சென்னை புத்தகக் கண்காட்சி – சில குறிப்புகள்

 

Apple Photos 066

36வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடல் பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது. சுற்றுலா செல்லும் உணர்வை ஏற்படுத்தும் அடர்த்தியான அழகிய மரங்கள் சாலையின் இரு பக்கங்களிலும் அணிவகுக்கின்றன. உள்ளே நுழைந்துவிட்டால் தனியொரு உலகம் இது. காலை வீசி நடந்தபடி மைதானத்தை நிதானமாக ஒரு முறை சுற்றி வந்த பிறகு அரங்குக்குள் நுழைவது நல்ல அனுபவம். விடுமுறை தினங்களில் இன்னும் கொஞ்சம் முன்பே வந்துவிட்டால், காலை நேர நடைபயிற்சியையும் இங்கே இனிதே முடித்துக்கொண்டுவிடலாம். மற்றபடி, அதிகம் நடந்து பழக்கமில்லாதவர்களுக்கு இந்த அரங்க நெடும்பயணம் வேதனையளிக்கலாம். புத்தகக் கண்காட்சிக்குள் நுழையும்போதே இப்படி சிலர் மூச்சு வாங்கியபடி இருந்ததையும், வந்தவுடனேயே உட்கார இடம் தேடியதையும் காண முடிந்தது.

வழக்கமாக இடம்பெறும் சாலையோரப் பழையப் புத்தகக் கடைகள் இந்த முறை இல்லை. நடைபாதையே இல்லை என்பதால் கடைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அத்தனை பெரிய மைதானத்தில் எங்காவது ஓரோரத்தில் இடம் ஒதுக்கியிருக்கலாமோ என்று தோன்றியது. பழைய இதழ்கள், பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் வாங்குவதற்கென்றே கண்காட்சிக்கு வருபவர்களுக்கு இது ஒரு ஏமாற்றம்.

இவை போக வேறு எந்த மாற்றமும் இல்லை. காலைத் தடுக்கும் அதே சிவப்புக் கம்பளங்கள். துர்நாற்றம் அடிக்கும் அதே டாய்லெட். அதே சுயமுன்னேற்ற நூல்கள். அதே கல்கி, சாண்டில்யன், பொன்னியின் செல்வன்.

Apple Photos 042

இந்தக் கண்காட்சிக்குப் புது வரவு, SAGE Publications. டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் இவர்களுடைய மாபெரும் அரங்கங்களை இரண்டு ஆண்டுகளாகக் கண்டிருக்கிறேன். ‘இங்கே முதல் முறையாக பங்கேற்கிறோம். வரவேற்பு இருந்தால் தொடர்வோம்’ என்றார் பதிப்பகத்தைச் சேர்ந்தவர். ஆனால் மூன்று ஸ்டால்களுக்கு மேல் தரமாட்டோம் போன்ற விதிமுறைகள் இருந்தால் இப்படிப்பட்ட ஆங்கில பதிப்பகங்களை இங்கே எதிர்பார்க்கமுடியாது. இவ்வளவு பெரிய அரங்கில், தேவைப்படுவோருக்கக் கூடுதல் ஸ்டால்கள் அளிக்கலாமே?

சேஜ் பொதுவாக லைட் ரீடிங் புத்தகங்களைப் பதிப்பிப்பதில்லை. Academic Research புத்தகங்கள் மட்டுமே அதிகம் வெளியாகும். நம்முடைய திறனுக்கும் தேவைக்கும் ஏற்ப நூல்களைத் தேர்வு செய்து படிக்கலாம். டெல்லியில் இருந்ததைப் போலவே Bargain Counter என்று தனி அலமாரி ஒதுக்கியிருக்கிறார்கள். இங்கே சில நல்ல நூல்கள் 100, 200 ரூபாய்க்குக் கிடைக்கின்றன.

எடுத்துக்காட்டாக இரு நூல்கள் :

Apple Photos 070

 

இது புது வரவு. சமீபத்தில் தி ஹிந்துவில் இந்நூல் குறித்து ஒரு விமரிசனம் வந்திருந்தது. தலைப்பில் பிரபகாரன் இருந்தாலும், இலங்கை அரசியல் குறித்தும் ஈழப் போராட்டம் குறித்தும் எழுதப்பட்டிருக்கும்  எளிமையான நூல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Apple Photos 019

NHM மின்புத்தகங்களுக்கான அரங்கில் ஆர்வத்துடன் பலர் விசாரித்துக்கொண்டிருந்தனர். தமிழில் மின்நூல் படிக்கமுடியுமா? ஐஃபோனில் படிக்கலாமா? எப்படி வாங்குவது? எல்லா நூல்களும் இப்படிக் கிடைக்குமா?

Apple Photos 023

கிழக்கு பதிப்பக அரங்கம். வரலாறு, அரசியல், வாழ்க்கை, மொழிபெயர்ப்பு என்று பல புதிய நூல்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அவற்றைப் பற்றிய அறிமுகங்களை அடுத்தடுத்து அளிக்கிறேன். கூட்டம் அதிகமிருந்ததால் கிழக்கு அரங்குக்குள் செல்லமுடியவில்லை. நான்கு ஸ்டால்கள் இருப்பதில் உள்ள வசதி இப்போதுதான் தெரிகிறது.

Apple Photos 033

விடியல் அரங்கில் மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் முழுத் தொகுதியும் கிடைக்கிறது. வேறு சில புதிய நூல்களும் வெளியாகியுள்ளன. வரும் நாள்களில் இங்கே அவற்றை அறிமுகம் செய்கிறேன். நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, விடியல் சிவாவின் மறைவு ஏற்படுத்தியுள்ள தாக்கம் இனிவரும் ஆண்டுகளில்தான் தெரியும் என்று சொன்னார். உண்மைதான். அவர் பணியாற்றிய சில புத்தகங்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் இருக்கும். அவை நின்றுபோகும்போதுதான் சிவாவின் பங்களிப்பு புரியவரும். விடியல் இனி எத்திசையில் பயணம் செய்யும், எப்படிப்பட்ட நூல்களைக் கொண்டுவரும், பழைய நூல்களைத் தொடர்ந்து பதிப்பிப்பார்களா போன்ற கேள்விகளுக்கு விடியலில் இருந்து யாராவது விரைவில் பதிலளிக்கவேண்டும்.

Apple Photos 038

 

கிழக்கு அரங்குக்கு (246) எதிரில் உள்ள தமிழினி அரங்கம். நேற்றைய தி ஹிந்துவில் தமிழினி வசந்தகுமார் பதிப்புலகில் உள்ள ராயல்டி சிக்கல்கள் குறித்தும் நூல்கள் விற்பனை குறித்தும் பேசியிருந்தார்.

Apple Photos 024

அழகிய அரங்கம். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இனிதான் விசாரிக்கவேண்டும்.

Apple Photos 040

 

அடுத்த மூன்று நாள்களும் விடைமுறை தினங்கள் என்பதால் காலை 11 மணிக்குப் புத்தகக் கண்காட்சி தொடங்கிவிடும்.

அங்கேதான் சென்றுகொண்டிருக்கிறேன். இன்றைய அப்பேட், நாளைக்கு.

0

மருதன்

ராஜா அபிமானி!

என் குழந்தைப்பருவத்தில் அந்த மிகச் சிறிய வீட்டில் (இன்று அந்த வீட்டில் என்னால் கால் நீட்டிப் படுக்க முடியாது) நாங்கள் நான்கு சிறார்கள், கிராமத்தில் சரியான படிப்பு வசதி இல்லையென்று நகரத்தில், ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டில் 3 குண்டு விளக்குகள், ஒரு மேஜை விசிறி தவிர்த்து, மின்னிணைப்பு கொண்ட மற்றொரு இயந்திரம், வானொலி. அதில் இலங்கை வானொலி சிற்சில காலம் ஒலித்தது மிகவும் பலவீனமாக நினைவில் இருக்கிறது. பின்பு அது எப்போது நின்று போனது என்று எனக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் எப்போதும் திருச்சி வானொலி மட்டுமே ஒலிக்கும். வந்தேமாதரம் முடிந்து பக்திமாலையுடன் தொடங்கும் நிகழ்ச்சிகள், பிடிக்கிறதோ இல்லையோ, மின்சாரம் இருந்தால் காலை 8 மணி வரை ஒலித்துக் கொண்டே இருக்கும். 8 மணிக்கு டெல்லி நிகழ்ச்சிகள். அநேகமாக 8:40க்கு டெல்லி நிகழ்ச்சிகளும் முடிந்து, நிலையம் தூங்கி வழிந்து மறுபடியும் தமிழ் நிகழ்ச்சிகளுடன் 12க்கோ 12:10க்கோ விழிக்கும்போல. ஆனால் 8 மணிக்குப் பிறகு நாங்கள் வானொலி கேட்பது அரிது; பள்ளி சென்று விடுவோம். அப்படியே வீட்டில் இருந்து கேட்க நினைத்தாலும் ஓர் அட்சரம் கூட புரியாத இந்தியில், தமிழிலேயே நாங்கள் கேட்க விரும்பாத ‘செய்தி’களைக் கேட்பதென்பது…

பத்து வயதுக்குள்ளேயே இருந்த எங்கள் நால்வருக்கும் கிட்டத்தட்ட ஒரே ரசனைதான். நாடக வடிவிலிருந்த எதனையும் கேட்போம். நாடக வடிவிலிருந்ததால் கொட்டும் முரசையும், விஞ்ஞானம் வீராசாமியையும்கூட விடாமல் கேட்டிருக்கிறோம். ஞாயிறன்று சூரியகாந்தியை விடமாட்டோம் (நூறு ரூபாய் என்ற தொடர் நாடகம் – பெயர் மட்டும் – இன்னும் நினைவில் இருக்கிறது). ‘மண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம்; அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்’ என்ற பாட்டு முடிவதற்குள் ஓடிச்சென்று வானொலியை அணைத்திடுவோம். நாங்கள் விவசாயத்தில் ஈடுபடாததால், எங்கள் வீட்டில் யாரும் விவசாய நிகழ்ச்சிகளைக் கேட்டதில்லை. நகரத்தில் வசித்தாலும், அனைத்து விடுமுறைகளும் கிராமத்தில்தான் கழியும். வாழ்நாளில் பாதி எங்கள் கிராமத்தில்தான் எனக்குக் கழிந்திருக்கிறது. ஆனால் விவசாயிகளால் சூழப்பட்ட எங்கள் கிராமத்தில் யாரும் எந்த விவசாய நிகழ்ச்சியையும் கேட்டதாக நான் அறியவில்லை. கிராமத்துக்குப் பொது வானொலியென்று ஒன்று இருக்கும்; ஒரு கம்பத்தில் ஒலிக் கூம்பும் கட்டப்பட்டிருக்கும்; ஆனால் அது ஒலித்ததாக எனக்கு நினைவில்லை. வாரந்தோறும் வெள்ளி ஏழு மணிக்கு காந்தியஞ்சலி – ‘காந்தி மகான் என்ற காலைக் கதிரவன், காரிருள் நீங்கிட இங்கு வந்தான்’ என்ற வழக்கமான பாடல்.

நிற்க. இவையனைத்து நிகழ்ச்சிகளையும்விட தினமும் அதிகாலை 7:30க்கு ஒலிபரப்பப்படும் திரையிசைக்கு நாங்களனைவரும் தவமே இருப்போம். ஒருநாளும் அதனைத் தவறவிடமாட்டோம். விளம்பரங்களின் எரிச்சல் துளியும் இல்லாமல்(பின்னர் எந்த வருடம் என்று நினைவில்லை – திடீரென்று, ‘கூ’வென்று சங்கூதி விளம்பரங்களுக்கிடையில் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.) 8:00 மணி வரை (மட்டும்) கிட்டத்தட்ட ஐந்து பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும். சனியோ ஞாயிறோ – நாள் சரியாக நினைவில்லை – ஒரு நாள் மதியம் 1:10 முதல் 2:00 மணி வரை ஐம்பது நிமிடங்கள் எங்களுக்கு பம்பர்தான். இளையராஜா, அதற்கு முன்னர் நாட்டப்பட்ட அனைத்து கொடிகளையும் வீழ்த்திவிட்டு நாளுக்கு நாள் தன் கொடியை ஸ்திரமாக்கிக் கொண்டிருந்த காலம். அதையெல்லாம் உணரத் தெரியாத பருவம் எங்களுக்கு.

திருச்சி வானொலியில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னரோ பின்னரோ பாடல் இடம்பெற்ற திரைப்படம், இன்னார் இசையமைத்தது, இன்னார் பாடியது, சமயத்தில், இன்னார் இயற்றியது என்ற அனைத்து விபரங்களோடுதான் ஒலிபரப்புவார்கள். என்ன, அறிவிப்பாளர்தான் இழவு வீட்டிலிருந்து வந்தவர்கள்போல, எப்போதும் மாறாத சோகத்தோடே பேசுவார்கள். பெரும்பாலும் ஓரிரு ஆண்டுகளுக்குள் வெளியான திரைப்படங்களின் பாடல்களாக இருக்கும். இன்றைய நாள் வரை 80 முதல் 2000 வரை உள்ள திரைப்பாடல்கள் பெரும்பாலானவற்றின் படப்பெயர்களையும், வெளியான ஆண்டையும் அவற்றைப் பாடியவர்களையும் எனது நினைவிலிருந்து சொல்லும்போது வியக்காத நண்பர்கள் மிகக் குறைவு. பல ஒன்றுக்குமே தேறாத படங்களில்கூட ஒன்றோ இரண்டோ இன்றளவும் நிற்கும் பாடல்கள் அன்று வெளி வந்துள்ளதை நன்கு விபரமறிந்தபின் அறிந்து கொண்டேன். இதில் இளையராஜா மட்டுமல்ல, உலகுக்குத் தெரியாத வேறு சில இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களும் அடங்கும். சில பாடல்களை நான் கூறும்போது, அதுவும் அது இடம்பெற்றுள்ள திரைப்படத்துடன், இப்படி ஒரு படத்தில் இப்படி ஒரு பாடல் வந்திருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும் என்று நண்பர்கள் வியந்திருக்கிறார்கள். சிலநேரம் வெறும் பாடல் மட்டும்தான் நினைவிலிருக்கும்; உதாரணமாக ‘தேவி வந்த நேரம்’, எனக்கு மிகப் பிடித்த பாடல். அன்மையில்தான், வண்டிச் சக்கரத்தில் சங்கர்-கணேஷ் இசையில் இடம் பெற்ற பாடல் அது என்று அறிந்து கொண்டேன்.

சற்று வளர்ந்து விபரமறிய ஆரம்பித்தபோது, விபரமாகவே இளையராஜாவை ரசிக்க ஆரம்பித்து விட்டோம் (சங்கீதப் பின்னணியோ ஞானமோ எங்கள் வம்சத்திலேயே யாருக்கும் கிடையாதென்பதையும் இங்கு தெளிவுபடுத்தி விடுகிறேன்). பெற்றோரை நச்சரித்து வீட்டில் ஒரு கேசட் பிளேயர் (டேப் ரெக்கார்டர் என்றுதான் நாங்கள் சொல்வோம்) வாங்க வைத்து விட்டோம். அன்று பிலிப்ஸில் ஒரு mono player அது. கிட்டத்தட்ட அறிவிப்பாளரில்லாத, திரைப்படப்பாடல்களை மட்டுமே ஒலிக்கும் எங்களது இன்னோரு வானொலிதான் அது. கொஞ்சம் வளர வளர, செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து கேஸட்டுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தோம்.

வீட்டில், சரியான நேரத்துக்குச் செய்திகளைக் கேட்க நினைக்கும் பெரியவர்களுக்கு மிக இடைஞ்சலாக விளைந்தது எங்கள் ‘டேப் ரெக்கார்டர்’. கேசட்டுகளை யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாதென்பது நாங்கள் (உடன் பிறந்தவர்கள்) அனைவரும் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி. கேட்டு, எங்களால் தவிர்க்க முடியாது என்று ஒருவர் எங்கள் வீட்டுக்கு வர நேர்ந்து விட்டால், எங்கள் கேஸட்டுகளை, அவர், எங்கள் வீட்டை விட்டுப் போகும் வரை, ஒளித்துவைத்து விடுவோம். வாரக்கணக்கில்கூட சில கேசட்டுகளை ஒளித்து வைத்துத் தியாகம் செய்திருக்கிறோம். அந்த கேசட்டு மலையில், கிட்டத்தட்ட எங்களனைவருக்குமே, எந்த கேசட்டில் என்ன பாடல், எந்த வரிசையில் இருக்கிறதென்பது மனப்பாடமாகத் தெரியும். ஒரே மாதிரி ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கும் கேசட்டுகளில், ஓரிரு வார்த்தைகளில் ஒரு குறிப்பு மட்டுமே எழுதி வைத்திருப்போம்.

இதற்கு இடையில், எங்கள் கிராமத்தில் ஆண்டு முழுதும் ஏதாவது ஒரு திருவிழா வந்து கொண்டே இருக்கும். கிராமத்தில் இது போன்ற திருவிழாக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு ஓர் இளைஞர் கூட்டம் உண்டு (கவனிக்க, அப்பொழுது நான் சிறுவன்). என்ன பண்ணுவார்களோ தெரியாது, ஒவ்வொரு திருவிழாவுக்கும் கூம்புக் குழாய் கட்டி, பாடல்களை பல மைல்களுக்கும் கேட்குமாறு ஒலிக்க விடுவார்கள். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், எங்கள் கிராமத்துக்குப் பேருந்து கிடையாது. குறைந்தபட்சமாக 3 கி.மீ. அதிகபட்சமாக 8 கிமீ நடந்தால்தான் எங்களுக்குப் பேருந்து. எனவே அருகிலுள்ள நகரத்துக்குச் சென்றுவருபவர்களிடம் ஒலி அமைப்பாளர் எதுவரை பாடல் கேட்கிறது என்று உறுதிப்படுத்திக் கொள்வார். இவர் உத்தேசித்திருந்த தூரத்தைவிட குறைவான தூரம் பாடல் கேட்டதாக அறிந்தால் உடனே சென்று ஒலியைக் கூட்டி விடுவார். இதில் என்ன சங்கடம் என்றால், இரண்டு கூம்புகள் எங்கள் வீட்டுக்கு நேரெதிரே அரசு/வேம்பு மரங்களின் மேலே கட்டப் பட்டிருக்கும். வீட்டுக்குள்ளேயே ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்காது. எங்களுடைய தனிப்பட்ட சங்கடம் – tape recorder-ல் எங்களால் பாட்டு கேட்கமுடியாது. ‘பாட்டுதானே கேட்க வேண்டும்? அதுதான் குழாய்கட்டி சத்தமாகவே போடுகிறார்களே?’ என்று உங்களுக்குத் தோன்றக் கூடும். அங்குதான் சிக்கல்.

ஊருக்கு ஒலி அமைக்க வருபவருக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதனை கிராமத்தில் பிறந்து வளர்ந்த அனைவரும் புரிந்து கொள்வார்கள். நகரவாசிகளுக்கு அதனை விளக்கவே முடியாது. இந்த ஒலிஅமைப்பு என்பது, கிராமபோன் மற்றும் இசைத்தட்டு ஆகிய இரண்டு முக்கிய ஒலியிசைக்கும் கருவிகளை உள்ளடக்கியிருக்கும். ஆதிகாலத்து பாடல்கள் கிராமபோனிலும், 60லிருந்து சமீபத்திய பாடல்கள்வரை இசைத்தட்டுகளிலும் இசைக்கப்படும். இவற்றை இயக்குவதற்கு எப்போதும் ஒருவர், இக்கருவிகளின் அருகில் அமர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், கிராமபோன் என்றால் அதற்குச் சாவி கொடுக்க வேண்டும்; இசைத்தட்டு என்றால், அதனை அடிக்கடி மாற்ற வேண்டும்; மற்றும், இரண்டிலும், தேய்ந்த தட்டுகள் ஒரே இடத்தில் மாட்டிக்கொளும்போது முள்ளைக் கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். இந்த வேலையைச் செய்வதற்கு இளைஞர்களிடம் பெரும் போட்டி நிலவும். இந்த வேலையைச் செய்வது ஒரு கௌரவம்.

ஒலி அமைப்பவர் இந்த வேலையை தனக்குப் பிடித்த யாராவது ஓர் இளைஞரிடம் ஒப்படைத்துவிட்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவார் (எங்கள் ஊரை, எவ்வளவு மெதுவாக நடந்தாலும், ஒரு 10 நிமிடத்தில் சுற்றி வந்து விடலாம்; வேறு என்னதான் செய்வாரென்றால் – அது இந்தக் கட்டுரையில் அடங்காது). அவ்வாறு ஒப்படைக்கப்படுவது, பெரும்பாலும் ஒரே குழுவைச் சேர்ந்த இளைஞர்களிடம்தான். இவர்கள், எங்களுக்கு ஒரு தலைமுறைக்கு முந்தையவர்கள். இவர்கள், எப்போதுமே, 60/70 களின் பாடல்களை மட்டுமே ஒலிக்க விடுவார்கள். அந்த வயதில் எங்களுக்கு அது பழைய பாடல்கள்; மேலும் ஒலிபெருக்கி ஒலி, எங்கள் விருப்பப் பாடல்களை எங்கள் டேப் ரெக்கார்டரிலும் கேட்க விடாது. இதுதான் சிக்கல்.

இவ்வாறு பல சிக்கல்களுக்கிடையிலும் எங்களோடு எங்களது பாடல் வேட்கையும் வளர்ந்தது. ஆண்டுகள் உருண்டோட, எங்களுக்குச் சிறிய டேப் ரெக்கார்டரில் பாட்டுக் கேட்பது பிடிக்காமல் போய்விட்டது. மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் எங்களது பொருளாதாரச் சக்திக்கு மீறி, பெற்றோரை நச்சரித்து கடைசியாக, டேப் ரெக்கார்டரை ஒரு மாபெரும் ஜப்பான் மியூசிக் சிஸ்டம் கொண்டு ஒழித்துக்கட்டினோம். நாங்கள் பாடல்களை மேலும் இனிமையாகக் கேட்க ஆரம்பித்தோம். வளரவளர உடன் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனைகளும் சேர்ந்து கொண்டன. தனிப்பட்ட முறையில், எனக்கு, அண்மைய பாடல்களுடன், அனைத்து பழைய பாடல்களும் பிடிக்க ஆரம்பித்து விட்டன.

சற்றே வளர்ந்து விட்ட பின்னர், திரைப்பாடல்கள் கேட்பதென்றால், இந்தியாவில் அம்பாசிடர் கார்கள் போல, இளையராஜாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை உருவானது. மனோஜ்-கியான்களோ, எஸ்.ஏ. ராஜ்குமாரோ, மரகதமணியோ, அம்சலேகாவோ, சந்திரபோஸோ ஒருவராலும் இளையராஜா புயலைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இளையராஜாவின் நிழலில் சிறிது காலம் தேவா வண்டி ஓடியது. எங்களது முந்தைய தலைமுறைகள், வயதுக்கேற்ப, ‘பாகவதர் போல வருமா’, ‘ஏ.எம். ராஜா போல வருமா’, ‘எம்.எஸ்.வி. போல வருமா’ என்று தமிழ்நாட்டு மரபினை விடாமல் கட்டிக் காத்து வந்தனர். நாங்கள் இளையராஜா பக்தர்களாகி விட்டோம்.

கடைசியில் அந்த நாளும் வந்தது. ரோஜா படப்பாடல் வெளிவந்தது. அகில இந்தியாவே கொண்டாடியது. எங்களனைவருக்கும், மற்ற இசையமைப்பாளர்களின் நல்ல பாடல்கள் வெளிவந்தபோது எப்படிப் பிடித்திருந்ததோ அவ்வாறே பிடித்திருந்தது. பின்னரும் இளையராஜாவின் ஆதிக்கம் சற்று தொடர்ந்தது. அடுத்து, தமிழில், ரஹ்மானின் 2வது படமான புதியமுகம் வந்தது. பாடல்கள் சற்று சுமார்தான். இருந்தும் ரோஜா புயலால் அதுவும் கரையேறியது. எங்களுக்கும் பிடித்திருந்தது.

பின்னரும் இளையராஜாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. அடுத்து, தமிழில், ரஹ்மானின் 3வது படமான ஜென்டில்மேன் வந்தது. அது சற்றே ராஜாவின் அபிமானிகளை ஆட்டிப்பார்த்தது. பின்னர் வரிசையாக உழவன், வண்டிச்சோலை சின்னராசு, புதிய மன்னர்கள் போன்ற மரண மொக்கைப் படங்களில்கூட பாடல்கள் நன்றாகவே இருந்தன. மெதுவாக, எனது வயதையொத்தவர்கள்,’ ராஜா போல வருமா? ரஹ்மான் எல்லாம் இன்னும் ஒரு நாலஞ்சு படத்துக்குத்தான் தாங்குவார். எல்லா பாட்டும் ஒரே மாதிரியே இருக்கு. இது தாங்காது’ என்று சொல்லத் தொடங்கினார்கள். பல பத்திரிகைகள் ‘ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன’ என்று எழுதின. ராஜாவின் அபிமானிகளான நாங்கள் – அதற்கு முன்பு போல் இல்லாமல் – ராஜா இசையமைக்கும் அனைத்து படங்களின் பாடல்களையும் விடாமல் வாங்கிக் கேட்க ஆரம்பித்தோம் (அதற்கு முன்பெல்லாம் பாடல்கள் வெளிவந்து நன்றாக இருந்தால் மட்டுமே வாங்கி கேட்போம். அதிலும் நல்ல பாடல்களை மட்டும் தனியாக கேசட்டில் பதிந்து வைத்துக் கொள்வோம். இல்லா விட்டால் எங்காவது ஒலிக்கும்போது காதில் வாங்கிக் கொள்வதோடு சரி).

ராஜாவைத் தவிர வேறொருவர் இசையுலகை ஆளமுடியாது என்று (பலவீனமாக) நம்பினோம். வீரா, கோயில்காளை போல சில கேட்கும்படியான பாடல்கள் வந்தாலும் ராசைய்யா போன்ற பாடல்களை ராஜாவின் அபிமானத்தால் வலுக்கட்டாயமாகக் கேட்பது போன்ற ஒரு கொடுமையான விதி எந்த எதிரிக்கும் வாய்க்கக் கூடாது. ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாட்டெல்லாம் முதல்முறை கேட்கும்போது எனக்கு சுக்குக் கஷாயம் குடிப்பதுபோல அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ராஜா அபிமானி என்பதால் மீண்டும் மீண்டும் கேட்டேன்.

அநேகமாக 95-96ல் ராஜாவின் சிம்மாசனம் முழுமையாகவே அகன்று விட்டது. ராஜா உள்பட, ரஹ்மான், தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர் என்று பல இசையமைப்பாளர்கள் வரிசையாக ‘ஹிட்’ பாடல்களைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். மறுக்க முடியாத வகையில் மகுடம் ரஹ்மான் தலையை அடைந்து விட்டது. எனக்கு அவ்வளவுதான் நினைவா அல்லது அதுவேதான் உண்மையா என்று தெரியவில்லை. 96-97க்குப் பின் காதலுக்கு மரியாதை அதற்குப் பின் கண்ணுக்குள் நிலவு, பின்னர் சற்று சுமாராக பாரதி தவிர்த்து ராஜாவின் வேறெந்த படங்களின் பாடல்களும் இனிமையாக அமையவில்லை என்பது என் எண்ணம்.

இப்போதெல்லாம் எந்த டேப் ரெக்கார்டரும் இல்லை மியூசிக் சிஸ்டமும் இல்லை. அனைத்துமே கணினிதான். என் இசைத் தொகுப்பில் பெரும்பாலும் ராஜா பாடல்கள்தான். நான் பல அரிய பாடல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவ்வப்போது கேட்கும்போது இங்கே சொன்னதெல்லாம் மனத்துக்குள் ஓடும். ஆனால் ராஜா பித்தெல்லாம் இல்லை. ராஜாவோ, ரஹ்மானோ, அனிருத்தோ யாராயிருந்தாலும், நன்றாக இருந்தால், உறுத்தலின்றி ரசிக்க முடிகிறது. அண்மையில் ’தேரோடும் வீதியிலே’ என்றொரு படத்தின் பாடல்களைக் கேட்டவுடன் பிடித்துவிட்டது.

ஆனால், ராஜாவின் பாடல்கள் வெளிவரும்போது உண்டாகும் ஏக்கம் தவிர்க்க முடியாமல் ஆகிவிட்டது. ஆனால், வெளிவந்தபின் கிடைக்கும் ஏமாற்றமும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. பழசிராஜா பாடல்கள் வருவதற்குமுன் அதற்கு கொடுக்கப்பட்ட விளம்பரமும், அது வந்தபின் மரபுப்படி அதற்கு அளிக்கப்பட்ட புகழாரங்களும் மிகவும் சங்கடப்படுத்திவிட்டன. அதற்குப் பின் வந்த ‘தோனி’, தற்போது ‘நீதானே என் பொன் வசந்தம்’ – ம்ஹூம்; கொஞ்சம் கஷ்டம்தான்.

ராஜா மிகவும் ரசிக்கத்தக்க பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். வேற்று மொழிப் பாடல்களை மட்டுமே கேட்டுக்கொண்டு, அதுதான் பெருமை என்று கருதிக் கொண்டிருந்த பலரைத் தமிழ்பாடல் கேட்பதும் பெருமை என்று மாற்றியவர், இளையராஜா. ஒவ்வொருவருக்கும், ஓர் உச்சம் இருக்கும். மகாநதிபோல, எவ்வளவு அகன்றதாக இருந்தாலும், கடைசியில், ஒரு வாய்க்கால்தான். அதற்காக அதன் ஏற்றம் குன்றி விடாது. ஏற்றத்தையும் இறக்கத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

0

அனானிமஸ்

மதுரை புத்தகக் கண்காட்சி

மதுரைக்காரர்களுக்கு தமுக்கம் என்றாலே கண்காட்சிதான் நினைவுக்கு வரும். சித்திரைக் கண்காட்சி, தொழில் வர்த்தகக் கண்காட்சி என ஆண்டு முழுவதும் ஏதாவது கண்காட்சி நடந்து கொண்டே இருக்கும். பி.ஆர்.பி, அழகிரி போன்ற மதுரையின் பெரிய பெரிய தலைகளின் இல்ல விழாக்கள் இங்கு தான் ஊர் வியக்க நடைபெறும். ராணி மங்கம்மாள் தன் அரண்மனையில் (அதுதான், இன்றைய காந்தி மியூஸியம்) இருந்து யானைகள், குதிரைகள், வீரர்களின் சாகசங்களையும் சண்டைகளையும் வேடிக்கை பார்க்கப் பயன்படுத்திய திடல்தான் தமுக்கம்.

ஆகஸ்ட் 30 அன்று தொங்கிய 7ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவைக் காணச் சென்றிருந்தேன். மாலைப் பொழுது என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. அனுமதியும் பார்க்கிங்கும் இலவசம். உள்ளே நுழைந்தவுடன் வரவேற்றது உணவுக்கடைகள் தாம். வாடிக்கையாக அனைத்து பொருட்காட்சியிலும் உள்ளதைப் போல் பானி பூரி, ஊட்டி மிளகாய் பஜ்ஜி, டெல்லி அப்பளம், செம்மண் படிந்த இருக்கைகள், சற்றும் பொருந்தாத விலை என எதிலும் மாறுதல் இல்லை.

பதிப்பகங்களின் விளம்பரப் பலகைகளையும், ஊடகங்களின் அலங்கார வளைவுகளையும் கடந்து செல்ல, புத்தகக் காட்சி அரங்கம் காட்சியளித்தது. வாயிலில் கண்காட்சியில் பங்குபெரும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையானர்களின் பெயர்களும் கடை எண்களும் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தின் அனைத்து முன்னனி பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் அங்கு கடை விரித்திருந்தனர்.

சிறுவர் நூல்கள், தமிழ் ஆங்கில கதை, கவிதைப் புத்தகங்கள், நாவல்கள், மாணவர்களுக்கான நூல்கள், அறிவுத்தள நூல்கள் என புத்தகக் காட்சி விரிந்தது. இருட்ட இருட்ட கூட்டம் பெருகிக்கொண்டே சென்றது. இதுவும் மதுரையின் வழக்கம் தான். வெயிலைச் சமாளிக்க மக்கள் இரவில் தான் வீட்டைவிட்டு வெளியேறுவர். மதுரையின் களை இரவில் தான் தெரியும்.

கண்காட்சியில் சிறார்களுக்கான பொருட்கள் தான் அதிகம் கவனத்தைக் கவர்வதாக இருந்தது. நூல்கள், சுவர்ப்படங்கள் போக ஒலி-ஒளி சிடிக்கள், ஐ க்யூ பூஸ்டர் போன்றவை குழந்தைகளையும் பெற்றோரையும் வசியம் செய்தன. குழந்தைகளுக்கு ஐ க்யூ சோதனை செய்து தருவதாகக் கூறிய ஒரு கடையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அலைமோதியது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

அடுத்து, மாணவர்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் போட்டி தேர்வுகளை சந்திக்கவிருக்கும் மாணவர்கள். 10, 12ம் வகுப்பு எனத் தொடங்கி ஏ.இ.இ.பி, ஐ.ஐ.டி.ஜே.இ.இ, டி.என்.பி.எஸ்.சி, டி. ஆர்.பி, கேட், சிவில் சர்வீசஸ் என்று புத்தகங்கள் குவிந்திருந்தன.  பல பள்ளிகள் தங்கள் மாணவர்களைக் கூட்டி வந்திருந்தன. அட்லஸ், டிக்‌ஷனரி, வரைபடங்கள், இயர்புக் போன்றவற்றை பள்ளி மாணவர்கள் அதிகம் வாங்கினர். அதேபோல், ஆங்கில நாவல்களை ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் வாங்கி குவித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் வினவிய பின்னர் அந்நூல்கள் படிப்பதற்கு மட்டும் இல்லை என நன்கு புரிந்தது.

10, 12ம் வகுப்பு மாணவர்களைக் குறிவைத்து பல ஸ்மார்ட் க்ளாஸ் பாணியிலான குறுந்தகடுகள் “பார்த்தால் மட்டும் போதும் முழு மதிப்பெண்” எனும் விளம்பரத்துடன் விற்கப்பட்டன.

பொறியியல், மருத்துவம், மேனேஜ்மெண்ட் போன்ற ஸ்டால்களில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பார்க்கக் கூடாதது எதையோ பார்த்துவிட்டதைப் போல், மாணவர்கள் மிரண்டுபோய் நகர்ந்தனர்.

விகடன், கிழக்கு போன்ற பதிப்பகங்களில் வழக்கம் போல் கூட்டம் இருந்தது. விகடனில் மூங்கில் மூச்சு, மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ், கற்றதும் பெற்றதும் போன்றவற்றை வாசகர்கள் விரும்பி வாங்கினர். கிழக்கில் வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம், தொழில் போன்றவற்றுடன் சுஜாதா, ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்றோரின் புனைவுகளும் இடம்பெற்றிருந்தது. வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள், மூன்றாம் உலகப் போர் போன்ற புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த முறை சிக்ஸ்த் சென்ஸ், எதிர் வெளியீடு, உயிர்மைப் பதிப்பகம், நக்கீரன் மற்றும் காலச்சுவடு ஆகியவற்றுக்கு அதிக வரவேற்பு இருந்தது. கோபிநாத்தின் முகத்துடன் இருந்த புத்தகங்கள் சிக்ஸ்த் சென்ஸில் தென்பட்டன. எதிர் வெளியீட்டின் ஆனி ஃப்ராங்கின் டைரிக் குறிப்புகள், ஒற்றை வைக்கோல் புரட்சி, ரெட் சன் போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் சிறப்பாக இருந்தன. மனுஷ்யபுத்திரனின் பொது ஊடக விஜயத்துக்குப் பிறகு உயிர்மை மதுரையில் எழுச்சி கண்டதைப் போல் தெரிகிறது. ஆங்காங்கே பேருந்துகளில் எல்லாம் உயிர்மையின் விளம்பரம் தென்படுகிறது. நாங்கள் சென்ற பொழுது உயிர்மை அரங்கில் முத்துகிருஷ்ணன் இருந்தார். மறுநாள் மனுஷ்யபுத்திரன் வருவதாகத் தெரிவித்தார்.

என்.சி.பி.ஹெச், பாரதி புத்தகாலயம் போன்றவற்றில் இளைஞர்களைக் காண முடிந்தது. பாரதி புத்தகாலயத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுவரொட்டிகளுக்கு வரவேற்பு இருந்தது. இவை தவிர பிற பதிப்பகங்களிலும் சே, லெனின், காஸ்ட்ரோ போன்றவர்களைப் பற்றிய புத்தகங்கள் நிறைய இருந்தன.

இந்த முறை ஆன்மீக அரங்குகள் கலர்கலராக இருந்தன. ஓலை வேயப்பட்ட உள்ளரங்குடன் ஈஷா சுண்டி இழுத்தது. மதுரைக்கு புதுவரவான ‘ரா’வின் Infinitheism அரங்கு மிக நேர்த்தியாக காணப்பட்டது. ராமகிருஷ்ண மடம் விவேகானந்தரை முன்னிறுத்தித் தன் அரங்கை அமைத்திருந்தது. கீதா ப்ரஸ் பத்து ரூபாய்க்கு கீதை அளித்தது. சித்த மருத்துவத்தை மட்டும் முன்வைத்து ஒரு புதிய அரங்கம் முளைத்திருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் விஜய பாரதத்தைக் காண முடிந்தது. பல்வேறு ஆங்கில மற்றும் தமிழ் நூல்களுடன் ரஹ்மத் பதிப்பகம் மற்றும் யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் போன்ற இஸ்லாமிய பதிப்பகங்களும் இந்தமுறை களத்தில் இருந்தன.

பிரபல ஆங்கிலப் புத்தகங்கள் பல ஹிக்கின்போதம்ஸ், சந்த் அண்ட் கோ, சர்வோதைய இலக்கியப் பண்ணை போன்ற விற்பனையாளர்களிடத்தில் கிடைத்தது.

பத்து ரூபாய், இருபது ரூபாய், அதிரடி ஆஃபர் என மலிவு விலையில் புத்தகங்களை விற்கும் பல கடைகள் இருந்தன.

இவற்றின் நடுவே டெலஸ்கோப், ஸ்டெதஸ்கோப் போன்ற அறிவியல் சாதனங்களை விற்கும் கடை ஒன்றில் ஆள் நிற்க முடியாத அளவுக்குக் மக்கள் கூட்டம் முட்டி மோதியது.

மேலும், அனிமேஷன், கட்டவியல் போன்ற துறைகளைச் சார்ந்த தனி ஊடகங்கள் அரங்கில் இருந்தன. ஹிமாச்சல் பிரதேசத்து ஆப்பிள் ஜீஸ் எனக் கூறி ஏதோ ஒன்றை கலக்கி ஒரு கடையில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஒன்பது மணிக்கு சரியாக ஒலிப்பெருக்கியில் “இன்றைய தினம் பொருட்காட்சி முடிகிறது. மீண்டும் நாளைக் காலை சந்திப்போம்” எனக் குரல் ஒலித்தது. கூட்டம் கலையாததால் ஒரு செக்யூரிட்டி வந்து அனைவரையும் விரட்டினார். அடுத்த கால் மணி நேரத்தில் தமுக்கத்தின் முதன்மை வாயில் மூடப்பட்டது. அடித்துப் பிடித்து வெளியேறினோம்.

கடந்த முறையை விட இந்த முறை புத்தகக்காட்சி பல வகையிலும் சிறப்பாக அமைத்திருந்தது. தி ஹிந்து செய்திக்குறிப்பு இங்கே. ஆகஸ்ட் 30 தொடங்கிய மதுரை புத்தகக் கண்காட்சி செப்டெம்பர் 09 அன்று முடிவடைகிறது.

0

பாபா பகுர்தீன்

தலையாட்டி பொம்மை

தஞ்சை பல விஷயங்களுக்குப் புகழ் பெற்றது. தலையாட்டி பொம்மை அவற்றில் ஒன்று. தஞ்சையில் பெரிய கோவிலுக்கு வெளியிலும் பேருந்து நிலையம் அருகே சில கடைகளிலும் தலையாட்டி பொம்மைகள் கிடைக்கும்.

பல வண்ணங்களில், வெவ்வேறு வடிவங்களில் கண்ணைக் கவர்கின்றன இந்த பொம்மைகள். பல முறை கீழே தள்ளினாலும், எழுந்து கொள்கிறது. கழுத்துக்கு மேலே, தலையை மட்டும் காற்றில் ஆட்டியவாறு நடனம் புரிகிறது.

பெரிய கோவிலுக்கு அருகே தலையாட்டி பொம்மை விற்கும் பெரியவருடன் பேசும்போது  அவர் தலையாட்டி பொம்மை குறித்த சில தகவல்களை கூறினார். அவர் கூறியது இதோ.

தலையாட்டி பொம்மை தஞ்சைக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் என்கிற ஊரில் தான் தயாரிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக சில குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபடுகின்றன.

இந்த பொம்மை மூன்று வித சைஸ்களில் வருகிறது. சைஸை பொறுத்து விலை ரூ 30,  ரூ 60. அல்லது ரூ 80 ரூபாய்க்கு கிடைக்கிறது (வெளி நாட்டு சுற்றலா பயணிகளுக்கு ரேட்டே வேறு !)

பொம்மையின் கீழ் பாகம் சற்று வெயிட்டான களிமண்ணால் செய்யப்பட்டது. மேற்பாகம் காகிதக் கூழால் ஆனது என்பதால்  எடை மிகவும் குறைவு.  இதனால் தான் மேல்பாகம் வளைந்து கீழே விழுந்தாலும், கீழே உள்ள அதிக எடை காரணமாக உடன் மேலே வந்து விடுகிறது.

இப்படி காகிதம் மற்றும் களிமண்ணால் பொம்மையை செய்தபின் அழகான வண்ணம் பூசுகின்றனர். வெவ்வேறு நிறங்களில் தயாராகி தஞ்சை வந்து சேர்கிறது பொம்மைகள்.

எவ்வளவோ சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தஞ்சை கோயில் வெளியில், இந்த தலை ஆட்டி பொம்மைகளுடன் பல வருடங்களாக தன் வாழ்க்கையை கழிப்பதாக சொன்னார் பெரியவர்.

கொலு நேரத்தில் மட்டுமே இந்த பொம்மைகள் நிறைய விற்பனை ஆகும் என்றும் மற்ற நேரங்களில் இதை விரும்பி வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் வருந்தினார்.

நிறைய பேர் பொம்மையை பார்த்து விட்டு விலை கேட்டு விட்டு சென்று விடுகின்றனர். பொம்மையை பார்ப்போரில், வாங்குவோர் குறைந்த சதவீதமே ! இருப்பினும் தஞ்சை தலை ஆட்டி பொம்மையை மிக விரும்பி, ரசித்து பார்த்து வாங்கி போவோரும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

தலையாட்டி பொம்மை என்றாலே ஆணைத் தான் சொல்வதாக பொதுவாக நினைப்போம். மனைவி சொல்லை கேட்கும் கணவர்களைத் தலை ஆட்டி பொம்மை என சொல்வது வழக்கம். (எல்லா வீட்டிலும் இதே கதை தானே?)  நிஜத்தில் பெண் தலையாட்டி பொம்மையும் கூட இருக்கிறது. பெரியவரின் நினைவாக ஆண் மற்றும் பெண் தலையாட்டி பொம்மை வாங்கி கொண்டு விடை பெற்றோம்.

0

மோகன் குமார்

நீயா நானா : விஜய் டிவி இப்படிச் செய்யலாமா?

தமிழர்கள் சில விஷயத்தை பிடிக்காவிட்டால் கூட, திட்டிக்கொண்டே தொடர்ந்து செய்வார்கள். “கிரிக்கெட் மக்களை கெடுக்கிறது” என்று சொல்லிகொண்டே மேட்ச் பார்ப்பார்கள். சினிமாவை திட்டி கொண்டே, சினிமா செய்தி ஒன்று விடாமல் படிப்பார்கள். அந்த வரிசையில் இணையத்தில் மிக அதிகம் விமர்சிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா! என்ன தான் இந்நிகழ்ச்சியையும் கோபியையும் இணையத்தில் திட்டினாலும் நிறைய பேர் நிகழ்ச்சி பார்க்கின்றனர் என்பது நிதர்சனம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

நீயா நானாவில் பங்கு பெற வேண்டுமெனில் உங்களுடைய அரை நாளை நீங்கள் இதற்குச் செலவழிக்கணும். நாம் செல்லும் போது நமக்கு முன் இன்னொரு நீயா நானா ஷூட்டிங் நடக்கும். அது முடிந்து, அதன் பின் கோபிநாத் சற்று ஓய்வு எடுத்து விட்டு மறுபடி ஷோ ஆரம்பிப்பதற்குள்ளேயே பல மணிகள் ஆகிடும். அதன் பின் நான்கைந்து மணி நேரம் ஷூட்டிங் நடக்கும்.

இப்படி அரை நாளை செலவழித்து ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எதற்காக? நம் முகம் டிவியில் தெரியவேண்டும் என்னும் எண்ணம். மேலும் நமக்கு தெரிந்த எல்லோருக்கும் நாம் பேசியது தெரிந்தால் அதில் ஒரு மகிழ்ச்சி. ஆனால், நாம் பேசி விட்டு வரும் நிகழ்ச்சி என்றைக்கு ஒளி பரப்பாகிறது என்ற தகவலை நீயா நானா அணி சொல்வது இல்லை. நீங்கள் பங்கேற்க உங்களை தொலை பேசியில் அழைத்த நபரை தொடர்ந்து விடாமல் அழைத்து கேட்டால், ஒருவேளை நீங்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சி என்று வரும் என சொன்னாலும் சொல்லலாம்.

இதை விட கொடுமை,  இப்படி அரை நாள் செலவழித்து நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், பேசுகிற உங்கள் பேரை அவர்கள் போடுவதே இல்லை!

ஒவ்வொரு டிவியிலும் ஒவ்வொரு டாக் ஷோ ஒளிபரப்பாகிறது. சன் டிவியில் அரட்டை அரங்கம், ஜெயாவில் விசுவின் மக்கள் அரங்கம், ராஜில் அகட விகடம் என்று பல்வேறு டாக் ஷோக்கள் வருகின்றன. அவை அனைத்திலும் பேசுபவர் பெயரை போடவே செய்கிறார்கள். ஆனால் நீயா நானா மட்டும் பேச்சாளர் பெயரை போடுவதே இல்லை.

இதற்கு என்ன காரணம் சொல்ல நினைக்கிறது நீயா நானா அணி?

“இது ஒரு ரியாலிட்டி ஷோ; பேசுபவர் பெயர் போட்டால் பிரச்சனை” என்றா? எனில் அந்த வாதத்தை ஏற்க முடியாது. எப்போது ஒருவர் டிவியில் தன் முழு உருவம் காட்டுகிறாரோ அப்போதே அவர் பற்றிய முழு ஐடன்டிட்டி தெரிய வந்து விடுகிறது. எனவே பெயர் போடாவிட்டால், பேசியது நான் அல்ல என அவர் தப்பிக்க முடியாது

எனக்கு தெரிந்தவரை இதற்கு நிஜமான காரணம், நீயா நானா அணி இதனை தனி வேலையாக எடுத்து செய்ய விரும்ப வில்லை என்பதே. ஏற்கெனவே இருக்கும் பல வேலைகளில், பெயர்களை குறித்து வைத்து கொண்டு பேசுவோருக்கு நேரே பெயர் போட, சோம்பேறித்தனம். அதுதான் நிஜக் காரணம்!

ஆனால் அரட்டை அரங்கம், அகட விகடம் முதலிய ஆவேரேஜ் நிகழ்ச்சிகளில் இது முடிகிறது என்றால் தமிழின் நம்பர் ஒன் டாக் ஷோ என்று சொல்லி கொள்ளும்  நீயா நானா இதனை செய்ய தவறுவது ஏன்?

இதுவரை இருமுறை பேசியபோதும் நிகழ்ச்சி நடத்துவோரிடம் இந்த விஷயத்தை நான் எழுப்பியே வந்தேன். அப்போதெல்லாம் அவர்கள் “செய்றோம் சார். இது பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் ” என்றார்களே ஒழிய, மறுக்கவே இல்லை.

இந்த நிகழ்ச்சியில் பேசுவோருக்கு எந்த வெகுமதியும் கிடையாது! வெற்றி பெற்றோர் என இருவருக்கு மட்டும் பரிசு கொடுக்கபடுவதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சி அன்று அந்த பரிசு தரப்படுவது இல்லை. அதன் பின் பரிசு சென்று சேர்கிறது எனில் மகிழ்ச்சியே. ஆனால் நிகழ்ச்சியில் பேசும் மற்ற பேச்சாளர்களுக்கு பணம் அல்லது வேறு எந்த பரிசும் இல்லை. உணவு கூட வெகு அரிதாக சாப்பாட்டு நேரம் என்றால் மட்டுமே ஏற்பாடு செய்வார்கள். பெரும்பாலும் இல்லை.

கடைசியில் பரிசு வழங்கும் போது கூட கோபி “ரெண்டாவது ரோவில் சிகப்பு சட்டை போட்டவருக்கு பரிசு” “முதல் ரோவில் ஜீன்ஸ் போட்ட பெண்ணுக்கு பரிசு” என்கிறாரே ஒழிய அவர்கள் பெயர் சொல்வதே இல்லை.

ஒவ்வொரு மனிதனும் மிக அதிகம் விரும்பும் வார்த்தை அவரவர் பெயர்தான் என்பது சுய முன்னேற்ற நூல்களை எழுதிய கோபிக்கு தெரியவா இல்லை? என்ன கொடுமை சார் இது!

நீயா நானா நிகழ்ச்சியை பலரும் பார்க்க காரணம் அதில் பேசும் பல வித மக்களின் பேச்சு மற்றும் அனுபவம் தான். ஆனால் அதற்கு உரிய மரியாதையை , அவர்கள் பெயர் போட்டு செலுத்த நீயா நானா தவறுவது என்ன விதத்தில் நியாயம்?

சமூக அவலங்களை தட்டி கேட்கும் நீயா நானா, தனது தவறை முதலில் திருத்தி கொள்ளட்டும் !

0

மோகன் குமார்

காஷ்மிர் டைரி – 3

நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்தபிறகு ஹோட்டலைக் காலி செய்துவிட்டு சிகாகோ என்னும் பெயர் கொண்ட ஷிகாராவுக்குக் குடிபுகுந்தோம். அடுத்த மூன்று மூன்று நாள்களுக்குப் படகுதான் வீடு.  முதல் நாள், டால் ஏரியை ஒட்டிய குடியிருப்பு மற்றும் கடைப் பகுதிகளைச் சுற்றினோம்.  பஞ்சாபி தாபாக்கள், மீன், இறைச்சிக் கடைகள், துணிக்கடைகள், காஷ்மிர் ஷால், போர்வைகள் விற்கும் கடைகள், கைவினை அங்காடிகள், சிறு உணவகங்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றைக் கடந்து சென்றோம். காய்கறிகளை கை வண்டிகளில் கொண்டு சென்றார்கள் வியாபாரிகள். இந்துக்களைக் கவர சிவபெருமான் படமும், இஸ்லாமியர்களைக் கவர உருது வாசகங்களும் கடைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

தகரக் கூரையுடன் கூடிய வீடுகளின் தொகுப்புகள் இடையிடையே தென்பட்டன. இருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறு படகுகளைப் பலர் வைத்திருக்கிறார்கள். கடைகளுக்குச் சென்று வர, சாமான்கள் வாங்கி வர, சிறு பயணங்கள் மேற்கொள்ள இவை பயன்படுத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களும் பெண்களும் தன்னந்தனியே படகைச் செலுத்துகின்றனர்.  கடந்து செல்லும்போது குழந்தைகள் கையசைக்கிறார்கள். ஷிகாராவில் அமர்ந்திருக்கும்போது கடக்க நேரிட்டால், மலர் ஒன்றை எடுத்து புன்சிரிப்புடன் அளிக்கிறார்கள்.

செங்கல் வீடுகளின் கூரைகளும்கூட பிரமிட் போன்ற அமைப்புடன்தான் இருக்கின்றன. பனி மழை பொழியும்போது சிதறல்கள் எதுவும் வீட்டின் மேல் தங்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு. நாங்கள் சென்ற பொழுது, மரங்கள் இலைகளின்றி குச்சிக்குச்சியாக நின்றுகொண்டிருந்தன. காய்த்து தொங்கும் ஆப்பிள்களைப் பார்க்கமுடியவில்லை. ‘அது பரவாயில்லை, ஆப்பிள் மரங்களைக் கண்ட பலரால் பனிப்பொழிவைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. அது பெரிய துயரமல்லவா?’ என்றார் நண்பர் ஒருவர்.

உள்ளூர் மக்கள் தங்களுக்கான ஆடைகளையும் உடைகளையும் இதுபோன்ற தள்ளுவண்டி வியாபாரிகளிடம் இருந்தே வாங்கிக்கொள்கிறார்கள். கம்பளி, கையுறை, காலுறை, அங்கிகள், தொப்பிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என்று பலவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இரு சக்கர வாகனங்களில், சட்டைகளையும் சுடிதார் துணிகளையும் கட்டி எடுத்து வந்து விற்கிறார்கள்.

தகரத் துணிக்கடைக்கு முன்பாக அமர்ந்திருக்கும் ஒரு வியாபாரி. டால் ஏரியில் வசிக்கும் நடுத்தர வர்க்க ஷிகாரா பணியாளர்கள் சிலரை இவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்களும் படகு வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். ஒய்யாரமாக அல்ல ஒதுக்குப்புறமாக.  முழுக்க முழுக்க தகரத்தால் உருவாக்கப்பட்ட ஷெட்டுகள். வெடவெடக்கும் குளிரில் பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள் ஒடுங்கியிருக்கிறார்கள். ஆண்களில் சிலர் வியாபாரிகளாகவும் சிலர் துப்புறவுத் தொழிலாளர்களாகவும் சிலர் ஷிகாராவில் பணிபுரிபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கான அரசுத் தகரப் பள்ளிகள் அருகிலேயே இருக்கின்றன. ஒருவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்தோம். எலுமிச்சை தேநீர் கொடுத்து உபசரித்தார்கள்.  சுற்றுலாப் பயணிகளைச் சுற்றிச்சுற்றித்தான் இவர்கள் வாழ்க்கை இயங்கிக்கொண்டிருக்கிறது.

மீன் வற்றல் போன்ற ஒன்றை இவர் தன் வீட்டுக்கு வெளியில் காயவைத்துக்கொண்டிருந்தார். தயக்கத்துடனும் வெட்கத்துடனும் சிறிதே பேசினார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிநீர் தொட்டி இருக்கிறது. இந்தப் பகுதியில் மின்சாரம் கிட்டத்தட்ட தடையின்றி கிடைக்கிறது. ஏரிக்கரையை மாசுபடுத்துவது இவர்களுடைய வாழ்வாதாரத்தையே குலைத்துவிடும் என்பதால் கழவுநீரைத் தனியே இன்னொரு தொட்டியில் சேகரித்து அப்புறப்படுத்துகிறார்கள். டால் ஏரியை அவ்வப்போது துப்புறவுப் படகுகள் உலா வந்து தூர் வாருவதால் சுத்தமாகவே இருக்கின்றன. அடுப்புக்குப் பெரும்பாலும் விறகுகளே பயன்படுத்தப்படுகின்றன.

காஷ்மிரில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, பாதுகாப்பு வசதிகள் போதவில்லை என்றார் இவர். ‘சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சோன்மார்க், குல்மார்க் போன்ற இடங்களில் உள்ள ராணுவத்தினரும் ஸ்ரீ நகர் போன்ற பகுதிகளில் உள்ள ராணுவத்தினரும் வெவ்வெறான முறையில் உங்களை நடத்துவார்கள். உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு நீங்கள் இந்துவா, இஸ்லாமியரா என்பதைப் பொறுத்தும், நீங்கள் காஷ்மிர் வாசியா, சுற்றுலாப் பயணியா என்பதைப் பொறுத்தும் அமையும்.’

டால் ஏரியில் இயங்கும் மிதக்கும் தபால் நிலையம்.  சச்சின் பைலட், உமர் அப்துல்லா இருவராலும் 2011ல் திறந்து வைக்கப்பட்டது. புகைப்பட போஸ்ட்கார்ட், காஷ்மிர் பற்றிய சில புத்தகங்கள் ஆகியவையும் இங்கு கிடைக்கின்றன.

(தொடரும்)

காஷ்மிர் டைரி – 2

ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது இளஞ்சூடும் இளங்குளிரும் பரவிக்கொண்டிருந்தது. அங்கேயே வண்டி அமர்த்திக்கொண்டு புறப்பட்டோம். உள்நுழையும் வாகனங்களும் வெளியேறும் வாகனங்களும் பல அடுக்கு சோதனைச் சாவடிகளைக் கடக்கவேண்டியிருந்தது. எங்களுடன் வந்திறங்கியவர்களைத் தவிர வேறு ஆள்கள் யாரையும் விமான நிலையத்தில் காணமுடியவில்லை. ஒன்றிரண்டு டாக்ஸிவாலாக்கள் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதால், ஒன்றிரண்டு படங்களை மட்டுமே எடுத்து திருப்திபட்டுக்கொண்டேன்.

 

மக்கள் புழங்கும் இடத்தை அடைவதற்கு சில நிமிடங்கள் பிடிக்கின்றன. ஓரடி கடப்பதற்குள் குறைந்தது நான்கு ஏகே 47 ஜவான்களைச் சாலையின் இரு பக்கங்களிலும் காணமுடிந்தது. உருது மொழிப் பலகைகள் கொண்ட சிறு கடைகள் அடுத்தடுத்து விரிகின்றன. இரானியப் படங்களில் வருவதைப் போன்ற நீண்ட அங்கி அணிந்த ஆண்கள் சைக்கிளில் விரைந்துகொண்டிருந்தனர். மீண்டும் இரானியப் படங்களில் வருவதைப் போல் அழகாக வெள்ளை முக்காடு அணிந்த காஷ்மிர் மாணவிகள் எறும்பு வரிசையாக நடந்து சென்றனர். அவர்கள் கடந்து செல்லும்வரை எங்கள் வண்டி நிறுத்திவைக்கப்பட்டது.

நகருக்குள் நுழைய நுழைய, ஜவான்களின் அடர்த்தி சற்றே குறையத் தொடங்கியது என்றாலும், திரும்பும் பக்கமெல்லாம் ஏகே 47 முன்வந்து நின்று பயமுறுத்தியது. இவர்களைக் கடந்துசென்றே காஷ்மிரிகள் காலை தேநீர் அருந்தவேண்டும். பள்ளிக்கும் பள்ளிவாசலுக்கும் செல்லவேண்டும். காய்கறிகள் வாங்கவேண்டும். வேலைக்குப் போகவேண்டும்.

Waugh in Abyssinia என்னும் புத்தகத்தில் Evelyn Waugh, இப்படிப்பட்ட ஒரு காட்சியை வருணித்திருப்பார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் முசோலினியின் இத்தாலியப் படைகள் அபிசீனியாவை ஆக்கிரமித்திருக்கும். ஆனால், அதை ஆக்கிரமிப்பு என்று நேரடியாகப் பளிச்சென்று சொல்ல எவிலின் வாஹ் தயங்குவார். ராணுவ வீரர்கள் அபிசீனியர்களைப் பாதுகாப்பதற்காகப் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள் என்பார். அவர்கள் அபிசீனியர்களுடன் ஒன்றுகலந்து கொஞ்சிக் குலாவி பழகுவார்கள் என்றும், அபிசீனியக் குழந்தைகள் இத்தாலிய வீரர்களுக்கு பூக்கள் பரிசளிப்பார்கள் என்றும் பதிலுக்கு வீரர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய்கள் வழங்குவார்கள் என்றும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருப்பார். நமக்கே சந்தேகம் வந்துவிடும், இத்தாலியர்கள் அபிசீனியர்களை ஒழிக்கவந்தவர்களா அல்லது உய்விக்க அனுப்பப்பட்டவர்களா என்று.

சுமார் இருபது நிமிட பயணத்துக்குப் பிறகு, ஹோட்டலை அடைந்தோம். முன்னரே இணையம் வாயிலாக தங்குமிடம் (Srinagar Embassy Hotel) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சென்னையில் இருந்து வருகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சாவி வாங்கி அறைக்குள் நுழைந்தபோது, திருவல்லிக்கேணி பேச்சிலர் ரூமுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. போதாக்குறைக்கு, நாற்காலி, கட்டில், பூட்டு, டவல் என்று எதை தொட்டாலும் ஐஸ் குளிர். பாத்ரூமில் ஹாட் வாட்டர் ஹாத்தா நஹி என்று நியூஸ் வாசித்துவிட்டுப் போனார் ஹோட்டல் பணியாளர் ஒருவர். மற்ற நண்பர்கள் மதியத்துக்கு மேல் வரவிருந்தார்கள். பைகளை அங்கேயே போட்டுவிட்டு, இரண்டடுக்கு ஸ்வெட்டர், ஜெர்கின் அணிந்துகொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டோம்.

புவிப்பரப்பு, குளிர், மக்கள், கட்டடங்கள், உணவு, சாலைகள், கடைகள் என்று காஷ்மிரின் எந்தவொரு அம்சமும் இந்தியாவை நினைவுபடுத்தவில்லை. ஒரு புதிய நாட்டில் நடைபோடும் உணர்வே ஏற்பட்டது.

காஷ்மிர் மிகத் தாமதமாகவே உறக்கம் கலைந்து விழித்துக்கொள்கிறது. ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்தோம். மேகி, சப்பாத்தி, உப்புமா மூன்றும் கிடைப்பதாகச் சொன்னார் பணியாளர். உப்புமா ஆர்டர் செய்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த உணவகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். மிக மிக சாவகாசமாக அவர் நடந்து வந்து, தண்ணீர் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று அடுப்பு மூட்டி, பிறகு வெளியில் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு, ஏதோ ஒரு வகை பாக்கை வாயில் கொட்டி, அசைபோட்டு, இடுக்கில் மாட்டிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் குத்தி எடுத்து, பிறகு உள்ளே சென்று உப்புமாவை ஒரு கிண்ணத்தில் கவிழ்த்து கொண்டு வந்து கொடுத்தார். அவரே பில் எழுதிக்கொடுத்தார். அவரே பணம் வாங்கிக்கொண்டார். வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

டால் ஏரியின் கரையில் வரிசையாக ஷிகாரா எனப்படும் படகு வீடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு படகு வீட்டுக்குள் எட்டிப் பார்த்தோம். நடுத்தர வயது கொண்ட ஒருவர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் படகு வீட்டைப் பராமரித்து, விருந்தினர்களை ஈர்த்து, வரவேற்று தங்கவைப்பது அவர் பணி. பெயர், உமர். ‘சென்னைக்கு ஒரு முறை வந்திருக்கிறேன். கடும் சூடு!’ என்றார். ஒரு பிளாஸ்க் நிறைய தேநீரும் (‘காஷ்மிர் சிறப்பு தேநீர், இடைவெளியின்றி அருந்திகொண்டே இருக்கலாம்’) இரு கோப்பைகளும் கொண்டு வந்து வைத்தார். வீட்டின் முகப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

‘சமீபமாக இங்கே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றாலும், எப்போதும் எதுவும் நடக்கலாம் என்னும் நிலையே நீடிக்கிறது. நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். அமைதியான இடத்தில்தான் வியாபாரம் செய்யமுடியும். குழந்தைகளைப் படிக்கவைக்கமுடியும். திருமணம் செய்துவைத்து வாழவைக்கமுடியும்.’

உமரின் ஷிகாரா ஒப்பீட்டளவில் சிறியது. இரு படுக்கையறைகளும் ஒரு வரவேற்பறையும் ஒரு சமையலறையும் கொண்ட நடுத்தர வர்க்கத்துப் பயணிகளுக்கான இருப்பிடம். ஒரு நாளுக்கு ஒருவருக்கு 500 ரூபாய். உயர்ரக வசதிகள் கொண்ட சொகுசு ஷிகாரா என்றால் சில ஆயிரங்கள் வரை பிடிக்கும்.  ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர், மின்சார இணைப்பு உள்ளது. கேரளாவில் உள்ள படகு வீடுகளைப் போல் காஷ்மிர் ஷிகாராக்கள் பயணம் செய்வதில்லை. ஏரியின் கரைகளில் நடப்பட்டுள்ள ஆடாத, அசையாத வீடுகள் இவை.

நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போதே சிறு படகுகள் அசைந்து அசைந்து எங்களிடம் வந்து சேர்ந்தன. ஓரிரு வியாபாரிகளைக் கொண்ட சிறிய அசையும் கடைகள் அவை. ஷிகாராவில் தங்கியிருப்பவர்களிடம் வியாபாரம் செய்வதே இவர்கள் நோக்கம். எங்களை நெருங்கியவர்கள் சல்வார், கம்பளி ஆடைகளை விற்பனை செய்பவர்கள். டால் ஏரி முழுக்க இப்படிப்பட்ட பல வியாபாரிகளைக் காணமுடியும். கைவினைப் பொருள்கள், குங்குமப்பூ, பெப்சி, ஸ்வெட்டர் என்று பலவற்றை இவர்கள் படகுகளில் கொண்டுவருகிறார்கள். நீங்கள் கடைகளைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. கடைகள் தாமாகவே உங்களைத் தேடிவரும்.

உமரின் குடும்பத்தினர் படகு வீட்டுக்குப் பின்புறத்தில் குடியிருந்தனர். வீட்டுக்கு அழைத்துச்சென்று காட்டினார். தகர மேற்கூரையுடன்கூடிய சிறிய கூடாரம் அது. சமைக்க, உறங்க என்று இரண்டு சிறு அறைகள் இருந்தன. கரைக்கு அருகில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துகொண்டிருந்தார் உமரின் மனைவி. படகு வீட்டில் தங்கும் விருந்தினர்களுக்குச் சமையல் செய்யும் பொறுப்பு இவருடையது. பிற பணியாளர்களைத் தேவைக்கு ஏற்ப அமர்த்திக்கொள்கிறார்கள். படகு வீட்டின் உரிமையாளர் காஷ்மிரில் வேறொரு பகுதியில் தங்கியிருந்தார்.

‘சுற்றுலாவை நம்பித்தான் காஷ்மிர் இயங்குகிறது. கைவினைப் பொருள்கள், துணி, மணிகள், மரவேலைப்பாடுகள் என்று இங்கு நாங்கள் மேற்கொள்ளும் தொழில்கள் அனைத்தும் காஷ்மிரிகள் அல்லாதவர்களுக்காகத்தான்.’

‘ஜவான்கள்மீது எனக்கு அதிக மரியாதை இருந்ததில்லை. இவர்கள் நடத்தும் ஆபரேஷன்கள் அச்சமூட்டக்கூடியவை. விசாரணை எதுவுமின்றி தண்டனை கொடுத்துவிடுவார்கள். இவர்கள் சுட்டுக்கொல்பவர்களில் எத்தனைப் பேர் உண்மையில் தீவிரவாதிகள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.’

(தொடரும்)

காஷ்மிர் டைரி – 1