அம்பேத்கரும் தோழர்களும்

ambedkarபுரட்சி / அத்தியாயம் 22

எந்த இந்து மதத்தை அம்பேத்கர் தெளிவாகவும் ஆழமாகவும் எதிர்த்தாரோ அந்த இந்து மதத்தின் ஒரு பகுதியாக அம்பேத்கரை மாற்றிவிடும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமூகத்தில் உள்ள அனைவரையும் சென்றடைவதற்காகவும் தனது ஆதார பலத்தைக் கூட்டிக்கொள்வதற்காகவும் தந்திரமாக சில உபாயங்களை இந்த அமைப்பு கடைபிடித்துவருகிறது. அதிலொன்றுதான் பகத் சிங், அம்பேத்கர் போன்றோரைத் தம் கூடாரத்துக்குள் இழுக்கும் முயற்சி. உயர் சாதி இந்துக்கள் மட்டுமல்ல அனைத்து இந்துக்களுக்கும் நாங்கள் காவலர்கள் என்று சொல்லும் முகமாக,  பிற்படுத்தப்பட்டவர்களையும் பழங்குடிகளையும் (இவர்களை வனவாசிகள் என்று அழைக்கிறார்கள்; ஆதிவாசிகள் என்று சொன்னால் ஆரியர்களுக்கும் முந்தையவர்கள் என்றாகிவிடும் அல்லவா?) தலித் பிரிவினரையும் அணைத்துக்கொள்ள ஆர்.எஸ்.எஸ் துடிக்கிறது. இந்து மதத்தில் பிறந்த நான் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன் என்று தெளிவாக அம்பேத்கர் அறிவித்தபிறகும், அவர் தேர்ந்தெடுத்த பௌத்தம், இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள் இவர்கள்.

புத்தரையே ஓர் இந்து கடவுளாக வெற்றிகரமாக மதம் மாற்றிவிட்டவர்களுக்கு அம்பேத்கரை ஓர் இந்துவாக மாற்றுவது பெரிய விஷயமில்லைதான். ஆனால் அவர்களுடைய நோக்கம் அத்துடன் முடிந்துவிடவில்லை. ஓர் இந்துவாக மட்டுமல்ல, தம்மைப் போலவே அவர் ஓர் இஸ்லாமிய எதிர்ப்பாளரும்கூட என்று நிறுவும் முயற்சியிலும் அவர்கள் இறங்கிவிட்டார்கள்.

இந்துத்துவப் பிரசாரகர்களின் பொய்க் கதைகளை எடுத்துக்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆனந்த் டெல்டும்டே எழுதிய கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்’ என்னும் அந்தப் புத்தகத்தின் பதிப்புரை இவ்வாறு குறிப்பிடுகிறது.

‘சமகால வரலாற்றையே திரித்து, பார்ப்பன இந்து மதத்தையும் சாதியத்தையும் தம் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய முன்னோடிகளை நம் கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பை நிறுவனமயமாக்கும் இந்தச் சதியில் ஐயா வைகுந்தர், நாராயண குரு முதல் புரட்சியாளர் பகத் சிங் வரை அனைவரது மரபுக்கும் உரிமை பாராட்டும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், அம்பேத்கர் மீதும் கை வைத்துள்ளது… அம்பேத்கர் பிறந்த மராட்டியத்திலேயே இன்று சிவசக்தி, பீம்சக்தி, இந்துசக்தி என்ற முழுக்கத்தின் கீழ் தலித் மக்களைத் தன்பக்கம் இழுக்க முயன்று வருகிறது, சிவசேனா.’ குறிப்பாக தலித் மக்களிடையே இஸ்லாமிய எதிர்ப்பைப் பரப்பும் நோக்கில், ‘இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டுமென்று விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக’ அம்பேத்கரைப் பிசைந்து உருவாக்குவதே இவர்கள் லட்சியமாக இருக்கிறது.

ஆனந்த் டெல்டும்டே தொடர்கிறார். ‘இந்து மதம் சார்ந்த ஒவ்வொன்றையும் அம்பேத்கர் தீவிரமான திறனாய்வுக்கு உட்படுத்தியபோது, தொடக்கத்தில் இந்துத்துவ சக்திகள் அவரிடம் கடுப்புக் கொண்டன. இந்துமதத்தைக் கைவிட்டு அவர் புத்த சமயத்தைத் தழுவியபோது அதற்காக அவரிடம் பிணக்கம் காட்டின. ஆனால், இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 16% ஆக இருக்கக்கூடிய தலித்துகளில் மிகப் பெரும்பான்மையானவர்களின் நாட்டங்களின் குறியீடாக அவர் விளங்குகிறார் என்பதையும், எனவே அம்பேத்கரைப் பற்றிய எவ்வித விமர்சனமும் ஒட்டுமொத்த தலித் மக்களையும் சங்கப் பரிவாரத்திலிருந்து அந்நியப்படுததிவிடக்கூடும் என்பதையும் விரைவிலேயே அவை கண்டுகொண்டன. உடனே அம்பேத்கரை தம்மவராகச் சேர்த்துக்கொள்ளும் நரித் தந்திரத்தை அவை கைக் கொண்டன.’

அதே சமயம், முழுமையாக அவரை ஏற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுவதையும் காணமுடிகிறது. அம்பேத்கரை ‘சங்கப் பரிவாரம் தன் தரப்பில் சேர்த்துக்கொண்டாலும்,சாதிகள் ஒழிப்பு என்ற அவரது குறிக்கோளைப் பற்றியோ, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தியாவை உருவாக்கும் அவரது தரிசனத்தைப் பற்றியோ பேசுவதைக் கவனமாகத் தவிர்த்துவிடுகிறார்கள்.’

அம்பேத்கரைத் திரித்து காட்டும் முயற்சிகளை முறியடிக்கவேண்டுமானால் இந்துத்துவ முகாமில் இருந்து அம்பேத்கரை மீட்டு இடதுசாரி முகாமில் அவரை இணைக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. இந்த இணைப்பு அத்தனை சுலபமானதல்ல. அம்பேத்கரால் அவர் வாழ்ந்த காலத்திலேயே இடதுசாரிகளுடன் ஒன்றிணைய முடியாமல் போய்விட்டது. அது ஏன் என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

அம்பேத்கர் ஒரு சாதி எதிர்ப்புப் போராளி மட்டுமல்ல. அம்பேத்கர் தொடங்கிய இண்டிபென்டண்ட் லேபர் பார்ட்டி (ஐஎல்பி) தீண்டத்தகாதவர்களுக்கான பிரத்தியேகக் கட்சியாக இல்லாமல் அனைத்து உழைக்கும் மக்களுக்குமான கட்சியாக இருந்தது. முன்னதாக, ஷெட்யூல்ட் காஸ்ட்ஸ் ஃபெடரேஷன் என்னும் அமைப்பைத் தீண்டத்தகாதவர்களுக்காக அவர் தொடங்கியிருந்தார். ஆறாண்டு இடைவெளியில் இந்த இரு இயக்கங்களும் தொடங்கப்பட்டன. பரவலான மக்களைத் திரட்ட ஐஎல்பி. குறிப்பாக, ஒரு பிரிவினரின் நலன்களைப் பிரதிபலிக்க எஸ்சிஎஃப்.

இது அம்பேத்கர் எதிர்கொண்ட ஒரு முக்கியக் குழப்பம் என்கிறார் கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலோ. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக இருந்து அவர்கள் பிரச்னைக்குக் குரல் கொடுப்பதா? அல்லது கவனத்தை அகலப்படுத்தி தொழிலாளர்களுக்குக் குரல் கொடுப்பதா? தீண்டத்தகாதவர்களில் ஒரு பெரும் பிரிவினர் தொழிலாளர்களாகவும் அல்லவா இருக்கிறார்கள்?

இந்த இடத்தில்தான், இந்தியத் தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் பிராமணியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்பதை அம்பேத்கர் உணர்ந்துகொண்டார். இந்த இரண்டுமே ஒரே சமூகப் பிரிவினரைக் கொண்டதாக இருந்ததையும் அவர் கண்டுகொண்டார்.  தொழிலாளர்கள் குறித்த அம்பேத்கரின் பார்வையில் மார்க்சியத்தின் தாக்கம் காணப்படவில்லை என்கிறார் கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலோ. மாறாக, அவர் கம்யூனிஸ்டுகளை விமரிசித்தே வந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மார்க்சியத்தால் இந்தியாவுக்குப் பலன் எதுவும் இல்லை என்பதே அம்பேத்கரின் நிலைப்பாடாக இருந்தது.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களின் பிரச்னையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். இவ்வாறு அவர் கம்யூனிஸ்டுகளை விமரிசித்ததற்கு ஒருவேளை ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உயர் சாதி தலைவர்களின் ஆதிக்கம் பரவியிருந்தது’ காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் ஜேஃப்ரிலோ.

சாதிமுறை என்பது தொழில் பிரிவினையாக மட்டுமின்றி, தொழிலாளர்களின் பிரிவினையாகவும் விளங்குகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். சாதியின் பெயரால் பிளவுபட்டு நிற்கும் தொழிலாளர்களை வர்க்கத்தின் பெயரால் ஒன்றிணைக்கமுடியும் என்னும் நம்பிக்கை அவரிடம் காணப்படவில்லை. இதை அவர் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறார். அம்பேத்கரை மகர்களின் தலைவர் என்றே பரவலாகப் பலர் கருதியதால் மாங்குகள், சாம்பர்கள் ஆகியோர் அவரை நெருங்கி வரவில்லை.

மார்க்சியம் கூறுவது போல் பொருளாதார அடிப்படையில் மக்கள் பிரிந்திருக்கவில்லை என்றார் அம்பேத்கர். இல்லையென்றால், ஒரு பைசாவும் இல்லாத சாதுக்களையும் ஃபகீர்களையும் ஏன் மில்லியனர்கள் வணங்குகிறார்கள்? இந்தியாவைப் பொருத்தவரை மதமே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பது அம்பேத்கரின் வாதம். அதனால்தான் ‘ஒரு மாஜிஸ்ட்ரேட்டை விட ஒரு மதகுருவின் வாக்கியத்துக்கு மக்கள் கட்டுப்படுகிறார்கள்.’

புரட்சிகர முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதைக் காட்டிலும் சாதியை ஒழிக்கவேண்டியது பிரதானமானது என்பது அம்பேத்கரின் திடமான நம்பிக்கை. மார்க்சியத்தை அவர் விமரிசித்ததன் பிரதான காரணம் இதுவே. சோஷலிசத்துக்கு ஏன் ஆதரவு கிட்டவில்லை என்பதையும் அவர் விளக்குகிறார். ‘புரட்சி சாத்தியப்பட்டால் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள், எந்த வேறுபாடும் காட்டப்பட மாட்டாது, சாதியின் பெயரால் நம்பிக்கையின் பெயரால் அவர்கள் வேறுபடுத்தப்படமாட்டார்கள் என்று நம்பினாலொழிய மக்கள் புரட்சிக்கு ஆதரவு தர மாட்டார்கள்… உண்மையிலேயே சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சோஷலிஸ்டுகள் விரும்பினால், சமூகச் சீர்திருத்தம் அடிப்படையானது என்று அவர்கள் ஏற்கவேண்டும்.’

அம்பேத்கர் மார்க்சியத்தை விமரிசித்த ஒரே காரணத்துக்காக மார்க்சியவாதிகள் அம்பேத்கரையும் அம்பேத்கரியவாதிகள் மார்க்சியத்தையும் நிராகரிக்கவேண்டிய அவசியமில்லை. டபிள்யு.என். குபேர் எழுதுகிறார். ‘உழைக்கும் வர்க்கச் சிக்கலில், தலித் இயக்கமும், இடதுசாரி இயக்கமும் நெருங்கி வரவில்லை. அம்பேத்கர், ‘தொழிலாளர்களைக் காற்றுப் புகாத தனித் தனி அறைகளில் பிரித்து வைப்பதாக’ சாதியைக் கருதினார். ஆனால் மார்க்ஸ் சாதியை இனவழித் தொழிலாளர்கள் பிரிவினை என்று வகைப்படுத்தினார். இந்த இரண்டு விளக்கங்களும் வேறல்ல. ஒன்றே.’

எனில், மார்க்ஸையும் அம்பேத்கரையும் ஒன்றுசேர்க்கமுடியுமா? முடியும் ஆனால் அதற்கு அரசியல் தலையீடு தேவை என்கிறார் குபேர். ‘வர்க்க மோதலுக்கு சாதிச் சிக்கலும் தொடர்புடையதே என்பதையும் சாதியை அணி திரட்டுவதில் அதன் வர்க்க இயல்பைத் தவற விட்டுவிடக்கூடாது என்பதையும், மிகமிக அதிகமாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சாதிகள் சமுதாயப் புரட்சியில் ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்க வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுகிற ஓர் அரசியல் வழி நமக்குத் தேவைப்படுகிறது… அத்தகைய அரசியல்வழி, பருண்மையான சமூக அரசியல் போராட்டங்கள் என்ற பொருளில் சிந்திக்கவேண்டும்.’

அம்பேத்கர், மார்க்ஸ் இருவருடைய பெயரால் நடத்தப்படும் இயக்கங்களையும் அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளையும் ஒப்பிடுகிறார் ஆனந்த் டெல்டும்டே. ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் தலித் விடுதலை இயக்கத்தையும் போல் முரண்பாடுகள் கொண்டது வேறு எதுவும் இருக்கமுடியாது. இரண்டு இயக்கங்களுமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் உதித்தன. ஒரே விஷயங்களைத்தான் பேசின. அல்லது ஒரே விஷயத்தை எதிர்த்துத்தான் பேசின. ஒரே மாதிரியாக வளர்ந்தன அல்லது பிளவுபட்டன. இரண்டு இயக்கங்களுமே இன்று நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கின்றன. இருந்தும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்ககூடத் தயாராக இல்லை.’

அம்பேத்கர் மார்க்சியத்தை விமரிசித்தார் ஆனால் முழுமுற்றாக நிராகரிக்கவில்லை என்கிறார் டெல்டும்டே. ‘அம்பேத்கர் ஒரு மார்க்சியவாதி அல்ல. கொலம்பிய பல்கலைக்கழகம், லண்டன் பொருளாதாரக் கல்லூரி என ஃபேபியர்களால் நிறுவப்பட்ட கல்வி மையங்களில் படித்தவர் என்பதால் அந்தச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு அவரிடம் இருந்தது. தனது அறிவுசார் ஆளுமைக்கு முழுக் காரணம் என்று அம்பேத்கர் மதிக்கும் ஜான் தவே ஓர் அமெரிக்க ஃபேபியன்.

‘இந்தச் சித்தாந்தமும் சோஷலிசத்தையே விரும்புகிறது என்றாலும் மார்க்ஸ் விரும்பியதைப் போன்றது அல்ல இது. சோஷலிசத்தைப் புரட்சியின் மூலம் கொண்டுவரமுடியாது. இயல்பான பரிணாம வளர்ச்சிப் போக்கில் அது உருவாகும் என்று ஃபேபியன்கள் நம்பினார்கள். இத்தகைய பாதிப்புகள் இருந்தபோதிலும் மாக்ஸை ஏற்றுக்கொள்ளாமலேயே மார்க்சியத்தை முக்கியமானதாகக் கருதியதோடு தன் வாழ்க்கையின் அனைத்து முடிவுகளையும் உரைத்துப் பார்க்க உதவும் உரைகல்லாகவும் அம்பேத்கர் பயன்படுத்தியிருக்கிறார்.

‘பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, அம்பேத்கரின் அரசியல் மார்க்ஸின் கோணத்தில் இல்லை என்றாலும் வர்க்கம் சார்ந்ததுதான். அவர் தான் எழுதிய முதல் கட்டுரையில் சாதிகளை மூடுண்ட வர்க்கங்களாகத்தான் வரையறுத்திருக்கிறார். தீண்டப்படாதவர்களைச் சுட்டும்போதுகூட அவர்களை ஒரு வர்க்கமாகத்தான் சொல்லியிருக்கிறார். அந்த அணுகுமுறை, வர்க்க அலசல் என்பது வெறும் கோட்பாடு சார்ந்ததாகவோ வெட்டவெளியில் நிகழ்வதாகவே இருக்கக்கூடாது. நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டதாக இருக்கவேண்டும் என்று சொன்ன லெனினுடன் அம்பேத்கருக்கு இருக்கும் ஒத்திசைவை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.’

அம்பேத்கர் தன் காலத்து கம்யூனிஸ்டுகளை நிராகரித்ததற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது என்கிறார் டெல்டும்டே. ‘அன்றைய மார்க்சியர்கள் மார்க்ஸ், லெனின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டகங்களை அப்படியே இந்திய சூழலில் திணித்தனர். மார்க்சியப் படிமங்களை யந்திரகதியில் புரிந்துகொண்டு இந்தியாவில் நடைபெற்ற சாதி எதிர்ப்புப் போராட்டங்களை ஒரு பொருட்டாக மதிக்க மறுத்தனர். பிராமணர்களைப் போல் ‘சித்தாந்த துய்மை’ குறித்த மோகம் கொண்டவர்களாகவும் ‘புனிதத்தை’ காப்பாற்றுபவர்களாகவும் இருந்தனர்.’
கம்யூனிஸ்டுகள் செய்த மாபெரும் தவறு அம்பேத்கரைத் தம்மில் ஒருவராக, ஒரு தோழராகக் காணாததுதான் என்கிறார் டெல்டும்டே. ‘அம்பேத்கரின் செயல்பாடுகள் தங்களுடைய பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதாக அவர்கள் பார்த்தனர். இதனால்தான் டாங்கே, 1952 தேர்தலில் உங்கள் வோட்டை செல்லாததாகக் கூட ஆக்கிக் கொள்ளுங்கள். ஆனால், அம்பேத்கருக்கு மட்டும் போட்டுவிடாதீர்கள் என்று சொல்லவைத்தது. அந்தத் தேர்தலில் அம்பேத்கர் தோற்கவும் செய்தார்.’

5892871வரலாற்றில் இருந்து நிறையவே கற்கவேண்டிய அவசியத்தில் இருக்கும் நாம் இதிலிருந்தும் ஒரு பாடத்தைக் கற்கவேண்டும். நமது இன்றைய தேவை என்ன? குபேர் எழுதுகிறார். ‘மார்க்சியப் புரட்சிகர வேலைத்திட்டத்தை, இந்திய சமூகக் கட்டமைப்பைப் பற்றிய அம்பேத்கரின் உள்நோக்கத்தோடு இணைக்கும் செயல்பாடுகள்தாம் இன்றைக்குத் தேவைப்படுகிறது. எனவே ‘மார்க்ஸ் அல்லது அம்பேத்கர்’ இல்லை. ‘மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர்’ என்பதே வருங்காலப் புரட்சிகர வேலைத் திட்டத்தின் வழிகாட்டும் கொள்கை. அப்போதுதான், மனிதத் தன்மைக்குக் கீழ்ப்பட்ட நிலைமைகளில் கட்டாயமாகத் தள்ளப்பட்டு உழலும் பல லட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்வதற்காக அந்த இரண்டு மாபெரும் தீர்க்கதரிசிகள் கண்ட கனவுகளை நிறைவேற்ற முடியும்.’

(அடுத்த பகுதி : ரஷ்யப் புரட்சியின் நாயகன்)

அம்பேத்கரின் மதம்

doctor_800புரட்சி / அத்தியாயம் 21

இருபத்தைந்து வயதில் கொலம்பியாவில் ஏ.ஏ. கோல்டன்வீசர் என்பவரின் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது அம்பேத்கர் ஒரு சமூகவியலாளராக உருபெற்றிருந்தார் என்கிறார் கிறிஸ்டோஃபே     ஜேஃப்ரிலோட். மே 1916ல் சாதி குறித்து அம்பேத்கர் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். பொதுவாக மேற்கத்திய உலகம் சாதியம் குறித்து கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றியமைக்கும்படி  அமைந்தது இந்தச் சொற்பொழிவு. சாதியத்தை அவர்கள் இனம் என்பதாகவே அர்த்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ஆரியர்கள் படையெடுத்து வந்து திராவிடர்களை அடிமைப்படுத்தி, கீழ் சாதிகளுக்குத் தள்ளிவிட்டனர் என்பதே அவர்களுடைய புரிதலாக இருந்தது. சாதி என்பது இனம் சார்ந்ததல்ல, அது ஒரு சமூகக் கூறு என்றார் அம்பேத்கர்.

சாதியம் குறித்த அம்பேத்கரின் பார்வை அதற்குப் பிறகு மேலும் விசாலமடையத் தொடங்கியது. சாதியத்தின் தோற்றத்தை அவர் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தினார். எந்தவொரு மனிதனும் ஒரு புதிய சாதிக்குள் தன்னை நுழைத்துக்கொள்ளமுடியாதபடி சாதி அமைப்பு இறுக்கமாக அமைந்துள்ளதை அவர் கண்டறிந்தார். சீக்கிய, இஸ்லாமிய மதங்களுடன் இந்து மதத்தை ஒப்பிடும் அம்பேத்கர், இந்த இரு மதத்தினரிடம் சகோதரத்துவ உணர்வு காணப்படுகிறது, அது இந்து மதத்திடம் இல்லை என்பதை உணர்ந்தார். சமூக ஒற்றுமையை உறுதிபடுத்திக்கொள்ளும் தன்மை எதுவும் இந்து மதத்திடம் இல்லை. ஒற்றுமை, கூட்டுறவு இரண்டையும் இந்து மதத்தில் உள்ள சாதிமுறை சாத்தியமற்றதாகிவிட்டது என்கிறார் அம்பேத்கர்.

சிலர் நான்கு வர்ண அமைப்பு என்பது பிறப்பின் அடிப்படையிலானது அல்ல, குணத்தின் அடிப்படையிலானது என்று வாதிடுவர். இந்த வாதத்தை ஏற்க அம்பேத்கர் தயாராகயில்லை. ‘பிறவியின் அடிப்படையிலான சமூக வேலைப்பாடுகளைக் குறிக்கின்ற பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய வெறுக்கத்தக்க அடையாளங்களின்மூலம் தகுதியின் அடிப்படையிலான நால் வருண முறையை அனுமதிப்பது என்பது நம்மை வலையில் மாட்டிக்கொள்ள வைக்கும் கண்ணி ஆகும்.’ முன்னதாக பிளேட்டோ இதே போல் தொழில் அடிப்படையில் மனிதர்களை மூன்று பிரிவுகளில் அடக்கியிருந்தார். இதையும்கூட அம்பேத்கர் நிராகரிக்கிறார்.

பிற மதங்களிலும் சாதிமுறை இருக்கிறது என்றாலும் இந்து மதத்தில் மட்டுமே அதற்கு சமூக முக்கியத்துவம் உள்ளது என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர். இந்துக்களைப் போல் அவர்களுக்குச் சாதி அத்தனை அவசியமானதும் அல்ல. சாதி அடிப்படையில் அவர்கள் தனித்தனியே மக்களைப் பிரித்து வைப்பதோ வேண்டாதவர்களை ஒதுக்கி வைப்பதோ அல்ல. இந்துக்களை சாதி பிரிக்கிறது. அவர்களை ஒன்றிணைப்பதற்கு இந்து மதத்தில் எதுவும் இல்லை என்பது அம்பேத்கரின் கருத்து.

சமபந்தி போஜனம், கலப்பு மணம் போன்ற மேற்போக்கான சீர்திருத்தங்களால் மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது, சாதி உணர்வை மழுங்கடிக்க முடியாது என்கிறார் அம்பேத்கர். இத்தகைய செயல்களால் மக்கள் ஒன்றிணைவதை சாத்திரங்கள் தடுக்கின்றன என்கிறார் அவர். பார்ப்பனியம் குறித்த அம்பேத்கரின் கருத்துகளை டபிள்யூ.என். குபேர் தொகுத்து அளிக்கிறார். பார்ப்பனியத்தின் கோட்பாடுகள் என்று அம்பேத்கர் வரிசைப்படுத்தும் அம்சங்களை இனி காணலாம்.

 1. வெவ்வேறு வகுப்புகளிடையே படிநிலைச் சமத்துவமின்மையை உருவாக்குதல்
 2. சூத்திரர்களையும் தீண்டப்படாதவர்களையும் முற்றிலும் நிராயுதபாணியாக்குதல்
 3. சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும், கல்வி கற்பதில் இருந்து முற்றிலும் தடை செய்தல்
 4. சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும்  அதிகாரமும் தனிச்செல்வாக்கும் உள்ள பதவிகளை அடையவிடாமல் தடை செய்தல்
 5. சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் சொத்து சேர்ப்பதற்குத் தடை செய்தல்
 6. பெண்களை முற்றிலும் அடிமைப்படுத்தி ஒடுக்குதல்.

அம்பேத்கர் எழுதுகிறார். ‘தீண்டாமையின் வேர், சாதி அமைப்பாகும். சாதியமைப்பின் வேர், வருணத்துடனும் ஆசிரமத்துடனும் இணைக்கப்பட்டுள்ள மதம் ஆகும். வருணாசிரமத்தின் வேர் பார்ப்பனிய மதம் ஆகும். பார்ப்பனிய மதத்தின் வேர் அதிகாரத்துவம் அல்லது அரசியல் அதிகாரம்.’

பெரியாரைப் போல் அம்பேத்கர் மதத்தின் தேவையையும் இருப்பையும் முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. சமுதாய நடைமுறைகளுக்கு மதத்தின் அடிப்படைகள் இன்றியமையாதவை என்று அவர் கருதினார். இந்து மதத்தைப் பீடித்துள்ள தீமைகளை அழிக்கவே அவர் விரும்பினார்; இந்துயிசத்தை அல்ல. ‘சமத்துவம், சாதியின்மை என்ற இரண்டு தலையாய கொள்கைகளின் அடிப்படையில் இந்தச் சமூகத்தை மறுபடியும் கட்டியமைக்வேண்டும்.’ என்னும் அவருடைய விருப்பம் நிறைவேறவில்லை. அதனால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்தைத் தழுவினார் அம்பேத்கர். கடவுள் இல்லாத, சாதி இல்லாத, தீண்டாமை இல்லாத பௌத்தம் அவருக்கு உகந்ததாக இருந்தது. ‘ராமர், கிருஷ்ணர், காந்தி ஆகியோரைப் பார்ப்பனிய மதத்தின் திருத் தூதர்கள் என்றும் ஜனநாயகத்தை நிறுவுவதற்கு அவர்கள் பயன்பட மாட்டார்கள் என்றும் புத்தர் மட்டுமே இந்த வகையில் ஏதாவது பயன்படுவார் என்றும் அம்பேத்ககர் கருதினார்’ என்கிறார் குபேர். நீங்களே ஏன் ஒரு மதத்தைத் தொடங்கக்கூடாது என்று ஒரு நெருங்கிய நண்பர் கேட்டபோது அம்பேத்கர் அளித்த பதில் இது. நான் ஒரு மகர். நான் சங்கராச்சாரியார் இல்லை. ஒரு மகர் நிறுவிய மதத்தை யார் பின்பற்றுவார்கள்?

அம்பேத்கர் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

 1. தீண்டப்படாதவர்கள் புத்த மதத்தினர் என்று மெய்ப்பிக்க விரும்பினார்.
 2. புத்தர் தீண்டப்படாதவர்களுக்கு நெருக்கமானவர்.
 3. பௌத்தத்தில் மூடநம்பிக்கைகள் இல்லை. கடுமையான அரசியல் சோதனைகளைத் தாக்குப்பிடிக்கக்கூடிய ஆற்றல் பௌத்தத்துக்கு இருக்கிறது.
 4. தீண்டப்படாதவர்கள் உலக புத்த சமூகத்தோடு சேர்ந்து, உலக சகோதரத்துவத்துக்கான வழியை வகுப்பார்கள்.
 5. பௌத்தம் சமூக விடுதலை, அறிவு சார்ந்த விடுதலை, பொருளியல் விடுதலை, அரசியல் விடுதலை ஆகியவற்றைக் கற்பிக்கிறது.

சாதியத்தின் பிடியில் இருந்து தப்ப இந்து மதத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை அம்பேத்கருக்கு முன்பே கிறிஸ்தவ மிஷினரிகள் முன்வைத்திருக்கிறார்கள். பலர் கிறிஸ்தவ மதத்துக்கு இவ்வாறு மதம் மாறியிருக்கிறார்கள். 1876 மற்றும் 1879ல் ஏற்பட்ட பஞ்சங்களின் போது மகாராஷ்டிராவில் பெருமளவில் மகர்கள் கிறிஸ்தவத்துக்கு மாறினார்கள். நிராதரவாக அவர்கள் நின்றபோது அப்போது அவர்களுக்குக் கைகொடுத்தவர்கள் மிஷினரிகள்தாம் என்பதால் மதமாற்றம் சுலபமாயிற்று. அம்பேத்கர் அத்தகைய காரணங்களை முன்வைக்கவில்லை. மிகத் தெளிவாக இந்து மதத்தின் போதாமைகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி மதமாற்றத்துக்கு அறைகூவல் விடுத்தார்.

மதமாற்றம் குறித்து முதல் முதலில் அம்பேத்கர் 1927ல் உரையாடினார் என்கிறார் ஜேஃப்ரிலோட். சமத்துவத்தை அடைய தேவை ஏற்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறவும் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவ்வாறு நிகழ்ந்தால் கோயில் நுழைவு குறித்து கவலைப்படவேண்டிய அவசியமெல்லாம் ஏற்படாது என்றும் அப்போது அம்பேத்கர் குறிப்பிட்டார். அதே ஆண்டு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் (ஜல்கோன் டிப்ரஸ்ட் கிளாஸ் கான்ஃபரன்ஸ்) அம்பேத்கர் தலைமை தாங்கியபோது, இதையே அவர் குறிப்பிட்டார். அதற்குச் சில தினங்கள் கழித்து 12 மகர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாறினார்கள். இதனால் கோபமும் வெறுப்பும் அடைந்த பிற்போக்கு இந்துக்கள், இத்தகைய மதமாற்றம்  ஒரு போராட்ட அலையாக மாறிவிடக்கூடாது என்னும் அச்சத்தில் கொஞ்சம் தங்கள் பிடியைத் தளர்த்திக்கொண்டார்கள். சில கிணறுகளில் தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, 1930களில் அம்பேத்கர் மதமாற்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

புலே, பெரியார் இருவரும் செய்ய தவறியதை அம்பேத்கர் வெற்றிகரமாகச் செய்துமுடித்தார் என்கிறார் கெயில் ஓம்வெட். இந்து என்னும் கருத்தாக்கத்துக்கு எதிராக, நான் இந்து அல்ல என்னும் கருத்தாக்கத்தை பௌத்தத்துக்கு மதம் மாறிய ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள் என்கிறார் ஓம்வெட். மகர் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் என்னும் அடையாளம் மாறி ஒரு வித பெருமித உணர்வு தழைத்தோங்கத் தொடங்கியது. தங்களை மண்ணின் மைந்தர்களாக அவர்கள் காணத் தொடங்கினார்கள் என்கிறார் ஓம்வெட்.

ஆனால் இந்த உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுவிடவில்லை; இடத்துக்கு இடம் மாறுபட்டது என்று சுட்டிக் காட்டுகிறார் ஜேஃப்ரிலோட். மகாராஷ்டிராவில் பௌத்தத்தைத் தழுவியர்களுக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை என்பதையும் சாதியின் பிடியில் இருந்து அவர்களால் முழுமையாகத் தப்ப முடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘அவர்களுடைய பெயர்கள் மாறின. மராத்தியில் பௌத்தா என்று அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டனர். ஆனால் ஒரு புதிய பொதுவான அடையாளத்தை உருவாக்குவதில் இத்தகைய மாற்றங்கள் பெரிய அளவில் உதவவில்லை.’

அதற்காக மதமாற்றத்தால் நன்மையே ஏற்படவில்லை என்றும் சொல்லிவிடமுடியாது. சாத்திரங்களின்படி அவர்கள் அதுவரை செய்து வந்த சில விஷயங்களை இனி அவர்கள் செய்யவேண்டியதில்லை என்றானது. உதாரணத்துக்கு, இந்துவாக இருந்தவரை உயர் சாதி இந்துக்களின் சடங்குகளில் கலந்துகொள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இப்போது அவர்கள் பௌத்தர்கள் என்பதால் அந்தச் சடங்குகளில் கலந்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லாது போனது. ஆகவே நாம் விலக்கிவைக்கப்பட்டவர்கள் என்னும் நிலை மாறி, ‘இனி அவர்களுடைய சடங்குகளை நாம் ஒதுக்கிவைப்போம்’ என்னும் உணர்வு மேலேழும்பத் தொடங்கியது.

மிக முக்கியமாக, மதமாற்றத்துக்குப் பிறகு தீண்டப்படாதவர்கள் கல்வி கற்கத் தொடங்கினார்கள். 1964-65ல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுக்கின்படி புனேயில் 16 முதல் 22 வயது வரையிலான இளைஞர்கள் மதமாற்றத்துக்குப் பிறகு கல்லூரி படிப்பை முடித்து, அதன்மூலம் தங்கள் நிலையை உயர்த்திக்கொண்டது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு தங்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கண்டுவந்த இவர்கள் கல்லூரி படிப்புக்குப் பிறகு தங்கள் அடையாளம் மாறியிருப்பதை உணர்ந்துகொண்டனர். அவர்கள் மட்டுமல்ல,  உள்ளூர் பிராமணர்கள், பௌத்தத்தைத் தழுவாத மகர்கள்கூட அவர்களை மதிக்கத் தொடங்கினர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்  ஜேஃப்ரிலோட். முப்பதாண்டுகளுக்குப் பிறகு அதே நகரில் மற்றொரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பௌத்த மகர்களின் நிலை பெருமளவில் உயர்ந்திருப்பது தெரியவந்தது. எடுத்துக்காட்டாக, கல்லாதவர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதத்தைத் தாண்டவில்லை. அவர்களுடைய பெற்றோர்களை எடுத்துக்கொண்டால் 79 சதவிகிதம் பேர் கல்வி கற்றிருக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சமர்களிடையிலும் இத்தகைய ஆரோக்கியமான மாற்றங்களைக் காணமுடிந்தது.

இருந்தும், சாதியின் பிடியில் இருந்து விலகுவதற்கு மதமாற்றம்தான் ஒரே வழியா என்னும் கேள்விக்கு அறுதியிட்டு விடைசொல்லமுடியாது. இது சிலருக்குப் பயன்பட்டிருக்கிறது என்று மட்டுமே சொல்லமுடியும். பௌத்தத்தைத் தழுவிய லட்சக்கணக்கான தலித் மக்களுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து மன ரீதியில் விடுதலை கிடைத்தது என்றாலும் சமூக விடுதலை சாத்தியப்படவில்லை. அம்பேத்கர் கருதியது போல் பௌத்தம் இவர்களுக்கு ஒரு புதிய அடையாளத்தையும் புதிய பாதையையும் அளித்துவிடவில்லை. மகாராஷ்டிராவை மட்டுமே எடுத்துக்கொண்டாலும்கூட மகர்களுக்கும் மாங்குகளுக்கும் சம்பர்களுக்கும் இடையிலான பிளவுகள் மறையவில்லை.

தனி மனிதன் ஒருவனுக்கு மதம் மட்டும் முக்கியமாக இருக்கலாம், ஆனால் அரசுக்கு அது தேவைப்படாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். இந்து சட்டத் தொகுப்பு வரைவு பற்றி 1951ல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் கலந்துகொண்ட அம்பேத்கர் மதச்சார்பின்மையின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். எந்தக் குறிப்பிட்ட மதமும் அந்த மதம் சாராத பிறரின்மீது திணிக்கப்படக்கூடாது என்பது அம்பேத்கரின் கருத்து. டபிள்யு.என். குபேர் எழுதுகிறார். ‘அரசோ அல்லது சில மத சமூகமோ, பிறரை மதத்தின் பெயரால் கட்டாயப்படுத்துவதை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை. அம்பேத்கரின் சமூக, அரசியல் வாழ்க்கைத் திட்டத்தில், அரசின் வலியுறுத்தல் குறிப்பாக மத விவகாரங்களில் கட்டாயப்படுத்துதல் சிறிதளவுகூட விரும்பத்தக்கது அல்ல.’

மதம் பற்றிய அம்பேத்கரின் பார்வையின்படி அவரை ஒரு சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி என்று மதிப்பிடமுடியும். பிற்படுத்தப்பட்ட மக்களைப் பிணைத்திருந்த சாதிச் சங்கிலிகளை அகற்றுவதற்கும் அவர்கள் சமூக மற்றும் பொருளாதார விடுதலை பெறுவதற்கும் அம்பேத்கர் மெய்யான அக்கறையுடன் போராடினார். இந்து மதத்தின் குறைபாடுகளையும் கொடும் குற்றங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததன்மூலம் அவர் ஒரு புரட்சியாளராக உருபெறுகிறார். இந்த இடத்தில் அம்பேத்கரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் பிரகாசிக்கிறது. அரசியல் களத்தில் சாதி மற்றும் மதத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அம்பேத்கர் நமக்கு அதிகம் தேவைப்படுவது இங்கேதான்.

(அடுத்த பகுதி : அம்பேத்கர் : நீலமும் சிகப்பும்)

அம்பேத்கர் : தீண்டாமையும் அடிமைமுறையும்

Young_Ambedkarபுரட்சி / அத்தியாயம் 20

சாதி ஆதிக்கத்துக்கும் தீண்டாமைக்கும் எதிராக அம்பேத்கர் தொடுத்த போரின் முக்கியத்துவத்தை உணரவேண்டுமானால் அவரது சிந்தனைகளும் ஆளுமையும் வளர்ந்த பின்னணியை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

அம்பேத்கர்மீது தாக்கம் செலுத்திய முதல் பெரும் சக்தி, பௌத்தம். சமத்துவம், நீதி, அகிம்சை, உண்மை ஆகியவற்றை அம்பேத்கர் உயர்த்திப் பிடித்தற்கு பௌத்தத்தின்மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடே காரணமாக இருந்தது. புத்தரைத் தனது முதல் குரு என்றும் கபீரை இரண்டாவது குரு என்றும் அவர் அழைத்தார். இன்னோரிடத்தில், சிந்தனையளவில் தன்னை முதலில் பாதித்தவர் ஜோதிராவ் புலே என்று அம்பேகர் குறிப்பிட்டிருக்கிறார். சமூகநீதிக்கான போராட்டத்தை நடைமுறையில் எப்படி நடத்தவேண்டும் என்பதை அவர் புலேயிடம் இருந்தே கற்றிருக்கவேண்டும். சூத்திரர்கள் யார் என்னும் நூலை, ‘நவீன இந்தியாவின் மிகப் பெரிய சூத்திர்’ மற்றும் ‘அடித்தட்டில் இருந்த இந்துக்களுக்கு அவர்களுடைய அடிமைத்தனத்தைப் புரியவைத்தவருமான’ புலேவுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார் அம்பேத்கர். அந்நிய நாட்டிடம் இருந்து விடுதலை பெறுவதைக் காட்டிலும், சமூக ஜனநாயகம் முக்கியம் என்னும் கருத்தை அம்பேத்கர் புலேயிடம் இருந்தே பெற்றுக்கொண்டார்.

தீண்டத்தகாதோர் யார், அவர்கள் ஏன் அந்நிலையை அடைந்தார்கள்? என்னும் நூலை நந்தனார், ரவிதாஸ், சொக்கமேலா ஆகியோருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார் அம்பேத்கர். அவர்கள், ‘தீண்டப்படாதவர்களாகப் பிறந்திருந்தும் தங்கள் பண்பால் அனைவருடைய மரியாதையையும் பெற்றவர்கள்.’

அமெரிக்கா அம்பேத்கர்மீது செலுத்திய தாக்கம் முக்கியமானது. 1913 முதல் 1917 வரை அம்பேத்கர் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றார். அதற்குக் காரணமாக இருந்தவர் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் கெய்க்வாட். பத்தாண்டுகள் பரோடாவில் பணியாற்றுவேன் என்று உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து அம்பேத்கரின் பயணம் மற்றும் படிப்புச் செலவை சாயாஜி ராவ் ஏற்றுக்கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு ஒரு புதிய தரிசத்தைக் கொடுத்தது என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள தனஞ்செய் கீர். சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அருமையை அம்பேத்கர் அங்கேதான் தெரிந்துகொண்டார் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தனது எம்.ஏ., பிஹெச்டி பட்டங்களை அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்டார்.

மேற்கத்திய கலாசாரம் அம்பேத்கர்மீது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தைச் செலுத்தியதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி அவசியம் என்பதை அம்பேத்கர் மேற்கு உலகிடம் இருந்தே உணர்ந்துகொண்டார் என்கிறார்கள். இந்தியாவில் எத்தகைய மாற்றங்கள் தேவை, சமூகச் சீர்திருத்தங்கள் எந்த வழியில் செய்யப்படவேண்டும் போன்றவற்றைக் குறித்து அம்பேத்கர் சிந்திக்கத் தொடங்கியதும் இந்தத் தாக்கத்தின் தொடர்ச்சியாகத்தான். அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டமும், குறிப்பாக 14வது சட்டத் திருத்தமும் அம்பேத்கரின் கவனத்தைக் கவர்ந்தது. அம்பேத்கர்மீது அமெரிக்கா செலத்திய முதல் பெரும் தாக்கம் இந்தச் சட்டத்திருத்தமே என்கிறார் தனஞ்செய் கீர்.

அடிமைத்தனத்தை முன்வைத்து 1860ல் அமெரிக்காவில் நடைபெற்ற சிவில் யுத்தத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார் அம்பேத்கர். 1861 தொடங்கி 1865 வரை நடைபெற்ற இந்தப் போரில் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் (யூனியன்) தென் மாநிலங்களும் கலந்துகொண்டன. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அடிமைமுறை நிலவிவந்ததோடு அது விரிவாக்கமும் பெற்று வந்தது. ஆபிரகாம் லிங்கன் யூனியனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், ஏழு தென் மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதாக அறிவித்தன.  ‘யூனியனைக் காப்பாற்ற ரிபப்ளிகன் போரிட்டது. இந்தப் போரில் நீக்ரோக்களின் உதவியையும் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். போர் முடிவில் 13வது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நீக்ரோக்கள் அடிமைகள் அல்ல என்பது சட்டப்பபடி உறுதி செய்யப்பட்டது. ஆனால், இதனால் நீக்ரோக்களால் அரசாங்கத்தின் பங்கேற்கமுடிந்ததா? வாக்காளர்கள் ஆக முடிந்ததா?’

கறுப்பினத்தவரைச் சமமாகப் பாவிக்கவேண்டும் என்று தெற்குப் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன என்றாலும் நடைமுறையில் அவ்வாறு நிகழவில்லை. 14வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு கறுப்பினத்தவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் இதுவும்கூட சட்டப்படியான ஒரு நடவடிக்கை மட்டுமே. இதன் தாக்கத்தை நடைமுறையில் காணமுடியவில்லை.

அதைவிட மோசம், வெள்ளை இனவெறி கொண்ட கூ கிளாஸ் கான் என்னும் ரகசிய அமைப்பு உருபெற்று எழுவதையும் கறுப்பினத்தவர்கள் தாக்கப்படுவதையும் அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதையும் அம்பேத்கர் கண்டார். சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் ஆகியவை மட்டும் போதாது; அரசியல், சமூக மாற்றங்கள் நிகழவேண்டுமானால் முதலில் மன மாற்றம் நிகழவேண்டும் என்பதை அம்பேத்கர் புரிந்துகொண்டார்.

இதையே நோக்கமாகக் கொண்டு லிபரேட்டர் என்றும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்த வில்லியம் காரிசன் என்னும் அமெரிக்கரால் அம்பேத்கர் ஈர்க்கப்பட்டார். நீக்ரோக்கள் விடுதலைப் பெறவேண்டிய அவசியத்தைப் பிரசாரம் செய்து மன மாற்றத்தை ஏற்பட முனைந்தது இந்தப் பத்திரிகை.  காரிசனின் அணுகுமுறையால் கவரப்பட்ட அம்பேத்கரும் தன் பங்குக்கு பஹிஷ்க்ரித் பாரத், மூக் நாயக், ஜனதா ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கினார்.

எட்மண்ட் பர்க், ஜான் ஸ்டூவர்ட் மில், வால்டேர் ஆகியோரின் தாக்கமும் அம்பேத்கரிடம் காணப்பட்டது. 1789 பிரெஞ்சுப் புரட்சியால் அம்பேத்கர் உத்வேகம் கொண்டார். அதே சமயம், மனித குலத்தின் மூன்று அடிப்படை உரிமைகளை முன்வைத்துப் போராடிய முதல் பெரும் இயக்கம் என்று மற்றவர்கள் போல் பிரெஞ்சுப் புரட்சியை அம்பேத்கர் மதிப்பிடவில்லை. மாறாக, புத்தரின் முக்கியத்துவத்தை பிரெஞ்சுப் புரட்சி உறுதிசெய்திருப்பதாகவே அவர் எடுத்துக்கொண்டார்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் தீண்டப்படாதவர்களையும் அம்பேத்கர் நேரடியாக ஒப்பீடு செய்ததில்லை என்கிறார் எலியோனர் ஜீலியட். ‘ஆனால் அமெரிக்க கலாசார முறையைக் கொண்டு இந்திய கலாசார முறையை அவர் ஒப்பிட்டார்.’ அதே போல், அடிமை முறையையும் தீண்டாமையையும் அம்பேத்கர் ஒப்பிட்டிருக்கிறார். இரண்டுமே மனிதத்தன்மையற்றது. இரண்டுமே பாதிக்கப்பட்டவர்களிடையே பெரும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் இரண்டுக்கும் சில வேறுபாடுகளும் உள்ளன. ‘ஒரு முறை அடிமையாக்கப்பட்டவன் எப்போதும் அடிமையாகவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தீண்டாமையைப் பொருத்தவரை அதிலிருந்து விடுதலை இல்லை. தீண்டப்படாதவன் இறுதிவரை தீண்டப்படாதவனாக நீடிக்கிறான்.’

மற்றொரு முக்கிய வேறுபாட்டை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ‘அடிமைமுறையில் ஒரு மனிதனின் சுதந்தரம் அவன் கண்முன்னால் பறிக்கப்படுகிறது. இதனால் தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை ஓர் அடிமை உணர்கிறான்… ஆனால் மறைமுகமாகச் சுதந்தரம் பறிக்கப்படும்போது, தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்னும் உணர்வே அவனுக்கு இருப்பதில்லை. அதனால் தீண்டாமை என்பது மறைமுக அடிமைமுறை.’ தான் அடிமை என்பதை உணர்வதே அடிமைத்தனத்தில் இருந்து மீள்வதற்கான முதல் படி. ஓர் அடிமைக்கு இந்த உணர்தல் சாத்தியமாகிறது. ஆனால், தீண்டப்படாதவர்களுக்கு இது சாத்தியப்படுவதில்லை என்றார் அம்பேத்கர்.

தான் தீண்டப்படாத பிரிவைச் சேர்ந்தவன் என்பதை அம்பேத்கர் தனது ஒன்பதாவது வயதில் உணர்ந்தார். சதாராவில் இருந்து தன் தந்தையைக் காண மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு உணவு கொடுக்க யாரும் முன்வரவில்லை. குடிக்க நீர், ஒதுங்குவதற்கு இடம் எதுவும் கிடைக்கவில்லை. பிற மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து படிப்பது தவறு என்பதையும் தம்முடைய துணிகளை யாரும் துவைத்துத் தரமாட்டார்கள் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். படித்து முடித்து இந்தியா திரும்பி பரோடாவில் பணியாற்றச் சென்றபோது அவரை வரவேற்க யாரும் ரயில் நிலையத்துக்கு வரவில்லை. மிகுந்த சிரமப்பட்டு ஒரு பார்ஸியின் விடுதியில் தங்க இடம் கிடைத்தது. ஆனால் அவரும்கூட ஒரு நாள் உண்மையறிந்து அவரை விரட்டியடித்துவிட்டார். 1934ல் தவுலத்பாத் எனுமிடத்தில் அம்பேத்கரும் அவருடைய நண்பர்களும் அருகிலிருந்த ஒரு குளத்தில் முகம், கை, கால் கழுவிக்கொண்டபோது அருகிலிருந்த இஸ்லாமியர்கள் அவர்களைத் துரத்தியடித்தனர்.  இத்தகைய அனுபவங்கள் அம்பேத்கருக்கு உணர்த்திய பாடம் ஒன்றுதான். தீண்டப்படாதவன் என்று இந்து மதம் ஒதுக்கிய ஒருவனை பிற மதத்தினரும்கூட ஒதுக்கியே வைக்கிறார்கள். தீண்டாமை என்பது நிரந்தரமானது, அழிவில்லாதது.

தீண்டாமை ஒழிக்கப்படவேண்டியதே என்று பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தீண்டாமை முறையைத் தோற்றுவித்து, அதற்குப் பலம் கொடுத்து, வாழவைத்துக்கொண்டிருக்கும் அடித்தளத்தைப் பற்றி நேர்மையாக மனம் திறந்து உரையாடவும் தீர்வு காணவும் அவர்கள் தயங்குவார்கள். மூன்று சாத்தியங்களை அம்பேத்கர் முன்வைக்கிறார். முதல் வழி, இந்து மதத்தின் நல்ல நம்பிக்கைகள் மற்றும் நெறிகள் பக்கம் மக்களைத் திருப்புவது. தீண்டப்படாõதவர்களை நேசியுங்கள், உங்களில் ஒருவராகக் கருதுங்கள் என்று எடுத்துச் சொல்லும் முறை இது.

இரண்டாவது, இந்துக்களின் புரிதல்களை நெறிப்படுத்தி, தீண்டாமையை ஊக்குவிக்கும் மத வழக்கத்தைவிட்டு விலகுமாறு அவர்களை அறிவுறுத்துவது. அதாவது, சாதியத்தையும் தீண்டாமையையும் ஆதரிக்கும் சாத்திரங்களையும், அவற்றை முன்மொழிபவர்களையும், சாதுக்களையும் எதிர்ப்பது. மூன்றாவது, சாதியை ஒழிப்பது. சாதியத்தை முற்றிலுமாகக் கைவிடுங்கள் என்று கேட்டுக்கொள்வது.

இந்த மூன்றில் முதலிரண்டு வழிகள் சுலபமானவை, மூன்றாவது வழி கடினமானது என்கிறார் அம்பேத்கர். இந்துக்கள் புனிதமாகக் கருதும் ஒரு சமூக ஒழுங்கைத் தாக்கியழிப்பது உண்மையிலேயே கடினமானது. வேதங்களையும் சாத்திரங்களையும் அழித்தொழிப்பது சாதாரண காரியமல்ல. என்னைப் பொருத்தவரை இது சாத்தியமில்லாதது என்கிறார் அம்பேத்கர். சமூக மாற்றத்தைப் பிராமணர்கள் விரும்ப மாட்டார்கள். காரணம், சாதியமுறை ஒழிக்கப்பட்டுவிட்டால் பிராமணர்களை அது பாதிக்கும். தங்கள் நலனுக்கு எதிரான ஒரு விஷயத்தில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

எல்லாப் பிராமணர்களும் ஒன்றுபோல் இருக்கமாட்டார்களே; மதச்சார்பற்ற பிராமணர்கள் இருப்பார்கள் அல்லவா? சமூக மாற்றத்துக்கு அவர்கள் முன்வருவார்கள் அல்லவா? அம்பேத்கர் இந்த வாதத்தை மறுக்கிறார். மதவாத பிராமணர்களுக்கு எதிராக மதச்சார்பற்ற பிராமணர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது என்கிறார் அவர். இவர்கள் இருவரும் நகமும் சதையும் போன்றவர்கள். எப்படி ஒரு கிறிஸ்தவ போப்பால் புரட்சியாளராக மாறமுடியாதோ அவ்வாறே ஒரு புரோகிதராலும் புரட்சியாளர் ஆகிவிடமுடியாது என்கிறார் அம்பேத்கர்.

சாதிமுறையை ஒழிப்பதில் உள்ள இன்னொரு பெரும் சிக்கலை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். சாதிமுறை, முதலில் ‘மனிதர்களை இரண்டு சமூகமாகப் பிரிக்கிறது. இரண்டாவதாக, இந்தப் பிரிவுகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிவைக்கிறது. சமூக மதிப்பைப் பொருத்தவரை, ஒவ்வொரு சாதியும், வேறு சில சாதிகளைக் காட்டிலும் தாம் மேலானவர்கள் என்று நினைத்து பெருமையும் ஆறுதலும் கொள்கிறது.’ இதனால் சாதிமுறையை எதிர்ப்பதற்கு ‘ஒன்றுபட்ட ஒரு தளம்’ கிடைப்பதில்லை.

சாதி அமைப்பு என்பது கத்தி முனையில் வைத்துப் பராமரிக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடு என்று மதிப்பிடுகிறார் அம்பேத்கர். சாதி அமைப்பு ஏன் நீடித்து நிற்கிறது?  ‘ஆயுதங்களை ஏந்துவதிலிருந்து மக்கள் தடுக்கப்பட்டிருப்பதாலும், கல்வி கற்கும் உரிமையை மக்களுக்கு மறுத்திருப்பதாலும் சொத்துரிமையை அடைவதில் இருந்து மக்கள் தடுக்கப்பட்டிருப்பதாலும் சாதியமைப்பு நீடித்து நிற்கிறது. எனவே, சாதி அமைப்பு இயற்கைக்கு அப்பாற்பட்டதற்கான காரணம், அதை ஆளும் வர்க்கங்கள் அடிமை வர்க்கங்களின் மீது திணித்ததே ஆகும்.’ என்று அம்பேத்கர் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறார் டபிள்யு.என். குபேர்.

சாதி அமைப்பு ஒருவருடைய பிறப்பின் அடிப்படையில் அவருக்குச் சில கடமைகளை வழங்குவதை அம்பேத்கர் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறார். சாதி என்பது சமூக அமைப்பு மட்டுமல்ல, பொருளியல் அமைப்பும்கூட. ‘இது தீங்கு செய்யும் ஒரு நிறுவனமாகும்… மனிதனின் இயல்பான திறமைகளையும் விருப்பங்களையும் சமூக விதிகளின் உடனடித் தேவைகளுக்குக் கீழ்படியச் செய்யக் கூடியதாகச் சாதி அமைந்து உள்ளது. சாதியால் பொருளியல் திறமை உண்டாவதில்லை. அது இனத்தை மேம்படுத்தாது. இது இந்துக்களை முற்றிலும் அமைப்புச் சிதைவுக்கும் ஒழுக்கச் சிதைவுக்கும் உள்ளாக்கியது.’ (சாதி ஒழிப்பு). இனத் தூய்மை, ரத்தத் தூய்மை போன்ற வாதங்களை எதிர்கொள்ளும் அம்பேத்கர், உலகம் முழுவதிலும் எல்லா இனங்களும் கலந்தே உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார்.

சாதி வேண்டாம், நாம் இந்துக்களாக இருப்போம் என்போரின் முழக்கங்களில் உள்ள முரண்பாடுகளை அம்பேத்கர் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இந்து உணர்வு என்று எதுவுமில்லை, ஒவ்வொரு இந்துவிடமும் இருப்பது சாதி உணர்வே என்கிறார் அவர். முகமதியர் படையெடுப்புக்கு முன்பு இந்து என்னும் சொல் இருந்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அவரைப் பொருத்தவரை இந்துக்கள், பல சாதிகளின் தொகுப்பு. மட்டுமின்றி, தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்ற, தன்னல நோக்கம் கொண்ட குழுக்கள். சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது இந்து மதத்தில் சாத்தியமில்லாதது என்றும் அறிவித்தார் அம்பேத்கர்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தாக்கத்துக்கு எதிராக இந்து மதமும் சாதியமும் செயல்படுவதை அம்பேத்கர் நேரடியாக உணர்ந்தார். அடிப்படையிலேயே முரண்பாடுகள் நிறைந்த இந்து மதத்தில் இருந்து வெளியேற தன் சமூகத்துக்கு அவர் அளித்த ஆலோசனை இன்றளவும் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடியது.

0

அம்பேத்கர் : ‘இந்துக்களின் தோட்டத்தில் ஒரு நச்சுப் பாம்பு!’

ambedkarபுரட்சி /அத்தியாயம் 19

இந்து மதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்னும் விருப்பத்துடன் தொடங்கப்பட்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் தன் வாழ்நாளின் மிகப் பெரும் தவறொன்றை 1936ம் ஆண்டு இழைத்தது. ஆரிய சமாஜத்தின் ஒரு கிளையான இந்த அமைப்பு, லாகூரில் நடக்கவிருந்த கருத்தரங்குக்குத் தலைமை தாங்கும்படி அம்பேத்கரைக் கேட்டுக்கொண்டது. ‘நீங்கள் மாபெரும் சிந்தனையாளர். உங்கள் அளவுக்கு சாதிப் பிரச்னையைப் பற்றி ஆராய்ந்தவர் வேறு யாருமில்லை. சாதி அமைப்பு எந்த மதக் கருத்துகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த மதக் கருத்துகளை அழித்தொழிக்காமல் சாதியை ஒழிப்பது சாத்தியமில்லை என்ற உங்கள் புதுக்கருத்தை விவரமாக  அறிய ஆவலாக உள்ளேன்.’ என்று மண்டலின் செயலாளர் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார்.

தொடக்கத்திலேயே அம்பேத்கர் மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தையும் அவரே பதிவு செய்திருக்கிறார். ‘பொதுவாக சாதி இந்துக்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமூகச் சீர்திருத்தம் பற்றிய அவர்களின் நிலைப்பாட்டுக்கும் என் நிலைப்பாட்டுக்கும் ஒத்துபோவதில்லை. எனவே அவர்களுடன் சேர்ந்து இயங்குவது கடினமாக உள்ளது.’

ஆனால் அம்பேத்கரின் மறுப்பை மண்டல் ஏற்கவில்லை. தனது பிரதிநிதி ஒருவரை மும்பைக்கு அனுப்பி வைத்து அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் மரியாதையுடன் மீண்டுமொருமுறை வரவேற்றார்கள். அம்பேத்கரும் தலைமை தாங்க ஒப்புக்கொண்டார். அவர்களுடைய விருப்பத்துக்கிணங்க தனது தலைமை உரையை அம்பேத்கர் முன்கூட்டியே அவர்களுக்கு அனுப்பிவைக்கவும் செய்தார்.

பிரச்னை ஆரம்பமானது. 22 ஏப்ரல் 1936 அன்று ஜாத்-பட்-தோடக் மண்டலைச் சேர்ந்த ஹர் பகவான் என்பவர் அம்பேத்கருக்கு எழுதினார்.

‘…உங்கள் உரையின் இறுதிப் பகுதி எங்களுக்குக் கிடைத்ததும் அது மிக நீண்டு இருப்பது கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவ்வளவையும் வெகு சிலரே படிக்க முடியும் என்பதே எங்கள் அச்சத்துக்குக் காரணம். மேலும் அதில் நீங்கள், இந்து சமூகத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்துவிட்டதாகவும் ஒரு இந்து என்ற முறையில் அதுவே உங்கள் கடைசி உரையாக இருக்கும் என்றும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேதங்கள் முதலான இந்துக்களின் புனித நூல்களின் அறத் தன்மையையும் அறிவார்ந்த தன்மையையும் அநாவசியமாகத் தாக்கியுள்ளீர்கள். இந்து மதத்தின் சட்டப் பகுதியை விஸ்தாரமாக ஆராய்கிறீர்கள். எடுத்துக்கொண்ட பிரச்னையுடன் இது எவ்வித தொடர்புமற்றது. சில பகுதிகள் முற்றிலும் தலைப்புக்குப் பொருத்தமற்றதாகவும் சம்பந்தமற்றதாகவும் இருக்கிறது…

‘…மேற்சொன்ன பகுதிகளை நீக்கிவிடுங்கள்… அனாவசியமாகத் தூண்டிவிடும் விதமாக உரையை அமைப்பது அறிவுடைமையாகப்படவில்லை.

‘…உரையை முழுசாகத்தான் பதிப்பிக்க முடியும் என்று இன்னமும் நீங்கள் வற்புறுத்தினால் அது சாத்தியப்படாது என்று மிக்க வருத்தத்துடன் கூறுகிறோம்.

‘…சாதியமைப்பைப் பற்றிய உங்கள் உரை இது வரை எழுதப்பட்டவற்றிலேயே மதிப்புமிக்கது, அதை எழுதியதன்மூலம் எங்கள் மனதில் அழியாத இடம்பெற்றுவிட்டீர்கள் என்பதையும் நாங்கள் கூறவேண்டும். இதைத் தயாரிப்பதில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கெல்லாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.’

நான்கு தினங்கள் கழித்து அம்பேத்கர் பதில் அனுப்பினார்.

‘..நானும் என் பதிலைக் கூறியாகவேண்டும். சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி என் உரையைக் கத்தரித்தே ஆகவேண்டுமென மண்டல் வற்புறுத்தினால் நானும் கருத்தரங்கை ரத்து செய்யவே கூறுவேன்.

‘…என் முடிவு உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் தன் உரையைத் தயாரிப்பதற்கு ஒவ்வொரு தலைவருக்கும் உரிமை உண்டு. மாநாட்டில் தலைமை தாங்கும் கௌரவத்துக்காக அந்த உரிமையை விட்டுத்தர என்னால் முடியாது.’

படிக்க கஷ்டமாக இருக்கும் என்று மண்டலால் தீர்ப்பளிக்கப்பட்ட, மாற்றியெழுதுங்கள் என்று அறிவுறுத்தப்பட்ட அந்த நீண்ட உரையை அம்பேத்கர் தானே ஒரு தனி நூலாக வெளியிட்டார். அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞு என்று ஆங்கிலத்திலும் சாதி ஒழிப்பு என்று தமிழிலும் வெளிவந்த அம்பேத்கரின் புகழ்பெற்ற அந்த நூல் குஜராத்தி, தமிழ்,மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் என்று பரவலாக அவர் காலத்திலேயே மொழிபெயர்க்கப்பட்டு கடும் சர்ச்சைகளையும் வரவேற்பையும் ஒருசேர ஈர்த்தன. மண்டல் அமைப்பினரும் அம்பேத்கரும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் இந்நூலின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

மண்டலுக்கு பதிலளிக்கும் ஒரு கடிதத்தில் அம்பேத்கர் ஓரிடத்தில் எழுதுகிறார். ‘சாதியை ஒழிக்க மிகச் சிறந்த வழி என நான் கண்ட முடிவு (உங்களுக்குத்) திகைப்பூட்டுவதாகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கலாம். என் ஆய்வுமுறை தவறானது என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சாதியின் பிரச்னைகளை அலசும் உரையில் சாதியை எப்படி ஒழிக்கமுடியும் என்பது பற்றி வெளிப்படையாக நான் விவாதிக்கக்கூடாது என்று நீங்கள் சொல்லமுடியாது.’

இன்னோரிடத்தில் எழுதுகிறார். ‘நான் இந்துக்களை விமரிசித்து இருக்கிறேன். இந்துக்களால் பூஜிக்கப்படுகிற மகாத்மாவின் மேலாண்மையை மறுத்திருக்கிறேன். இந்துக்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்களுடைய தோட்டத்தில் உள்ள நச்சுப் பாம்பாக என்னை அவர்கள் பார்க்கிறார்கள். அப்படி இருக்க, மரியாதை மிக்க இந்தப் பொறுப்பை ஏற்கும்படி என்னை அழைத்தது ஏன் என்ற அரசியல் அறிவுள்ள இந்துக்கள் கேட்கப்போகும் கேள்விக்கு மண்டல்காரர்கள் விளக்கம் தந்தாக வேண்டும்.’

சாதி அமைப்பின் தோற்றுவாய், வளர்ச்சி, சமூகத்தில் அது செலுத்தும் தாக்கம், அதனால் பெரும் பிரிவு மக்கள் அனுபவிக்கும் தீங்குகள் என்று விரிவாக ஆராயும் அம்பேத்கர்,சாதியின் அடித்தளத்தை நேரடியாகவே தாக்குகிறார்.  ‘உங்களுடைய சமூக அமைப்பை மாற்றினாலொழிய நீங்கள் முன்னேறவே முடியாது என்பதே என் கருத்து. தாக்குதலுக்கோ தற்காப்புக்கோ மக்களை ஒன்று திரட்ட உங்களால் முடியாது. சாதி என்கிற அஸ்திவாரத்தின்மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும். முழுமை அடையாது.’

ஒரு காட்டுச்செடியைப் போல் சுயமாக முட்டி மோதி வளர்ந்து உச்சத்தைத் தொட்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) வாழ்க்கை தேவதைக் கதைகளை ஒருவருக்கு நினைவுபடுத்தக்கூடும். தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதும் இந்த அளவுக்கு தீர்க்கத்துடன் போராடுவதும் சாத்தியம்தானா என்னும் வியப்பையும் அச்சத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர அவரால் பல தரப்பினருக்கு அப்போது ஏற்படுத்தமுடிந்தது. தனது சொந்த அனுபவங்கள் மூலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் ஏற்படுத்திய அதிர்ச்சிகளாலும், விரிவான வாசிப்பின் வாயிலாகவும் அம்பேத்கர் தனது உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
செயற்பாட்டாளர், அரசியல் தலைவர், சமூக விஞ்ஞானி, பொருளாதார அறிஞர், சட்ட வல்லுநர் போன்ற எண்ணற்ற அடையாளங்களைத் தாண்டி அவர் அடிப்படையில் ஓர் அறிவுஜீவியாகவும் திகழ்ந்ததால் எதொன்றையும் நுணுக்கமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் அணுகி ஆராயும் போக்கு அவரிடம் இருந்தது. அவரது படைப்புகளிலும் செயல்பாடுகளிலும் இந்தப் போக்கு இறுதிவரை இடம்பெற்றிருந்தது.

இதனாலும்கூட அம்பேத்கர் பல சமயங்களில் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாத, சுலபமாகத் தொகுத்துக்கொள்ள முடியாத ஒரு சிந்தனையாளராக இருக்கிறார். ஜோதிராவ் புலே, பெரியார் போன்றவர்களிடம் இருந்த எளிமையான, நேரடியான கருத்துப் பரிமாற்ற முறை இவரிடம் இல்லாததற்குக் காரணம் இவர் ஒரே சமயத்தில் பல அறிவுத் துறைகளில் தொடர்ச்சியாக இயங்கி வந்ததும், தனது கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பரிசிலீத்து, மாற்றிவந்ததும்தான்.
தீவிரமாக விமரிசித்து இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்தைத் தழுவிய பிறகும், இந்துத்துவச் சிந்தனையாளர்களால் இன்றும் அம்பேத்கரை தம்மில் ஒருவராக உரிமை கொண்டாட முடிவதன் காரணம் இதுதான். அம்பேத்கரின் படைப்புகளில் இருந்து ஆங்காங்கே சில வாசகங்களை உருவிப்போட்டு அவரை ஓர் இந்து விசுவாசியாக, இஸ்லாமிய எதிர்ப்பாளராக, சந்தைப் பொருளாதார ஆதரவாளராக, மதவாதியாக, முதலாளித்துவ ஆதரவாளராக சிலரால் முன்னிறுத்தமுடிவதும் இதனால்தான்.

அம்பேத்கர் தனது சமூகத்தின் விடுதலைக்காகவும் தனது நிலையில் உள்ள பிற பிரிவினரின் விடுதலைக்காகவும் சிந்தித்தார். தொடக்கத்தில் காந்தி போன்ற சீர்திருத்தவாதிகளாலும், கோயில் நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட அணுகுமுறையாலும் அவர் ஈர்க்கப்பட்டது உண்மைதான். ஆனால், இவை விடிவை அல்ல ஆபத்தையே கொண்டுவரும் என்பதை அவர் விரைவிலேயே புரிந்துகொண்டார். சாதி எப்படி இயங்குகிறது, எங்கே வேர் கொள்கிறது, எப்படித் தன் கிளைகளைப் பரப்புகிறது, எங்கிருந்து பலம் பெறுகிறது, மாறும் சூழலில் எப்படித் தன்னை தகவமைத்துக்கொள்கிறது உள்ளிட்ட அனைத்தையும் அவர் முழுமையாகத் தெரிந்துகொண்டார்.

கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் எப்படி அவர் காலத்துத் தேவைகளை எதிர்கொண்டனவோ அவ்வாறே அம்பேத்கரின் சிந்தனைகளும் அவர் காலத்திய தேவைகளைப் பிரதிபலித்து, அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்தன. ‘உயர்சாதியினர் என்று அழைக்கப்படும் இந்துக்கள் அம்பேத்கரின் சமூகத்துக்கு ஒழுங்கு மீறிய கொடுமைகளை இழைத்தனர். இதனால் அம்பேத்கருக்குக் கடுமையான மன நிறைவின்மை ஏற்பட்டது. இந்த மனநிறைவின்மையில் இருந்துதான் அம்பேத்கரின் சிற்தனை எழுந்தது.’ என்கிறார் அம்பேத்கரிய ஆய்வாளர் டபிள்யூ.என். குபேர்.

மார்க்ஸைப் போலவே சமூகத்தை மாற்ற அம்பேத்கர் முன்மொழிந்த வழிமுறைகளிலும் கற்பனாவாதத் தன்மை இருக்கவில்லை. ‘அம்பேத்கர் ஒரு கற்பனாவாதி அல்லர். ஒரு செயல்முறை கோட்பாட்டாளர். அவர் ஒரு வலிமையான கருத்தியல் கோட்பாட்டைக் கொண்டிருந்தார். ’ என்கிறார் குபேர். இந்தக் கோட்பாட்டோடு முரண்படுபவர்கள் மார்க்ஸைப் புறக்கணித்ததைப் போலவே அம்பேத்கரையும் புறக்கணித்தனர்.

அம்பேத்கர் இந்திய அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் இருந்து எவ்வாறு ஓரங்கட்டப்பட்டார் என்பதை விவரிக்கும்போது கிறிஸ்டோஃபே ஜேஃப்ரிலோட் (Christophe Jaffrelot) தனது நூல் ஒன்றில் அடுக்கிக் காட்டும் சில உண்மைகளைப் பார்ப்போம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்திருந்த போதிலும் 1990ம் ஆண்டு வரை அம்பேத்கரின் உருவப் படம் இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெறவில்லை. அவுரங்காபாத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் கோரிக்கையுடன் 1978ல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்தபோது, அதிர்ச்சியடைந்த மேல்சாதி மாணவர்கள் அவர்கள்மீது வன்முறையைச் செலுத்தினர். ஆயிரம் தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். வி.பி. சிங் ஆட்சியில் 1990ம் ஆண்டுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.

இத்தகைய புறக்கணிப்புகள் உணர்த்தும் தெளிவான ஓர் உண்மை, இன்னமும் இங்கே சாதி வெறி மறையவில்லை; எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயரவில்லை என்பதைத்தான். இன்றைய சமூகத்தில் அம்பேத்ரின் தாக்கத்தையும் தேவையையும் மதிப்பிடும்போது நாம் முதலில் தெரிந்தகொள்ளவேண்டிய உண்மை இதுவே.

(அடுத்த பகுதி : அம்பேத்கர் : சாதி எதிர்ப்பும் அரசியலும்)

புலே வழங்கும் ஆயுதம்

Social Activism by Jyotirao Phuleபுரட்சி/ அத்தியாயம் 18

1851ம் ஆண்டு பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தோற்றுவித்தார் ஜோதிபா புலே. அதற்கு முன்னதாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புனேயில் கிறிஸ்தவ மிஷினரிகள் ஒரு பெண்கள் பள்ளியை நிறுவியிருந்தனர். இதனால் தூண்டப்பட்டே புலேயும் தனது பள்ளியைத் தொடங்கியிருந்தார். புலே, அவர் மனைவி சாவித்திரி புலே இருவரும் அந்தப் பள்ளியைப் பல ஆண்டுகள் நடத்திவந்தனர். பிறகு வேறு ஒரு குழுவிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இரு பள்ளிகள் இதே போல் தொடங்கப்பட்டடன. இது நடந்து ஓராண்டுக்குப் பிறகு மகர்கள், மாங்குகள் உள்ளிட்டவர்களுக்காக மற்றொரு பள்ளியை புலே ஆரம்பித்தார்.மேலும் இரு பள்ளிகளும் சேர்க்கப்பட்டன. ஆனால் இவற்றால் புலே திருப்தியடைந்துவிடவில்லை. பெருமளவிலான பெண்களும் கல்வியறிவற்றவர்களும் இருக்கும்போது ஒன்றிரண்டு பள்ளிகளால் என்ன செய்துவிடமுடியும்?

படிப்பறிவற்றவர்கள் பெருகியிருப்பதற்கு யார் காரணம்? எப்படிப் பள்ளிகளை அதிகரிப்பது? எப்படி அவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிப்பது? இந்தப் பள்ளிகளை யார் நிர்வகிக்கவேண்டும்? எப்படி நிதி ஒதுக்கப்படவேண்டும்? ஆரம்பக் கல்வியா, உயர் கல்வியா எது முக்கியம்? ஆசிரியர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்? புலேயின் தனித்தன்மையும் புரட்சிகரமான அணுகுமுறையும் இந்தக் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்களில் இருந்து வெளிப்படுகின்றன.

‘கல்வி ஆணையத்தின் கவனத்துக்கு ஓர் அறிக்கை’ என்னும் பிரசுரத்தின் தொடக்கத்தில் புலே எழுதுகிறார். ‘விஷயங்களை இந்த அளவு நெருக்கடிக்கு கொண்டு வந்ததற்கு ஓரளவு பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என நியாயபூர்வமாகவே கூறலாம். உயர்படிப்புக்கு தாராள நிதிகளும் ஏராள வசதிகளும் வழங்கி,பொதுமக்களின் கல்வியைப் புறக்கணித்ததில் அவர்களின் உள்நோக்கங்கள் யாதாயினும், இந்த நிலை சரியில்லை என்பதை, பொது மக்களுக்கு நீதிகோரும் யாவரும் ஒத்துக்கொள்ளவே செய்வார்கள். உழவர்களின் உழைப்பில் இருந்தே இந்தியப் பேரரசின் நிதிகளின் பெருமளவு பெறப்படுகிறது. இது யாவரும் ஒத்துக்கொள்ளும் உண்மையாகும். உயர்ந்த, செல்வந்த வகுப்புகள் அரசு கருவூலத்துக்கு எதையும் வழங்குவதில்லை. அல்லது மிகவும் குறைவாக வழங்குகின்றன. விவரமறிந்த ஆங்கில எழுத்தாளர் ஒருவர் எழுதுகிறார் : உபரி லாபத்தில் இருந்து அல்ல முதலில் (மூலதனத்தில்) இருந்தே நம் வருமானம் எடுக்கப்படுகிறது. ஆடம்பரங்களில் இருந்து அல்ல, அதி அத்தியாவசிய தேவைகளிடம் இருந்தே நம் வருமானம் பிடுங்கப்படுகிறது. பாவத்தின் கண்ணீரின் விளைவே அது.

‘இவ்வாறு பெறப்படும் நிதியின் பெருமளவு உயர் வர்க்கங்களின் கல்விக்குத் தாராளமாக அரசாங்கம் செலவிடுகிறது. அத்துடன் இந்த வர்க்கங்களே அதனை அனுகூலமாக்கிக் கொள்கின்றன. இது எவ்வகையிலும் நீதியோ நியாயமோ அல்ல. எல்லா வகையிலும் மேல்வகுப்பையே பேணுவதுதான் அவர்கள் நோக்கம்.’

மேல்சாதி வர்க்கங்களுக்கு மட்டுமே கல்வி என்னும் இந்தக் கொள்கையின் காரணமாக 20 கோடி மக்கள் புறக்கணிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? இதன் தொடர்ச்சியாக இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறார் புலே. மேல் சாதியினரையும் பணக்காரர்களையும் படிக்க வைத்தன்மூலம் இந்த தேசம் சாதித்தது என்ன? சகமனிதர்களின் துயரைத் துடைக்க அவர்கள் செய்தது என்ன?

இதன் பலனை முழுக்க அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள்தாம் என்கிறார் புலே. உயர் கல்வி படித்த பதவிகளில் அவர்களே அமர்ந்துகொண்டனர். ‘குடியானர்களின் நலன் இதயத்தில் இருந்தால், துஷ்பிரயோகங்கள் மலிவதை தடுப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை என்றால், அது ஒரு நாளும் இந்த ஏகபோகத்தை குறுக்கிவர கடமைப்பட்டிருக்கிறது. அப்போதுதான் பொதுப்பணித்துறைகளில் மற்ற சாதியினரிலும் ஒரு பகுதியினரை அனுமதிக்கமுடியும்.’
ஆரம்பக் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்குமாறு செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறார் புலே. தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி என்பது உபகாரம் அல்ல, அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் கல்விக்காக அனைவரிடமிருந்தும் வரி வசூலிக்கிறது என்பதால் கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் பொதுவாக அளிக்கப்படுவதே நியாயமானதாகும். பத்தில் ஒன்பது பங்கு கிராமம் நிறைந்திருக்கும் ஓரிடத்தில் கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு பல லட்சம் குழந்தைகள் அவதிப்படுவதை அரசு எவ்வாறு புறந்தள்ளமுடியும்? படித்த வகுப்பினரையே என்றென்றும் சார்ந்திருக்கும்படி தாழ்த்தப்பட்ட மக்கள் நீடிக்கவேண்டிய அவசியம் என்ன?

வறுமை எவ்வாறு கல்வி கற்கும் வழக்கத்தை ஒதுக்கி வைக்கிறது என்பதை புலே அதே பிரசுரத்தில் விவரிக்கிறார். விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் ‘பொதுவாக கல்வியை நாடுவதில்லை என்பது விதியாக இருக்கிறது. அவர்களின் குழந்தைகள் ஒரு சிலர் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் காணப்படுகிறார்கள். ஆனால் வறுமை முதலான காரணங்களால் அவர்களால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியவில்லை. இவர்கள் தொடர்ந்து படிக்க எந்த சிறப்புத் தூண்டுதல்களும் இல்லை. எனவே இயல்பாகவே ஏதாவது உடலுழைப்பு அல்லது அதைப்போன்ற வேலை கிடைத்ததும் அவர்கள் நின்றுவிடுகிறார்கள். கிராமங்களிலும் பெரும்பான்மை விவசாய வகுப்புகள் தம் அதீத வறுமை காரணமாகவும், கால்நடை மேய்க்கவும் கழனிகளைக் கவனிக்கவும் தமக்கு குழந்தைகள் தேவைப்படுவதாலும் ஒதுங்கியே உள்ளன.’

எனில், என்ன செய்யவேண்டும்? பள்ளிக்கூடங்களை அதிகரித்தால் போதாது என்கிறார் புலே. ‘உதவித் தொகைகள், அரையாண்டு அல்லது ஆண்டுப் பரிசுத் தொகைகள் முதலிய வடிவில் சிறப்புத் தூண்டுதல்கள்,சலுகைகள் மிகவும் அவசியம். அப்போதுதான் அவர்கள் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஊக்கம் பெறுவர். அதன்மூலம் குழந்தைகளின் படிப்பிலும் ஓர் ஆர்வத்தை உருவாக்கமுடியும். என் கருத்து என்னவென்றால், குறிப்பிட்ட வயது வரை, குறைந்தது 12 வயது வரையாவது பொதுமக்கள் ஆரம்பக்கல்வி பெறுவதை கட்டாயமாக்கவேண்டும்.’ புலே அவர் வாழ்ந்த காலத்தில் இப்படியொரு யோசனையை முன்வைத்தது வியப்பளிக்கக்கூடியது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக இன்றும் முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அளித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதுதான். புலே இதனை மறுக்கிறார். கடுமையான ஏற்றத்தாழ்வுகள் நிலவும் ஒரு சமுதாயத்தில் அந்த ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தைக் கண்டறிந்து போக்காமல் சமமான வாய்ப்புகள் வழங்குவதால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு யாதொரு பயனும் இல்லை என்பது புலேயின் நிலைப்பாடு.

‘இன்றைய கல்வி நிலையில் ஏழைகளும் படிப்பறிவற்றவர்களுமான மக்கள் மத்தியில் கல்வியை ஊக்குவிக்க அவர்களின் திறமையைப் பொறுத்து சலுகை அளிப்பது என்பது பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் கல்வி மீதான சுவையை, ஆர்வத்தை இன்னும் அவர்களுக்கு உருவாக்கவே இல்லை.’ இத்தகைய சிறப்பு சலுகைகளை ஓயாது அவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. ‘அவர்களிடம் ஆர்வத்தை உருவாக்கிவிடும் வரைக்கும் மேலே சொன்னது போல அரசாங்கப் பள்ளிகளும் சிறப்புச் சலுகைகளும் அத்தியாவசியம்’ என்று மட்டுமே வலியுறுத்துகிறார்.

இந்து மதத்தில் மட்டுமல்ல இஸ்லாமியர்களும்கூட  கல்வியறிவு இல்லாததால் பின்தங்கியுள்ளதை புலே ஆதாரங்களுடன் எடுத்துக்கூறுகிறார். மேல்சாதிக் குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகளுக்கு  அருகில் அமர்ந்து படிக்க மறுப்பதையும் முஸ்லிம்களுக்கென்று தனிப்பள்ளிகள் இல்லாததையும் புலே வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

ஆரம்பப் பள்ளிகளில் பார்ப்பனர்களே ஆசிரியர் பணியில் அமர்ந்திருப்பதை புலே விமரிசிக்கிறார். விவசாயப் பின்னணி கொண்டவர்கள் ஆசிரியர்களாகும்போது  அவர்களால்  தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் சுலபமாக ஒன்றிணையமுடியும், அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்ளமுடியும், அவர்கள் வளர்ந்து என்ன செய்யவேண்டும் என்பதையும் போதிக்கமுடியும். தவிரவும், ‘தேவைப்பட்டால் ஏர் பிடிக்கவோ தச்சரின் உளியைப் பிடிக்கவோ அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.’ ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய சம்பளம் உயர்த்தப்படவேண்டும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பவர்களுக்கு கூடுதல் சன்மானம் வழங்கப்படவேண்டும் என்றும் புலே கேட்டுக்கொண்டார்.

எப்படிப்பட்ட பாடங்கள் மாணவர்களுக்குப் போதிக்கப்படவேண்டும் என்பது குறித்தும் புலே சில கருத்துகள் கொண்டிருந்தார்.  ‘எண், எழுத்து இரண்டையும் எழுதப் படிக்க பழகவேண்டும். கணக்கு, பொது வரலாறு, பொது புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்கநிலை அறிவு. விவசாயத்தில் தொடக்கநிலை அறிவு. சுகாதாரம் மற்றும் நீதிநெறிகளில் சில பாடங்கள்.’ சிற்றூர்களில் போதிக்கப்படும் பாடங்கள் நகரப் பள்ளிகளைவிட குறைவாக இருக்கவேண்டும்.குறைவு என்பது பாடத்தின் அளவில்தானே ஒழிய தரத்தில் அல்ல.
புலே முன்வைக்கும் மேலும் சில யோசனைகள். தகுந்த ஆய்வாளர்களால் பள்ளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும், இதனை வெறுமனே சடங்கு போல் செய்யக்கூடாது. உள்ளூர் வரித் தொகையின் சரி பாதியை ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கவேண்டும். எல்லா நகராட்சிகளும் தம் எல்லைக்குள் இருக்கும் எல்லா ஆரம்பப் பள்ளிகளையும் பராமரிக்குமாறு சட்டம் இயற்றவேண்டும்.

புலே தனியார் கல்வியைத் திட்டவட்டமாக எதிர்க்கிறார். ‘இன்னும் நீண்ட காலத்துக்கு கல்வி அமைப்பு முழுவதும் நிர்வாக அளவிலும் செயல்பாடு அளவிலும் அரசாங்கத்தின் கைகளிலேயே இருத்தல் வேண்டும். உயர்கல்வி, ஆரம்பக்கல்வி இரண்டையுமே ஊட்டி வளர்ப்பதும் கவனிப்பதும் தேவை. அரசாங்கம்தான் அத்தகைய கவனிப்பை வழங்க முடியும்.’

ஆங்கில வழிக்கல்வியே உயர்வானது என்னும் கருத்தாக்கம் பரவியிருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த சமயத்தில் புலே மராத்தி வழி கல்வியை உயர்த்திப் பிடித்தது ஆச்சரியமளிக்கக்கூடியது. (அடித்தட்டு) மக்கள் மொழியில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பாடத் திட்டங்கள் அமைக்கப்படவேண்டும் என்னும் அவர் வேண்டுகோள் இன்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

தாழ்த்தப்பட்டவர்கள் விழித்தெழுவதற்கு எவ்வாறு கல்வியை புலே முன்னிறுத்தினாரோ அதே போல் பெண்கள் விடுதலைக்கும் அவர் கல்வியையே முன்நிபந்தனையாக நிறுத்தினார். புலேயின் போராட்டங்களில் ஒரு முக்கியப் பகுதியாக பெண் விடுதலை திகழ்ந்தது. வன்முறை மற்றும் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி சில சாதியினர் அடிமைப்படுத்தப்பட்டதைப் போலவே பெண்களும் அடிமைப்படுத்தப்பட்டனர் என்றார் புலே. பிற்காலத்தில் சில பெண்ணியவாதிகளின் தாக்கத்துக்கு உள்ளான பிறகு பெண்கள் குறித்த புலேயின் பார்வை இன்னமும் கூர்மையடைந்தது என்கிறார் கெயில் ஓம்வெட். பெண்கள் அடிமைப்பட்டதற்குக் காரணம் ஆண்வழிமரபுச் சமூகமே என்பதை புலே உணர்ந்துகொண்டார். இந்த விஷயத்தில் பிராமணப் பெண்களுக்கும் சூத்திரப் பெண்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையும் அவர் கண்டுகொண்டார். பிராமண சமூகம் சூத்திரர்களை மட்டுமல்ல தமது சமூகத்துப் பெண்களையும் சேர்த்தே ஒடுக்குகிறது. அதே போல் ஒரு சூத்திர ஆண் தன் மனைவி பதிவிரதையாக இருக்கவேண்டும் என்றும் தனக்கு யாசகம் செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். ஆக இருவருமே இரட்டை வேடம் போடுபவர்களாக இருக்கிறார்கள்.

புலே மத நம்பிக்கையற்றவர் அல்லர். கடவுள் ஒருவர் உண்டு என்பதை ஏற்பவர். சர்வஞனிக் சத்ய தர்மா என்னும் தன் நூலில் அவர் தனது நம்பிக்கை குறித்து உரையாடுகிறார். இந்தப் புத்தகம் போக அவர் எழுதி வெளிவந்த நூல்கள் இரண்டு. முதலாவது, சாதியம் குறித்து விவாதிக்கும் குலாம்கிரி. இரண்டாவது, விவசாயிகள்மீதான ஒடுக்குமுறையை விவரிக்கும் ஷேத்கர்யகா ஆசுத். இவை போக கவிதைகள், தர்க்க ரீதியிலான உரையாடல்கள், கடிதங்கள், பிரசுரங்கள் ஆகியவையும் அவருடைய படைப்புகளின் கீழ் இடம்பெறுகின்றன.

தீவிரமாகவும் கடுமையாகவும் புலே மேற்கொண்ட பிராமண எதிர்ப்பு குறித்து ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்தவேண்டும். சூத்திரர்களை அடிமைப்படுத்தியவர்கள், மேலாதிக்கத்தை நிலைநாட்டியவர்கள் என்று வகையில் அவர்கள்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை புலே சுமத்தினாலும், பிராமணர்கள் தவிர்க்கவியலாதபடிக்கு தீங்கானவர்கள் என்று புலே கருதவில்லை. அதாவது, ஒருவன் பிராமண குலத்தில் பிறந்துவிட்டதாலேயே அவன் தீங்கானவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல அவருடைய மதிப்பீடு. ‘தங்களுடைய போலியான புனித நூல்களைத் தூக்கியெறிந்துவிட்டு, அனைவரும் சமம் என்று அவர்கள் கருதுவார்களேயானால், உண்மையாக அவர்கள் நடப்பார்களேயானால் அனைத்து ஆண்களும் பெண்களும் ஆரியர்களின் நலனுக்காகக் கடவுளை வேண்டிக்கொள்வர். ’

புலே அவர் வாழ்ந்த காலத்தில் மகாராஷ்டிரத்தைத் தாண்டி அறியப்பட்டிருக்கவில்லை. அவர் எழுதியது மராத்தியில் என்பதால் இந்தியாவிலேயே அவர் நீண்ட காலத்துக்கு அறியப்படாதவராகவே இருந்தார். அவர் யாருக்காக எழுதி வைத்தாரோ அவர்கள் கல்வியறிவு பெறாதவர்களாக இருந்ததால் புலேயின் படைப்புகள் பரவலாக அறிவுதளத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களிடம் கல்வியறிவு இருந்தது. ஆனால் புலேவின் எழுத்துகளை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டிய கடமை அவர்களுக்கு இல்லை.

கெயில் ஓம்வெட் மற்றொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார். புலேயை தலித் பிரிவினரேகூட புறக்கணித்ததற்குக் காரணம் அவர் எந்தவொரு குறிப்பிட்ட சாதியையும் சார்ந்திருக்கவில்லை என்பதுதான். எனவே அவரைத் தூக்கி நிறுத்தவும் அவர் படைப்புகளைக் கொண்டாடவும் குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் யாரும் முன்வரவில்லை. பிற்காலத்தில் அம்பேத்கர், தனது ஆசான்களில் ஒருவராக புலேயை முன்மொழிந்தார் என்றபோதும் அவரிடமும்கூட புலேயின் தாக்கத்தை அதிகம் காணமுடியவில்லை என்கிறார் ஓம்வெட்.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் ஒரு பிரிவினரை ஒடுக்கும் வழக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வகுப்புவாத மோதல்கள் இன்னமும் முடிந்தபாடில்லை. தீண்டாமை இன்னமும் ஒழிந்துவிடவில்லை. கல்வியறிவு அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை. பெண்கள் இன்னமும் சமத்துவத்தை எட்டிப்பிடித்துவிடவில்லை.  முக்தாபாய் சொன்னதுபோல், மிஞ்சிய சோற்றுக்காக முதுகை வளைத்து மேல் சாதியினரிடம் கைநீட்டி நிற்கும் நிலை மறைந்துவிடவில்லை. எனவே, புலே இன்றும் தேவைப்படுகிறார். அதிகாரம், கல்வி, அறிவியல் மூன்றையும் தாழ்த்தப்பட்ட பிரிவினரும் ஒடுக்கப்பட்டவர்களும் கைகொள்ளவேண்டும் என்றார் புலே. இந்த மூன்றையும் மூன்று ஆயுதங்களாகக் கருதவேண்டும் என்றும் அவர் முழங்கினார். அவர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை லட்சியமாகக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் தரித்திருக்கவேண்டிய ஆயுதங்கள் இவை.

(அடுத்த பகுதி : இந்தியாவின் முதல் தலித் தலைவர்)

புலே : அடித்தட்டு மக்களின் குரல்

Contribution of Jyotirao Phule on Higher Educationபுரட்சி / அத்தியாயம் 17

பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய கன்ஷிராம் 1996ம் ஆண்டு புது டெல்லியில் ஒரு தொலைக்காட்சி நிருபரை ஒருமுறை அடித்துவிட்டார். இதைத் தொடர்ந்து கன்ஷிராமின் கட்சியினர் வேறு சில மீடியா ஆள்கள்மீது தாக்குதல் தொடுத்தனர். இந்தச் செய்தி பத்திரிகைகளில் பரவலாக வெளிவந்தது. இங்கு கவனிக்கவேண்டிய விஷயம், எதனால் கன்ஷிராம் கோபமுற்றார் என்பதை யாராலும் தெரிந்துகொள்ளமுடியவில்லை.  கென்னத் ஜே கூப்பர் என்னும் வாஷிங்டன் போஸ்ட் டெல்லி நிருபருக்கு இது அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. கன்ஷிராம் தரப்பு குறித்து ஏன் பத்திரிகைகளில் எந்தச் செய்தியும் காணப்படவில்லை? அவர் செய்தது தவறே என்றாலும் அவர் தரப்பு என்றொன்று இருந்தாகவேண்டும் அல்லவா?

அவர் இறுதியாக வந்தடைந்த முடிவு இதுதான். தலித் தரப்பு நியாயம் என்பது இங்குள்ள பத்திரிகைகளில் வெளிவருவதே இல்லை. நமக்குக் கிடைப்பதெல்லாம் அவர்களுடைய எதிர் தரப்பினரின் நியாயங்கள் மட்டுமே. இன்னொன்றையும் கூப்பர் கண்டுபிடித்தார். தலித் மக்களின் குரலைப் பதிவு செய்ய மீடியா உலகிலேயே தலித் வகுப்பினர் யாரும் இல்லை.

தலித் மக்களின் வேதனைகளும் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டுமானால் அவர்கள் கல்வி கற்றாகவேண்டும் என்று புலே அன்றே சொன்னதன் காரணம் இதுதான். உங்கள் குரல் கேட்கப்படவேண்டுமானால் நீங்கள் வலிமையானவராக இருக்கவேண்டும். அடிமைகளின் குரல் கேட்கப்படமாட்டாது. எனவே, வலிமையற்று கிடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் முதலில் கல்வியறிவு பெற்றாகவேண்டும். அவர்கள் கல்வி கற்கமுடியாமல் போனது ஏன் என்னும் காரணத்தை ஆராயப் புகும்போது மதத்தின் கோர முகத்தை புலே தரிசித்தார். இந்து மதத்தின்மீதும் பிராமணர்கள்மீதும் போர் தொடுக்காமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடியல் கிடைக்காது என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்ந்தார்.

புலேவின் சமூகப் பார்வையைச் சுருக்கமாக இப்படி விவரிக்கலாம். இந்தியாவின் இயற்கை வளமும் செழுமையும் மேற்குலக நாடுகளை ஈர்த்ததைப் போலவே ஆரியர்களையும் ஒருகாலத்தில் ஈர்த்திருக்கிறது. இங்கே படையெடுத்து வந்த ஆரியர்கள் பூர்வ குடிகளான மக்களை ராட்சஷர்கள் என்று அழைத்து போரிட்டு வென்றனர். அமெரிக்க இந்தியர்கள்மீது மேற்கத்திய உலகம் செலுத்திய ஒடுக்குமுறைக்குச் சற்றும் குறைந்ததல்ல பூர்வகுடிகள்மீது ஆரியர்கள் செலுத்திய ஒடுக்குமுறை. மக்களைத் தன் பிடியில் வைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் விசித்திரமான புராணங்களையும் சாதிமுறையையும் அக்கிரமமான சட்டத்திட்டங்களையும் வகுத்தனர். சாதியப் படிநிலையில் தங்களை உயர்ந்த இடத்திலும் மற்றவர்களைத் தங்களுக்குக் கீழும் வைத்துக்கொண்டனர். அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களை நிறத்தின் அடிப்படையில் பிரித்து வைத்ததைப் போல் இங்குள்ள மக்களைச் சாதியின் பெயரால் பிரித்துவைத்தனர். ஏமாற்று வேலைகள்மூலமும் மத மயக்கங்கள்மூலமும் இங்குள்ள மக்கள் வென்றெடுக்கப்பட்டனர்.

சூத்திரர்களையும் ஆதிசூத்திரர்களையும் (தலித்) சித்தாந்தரீதியில் ஒன்றுபடுத்தும் பணியில் புலே ஈடுபட்டு வந்தார் என்கிறார் கெயில் ஓம்வெட். இன்று புலேவை அதிகம் பின்பற்றுபவர்கள் தலித் பிரிவினர்தான் என்றாலும் தான் வாழ்ந்த காலத்தில் புலே பகுஜன் சமாஜ் என்று இன்று அழைக்கப்படும் மத்திய மற்றும் கிழ்மட்ட சூத்திரர்களின் பிரதிநியாக, அவர்களுக்காகக் குரல் கொடுப்பவராக அறியப்பட்டிருந்தார். இன்று ஓ.பி.சி. பிரிவில் இடம்பெறும் மாலி என்னும் சாதியைச் சேர்ந்தவர் புலே.

புலே தனது சித்தாந்தத்தை அப்போது பிரபலமாகவும் வலிமையாகவும் இருந்த ஆரிய இன ஆதிக்கக் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்டார். வேதங்கள் ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒருவித ஆன்மிகத் தொடர்பை ஏற்படுத்துகின்றன என்று ஐரோப்பியர்கள் (ஓரியண்டலிஸ்ட்ஸ்) அப்போது சொல்லிவந்தனர். பால கங்காதர திலகர் போன்றோர் இந்த வாதத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலை வகிப்பதாக வியாக்கியானம் செய்து வந்தனர். ஹெகலின் இயக்கவியலை மார்க்ஸ் தலைகீழாகத் திருப்பிப்போட்டதைப் போல் புலே இந்த வாதத்தை அப்படியே தலைகீழாகத் திருப்பிப்போட்டார் என்கிறார் கெயில் ஓம்வெட்.

பிராமணர்கள் ஆதிக்கச் சக்திகளான இந்தோ ஐரோப்பியர்கள் வழிவந்தவர்கள் என்றார் புலே. அவர்கள் எந்தவகையிலும் சமூகத்தில் பிறரைவிட உயர்ந்தவர்களில்லை. மாறாக, ஒருவித சமத்துவ நிலை நிலவி வந்த சமூகத்துக்குள் ஊடுருவி, வன்முறை மற்றும் ஏமாற்றுத் தந்திரங்களைப் பயன்படுத்தியும் புராணங்களை அறிமுகப்படுத்தியும் ஒருசாராரை அடிமைப்படுத்தியவர்கள். அவர்களுடைய இதிகாசங்கள் பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தின. எனவே பிராமணர்களின் ஆதிக்கத்தை உடைத்தாகவேண்டும் என்றார் புலே.

கருத்து யுத்தத்தோடு நின்றுவிடாமல் ஒரு வலிமையான மக்கள் இயக்கத்தையும் புலே வளர்த்தெடுத்தார். உயர் சாதியினரின் மேலாதிக்கம் எங்கு நிலைபெற்றிருந்தோ அங்கு தன் பிரசாரத்தை எடுத்துச்சென்றார் புலே. இதிகாசங்களிலும் புராணங்களிலும் தங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துகிடந்த அடித்தட்டு மக்களிடம் நேரடியாக உரையாடிய புலே, அவர்களுடைய மூடநம்பிக்கைகளை உடைத்தெறிய அதே இதிகாசங்களையும் புராணங்களையும் பயன்படுத்திக்கொண்டார். உதாரணத்துக்கு, விஷ்ணுவின் வெவ்வேறு அவதாரங்களை இந்தியா ஒவ்வொரு கட்டமாக அடிமைப்படுத்தப்பட்டதோடு ஒப்பிட்டார் புலே. இதிகாசங்கள் வெறுத்தொதுக்கிய ராட்சஷர்களை, கதாநாயகர்களாக ஆக்கினார்.

மகாபலி என்று அழைக்கப்பட்ட பலி ராஜா அவர்களில் முக்கியமானவர். இவர் மகாராஷ்டிராவின் மன்னர். சாதிகள் அற்ற, ஏற்றத்தாழ்வுகள் அற்ற, நியாயமான ஆட்சியை இவர் மக்களுக்கு வழங்கிவந்தார். கந்தோபா, ஜோதிபா, நைக்பா போன்ற புகழ்பெற்ற கடவுள்களை பலி ராஜா தனது அமைச்சர்களாக நியமித்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட வாமனன் (விஷ்ணு) பலி ராஜாவிடம் சென்று மூன்றடி நிலம் கோரினார். பலி ராஜா ஒப்புக்கொண்டார். வாமனன் முதல் இரு அடிகளை வானத்துக்கும் பூமிக்குமாக அகலமாக எடுத்து வைத்துவிட மூன்றாவது அடியை வைக்க இடமில்லாமல் போனது.  பலி ராஜா தன் தலையை தாழ்த்திக்கொள்ள அங்கே கால் வைத்து அழுத்தி அவரை இல்லாது ஆக்கினார் வாமனன்.

ஆரியர்கள் எவ்வளவு தந்திரமானவர்கள் என்பதையும் நல்லட்சியைக் குலைக்க அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட இந்தப் புராணக் கதையை புலே பயன்படுத்திக்கொண்டார். புலே எதிர்பார்த்தபடியே அவருடைய இந்தத் தந்திரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பலி ராஜா மகாராஷ்டிராவின் கலாசார அடையாளமாக மாறிப்போனார். புலேயின் மறுவாசிப்பும் அவர் அளித்த புதிய விளக்கங்களும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கைகளை ஓரளவுக்கு மாற்றியமைத்தன. வேதக் கடவுள்களையும் பார்ப்பன பண்டிதர்களையும் நீக்கிவிட்டு வழிபாட்டு முறையையும் திருவிழாவையும் மக்கள் நடத்தத் தொடங்கினார்கள் என்று குறிப்பிடுகிறார் கெயில் ஓம்வெட். சாதியத்துக்கு எதிரான, புராணங்களுக்கு எதிரான, மேலாதிக்கத்துக்கு எதிரான புலேவின் மாற்றுக் கதையாடல்கள் பெற்ற வெற்றி இது.

ஆரியர்களைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும் பிரிட்டிஷாரும் இந்தியாமீது படையெடுத்து வந்தனர் என்றபோதும் அவர்களைக் காட்டிலும் ஆரியர்களின் தாக்கமே இங்கு அதிகம் என்றார் புலே. அரசு அதிகாரம், மதம் இரண்டையும் பயன்படுத்தி ஆரியர்கள் மக்களை அடிமைப்படுத்தினர். குறிப்பாக விவசாயிகள் பெரும் சுரண்டலுக்கு ஆளாயினர். காலனிய ஆட்சியின்போதும் பிராமணர்களின் ஆதிக்கம் குறையவில்லை. வரி விதிப்பு, நிலப் பறிமுதல் என்று ஒடுக்குமுறை தொடர்ந்தது.

புலே முன்வைத்த ஆரியப் படையெடுப்பு கருத்தாக்கத்தை இன்றைய தேதியில் ஒரு வரலாற்று உண்மையாகக் கொள்ளமுடியாது என்றபோதும் பல விஷயங்களில் அவரை ஒரு நவீனவாதியாக அடையாளம் காணமுடியும். முதலாவதாக, விவசாயிகளின் ஏழைமையையும் அவர்கள் சுரண்டலுக்கு ஆளான விதத்தையும் புலே தத்ரூபமாக விவரித்தார். நிலம் உபயோகப்படுத்தப்பட்ட முறையையும் பஞ்சங்களையும் அவர் ஊன்றி கவனித்தார். காட்டுவளங்களின் உபயோகம் குறித்து இன்றை சூழலியலாளர்கள் வெளிப்படுத்தும் கவலைகளை அன்றே பதிவு செய்தார். கலாசார ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் இரண்டையும் அவர் ஆராய்ந்தார். மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சிந்தனைகளையும் பிரதிகளையும் மதிப்பீடுகளையும் விரிவாக ஆராய்ந்தார். சமூக நீதி என்பது அடித்தட்டு மக்கள் உள்பட அனைவருக்கும் சமமானது என்று முழங்கினார்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளுக்கு சுலபத்தில் அடிமையாகும் தாழ்த்தப்பட்ட மக்களை விமரிசிக்க தயங்கியதில்லை புலே. ‘பார்ப்பனரின் (புனித) நூல்களில் அடங்கியுள்ள விஷயத்தை நேரடியாக சரி பார்க்காமலேயே, வாய்மொழியாக அவர்கள் பரப்பிவிடும் கட்டுக்கதைகளின் அடிப்படையில் அமைந்த சாதிப்பாகுபாடு என்னும் கேவலமான பேச்சை நீங்கள் ஏன் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள்? இது சூத்திரர்களின் தரப்பில் இருக்கும் சுத்த பைத்தியக்காரத்தனம் ஆகும்.’

இன்னோரிடத்தில் புலே எழுதுகிறார்.  ‘சூழ்ச்சிக்கார ஆரிய பார்ப்பனர்கள் சாதாரண மக்களிடமிருந்து தம் (புனித) வேதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் அறியாமையில் இருக்கும் சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் வேதங்கள் மீது அநியாய மதிப்பும் மரியாதையும் காட்டி வந்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் தம் வேதங்களை வெளிப்படைக்குக் கொண்டு வந்தால் மராத்தியில் (மக்கள் மொழியில்) அவற்றை மொழிபெயர்த்து, கிறிஸ்தவர்கள் தம் பைபிளை பரப்புவது போல், பொதுமக்களுக்கு பெரிய அளவில் கிடைக்கச் செய்தால்; கழைக்கூத்தாடி (சமூகத்து) பெண்கள்கூட சூழ்ச்சிக்கார ஆரிய பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேதங்களையும் எள்ளி நகையாட தயங்க மாட்டார்கள் என நான் துணிந்து சொல்லுவேன்.’

தாழ்த்தப்பட்ட மக்களின் துயர வாழ்வைக் கண்டு மனம் கலங்குகிறார் புலே. ‘தம் துயரக் கதையை தம் நண்பர்களிடம் விவரிக்கையில் உண்மையாகவே சூத்திரர்களின் மனசு விட்டுப் போகும். (அவர்களின் இதயங்கள் பிளந்துபோகும்). நான் பிறந்த நாள் நாசமாகப் போக! பிறந்த போதே நான் செத்திருந்தால் அது எவ்வளவோ நல்லதாக இருந்திருக்கும். நமது வீட்டுப் பெண்கள் படும் பாட்டை பார்க்க சகிக்கவில்லை என அவர்கள் நிச்சயம் சொல்வார்கள். ஒரு ஆடவன் தன் உடம்பில் ஏற்படும் கடுமையான வேதனையையும் தீரத்துடன் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் தனக்கு வேண்டிய, நெருங்கிய உறவினர்களுக்கு நேரும் துயரத்தை தாங்கிக்கொள்வது மனித சக்திக்கு அப்பாற்பட்டதுதான்.

தன் உறவினரின் பரிதாப நிலையைக் கண்டு வேதனையாலும் அவலத்தாலும் அவர் பீடிக்கப்படுகிறார். ஆனால் இப்படிப்பட்ட இடர்ப்பாட்டில் இருந்து மீள உள்ளபடியே ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையிலேயே ஏழை விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்கள் உண்ணும் உணவு எவ்வளவு சத்துக்குறைவும் சுவையற்றும் உள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளமுடியும்.’

ஒரு பிரிவினரின் இந்த ஏழைமைக்கும் மற்றொரு சிறு பிரிவினரின் செழுமைக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தினார் புலே. தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களின் கையறு நிலையையும் அறியாமையையும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்று சுட்டிக்காட்டுகிறார். பிரிட்டிஷார் ஒரு நடுநிலையான விசாரணையை நடத்தினால் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனமும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகளும் ஒரே சமயத்தில் முழுமையாக தெரியவரும் என்றார் புலே. ‘அன்றாட பிரச்னைகளிலும் நிர்வாக யந்திரத்திலும் பொது மக்களை பார்ப்பனர்கள் சுரண்டும் வழிமுறை பற்றி அரசாங்கம் இன்னமும் அறியவில்லை. இந்த அவசரப் பணியில் அரசாங்கம் அக்கறையுடன் கவனம் செலுத்தி பார்ப்பனர்களின் சதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ள மன ரீதி அடிமைத்தனத்தில் இருந்து பொது மக்களை விடுவிக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’

தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைவதைத் தடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஏற்பாடே சாதியம். ‘ஒரு புத்திசாலி பத்து அறியா மக்களைக் கட்டுப்படுத்திவிடமுடியும். அந்தப் பத்து பேரும் ஒன்றுபட்டால் புத்திசாலியை வெல்லலாம்.’ இதை நன்கு புரிந்துகொண்ட பார்ப்பனர்கள், ‘சாதியம் என்ற நாசகார கட்டுக்கதையை’ உருவாக்கினார்கள்.

புராணங்களின் கட்டுக்கதைகளை மறுவாசிப்பு செய்யும்போது புலே ஓரிடத்தில் இவ்வாறு எழுதுகிறார். ‘பிரம்மனின் மனைவி சாவித்திரி. அவள் இருக்கும்போது எதற்காக பிரம்மன் தன் வாயில் குழந்தையை வளரவிடுகிறான்?’ இரணிய கசிபு கதையும் அவரிடம் இருந்து தப்பவில்லை. ‘இரணிய கசிபை மறைவிலிருந்து கோழைத்தனமாகக் கொலை செய்த நரசிம்மனை காப்பாற்றத்தான், அவன் தூணிலிருந்து தோன்றினான் என்றெல்லாம் கதை அளந்தார்களோ? உண்மையான சமயக் கோட்பாடுகளைத் தன் மகன் பிரகலாதனின் பிஞ்சுமனதில் ஊட்ட முயன்ற இரணிய மன்னனைக் கொலை செய்தது ஆதி நாராயணனின் அவதாரமே என்பது எவ்வளவு கேவலமான பொய்! ஒரு மகனுக்குத் தந்தை ஆற்றவேண்டிய கடமையைத்தானே இரணியகசிபு செய்தார்?’  நியாயப்படி பார்த்தால், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சமரசம் செய்து அல்லவா வைத்திருக்கவேண்டும் அந்த நரசிம்மன்? ‘இன்றைக்குப் பல அமெரிக்க ஐரோப்பிய மத போதகர்கள் பல இந்திய இளைஞரை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அப்படி மதம் மாறியோரின் அப்பாவை படுகொலை செய்யும் கீழ்த்தரத்துக்குத் தம்மை இறக்கிக்கொள்ளவில்லை.’

இன்னொரு சந்தர்பத்தில், பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே.

பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன்
தந்தை பெயர் : ஆதி நாராயணன்
இடம் : எங்கும் பார்க்கலாம்

அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு,

பார்ப்பனர்களின் மூலமாக வெளிக்குக் காட்டப்படும் உங்கள் புகழ்பெற்ற மந்திர உச்சாடனங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைத்துப் போகச் செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம்.

அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகார்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பன பக்தர்களை (இனத்தை) தெருவுக்கு இழுத்துப் போட்டு அவர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு
தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின்
நிஜத்தை சோதிக்க விரும்பும்
ஜோதிராவ் கோவிந்தராவ் புலே

(அடுத்த பகுதி : புலே : கல்வி சிந்தனைகள்)

புலே : கல்வி என்றொரு ஆயுதம்

jyotirao_phuleபுரட்சி / அத்தியாயம் 16

முக்தாபாய் என்னும் பதினான்கு வயது சிறுமி எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை முதலில் படித்துவிடுங்கள்.

. . . எங்களைவிட உயர்ந்தவர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்ளும், எங்களை வெறுக்கும் பிராமணர்களின் வாதத்தின்படி பார்த்தால் வேதம் என்பது அவர்களுக்குச் சொந்தமான ஒரு சொத்து. அவர்களுக்கு மட்டும்தான் வேதம் உரியது என்பது உண்மையானால் அது சர்வநிச்சயமாக எங்களுக்கானது இல்லைதான். ஓ, இறைவனே! உன்னுடைய உண்மையான மதத்தை எங்களுக்குக் கற்றுக்கொடு. அதன்படியே வாழ நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒருவர்தான் உயர்ந்தவர் மற்றவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதாக இருக்கும் மதத்தை இந்த பூமியைவிட்டே அகற்றிவிடு. அப்படியொரு மதத்தைப் பெருமையாகக் கருதும் போக்கையும் அகற்றிவிடு.

. . . புனிதமான ஆடை என்று சொல்லி அணிந்துகொள்ளும் இந்த இரக்கமற்ற பிராமணர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டதற்காகத் துயரப்படும் எங்களுக்காக ஒரு துளியாவது கருணை கொள்வார்களா? தீண்டத்தகாதவர்கள் என்பதால் எங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. எங்களிடம் பணம் இல்லை. அதனால் எங்கள் துன்பங்களை நாங்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். ஓ, படித்த பண்டிதர்களே, ஞானம் குறித்த உங்களுடைய சுயநலன்மிக்க பிதற்றல்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நான் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

. . . எங்கள் பெண்கள் குழந்தைகள் பெறும்போது அவர்கள் வீட்டில் மேற்கூரை இருப்பதில்லை. குளிரிலும் மழையிலும் அவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் தெரியுமா! உங்களுடைய அனுபவங்களைக் கொண்டு இதை யோசித்துப் பாருங்கள். பிரசவத்தின்போது அவர்கள் நோய்வயப்பட்டால் மருத்துவம் பார்க்க அவர்களிடம் பணமா இருக்கிறது? பணம் பெற்றுக்கொள்ளாமல் இப்படிப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்க்க மனிதத்தன்மை கொண்ட மருத்துவர் யாராவது உங்களிடம் இருக்கிறார்களா?
பிராமணக் குழந்தைகள் மங் மற்றும் மகர் குழந்தைகள்மீது கற்களை வீசினாலும், மோசமான முறையில் காயத்தை உண்டாக்கினாலும் அவர்கள் அமைதியாகத்தான் இருக்கவேண்டும். யாரிடமும் புகார்கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் மிஞ்சி போன உணவுக்காக அவர்கள் பிராமணர்கள் வீட்டுக்குத்தான் பிச்சை எடுக்கப் போகவேண்டும். ஐயோ, கடவுளே! எத்தனை கொடிய வேதனை இது! இந்த அநீதி குறித்து மேற்கொண்டு எழுதினால் நான் வெடித்து அழுதுவிடுவேன். . .

1855ல் இந்தக் கடிதம் எழுதப்பட்ட பிறகு முக்தாபாய்க்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. கடிதத்தின் தொனி மற்றும் எழுதப்பட்ட முறையில் இருந்து முக்தாபாய் உறுதியும் தெளிவும் மிக்க ஒரு பெண் என்பது நமக்குத் தெரிய வருகிறது. 19ம் நூற்றாண்டு மகாராஷ்டிராவில் ஒரு பெண்ணாகவும் தீண்டத்தகாதவளாகவும் இருந்துகொண்டு துணிச்சலுடன் இப்படி ஒருவர் எழுதுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானதுதான்.

தீண்டக்காதவர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி தேவையில்லை என்னும் கருத்தாக்கம் வலுவாக இருந்த காலகட்டம் அது. மகாராஷ்டிராவில் உள்ள மகர் பிரிவினர் இந்து மதத்தின் படிநிலை வரிசையில் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய வாழ்நிலை எப்படியிருந்தது என்பதை 1900களின் தொடக்கத்தில் தி இம்பீரியல் கஸெட்டர் ஆஃப் இந்தியா நாக்பூர் மாவட்டம் குறித்து பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.  ‘மொத்தமுள்ள மக்கள்தொகையில் மகர்கள் ஆறில் ஒரு பங்கு இருந்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் விவசாயிகளாகவும் தொழிலாளர்களாகவும் இருந்தனர். கிராமப்புற மகர்கள் இன்னமும் அசுத்தமானவர்களாகவே கருதப்பட்டு வந்தனர். கிராமத்தின் கிணற்றிலிருந்து நீர் எடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை. இந்து குழந்தைகளுடன் அவர்களுடைய குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கமுடியாது.’

பிற்போக்கான இந்தச் சமூகத்தைத் திருத்தமுடியாதா என்னும் ஏக்கத்தோடு பணியாற்றிய சீர்திருத்தவாதிகள் மத்தியில் ஜோதிராவ் புலே (11 ஏப்ரல் 1827 – 28 நவம்பர் 1890) தனித்துவமிக்க ஒரு போராளியாகத் திகழ்கிறார். அங்கே, இங்கே என்று சில மாற்றங்களைக் கொண்டு வருவது போதாது, அனைத்து பிரச்னைகளுக்குமான ஆணிவேரைத் தேடிப்பிடித்து கடுமையாகப் போரிடவேண்டும் என்றார் புலே. அவர் கண்டறிந்த அந்த ஆணிவேர், சாதிய ஒடுக்குமுறை. சமூகத்தில் ஒரு பிரிவினர் உயர் நிலையிலும் ஏனையோர் கீழ்நிலையிலும் இருப்பதற்கான சித்தாந்த விளக்கத்தையும் தார்மிக நியாயத்தையும் சாதியம் அளிப்பதை அவர் கண்கூடாகக் கண்டார். ஏழை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அடித்தட்டு மக்களையும் தீண்டத்தகாதவர்களையும் அவர்களுடைய சங்கிலிகளை உடைத்தெறிந்து விடுவிக்கவேண்டியது தன்னுடைய கடமை என்று வரிந்துகொண்டார். இதே காரணங்களுக்காக அவர் அம்பேத்கர், பெரியார் ஆகியோரோடு இணைத்து இன்று நினைவுகூரப்படுகிறார்.

ஜோதிராவின் தந்தை கோவிந்த்ராவ் புனேயில் ஒரு காய்கறி வியாபாரியாக இருந்தவர். மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்னும் மாவட்டத்தில் இருந்து குடியேறிய குடும்பம் அவருடையது. கோவிந்த்ராவ் மற்றும் அவருடைய சகோதரர்கள் மலர் வியாபாரம் செய்துவந்ததால் புலே என்னும் பெயர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டது. ஜோதிராவுக்கு ஒரு வயது நிறைவடைவதற்குள் அவருடைய தாயார் இறந்துபோனார். ஆரம்ப கல்வியை மட்டும் முடித்துக்கொண்டு தன் தந்தைக்கு உதவி செய்ய வந்துவிட்டார் ஜோதிராவ். பதின்மூன்று வயது நிறைவடைவதற்குள் அவருக்குத் திருமணமும் முடித்து வைத்துவிட்டார்கள்.

ஜோதிராவின் அறிவுத் தேடலையும் புத்திசாலித்தனத்தையும் கண்டுகொண்ட ஒரு முஸ்லிம் ஆசிரியரும் ஒரு கிறிஸ்தவரும் தங்களுடைய நண்பரான கோவிந்த்ராவிடம் சென்று ஜோதிராவைத் தொடர்ந்து படிக்கவைக்குமாறு கேட்டுக்கொண்டனர். 1841ல் புனேயில் உள்ள ஸ்காட்டிஷ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார் ஜோதிராவ். இங்குதான் சதாஷிவ பல்லால் கோவந்தே என்னும் பிராமண மாணவரின் நட்பு கிடைத்தது. வாழ்நாள் முழுவதும் இந்த நட்பு நீடித்தது. இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து தாமஸ் பெய்னின் தி ரைட்ஸ் ஆஃப் மேன் புத்தகத்தை விரும்பி வாசித்தார்கள். 1847ல் படிப்பை முடித்துக்கொண்ட ஜோதிராவ் புலே, அரசு உத்தியோகத்தை நாடிச் செல்லக்கூடாது என்று முடிவெடுத்தார்.

ஒரு நாள் பிராமண நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தார் ஜோதிராவ் புலே. மாப்பிள்ளை ஊர்வலமாகச் செல்லும்போது அவருடைய உறவினர்களின் மத்தியில் ஜோதிராவும் கலந்துகொண்டார். இதனை அவர்கள் கவனித்துவிட்டார்கள். மில் என்னும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் நம்மில் ஒருவராக வருவதா என்று சினம்கொண்ட அவர்கள் ஜோதிராவை அவமானப்படுத்தி விலக்கி வைத்தார்கள். கண்களில் அழுகையும் நெஞ்சம் முழுக்க கோபமும் பொங்க ஜோதிராவ் வீடு திரும்பினார். 1848ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தின்மூலம் சாதிய ஏற்றத்தாழ்வையும் மேலாதிக்கத்தையும் அவர் கண்கூடாக உணர்ந்துகொண்டார்.

மனிதர்களை மனிதர்களாக வாழவிடாத சாதிய ஒடுக்குமுறையைக் களைந்து சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் தீண்டத்தகாதோருக்கும் விடுதலை வாங்கித் தருவதை லட்சியமாகக் கொண்டு ஜோதிராவ் புலே பணியாற்றத் தொடங்கினார். சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் எஜமானர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும் கடவுளுடன் உரையாடுபவர்கள் என்றும் தாம் கருதிவரும் மேல் சாதியினரை எதிர்த்துப் போராடவேண்டியது அவசியம்; இந்தச் சமமற்ற சமூக நிலைமையை சீர்திருத்தமுடியாது, புரட்சிகரமாக மாற்றியமைப்பது மட்டுமே விடுதலையை அளிக்கும் என்று புலே முடிவு செய்தார். இந்தப் போராட்டத்தில் ஒன்றுமற்ற நிராதரவான தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி பலமிக்க, செழிப்பான உயர் சாதியினருடன் போராடமுடியும்? இந்தப் போரில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தவேண்டிய ஆயுதம் என்ன?

ஏப்ரல் 1883ல் புலே எழுதுகிறார். ‘கல்வி இல்லை என்றால் அறிவு இல்லை. அறிவு இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லை என்றால் ஊக்கம் இல்லை. ஊக்கம் இல்லை என்றால் ஆக்கம் (செல்வம்) இல்லை. செல்வம் இல்லாததால்தான் சூத்திரர்கள் தாழ்வுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஆக கல்வி இன்மையே இந்தச் சீர்கேட்டுக்கெல்லாம் காரணம்.’

புலே சுட்டிக்காட்டும் கல்வி என்பது பள்ளி, கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் புத்தக அறிவு மட்டுமல்ல. சமூகத்திடம் இருந்து நேரடியாகக் கற்கவேண்டும், தாம் தாழ்நிலையில் இருப்பது ஏன், அதற்கு யார் காரணம் என்பதையும் கண்டறியவேண்டும். ஜூலை 1881ல் வெளியான ஒரு மராத்தி நூலின் (இதன் தலைப்பை, விவசாயிகளின் சாட்டைவார் என்று மொழிபெயர்க்கலாம்) முன்னுரையில் புலே எழுதுகிறார். ‘இந்த நூலை எழுதியதன் நோக்கம் இன்றைக்கு சூத்திர விவசாயிகள் முற்றிலும் சீரழிந்து கிடப்பதற்கு பல மத, அரசியல் காரணங்கள் உள்ளன. அவற்றில் சில காரணங்களைக் குறித்து விவாதிப்பதே இந்நூலின் நோக்கம். ஏறக்குறைய எல்லா அரசாங்க துறைகளும் பார்ப்பன அதிகார வர்க்கத்தினராலேயே ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. அவர்களின் மத நடைமுறைகள் போலியானவையாக, ஒடுக்கும் தன்மையனவாக உள்ளன. இவ்வாறு பட் புரோகித வகுப்பால் சூத்திர விவசாயிகள் சுரண்டப்படுகின்றனர். பெரும்பாலான ஆங்கில (அரசாங்க) அதிகாரிகள் சோம்பலும் ஆடம்பரமும் ஆன வாழ்க்கையில் திளைத்துக் கிடக்கிறார்கள். இதனால் சூத்திர விவசாயிகள் பார்ப்பன அதிகார வர்க்கத்தினரால் மேலும் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள். . . சூத்திர மக்கள் மேற்சொன்ன ஆதிக்கம் மற்றும் சுரண்டலில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.’

புலேயைப் பொருத்தவரை கல்வி என்பது ஒரு வலுவான, புரட்சிகர ஆயுதம். பிராமணர்களின் ஆதிக்கத்தையும் இந்து மதத்தின் பிற்பாக்குத்தனத்தையும் வீழ்த்துவதற்கான ஓர் அறிவாயுதம். தன் வாழ்நாள் முழுக்க புலே இந்த ஆயுதத்தையே பிரயோகித்தார். ஒருமுறை, புண்ணியம் என்பதன் சரியான விளக்கம் என்ன என்று கேட்கப்பட்டபோது புலே கீழ்வருமாறு பதிலளித்தார். ‘நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நம் சக மனித உயிர்களை உள ரீதியாகவோ உடல் ரீதியாகவோ வதைக்காமல் இருந்தால் அதுவே ஒரு புண்ணிய காரியம் ஆகும்.’ ஆனால் இந்து மதமும் இதைத்தானே சொல்கிறது? ‘மற்றவர்களுக்கு உதவுவது புண்ணியமானது. மற்றவர்களைத் துன்புறுத்துவது பாவ காரியம் என்கின்றன சாஸ்திரங்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? ’ புலே அளித்த பதில் இது. ‘இதுதான் உங்கள் சாத்திரங்கள் கூறும் நெறி என்னும்போது ஏன் ஆரிய பார்ப்பனர்கள் சமூகத் தீட்டுகள் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்? ஏன் மற்றவர்களிடம் இருந்து தம்மைப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள்? ஏன் கிறிஸ்தவர்களையும், முகமதியர்களையும், சூத்திரர்களையும், ஆதிசூத்திரர்களையும் கண்டனம் செய்கிறார்கள்? ஏன் அவர்களை எல்லாவிதமான தொல்லைகளுக்கும் உட்படுத்துகிறார்கள்?’

சிந்தனை வேறு, செயல் வேறு என்று இருக்கும் பெரும்பாலானோர் மத்தியில் புலே ஒரே மாதிரி சிந்திப்பவராகவும் செயல்படுபவராகவும் இருந்தார் என்கிறார் கெயில் ஓம்வெட். பெண்கள் கல்வி கற்கவேண்டியதன் அவசியத்தை அவர் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தன் மனைவி சாவித்திரிபாய்க்கு தானே ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார். பெண்களுக்கான ஒரு பிரத்தியேகக் கல்விக்கூடத்தை சாவித்திரிபாய் தொடங்கி நடத்தும் வரை அவருக்கு உறுதுணையாக இருந்தார். இவர்களுக்குக் குழந்தையில்லை என்பது தெரிந்ததும் இன்னொரு திருமணம் செய்துகொள்ளுமாறு குடும்பத்தினரும் சமுதாயாத்தினரும்  புலேவை நிர்பந்தித்தபோது அதை ஏற்காமல் உறுதியுடன் இருந்தார்.

புலே ஏற்படுத்திய கல்விப் புரட்சியின் விளைவுகள் அவர் காலத்திலேயே வெளிப்படத் தொடங்கிவிட்டன என்பதற்கு நாம் தொடக்கத்தில் சந்தித்த முக்தாபாய் ஓர் உதாரணம். லட்சக்கணக்கான பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கிடைக்காத அறிவும் தெளிவான பார்வையும் போராட்ட குணமும் முக்தாபாய்க்கு கிடைத்தற்குக் காரணம் அவர் புலே நடத்திய பள்ளியில் படித்ததுதான். அந்த வகையில் புலேயின் படைப்புகள் மட்டுமல்ல அவருடைய வாழ்க்கையுமேகூட நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. தாழ்த்தப்பட்ட பிரிவில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொன்றும் முக்தாபாய் போல் பிரகாசிக்கும் அறிவு பெறவேண்டுமானால் புலேயை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும், மீண்டும் மீண்டும் அனைவருக்கும் அறிமுகம் செய்யவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இருளைப் போக்கவேண்டுமானால் நாம் முதலில் செய்யவேண்டியது,நாம் இருளில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும், ஒளியைப் பெறுவது அவசியம் என்பதை உணர்வதும்தான்.

(அடுத்த பகுதி : புலே : அடித்தட்டு மக்களுக்கான குரல்)