உறக்கமற்றவன்

பகுதி 6

கஜினி படத்தில் எப்படி சூர்யாவுக்கு இரண்டு வேடங்கள் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினோமோ, அதே மாதிரி அப்படத்தில் நடிக்கும் வில்லனையும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார் முருகதாஸ். பொதுவாக வில்லன்களை இரண்டு வேடங்களில் யாரும் நடிக்க வைத்தது இல்லை. தமது எண்ணம் புதுசாக இருக்கும், மற்றவர்களால் பாராட்டப்படும் என்று நினைத்தார் முருகதாஸ். ஆனால் சரவணன், சார் இது சரிப்பட்டு வராது, வேண்டாம் என்றார். பிடிவாதமாக தான் நினைத்ததைத்தான் செய்தார் முருகதாஸ். ஆனால் ரசிகர்களின் கருத்தும், பத்திரிகைகளின் விமர்சனங்களும் சரவணன் சொன்னதைத்தான் பிரதிபலித்தன.

இந்தியில் அமீர்கான் நடிக்க, கஜினியை ரீமேக் செய்த முருகதாஸ் தமிழில் செய்த இந்தத் தப்பைத் திருத்திக் கொண்டார் என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

இந்தக் கட்டுரைகளில் நான் ஒரு விஷயத்தை வலியுறுத்த பல சம்பவங்களைச் சொல்லி வருகிறேன். அதற்குக் காரணம், ஒவ்வொரு இயக்குனர்களும் எப்படியிருந்தாலும் உதவி இயக்குனர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை உதாரணம் மூலம் விளக்கத்தான்.

பாரதிராஜாவிடம் பணியாற்றிய அன்பு பற்றி இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். உதவி இயக்குனர்களின் உரிமையை பற்றிப் பேசுகிறபோது தாஜ்மஹால் படத்திலிருந்து இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லத் தோன்றுகிறது.

இப்படத்தில் பக்கத்து ஊரிலிருக்கும் காதலி ரியாசென்னைப் பார்க்க நள்ளிரவில் ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கிச் செல்வார்கள் ஹீரோவான மனோஜும் அவரது கூட்டாளிகள் சிலரும். அப்படிச் சென்று அவரைச் சந்திக்கும்போது ஊர்க்காரர்கள் பார்த்துவிடுவார்கள். ஊர் விட்டு ஊர் வந்து காதலிப்பதா என்று கோபமுறும் அவர்கள், கூட்டமாக விரட்ட, மனோஜும் அவருடன் சென்ற அவரது தோழர்களும் தண்ணீருக்குள் சட்டென்று குதித்து உள்ளேயே மூழ்கி மூழ்கித் தங்கள் ஊருக்கு வந்து சேர்வார்கள். இது சீன். இவர்களை துரத்தி வரும் அசலூர்க்காரர்கள் தங்கள் வாயில் கத்தியை வைத்துக்கொண்டு அப்படியே தண்ணீரில் நீந்தியபடி வருவார்கள்.

துரத்தி வரும் இவர்களைத்தான் படம் பிடித்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. எல்லாரையும் கழுத்தளவு தண்ணீரில் நிற்க வைத்துவிட்டு காட்சியை எடுக்கத் தயாராகிவிட்டார். ஸ்டார்ட், கேமிரா என்று உத்தரவும் கொடுத்துவிட்டார். அந்த நேரத்தில்தான் சார் ஒரு நிமிஷம் என்று பாரதிராஜாவின் உத்தரவுக்கு குறுக்கே புகுந்து ஆற்றுக்குள் இறங்கி ஓடினார் அன்பு. கையோடு எடுத்து சென்ற கத்தியை தண்ணீரில் நிற்கும் அந்த வாலிபரின் வாயில் கவ்விக் கொள்ள செய்துவிட்டு மேலேறி வர, செம பிடி பிடித்துக் கொண்டார் பாரதிராஜா. ”யோவ்… அறிவிருக்கா உனக்கு? அவன் வாயில நான் கத்திய வைக்கச் சொன்னேனா” என்று கோபத்தில் தாண்டவம் ஆட, ஆடிப்போனார் அன்பு.

”இல்ல சார். போன ஷாட்ல அவரு வாயில கத்தி இருந்திச்சு. கன்ட்டினியுட்டி மிஸ்ஸாவுதேன்னு…” என்று அவர் இழுக்க, மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். வேறொன்றுமில்லை. அப்போது பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்தது அவர்களை அல்ல. அந்த வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கிச் செல்லும்போது மேலே தோன்றுமே நீர்க்குமிழிகள்…. இதைதான் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை அன்பு. கண் எதிரே ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சா அதைச் சொல்லிடணும். அவங்க தப்பா நினைச்சாலும் சரி. அந்தப் படம் முழுக்க நான் டைரக்டர்கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன். சில நேரம் ஓங்கி அடித்தாலும் அடிப்பார். ஆனால் அவ்வளவும் நான் செய்து கொண்டிருக்கிற வேலைக்காக என்றால் அதுதான் சந்தோஷம் என்கிறார் அன்பு. தற்போது மிட்டாய் என்ற படத்தை இயக்கி வருகிறார் இவர்.

இது எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் இன்னொன்று. சம்பளம். படப்பிடிப்பில் தினசரி பேட்டாவை வாங்கிவிடுகிற உதவி இயக்குனர்களுக்குத் தனியாகப் பேசப்பட்ட சம்பளம் மட்டும் முழுமையாக வந்து சேராது. எல்லாத் தயாரிப்பு நிறுவனங்களும் அப்படியல்ல என்றாலும், சில நிறுவனங்களில் கடைசி நேரத்தில் கை விரித்துவிடுவார்கள். இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இயக்குனர் ஒரு யுக்தி செய்வார். தன்னுடைய சம்பளத்தைப் பேசும்போதே உதவி இயக்குனர்களுக்குமான சம்பளத்தையும் பேசுவார். அதை என் சம்பளத்திலிருந்தே கொடுத்துவிடுகிறேன். நீங்கள் எனக்குக் கொடுக்கும்போது அதையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்களேன் என்பார். அப்படிப் பேசி வாங்கப்படுகிற சம்பளம் உதவி இயக்குனர்களின் கைக்குப் போகிறதா என்றால், பெரும்பாலான இயக்குனர்கள் அதையும் ஸ்வாகா செய்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை தரும் உண்மை.

மேய்ப்பனே புல் தின்கிற இந்தக் கொடுமைக்கு ஆளாகிற உதவி இயக்குனர்கள், வாய் பேச முடியாமல் ஒதுங்கி நின்று அழுவது இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதையெல்லாம் களைய வேண்டும் என்பதற்காகவே இயக்குனர்கள் சங்கம் அதிரடியாக ஒரு முடிவெடுத்து இருக்கிறது. உதவி இயக்குனர்களின் சம்பளத்தை சங்கமே வாங்கி அவர்களுக்குப் பிரித்துத் தரும். இப்படித் தீர்மானம் போட்ட சில தினங்களிலேயே, ‘பெண் சிங்கம்’ படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட சம்பளத்தை, முதல்வர் கருணாநிதி கையால் அப்படத்தில் வேலை செய்த உதவி இயக்குனர்களுக்கு வழங்கி தனது அதிரடியை ஆரம்பித்து வைத்தது இயக்குனர்கள் சங்கம்.

ஆனால் இந்த முறையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த இயலாதபடி தொடர்ந்து முட்டுக்கட்டைகள். சில பட நிறுவனங்களும் இயக்குனர்களும்கூட இந்த முறைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. ஆனால் தனது திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறது இயக்குனர்கள் சங்கம்.

படப்பிடிப்புக்கு முன்….

ஒரு படம் கதை விவாதத்தில் துவங்கும் என்பதை நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். அந்த விவாதத்தில் உதவி இயக்குனர்களின் பணி என்ன என்பதையும் அலசிவிட்டோம். படப்பிடிப்புக்கு முன்பு இன்னும் பல முக்கியமான வேலைகள் இருக்கிறது. ‘இன்று பாடல் பதிவுடன் இனிதே துவங்குகிறோம்…’ என்ற வாசகத்தை அடிக்கடி தினத்தந்தியில் பார்த்திருப்பீர்கள்.

டைரக்டர் தனது கோ டைரக்டர் மற்றும் இரண்டு உதவி டைரக்டர்களுடன் இங்கு வந்து அமர்ந்து விடுவார். ஏற்கனவே இசையமைப்பாளரிடம் கதை சொல்லப்பட்டிருக்கும். பாடல்கள் படத்தில் எந்தெந்த இடங்களில் வரவேண்டும் என்பதை இயக்குனரும் இசையமைப்பாளரும் தீர்மானிப்பார்கள். இசைஞானி இளையராஜா போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் அந்த இடத்தையும் அவர்களே தீர்மானித்துவிடுவார்கள். நாம் சொல்வது அடுத்தகட்ட இசையமைப்பாளர்களை பற்றியும் அல்லது அறிமுகமாகிற இசையமைப்பாளர்களின் கம்போசிங் பற்றியும்.

சுச்சுவேஷனுக்கு ஏற்றார் போல இசையமைப்பாளர் ட்யூன் போட்டுக் கொண்டிருப்பார். அந்த ட்யூனை கேட்டுவிட்டு டைரக்டரின் காதில் ரகசியமாக தனது அபிப்ராயத்தை சொல்வார்கள் இந்த உதவி இயக்குனர்கள். சார், இந்த ட்யூனை விட இன்னும் பெட்டரா இருக்கலாம் என்று சொல்வதுண்டு. பல ட்யூன்கள் இந்த உதவி இயக்குனர்களால் பாழாய்ப் போகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை அந்த இசையமைப்பாளர் இயக்குனரை விட்டுவிட்டு காதில் கிசுகிசுக்கும் இந்த உதவி இயக்குனர்களைப் பிடித்துக் கொள்வார். தம்பி, எப்பிடியிருக்கு என்று அவர் நேரடியாகக் கேட்டுவிடுவதால் பலர் சூப்பர் என்று கூறி, பின்பு டைரக்டரிடம் வாங்கியும் கட்டிக் கொள்வார்கள். இந்த நேரத்தில், ’கதைக்கு இந்த ட்யூன் பொருந்துகிறதா’ என்பது மட்டுமே உதவி இயக்குனர்களின் பார்வையாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் ட்யூனுக்கு டம்மி வரிகள் போடக்கூடிய வாய்ப்பும் இந்த உதவி இயக்குனர்களுக்குக் கிடைக்கும். ‘ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும். கேட்கும்போதெல்லாம் அந்த ஞாபகம் தாலாட்டும்…’ என்றொரு பாடல் சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே தாலாட்டியது நினைவிருக்கலாம். அதை எழுதிய கலைக்குமார் என்பவர் டைரக்டர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தார். கம்போசிங்கின்போது அவர் போட்ட டம்மி வரிகள்தான் பின்பு பாடலாக வந்து அவரைப் பாடலாசிரியராகவும் மாற்றியது. அதன்பின் சுமார் ஐம்பது பாடல்களாவது வெவ்வேறு படங்களில் எழுதிவிட்டார் அவர்.

பாடல் பதிவு முடிந்ததும் உதவி இயக்குனர்களின் அடுத்த வேலை போட்டோ ஷுட்டிங்குக்காக உதவுவது. முன்பு இந்த கலாசாரம் இல்லை. ஆனால் இப்போது 90 சதவீத படங்களுக்கு தனியாக போட்டோ செஷன் எடுக்கப்படுகிறது. இதற்காகவே ஸ்பெஷல் போட்டோகிராபர்கள் இருக்கிறார்கள். கைமல், மணிகண்டன், போன்ற இந்த ஸ்பெஷலிஸ்டுகள் மும்பையிலிருந்து விமானத்தில் பறந்துவந்து வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். பில்…? லட்சங்களில்! இதில் இன்னொரு எக்ஸ்பர்ட்டும் இருக்கிறார். தேனி ஈஸ்வர். இவர் விகடனின் வளர்ப்பு. இவரைப்போலவே சங்கர் சத்யமூர்த்தி, ஆன்ட்டனி ஸ்ரீதர் போன்ற ஜாம்பவான்களும் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். இப்படி எடுக்கப்படுகிற புகைப்படங்கள் பத்திரிகை விளம்பரங்களுக்கும், போஸ்டர் அடிக்கவும் பயன்படுகின்றன. பெரும்பாலும் இவை கதையை ஒட்டியே இருக்கும். இப்போது சில இயக்குனர்கள் அதையும் செய்வதில்லை. எங்காவது நல்ல புகைப்படத்தை பார்த்தால் அதே மாதிரி நம்ம ஆர்ட்டிஸ்ட்டை வச்சு எடுத்துக் கொடுத்திடுங்க என்று கூறிவிடுகிறார்கள்.

இந்த மாதிரி அசத்தல் புகைப்படங்களைத் தேடிப்பிடிக்கிற வேலையும் உதவி இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்படும். லேண்ட் மார்க், ஹிக்கிம் பாதம்ஸ் என்று புத்தகக்கடைகளில் அலைந்து திரிந்து நல்ல புகைப்படங்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கி வருவதும் இவர்களின் வேலைகளில் ஒன்று. இன்டர்நெட்டில் தேடுவதும் இவர்களின் பணி.

(தொடரும்…)

முதல் ஐந்து பகுதிகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

எலக்ட்ரானிக் காந்தி

காந்தி சிரிக்கிறார். காந்தியின் பொக்கைவாய்ச் சிரிப்போடு கூடிய ஒரு தாள் என் பாக்கெட்டிலும் இருந்தால், நானும் சிரிப்பேன். காந்தி நோட்டில் சிரிப்பது அவரவர்களின் நிலைமைக்கு ஏற்ப, சந்தோஷமோ, நக்கலோ, துக்கமோ, இன்னபிறவாகவோ இருக்கலாம். ஆனால், காந்தி உங்கள் பர்ஸில் சிரிக்காமல், உங்களுக்குச் சிரிப்பு வராது.

விடாது கருப்பு மாதிரி இந்தப் பணப் பரிமாற்றம் என்னை விடாது துரத்துகிறது. உங்களுடைய சம்பளம் வங்கியில் நேரடியாகச் சேர்கிறது. உங்களுடைய ECS நேரடியாகக் கழிகிறது. மென்பொருள் துறையில் இருக்கும் பெரும்பாலான நணபர்களின் புலம்பல் இதுதான். “பணம் வர்றத்தும் தெரியல, போறதும் தெரியல, எல்லாம் அதுவே ஆட்டோ கிரெடிட்/டெபிட் ஆகுது, கையில எதுவும் நிக்க மாட்டேங்குது. அப்படி போகுது வாழ்க்கை.”

காந்தி பைனரியில் பிரயாணம் செய்து, பைட்டுகளாக மாறி, அதிர்ஷ்டமிருந்து பெறுனராக நீங்கள் இருந்தால், ஸ்டாஸ்டிக்காக உங்கள் வங்கிக் கணக்கில் பிரகாசமாய் சிரிப்பார். இதற்குக் காரணம் ரெண்டே சேவைகள்; NEFT & RTGS

இந்த ஆட்டோ டெபிட்/கிரெடிட் சமாசாரங்கள், சம்சாரத்திற்குத் தெரியாமல் நடப்பதை டார்டாய்ஸினை கையிலெடுத்துக் கொண்டு கொஞ்சம் ப்ளாஷ்பேக்கலாம்.

அக்டோபர் 2005ல் ரிசர்வ் வங்கி ஆரம்பித்து வைத்ததுதான் இது. ஒரு வங்கிக் கிளையிலிருந்து, இன்னொரு வங்கியின் கிளைக்கு மிகவும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணத்தினை அனுப்ப ஆரம்பிக்கப்பட்டதுதான் NEFT – National Electronic Fund Transfer – தேசிய மின் பணப்பரிமாற்ற சேவை. தமிழ் அக்ரானிம்களுக்கு ஒரு மோசமான மொழியாக இருப்பதால் (திமுக, அதிமுக, பாமக தவிர) ஆங்கிலத்திலேயே குறிப்போம்.

NEFT

NEFT இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்தியன் பைனான்ஷியல் நெட்வொர்க், சுருக்கமாய் INFINET (Indian Financial Network) வழியாக இயங்குகிறது. இன்பிநெட் PKI (Public Key Infrastructure) என்கிற தொழில்நுட்பத்தின் வழியாக, இருமுனை பாதுகாப்பு விஷயங்களோடு இயங்கும் ஒரு விஷயம்.இது பற்றிப் பேசவேண்டுமானால், தனியாக ஒரு நாள் ரூம் போட்டு என்க்ரிப்ஷன், அல்காரிதம், டபுள் கீ, ஹாக்கிங், சர்வர்/கிளையண்ட் சைட் செக்யுரிட்டி என்றெல்லாம் ஜல்லியடிக்க வேண்டும். இப்போதைக்கு இது தெரிந்தால் போதும்.

NEFT தான் இந்தியாவின் முதன்மையான மின் பணப் பரிமாற்ற சேவை. RTGS இதனுடைய சற்றேறக் குறைய லார்ஜர் வெர்ஷன். இரண்டுக்கும் அடிப்படை IFSC. அதென்ன IFSC, SSLC மாதிரி?

IFSC – Indian Financial System Code. ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கான ஒரு எண்ணெழுத்து (alpha numeric) குறியீட்டு எண் தான், உதாரணத்துக்குச் சொன்னால், இப்படி இருக்கும் – BKID0008010

இது ஒரு 11 இலக்கங்கள் கொண்ட எண்ணெழுத்து. இதன் முதல் நான்கு இலக்கங்கள் எழுத்தாய் இருக்கும், முக்கியமாய் வங்கியின் பெயராய் இருக்கும். (மேலே சொன்னது பாங்க் ஆப் இந்தியா.) இந்த நான்கு இலக்கங்களுக்குப்பின் கட்டாயமாய் 0 வரும். பின் வரும் ஆறு இலக்கங்கள், வங்கிக் கிளைக்கானது. மேற்சொன்ன எண் பாங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு, சென்னை, அடையார் கிளைக்கானது. இது தான் IFSC-இன் படம் வரைந்து பாகங்களைக் குறிக்காமல் விளக்கும் விவரம். இந்த எண்ணெழுத்துதான் உங்கள் வங்கிக் கணக்கின் மின் பணப் பரிமாற்றத்தினை நிர்ணயிக்கும் காரணகர்த்தா.

உங்கள் செக்புக்கில் முக்கால்வாசி வலதுப் புற முலையில் தேமே என்று IFSC/RTGS Code இருக்கும். இல்லையென்றால், வங்கிக் கணக்கின் IFSC எண் தெரிந்து கொள்ள இந்த தளத்திற்குப் படையெடுங்கள்.

NEFT அடிப்படையில் ரொம்ப சுலபம். உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம், ரெண்டே விஷயங்கள்தான். நீங்கள் யாருக்குப் பணம் அனுப்பப் போகிறீர்களோ, அவர்களுடைய வங்கிக் கணக்கு எண்/கிளை, பெயர் மட்டுமே. இன்றைக்கு பெரும்பாலான வங்கிகளின் இணையத்தளங்கள், நீங்கள் பெயர் மற்றும் வங்கிக் கிளை கொடுத்தாலே, IFSC எண்ணிணை உடனடியாகத் தந்துவிடும். நீங்கள் அந்த நபரை Beneficiary யாகச் சேர்த்துக் கொண்டால் போதும். அதன்பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். எவ்வளவு நபர்களை வேண்டுமானாலும், உங்கள் கணக்கில் நீங்கள் Beneficiaryயாகச் சேர்த்துக் கொள்ள முடியும். டிவிட்டரில் டிஎம் அனுப்பினால், என் விவரங்களை தருகிறேன். உங்கள் மனம் போல் அனுப்பலாம்.

NEFT எப்படி வேலை செய்கிறது?

  1. நீங்கள் உங்கள் இணைய வங்கி சேவையினை உபயோகித்தோ, அல்லது கிளைக்குச் சென்றோ NEFT பயன்படுத்தமுடியும். பெறுநரின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கிப் பெயர், கிளை போன்றவற்றைக் கொடுத்தால் போதுமானது. ஏடிஎம்-களின் வழியாகவும் இதைப் பயன்படுத்த சில வங்கிகள் அனுமதிக்கின்றன. (எ.கா. நாராயணனுக்கு இதைப் படிப்பவர்கள் அனைவரும் உடனடியாக வங்கிக்குச் சென்று ரூ.1000 அனுப்புவார்கள்.)
  2. வங்கி, நீங்கள் நாராயணனுக்குக் கொடுக்கவேண்டிய ரூ.1000த்தைப் பெற்றுக் கொண்டோ, அல்லது உங்கள் கணக்கிலிருந்து கழித்துக் கொண்டோ, நாராயணனின் வங்கிக்கு ஒரு செய்தி அனுப்புவார்கள். இந்தச் செய்தி நேரடியாக நாராயணின் வங்கியின் கிளைக்குப் போகாது. இது போகக்கூடிய இடம் NEFT சேவை மையம்.
  3. இதைப் பெற்று கொள்ளும் சேவை மையம், இதை NEFT Clearing Centreக்கு அனுப்பும். இந்த பட்டுவாடா மையத்தினை ரிசர்வ் வங்கியின் கீழுள்ள தேசிய பட்டுவாடா இயக்ககம் (National Clearing Cell) பெற்றுக் கொண்டு, அடுத்த சுற்றிற்காகக் காத்திருக்கும். இந்தச் சுற்று கதைக்கு அப்புறம் வருவோம்.
  4. பட்டுவாடா மையம், வங்கி- வாரியாக, கணக்கு முறையினை ரெடி செய்யும். எந்த வங்கியிலிருந்து கழிக்க வேண்டும், எந்த வங்கிக் கணக்கில் பெருக்க வேண்டும் என்றொரு லிஸ்ட் வரும். இது ரெடியானபின், பணத்தினைப் போட வேண்டிய வ்ங்கிகளுக்கான லிஸ்டினை ரெடி செய்து, அதனை NEFT சேவை மையத்திற்கு அனுப்பும்.
  5. சேவை மையத்திலிருந்து குறிப்பிட்ட பணம் பெறும் வங்கிகளுக்குச் செய்தி வந்தவுடன், வங்கிகள் அந்த பணத்தினைக் குறிப்பிட்ட வங்கி எண்ணில் கிரெடிட் செய்துவிடும். நாராயணன் சந்தோஷமாகி விடுவான் :)

சுற்று மேட்டருக்கு வருவோம். NEFT என்பது DNS (Deferred Net Settlement) அடிப்படையில் இயங்குகிறது. தமிழில் சொன்னால், இது அஞ்சலகம் மாதிரி. அஞ்சலகத்தில் தபால்கள் வந்தவுடன், அதை மொத்தமாகப் பிரித்து, அதன்பின் டெலிவரிக்குப் போகும். அந்த மாதிரி, ஒவ்வொரு பணப் பரிமாற்றமும், மேற்சொன்ன வகையில் பட்டுவாடா மையத்திற்குப் போய்விடும். மையம் இதை உடனடியாகச் செயல்படுத்தாது; மொத்தமாக ஒரு குறிப்பிட்ட பரிமாற்றங்கள் வந்தவுடன், மொத்தமாய்ச் செயல்படுத்தி திருப்பி அனுப்பும். கேட்க இதென்னவோ தாசில்தார் ஆபிஸில் சாதிச் சான்றிதழ் பெறுவது போலக் கடினமாக இருந்தாலும், இது அத்தனையும் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.

NEFTஇல் இப்போது 6 சுற்றுகள் இருக்கின்றன. வார நாட்களில், காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.00 மணிவரை 6 சுற்றுகள் ஒடும். 9.00 / 11.00 / 12.00 / மதியம் 1.00 / 3.00 / 5.00. சனிக்கிழமைகளில் 3 சுற்றுகள் 9.00 / 11.00 / 12.00. நீங்கள் ஒருவேளை 12.13க்கு அனுப்பினால், அது 1.00 மணி சுற்றில் சேர்ந்துவிடும், 3.00 மணிக்குள் நீங்கள் அனுப்பியவரின் கணக்கில் வரவு வைக்கப்படும். IFSC எண் இருக்கிற எந்த வங்கியிலிருந்தும் இன்னொரு வங்கிக்கு இதன் மூலம் பணம் அனுப்பலாம். காலையில் அனுப்பினால், மதியத்திற்குள் போய் சேர்ந்து விடும். குறைந்த பட்ச தொகை என்று எதுவும் கிடையாது. ரூ.10 கூட அனுப்பலாம்.

NEFT இன்றைக்கு இந்தியாவின் முக்கியமான மின் பணப் பரிமாற்றம். 107 வங்கிகள், தங்களின் 80000+ கிளைகளில் இன்றைக்கு மின் பணம் சாத்தியம். சில மணி நேரங்களில் இந்தியாவில் யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பணத்தினை அனுப்ப முடியும், பெற முடியும்.

NEFT-ல் நேபாளத்திற்கும் காசு அனுப்பமுடியும், சோப்ராஜ் உங்கள் சொந்தகாரராய் இருந்தால் கொஞ்சமாய் ட்ரான்ஸ்பர் பண்ணுங்கள். இது தாண்டி, நீங்கள் வெளிநாடு வாழ் இந்தியராய் இருந்து NRE, NRO கணக்குகள் வைத்திருந்தால், விதிமுறைகளின் கீழ் நீங்களும், இந்திய வங்கி கணக்குக்குப் பணம் அனுப்பமுடியும். நான் டாலரோ, திர்ஹாமோ, யூரோவோ எதுவாயிருந்தாலும் பெற்று கொள்கிறேன்.

NEFT சேவைக்கான கட்டணங்கள்

இன்கமிங் கால் இலவசம் என்பது மாதிரி, உங்கள் கணக்கிற்கு வரும் பணத்திற்கு எந்தக் கட்டணமும் இல்லை. (ஆனால் சேர்த்து வைத்து வருடக் கடைசியில், வருமானவரி மாமாக்கள் தீட்டிவிடுவார்கள் என்பது வேறு விஷயம்.) பணத்தினை அனுப்புவருக்குத்தான் கட்டணம்.

முந்தாநாளிலிருந்து (நவ.15) NEFT-ன் கட்டணத்தில் ஒரு சிறிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த நடு ஒரு லட்சம் – இரண்டு லட்சம், முந்தாநாள் வரை கிடையாது.

ஒரு லட்சம் ரூபாய் வரை ரூ. 5 + சேவை வரி*
ஒரு லட்சம் – இரண்டு லட்சம் ரூ.15 + சேவை வரி
இரண்டு லட்சத்திற்கு மேலாக ரூ.25 + சேவை வரி

* இப்போதைக்கு இந்தியாவில் சேவை வரி என்பது 10.3% உள்ளது. நீங்கள் அனுப்பும் தொகையோடு, சேவைக் கட்டணம் + சேவை வரியும் சேர்த்து உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

RTGS

RTGS – Real Time Gross Settlement (உடனடிப் பரிமாற்றம்) என்பது NEFT-இன் பெரியண்ணன். சில்லறை ஆட்களுக்கு இங்கே இடமில்லை. இதுவும் மின் பணப் பரிமாற்றம் தான், ஆனால் பரிமாற்றம் நடக்கும் தொகை கொஞ்சம் அதிகம். பெரிய வித்தியாசம் என்னவெனில், இதுவும் இன்பிநெட் சார்ந்து இயங்கினாலும், இது ரியல் டைம் பரிமாற்றம். NEFT-இல் அஞ்சலக வேலைகள் எல்லாம் இருக்கின்றன. RTGS-ல் கிடையாது. சுருக்கமாய், RTGS என்பது மேகி நூடுல்ஸ் மாதிரி. இன்ஸ்டண்ட் பரிமாற்றம். அதிகபட்சம் 10-15 நிமிடங்களில் உங்களுடைய பெறுநருக்குப் போய்விடும். அப்படி எதாவது சொதப்பினால், ரிசர்வ் வங்கியின் கட்டளைப்படி, இரண்டு மணி நேரத்துக்குள், உங்கள் வங்கிக் கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். RTGSயில் அல்ப்பையாய் பணம் அனுப்ப முடியாது. குறைந்தபட்ச பரிமாற்றத் தொகை ஒரு லட்சம். அதிகபட்சமாய் உங்கள் சொத்தினை எழுதிவைத்தாலும், நான் சுணங்காமல் வாங்கிக் கொள்வேன்.

இந்தியாவின் பெரு நிறுவனங்கள் அனைத்தும் RTGS நம்பியே இருக்கின்றன. எல்லாம் பல கோடிகளில் பரிவர்த்தனைகள் நடத்துபவை. RTGSஇன் நேரம் NEFTனை விட குறைவு. வார நாட்களில், காலை 9.00 முதல் மாலை 4.30 வரை. சனிக்கிழமைகளில் காலை 9.00 முதல் மதியம் 12.30 வரை. NEFT போல சுற்றுகள் எல்லாம் கிடையாது. இங்கிலிஷ் பட கிஸ் போல, இடைவெளி என்பதெல்லாம் RTGSல் கிடையாது. பணம் வர வர, கைமாறிக் கொண்டேயிருக்கும். பெரியதாய் ஒன்றுமில்லை, ஒரு நாளைக்கு இந்தியாவில் RTGS வழியாக, சராசரியாக 60,000 பரிவர்த்தனைகள் நடக்கின்றன. பரிமாற்றம் செய்யப்படும் பணம், ஜஸ்ட் 2,700 கோடிகள்தான்.

RTGS சேவைக்கான கட்டணங்கள்:

NEFT-இல் சொன்னது போல இங்கேயும் பெறுநருக்கு கட்டணமில்லை.

ஒரு லட்சம் – இரண்டு லட்சம் ரூ. 0
இரண்டு லட்சம் – ஐந்து லட்சம் ரூ.25 + சேவை வரி
ஐந்து லட்சத்திற்கு மேல் ரூ.50 + சேவை வரி

NEFT / RTGS ஆறு வித்தியாசங்கள்

  • NEFT சேவையினை நீங்கள் NRE, NRO கணக்கு வைத்திருந்தாலும் பயன்படுத்த முடியும். RTGS-ல் முடியாது.
  • NEFT ஒரு நாளுக்குள் வந்து சேரும். RTGS-மேகி நூடுல்ஸ் போல, உடனடியாக வந்து சேரும்.
  • NEFT சேவையினை வைத்துக்கொண்டு நேபாளத்தில் இருக்கும் நபர்களுக்கும் பணத்தினை மாற்ற முடியும்.RTGS-ல் முடியாது.
  • NEFT-ல் குறைந்தபட்சம் என்று எதுவும் இல்லை, ரூ.10 கூட மாற்ற முடியும். RTGS-ல் குறைந்தபட்சம் ஒரு லட்சம் இருக்க வேண்டும். எனக்கு அனுப்புவோர் தயவுசெய்து RTGS உபயோகப்படுத்துங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  • NEFT சேவை (80,000 வங்கி கிளைகள், 99 வங்கிகள்), RTGS சேவையினை (71,045 வங்கி கிளைகள், 107 வங்கிகள்) விட பரவலாக எல்லா வங்கிகளிலும் கிடைக்கும்.
  • NEFT சேவையினை வைத்துக்கொண்டு உங்களின் கிரெடிட் கார்ட் பில்லினைச் செலுத்த முடியும். RTGS-ல் முடியாது.

இவ்வாறாக, கலியுகத்தில் காந்தியின் சிரிப்பு சர்வர்களில் அமுக்கப்பட்டு, அலைவரிசையாய் மாறி, பைனரியாய் `ராச வாழ்க்கை` வாழ்கிறது என்று இந்த வியாசத்தினை முடித்துக் கொள்கிறேன். :)

Image Credit: Opatija.net

ரயிலை நிறுத்திய நெய்

ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.

அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.

‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.

‘தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டாதான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. ‘இதை எப்பவும் மறந்துடாதே!’

அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. ‘நெய் சாப்பிட்டா பலமாயிடமுடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை’ என்று நினைத்தான். ஆனாலும் பாட்டி மனம் கோணக்கூடாதே என்பதற்காக வாங்கிக்கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.

அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்கதான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். சிவப்புக் கலரில் ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.

அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாத விஷயம், அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில். டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.

சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். ‘யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?’

‘நான்தான்ங்க. ஏன்?’ அப்பாவியாக விசாரித்தான் இவன்.

‘யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!’

அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது. ‘எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!’ என்று நெகிழ்ந்தான்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜென் குரு அவன் தலையில் குட்டினார். ‘முட்டாளே, ஒருவர் நிலாவைச் சுட்டிக் காட்டினால், நிலாவைப் பார்க்கப் பழகு. சுட்டிக் காட்டுகிற விரலையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்காதே!’ என்றார்.