செய்யுள் முதல் கண்ணதாசன் வரை

PoetKannadasanசெய்யுள்களும் சிக்கல்களும்

செய்யுள்களையும் காவியங்களையும் மொழிபெயர்க்க முடியும் என்ற விவாதம் மிகவும் பழமையானது. எவ்வளவுதான் உண்மையாகவும், சாதுர்யமாகவும் மொழிபெயர்த்தாலும், செய்யுளின் ஜீவனைக் கொண்டு வர முடியாது என்று எட்னா செயிண்ட் வின்சன் மிலே என்பவர் குறிப்பிடுகிறார்.

செய்யுள் என்பது மொழிபெயர்க்கக்கூடியதுதான் என்று ஜான்சன், போப், ஹொரேஸ் ஆகியோர் கருதுகின்றனர். செய்யுளை வேறு மொழிக்குக் கொண்டு போவது என்பது அநேகமாக இயலாத ஒன்றாகும் என்கிறார் டிரைடன் என்ற அறிஞர். கால்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு கயிறுமீது நடனம் ஆடுவதற்கு ஒப்பாகும் என்றும் அவர் வர்ணிக்கிறார்.

ஷெல்லி இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். ஒலியும் உணர்வும்தான் செய்யுளின் ஜீவன். இதனை மொழி மாற்றம் செய்வது வீணான வேலை என்கிறார் அவர்.

செய்யுளை மொழிபெயர்ப்பது என்பது மிகவும் கடினமான பணிதான். இருந்தும் உலகம் பூராவும் பாராட்டப்படும் மொழிபெயர்ப்புகள் நான்கை இங்கே குறிப்பிடவேண்டும்.

 1. ஷேக்ஸ்பியரின் பதினேழு நாடகங்களை ஜெர்மன் மொழியில் Schlegel மொழிபெயர்த்தது.
 2. கதேயின் ஃபாஸ்ட் ஆங்கிலத்தில் Bayard Taylor என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
 3. உமர்கயாமின் ருபியாத் எட்வர்டு ஃபிட்ஜெரால்டால் மொழிபெயர்க்கப்பட்டது.
 4. கீதை சம்ஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் சுவாமி பிரபாவானந்தா மற்றும் கிறிஸ்டோபர் ஷர்வுட் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

நவீன மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு முறையைப் பரிசோதித்து வருகிறார்கள்.

 • மூலத்தின் ஒலியையும் மற்ற மொழியையும் இணைப்பது.
 • வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பது.
 • மூலச் செய்யுளின் மாத்திரைகளைக் கணக்கில் கொள்வது.
 • உரைநடையில் சொல்வது.
 • எதுகை மோனையைக் கணக்கில் கொள்வது.
 • செய்யுளுக்கு அர்த்தம் (பொழிப்புரை) தருவது.
 • செய்யுளை விளக்குவது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையது என்றாலும் செய்யுளை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல் தீரவில்லை.

மேடைப் பேச்சும் மொழிபெயர்ப்பும்

மேடைப் பேச்சை மொழிபெயர்ப்பவருக்கும் எழுதியதை மொழிபெயர்ப்பவருக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. எழுத்தை மொழிபெயர்ப்பவருக்குச் சிறந்த எழுத்துத் திறமை வேண்டும். மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழியில் வெளிப்படுத்தும் திறமை வேண்டும். இதனால்தான் மொழிபெயர்ப்பாளர்கள் ஒரே ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். குறிப்பாக, தங்களுடைய தாய்மொழியை. மூல மொழியைப் புரிந்துகொள்வதும், அந்த மொழி பேசும் நாட்டின் நாகரிகத்தைப் புரிந்துகொள்வதும் சிறந்த அகராதிகளைக் கொண்ட படிப்பகத்தைப் பயன்படுத்துவதும், துணை நூல்களை வைத்துக் கொள்வதும் அவசியமாகும்.

ஆனால், மேடை மொழிபெயர்ப்பாளரின் பணி கொஞ்சம் வித்தியாசமானது. அவர் தொடர்ச்சியாகவம் உடனடியாகவும் மொழிபெயர்க்க வேண்டும். எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்க முடியாது. ஒரு புறம் மூல மொழியிலிருந்து மொழிபெயர்த்துக் கொண்டே மற்றொரு புறம் மூல மொழியில் பேசப்படுவதையும் கவனிக்கவும் வேண்டும். மனதில் அடுத்த வாக்கியத்துக்கான வார்த்தை அடுக்குகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்த்ததை சரி பார்க்கக்கூட நேரம் இருக்காது. விரைவுதான் முக்கியம். இல்லை என்றால் பேச்சாளர் சொன்னது மறந்து விடும்.

பொதுவாக பேச்சாளர் குறிப்பிட்ட கால அளவில் நிறுத்தி மொழிபெயர்ப்பாளருக்கு அவகாசம் கொடுப்பார். தொடர்ச்சியான மொழிபெயர்ப்பின் போது அவர் குறிப்புகளை எடுத்துக் கொள்வார். இந்தக் குறிப்புகள் ஒரு உதவியாளரின் குறிப்பு போன்று இராது. அது மூலப் பேச்சாளரின் சிந்தனையின் குறியீடாக இருக்கும்.

எழுத்தை மொழிபெயர்ப்பவருக்கும், பேச்சை மொழிபெயர்ப்பவருக்கும் அடிப்படையான வித்தியாசம் உண்டு. அதே சமயம் இருவருமே மூல மொழி, பெயர்ப்பு மொழி ஆகிய இரண்டிலும் ஆழமான ஞானம் உடையவர்களாக இருக்க வேண்டும். விஷய ஞானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இங்கு ஒரு மொழியின் வார்த்தைக்குப் பதிலாக வேறு மொழி வார்த்தையை இட்டு நிரப்பினால் போதாது. ஒரு மொழியில் கூறப்பட்ட சிந்தனையை மற்ற மொழியில் சொல்லவேண்டும். அவர் மூல மொழி வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கிறார். அந்த அர்த்தத்துக்கு மாற்று மொழியில் வார்த்தைகளைக் கொடுக்கிறார்.

மேடையில் மொழிபெயர்ப்பவர்

 • பேசப்படும் பொருள் பற்றிய முழுமையான ஞானம் வேண்டும்.
 • இரண்டு மொழியின் கலசாரத் தன்மை பற்றிய முழுமையான தெளிவு வேண்டும்.
 • இரண்டு மொழி வார்த்தைகளையும் நன்கு தெரிந்து பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.
 • சிந்தனைகளைத் தெள்ளத்தெளிவாக இரண்டு மொழியிலும் வெளிப்படுத்தும் திறமை வேண்டும்.
 • தொடர்ச்சியாக மொழிபெயர்க்கும் போது குறிப்புகளைத் திறமையாக எடுக்கத் தெரிய வேண்டும்.
 • உடனடி மொழிபெயர்ப்பில் சில ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

தகவல் தொழில் நுட்பமும் மொழிபெயர்ப்பும்

தாஷ்கண்ட நகரில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் இறந்து போனார். டெலி பிரிண்டரில் வந்திருந்த செய்தியை ‘தினமலர்’ பத்திரிகை டெலிபிரிண்டர் செய்தி வந்த காகிதத்தையே போட்டோ பிடித்து முதல் பக்கத்தில் போட்டது. தமிழ் நாளிதழ்களில் இது புதுமையாகப் பேசப்பட்டது.

இன்று கம்ப்யூட்டர் மூலம் மொழிபெயர்க்கும் காலம் வந்து விட்டது. எட்டு வயது சிறுவன் Popeye கார்ட்டூன் பார்க்கிறான். Popeye தமிழ் பேசுகிறான். அலை மாறினால் இந்தி பேசுகிறான். வங்க மொழியும் தெலுங்கும்கூடப் பேசுகிறான்.

அன்று தந்தி வந்தால் குடல் பதற ஆங்கிலம் தெரிந்தவரைத் தேடி ஓடுவோம். தமிழ்நாடடிலிருந்து சென்ற எம்.பி. நல்லசிவன் அவர்கள் தமிழிலேயே தந்தி அனுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.

தகவல் தொழில் நுட்பத்தின் காரணமாக மொழிபெயர்ப்பு பணி குறைந்து விட்டதா என்றால் இல்லை; அது அதிகமாகியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி, அரசு அலுவலகங்கள் என்று மொழிபெயர்ப்பின் தேவை கூடி வருகிறது. இதன் காரணமாக அனுபவமும் பயிற்சியும் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களால் பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட வேடிக்கை விநோதங்களைக் கதை கதையாகச் சொல்லலாம். பத்திரிகைத் துறை நண்பர் ஒருவரின் வேடிக்கையான மொழிபெயர்ப்பைப் பார்க்கலாம். பஞ்சாப் முதலமைச்சருக்கு தொல்லைக் கொடுக்கிறார் என்று கருதிய இந்திரா காந்தி அம்மையார், கியானி ஜெயில் சிங்கை மத்திய அமைச்சரவைக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரோ மத்திய அரசாணைகளை மூலம் பஞ்சாப் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டார்.

Jail Singh interferes in Punjab through his fiat என்று விமரிசனம் வந்தது. பத்திரிகை நண்பர் இதைத் தமிழ்ப்படுத்தும்போது, ‘ஜெயில்சிங் தன்னுடைய ஃபியட் காரை ஓட்டுவது போல் பஞ்சாப் அரசை ஓட்டுகிறார்’ என்று எழுதியிருந்தார். ஃபியட் எனும்போது அது அரசாணையைக் குறிக்கிறது என்ற விஷய ஞானம் இல்லாதாதல் இந்தத் தவறு ஏற்பட்டது.

ஆரம்ப காலத்தில் சில இந்தி தொடர்கள் தமிழில் பேச ஆரம்பித்தன.

வருகிறேன் சாப்பிட.
போகிறேன் வீட்டுக்கு.

என்கிறரீதியில் பாத்திரங்கள் பேசும். வினைச் சொல் முதலில் வரும்; கேட்பவன் நொந்து போவான்.

மொழிபெயர்ப்பில் தமிழ் மொழியின் நளினம்,மென்மை,மேன்மை தெரியாதவர்களைப் பயன்படுத்துவதல் எற்படுவது இது.

நவீன தொழில்நுணுக்கத்துக்கும் ஈடு கொடுக்க வேண்டும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன் திருமண வீடுகளில் வாத்தியக்கரர்கள், நாதஸ்வரமாயினும், பாண்டுவாத்தியமாயினும் ஒரு பாட்டை வாசிக்கமல்இருக்க மாட்டார்கள். அதுவும் பெண்ணோ,மாப்பிள்ளையோ ஊர்வலமாகவரும்போது கண்டிப்பாக வாசிப்பார்கள். அது

கல்யாண
ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும் –மகிழ்ந்து நான்
ஆடிடுவேன்

என்ற பாடலாகும். இது இந்தி படத்தின் திரைப்பாடலாகும்.  ‘அவன்’ என்ற  படத்தின் பாடல். இந்தியில் ‘Aah’ என்று வந்த படத்தின் டப்பிங் வடிவமாகும்.

ராஜ்கபூர் ,நர்கீஸ் நடித்தார்கள்.இசை அமைத்தவர்கள்சங்கர்-ஜெய்கிஷன்.பாடலை எழுதியவர் ஷைலேந்தர் என்ற உருதுக் கவிஞர்.

ராஜா கி- ஆயேகி பாராத்
ரங்கீலி ஹோகீ ராத், மகனு மே நாசூங்கி

என்பது அந்தப் பாடல்.

இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் பிரபலமானவை. ஜி.கிருஷ்ணவேணிஎன்ற ஜிக்கி பாடியவை. அந்தக்காலத்தில் இசைத் தட்டு விற்பனையில் முதலிடம் பெற்றவை. தமிழ் பாடலைக் கேட்டு ஷைலேந்திரா பாடலாசிரியரை பார்க்க தமிழ்நாடு வந்தார். ஐயா! மூலத்தை நீங்கள் தமிழில் எழுதி அதனை நான் உருது மொழியில்மொழிபெயர்த்தது போல் இருக்கிறது என்றாராம் அவர்.

மனதில் கவித்துவமும்,மடியில் தமிழும் இருந்தால் கவிதையை மொழிபெயர்ப்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

அந்தப் பாடலாசிரியர், கண்ணதாசன்.

0

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்

ராமாயணம் முதல் வட்டாரம் வரை

ராமாயணமும் மகாபாரதமும்

இந்திய இதிகாசங்களில் ராமாயணமமும் மகாபாரதமும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவையாகும். இவற்றின் மூலம் பற்றி வரலாற்றாளர்கள் பலவாறாகக் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் புராண காலம் என்று ஒன்று இருந்ததாக அவர்கள் கருத மறுக்கிறார்கள். குறிப்பாக, நவீன வரலாற்றாளர்கள் புராணங்கள், வேத காலத்தின் பிற்பகுதியில் உருவாகியவை என்கிறார்கள்.

காதா, நாசங்கி போன்ற கிராமியப் பாடல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன என்று கூறுகிறார்கள். “ஒரு தனி மனித குலம் மகாபாரதம் என்ற நூலை உருவாக்கியிருக்க முடியாது. பல நூற்றாண்டுகளாக அதில் பலரின் பாடல்கள் புகுத்தப்பட்டிருந்தால்தான் இவ்வளவு பிரும்மாண்டமாக உருவாக முடியும்” என்று வரலாற்றுக்கு முந்திய இந்தியா என்ற நூலில் ஆர். பானர்ஜி குறிப்பிடுகிறார். “இதன் காரணமாகவே மகாபாதரம் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கூறுவது தவறானதாகும்” என்றும் பானர்ஜி கூறுகிறார்.

பல்வேறு இனக் குழுக்களாக வாழ்ந்து வந்த மக்களிடையே சகிப்புத் தன்மையையும், சகோதரத்துவத்தையும், வன்முறை தவிர்த்த வாழ்க்கை முறையையும் உருவாக்க வேண்டியிருந்தது. ஓர் இனக் குழு தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிந்து போன சம்பவத்தை மற்ற இனக் குழுக்களுக்குப் பிரசாரம் செய்யும் முயற்சியும் நடந்தது. பாடகர்கள், பாவாணர்கள், யாத்திரீகர்கள் என்று பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இவர்கள் பயன்படுத்திய நாடோடிப் பாடல்கள்தான் கதா, நாசங்கி என்று அழைக்கப்பட்டன.
ஏராளமான இடைச் செருகல்களோடு உருவான கதைப் பாடல்கள் ஒன்று திரட்டப்பட்டு ஒரு கெட்டிக்காரப் புலவனால் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சம்யக் என்றால் நன்றாக என்று பொருள். கிருதம் என்றால் செய்யப்பட்டது என்பதாகும். நன்றாகச் செய்யப்பட்ட மொழி சம்ஸ்கிருதம். பேச்சுமொழியாக இருந்ததைத்தான் செம்மொழியாக ஆக்கினார்கள். இதற்கு பல நூற்றாண்டுகள் பிடித்தன. மகாபாரதம் தொகுக்கப்பட்டபோது சம்ஸ்கிருத மொழி முழுமையாக உருவாகியிருக்கவில்லை. ராமாயண காலத்தில் மொழி தேர்ச்சியடைந்து விட்டது. மகாபாரதத்தில் மொழிச் சிறப்பு அதிகமிருக்காது. மகாபாரத நூல் உருவான பிறகுதான் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் ராமாயணம் உருவானதாக வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். இதற்குக் காரணமாக ராமாயண மொழி நடையைக் குறிப்பிடுகிறார்கள். பிற்காலத்தில் இவற்றில் ஆயிரக்கணக்கான இடைச் செருகல்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது அறிஞர்கள் கருத்தாகும்.

தமிழ்நாட்டில் பரமேசஸ்வரய்யர் என்றொரு அறிஞர் இருந்தார். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் விற்பன்னர். ராமர்மீது மிகுந்த பக்தி கொண்டவர். கல்விமான் – மைசூர் ராஜ்ஜியத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

வால்மீகி ராமாயணம் பற்றி ஆராய்ந்து நூல் எழுதியிருக்கிறார். ராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட தாவரங்கள், விலங்குகள், புவியியல் கூறுகள் தென் இந்தியாவிலும், குறிப்பாக இலங்கையிலும் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

ராமனும் அவனுடைய படைகளும் விந்தியப் பகுதிகளுக்குத் தெற்கே வரவில்லை. இந்தப் பகுதியில் ஒரு குன்றுக்குப் பெயர் திரிகோணமலை. அந்த மலைக்கு முன்னால் மிகப் பெரிய குளம் (சாகர்) உள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் இனத்தில் ‘கோந்த்’ என்றொரு இனம் உண்டு. இந்த இன மக்களின் தலைவனை ‘ராவண்’ என்று அழைக்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்கள். தன்னுடைய நூலில் ராமன் சென்ற, வசித்த பகுதிகளை வரைபடமாகவும் இணைத்துள்ளார்.

இவருடைய இளைய சகோதரர் பெயர் அமிர்தலிங்கம். திண்டுக்கல் நகரில் பிரபலமான வக்கீல். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். ராமாயணம் பற்றி ஆய்ந்து நூல் எழுதி உள்ளார். ராமன் இந்தியாவின் தென் பகுதிக்கு வந்ததில்லை என்று இவர் குறிப்பிடுகிறார்.

ராமாயணத்தை எதிர்த்தவர்களில் முக்கியமானவரான பெரியார் இவர்களைச் சந்தித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஏ. பாலசுப்பிரமணியம் அமிர்தலிங்கம் அவர்களின் புதல்வராவார். இந்தச் செய்தியின் பின்னணியில் கம்பனின் படைப்பைப் பார்க்கலாம்.

கம்ப ராமாயணம் மொழிபெயர்ப்பா? இல்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் அது மூலாதாரமான நூலா? இல்லை. அது வால்மீகி ராமாயணத்தின் தழுவல். வால்மீகியின் கற்பனை வளம், புலமை, பாடல்களின் நயம், பாத்திரங்கள் ஆகியவற்றைவிட கம்ப ராமாயணம் சிறப்பாகவே உள்ளது. பட்டிமன்ற மொழியில் கூறுவதென்றால் வால்மீகியை விட கம்பன் விஞ்சி நிற்கிறான்.

இலக்கிய உலகில் இத்தகைய சம்பவங்கள் உண்டு. உமர்கயாமின் ‘ருபியாத்’ அற்புதமான படைப்பு. அதனை எட்வர்ட் ஃபிட்ஜெரால்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மூலத்துக்கு எந்த வகையிலும் குறையாத மொழிபெயர்ப்பாகும்.

தமிழ் மொழியில் கம்பனுக்கு என்று தனித்த இடமுண்டு. அவனுடைய படைப்பான ராமாயணம் அவனுக்கு பெற்றுத் தந்த இடம் அது. அந்த மாபெரும் கவிஞனின் படைப்பு மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற கேள்வி இரண்டாம்பட்சமாகி விட்டது.

வியாசனின் மகாபாரதம் வில்லிபுத்தூராரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. மூல நூலிலிருந்து பல சம்பவங்கள் நீக்கப்பட்டும் புதியதாக சேர்க்கப்பட்டும்  உருவான நூல் இது.

வட்டார மொழி

பொதுவான இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டு, அந்தந்தப் பகுதி மக்கள் பேசும் மொழியைப் பயன்படுத்தும் போது அது அந்த வட்டாரத்தில் அதில் வாழும் மக்களின் ஆத்மாவைத் தொடுவதாக அமையும். அதே சமயம், மண் வாசனையோடு மொழிபெயர்ப்ப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.

வட்டார மொழி என்பதை ஆங்கிலத்தில் dialect என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மொழி மாற்றம் ஏற்படுவதற்கு புவியியல் சமூகக் காரணங்கள் உண்டு. இங்கிலந்தில் பேசுவதற்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பேசுவதற்கும் உச்சரிப்பில் இருந்து வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடுமையான தண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுப்பி குடியமர்த்திய காலம் ஒன்று உண்டு. கலாசார ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் மிகவும் மாற்றுப் பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்களும் குற்றவாளிகளும் குடியமர்த்தப்பட்டனர்.

இங்கிலாந்து நாட்டுக்குள்ளேயே பெர்க்ஷயர், வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் ஆங்கில உச்சரிப்பு வித்தியாசப்படும். சில வார்த்தைகளுக்கான பொருள்கூட வேறுபடும்.

தமிழ்நாட்டிலேயே சென்னை, நெல்லை, நாஞ்சில் பகுதி மக்களின் பேச்சும் உச்சரிப்பும் வித்தியாசப்படுவதைக் காண்கிறோம். இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் புவியியல் காரணங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் நிரம்பி நீர் அதிகமாக உள்ள நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழக்கவழக்கங்கள் வித்தியாசப்படும். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் வீட்டின் பின் பகுதியில் உள்ள குளியலறை வரையில் வாய்க்கால் நீர் ஓடும். ஆணும், பெண்ணும், சிறுவர்களும், சிறுமிகளும் வீட்டின் பின் பகுதியில் ஓடும் நீரில் நீராடுவார்கள் (இன்று சுற்றுச் சூழலை மதித்து வாழத் தெரியாத காரணத்தால் இவை அரிதாகி விட்டன).

மழை நிழல் பகுதியான சேலம் மாவட்டத்தில் ‘தண்ணி ஊத்திக்கினு வாரனூங்க’ என்றால் குளித்து விட்டு வருகிறேன் என்று பொருள். பொதுவாக வட்டார மொழி என்று நாம் கூறும் போதே பொதுவான நயமான, தரமான மொழி ஒன்று இருக்கிறது என்பதும், அதனை வட்டார மொழி பேசுபவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதும் தொக்கி நிற்கும் ஒன்றாகும். இது பற்றிக் குறிப்பிடும்போது மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர் காலம் சென்ற டாக்டர் கனகசபாபதி சென்னை தமிழோ, நெல்லை தமிழோ தர நிர்ணயம் கொண்டதல்ல. மதுரைத் தமிழைத்தான் தமிழ் மொழியின் நிர்ணயம் செய்யப்பட்ட மொழியாகக் கருத வேண்டும் என்பார்.

இதற்கு உதாரணமாக பிரெஞ்சு மொழியை அவர் சுட்டிக் காட்டுவார். பாரிஸ் நகரத்தில் பேசப்படும் பிரெஞ்சு மொழிதான் நிர்ணயமானது. மற்ற பகுதியில் பேசப்படுவது வட்டார மொழிகள் எனப்படும்.

பதிவுகள் (Register)

“பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பேச்சாளர்களால் மொழியின் வேறுபட்ட தன்மைகள் உணர்த்தப்படும். இது பேசுபவர், கேட்பவர், சூழல், படிப்பவர், எழுதுபவர் என்று மாறும். அததற்குத் தகுந்தபடி அர்த்தம் பதிவு செய்யப்படும்.” ‘பொதுவான மற்றும் குறிப்பிட்ட அர்த்தங்கள்’ என்ற நூலில் டிக்சன் குறிப்பிடும் விஷயம் இது.

ஒருவர் மொழியின் பல்வேறு தன்மைகளைச் சூழலுக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகிறார்.
தமிழ்த் துறைப் பேராசிரியர், சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் மாண்பு பற்றி வகுப்பில் விளக்கும்போது அவர் பயன்படுத்தும் மொழி வேறு. வீட்டில் சமையலறையில் பயன்படுத்தும் மொழி வேறு. அவரே இரவு தன் மனைவியோடு தனித்திருக்கும்போது பேசுவது வேறு. ஒரே மொழியில் அழுத்தம், அர்த்தம், குரல் ஆகியவை வித்தியாசப்படுகின்றன. சூழலுக்குத் தகுந்தபடி நாம் வார்த்தைகளை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.

உதாரணமாக “நாளை மூன்றாவது பாடத்தை வாசித்து விட்டு வர வேண்டும்” என்று பள்ளி ஆசிரியர் கூறுகிறார். லால்குடி ஜெயராமன் அருமையாக வாசித்தார் என்கிறார்கள். விருந்துக்குச் சென்ற இடத்தில் ருசியான உணவை உண்டதை என் பேரன் குறிப்பிடும் போது “தாத்தா இன்று வாசித்து விட்டேன்” என்று கூறுவான்.

சூழல், பேசுபவர், கேட்பவர் ஆகியவற்றைப் பொறுத்து வாசிப்பு என்ற வார்த்தைக்குப் பொருள் வேறுபடுகிறது. அறிவியல், பத்திரிகைத் துறை, சட்டத் துறை, மதம் ஆகிய துறைகளில் வார்த்தைகளுக்கு வரையறுக்கப்பட்ட அர்த்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாம் பயன்படுத்தும் ஊடகங்களும் இவற்றை நிர்ணயம் செய்கின்றன.

தொலைபேசியைப் பயன்படுத்தும் போது சிக்கனமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். தந்தி மூலம் தகவலைத் தெரிவிக்கும்போது குழப்பமேற்படாமல் செய்கிறோம். தொலைக்காட்சி, அறிவிப்பு, செய்தி என்று ஒவ்வொன்றுக்கும் வார்த்தைகளையும் பொருள்களையும் தனித் தனியாகப் பதிவு செய்கிறோம்.

முந்தைய பதிவுகள் :

மொழிபெயர்ப்பு கலையா அறிவியலா?

சொற்களுக்கு எல்லை இல்லை

மொழிபெயர்ப்பு : கலையா அறிவியலா?

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அவரவருக்குத் தோன்றியபடி மொழிபெயர்ப்பு நடந்து கொண்டிருந்தது. மதத்தைப் பரப்ப முனையும் போது மத நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியமானது. மொழிபெயர்ப்பு என்பது குண்டக்க-மண்டக்க நடந்து கொண்டு தான் இருந்தது. சமீப காலத்தில்தான் மொழியியலாளர்கள் தங்கள் கவனத்தை இதன்பால் திருப்பினர்.

மொழிபெயர்ப்பில் மொழியியலோடு ஆன்மிகமும் இணைந்திருந்தால் அவர்களுடைய வரையறைகள் வித்தியாசப்பட்டன. தியோடர் சவோரி (Theodore Savory) என்பவர் மொழிபெயர்ப்பு என்பது ‘கலாபூர்வமானது’ என்று கருதினார். ஆக்கபூர்வமான, அழகியல் தன்மையோடு கூடிய செயல்முறையைக் கொண்டதால் அவர் இவ்வாறு வரையறுத்தார்.

எரிக் ஜாக்கப்சன் என்பவர் மொழிபெயர்ப்பவரின் திறமையைப் பொறுத்தது இது. கலைக்குக் கொடுக்கும் மதிப்பை மொழிபெயர்ப்புக்குக் கொடுக்க வேண்டியதில்லை என்று கருதினார்.

ரஷ்ய மொழியியலாளர்கள், இது அறிவியல் சார்ந்த மொழியியல் என்ற விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதால் இது அறிவியல் பூர்வமானது என்று கூறினர்.

ஆங்கில அறிஞர்கள் J. C. Catford,  Eugene Nida ஆகியோரும் இதே கருத்தைக் கொண்டிருந்தனர். பகுத்துப் பார்ப்பது, மாற்றிப் பார்ப்பது, மாற்றி அமைப்பது என்பது மொழியியலின் பணிகளில் ஒன்றாகும். மொழிபெயர்ப்பும் இதே பணியைச் செய்கிறது.

ஹார்ட்ஸ் ஃப்ரன்ஸ் என்ற ஆங்கில அறிஞர் மிகவும் வித்தியாசமாக வரையறுக்கிறார். ‘மொழிபெயர்ப்பு என்பது ஆக்கபூர்வமான கலையும் அல்ல. போலியும் அல்ல. இரண்டுக்கும் நடுவில்தான் அதற்கான இடமிருக்கிறது’ என்கிறார் அவர்.

இந்த வார்த்தை விளையாட்டு ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போதே மொழிபெயர்ப்பாளர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளை இருபதாம் நூற்றாண்டு மொழியியலாளர்கள் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளனர். மாற்று மொழி பற்றி மிகக் குறைந்த அளவே பரிச்சயமுள்ள ஒரு கலா ரசிகருடைய பணியாக இதனைக் கருதி விடக் கூடாது என்று அவர்கள் கருதுகின்றனர்.

மொழிபெயர்ப்பு என்பது ஒன்றாக்குவது அல்ல; ஒன்றுபடுத்துவதும் அல்ல. இரண்டு வித்தியாசமான கட்டுமானத்தைக் கொண்ட மொழிகளை விளக்குவதும் ஒன்றாகத் திரட்டுவதும் ஆகும். மூலமொழியின் நயம், வரையறை ஆகியவற்றை மொழிபெயர்க்க வேண்டிய மொழியின் முழுமையான அழகியலோடு இணைக்க வேண்டும்.

அதனால்தான் ஒரு எழுத்தாளன் எடுத்துக் கொள்ளும் மிகவும் கடின பணி மொழிபெயர்ப்பாகும் என்கிறார் ரூடால்ஃப் என்ற அறிஞர்.

மொழிபெயர்ப்பு என்பது அறிவியல் பூர்வமானது என்று கருதுபவர்கள் வேறு வகையில் விளக்கமளிக்கிறார்கள். மூல மொழியையும், மொழிபெயர்க்க வேண்டிய மொழியையும் ஒப்பீடு செய்யும் போது உருவானதுதான் மொழிபெயர்ப்பு என்கிறார் ஜே.சி. காட்ஃபோர்டு (J.C. Catford) என்ற அறிஞர்.

“இரண்டு மொழி பற்றி ஒப்பீடு செய்பவரின உள்ளுணர்வு சம்பந்தப்பட்டதல்ல இது. புறநோக்குப் பார்வையில் பகுத்தாய்வு செய்யும் செயல்பாட்டைக் கொண்டதாகும் இது” என்று அவர் தன்னுடைய நூலில் (A linguistic theory of Translation) குறிப்பிடுகிறார்.  “மூல மொழியின் (SL) வார்த்தைப் பிரயோகங்களை, மொழிபெயர்க்க (TL) வேண்டிய மொழியின் வார்த்தைப் பிரயோகங்களால் மாற்றியமைப்பது தான்” என்று அவர் நிர்ணயிக்கிறார்.

“ஒரு மொழியின் வார்த்தைப் பிரயோகம் என்பது எப்போதுமே மாற்று மொழியின் வார்த்தைப் பிரயோகத்தோடு ஒத்துப் போகும் என்று சொல்ல முடியாது. மாற்று மொழியின் உச்சரிப்பு, இலக்கணம், சொல் அகராதி மற்றும் நயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இவை அமையும்” என்கிறார் இவர்.

ஜே.சி. காட்ஃபோர்டு அவர்கள் மொழியில் செயல்பாட்டு, சொற்களுக்கான பொருள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற விமரிசனமும் உண்டு.

மொழிபெயர்ப்பு என்பது அறிவியல் பூர்வமானது என்பதை ஏற்றுக் கொள்ளும் யூஜின் நிடா என்பவர் “ஒரு மொழியில் உள்ள வார்த்தைத் தொகுப்புகளைப் பிரிப்பதும் மாற்று மொழியில் வார்த்தைத் தொகுப்புகளை மறு உருவாக்கம் செய்வதும்தான் மொழிபெயர்ப்பாகும்” என்கிறார்.

மொழிபெயர்ப்பு என்பது கலாபூர்வமானது என்பவர்கள், “மொழிபெயர்ப்பாளன் மூல எழுத்தாளனின் உள் மனத்தோடும், ஆத்மாவோடும் கலந்து விட வேண்டும்” என்கிறார்கள்.

எடினி டோலத் என்ற பிரெஞ்சு மொழி ஆசிரியர் “மூலத்தைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.

மொழிபெயர்ப்பாளர் ஒரு கவிஞராக இருந்தால் சிறப்பாகச் செய்ய முடியும் என்கிறார் ஜான் டிரைடன். “மொழிபெயர்ப்பாளர் ஒரு ஓவியருக்கு ஒப்பானவர். சித்திரம் வரைபவர் யாரை வரைகிறாரோ, அவருடைய முகச் சாயலைக் கொண்டு வர வேண்டுமல்லவா?”

‘ஒடிசி’யை மொழிபெயர்த்த வில்லியம் மோரிஸ் பற்றி குறிப்பிடும் போது, “உண்மையான கலைப் படைப்பு, மொழிக்கு மொழியாகவும், கவிதைக்குக் கவிதையாகவும் இருக்க வேண்டும்” என்று ஆஸ்கார் ஒயில்டு குறிப்பிடுகிறார்.

கலை என்றும், விஞ்ஞானம் என்றும் கருத்துகள் தொடர்கின்றன. ஒரு மொழி உருகி, மற்றொரு மொழியோடு முழுமையாக கலப்பது (Fusion) முடியவில்லை என்பதால் மொழிபெயர்ப்பு என்பது கலாபூர்வமானதாக இல்லை என்று கூற முடியாது என்பது இவர்களுடைய வாதம்.

பைபிள் – இதிகாசங்கள்

பைபிளின் மொழிபெயர்ப்பை வரலாற்று ரீதியாகப் பார்த்தோமானால் அது மேற்கத்திய கலாச்சாரத்தின் நுண்மையான பதிவாகும். ஏசு பிறந்து, மிகக் குறுகிய காலமே வாழ்ந்தார். ரோமானிய சக்ரவர்த்திகளின் கொடுங்கோலாட்சியில் துன்பத் துயரங்களுக்கு ஆளாவதைக் கண்டு அவர்களை எதிர்த்தார். அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் ஆட்சியாளர்கள்.

ஏசுவின் வழியை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ரோமானிய ஆட்சியை ஆதரிப்பவர்களுக்கும் இடையே கலகம் நடந்தது. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்தது. கான்ஸ்டன்டைன் என்ற அரசன் தன் காலத்திலாவது இதற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்க விரும்பினான். ஏசுவை இறைவனாகக் கொண்டு கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்தான்.

ஏசு யூத இனத்தவர். அவர்களின் மொழி ஹீப்ரு. ஹீப்ரு மொழியின் பிரிவாக அரோமா என்ற மொழியை ஏசுவின் குடும்பத்தினர் பேசி வந்தனர். கிறிஸ்தவ மதத்துக்கு ஓர் அடிப்படை நூல் தேவைப்பட்டது. ஏசுவின் உபதேசங்கள், பிரசங்கங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியவை அவர் மறைந்து 200-250 ஆண்டுகளுக்குப் பின்பு சேகரிக்கப்பட்டன. அன்றைய அறிஞர்களால் உலக மொழி என்று கருதப்பட்ட லத்தீன் மொழியில் பைபிள் உருவானது.

பைபிள் என்பது கடவுளின் வார்த்தைகள். அது உலக மக்கள் அத்துணை பேருக்கும் சொந்தமானது. அதனால் அவரவர் மொழியில் அதனைக் கொண்டு வர வேண்டும் என்று ஜான் வக்ளிஃப் என்பவர் கருதினார் (1330-1384).

அதற்கு முன்பே போப் தமாசுஸ் (384 கி.பி) செயின், ஜெரோம் என்பவரைக் கொண்டு மொழிபெயர்க்கச் சொன்னார். பைபிளின் வார்த்தைக்கு வார்த்தை என்றில்லாமல் உணர்வுகளை மொழிபெயர்த்துள்ளேன் என்று செயிண்ட் ஜேரோம் கூறினார். உலகத்தில் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள் ஒன்றுதான்.

முந்தைய கட்டுரை :

சொற்களுக்கு எல்லை இல்லை

 0

சொற்களுக்கு எல்லை இல்லை

அறிமுகம்

மொழிபெயர்ப்பு என்றால் என்ன? ஒரு மொழியில் குறிப்பிடப்பட்ட சொற்களின் அர்த்தத்தை மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும் செய்முறையை மொழிபெயர்ப்பு என்று கூறலாம்.

இது ஒரு சிக்கலான செயல்பாடாகும். மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய செயல்பாடும்கூட.

பல இலக்கிய மேதைகள் மொழிபெயர்ப்பு பற்றி வெகுவாக விவாதித்திருக்கிறார்கள். தங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். வகைப்படுத்தியும் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொன்றும் முக்கியமானது. ஒவ்வொன்றும் பயன்பாட்டில் உள்ளது.

ஜான் டிரைடன் (1631-1760) ஆங்கில மொழியின் மூத்த மொழிபெயர்ப்பாளர் என்று கருதப்படுகிறார். மொழிபெயர்ப்பை அவர் மூன்று வகையாக வேறுபடுத்துகிறார்.

 1. மூல ஆசிரியரை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியத்துக்கு வாக்கியம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டு வருவது.
 2. உணர்வுகளை அப்படியே கொண்டு வருவது.
 3. மூலத்தின் சாரத்தைச் சொல்வது.

இது பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு முன்பு ஆங்கில மொழியியலாளர் பயன்படுத்தும் சில குறியீடுகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதாக வைத்துக் கொள்வோம். இங்கு ஆங்கிலம் என்பது மூல மொழி (Source language). இதனை S.L. என்று குறிப்பிடுவார்கள். தமிழ் என்பது இங்கு Target Language. இதனை T.L. என்று குறிப்பிடுவார்கள். டிரைடன் மூலத்திலுள்ள உணர்வுகளைக் கொண்டு வரும் இரண்டாவது வகையையே கொண்டார். அது மட்டுமில்லாமல் தன் காலத்தில் பேசப்பட்ட ஆங்கில மொழி நடையையே பயன்படுத்தினார்.

அவருடைய சம காலத்தவரான அலெக்சாண்டர் போப் என்பவரும் இதே வகையைக் கையாண்டார். பதினெட்டாம் நூறாண்டின் பிற்பகுதியில் வந்த ஏ.எஃப். டைலர் என்பவர் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் என்ற நூலை எழுதினார். அதில் மூலத்தில் எத்தகைய நடை, பாணி கையாளப்பட்டிருக்கிறதோ அதுவே கையாளப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

ஒரு மொழியின் கட்டுமானத்துக்கும் அதில் மொழிபெயர்க்கப்பட்ட விஷயத்தின் அடிநாதமான பொருளுக்கும் இடையே ஒரு அமைதியின்மை இருக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனை எப்படிப் போக்குவது என்ற கேள்வி, டிரைடன் – டைலர் காலத்திலிருந்து இன்று வரை நீடித்துக் கொண்டு வருகிறது.

மொழிபெயர்ப்பின் அவசியம்

மொழி பல பயனுள்ள பணிகளை நமக்குச் செய்கிறது.  1. தகவல் பெற, 2. கேள்வி கேட்க, 3. ஆணையிட, 4. மறுக்க, 5. அழுத்தம் கொடுக்க, 6. சம்பவங்களை வரிசைப்படுத்த, 7. தர்க்க ரீதியாக உறவுகளைக் குறிப்பிட, 8. பங்கு பெறுபவர்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த (ஒரே மொழி பேசுபவர்), 9. ஒன்றுபட்ட நடவடிக்கை தொடர, 10. வேறுபடுத்திக் காட்ட.

ஆதி மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டான். விலங்குகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தன. மனிதன் இயற்கையோடு வாழ்ந்து கொண்டே இயற்கையிலிருந்து தனித்து நிற்கவும் முற்பட்டான்.

இயற்கையை எதிர்க்கவும், அழிக்கவும் மறு உருவாக்கம் செய்யவும் முயன்றான். இந்த முயற்சியில்தான் மற்ற உயிரினங்களுக்குக் கிடைக்காத உழைப்பு என்ற மாபெரும் கருவி அவனுக்குக் கிடைத்தது.

உழைப்பு அவனுக்கு புதிய புதிய அனுபவங்களைத் தந்தது. இந்த அனுபவங்களின் சாறு அவனுடைய அறிவாக மாறியது. தன் அனுபவத்தையும் அதன் சாறான தன் அறிவையும் தன் சக மனிதனோடு பகிர்ந்து கொள்ள அவனுக்குக் கிடைத்த ஊடகம்தான் அவனுடைய பேச்சு.
பேசிப் பேசி அவை உளியால் செதுக்கப்பட்ட வார்த்தைகளாக, வாக்கியங்களாக உருவான போது கிடைத்த சாதனம்தான் அவனுக்கும் அவனுடைய கூட்டத்துக்கும் கிடைத்த மொழியாகும்.

பல்வேறு மொழி பேசும் பல்வேறு மனிதக் குழுக்கள் இணைந்தும், புரிந்தும் வாழும்போது அவர்களுக்கிடையே பரிவர்த்தனை நடந்தது. இதற்குத் தடையாக மொழி இருக்கலாகாது என்று கருதி, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி மாற்றம் செய்வது அவசியமாயிற்று.

மனித குலத்தின் தேவையிலிருந்து உருவானதுதான் மொழிபெயர்ப்பு. பே சும் மொழி வளர்ந்து செம்மொழியான போது புதிய புதிய இலக்கியங்கள் அந்தந்த மொழிகளில் தோன்றின. கருத்துப் பரிமாற்றத்திற்கும் இலக்கிய பரிமாற்றத்திற்கும் இவை மொழிபெயர்க்கப்பட்டன.

உலகம் பூராவும் இத்தகைய மொழிபெயர்ப்புகள் நடந்தன. மொழியியல் வல்லுனர்கள் மிகச் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்று நான்கு நூல்களைச் சிறப்பிக்கின்றனர். அவை:

 1. ஷேக்ஸ்பியரின் பதினேழு ஆங்கில நாடகங்களை ஜெர்மன் மொழிக்கு ‘ஸ்வீகல்’ என்பவர் மொழிபெயர்த்தது.
 2.  கோதேயின் ஃபாஸ்ட் (Faust) என்ற ஜெர்மனிய படைப்பை Bayard Taylor ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.
 3. உமர்கயாமின் Rubaiyat, Edward Fitzgerald என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
 4. சமஸ்கிருத்ததில் இருந்த கீதையை சுவாமி பிரபாவனந்தாவும் கிறிஸ்டோபர் ஈஸ்வர்வுட் என்பவரும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தனர்.

தமிழில் மொழிபெயர்ப்புகள்

கம்ப ராமாயணத்தைப் படித்தவர்கள் அதன் மூலம் சமஸ்கிருத மொழியில் உருவான வால்மீகியின் ராமாயணம் என்பதை ஒப்புக் கொள்வார்கள். வால்மீகியின் மொழிபெயர்ப்புதான் கம்பன் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. கம்பனின் கற்பனை நயம், சொற்கட்டு, கவித்துவம் ஆகியவை வால்மீகியை மிஞ்சியதாக இருக்கும். பேராசிரியர் சீனிவாசராகவன் கம்பனையும் மில்டனையும், கம்பனையும் வால்மீகியையும் ஒப்பு நோக்கி விளக்கிப் பேசுவார். எஸ்.ஆர்.கே. என்று அன்போடு அழைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பொதுவுடைமை கட்சியின் தலைவர் ப. ஜீவானந்தம் ஆகியோர் கம்பனில் மூழ்கித் திளைத்து முத்தெடுத்தவர்கள்.

லார்ட் லிட்டன் அவர்களால் எழுதப்பட்ட ‘தி சீக்ரட் வே’ என்ற நூலை ‘மனோன்மணீயம்’ என்ற நாடகமாக எழுதினார் பேராசிரியர் சுந்தரம்.

உலகப் புகழ் பெற்ற கவிஞர்கள் வரிசையில் முதல் இடத்தில் நிற்பவன் காளிதாசன். அவனுடைய ஒப்பற்ற படைப்பகளில் ஒன்று சாகுந்தலம். மறைமலை அடிகள் இதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகமாக ‘ஆஸ் யூ லைக் இட்’ பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து அறுபதாம் ஆண்டுகள் வரை, தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்பு நூல்கள் கணக்கில் அடங்கா. இது விஷயத்தில் அன்றைய சோவியத் யூனியனும், அதன் அங்கமான Novosti  மற்றும் முற்போக்கு பதிப்பகங்களும் ஆற்றிய பணி மகத்தானதாகும். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் தத்துவ நூல்கள், அரசியல் கட்டுரைகள், டால்ஸ்டாய், கார்க்கி, செகோவ் போன்றவர்களின் உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் தமிழுக்கு வந்ததும் இதே காலத்தில்தான்.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் முன்பாகவே பிரெஞ்சு Les Miserables என்ற அற்புதமான நாவல் தமிழில் வெளிவந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஓ.வி. அழகேசன் மொழிபெயர்த்தார்.

ஹெர்மன் ஹெஸ்ஸே என்பவர் பிரபல ஜெர்மன் எழுத்தாளர். சித்தார்த்தா என்ற நாவலுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. திருச்சியைச் சேர்ந்த திரிலோக சீதாராமன் என்ற தேச பக்தர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்லாது ஏனைய இந்திய மொழிகளிலிருந்தும் தமிழுக்கு ஏராளமான படைப்புகள் இந்தக் காலகட்டத்தில்தான் வந்தன. குமாரசாமி, சேனாபதி ஆகியோர் வங்க இலக்கியங்களைத் தமிழில் தந்தனர்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராட்டிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். காண்டேகரின் படைப்புகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டு வந்தார். மராட்டியம், தமிழும் தெரிந்த வாசகர் ஒருவர், Kraunchawadh நாவலைப் படித்து விட்டு, தமிழ் மூலம் மாதிரியும், மராட்டி மொழிபெயர்ப்பு மாதிரியும் தோன்றுவதாக காண்டேகரிடம் சொன்னதாக குறிப்பிடுவார்கள்.

ரா. வீழிநாதன், சரசுவதி ராம்னாத் ஆகியோர் இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு பல படைப்புகளைக் கொண்டுவந்தனர். இதில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் இவற்றைத் தொடராக வெளியிட்டன என்பதாகும். குறிப்பாக, கலைமகளும், கல்கியும் இதில் முன்னணியில் நின்றன.

0

திலீபன்

மணவாக்குமூலம் : மீனா கந்தசாமி

மார்ச் 19, 2012 தேதியிட்ட அவுட்லுக் இதழில் I Singe The Body Electric என்ற தலைப்பில் மீனா கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. முறைப்படி அனுமதி பெற்று மொழிபெயர்த்திருப்பவர், சி.சரவணகார்த்திகேயன்.

அன்பின் விடுமுறை தினங்கள்

நிதம் காலை மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர சிறுநக‌ரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத‌ ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம்.

ஆரம்ப நாட்களில், அவனது சொற்கள் என்னை ஆட்கொண்டிருந்தன: நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை. அந்த தேனிலவுக் காலத்தில் ஒவ்வொரு சண்டையும் யூகிக்கக்கூடிய ஒரு பாணியைப் பின்பற்றியிருந்தன: நாங்கள் சமாதானம் கொண்டோம், கலவி செய்தோம், மறந்து நகர்ந்தோம். அது ஒரு பேரமாக, பண்டமாற்றாக ஆனது. வாழ்வதற்காக நான் சரணடந்தேன்.

திருமணமான இரு மாதங்களில், மயக்கிப் பேசி என் கடவுச்சொற்களிடமிருந்து என்னைப் பிரித்திருந்தான். விரைவில் என் உடைகளைத் தேர்ந்தெடுக்கும் அதே சுதந்தரத்துடன் எனது மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்கத் தொடங்கியிருந்தான். என்னுடைய கடவுச்சொல் உனக்கு எதற்கு எனக் கேட்டேன். என்னுடையது உன்னிடம் இருக்கிறதே என்றான். நான் அதைக் கேட்கவே இல்லையே என்றேன். நீ என்னை உண்மையாக‌க் காதலிக்கவில்லை என்றான். என்னை வைத்துக் கொள், என்னை வைத்துக் கொண்டிருப்பதற்காக‌ நான் உன்னை வைத்துக் கொள்வேன்: உடைமையாக்குதல் என்ற ஒற்றைக் கருத்து வெறியேறிய,‌ தனக்கு மட்டும் உரியதென‌ எண்ணும்‌ பித்துநிலை மனிதனின் சிந்தனைகள்.

காதல் என்பது அடிமை சகாப்த அதிகாரமாகி விடும் போது எந்த ரகசியமும் சாத்தியமில்லை. ஒரு வாரம் பொது மின்னஞ்சல் முகவரி என்ற எண்ணத்தை முன்வைத்தான், அடுத்த வாரம் அது செயல்படுத்தப்பட்டது. அவன் அந்தரங்க எல்லைகளை மறையச் செய்தான். நான் என் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டேன். சுத்திகரிக்கும் பணியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் 25,000 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டன. நான் வரலாறற்ற பெண்ணானேன்.

விரைவில் என் காதலற்ற கல்யாணத்தில் கலவியானது சந்தைப் பொருளாதார மாதிரியைப் படியெடுக்கத் தொடங்கியது: கேட்பு அவனது, அளிப்பு எனது. என் எதிர்வினை என்ன என்பது பற்றி நினைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் ரத்தப்போக்கு ஏற்பட்டது குறித்து யோசித்ததில்லை. என் வலியிலிருந்து தான் அவன் சந்தோஷத்தை எடுத்துக் கொள்கிறான் என்பது பற்றி எண்ணியதில்லை. சிதறிய இதயத்தோடும், இச்சையற்ற மனதோடும் எனக்குள்ளிருந்த பெண் மேற்கூரையோடு உரையாடிக் கொண்டிருந்தாள், திரைச்சீலைகளிடம் தன்னை ஒப்படைத்தாள். அத்தனை சேதாரங்களுடன் அவள் சந்தோஷத்தைத் தேடியது இயற்கையின் சுடர்மிகு சக்திகளில்: சுரீர் சூரியஒளி, திடீர் மழைத்துளி. ரகசியமாய், அவள் அடங்க மறுத்தாள்.

முதன்முறை அவன் என்னை அடித்த போது, நான் திருப்பி அடித்தது நினைவிருக்கிறது. பதிலடி என்பது சரிசமமான போட்டியாளர்களுக்குத்தான் பொருந்தும், ஆனால் நாற்பத்தைந்து கிலோ குறைந்த எடை கொண்ட பெண் வேறு மார்க்கங்கள் சிந்திக்க வேண்டும் என அனுபவம் கற்றுத் தந்தது. அது வேறு விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது. எது வேண்டுமானாலும் தண்டனைக் கருவியாக மாறலாம் என்பதை உணர்ந்தேன்: கணிப்பொறியின் மின்கம்பிகள், தோலினாலான பெல்ட்டுகள், ஒருகாலத்தில் நான் உலகின் அத்தனை காதலுடனும் பற்றியிருந்த அவனது வெறும் கைகள். அவனது சொற்கள் அந்த‌ அடிகளை மேலும் கூர்மையாக்கின‌. நான் வேகமாக அடித்தால் உன் மூளை சிதறி விடும் என்பான். அவனது ஒவ்வோர் அடியும் என்னைத் தகர்த்தன‌. ஒருமுறை அவன் என் கழுத்தை நெரித்த போது அடைத்த தொண்டையின் மௌனத்தை உள்ளீர்த்துக் கொண்டேன்.

நான் திருமணத்திலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று அவனிடம் சொன்ன போது ஒரு வேசியாக நான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என வாழ்த்தினான். வாய்ப்புணர்ச்சியில் விஷேசமடையவும் ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுரை கூறினான். நான் கூனிக்குறுகி, அவனைத் திட்டிக் கண்ணீர் உகுத்தேன். அவன் வெற்றிக்களிப்பில் புன்னகைத்தான். அவன் என்னை வீழ்ந்த பெண்ணாக உணரச் செய்ய விரும்பினான். அவன் எப்போதும் தன்னை ஒழுக்கத்தின் உயர்நிலையில் இருத்திக் கொண்டு அதீத பொதுமைப்படுத்தல்களை அடுக்குவான்: இலக்கிய விழாக்கள் விபச்சார விடுதிகள், பெண் எழுத்தாளர்கள் வேசிகள், என் கவிதைகள் பாலியலைத் தூண்டுபவை. அவனது கம்யூனிச அடையாளங்கள் கலைந்தன. நான் பெண்ணியவாதியாக இருப்பதைக் குற்றமென்றான். வர்க்க எதிரிகளுக்கென நிர்ணயிக்கப்படுகிற‌ வெறுப்போடு அவன் என்னை நடத்தினான்.

சலிப்படைந்த‌ இல்லாளாக, வீட்டு வன்முறைக்கு வண்ணக் குறியீடுகள் இட்டேன்: என் தேகத்தில் விழும் அடிகளின் புதுச்சிவப்பு, உறைந்த ரத்தத்தின் கறுப்பு நிறம், குணமான காயங்களின் மங்கிய ஊதா… வதை, வருத்தம் நிரம்பிய மன்னிப்பு, மேலும் நிறைய வதை என்ற இந்த‌ முடிவில்லா சுழற்சியிலிருந்து விடுதலையே கிடையாது என்று தோன்றியது. ஒரு நாள் நான் பெல்ட்டால் அடி வாங்கிய போது அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றியது. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவேன் என அவனை மிரட்டினேன். என் கவிதையிலிருந்து ஒரு வரியைப் படித்த பின் சீருடை அணிந்த எவனும் என்னை மதிக்க மாட்டான் என்று பதிலளித்தான். யாரிடமும் எங்கு வேண்டுமானாலும் போகச் சொல்லி சவால் விட்டான். அந்தச் சின்ன உலகத்தில் எனக்கு நண்பர்களே இல்லை – அவன் உலகத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த அவன் பணிச் சகாக்கள், அவன் நடந்த பூமியை வழிபடும் அவன் மாணவர்கள்… எனக்கு யாரை நம்புவது எனத் தெரியவில்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்னை அவனிடம் மறுபடி ஒப்படைக்கக் கூடியவர்கள் தாம். நடு இரவில் அருகிலிருந்த கன்னி மடத்துக்கு ஓடிப் போய் தங்கிக் கொள்ள விரும்பினேன். நான் புரிந்து கொள்ளப் படுவேனா? இது சரியாக வருமா? என் மொழி பேசாத ஒரு நகரத்தில், மதுக்கூடங்க‌ளில் இளம்பெண்கள் அடிக்கப்படும் ஒரு நகரத்தில் நான் எவ்வளவு தூரம் ஓடி விட முடியும்?

இனிமேல் அவனுடன் வாழ முடியாது என்பதை அவனிடம் சொன்னேன். நான் அவனுக்குக் கொடுத்த கடைசி வாய்ப்புகளின் எண்ணிக்கையே மறந்து போயிற்று என்பதை அவனிடம் சொன்னேன்.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்த போது அவன் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் தன் தசையைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டதைக் கண்டேன். திருகலான மூளை மற்றும் அதன் திருகலான காதல். அவன் தன் தரப்பை விளக்க விரும்பினான்: நான் என் தவறை உணர்ந்ததால் என் மீதே இந்த தண்டனையை சுமத்திக் கொள்கிறேன். அதன் உள்ளர்த்தம்: தயை கூர்ந்து பழியை நீ ஏற்றுக் கொள், தயவு செய்து அடிகளையும் நீயே பெற்றுக் கொள். நான் உணர்ச்சி வயத்தின் பணையக்கைதியாக ஆக்கப்பட்டேன். என்னை நானாகவே இருக்க அனுமதிக்கும் ஒரு சுதந்தரத்தை நான் யாசித்தேன். என் கதையை நானே பேச உதவும் சொற்களைத் தேடித் தடுமாறினேன். அடைக்கப்ப‌ட்ட கதவுகளும் உடைக்கப்பட்ட கனவுகளும் கொண்ட ஒரு வீட்டில் நான் வாழ்ந்தேன். நான் நானாக இல்லை. வேறொருவரின் துன்பியல் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருப்பதாக‌ என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நான் மரணத்தை எதிர்நோக்கி இருந்தேன். மரணம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் என நினைத்தேன்.

அச்சம் கசிந்தொழுகும் என் உடலில் கலவி என்பது சமர்ப்பிக்கும் செயலானது. நான் மனைவியாக நடித்த இந்த நாடகத்தில் விட்டுச்செல்வதன் ஆறுதலும், உபயோகித்தபின் விலகுதலும் தவிர வேறெதுவும் நினவில் இல்லை. வதையினாலான திருமணத்தில் முத்தங்கள் மறைந்து போகிறது.

நாங்கள் தனித்தனி அறைகளில் உறங்கினோம். ஒவ்வோர் இரவும் என் மனம் ஒரு சோககீதம் இசைத்தது. நான் மிருதுத்தன்மைக்கு ஏங்கினேன். துக்கமானது ஒரு கிராமத்துப் பெண் தெய்வம் போலவும், நான் என் காயமுற்ற தசையை அதற்கு உணவாக அளிப்பது போலவும் அதைச் சுற்றி உழன்றேன். வந்து என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கதறினேன். யாரும் அதைக் கேட்கவில்லை, நானே என் தலைக்குள் அலறிக் கொண்டிருந்தேன். என்னை நானே சேர்த்து இழுத்துக் கட்டி வைக்க‌ முடிந்தது. நான் ஒருபோதும் உடைந்துவிடலாகாது என சபதமிட்டிருந்தேன்.

நான் தூரப் போனேன். நாங்கள் விலகிப் போனோம்.

பிற்பாடு அவனது இரட்டை வாழ்க்கை வெளிப்பட்டது: அவன் ஏற்கனவே திருமணமானவன், அவனது குடும்பத்தினரே மறைத்த ஓர் உண்மை அது. அவன் தன் முதல் மனைவியிடமிருந்து இதுவரை விவாகரத்துப் பெறவில்லை. நான் அவனை எதிர்கொண்ட போது, எல்லாவற்றையும் தர்க்கப்பூர்வமாக விளக்க முயற்சித்தான், அது கடைசியில் என்னிடமே திரும்பி வந்து நின்றது. இன்னும் நிறைய பெயரிடுதல்கள், சிகையிழுத்தல்கள், கெட்டவார்த்தைகள், மிரட்டல்கள். அவன் என்னை அடிக்கத் தொடங்கினான். என்னை சிறுக்கி என்று முத்திரை குத்தினான். உயிருடன் என் தோலை உரித்து விடுவேன் என்றான். உன் தந்தையைக் கூப்பிட்டு வந்து உன்னை அழைத்துப் போகுமாறு சொல்லுவேன் என்றான். நான் உணர்வற்றுப் போயிருந்தேன், எதிர்வினை புரிய முடியாத அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அந்த இரவில் நான் ஒரு குப்பை போல் வெளியே எறியப்பட்டேன்.

கைப்பையுடனும், மோசமானவள் என்ற பட்டையுடனும் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். விமான நினையத்திலிருந்த துணை ராணுவ அதிகாரிகளை அங்கே உறங்க‌ அனுமதிக்குமாறு கெஞ்சினேன். அவர்கள் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள், ஆனால் தங்க அனுமதித்தார்கள். அதில் ஒருவர் எனக்கு இரவு உணவு வாங்கித் தந்தார். அடுத்த நாள் காலையில் நான் சென்னைக்குத் திரும்பினேன். என் பெற்றோர்களுக்குச் சொல்ல எனக்கு யாதொரு வார்த்தையும் கைவசமிருக்கவில்லை. அவர்கள் என்னை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என் அம்மா ஒரு பெண்ணின் சுகந்தத்துடன் என்னைக் கட்டிக் கொண்டார், இனிமேல் என்னைப் போக விடமாட்டேன் என்பது போல. என் சகோதரி ஏன் அவளை விட்டுப் போனேன் என்பதற்கே கோபித்துக் கொண்டாள்.

சில வாரங்கள் கழித்து நான் வக்கீல்களுடன் பேசினேன். என் திருமணமே செல்லுபடியாகாது, அதனால் விவாகரத்து என்பது அர்த்தமில்லாத முயற்சி என்று அவர்கள் சொன்னார்கள். கருணையின் செயலாக சட்டம் கூட என்னை விடுவித்து விட்டது. அவனது தண்டனைக்காக நான் அழுத்தம் தந்த போது காவல்துறையினர் நீதிமன்ற சிக்கல்களைப் பேசினர். நீங்கள் வேறெங்கோ வசிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். நீதி தேவதை இடம்பெயர்ந்த பெண்களுக்கு சேவை செய்வதில்லை.

என் பெற்றோரின் இடத்துக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. நான் என் நலம் விரும்பிகளுடன் பேசுகிறேன், என் சகோதரியின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறேன். இரவில் தனிமையில் அழுகிறேன். என் வாழ்க்கையின் அந்த நான்கு மாதங்களைத் திரும்பிப் பார்க்கிறேன், நான் வாழ்ந்தது “என் வாழ்க்கை”யே அல்ல, வேறொருவர் எனக்கு வரையறுத்து அளித்தது என்பது புரிகிறது. மனைவியை அடிக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, என் கதையைச் சொல்ல நான் உயிரோடிருப்பேன் என்றே நான் நம்பவில்லை. கொடூரத்தன்மையின் முதல் தர அனுபவம் எனக்குண்டு என்று என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்: மோசமான நாட்களில் பகிர்ந்து கொள்ளவென்று இருக்கும் போராட்டம் மற்றும் ஜீவித்திருத்தலின் கதை. அந்த வெற்று ஆறுதல்கள் வன்முறைக்குள்ளான உடல்களை அமைதிப்படுத்தும். நான் குடும்பத்தின் அரவணைப்பில் சுகங்காணும், நண்பர்களின் கதகதப்பில் ஆறுதல் கொள்ளும், அறிமுகமற்ற அன்புள்ளங்களின் சொற்களால் காயங்கள் குணம் பெறும் வன்முறைக்குள்ளான பெண்களின் அதிர்ஷ்டக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன்.

இந்தக் கல்யாணம் எனும் கொடுங்கனவை நான் வென்று வர முடியுமா? என்னிடம் நேரடியான பதில்கள் இல்லை. நான் எனக்கான பாடங்களைக் கற்றுக் கொண்டேன். நான் தனியாள் என்பதும் பாதுகாப்பானவள் என்பதும் எனக்குத் தெரியும். துயருற்ற பெண்ணின் கண்களுடனும் ஆத்மார்த்தமான புன்னகையுடனும் நான் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம் பெற்று விட்டேன். என் வலிகளை மறந்து விடுவதற்கு போகும் வழியில் ஒருவேளை என் கவிதைகள் உதவக்கூடும்.

*

குறிப்பு: ‘அன்பின் விடுமுறை தினங்கள்’ என்னும் தலைப்பு மனுஷ்ய புத்திரனின் ‘ஆதீதத்தின் ருசி’ தொகுப்பிலிருக்கும் கவிதையின் தலைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

 

ஒரு மொழிபெயர்ப்பாளரின் சவால்கள்

மொழியாக்கத்தில் உள்ள முதலும் பெரியதுமான சவால், ஒரு மொழியிலுள்ள ஒரு படைப்பைத் திருப்திகரமான முறையில் இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்வது.

சுனில் கில்நானியின் Idea of India புத்தகத்தை மொழிபெயர்த்தபிறகு முழுவதுமாக ஒருமுறை படித்துப் பார்த்தேன். முந்தைய நூல்களோடு ஒப்பிடும்போது இதை நன்றாகச் செய்திருப்பதாகவே தோன்றியது என்றாலும், இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்னும் தவிப்பும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.  முழு நேரத்தையும் மொழிபெயர்ப்புக்காக அர்ப்பணிப்பவர்களே திணறும்போது, ஆர்வத்தால் நேரம் ஒதுக்கி செய்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அந்த வகையில், ஒரு மொழிபெயர்ப்பளர் எதிர்கொள்ளவேண்டிய மிக முக்கியமான சவால், மொழிநடை. ஒரு மொழிபெயர்ப்பாளன், மூல ஆசிரியனைச் சார்ந்து, அவன் பார்வையிலேயே அந்த மொழியாக்கத்தைச் செய்ய வேண்டுமா; அல்லது அந்த நூலை விலை கொடுத்து வாங்கி படிக்கப்போகும் வாசகன் சலிப்படையாமல் படிக்கும் (புரிந்து கொள்ளும்) வகையில்,  எளிமையாக அம்மொழியாக்கம் இருக்க வேண்டுமா?

மூல ஆசிரியனின் மொழிநடையில், அவன் பார்வையில் ஒரு படைப்பு அமைவதுதான் சிறப்பு என்றாலும், வாசகனைக் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்பு தேக்கமடைந்துவிடும் என்பதே யதார்த்தம். ஒரு நூல் அதிகம் விற்பனையானால்தான் அந்நூலின் பதிப்பாளர் ஊக்கம் அடைவார்.  நன்றாக விற்பனையாகவேண்டுமானால், எளிமையான நடையில் ஒரு மொழிபெயர்ப்பு அமைவது முக்கியம்.

படிப்போர்க்குச் சலிப்பேற்படுத்தாத, எளிமையான மொழிபெயர்ப்புக்கு, அதிகமான கால அவகாசம் தேவைப்படும். இந்தக் காலஅவகாசம் எப்போதும் கிடைப்பதில்லை. மிக விரைவாக முடித்துக்கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் உள்ளாவதுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், முழுமையாகவும் திருப்திகரமாகவும் அந்த மொழிபெயர்ப்பு அமைவது அரிது.

பெரும்பாலும் ஆங்கில மூல நூல்களில், கலவை வாக்கியங்கள் மிக அதிகம் இருக்கும். ஒரு பத்தி முழுவதுமே ஒரே வாக்கியம் நிறைந்திருக்கும். ஒரு பாணியாகவே எழுத்தாளர்கள் பலர் இம்முறையைப் பின்பற்றுகின்றனர். மிகச்சிறந்த எழுத்துகளாக இவையே கருதப்படுகின்றன. அவ்வளவு ஏன், தமிழிலேயே, ‘இலக்கிய நயத்தோடும்’ ‘சித்தாந்த அடிப்படையிலும்’ எழுதப்படும் கட்டுரைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்தால்தான் விளங்குகிறது. இப்படிப்பட்ட நூல்களை மொழிபெயர்க்கும்போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பில் ஆழ்ந்த அனுபவமும், விரிவான வாசிப்பனுபவமும் கைகூடியிருந்தால்தான், இப்படிப்பட்ட கடினமான சொற்றொடர்களை மொழிபெயர்க்கமுடியும்.  நீண்ட வாக்கியங்களை நீண்டதாகவே மொழிபெயர்க்கவேண்டும் என்றில்லை. ஆனால், சொற்றொடர்களை உடைத்து எழுதும்போது, மூல ஆசிரியன் வெளிப்படுத்த விரும்பும் கருத்து மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கற்பனை படைப்பாக இருந்தாலும் சரி, கற்பனை சாராத படைப்பாக இருந்தாலும் சரி.  மூல ஆசிரியரின் பார்வையில், அவரது முதன்மை  நோக்கம் சிதைவுறாத வகையிலும் மொழியாக்கம் செய்ய வேண்டும்.  படைப்பாளிக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கும் இருக்கும் இந்த  இடைவெளி சரியாக நிரப்பப்பட வேண்டும். எழுத்தாளன் அந்த நூலை எந்தத் தருணத்தில் எழுதினான்? அவனது நோக்கம் என்ன? படைப்பு, அரசியல் சார்ந்ததா அல்லது சமூகம் சார்ந்ததா? அவனது நோக்கத்தைத திசை திருப்பாமல் மொழிபெயர்க்கமுடியுமா? உதாரணத்துக்கு, மூல நூலாசிரியர் ஒரு வலதுசாரியாகவும், மொழிபெயர்ப்பாளர் இடதுசாரியாகவும் இருக்கும் பட்ச்ததில், மொழிபெயர்ப்பாளர், சிந்தனை சிதைவின்றி மொழிப்பெயர்க்கமுடியுமா?

மூல ஆசிரியர் உருவகமாகப் பயன்படுத்தும் சொற்களை, பிரதேச அடிப்படையிலான சிறப்புச் சொற்களை, பிரத்தியேகமான உருவகங்களை, மூல ஆசியரின் வாழ்க்கைச் சூழலை, சமூகச் சூழலை, அரசியல் சூழலை, படைப்பின் பின்னனியை நம்மால் உணரமுடிகிறதா? இந்தப் புரிதல் மிகவும் அத்தியாவசியமானது. அப்படி ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது, பல சொற்கள், சொற்றொடர்கள் மொழிபெயர்ப்பாளருக்குப் புதியவையாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், ஒரு மொழிபெயர்ப்பாளர் விரிவான தேடலில் ஈடுபடவேண்டியது அவசியம். இணையத்தின் மூலமாகவோ புத்தகங்களின் மூலமாகவோ அப்படிப்பட்ட தேடலை அவர் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

சில இடங்களில், ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தனிச்சொலைத் தமிழில் கொண்டுவருவது கடினமாக இருக்கலாம். ஆகவே விரித்து எழுதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  ஆங்கிலத்தில் 100 பக்க அளவு கொண்ட ஒரு படைப்பைத் தமிழ்படுத்தும்போது, 150 பக்கங்களுக்கு நீண்டுவிடுவது இதனால்தான்.  முடிந்தவரை குறைவான பக்கங்களில், எளிமையாக செய்யப்படும் மொழிபெயர்ப்புகளே வெற்றி பெறுகின்றன.

எவ்வளவுதான் கவனமாக செய்தாலும், இத்துறையில் அனுபவம் உள்ளவர்களைக் கலந்தாலோசித்து கொண்டாலும்,  சில இடங்களில் கவனச் சிதைவினால் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. இந்த இடத்தில், காபி எடிட்டிங் செய்வோரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு எழுத்தாளர் தனக்குப் பிடித்தமான தளத்தில் மட்டுமே இயங்குகிறார். பிடித்தமான விஷயத்தை மட்டுமே எழுதுகிறார். அரசியல், பொருளாதாரம்,  கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று தனக்கான ஒரு தளத்தைத் தேர்ந்தடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்துவது ஒரு படைப்பாளிக்குச் சாத்தியமாகிறது. ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அப்படிப்பட்ட நிலை அமைவதில்லை.  சுய முன்னேற்றம், சுயசரிதை, பொருளாதாரம், அரசியல், இலக்கியம் என்று பல துறைகள் சார்ந்த நூல்களை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, ஒரு மொழிபெயர்ப்பாளர் தொடர்ந்து தன் திறமையையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.  ஒவ்வொரு மொழிபெயர்ப்பும், அறிவையும் அனுபவத்தையும் விரிவடையச் செய்யும் பாடமாகவே அமைகிறது.  ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு பிரதியையும் புதிதாக எடுத்துக்கொள்கிறார். ஒவ்வொன்றில் இருந்தும் பாடங்கள் படித்துக்கொள்கிறார். ஒவ்வொன்றிலும் இருந்து அனுபவம் பெற்றுக்கொள்கிறார்.

எனவே, ஒரு படைப்பாளரைவிடவும் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிக சவால்களைச் சந்திக்க நேர்கிறது. மூல ஆசிரியரின் இடத்தில் தன்னைப் பொறுத்திக்கொண்டு, மூல நூலின் சிறப்பை மீண்டும் உருவாக்குவது சாமானியமான செயல் அல்ல. கூடுவிட்டு கூடு பாய்வதைப் போன்ற அற்புதம் அது.

0

அக்களூர் இரவி