புரட்சித் தளபதி!

தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ

ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ.

ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.)

19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதியிலிருந்த பல மாநிலங்கள் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் சேர்ந்தன. ஆனால் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் ஒன்றுகூட அடிமைமுறையினை ஒழிக்க முன்வரவில்லை. அமெரிக்காவில் இருந்த அடிமைகளில் மிகப்பெரும்பான்மையானோர் தென் மாநிலங்களிலிருந்த பண்ணைகளில் தொழிலாளிகளாக வேலை செய்துவந்தனர். தென் மாநிலங்களின் பொருளாதாரம் பண்ணையடிமை முறையைப் பெரிதும் சார்ந்திருந்தது. அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தென்மாநில அமெரிக்கர்கள் அவர்களை விடுதலைசெய்து தங்கள் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கத் தயாராக இல்லை. இரு தரப்பும் நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒரு சமரசத்துக்கு வந்தார்கள் – தென் மாநிலங்கள் அடிமைமுறையைப் பின்பற்றலாம். ஆனால் வட மாநிலங்களில் அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஆப்ரஹாம் லிங்கன்

இந்த சமரசம் வெகு நாள்கள் தாக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால் அமெரிக்கா அப்போது மேற்கு நோக்கி வளர்ந்துகொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மாநிலங்கள் அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிய மாநிலங்களில் அடிமைமுறையை அமல்படுத்துவது பற்றி இரு தரப்புக்கிடையில் மீண்டும் பிரச்னை எழுந்தது. இந்த நிலையில்தான் அடிமைமுறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆப்ரஹாம் லிங்கன் 1861-ல் அமெரிக்க அதிபரானார். லிங்கன் அதிபரானால் தங்கள்மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகும் என்று தென் மாநிலங்கள் நினைத்தன. லிங்கனைத் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்த தென்மாநிலங்கள், அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாக அறிவித்தன. கான்ஃபெடரசி என்ற பெயரில் புதிய நாடு ஒன்றை உருவாக்கின. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதால், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ. லீ.

லீ, வர்ஜீனியா மாநிலத்தில் ராணுவப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். பதினெட்டாவது வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வெஸ்ட் பாயிண்ட் ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து அமெரிக்க ராணுவத்தில் பொறியியல் அதிகாரியாகச் சேர்ந்தார். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஈடுபட்ட பல்வேறு போர்களில் பங்கேற்றார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். 1861-ல் உள்நாட்டுப் போர் மூண்டபோது லீ, ராணுவத்தில் கர்னல் பதவியில் இருந்தார். லீக்கு அடிமைமுறையைப்பற்றி அழுத்தமான கருத்துகள் கிடையாது. சமகாலத்திய அமெரிக்கர்களில் மிகப் பெரும்பாலானோர் கருதியதுபோலவே அவரும் கறுப்பர்களை வெள்ளையர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று நினைத்தார். அவர் பிறந்த வர்ஜீனியா மாநிலம், தென் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், வட மாநிலங்களின் எல்லையில் அமைந்திருந்தது. அங்கு பண்ணைத் தோட்டங்கள் மிகக் குறைந்த அளவில்தான் இருந்தன. அந்த மாநிலத்தில் இருந்த கறுப்பின அடிமைகள், வீடுகளில்தான் வேலைக்காரர்களாகப் பணிபுரிந்தனர். பண்ணையடிமைகள் படும் கொடுமைகளை லீ நேரடியாகப் பார்த்து அறிந்திருக்கவில்லை. இதனால் அடிமைமுறையை அவர் ஆதரிக்கவில்லை என்றாலும், அது ஒழிக்கப்படவேண்டியது என்று அவர் கருதவில்லை.

கறுப்பர்களுக்கு முழு விடுதலை அளித்தால் அவர்களால் தனியாக வாழ இயலாது; வெள்ளையர்களின் வழிகாட்டுதல் அவர்களுக்கு அவசியம் என்றே லீ கருதினார். ஆனால் அதே சமயம், அடிமைமுறைக்காக நாட்டைப் பிரித்துப் புதிய நாடு உருவாக்குவதையும் அவர் விரும்பவில்லை. தென் மாநிலத்தின் அரசியல்வாதிகளைப் பற்றியும் அவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் கிடையாது.

கான்ஃபெடரேட் மாநிலங்கள் பிரிந்துபோனபோது வரிஜீனியா உடனடியாக அவற்றுடன் சேரவில்லை. போர் நிச்சயம் என்று முடிவானபின் இரு தரப்புகளும் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்தொடங்கின. அனுபவம் வாய்ந்த படைத்தளபதிகளுக்கு இருதரப்பிலும் நல்ல கிராக்கி இருந்தது. லீயின் ராணுவ அனுபவமும் திறமையும் அவருக்கு ராணுவத் தரப்பில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தன. எனவே ஆபிரகாம் லிங்கன், தங்கள் தரப்புக்கு வந்தால் வட அமெரிக்கப் படையில் பெரிய பதவி தருவதாக லீக்கு செய்தி அனுப்பினார். ஆனால் லீ பிறந்த வர்ஜீனியா அதற்குள் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து தென் மாநிலங்களுடன் சேர்ந்துகொண்டது. போர் மூண்டால் தனது மாநிலத்துக்குப் பெரும் சேதம் உண்டாகும் என்று லீக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் சொந்த மண்ணின் விசுவாசம் அவரைத் தென்மாநிலப் படையில் சேர வைத்தது. வட அமெரிக்காவைப்போல தென் மாநிலங்கள் தொழில் மயமான பகுதிகள் அல்ல. அவற்றின் படைபலமும் வடக்கின் படைபலத்தைவிடக் குறைவு.

ஜெனரல் லீ

போர் தொடங்கினால் வெகுசீக்கிரம் வடஅமெரிக்கப் படைகள் கான்ஃபெடரேட் படைகளைத் தோற்கடித்துவிடும் என்று பரவலாக நம்பப்பட்டது. கான்ஃபெடரேட் படையில் சேர்ந்த லீ, தலைமைத் தளபதிகள் ஐவருள் ஒருவராக நியமிக்கப்பட்டார். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள படைகள் அவரது கட்டுப்பாட்டில் வந்தன. கான்ஃபெடரேட் தளபதியாக அவர் ஈடுபட்ட முதல் சண்டையே அவருக்குத் தோல்வியில் முடிந்தது. அவரது செல்வாக்கைப் பிடிக்காத அவரது உள்ளூர் எதிரிகள் அவரைப் போர்முனையிலிருந்து தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் வெகுவிரைவில் அவர் மீண்டும் போர்த் தளபதியாக மாறும் நிலை உருவானது. 1862-ல் வட அமெரிக்காவின் பெரும்படை ஒன்று கான்ஃபெடரசியின் தலைநகர் ரிச்மாண்டைத் தாக்க வந்தது. அப்போது ரிச்மாண்டைப் பாதுகாத்து வந்த கான்ஃபெடரேட் வடக்கு வர்ஜீனீயாப் படையின் தளபதி போரில் காயமடைந்ததால், அந்தப் பதவி லீக்குக் கிடைத்தது.

லீ தளபதியானது குறித்து தென்மாநிலங்களில் கடும் அதிருப்தி நிலவியது. அவருக்குத் தைரியமே கிடையாதென்றும், தாக்குதல் நடத்தாமல் சும்மா வெட்டியாக இருப்பாரென்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நடந்ததோ நேர் எதிரான ஒன்று. ஒரே வருடத்தில் வட அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய கான்ஃபெடரசியை நான்கு ஆண்டுகள் தனது போர்த்திறமையால் தாக்குப்பிடிக்க வைத்தார் லீ. முதலில் ரிச்மாண்டின் அரண் நிலைகளைப் பலப்படுத்தியபின் அதனைத் தாக்கவந்த அமெரிக்க ஒன்றியப் படையை எதிர்த்துத் தாக்கினார். சில மாதங்களில் கான்ஃபெடரசியின் கதையை முடித்துவிடலாம் என்ற இறுமாப்புடன் வந்திருந்த வட அமெரிக்கத் தளபதிகள், லீயின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். கான்ஃபெடரசியைத் தாக்க வந்த வட அமெரிக்கப் படைகளை விரட்டியதோடு நிற்காமல், வட மாநிலங்களின்மீது படையெடுத்தார் லீ. பாதுகாப்புப் போர் (defensive war) நடத்தினால் கான்ஃபெடரசியால் நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். நாளாக ஆக ஆள் பலமும் ஆயுத பலமும் மிக்க அமெரிக்க ஒன்றியத்தின் பலம் கூடிக்கொண்டேதான் போகும். அதற்குள் ஒன்றியத்தின் குடிமக்களின் மன உறுதியைக் குலைத்து போர் வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளவேண்டும் என்று லீ முடிவு செய்தார். இதை நிறைவேற்ற வடக்கு வர்ஜீனியாப் படையுடன் அமெரிக்க ஒன்றியத்தின்மீது படையெடுத்தார்.

சில மாதங்களில் போர் முடிந்துவிடும், ஓடிப்போன தென் மாநிலங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு மீண்டும் வந்து ஒன்றியத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள் என்று எண்ணியிருந்த வட மாநில மக்களுக்கு லீயின் படையெடுப்பு பேரதிர்ச்சியாக இருந்தது. லீயின் முதல் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்தாலும் அவர் தன் படைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிப் பின்வாங்கிவிட்டார். ஆனால் தனது படையெடுப்பின் தாக்கம் போர்க்களத்தைவிட ஒன்றிய மக்களின் மனத்தில்தான் அதிகமாக இருந்தது என்பதைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து தோல்விகள் கிடைத்தால் அவர்கள் போர் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்தார். எனவே அடுத்த ஆண்டு (1863) மீண்டும் வடக்கு நோக்கிப் படையெடுத்தார். அவரை எதிர்க்க அனுப்பப்பட்ட ஒன்றியப்படைகள் அனைத்தையும் முறியடித்து வேகமாக முன்னேறினார்.

லீ அளவுக்குத் திறமையுள்ள தளபதிகள் ஒன்றியப்படையில் அப்போது இல்லை. ஆனால் படை எண்ணிக்கையும் தளவாட எண்ணிக்கையும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தன. கெட்டிஸ்பெர்க் என்ற இடத்தில் லீயின் படையைத் தடுத்து நிறுத்தின ஒன்றியப்படைகள். மூன்று நாட்கள் பெரும் உயிர்ச்சேதத்துடன் கடும் சண்டை நடந்தது. லீயின் படை தோற்றுப் பின்வாங்கியது. அதோடு போரில் கான்ஃபெடரசி ஜெயிக்கும் கனவும் பொய்த்துப் போனது. அப்போதே கான்ஃபெடரசி சரணடைந்திருந்தால் பின் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பொருட் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம். லீ போன்ற திறமையான தளபதி ஒன்றியப் படைகளைச் சமாளிக்கவில்லை என்றாலும், போர் சீக்கிரம் முடிந்திருக்கும். கெட்டிஸ்பெர்க் சண்டைக்குப் பிறகு கான்ஃபெடரசியின் கதையை முடிக்கவந்த ஒன்றியப் படைகளைத் தாமதப்படுத்திப் போரிட்டார் லீ. ஆனால் ஒன்றியத்தின் படைபலத்தின் முன் லீயின் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு கான்ஃபெடரசியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு, லீ அளவுக்குத் திறமை வாய்ந்த கிராண்ட், ஷெர்மன் என்ற இருவர் ஒன்றியப் படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகிவிட்டனர்.

1864-65ல் கான்ஃபெடரசியின் படைகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு அதன் பகுதிகள் ஒன்றியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியில்லாமல் கறுப்பின அடிமைகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் படைகளில் சேர்த்துக்கொள்ளலாமா என்று யோசிக்கத் தொடங்கினார் லீ. எப்படி இருக்கு கதை! எந்த அடிமைகள் கீழ்த்தரமானவர்கள், அவர்களுக்கு கொஞ்சம்கூட உரிமைத் தரக்கூடாது என்று கான்ஃபெடரசியை உருவாக்கி உள்நாட்டுப் போரைத் தொடங்கினார்களோ அதே அடிமைகளைக் கொண்டு கான்ஃபெடரசியைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. ஷெர்மன், கிராண்ட் இருவரின் படைகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் ஏப்ரல் 1865-ல் கான்ஃபெடரசி சரணடைந்தது. அடிமைமுறையும் ஒழிக்கப்பட்டது. கான்ஃபெடரசிக்காகப் போராடியவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. லீ நாடிழந்தவர் ஆனார். சில வருடங்கள் கழித்து அப்படி குடியுரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டபோது லீயும் அதற்கு விண்ணப்பித்தார். ஆனால் ஏனோ அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1870-ல் அவர் மரணமடைந்தபோது அவர் எந்த நாட்டின் குடிமகனும் இல்லை. அவர் இறந்து நூறாண்டுகளுக்குப் பிறகே அவரைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை திருப்பியளிக்கப்பட்டது.

லீயின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் இவரெல்லாம் வில்லனா என்று தோன்றும். ஆனால் அவர் யாருக்காகப் போராடினார் என்பதைப் பார்த்தால் அவரால் மானுட சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு நேர்ந்திருக்கும் என்பது விளங்கும். கான்ஃபெடரசி ஒரு தீய அரசு என்பதில் கொஞ்சம்கூடச் சந்தேகமில்லை. அடிமைமுறையைத் தக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசம் அது. தங்கள் நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நாடுகளிலும் இந்த முறையைப் பரப்பவேண்டும் என்று முயன்ற நாடு அது. லீ இல்லை என்றால் ஒரே ஆண்டில் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய இந்தக் ‘கொடியவர்களின் கூடாரம்’ நான்காண்டுகள் பிழைத்து உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தது. கிட்டத்தட்ட ஆறு லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய இந்தப் போர் நான்காண்டுகள் நடந்தற்கு லீதான் முக்கியக் காரணம். இத்தனைக்கும் அவருக்கு அடிமைமுறை மீது எந்தப் பற்றும் கிடையாது. தனது மாநிலத்தின்மீது வைத்திருந்த விசுவாசத்தால் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றப் பார்த்தார் லீ.

உள்நாட்டுப் போர் முடிந்து லீ இறந்து பல ஆண்டுகளாகியும் அவரது நினைவை அமெரிக்கத் தென் மாநிலங்களின் இனவெறியர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உள்நாட்டுப் போர் ஒரு சுதந்திரப் போராட்டம் என்றும், அடிமைமுறைக்காக நடத்தப்பட்டதில்லை என்றும் தென் மாநிலங்களின் ஆதரவாளர்கள் வரலாற்றைத் திரித்து எழுதிவருகிறார்கள். கான்ஃபெடரசிக்கு புனித பிம்பத்தை உண்டாக்க அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வாதம் – லீ போன்ற நல்லவர்கள் எல்லாம் கான்ஃபெடரசிக்காகச் சண்டையிட்டார்கள் என்பதே. இனவெறிக்கு இப்படியொரு விடுதலை வேட்கைச் சாயம் பூசியதன் விளைவுகள் இன்றுகூட அமெரிக்க சமுதாயத்தில் தெரிகின்றன. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் 1960-கள் வரை கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. இன்றுகூட ஆப்பிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளால் தென் மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெற இயலாது. 2008-ல் பராக் ஒபாமாவே ஓரிரு தென்மாநிலங்களில் மட்டும் – அதுவும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் – தான் ஜெயித்தார். இன்றும்கூட அடிமைமுறையின்கீழ் கறுப்பர்கள் செளகரியமாக வாழ்ந்தார்கள் என்று நம்புபவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். கான்ஃபெடரசி தோற்றபோதே இந்த நிலை என்றால், லீயின் முயற்சியால் அவர்கள் வென்றிருந்தால் இன்று அமெரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளின் நிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

தீபாவளி – விடுதலையின் ஒளிநாள்

ஒவ்வொரு தீபாவளிக்கும் தமிழ்நாட்டில் கட்டாயமாக ஒரு சடங்கு நடக்கும். யாராவது கட்டாயமாக தீபாவளி ஓர் ஆரிய சூழ்ச்சி என்றும், நரகாசுரன் ஒரு திராவிடன் என்றும், எனவே திராவிடர்களாகிய தமிழர்கள் அதைக் கொண்டாடக்கூடாது என்றும் ஒரு பிரசாரத்தை நடத்துவார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்பட்டுவரும் பிரசாரம். எனவே ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்கள் முதலமைச்சர்களாகவே இருந்தாலும், இங்கிதம் கருதிக்கூட தீபாவளி வாழ்த்துகள் சொல்லமாட்டார்கள்.

இவர்களின் கோட்பாட்டின்படி நரகாசுரன் ஒரு திராவிடன். அவனைக் கொன்ற நாளை திராவிட இனத்தவர்கள் கொண்டாடக்கூடாது. மேலும் தீபாவளி புராண நிகழ்வைக் கொண்டாடும் நாள். விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பூமியைத் தூக்கியபோது அந்தச் சேர்க்கையால் உருவானவன் நரகாசுரன். எனவே இது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம் எப்படித் தமிழனுடையதாக இருக்கமுடியும்? எனவே இது நிச்சயமாக ஆரியர் கொண்டுவந்து புகுத்தியதுதான். (மஞ்சள் துண்டைத் தவிர வேறு எல்லாமே ஆரியர்கள் புகுத்திய மூடநம்பிக்கைதான். மஞ்சள் துண்டு மட்டும் திராவிட பகுத்தறிவின் வெளிப்பாடு.)

இன்றைக்கு மரபணுவியலும் அகழ்வாராய்ச்சியும் ஆரிய-திராவிட இனக்கோட்பாடுகளை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளில் போட்டுவிட்டன. ஆனால் அதற்கும் முன்னால் விவேகானந்தரும் அம்பேத்கரும் இந்த ஆரிய இனவாதக் கோட்பாடு ஆதாரமற்றது எனத் தெளிவாகச் சொல்லிவந்துள்ளனர். எனவே, இந்த ஆரிய-திராவிட இனவாத அடிப்படையில் தீபாவளி குறித்த புராணக் கதையை அணுகுவது அபத்தமானது. பகுத்தறிவுகொண்ட எவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனியக் கதையாடல்களை வைத்து நம் புராணங்களை அறிந்துகொள்ள முற்படமாட்டார்கள்.

மாறாக, புராணங்கள் என்றால் என்ன? அவை ஆழமான அக-அறிதலையும் புற-யதார்த்தத்தையும் இணைக்கும் அகக் கருவிகள். ஒரு புராணம் ஒரு சமுதாயத்தில் ஏற்கப்பட, அது பல தளங்களில் பொருள் கொண்டதாக இருக்கவேண்டும். நவீன உலகத்திலும் புராணங்கள் மிகவும் தேவைப்படுகின்றன. புராணங்களைச் சரியான முறையில் புரிந்துகொள்வது வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும். மாற்றங்கள் நிறைந்த உலகம் முன்வைக்கும் கேள்விகளுக்குச் சில மாற்றமற்ற அழியாத மதிப்பீட்டு பதில்களை நாம் புராணங்களிலிருந்து பெறமுடியும். அத்தகைய தகவமைப்பைப் பெற இயலாத புராணக்கதைகள் தன்னாலேயே வழக்கொழிந்து விடுகின்றன. மாறாக, ஒரு சமுதாயத்தில் அதன் பண்பாட்டில் நன்றாக வேரூன்றிய புராணங்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறியப்பட்டால் அதன் விளைவுகள் சமுதாயத்தை ஆழமாகப் பாதிக்கும். கார்ல் உங் போன்ற உளவியலாளர்கள், புராணங்களை இழந்ததால் மேற்கத்திய சமுதாயத்தின் கூட்டு மனத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டியிருக்கிறார்கள்.

தீபாவளி குறித்த நரகாசுரன் புராணக்கதையையே எடுத்துக் கொள்வோம். பூமியைக் காப்பாற்ற விஷ்ணு வராக அவதாரம் எடுக்கிறார். அதனால் ஏற்படும் தொடர்பினால் ஓர் அரக்கன் பிறக்கிறான். சிறிது சிந்தித்தால் இது ஒரு பொதுவான விதி என்பது தெரியும். சமூகப் பிரச்னைகளை மாற்ற, உலகை நன்றாக்க, தனது அறிவையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்து சிந்தனையாளர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கலாம். ஆனால் அதில் இருக்கும் அதிகாரப் பசி இறுதியில் மற்றொரு அரக்கப் பிரச்னையாக மாறிவிடும்.

அடுத்ததாக அந்த அதிகார அரக்கன் என்ன செய்கிறான்? பெண்களைச் சிறை வைக்கிறான். பூமியின் மைந்தன் அவன். ஆனால் அவனோ அதிகார ஆண்மையின் உருவமாகப் பெண்மையைச் சிறை வைக்கிறான். இறுதியில் தனது தாயான பூமாதேவியின் கரங்களில் இறக்கிறான்.

இதுவும் நாம் காணும் விஷயம்தான். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளிலும், கடந்த முன்னூறு ஆண்டுகளாக காலனியம் மூலமாக உலகம் முழுவதுமும் பரப்பப்பட்ட ஆபிரகாமிய இறையியல், பெண்மை சார்ந்த மதிப்பீடுகளைச் சிறைவைத்தன. இயற்கை வழிபாடுகளை, தாய்த் தெய்வ வழிபாட்டை அழித்தன. ஆசார்ய மஹாபிரக்யாவும் அப்துல் கலாமும் சொல்கிறார்கள்:

மனித உருவாகிய கடவுளா? ஆம்; மானுட இயல்புகள் மற்றும் உணர்ச்சிகளின் பெருமைகளும் சிறுமைகளும் சேர்ந்த கலவையான மனிதக் கடவுள். இந்த மனிதக்கடவுளுக்கு அன்பு காட்டத் தெரியும். அதே நேரம் வெறுப்பு, தீர்ப்பு, கண்டனம், தேவை, விருப்பம் போன்றவையும் உண்டு. இந்த வகையில் நாகரிகங்கள் வளர்ந்து ஒன்றையொன்று படையெடுக்க, அவை புவியிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டன… வாளால் அழிந்தவர்கள் பலரைப் பற்றியும் வரலாறு சொல்கிறது. அதிகாரம், செல்வம், புகழ் ஆகியவற்றுக்கான வேட்டையில், பற்பல செழுமையான பண்பாடுகள் அழிந்துள்ளன. … இத்தகைய பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் புவியோடு தொடர்புடையவர்கள் என்பதை உணர்ந்திருந்தார்கள். துன்பம், நோவு, மரணம் போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் பிறரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள். பரஸ்பர ஒட்டுறவைப் புரிந்து மதித்தார்கள். ஆனால் காலப் போக்கில் இந்தப் புனித அறிவும் உணர்வும் தொலைந்துபோயின. மானுட, விலங்கின, தாவர மற்றும் கனிம உலகங்களுக்கு இடையேயான தொடர்பும் உறவும், பொருள் ரீதியான மேம்பாடுகளால் உதாசீனப்பட்டு நிராகரிக்கப்பட்டன. ஆன்மிகத் தொய்வினால், மானுடப் பரிமாணம் களங்கமுற்றது.

இப்படி மனிதன் தன்னுள் இருக்கும் அரக்க ஆக்கிரமிப்பு உணர்வுக்கும், அதிகாரப் பசிக்கும் மட்டுமே தீனி போட்டுக்கொண்டு, பெண்மை உணர்வுகளையும், அதன் புற வெளிப்பாடாக பெண்களையும் அடிமைப்படுத்துகிறான். அதன் பொருளாதார வெளிப்பாடாக, மாசினை உருவாக்கும், புறச்சூழல் குறித்துக் கவலைப்படாத தொழில்நுட்பங்களை உருவாக்குகிறான். நுகர்வுக் கலாசாரத்தை உருவாக்குகிறான். இவை எல்லாமே ஆண்-மையத் தன்மை கொண்டவை. பெண்-மையத் தன்மையைப் புறக்கணிக்கிறான் அல்லது அடக்குகிறான். சிறைப்படுத்துகிறான்.

இதன் விளைவு என்ன?

பூமி ஒரு அதி-உயிரியாக அல்லது ஒரு பெரிய மகா-சிஸ்டமாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டடைந்தவர் ஜேம்ஸ் லவ்லாக். அவர் கூறுகிறார்:

நாம் நம்முடைய மனத்தையும் இதயத்தையும் மாற்றினால் ஒழிய நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த பூமிக்கு உயிர் உண்டு என்பதை உணரமாட்டோம். நாம் உருவாக்கும் மாற்றங்களையோ அல்லது மாற்றங்களை உருவாக்கும் நம்மையோ மறுதலித்து அந்த மாற்றங்களுக்கு எதிர்வினையாற்ற முடிந்த ஓர் உயிராக நாம் இந்தப் பூமியை உணரமாட்டோம். நாம் இந்தப் பூமியை ஓர் உயிருள்ள கிரகமாக, தன் தட்பவெப்பத்தையும் வேதியியலையும் மாற்றிக்கொள்ளும் சக்தி வாய்ந்த ஓர் உயிராக உணர்ந்தால் ஒழிய, இன்று அதை நம் மிகப்பெரிய எதிரியாக்கிவிட்டோம் என்பதை உணர்ந்தால் ஒழிய, நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் திட சங்கல்பம் நமக்கு உருவாகாது.

நரகாசுரன் புராணம் தன் இதயத்தில் கொண்டிருக்கும் செய்தியும் இதுதான். நம் அதிகார-மையப் பண்பாடு, நம் நுகர்வுக் கலாசார, லாப நோக்குப் பண்பாடு சிறையிட்டு வைத்திருக்கும் பெண்மை-மைய மதிப்பீடுகளை, நரர்களாகிய நாம் விடுதலை செய்யாவிட்டால், நம் அழிவும் நம் தாயாகிய பூமியின் எதிர்வினையால் நிகழும்.

தீபாவளி இந்தச் செய்தியை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ளும் நாள்.

தீபாவளிக்கு இன்னும் சில முக்கியப் பரிமாணங்கள் இருக்கின்றன. சீக்கியர்கள் தீபாவளியை விடுதலைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். புனிதத் தங்கக் கோவிலான ஹரி மந்திர் சாகிப்பின் அடிக்கல், தீபாவளி அன்றுதான் போடப்பட்டது. மொகலாய அரசன் ஜஹாங்கீர் குரு ஹர்கோவிந்த் அவர்களையும், 52 அரசர்களையும் கைது செய்திருந்தான். சீக்கிய எதிர்ப்பு வலுக்கவே அவன் குருவை விடுதலை செய்ய முன்வந்தான். ஆனால் குரு தன்னுடன் கைது செய்யப்பட்டிருக்கும் 52 அரசர்களையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தவே, வேறு வழியில்லாமல் அவர்களையும் விடுதலை செய்ய வேண்டியதாயிற்று. அவர்கள் விடுதலை செய்யப்பட்ட நாள் தீபாவளியாகும். மொகலாய ஆட்சியின்போது பல தேசியத் திருவிழாக்கள் கொண்டாடுவது கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. 1737-ல் பாயி மணிசிங் எனும் சீக்கிய ஞானி தீபாவளி கொண்டாடும் உரிமைக்காகப் போராடி சித்திரவதை-கொலை தண்டனைக்குத் தன்னை மனமுவந்து பலிதானமாக அளித்தார்.

காலனிய காலத்திலும் தீபாவளி, இனவெறிக்கு எதிரான குரலாகவும் விடுதலையின் சின்னமாகவும் செயல்பட்டது. 1860-களில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ஆப்பிரிக்காவுக்கும் இதர கரும்புத் தோட்டத் தீவுகளுக்கும் கொத்தடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களின் தீபாவளி கொண்டாடும் கோரிக்கை தொடர்ந்து வெள்ளையதிகாரிகளால் மறுக்கப்பட்டு வந்தது. காலனிய அதிகாரிகள் ஹிந்து மதத்தை ஒரு மதமாகவே ஏற்றுக்கொள்ள மறுத்தனர். எனவே தீபாவளி கொண்டாட தொழிலாளர்களுக்கு அனுமதி மறுத்தனர்

தீபாவளிக்கான போராட்டமே தென்னாப்பிரிக்காவில் தொடக்கத்தில் வெள்ளையரை எதிர்த்து நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம். சத்தியாகிரகம் எனும் வார்த்தையை காந்தி உருவாக்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னால் அரங்கேறிய சத்தியாகிரகம். 1907-ல்தான் முதன்முதலாக மக்கள் போராட்டம் வெற்றியடைந்தது. காலை பத்து மணிக்குக் குழந்தைகள் குழுமினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வேள்வி நடத்தப்பட்டது. காலனியத்தின் பண்பாட்டு மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடும் மக்களின் சின்னமாக தீபாவளி மாறியது. இந்தப் போராட்டத்தில் பாரதத்தில் இருந்துவந்த முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்கள் பங்குகொண்டனர்.

தென்னாப்பிரிக்க மாகாணமான வாஸூலு நடால் எனும் பிராந்தியத்தின் தலைவர், 2007-ல் தென்னாப்பிரிக்காவில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் நூற்றாண்டு விழாவின்போது மக்களுக்குத் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில் கூறுகிறார்:

தீபாவளி அனைத்துத் தென்னாப்பிரிக்க மக்களுக்கும் ஒரு முக்கியமான திருவிழா ஆகும். …இந்த தேசத்தில் நம் மக்கள் அனுபவித்த பல போராட்டங்களில் இங்குள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொத்தடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட இந்தியத் தொழிலாளிகளின் போராட்டமும் ஒன்றாகும். அவர்களின் போராட்டம் தொழிற்சூழல், ஊதியம் ஆகியவற்றுடன் நிற்கவில்லை. தங்கள் பண்பாட்டையும் மதத்தையும் பின்பற்றுவதற்கான உரிமைக்காகவும் அவர்கள் போராடினர். அப்போராட்டங்களின் மையமாக தீபாவளி கொண்டாடும் உரிமைக்கான போராட்டம் இருந்தது. இந்தியர்களையும் அவர்களின் சந்த்திகளையும் தம் பண்பாட்டு உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட உத்வேகம் அளித்தவர்கள் இந்தியாவிலிருந்து வந்த பேராசிரியர் பாயி பரமானந்த், சங்கரானந்த சுவாமிகள் ஆகியோர். பாயி பரமானந்த் 1906-ல் ஹிந்து இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார். இதற்கு அடுத்த ஆண்டே தீபாவளியைச் சமூகமாகக் கொண்டாட மக்களை ஒருங்கிணைத்தார்… தென்னாப்பிரிக்காவில் தீபாவளி, விடுதலையின் குரலாகவும், இனவாத பாரபட்சத்துக்கு எதிரான அடையாள அறைகூவலாகவும் மகாத்மா காந்தி, நெல்சன் மாண்டேலா ஆகியோரின் வருகைக்கான முன்னறிவிப்பாகவும் மாறியது.

வரலாற்றாசிரியர்கள் கோலம் வஹீதும் அஸ்வின் படேலும் தென்னாப்பிரிக்காவின் இந்தியக் கொத்தடிமைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய வரலாற்றை ஆராய்ச்சி செய்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி அஸ்வின் தேசாய் கூறுகிறார்:

தீபாவளி கொண்டாடப்பட்ட நூறாவது ஆண்டான இன்று நாம் பல தியாகங்களைச் செய்த கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கும், மேலும் பல ஹிந்துக்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம். அவர்கள் பெரிய அளவில் செய்த தியாகத்தின் மூலமே காலனிய அதிகாரிகள் ஹிந்து மதமும் ஒரு மதம்தான் என்றும், அவர்களுக்கு அவர்கள் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாட உரிமை உண்டு என்றும் புரிந்தது.

இப்பாரம்பரியத்தின் விளைவாகவே 1991-ல் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய நெல்சன் மண்டேலாவும் தீபாவளியின் விடுதலைச் செய்தியை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்:

தீபாவளி தினத்தன்று நான் இந்தப் புனித தீபத்தை ஏற்றி வைக்கிறேன். அப்போது இந்தத் தீபம் எப்படி மூடநம்பிக்கையை அகற்றும் ஞான ஒளியாகத் திகழ்கிறது; வறுமையை அகற்றும் வளத்தைக் குறிக்கிறது; அறியாமையை வெற்றி கொள்ளும் அறிவாக விளங்குகிறது; நோயையும் சுகவீனத்தையும் போக்கும் நல் ஆரோக்கியமாக விளங்குகிறது; அடிமைத்தளையை அகற்றும் விடுதலையாகத் திகழ்கிறது என்பதை நினைவுகொள்கிறேன்.

நம் விடுதலையில் நாம் இந்த வெற்றிகளையெல்லாம் இணைந்து கொண்டாடுவோம். ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கான பாதை நீண்ட கடினமான பாதை. விடுதலையின் இப்பயணத்தில் இந்தியச் சமுதாயம் எப்போதும் துணை நிற்கிறது… இதே நேரத்தில் நம்முடைய விடுதலைக்காக உழைத்தவர்களை நினைவுகொள்வோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை விடுதலைக்காக அர்ப்பணித்தார்கள். சுதந்திர இந்தியாவைக் காண உழைத்து, விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சுவாமி தயானந்த சரஸ்வதி தீபாவளி நாளில்தான் உயிர்த்தியாகம் செய்தார். கிருஷ்ரபிலால், அஹமது திமோல், சாலமன் மஹ்லங்கு, இன்னும் ஆயிரக்கணக்கானோர் – …நண்பர்களே நான் உங்களுடன் இந்தத் தீபாவளி விழாவின்போது உடனிருப்பதைப் பெரும் பெருமையாக நினைக்கிறேன். பல வருடங்கள் ரோபென் தீவில் இந்தத் திருவிழாவை நாங்கள் உற்சாகத்துடன் கொண்டாடினோம். நம் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தீபாவளித் திருநாளிலிருந்தும் அதனுடன் தொடர்புடைய ராமாயணத்திலிருந்தும் பல விஷயங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

தீபாவளி தன் நீண்ட வரலாற்றின் மூலம் பண்பாட்டுச்செழுமை, பன்மை பேணுதல், காலனியாதிக்க எதிர்ப்பு, விடுதலை எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றது. உலகில் வேறெந்தப் பண்டிகைக்கும் இத்தகைய பன்முக வரலாறு இருக்குமா என்பது ஐயமே.

நீங்கள் கேட்கலாம். அப்போது ஏன் சில அரசியல்வாதிகளால் தீபாவளியின்போது சொந்த மக்களுக்கு வாழ்த்துகூடச் சொல்லமுடிவதில்லை என்று.

ஒருவேளை தீபாவளியின் உன்னதம் புரிய ஒருவருக்கு நெல்சன் மண்டேலாவின் விடுதலை உணர்வில் ஒரு பகுதியாவது தேவைப்படலாம். நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு இனி வரும் தலைமுறைகளிலாவது அது வரும் என்று நம்புவோம்.

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

மேலதிக விவரங்களுக்கு:

* Speech by KwaZulu-Natal Premier Sibusiso Ndebele during the 100 years Diwali celebrations held in Chatsworth, 11 November 2007 : http://www.info.gov.za/speeches/2007/07111212451003.htm
* Speech by comrade Nelson Mandela at Diwali celebration held at Durban City Hall (Sunday, 3 November 1991)
http://www.sahistory.org.za/pages/people/special%20projects/mandela/speeches/1990s/1991/1991_speech_diwali_celeb.htm
* “New book reveals history of battle for Diwali in SA”, Times South Africa, 4-நவம்பர்-2007
* ஆசார்ய மஹாப்ரக்யா, அப்துல் கலாம், குடும்பமும் தேசமும், கிழக்கு பதிப்பகம் வெளியீடு, 2010
* ஜேம்ஸ் லவ்லாக், The revenge of Gaia: Earth’s climate in crisis and the fate of humanity, Basic Books, 2006

தராசு

ஜென் துறவி ஒருவர். ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது ஒருவர் அந்தத் துறவியைப் பார்க்க வந்தார். ‘யாருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று விசாரித்தார்.

‘குரலைக் கேட்டால் தெரியவில்லையா?’ என்று சிரித்தார் ஜென் துறவி. பின்னர் அந்தப் பாடகரின் பெயரைச் சொன்னார்.

‘அவரா? அந்த ஆள் சரியான தண்ணி பார்ட்டியாச்சே. விஸ்கி வாசம் இல்லாம மேடை ஏறமாட்டாராமே!’

‘அதனால் என்ன? அவருடைய குரல் அற்புதமா இருக்கு. அது நமக்குப் போதாதா?’ என்றார் அந்த ஜென் துறவி.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அதே ஜென் துறவியைப் பார்க்க வந்தார். ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருக்கிற குரலைக் கேட்டவுடன் சட்டென்று அந்தப் பாடகரின் பெயரைச் சொல்லி ‘அவர்தானே?’ என்று விசாரித்தார்.

‘அவரேதான். உங்களுக்கு அவரைப் பிடிக்குமா?’

‘ரொம்பப் பிடிக்கும்!’ என்றார் இவர். ‘தெய்வீகமான குரல். ஒவ்வொரு பாட்டையும் அனுபவித்துப் பாடுவார். மிகப் பெரிய திறமைசாலி!’

‘அதெல்லாம் கிடக்கட்டும்’ என்று அலட்சியமாகச் சொன்னார் ஜென் துறவி. ‘ஆனா அந்தாள் சரியான தண்ணி பார்ட்டியாமே!’

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிஷ்யனுக்குக் குழப்பம். ஜென் துறவி தனியே இருக்கும்போது ரகசியமாக விசாரித்தான். ‘குருவே, முதல் ஆள் அந்தப் பாடகரைக் குடிகாரர் என்று சொன்னபோது நீங்கள் அவருடைய திறமையைப் பாராட்டினீர்கள். ஆனால் இரண்டாவது ஆள் அவருடைய திறமையைப் புகழ்ந்தபோது அவர் குடிகாரர் என்று சொல்லி அவமானப்படுத்துகிறீர்களே, இது என்ன நியாயம்?’

குரு சிரித்தார். ‘காய்கறிகளை எடை போடுவது கடைக்காரன் வேலை. அந்தத் தராசில் மனிதர்களை ஏற்றி நிறுத்தினால் உடைந்துவிடும்’ என்றார். ‘அதனால்தான் யார் யாரை எடைபோட்டாலும் நான் குறுக்கிட்டு ஏதாவது பேசி அந்த விமர்சனத்தை நேர் செய்துவிடுகிறேன்.’

சிஷ்யன் புல்லரித்துப்போனான். ‘குருவே, நீங்கள் பெரிய மேதை!’ என்றான்.

‘முட்டாளே, போய் உன்னுடைய வேலையைப் பார்’ என்றார் குருநாதர்.

ஒரு நாஸி மாமி படிக்கும் கீதை – 2 (கீதையும் தலித் விடுதலையும்)

பொதுவாக சமுதாய அதிகார அமைப்பில் மேலடுக்கில் இருப்போரின் பார்வையை அர்ஜுனன் முன்வைக்கிறான். பெண்களின் கற்பின் அடிப்படையில் சமுதாய அமைப்பு இருக்கிறது. அது கெட்டுப்போனால் சமூகப்பிரிவுகள் ஒன்றோடொன்று கலந்து சமுதாயம் அழிந்துவிடும். நாஸிகள் மட்டுமல்ல, பொதுவாக ஐரோப்பிய சமுதாயத்திலும் இதே போன்ற கோட்பாடுகள் 1940-கள் வரை நிலவின என்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக கத்தோலிக்கர்களின் வணக்கத்துக்குரிய போப் பன்னிரெண்டாம் பத்தியப்பர் (Pius XII) இத்தாலிக்குள் நுழைந்துகொண்டிருக்கும் நேச நாட்டுப் படைகளிடம் வெள்ளையரல்லாத படை வீரர்களை இத்தாலிக்குள் கொண்டுவர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வெள்ளையரல்லாத படைவீரர்கள் இத்தாலியப் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வார்கள் என அவர் கருதினார்.

இன அடிப்படையில் அல்லாமல் குல அடிப்படையில் அர்ஜுனன் இதே மனநிலை சார்ந்தவனாகவே பேசுகிறான். அவன் குலதர்மங்கள் சனாதனமானவை என்கிறான். குல தர்மங்களும் சாதி தர்மங்களும் சாஸ்வதமானவை, தொன்றுதொட்டு வந்தவை என்கிறான்.

இதற்கான பதில்களாக கிருஷ்ணர் பகவத் கீதையில் எதை முன்வைக்கிறார் என்பதை நாம் பார்க்கவேண்டும். மேலை இந்தியவியலாளர்கள் சாதியமே பகவத் கீதையின் மையம் எனக் கருதுகிறார்கள். இதோ ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்தியவியலாளர் கூறுகிறார்:

சாதி அமைப்பை நிலைநிறுத்துவது என்பதே பகவத் கீதையின் மையக் கருத்தாக இருக்கிறது. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் என்று கூறுவதன்மூலமும் (பகவத் கீதை 4:13); மக்கள் தங்கள் சமுதாய நிலை முடிவு செய்யும் கடமைகளைச் செய்ய வைப்பதற்காக உண்மையை அவர்களிடம் சொல்லக்கூடாது என்று சொல்வதன்மூலமும் (பகவத் கீதை 3:26, 29) இதனை பகவத் கீதை செய்கிறது.

ஹிந்து புத்தெழுச்சியாளர்கள், கிருஷ்ணர் கீதையில் வர்ணம் என்பது குண-கர்ம அடிப்படையில் எழுந்தது எனச் சொல்வதைச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் இதுவும் போதுமான ஆதாரம் அல்ல எனச் சொல்கிறார் பெல்ஜிய இந்தியவியலாளரான கொயன்ராட் எல்ஸ்ட்.

ராமானுஜர்

சமூகச் சீர்திருத்தவாதிகளின் நிலைப்பாட்டுக்கு நான் ஆதரவாளனே. ஆனால் கீதையை இப்படி வியாக்கியானம் செய்வது ஒரு சிக்கலான விஷயம் என்றே கருதுகிறேன். அது நல்ல முயற்சியாக இருந்தாலும்கூட கீதை ‘பிறப்பினால் அல்ல ஆனால் குணத்தின் கர்மத்தின் அடிப்படையில்’ என்று சொல்லவில்லை. ஏனெனில் ஒருவரது குணமும் கர்மமும் அவரது பிறப்பினால் தீர்மானிக்கப்படலாம்… குணங்கள் ஓரளவு பிறப்படிப்படையில் வருவதாகவும் தொழில்கள் பொதுவாக குடும்பச்சூழலில் சொல்லித்தரப்படுபவையாகவுமே இருக்கின்றன. ஆக, தொழில் என்பது பிறந்த குடும்பத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக அமைந்துள்ளது. இந்த பகவத் கீதை, பிறப்படிப்படையிலான சாதியை ஏற்கவில்லை என இந்த மேற்கோளின் மூலம் காட்டமுடியாத அதே வேளையில், பகவத் கீதையில் பிறப்படிப்படையில் சாதி அமைவதை ஆதரிக்கும் மற்ற வரிகள் இருக்கின்றன.

இந்த மற்ற வரிகள் எவை? எல்ஸ்ட் கூறுகிறார்:

அர்ஜுனனும் கிருஷ்ணனும் போர் குறித்து முழுக்க முழுக்க எதிரான நிலைப்பாடுகள் எடுக்கின்றனர். ஆனால் இருவருமே தங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ‘வர்ண ஸங்கர:’ (வர்ணக் குழப்பம்) ஏற்பட்டுவிடும் எனும் ‘ஆபத்தையே’ காரணமாகச் சொல்கிறார்கள். இரண்டு எதிர் பார்வைகளை ஒரே மதிப்பீட்டின் அடிப்படையில் நிறுவ முயல்கிறார்கள் என்றால் அந்த மதிப்பீடே அவர்கள் வாழும் சமுதாயத்தின் அடிப்படைக் கோட்பாடாக இருக்கவேண்டும். இதற்கும் விளக்கம் அளிக்கலாம்: இங்கு வர்ணக் கலப்பு என்பது தொழில் கலப்புதானே ஒழிய, பிறப்படிப்படையிலான சாதிக் கலப்புகளைச் சொல்லவில்லை என்று. ஆனால் அது சுற்றிவளைக்கும் வியாக்கியானம் என்பதுடன் ‘பெண்களின் கற்பு’ இந்த வர்ணக் கலப்புடன் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதால் அடிபட்டுவிடுகிறது.

எல்ஸ்ட் கூறுவதை மேற்கத்திய வெறுப்பின் அடிப்படையில் விளைந்தது என ஒதுக்க முடியாது. ஹிந்து சமூக வரலாற்றை விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆழ்ந்து படித்தவர் எல்ஸ்ட். எனவே இதற்கான விடையை நாம் கீதையில் தேடவேண்டும்.

அர்ஜுனனின் முதல் அத்தியாயச் சொற்கள் அனைத்துமே வாதங்கள் என்றுகூட கீதை சொல்லவில்லை. அவை அவனது உணர்ச்சி மிக்க மனக்குழப்பத்தின் விளைவுகளாகவே காட்டப்படுகின்றன. அதனால் எல்ஸ்ட் சொல்வதுபோல, பின்னர் கிருஷ்ணர் பேசும் வார்த்தைகளை அர்ஜுனனின் வார்த்தைகளுக்கான எதிராடல்களாக நாம் கொள்ள முடியாது. அல்லது அர்ஜுனன் முன்வைக்கும் சமுதாயப் பார்வை அல்லது உலகப்பார்வையை ஏற்பதாகவும் கருத முடியாது. ஆனாலும் எல்ஸ்ட் கூறுவது சரியா என்பதற்கான ஆதாரபூர்வமான உண்மையை கிருஷ்ணர் எவ்விதமான காரணங்களை ‘குழப்பம்’ ஏற்படுவதற்குக் காரணமாகக் கூறுகிறார் என்பதைப் பார்த்தாலே அறிந்துவிடலாம்.

எல்ஸ்ட் குறிப்பிடும் அந்த ஸ்லோகம் மூன்றாவது அத்தியாயத்தில் வருகிறது (கர்ம யோகம்):

நான் கர்மத்தை செய்யாமல் போனால் இவ்வுலகங்கள் அழிந்து போகும். மேலும் கலகத்துக்குக் கர்த்தா ஆவேன். இந்த ஜனங்களை அழித்தவனாகவும் ஆகிவிடுவேன் (பகவத் கீதை 3:24)

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கிருஷ்ணர் இங்குக் கலகம் அல்லது குழப்பம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது வர்ணக் குழப்பமா அல்லது சமுதாயக் குழப்பமா என்பது பற்றியெல்லாம் அவர் சொல்லவில்லை. இந்த வார்த்தையை அர்ஜுனன் மனக்குழப்பத்தில் கூறிய வர்ணக் குழப்பத்துடன் முடிச்சு போட முடியுமா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக, தன் இயக்கமின்மையே குழப்பத்தை உருவாக்குகிறது என கிருஷ்ணர் கூறுகிறாரே தவிர, பெண்களின் கற்பை முடிச்சுப் போடவில்லை. ‘குழப்பம்/கலகம்’ என்கிற வார்த்தையை உரையாசிரியர்கள் சாதிக் குழப்பம் என்றும் உரை எழுதியிருக்கிறார்கள். சாதியையோ வர்ணத்தையோ குறிப்பிடாமலே, மனிதர்கள் வாழ்க்கையில் குழப்பம் அடைவார்கள் என்றும் உரை எழுதியிருக்கிறார்கள். ராமானுஜர் இந்த ஸ்லோகத்துக்குப் பொருள் எழுதும்போது, ‘சமுதாயத்தின் இயக்கம் நின்றுவிடும்’ என்றுதான் சொல்கிறார்.

அடுத்து, குண-கர்மம் என்பதே வர்ணத்தின் அடிப்படை என்பது பிறப்பு அடிப்படையிலான சாதியத்துக்கு எதிரானதல்ல என்று எல்ஸ்ட் சொல்கிறார். இது சரியா எனப் பார்க்கலாம்.

பகவத் கீதையின் முதல் அத்தியாயத்தில் குலம்/பிறப்பு சார்ந்த வர்ண அமைப்பின் மீது ஒரு மனவெறிப் பற்றே (obsession) அர்ஜுனனுக்கு இருப்பது காட்டப்படுகிறது. ஏழு ஸ்லோகங்களுக்குள் குலம் என்னும் வார்த்தையை அர்ஜுனன் பத்து முறை பயன்படுத்துகிறான். ஆனால் கிருஷ்ணர் எந்த இடத்திலும் குல தர்மம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. குலதர்மக் கோட்பாட்டையே முழுமையாகப் புறந்தள்ளுகிற கிருஷ்ணர், ஸ்வதர்மம் என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறார்.

ராமானந்தர்

மகாபாரத சமுதாயம், குலத்தின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில், சமுதாய அடுக்குமுறை நிலவிய சமுதாயமாகவே இருந்திருக்கவேண்டும் என்பதைக் கணக்கில்கொண்டு இதைப் பார்க்கவேண்டும். பிறப்படிப்படையிலான சமூக அந்தஸ்து மகாபாரதத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்றைக்கும் வளர்ந்த நாடுகள் என்றும் சாதியம் இல்லாத நாடுகள் என்றும் கருதப்படும் நாடுகளில்கூட பிறப்படிப்படையிலான சமூக அந்தஸ்து தேடுவது ஒரு பணம் செய்யும் பிசினஸாகவே மாறியுள்ளது. இந்தச் சூழலில் குலதர்மத்தை சாஸ்வதமானது, சனாதனமானது என நம்பும் ஒருவனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் வர்ணம் என்பது குல-ஜன்ம அடிப்படையில் அமைவது என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இந்தப் பார்வையில் பார்க்கும்போதுதான் குண-கர்ம அடிப்படையிலேயே வர்ணம் அமைகிறது (பகவத் கீதை 4:13) என்பது மிகப்பெரிய பார்வை மாற்றமாக அமைகிறது.

இவ்வாறு பாரம்பரிய தேக்கத்துக்கு எதிரான ஒரு வலிமையான பார்வை மாற்றத்தை முன்வைக்கும் குணம் பாகவதம் காட்டும் கிருஷ்ணரின் குணச்சித்திரத்துடன் பொருந்துவதாகவே உள்ளது. பரமண்டலத்து தேவனுக்கு பலி கொடுக்காமல் கோவர்த்தன மலை எனும் இயற்கையின் உள்ளுறை இறைத்தன்மையை வணங்க வைத்த பார்வை மாற்றத்தை அது நினைவூட்டுகிறது.

சாதியத்தை கீதை எதிர்க்கிறதா? தெளிவாக சாதியம் தவறு எனச் சொல்லும் குரல் கீதையில் இருக்கிறதா? கீதையின் பதினாறாவது அத்தியாயம் தெய்வ-அரக்க குணங்களைப் பட்டியலிடுகிறது. தெய்வீகக் குணங்களில் உயர் குலப்பிறப்பு ஒன்றாகச் சொல்லப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் அரக்க குணமாக, குலச்செருக்கு சொல்லப்படுகிறது. அரக்க குணம் உடையவன் இப்படி நினைக்கிறானாம்:

செல்வம் படைத்தவனாகவும், உயர் குலத்துதித்தவனாகவும் நான் இருக்கிறேன். எனக்குச் சம்மானவன் வேறொருவன் எவன் இருக்கிறான்? நான் யக்ஞம் செய்வேன். நான் தானம் செய்வேன். நான் களிப்பேன். (பகவத் கீதை 16:15)

பகவத் கீதை கூறப்பட்ட காலகட்டத்தில் தீண்டாமை கிடையாது, மனு ஸ்மிருதி உருவான காலகட்டத்தில்கூட தீண்டாமை ஏற்படவில்லை என அம்பேத்கர் கருதுகிறார். ஆனால் தீண்டாமையின் அடிப்படை உடல்ரீதியிலான இழிவுபடுத்தும் மனப்பான்மையும் வெறுப்பும். கீதையில் இந்தச் சித்தாந்தம் கண்டிக்கப்படுகிறது. கீதையின் இந்த சுலோகம் தலித் விடுதலைக்கான இறையியலை முன்வைக்கும் முதல் சுலோகம் என்றே சொல்லலாம். அரக்க இயல்பினரின் குணமாக கிருஷ்ணர் சொல்வதாவது:

அகங்காரத்தையும், பலத்தையும். செருக்கையும், காமத்தையும், கோபத்தையும் கைக்கொண்டவர்களாய், தங்கள் உடலிலும் பிறர் உடலிலும் உள்ள என்னைப் பகைப்பவர்களாய், நல்லவர்களைச் சகியாதவர்களாய் இருப்பர். (பகவத் கீதை 16:19)

உடல்ரீதியான வெறுப்பைப் பிறரிடம் காட்டுபவன் தன்னையும் அடிமைப்படுத்துகிறான். இதைச் சொல்வதுடன், சக-மனிதனிடமான வெறுப்பு ஒரு மனநோய் என்றே உளவியல் காரணங்களும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைக்கு தலித் சமுதாயத்தினர்மீது ஆதிக்கச் சாதிகளால் ஏவிவிடப்படும் வன்முறை, நலிந்த வகுப்புப் பெண்கள் மீதான தாக்குதல், வன்கொடுமை ஆகியவற்றினை இந்த அடிப்படையில் புரிந்துகொள்ளும்போது தலித் விடுதலை என்பது உண்மையில், ஆதிக்க சாதிகளும் அடைப்பட்டிருக்கும் சாதியம் என்பதிலிருந்து கிடைக்கும் விடுதலை என்பது புரியும். இதற்கான இறையியல் இந்த சுலோகத்தில் நிச்சயமாக முன்வைக்கப்படுகிறது.

இப்போது இன்னொரு கேள்வியை முன்வைக்கலாம். இதெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் சமூக அளவில் பகவத் கீதை மேல்சாதி அடக்குமுறையை ஆதரிக்கும் நூலாகத்தானே இருந்திருக்கிறது. அப்போது அதை எவ்வாறு தலித் விடுதலைக்குரிய இறையியலை முன்வைக்கும் நூலாகக் கையில் எடுக்க முடியும்?

இந்திய வரலாற்றின் சமூகநீதிக்கான இயக்கங்களில் பகவத் கீதையின் இறையியல் எவ்விதம் செயலாற்றியிருக்கிறது என்பதை நாம் சிறிது ஆராய்ந்தால் இதற்கான பதிலைக் கண்டடைய முடியும்.

இந்து சமுதாயம் தேக்கநிலை அடைந்தபோது ராமானுஜரே மிக முக்கியமான சமுதாய எழுச்சியை ஏற்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை அரவணைத்து, கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அந்தணராகும் உரிமை இருப்பதை மீண்டும் நினைவூட்டி, சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத சமூக விடுதலைக்கான கருத்தியல் மாற்றம் இது. இதற்கான ஆன்மிக-கருத்தியல் உத்வேகத்தை ராமானுஜர் எங்கிருந்து பெற்றார் எனும் கேள்வி எழுகிறது.

பதினெட்டாம் அத்தியாயத்தில் (மோட்ச சன்னியாச யோகம்) பகவத் கீதை குணங்களின் அடிப்படையில் அறிவை மூவிதமாகப் பிரிக்கிறது. இதில் உயர்ந்ததான சத்வ அறிவை இப்படி வரையறை செய்கிறது:

வெவ்வேறாகவுள்ள பொருள்கள் அனைத்திலும் வேறுபாடில்லாததும் அழிவில்லாததுமான ஒரே வஸ்துவை எவன் பார்க்கிறானோ அந்த ஞானத்தை சாத்வீகம் என அறி. (பகவத் கீதை 18:20)

இந்த சமத்துவப் பார்வை எப்படி சமுதாய விடுதலைக்கு வழிகோலும் எனக் கேட்கலாம். ஆனால் ராமானுஜர் தன் பாஷ்யத்தில் இதனை சமுதாயச் சூழலில் மானுடத் தளத்தில் பொருத்திப் பேசுகிறார். ‘சாதி வித்தியாசங்களுக்கும், சமூகப் பொறுப்புகளுக்கும், உடல் அமைப்புகளுக்கும் அப்பால், அனைவரிடத்திலும் ஒரேபோல உறையும் அழியாத பிரம்மத்தைக் காண்பதே சாத்வீக அறிவு’ என அவர் கூறுகிறார். ராமானுஜரின் கீதை வாசிப்பு அவரது ஆன்ம நேய சமத்துவப் பார்வையைச் செதுக்கிக் கூர்மைப்படுத்தியது. அதுவே அன்றைய தேக்கநிலைச் சமுதாயத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

அது தமிழ்நாட்டுடனோ தென்னிந்தியாவுடனோ தேங்கி நின்றுவிடவில்லை. வடக்கில் அன்னிய ஆக்கிரமிப்பின் பேரிருள் கவிழ்ந்தபோது கட்டாய மதமாற்றம், சமூகத் தேக்கநிலை ஆகிய இரண்டையும் எதிர்த்துச் செயல்பட்ட பக்தி இயக்கமாக மாறிப் பரவியது. ராமானுஜரின் ஸ்ரீ சம்பிரதாயத்தில் வந்த ராகவாச்சாரியாரிடம் விசிஷ்டாத்வைதத்தைப் பயின்ற ராமானந்தர் அதனை பக்தி மூலம் சமூக இயக்கமாக மாற்றி, வட இந்தியா எங்கும் பரப்பினார். ஒருபுறம் மதவெறியும் மறுபுறம் சாதியக் கட்டமைப்பும் நெருக்கிய மக்களுக்கு, பக்தி இயக்கம் அருமருந்தாக விளங்கியது. பின்னாட்களில் பக்தி இயக்கமே மராட்டியர், கால்ஸா போன்ற சமூக-ஆன்மிக விடுதலை இயக்கங்களாக மாறி, பாரதப் பண்பாட்டை காப்பாற்றியது. இல்லையேல் 1947-ன் பாகிஸ்தானியப் பிரிவினை எல்லைகள் இன்றைய இந்தியாவின் இதயப்பகுதிக்குள் வந்திருக்கும். இந்தியா என்கிற நாடே இருந்திருக்காது.

கபீர் தாசர்

ராமானந்த பக்தி இயக்கம் சமூக நீதியையும் வலியுறுத்தியது. இந்த பக்தி இயக்க மார்க்கங்களில் முக்கியமானது கபீர் பந்த். இந்திய சமூக விடுதலைப் போராட்டத்தில் இது அளித்த பங்கு, வேறெந்த சமூக இயக்கத்தைக் காட்டிலும் ஆதாரமானது. அம்பேத்கரின் குடும்பம், கபீர் பந்த் குடும்பமே. சிறுவயதில் கபீர் பந்த் பாடல்கள் கேட்டே அவர் வளர்ந்தார். பின்னாள்களில் ஹிந்து சமுதாயத்தின் சாதிய வக்கிரங்களைக் கண்டு மேல்சாதி ஹிந்து மதத்தின்மீது அம்பேத்கர் வெறுப்பு அடைந்தபோதிலும், தலித் சமுதாயம் ஹிந்து/இந்தியப் பண்பாட்டைவிட்டு வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தமைக்கு ஒரு முக்கியக் காரணம் இதாகவே இருக்கவேண்டும். அவருக்குள் எப்போதும் கனன்றுகொண்டிருந்த சமூக நீதிக்கான நெருப்பு; அதே நேரத்தில் இனவாத-வெறுப்புக் கோட்பாடுகளுள் சிக்காமல் அப்போராட்டத்தை அவர் முன்னெடுத்த விதம் – இவை அனைத்திலும் ராமானுஜ->ராமானந்த->கபீர் பாரம்பரியத்தின் தாக்கத்தை உணர முடியும். அவர் பௌத்த மதத்துக்கு மாறியபிறகு, அவரது மரணத்துக்குச் சிறிது நேரம் முன்னால்கூட, அவர் கபீர் பாடல்களைத் தனக்குள் பாடிக்கொண்டிருந்தார் என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்ஜய் கீர்.

ஆக, பகவத் கீதையின் பங்கு இந்திய சமூக நீதி வரலாற்றிலும் முக்கியமானது. இதுவே பகவத் கீதையை தலித் விடுதலைக்கான போராட்ட இறையியலை முன்வைக்கும் முக்கிய நூலாக மாற்றுகிறது.

மேலதிக விவரங்களுக்கு:

* கொயன்ராட் எல்ஸ்ட், “The Gita and Varna-sankara (From RISA)” எனும் கட்டுரைத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கான பதில்: http://jagadanandadas.blogspot.com/2007/02/gita-and-varna-sankara-from-risa.html

* தனஞ்ஜய் கீர், Dr. Ambedkar: life and mission, Popular Prakashan, 1971

* ஜான் கார்ன்வெல், Hitler’s Pope: The Secret History of Pius XII, வைகிங் 1999

* ஸ்ரீ ராமானுஜ கீதா பாஷ்யம், (ஆங்கிலம்: மொழி பெயர்ப்பு சுவாமி அதிதேவானந்தா), ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 2009

நல்ல ருசி

முப்பத்தைந்தாயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. பயணிகளுக்கு வேர்க்கடலை, பிஸ்கட், பழரசம், மற்ற ரசங்களெல்லாம் பரிமாறப்பட்டன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இரவு உணவைத் தொடங்கவேண்டியதுதான்.

அப்போது திடீரென்று விமானி அறையின் பக்கம் ஏதோ சத்தம். பணிப்பெண்கள் அவசரமாக அங்கே ஓடினார்கள். சென்றவர்கள் யாரும் திரும்பி வரக் காணோம்.

சிறிது நேரத்தில் ஸ்பீக்கர்வழியே கரகரப்பான சத்தம் கேட்டது. ‘பயணிகள் கவனத்திற்கு, நம்முடைய விமானத்தின் எஞ்சின் ஒன்று பழுதாகிவிட்டது. அதைச் சரி செய்ய முயன்றுகொண்டிருக்கிறோம்.’

அவ்வளவுதான். விமானம்முழுவதும் பரபரப்பு. எல்லோரும் அவரவர் இஷ்ட தெய்வத்தைக் கூப்பிட்டுப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள். சிலர் செல்ஃபோனை எடுத்துப் பிரித்துத் தங்களுடைய உறவினர்களைக் கூப்பிட்டுப் பதற்றத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கொஞ்சநேரம் கழித்து பைலட் மீண்டும் பேசினார். ‘பயணிகள் கவனத்திற்கு, எங்களால் எஞ்சின் பழுதைச் சரி செய்யமுடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் விமானம் எங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகிவிடும். அருகில் உள்ள விமான நிலையத்தில் உதவி கேட்டிருக்கிறோம். ஆனால் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது.’

ஏற்கெனவே செம டென்ஷனில் இருந்த பயணிகள் இப்போது பல மொழிகளில் கத்த ஆரம்பித்தார்கள். சில ஜாக்கிரதைப் பேர்வழிகள் கீழே கடல் இருக்கிறதா என்று அவசரமாக மேப்பில் தேடினார்கள்.

அந்த நேரத்தில் ஒருவர்மட்டும் நிதானமாகத் தன் முன்னே இருந்த வேர்க்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டார். ‘நல்ல ருசி!’ என்றார்.

எத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் ஏதோ ஒரு நல்ல விஷயம் நிச்சயமாக ஒளிந்திருக்கும். அந்தச் சூழ்நிலையிலும் அதை ஏற்றுக்கொண்டு ரசிக்கத் தெரிந்துகொள்வதுதான் ஜென் ருசி!

இதே தத்துவத்தைச் சொல்லுகிற ஒரு ஜென் கவிதையும் உண்டு:

கூரை எரிந்துவிட்டது.
இனி பார்க்கலாம்
நிலவை!

ஜப்பானில் நாயர்

அத்தியாயம் 5

எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பல்வேறு துறைகளிலும் நெருக்கமான நண்பர்கள் நிறையப் பேர் உண்டு. அவர்களுள் ஒருவர் ஷங்கர் ரமணி. அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் பல எண்ணெய்க் கிணறுகளுக்குச் சொந்தக்காரர். அதைத் தவிர ஏகப்பட்ட பிசினஸ். அவர் 1985-ல், ஒருமுறை தன் மகன் அருணுக்கு உபநயனம் செய்விப்பதற்காகச் சென்னைக்கு வந்திருந்தார். அவரைப் பற்றி ஏதேச்சையாக எழுத்தாளர் சுஜாதா, கல்கி ராஜேந்திரனிடம் சொல்ல, உடனே சவேரா ஓட்டலில் தங்கி இருந்த ஷங்கர் ரமணியைச் சந்தித்து பேட்டி காணும்படி கல்கி ராஜந்திரனிடமிருந்து எனக்குத் தகவல் வந்தது.

சவேரா ஓட்டலுக்குப் போய் ஷங்கர் ரமணியைச் சந்தித்தேன். துளியும் பந்தா இல்லாமல், சாதாரணமான ஒரு பேண்ட், ஜிப்பா அணிந்துகொண்டிருந்த அவர், தன்னைப் பற்றிச் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இவ்வளவு பெரிய மனிதருக்கு முன்னால் சரிக்கு சரியாக சோபாவில் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறோமே என்ற பிரமிப்புடனே அந்த உரையாடல் நிகழ்ந்தது.

நாமக்கல்லில் அந்தக்காலத்து மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் ஷங்கர் ரமணி. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், அதனைத் தொடர்ந்து சென்னை பிரசிடென்ஸி கல்லூரியிலும் அவர் எடுத்துப் படித்த சப்ஜெக்ட், ஜியாலஜி. படிப்பை முடித்துவிட்டு, இங்கேயே அடுத்த மூன்றாண்டுகளில் ஐந்தாறு கம்பெனிகளில் வேலை பார்த்தார். கடைசியாக வேலை பார்த்த கம்பெனிக்கு ஒரு கனடா நாட்டு கம்பெனியுடன் கொலாபரேஷன். கனடாவிலிருந்து தொழில் நிபுணர்கள் இங்கே வந்து போவார்கள். அவர்களுடன் ஷங்கர் ரமணிக்குத் தொடர்பு ஏற்பட, கனடாவுக்குப் போனால் பிரகாசமான எதிர்காலம் இருப்பதைப் புரிந்துகொண்டார். 1965-ல் கனடாவுக்குச் சென்றுவிட்டார்.

கனடாவிலும் சரி, அதன் பிறகு அமெரிக்காவிலும் சரி, வாழ்க்கையில் ஏகப்பட்ட மேடுபள்ளங்களைச் சந்தித்தார். 1970-களில் பிசினஸ் பார்ட்னர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் பெரும் நஷ்டம். பெருத்த அடி வாங்கினாலும் மனுஷர் அசந்துபோகவில்லை. “பேசாமல் எங்கேயாவது மாசச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்துவிடு” என்று இந்திய நண்பர்கள் சொன்ன ஆலோசனையைப் புறக்கணித்துவிட்டு, மறுபடி பிசினசை ஆரம்பித்தார்.

விழுந்தபின் எழுந்த கதையைச் சொன்னார் ஷங்கர் ரமணி: “அமெரிக்காவைப் பொருத்தவரை கடுமையான உழைப்பு என்றைக்குமே வீண் போகாது; எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன் என்பதைவிட, நானே முயன்று ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதைச் சாதித்தவுடன், ‘அப்பாடா!’ என்று ஓய்ந்துபோகவில்லை; எதையோ பெரிசாகச் சாதித்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்ளவில்லை; அடுத்த இலக்கு என்ன என்று நிர்ணயம் பண்ணிக்கொண்டு புறப்பட்டுவிடுவேன்.”

அமெரிக்காவில் பணத்தைவிட நேரத்துக்குத்தான் அதிக மதிப்பு. எனவே, தன் பிசினஸ் விஷயங்களைக் கவனிக்கத் தோதாக, சொந்தமாகவே ஒரு ஜெட் விமானம் வைத்திருந்தார். ‘இந்தியாவுக்குக் குடும்பத்துடன் வரும்போது சொந்த ஜெட் விமானத்தில்தான் வருவேன்’ என்று அவர் சொன்னபோது, சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துக்கொண்டிருந்த நான், பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்தேன்.

ஷங்கர் ரமணி ஒரு பரம கிரிக்கெட் ரசிகர். ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சென்றிருந்தபோது, மேட்ச் பார்க்க லண்டன் வந்திருந்தார் ஷங்கர் ரமணி. அங்கே சீரிஸ் முடிந்தவுடன், மொத்த கிரிக்கெட் டீமையும் தன் ஜெட் விமானத்தில் அமெரிக்காவுக்கு ஹைஜாக் செய்துகொண்டுபோய், மேட்ச் ஆட ஏற்பாடு செய்தார். “அமெரிக்காவில் யார் கிரிக்கெட் மேட்ச் பார்க்க வருவார்கள்?” என்று கேட்டபோது, “என் ரத்தத்தை எடுத்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தா, அது ஏ, பி, ஏபி, ஓ என்று எதுவுமாக இருக்காது. என் ரத்தப் பிரிவு ‘சி’ அதாவது கிரிக்கெட்” என்றார். “எனக்கு நம்ம கிரிக்கெட்டர்களை ஆடவைத்து ஒரு மேட்ச் பார்க்கணுமுன்னு தோணிச்சு! லண்டனிலிருந்து, அமெரிக்காவுக்கு ஒரு டூரை ஸ்பான்சர் பண்ணிவிட்டேன். இந்திய கிரிக்கெட் அணி, அமெரிக்காவில் உள்ள சில லோக்கல் கிரிக்கெட் அணிகளுடன் மேட்ச்கள் ஆடியது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் திரளாக வந்திருந்து அந்த ஆட்டங்களைப் பார்த்து ரசித்தார்கள்” என்று சந்தோஷமாகச் சொன்னவரிடம், “இதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும்?” என்று கேட்டபோது, “நான் கணக்கு பார்க்கவில்லை” என்று சிம்பிளாகப் பதில் சொல்லிவிட்டார்.

ஷங்கர் ரமணி ஒரு தமிழ் சினிமா கூட எடுத்திருக்கிறார். “சினிமா எடுக்கும் ஆசை எப்படி வந்தது?” சிரித்துக்கொண்டே அவர் சொன்ன பதில்: “எனக்கு சினிமா பத்தி ஒண்ணும் தெரியாது. சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பிசினஸ் வென்ச்சர் மாதிரி டிரை பண்ணுகிறேன். ரைட்டர் சுஜாதா கதை, வசனம் எழுதறார். இன்ஃபாக்ட், அவரோட ரசிகையான என் மனைவி அபயத்தோட சாய்ஸ்தான் சுஜாதா. சினிமா எடுப்பது, இட்ஸ் ஜஸ்ட் அவுட் ஆஃப் கியூரியாசிடி.”

அடுத்து, “உங்களைப் போல சினிமா அனுபவம் இல்லாதவர்கள் சினிமா எடுப்பது ரொம்ப ரிஸ்க் இல்லையா?” என்று கேட்டேன். “எதில்தான் ரிஸ்க் இல்லை? நான் லீசுக்கு எடுக்கிற நிலத்தைத் தோண்டிப் பார்க்கிறபோது, எண்ணெயோ, வாயுவோ கிடைக்காமல் போகிற ரிஸ்க் இல்லையா? அதுபோலத்தான். எடுக்கிற படத்துல லாபம் வந்தா, அதை வெச்சு இன்னொரு படம் எடுப்பேன்.”

ஷங்கர் ரமணி தயாரித்த படத்தின் டைட்டில்: உன்னிடத்தில் நான். சுஜாதாவின் மேடை நாடகங்களை டிவி சீரியலாக எடுத்த அருண் வீரப்பன்தான் டைரக்டர். இசை தாயன்பன். கேமரா: அஷோக் குமார். நேதாஜி, ஷியாம், நளினி, தேவி லலிதா என அன்றைய தினம் அத்தனை பிரபலமில்லாதவர்கள் நடித்தார்கள். கபில் தேவ், ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் போன்ற கிரிக்கெட்டர்கள் ஷங்கர் ரமணியின் முகதாட்சணியத்துக்காக படத்தில் கௌரவத் தோற்றத்தில் வந்து போனார்கள். படத்தின் வெற்றி, தோல்வி குறித்து ஃபிலிம் நியூஸ் ஆனந்தனைத்தான் கேட்க வேண்டும்.

***

ஷங்கர் ரமணியைப் போல நான் சந்தித்த இன்னொரு நபர் ஒரு ஜப்பானியர். பெயர்: நாயர்சான். (நாயர்-சான் என்றால் மரியாதைக்குரிய நாயர் என்று பொருளாம்.) தன் இருபது வயதில் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குப் போன நாயர்சான், அங்கிருந்தபடியே இந்திய சுதந்தரத்துக்குப் போராடியவர். ஜப்பான் வாழ் இந்தியர்களில் முக்கியமானவர். அவரை ஜப்பானிய சக்ரவர்த்திகூட விருதளித்து, கௌரவித்திருக்கிறார். அவர் சென்னை வந்திருந்தபோது, அன்றைய அமைச்சர் ராசாராம் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்.

அப்போதுதான் எனக்கு நாயர்சானைச் சந்தித்துப் பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. சோழா ஷெராட்டனின் காஃபி ஷாப்பில் அவரைச் சந்தித்தேன். என் வாழ்க்கையில் அன்றைக்குத்தான் நான் முதல் தடவையாக சோழா ஹோட்டலில் காஃபி சாப்பிட்டேன். அந்த சந்தோஷம் எனக்கு அடுத்த சில நாட்கள்வரை நீடித்தது.

நாயர்சான் பேட்டியின்போது, “ஜப்பானியர்கள் அமெரிக்க ஆதரவாளர்களா? இல்லை ருஷ்யா ஆதரவாளர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன அழுத்தமான பதில்: “இரண்டுமில்லை; ஜப்பானிய ஆதரவாளர்கள்.”

ஐய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் என்ற இயற்பெயர் கொண்ட நாயர்சான் கேரளாவில் பிறந்தவர்.படிக்கிற காலத்திலேயே சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நேதாஜியின் கம்பீரமான தலைமையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் தன்னை இணைத்துக்கொண்டவர். ஜப்பானுக்குப் போய், அங்கே க்யோட்டா பல்கலைக்கழகத்தில் இஞ்சினியரிங் படித்தவர்.

இந்திய சுதந்தரத்துக்குப் பிறகு, ஜப்பானிய அரசியலில் நுழைந்ததுடன், தொழிலதிபராகவும் ஒளிர்ந்தவர். ஜப்பானில் டோக்கியோவில் அவர் ஆரம்பித்த நாயர் ரெஸ்டாரனண்ட் மிகவும் பிரபலமானது. அங்கே முதல் முறையாகச் செல்லும் எவருக்கும் உணவு இலவசம். அடுத்த முறையிலிருந்து காசு வாங்கிக்கொள்வார். ‘இந்திரா’ என்ற பெயரில் இவர் தயாரித்து விற்பனை செய்த மசாலா ரகங்கள் ஜப்பானில் வெகு பிரபலம்.

தான் ஒரு ஜப்பானியப் பெண்ணை மணந்தாலும், தன் இரண்டு மகன்களுக்கும் கேரளாவிலிருந்து பெண் எடுக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனாலும் அவருக்கு ஜப்பானியப் பெண்களே மருமகள்களாக அமைந்தார்கள்.

1990-ல் நாயர்சான் இறந்தார். ஆங்கிலத்தில் வெளியான அவரது வாழ்க்கை வரலாறை பத்திரிகையாளர் ராணிமைந்தன் மொழிபெயர்க்க, பத்திரிகையாசிரியர் சாவி புத்தகமாக வெளியிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னால் நாயர்சானின் வாழ்க்கையை நாயர்சான் என்ற பெயரிலேயே ஒரு சினிமாவாக எடுத்தார்கள். நாயர்சானாக நடித்தவர் மோகன்லால். அதில் ஜாக்கிசான்கூட நடித்ததாக நினைவு.

நாயர்சானை நான் சந்தித்துப் பல வருடங்கள் கழித்து, பணம் என்ற தலைப்பில் பிரபலங்கள் பலரும் சொன்ன விஷயங்களைக் கேட்டு கல்கியில் வாராவாரம் எழுதினேன். அந்த வரிசையில் பத்திரிகை ஆசிரியர் சாவியை சந்தித்தபோது, அவர் நாயர்சான் பற்றி நிறையப் பேசினார். அப்போது அவர் நாயர்சான் பற்றிச் சொன்ன ஒருவிஷயம் மிகவும் சுவாரசியமானது.

சாவி பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தபோது ஒருசமயம் திடீரென்று சாவிக்குப் பண நெருக்கடி. என்ன செய்வதென்று தடுமாறிப் போனார். திடீரென்று அவருக்கு ஒரு ஐடியா. ஜப்பானில் வசித்த நாயர்சான், சாவிக்கு மிகவும் நெருக்கம். நாயர்சான், ஜப்பானில் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, விமானம் ஏறி நேரே ஜப்பானுக்குப் போய்விட்டார் சாவி. நாயர்சானைச் சந்தித்து, தன் நிலைமையைச் சொன்னதும், மறுவினாடி அவர் சொன்னது, “உங்களுக்கு இப்போ எவ்வளவு பணம் வேணும்? இதுக்குப் போயி இவ்வளவு தூரம் நேரில் வரணுமா? ஒரு போன் செய்திருந்தால் போதுமே! நானே அனுப்பி வைத்திருப்பேனே!” என்பதுதான்.

ஒரு நாஸி மாமி படிக்கும் கீதை – 1

1978 டெல்லியில் ஓர் ஒதுக்குப்புறமான வீடு. எளிமையான அறை. முதுமையால் உடல் மட்டுமே தளர்ந்திருந்த அந்தப் பெண்ணின் முகம், சுருக்கங்களுக்கு உள்ளே இருந்து, வயதின் அத்தனை தடைகளையும் தாண்டிப் பிரகாசித்தது. கூர்மையான கண்களில் ஒரு வேகம் இருந்தது. அப்பெண்மணி பேசினார். அப்பேச்சு மானுட வரலாற்றையே சுருக்கிய ஒரு பார்வையாக இருந்தது.

அகன்நாத்தன் – எகிப்தில் சூரிய வணக்கத்தை ஏக தேவ வழிபாடாக முதலில் உருவாக்கிய மாமன்னன். மங்கோலிய சமவெளிகளிலிருந்து கிளம்பிய வரலாற்றுச் சக்தியாக செங்கிஸ் கான், இறுதியில் ஹிட்லர். ஒரு பெரிய கண்காணாத சக்தியின் வெளிப்பாடாகச் செயல்பட்டவர். மனித குலத்தை மகோன்னத நிலைக்கு உயர்த்த இறைச் சக்திகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகா மனிதர். பூரண நிலை அடைந்த தெய்வீக புருஷர். இந்த யுகத்தில் விஷ்ணுவின் யுகாவதாரம் அடால்ப் ஹிட்லர். அகன்நாத்தன், காலத்துக்கு அப்பால் உள்ள மனிதன். செங்கிஸ் கான், காலத்தின் போக்குக்கு வாழ்ந்த மனிதன். ஆனால் ஹிட்லர், காலத்துக்கு எதிராக நின்ற மனிதன்.

அப்பெண்மணியின் பேச்சுக்கள் 1982-ல் ஐந்து காசெட்டுகளாக வெளியிடப்பட்டன. அவரது எழுத்துக்கள் ஏற்கெனவே புத்தகமாக வெளிவந்தவைதாம். மீண்டும் புத்தகமாக வெளியிடப்பட்டன. அப்பெண்மணி வெளியிட்ட கருத்தின் சாராம்சம் இதுதான்: நாஸியிசம் ஒரு பழமையான ஆன்மிக பாதை. கிறிஸ்தவத்துக்கு முந்தைய பாகனிய ஆன்மிகத்தைச் சார்ந்தது. ஹிந்து மதத்தைப் போன்றது.

மாக்ஸிமியானி போர்ட்டாஸ் (Maximiani Portas) பிரான்ஸில் ஆங்கில-கிரேக்கப் பெற்றோருக்குப் பிறந்தவர். பிறந்த ஆண்டு 1905. வேதியியலில் பட்டப்படிப்பு. ஏழு மொழிகளில் புலமை. தனது ஆரிய இனப் பாரம்பரியத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையும் கர்வமும் உடையவர். ஆரியப் பண்பாட்டின் மிக உயர்ந்த ஆன்மிக உச்சமாக சூரிய வழிபாட்டை அவர் கண்டடைந்தார். 1932-ல் அவரது தேடல் இந்தியாவுக்கு அவரைக் கொண்டுசென்றது. அங்கே தனது பெயரை சாவித்திரி தேவி என மாற்றிக்கொண்டார். ‘நியூ மெர்க்குரி’ என்கிற பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்த கிருஷ்ண முகர்ஜி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அது எவ்வித உடல் உறவுமற்ற பிளேட்டோனியத் திருமணம் என்று அவர்கள் கூறினர்.

ஆனால் இது எல்லாவற்றுக்கும் இன்னொரு முகமும் இருந்தது. முகர்ஜி ஒரு விசித்திரமான மனிதர். முதலில் கம்யூனிஸ்டாக இருந்து சோவியத் யூனியனுக்குச் சென்று, பிறகு பாசிச ஆதரவாளராக மாறி, அதன்பிறகு நாஸியிசத்தில் ஈடுபாடு கொண்டு, ஜப்பானிய ராணுவத்துக்காக உளவு பார்த்து, அதன் பிறகு மீண்டும் கம்யூனிச ஆதரவாளராக மாறி… ஆனால் எல்லா நேரங்களிலும் அவர் தொடர்ந்து சாவித்திரி தேவி எழுதுவதைப் பிரசுரித்துக்கொண்டே இருந்தார்.

வங்காளம், இரண்டாம் உலகப்போரின் ஆசியப் போர் அரங்கில் ஒரு முக்கிய இடமாக இருந்தது. கல்கத்தாவில் சாவித்திரி தேவியும் முகர்ஜியும் நேசநாடுகளுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தும், அவர்கள்மீது பெரிய அளவில் எவ்வித நடவடிக்கையையும் அரசு எடுக்காதது ஓர் அதிசயம்தான். ஒருவேளை முகர்ஜி இரட்டை உளவாளியாக இருந்திருக்கக்கூடும் எனும் ஐயத்தை இது தோற்றுவிக்கிறது. சாவித்திரி தேவி, ‘மாமி’ என்றே கல்கத்தா உயர் வட்டாரங்களில் அறியப்பட்டார். ஹிந்து மகா சபையின் நட்சத்திரப் பேச்சாளராகவும் ஆனார். அவர் எழுதிய ‘ஹிந்து சமுதாயம் எதிர்நோக்கும் ஆபத்துக்கள்’ எனும் நூல் ஹிந்து மகாசபை வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வினாயக சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இதற்கு முகவுரை எழுதினார். ஆனால் இந்த நல்லுறவு நெடுநாள் செல்லவில்லை.

இதற்குக் காரணங்கள் இருந்தன. ஒன்று ஹிந்து மகாசபை சாதியத்தை முழுமையாக நிராகரித்தது. இனப் பாகுபாடுகளை சாவர்க்கர் சமரசமின்றி நிராகரித்தார். 1920-களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பில் (ஹிந்துத்துவ மையக் கோட்பாடுகள் – Essentials of Hinduthva) இனப்பாகுபாடுகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், அவருடைய காலகட்டத்துக்கு மிகவும் முற்போக்கானவை. மானுடத்துவப் பார்வை கொண்டவை. ஐரோப்பா அத்தகைய மனநிலையை வந்தடைய முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆகியதுடன், அதற்கு இரண்டாம் உலகப்போரும் மிகப்பெரிய மக்கள் குல அழிவும் தேவைப்பட்டது. சாவர்க்கர் சொல்கிறார்:

உலகமெங்கிலும் மனித குலத்தைப் பொருத்தவரையில் ஒன்று மட்டுமே நிலையான உண்மை. அது மனிதகுலம் ஒரே இனம். அந்த ஒரே இனம் ஒரே ரத்தத்தால், மானுட ரத்தத்தால் வாழவைக்கப்படுகிறது. மற்ற எல்லாப் பேச்சும் பிராந்தியம் சார்ந்த பேச்சுதான். சார்புத்தன்மை கொண்ட பேச்சுதான். இனங்களுக்கு இடையே நீங்கள் உருவாக்கும் செயற்கை மதில்களை உடைத்தெரிய இயற்கை தொடர்ந்து முயன்றபடியே உள்ளாள். இனக்கலப்பைத் தடுக்க முயற்சிப்பதெல்லாம் மண்கோட்டை கட்டுவதுபோலத்தான். உலகின் எல்லா இறைத்தூதர்களின் கட்டளைகளையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்த்தாலும், பாலியல் கவர்ச்சி அவை எல்லவற்றையும் விடச் சக்தி வாய்ந்தது.

ஹிட்லருக்கு எதிராகப் போர் புரிந்த சர்ச்சில் போன்றவர்கள் 1940-களில்கூட (அதற்குப் பின்னும்கூட) இனமேன்மையில் வைத்திருந்த நம்பிக்கை, எவ்விதத்திலும் ஹிட்லரிடமிருந்து மாறுபட்டதல்ல என்பதைப் பார்க்கும்போது, சாவர்க்கர் எந்த அளவு இனக் கோட்பாடுகளைமீறி, தன் ஹிந்துத்துவக் கோட்பாட்டை முன்வைத்திருந்தார் என்பது விளங்கும். ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்த எவ்விதத் தரவும் சாவர்க்கருக்கு இல்லை. (பின்னாள்களில் அவர் அதை நிராகரித்தார் என்கிறார்கள்.) ஆனால் அவரைப் பொருத்தவரை வரலாற்றுரீதியாக இந்தியர்கள் கலப்பினம் என்று கருதுவதில் அவருக்கு எவ்வித இழிவும் இல்லை. சமூகப் பார்வையில், சாதிகள் கலந்து அழிந்தால்தான் ஹிந்துக்களுக்கு விடி மோட்சம் என்று அவர் கருதினார்.

வனவாசிகள், தலித்துகள் ஆகியோர்மீதான உயர்த்தப்பட்டசாதியினரின் அடக்குமுறைகளை எதிர்க்கும் போராட்டங்களுக்கு சாவர்க்கரின் ஆதரவு இருந்தது. அவற்றை ஹிந்து மகாசபையும் ஆதரித்தது. கேரளாவின் தலித் போராளி அய்யன்காளி தமது போராட்டங்களை ஹிந்து மகா சபை ஆதரித்ததை நன்றியுடன் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேருவதை சாவர்க்கர் ஆதரித்தார். ஸ்ரீ அரவிந்தர் போன்ற ஹிந்து தேசியத்தின் மூத்த சிந்தனையாளர்களும் நாஸிகளை ஒரு அசுரசக்தியாகவும் இருட்கொடுமையாகவும் வர்ணித்திருந்தனர்.

மூன்றாவதாக, பாலஸ்தீனிய-இஸ்ரேல் சமாசாரத்தில் ஹிந்து மகா சபை இஸ்ரேலை ஆதரித்தது. எனவே சாவித்திரி தேவி ஹிந்து இயக்கங்களுடனான தன் உறவை ஒரு கெட்ட கனவாகவே நினைத்தார். பின்னாள்களில் அவர் எழுதிய 338 பக்க சுயசரிதையில், ஓர் இடத்தில்கூட அவர் ஹிந்து புத்தெழுச்சி அமைப்புகளைக் குறிப்பிடவில்லை.

ஆனால் சாவித்திரி தேவியால் ஐரோப்பியப் பண்பாட்டுக்கு ஒரு தேவை இருக்கிறது. ஐரோப்பிய அறிஞர்கள் தங்கள் பண்பாட்டிலிருந்து நாஸியிசம் போன்ற ஒரு கொடும் தத்துவம் ஒரு தேசத்தையே அரசாண்டதைப் பார்த்தார்கள். அத்துடன் உலக வரலாற்றில் அன்றுவரை அறிந்ததிலேயே மிக மோசமான விரிவான படுகொலையை நாஸிகள் திட்டமிட்டுச் செய்ததையும் பார்த்தார்கள். எல்லாவற்றையும்விட மேலாக அந்தப் படுகொலைக்குத் தாங்கள் மௌன சாட்சிகளாக நின்றதையும் பார்த்தார்கள். இதை எப்படி விளக்குவது? நாஸியிசம் ஒரு விதிவிலக்கு என்றும், அது உண்மையில் ஒரு பாகனிய கல்ட் என்றும் அல்லது ஆசிய/ஆரிய பழம் பண்பாடு ஐரோப்பாவில் ஊடுருவியதால் ஏற்பட்ட விபரீத விளைவு என்றும் விளக்க முயன்றார்கள். இந்தவிதமாக நாஸிகளைக் காட்ட சாவித்திரி தேவி நல்ல ஆதாரமாக விளங்கினார். “இதோ பாருங்கள், நாஸியிசத்துக்குக் காரணம் ஹிந்துப் பண்பாடுதான்.” ஆனால் உண்மையில் சாவித்திரி தேவிக்கு ஹிட்லரிடம் இருந்த பக்தி அல்லது ரசிகத்தன்மை ஒரு பக்கக் காதல் போன்றதுதான். அவருக்கு ஹிட்லரிடமோ அல்லது நாஸி உள்வட்டங்களிலோ எவ்வித மதிப்பும் பெரிய அளவில் இல்லை. நாஸி கூட்டங்களிலேயே பாகனியக் கோட்பாடுகள் கொண்டவர்கள் பலர் இருந்தனர். ஆனால் ஹிட்லரும் நாஸி உள்வட்டமும் தங்கள் செயல்பாடுகளை நிறுவன மதத்துடன்தான் இணைத்துக்கொண்டனர்.

ஆனால் 1980-களுக்குப்பிறகு நியோ-நாஸிகள் சாவித்திரி தேவியைத் தேடியெடுத்து தங்கள் கோட்பாடுகளுக்குக் கீழை மறைஞான சாயம் பூச ஆரம்பித்தனர். மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களுக்கும் ஹிந்துத்துவத்தில் ஒரு ‘நாஸி மாமியை’ கண்டுபிடிப்பதில் ஏக குஷி. ஆனால் சாவித்திரி தேவியின் வரலாற்றை நாம் பார்த்தால் அவருடைய ஹிந்துமத அறிதல் மேம்போக்கானதாகவும், பல நேரங்களில் ஹிந்து மதத்தின் கோட்பாட்டுக்கு நேர் எதிரானதாக இருப்பதையும் காணமுடியும்.

சாவித்திரி தேவி நாஸி இனவாதக் கோட்பாடுகளுக்கான ஆதாரங்களை இந்தியப் பாரம்பரியத்தில் தேடினார். ஹிந்து சமுதாய சாதி அமைப்பு இனத்தூய்மையை பாதுகாப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்று அவர் நம்பினார். பகவத் கீதையை இதற்கு ஆதாரமாகவும் அவர் காட்டினார். ‘ஹிட்லரிசமும் ஹிந்து உலகமும்’ எனும் கட்டுரையில் அவர் எழுதுகிறார்:

எனக்கு பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தின் பாடல் (யூஜீன் பர்னாப்பின் 19ம் நூற்றாண்டு பிரெஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்து) நினைவுக்கு வந்தது. “அதருமம் பரவுவதால் குலப்பெண்கள் கற்பை இழந்து கெட்டுப் போவார்கள். பெண்கள் கெட்டால் சாதிக் கலப்பு ஏற்படும். (இது உண்மையில் இனக்கலப்புதான், ஏனென்றால் தொடக்கத்தில் சாதி எனப்படுவது இனமாகத்தான் இருந்தது.) அதனால் முன்னோர்கள் குறித்த நினைவுகள் கெடும். அதிலிருந்து அறிதல் கெட்டுப்போகும். அதிலிருந்து எல்லாத் தீமைகளும் உருவாகும்.” எனக்குள் மின்னலடித்ததுபோல ஓர் எண்ணம். “இது உண்மை. இதுதான் மெயின் காம்ஃப் (Mein Kampf) கூறும் உணர்வின் ஆதி வெளிப்பாடு.”

மெயின் காம்ஃப் – எனது போராட்டம் – ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. துரதிர்ஷ்டவசமாக, நாஜி மாமி மட்டுமல்லாமல், பலரும் இந்த எண்ணத்துடன் இருக்கிறார்கள். பகவத் கீதை பிறப்பு அடிப்படையிலான சாதிப் பிரிவை ஆதரிப்பதாகக் கருதுகிறார்கள்.

ஆனால் இதனைச் சிறிது உற்று நோக்கினாலும் சாவித்திரி தேவி மேற்கோள் காட்டும் வரிகள் அர்ஜுன விஷாத யோகத்தில் (1:41) வருபவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அந்த வார்த்தைகள் அர்ஜுனன் மனக்குழப்பத்தில் இருக்கும்போது கூறும் வார்த்தைகளே. அப்படியானால் கிருஷ்ணர் அதற்கு என்ன பதில் தருகிறார்? அவர் பிறப்படிப்படையிலான சாதியை ஆதரிக்கிறாரா?

நாளைவரை பொறுத்திருங்கள்.

மேலதிக விவரங்களுக்கு:

* Nicholas Goodrick-Clarke, Hitler’s Priestess: Savitri Devi, the Hindu-Aryan Myth, and Neo-Nazism, NYU Press, 2000
* கொயன்ராட் எல்ஸ்ட், The saffron swastika: the notion of “Hindu fascism”, Volume 2, Voice of India , 2001
* கொயன்ராட் எல்ஸ்ட் , Return of the Swastika: hate and hysteria versus Hindu sanity, Voice of India , 2007
* வினாயக் தமோதர் சாவர்க்கர், Essentials of Hindutva, சாவர்க்கர் சதன் 1921-22: 1946
* Sumanta Banerjee, Memories of my Nazi Maami [Aunt], Times of India on 19 April 1999

சுட்டிகள்:

* சாவித்திரி தேவி, Hitlerism and the Hindu World”, (The National Socialist, no. 2 (Fall 1980): 18-20), http://library.flawlesslogic.com/hindudom.htm
* Shrabani Basu, The spy who loved Hitler. http://www.rediff.com/news/1999/mar/27hitler.htm
* Greg Johnson, Savitri Devi’s Communist Nephews, http://www.savitridevi.org/article-nephews.html