கேமரா கச்சேரி

அகிரா

டிசம்பர் சீஸன் கச்சேரி கேட்க மட்டுமின்றி, பல வித்தியாசமான ஆளுமைகளை சந்திக்கும் களமாகவும் விளங்குகிறது.

நீங்கள் கச்சேரிக்குச் செல்பவரென்றால் அகிரா இயோவை (Akira Io) நிச்சயம் பார்த்திருப்பீர்கள். சிரிக்கும் கண்களை உடைய ஜப்பானியர். கிட்டத்தட்ட நாட்டிய முத்திரை போலக் கைகளை வைத்துக் கொண்டு தாளம் போடுவதையும் நீங்கள் கண்டு களிக்கக் கூடும். அப்படித் தாளம் போடாத நேரத்தில் அவர் கைகள் காமிராவுடன் உறவாடிக் கொண்டு இருக்கும்.

பல நாட்களாகவே இவருடன் பேச வேண்டும் என்றிருந்த ஆசை நேற்றுதான் நிறைவேறியது.

“நான் ஒரு ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபர். ஆனால் முறையாக நான் போட்டோகிராபி படிக்கவில்லை. நான் டோகியோவில், வஸெடா (Waseda) பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். 1996-ல் எக்ஸ்சேஞ்ச் ஸ்டூடண்டாக ரஷ்யா சென்றேன். ஜப்பான் திரும்பி ‘freelance Russian interpretor’ ஆனேன்”, எனும் அகிரா,   “என் நண்பர்கள் பலர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாயிருந்தனர். 1994-ல் இருந்து எனக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. அவர்கள் கொடுத்த ஊக்கம் என்னை ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபராகவும் ஆக்கியது. 1999-ல் பேங்காகில் நடந்த சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் என் படமும் தேர்வாகி அதற்கு பரிசும் கிடைத்தது. அதன் பின் ஒரு ஜப்பானிய இணையப் பத்திரிகை எனக்கு ‘escape’ என்ற பெயரில் ஒரு Photo Column வழங்கியது.”, என்கிறார்.

சென்னைக்கு முதன் முதலில் வந்ததை நினைவு கூறும் அகிரா, “2001-ல் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வந்தேன். முதன் முறை வட இந்தியாவை மட்டும் பார்த்திருந்ததால், இம் முறை தென்னிந்தியா வந்தேன். நான் வந்த நேரத்தில் சென்னையில் மார்கழி இசை விழா நடந்து கொண்டிருந்தது. ஜப்பானில் ஹிந்துஸ்தானி இசையுடன் இருக்கும் பரிச்சயம் தென்னிந்திய இசைக்குக் கிடையாது. வித்தியாசமான அனுபவம் என்பதால் கச்சேரி சென்று கேட்க நினைத்தேன். நான் கேட்ட முதல் கச்சேரி ம்யூசிக் அகாடமியில் மதுரை டி.என்.சேஷகோபாலனுடையது. எம்.சந்திரசேகரன், குருவாயூர் துரை மற்றும் ஹரிசங்கர் உடன் வாசித்த கச்சேரி அது.” என்கிறார்.

மணக்கால் ரங்கராஜன்

“எனக்கு அப்போது கர்நாடக இசை பற்றி ஒன்றுமே தெரியாத போதும் அந்த அனுபவம் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தியது. ஸ்டேஜ் டிக்கெட் வாங்கியிருந்ததால், மேடையில் கலைஞர்களை வெகு அருகில் இருந்து பார்க்கும் அனுபவமும் கிட்டியது. குறிப்பாக குருவாயூர் துரையும், ஹரிசங்கரும் வாசித்த தனி ஆவர்த்தனம் என்னை இசையின்பால் இழுத்தது. அதே வருடம் திருவையாறு தியாகராஜர் உற்சவத்திலும் கலந்து கொண்டேன். இவ்வளவு பேர் ஒன்றாகக் கூடிப் பாடுவதையும் கேட்பதையும் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. அதன் பின் வருடா வருடம் வந்து இசையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். 2005 வரை நான் வந்ததெல்லாம் பாட்டைக் கேட்டு ரசிக்க மட்டுமே.” என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

கர்நாடக இசை பற்றி அறிமுகம் இல்லாத போதும், எந்த விஷயம் அவரைக் கவர்ந்தது என்று கேட்டதற்கு, “ஜப்பானில் பாரம்பரிய இசை உண்டென்ற போதும், அங்குள்ள ரசிகர்கள் கர்நாடக சங்கீத ரசிகர்களைப் போல ஆழ்ந்து ரசிப்பதில்லை. முதன் முதலில் எஸ்.என் ம்யூசிகல்ஸில் ‘ரசிகா டயரியை’ பார்த்த போது ஆச்சர்யப்பட்டு போனேன். கச்சேரியில் பார்த்தால், பல ரசிகர்கள் கிருதி, ராகம், தாளம், வாக்கேயக்காரர் பெயர் என்று குறிப்பெடுத்துக் கொள்வதைக் காண முடிந்தது. பாட ஆரம்பித்த சில நொடிகளுக்குள் ராகத்தை கண்டுபிடித்துவிடும் ரசிகர்கள் என்னை ஆச்சர்யப்படுத்தினர். ஒவ்வொரு கச்சேரியிலும், மேடையில் நடப்பதைக் கேட்பவர்கள் நன்கு உணர்ந்து ரசிப்பது என்னை மிகவும் கவர்ந்தது. மேடையில் பாடுபவர்களும் சரி, அரங்கில் அமர்ந்திருப்பவர்களும் சரி, கச்சேரியின் போது ஒருவித பரவச நிலையை (trance) அடைவதை என்னால் உணர முடிந்தது. ஜப்பானுக்கு இந்த இசையையும், இது தொடர்பான விஷயங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் என் படங்களில் ‘தீம்’ ஆக கர்நாடக இசையைத் தேர்வு செய்தேன்.” என்கிறார்.

“காலப் போக்கில், இசையைப் பற்றி மட்டுமின்றி, சபாக்கள், நிகழ்ச்சி வடிவமைப்பு, வாத்தியங்கள், அவற்றைச் செய்யும் முறைகள், பாடகர்கள் பயிற்சி செய்யும் முறைகள், கச்சேரியை நிர்வகித்தல் என்று முழுமையாக கர்நாடக சங்கீதத்தை ஒரு ‘Photo Book’-ஆக வெளியிட்டு ஜப்பானுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அந்தத் திட்டத்துக்கு ‘Focus Carnatica’ என்று பெயரிட்டேன்.” என்றார் காபியை அருந்திய படி.

இந்தத் திட்டத்தை செயலாக்க நிறைய செலவாகி இருக்குமே, உங்களுக்கு ஸ்பான்ஸர்கள் உண்டா என்று கேட்டதற்கு, “நான் சென்ற

ஆர்.கே. ஸ்ரீகண்டன்

கச்சேரிகள் பலவற்றில் ஸ்பான்ஸராக நல்லியின் பெயரைக் கண்டேன். ஒரு முறை ஸ்ரீ பார்த்தசாரதி சாமி சபாவில் அருணா சாய்ராம் கச்சேரிக்கு நான் படமெடுக்கப் போயிருந்தேன். அன்று நல்லியும் வந்திருந்தார். என்னைக் கண்டததும், கூப்பிட்டு விசாரித்து அவரது விசிடிங் கார்டை அளித்து விட்டுப் போனார். என் திட்டம் மனத்துக்குள் உருவானதும், அவற்றைச் செயலாக்க நிச்சயம் ஸ்பான்ஸர் தேவை என்று தோன்றியது. உடனே நான் எடுத்த படங்கள் சிலவற்றை ஒரு நூல் போல அச்சடித்து, நல்லிக்கு ஜப்பானிலிருந்து அனுப்பி வைத்தேன். அதன் பின், நேரிலும் சென்று அவரைச் சந்தித்து என் திட்டத்தை விளக்கினேன். நல்லியும் என் திட்டத்தை ஆமோதித்ததும், 2008-ல் முழு ஆண்டும் இந்தியாவிலேயே தங்கிப் படமெடுத்தேன். டிசம்பரில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் கர்நாடக சங்கீதம் சென்னையில் எப்படி நடக்கிறது என்று படம் பிடிக்க அது உதவியாய் இருந்தது.”

2008-ல் இருந்து விசாவுக்காக மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஜப்பான் சென்று இரண்டு மாதங்கள் தங்கி வரும் அகிரா, இப்போது ஆழ்வார்பேட்டையில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். 2011-ல் ஜூன் மாதத்துக்குள் தன் கனவு பிராஜக்ட் நிறைவேறிவிடும் என்கிறார்.

“நீங்கள் சொல்வது போன்ற புத்தகம் ஜப்பானுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு – குறிப்பாகச் சென்னைக்கு மிக அவசியம் என்றுதான் தோன்றுகிறது”, என்றதற்கு, “என் திட்டத்தைச் செயலாக்கும் முன் இது போன்ற புத்தகங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒரு புத்தகத்தை நீ செய்தால்தான் உண்டு என்று பலர் கூறினர். இந்தியாவில் வரும் வெளிநாட்டவர் திரும்ப எடுத்துச் செல்லும் நல்ல Souvenir-ஆகவும் இந்தப் புத்தகம் அமையும் என்று நினைக்கிறேன். ஸ்ருதி ஆசிரியர் ராம் நாராயணுடன் சேர்ந்து இந்தப் புத்தகத்தை இந்தியாவிலும் வெளியிடும் திட்டம் இருக்கிறது.”, என்று அடுத்த கேள்விக்கு வசதியாய் லீட் கொடுத்தார்.

“ஸ்ருதி இதழில் உங்கள் பெயரும் புகைப்படக் கலைஞராக இடம் பெருகிறதே! அவ்விதழுடன் அறிமுகம் எப்படி கிடைக்கதது?”, என்றதற்கு, “டகாகோ இனொவுவே (Takako Inoue) என்ற ஜப்பான் நாட்டு இசை பேராசிரியருக்கு கர்நாடக சங்கீதத்தில் நிறைய ஆர்வம் உண்டு. அவருக்கு ஸ்ருதியில் எழுதும் மன்னா ஸ்ரீநிவாஸன், ஆசிரியர் குழுவில் இருக்கும் ஜானகி போன்றோர் நல்ல நண்பர்கள். அவர் கூறியதன் பேரில், சில படங்களுடன் ஸ்ருதி அலுவலகம் சென்றேன். அதன் பின் அவ்வப்போது என் படங்களும் அந்த இதழில் வந்து கொண்டிருக்கின்றன.”, என்கிறார்.

அகிரா இசை உலகின் கணங்களை பதிய வைக்க Canon EOS 5D கேமிராவை உபயோகிக்கிறார். இயற்கை வெளிச்சத்தில் ஃப்ளாஷ் உதவியின்றிப் படம் எடுப்பதையே விரும்புகிறார்.

வேதவல்லி

அவர் எடுத்ததில் அவருக்குப் பிடித்த படங்களைப் பற்றி கேட்டதற்கு, ரொம்ப நேரம் யோசித்த பின், “எதைச் சொல்வதென்று தெரியவில்லை! ஆர்.கே.ஸ்ரீகண்டன், வேதவல்லி போன்ற சீனியர் வித்வான்களை படமெடுத்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். 91 வயதில் ஸ்ரீகண்டன் ஸார் கணீரென்று பாடுவது பெரிய அதிசயம் என்கிறார் கண்கள் விரிய.

கச்சேரிகளில் படம் எடுப்பதோடன்றி, தேர்ந்த ரசிகர் போலத் தாளம் போட்டு ரசிப்பதையும் பார்க்க முடிகிறது. இது எப்படிச் சாத்தியமானது?, என்ற கேள்விக்கு, “இங்கிருந்தபோது கற்றுக் கொண்டதுதான். இப்போது மோகனம், ஹம்ஸத்வனி போன்ற எளிய ராகங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. ‘நினுவினா’, ‘ஸோபில்லு’ போன்ற கிருதிகள் வாசிக்கப்படும் போது அடையாளம் காண முடிகிறது. தாளம் போடவும் ரசிகர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்”, என்று சற்று வெட்கத்துடன் சிரிக்கிறார்.

”போட்டோ புத்தகம் வெளியான பின்?”, என்றதற்கு, “ஜப்பானில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இந்தியாவுக்கு ஜப்பானியர்கள் வரும் வகையில் ‘Carnatic music tours’ இயக்க வேண்டும். கர்நாடக சங்கீதத்துக்கு என்னால் ஆனதை செய்ய வேண்டும்”, என்றார்.

அடுத்த கச்சேரிக்கு நேரமாகிவிட, “Of course we will run into each other quite often. Let us catch up then”, என்றபடி அரங்கிற்குள் நுழைந்தார் அகிரா.

[கட்டுரையில் இடம்பெற்ற படங்கள், அகிரா எடுத்தவை. அகிராவின் படம், ராம்பிரசாத் எடுத்தது.]

ஆழி பெரிது!

8. அக்னி : ஆதி நீருக்குள் வசிக்கும் அக நெருப்பு

சோமத்தைப் போலவே முக்கியத்துவம் கொண்ட மற்றொரு வேத தெய்வம் அக்னி. அக்னிக்கும் சோமத்துக்குமான ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. மனித குலத்துக்கும் இறை உலகுக்குமான இணைப்பாக செயல்படும் தன்மையே அது. அக்னி சத்தியத்தின் குறியீடும் கூட. வேதங்கள் சொல்லும் அக்னியின் குறியீட்டுத்தன்மையை ஸ்ரீ அரவிந்தர் பின்வருமாறு விளக்குகிறார்:

ரிஷி அக்னியைக் குறித்து “சோதியனாய் சத்தியத்தை காப்போன்தன் இல்லத்தில் ஒளிர்கின்றவன்” என்றுரைக்கும் போது…வஸ்துக்களின் உள் மறைந்து நிற்கும் உண்மையை துதிக்கின்றனர்….அக்னி என்றால் பஞ்சபூதங்களின் ஒன்றாம் அனலைக் கக்கும் இயற்கை ஆற்றலையோ வேள்வியில் வளர்த்தும் அக்னியையோ கருதினார் அல்லர்….உள்வேலைக்குப் புறத்தே சங்கேதமாய் நின்றது வேள்வி. மானவருக்கும் வானவருக்கும் இடையே அகத்தே நடைபெறும் கொடுக்கல் வாங்கல் அது.

இந்த அகக்குறியீட்டில் அக்னி எதெல்லாமாக ஆகிறான்? ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்:

அக்னி தேவன்தான் முதல்வன். அவனின்றி வேள்வித் தீ ஆத்துமவேதி உயிராம் வேதியினில் சுடர் விட்டெரியாது போம். அக்னியின் அச்சுடர் ஞானம் இயற்கையாய் அமைந்த கடவுட் சக்தி.  ஏழு நாக்குகள் கொண்ட இறை நாட்டத்தின் ஆற்றல். அறிவும் ஆற்றலும் உற்ற இந்த இறை நாட்டமே சாவுடைய நம்மில் சாகா விருந்தினன் (‘அதிதி’). நிர்மலனான புரோகிதன். தைவத் தொழில் ஆற்றுவோன். மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும் மத்தியஸ்தனும் ஆவன்.

இங்கு ஒரு முக்கிய அம்சத்தைப் பார்க்க வேண்டும். அக்னியே மானுடர்கள் அளிக்கும் அர்ப்பணிப்புகளை விண்ணோருக்குக் கொண்டு செல்கிறான். இது விண்ணுலக தெய்வசக்தியின் முன் மண்டியிடும் மானுடம் அல்ல. மாறாக, கடவுட் பேணியர். இது ஒரு ஒத்துறவு. மானுடம் இச்சுழலில் ஈடுபடவில்லையெனில் விண்ணோர் இல்லை. அவர்களுடைய ஆற்றல் நசித்துவிடும். இச்சுழலில் முக்கியக் கண்ணி அக்னியே. இவ்விதமாக அவனே தேவர்களின் முதன்மை தெய்வம். ரிக் வேதமே  ‘அக்னி மீளே’ என்றுதான் ஆரம்பிக்கிறது.

ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலத்தில் உள்ள அக்னி ஸூக்தங்கள் க்ருத்ஸமதர் எனும் ரிஷி தம் கவியாவேச நிலையில் வெளிப்படுத்தியவை. இவற்றை ஸ்ரீ அரவிந்தர் மொழி பெயர்த்துள்ளார். அவற்றை தமிழில் கபாலி சாஸ்திரிகள் தந்துள்ளார். இந்த ஸூக்தங்கள் அக்னி குறித்து உருவாக்கும் சித்திரத்தை காணலாம்.

ஓ அக்னியே, எங்கள் மீது ஒளியைப் பாய்ச்சிக்கொண்டு நீ ஒளி கலந்த உன் பிரகாசங்களுடனே பிறக்கின்றாய். நீ நீர்களிலிருந்தும் பிறக்கின்றாய். நீ கற்பாறைகளைச் சுற்றிலும் பிறக்கின்றாய். நீ காடுகளிலிருந்தும் பிறக்கின்றாய். இவ்வுலகில் வளரும் மருந்துச்செடிகளிலிருந்தும் பிறக்கின்றாய். நீ மனிதனுக்கும் மனித குலத்துக்கும் தலைவன் ஆவாய். நீ பிறப்பிலேயே தூயவன் ஆவாய். (2.1.1)

அக்னியின் பிறப்பு அனைத்து உயிர்களிலும் அனைத்து இயற்கையிலும் நிகழும் ஒன்றாகப் பேசப்படுகிறது. அகக் குறியீடுகளைக் கொஞ்சம் ஒதுக்கிப் பார்த்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்து உயிர்ப் பொருட்களும் அதிலிருக்கும் ஆற்றலும் சூரியனின் நெருப்பே. பொதுவாக ஒரு பொருள் வலிமையான அகக்குறியீடாக மாற, அதன் புற இருப்பினை உள்ளுணர்வால் கிரகிக்க வேத கால ரிஷிகள் முயன்றனர். அதன் இருப்பினை எத்தனை கவித்துவத்துடன் ஆழமாக அதன் அனைத்து பரிமாணங்களிலும் உள்வாங்க முடியுமோ உள்வாங்கி அதனை அகக்குறியீடாக சமைத்தனர். எனவேதான் விஞ்ஞானம் வளர வளர இந்த அகக்குறியீடுகள் பெரும்பாலும் பொருளிழக்காமல் இருப்பது மட்டுமல்ல ஆழமும் அழகும் அடைந்து வருகின்றன.

க்ருத்ஸமதர் மேலும் விவரிக்கிறார்: அக்னி இல்லத் தலைவன்; அவனே தலைமைப் புரோகிதன். அவனே எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணு. அவனே வருணன். பெண் தெய்வங்களின் ஆற்றல் அவனுடையதே. அவனே ருத்ரன். (2.1. 2-6)

இந்த ஸூக்தத்தில் வரும் 11 ஆவது பாடல் வேத இறைமையின் முக்கியமான ஒரு தன்மையைக் காட்டுகிறது:

ஓ அக்னியே ! வேள்வி செய்து தேவர்களுக்கு உணவு வழங்கும் பிரிக்கமுடியாத அன்னை அதிதியும் நீயே! எல்லா தேவர்களுக்கும் வழங்கப்படும் மந்திர வார்த்தையின் வடிவான பாரதியும் நீயே! உன்னைப் போற்றிப் புகழ்வதால் நீ வளர்கிறாய். எதனையும் கூர்மையான அறிவால் உள்ளவாறு அறியும் ஆற்றல் வாய்ந்தவளும் நூறு வயது ஆகி மூத்தவளும் ஆன இளாவும் நீயே. செல்வத்துக்கு உரிமை உடையோனே. விருத்திரன் எனும் பகைவனை அழிக்கும் சரஸ்வதி தேவியும் நீயே.

வேதங்களில் சொல்லப்படும் பெண் தெய்வங்களாக அன்னையாக அறிவுடைய மூத்த ஆத்தாளாக அக்னி சொல்லப்படுகிறான். வேத தெய்வங்கள் ஆணாகவும் பெண்ணாகவும் கருதப்படும் அற்புதம் பின்னர் அர்த்தநாரீஸ்வரர் என்கிற ஒரு அழகிய வடிவத்தை நமக்கு அளித்தது.

சோமத்துக்கும் அக்னிக்கும் மற்றொரு இணைத் தன்மையும் உள்ளது. அக்னி சடங்குகளின் இணைப்பு பாலம் மட்டுமல்ல. அவன் பெரும் தூணாகவும் இருக்கிறான். வேத வேள்வியின் தூண். (ரிக். 4.5.1) இருப்பின் பாதை இரண்டாக பிரியும் இடத்தில் நிலவும் ஜீவ ஸ்தம்பம். (ரிக். 10.5.6)  அவன் ஜீவ விருட்சமும் கூட (ரிக் 6.16.1). சோமமும் அக்னியைப் போலவே பிரபஞ்ச தூண். (ரிக். 9.2.5) வானுலகத்தைத் தாங்கி நிற்கும் தூண், வேள்வியின் அடித்தளம்.(9.74.2)

அக்னி – சோமம் இந்த இரண்டும் வேள்வியுடன் தொடர்புடையவை. இரண்டுமே இணைப்பாக செயல்படுபவை. இரண்டுமே பிரபஞ்ச தூண்களாகவும் விருட்சங்களாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துமே பின்னாட்களில் குறியீட்டு பரிமாணங்களில் முக்கிய இடம் வகிப்பவையாக போகின்றன. இவற்றை அடுத்ததாக காணலாம்.

ஆனால் அக்னியின் வேர்கள் புராதனமானவை.

அக்னி நீரில் இருப்பதாகக் கூறும் வேத உருவகத்தை எடுத்துக் கொள்ளலாம். மிக எளிமையாக இது சூரியன் உதித்து வரும் காட்சி எனக் கொள்ள முடியும். இரவில் சூரியன் நீரில் வசிப்பதாக எளிய மனம் உருவகப்படுத்துவதன் விளைவாக இருக்கலாம். ஆனால் நீர் என்பது புராதன தொன்ம உருவாக்கத்தில் ஆதி-ஒழுங்கின்மையின் குறியீடு. ஆதி ஒழுங்கின்மைக்குள் இருக்கும் சிருஷ்டி ஆற்றலினை உருவகப்படுத்த தொல்-கவிகள் பயன்படுத்திய ஒரு உருவகமாக அது வளர்கிறது. அக்னி பிறகு அனைத்து படைப்பாக்க செயலுக்குமான குறியீடாக வளர்கிறது. ஆதி ஒழுங்கின்மையின் பெரு நீர்களுக்குள் அக்னி அல்லது படைப்பாற்றல் உறைந்திருப்பதைப் பிற பண்பாடுகளிலும் காணமுடியும்.

மேலும் அறிய:

ஸ்ரீ அரவிந்தர் , ரிக்வேதம் அக்நி ஸூக்தங்கள்: தமிழ் மொழியாக்கம்: தி.வி.கபாலி சாஸ்திரிகள், தீப்தி டிரஸ்ட், 2001

பெரிய விஷயம்

‘நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஜென் டிவி!’

‘வணக்கம் நேயர்களே. ’ஹலோ ஜென்’ நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று உங்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லவிருப்பவர் பிரபல ஜென் சிந்தனையாளர் மகேந்திரன். வணக்கம் சார்!’

‘வணக்கம்.’

’முதல் நேயர் லைன்ல இருக்கார். அவர்ட்ட பேசுவோம். ஹலோ!’

‘ஹலோ சார். என் பேரு ஸ்ரீதர், நல்லா இருக்கீங்களா?’

’ரொம்ப நல்லா இருக்கேன் சார். உங்க கேள்வியைக் கேளுங்க.’

‘மகேந்திரன் சார், இந்த உலகத்திலயே ரொம்பப் பெரிய விஷயம் எது?’

‘ஹலோ ஸ்ரீதர், இது உங்க சொந்தக் கேள்வியா? இல்லை எங்கேயோ படிச்சதை வெச்சுக் கேட்கறீங்களா?’

’நானே சொந்தமா யோசிச்சுதான் கேட்கறேன் சார். ஏன்? கேள்வி தப்பா?’

‘தப்பில்லை. ரொம்பக் காலத்துக்கு முன்னாடி பைஜாங் டாஜி-ன்னு ஒரு புகழ் பெற்ற ஜென் மாஸ்டர் இருந்தார். அவர்ட்ட யாரோ இதே கேள்வியைக் கேட்டாங்களாம். அதுக்கு அவர் சொன்ன பதில் ‘என்னைப் பொறுத்தவரைக்கும் உலகத்திலயே பெரிய விஷயம், ஒரு பிரம்மாண்டமான மலை உச்சியில உட்கார்ந்துகிட்டு தியானம் செய்யறதுதான்.”

‘ஓ. உங்க பதிலும் அதுதானா சார்?’

‘கொஞ்சம் பொறுங்க. இதே கேள்வியை இன்னொரு ஜென் துறவிகிட்டயும் கேட்டாங்க. அப்போ அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘என்னைப் பொறுத்தவரைக்கும் உலகத்திலயே பெரிய விஷயம், கிண்ணத்தைக் கையில எடுத்து சோறு சாப்பிடறதுதான்.”

‘என்ன சார் சொல்றீங்க? சோறு சாப்பிடறது ஒரு பெரிய விஷயமா?’

‘இங்கேதான் நாம தப்பு செய்யறோம். மலை உச்சியில உட்கார்ந்து தியானம் செய்யறதுதான் பெரிசுன்னு நாம நினைக்கும்போதே, தினசரி வாழ்க்கையில நடக்கற சின்னச் சின்ன அதிசயங்களுக்காக சந்தோஷப்படற குணத்தை இழந்துடறோம். இதையெல்லாம் ரசிக்காம பிரமாண்டமானதை மட்டும்தான் வியப்போம்ன்னு சொல்றது ஜென் வாழ்க்கை இல்லையே!’

‘புரிஞ்சது சார். ரொம்ப தேங்க்ஸ்!’

‘நன்றி ஸ்ரீதர். அடுத்த நேயரோட பேசறதுக்கு முன்னாடி ஒரு ஷார்ட் கமர்ஷியல் ப்ரேக்!’

அந்தரத்தில் திருமந்திரம்

ஓ.எஸ். தியாகராஜன்

இவர் கச்சேரிக்கு நம்பிப் போகலாம், minimum guarantee சங்கீதம் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். ஒரு சிலர் ஷேவாக் ஆட்டம் போல. ஒரு நாளைக்கு 300 ரன்னும் கிடைக்கும் அடுத்த நாள் முதல் பாலை தெர்ட் மேனில் கைக்கு அப்பர் கட் செய்வதும் நடக்கும். வேறு சிலர் மைக் ஹஸ்ஸி ரகம். எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், ஆட்டம் முடியும் போது 50 ரன்களாவது இவர் பெயருக்கு எதிரில் வந்துவிடும். அந்த ரக பாடகர்களுள் ஒருவராக ஓ.எஸ். தியாகராஜனைக் கூறலாம். கடந்த பத்து வருடங்களில் 20 முறையாவது இவரை நேரில் கேட்டிருப்பேன். ஒரு கச்சேரி கூட சோடை போய் நான் கேட்டதில்லை.

நேற்று சிருங்கேரி மடத்தில் எம்.எஸ்.என்.மூர்த்தி, நெய்வேலி நாராயணன் சகிதம் ஓ.எஸ்.டி கச்சேரி. அரங்கில் எதிரொலி அதிகம் என்ற போதும் சூழல் ரம்மியமாய் இருந்தது. நான் தி.நகர் டிராபிக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டதால், நுழையும் போது ‘எவரநி’ கிருதியை முடித்துக் கொண்டிருந்தார். நான் கேட்டுள்ள ஓ.எஸ்.டி கச்சேரிகளில் பாதிக்கு மேற்பட்ட கச்சேரிகளில், ஆரம்பத்திலேயே விறுவிறு என்றொரு கல்யாணியைப் பாடிவிடுவார். பெரும்பாலும் அது ‘ஈஸ பாஹிமாம்’ கிருதியாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் ‘அம்ம ராவம்மா’ கிருதியாக இருக்கும். நேற்று தாயம் ‘தாமரஸ தள நேத்ரி’-யின் பக்கம் (எந்தக் கிருதி என்று கண்டுபிடித்துக் கொள்ள இந்த வரி போதாதா என்ன?) போதாது – ஆசிரியர்

கல்யாணியில் நிரவல் ஸ்வரம் பாடியபோதே கச்சேரி களை கட்டிவிட்டது. அனுபல்லவியில் “நெம்மதினி நீ விஹப”  “ரம்முலோ” என்றெல்லாம் சாஹித்யத்தை வெட்டிச் சாய்க்காமல், அற்புதமாய் பதம் பிரித்துப் பாடுவது ஓ.எஸ்.டி-யின் ஸ்பெஷாலிடி! தொடர்ந்து தேவகாந்தாரியைச் சுருக்கமாய் ஆலாபனை செய்து தமிழ் தியாகைய்யரின் சமஸ்கிருத பாடலான ‘ஷாரதே’ கிருதியை இழைத்துப் பாடினார். ஓ.எஸ்.டி-யின் கச்சேரியில் உள்ள அளவு, அலுப்பே தட்டாத வகையில் அவர் செய்யும் பங்கீடு அவரது பெரிய பலம்.

எந்த நேரத்தில் நான் பிலஹரி அதிகம் கேட்கக் கிடைக்கவில்லை என்று வி.வி.எஸ் கச்சேரி பற்றி எழுதியதில் சொன்னேனோ தெரியவில்லை. விட்டேனா பார் என்று சென்றவிடமெல்லாம் துரத்துகிறது. நேற்று சந்தீப் நாராயணனும், காயத்ரி வெங்கட்ராகவனும் விஸ்தாரமாக பிலஹரி பாடினர். இன்று ஓ.எஸ்.டி-யின் மெல்லிய கீற்றாய் பிலஹரியைத் தொடங்கியபோது நொந்தே போனேன். நல்ல காலம், கீற்று சற்றைக்கெல்லாம், ‘சந்திரசேகர யதீந்திரம்’ என்ற கிருதியாக மாறியது. கல்லிடைக்குறிச்சி வேத தாஸர் செய்த கிருதியாம். கச்சேரி முடிந்ததும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவ காந்தாரியும், பிலஹரி கச்சேரி சிருங்கேரி மடத்தில் நடந்ததால் பாடப்பட்டவை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நேற்றைய பிரதான ராகம் தோடி. ஓ.எஸ்.டி ஆதார ஷட்ஜத்தில் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வை கொடுத்தார் பாருங்கள்! தார ஸ்தாயியில் குரலை உயர்த்தி, மந்திரத்தில் குரலைக் குறுக்குவோர் கச்சேரிகளையே கேட்டுப் புளித்துப் போயிருந்த என் செவிகள் நேற்று புளகாங்கிதம் அடைந்தன.

ஓ.எஸ்.டி-யின் ஆலாபனை அணுகுமுறை ராமநாதபுரம் கிருஷ்ணன் செய்வது போல, கீழ் ஸ்தாயியில் குரலை உயர்த்தியும், மேல் ஸ்தாயியில் குரலை அடக்கியும் விளங்குகிறது. தார ஸ்தாயியில் கத்தாமல், நளினமான பல சங்கதிகள் பாட இந்த அணுகுமுறை பெரிதும் உதவுகிறது. ராகத்தின் மையமாக தைவதம், முதல் தார ஷட்ஜம் வரையிலான இடத்தை வைத்துக் கொண்டு நிறைய பாடினார். நீண்டு ஒலித்த தார ஷட்ஜ கார்வையும், அதனைத் தொடர்ந்து வளைந்தும் நெளிந்தும் ஒலித்த தைவதத்தில் கமகங்களும் அடுத்தடுத்துப் பாடி அழகிய அலைகளை படர விட்டார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு நிறைவாக தோடியை அலசிவிட்டு, “ஏமிஜேசிதே” பாடினார்.

நிரவலைப் பற்றிச் சொல்லும்போது எஸ்.ராஜம், “நல்ல விஷயத்தை வைத்துதான் நிரவணும். ஏமி ஜேஸிதே பாடிவிட்டு “காம மோக தாஸுடை” என்று நிரவிக் கொண்டு இருக்கக் கூடாது.”, என்பார். நேற்று ஓ.எஸ்.டி அதைத்தான் செய்தார். காம மோகத்தைக் கடந்து “வர மந்த்ர”-வில் நிரவல் செய்தார். மைசூர் பாகை செய்யும் போது தாம்பாளம் முழுவதும் படர்ந்திருந்தாலும், அப்படியே சாப்பிட முடியாது. துண்டம் துண்டமாய் நறுக்கும்போது எடுத்து உண்ன வசதியாக இருக்கும். அப்படித்தான் நேற்று ஓ.எஸ்.டி தோடியை நிர்வாகம் செய்தார். கேட்ட ரசிகர்களும், உடன் வாசித்த வித்வான்களும், முழுமையாய் வாங்கி அனுபவிக்க வசிதயாக இருந்தது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி இரண்டு காலத்திலும் இடத்துக்குப் பாடிவிட்டு, அதன் பின் சமத்திற்கு வரும்படியாக குறைப்பு செய்தார். ஆலாபனையிலும் சரி, ஸ்வரங்களிலும் சரி ஷட்ஜ, பஞ்சம வர்ஜ இடங்கள் நிறைந்து இருந்தன. இந்த இடங்களே ராகத்தை உருக்கமாக ஒலிக்க வைத்ததாக எனக்குத் தோன்றியது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி பாடியதையெல்லாம் உடனுக்குடன் வாசித்து கலக்கினார் நெய்வேலி நாராயணன். அரங்கில் நேற்று அவரது தொப்பி சுத்தமாக கேட்க வில்லை. வலந்தலையின் நாதத்துடன் தொப்பியின் கும்காரங்களும் சேர்ந்து ஒலித்திருப்பின் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.

தனி ஆவர்த்தனத்திலும் இந்தக் குறை இருந்தது. குறிப்பாக டேக்கா சொல் வாசித்த போது, இதை உணர முடிந்தது. இருப்பினும், குறை தெரியாது நன்றாக வாசித்தார். நேற்று வாசித்த கோர்வைகள் எல்லாம் சரியாக இடத்துக்கு வந்தன என்று சொல்லுமளவிற்குத்தான் என் லய அறிவு இடமளிக்கிறது. ஆதி தாளம் புரியும் அளவிற்கு, மிஸ்ர சாபுவை தெரிந்து கொள்ளவில்லை. வரும் வருடங்களில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வயலின் வாசித்த எம்.எஸ்.என் மூர்த்தி இடைஞ்சல் இல்லாமல் வாசித்தார். அவருடைய வாய்ப்புகளை அளவாக வாசித்தார்.

தனி முடிந்ததும், சில சீட்டுகள் வந்தன. அவற்றைப் பாடும் முன் நிறைய யோசித்துவிட்டு. “சரவண பவ எனும் திருமந்திரம்” பாட ஆரம்பித்தார். பல்லவி முடிந்து மிருதங்கத்தில் தீர்மானம் வைத்தும் அனுபல்லவியை எடுக்கவில்லை. உடனிருந்த சிஷ்யருக்கும் சாஹித்யம் தெரியாததால் பாட்டு அப்படியே அந்தரத்தில் நின்றது. உடனே அரங்கில் இருந்து ஒரு கூட்டமே “புரம் எரித்த பரமன்” என்று அடியை எடுத்துக் கொடுத்ததும், பாடலைப் பாடி முடித்தார். “திடீர் என்று பாடச் சொன்னால் இதுதான் சங்கடம்”, என்றார்.

அடுத்து பாடிய “காண வேண்டாமோ” பாடல்தான் தமிழில் இது வரை வந்துள்ள பாடல்களுள் மிகச் சிறந்ததாக நான் கருதுவது. ஸ்ரீரஞ்சனியின் அத்தனை அழகும் குழைத்துச் செய்யப்பட்ட பாடல். “வீணில் உலகைச் சுற்றி சுற்றி” என்ற வரியில் உலகமும் சுற்றும், அவ்வுலகில் உரைபவரும் சுற்றுவர், அப்படி எக்கெச்செக்க நகாசு சங்கதிகள்! அவற்றை ஓ.எஸ்.டி பாடிய போது my day was made.

அடுத்து பாடிய ராகமாலிகை பாடும் முன், “முடிந்த வரை பாடுகிறேன். அனு பல்லவியில் மறந்தாலும் மறந்துவிடலாம்”, என்று எச்சரிக்கை விடுத்து ஆரம்பித்தார். அழகான ஹிந்துஸ்தானி ராகங்களால் ஆன ராகமாலிகை “அனுமனை அனுதினம் நினை மனமே” அவற்றை நல்ல பாவபூர்வமாக பாடி கச்சேரியை நிறைவு செய்த போது கேட்டவர்கள் அனைவரும் நிறைவாக வீடு சென்றிருப்பர் என்பது உறுதி.

ஒண்ணு விட்டா போச்சு!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

“என்னடா சுரேஷ், கையில் என்ன கட்டு?”

“அது ஒண்ணும் இல்லைடா. எங்க காலனியில் இன்னிக்கு ரத்த தான முகாம். அதுல கலந்துக்கிட்டு ரத்தம் குடுத்துட்டு வரேன்.”

“உங்க காலனியிலுமா? மத்திய மந்திரி ஒருத்தர் பிறந்த நாளை ஒட்டி ரத்த தான முகாம்ன்னு ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி இருந்தாங்களே.”

“சரியாப் பார்த்தியா? நானும் பார்த்தேன். அவங்க என்ன எழுதி இருந்தாங்க தெரியுமா? அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்தான முகாம்ன்னு எழுதி இருந்தாங்க.”

“ஆஹா! இதை நான் சரியாப் பார்க்கலையே. ஒரு எழுத்து விட்டதுனால ரத்ததான முகாம் ரத்தான முகாமா ஆயிடுச்சே!”

”தமிழை ஒழுங்கா எழுதுன்னு நான் சொன்னா சிரிப்பியே. இப்போ பாரு ஒரே ஒரு எழுத்து விட்டதுக்காக இவங்களைப் பார்த்து நீயே சிரிப்பா சிரிக்கற. இதே மாதிரி நான் இந்த வாரம் ஒரு வலைப்பதிவைப் பார்த்து சிரிச்சேன்.”

“உனக்குத்தான் எழுத்துப்பிழைன்னா அல்வா மாதிரியாச்சே. என்ன விஷயம் சொல்லு.”

“யாரோ நல்ல காரியம் ஒண்ணு செஞ்சதை இவரு பாராட்ட பதிவு எழுதறாரு. அதில இன்னார் செஞ்சது பாராட்டுக்குறியது அப்படின்னு போட்டு இருக்காரு. இதுக்கு விலாவாரியா விளக்கம் சொன்னா பாரா கல்லெடுத்து அடிப்பார். அதனால எழுத்துப்பிழை இல்லாம எழுத வேண்டியது அவசியம்ன்னு சொல்லிட்டு அடுத்த மேட்டரைப் பார்க்கலாம்.”

“இதெல்லாம் எழுத்துப்பிழைகள். புரியுது. ஆனா பொதுவா பயன்பாட்டில் இருக்கிற வார்த்தை எதாவது தப்பா இருக்கா?”

“இருக்கே. நிறையா உதாரணம் சொல்லலாம். ஒண்ணு சொல்லறேன் கேளு. அருகாமை. உங்கள் வீடு தொலைவில் இருக்கிறதான்னு கேட்டா, இல்லை அருகில் இருக்கிறதுன்னு சொல்லுவோம். ஆனா அதை அருகாமையில் உள்ளது அப்படின்னு சொன்னா இலக்கிய வாசனை அடிக்குதுன்னு நிறையா பேரு நினைக்கறாங்க.”

“ஆமா. அருகாமைங்கிறது பரவலா எல்லாரும் சொல்லறதுதானே. அதுல என்ன பிரச்சனை?”

“அதுதாண்டா பிரச்னை. அருகில் இருக்கிறதுன்னு சொன்னா சரியா இருக்கு. அது என்ன அருகாமை? முயலாமைன்னு சொன்னா முயலாமல் இருப்பது. செய்யாமைன்னா செய்யாமல் இருக்கிறது. இப்படிப் பார்த்தா அருகாமைன்னா அருகாம இருக்கிறது. அருகுவதுன்னா குறைவது. அருகாமைன்னா குறையாம இருப்பதுன்னு வேணா சொல்லலாம்.”

“அருகாமைன்னு சொல்லறதே தப்பா? ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே.”

“அடகுக்கடை எதாவது தெரியுமா?”

“தெரியாம என்ன? உனக்கு எதுக்குடா அடகுக்கடை எல்லாம்? எதாவது பிரச்னை இருந்தாச் சொல்லேன். நான் உதவி பண்ணறேன்.”

“எனக்கு பிரச்னை எதுவும் இல்லைடா. இந்த அடகுக்கடைன்னு சொல்லறதுதான் பிரச்னையே.”

“என்னடா சொல்லற? அது எதாவது மார்வாடி வார்த்தையா? அதான் அவங்க இந்த மேட்டரில் சக்கை போடு போடறாங்களா?”

“நம்ம ஆளுங்க மார்வாடிகளுக்குக் குறைச்சலே இல்லை. அதை விடு. விஷயத்தைச் சொல்லறேன் கேளு. ஒரு சாமானை ஒருத்தர் கிட்ட குடுத்துட்டு அதோட மதிப்புக்கு கடன் வாங்கறதுக்கு தமிழில் பெயர் அடைவு. இதை சொல்லும் போது அடவுன்னு சொல்லறது உண்டு.”

“ஓஹோ! அப்போ இதெல்லாம் அடவுக்கடையா? அதைத்தான் நாம அடகுக்கடைன்னு சொல்லறோமா?”

“ஆமாம். அதனாலதான் அடைமானம் வைக்கறதுன்னு சொல்லறோம். அடைத்தல், அடைக்கலம்ன்னு சொல்லும் போது கூட இதே பொருள் வருது பாரு.”

”ஆமாம். அடைவு சரி. அப்போ அடகுன்னா என்ன?”

அடகுன்னா ஒரு வகைக் கீரை. அடகுக்கடைன்னா கீரைக்கடைன்னு அர்த்தம். அங்க கீரையா விக்கறாங்க?  ஆனா இன்னிக்கு அடகு என்பது எல்லாரும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆயிட்டதுனால அகராதிகளில் கூட இந்த அர்த்தமும் தர ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அடைவு என்பதுதான் சரியான சொல்.”

“ நம்மாளுங்க எல்லாத்தையும் யோசிச்சு வைச்சு இருக்காங்கப்பா!”

“ஆனா அதை நாம பாதுகாக்காம விட்டுடறோம். எவ்வளவுதான் மம்மி டாடி சொன்னாலும் அப்பா அம்மா நம்ம தமிழில் இருக்கத்தான் செய்யும். ஆனா இது போல உறவினர்களுக்கு எல்லாம் இருக்கும் பெயர்கள் மறைந்து போய் எல்லாருமே அங்கிள் ஆண்ட்டி ஆகக்கூடிய அபாயம் இருக்கு.”

“ஆமாம். நாம் உறவுகளைச் சொல்லத்தான் எவ்வளவு வார்த்தைகள் இருக்கு இல்லையா?”

“உறவுகள் இருக்கட்டும். இன்னிக்கும் ஒரு கல்யாணம்ன்னு வந்தா உங்கள் உற்றார் உறவினருடம்  வந்து அப்படின்னுதானே எழுதறோம். உறவினர்ன்னா சரி. உற்றார்ன்னா என்ன? தெரியுமா?”

“ஆமாண்டா, உற்றார் உறவினர்ன்னு சொல்லறோம். ஆனா உற்றார்ன்னா யாருன்னு தெரியலையே.”

“நீ உறவினர்ன்னா relatives அப்படின்னு சொல்லுவ. ஆனா நம்ம ஆட்கள் இவர்களை ரெண்டு விதமாப் பிரிச்சு இருக்காங்க. Relatives by birth and relatives by choice.

அதாவது நம் பிறப்பினால் நமக்கு உறவானர்வகள் உற்றார். இதுல நமக்கு சாய்ஸே கிடையாது. நம்ம அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, அக்கா, தங்கை என நம் பிறப்பினால் நமக்குக் கிடைத்த உறவுகள்தான் உற்றார்.

உறவினர்ன்னா  கொண்டு கொடுத்து உறவாக வருபவர்கள். உறவு என்றாலே சம்பந்தம் என்றுதான் பொருள். உறவினர் என்றால் இது போன்ற சம்பந்தத்தின் மூலம் வரும் உறவுகள்.”

“இதைத்தானேடா இன்னிக்கு வாய்ச்சதும் வந்ததும்ன்னு சொல்லறோம். தமிழ் ரொம்பவே அழகா இருக்குடா!” ’

“தமிழ் என்றாலே இனிமை என்றுதானேடா அர்த்தம். அது அழகா இருக்கறதுல என்ன ஆச்சரியம்?

’மேல சொல்லு.”

“இன்னும் சில வார்த்தைகளை எடுத்துக்கோ. அதோட ஒரிஜினல் விதத்தில் இருந்து மாறிப் போய் தவறான வடிவமே நிலைபெற்று விடும். உதாரணத்துக்கு நாம சதைன்னு சொல்லறோம். அதோட உண்மையான வடிவம் என்ன?”

“என்ன? தசைதானே?”

“ஆமாம். தசைதான். அதனாலதான் தசையோட சேர்ந்து இருக்கிற நரம்பை எல்லாம் சேர்த்து தசைநார்ன்னு எல்லாம் சொல்லறோம். ஆனா நாளாவட்டத்துல இந்த தசைன்னு சொல்லறது சதைன்னு மாறிப்போச்சு.”

“ஆமாம். இப்போ நாம சதை, சதைப்பற்றுன்னுதானே சொல்லறோம்.”

“சதைத்தல்ன்னா நசுக்குதல்ன்னு அர்த்தம். இன்னிக்கும் திருநெல்வேலி பக்கம் நசுக்கிடுன்னு சொல்ல சதைச்சுடுன்னு சொல்லுவாங்க. இந்த சதை என்பதை தசை என்ற பொருளில் சொல்லறதே தப்புதான்.”

“ம்ம். இண்டரெஸ்டிங்”

“சேலை கட்டும் பெண்ணிற்கொரு வாசமுண்டு. கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?”

“வாசத்தைப் பார்க்க முடியுமா? அதானே சொல்லப் போற?”

“இல்லைடா!! சேலை என்ற சொல் எங்க இருந்து வந்தது தெரியுமா?”

”தெரியலையே. நீயே சொல்லு.”

“சீலை அப்படின்னு கிராமங்களில் சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு சீலை எடுத்தாச்சான்னு கேட்பாங்க. ஆனா இந்த சீலையும் கூட சீரை என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது.”

“சீரையா? அப்படின்னா என்னடா?”

“சீரைன்னா மரப்பட்டைகளிலான உடை. சீரை சுற்றித் திருமகள் பின் செல அப்படின்னு கம்பர் சீதையைப் பத்திச் சொல்லுவாரு. சிறப்பினை தரும் மரவுரி. அதை சீரை என்று சொல்லுவார்கள். இந்த சீரைதான் சீலை என்று மருவி இன்றைக்கு சேலை என்றும் ஆனது.”

“சரி. இனிமே சீரைக் கட்டும் பெண்ணிற்கொரு வாசமுண்டான்னே பாடறேன். போதுமா?”

“இதெல்லாம் இன்னிக்கு தமிழாகிப் போச்சு. அதனால மாத்தணுமா வேண்டாமான்னு யோசிக்கணும். ஆனா இது எல்லாம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். தமிழில் இந்த மாதிரி மாறிப் போனாலும் சரின்னு சொல்லும் வார்த்தைகள் எத்தனையோ இருக்கு தெரியுமா?”

“மாறினாலும் சரியா? அது என்னடா?”

“இப்போ பவளம், பவழம் – இதுல எது சரி?”

“தெரியலையே. நீயே சொல்லு.”

“நான் பவழம்தான் சரின்னு சொன்னேன் வெச்சுக்கோ. பவளம் என்ற சொல் பழங்காலத்திலேர்ந்தே இருக்குன்னு சுட்டி எல்லாம் குடுத்து அமர்க்களப்படுத்துவாங்க. அதே நான் பவளம்தான் சரின்னு சொன்னா, பவழம் கோஷ்டியினர் வந்து இதே மாதிரி சுட்டி எல்லாம் தருவாங்க.”

“அப்போ எதுதான் சரி?”

“ரெண்டுமே சரிதான் என்றுதான் நாம இன்னிக்கு சொல்லறோம். பவளம், பவழம் எப்படி எழுதினாலும் சரிதான். அதே மாதிரிதாம் மங்கலம், மங்களம் என்று எழுதுவதும்.”

“நைசா இன்னிக்கு பேச வேண்டியதுக்கு இப்படி மங்களம் பாடிட்ட போல.”

“அதே. அதே. பை!”

  • பாராட்டுக்கு உரியது என்பதை பாராட்டுக்குரியது என்று எழுத வேண்டும். பாராட்டுக்குறியது என்பது பிழை.
  • அருகில் என்பதே சரி. அருகாமை என்பது பிழையான ஒரு சொல்.
  • அடைவு என்பது அடவு என்று மருவி இன்றைக்கு அடகு என்று ஆனது. அடகு என்றால் கீரை. அடைவு என்பதே ஒரு பொருளை கொடுத்து அதன் மதிப்புக்கு ஈடாக கடன் பெறுவது.
  • உற்றார் என்பவர் பிறப்பின் மூலம் வரும் சொந்தம். உறவினர் என்பது திருமணத்தின் மூலம் வரும் சொந்தம்.
  • தசை என்பதே சரியான சொல். அது சதை என்று மருவிப் போனது. சதை என்றால் நசுக்கு என்று பொருள்.
  • சீரை என்றால் மரவுரி. அது சீலை என்று மருவி இன்றைக்கு சேலை என்று வழங்கப்படுகிறது.
  • பவளம்/ பவழம், மங்கலம்/ மங்களம் என்ற இரு வகைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

குரங்கு

அந்தக் கல்லூரியில் புத்தாண்டுக் கொண்டாட்டம். மாணவர்கள் எல்லோருக்காகவும் ‘புதையல் வேட்டை’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

’நம்ம காலேஜ்ல வெவ்வேற இடங்கள்ல நாலு பானைகளைப் புதைச்சுவெச்சிருக்கோம். அந்தப் பானைகள் ஒவ்வொண்ணுக்குள்ளயும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் இருக்கு’ என்று அறிவித்தார் ப்ரின்சிபால். ‘நாங்க கொடுத்திருக்கிற குறிப்புகளை வெச்சு நீங்க அந்தப் பானைகளைக் கண்டுபிடிக்கணும். அப்படிக் கண்டுபிடிச்சுட்டா அந்தப் பரிசுகள் உங்களுக்குதான்!’

மாணவர்கள் உற்சாகமானார்கள். குறிப்புகளைப் படித்துவிட்டுத் திசைக்கு ஒருவராக ஓடினார்கள். எதையெதையோ புரட்டிப் போட்டுத் தேட ஆரம்பித்தார்கள்.

பத்தரை மணியளவில் ஒரு பையன் முதல் பானையைக் கண்டுபிடித்துவிட்டான். மதியச் சாப்பாட்டு நேரத்தில் இன்னொரு பையன் இரண்டாவது பானையைத் தோண்டி எடுத்தான். மாலை நான்கு மணிக்கு ஒரு பெண் மூன்றாவது பானையைக் கண்டுபிடித்தாள்.

ஆனால் அந்த நான்காவது பானைதான் யாருக்கும் அகப்படவில்லை. சில நூறு பேர் பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

இப்படி ஒருபக்கம் மாணவர்கள் பானை தேடிக்கொண்டிருந்தபோது, இந்தப் புதையல் வேட்டையில் ஆர்வமே இல்லாத சில ஜந்துக்களும் இருந்தார்கள். அவர்கள் விடுமுறையை வீணடிக்க விரும்பாமல் நன்றாகக் குரட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு கும்பகர்ணன் மாலை மங்கிப் பொழுது இருட்டும்வரை உறங்கினான். அப்புறம் மனமே இல்லாமல் எழுந்தான். முகத்தைக் கழுவிக்கொண்டு கேன்ட்டீனில் டீ சாப்பிடச் சென்றான்.

டீ குடிப்பதற்கு முன்னால் வாயைக் கொப்புளித்துத் துப்புவது அவனுடைய பழக்கம். அப்படித் துப்பச் சென்ற இடத்தில் அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது. இடறிப் பார்த்தால், பானை.

குஷியான அவன் முழுப் பானையையும் தோண்டி எடுத்தான். உள்ளே புதையல் பரிசுகள். ஐபாட் ஒன்று, மொபைல் ஃபோன் ஒன்று, ஏழெட்டு சினிமா டிக்கெட்கள்.

இதைப் பார்த்த அவனது நண்பர்கள் துள்ளுக் குதித்தார்கள். ‘நீ பெரிய அதிர்ஷ்டசாலிதான், போட்டியில கலந்துக்காமயே ஜெயிச்சுட்டியே!’

அவன் சலித்துக்கொண்டான். ‘ம்ஹூம், நான் பெரிய துரதிருஷ்டசாலி!’

‘என்னய்யா சொல்றே?’

‘இவ்ளோ நேரம் தூங்காம சீக்கிரமாவே எழுந்திருந்தேன்னா, இதுவரைக்கும் நாலு டீ குடிச்சிருப்பேன், நாலு பானையும் எனக்கே கிடைச்சிருக்கும்!’

கட்டுப்பாடில்லாமல் துள்ளி ஓடுகிற மனத்தைக் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள். பேராசை, கிடைத்ததை எண்ணித் திருப்தி அடையாமை, உழைக்காமல் பலனுக்கு ஆசைப்படுவது போன்ற குணங்கள் அந்தக் குரங்கு மனத்தின் அடையாளம். ஜென் சிந்தனையும் தியானமும்தான் மனக் குரங்கை அமைதிப்படுத்தி ஒழுங்குக்குக் கொண்டுவருகின்றன.

மரங்களின் தாய்!

இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்னை சுற்றுச்சூழல் சீர்கேடு. காடுகள் அழிப்பு, மழை வளம் குறைதல், பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. அதனால் துருவப்பிரதேசங்களில் இருக்கும் பனி உருகத் தொடங்கிவிட்டது. பனி உருகி கடலில் கலந்தால் நீர் மட்டம் உயரும். நிலப்பகுதிகள் மூழ்கக்கூடிய அபாயம். இதை எப்படித் தடுக்கலாம் என்று உலகம் முழுவதும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றி 1980களிலேயே யோசிக்க ஆரம்பித்து, செயலில் இறங்கியவர் வாங்கரி மாத்தாய். 1977-ம் ஆண்டு முதல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இவர் ஆரம்பித்த  பசுமைப்பட்டை இயக்கம் மூலம் 3 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன!

70 வயது வாங்கரி மாத்தாய் பிறந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் அவர் கல்வி கற்க ஆரம்பித்தார். 1960-ம் ஆண்டில் கென்யாவிலிருந்து 300 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் ஒருவராகப் படிக்கச் சென்றார். உயிரியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டங்களை முடித்தார். அப்போது அவருக்குச் சுற்றுச் சூழல் மீது ஈடுபாடு வந்தது.

படிப்பை முடித்தவுடன் தாய் நாட்டில், நைரோபி பல்கலைக்கழகத்தில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆர்வத்துடன் வந்து சேர்ந்தார் வாங்கரி. ஆனால், அவருடைய வேலையை வேறொருவருக்கு அளித்திருந்தனர். பெண் என்பதாலும் பழங்குடி என்பதாலும்தான் அந்த வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டார். இரண்டு மாதங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, ஜெர்மன் பேராசிரியர் ஒருவரிடமிருந்து மைக்ரோஅனாடமி என்ற புதிய துறையில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. பேராசிரியரின் தூண்டுதலில் ஜெர்மன் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்தார்.

1966-ம் ஆண்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த வாங்கரி, மத்தாய் என்ற கென்யரைச் சந்தித்தார். இருவருக்கும் நட்பு உருவானது. 1969-ம் ஆண்டு இருவரும் நைரோபியில் திருமணம் செய்துகொண்டனர். வாங்கரியின் கணவர் அரசியலில் நுழைந்தார். முதல் மகன் பிறந்தான். 1971-ம் ஆண்டு அனாடமியில் பிஹெச்டி பட்டம் பெற்றார் வாங்கரி. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிஹெச்டி பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

வாங்கரி வேலை செய்த பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமைகள் வழங்க வேண்டும் என்று போராடினார். சுற்றுச்சூழல் இயக்கங்கள், கென்ய செஞ்சிலுவைச் சங்கம், பெண்கள் இயக்கம் என்று ஏராளமான இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார் வாங்கரி. அப்போது கிராமப்புறப் பெண்களிடம் பழகியபோதுதான், அவர்களின் பொருளாதாரத் தேவைகள், விவசாயப் பிரச்னைகள், நிலத்துக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.

இதற்கிடையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார் வாங்கரி. அப்போது நடைபெற்ற தேர்தலில் வாங்கரியின் கணவர் வெற்றி பெற்றார். கென்யாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வாங்கரிக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராமப்புறப் பெண்களுக்கு வருமானம்தான் முதல்  பிரச்னை. அவர்களுக்கு வருமானம் அளிக்கும் நேரத்தில் மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்குச் சரியான வேலை மரம் வளர்ப்பது. கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தார். மரக்கன்றுகளைக் கொடுத்து தங்கள் நிலங்களில் நடச் சொன்னார். ஓரளவு வருமானத்தையும் அளித்தார். தங்கள் நிலங்களில் மரங்கள் வைத்து முடித்த பிறகு, பிற இடங்களிலும் மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பெண்களே மரக்கன்றுகளை உருவாக்கும் பண்ணைகளை ஆரம்பித்தனர். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர்.

இதைப் பார்த்து அரசாங்கம் பயந்தது. மக்களுக்கு விழிப்புணவு வந்து, மண்ணையும் மரத்தையும் காப்பாற்றினால், தங்களுடைய காடு அழிப்பு, ஊழல் போன்றவற்றுக்கு முடிவு வந்துவிடுமோ என்று அஞ்சியது. கூட்டம் போடக்கூடாது, ஒன்பது பேருக்கு மேல் கூடி நின்று பேசக்கூடாது என்று தடை விதித்தது. ஒவ்வொன்றையும் தைரியமாக எதிர்கொண்டார் வாங்கரி.

1977-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப்பட்டை இயக்கம் உதயமானது. வாங்கரி ஓய்வின்றி போராடிக்கொண்டிருக்கும் போது, சொந்த வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. கணவர் தனியாகச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

‘அவள் அதிகம் படித்தவள். மிகவும் தைரியமானவள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பவள். உறுதியானவள். என்னால் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை – விவாகரத்துக்கு வாங்கரியின் கணவர் சொன்ன காரணம் இதுதான்!

விவாகரத்துக்காக நிறைய செலவாகியிருந்தது. அத்துடன் மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளானார் வாங்கரி. 6 ஆண்டுகள் குழந்தைகளை, கணவர் பொறுப்பில் விட்டிருந்தார். அடிக்கடிச் சென்று குழந்தைகளைக் கவனித்து வந்தார். பொருளாதாரச் சிக்கல் தீர்ந்த பிறகு, குழந்தைகளை அழைத்து வந்துவிட்டார்.

79-ம் ஆண்டு நேஷனல் கவுன்சில் ஆஃப் உமன் ஃபார் கென்யா என்ற அமைப்புக்குத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் வாங்கரி. இதன் கீழ் பல்வேறு பெண்கள் இயக்கங்கள் இயங்கின. வாங்கரியின் தொடர் போராட்டங்களால் அரசாங்கம் எரிச்சல் அடைந்தது. பல்வேறு இடையூறுகளைத் தந்தது. அப்போதுதான் ஜனநாயக அரசாங்கம் அமைய வேண்டிய தேவையை உணர்ந்தார் வாங்கரி. 1988-ம் ஆண்டு சுற்றுச்சூழல் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.

1989-ம் ஆண்டில் வாங்கரியின் பசுமைப்பட்டை இயக்கம் அரசாங்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. உஹுரு பூங்காவில் பெரிய வணிக வளாகம் அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. மரங்களை அழித்து, வளாகம் அமைப்பதை எதிர்த்து கடிதங்கள் எழுதினார். போராட்டங்களை நடத்தினார். எதற்கும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. வாங்கரியை பைத்தியக்காரப் பெண் என்று பட்டம் சூட்டியது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1990-ம் ஆண்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அரசியல்வாதிகள், அரசாங்கம் போன்றவற்றைப் பகைத்துக்கொண்டதால் பலமுறை வாங்கரியும் அவருடைய  இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள்.

1992-ல் ரியோடிஜெனிரோவில் நடந்த ஐ.நாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வாங்கரி சென்றார். கென்ய அதிபரும் அதில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பேசுவதற்கு வாங்கரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மிக மோசமான ஊழல் பேர்வழிகளாக இருந்தனர். அவர்களால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடு. காட்டில் உள்ள மரங்களை அழித்தனர். காட்டையே அழித்தனர். ஊழல் செய்யக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதாக இல்லை. வாங்கரி யோசித்தார். அரசியல் அமைப்பை மாற்றினால் தவிர, வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டார். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் இணைந்துகொண்டார்.

1997 தேர்தலில் வாங்கரி போட்டியிட்டார். அவரைப் பற்றிய வதந்திகள் மக்களிடம் பரப்பப்பட்டன. சில வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனால் அவருடைய மனம் சோர்வடையவில்லை. பசுமைப்பட்டை இயக்கம் மூலம் அமைதிக்காக மரங்களை நடும் பணிகளில் கவனம் செலுத்தினார்.

2002-ம் ஆண்டு தேர்தல் வந்தது. வாங்கரி மாத்தாய் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றது. வாங்கரி 98% வோட்டுகளைப் பெற்றார். சுற்றுச்சூழலுக்கான இணை அமைச்சராக 2005-ம் ஆண்டு வரை செயல்பட்டார். பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திவந்தார்.

2004-ம் ஆண்டு அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வாங்கரிக்கு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்க பெண் மற்றும் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் இவர். ’இந்தப் பரிசு எளிய மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் உழைப்பு ஒருநாள் உலகை மாற்றும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டார் வாங்கரி மாத்தாய்.

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

’மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள், மருந்து, விறகு, மரம் போன்றவை கிடைக்கின்றன. சுத்தமான காற்று கிடைக்கிறது. மரங்களை விட மிக அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப் பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’  என்கிறார் மரங்களின் தாய்.

* (கணவர் தன் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று சொன்னதால் மத்தாய் என்பதை மாத்தாய் என்று மாற்றிக்கொண்டார் வாங்கரி.)