சுதந்தரம்

கனகா, மெலிகா என்று இரண்டு தோழிகள். ரொம்ப நாள் கழித்து மீண்டும் சந்தித்தார்கள். பல வருடக் கதைகளைப் பேசியதில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

‘ஏண்டி, இவ்ளோ நேரமாப் பேசிகிட்டிருக்கோம். நீ உன் வீட்டுக்காரரைப்பத்தி எதுவும் சொல்லலையே’ என்றாள் கனகா.

’அவருக்கென்ன? நல்லவர்தான். என்னைத் தங்கத் தட்டில வெச்சுத் தாங்கறார். ஆனா …’

மெலிகா இப்படி இழுத்ததும் கனகாவுக்குக் குறுகுறுப்பு. ‘என்னடி விஷயம்? எதுவா இருந்தாலும் என்கிட்ட தயங்காம சொல்லு’ என்று தூண்டினாள்.

‘என் புருஷன் கை நிறையச் சம்பாதிக்கறார். பேங்க் பேலன்ஸ், சொத்துக்கெல்லாம் குறைச்சலே இல்லை. ஆனா அவருக்குத் தாராள மனசுமட்டும் வரவேமாட்டேங்குது’ என்றாள் மெலிகா. ‘எவ்வளவோ பேர் நல்ல விஷயங்களுக்காக உதவி கேட்டு அவர்கிட்டே வர்றாங்க. ஆனா அவர் யாரையும் கண்டுக்காம விரட்டி விட்டுடறார். இதை நினைச்சா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு.’

கனகா ஜென் படித்தவள். டோஜன் என்ற ஜென் குருநாதரின் போதனைகளில் இருந்து ஒரு விஷயத்தை மெலிகாவுக்குப் படித்துக் காண்பித்தாள்:

‘அங்கே ஒரு நீல மலை. பக்கத்தில் வெள்ளை மேகம். அந்த நீல மலைதான் தந்தை. வெள்ளை மேகம்தான் மகன். ஒருவரை விட்டு இன்னொருவரைப் பிரித்துப் பார்க்கமுடியாது. அப்படி ஓர் ஆழமான பிணைப்பு அவர்களுக்குள் உண்டு.’

‘ஆனால் அதேசமயம், நீல மலையோ வெள்ளை மேகமோ அடுத்தவருக்காகத் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. மலையைச் சார்ந்து மேகம் இல்லை, மேகத்தைச் சார்ந்து மலையும் இல்லை. அவை ஒன்றோடொன்று பிணைந்திருந்தாலும் தங்கள் சுதந்தரத்தை விட்டுக்கொடுக்காமலும் வாழ்கின்றன.’

‘இதுக்கும் என்னோட பிரச்னைக்கும் என்னடி சம்பந்தம்?’ புரியாமல் கேட்டாள் மெலிகா.

‘உன் புருஷனுக்குச் சேவை மனப்பான்மை இல்லையேன்னு நீ வருத்தப்படறது நியாயம்தான் மெலிகா. ஆனா அதுக்காக நீ உன்னை மாத்திக்கவேண்டிய கட்டாயமோ அவசியமோ இல்லை. அவரோட மனைவிங்கற முறையில இல்லாட்டியும், ஒரு தனிப்பட்ட மனுஷியா உன்னால முடிஞ்சதைச் சுதந்தரமாச் செஞ்சு பழகு’ என்றாள் கனகா, ‘ புருஷன் – பொண்டாட்டி, அப்பா – மகன், மாமியார் – மருமகள், வாத்தியார் – மாணவர், அரசியல்வாதி – தொண்டர்ன்னு எந்த உறவிலயும் ஒருத்தர் மத்தவரைச் சார்ந்து வாழறது தப்பில்லை. ஆனா அது அவங்களோட சுதந்தரத்தைத் தின்னுடாம பார்த்துக்கணும். அதுதான் முக்கியம்!’

மொபைல் பர்ஸ்

உங்கள் ஆட்டோக் காரர், திடீரென்று “காசு வாணாம் சார், 120 ரூ என் மொபலைலுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க” என்று சொன்னால் நீங்கள் வடிவேலாகி, அப்படியே ஒரு ஜெர்க் விட்டு ஷாக்காய்ய்ய்ய்யிட மாட்டீர்கள்? ஷாக்காக ரெடியாகுங்கள்.

பொருளாதார மறுசீராக்கம் நடந்த 18 ஆண்டுகளில் இந்தியாவில் அபரிதமாக வளர்ந்த ஒரே துறை செல்பேசித் துறை. ஒரு காலத்தில் ரூ.16 வெளி காலுக்கும், இன்கமிங் காலுக்கும் காசு கொடுத்தேன் என்று யாரிடமாவது நான் சொன்னால், அவர்கள் வாயைத் தவிர எல்லா இடத்தாலும் சிரிப்பார்கள். பூஜ்ஜியத்துக்கு பிறகு, இந்தியா உலகுக்கு அளித்த கொடை, செல்பேசி மிஸ்டு கால்.

செல்பேசி இன்றைக்கு இந்தியாவின் எல்லா மூலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஏர்டெல், ரிலையன்ஸ் மாதிரியான நிறுவனங்கள் சர்வசாதாரணமாக 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கின்றன. சராசரியாக ஒரு மாதத்துக்கு 50 லட்சம் வாடிக்கையாளர்கள் புதியதாக செல் சேவை இணைப்பு வாங்குகிறார்கள். இந்தியாவின் மக்கள்தொகையில் சற்றேறக்குறைய 60% மக்கள் கையில் செல்போன் இருக்கிறது. உலகின் மிக வேகமாக வளரும் டெலிகாம் சந்தை இந்தியாதான்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியாவில் செல்பேசி முன்னேறிய அளவுக்கு, பிற துறைகள் முன்னேறவில்லை, வங்கித்துறையும் சேர்த்து. இந்தியா ஒரு கேஷ் எகானமி (Cash Economy). காசைக் கண்ணால் பார்த்தால் ஒழிய 90/100 பேர்கள் நம்பமாட்டார்கள். இந்தியா எந்த அளவுக்கு காசை முன்வைத்த பொருளாதாரமோ, அதற்கு ஈடான கருப்புப் பணப் புழக்கமும் அதிகம். கருப்புப் பணம் என்றால் என்னவென்று கேட்கும் அப்பாவிகள் ரஜினி/ஷங்கரின் முந்தைய படைப்பான ‘சிவாஜி’ பார்த்து தங்களின் பொருளாதார அறிவினை விருத்தி செய்துகொள்ளலாம். நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் அது தொழில் தர்மம் ஆகாது.

பணமாகப் பரிவர்த்தனைகள் நடப்பதில் இருக்கும் பெரிய பிரச்னை – கணக்கு காட்டுதல். எக்கச்சக்கக் கருப்புப் பணமும் சிறு பரிவர்த்தனைகளும் அரசாங்க ரேடாருக்குக் கீழே ஓடிக்கொண்டிருக்கின்றன. சந்தேகம் இருந்தால், ஒரு நடை தி. நகர் சரவணா ஸ்டோர்ஸ் சென்று வாருங்கள். இது ஒரு பெரிய பிரச்னை. பணத்தைக் கையில் கொண்டுபோதலில் பல பாதுகாப்புப் பிரச்னைகள் உண்டு. குடிப்பதற்காக மனைவி தாலியறுத்த கதையையும், காதை வெட்டிய கதையையும், பஸ் ஸ்டாண்டில் பணம் பறித்துக்கொண்டு ஒடும் கதைகளையும் நாம் நாள்தோறும் காப்பியோடு நாளிதழ்களில் பருகிக்கொண்டுதான் இருக்கிறோம்.

பணத்தைக் கையில் கொண்டுசென்றால்தான் இந்தப் பிரச்னை. அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் செக், டிடி, இன்னபிற வங்கிச் சேவைகள். ஆனால், இவை அனைத்தும் பொது மக்களைச் சென்று சேர்ந்ததாகச் சொல்ல முடியாது. இன்னமும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செக் புத்தகம் வாங்கி அதை உபயோக்கிக்க, பிரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டும். இதைத் தாண்டித்தான், இணையம் வழியான பரிவர்த்தனைகள். ATMகள். டெபிட்/கிரெடிட் கார்டுகள். கையில் காசு கொண்டுபோகாமல் செலவு செய்வதைத்தான் அரசாங்கமும் விரும்புகிறது. ஒரு வருடத்துக்கு ரிசர்வ் வங்கி, கிட்டத்திட்ட ரூ. 2,800 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடவேண்டும். ரிசர்வ் வங்கியே அவ்வளவு அச்சிடுகிறது என்றால், கோயமுத்தூர், சிவகாசி, ஒரிஸ்ஸா, பாகிஸ்தான் வகையறாக்கள் கள்ள நோட்டு அச்சிட எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்! பணம் அச்சிடுவது, புழக்கத்தில் விடுவது, அதை ரிசர்வ் வங்கி சரி பார்ப்பது என்பது மகா லொள்ளு பிடித்த வேலை.

தமிழ்நாடு மெர்கெண்டைல் வங்கி முதற்கொண்டு இன்று எல்லாரும் இணையம் மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ள ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் இணையப் பயன்பாடு குறைவு. நகரங்களைத் தாண்டிப் போனால், ஒரு பிரவுசிங் செண்டர் தேடி செத்து சுண்ணாம்பாகி, இந்தியாவுக்கு கால்சியம் ஏற்றுவீர்கள். இந்தியாவில் அகலப்பாட்டை இணைப்பு குறைவு. இது தாண்டி, இந்தியாவில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையோடு சேர்த்துப் பார்த்தால் சொற்பம். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் சேர்த்து, இருப்பது வெறும் 19.12 கோடி பேர்தான். இதில், என் நண்பர் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிவசுப்பிரமணிய சந்திரசேகரன் மாதிரியான ஆட்கள், இந்தியாவில் இருக்கும் எல்லா வங்கியிலும் ஒரு கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார். அதனால் இந்த 19.12 கோடி கணக்கை, தனிநபர் என்று பார்த்தால் அதைவிடக் குறையும். இதன் பயன்பாடுகளும் மிகக் குறைவு.

ஆனால் பணமில்லாமல் பல விஷயங்களில் இந்தியாவில் சாத்தியமில்லை. இந்தியா பெரும்பாலும் கேஷ் வர்த்தகம் செய்யும் நாடு என்று ஏற்கெனவே சொன்னேன். பணம்தான் driving force. மளிகைக் கடை அண்ணாச்சி, கறிக் கடை பாய், பீடா கடை சேட், வெத்தலைப் பாக்குக் கடை வியாபாரி, டீக்கடை நாயர், உடுப்பி ஹோட்டல், கையேந்தி பவன் எல்லாம் உங்களிடம் எதிர்பார்ப்பது கேஷ் மட்டுமே. இங்கே கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ, ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளோ நடக்காது.

சடாலென, வங்கி வழியாக எல்லா பரிவர்த்தனைகளும் செய்யவேண்டும் என்று ரிசர்வ் வங்கியினால் சொல்லவும் முடியாது. நமக்கு அதற்கான கட்டமைப்பும் கிடையாது. இந்த நிலையில்தான் நாம் கட்டுரையில் ஆரம்பத்தில் பார்த்த ஆட்டோக்காரர் எண்ட்ரி கொடுக்கிறார்.

டிவி, அரசியல், ஜாதி, சினிமா மாதிரி இந்தியாவில் இன்றைக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது செல்பேசி. உங்கள் செல்பேசியினை எப்படி கிரெடிட்/டெபிட் மற்றும் ஷாப்பிங் சாதனமாக மாற்ற முடியும் என்று மண்டை காய்ந்தவர்கள் யோசித்ததன் விளைவே மொபைல் பேமெண்ட் சர்வீஸ்ஸ் (Mobile Payment Services).

இப்போது m-banking என்றொரு விஷயம் இருக்கிறது. ரொம்ப சாதுவான விஷயம். அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது, செக் பாஸானதா, செக் புக் வேண்டுமா இந்த மாதிரியான பணப் பரிவர்த்தனை இல்லாத ப்யூர் வெஜிட்டேரியன் ஐட்டங்கள் இதில் கிடைக்கும். இதன் அட்டகாசமான சிக்கன் பிரியாணி வகையறாதான் மொபைல் பேமெண்ட்ஸ்.

ஐஐடி சென்னை(IIT-Madras)யில் இருக்கும் Rural Technology and Busines Incubator (RTBI)-யும், ஹைதராபாத்தில் இருக்கும் Institute for Development and Research in Banking Technology (IDRBT)-யும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் Mobile Payment Forum of India (MPFI). MPFI வங்கிகளோடு பேசி, ரிசர்வ் வங்கியோடு மல்லாடி, தொழில்நுட்ப நிறுவனங்களோடு தர்க்கம் பண்ணி கடைசியில் ஒரு வழியாக செல்பேசி மூலம் இந்தியாவில் பணப்பரிவர்த்தனை செய்வதைச் செயல்படுத்திவிட்டார்கள். National Payment Corporation of India (NPCI) இவர்களோடு சேர்ந்து எல்லா பணப்பட்டுவாடா, பரிவர்த்தனை சமாசாரங்களும் வங்கிகளுக்குக்கு இடையே பாதுகாப்பாக நடக்க ஏதுவாக ‘ஸ்விட்ச்’ ஒன்றைச் செய்துவிட்டார்கள். மேட்டர் ஒவர். ஸ்டார்ட் மியுசிக்.

செல்போன் வழியாக எப்படி பணப்பரிவர்த்தனை நடக்கும் ?

இந்த மொத்த சமாசாரமும் நடப்பது Mobile Money Identification (MMID) வழியாக. சுருக்கமாகச் சொன்னால், மொபைலில் இதுதான் உங்களுக்கான அக்கவுண்ட் எண். MMID என்பது ஒவ்வொரு வங்கிக் கணக்குக்கும் உரித்தான் பிரத்யேகமான எண். இத்தோடு ஒரு 4 இலக்க ரகசியக் குறியீட்டு எண் வரும். இந்த எண்ணைப் பயன்படுத்தித்தான் இதைப் படிக்கும் எல்லோரும் என்னுடைய மொபைலுக்குக் காசு அனுப்ப வேண்டும். அதனால் கவனமாகப் படியுங்கள்.

MMID மூலம் உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் செல் எண்ணோடு இணைக்கப்படும். ஒரே ஆள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் வெவ்வேறு வங்கியின் கணக்குகளும் வைத்திருக்கலாம். ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு MMID எண்ணும், ரகசியக் குறியீட்டு எண்ணும் கிடைக்கும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் வங்கிக்கான செல்பேசி ஷார்ட் கோடுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பவேண்டியதுதான். மற்றது எல்லாம் அங்கிருந்தே செய்ய முடியும்.

உங்களுக்கான தேவை ஒரு செல்பேசி. வங்கிக் கணக்கு. GPRS இருந்தால் விசேஷம். இல்லை என்றாலும் பரவாயில்லை. குறுஞ்செய்தி வாயிலாகவும் பணத்தை மாற்ற முடியும். உங்கள் கணக்கில் பணம் இருந்தால், வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு, ரூ.50 முதல் ரூ. 50,000 வரை அனுப்பலாம். நான் சங்கோஜப்பட மாட்டேன். குறுஞ்செய்தி இப்போதைக்கு ஷார்ட் கோட் எனப்படும் ஆறிலக்க எண்ணின் வழியாகத்தான் அனுப்ப முடியும். கூடிய சீக்கிரத்தில், வழக்கமான செல் பேசி எண்ணுக்கும் அனுப்பமுடியும், அது சாத்தியமானால் வெறும் குறுஞ்செய்திக்கான செலவுதான் பரிவர்த்தனைக்கு. இப்போதைக்கு, ஷார்ட் கோட் குறுஞ்செய்தியின் சேவைக் கட்டணம் ரூ.3. மற்ற எலக்ட்ரானிக் நிதி பரிவர்த்தனைகள்போல இது தாமதமாகாது. இன்ஸ்டண்ட் இடியாப்பம் மாதிரி, இன்ஸ்டண்ட் காசு. அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் உடனடியாகக் குறுஞ்செய்தி போய்விடும். டெபிட்/கிரெடிட் விஷயங்களும் இன்ஸ்டண்ட். இரவு, பகல் என 24×7-ல் பணப் பரிவர்த்தனை நடக்கும்.

தற்போது ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, யெஸ் பாங்க் மற்றும் ஆக்ஸிஸ் பாங்க் உட்பட 6 வங்கிகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. எச்.டி.எப்.சி வங்கி இப்போது இதைப் பரீட்சார்த்தமாக அவர்களுக்குள்ளேயே பரிசோதித்துக்கொண்டிருக்கிறார்கள். 2012-க்குள் இது இந்தியாவின் எல்லா வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தோன்றுகிறது. அது நடந்தால், உங்கள் மொபைல்தான் இனி உங்கள் பர்ஸ். மொபைலைக் கொண்டு பணத்தை மாற்ற முடியும். பணம் பெற, கொடுக்க, செக் பண்ண என்று எல்லாவற்றையும் குறுஞ்செய்தியிலேயே முடித்துவிடலாம்.

இந்தியாவில் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. அவர்களுக்கெல்லாம் இது வரப்பிரசாதம். இது வங்கிச் சேவையைப் பரவலாக்கும். கொஞ்ச நாள் முன்பு ரிசர்வ் வங்கி Bank Representatives என்கிற முறையைப் பரீட்சார்த்தமாகக் கொண்டுவந்தது. இதன்படி, வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட நபர் குக்கிராமங்களுக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுதல், பணம் தருதல் போன்ற விஷயங்களைச் செய்வார். அதைவிடச் சுலபம் நீங்களே உங்கள் செல்லில் உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளைப் பார்த்துக்கொள்ளுதல். முக்கியமாக, சிறு பரிவர்த்தனைகள் (ரூ.50 – ரூ.500 வரை) இதன்மூலம் அதிவேகமாக நடக்கும். வங்கியைச் சார்ந்திருத்தல் தேவையில்லை.

தியாகிகள் பென்ஷன் பெறுவோர், அரசாங்கச் சலுகைகள், மான்யங்கள் பெறுவோர் எனப் பலரும் ஏதாவது ஒரு தேசிய வங்கியின் வாசலில் அலைக்கழிக்கப்படுவது நிதர்சனம். இது அனைத்தையும் இன்னும் 2-3 வருடங்களில் ஒழித்துக் கட்டிவிட முடியும். அந்த வகையில், போன வாரம்தான் பேபால் தன்னுடைய மொபைல் பேமெண்ட் மாடலை உலகுக்குச் சொன்னது. ஒப்பிட்டால், நம் ஆட்கள் செம ஃபாஸ்ட். ஆப்ரிக்காவில் இந்த மாதிரியான மொபைல் பரிவர்த்தனைகள் சக்கைப் போடு போடுகின்றன – முக்கியமாக கென்யா, நைஜீரியா.

குறுந்தொகை (இலக்கியம் இல்ல சார், micro payments) பரிவர்த்தனைகளை இதன்மூலம் வெகு சீக்கிரமாகவும், செலவில்லாமலும் செய்ய முடியும். எப்படியும் மே/ஜூன் மாதத்துக்குள் தமிழ்நாட்டில் தேர்தல் வந்துவிடும். இந்த முறை அல்ப்பையாக ரேஷன் கார்டெல்லாம் கொடுக்காதீர்கள். வீட்டிலிருக்கும் ஓட்டுக்கு ஏற்றாற்போல விலையைச் சொல்லி, மொபைல் எண்ணைக் கொடுத்து மாற்றச் சொல்லுங்கள். டாஸ்மாக்கில் சரக்கடிக்கக் காசில்லாவிட்டால், நண்பனை வரச் சொல்வதற்குபதில், ஃபோனடித்து பணத்தை மாற்றச் சொல்லுங்கள்.

ஆனால், இறுதியாக ஒன்று, தப்பி தவறிக்கூட ரகசியக் குறியீட்டு எண்ணை வூட்டுக்காரம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். இப்போது மணிபர்ஸ் அடிக்கடி சுத்தமாவது போல, உங்கள் செல்லும் சுத்தமாகத் தொடங்கிவிடும்!

உறக்கமற்றவன்

பகுதி 4

இரண்டாவது உதவி இயக்குநர் அடுத்து வருகிறார். இவரது பணி ஆர்ட் டிபார்ட்மென்ட்டுடன் இணைந்து ஆர்ட் கன்ட்டினியூடியை கவனித்துக் கொள்வது. சீன் பேப்பர் படிவத்தை வைத்துக் கொண்டு இன்டோர்-அவுட்டோர் ஆகிய இரு இடங்களிலும் பிராப்பர்ட்டி கன்ட்டினியூடி பார்ப்பது.

இவரது அடிப்படைத் தகுதி படம் வரையத் தெரிந்திருக்க வேண்டும். சும்மாவாவது கிறுக்கத் தெரிந்தால் போதுமானது. அல்லது அந்தப் படம் என்ன என்பதை அவரளவுக்காவது புரிந்து கொள்கிற அளவுக்கு வரைய வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு நடைபெறும்போது அந்தக் காட்சியில் என்னென்ன பொருட்கள் எங்கெங்கு இருந்தன என்பதை சுமாராகவாவது வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில மாதங்கள் கழித்து மீண்டும் அந்தக் காட்சியையோ, அந்த அறையையோ எடுக்க வேண்டி வந்தால் அந்த ஸ்கெட்ச் உதவும். இதே முறைதான் அறையைத் தாண்டி எடுக்கப்படுகிற காட்சிகளுக்கும் பயன்படும்.

இந்த உதவி இயக்குனர் புத்திசாலியாக இருந்தால் யாரும் சொல்லாமலே ஒரு வேலையை முதலில் செய்வார். எங்காவது அறைகளில் அல்லது வீடுகளில் ஷுட்டிங் நடந்தால் அங்கிருக்கிற சுவர் கடிகாரத்தைக் கழற்றி விடுவார். இல்லையென்றால் என்ன நடக்கும்? அறைக்குள்ளிருந்து ஒரு நபர் வெளியே வருகிற காட்சி எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் கதவுக்கு அருகில் வருவது போல எடுப்பார்கள். அப்போது கடிகாரத்தில் ஒரு நேரம் இருக்கும். அவரே சில அடிகள் நடந்து வாசலுக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் காட்சியை எடுத்து முடிக்கும்போது வேறு சில காரணங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கூட ஆகியிருக்கும்.

படம் ஓடும்போது கதவருகில் இருந்து வாசலுக்கு வந்து சேர அத்தனை மணி நேரமா ஆகும்? என்று ரசிகர்கள் நக்கலடித்து சிரிக்கிற நிலைமை ஏற்படும். இந்தத் தொல்லையே வேண்டாம் என்றுதான் இந்த முன்னேற்பாட்டை செய்வார்கள் சில உதவி இயக்குனர்கள்.

இந்த உதவி இயக்குனரிடமே இன்னொரு முக்கியமான வேலையையும் ஒப்படைப்பார்கள். ஒரு கேரக்டர் பேசிக் கொண்டிருந்தால் அந்த கேரக்டருக்கான அசைவுகளையும் அப்படியே பேப்பரில் நேரடி வர்ணனை செய்து எழுதிக் கொண்டிருக்க வேண்டும். டயலாக் பேசிக்கொண்டிருக்கிற அந்த கேரக்டர் எந்த திசையை நோக்கிப் பேசுகிறது. இடது புறத்தை நோக்கியா? வலது புறத்தை நோக்கியா? அவரது கை கால் அசைவுகள் கேமிராவுக்கு எந்தப் பக்கம் இருந்தது? அந்தக் காட்சி துவங்கும் போதும், முடியும் போதும் கேரக்டரின் இன் அண்டு அவுட் ஆகிய விஷயங்களையும் குறிக்க வேண்டும். அது மட்டுமா இவரது வேலை?

கேமிராவும் எந்த பக்கம் நகர்கிறது என்று அதனுடைய அசைவுகளையும் இவர் எழுதிக் கொள்ள வேண்டும். (கண்ணும் கையும் மூளையும் பரபர என்று இயங்கினால்தான் இது சாத்தியம்)

உதவி இயக்குனர்கள் 3 மற்றும் 4:

கதைக்குத் தேவையான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அறிவது. பீரியட் பிலிம் என்று சொல்லப்படும் படங்களில் இவர்களது பணி சற்று கடினமாகவே இருக்கும். உதாரணத்திற்கு சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தை எடுத்துக் கொள்வோம்.

சேரன் இயக்கிய பொக்கிஷம். 1970 களில் நடந்த கதைதான் இது. இப்படத்தில் பணியாற்றிய இத்தகைய உதவி இயக்குனர்களுக்குத் தரப்பட்ட முதல் வேலை அந்தக் காலத்து அஞ்சல் உறைகளை தேடிக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். போஸ்ட் மாஸ்டரின் காஸ்ட்யூம்களை வடிவமைக்க உதவும் விதத்தில் பழைய காலத்து போஸ்ட் மாஸ்டரின் புகைப்படங்களைத் தேடிக் கண்டு பிடித்துத் தருவது. தபால் பை, பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் நேம் பேட்ஜ், எழுபதுகளில் நாகப்பட்டினம் ஏரியாவில் எந்த மாதிரி டிசைன் செய்யப்பட்ட பஸ்கள் ஓடின போன்ற விவரங்களை தேடிக் கொண்டு வருவது.

இவை எல்லாவற்றையும் விட படப்பிடிப்பு காலங்களில் இவர்கள் பையில் எப்போதும் ஐயோடக்ஸ், அமிர்தாஞ்சன், மூவ் போன்ற வலி நிவாரணிகளை வைத்திருக்க வேண்டிய அளவுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அது… கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது!

நாலு பேர் கூடி நின்று சண்டை போட்டால் கூட, நடுவில் தலையை நுழைத்து ஆவலோடு புத்திசொல்கிற வழக்கம் நமது நாட்டில் 90 சதவீதம் பேருக்கு இருப்பதால் படப்பிடிப்பு ஏரியாக்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். வெளியூர் படப்பிடிப்புகளில் இன்னும் சுத்தம். இது போன்ற நேரங்களில் கடைநிலை உதவி இயக்குனர்களின் பணி ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. கோபத்தில் யாரையாவது பிடித்து தள்ளிவிட்டால் கூடப் போச்சு. ஷுட்டிங்கே தடை படுகிற நிலை ஏற்படும். கோபம், பொறுமை, கண்டிப்பு, தைரியம், இவற்றுடன் சாதுர்யமும் இருக்க வேண்டிய இடம் அது.

தென் மாவட்டங்களில் படப்பிடிப்புக்குப் போய் பல படப்பிடிப்புக்குழுவினர் ஊர் மக்களிடம் அடி வாங்கி திரும்பி வந்த கதையெல்லாம் சினிமாவில் உண்டு.

கிளாப் அசிஸ்டென்ட்:

புதிதாக வேலைக்குச் சேருகிற உதவி இயக்குனருக்கு கொடுக்கப்படுகிற வேலை இது. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்களைப் பற்றி புகழ்கிற இன்றைய இயக்குனர்களில் பலர்,  ”இவங்க படத்துல கிளாப் அடிக்கிற வேலை கிடைச்சா கூட அதை நான் பெருமையா நினைப்பேன்” என்று மேடைக்கு மேடை சொல்லக் கேட்டிருப்பீர்கள். கிளாப் அடிக்கிற வேலை கொடுத்தா கூட… என்று அவர்கள் சொன்னாலும் அந்த வேலை எவ்வளவு கஷ்டமானது என்பதை அவர்கள் அறியாமல் இருக்க மாட்டார்கள். அவர்களும் இந்த அரிச்சுவடி பாடத்தைக் கற்று வந்தவர்களாகதான் இருப்பார்கள்.

சரி அப்படியென்ன வேலை அது?

படத்தின் எடிட்டர் குழம்பாமல் ஷாட்டுகளை உரிய இடத்தில் பொருத்த வேண்டும் என்றால் இந்த கிளாப் சொல்கிற பாடத்தைக் கேட்டால்தான் முடியும். டைரக்டர் கிளாப் இன் என்று சொல்கிற நொடிக்காகக் காத்திருந்து, பிரேமுக்குள் கையை மட்டும் நுழைத்து, காக்காய் எச்சம் போடுகிற நேரத்தில் ஷாட் நம்பர்களை சொல்லிவிட்டு ஓடி விடுவதுதான் இந்த வேலையின் நுட்பம். ஒவ்வொரு ஷாட் நம்பரையும் இதில் எழுதி வைத்திருப்பார்கள். ஒரு காட்சி எத்தனையாவது ஷாட்டில் டைரக்டரால் ஓ.கே சொல்லப்பட்டிருக்கிறது என்பதை இதை வைத்துதான் கண்டு பிடிக்க முடியும் அவரால். வசனக்காட்சி, வசனம் அல்லாத காட்சி, என்று தனித்தனியாகப் பிரிக்க உதவுவதும் இந்த கிளாப் போர்டுதான்.

பயிற்சி நிலை இயக்குனர்கள் என்பதால் நிறைய அவமானங்களைச் சந்திப்பார்கள் இந்த கிளாப் அசிஸ்டென்ட்டுகள். நல்ல ஆடைகள், உற்சாகமான மனநிலை இருந்தால் இவற்றையெல்லாம் தாண்டி வரலாம் என்பது இந்த நிலையைக் கடந்தவர்களின் அட்வைஸ்.

எடிட்டிங் ரிப்போர்ட்:

ஒரு காட்சியை ஒளிப்பதிவாளர் பல ஷாட்டுகளாகப் பிரித்துக் கொள்வார். இந்த ஒவ்வொரு ஷாட்டும் பல முறை எடுக்கப்படலாம். நடிப்பு சரியாக வரும் வரைக்கும் என்பதற்காக மட்டுமல்ல, பல காரணங்களுக்காக ரீ டேக் எடுக்கப்படலாம். அது கேமிரா சம்பந்தப்பட்ட பர்பெக்ஷனுக்காக கூட இருக்கலாம். எந்த காட்சியை ஓ.கே என்று இயக்குனர் ஒப்புதல் கொடுக்கிறாரோ, அந்த ஷாட்டில் எந்த லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த எடிட்டிங் ரிப்போர்ட்டில் குறிப்பார் உதவி இயக்குனர்.

பிலிம் பிராசஸ் செய்யும்போதோ, அல்லது கிரேடிங் செய்யும் போதோ எடுக்கப்பட்ட ஷாட் வீணாகப் போய்விடலாம். அப்போது ரீஷுட் செய்ய இந்தக் குறிப்புகள் உதவும். படத்தொகுப்பாளர் இந்தக் குறிப்புகளின் அடிப்படையில்தான் ஓ.கே செய்யப்பட்ட ஷாட் எது என்பதைத் தேர்ந்தெடுத்து படத்துடன் இணைப்பார். இந்த ரிப்போர்ட் மட்டும் இல்லையென்றால் திருப்பதியில் மொட்டையைத் தேடிய கதைதான். ஒவ்வொரு ஷாட்டாக உற்று உற்றுப் பார்த்து தேர்வு செய்து படத்தில் இணைக்க வேண்டும். அதற்குள் ஒரு ரிலீஸ் தேதி போய் மறு தேதி வந்து விடும்.

எடிட்டிங் பணியை சுலபப்படுத்த ஓர் அட்டவணையைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள். இதில் உதவி இயக்குனர் ஆங்காங்கே என்ன நடக்கிறது என்பதைக் குறித்தால் போதும். வெளியூரில் எடுக்கப்படும் படச் சுருள்கள் லேபுக்கு வருகிறபோது இந்த எடிட்டிங் ரிபோர்ட்டையும் கூடவே கொண்டு செல்ல வேண்டும். இந்த ரிப்போர்ட் எழுதுகிற அசிஸ்டென்ட், அவசரமாக பாத்ரூம் வருகிறது என்று வேறொருவரிடம் விட்டுப் போகிற வேலையெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படிப் போனால் மறுபடியும் ரிப்போர்ட்டை எடுத்துப் பார்க்கும்போது குழப்பம் நேரிடலாம்.

கிளாப் அசிஸ்டென்டுக்கும் எடிட்டிங் ரிப்போர்ட் எழுதுகிற உதவி இயக்குனருக்கும் ஒரு அதிர்ஷ்டம். ஒரு முழு படத்தை எடுப்பதையும் அருகில் இருந்து பார்க்கிற வாய்ப்பு இவர்களுக்கு மட்டும்தான் அமையும். அதிலும் ஆபரேடிவ் கேமிராமேனை நண்பராக்கிக் கொண்டால் லென்ஸ் கூட அத்துப்படியாகிற அளவுக்கு நாலெட்ஜ் தேற்றிக் கொள்ளலாம்!

-தொடரும்

மனுக்குறள்? – 2

நேற்றுப் பார்த்த உதாரணங்களின் தொடர்ச்சியுடன் இன்று ஆரம்பிப்போம். திருவள்ளுவர், சத்திரிய தருமத்தையும் போற்றியிருக்கிறார் என்பது தெரியுமா?

இதற்கு உதாரணம் சொல்ல ஏராளமான குறள்கள் இருந்தாலும், அன்றிலிருந்து தமிழ்மக்களை அடிமையாக்கிய பார்ப்பன – சத்திரிய கூட்டுச் சதிக்கு ஆதாரமான சில குறள்களை மட்டும் பார்ப்போம்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;

மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல்.

(வேதமானது) அரசர், வணிகர் என்னும் ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமை பற்றி, அந்தணர் நூல் என்றார். ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்’ (மணிமேகலை 22: 208,9) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு அறம் என்பது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் (சநாதன தர்மம் என்று படிக்க) செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிது இல்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.

காளிங்கர் உரை:
மற்றும் அறநூல் என்று இங்ஙனம் ஒன்று சொல்லாது அந்தணர் நூல் என்றது, அரசர் நெறியாகிய செங்கோலும் நால்வருணத்தார் நடையுள் ஒரு நடை ஆகலானும், அவை யாவையும் பிறவும் துறவுமாகிய அனைத்தினையும் பழுது அற உரைப்பது பார்ப்பார் ஓதியும் ஓதுவித்தும் இங்ஙனம் விளங்க நடைபெற்று வருகின்ற வேதம் ஆகலான்.

கவிராஜபண்டிதர் உரை:
அரசன் நீதியாய் நடத்தினால், வேதமும், சாஸ்திரமும், தருமமும் வர்த்திக்கும்.

அதாவது பார்ப்பனரின் வேதநூலே அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரே நீதிநூல்; அதைக் காப்பாற்ற வேண்டியது அரசனின் கடமை என்கிறார் வள்ளுவர். என்னே ஒரு கூட்டுச்சதி இது!

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;

ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;

அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.

ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,

அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.

பசுக்கள் பால் குன்றியவழி அவி இன்மையானும், அது கொடுத்தற்கு உரியார் மந்திரம், கற்பம் என்பன ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று.

அடப்பாவிகளா! இங்கே அரசன் சரியாக ஆட்சி செய்யாவிட்டால் பொதுமக்களுக்கு நேரும் சிரமம் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை வள்ளுவருக்கு. பார்ப்பனன் தொழில் நடக்காது என்பதுதான் பிரதானமாய் இருக்கிறது!

உலக நாடுகளில் எல்லாம் இன்று மரணதண்டனை தவறு என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விவாதம் எழுந்துள்ளது. ஆனால் கேள்வி ஏதும் கேட்காமல் ‘இவன் கொடியவன், இவன் தலையை வெட்டலாம்’ என்ற உரிமையை மன்னனுக்குக் கொடுத்தது மனு தர்மம். அதனால்தான் மதுரை பற்றி எரிந்தது. அது சத்திரியன் மனு, சத்தியர்களுக்காகவே உருவாக்கிய சிறப்புச்சலுகை.

வள்ளுவர்தான் மனுவாதி ஆயிற்றே! இங்கே அவர் பரிந்துரையும் மனுதர்மப்படியே இருக்கிறது.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,

பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.

கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.

ஆக தன் விருப்பப்படி ஒருவனைக் கொல்வது இங்கே ஒருவன் சாதி தருமம் என்றாகிப் போனது. என்ன கொடுமை இது!

வள்ளுவராவது இதை  ‘மனுதர்மப்படி’ என்று சொல்லாமல் விட்டார். ஆனால், இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்தி ‘மாபெரும் தமிழ்த்துரோகி’ என்று பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட கம்பன் சொல்வதைப் பாருங்கள்.

நன்றி கொன்றரு நட்பினை நார் அறுத்
தொன்று மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்..
நஞ்சம் அன்னவரை நலிந்தாலது
வஞ்சம் அன்று மனுவழக்கு ஆதலால்..
(கம்பராமாயணம் – கிட்கிந்தை 3,5)

ஆகாதவனைப் போட்டுத்தள்ளுவது மனுதர்மம். இங்கே ஆரிய சத்திரியன் இராமன் இந்த நாட்டின் ஆதிகுடிகளைப் பிரித்தாள்வதற்கு, சகோதரர்களுக்கிடையேயான சண்டையைப் பெரிதுபடுத்தி அண்ணனைக் கொன்று, தம்பியின் ராஜியத்தைத் தன் ஆளுகைக்குக் கொண்டுவந்த குயுக்திக்கும் இதே மனுதர்மம் பயன்பட்டிருக்கிறது. அது எந்த வெட்கமும் இல்லாமல் கம்பன் வாயாலேயே இங்கே உறுதிப்பட்டுள்ளது.

திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஆய்ந்தறிந்த பெரியார் அன்றே தெள்ளெனச் சொன்னார்:

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். இவன் முழுப் பொய்யன். முழுப் பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூடச் சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன் இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்.

வைசியரும், வேளாளரும், குடிப்பிறப்பால் அமையும் குணங்களும்:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின் (குறள் – 120)

என்ற குறளிலே வைசியரைக் குலதர்மப்படி ஒழுகச் சொல்லும் வள்ளுவர், உழவு என்ற அதிகாரத்தில் (104) வைசியர் மற்றும் நான்காம் வர்ணத்தாரின் குலத்தொழிலை உயர்த்திப்பாடுகிறார்.

பரிமேலழகர்:
அஃதாவது சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதல் தொழில். செய்விக்குங்கால் ஏனையோர்க்கு உரித்து. இது மேல்குடி உயர்வதற்கு ஏது என்ற ஆள்வினை வகையாகலின் குடிசெயல்வகையின் பின்வைக்கப்பட்டது.

உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றெல்லாம் இவரைப் புகழ்ந்து இவர்தம் குலதர்மப்படி ஒழுகச் சொல்வதை இந்த அதிகாரத்தில் காணலாம்.

இப்படி நால்வகை வர்ணத்தில் பிறக்கும் கொடுப்பினை பெற்றவரே குடிப்பிறந்தார். அப்படிப் பிறப்பதால் இயல்பாகவே அமையும் குணங்களை ‘குடிமை’ என்ற அதிகாரத்தில் (96) பட்டியல் போட்டே காட்டுகிறார் இந்த மனுவாதி.

பரிமேலழகர்:
அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை.

உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின், அச்சிறப்புப்பற்றி இது முன்வைக்கப்பட்டது.

மாதிரிக்கு இரண்டு குறள்கள்:

இற்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (951)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)

அதாவது நால்வருணத்திலே நல்ல குடியிலே பிறந்தவனுக்கு நடுவுநிலைமை, பழிபாவங்களுக்கு நாணுதல், நல்லொழுக்கம், வாய்மை இதெல்லாம் இயல்பாகவே அமையும் என்று சொல்கிறார்.

சிலர், குடிப்பிறப்பு என்றால் நல்ல குடும்பத்திலே நல்ல தாய் தகப்பனுக்குப் பிறப்பதைச் சொல்வதாகப் புரிந்துகொண்டு உரை எழுதி இருக்கிறார்கள். அது தவறான புரிதல். குடிமை என்ற அதிகாரத்திலேயே, குடி என்பதற்கு மாற்றாகக் குலம் என்றும் (குலம் பற்றி வாழ்தும் – 956, குலத்தின்கண் ஐயப்படும் – 958, குலத்தில் பிறந்தார் – 959) வள்ளுவர் சொல்வதிலிருந்தே அவர் சொல்வது வருணாசிரம அடிப்படையிலான பிறப்பைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

பிறப்பின் அடிப்படையில் அமைவதாக, அமைய வேண்டியதாக வள்ளுவர் தரும் சிறப்புக் குணங்களின் பட்டியல்:

குறள் எண்வாரியாக
951 – குடிப்பிறந்தாரே பண்பாளர்; தீயன செய்ய நாணமும், நடுவு நிலைமையும் (செப்பம்) உடையவர்
952 – ஒழுக்கமும் வாய்மையும் உடையவர்
953 – முகமலர்ச்சியும், ஈகையும் இன்சொல்லும் கொண்டவர்
954 – எத்தனை கோடி கொடுத்தாலும் மானத்தை விடாதவர்
956 – சிறுமையான செயல் செய்ய மாட்டார்
959 – வாய்ச்சொல்லே அவர் சாதி காட்டும்
963 – பெருக்கத்திலும் பணிவுடையவர்; சுருக்கத்திலும் பண்பு மாறாதவர்
992 – அன்பும் பண்பும் நிறைந்தவர்
794 – நட்பை மதித்து நடப்பவர் ஆகவே சாதிபார்த்து நட்பு கொள்ள வேண்டும்.

இந்த வள்ளுவரைத்தான் தமிழ்மக்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, இத்தகைய பிதற்றல்களை உலகப்பொதுமறை என்று கொண்டாடி வருகின்றனர்.

அதுசரி, இப்படிப் பிறப்பு அமையக் கொடுத்து வைக்காத துரதிருஷ்டசாலிகளின் பாடு என்ன? அதை மட்டும் விட்டுவிடுவாரா இந்த மனுவாதி?

வருணாசிரமதருமத்தின் வழக்கப்படி நால்வருணத்தாரும் அவரவர் குலத்தொழிலை விடாமல் தொடர்ந்து அதன்படி ஒழுக வேண்டும். அதை விட்டுவிட்டால் சாதிவிலக்கு ஆகிவிடும். ஒருவன் சாதிவிலக்கம் ஆகிவிட்டால் குடியில்லாதவன் ஆகிவிடுவான். அப்புறம் அவனும் அவன் சந்ததியும் இழிந்த பிறவிகளாகத் தொடர வேண்டியதுதான். இப்படித்தான் பஞ்சமர் என்ற அவர்ணாக்கள் உருவானதும், அவர்கள் மிதியடியாய்ப் பயன்படுத்தப்பட்டதும்.

இதை மிகத்தெளிவாக வள்ளுவம் எடுத்து வைக்கிறது:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் – 133

பரிமேலழகர்:

ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலன் உடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.

இப்படி வருணத்தில் தாழ்ந்தானோ அல்லது விலக்கப்பட்டவனோ (நான்காம் வகுப்பில் இருப்பவன் அதற்குமேல் தாழ்ந்தால் அவர்ணா) அவன் கீழான இழிபிறவியாகிவிடுவான்.

இவர்களுக்குக் ‘கீழ்கள்’ என்று அடைமொழி கொடுத்து ஆண்டைகள் கொடுமைப்படுத்த வள்ளுவர் கொடுக்கும் அதிகாரத்தைப் பாருங்கள்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது 1075

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் 1078

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் 1079

கீழானவனை எப்போதும் அச்சுறுத்தி வை! கரும்புபோல் கசக்கிப்பிழி! நீ நன்றாக உடுத்தி, உண்டு, அதை அவன் கண்டு வயிற்றெரிச்சல் படுவான், அது விளங்காமல் போகும். ஆகவே அவனை விலக்கி வை!

இத்தனையும் சொல்பவர் வள்ளுவர்தான்.

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுவோர் மனு ஸ்மிருதியை நேராகவே படித்து அதில் உள்ள எத்தனை பிற்போக்கான கருத்துக்கள் வள்ளுவரால் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன என்று தாமாகவே அறிந்து கொள்ளலாம்.

பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

(நாளை நிறைவுறும்)

நேற்றைய பகுதியை இங்கு வாசிக்கலாம்.