வங்கி மைனஸ் வட்டி

அத்தியாயம் 8

மாப்ளே, தங்கச்சி கைமணத்துக்கு ஒரு தங்கக் காப்பே போடலாம். புளிக்கொளம்பு மணம் கமகமன்னு எட்டு ஊருக்குத் தூக்குதே.

அவ நாட்டரசன்கோட்டை கண்ணாத்தா கோவில்லே கண்மலர் நேர்ந்துக்கிட்டு விடிகாலையிலேயே குளிச்சுட்டு போயிருக்காப்பா. மாவிளக்கு வேறே ஏத்தறா.

அப்ப உங்க கைக்குத்தான் காப்பு.

ஏது, இஸ்லாம் பேங்கு பத்தி இனியும் சொன்னா கைக்குக் காப்பு போட்டு, தீவிரவாதின்னு பொடாவிலே உள்ளே தள்ள வச்சுடுவே போலே இருக்கே.

அய்யோ, உங்களைப் போயா? கருவாட்டுக்கடை ஆதீனமிளகி இருக்கானே, என் உசிரு சிநேகிதன். அவனை வேணும்னா போடா வாடான்னு எதுலே வேணாலும் உள்ளே தள்ளலாம். தண்ட வண்டி போட்டு உசிரை வாங்கறான் மாப்ளே. நட்பு வேறேயாம், கடன் வேறேயாம். கடன் அன்பை முறிக்குதோ என்னமோ முழியைப் பிதுங்க வைக்குது. கைமுடையாகும்போது பணம் கொடுத்துட்டு கொடுத்த தொகையை மட்டும் பிற்பாடு வசூலிக்கற மாதிரி யாராச்சும் இருந்தா சொல்லுங்க.

இஸ்லாமிய பேங்கு வகையிலேயா கேக்கறே?

எதுக்குன்னேன். நீங்க இஸ்லாம் பேங்குனா முஷாரகா, முராபாஹா, எல்ஜாரா, இஸ்திஸ்னான்னு நீட்டி முழக்க ஆரம்பிச்சுடுவீங்க. வட்டியே இல்லைதான். ஆனா லாபத்துலே பங்கு, வாங்கின தொகைக்கு வேலை பார்த்து முடிச்சுக் கொடுக்கறதுன்னு ஷரியாவிலே இருந்து சரம் சரமா எடுத்து விடுவீங்க. நமக்கு அதெல்லாம் வேலைக்கு ஆகாதே.

அப்ப உனக்கு அல் க்வார்ட் ஹசன் (Al-Qard Hasan) தான் சரிப்படும்னு தோணுது.

இவர் யாரு மாப்ளே? கமல்ஹாசன், சாருஹாசன், அனுஹாசனுக்கெல்லாம் உறவா?

தேடிக்கிட்டு பரமக்குடிக்கு சவாரி விட்டுடாதே. இது ஒருத்தரோட பேரு இல்லை. இஸ்லாமிய பேங்கு சேவையிலே அல் க்வார்ட் ஹசனும் அடக்கம்.

ஷரியா படிக்கு இருக்கப்பட்ட வரவு செலவு வகையிலே இன்னொண்ணு தானே?

அல் க்வார்ட் ஹசன் மட்டும் தான் முழுக்க முழுக்க ஷரியா படியான இஸ்லாமிய வங்கி நிதி உதவின்னு  புனித குரான், ஹடித், ஷரியா, இதிலெல்லாம் நுண்ணறிவு இருக்கற அறிஞர்கள் சொல்றாங்க.  ஆனா, இதை மட்டும் நடைமுறைப் படுத்தறது சிரமம்கிறதையும் அவங்க உணர்ந்துதான் இருக்காங்க.

அம்புட்டு விசேஷம் இருக்கற விஷயம்னா சொல்லுங்க மாப்ளே. கேக்கலாம்.

க்வார்ட்ங்கற அரபிச் சொல்லுக்கு பங்கு வைக்கறதுன்னு பொருள். ஹசன்ங்கிறதுக்கு நலம், நலத்துக்காகன்னு அர்த்தம். அல் என்கிறது புனிதமானன்னு பொருள்படற அடைமொழி. சமூகத்திலே இருக்கற சக மனுஷனோட நலத்துக்காக தன் சொத்தில் ஒரு பகுதியைப் பங்கு வைக்கறதுங்கறது க்வார்ட் ஹசனோட அடிப்படை.

அப்படீன்னா என்ன மாப்ளே?

உனக்கு பணமுடைன்னு வச்சுக்க. எதுக்கு வச்சுக்கணும். எப்பவும் அதே கேசு தானே. இஸ்லாம் பேங்குலே போய்க் கேட்கலாம். அய்யா, முஷாரகா, முராபாஹா இதெல்லாம் ஒப்பந்தமாப் போட நமக்கு இன்னிக்குத் தேதிக்கு நெலமை ஒத்து வரல்லே. கொஞ்சம் பணம் புரட்ட வேண்டியிருக்கு. கொடுத்து உதவி பண்ணுங்க. இன்னும் மூணு மாசத்திலே  வடமேற்குலே இருந்து எதிர்பார்த்த பணம் வந்துடும்னு கண்டனி ஜோசியர் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லியிருக்கார். அப்போ ஜரூராக் கொண்டாந்து பேங்குலே வாங்கின தொகையைக் கட்டிடறேன்னு நீ சொல்லலாம். வாங்கின தொகையை மட்டும் கட்டினா போதும். ஒரு சல்லிக்காசு அதிகம் கொடுக்க வேண்டியது இல்லே. பேங்கு உன்னோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கும்.

தங்கச்சி வேறே உள்ளே போகும்போதே சிரிச்சுக்கிட்டே போச்சு. நீங்க வேறே ஏதோ அடிச்சு விடறீங்க. மாவிளக்கு அமிர்தமா இருக்குன்னு தங்கச்சி கிட்டே சொல்லுங்க மாப்ளே. ஆமா, இந்த உலகத்திலே தான் இப்படியான இஸ்லாம் பேங்கு சங்கதி எல்லாம் இருக்குங்கறீங்க?

இருக்குப்பா. இருக்கு. இந்தக் கடுங்காப்பியையும் குடிச்சுக்கிட்டே கேட்டு வை.   இஸ்லாம் பேங்க் பத்தி இல்லாததும் பொல்லாததுமாவா இப்படிக் காப்பித்தண்ணி கொடுத்து உனக்கு ஆதியோடந்தமா சொல்லிட்டு இருக்கேன். க்வார்ட் ஹசனையே எடுத்துக்க. முழுத் தொகையை ஒரே முட்டா திருப்பிக் கொடுக்க முடியலியா? கவலையை விட்டுத் தள்ளு. தவணையிலே கடனைத் திருப்பிக் கட்டலாம். அப்பவும் லாபத்திலே பங்கு, உழைப்பு முதலீடுன்னு உன் கிட்டே எதையும் பேங்கு எதிர்பார்க்காது. கொடுத்த பணத்தைத் திருப்பினாப் போதும்.

நம்ம ஊர்லேயும் க்வாட்டர் ஹசன், ஃபுல் ஹசன் எல்லாம் கொண்டு வரணும் மாப்ளே.

க்வாட்டர் இல்லேப்பா. க்வார்ட் ஹசன். இதிலே இன்னொரு மன நிறைவு தரும் விஷயம் இருக்கு. நீ கைத்தொழில் தெரிஞ்சவன். பேங்குலே க்வார்ட் ஹசன் நிதி உதவி வாங்கி தொழில் நடத்தி அமோகமா வந்து பேங்கு கொடுத்த பணத்தை அடைக்கறே. இந்த நிதி உதவியினாலே தானே நாம இந்த நல்ல நிலைக்கு வந்திருக்கோம்னு ஒரு நிமிசம் நினைச்சுப் பார்க்கறே. நீயாவே விருப்பப்பட்டு பேங்குக்கு அன்பளிப்பா, வெகுமதியா ஒரு தொகையையும் சேர்த்துத் தரலாம். க்வார்ட் ஹசன்லே இந்தப் பெருந்தன்மைக்கும் இடம் உண்டு. இந்த மாதிரி கொடுக்கற அதிகப் பணத்தை கொடை – ஹிபா  (Hibah)ன்னு சொல்வாங்க. பேங்கு இப்படியான ஹிபா வாங்கிக்க ஷரியா  எந்தத் தடையும் விதிக்கலே.

பேங்கு முராபாஹா, முஷாரகா, லிஜாரா, இஸ்திஸ்னா, பே சலாம் இப்படி உதவவே இருக்கப்பட்ட முதல் எல்லாம் சரியாப் போயிடுமே. ஏழை பாழைக்கு க்வார்ட் ஹசன் கொடுக்க பணத்துக்கு எங்கே போகும் மாப்ளே?

இஸ்லாம் சொல்ற படிக்கு வட்டியே வேணாம்னு பேங்குலே பத்திரமா வச்சிருக்கறதுக்காக சேமிப்புக் கணக்குலே பணம் போட்டு வைக்கறதை சொன்னேன் இல்லியா? அந்தத் தொகையைப் பயன்படுத்தி பேங்கு முராபாஹா போல நிதி உதவி செய்து லாபத்திலே பங்கு வாங்கிக்கும்னும் பார்த்தோம். இந்த   லாபப் பங்கை எல்லாம் சேமிப்புக் கணக்கு வச்சிருக்கவங்களோடு பேங்கு பகிர்ந்துக்கும்னும் பார்த்தோம். நினைவு இருக்கா?

இல்லாமே என்ன? ஷரியா சொன்னபடிக்கு சப்ளை செய்யறதாப் பார்த்துக் காபித்தூள் வாங்கற கடையை மாத்திட்டீங்க போலே இருக்கு. சிக்கரி வாடை கொஞ்சம் தூக்கலா வருது. இதுவும் நல்லாத்தான் இருக்கு மாப்ளே.

சும்மாவா சொன்னான்? நம்ம மாதிரி செம்மண் பூமிப் பயகளுக்கு   குசும்பு உடம்பொறந்ததாச்சே? நீ மட்டும் என்ன தப்பிப் பொறந்தவனா இல்லே நானா? இருக்கட்டும். அல் க்வார்ட் ஹசன் நிதி உதவி செய்ய பணத்துக்கு பேங்கு எங்கிட்டுப் போகும்னு கேட்டியே? சேமிப்புக் கணக்கு தொறக்கறவங்களும் அல் க்வார்ட் ஹசன் கணக்கு (Al Qard Hasan deposit) திறந்துடுவாங்க. வட்டியும் கிடையாது. லாபத்துலே பங்கு வரும்னும் எதிர்பார்க்கக் கூடாது. சேமிப்புக் கணக்குலே போட்ட தொகை பத்திரமாத் திரும்பி வரும். அம்புட்டுத்தான்.

அம்புட்ட்டுத்தான்னா அம்புட்டுத்தானா?

அப்படிச் சொன்னா விட்டுடறதா? ஒண்ணு சொல்றேன் குறிச்சுக்க. உலகத்திலே எந்த இஸ்லாம் பேங்குலேயும் அல் க்வார்ட் ஹசன் டெபாசிட் போட்டு சேமிச்ச தொகையை மட்டும் வாங்கிட்டுப் போனதா சரித்திரமே இல்லை. முதரபா மாதிரி நிதி உதவியிலே பங்கு பெற முதலீட்டுக் கணக்கு (investment deposit) திறக்கறதையும், பேங்கு அந்தப் பணத்துக்கு காப்பாளாராக (manager of funds) செயல்படறதையும் சொன்னேனே. அப்படி முதலீட்டுக் கணக்கு வச்சு வர்ற அதிக வருமானத்தை விட க்வார்ட் ஹசன் டெபாசிட் வச்சுக்கிட்ட வாடிக்கையாளர்கள் வாங்குறது உண்டு. பணத்தை விடு. க்வார்ட் ஹசன் டெபாசிட்களுக்கு பரிசு (gifts) வழங்கறதையும்  பேங்குகள் செய்யுது. நிதிக் கம்பெனி வெள்ளிக் குத்துவிளக்கும் த்ரீஷா படம் போட்ட கேலண்டரும் அன்பளிப்பு கொடுக்கற மாதிரியான்னு கேட்டுடாதே. இங்கே போட்ட பணம் உத்திரவாதம். மத்தபடி இருபது பெர்சண்ட் வட்டி எல்லாம் கையிலே அடிச்சு வாக்குக் கொடுத்துட்டு ஓடறதும் இல்லே.

அட, அடுத்த குவளை கடுங்காப்பி தங்கச்சி அனுப்பி வச்சுடுத்தே. இதான் நம்ம காப்பித்தூள். நயம் சரக்கு. வாசனை தூக்குது பாருங்க மாப்:ளே.

அட நீ ஒண்ணுப்பா. காப்பிப் பாத்திரத்திலே சுடுதண்ணி ஊத்தி கழுவறபோது கொஞ்சம் கறுப்பா வந்திருக்கும். பீங்கான் கிளாஸ்லே ஊத்தி அனுப்பியிருக்கா.

சும்மா தங்கச்சியை நக்கலடிக்காதீக சொல்லிட்டேன். பகல் சோத்துக்கு பட்டை நாமம்தான் அப்புறம் மாப்ளே.

சரிப்பா கவனிச்சு நடந்துக்கறேன். சந்தோஷம் தானே?

நமக்குத் தெரிஞ்ச பேங்கு நடைமுறையிலே எதைச் சொன்னாலும் அதுக்கெல்லாம் இஸ்லாம் பேங்கு வழிமுறை இதான்னு சொல்றீங்களே? கிரடிட் கார்ட் இருக்குதா உங்க இஸ்லாம் பேங்குலே?

இல்லாமே என்ன? அல் க்வார்ட் ஹசன் அடிப்படையிலே அதுவும் உண்டு. தகுதியானவங்களுக்கு இஸ்லாமிய வங்கி கிரடிட் அட்டை தரப்படும். எல்ஜாரா அடிப்படையிலே தவணை முறையிலே கடனைத் திருப்பி அடைக்கிற கிரடிட் கார்டும் உண்டு. சேவைக் கட்டணத்தை (service charge) முன் கூட்டியே நிர்ணயிச்சு, நீ உடன்பட்டு கார்ட் வாங்கினதும், மாசாமாசம் கட்டச் சொல்லுவாங்க. நம்மூர் கிரடிட் கார்டுலே சர்வீஸ் சார்ஜ் வருஷத்துக்கு ஒரு முறை கட்டினாப் போதும். ஆனா, கடன் நிலுவையிலே போனா, முப்பது பெர்சண்ட் வட்டிக்கு மேலே டாப்பு எகிறிடும்.  அங்கே அந்தத் தொல்லை இல்லே.

சரி, இஸ்லாம் வங்கி, அதுங்க இருக்கப்பட்ட அரபு நாடுகளோட அரசாங்கம். இதுக்கெல்லாம் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது. பெரிய தோதுலே பணத் தேவை ஏற்படலாம். அதை எல்லாம் எப்படி சமாளிக்கறாங்க மாப்ளே?

அதுவா, நம்மூர்னா, மத்திய அரசும் மாநில அரசும் பேங்குகள், கம்பெனிகள் கிட்டே இருந்து கடன் வாங்க பாண்ட் (bond) வெளியிடும். ஒரு வருடத்துலே, ரெண்டு வருடத்துலே வட்டியோடு பணத்தைத் திருப்பித் தரும். அதாவது எழுநூத்து ஐம்பது ரூபாய் கொடுத்து சர்க்கார் பாண்ட் வாங்கினா, ரெண்டு வருஷம் கழிச்சு ஆயிரம் ரூபாயா வர்ற மாதிரி தள்ளுபடி பாண்ட் (discount bond) பெரும்பாலும் இதெல்லாம். மத்திய அரசு கருவூலச் சீட்டுன்னு (treasury bill) 91 நாள், 182 நாள் கழிச்சு திரும்பிப் பணம் தர்றதா குறைந்த காலக் கடன் வாங்கறதும் உண்டு. நம்ம பாண்ட் போல இஸ்லாமிக் வங்கித்துறையிலே சுகுக் (sukuk).

சுகுக்லே அரசாங்கம் எங்கே வருது? இஸ்லாம் பேங்க் எங்கே இருந்து வருது?

அரசு இஸ்லாம் பேங்கோடு போட்டுக்கற கடன் ஒப்பந்தம் க்வார்ட் ஹசனா இருக்கலாம். பேங்க் வாடிக்கையாளர்கள் கிட்டே இருந்து நிதி திரட்ட போட்டுக்கற சுகுக் முதலீட்டுலே பங்குத் தொகையா வாங்கற கடனா இருக்கலாம். அதாவது சுகுக் முதரபா, சுகுக் முஷாரகா, சுகுக் எல்ஜாரா இப்படி. வாடிக்கையாளருக்குப் போட்ட பணத்தைவிட அதிகத் தொகை கிடைக்கும். அரசாங்கமும் கையை இழுத்துப் பிடிச்சுக்காதுங்கறதாலே பேங்கும் க்வார்ட் ஹசன் பாண்ட்லே முதலீடு செஞ்சிட்டு கன்னத்துலே கையை வச்சுக்கிட்டு உக்கார்ந்திருக்க வேண்டியதில்லே.

இதெல்லாம் தடம் மாறிப் போக வழியே இல்லையா?

காசு பணம் விவகாரம் தான் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எல்லாமுமே. இஸ்லாமிக் வங்கியியல் இதை நியாயத்தோடும் மனிதாபிமானத்தோடும் அணுகணும்னு சொல்றது. அதான் முக்கிய வித்தியாசம். இஸ்லாம் நிதி நடைமுறையிலே குளறுபடியே ஏற்படாதான்னு கேட்டியே? ஆயிருக்கு. ஆனா, அதுக்கு ஷரியாவோ இஸ்லாம் பேங்கோ காரணம் இல்லே.

பின்னே யாரு காரணம் மாப்ளே?

பேங்குலே வாங்கின கடனை செலவழித்த விதம் தான் காரணம். துபாய்லே கவர்மெண்டே முன்கை எடுத்து துபாய் ஓர்ல்ட்னு பெரிய கம்பெனி ஆரம்பிச்சு சுகுக் மூலம் கோடி கோடியா உலகம் முழுவதும் இருந்து கடன் வாங்கி, துபாய்லே பிரம்மாண்டமான கட்டிடங்களை, ஒரு நகரத்தையே புதுசா உருவாக்கற முயற்சியை ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் அகலக் கால் வச்சுட்டாங்க. கடன் தொகை கொடுத்து சுகுக் வாங்கினவங்களுக்கு தவணைக் காலம் முடிஞ்சு பணத்தைத் திருப்பித்தர முடியாம தவியாத் தவிச்சுத் தண்ணி குடிச்சாங்க. அபு தாபி அரசு உறவுக்கரம் நீட்டிக் காப்பாத்தினாங்களோ, பிழைச்சாங்களோ. என்னமோ போ. இன்னொரு கடுங்காப்பி வந்திருக்கு பாரு.

அய்யோ மாப்ளே. இது பச்சைத் தண்ணியாச்சே. தங்கச்சி உங்க டயத்தை வீணாக்காம நடையைக் கட்டுன்னு என்கிட்டே சொல்லுதாக்கும். சரிம்மா புரிஞ்சுக்கிட்டேன். கிளம்பட்டா? சாவகாசமா அப்புறம் பார்க்கலாம் மாப்ளே.

பார்க்கலாம்’பா, இன்ஷா அல்லாஹ்.

(இஸ்லாமிக் பேங்கிங் பகுதி முற்றும்)

ஆயுதம் எதற்கு?

போகுதென் என்கிற ஒரு சாமுராய். பெரிய வீரர். ஜென் கற்றவர். ஆனால் ஒருபோதும் தன்னுடைய திறமைகளைத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமாட்டார். அமைதியான பேர்வழி.

ஒருநாள் போகுதென் படகில் சென்றுகொண்டிருந்தார். அவரோடு இன்னும் ஏழெட்டுப்பேர் அதே படகில் பயணம் செய்தார்கள்.

சிறிது நேரம் கழித்து அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான். ’நான் பெரிய போர்வீரன். தெரியுமா?’

யாரும் பதில் சொல்லவில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரேலென்று எழுத்து நின்றான். வாளை உறுவினான். சுழற்றினான். ’இங்க எவனுக்காச்சும் தைரியம் இருத்தா என்னோட ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா. பார்த்துடலாம்.’

இப்போதும் அவர்கள் வாய் திறக்கவில்லை. ஆத்திரத்தில் அவன் இன்னும் அசிங்கமாகக் கத்தினான். ஆவேசமாகக் குதித்தான்.

கடைசியாக போகுதென் பேசினார். ’தம்பி, கொஞ்சம் அமைதியா உட்காருப்பா. நீ இப்படிக் குதிக்கறதால படகு கண்டபடி ஆடுது. அது கவிழ்ந்துட்டா நம்ம எல்லாரோட உயிருக்கும் ஆபத்து.’

அவன் சட்டென்று போகுதெனைப் பிடித்துக்கொண்டான். ’உனக்கு அவ்வளவு அக்கறைன்னா நீ என்னோட சண்டைக்கு வா!’ என்று சவால் விட்டான்.

’சரி’ என்று ஒப்புக்கொண்டார் போகுதென். ’ஆனா இங்கே சண்டை போட்டா மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே!’

’அதனால?’

’அதோ, அங்கே ஆத்துக்கு நடுவில ஒரு தீவு இருக்கு. நீயும் நானும் அங்கே போய்ச் சண்டை போடலாம்.’

’சரி.’

போகுதென் துடுப்பை எடுத்துக்கொண்டார். அந்தத் தீவை நோக்கிப் படகைச் செலுத்தினார்.

சில நிமிடங்களில் படகு தீவுக்கரையைத் தொட்டது. அந்த வீரன் உருவிய வாளோடு கீழே குதித்தான்.

மறுவிநாடி போகுதென் படகை எதிர்த் திசையில் செலுத்த ஆரம்பித்தார். அந்த வம்புச்சண்டைக்காரனைத் தீவில் தனியாகப் புலம்பவிட்டுவிட்டுப் படகு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.

படகில் இருந்த மற்றவர்கள் போகுதெனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ’ஐயா, நீங்க பெரிய சாமுராயாச்சே. கத்தியை உருவி ஒரே சீவுல அவன் கதையை முடிச்சிருக்கலாமே!’

’உண்மைதான்’ என்றார் போகுதென். ’ஆனா வாளை உருவாமலே சண்டையில ஜெயிக்கலாம்ங்கறப்போ அநாவசியமா ஆயுதமெல்லாம் எதுக்கு?’

ஐயய்யோ ஒரு சாதனை!

டான் கில்பர்ட் மற்றும் டான் எரய்லி போன்ற சோஷலாஜிஸ்ட்டுகள் மனித மனங்களை பற்றிச் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன.  மனிதன் நடுநிலையுடன் யோசிக்கிறான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தனக்கு தேவையான விஷயங்களில் கூட அசமஞ்சமாகத் தான் செயல்படுகிறான். இரண்டு பிரபல உதாரணங்கள்-

உங்கள் பர்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் ஒரு ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சத்யம் தியேட்டரை சென்று அடையும் போது டிக்கெட் காணாமல் போய் விடுகிறது. கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்பீர்களா இல்லையா?

இந்த முறை உங்களிடம் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. சத்யத்தை அடையும் போது, ஒரு ஐம்பது ரூபாய் காணாமல் போய் விடுகிறது. இப்போது என்ன செய்வீர்கள், கையில் இருக்கும் ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்குவீர்களா இல்லை வறுத்த வேர்க்கடலை கொறித்துக் கொண்டே திரும்பி வந்து விடுவீர்களா?

இதைப் பலரிடம் கேட்டுப் பார்த்த டான் கண்டுபிடித்தது, முதல் உதாரணத்தில், பலர் சினிமா பார்க்காமல் திரும்பி வந்து விடுவேன் என்றார்கள். ஏன் என்று வினவிய போது,  மீண்டும் ஒரு முறை ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டிற்குக் கொடுக்க விருப்பமில்லை என்றார்கள். அடுத்த உதாரணத்தில் கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவேன் என்றார்கள்.

இரண்டு உதாரணங்களிலும் காணாமல் போனது இரண்டு பேப்பர்கள் தான். ஒன்றில் சத்யம் என்று போட்டிருக்கிற ஒரு ஐம்பது ரூபாய் டிக்கெட். அடுத்ததில் காந்தி படம் போட்ட ரூபாய். ஆனால் மனித மனமோ முதல் உதாரணத்தில் டிக்கெட் விலையை இரட்டடிப்பாக ஆக்கிக் கொள்கிறது, அடுத்த முறை தன் விதியை நொந்து கொள்கிறது.

இதே போல் அடுத்த ஒரு சிச்சுவேஷன், நீங்கள் வாங்க நினைத்த கார் ஸ்டீரியோ உங்கள் வீட்டின் அருகே தி.நகரில் ஆயிரம் ரூபாய்க்கும் பாரீஸ் கார்னரில் தொள்ளாயிரத்திற்கு கிடைக்கிறது.  எங்கே வாங்குவீர்கள்? கொஞ்ச நாள் கழித்து நீங்கள் வாங்க நினைக்கும் கம்ப்யூட்டர், தி.நகரில் 50,000க்கும் பாரீஸ் கார்னரில் 49,900க்கும் கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்?

மக்கள் சொன்ன பதிலும், நீங்கள் நினைத்த பதிலும் ஒன்றே தான்.  கார் ஸ்டீரியோவிற்கு பாரீஸ் கார்னருக்கும், கம்ப்யூட்டருக்கு தி.நகருக்கும் செல்வதாய்ச் சொன்னார்கள்.  இரண்டிலும் விலை வித்தியாசம் ஒன்றே தான், நூறு ரூபாய்.  அதே நூறு ரூபாய். இரண்டையும் முடிவு செய்வது உங்கள் மனம்.

ஆக மனிதர்களும் அவர்கள் மனங்களும் கால்குலேட்டர்கள் அல்ல.  இதில் நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்கிறது.  என்ன தான் யோசித்து முடிவெடுக்கும் மனிதர் கூட கார் ஓட்டிக் கொண்டே டெக்ஸ் செய்கிறார், ரெட் லைட்டைச் சட்டென தாண்ட முயல்கிறார்.  மனிதர்கள் கால்குலேட்டர்களாய் இருந்தால், விபத்துகள் நடக்க வாய்ப்பேயில்லை. காரில் airbag  இத்தியாதி எல்லாம் தேவையில்லை.

0000

காரைப் பத்தி பேசும்போது, கடந்த நூறு வருடங்களில் ஆட்டோமொபைல் டெக்னாலஜி கிட்டத்தட்ட வளரவேயில்லை. கிட்டத்தட்ட.  ஆட்டோமொபைல் எனும் வார்த்தையில் மொபைல் உண்மையாகிவிட்டது. கார் போன்ற வாகனங்களால் நாம் இடம் பெயர்கிறோம். ஆனால் ஆட்டோவாக இல்லை. அதாவது இன்னமும் ஓர் ஆட்டோமொபைலை ஓட்ட ஆசாமி தேவைப்படுகிறார்.

மக்கள் வாங்கக் கூடிய விலையில் முதல் காரை தயாரித்த ஹென்றி போர்ட்(Henry Ford) சொன்ன ஒரு விஷயம் – “If I asked my customers what they want, they simply would have said a faster horse.”   எங்கள் கம்பெனி போய் மார்க்கெட் வாக்கெடுப்பு எடுத்திருந்தால் வேகமான குதிரைகளை தான் எங்கள் வாடிக்கையாளர்கள் கேட்டிருப்பார்கள். கார் வேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே தான் யாரையும் கேட்காமல் நாங்களாகவே மக்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்தோம் என்றார். ஆனால் அதற்குப் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளாக நான் அந்தக் காரை வேகமாக செலுத்துவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவை அடுத்த ஹென்றி போர்ட் மற்றும் உண்மையான ஆட்டோ மொபைல்.

இந்தக் காரை கண்டுபிடிக்கும் முன் ஒரு நாள் தனது எஞ்சினியர்களை கூப்பிட்டு அனுப்பினார் போர்ட்.  அவர் சொன்னது -” I dream of a machine that runs on wheels and is driven by an engine. Go find it” இந்த மாதிரியான அடுத்த ஒரு visionary-க்காகத் தான் உலகம் இன்னமும் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது.

0000

சமீபத்தில் படித்த Program or be Programmed என்னும் புத்தகத்தில் இது சுவாரஸ்யமான விஷயமாகப்பட்டது. எல்லோரும் சாப்ட்வேர் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனை. இருக்கிற எஞ்ஜினியர்கெல்லாம் முதலில் வேலையிருக்கிறதா என்ற கேள்வியை தள்ளி வைத்துப் பார்த்தால், இதில் கொஞ்சம் நன்மையிருக்கிறது.

எனக்கு ப்ரோக்கிராமிங் சொல்லிக் கொடுத்த வாத்தியார் முதலில் சொன்னது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்கிராமிங் கேள்வி ஒரு கண்ணாடி போல.   முதலில் கீழே போட்டு உடைத்து விடுங்கள். உடைந்த சில்லுகளை ஆராய்ந்து பாருங்கள், ப்ரோகிராம் எழுத உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.  எல்லா விஷயங்களும் இப்படித்தான். எல்லா கடினக்காரியங்களையும் சிறு சிறு கடினங்களாக ஆராய்ந்து முடிவெடுத்தால் அந்த பெரிய விஷயத்திற்கு முடிவு கிடைத்து விடும். இதே மாதிரி சிந்திப்பதற்குத் தான் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் டக்லஸ் ரஷ்ஆஃப்.

இதையும் தாண்டி நம்மை சுற்றியுள்ள விஞ்ஞான உலகை அறிந்து கொள்ள ப்ரோக்கிராமிங் உதவும் என்று வாதிடுகிறார். புத்தகம் விற்று தீர்ந்தாகிவிட்டது.

0000

இந்த வருடத்தின் சிறந்த என்று போட்டு வரும் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் நேரமிது. முந்திக் கொள்கிறேன். இந்த வருடத்தின் சிறந்த தமிழிசை அமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்.

போன வருடமே இசை வெளிவந்து விட்டது என்றாலும் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது இந்த வருடம் என்பதால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம்.   அதோ அந்தப் பறவை ரீமிக்ஸை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் பிரமாதமான காம்பொசிஷன்கள்.  ரொம்பவும் பிடித்தது, ஓ ஈசா பாடல்.

வ.கு.கட்டிங் படத்தில் உன்னைக் கண் தேடுதே பாடல் ரொம்பவே கடினமான பாடல். கேட்டுப் பாருங்கள், ஆரம்ப கால ஏ.ஆர். ஆர் தெரிவார்.

சமீபத்தில் வெளியான தனுஷ்-வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் அய்யய்யோ(பாட்டின் பெயர் தான்) பாடல் ஒரு சாதனை. ரொம்பவே சாதாரணமாகத் தோன்றினாலும் இரண்டுமுறை கேட்டால் எஸ்.பி.பியின் குரலுக்கு மீண்டும் ஆட்படுவீர்கள். மீண்டும் மீண்டும் கேட்பீர்கள்.  ஆங்காங்கே இஞ்சி இடுப்பழகு தெரியலாம்.  ஒத்த சொல்லால மற்றும் யாத்தே எனும் பாடல்களும் அட சொல்ல வைக்கின்றன.

இந்த வருடம் பிடித்த வேறு சில பாடல்கள்:  ஷ்ரேயா கோஷல் – ரஹ்மான் – மன்னிப்பாயா, ஆண்ட்ரியா-அஜீஷ் – இது வரை இல்லாத,  கார்த்திக் – உசுரே போகுதே மற்றும் ஆண்ட்ரியா – Who’s the Hero?(மன்மதன் அம்பு). மற்றபடி அழகான ஹீரோயின்களும் வெகு அழகாக பாடுகிறார்கள் என்பது தான் இந்த வருடத்தின் வகைப்படுத்த முடியாத சாதனை.

பேசாதே!

ஒரு பெரிய அறிஞர். அவருக்கு ஜென் கற்க ஆசை. ஒரு குருவைத் தேடி வந்தார். வணக்கம் போட்டார். விஷயத்தைச் சொன்னார்.

அவர் பேசுகிறவிதத்தை ஊன்றிக் கவனித்த குருநாதர் சொன்னார். ’இதோ பாரப்பா, உன் மனசு ஒரு நிலையில் இல்லை. நீ ரொம்பக் குழம்பியிருக்கிறாய். இப்போது
நான் உனக்கு ஜென் சொல்லிக்கொடுத்தால் பிரயோஜனம் இருக்காது. அநாவசியமாக நம் இருவரின் நேரமும் வீணாகும்.’

இதைக் கேட்ட அறிஞரின் முகம் சுருங்கிவிட்டது. ’குருவே, நீங்களே இப்படிச் சொன்னால் நான் எங்கே போவேன்?’ என்று அழாக்குறையாகக் கெஞ்சினார்.  ‘எப்படியாவது நீங்கதான் எனக்கு உதவி செய்யணும். என் மனசில இருக்கற
சந்தேகங்களைத் தீர்த்துவைக்கணும்.’

‘சரி. உன்னை நான் சிஷ்யனா ஏத்துக்கறேன். ஆனா ஒரு நிபந்தனை.’

‘சொல்லுங்க குருவே!’

‘இங்கே நீ ஆறு மாசம் மௌன விரதம் இருக்கணும்.’

’மௌன விரதமா?’ வந்தவர் அதிர்ந்தார். ’அப்புறம் அப்படி நான் என்னோட
சந்தேகங்களைக் கேக்கறது?’

’அதையெல்லாம் மனசுல குறிச்சுவெச்சுக்கோ. எல்லாத்துக்கும் நான் பதில் சொல்வேன். ஆனா இப்போ இல்லை. 6 மாசம் கழிச்சுதான்.’

அறிஞருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் சம்மதித்தார். ஆசிரமத்தில் சேர்ந்தார். மௌன விரதத்தைத் தொடங்கினார்.

அடுத்த பல மாதங்கள் அவருடைய நேரம்முழுவதும் தியானம், பிரார்த்தனை, வாசிப்பு, குருவின் சொற்பொழிவுகளைக் கேட்பது என ஓடியது. மெல்ல அவரது மனம்
தெளிந்தது. முன்பு குழப்பியடித்த விஷயங்கள் இப்போது நிதானமாக யோசித்தபோது புரிந்தன.

ஆறு மாதங்கள் முடிந்தன. குரு அவரை அழைத்தார். ’நீ மௌன விரதம் இருந்தது போதும். இப்போது உன் கேள்விகளைக் கேட்கலாம்.’

அறிஞர் அமைதியான குரலில் சொன்னார். ’கேட்பதற்கு ஒன்றும் இல்லை குருவே!’

அல்வா

அத்தியாயம் 9

ரெனே பெட்டியை மூட பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். மோனிகா கம்ப்யூட்டரில் இருந்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டிருந்தாள்.

“ இந்தா டிக்கட்.. இவ்வளவு நாள் உன்னை கண்டுகொள்ளக்கூட இல்லை. இப்போது கூப்பிடுகிறார்கள் என்று அவசரமாக ஓடுகிறாயே..”

“சாதாரண நேரமாக இருந்தால் நானும் விளையாட்டு காட்டியிருப்பேன் மோனி. இப்போது பெரியவர்தான் முக்கியம். அலெக்குக்கு தண்ணி காட்டுவது ப்ரையாரிட்டி இல்லை. என்னுடைய விக்கை எடுத்து வைத்திருக்கிறாயா?”

“என்ன மாறுவேஷமா போடப்போகிறாய்?”

“தொழில் அப்படி. தேவைப்பட்டாலும் படும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவேண்டும். நான் சிராக்கூஸ் போனதும் அடுத்த ஸ்டாப் எது என்று உனக்குத் தெரிவிக்கிறேன். நீ கிளம்பிவிடு”

“உன் நண்பன் இருக்கிறானாமே ஏற்கனவே” நண்பன் இல் சிறப்பு அழுத்தம் கொடுத்தாள் மோனி.

“திஸ் இஸ் மை சான்ஸ். அவனுடைய இடம் எது என்று தெரியவைக்க சரியான சந்தர்ப்பம். ஆனால்.. மைண்ட் இட்.. மீக் முட்டாள் இல்லை. நம்பர் டூ, யெஸ், ஆனால் நிச்சயமாக முட்டாள் இல்லை.”

”முட்டாள் இல்லை. முட்டாளாக இருந்தால் சாமர்த்தியமாக உன்னை அழுத்திவிட்டு மேலேறி இருக்க மாட்டான்”

“தப்பு என்னுடையது. அவனை ரொம்ப நம்பிவிட்டேன்.”

ரெனேவுக்கு நினைக்கையிலேயே அடிவயிற்றில் கோபம் சுரந்தது. எட்டு ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடு.  மீக் அணிந்திருந்த க்ரே கலர் சூட் கூட நினைவிருந்தது.

“ஹாய் ரெனே.. நீ என்னைச் சொன்னதெல்லாம் செஞ்சுட்டேன். அந்த டெக்னிகல் மேனேஜர் நல்ல ஆளாத்தான் தெரியறான். ஹீ இஸ் நாட் அ மோல்.”

“ஃபார் ஃப்ரம் இட்! அவன் ஒரு திருடன். நல்லவனா தெரியறான்னா அதுக்கு ஒரே காரணம் இன்னும் சான்ஸ் கிடைக்காததுதான். அவனுக்கு ட்ரேட் சீக்ரட் அக்சஸ் கிடைச்சுதுன்னா முதல் வேலையா வித்துடுவான்” இவன் ஏன் இவ்வளவு அவசரமாக முடிவெடுக்கிறான்? என்னிடமே நடிக்கிறானா?

”எப்படி சொல்றே?”

“எம் டி ஓ.. மிஸ்ட்ரஸ்ட் த ஆப்வியஸ்.. வெளிப்படையா தெரியறதை நம்பாதே மீக். நீ அந்த ஆளை ஃபாலோ பண்ணே, அவனோட பழைய எம்ப்ளாய்மெண்ட் ரெக்கார்ட் எல்லாத்தையும் செக் பண்ணே.. ஆனா நான் எடுத்துகிட்டது அவனோட ஃபைனான்ஷியல் நிலவரத்தை”

“அதுல என்ன தெரிஞ்சுது?”

“தலைவருக்கு தலைக்கு மேலே கடன். உடனடியா பணம் தேவைப்படுது. லோன் ஷார்க் கிட்ட மாட்டி இருக்கான். ரேஸா, நம்பர் கேமா தெரியலை. பணத்தை கச்சாமுச்சான்னு விட்டிருக்கான். எல்லாம் ரீசண்டா நடந்தது”

மீக் விசிலடித்தான். “நீ சொல்றது சரியா இருக்கலாம் ரெனே.. இருக்கலாம் என்ன.. இருக்கும்! ஆனா எப்படி கன்ஃபார்ம் பண்றது?”

“எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. இவனோட காம்படிஷன் கம்பெனி காண்டாக்ட் பாரிஸ்லே இருக்கான். அவனைப் பத்தி கொஞ்சம் விவரம் கலெக்ட் பண்ணனும். ரெண்டு நாள். திரும்பி வந்து முடிவெடுக்கலாம்”  இவனைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். சப்பை மேட்டருக்கும் என்னைக் கேட்கிறான். எதற்கெடுத்தாலும் என்னுடன் சண்டை போடுபவன் இவ்வளவு நல்லவனாக ஆனது எப்போதிருந்து?

இரண்டு நாட்களில் ரெனே திரும்பி வந்தபோது அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது.  க்ளையண்ட் வாயெல்லாம் பல்லாக வரவேற்றார். “உங்க கம்பெனி ஒரு ஜீனியஸ் கம்பெனி. அதுவும் பர்டிகுலரா மிஸ்டர் மீக் ரிப்பர்!”

ரெனே புரியாமல் விழித்தான்.

“சிம்பிள் ஐடியா.. சில ஃபேக் டாகுமெண்ட்ஸுக்கு அந்த டெக் மேனேஜருக்கு அக்சஸ் கொடுத்தார். ஒரே நாள்லே அது வெளியே போனதை ப்ரூவ் பண்ணிட்டார். அவன் இப்போ ஜெயில்லே”

மீக் ரெனேவைப் பார்த்துப் புன்னகைத்தான். “இவருக்கும்தான் க்ரெடிட் போகணும் சார்”

வெளியே வந்ததும் மீக் சொன்னான் “ரெனே.. ஐ அம் க்விட்டிங். இந்த கம்பெனி சி ஈ ஓக்கு என் வேலை ரொம்ப பிடிச்சுருச்சாம். செக்யூரிட்டி கன்சல்டண்டா வரச் சொன்னார்”

“உன் வேலை?”

“அட் லீஸ்ட் அந்த லாஸ்ட் ஐடியா என்னுடையதுதானே?”

“கெட் லாஸ்ட் மீக்.. குட் ரிட்டன்ஸ்” ரெனேவால் கோபத்தை மறைக்க முடியவில்லை.

இப்போதும் அந்தக்கோபம் கொஞ்சமும் ஆறவில்லை. மீக்.. வருகிறேன். இதில் ப்ரூவ் செய்கிறேன் யார் நிஜமான பெஸ்ட் என்று..

***

”நிஜமான பெஸ்ட்தான் வேண்டும் என்றால் ப்ராஜக்ட் வேல்யூ அதிகரிக்கதான் செய்யும் “ ரவி சோஃபாவில் அமர்ந்திருந்தான். ஐஸ் ரிங்க்கின் நடுவே போட்டிருந்த ரெஸ்டாரண்டில் இசையின் சப்தத்துக்கு மேல் பேசவேண்டி இருந்தது.

மீக் அமைதியாக இருந்தான். லென்னிதான் ரவியிடம் விஷயம் புரியாமலே பேசிக்கொண்டு இருந்தான்.

“சினிமா எடுக்கவே இவ்வளவு செலவு ஆகாதே”

“நீங்கள் கார்ப்பொரேட் ஆசாமி. உங்களுக்கு சினிமா நிலவரம் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அண்ட், திஸ் இஸ் நாட் சினிமா. விளம்பரமும் கிடையாது. இது ஒரு யுனிக் ஆர்ட். ப்ரமோஷனல் வீடியோக்களில் எங்கள் நிறுவனம்தான் பெஸ்ட். ஃபார்ச்சூன் 500லேயே பத்து கம்பெனிக்கு மேலே எடுத்துத் தந்திருக்கோம்.”

மீக் லென்னியைப் பார்த்த பார்வையில் மேட்டருக்கு வாடா இருந்தது.

“ஓக்கே மிஸ்டர் ராவி. ரூமுக்கு வருகிறீர்களா, எங்கள் கார்ப்போரேட் ப்ரமோஷனல் ப்ரோஷர்ஸ் தரோம்”

ஐஸ்ரிங்க் குழந்தைகள் சரேல் சரேல் என வழுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே எழுந்தார்கள். நடக்கும் வழி எல்லாம் ரவி தன் பிரதாபங்களை அளந்து கொண்டிருந்தான். “நாளைக்கு கூட ஏகே கார்ப்போரேட் ஷூட்டிங்குக்காக நடுக்கடல் ஆயில் ரிக்குக்கு போறோம். நடு டிஸர்ட், காட்டுக்கு நடுவுல.. படம் எடுக்காத இடமே பாக்கி இல்லை”

ரூமுக்குள் நுழைந்ததும் மீக் முதல் முறையாக பேசினான். “இவரை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்”

ரவிக்கு பேச்சு வரவில்லை. இவன் எங்கே இங்கே? காஃபி ஷாப்பில் பார்த்தவன், எதிர் ரூமில் கேமரா சகிதம் நின்றிருந்தவன்.

“டைரக்டர் பேசமாட்டார் போல. இவ்வளவு நேரம் நிற்காமல் பேசிக்கொண்டிருந்தாரே” சிரித்தான் லென்னி.

“நீங்களெல்லாம் யார்? படம் எடுக்கறதைப் பத்தி பேச வரச் சொல்லலைன்னு மட்டும் தெரியுது”

“ஷார்ப்பாதான் இருக்கீங்க. யெஸ். நீங்க படம் எடுக்கவேண்டாம். நாங்க கொஞ்சம் எடுத்திருக்கோம், அது பத்தி உங்க எக்ஸ்பர்ட் ஒப்பினியன் தேவைப்படுது” லென்னியின் சோர்ஸ் பையில் இருந்து சில படங்களை எடுத்து டேபிள் மேல் போட்டான்.

”தெளிவாக எடுத்திருக்கிறாயே” லென்னி புகழ சோர்ஸ் கூச்சமானான்.

“இந்த ஃபோட்டோக்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். இங்கேயே கலீல் இந்த ஃபோட்டோக்களைப் பார்த்தால் உன்னைக் கொலையே செய்வான். தேடிப்பிடித்து கல்யாணம் செய்துகொண்டான் பார் ஒரு நடிகையை. ஆனால் முக்கியமாக மும்பையில் உன் மனைவிக்கு இந்த ஃபோட்டோக்களில் ரொம்பவே இண்டரஸ்ட் இருக்கும். டைவர்ஸ் பேப்பர்ஸோடு இதையும் சேர்த்தால் உன்னை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து விடலாம். அந்த ஆசையில்தானே டிடெக்டிவ் ஏஜென்ஸியே உள்ள நுழைஞ்சுது..”

ரவி யோசித்தான். மும்பை மனைவியின்மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது. என்ன குறை வைத்தேன் உனக்கு. டைவர்ஸ் ஆகும்போது ஒழுங்காக செட்டில் செய்திருப்பேனே.. ஏன் என்னை பிச்சைக்காரனாக்க வெறி.

”அடுத்து என்ன?” என்றான் லென்னி.

மீக் கனைத்தான். “சார் யோசிப்பார். நீ ஏன் கவலைப்படறே?”

ரவிக்கு பேச்சு வரவில்லை. என் மனைவி டிடெக்டிவ் ஏஜன்சி வைத்தாள் என்றால் ரிப்போர்ட் அங்கே போகவேண்டியதுதானே? இவர்கள் ஏன் என்னுடன் பேசவேண்டும்? திக்கியது. இருந்தாலும் கேட்டான். “இதை ஏன் என் மனைவியிடம் சொல்லாமல்..”

“என்னவோ நினைத்தேன் உங்களை. ரொம்பவே ஷார்ப். ஐ லைக் டீலிங் வித் ஸ்மார்ட் மென். யெஸ். காரணம் இருக்கிறது”

“என்ன காரணம்?”

மீக் சட்டையில் இருந்து இன்னொரு ஃபோட்டோவை எடுத்தான். “இவர் பெயர் டெர்ரி. அமெரிக்காக்காரர். இப்போது காணவில்லை. எங்கே இருப்பார் என்று தெரிந்த ஒரே ஆள் கலீல். அவரை எங்களால் நேரடியாக அணுக முடியாது. அங்கேதான் உன் உதவி வேண்டும்”

ரவி குழப்பமானான். “புரியவில்லை”

***

“புரியவில்லை” என்றான் அமீர்.

“இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது? நீ, உன்னை வேலைக்கு அமர்த்திய உன் பாஸ் எல்லாரும் முட்டாள்கள் என்றேன்” டெர்ரி கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்தார். கொஞ்சம் களைப்பாகத் தெரிந்தாலும் சௌகர்யமாகத்தான் இருந்தார்.

“நான் ஒரு விஞ்ஞானி, ஓக்கே. சாலிஸ்க்காக வேலை செய்கிறேன், ஓக்கே. ஆனால் என் ஆராய்ச்சியின் காபிரைட் எனக்குதான். சாலிஸுடன் என் காண்ட்ராக்ட் ரொம்ப சிம்பிள். என் ரிசர்ச்சுக்காக அவர்கள் செலவிடும் தொகையை என் கண்டுபிடிப்பின் மூலமோ, அல்லது கேஷாகவோ செட்டில் செய்யவேண்டும் – அஃப் கோர்ஸ் வித் அ பெனால்டி.. என்னை ஏன் கடத்திக் கொண்டு வர வேண்டும்? எனக்கு நல்ல காம்பன்சேஷன் செய்வதாகச் சொல்லி இருந்தால் நானே பேகை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே..ஏன் அனாவசிய ரிஸ்க்?”

”அதானே பாஸ்! இவ்வளவு சிம்பிளான வழியை ஏன் ஏகே தேர்ந்தெடுக்கவில்லை?” டேனிக்கும் குழப்பம்.

அமீர் குழம்பவில்லை. “டேனி, அமைதியா இரு. இந்த ஆள் நம்மை ஏமாத்தப் பாக்கறான். ஏகே அப்படி ஒரு டெசிஷன் எடுத்ததுக்கு சாலிடா காரணம் இருக்கு. உனக்கு அப்புறம் சொல்றேன்”

-தொடரும்

தோழர்

அத்தியாயம் 4

எங்கெல்ஸால் நம்ப முடியவில்லை. எப்படி வாழ்கிறார்கள் இவர்கள்? சுவாசித்துக்கொண்டும், நடமாடிக்கொண்டும், வேலை செய்துகொண்டும் இருக்கிறார்கள் என்பதற்காக இவர்களை உயிருள்ளவர்கள் என்று அழைக்கமுடியுமா? எங்கெல்ஸ் அவர்களை ஊன்றி கவனித்தார். இடுங்கிய கண்கள். மெலிந்த தேகம். உரையாடும்போது, ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலும் இருமல் சத்தம். நிமிர்ந்து நேராக நிற்க முடியவில்லை. நடுங்கினார்கள். தடுமாறினார்கள். சராசரியாக, ஒரு நாளைக்குக் பதினான்கு மணி நேரம் அவர்கள் வேலை செய்தார்கள். பல சமயங்களில், பதினெட்டு மணி நேரம் ஆகிவிடுவது இயல்பானதே. நன்றாக இருட்ட ஆரம்பிக்கும்போது  சோர்ந்து களைத்து, வீட்டுக்குச் செல்வார்கள். அதிகாலை இருள் விலகும் முன்பே ஆலை மணி அடித்துவிடும். உறக்கத்தை விட்டொழித்துவிட்டு, விரைந்து வந்துவிடவேண்டும்.

நாளடைவில், இயந்திரத்தின் ஓர் அங்கமாகவும், மற்றொரு இயந்திரமாகவும் அவர்கள் மாறிவிடுகிறார்கள். இந்த மாற்றத்தை எங்கெல்ஸ் கண்கூடாகக் கண்டு அதிர்ந்து போனார்.  தன் தந்தையின் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தபோதே, தொழிலார்களின் பரிச்சயமும் ஏற்பட்டுவிட்டது. தன் மகன் தொழிற்சாலையில் நேரம் செலவிடுவது, தொழில் கற்றுக்கொள்வதற்காக என்று பிரெட்ரிக் நினைத்திருந்தார். எங்கெல்ஸ் படித்துக்கொண்டிருந்தது தொழிலாளர்களின் வாழ்நிலையை.

தன் தந்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்  புத்திமதிகளை யோசித்துப் பார்த்தபோது எங்கெல்ஸுக்குக் கோபமும் சிரிப்பும் ஒரு சேர வந்தது.  கடவுளை வணங்கு. எப்போதும் கடவுளின் நினைவாக இரு. நீ செய்யும் பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்பு கேள். இதைவிட பெரிய முரண்பாடு வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்று யோசித்துப் பார்த்தார் எங்கெல்ஸ். பொழுது முழுக்கக் கடவுளையே நினைத்துக்கொண்டிருந்ததால்தான், மனிதர்களைப் பற்றி நினைக்க முடியவில்லையா தந்தையால்? தன் தொழிற்சாலையில் கிடந்து அவதியுறும் தொழிலாளர்களைப் புறக்கணித்துவிட்டு, கடவுளை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்வதன் மூலம், அவருக்குப் புண்ணியம் கைகூடிவிடுமா?

எல்லையில்லா அன்பை போதித்தது கிறிஸ்தவம். ஆனால், தொழிலாளர்கள் விலங்குகளைப் போலவே நடத்தப்பட்டு வந்தனர். எங்கெல்ஸ் அவர்கள் குடியிருப்புகளுக்குச் சென்றார். குடும்பத்தினரைக் கண்டார். குழந்தைகள் பலர் தொழுநோயால் பீடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ந்து போனார். அசுத்தமான அந்தக் குடியிருப்புப் பகுதிகளில், சுவாசிப்பதற்கு நல்ல காற்றுகூட கிடைக்கவில்லை. தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையைத்தான் அவர்கள் சுவாசித்துக்கொண்டிருந்தார்கள். பசியைப் போலவே நோய்களையும் அவர்கள் அசட்டை செய்ய கற்றுக்கொண்டிருந்தனர். எந்த வியாதியும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.  அதே சமயம், பிராந்தியிடம் தஞ்சம் புகுந்திருந்த தொழிலாளர்களையும் எங்கெல்ஸ் கண்டார். வலி மிகுந்த உழைப்பின் முடிவில் கிடைத்த கூலியை அவர்கள் வலியை மறக்கடிக்கும் மதுவில் செலவிட்டு வந்தனர்.

பார்மெனில் எங்கெல்ஸ் சந்தித்த தொழிலாளர்களின் நிலை இன்னமும்கூட மோசமாக இருந்தது. செல்வச் செழிப்பான ஒரு துறைமுக நகரத்திலும்கூட இவர்கள் மோசமான வாழ்வைதான் நடத்தவேண்டுமா? செல்வமும் ஏழைமையும் அருகருகில் இருக்கும் விசித்திரம்தான் என்ன? புத்தகங்களில் விடை தேடினார் எங்கெல்ஸ். இலக்கியம், வரலாறு, தத்துவம் என்று விரிந்த அவர் தேடலில் பல வெளிச்சங்கள் கிடைத்தன. தொழிலாளர்களின் வாழ்நிலை ஏன் இவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு அவர்கள் வாழ்வையோ அல்லது அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலையின் அணுகுமுறையையோ ஆரய்ந்தால் போதாது. இது ஒரு சமூகப் பிரச்னை. அரசியல் பிரச்னை. மிக முக்கியமாக, பொருளாதாரப் பிரச்னை.  இந்தப் புரிதல் எங்கெல்ஸின் பார்வையை விசாலப்படுத்தியது. கிட்டத்தட்ட அதே சமயம், ஜெர்மனின் அரசியல் சூழல் மாறிக்கொண்டிருந்தது.

1840களில், ஜெர்மனி அரசியல் ரீதியில் பிளவுண்டிருந்தது. ஒரு நாடாக அல்ல, முப்பத்தொன்பது தனி சுதந்தர மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகவே ஜெர்மனி நீடித்து வந்தது. நூற்றாண்டுகளாக இதுதான் நிலைமை. ஜெர்மனியின் எல்லைகள் கிழக்கில் விஸ்டுலா நதியில் இருந்து மேற்கே ரைன் நதி வரை: தெற்கே டான்யூப் நதியிலிருந்து வடக்கே பால்டிக் கடல் வரை பரவி படர்ந்திருந்தது.  பெரிய நிலப்பரப்புதான்.  ஆனாலும், வளம் போதாத காரணத்தால் மக்கள் தெற்கு, மேற்கு என்று குடிபெயர்ந்து அங்கேயே வாழவும் ஆரம்பித்தனர்.  தெற்கில் குடியேறியவர்கள் ரோமானியர்களுடன் பழகி, அவர்கள் நாகரிகத்தைக் கற்றுக்கொண்டனர்.  ரோம சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டம் அது.  ஜெர்மனியும் நாளடைவில் ரோமானியர்களின் ஆட்சிக்கு உட்பட வேண்டியிருந்தது.

பிரடரிக் உருவம் பொறித்த நாணயம்

பொதுவான மொழிதான் என்றாலும் ஜெர்மானியர்கள் பல நூற்றாண்டுகளாகத் தனித்தனியே சிதறிக்கிடந்தனர்.  17ம் நூற்றாண்டு ஜெர்மனியில் மட்டும் சுமார் 300 அரசாங்கங்கள் உதிரியாக இயங்கி வந்தன.  இவற்றுக்கு இடையே தொடர்ந்து விரோதமும் போட்டியும் மூண்டு கொண்டிருந்தன.  சிறியதும் பெரியதுமாக சிதறிக்கிடந்த ஜெர்மன் அரசாங்கங்களுள், பிரஷ்யா முன்னணியில் இருந்தது.  பிறகு, ஆஸ்திரியா.  ஜெர்மனியை யார் ஆள்வது என்பது குறித்து இந்த இரண்டுக்கும் இடையில் அதிகாரப் போட்டி நிலவியது.

பிரஷ்யாவின் பலமும் அதிகாரமும் பிற ஜெர்மானிய அரசாங்கங்களிடையே பொறாமையை ஏற்படுத்தியது. மூன்றாம் பிரெட்ரிக் வில்லியம் என்னும் அரசர், பிற ஜெர்மானிய நாடுகளைத் திரட்டி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.  ரைன்லாந்து ஐக்கியம் என்று அது அழைக்கப்பட்டது. பிரஷ்யாவுக்கு மாற்று சக்தியாக இந்த  ஐக்கியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

18ம் நூற்றாண்டின் இறுதியில், நெப்போலியன் போனபர்ட் (1769-1821) தலைமையில் பிரான்ஸ் ஒரு வலிமையான ஐரோப்பிய சக்தியாக எழுந்து நின்றபோது, பிரஷ்யா நெப்போலியனை எதிர்க்க ஆரம்பித்தது. பிரிட்டன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளுக்கும்  நெப்போலியனின் எழுச்சி பீதியூட்டிய காரணத்தால் அவை பிரஷ்யாவுக்கு உதவ முன்வந்தன.  பிரஷ்யாவோடு சேர்ந்து பிற ஜெர்மானிய அரசாங்கங்களும் ஒன்றிணைந்து நெப்போலியனுக்கு எதிராகப் போரிட்டன.  1815ம் ஆண்டு, வாட்டர்லூ யுத்தத்தில் நெப்போலியன் வீழ்த்தப்பட்டார்.

நெப்போலியன் ஜெர்மனியின் சிந்தனைப் போக்கை வெகுவாகப் பாதித்தார்.  சுதந்தரம் குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.  நாடு, தேசம், தேசபக்தி போன்ற கருத்தாக்கங்கள் உருபெற்றன. பிளவுபட்டிருந்த சிறிய அரசாங்கங்கள் சில அடிப்படைகளை உணர்ந்துகொண்டன.  நமக்குள் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடந்தால், நெப்போலியன் போன்றவர்கள் முறியடித்துவிடுவார்கள் என்பது புரிந்தது.  வேறு எதற்காக இல்லாவிட்டாலும், தற்காப்புக்காகவாவது அரசாங்கங்கள் ஒன்றுபட்டு திகழவேண்டும் என்பதையும் புரிந்துகெண்டார்கள்.  1789ம் ஆண்டு 300 நாடுகளுடன் பிளவுப்பட்டிருந்த ஜெர்மனி 1815ல் 39 நாடுகளாக சுருங்கிப்போனது.

இவற்றையும் ஒன்று சேர்த்து, ஒன்றுபட்ட ஜெர்மனியை கட்டமைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை வெற்றிபெறவில்லை.  பிரஷ்யாவும், ஆஸ்திரியாவும் வழக்கம் போல் அதிகாரத்தைக் கைப்பற்ற போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது.  மற்ற சிறு நகரங்களால் இந்த இரு பெரும் சக்திகளை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. ஆஸ்திரியா, க்ளெமென்ஸ் மெட்டர்னிச் (Klemens Wenzel von Metternich) என்பவரால் ஆளப்பட்டு வந்தது. பிரஷ்யா, நான்காம் பிரெட்ரிக் வில்லியமின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1840ல் ஆட்சிக்கு வந்த பிரெட்ரிக், அளவற்ற அதிகாரத்தை விரும்புபவராக இருந்தார். மக்கள் என்றென்றும் தன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் என்று விரும்பிய பிரெட்ரிக், கடுமையான ஒடுக்குமுறையைக் கையாண்டு வந்தார்.

பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அப்போது முடியாட்சிதான் நடைபெற்று வந்தது. ஆனால், ஜெர்மனியைப் போல் அங்கே முழுமையான அடக்குமுறை சாத்தியப்படவில்லை. அந்நாட்டு முதலாளிகளும் செல்வந்தர்களும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் தலையீடு அதிகரிப்பது முதலாளிகளுக்கு உகந்ததல்ல என்பது ஒரு காரணம். தொழில் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் ஆதரவு இன்றியமையாதது என்பதால் தொழிலதிபர்கள் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தனர். ஆட்சியாளர்கள் தொழில் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தபோது அல்லது, அதற்கு தடையாக இருந்தபோது, முதலாளிகள் அரசை வெளிப்படையாக எதிர்த்தனர்.  பிரிட்டனிலும் பிரான்ஸிலும் தொழிற்சாலைகள் அதிகம் பெருகியதற்கும், அந்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள் பெரும் செல்வந்தர்களாகத் திகழ்ந்ததற்கும் காரணம், முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருந்த நல்லுறவு.

பிரிட்டன், பிரான்ஸைத் தொடர்ந்து, மெதுவாக ஜெர்மனியிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. குறிப்பாக,  சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்த பிரஷ்ய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ரைன்லாந்து மாகாணத்தில். பிரஷ்யாவும் ஏன் பிரிட்டனையும் பிரான்ஸையும் போல்முதலாளிகளுக்கு அனுகூலமாக இருக்கக்கூடாது? எதற்காக ஜெர்மனி ஐரோப்பாவைச் சார்ந்திருக்கவேண்டும்? நம்மிடம் உள்ள திறமையை முழு அளவில் பயன்படுத்தினால், நம்மால் இங்கே பல தொழிற்சாலைகளை உருவாக்கமுடியாதா? உற்பத்தியைப் பெருக்கமுடியாதா? செல்வம் சேர்க்கமுடியாதா?

ஜெர்மானிய பூர்ஷ்வா குழுவினரின் நோக்கங்கள் தெளிவானவை. முடியாட்சியைக் கவிழ்க்கவேண்டும். தொழில் வளர்ச்சிக்குச் சாதகமான அணுகுமுறையை அமல்படுத்தவேண்டும். அரசு தலையீடு இல்லாத சாதகமான தளம் உருவாகவேண்டும். எனவே, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும். நமக்குத் தேவையான அரசாங்கத்தை நாமே அமைத்துக்கொள்ளவேண்டும். நமக்குத் தேவைப்படும் கொள்கைகளை நாமே வகுத்துக்கொள்ளவேண்டும்.

எங்கெல்ஸ் வாசித்த செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் இந்த எதிர்ப்புணர்வே பிரதானமாகவும் தீவிரமாகவும் தலைகாட்டியது. அரசியல் சுதந்தரம் மறுக்கப்பட்டு வந்த காரணத்தால், போராட்டக்காரர்கள் எழுத்தையே தங்கள் ஆயுதமாக வரித்துக்கொண்டிருந்தனர். கடிதங்கள் வாயிலாக அவர்கள் தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டனர். போராட்டங்களைத் திட்டமிட்டனர். கதைகளிலும் கவிதைகளிலும் முடியாட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்பினர்.  சுதந்தரத்தை நேசிக்கும், ஜனநாயகத்தை நேசிக்கும் குழுவினரும் இந்தப் போராட்டத்தில் தங்களைப் படிப்படியாக இணைத்துக்கொண்டனர்.  முடியாட்சிக்கு எதிரான கலகக்குரல் ஒன்று ஒலிக்க ஆரம்பித்தது.

தொழிலாளர்களின் இழிநிலைக்கும் இப்போது எழுந்துள்ள கலகக்குரலுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முயன்றார் எங்கெல்ஸ். முடியாட்சி தூக்கியெறியப்பட்டால், அது தொழிலாளர்களுக்குச் சாதகமாக சூழலை உருவாக்குமா? அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுமா? கலகக்காரர்களின் வழியில், எங்கெல்ஸும் எழுத்தைத் தன் ஆயுதமாக வரித்துக்கொண்டார். விரைவில், அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தவும் ஆரம்பித்தார்.

(தொடரும்)

ஓட்டம்

கோவிந்தனின் வீட்டில் ஒரு பலா மரம் இருந்தது. அதில் இரண்டு பலாப்பழங்கள் நன்கு பழுத்திருந்தன.

ஒருநாள் கோவிந்தனின் அப்பா அந்தப் பலாப்பழங்களை அறுத்து வீட்டினுள் கொண்டுவந்தார். ’ஒரு பெரிய கத்தியை எடுத்துகிட்டு வந்து உட்காரு’ என்றார் அவனிடம்.

அப்பாவும் கோவிந்தனும் ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்துக்கொண்டார்கள். அறுத்துச் சுளை எடுக்க ஆரம்பித்தார்கள்.

சில நிமிடங்களில் அப்பா அந்த முதல் பழத்தை இரண்டாகப் பிளந்து சுளைகளைப் பிரித்து எடுத்துப் பாத்திரத்தில் போட்டுவிட்டார். ஆனால் கோவிந்தன் இன்னும் போராடிக்கொண்டிருந்தான்.

அப்பா சிரித்தார். அவனிடம் இருந்த பழத்தை வாங்கிச் சரசரவென்று ஏதோ வித்தை செய்தார். சுளைகள் தானாக உதிர்ந்து விழுந்தன.

கோவிந்தன் ஆச்சர்யத்தோடு கேட்டான். ‘பலாப்பழத்தை அறுக்கறது ரொம்பக் கஷ்டம்ன்னு சொல்வாங்க. ஆனா நீங்கமட்டும் இப்படிப் படபடன்னு அறுத்து முடிச்சுடறீங்களே. எப்படி? உங்களோட கத்தி ரொம்பக் கூர்மையா இருக்கறதாலயா?’

‘விஷயம் கத்தியில இல்லை’ என்றார் அப்பா. ‘பலாப்பழத்தை நறுக்கும்போது சில இடங்கள்ல பழம் நாம வெட்டறதுக்கு வசதியா வளைஞ்சுகொடுக்கும், வேற சில இடங்கள்ல என்னை வெட்டாதே-ங்கறமாதிரி எதிர்த்துநிற்கும்.’

‘எனக்கு இந்தப் பழம் எங்கே வளையும், எங்கே எதிர்க்கும்ன்னு தெரியும். அதுக்கு ஏத்தமாதிரி என் கத்தியை இடம் மாத்துவேன், அதிக எதிர்ப்பு உள்ள இடங்கள்ல போராடாம, குறைவான எதிர்ப்பு உள்ள இடங்கள்ல கவனம் செலுத்துவேன், அதனால கொஞ்ச நேரத்தில, கொஞ்சம் உழைப்பிலயே பழம் நல்லா வெட்டுப்பட்டுடும்!’

ஜென் இதனை ‘ஓட்டம்’ என்கிறது. நீரோட்டத்தின் போக்கில் மிதக்கிற ஓர் இலை கஷ்டப்படாமல் பயணம் செய்கிறது. அதுபோல நாம் செய்கிற வேலை எதுவானாலும், அதன் இயற்கைக் குணங்களை எதிர்த்து நிற்பதில் சக்தியை வீணடிக்காமல் ஓட்டத்தோடு மிதக்கப் பழகினால் அதிகம் சிரமப்படாமல் கூடுதல் தூரம் முன்னேறமுடியும்.