் அவற்றை ஏற்கத் தயாராக இல்லை. மக்களும் வேறு மாற்று தெரியாததால் இவர்கள் பேச்சுகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிலைமை மாறும் என்று காத்திருக்கிறார்கள்.

சாசன இயக்கத்தை இந்த அரசியல்வாதிகள் உதாசீனம் செய்வதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். அதற்கான காரணத்தையும் அவர் முன்வைத்தார். டோரிகளும் விக்குகளும் தொடர்ந்து தாங்கே ஆளுங்கட்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். சாமானியர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க அவர்களுக்கு விருப்பமில்லை. சாமானியர்களின் கையில் ஆட்சி இருப்பது தங்கள் நலனுக்கு விரோதமானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.  அரசியல் இவர்களுக்கு வாணிபம் போன்றது. போட்டி இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால், அதற்காக கவலைப்படவேண்டாம் என்றார் எங்கெல்ஸ். ‘நிலைமை மாறும். விக்குகளும் டோரிகளும் நிச்சயம் தோல்வியடைவார்கள்.’

(தொடரும்)

சு.ரா. விருது

தமிழ் இலக்கியத் தோட்டம்


தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

2011 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.

பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 12 மார்ச்சு 2011

பரிந்துரைகளை tcaward@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும்.
மேலதிக விபரங்களுக்கு – https://sites.google.com/site/tcaward/home/tamil

இருவர்

13. எர்னான் கோர்டேஸ் – ஃபிரான்சிஸ்கோ பிசாரோ


கோர்டேஸ்

ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக்கி அதன் நாகரிகத்தை அழித்த நிகழ்வுகள் உலக வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ளன. பொதுவாக இவை ஒரு பேரரசரின் சாம்ராஜ்ய கனவுகளை மெய்பிக்கவும் சர்வாதிகாரிகளின் சக்தியைப் பெருக்கவும் நடந்துள்ளன. ஆனால் சாதாரண போர் வீரர்கள் பணத்துக்காகவும் புகழுக்காகவும் பெரும் நாகரிகங்களை ஒழித்ததும் பதினாறாம் நூற்றாண்டில் நடந்துள்ளது.

பதினைந்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவுடனான ஐரோப்பிய வர்த்தகம் கான்ஸ்டாண்டினோப்பிள் ந்கரம் (தற்கால இஸ்தான்புல்) வழியாகத் தான் நடந்து கொண்டிருந்தது. 1453ல் துருக்கியர்கள் அந்த நகரைக் கைப்பற்றி வர்த்தக வழியை அடைத்து விட்டார்கள். நில வழி அடைபட்டதால் இந்தியாவுக்குப் போகும் கடல்வழியைக் கண்டுபிடிக்க முயன்றனர் ஐரோப்பியர். அப்படித் தான் 1492 இல் கொலம்பஸ் வட அமெரிக்க கண்டத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் அமெரிக்க பூர்வீக குடிகளுக்குக் கெட்ட காலம் ஆரம்பமாகி விட்டது. இந்தியாவிற்குப் போகும் வழியைத் தேடித் தான் கொலம்பஸ் அமெரிக்கா போனார். ஆனால் அமெரிக்காவின் செல்வச் செழிப்பைக் கண்டவுடன் இந்தியா மறந்து போனது. கொலம்பசுடன் வந்தவர்கள் ஐரோப்பாவிற்குத் திரும்பிப் போய் தாங்கள் கண்ட புதிய உலகைப் பற்றிய கதைகளைப் பரப்பத் தொடங்கினர். பெரும்பாலும் அக்கட்டுக் கதைகள் அனைத்தும் ஒரு விஷயத்தை மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தின – புதிய உலகத்தில் எக்கச்சக்கமாக செல்வம் இருக்கிறது; அங்கே போனால் பணக்காரனாகி விடலாம்.

அந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக ஐரோப்பிய காலனியாளர்கள் அமெரிக்காவிற்கு வரத்தொடங்கினர்.  அப்படி வந்தவர்கள் காலரா, பெரியம்மை போன்ற பல புதிய நோய்களை வட,தென் அமெரிக்க கண்டங்களுக்கு அறிமுகப்படுத்தினர். இப்புதிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் பூர்வீக குடியனர் லட்சக் கணக்கில் இறந்தனர். நோய்கள் கொல்லாமல் விட்டவர்களை ஐரோப்பியர்களின் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொன்று குவித்தன.  இந்தப் புதிய உலகத்தைக் கொள்ளையடிக்க பல ஐரோப்பிய தேசங்களிடையே கடும் போட்டி நிலவினாலும் ரேசில் ஜெயித்ததது ஸ்பானியப் பேரரசு தான். கொலம்பஸ் வந்திறங்கிய பின் ஐம்பது ஆண்டுகளுக்குள் பூர்வீக குடியினரின் பெரும் சாம்ராஜ்யங்கள் ஸ்பானியப் படைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்தன.   ஸ்பானியத் தளபதிகளின் பொன்னாசைக்கும், மூர்க்கத்திற்கும் முன்னால் அஸ்டெக், இன்கா பேரரசுகளால் சிறிது காலம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.  இப்படி அரை நூற்றாண்டுக்குள் அமெரிக்க கண்டத்தில் ஸ்பானிய ஆதிக்கத்தை நிறுவுவதற்கும் அஸ்டெக் மற்றும் இன்கா சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரு கான்கிஸ்டடார்கள் – எர்னான் கோர்ட்டேஸ் மற்றும் ஃபிரான்சிஸ்கோ பிசாரோ. கான்கிஸ்டடார் (conquistador)  என்றால் கைப்பற்றுபவர் என்று பொருள். இந்த இருவரும் சேர்ந்து எப்படி ஒரு கண்டத்தையே ஸ்பெயினுக்காகக் கைப்பற்றினார்கள் என்று இனி பார்ப்போம்.

பிஸாரோ

கோர்ட்டேஸ் குடும்பம் ஸ்பெயினில் ஒரு பிரபுக் குடும்பமாக இருந்தாலும் அவர்கள் அப்படி ஒன்றும் பணக்காரர்கள் இல்லை.  சட்டத்துறையில் கல்வி கற்ற கோர்ட்டேசுக்குப் பெரும் புகழும் பணமும் சம்பாதிக்க வேண்டுமென்று வெறி இருந்தது. குடும்பத்தார் பேச்சைக் கேட்டால் அவர்களைப் போலத் தானும் பணமில்லாதவனாக இருக்க வேண்டியது தான் என முடிவு செய்தார். அப்போது தான் அமெரிக்காவில் ஸ்பானியக் காலனிகள் உருவாகத் தொடங்கியிருந்தன.  பணம் சம்பாதிக்கவும் தங்கள் பெயரை நிலை நாட்டவும் ஸ்பானியர்கள் பலரும் புதிய காலனிகளுக்குக் கிளம்பினார்கள்.  அப்படி போய் வந்தவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு கோர்ட்டேசுக்குத் தானும் அங்கு போக வேண்டுமென்ற ஆசை எழுந்தது.  1504ம் ஆண்டு ஸ்பானியக் காலனியான ஹிஸ்போனியாலாவுக்கு (தற்கால கியூபா) போனார். அடுத்த சில ஆண்டுகளுக்கு கியூபாவை முழுவதும் கைப்பற்றும் ஸ்பானிய முயற்சியில் பங்கேற்று பெரும் புகழும் பணமும் சம்பாதித்தார்.  ஸ்பானிய ஆட்சியாளர்களிடையே நல்ல பேரும் பதவியும் அவரைத் தேடி வந்தன. ஆனால் கியூபா போன்ற ஒரு சிறிய தீவில் அவர் தனது வாழ்க்கையைக் கழிக்க விரும்பவில்லை.  சிறிய தீவிலேயே இவ்வளவு செல்வம் கிட்டியதென்றால அமெரிக்காவின் உட்பகுதியில் எவ்வளவு இருக்கும் என்று கணக்குப் போட்டார். பதினைந்து ஆண்டுகள் கியூபாவில் கழித்த பின்னர், அமெரிக்கா மீது படையெடுக்க ஆயத்தங்களைத் தொடங்கினார்.

இந்த முயற்சிக்கு கியூபாவின் ஆளுனர் விரும்பவில்லை. தற்கால மெக்சிகோ பகுதிகளைக் கைப்பற்ற பெரும் செலவாகும் என்று அவர் கருதியதால் கோர்ட்டேசுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோர்ட்டேஸ் அரசின் ஆதரவின்றி சொந்தச் செலவில் ஒரு படையினை உருவாக்கி மெக்சிகோ மீது படையெடுக்க வேண்டியதாயிற்று.  அப்போது மெக்சிகோ முழுவதும் அஸ்டெக் பேரரசால் ஆளப்பட்டு வந்தது.  அதன் தலைநகரம் தெனோசித்லானில் (தற்கால மெக்சிகோ நகரம்)  தங்கமும் வெள்ளியும் குவிந்து கிடப்பதாக கோர்ட்டேசுக்கு தகவல் கிடைத்தது.  கோர்ட்டெசின் படைகள் பலம் பொருந்தியவை அல்ல.  ஆயிரம் வீரர்கள் கூட அப்படையில் இல்லை. ஆனால் வெடிமருந்தும், அதுவரை எதிர் கொண்டிராத புதிய நோய்களும் அஸ்டெக் பேரரசை அழிக்க அவர்களுக்குத் துணையாக இருந்தன. தனது படை எவ்வளவு பலவீனமானது என்பதை கோர்ட்டேஸ் நன்கறிந்திருந்தார். இதனால் அஸ்டெக் மக்களிடையே தன் பெயரைக் கேட்டாலே அலறும்படி செய்ய, கையில் சிக்கிய அஸ்டெக் ஆட்சியாளர்களையெல்லாம் படுகொலை செய்தார். அஸ்டெக் மக்களுக்கு அடிபணிந்து வாழ்ந்து கொண்டிருந்த மற்ற பழங்குடியினரைத் தன் பக்கம் ஈர்த்தார்.  கோர்ட்டேசின் மூர்க்கமும் அவர் படையிலிருந்த புதிய வெடிமருந்து ஆயுதங்களும் அஸ்டெக் அல்லாத குடியினருக்கு, அஸ்டெக் சாம்ராஜ்யத்தை வீழ்த்த அவர் தான் சரியான ஆள் என்று காட்டிக் கொடுத்தன. அவர்கள் ஆயிரக்கணக்கில் அவரது படையில் சேர்ந்தனர்.

கோர்ட்டேசின் படையெடுப்பைச் சமாளிக்கத் தெரியாமல் திகைத்த அஸ்டெக் ஆட்சியாளர்கள் அவருடன் சமாதானமாகப் போகலாம் என்று எண்ணி அவரை டெனோசித்லானுக்கு அழைத்தனர். தலைநகரின் செல்வச் செழிப்பை நேரடியாகக் கண்ட கோர்ட்டேஸ் அதனை முற்றுகையிட்டு 1521ம் ஆண்டு கைப்பற்றினார். அஸ்டெக் அரச குலத்தவர்களையெல்லாம் படுகொலை செய்து விட்டார்.  அஸ்டெக் பேரரசு அப்படியே வீழ்ந்து மெக்சிகோ முழுவதும் கோர்ட்டெஸ் வசமானது.  ஆரம்பத்தில் இதனால் அவர் நினைத்தபடி பெரும் புகழும் பணமும் கிடைத்தன. ஸ்பானியப் பேரரசர் அவருக்கு பல பட்டங்களையும் நிலங்களையும் அளித்து கெளரவித்தார். ஆனால் இந்த நிலை நீடிக்கவில்லை. அஸ்டெக் சாம்ராஜியத்தில் அரசியல் செய்தவருக்கு உள்ளூர் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அவரது அரசியல் விரோதிகள் அவரை ஓரம் கட்டி விட்டனர். இழந்த புகழைப் பெற அவர் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து இறுதியில் கடனாளியாகத் தான் இறந்தார்.

அஸ்டெக் பேரரசுக்கு கோர்ட்டேஸ் போல தென் அமெரிக்காவின் இன்கா பேரரசுக்கு வாய்த்தவர் ஃபெர்னாண்டோ பிசாரோ.  இவரும் கோர்ட்டெசைப் போலவே ஒரு சுமாரான குடும்பத்தில் பிறந்து பொருள் ஈட்டுவதற்காக அமெரிக்காவுக்கு வந்தார். கோர்ட்டேஸ் மத்திய அமெரிக்காவைக் குறி வைத்தது போல பிசாரோ தென் அமெரிக்காவைக் குறிவைத்தார்.  1520களில் தென் அமெரிக்காவின் பெரும் பகுதிகளை ஆட்சி புரிந்து வந்த இன்கா பேரரசு பற்றிய செய்திகள் ஸ்பானிய காலனியாளர்களை எட்டின. பல நூற்றாண்டுகளாகப் பெரும் பிரதேசங்களை ஆண்டு வந்த இன்கா வம்சத்தினர் சுற்றியுள்ள சிற்றரசுகளை அடக்கி, தட்டிக் கேட்க ஆளில்லாமல்  ஆண்டு வந்ததால் அதன் கஜானாக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. இந்த செழிப்பு தான் அதற்கு வினையாகிப் போனது.  கோர்ட்டேசுக்கு மெக்சிகோவில் கிடைத்த வெற்றி பிற ஸ்பானிய கான்கிஸ்டடோர்களை உசுப்பி விட்டது.  எங்கே தங்கம்? எங்கே தங்கம்? என்ற தவிப்புடன் அமெரிக்கா வந்திறங்கியிருந்த ஸ்பானியத் தளபதிகளுக்கு இன்கா பேரரசில் தங்கத்தால் செய்த நகரங்கள் (el dorado) உள்ளன போன்ற வதந்திகள் மேலும் வெறியூட்டின.  பிசாரோவும் தனது சகாக்களுடன் 1520களில் மூன்று முறை  தெற்கு நோக்கிப் படையெடுத்தார்.  நோய்கள், அடர்ந்த காடுகள், எதிர்த்துச் சண்டையிடும் உள்ளூர் குடிகள் என பல இன்னல்களை மீறி இன்கா பேரரசினை அடைந்தார்.

இன்கா பேரரசிற்குப் பெரும் படைகளிலிருந்தன. பிசாராவிடமோ நூற்றுக்கும் குறைவான வீரர்கள். எனவே நேரடியாக மோதாமல், தந்திரமாக ஒரு காரியம் செய்தார் பிசாரோ. இன்கா பேரரசர் அடாஹுல்போவைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்.  அடாஹூல்போ தன்னை விடுவித்தால் ஒரு அறை முழுக்கத் தங்கமும் அது போல இரு மடங்கு வெள்ளியும் தருவதாக பேரம் பேசினார். சுமார் இருபதுக்கு பதினைந்தடி நீள அகலமும் எட்டடி உயரமும் கொண்ட ஒரு அறையைக் கற்பனை செய்து பாருங்கள். ஆம் அது முழுவதும் தங்கம்! அது போல இரு மடங்கு வெள்ளி!! குறைந்த பட்சம் 24 டன் தங்கமாவது இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இவையனைத்தும் ஒரு நாள் கொள்ளையில் பிசாரோ சம்பாதித்தவை. தங்கத்தை வாங்கிக் கொண்டு மன்னரை விட்டாரா என்றால் அதுவும் இல்லை. போட்டுத் தள்ளி விட்டார். அடாஹூல்போ இறந்ததால் இன்கா பேரரசில் பெரும் அரசியல் குழப்பம் உருவானது.  இன்கா மக்களை ஸ்பானியர்களுக்கு எதிராகத் திரட்ட சரியான தலைவரில்லாமல் போனதால், பிசாரோவின் ஆட்கள் மொத்தப் பேரரசையும் சுருட்டி தங்கள் கையில் போட்டுக் கொண்டனர். இன்கா பேரரசு ஸ்பெயினின் ஒரு மாகாணமாகி விட்டது. பிசாரோ அதன் ஆளுனராகிவிட்டார். ஆனால் கோர்ட்டேசைப் போலவே அவராலும் அவரது புகழையும் பணத்தையும் அனுபவிக்க முடியவில்லை.  இன்கா பேரரசு வீழ்ந்து சிறிது வருடங்களிலேயே, பிசாரோவுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தகராறு ஏற்பட்டு அதில் பிசாரோ கொலை செய்யப்ப்ட்டார்.

புதிய கண்டத்தில் ஒரு பேரரசை நிறுவ ஸ்பெயின் முதலில் முயலவிலை. கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போவது தான் அவர்களின் முதல் குறிக்கோளாக இருந்தது. ஆனால் பிசாரோ மற்றும் கோர்ட்டேசின் செயல்களால் நிதானமாக ஆட்சி புரிந்து திட்டமிட்டு கொள்ளையடிக்கும் வாய்ப்பு ஸ்பெயினுக்கு கிட்டியது. பிசாராவுக்கும் கோர்ட்டேசுக்கும் கையில் சிக்கிய தங்கத்தைப் போல  பல லட்சம் ஆயிரம் மடங்கு அதிக செல்வங்கள் அடுத்த சில நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலிருந்து கொள்ளை போயின.  அஸ்டெக், இன்கா என்ற இரு பெரும் நாகரிகங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. சில நூற்றாண்டுகளில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவைச் சுத்தமாகத் துடைத்து எடுத்து விட்டனர் ஸ்பானியர்கள்.

தங்கம், வெள்ளி மட்டுமல்ல விலைமதிப்பற்ற கற்கள், வாசனை திரவியங்கள், பட்டு ஆடைகள், புகையிலை, சர்க்கரை என கிடைத்த எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.  அமெரிக்க அரசுகளின் கஜானாக்கள் காலியான பின்னர் ஸ்பானியப் பேரரசு அமெரிக்க அடிமைகளைக் கொண்டு தங்கம், வெள்ளி சுரங்கங்களை இயக்க ஆரம்பித்தது.  இதனால் பிசாரோவுக்கும் கோர்ட்டேசுக்கும் கிடைக்காத தங்க வெள்ளி மலைகள் அவர்களுக்குப் பின் வந்த காலனியாளர்களுக்குக் கிடை­த்தன. இந்தக் கொள்ளை சில நாட்களிலோ, சில ஆண்டுகளிலோ முடிந்து விடவில்லை, சில நூறு ஆண்டுகள் நீடித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளிடம் இருந்து விடுதலை கிடைத்தது. ஆயினும் இந்த கட்டுக்கடங்காத கொள்ளை மற்றும் காலனியாதிக்கத்தின் பின் விளைவுகள் இன்றளவும் மத்திய, தென் அமெரிக்க நாடுகளைக் கடுமையாகப் பீடித்துள்ளன.

நிழலின் தலை

ரங்கநாதன் பரம ஏழை. ஆனால் நிறையச் சம்பாதிக்கவேண்டும், வசதியாக வாழவேண்டும் என்கிற ஆசைமட்டும் நிறைய உண்டு!

அதற்காக, அவர் ஒரு ஜென் மாஸ்டரைத் தேடிச் சென்றார். ‘எனக்கு ஒரு பெரிய புதையல் கிடைக்கவேண்டும் என்று ஆசிர்வதியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

‘ஆசிர்வாதமெல்லாம் எதற்கு? நிஜமாகவே உனக்கு ஒரு பெரிய புதையல் கிடைக்கச் செய்கிறேன்’ என்றார் அவர். ‘நாளை காலை எட்டு மணிக்கு இதே இடத்துக்கு வா!’

ரங்கநாதன் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். மறுநாள் காலை டாணென்று 7:55க்கு அவர் அங்கே இருந்தார்.

ஜென் மாஸ்டர் ரங்கநாதனை வரவேற்றார். ‘உங்களுடைய நிழல் உங்களுக்குத் தெரிகிறதா?’

‘ஓ, நன்றாகத் தெரிகிறது சுவாமி!’

‘அந்த நிழலின் தலைப்பகுதி உள்ள இடத்தில்தான் புதையல் இருக்கிறது. அங்கே தோண்டத் தொடங்குங்கள்.’

‘நன்றி சுவாமி!’ ரங்கநாதன் பரபரவென்று நிழலின் தலையை நோக்கி ஓடினார். இப்போது அது இன்னும் தொலைவுக்குச் சென்றது. ‘இதென்ன கலாட்டா?’ என்று விழித்தார்.

‘விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். புதையல் கிடைக்கும்’ என்றார் அந்த ஜென் மாஸ்டர். தன்னுடைய குடிலுக்குள் சென்று தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

ரங்கநாதன் தொடர்ந்து ஓடினார். ஆனால் நிழல் மேலும் மேலும் அதிகத் தூரம் சென்றது. அவரால் தன்னுடைய நிழலின் தலையைப் பிடிக்கவே முடியவில்லை.

மணி 10 ஆனது, பத்தரை, பதினொன்று, பதினொன்றரை, நேரம் நண்பகலை எட்டிக்கொண்டிருந்தது.

இப்போது ரங்கநாதனின் நிழல் வெகுவாகச் சுருங்கியிருந்தது. ஆனால் அப்போதும் அவரால் அதன் தலையைப் பிடிக்கமுடியவில்லை. எத்தனை வேகமாக ஓடினாலும் பலன் இல்லை.

சரியாக நண்பகல் பன்னிரண்டு மணிக்குச் சூரியன் உச்சிக்குச் சென்றான். ரங்கநாதனின் நிழல் அவருக்குள் அடங்கிவிட்டது.

ரங்கநாதன் புரிந்துகொண்டார். ‘புதையல் எனக்குள் இருக்கிறது. அதை வெளியில் தேடிப் பிரயோஜனம் இல்லை!’

சாத்தானின் வக்கீல்

அத்தியாயம் 18

கரன் தாப்பர்

ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய பேட்டிகள்தான். மனுஷர் நிஜமாகவே எதிராளியைக் கேள்விகளால் வறுத்தெடுப்பதில் சாத்தானின் வக்கீல்தான்! நான், யாரை பேட்டி காணப்போனாலும் முன்னதாகவே உட்கார்ந்து அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டும் என்று ஹோம் ஒர்க் செய்து தயாராகப் போகிறேன் என்றால், அதன் அவசியத்தை எனக்கு உணர்த்தியவர் கரன் தாபர்தான்.

அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் முக்கியஸ்தர், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஏதாவது சொல்லிவிட்டால், உடனே இவர், “இல்லையே! இதைப் பற்றி இன்ன தேதியில் நீங்கள் இப்படித்தானே சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இப்போது அதை மாற்றிச் சொல்லுகிறீர்களே?” என்று கொக்கி போடுவார். அதைச் சமாளிக்க முடியாமல் பிரபலங்கள் திணறும் காட்சி கரன் தாபரின் டீ.வி. ஷோவில் சகஜம். இதன் காரணமாக பாதியில் பேட்டியை நிறுத்திக்கொண்டவர்களும் உண்டு.

ஒரு பத்திரிகையாளராக அவரது நிகழ்ச்சியை ரசித்த எனக்கு, அவரையே பேட்டி காண வாய்ப்பு ஒரு சமயம் கிடைத்தது. அதற்கு வழி செய்தவர் ஜெயலலிதா.

கரன் தாபர் 2004ல், பி.பி.சி. யில் ஒளிபரப்பாகி வந்த தன் ‘ஹார்ட் டாக்” (இன்றைய டெவில்ஸ் அட்வகேட்டின் முந்தைய பிறவி) நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்து தலைமைச் செயலகத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பேட்டி கண்டார்.

அதுதான் அவருக்கு ஜெயலலிதாவுடனான முதல் பேட்டி. ஆனால் அவருக்கு ஜெயலலிதா கொடுத்தது, இரண்டாவது அப்பாயின்மென்ட். இதென்ன கலாட்டா என்கிறீர்களா? ஜெயலலிதா இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆனவுடன், கரன் தாபர் அவரை பேட்டி காண விரும்பியபோது, அவரும் சில மாதங்கள் காத்திருக்கச்செய்து, அதன் பிறகு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக, பேட்டிக்கு ஒரு வாரம் முன்பாக, உச்ச நீதி மன்ற ஆணைப்படி அவர் பதவி விலகும்படி ஆனது. எனவே அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. அவர் மறுபடியும் முதல்வரானதிலிருந்து விடாமல் முயற்சி செய்ததன் பலனாக இரண்டாவது தடவையாக பேட்டிக்கு ஒப்புக்கொண்டார் ஜெ. ஆனால், அந்த பேட்டியின்போது, “உங்களோடு உரையாடியதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கரன் தாபர் சொல்ல, “எனக்கு உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி இல்லை” என்று வெடுக்கென்று சொன்னார் ஜெ. அந்தப் பரபரப்பான பேட்டியை நான் ரொம்பவும் ரசித்தேன்.

பேட்டி ஒளிபரப்பான கையோடு, ஜெயலலைதாவை பேட்டி கண்ட அனுபவம் குறித்து கரன் தாபரை பேட்டி காண விரும்பினேன். ஹிந்து ராமுக்கு போன் செய்து, கரன் தாபரது டெல்லி டெலிபோன் நெம்பரை வாங்கி அவருக்கு போன் செய்தால் மனுஷர் போனை எடுக்கவில்லை. அதன் பிறகு அவரே கூப்பிட்டு விசாரித்தார். விஷயத்தைச் சொன்னதும் பகல் ஒரு மணிக்கு நேரம் கொடுத்தார்.

போனிலேயே அவரை பேட்டி கண்டேன். முதல் கேள்வியே, “இந்த பேட்டிக்கு உங்களை எப்படித் தயார் செய்துகொண்டீர்கள்?” என்பதுதான். “நான் டெல்லியில் வசித்தாலும், தினமும் ஹிந்து படிக்கிற பழக்கம் உண்டு. எனவே தமிழ் நாட்டு அரசியல் நிலவரத்தை நன்றாகவே அறிவேன். தவிர, எங்கள் ஆய்வுக் குழுவினர் ஜெயலலிதாவின் பேட்டிகள், அவரை விமர்சித்து எழுதப்பட்ட தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் படித்து ஏரளமான தகவல்களைத் திரட்டினார்கள். அவை அனைத்தையும் அடிப்படையாக வைத்து நான் கேள்விகளைத் தயார் செய்தேன்” என்றார்.

ஜெயலலிதாவின் பேட்டி தலைமைச் செயலகத்தில்தான் படம் பிடிக்கப்பட்டது. அதுவும் ஜெயலலிதாவின் தேர்வுதான். 2004, செப்டம்பர் 15ஆம் தேதி, கோட்டையில் உள்ள பத்தாவது மாடியில் இருக்கும் கான்ஃபிரன்ஸ் ஹாலில்அவருக்கு ராசியான பச்சை பின்னணியில் ஒரு சிறு வட்டமான மேஜை போடப்பட்டு, அதில் எதிரெதிரே ஜெவும், கரன் தாபரும் அமர அந்த சுறு சுறு பேட்டியின் ஷூட்டிங் நடந்தது. 23 நிமிடம் பேட்டி ஒளிப்பதிவானது. ஒளிப்பதிவு முடிந்தவுடன் எழுந்து சென்றுவிட்டார். எதையும் வெட்டாமல் ஒளிப்பதிவு செய்த பேட்டி அப்படியே ஒளிபரப்பானது.

“அவரை மடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நீங்கள் டெல்லியிலிருந்து புறப்பட்டு வந்தீர்களா மிஸ்டர் தாபர்?” என்று கேட்டவுடன் ஒரு மைல்டு சிரிப்பு சிரித்துவிட்டு, “ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியும் இல்லை. அஇஅதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயளாரும் இல்லை. பி.பி.சி.யில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியின் பேட்டியாளர். நிகழ்ச்சியின் பெயரே “ஹார்டு டாக்” மக்கள் மனதில் நினைக்கிற விஷயங்களை, கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்பதுதான் என் கடமை. எனவே அத்தகைய கேள்விகளைக் கேட்பதுதான் என்னுடைய நோக்கமே தவிர அவரை மடக்க வேண்டும் என்பதல்ல” என்றார்.

“இந்தப் பேட்டிக்கு நான் ஒப்புக்கொண்டிருக்கக் கூடாது” என்று பேட்டியின்போது ஜெ குறிப்பிட்டது குறித்து கரன் தாபரது கமென்ட் இதுதான்: “பேட்டிக்கு ஒருவர் ஒப்புக்கொள்வதும், ஒப்புக்கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அதே போல பேட்டி அளிக்கும்போதும், விரும்பாத கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதும் அவரது உரிமை. அது பற்றி நான் விமர்சனம் செய்யக் கூடாது”. மற்றபடி ஜெயலலிதா என்ற அரசியல்வாதியைப் பற்றி அவரது கருத்து: ” அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. சில விஷயங்களில் அவர் என்னை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.”

“இன்னொரு தடவை நீங்கள் பேட்டிக்கு நேரம் கேட்டால், அவர் சம்மதிப்பார் என நினைக்கிறீர்களா?” என்று கரன் தாபரது வாயைக் கிண்டும் விதமாக கேட்டபோது, வழக்கமாக பேட்டி காண்கிறபோது இருக்குமே அதுமாதிரி தன் முகத்தை படு சீரியசாக வைத்துக் கொண்டு ” எனக்குத் தெரியாது; அது அவருடைய உரிமை” என்றார்.

இந்த பேட்டியைத் தொடர்ந்து தாபரது அலுவலகத்தில் மீடியா தொடர்பினை கவனித்து வந்த ஆராவமுதன் என்பவரது நட்பு கிடைத்தது. அவரிடம் அடுத்த முறை கரன் தாபர் சென்னை வரும்போது நேரில் சந்தித்து பேட்டி காண விரும்புகிறேன் என்று சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு 2006 கடைசியில் தாபர், வைகோவை பேட்டி காண சென்னை வந்தபோது தகவல் சொன்னார். இந்த முறை தாபர் பேட்டி கண்டது சி என் என் – ஐ. பி. என் சேனலின் ‘டெவில்ஸ் அட்வகேட்’ நிகழ்ச்சிக்காக. பகல் 12 மணி வாக்கில் தாபருக்கு போன் செய்து, எங்கே சந்திப்பது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி எனக்கு ஆரவமுதனிடமிருந்து தகவல். அதற்குள் கரன் தாபரது கேள்விகளால் கடுப்பாகிப் போன வைகோ பாதியில் வாக் அவுட் செய்ய, தாபர் அவரை சமாதனப்படுத்தி, மீண்டும் பேச வைத்ததாக எனக்கு டெல்லியிலிருந்து ஆராவமுதன் அப்டேட் கொடுத்தார். கரன் தாபருக்கு போன் செய்தபோது, என்னை நேரே ஏர் போர்ட்டுக்கு வரச்சொல்லிவிட்டார்.

டெல்லிக்கு விமானம் ஏறுவதற்கு முன் கரன் தாபர், சென்னை விமான நிலையத்தில் என்னுடன் 20 நிமிடங்கள் பேசினார். மற்ற அரசியல் கட்சிகளைப் போல இல்லாமல் வைகோவின் பகிரங்கமான தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைபாடும், அடிக்கடி கூட்டணி மாறி, ஒரு சந்தர்ப்பவாதி என்ற விமர்சனத்துக்கு அவர் உள்ளாகி இருந்ததும்தான் கரன் தாபர் வைகோவை பேட்டி காண்டதற்கான அடிப்படைக் காரணங்கள். வைகோ பொடா சட்டத்தின்படி சிறை வைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியான போது ஒரு முறையும், அதனையடுத்து அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டபோது ஒரு முறையும் கரன் தாபர் வைகோ பேட்டிக்கு முயற்சி செய்தாலும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தன் முயற்சியில் தளராத விக்ரமாதித்தனாய் கரன் தாபர் முயன்று கடைசியாக வெற்றி கண்டுவிட்டார்.

பேட்டியின்போது, “விடுதலைப் புலிகள் அரசியல் தலைவர்களை குறிவைத்துத் தாக்கி அழிப்பது தவிர்க்க முடியாதது. விடுதலைப் போராட்டத்தில் இது சகஜமான ஒன்று” என வைகோ கூறியபோது, கரன் தாபர் இடை மறித்து “இந்த வாதம் ராஜிவ் படுகொலைக்கும் பொருந்துமா?” என்று மடக்கியதும், வைகோ மூடு அவுட் ஆகிவிட்டார். “சரி! அந்தக் கேள்வி ஒளிபரப்பாகாது என சொல்லி சமாதானப்படுத்தின பிறகு பேட்டி தொடர்ந்ததாம். அடுத்து, கூட்டணி மாறும் சந்தர்ப்பவாதம் பற்றின கேள்விக்கும் அவர் மூடு அவுட்டாம்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், பேட்டியின்போது வைகோ ரொம்ப கடுப்படைந்தாலும், மறுநாள் கரன் தாபர் பேட்டிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுத, வைகோ தாபருக்கு போன் செய்து, ” வருத்தம் தெரிவித்ததுடன், அடுத்த முறை முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியதுடன், நம் நட்பு தொடரட்டும்” என்றும் சொன்னாராம்.

கரன் தாபரிடம் எனது வழக்கமான, “பேட்டி கண்டவர்களில் மறக்க முடியாதவர் யார்?” என்று கேட்டேன். “ஜெனரல் முஷாரஃப், ராம் ஜெத் மலானி, ராகுல் பஜாஜ், ஜெயலலிதா என பெரிய பட்டியலே சொல்லலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மறக்க முடியாதவர்கள். பேட்டியின்போது ராம் ஜெத்மலானி ரொம்ப ஆவேசமாகப் பேசினாலும், பேட்டி முடிந்ததும், ரொம்ப கூலாக, ” வாங்க! விஸ்கி சாப்பிடலாம்” என அழைத்தது வித்தியாசமானது. அரசியல்வாதிகள் என்றாலே பலர் வெறுப்புடன் பார்த்தாலும், அவர்களிடமும் பாராட்டத்தக்க, ரசிக்கத்தக்க அம்சங்கள் உண்டு. தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதாவை பேட்டி கண்டபோது என்ன ஆச்சு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரை ஒரு முறை டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தின்போது சந்தித்தபோது, சிரித்தபடி இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம் ” என்றார்.

கரன் தாபரது பேட்டிகளைத் தொகுத்து புத்தகமாகவோ, டிவிடியாகவோ வெளியிட்டால் நான் அவற்றை வாங்க ஆர்வமாக இருக்கிறேன். வருங்கால பத்திரிகையாளர்களுக்குக் கூட அது ரொம்ப உபயோகமாக இருக்கும்.