அத்தியாயம் 9
ரெனே பெட்டியை மூட பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். மோனிகா கம்ப்யூட்டரில் இருந்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டிருந்தாள்.
“ இந்தா டிக்கட்.. இவ்வளவு நாள் உன்னை கண்டுகொள்ளக்கூட இல்லை. இப்போது கூப்பிடுகிறார்கள் என்று அவசரமாக ஓடுகிறாயே..”
“சாதாரண நேரமாக இருந்தால் நானும் விளையாட்டு காட்டியிருப்பேன் மோனி. இப்போது பெரியவர்தான் முக்கியம். அலெக்குக்கு தண்ணி காட்டுவது ப்ரையாரிட்டி இல்லை. என்னுடைய விக்கை எடுத்து வைத்திருக்கிறாயா?”
“என்ன மாறுவேஷமா போடப்போகிறாய்?”
“தொழில் அப்படி. தேவைப்பட்டாலும் படும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவேண்டும். நான் சிராக்கூஸ் போனதும் அடுத்த ஸ்டாப் எது என்று உனக்குத் தெரிவிக்கிறேன். நீ கிளம்பிவிடு”
“உன் நண்பன் இருக்கிறானாமே ஏற்கனவே” நண்பன் இல் சிறப்பு அழுத்தம் கொடுத்தாள் மோனி.
“திஸ் இஸ் மை சான்ஸ். அவனுடைய இடம் எது என்று தெரியவைக்க சரியான சந்தர்ப்பம். ஆனால்.. மைண்ட் இட்.. மீக் முட்டாள் இல்லை. நம்பர் டூ, யெஸ், ஆனால் நிச்சயமாக முட்டாள் இல்லை.”
”முட்டாள் இல்லை. முட்டாளாக இருந்தால் சாமர்த்தியமாக உன்னை அழுத்திவிட்டு மேலேறி இருக்க மாட்டான்”
“தப்பு என்னுடையது. அவனை ரொம்ப நம்பிவிட்டேன்.”
ரெனேவுக்கு நினைக்கையிலேயே அடிவயிற்றில் கோபம் சுரந்தது. எட்டு ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடு. மீக் அணிந்திருந்த க்ரே கலர் சூட் கூட நினைவிருந்தது.
“ஹாய் ரெனே.. நீ என்னைச் சொன்னதெல்லாம் செஞ்சுட்டேன். அந்த டெக்னிகல் மேனேஜர் நல்ல ஆளாத்தான் தெரியறான். ஹீ இஸ் நாட் அ மோல்.”
“ஃபார் ஃப்ரம் இட்! அவன் ஒரு திருடன். நல்லவனா தெரியறான்னா அதுக்கு ஒரே காரணம் இன்னும் சான்ஸ் கிடைக்காததுதான். அவனுக்கு ட்ரேட் சீக்ரட் அக்சஸ் கிடைச்சுதுன்னா முதல் வேலையா வித்துடுவான்” இவன் ஏன் இவ்வளவு அவசரமாக முடிவெடுக்கிறான்? என்னிடமே நடிக்கிறானா?
”எப்படி சொல்றே?”
“எம் டி ஓ.. மிஸ்ட்ரஸ்ட் த ஆப்வியஸ்.. வெளிப்படையா தெரியறதை நம்பாதே மீக். நீ அந்த ஆளை ஃபாலோ பண்ணே, அவனோட பழைய எம்ப்ளாய்மெண்ட் ரெக்கார்ட் எல்லாத்தையும் செக் பண்ணே.. ஆனா நான் எடுத்துகிட்டது அவனோட ஃபைனான்ஷியல் நிலவரத்தை”
“அதுல என்ன தெரிஞ்சுது?”
“தலைவருக்கு தலைக்கு மேலே கடன். உடனடியா பணம் தேவைப்படுது. லோன் ஷார்க் கிட்ட மாட்டி இருக்கான். ரேஸா, நம்பர் கேமா தெரியலை. பணத்தை கச்சாமுச்சான்னு விட்டிருக்கான். எல்லாம் ரீசண்டா நடந்தது”
மீக் விசிலடித்தான். “நீ சொல்றது சரியா இருக்கலாம் ரெனே.. இருக்கலாம் என்ன.. இருக்கும்! ஆனா எப்படி கன்ஃபார்ம் பண்றது?”
“எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. இவனோட காம்படிஷன் கம்பெனி காண்டாக்ட் பாரிஸ்லே இருக்கான். அவனைப் பத்தி கொஞ்சம் விவரம் கலெக்ட் பண்ணனும். ரெண்டு நாள். திரும்பி வந்து முடிவெடுக்கலாம்” இவனைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். சப்பை மேட்டருக்கும் என்னைக் கேட்கிறான். எதற்கெடுத்தாலும் என்னுடன் சண்டை போடுபவன் இவ்வளவு நல்லவனாக ஆனது எப்போதிருந்து?
இரண்டு நாட்களில் ரெனே திரும்பி வந்தபோது அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது. க்ளையண்ட் வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். “உங்க கம்பெனி ஒரு ஜீனியஸ் கம்பெனி. அதுவும் பர்டிகுலரா மிஸ்டர் மீக் ரிப்பர்!”
ரெனே புரியாமல் விழித்தான்.
“சிம்பிள் ஐடியா.. சில ஃபேக் டாகுமெண்ட்ஸுக்கு அந்த டெக் மேனேஜருக்கு அக்சஸ் கொடுத்தார். ஒரே நாள்லே அது வெளியே போனதை ப்ரூவ் பண்ணிட்டார். அவன் இப்போ ஜெயில்லே”
மீக் ரெனேவைப் பார்த்துப் புன்னகைத்தான். “இவருக்கும்தான் க்ரெடிட் போகணும் சார்”
வெளியே வந்ததும் மீக் சொன்னான் “ரெனே.. ஐ அம் க்விட்டிங். இந்த கம்பெனி சி ஈ ஓக்கு என் வேலை ரொம்ப பிடிச்சுருச்சாம். செக்யூரிட்டி கன்சல்டண்டா வரச் சொன்னார்”
“உன் வேலை?”
“அட் லீஸ்ட் அந்த லாஸ்ட் ஐடியா என்னுடையதுதானே?”
“கெட் லாஸ்ட் மீக்.. குட் ரிட்டன்ஸ்” ரெனேவால் கோபத்தை மறைக்க முடியவில்லை.
இப்போதும் அந்தக்கோபம் கொஞ்சமும் ஆறவில்லை. மீக்.. வருகிறேன். இதில் ப்ரூவ் செய்கிறேன் யார் நிஜமான பெஸ்ட் என்று..
***
”நிஜமான பெஸ்ட்தான் வேண்டும் என்றால் ப்ராஜக்ட் வேல்யூ அதிகரிக்கதான் செய்யும் “ ரவி சோஃபாவில் அமர்ந்திருந்தான். ஐஸ் ரிங்க்கின் நடுவே போட்டிருந்த ரெஸ்டாரண்டில் இசையின் சப்தத்துக்கு மேல் பேசவேண்டி இருந்தது.
மீக் அமைதியாக இருந்தான். லென்னிதான் ரவியிடம் விஷயம் புரியாமலே பேசிக்கொண்டு இருந்தான்.
“சினிமா எடுக்கவே இவ்வளவு செலவு ஆகாதே”
“நீங்கள் கார்ப்பொரேட் ஆசாமி. உங்களுக்கு சினிமா நிலவரம் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அண்ட், திஸ் இஸ் நாட் சினிமா. விளம்பரமும் கிடையாது. இது ஒரு யுனிக் ஆர்ட். ப்ரமோஷனல் வீடியோக்களில் எங்கள் நிறுவனம்தான் பெஸ்ட். ஃபார்ச்சூன் 500லேயே பத்து கம்பெனிக்கு மேலே எடுத்துத் தந்திருக்கோம்.”
மீக் லென்னியைப் பார்த்த பார்வையில் மேட்டருக்கு வாடா இருந்தது.
“ஓக்கே மிஸ்டர் ராவி. ரூமுக்கு வருகிறீர்களா, எங்கள் கார்ப்போரேட் ப்ரமோஷனல் ப்ரோஷர்ஸ் தரோம்”
ஐஸ்ரிங்க் குழந்தைகள் சரேல் சரேல் என வழுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே எழுந்தார்கள். நடக்கும் வழி எல்லாம் ரவி தன் பிரதாபங்களை அளந்து கொண்டிருந்தான். “நாளைக்கு கூட ஏகே கார்ப்போரேட் ஷூட்டிங்குக்காக நடுக்கடல் ஆயில் ரிக்குக்கு போறோம். நடு டிஸர்ட், காட்டுக்கு நடுவுல.. படம் எடுக்காத இடமே பாக்கி இல்லை”
ரூமுக்குள் நுழைந்ததும் மீக் முதல் முறையாக பேசினான். “இவரை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்”
ரவிக்கு பேச்சு வரவில்லை. இவன் எங்கே இங்கே? காஃபி ஷாப்பில் பார்த்தவன், எதிர் ரூமில் கேமரா சகிதம் நின்றிருந்தவன்.
“டைரக்டர் பேசமாட்டார் போல. இவ்வளவு நேரம் நிற்காமல் பேசிக்கொண்டிருந்தாரே” சிரித்தான் லென்னி.
“நீங்களெல்லாம் யார்? படம் எடுக்கறதைப் பத்தி பேச வரச் சொல்லலைன்னு மட்டும் தெரியுது”
“ஷார்ப்பாதான் இருக்கீங்க. யெஸ். நீங்க படம் எடுக்கவேண்டாம். நாங்க கொஞ்சம் எடுத்திருக்கோம், அது பத்தி உங்க எக்ஸ்பர்ட் ஒப்பினியன் தேவைப்படுது” லென்னியின் சோர்ஸ் பையில் இருந்து சில படங்களை எடுத்து டேபிள் மேல் போட்டான்.
”தெளிவாக எடுத்திருக்கிறாயே” லென்னி புகழ சோர்ஸ் கூச்சமானான்.
“இந்த ஃபோட்டோக்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். இங்கேயே கலீல் இந்த ஃபோட்டோக்களைப் பார்த்தால் உன்னைக் கொலையே செய்வான். தேடிப்பிடித்து கல்யாணம் செய்துகொண்டான் பார் ஒரு நடிகையை. ஆனால் முக்கியமாக மும்பையில் உன் மனைவிக்கு இந்த ஃபோட்டோக்களில் ரொம்பவே இண்டரஸ்ட் இருக்கும். டைவர்ஸ் பேப்பர்ஸோடு இதையும் சேர்த்தால் உன்னை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து விடலாம். அந்த ஆசையில்தானே டிடெக்டிவ் ஏஜென்ஸியே உள்ள நுழைஞ்சுது..”
ரவி யோசித்தான். மும்பை மனைவியின்மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது. என்ன குறை வைத்தேன் உனக்கு. டைவர்ஸ் ஆகும்போது ஒழுங்காக செட்டில் செய்திருப்பேனே.. ஏன் என்னை பிச்சைக்காரனாக்க வெறி.
”அடுத்து என்ன?” என்றான் லென்னி.
மீக் கனைத்தான். “சார் யோசிப்பார். நீ ஏன் கவலைப்படறே?”
ரவிக்கு பேச்சு வரவில்லை. என் மனைவி டிடெக்டிவ் ஏஜன்சி வைத்தாள் என்றால் ரிப்போர்ட் அங்கே போகவேண்டியதுதானே? இவர்கள் ஏன் என்னுடன் பேசவேண்டும்? திக்கியது. இருந்தாலும் கேட்டான். “இதை ஏன் என் மனைவியிடம் சொல்லாமல்..”
“என்னவோ நினைத்தேன் உங்களை. ரொம்பவே ஷார்ப். ஐ லைக் டீலிங் வித் ஸ்மார்ட் மென். யெஸ். காரணம் இருக்கிறது”
“என்ன காரணம்?”
மீக் சட்டையில் இருந்து இன்னொரு ஃபோட்டோவை எடுத்தான். “இவர் பெயர் டெர்ரி. அமெரிக்காக்காரர். இப்போது காணவில்லை. எங்கே இருப்பார் என்று தெரிந்த ஒரே ஆள் கலீல். அவரை எங்களால் நேரடியாக அணுக முடியாது. அங்கேதான் உன் உதவி வேண்டும்”
ரவி குழப்பமானான். “புரியவில்லை”
***
“புரியவில்லை” என்றான் அமீர்.
“இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது? நீ, உன்னை வேலைக்கு அமர்த்திய உன் பாஸ் எல்லாரும் முட்டாள்கள் என்றேன்” டெர்ரி கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்தார். கொஞ்சம் களைப்பாகத் தெரிந்தாலும் சௌகர்யமாகத்தான் இருந்தார்.
“நான் ஒரு விஞ்ஞானி, ஓக்கே. சாலிஸ்க்காக வேலை செய்கிறேன், ஓக்கே. ஆனால் என் ஆராய்ச்சியின் காபிரைட் எனக்குதான். சாலிஸுடன் என் காண்ட்ராக்ட் ரொம்ப சிம்பிள். என் ரிசர்ச்சுக்காக அவர்கள் செலவிடும் தொகையை என் கண்டுபிடிப்பின் மூலமோ, அல்லது கேஷாகவோ செட்டில் செய்யவேண்டும் – அஃப் கோர்ஸ் வித் அ பெனால்டி.. என்னை ஏன் கடத்திக் கொண்டு வர வேண்டும்? எனக்கு நல்ல காம்பன்சேஷன் செய்வதாகச் சொல்லி இருந்தால் நானே பேகை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே..ஏன் அனாவசிய ரிஸ்க்?”
”அதானே பாஸ்! இவ்வளவு சிம்பிளான வழியை ஏன் ஏகே தேர்ந்தெடுக்கவில்லை?” டேனிக்கும் குழப்பம்.
அமீர் குழம்பவில்லை. “டேனி, அமைதியா இரு. இந்த ஆள் நம்மை ஏமாத்தப் பாக்கறான். ஏகே அப்படி ஒரு டெசிஷன் எடுத்ததுக்கு சாலிடா காரணம் இருக்கு. உனக்கு அப்புறம் சொல்றேன்”
-தொடரும்