வரலாற்றை மாற்றிய செங்கோட்டை – 3

1858ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வந்து சேர்ந்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் 17 மாகாணங்கள் இருந்தன. இவை தவிர பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியில் இல்லாத 554 ராஜ்ஜியங்கள் (Princely states) இந்திய துணைக் கண்டத்தில் இருந்தன. இந்த ராஜ்ஜியங்களை அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஆனால் ராணுவம், வெளியுறவுத் துறை மற்றும் தொலைத் தொடர்பு துறை ஆகியவற்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்வகித்து வந்தது.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவை எடுத்துக்கொண்ட பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி முறையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரயில் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்பை உருவாக்கியது. நீதி பரிபாலனை செய்யவேண்டி நீதிமன்றங்கள் பல நிறுவப்பட்டன. இந்தியர்கள் தொழில் துறைகளிலும், ஏனைய பாடங்களிலும் கல்வியறிவு பெற கல்லூரிகள் நிறுவப்பட்டன. ஆட்சி நிர்வாகத்தை திறன்பட நடத்த பிரத்தியேக இந்தியன் சிவில் சர்விஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய இராணுவம் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியர்கள் மத்தியில் ஆங்கிலேயர்கள் மீதான அதிருப்தி நீங்கவில்லை.

ஆங்கிலேயர்களின் ஆட்சியை இந்தியர்கள் காலனியாதிக்கமாகத்தான் பார்த்தனர். பல்வேறு விதமான வரிச் சட்டங்கள், அதனால் ஏற்பட்ட அதிகமான வரிச் சுமை, நாட்டில் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சம், தவிர்க்கப்படாத தொற்று/ கொள்ளை நோய், அதனால் ஏற்பட்ட கோடிக்கணக்கான உயிரிழப்புகள், ராணுவத்திலும் ஆட்சியிலும் ஆங்கிலேயர்களுக்கே முன்னுரிமை, இந்திய அரசர்களை அவமரியாதை செய்தது, பிரஜைகளின் விருப்பங்களை மதிக்காதது என்று பல அதிருப்திகள் ஆங்கிலேயர்கள் மீது இந்தியர்களுக்கு இருந்தன.

சிப்பாய் புரட்சிக்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து மற்றுமொரு புரட்சி நிகழ்ந்தது. இம்முறை ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தையும், அடக்குமுறையையும் எதிர்க்க வந்தது இந்திய அரசர்களோ, சிப்பாய்களோ அல்ல. சாதாரண இளைஞர்கள்தாம். ஆங்கிலேயர்களிடமிருந்து ஆதரவு பெற்று, ஓய்வூதியம் பெற்று தங்களது அரண்மனைகளில் சுகபோக வாழ்வு வாழ்ந்து வந்த மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் படை திரண்டது. இந்தப் படை உருவாவதற்கும் ஒருவிதத்தில் பிரிட்டிஷ் அரசுதான் காரணம். அது அங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்விக்கூடங்களும் கல்லூரிகளும், பாடசாலைகளும் உலகத்தை அவர்களுக்குத் திறந்துவிட்டன. கல்வி அவர்கள் கண்களைத் திறந்தது.  தர்க்க ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தியது. பிரெஞ்சு புரட்சி பற்றியும் அமெரிக்கப் புரட்சி பற்றியும் இந்திய இளைஞர்கள் தெரிந்துகொண்டனர். உத்வேகம் கொண்டனர். ஐரோப்பிய சரித்திரமும், உலக அரசியல் முறைகளும் அவர்களை உந்தித் தள்ளியது. முற்போக்கு சிந்தனைகள் தோன்றின. இந்தியா ஏன் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதே சமயத்தில் இந்து மதத்திலும் சீர்திருத்தவாதிகள் தோன்றினர். ராஜா ராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து மதக் கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். பிரம்ம சமாஜும், ஆரிய சமாஜும் தோற்றுவிக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய அதே கையோடு, இந்தியர்கள் விட்டொழிக்க வேண்டிய தீமைகளையும் சாடினார். இந்து மதத்தில் புரையோடிப்போன மூட நம்பிக்கைகள் எதிர்க்கப்பட்டன. ஒற்றுமையின்மை, சாதிய பிளவுகள், தீண்டாமை, சுயநலம் ஆகியவையே இந்திய அடிமைப்பட்டதற்குக் காரணம் என்று முழங்கப்பட்டன.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள், ஆங்கிலேயர்களை எப்படியேனும் விரட்டியே ஆவது என்று வீறுகொண்டு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள், அரவிந்த கோஷ், பரின் கோஷ், பூபேந்திரனாத் தத்தா, ராஷ் பிகாரி போஸ், குதிராம் போஸ், பாகா ஜத்தின், எம்.என்.ராய், பிரஃபுல்லா சாக்கி, சூரிய சென், பீனா தாஸ், பீரித்தி லதா வாதேதார், பினய் பாசு, தினேஷ் குப்தா, பாதல் பாசு, கனய் லால் தத்தா, ராம் பிரஸாத் பிஸ்மில், சந்திர சேகர ஆசாத், சச்சிந்திரநாத் சன்யால், அஷஃபுல்லா கான், ரோஷன் சிங், ராஜேந்திர லகரி, ராஜ் குரு, பகத் சிங், சுக்தேவ், பைகுந்த ஷுக்லா, ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா, மதன்லால் திங்ரா, உதாம் சிங், ஆனந்த் கன்ஹாரே, நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், செண்பகராமன் பிள்ளை, பிக்காஜி காமா, தாமோதர் சவர்கர். (விடுபட்ட பெயர்கள் ஏராளம்). மேற்குறிப்பிட்ட இளைஞர்களில் பெரும்பான்மையானோர் போராட்டத்தின் போது கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட போராட்ட வீரர்கள், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு சொல்லமுடியாத சித்திரவதைக்கு ஆளாகினர். மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள் பின்வருமாறு – அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு, கக்கோரி ரயில் கொள்ளை வழக்கு, சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல் வழக்கு, டில்லி- லாகூர் சதி வழக்கு, மத்திய நாடாளுமன்ற குண்டு வெடிப்பு வழக்கு, இந்து-ஜெர்மனி சதி வழக்கு (காதர் கலகம்).

ஒருபுறம் இளைஞர்கள் புரட்சியில் இறங்கி போராட, மறுபுறம் அனுபவசாலிகள், வழக்கறிஞர்கள் அரசியலில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர். அந்த காலகட்டத்தில் இருந்த செல்வாக்கு பெற்ற பெரும் அரசியல் கட்சி காங்கிரஸ்தான். 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ், ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருந்தது. அப்போது சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருந்தவர்களும், செல்வந்தர்களும் மட்டுமே காங்கிரஸில் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களைப் பொருத்தவரை காங்கிரஸ் ஒரு விவாத மேடை மட்டுமே. அதைத் தவிர காங்கிரஸ்காரர்களுக்கு ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டுமென்றால் அரசாங்கத்துக்கு மனு போடுவார்கள். மற்றபடி வெகுஜன மக்களுக்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்தது. கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர் திலக், அன்னி பெஸன்ட் உள்ளிட்டோர் காங்கிரஸில் சேர்ந்த பிறகு காங்கிரஸ் வீரியம் கொண்டது. கூடவே பிளவும் ஏற்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் என்று வந்தவுடன் கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றார்கள் மிதமான கொள்கைகளை கடைபிடிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆட்சி அதிகாரத்தில் இந்தியர்களுக்கு பங்கு கிடைத்தாலே போதுமானது என்பது அவர்களது விருப்பம். ஆனால் திலகர், லாலா லஜ்பதி ராய், பிபின் சந்திர பால் போன்றோர்கள் இந்தியாவுக்கு பூரணமான சுதந்திரம் கிடைத்தாக வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். ஆங்கிலேயர்களிடமிருந்து பூரணமான சுதந்திரம் பெறவேண்டும், அதற்காக தீவிரமாகப் போராடினால் தவறில்லை என்று திலகர் கருத்து தெரிவித்தார். சுப்பிரமணிய பாரதியார் திலகருடைய கருத்தை ஆதரித்தார். காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு மிதவாத காங்கிரஸ் மற்றும் தீவிரவாத காங்கிரஸ் என்று இரு பிரிவுகள் தோன்றின.

முதல் உலக யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரவாத முழக்கங்கள் குறைந்தன. அந்த சமயத்தில்தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தி காங்கிரஸில் சேர்ந்து கோகலேவின் வழியை பின்பற்றினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தார். போராட்டங்கள் அனைத்தும் அகிம்சை வழியில் இருக்கவேண்டும் என்று விருப்பப்பட்டார். காந்தியின் தலைமையில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் வெகுஜன மக்களும், பெண்களும் அதிகளவில் கலந்து கொண்டார்கள். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களும், அதற்கு பெருவாரியான மக்களிடருந்து கிடைத்த ஆதரவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஸ்தம்பிக்க வைத்தது. காந்தியுடன் சர்தார் வல்லபபாய் பட்டேலும், ஜவாஹர்லால் நேருவும் சேர்ந்து கொண்டனர். காங்கிரஸில் காந்தி வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்பட்டது. காந்தியின் கொள்கை பிடிவாதத்தின் காரணமாக அவருக்கும் இந்தியாவின் 20ம் நூற்றாண்டின் பெரிய சமூக/அரசியல் தலைவர்களான ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பீமாராவ் அம்பேத்கார், முகமது அலி ஜின்னா, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இரண்டாம் உலக யுத்தம் மூண்ட போது இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் ஒப்புதல் இல்லாமல், இந்திய அரசியல் தலைவர்களை கலந்தாலோசிக்காமல் அப்போது இருந்த வைசிராய் லின்லித்கவ், பிரிட்டிஷ் இந்தியா பிரிட்டனுடன் சேர்ந்து போர் புரியும் என்ற அறிவிப்பை விடுத்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸை சேர்ந்த மாகாண சட்டசபை உறுப்பினர்களும், காங்கிரஸ் மந்திரிகளும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். பிரிட்டிஷ் இந்திய இராணுவம் அப்பொழுது பெரிய படைபலத்தை கொண்டிருந்தது. அதில் சுமார் 25,00,000 போர் வீரர்கள் இருந்தனர். இந்தியா இங்கிலாந்துக்கு ஆதரவாக இரண்டாவது உலக யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்று அரசியல் கட்சிகளிடமும், மக்களிடமும் கருத்து வேறுபாடு நிலவியது. இந்திய இராணுவம் இங்கிலாந்துக்கு சாதகமாக போரில் இறங்கும் என்று ஒருதலைபட்சமாக வைஸ்ராய் அறிவித்ததை கண்டித்து சுபாஷ் கல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கினார். உடனே செயல்பட்ட ஆங்கிலேய சி.ஐ.டி பிரிவு சுபாஷ் சந்திர போஸை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறையில் சுபாஷ் சந்திர போஸ் 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். ஆங்கிலேய அரசு சிறையிலிருந்த அவரை வீட்டுக்காவலுக்கு மாற்றியது. வீட்டுக் காவலிலிருந்து தப்பிய சுபாஷ் சந்திர போஸ் 1941 ஆம் ஆண்டு, மாறுவேடத்தில் ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனிக்கு தப்பித்துச் சென்றுவிட்டார்.

1942ம் ஆண்டு, இரண்டாம் உலக யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், காங்கிரஸ் கட்சி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கியது. முஸ்லீம் லீக், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக ஆங்கிலேய அரசாங்கத்துக்கு ஆதரவாக நிறைய முஸ்லிம்கள் ராணுவ சேவையில் சேர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் தொடங்கி வைத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம், ஜெர்மனியை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த ரஷ்யாவுக்கு பிரிட்டனுடைய துணை தேவைப்பட்டது. அதன் அவசியத்தைப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்டுகள், இந்திய ராணுவம் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதில் விருப்பம் காட்டினர். இந்து மகா சபாவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கி வைத்த காந்தி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களை தங்கள் பணிகளை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டார். வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், தங்களுடைய உத்தியோகத்தைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் காந்தி. அவர் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து லட்சக்கணக்கான இந்தியர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் குதித்தனர்.

அந்த சமயத்தில் ஜப்பான் ராணுவம், ஆங்கிலேயர்களின் கட்டுபாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றியது. மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் வட கிழக்கு மாகாணங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைய ஆயத்தமாக இருந்தது. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஆங்கில அரசு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தது. காந்தி உட்பட ஏனைய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. முக்கிய தலைவர்களின் கைதினால் நாடு அமளி துமளி ஆனது. அஹிம்சையாக நடக்கவேண்டிய போராட்டம் வன்முறையாக மாறியது. நாடெங்கும் கலவரம். லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு பொது இடங்களிலேயே சாட்டை அடி வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கும், ராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கும் பலியானார்கள். சில போராட்டத் தலைவர்கள் தலைமறைவாகி, போராட்டத்தை தூண்டிக்கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களின் தீவிர அடக்குமுறையில், காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் 1944 ஆம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் தேசியவாதிகளுக்கு பெருத்த ஏமாற்றம். அப்பாடா, எப்படியோ போராட்டத்தை முறியடித்து விட்டோம் என்று பெருமூச்சு விட்ட ஆங்கிலேய அரசுக்கு யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் பூதாகரமான புதிய ஒரு போராட்டம் (போராட்டம் அல்ல, அது ஒரு போர்) காத்திருந்தது.

0

வரலாற்றை மாற்றிய செங்கோட்டை – 2

விசாரணையின் முடிவில் பகதூர் ஷாமீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவரும் அவருடைய மனைவியும்  சில குடும்பத்தாரும் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் பகதூர் ஷாவின் கொள்ளு தாத்தாவும் முகலாய சக்கரவர்த்தியுமான ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தொழிற்சாலையை குஜராத்தில் உள்ள சூரத் என்னும் இடத்தில் 1612ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. கொள்ளுத் தாத்தாவின் அனுமதியுடன் வியாபாரம் செய்ய நுழைந்த கிழக்கிந்திய கம்பெனி, இப்பொழுது கொள்ளுப் பேரனையே தேச துரோக குற்றத்துக்காக நாடு கடத்துகிறது.

பகதூர் ஷா பதவியை இழந்து நாடு கடத்தப்பட்டார். பாரம்பரியம் மிக்க 300 ஆண்டுகால முகலாயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக, பல சாம்ராஜ்ஜியங்களுக்கு தலைநகராக இருந்த டெல்லி ஆங்கிலேயர் வசம் சென்றது. ஏற்கெனவே, தெற்கில் திப்பு சுல்தானைத் தோற்கடித்து மைசூர் சமஸ்தானத்தை தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது கிழக்கிந்திய கம்பெனி. தக்காணத்தில் பேஷ்வா தலைமையிலான மராத்தியர்களைத் தோற்கடித்து மகாராஷ்டிரத்தையும், மத்திய பாரதத்தையும் தன்னுடைய நேரடி ஆட்சி அதிகாரத்துக்குள் கொண்டுவந்திருந்தது.

வடக்கில் பஞ்சாப் தேசத்தில் ரஞ்சித் சிங் இறந்த பிறகு, சீக்கியர்களுடன் நடைபெற்ற போரிலும் கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்று பஞ்சாப் மற்றும் அதன் சுற்றுப்புற மாகாணங்களையும் சேர்த்துக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் முன்னதாகவே சென்னை மாகாணமும், வங்க மாகாணமும், இந்தியாவின் வட பகுதிகளும் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இருந்து வந்தன. சிப்பாய் புரட்சியை வெற்றி கொண்ட பிறகு, தனக்கு இருந்த ஒன்று இரண்டு எதிர்ப்புகளையும் கிழக்கிந்திய கம்பெனி முறியடித்தது. முகலாயர்களைத் தோற்கடித்து டெல்லியை கைப்பற்றியதன் வாயிலாக, 1857ல் மொத்த இந்தியாவின் ஆட்சியாளராக உருவெடுத்தது கிழக்கிந்திய கம்பெனி.

0

செங்கோட்டையில் பகதூர் ஷாவின் மீது நடத்தப்பட்ட விசாரணை உண்மையில் கண்துடைப்பு தான். பகதூர் ஷாவின் மீதான விசாரணை 1858 ஜனவரி 27 அன்று தொடங்கியது. தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த பகதூர் ஷா செங்கோட்டையில் உள்ள தர்பாருக்கு அழைத்து வரப்பட்டு, ராணுவ விசாரணை கமிஷன் முன்னர் நிறுத்தப்பட்டார். அங்கு பகதூர் ஷாவின் மீதான குற்றச்சாட்டை மேஜர் ஹாரியட் படித்தார். மேஜர் ஹாரியட் பிராஸிகியூட்டராகவும் (குற்ற வழக்கை தொடுப்பவர்) செயல்பட்டார். பகதூர் ஷாவுக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் கவலைப்படவும் இல்லை.

போராட்டம் தொடர்பாக செங்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் படிக்கப்பட்டன. விசாரணையின் போது பகதூர் ஷா, தான் குற்றவாளி இல்லை என்பதை மட்டும் அவ்வப்போது தெரிவித்து வந்தார். மேலும் வழக்குக்கு எதிராக பகதூர் ஷா தன்னுடைய சிறிய மறுப்புரையை உருது மொழியில் எழுதிக்கொடுத்தார். அதில் தனக்கும் சிப்பாய்களின் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தான் சிப்பாய்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், போராட்டத்தின் போது தன்னைச் சுற்றி என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் சிப்பாய்கள்தான் காரணம், தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் சிப்பாய்கள் நடத்திய போராட்டத்துக்கு தான் என்ன செய்யமுடியும் என்றும் பகதூர் ஷா தன்னுடைய மறுப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.

கம்பெனி சார்பாக விசாரிக்கப்பட்ட சாட்சியங்களை பகதூர் ஷா குறுக்கு விசாரணை எதுவும் செய்யவில்லை. மாறாக பிராசிக்யூட்டரான மேஜர் ஹாரியட், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிய வேண்டும் என்பதற்காகவே பகதூர் ஷா செயல்பட்டிருக்கிறார் என்றும், புரட்சிகாரர்களுக்கும் பகதூர் ஷாவுக்கும் நிறைய தொடர்புகள் இருந்திருக்கிறன என்றும் வாதிட்டார். விசாரணை பல வாரங்கள் நடைபெற்றது. பல சந்தர்ப்பங்களில் பகதூர் ஷா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இறுதியாக மார்ச் 9 அன்று காலை 11 மணிக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. அன்றைய தினமே மாலை 3 மணியளவில் விசாரணையின் முடிவு அறிவிக்கப்பட்டது. பகதூர் ஷாவின் மீது வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மை என்று விசாரணையில் தெரியவந்தது. பகதூர் ஷா இழைத்த குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை தான் வழங்கி இருக்கவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அவர் நாடு கடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்டது விசாரணை கமிஷன். காரணம், அவர் சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக மேஜர் ஹட்ஸன் வாக்குறுதி அளித்திருந்தார். அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

0

பகதூர் ஷாவின் மீது வழக்கு தொடுத்து தண்டிக்கும் அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனிக்கு  உள்ளதா என்பதே விவாதத்துக்கு உரிய கேள்வி. ஒரு நாட்டின் அரசர்மீது வர்த்தகம் செய்யவந்த ஒரு நிறுவனம் எப்படி விசாரணை தொடுக்க முடியும்? அதுவும் தேச துரோகக் குற்றச்சாட்டை எப்படி சுமத்தமுடியும்?

இந்தியாவில் வாணிபம் செய்வதற்கான அதிகாரம் மட்டுமே அரசரின் முன்னோர்களால் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது. பின்னர் வங்காளத்தில் பிளாசியில் 1765ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அதிகாரத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்களிடம் வரி வசூல் செய்யும் அதிகாரத்தையும் பெற்றது. இருப்பினும் 1832ம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனி, முகலாய அரசர்களின் ஆளுமைக்கு கீழ்பட்டு ஆட்சி நடத்திவருவதாக தன்னுடைய நாணயங்களிலும், முத்திரைகளிலும் தெரிவித்து வந்துள்ளது. அப்படி இருக்கையில் முகலாய அரசரான பகதூர் ஷாவை எப்படி தேச துரோக குற்றத்துக்கு ஆட்படுத்த முடியும்?

வேண்டுமென்றால் போரில் தோல்வியுற்ற அரசராக பகதூர் ஷாவை கருதமுடியுமே தவிர, தேச துரோகியாக அல்ல. கிழக்கிந்திய கம்பெனியின்/ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படாத ஒருவரின் மீது தேச துரோக குற்றச்சாட்டு வைப்பது சட்டப்படி ஏற்புடையது ஆகாது. உண்மையில் கிழக்கிந்திய கம்பெனிதான் தேச துரோக குற்றம் புரிந்திருக்கிறது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பதம் பார்த்திருக்கிறது. நாட்டில் வியாபாரம் நடத்திக்கொள் என்று அதிகாரம் கொடுத்தால் நாட்டின் அரசர் மீதே போர் தொடுத்திருக்கிறது கிழக்கிந்திய கம்பெனி.

விசாரணை முடிந்து சுமார் 7 மாதங்கள் கழித்து பகதூர் ஷா, அவருடைய மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் சில வேலை ஆட்களும் மாட்டு வண்டியின் மூலமாக டெல்லியை விட்டு ரங்கூனுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சுமார் இரண்டு மாதம் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பிரயாணம் செய்த பிறகு ஷா குடும்பத்தினர் ரங்கூன் வந்தடைந்தனர். அங்கு காவலில் வைக்கப்பட்ட பகதூர் ஷா 1862ம் ஆண்டு தன்னுடைய 87 வது வயதில் உயிர் இழந்தார்.

பகதூர் ஷாவின் மீது தொடுக்கப்பட்ட வழக்கையும், அவரை நாடு கடத்திய விவகாரத்தையும் மக்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. 322 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அரசர்; ஒரு காலகட்டத்தில் ஏறக்குறைய இந்தியா முழுவதும் ஆட்சி செலுத்திய ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அரசர் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மக்கள் மத்தியில் எதிர்ப்போ, போராட்டமோ நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் 88 ஆண்டுகள் கழித்து செங்கோட்டையில் நடைபெற்ற மற்றொரு வழக்கில் குற்றவாளிகள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் இந்திய நாடே போராட்டத்தில் குதித்தது. கலவரம் வெடித்தது. இத்தனைக்கும் குற்றவாளிகள் அரசர்களோ, அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களோ இல்லை. சாதாரண இராணுவ வீரர்கள்தான்.

0

பிரச்னைக்குரியவரை பர்மாவுக்கு நாடு கடத்தி விட்டோம் என்று ஆங்கில அரசு 1858ல் நிம்மதியடைந்தது. சுமார் 88 ஆண்டுகள் கழித்து 1945ல் அதே பர்மாவில் இருந்து மீண்டும் பிரச்னை எழுந்தது.

செங்கோட்டையில் இருந்து ரங்கூன் தொடங்கிய பயணம், இப்பொழுது தலைகீழாக ரங்கூனில் ஆரம்பித்து செங்கோட்டையை அடைந்தது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று பார்த்துவிடுவோம்.  சிப்பாய் புரட்சியால் ஆங்கிலேயர்கள் தரப்பிலும் இந்தியர்கள் தரப்பிலும் ஏகப்பட்ட உயிர்ச் சேதம் விளைந்தது. கொடூரமான கொலைகள் நடந்தேறின. கான்பூரில் நிகழ்ந்த கலவரங்களும், கொலைகளும் மிகவும் கொடூரமானவை. நாங்கள் அவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்லும்படி இந்தமுறை சிப்பாய்களையும் சம்மந்தப்பட்ட இந்தியர்களையும் ஆங்கிலேயர்கள் குரூரமாக கொன்றொழித்தார்கள். நகரங்களும், ஊர்களும் சூறையாடப்பட்டன. தீயிட்டு கொளுத்தப்பட்டன. டெல்லி நகரம் கொழுந்துவிட்டு எரிந்தது.

போதும், போதும் நடந்ததெல்லாம் போதும் என்று முடிவெடுத்த பிரிட்டிஷ் பாராளுமன்றம் 1858ம் ஆண்டு Government of India Act, 1858 என்ற புதிய சட்டத்தை கொண்டுவந்தது. அந்த சட்டத்தின்படி கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது. இதுகாறும் கிழக்கிந்திய கம்பெனி நடத்தி வந்த ஆட்சி பொறுப்புகளை பிரிட்டிஷ் ராணி எடுத்துக்கொண்டார்.

அப்பொழுது பிரிட்டிஷ் ராணியாக இருந்தவர் விக்டோரியா. கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பிரிட்டிஷ் ராணியின் நேரடி கட்டுபாட்டுக்குள் வந்தன. அது முதல் இந்தியா பிரிட்டிஷ் ராஜ் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. எப்படி இதற்கு முன்னர் இந்தியா முகலாயர்களின் ராஜ்ஜியம், சுல்தான்களின் ராஜ்ஜியம் என்று அழைக்கப்பட்டதோ அதேபோல். கிழக்கிந்திய கம்பெனிக்கும் இந்தியாவுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய சொத்துக்களெல்லாம் பிரிட்டிஷ் அரசுரிமைக்கு மாற்றப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி இந்திய அரசர்களோடு போட்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் எல்லாவற்றிற்கும் கம்பெனிக்கு பதிலாக பிரிட்டிஷ் ராணியே பொறுப்பேற்றார்.

இந்தியா தொடர்பான விவகாரங்களைப் பார்த்துக்கொள்ள India Office என்ற அலுவலகம் பிரிட்டனில் திறக்கப்பட்டது. இந்தியா சம்மந்தப்பட்ட அலுவல்களை கவனித்துக்கொள்ள Secretary of State  (அரசாங்க செயலர்) நியமிக்கப்பட்டார். இவர் காபினட் அந்தஸ்து கொண்ட பிரிட்டிஷ் பாராளுமன்ற மந்திரி. கிழக்கிந்தியா கம்பெனியை நிர்வகித்து வந்த இயக்குனர்களின் பொறுப்புகளை அரசாங்க செயலர் ஏற்றுக்கொண்டார். 15 நபர்கள் அடங்கிய குழு அரசாங்க செயலருக்கு உதவியாக செயல்பட்டது.

பிரிட்டிஷ் ராணி இந்தியா முழுவதையும் தன்னுடைய கட்டளையின் கீழ் ஆட்சி செய்ய கவர்னர் ஜெனரலை நியமனம் செய்யவும், இந்தியாவில் உள்ள மாகாணங்களை நிர்வகிக்க கவர்னரை நியமிக்கவும் 1858ம் ஆண்டு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி கம்பெனியின் கீழ் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த சார்லஸ் ஜான் கேனிங் பிரிட்டிஷ் ராஜ்ஜின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் ஆட்சி புரிந்து வந்த கவர்னர் ஜெனரலுக்கும் பிரிட்டிஷ் மகாராணிக்கும் இடையே பாலமாக இருப்பதுதான் அரசு செயலரின் முக்கியக் கடமை. இந்தியாவுக்கான சிவில் சர்வீஸ் அமைப்பை உருவாக்கும் பொறுப்பும் அரசு செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

0

வரலாற்றை மாற்றிய செங்கோட்டை – 1

செங்கோட்டை – டில்லியில் உள்ள பிரதான சின்னங்களில் ஒன்று. இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த முக்கிய சம்பவங்கள் பல செங்கோட்டையில் நிகழ்ந்துள்ளன. முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் ஷாஜகானால் செங்கோட்டை கட்டப்பட்டது . 1648  தொடங்கி சுமார் 200 ஆண்டுகள் செங்கோட்டை முகலாயர்களின் அரண்மனையாகவும் தர்பாராகவும் இருந்து வந்துள்ளது.

அமைச்சர் பிரதானிகள் படை சூழ, அமீர்களுக்கு மத்தியில் முகலாய அரசர்கள் செங்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். முதலில் ஷாஜகான், அவரைத் தொடர்ந்து அவுரங்கசீப், பின்னர் ஏராளமான மன்னர்கள் செங்கோட்டையில் ஆட்சி செய்திருக்கிறார்கள். அரசர்களைக் காண ஆயிரக்கணக்கான தூதுவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கின்றனர். குதிரை குளம்படி சத்தமும், பேகம்களின் கொலுசொலி சத்தமும் கேட்ட செங்கோட்டை 1857ல் பெரும் சரித்திர மாற்றத்தை எதிர்கொண்டது. மாற்றம் என்பதைவிட மாற்றங்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

முதல் மாற்றத்தில் முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, ஆங்கிலேயர்களின் ஆட்சி உறுதி அடைந்தது. பின்னர், ஏறத்தாழ 90 ஆண்டுகள் கழித்து இரண்டாவது மாற்றம் நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இந்தியா என்ற ஜனநாயக நாடு உதயமானது. இந்த மாற்றங்களுக்குக் காரணமான சம்பவங்கள் ஒருவிதத்தில் செங்கோட்டையில்தான் நடைபெற்றன. செங்கோட்டையில் நடைபெற்ற இரண்டுமே சரித்திர முக்கியத்துவம் பெற்ற வழக்குகள் (இவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு முக்கிய வழக்கும் செங்கோட்டையில் நடைபெற்றது, அது தான் மகாத்மா காந்தி கொலை வழக்கு).

ஒரு வழக்கில், தேச துரோக குற்றச்சாட்டு நாடாளும் மன்னர் மீது சுமத்தப்பட்டது. இன்னொன்று நாட்டை பாதுகாக்கும் இராணுவ அதிகாரிகளின் மீது சுமத்தப்பட்டது. இரண்டு வழக்குகளுக்கும் சரியாக 88 ஆண்டுகள் இடைவேளை இருந்தது. இரண்டு வழக்குகளையும் நடத்தியது ஆங்கிலேய அரசு. முதல் வழக்கு முடிவுற்ற பிறகு, இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆளுமை வலுவடைந்தது. இரண்டாவது வழக்கின் முடிவில் இந்தியா மீதான ஆங்கிலேயர்களின் அதிகாரம் தளர்வடைந்தது. நாம் இப்பொழுது அந்த இரண்டாம் வழக்கைப்பற்றிதான் பார்க்கப்போகிறோம். இருப்பினும் செங்கோட்டையில் நடந்த முதல் வழக்கைப்பற்றி சிறிதேனும் தெரிந்து கொள்வோம்.

0

250 ஆண்டுகளுக்கு மேலாகப் பரந்து விரிந்து இருந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விரைவாக சுருங்கத் தொடங்கியது. 1837ம் ஆண்டு இரண்டாம் பகதூர் ஷா சாஃபர், அவருடைய தந்தையான அகமது ஷா இறந்ததால் பதவிக்கு வந்தார். அப்பொழுது முகலாயர்களின் சாம்ராஜ்ஜியத்தின் விஸ்தீரனம்  செங்கோட்டையுடன் அடங்கிவிட்டது. பகதூர் ஷா பதவி ஏற்கும் சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள அநேக இடங்களைக் கைப்பற்றிவிட்டது, அல்லது தங்கள் வசம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது.

பகதூர் ஷா பேருக்குத்தான் அரசர். அவரை ஒரு பொம்மை அரசராகத்தான கிழக்கிந்திய கம்பெனி நடத்தி வந்தது. பகதூர் ஷாவுக்கு கிழக்கிந்திய கம்பெனி ஓய்வூதியம் கொடுத்தது. மேலும் பகதூர் ஷா ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் வரி வசூல் செய்ய அனுமதியும் வழங்கியது. பகதூர் ஷா செங்கோட்டையில் ஒரு சிறிய படையையும் பராமரித்து வந்தார். அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. அவர் சந்தோஷமாக ஆயிரக்கணக்கான கஜல்கள் எழுதினார். மிர்சா காலிப் என்ற பெரும் புகழ் பெற்ற உருது கவிஞர் பகதூர் ஷாவின் அரசவையைச் சேர்ந்தவர்தான்.

கஜலும் கவிதையுமாக இனிமையாக காலம் கழித்து வந்த 82 வயது பகதூர் ஷா அரசரின் வாழ்க்கையில் விதி சுனாமி போல தாக்கியது. கிழக்கிந்திய கம்பெனி தான் இந்தியாவில் கைப்பற்றி ஆட்சி செலுத்தி வந்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ஒரு ராணுவத்தை உருவாக்கியிருந்தது. அந்த ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர்கள், ஆனால் வீரர்கள் அல்லது சிப்பாய்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள். இந்த சிப்பாய்களுக்கு ஆங்கிலேயர்கள் போர் பயிற்சி கொடுத்து, தேவையான சமயங்களில் மட்டும் ராணுவத்தைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினார்கள். சிப்பாய்களில் இந்துக்களும் இருந்தனர், முஸ்லிம்களும் இருந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனி 1853ம் ஆண்டு வாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கியைத் தன்னுடைய இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தத் துப்பாக்கியில் காகிதத்தால் சுற்றப்பட்ட வெடிமருந்து நிரம்பிய தோட்டா பயன்படுத்தப்பட்டது. துப்பாக்கியில் அந்த தோட்டாவை நிரப்பவேண்டும் என்றால், தோட்டாவைச் சுற்றி இருக்கும் காகிதத்தை வாயால் கடித்து பிய்த்து எடுக்கவேண்டும். இதில் என்ன சங்கடம் என்றால் அந்த காகிதத்தில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பசை தடவப்பட்டிருந்தது.

இந்துக்களுக்கு மாடு புனிதமானது. அதனால் மாடுகளைக் கொன்று அதனுடைய கொழுப்பில் தயாரிக்கப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்தனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை பன்றி என்பது ஹராம். தீண்டக்கூடாத ஒரு மிருகம். அதனால் அவர்களும் பேப்பர் தோட்டாவைப் பயன்படுத்த விரும்பவில்லை. அவர்கள் இப்படிப் புரிந்துகொண்டார்கள். மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பேப்பர் தோட்டாக்களை நம்மை பயன்படுத்த வைப்பதன் வாயிலாக நம் சாதி, மத நம்பிக்கைகளை வெள்ளையர்கள் போக்கடிக்க முயல்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. கூடுதலாக, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும் இந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறது என்றொரு புரளியும் பரவியது.

விளைவாக, சிப்பாய் புரட்சி வெடித்தது. புராட்சிக்கு என்ஃபீல்ட் தோட்டாக்கள் மட்டும் காரணமில்லை. வாரிசில்லாத இந்திய ராஜ்ஜியங்களைக் கிழக்கிந்திய கம்பெனி எடுத்துக்கொண்டது. அதிகமான நில வரி வசூலிக்கப்பட்டது. ராணுவத்தில் பதவி உயர்வில் ஆங்கிலேயர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் மேற்சொன்ன நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மக்கள் புரட்சியில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். அதனால்தான் 1857ல் ஏற்பட்ட சிப்பாய் புரட்சியை முதல் விடுதலைப் போர் என்று சரித்திர ஆசிரியர்கள் அழைக்கிறார்கள்.

ஆனால் இதற்கும் மன்னர் பகதூர் ஷாவுக்கும் என்ன தொடர்பு? ஒன்றுமில்லைதான். ஆரம்பத்தில், கல்கத்தாவில் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய படைப் பிரிவில் உள்ள ஏனைய சிப்பாய்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மங்கள் பாண்டே கொல்லப்பட்டார். அவருடன் பணிபுரிந்த படைப்பிரிவு கலைக்கப்பட்டது. ஆனால் பெரிய வன்முறை எதுவும் நடைபெறவில்லை.

ஆனால், கல்கத்தாவை தொடர்ந்து உத்திரப் பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பெரிய அமளி துமளியே ஏற்பட்டது. சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் கொன்றுவிட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த போர்க்கொடி உயர்த்திய மற்ற சிப்பாய்களையும், ஏனையக் கைதிகளையும் விடுவித்துக் கொண்டு டெல்லியை நோக்கிப் புறப்பட்டனர்.

டெல்லியில் செங்கோட்டையில் பகதூர் ஷாவை சந்தித்து நீங்கள்தான் எங்களுடைய போராட்டத்தை வழி நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பகதூர் ஷா என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். இதற்குள் அவரது அரசவையில் இருந்தவர்கள்  இதுதான் சமயம் என்று புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களுடன் சேர்ந்து கொண்டு கண்ணில் பட்ட ஆங்கிலேயர்களை எல்லாம் தாக்க ஆரம்பித்தனர். ஏராளமான ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உறைவிடங்கள் தாக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போயிற்று. வெகுநாள்களாக கூட்டாமல் இருந்த தன்னுடைய அரசவையை பகதூர் ஷா கூட்டினார். போராட்டத்துக்குத் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

புரட்சி, கலவரம், முதல் விடுதலைப் போர் என்று எப்படி அழைத்தாலும் உண்மை இதுதான். போராட்டம் கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு உட்பட்ட சென்னை மற்றும் மும்பை மாகாணப் பகுதிகளில் மட்டும் புரட்சி ஏதுமில்லாமல் அமைதியாக இருந்தது. ஆனால் வட மற்றும் மத்திய இந்தியாவில் நிலைமை வேறு. ஜான்சியில் ராணி லட்சுமி பாய் போர்கொடி தூக்கினார். கான்பூரில் நானா சாகிப் மற்றும் அவருடைய தளபதி தாத்தியா தோப் எதிர்ப்பு தெரிவித்தனர். கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய மற்ற பகுதிகளிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ராணுவத்தை வரவழைத்து புரட்சியை ஒடுக்கியது. ராணி லட்சுமி போராட்டத்தில் இறந்து போனார். நானா சாகிப் ஆங்கிலேயர்களிடம் அகப்படாமல் நேபாளத்துக்குத் தப்பித்து ஓடியதாக சொல்லப்படுகிறது. தாத்தியா தோப் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மற்ற போராட்ட கைதிகளெல்லாம் பீரங்கியின் முனையில் கட்டப்பட்டு, பீரங்கி குண்டுகளால் சிதறடிக்கப்பட்டனர்.

போராட்டத்துக்கு தலைமை தாங்குவதாக சொன்ன கிழ அரசரும் அவரது சகாக்களும் எங்கே என்று ஆங்கிலேய ராணுவம் தேடியது. பகதூர் ஷா சாஃபரும் அவருடைய மகன்களான மிர்ஸா மொகல், மிர்ஸா கிஸிர் மற்றும் பகதூர் ஷாவின் பேரன் மிர்ஸா அபு பக்கர் ஆகியோரும் ஹுமாயூனின் கல்லறையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே கம்பெனி ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஹட்ஸன், ஹுமாயூனின் கல்லறையை தன்னுடைய வீரர்களுடன் சுற்றி வளைத்தார். பகதூர் ஷாவை கைது செய்தார். பிடிபட்ட பகதூர் ஷாவின் மகன்களும் பேரனும் கொல்லப்பட்டனர். (இதில் பகதூர் ஷாவின் பீபியான ஜீனத் மகாலுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான். காரணம் அவளுடைய புதல்வன் மிர்ஸா ஜவான் பகத் தான் இப்பொழுது அரசரின் அடுத்த வாரிசு).

பகதூர் ஷா செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மீது, சிப்பாய்களுக்கு துணை போனது; 49 பேரைக் கொலை செய்தது; ஆங்கிலேயர்களுக்கு எதிராக தேச துரோகம் செய்தது என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 40 நாள்கள் விசாரணை நடைபெற்றது. நாடாளும் ஒரு அரசரின் மீது தேச துரோகம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தியது சரித்திரத்தில் இதுதான் முதல்முறை.  இறுதிமுறையும்கூட.

0

மர்ம சந்நியாசி – 9 : இறுதி அத்தியாயம்

வங்காளத்தின் பிரபல அரசியல் தலைவரும் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சருமான திரு பி.சி.ராய், பன்னாலால் பாசுவைத் தன்னுடைய அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், நில வருவாய் துறை அமைச்சராகவும் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார். பன்னாலால் பாசு, ஜமீன்தார் முறை ஒழிய வேண்டும் என்ற கருத்து கொண்டவர். அவருடைய ஜமீன் எதிர்ப்பின் ஆர்வத்தில் உருவானதுதான் வங்காள நில சீர்திருத்தச் சட்டம். 1955ம் ஆண்டு பன்னாலால் பாசு அவர்களால் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

பன்னாலால் பாசுவின் உடல் நலம் சரியில்லாத காரணத்தால், அவரால் பி.சி.ராயின் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. 1956ம் ஆண்டு தன்னுடைய கல்வி அமைச்சர் பதவியை பன்னாலால் பாசு ராஜினாமா செய்தார். அதே வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, தன்னுடைய 65-வது வயதில் பன்னாலால் பாசு இயற்கை எய்தினார். பன்னாலால் பாசுவின் குடும்பம் மிகவும் பெரியது. அவருக்கு 11 மகன்கள், ஒரு மகள்.

0

நீதிபதி பன்னாலால் பாசு எதிர்பார்த்தது போல், பிபாவதி மற்றும் பாவல் ஜமீனை நிர்வகித்து வந்த நீதிமன்றக் காப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து, டாக்கா மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீடு 1936ம் வருடமே தாக்கல் செய்யப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வருடம் என்னவோ 1939ம் வருடம் தான்.

கல்கத்தா உயர் நீதிமன்றம், பிபாவதியும் மற்றவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு பென்ச் ஒன்றை ஏற்பாடு செய்தது. சிறப்பு பென்ச்சில் மூன்று நீதிபதிகள் இருந்தனர். அவர்கள் கல்கத்தா நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சர் லியோனார்ட் காஸ்டெல்லோ, நீதிபதி சாரு சந்திர பிஸ்வாஸ் மற்றும் நீதிபதி ரொனால்ட் பிரான்சிஸ் லாட்ஜ்.

நவம்பர் மாதம் 14 ஆம் தேதி, 1938ம் வருடம் மேல்முறையீட்டு விசாரணை தொடங்கியது. இரு தரப்பிலிருந்தும் சிறந்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். மேல்முறையீட்டாளர்கள் தரப்பில், ‘மேஜோ குமார் இறக்கவில்லை என்று சந்நியாசியால் நிரூபிக்க முடியவில்லை’ என்று வாதிட்டனர். சந்நியாசி தரப்பில், ‘மேஜோ குமார் இறக்கவில்லை என்றும், மேஜோ குமார்தான் சன்னியாசி என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை’ என்றும் வாதிடப்பட்டது. மேல்முறையீட்டின் விசாரணை ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி 1939ம் வருடம் முடிவடைந்தது.

விசாரணை முடிந்ததும் தலைமை நீதிபதி காஸ்டெல்லோ, தன்னுடைய சொந்த ஊரான இங்கிலாந்துக்கு விடுப்பில் சென்றுவிட்டார். அவர் கல்கத்தா திரும்பியவுடன் அந்த ஆண்டு நவம்பர் மாதமே மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தலைமை நீதிபதியால் குறிப்பிட்ட தேதியில் கல்கத்தாவுக்கு திரும்பமுடியவில்லை. காரணம், ஹிட்லர். அடால்ஃப் ஹிட்லர் செப்டம்பர் 19 ஆம் தேதி, 1939ம் வருடம் ஐரோப்பாவில் இரண்டாவது உலக யுத்தத்தை தொடங்கியிருந்தார். இரண்டாவது உலக யுத்தத்தால் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து தடைபட்டிருந்தது.

விசாரணை முடிந்த ஒரு வழக்கில் வெகு நாட்களுக்கு தீர்ப்பை தள்ளிப் போட முடியாது. எனவே நீதிபதி பிஸ்வாசும், நீதிபதி லாட்ஜும் தத்தம் தீர்ப்புகளை வெளியிட்டனர். பெருந்திரளான கூட்டம் கூடி இருந்த கல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில், முதலில் நீதிபதி பிஸ்வாஸ் தன்னுடைய தீர்ப்பை படித்தார். அவருடைய தீர்ப்பு சுமார் 433 பக்கங்களைக் கொண்டது. வழக்கின் ஒவ்வொரு விஷயத்தையும் தன்னுடைய தீர்ப்பில் நன்கு அலசியிருந்தார் நீதிபதி பிஸ்வாஸ்.

“நான் டாக்கா நீதிபதி பன்னாலால் பாசுவின் தீர்ப்பில் உடன்படுகிறேன். மிகவும் சிக்கலான இம்மாதிரி வழக்கில் மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் முடிவெடுத்திருக்கும் நீதிபதி பன்னாலால் பாசுவுக்கு என் முதன்மைப் பாராட்டுக்கள். நான் நீதிபதி பன்னாலால் பாசுவின் தீர்ப்பை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். அதிலிருந்து என்னால் ஒரு தவறைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. சிறு சிறு விஷயங்களில்கூட நீதிபதி பன்னாலால் பாசு மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். நான் என்னுடைய இந்தத் தீர்ப்பை தயாரிக்கும் போதுதான் ஒரு விஷயத்தை நினைத்து மிகவும் நெகிழ்ந்து போனேன். நான் என்னுடைய தீர்ப்பை எழுத எடுத்துக்கொண்ட நேரத்தில் பாதி நேரத்தை தான் நீதிபதி பன்னாலால் பாசு எடுத்துக்கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், எனக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வசதிகள் போல நீதிபதி பன்னாலால் பாசுவுக்கு டாக்கா மாவட்ட நீதிமன்றத்தில் வசதிகள் கிடையாது. நீதிபதி பன்னாலால் பாசு வெளியிட்ட தீர்ப்பில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நான் அவரது தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. இதன் காரணம் பொருட்டு, பிபாவதியும் ஏனையவர்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறேன்”.

அடுத்து நீதிபதி ரொனால்ட் லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். அவர் 300 பக்கங்களுக்குத் தன்னுடைய தீர்ப்பை எழுதியிருந்தார். நீதிபதி லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பை வாசித்து, அதை கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் ஒரு குண்டைப் போட்டார்.

“நான் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மதிப்புமிக்க நீதிபதி பன்னாலால் பாசு பாரபட்சமாக முடிவெடுத்ததாக தெரிகிறது. வழக்கு விசாரணை முழுவதிலும் சந்நியாசி தரப்பில் அளிக்கப்பட்ட சாட்சியங்களுக்கு, நீதிபதி பன்னாலால் பாசு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக தெரிகிறது. அப்படி சந்நியாசியின் சாட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், அந்த சாட்சிகளின் நம்பகத்தன்மையை சோதித்ததாகத் தெரியவில்லை. மேஜோ குமாரின் சகோதரி ஜோதிர்மாயி நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஜோதிர்மாயியின் சாட்சியம் உண்மையானதாக இருக்குமா என்பது என் சந்தேகம். மேலும் மேஜோ குமாருக்கு அஷுதோஷ் பாபுவால் ஆர்ஸனிக் விஷம் கொடுக்கப்பட்டது என்றும், அதன் பாதிப்பால் தான் அவர் மூர்ச்சை அடைந்தார் என்றும், அதற்குப் பிறகு அவருக்கு ஈம காரியங்கள் செய்ய சுடுகாட்டுக்குகு எடுத்துச்செல்லப்பட்டார் என்பதற்கெல்லாம் ஒரே சாட்சி சந்நியாசி மட்டுமே. அந்த சாட்சியை உறுதி செய்ய வேறு சாட்சிகள் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்நியாசியின் சாட்சியத்தை மட்டுமே வைத்துக்கொண்டு முடிவு எடுப்பது சரியானதாகத் தோன்றவில்லை.

மேஜோ குமார் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் செய்தியில் மூன்று விதமான கருத்து நிலவுகிறது. இப்படி பல்வேறு கருத்துகள் நிலவும் பட்சத்தில் சந்நியாசியின் கூற்றுதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்திருப்பது சரியில்லை.

டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு நடந்த சமயத்தில் பார்வையாளர்கள், மக்கள் என்று அனைவருமே சன்னியாசியின் பக்கம் தான் இருந்திருக்கின்றனர். பத்திரிக்கைகளிலும், நாளேடுகளிலும், துண்டுப் பிரசுரங்களிலும் சன்னியாசி பக்கம் நியாயம் இருப்பதாகவும், எதிர் தரப்பு அநியாயம் செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது தேவையில்லாத அவதூறுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பிபாவதி தரப்புக்கு விரோதமான சூழ்நிலையே இருந்திருக்கிறது. இந்த நிலையில் டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது பிபாவதி தரப்பினருக்கு பாதகமாக அமைந்துவிட்டது.
அஷுதோஷ் பாபு மேஜோ குமாருக்கு ஆர்ஸனிக் கலந்த மருந்தைக் கொடுத்தது, மேஜோ குமாரைக் கொலை செய்வதற்குத்தான் என்று சொல்வது ஏற்புடையதல்ல. மலேரியா போன்ற நோயை குணப்படுத்துவதற்கு ஆர்சனிக் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்பட்டுவருகிறது. உண்மையாக மேஜோ குமாரை குணப்படுத்துவதற்காகக் கூட, அவருக்கு ஆர்சனிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

அதேபோல், டாக்டர் கால்வெர்ட் மேஜோ குமாருக்கு Biliary Colic  இருந்திருக்கலாம் என்று சொன்னதை சந்தேகிக்கவில்லை. மே மாதம் 8 ஆம் தேதி, மேஜோ குமாருக்கு உடல் ரீதியில் ஏற்பட்ட அறிகுறிகள் எல்லாம் அவர் மேற்படி நோயால் பாதிக்கப்பட்டதாலும், அவருக்கு பேதி மருந்து வழங்கப்பட்டதாலும் தான் ஏற்பட்டிருக்கிறது”.

டார்ஜிலிங்கில் சம்பவத்தன்று மழை பெய்தது, டார்ஜிலிங் பங்களாவின் மேற்பார்வையாளர் ராம் சிங் சுபாவின் சாட்சி, சாதுக்கள் மேஜோ குமாரைக் காப்பாற்றியதாக சொல்வது என அனைத்தையும் மறு ஆய்வு செய்து, அவற்றின் நம்பகத்தன்மையைக் குறித்து பல கேள்விகளை எழுப்பி, இறுதியில் இவையெல்லாம் கட்டுக்கதை என்ற தன்னுடைய முடிவை வெளியிட்டார்.

உடன்பிறந்ததாகச் சொல்லப்படும் சகோதரிக்கு, 12 வருடங்களாகத் தேடிவரும் தன்னுடைய தமையனாரை பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுபிடிக்கமுடியாமல் போனது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார் நீதிபதி லாட்ஜ்.

சந்நியாசியின் சகோதரி மகள் தேபூ, குடும்பப் புகைப்படத்தை சந்நியாசியிடம் காட்டியவுடன் அவர் அதைப் பார்த்து அழுதார் என்று சொல்வது ஹாலிவுட் படத்தையே மிஞ்சிவிட்டது என்று தெரிவித்தார் நீதிபதி லாட்ஜ்.

சந்நியாசி ஜெய்தேபூரில் முதன் முதலில் தன்னுடைய தங்கை ஜோதிர்மாயி வீட்டுக்குச் சென்றதும், அங்கு அவருடைய பாட்டி மற்றும் ஏனைய குடும்பத்தாரைப் பார்த்தது, பின்னர் உணவருந்தியது, அதன் பின்னர் ‘நான் அவன் இல்லை’ என்று சொன்னது போன்ற நிகழ்ச்கிகளை சந்நியாசி விவரித்திருப்பது ஒரு நல்ல குடும்ப நாவலைப் படித்த உணர்வை ஏற்படுத்தியதாக நீதிபதி லாட்ஜ் தெரிவித்தார்.

மேலும் நீதிபதி லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்ட பின்வரும் விவரங்கள் அனைவரையும் தூக்கிவாரிப்போட்டன. அவர் தன்னுடைய தீர்ப்பில், சந்நியாசியும் மேஜோ குமாரும் ஒரே உருவம் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது தவறு என்று கூறினார். இருவரின் உடலிலும் உள்ள அங்க, அடையாளங்களைப் பார்க்கும்போது இருவரும் ஒருவரே என்ற முடிவுக்கு என்னால் வரமுடியவில்லை என்றார் நீதிபதி லாட்ஜ். சந்நியாசி வங்காள மொழியை விட ஹிந்தி நன்றாகப் பேசியிருக்கிறார். அதனால் அவர் ஒரு வங்காளியாக இருக்கமுடியாது. அவர் நிச்சயமாக ஒரு ஹிந்துஸ்தானியாகத்தான் இருக்க முடியும். அந்த ஹிந்துஸ்தானியான சந்நியாசிக்கு மேஜோ குமார் பற்றிய அனைத்து விவரங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேஜோ குமார் இறந்து விட்டார் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. இப்பொழுது நான் தான் மேஜோ குமார் என்று சொல்லிக் கொள்பவர் ஒரு போலி; உண்மையான மேஜோ குமார் இல்லை என்று உயர்திரு நீதிபதி லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பை வெளியிட்டு கூடி இருந்த அனைவரையும் வாய்பிளக்கும் படி அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார். மேலும் பிபாவதியும் மற்றவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை செலவுத் தொகையுடன் அனுமதித்து, நீதிபதி பன்னாலால் பாசு வெளியிட்ட தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி ரொனால்ட் பிரான்சில் லாட்ஜ்.

கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதி லாட்ஜ் தன்னுடைய தீர்ப்பை படித்து முடித்தவுடன் அங்கிருந்தவர்கள் முகங்களில் (பிபாவதி தரப்பினர்களைத் தவிர) ஈ ஆடவில்லை. பிபாவதி தரப்பினர்களுக்கு லாட்ஜின் தீர்ப்பு இன்ப அதிர்ச்சி. அவர்கள் முகத்தில் ஒரே மலர்ச்சி. தீர்ப்பைக் கேட்ட சில நிமிடங்களில் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. என்னடா இது, ஒரு நீதிபதி சன்னியாசிதான் மேஜோ குமார் என்று தீர்பளித்திருக்கிறார். ஆனால் இன்னொருவர் சன்னியாசி மேஜோ குமார் இல்லை என்கிறாரே என்று அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வி. அடுத்தது என்னவாகும் என்று குழப்பம். கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு அணிகளுக்கும் இடையே டை ஆனது போல் ஆகிவிட்டதே? இந்த இருவேறுபட்ட கருத்தை வைத்து பழைய சர்ச்சைகள் அனைத்தும் புதிய வடிவம் பெற்றன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கு எங்கு ஆரம்பித்ததோ அதே இடத்துக்கு போய்விட்டது.

கல்கத்தா முழுவதும் இந்த வழக்கையும் அதன் தீர்ப்பையும் பற்றித்தான் பேச்சு. அடுத்த நாள் வெளியான அனைத்து செய்தித்தாள்களிலும் நாளேடுகளிலும் இந்த வழக்கைப் பற்றித்தான் தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது. வழக்கின் செய்தியும் அதன் சுவாரஸ்யமும் கல்கத்தாவையும் கடந்து சென்னை, டில்லி, மும்பை போன்ற இடங்களுக்கும் பரவியது. ராய்ச்சர் மற்றும் ஏனைய சர்வதேச பத்திரிக்கை நிறுவனங்களும் லண்டன், நியூயார்க் என்று அனைத்து உலக நகரங்களிலும் உள்ள தங்களது பத்திரிக்கைகளில் இந்த வழக்கைப் பற்றியும் அதன் தீர்ப்பைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டன.

ஆக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் இருவேறு முரண்பாடான தீர்ப்புகளை வெளியிட்டுவிட்டனர். சந்நியாசிதான் மேஜோ குமாரா? இல்லையா? என்ற கேள்விக்குப் பதிலளித்து, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர ஒரே நபரால்தான் முடியும். அவர்தான் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சர் லியோனார்ட் காஸ்டெல்லோ. பாவம் அவர்தான் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதால் இங்கிலாந்தில் மாட்டிக்கொண்டாரே, என்ன செய்வது. இங்கிலாந்து சென்று கிட்டத்தட்ட ஓர் ஆண்டு ஆகும் தருவாயிலும், தலைமை நீதிபதி காஸ்டெல்லோவால் கல்கத்தாவுக்குத் திரும்ப முடியவில்லை. ஆனால் தலைமை நீதிபதி, தீர்ப்பு வழங்குவதில் இன்னமும் காலம் தாழ்த்த விரும்பவில்லை. தான் எழுதி தயார் செய்து வைத்திருந்த தீர்ப்பை கல்கத்தா நீதிமன்றத்துக்குத் தபாலில் அனுப்பி வைத்தார்.

சந்நியாசி வழக்கில் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கல்கத்தா நீதிமன்றத்தில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தலைமை நீதிபதியின் தீர்ப்பு வெளியிடப்படும் நாள் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியிடப்படும் நாளன்று ஜே ஜே என்று கூட்டம். நீதிமன்றத்தின் உள்ளே, வெளியே, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள தெருக்கள் என அனைத்து இடங்களிலும் தீர்ப்பைக் கேட்பதற்கு கூட்டம் நிறைந்தது. கல்கத்தா நகரத்தின் முக்கிய சாலைகளெல்லாம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிஸ்வாசும், லாட்ஜும் வந்து அமர்ந்தார்கள். கூடியிருந்த கூட்டம் நீதிபதிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

நீதிபதி பிஸ்வாஸ் ஆரம்பித்தார். “முதலில் இந்த வழக்கை விசாரித்த எங்களில் மூத்த நீதிபதியான சர் லியோனார்ட் காஸ்டெல்லோவால், அவருடைய தீர்ப்பை வெளியிட அவரால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் அவர் எழுதிய தீர்ப்பை எங்களுக்கு அனுப்பி, அதை வெளியிடுமாறு பணித்திருக்கிறார். நானும் என்னுடைய சகோதர நீதிபதியுமான நீதிபதி லாட்ஜும், தலைமை நீதிபதியின் தீர்ப்பை இன்று வரை படிக்கவில்லை. உங்கள் முன்னர்தான் நாங்கள் முதன் முதலாக தீர்ப்பை படித்து, அதில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளப்போகிறோம்” என்று கூறிவிட்டு, சீல் செய்யப்பட்ட கவரைத் திறந்து அதிலிருந்த தீர்ப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார் நீதிபதி பிஸ்வாஸ்.

இம்மாதிரி ஒரு வழக்கு இந்திய நீதிமன்றத்தில் இதுவரை வந்ததில்லை. எந்த நாட்டு நீதிமன்றத்திலும் வந்ததில்லை. நீதித் துறையின் சரித்திரத்திலேயே இவ்வழக்கு தனித்துவம் பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மற்ற இரண்டு நீதிபதிகளையும் போல் இந்த வழக்கை ஆரம்பம் முதல் கடைசி வரை ஆராய்ந்து, முடிவில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிடுவது சரியாக இருக்காது. எனவே இந்த மேல்முறையீடு நிலைக்கத்தக்கதல்ல என்ற தன்னுடைய முடிவை தெரிவித்திருந்தார். இந்தத் தீர்ப்பை வாசிக்கக் கேட்ட பெருவாரியானவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மூன்று நீதிபதிகளில் இருவர் மேல்முறையீட்டு மனு நிலைக்கத்தக்கதல்ல என்று முடிவெடுத்ததால், சந்நியாசி மேல்முறையீட்டு வழக்கிலும் ஜெயித்துவிட்டார்.

சர் லியோனார்ட் காஸ்டெல்லோவின் தீர்ப்பு வெளியான மறுநாள், கல்கத்தாவில் அதிகப் பிரதிகளை விற்கும் ‘தி ஸ்டேஸ்மன்’ நாளேட்டில், The Romance of a Sanyasi என்ற தலைப்பில் இந்த வழக்கைப் பற்றி மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.

ஆனால் வழக்கு இன்னும் முடிந்த பாடு இல்லை. பிபாவதியின் சார்பில் மேலும் ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா சுதந்தரம் அடையவில்லை. உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்படவில்லை. அந்தச் சூழ்நிலையில் ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால், லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலில் தான் மேல் முறையீடு செய்யவேண்டும். பிபாவதியும் அதைத் தான் செய்தாள்.

ப்ரிவி கவுன்சிலில் பிபாவதிக்கு ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் திரு W.W.W.K. பேஜ். அவருக்குத் துணையாக செயல்பட்டவர் இந்திய வழக்கறிஞர் திரு பி.பி.கோஷ். ப்ரிவி கவுன்சிலில் சந்நியாசிக்கு ஆஜரானவர் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் திரு டி.என்.பிரிட். இவர் இந்தியர்களின் சுதந்தரக் கோரிக்கைக்கு மிகவும் ஆதரவு தெரிவித்தவர். இந்த வழக்கில் இவருக்குத் துணையாக செயல்பட்ட இந்திய வழக்கறிஞர்கள் திரு. ஆர்.கே.ஹாண்டூ, திரு. யு. சென் குப்தா மற்றும் திரு. அரோபிந்தா குகா.

ப்ரிவி கவுன்சிலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் லார்ட் தாங்கர்டன், லார்ட் டுயு பார்க் மற்றும் சர் மாதவன் நாயர். இந்த மாதவன் நாயர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆஷ் கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான சர் சங்கரன் நாயர் அவர்களின் மருமகனாவார். இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்தவரும், சிறந்த சட்ட வல்லுனருமாக இருந்ததால்தான் சர் மாதவன் நாயர் ப்ரிவி கவுன்சிலில் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதியாக அமர்த்தப்பட்டார்.

ப்ரிவி கவுன்சிலில், சுமார் 28 நாட்கள் விசாரணை நடைபெற்றது. மூன்று நீதிபதிகளின் சார்பில் லார்ட் தங்கர்டன், ஜூலை மாதம் 30 ஆம் தேதி 1946ம் வருடம் தீர்ப்பை வெளியிட்டார். வெறும் பத்து பக்கங்களிலேயே அந்தத் தீர்ப்பு முடிந்துவிட்டது. கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான் என்று சொல்லி, செலவுத் தொகை எதுவும் இல்லாமல் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது ப்ரிவி கவுன்சில்.

ப்ரிவி கவுன்சிலின் தீர்ப்பைப் பற்றி லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கல்கத்தாவின் பிரபல வங்காள மொழிப் பத்திரிகை ‘அம்ரித பசார் பத்திரிக்கா’ தன்னுடைய தலைப்புச் செய்தியில் ‘ப்ரிவி கவுன்சிலின் தீர்ப்பு, குமார் ராமேந்திர நாராயண் ராய்க்கு சாதகம்’ என்று வெளியிட்டது.

0

அப்பாடா இதற்கு மேல், மேல் முறையீடு என்று ஒன்றும் இல்லை. ஒருவாறாக சந்நியாசி வழக்கு முடிவுக்கு வந்தது. இனியும் சந்நியாசி என்று அவரைச் சொல்லக்கூடாது. அது நியாயமாக இருக்காது. அதுதான் மூன்று நீதிமன்றங்களும் சந்நியாசிதான் மேஜோ குமார் என்று அறிவித்து விட்டனவே. எனவே நாம் இனிமேல் அவரை மேஜோ குமார் என்றே அழைப்போம்.

வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, மேஜோ குமார் 1942ம் ஆண்டு சிரிஜுக்தோ தாரா தேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் என்ன, மேஜோ குமார் திரும்பி வந்து 21 ஆண்டுகள் ஆகியும், பிபாவதி அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் என் கணவர் இல்லை என்றே சொல்லிவந்தார். அந்த ஆள் ஒரு போலிச் சாமியார் என்றே வாதாடி வந்தார்.
மேஜோ குமார், தான் சந்நியாசியாக இருந்த சமயத்தில் யோக அபியாசங்கள் செய்து வந்த காரணத்தாலும், அதை வெகுநாட்கள் தொடர்ந்து வந்ததாலும் தனக்கு சில சித்திகள் கிடைத்ததாக தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் சொல்லி வந்தார்.

“நான் தொடர்ந்த வழக்கில் இறுதிவரை எனக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்த சில நாள்களுக்குள்ளாகவே நான் இறந்து விடுவேன்” என்று மேஜோ குமார் சிலரிடம் தெரிவித்திருக்கிறார்.

ப்ரிவி கவுன்சிலின் தீர்ப்பு தந்தி மூலம் கிடைக்கப்பெற்று சரியாக நான்காவது நாள், கல்கத்தாவில் உள்ள தாந்தோனியா கோயிலுக்குச் சென்று நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்றார் மேஜோ குமார். தனது வேண்டுதலின் படி அந்தக் கோயிலில் உள்ள காளிக்கு அபிஷேகம், ஆராதனை செய்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய மேஜோ குமார் ரத்த வாந்தி எடுத்தார். சற்று நேரத்திற்கெல்லாம் மேஜோ குமார்  இறந்துவிட்டார். அப்போது அவர் வயது 63.

0

மேஜோ குமார் இறுதி வழக்கில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு அங்கு வந்த அவருடைய சொந்தக்காரர்களும் வேண்டப்பட்டவர்களும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கமுடியவில்லை. மாறாக இரங்கல் தான் தெரிவிக்க முடிந்தது.

மேஜோ குமார், அவருடைய குரு தரம் தாஸ் சொன்னது போல் தன்னுடைய கர்மத்தை கடந்துவிட்டார். ராஜ்குமாராகத் தோன்றி சந்தர்ப்பவசத்தால் சந்நியாசியாகி மறுபடியும் ராஜ்குமாராக அங்கீகரிக்கப்பட்டு, ஆனால் அது நிலைப்பதற்குள் அனைவரையும் கடந்து சென்றுவிட்டார் மேஜோ குமார். எதுவுமே இந்த உலகத்தில் நிலையானதில்லை என்று தன்னுடைய வாழ்க்கை மூலம் அனைவருக்கும் உணர்த்திவிட்டுச் சென்றுவிட்டார் மேஜோ குமார்.

ஆனால் பிபாவதி அப்படி நினைக்கவில்லை. நீதிமன்றத்தில் வேண்டுமானால் தன்னுடைய மேல்முறையீடு தோற்றுப்போயிருக்கலாம். ஆனால் கடவுளிடம் தன்னுடைய முறையீடு தோற்கவில்லை என்றே கருதினாள்.

மேஜோ குமார் இறந்த பிறகு பிபாவதிக்கும் மேஜோ குமாரின் இரண்டாவது மனைவியான தாரா தேவிக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. மேஜோ குமாரின் இரண்டாவது மனைவி தாரா தேவி, பிபாவதி மேஜோ குமாரின் சொத்தை அனுபவிக்கத் தகுதியற்றவர்; அதனால் Court of Wards  பிபாவதிக்கு சொத்தில் பங்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று பரிகாரம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அவ்வாறு பரிகாரம் கேட்பதற்காக அவர் சொல்லிய காரணம், ப்ரிவி கவுன்சில் சந்நியாசி தான் மேஜோ குமார் என்று தீர்ப்பு அளித்த பிறகும், பிபாவதி சந்நியாசியை மேஜோ குமாரக அங்கீகரிக்கவில்லை, கணவராக ஏற்றுக்கொள்ளவில்லை. மேஜோ குமார் சமீபத்தில் இறந்த போது கூட அவரை வந்து பார்க்கவில்லை. மேஜோ குமாரின் ஈமக் காரியங்களில் கலந்துகொள்ளவில்லை. முறைப்படி, தான் செய்யவேண்டிய சடங்குகள் எதையும் பிபாவதி செய்யவில்லை. எனவே அவள் இந்து சாஸ்திரத்தின் படி உண்மையான தர்மபத்தினி கிடையாது. பிபாவதி ஒரு தர்ம பத்தினியின் கடமையை செய்யத் தவறியதால், இறந்த கணவனின் சொத்தை அனுபவிக்க முடியாது என்று வாதிடப்பட்டது.

கீழ் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டு தாரா தேவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து பிபாவதி சார்பில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ப்ரிவி கவுன்சிலின் உத்தரவை ஏற்காததால் ஒருவர் தர்ம பத்தினி அந்தஸ்தை இழந்துவிடுவார் என்ற வாதத்தை ஏற்கமுடியாது என்று கூறி மேல் முறையீட்டை அனுமதித்து பிபாவதிக்கும் தாரா தேவிக்கும் மேஜோ குமாரின் சொத்தில் சரி சம பங்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கினர். பிபாவதி சந்நியாசிதான் மேஜோ குமார் என்பதை தன் வாழ்நாள் இறுதி வரை ஏற்க மறுத்தார். பிபாவதி தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து, சுமார் 20 வருடங்கள் கழித்து இறந்து போனார்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்தரம் வழங்கியதோடல்லாமல், இந்தியாவைத் துண்டாடிவிட்டும் சென்றுவிட்டனர். இந்தியாவை ஆட்சி செய்யும் போது ஆங்கிலேயர்கள் கடைபிடித்து வந்த பிரித்தாளும் சூழ்ச்சி, கடைசியில் எல்லை கடந்து போய்விட்டது. இந்தியாவை இரண்டாகப் பிரித்தால்தான் சுதந்திரம் என்ற நிலை. பிரிவினையை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்தியா முதலில் இரண்டு துண்டானது. பின்னர் 24 வருடங்கள் கழித்து, இந்தியா மூன்று துண்டாகிப் போனது.
சுதந்தரத்திற்குப் பிறகு பாவல் ராஜ்ஜியம் பாகிஸ்தானின் பகுதியாகிப் போனது. அப்பகுதியை கிழக்கு பாகிஸ்தான் என்று அழைத்தார்கள். இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது. அதே போல் கிழக்கு பாகிஸ்தானிலும் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது. பாவல் ஜமீனின் சொத்துகளெல்லாம் அரசுடைமையாக்கப்பட்டன. அதை எதிர்த்து மூன்றாவது ராணியின் தத்துப் பிள்ளையும், மேலும் பல ஜமீன்தார்களும் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள். ஜமீன்தார்களுக்காக இந்த வழக்கை வாதிட்டவர் டி.என். பிரிட் (ப்ரிவி கவுன்சிலில் பிபாவதிக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்ற அதே வழக்கறிஞர்தான்). வழக்கு தொடுத்தவர்களுக்கு சொத்துகள் கிடைக்கவில்லை. ஆனால் அரசாங்கத்திடமிருந்து நஷ்ட ஈடு கிடைத்தது.

0

1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான், தனி நாடாக பங்களாதேஷ் என்ற பெயரில் உதயமானது. பாவல் ஜமீன் இப்பொழுது பங்களாதேஷ் காசிபூர் மாவட்டத்தில் உள்ளது. ராஜ்பாரி அரண்மனையில் மேஜோ குமார் வசித்து வந்த அறைகளெல்லாம் இப்பொழுது அரசு அலுவலகங்களாக மாறிவிட்டன. மேஜோ குமார் போலோ விளையாடி வந்த அரண்மனை மைதானம், இப்பொழுது அரசாங்கத்தின் கால்பந்து மைதானம்.

ஆனால் இப்பொழுதும் விடுமுறை நாட்களில், ராஜ்பாரி அரண்மனையை சுற்றிப் பார்க்க பலர் வந்து போகிறார்கள். ராஜ்பாரியை சுற்றிப்பார்க்க வருபவர்கள், அங்கு வாழ்ந்த மேஜோ குமாருடைய கதையைப் பகிர்ந்து கொள்ளாமல் செல்வதில்லை.

ராஜ்பாரிக்கு வருபவர்கள் பொதுவாக பகிர்ந்துகொள்ளும் கதை என்னவென்றால், “மேஜோ குமாருடைய இளம் மனைவியான (பிபாவதி) ராணிக்கும் அரண்மனையில் இருந்த டாக்டருக்கும் (அஷுதோஷ் பாபு) கசா முசாவாம். ராணியும் டாக்டரும் சதித் திட்டம் தீட்டி ராஜாவை கொன்றுவிட்டு, சொத்தை அபகரிக்க முயற்சி செய்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக ராஜா பிழைத்துக் கொள்கிறார். ராஜா தன் நினைவை இழந்து சந்நியாசியாக சுற்றி வந்திருக்கிறார். பின்னர் ராணி ராஜாவை ஏற்க மறுத்திருக்கிறார். அப்புறம் நீதிமன்றத்தில் வழக்கெல்லாம் தொடரப்படுகிறது” என்ற வாக்கில் கதை சொல்லப்படுகிறது. “இதோ இந்த பால்கனியிலிருந்துதான் ராணி செய்கையால் அதோ அங்கேயிருக்கும் வீட்டின் மாடியில் டாக்டருடன் காதல் பரிபாஷை பேசிக்கொள்வார்கள்” என்று அங்கு வரும் மக்கள் அங்கலாய்க்காமல் செல்வதில்லை.

டாக்காவில் உள்ள பாவல் ராஜ்ஜியத்துக்கு சொந்தமான பங்களா, பங்களாதேஷ் அரசால் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் அந்த அருங்காட்சியகமும் சரியாகப் பராமரிக்கப்படாமல் சிதிலம் அடைந்துவிட்டது.

0

பங்களாதேஷின் தலைநகரான டாக்கா, பாவல் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியில்தான் இருக்கிறது. இப்பொழுது அங்கு ஒரு ராஜ்ஜியம் இருந்ததற்கோ, அரண்மனைகள் இருந்ததற்கோ அடையாளங்கள் எதுவும் இல்லை. புதிது புதிதாக அடுக்குமாடி கட்டடங்களும், அபார்ட்மென்டுகளும் கட்டப்பட்டு வருகின்றன. பழைய சம்பவங்கள் சரித்திரமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் கண்களை விட்டு மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.

எல்லா இடங்களையும் பற்றி சொல்லியாகிவிட்டது, ஒன்றைத் தவிர. அனைத்து சம்பவங்களுக்கும் காரணமாக இருந்த, டார்ஜிலிங்கில் அந்த நிகழ்வு நடந்த இடமான ‘ஸ்டெப் அசைட்’  பங்களா இப்பொழுதும் டார்ஜிலிங்கில் பார்க்கவேண்டிய ஒரு முக்கியமான சுற்றுலா இடமாக மாறிவிட்டது. அதற்கான முழுப் பெருமையும் மேஜோ குமாருடையது அல்ல. தேசபந்து என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல சுதந்தரப் போராட்ட தியாகியும், பிரபல வழக்கறிஞருமான சித்தரஞ்சன் தாஸ் அந்த பங்களாவில்தான் தன் கடைசி மூச்சை விட்டார். சித்தரஞ்சன் தாஸ் அங்கு தங்கியிருக்கும் போது அவரைக் காண மகாத்மா காந்தியும், டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும் ஸ்டெப் அசைட் பங்களாவுக்கு வருகை தந்தனர். இப்பொழுது அந்த பங்களாவில் தேசபந்து மெமோரியல் சங்கம் என்ற பெயரில் எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற பல பொது சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேசபந்து பயன்படுத்திய பொருள்களும் ஸ்டெப் அசைட் பங்களாவில் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கிறன.

0

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு  நாம் வேறு ஒரு காரணத்துக்காக நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்தான் பிபாவதியின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான சாரு சந்திர பிஸ்வாஸ். இவர் ஜவாஹர்லால் நேரு தலைமையில் 1946ம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால மந்திரி சபையில் சிறுபான்மை துறைக்கான மத்திய மந்திரியாக செயல்பட்டார். பின்னர் 1952லிருந்து 1957 வரை இவர் மத்திய சட்ட அமைச்சராகவும் செயல்பட்டிருக்கிறார். அவர் சட்ட அமைச்சராக இருந்த சமயத்தில் இந்துக்களுக்குத் தேவையான இந்து திருமணச் சட்டம், இந்து இறங்குரிமைச் சட்டம், இந்து இளவர் மற்றும் காப்பாளர் சட்டம் மற்றும் இந்து சுவிகாரம் மற்றும் ஜீவனாம்ச சட்டம் ஆகியவற்றின் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அவை சட்டங்களாக உருவெடுக்க காரணமாக இருந்தார்.

மேற்குறிப்பிட்ட இந்தச் சட்டங்கள் தான் இன்று இந்துக்களின் திருமணம், இறங்குரிமை போன்ற விவகாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சட்டங்களால்தான் விவாகரத்து சட்டப்பூர்வமாக்கப்பட்டது. பெண்களுக்கும் சொத்தில் பங்கு கிடைக்க வகை செய்யப்பட்டது. பலதார மணம் குற்றமாக்கப்பட்டது. இந்தச் சட்டங்களெல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கொண்டுவரப்பட்டிருந்தால், பிபாவதி தன்னுடைய முரட்டுக் கணவனான மேஜோ குமாரை சகித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியதில்லை. மேற்கூறிய சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கு வேண்டிய பரிகாரங்களைப் பெற்றிருக்கலாம். பாவம் அவள் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!

(முற்றும்)

மர்ம சந்நியாசி – 8

நீதிபதி ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். சுரேந்திர சக்ரவர்த்தி அளித்த அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. தரம் தாஸ், சுந்தர் தாஸ் போன்ற பெயர்களை வட நாட்டில் பலரும் வைத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம் பொதுப் பெயர்கள். சுரேந்திர சக்ரவர்த்தியின் அறிக்கையில் கண்டுள்ள விவரங்கள் உண்மையானதுதான் என்பதை நிரூபிக்க தனிப்பட்ட சாட்சிகளை விசாரித்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார். டாக்கா வரை வந்து சாட்சியம் சொல்லமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை, சாட்சிகள் லாகூரிலேயே விசாரணை கமிஷன் முன்னர் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்றார்.

சந்நியாசி ஹிந்துஸ்தானிதான் என்பதை நிரூபிப்பதற்காக, முதல் சாட்சியாக தரம் தாஸ் என்று ஒருவரைப் பிரதிவாதியினர் டாக்கா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அவர் சாட்சிக் கூண்டில் ஏறி “நான் தான் தரம் தாஸ். நான் தான் கவுரவ மாஜிஸ்திரேட்டான ரகுபிர் சிங்கிடம் நான்கு வருடங்கள் முன்னர் சாட்சியம் அளித்தேன். இந்த வழக்கில் வாதியாக இருப்பவர் வேறு யாரும் இல்லை. அவன் என்னுடைய சிஷ்யப் பிள்ளையாண்டான்தான். அவன் இதுவரைக்கும் டார்ஜிலிங் பக்கமே போனதில்லை” என்றார் அந்த சாட்சி. வாதியினுடைய உண்மையான பெயர் மால் சிங் என்றும், அவனுடைய சொந்த ஊர் பஞ்சாப் மாகாணத்தில் லாகூருக்கு அருகில் உள்ள அவுலா என்றும் கூறினார் தரம் தாஸ் என்ற பெயரில் சாட்சியம் அளித்த சாது.

தரம் தாஸ் என்று சொல்லிக்கொண்டு வந்த சாட்சியை சந்நியாசியின் வழக்கறிஞர் சாட்டர்ஜி குறுக்கு விசாரணை செய்தார். குறுக்கு விசாரணையில் அந்த சாட்சி இடக்கு மடக்காக பதில் சொல்லி மாட்டிக்கொண்டார்.

தரம் தாஸ் என்ற அந்த சாட்சி தனக்கு பஞ்சாபி அல்லது உருதுதான் தெரியும், ஹிந்தியும் வங்காள மொழியும் தெரியாது என்றார். வங்காளத்திலோ, ஹிந்தியிலோ தன்னிடம் கேள்வி கேட்டால், அதை பஞ்சாபி மொழியிலோ அல்லது உருது மொழியிலோ மொழிபெயர்ப்பு செய்து சொல்லவேண்டும் என்றார். ஆனால் கவுரவ மாஜிஸ்திரேட்டான ரகுபிர் சிங் முன்பு ஆஜரான தரம் தாஸ், தன்னுடைய சாட்சியத்தை ஹிந்தியில்தான் கொடுத்திருந்தார். மேலும் சுரேந்திர சக்ரவர்த்தி தன்னுடைய அறிக்கையில், தான் தரம் தாஸை சந்தித்தபோது இருவரும் ஹிந்தியிலும், வங்காள மொழியிலும் கலந்துரையாடினோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையின் போது தரம் தாஸ் என்ற சாட்சியிடம், நீதிமன்றத்தில் குறியீடு செய்யப்பட்ட ஆவணமான A-24 காட்டப்பட்டது. அந்த ஆவணம் சந்நியாசியின் புகைப்படம். அந்தப் புகைப்படத்தில் சந்நியாசி லுங்கி கட்டி அமர்ந்திருந்தார். புகைப்படத்தைப் பார்த்த சாட்சி தரம் தாஸ், இது என்னுடைய சிஷ்யனுடைய புகைப்படம் என்றார்.

ஆவணம் A-24 புகைப்படம் அசலானது இல்லை, அது ஒரு நகல். அசல் புகைப்படம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அசல் எங்கே போனது என்ற கேள்விக்கு பிரதிவாதி தரப்பில் சரியாக பதிலளிக்க முடியவில்லை. அந்த புகைப்படத்தில் கவுரவ மாஜிஸ்திரேட்டான ரகுபிர் சிங்கின் கையெழுத்து எதுவும் இல்லை. மேலும் ஒரு புகைப்படத்தில் மால் சிங் என்று சொல்லப்படுபவரின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. ஆனால் தரம் தாஸ் என்ற சாட்சி விசாரணையின் போது, தன்னுடைய சிஷ்யனின் கையில் பச்சை எதுவும் குத்தப்பட்டிருக்காது என்று அப்பட்டமாகத் தெரிவித்தார். மேலும் குறுக்கு விசாரணை செய்ததில் தரம் தாஸ் என்ற அந்த சாட்சி, தனக்கு கவுரவ மாஜிஸ்திரேட்டின் முன் காட்டப்பட்ட புகைப்படமான ஆவணம் A1 சந்நியாசியியுடையது இல்லை என்று ஒப்புக் கொண்டார்.

உண்மையில் அந்தப் புகைப்படத்தில் இருந்தது சந்நியாசி இல்லை. அது வேறு ஒருவரின் புகைப்படம். குட்டு வெளிப்பட்டுவிடும் என்று ஆவணம் A1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட அந்த ஆவணம் எங்கே என்று நீதிபதி கேட்டதற்கு, பிரதிவாதியின் வழக்கறிஞர் சவுத்ரி தனக்கு அந்தப் புகைப்படம் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்று கூறினார். காவல்துறை ஆய்வாளரான மம்தாஜூதின், வடநாட்டில் சந்நியாசியைப் பற்றிய தன்னுடைய விசாரணையை முடித்துவிட்டு விசாரணைக்கு உண்டான ஆவணங்களை டாக்கா கலெக்டரிடம் பத்திரமாக வைத்திருக்குமாறு ஒரு வாக்குமூலம் எழுதிக் கொடுத்து ஒப்படைத்துவிட்டார். காவல்துறை ஆய்வாளர் கலெக்டருக்கு எழுதிய வாக்கு மூலம் இருக்கிறது. ஆனால் அவர் கலெக்டரிடம் ஒப்படைத்த புகைப்படம் இல்லை.

பிபாவதி தரப்பில் ஒரு புகைப்படத்துக்கு பதிலாக இன்னொரு புகைப்படத்தை மாற்றி வைத்து நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். தரம் தாஸ் என்று தன்னை சொல்லிக் கொள்பவர் கவுரவ மாஜிஸ்திரேட் ரகுபிர் சிங் முன்னர் சாட்சியம் அளிக்கவில்லை. தரம் தாஸ் என்று சொல்லிக் கொள்பவர் வாதியின் (சந்நியாசின்) உண்மையான குருவும் இல்லை.

பிபாவதியின் தரப்பில் மேலும் பத்து பேர் கமிஷன் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்கள் சொன்ன சாட்சியத்தில் வேறுபாடுகள் இருப்பினும், அவர்கள் பொதுவாகக் கூறியது என்னவென்றால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் லாகூரில் ஒரு குருத்வாராவில் அர்ஜுன் சிங் என்பவர் ஒரு சந்நியாசியின் புகைப்படங்களை எங்களிடம் காட்டினார். அந்தப் புகைப்படங்கள் மால் சிங் என்பவருடையது. ஒரு படத்தில் சந்நியாசி லுங்கி அணிந்து கொண்டு அமர்ந்து கொண்டிருப்பதாக இருந்தது. மற்ற புகைப்படங்களில் என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை. காரணம் ஏனைய புகைப்படங்கள் சேதம் அடைந்திருந்தது. ஆனால் சாட்சியம் அளித்த பத்து நபர்களும் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் மால் சிங்கேதான் என்று தெரிவித்தனர்.

ஆனால் மால் சிங் என்று சொல்லப்படுபவரின் உறவினர்கள் யாரும் கமிஷன் முன் ஆஜராகி, மால் சிங் எங்களுடைய சொந்தக்காரன் தான் என்று சொல்ல முன்வரவில்லை. மேலும் கவுரவ மாஜிஸ்திரேட் ரகுபிர் சிங் முன்னர் சாட்சியம் அளித்த எவரும் விசாரணைக் கமிஷன் முன்னர் ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை.

லாகூர் சாட்சிகள் மால் சிங்கினுடைய உடல் நிறம், முடியின் நிறம், மீசையின் நிறம், நீண்ட தாடி, கருமையான கண்கள், தடித்த மூக்கு என்று அனைத்தையும் பற்றிக் கூறினர். மால் சிங்கின் தந்தையின் முடியைப் போன்றே மால் சிங்கின் முடியும் கரு கரு என்று இருக்கும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர் தந்தையார் யார் என்ற விவரத்தை சொல்லவில்லை. கவுரவ மாஜிஸ்திரேட் முன், மால் சிங்கின் உறவினர்கள் சிலரின் விவரங்களைப் பற்றி சாட்சிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் லாகூர் சாட்சிகள் அந்த உறவினர்களைப் பற்றி எந்த விவரத்தையும் சொல்லவில்லை.

லாகூர் சாட்சிகள் அனைவருமே பொய் சாட்சிகள். அவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள். அவர்களுக்கும் மால் சிங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களிடம் சந்நியாசியின் புகைப்படத்தைக் காட்டி, அவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லிக்கொடுத்து, பிபாவதியின் சார்பில் கமிஷன் முன்னர் சாட்சியம் சொல்ல அழைத்துவரப்பட்டிருந்தார்கள்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் சுரேந்திர சக்ரவர்த்தியின் அறிக்கை ஒரு மோசடி. சுரேந்திர சக்ரவர்த்தியும், காவல் துறை ஆய்வாளரான மம்தாஜுதினும் சாது தரம் தாஸை பார்க்கவே இல்லை. கலெக்டர் லின்ஸ்டே இவர்கள் இருவருக்கும் இட்ட கட்டளை, எப்பாடுபட்டாவது அந்த சாதுவை கண்டுபிடித்தாகவேண்டும். ஆனால் சுரேந்திர சக்ரவர்த்தியும், மம்தாஜுதினும் அர்ஜுன் சிங் என்பவனின் துணையுடன் ஒரு சாதுவை தயார் செய்து, அவர்தான் தரம் தாஸ் என்று அவரிடமே சாட்சியம் பெற்றனர். பணத்துக்காக யாரோ சிலருடைய தூண்டுதலின் பேரில், சுரேந்திர சக்ரவர்த்தியும் மம்தாஜுதினும் போலியான சாட்சிகளைத் தயார் செய்திருக்கிறார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், கவுரவ மாஜிஸ்திரேட்டான ரகுபிர் சிங்கிடம் தரம் தாஸ் என்று சாட்சியம் அளித்த நபரைக் கூட இவர்கள் பார்க்கவில்லை. ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சுரேந்திர சக்ரவர்த்தியும் மம்தாஜுதினும் தங்களுடைய கடமையைச் சரிவரச் செய்யாமல், டாக்கா திரும்பிவிட்டனர். இவர்களுடைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகவும் பொறுப்பற்றத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் வெளியிட்டார்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் ஒரு அடிப்படை உண்மையைத் தெரிவித்தார். சந்நியாசி டாக்கா வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அவர் யார் என்று பிபாவதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிபாவதிக்கு ஜமீனின் வசதியும், ஆள் பலமும் இருக்கிறது. போதாத குறைக்கு ஆங்கிலேயே அரசாங்கத்தின் ஆதரவு வேறு இருக்கிறது. இவ்வளவு இருந்தும் பிபாவதியால் சந்நியாசி யார் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் சந்நியாசி எங்கேயும் மறைந்தோ அல்லது ஒளிந்துகொண்டோ இருக்கவில்லை. அவர் சர்வ சுதந்திரமாக கல்கத்தாவையும், டாக்காவையும் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.

0

சரி, சந்நியாசி ஹிந்துஸ்தானி இல்லை என்றால் அவர் வங்காளியா?

சந்நியாசி யாரும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ஹிந்தியில் பேசுகிறார். அவர்  தாய்மொழி வங்காளம் இல்லை. இது பிரதிவாதிகளின் வாதம்.

சந்நியாசியின் கூற்று இது. “நான் 12 ஆண்டுகாலம் சாதுக்களுடன் வாழ்ந்து வந்தேன். எனக்கு நினைவு திரும்பும் வரை சாதுக்களுடன்தான் இருந்தேன். முழு நேரமும் அவர்களுடன்தான் சுற்றித்திரிந்து வந்தேன். ஒரு சந்நியாசியின் வாழ்க்கை மிகவும் கடினமானது. உடுத்த உடை கிடையாது. பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும். சில சமயம் உணவு எதுவும் கிடைக்காமலும் போகும். படுக்க வசதியெல்லாம் கிடையாது. கட்டாந்தரையிலோ அல்லது மரத்தின் மீதோ படுத்துக்கொள்ளவேண்டும். வெறும் காலில் தான் காடு, மலையெல்லாம் கடக்க வேண்டும்.  12 வருடங்களாக, மற்ற சாதுக்கள் ஹிந்தியில் பேசிவருவதைத்தான் கேட்டு வந்தேன். அவர்களுடன் நான் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால் ஹிந்தியில் தான் பேசியாகவேண்டும். ஹிந்தி இல்லாமல் என் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்னும் கட்டாயம். அதனால் அவர்களுடைய பாஷை, பேச்சு வழக்கு எல்லாம் தொற்றிக்கொண்டது. இது  தவிர்க்க இயலாதது. ”

மேஜோ குமார் சில சமயங்களில் ஹிந்தியில் பேசியிருந்தாலும், பொதுவாக அவர் எந்தக் கலப்பும் இல்லாத பாவாலி பிரதேச வங்காள மொழியில்தான் பேசுவார். அதாவது தமிழில் கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ் என்று தமிழ்நாட்டிலேயே இடத்துக்கு இடம் பேச்சுத் தமிழ் மாறுபடுவது போல், வங்காளத்திலும் பிரதேச வாரியாக வங்காளமொழி பேச்சு வழக்கில் மாறுபட்டு காணப்படும். மேஜோ குமார் பாவல் ராஜ்ஜியத்தில் பிறந்து வளர்ந்து வந்ததால், அவர் பாவாலி பிரதேச வங்காள மொழியில்தான் பேசுவார். மேஜோ குமார் பாவாலி பிரதேச வங்காள மொழியில் பேசுவதை, வங்காள மொழி பேசுபவர்களாலேயே அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்று நீதிமன்றத்தில் சிலர் சாட்சியம் அளித்தனர்.

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதுகூட, சந்நியாசி வங்காளத்தையும் ஹிந்தியையும் கலந்தே பேசினார். சாட்சியம் அளிக்கும் போது அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் பின்வருமாறு :

குயிலுக்கு ஹிந்தியில் தித்தர் என்று பெயர். வங்காள மொழியில் குயிலுக்கு தித்திர் என்று பெயர். அதுவே பாவாலி பிரதேச பாஷையில் குயிலை தித்தர் என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அதேபோல் கணக்கு என்ற சொல் ஹிந்தியில் ஜிண்டே என்று குறிப்பிடப்படும். பாவாலி பிரதேச பாஷையிலும் கணக்கு என்ற சொல் ஜிண்டே என்ற வார்த்தையால் தான் அறியப்படுகிறது.

கல்கத்தாவை ஹிந்தியில் கல்கட்டா என்று சொல்வார்கள். அதே போல் பாவாலி பிரதேச பாஷையில் அச்சிடப்பட்ட ஒரு துண்டு பிரசுரத்திலும் கல்கட்டா என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே ஒருவர் பேசும் பாஷையை வைத்து அவருடைய தாய் மொழி என்னவென்று முடிவு செய்வது தவறு.

ஒருவர் 12 ஆண்டு காலம் தொடர்ந்து ஹிந்தியில் பேசிவிட்டு, திடீரென்று வங்காளத்தில் பேசினால் அவர் ஹிந்தியை முழுவதுமாக புறக்கணித்து விடுவார் என்று சொல்வதற்கில்லை. சந்நியாசி தன்னுடைய சாட்சியத்தில் பிஸ்கட், பாடிகார்ட், ஃபாமிலி, ஜாக்கி போன்ற சுமார் 50 ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். அதனால் அவர் ஆங்கிலேயர் என்று முடிவுக்கு வரமுடியுமா என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார். சந்நியாசி ராஜ்பாரியில் தான் யார் என்று அனைவரிடமும் வெளிபடுத்தியவுடன் ஹிந்தி பேசுவதை நிறுத்திவிட்டார் என்று பிரதிவாதி தரப்பில் உள்நோக்கம் கற்பிப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று என்று நீதிபதி திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

பிபாவதியின் வழக்கறிஞரான சவுத்ரி, சந்நியாசி பேசும் வங்காள மொழி ஏன் தெளிவாக இல்லை என்ற கேள்வியை எழுப்பினார். அவருடைய கூற்று சந்நியாசியின் தாய்மொழி வங்காள மொழி இல்லை, அதனால்தான் அவரால் வங்காள மொழியைத் தெளிவாகப் பேச முடியவில்லை என்பதாகும்.

ஆனால் அதற்கு சந்நியாசியின் வழக்கறிஞரான சாட்டர்ஜி, சந்நியாசி எந்த மொழி பேசினாலும் அப்படித்தான் இருக்கும். சிப்பிலிஸ் நோய் தாக்கத்தின் காரணமாக நாக்கு பாதிப்பு அடைந்திருக்கிறது. அதனால் பேசும்போது நாக்கு குளறும். அதன் காரணமாக சந்நியாசி எந்த வார்த்தைகள் பேசினாலும் அது தெளிவாக இருக்காது. அவர் பேசுவதைக் கேட்பவர்களுக்கு அவர் என்ன பேசினார் என்று எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. இப்பொழுது மட்டுமல்ல, சந்நியாசி டாக்காவுக்கு திரும்பி வந்த காலந்தொட்டே அவர் பேசிய வங்காள மொழி ஹிந்தி ஒலியின் தன்மையைக் கொண்டதாகவே இருக்கிறது. அதற்கு ஆதாரமாக பல சாட்சிகள் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 1921ம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி ஜெய்தேபூர் காவல்துறையின் நாட்குறிப்பில்கூட, சந்நியாசியைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்றும், மக்கள் அவரை இரண்டாவது குமாராக கருதுகிறார்கள் என்றும், சந்நியாசி மக்களுடன் வங்காள மொழியில் பேசி வருகிறார் என்றும் குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை வழக்கறிஞர் சாட்டர்ஜி மேற்கோளாகக் காட்டினார்.

ஒருவருக்கு பல பாஷைகள் தெரிந்திருக்கும். அதனால் அவருடைய தாய் மொழி என்னவென்று முடிவு செய்வது கடினமாக இருக்கும். ஆனால் ஒருவருக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தாலும் அவருடைய பூர்வீக அடையாளம் என்று ஒன்று இருக்கும். அவருடைய புத்தி, சிந்தனை அந்தப் பூர்வீக அடையாளத்தைச் சார்ந்துதான் இருக்கும். அது அவர் பேசும்போது வெளிப்படும். அதை வைத்து அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று எளிதில் சொல்லிவிடமுடியும். இந்த அடிப்படையில் பிபாவதியின் வழக்கறிஞர் செயல்பட ஆரம்பித்தார். சன்னியாசி எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று நிரூபிக்கும் பொருட்டு, சவுத்ரி சந்நியாசியைச் சில கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். சவுத்ரி சிலேடையாகப் பேசி சந்நியாசியை மடக்கலாம் என்று பார்த்தார். ஏனென்றால் சவுத்ரியின் கணிப்பின் படி, வெளித்தோற்றத்தில்தான் அவர் ஒரு வங்காளி. ஆனால் அவருக்கு ஒரு வங்காளிக்கே உண்டான எண்ணமோ சிந்தனையோ இல்லை என்பதுதான்.

சவுத்ரி: சுவேத்தபர்னா என்றால் என்ன?

சந்நியாசி: வெள்ளை நிறம்

சவுத்ரி: ரக்தபர்னா?

சந்நியாசி: சிவப்பு

சவுத்ரி: பயஞ்சபர்னா?

சந்நியாசி: கத்தரிக்காயின் நிறம்

சந்நியாசி சொன்ன முதல் இரண்டு பதில்களும் சரி. பர்னா என்றால் வங்காள மொழியில் வர்ணம். பயஞ்சபர்னா என்றால் அது ஒரு எழுத்தைக் குறிப்பதாகும். ஆனால் சந்நியாசி குழம்பிவிட்டார். தொடர்ந்து வர்ணங்களைப் பற்றியே கேட்டு வந்ததால் சந்நியாசி மூன்றாவது கேள்விக்கும் வர்ணம் சம்பந்தமான பதிலைக் கூறி தவறு செய்துவிட்டார். உடனே சவுத்ரி, பயஞ்சான் என்றால் பஞ்சாபி மொழியில் கத்தரிக்காய் என்று அர்த்தம். சந்நியாசி ஒரு பஞ்சாபி, அதனால்தான் அவர் அந்த பதிலை தெரிவித்திருக்கிறார். அவர் வங்காளியாக இருந்திருந்தால் சரியான பதிலைக் கொடுத்திருப்பார் என்று வாதிட்டார். மேலே கொடுக்கப்பட்ட கேள்வி பதில், ஒரு உதாரணம் தான். சவுத்ரி சந்நியாசியைப் பல கேள்விகள் கேட்டு மடக்கப் பார்த்தார்.

ஆனால் நீதிபதி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. “படிப்பறிவில்லாத ஒருவரை ஒரே மாதிரியாக கேள்வியைக் கேட்டு வந்தால் அவர் அது தொடர்பான பதில்களைத்தான் தருவார். அதை வைத்துக்கொண்டு அவர் இந்த இனத்தவர், இந்த மொழி பேசுபவர் என்று முடிவு செய்துவிட முடியாது. சந்நியாசி ஹிந்துஸ்தானியாக இருந்தால், அதை வேறுவிதத்தில் நிரூபித்திருக்கலாம். ஆனால் அதை செய்வதை விட்டு விட்டு தேவையற்ற கேள்விகளைக் கேட்டு சவுத்ரி நேரத்தை வீணடித்து விட்டார். ஒருவர் உண்மையாகவே ஹிந்துஸ்தானியாக இருந்தால் அவர் எத்தனை ஆயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் அவருடைய அடிப்படை எண்ணத்தை, சிந்தனையை, குணாதிசயத்தை மாற்ற முடியாது. அதை வெளிக்கொணர்வது என்பது பெரிய கஷ்டமான விவகாரம் ஒன்றும் கிடையாது. அதுவும் சந்நியாசி போன்ற படிப்பறிவில்லாத நபரிடம்.”

சவுத்ரி சந்நியாசியை ஒரு ஹிந்துஸ்தானி என்று நிரூபிக்கக் கையாண்ட ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

சந்நியாசி தொடுத்த வழக்கில் சாட்சி விசாரணை, விவாதம் எல்லாம் முடிந்தது. வழக்கு விசாரணை மூன்று ஆண்டுகள் நடைபெற்றது. மொத்தமாக சுமார் 1548 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2000 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. 21 வயது முதற்கொண்டு 100 வயது நிரம்பியவர்கள் வரை சாட்சியமளித்தனர். சாட்சியமளித்தவர்களில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், நாக சன்னியாசிகள், திபெத்தியர்கள், ஆங்கிலேயர்கள் என்று பலரும் அடக்கம். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பண்டிதர்கள், புகைப்படக்காரர்கள், சிற்பக் கலைஞர்கள், ஜமீன்தார்கள், விவசாயிகள், யானைப் பாகன்கள், வண்டி இழுப்பவர்கள், விலை மாதர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் சன்னியாசி வழக்கில் சாட்சியம் அளித்திருந்தனர். பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் மட்டும் 26 புத்தகங்களாக தொகுக்கப்பட்டன.

டாக்கா மாவட்ட நீதிபதியான பன்னாலால் பாசு, தான் நடத்திய வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்தார். 26 புத்தகங்களில் தொகுக்கப்பட்ட சாட்சியங்களையும் படித்தார். பின்னர் சுமார் 600 பக்கங்கள் கொண்ட தன்னுடைய தீர்ப்பை தயார் செய்தார். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி 1936ம் வருடம்.

இந்தத் தீர்ப்புக்காக டாக்கா, கல்கத்தா மட்டுமல்ல, வங்கதேசம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தன. இம்மாதிரி ஒரு வழக்கு இதுவரைக்கும் நடந்ததேயில்லை. இந்த வழக்கில் நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கப்போகிறாரோ என்று இருதரப்பினரும், அவர்களைச் சார்ந்தவர்களும் கையைப் பிசைந்து கொண்டு காத்திருந்தனர்.

0

தீர்ப்பு அளிக்கப்பட்டது.

“நான் வழக்கில் கொடுக்கப்பட்ட அனைத்து சாட்சியங்களையும் மிகுந்த கவனத்துடன் அலசினேன். இரு தரப்பு வழக்கறிஞர்களும் வழக்கு தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்த வழக்கில் நான் வழங்கும் தீர்ப்பின் தாக்கம் அளப்பரியதாக இருக்கும் என்பதை நான் உணர்வேன். சாதாரண மனிதர்கள் தொடங்கி மெத்தப் படித்த மேதாவிகள் வரை அனைவரும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். இவர் தான் அவர் என்று முடிவு செய்வது அவ்வளவு எளிமையான செயல் இல்லை. ஆனால் எது எப்படியோ ஒரு விஷயத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஒரு மனிதனின் உடம்பில் இருக்கும் அனைத்து அங்க அடையாளங்களும் ஒரு சேர இன்னொரு மனிதனிடம் காணமுடியாது.

“இந்த வழக்கே சந்நியாசியின் சதி என்று எதிர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் சதி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கு இவ்வளவு தீவிரமாக நடத்தப்பட்டதற்கு காரணம் ஒருவர் தான். அவர் வேறு யாரும் இல்லை. பிபாவதியின் சகோதரனான சத்திய பாபு. இந்த வழக்கை எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்று சத்திய பாபு பல தகிடுதத்தங்களைச் செய்திருக்கிறார். அவருக்குத் துணையாக ஆங்கில அரசாங்கம் செயல்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் மக்களுக்கே இந்த வழக்கு சந்நியாசிக்கும் பிபாவதிக்கும் இடையே நடக்கவில்லை, ஆங்கிலேய அரசாங்கத்துக்கும் சந்நியாசிக்கும் இடையே நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

“இந்த வழக்கின் முடிவால், பிபாவதிக்கு எந்த நன்மையோ அல்லது பாதிப்போ ஏற்படப்போவதில்லை. பிபாவதி ஒரு கைப்பாவை. இந்த வழக்கின் நல்லது கெட்டது அனைத்தும் சத்திய பாபுவைத்தான் பாதிக்கும். சத்திய பாபு என்ன சொல்கிறானோ அதன்படிதான் நடந்து கொண்டிருக்கிறாள் பிபாவதி. பிபாவதி மேஜோ குமாரின் மனைவி என்று அறியப்பட்டதை விட, அவள் சத்திய பாபுவின் சகோதரி என்பது மக்களுக்கு பரிட்சயம். உண்மையை மறைக்க சத்திய பாபு பலவாறாகப் போராடினான். இருந்தும் என்ன பயன்? உண்மையை யாராலும் மறைக்க முடியாது. சாட்சிகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது தெள்ளத் தெளிவாக தெரிவது, சந்நியாசிதான் மேஜோ குமார், பாவல் ராஜ்ஜியத்தின் இரண்டாவது குமாரான ராமேந்திர நாராயண் ராய்”.

இப்படி நீதிபதி சொன்னது தான் தாமதம், நீதிமன்றத்தில் கூடி இருந்த கூட்டம் உணர்ச்சி வயப்பட்டது. அதுவரைக்கும் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நீதிமன்றத்தில் அமைதிகாத்த கூட்டம், சந்நியாசி தான் மேஜோ குமார் என்று அறிவிக்கப்பட்டவுடன் சந்தோஷத்தில் கத்த ஆரம்பித்துவிட்டது. நீதிமன்றத்தில் உள்ளே நுழைய முடியாதபடி இருந்த கூட்டத்தினர் ஒவ்வொருவர் முகத்திலும் சந்தோஷம் கரை புரண்டோடியது. நீதிமன்றத்துக்கு வெளியே நின்ற கூட்டத்தினருக்கு செய்தி கிடைத்தவுடன் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. தீர்ப்பைக் கேட்க வந்த பெருந்திரளான கூட்டத்தினர் ‘ராமேந்திரா வாழ்க’ என்று கோஷம் போட ஆரம்பித்து விட்டனர்.

இந்த தீர்ப்பைக் கேட்ட மாத்திரத்தில் பிபாவதிக்கு மயக்கமே வந்துவிட்டது. சத்திய பாபுவுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை. பிபாவதி தரப்பினரை நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே கூட்டிச் சென்று காரில் ஏற்றுவதற்குள், காவல் பாதுகாப்பு வழங்கியவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

நீதிபதி பன்னாலால் எழுதி வழங்கிய தீர்ப்பை படித்தவர்கள், அதை வெகுவாகப் பாராட்டினர். அதில் சட்ட ரீதியாகவோ அல்லது சம்பவ ரீதியாகவோ ஒரு தவறைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை என்று பலர் புகழ்ந்திருக்கிறார்கள். நீதிபதி பன்னாலால் பாசு தன்னுடைய தீர்ப்பை செம்மையாகவும், மிகவும் கவனத்துடனும், தெளிவாகவும் எழுதியிருக்கிறார்.

0

இவ்வளவு கடினமான வழக்கின் விசாரணையை நடத்தி, அனைவரும் பாராட்டும் வகையில் தீர்ப்பளித்த நீதிபதி பன்னாலால் பாசுவைப் பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

1887ம் ஆண்டு பன்னாலால் பாசு கல்கத்தாவில் பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் தாக்குர்தாஸ் போஸ். பள்ளிக்கூடத்திலிருந்தே அவர் சிறந்த மாணவனாக திகழ்ந்திருக்கிறார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் தத்துவமும் பயின்றார். இவ்விரு துறைகளிலும், பன்னாலால் பாசு முதல் வகுப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியம், தத்துவத்துக்கு அடுத்ததாக பாசு வங்க இலக்கியம் மற்றும் சரித்திரம் பயின்றிருக்கிறார். சாஸ்திரிய சங்கீதமும் பயின்றார். பின்னர் பன்னாலால் பாசு கல்கத்தாவில் உள்ள புனித பால் கல்லூரியிலும், டில்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியிலும் விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறார். 1910ம் ஆண்டு வங்காள நீதித் துறையில் சேர்ந்து நீதிபதியாக பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். பாவல் சந்நியாசி வழக்கில் தீர்ப்பளித்த பிறகு, பன்னாலால் பாசு நீதித் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 49. அந்த வயதில் அவர் டாக்கா போன்ற ஒரு முதன்மையான மாவட்ட நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாக செயல் புரிந்திருக்கிறார் என்றால், அவர் வெகு விரைவிலேயே கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று உயர்நீதிமன்ற நீதிபதியாகி இருக்கக்கூடும். ஆனால் பன்னாலால் பாசு அதற்கு விரும்பவில்லை. இந்தியாவில் மட்டும் இல்லை, இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. பாவல் சந்நியாசி வழக்கை சிறந்த முறையில் கையாண்டதால் அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த வழக்கில் பன்னாலால் பாசு வழங்கிய தீர்ப்பு இந்திய ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

பாவல் சந்நியாசி வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் நீதிபதி பன்னாலால் பாசு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டுக்கு தினமும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்க வரும் ஒருவரிடம் அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்மணி, ஏம்பா சந்நியாசி வழக்கைப் பற்றி ஊரெல்லாம் பேச்சு, நீ என்ன நினைக்கிறாய்? அந்த சந்நியாசி உண்மையாகவே ராஜ்குமாரா அல்லது போலியா என்று பேச்சு வாக்கில் விசாரித்தார். அதற்கு அந்தக் காய்கறி வியாபாரி, அம்மா அந்த சந்நியாசி தான் உண்மையான குமார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த ஜட்ஜு இருக்கான் பாருங்க, அவன் தான் அதைச் சொல்லி இந்த வழக்கை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்றார்.

காய்கறிக்காரர் சொல்வதைக் கேட்டு சிரித்துக் கொண்ட அந்தப் பெண்மனி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார். பாவம் அந்த காய்கறிக்காரருக்குத் தெரியாது, அந்தப் பெண்மணிதான் நீதிபதி பன்னாலால் பாசுவின் மனைவி என்று.

பாவல் சந்நியாசி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு எழுதுவதற்கு நீதிபதி பன்னாலால் பாசுவுக்கு மூன்று மாதங்கள்தான் தேவைப்பட்டன. சிக்கலான ஒரு பெரிய வழக்கில், வசதிகள் குறைந்த அக்காலத்தில் இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு வெளியிட்டது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். இன்றைய நீதிமன்றங்களிலெல்லாம் சாதாரண வழக்குகளில்கூட தீர்ப்பு வழங்குவதற்கு பல மாத காலம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

பன்னாலால் பாசு தினமும் காலையில் சுறுசுறுப்பான நடைப்பயணம் மேற்கொள்வார். பின்னர் காலை உணவை முடித்துவிட்டு மாலை வரை தீர்ப்பு எழுதுவதில் தன்னுடைய நேரத்தை செலவிடுவார். தன்னுடைய தீர்ப்பை தன் கைப்பட எழுதுவார். பின்னர் அவரே அதை தட்டச்சு இயந்திரத்தில் டைப் செய்வார். அரசாங்கம் அவருக்கு இரண்டு டைப்பிஸ்ட்/ஸ்டெனோ அளித்திருந்த போதும் அவர்களுடைய சேவையை அவர் உபயோகிக்கவில்லை. காரணம், விசாரித்த வழக்கு அப்படிப்பட்டது. தன்னுடைய தீர்ப்பு விவரங்கள் தன்னால் வெளியிடப்படும் வரை யாருக்கும் தெரியக்கூடாது என்று மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டார். தன்னுடைய தீர்ப்பு மேல் முறையீட்டுக்கு ஆட்படும் என்று உணர்ந்த நீதிபதி பன்னாலால் பாசு, தன்னுடைய தீர்ப்பை தெளிவாகவும், சுருக்கமாகவும், சரியாகவும் இருக்கும்படி மிகவும் கவனத்துடன் எழுதினார். அவர் தீர்ப்பில் இடம்பெற்ற ஒவ்வொரு வார்த்தையும், வரியும், பத்தியும் முக்கியமானவை.

மாலையில் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு தன்னுடைய படிக்கும் அறையை பூட்டுபோட்டு பூட்டி விட்டு உணவருந்தச் சென்றுவிடுவார். இரவில் தூங்கும் போது படிப்பறையின் சாவியை தன் தலைமாட்டிற்கு கீழ் உள்ள தலையணையின் அடியில் வைத்துவிட்டு தூங்கச் செல்வார்.

அவருடைய படிப்பறையின் சுவர்களில் வழக்கு சம்மந்தமான ஆவணங்களும், புகைப்படங்களும், நாளேடுகளில் வந்த செய்திகளும் மாட்டப்பட்டிருக்கும்.

நீதிபதி பன்னாலால் பாசு, எப்படி ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாரோ அதே போல் தாய் மொழியான வங்காளத்திலும் புலமை பெற்றிருந்தார். ரபிந்தர நாத் தாகூர் வங்காளத்தில் இயற்றிய ‘குதித்த பாஷன்’ என்னும் சிறுகதையை பன்னாலால் பாசு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அந்த மொழியாக்கத்தைப் படிக்க நேர்ந்த ரபிந்தரநாத் தாகூர், பன்னாலால் பாசுவை வெகுவாகப் பாராட்டினார். மேலும் தாகூர், “பன்னாலால் பாசு, என்னுடைய ஏனைய சிறு கதைகளையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தார் என்றால் என்னைவிட பாக்கியசாலி யாரும் இந்த உலகத்தில் இருக்கமுடியாது” என்று தெரிவித்தார்.

(தொடரும்)

மர்ம சந்நியாசி – 7

மேஜோ குமாருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்தும், ஏனைய மருத்துவர்களின் சாட்சியத்தை வைத்தும் மேஜோ குமாருக்கு என்ன நடந்தது என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.

‘மேஜோ குமார் முதலில் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டிருக்கிறார். பின்னர் அவருக்குத் தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சம்பவம் நடந்த அன்று காலை மேஜோ குமார் வாந்தி எடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகமாக நீர்ச் சத்து வெளியேறியதால் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரத்தப் போக்கு ஏற்பட்டதால் உடல் தடுமாற்றம் ஏற்பட்டு, மேஜோ குமார் சுயநினைவை இழந்திருக்கிறார்.’

மேஜோ குமாருக்கு ஏன் வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டது?

ஒருவர் வயிற்றில் நச்சுப் பொருள் உட்புகுந்தால் வயிற்றுக் கடுப்பு ஏற்படும். நச்சுத்தன்மை கொண்டப் பொருட்களால் குடல் சுவர்கள் எரிச்சல் அடைந்து வீக்கமடையும். குடல் தீவிரஅதிர்ச்சிக்குள்ளான காரணத்தால்தான் ரத்தப் போக்கு ஏற்படும். கூடவே நரம்பு மண்டலம் அதீதமாகத் தூண்டப்படுவதால் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு இருந்தால், அவர் நிச்சயமாக ஏதோ நச்சுத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் என்று அர்த்தம்.

நச்சுப்பொருள் இயற்கையாக கிடைக்கக் கூடிய தாவர வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம் அல்லது ரசாயனப் பொருளாகவும் இருக்கலாம்.

ஆஷு பாபு மேஜோ குமாருக்கு குடிக்கக் கொடுத்தது ஆர்ஸனிக் என்னும் நச்சுப் பொருள். ஆர்ஸனிக்கை உட்கொண்டதால்தான் மேஜோ குமாருக்கு மேற்சொன்ன பாதிப்புகளெல்லாம் ஏற்பட்டன.

ஆர்ஸனிக் ஒரு கொடிய நச்சுப் பொருள் என்றும், அதை ஒருவர் உட்கொண்டால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விவரங்கள் Lyon’s Jurisprudence என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டாக்டர் கால்வெர்ட் மற்றும் டாக்டர் நிப்பாரன் சந்திர சென் ஆகியோர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டுகளில் நச்சுத் தன்மை கொண்ட மருந்தோ அல்லது பொருளோ இடம்பெறவில்லை. ஆஷு பாபு எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டில் தான் நச்சுத் தன்மை கொண்ட பொருளைப் பற்றிய குறிப்பு இருந்திருக்கிறது.

மலேரியாவை குணப்படுத்தும் தன்மை இந்த மருந்துகளுக்கு இருந்தன. ஆனால், ஆர்ஸனிக்கை மட்டும் ஒரு குறிபிட்ட அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது வயிற்று எரிச்சலை ஏற்படுத்துவதோடு இல்லாமல், வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். அளவு மீறினால் உயிரே போய்விடும்.

யாருக்காவது நஞ்சூட்ட வேண்டுமென்றால் விஷயம் அறிந்தவர்கள் ஆர்ஸனிக்கைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்கள் மருந்துக் கடைகளில் மறைமுகமாக ஆர்ஸனிக் வாங்க, மேற்சொன்னவாறு மருந்துச் சீட்டை தயார் செய்து (மருத்துவரிடம் பெற்று) எடுத்துச் செல்வார்கள்.

ஆஷூ பாபு  மருந்துச் சீட்டை தான் எழுதிக் கொடுக்கவில்லை என்று சாதித்தான். பின்னர் குட்டு வெளிப்பட்டவுடன் அந்தப் பழியை மற்றவர்கள் மீது போடப் பார்த்தான்.

மேஜோ குமாருக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் மே மாதம் 7 ஆம் தேதி டார்ஜிலிங் பங்களாவுக்கு அழைத்துவரப்படவில்லை. டாக்டர் கால்வெர்டும், நிப்பாரன் சந்திர சென்னும் மே மாதம் 8 ஆம் தேதியன்றுதான் மேஜோ குமாருக்கு சிகிச்சை அளித்தனர். டார்ஜிலிங்கில் உள்ள சிமித் ஸ்டேயின்ஸ்ட்ரீட் (Smith Stainstreet and Co) என்ற மருந்துக் கடையின் குறிப்பின் பஐ, ஆஷு தாஸ் குப்தாதான் (ஆஷு பாபு) சம்பந்தப்பட்ட மருந்துகளை மே மாதம் 7ஆம் தேதி அன்று வாங்கி இருக்கிறான். அதற்கான மருந்து விற்றப் பதிவேட்டில் ஆஷு தாஸ் குப்தாவின் கையெழுத்து இருந்தது.

டாக்டர் கால்வெர்டைப் போல ஆஷூ பாபுவும் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்லியிருக்கிறான்.

நீதிபதி, மேஜோ குமார் Biliary Colic க்கால் இறக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்ட பிறகு அடுத்த கேள்விக்குப் போனார். மேஜோ குமார் எப்பொழுது இறந்தார்? மாலையிலா அல்லது நள்ளிரவிலா? மேஜோ குமாருக்கு எப்பொழுது ஈமக்காரியம் நடைபெற்றது? மே மாதம் 8 ஆம் தேதி இரவிலா அல்லது மே மாதம் 9 ஆம் தேதி காலையிலா?

மே மாதம் 8 ஆம் தேதி மதியம், மேஜோ குமாரின் உடல் நிலை மோசமாகி இருக்கிறது என்ற செய்தியைத் தெரிவிக்க சத்திய பாபு ராஜ்பாரி அரண்மனைக்குத் தந்தி அனுப்பி இருக்கிறான். அந்தத் தந்தி மதியம் 3:10 மணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தத் தந்திக்கான பதில் பாரா குமாரிடமிருந்து மாலை 4: 45 மணி அளவில் டார்ஜிலிங்கில் கிடைத்தது. அதில் மேஜோ குமாரின் உடல் நிலை பற்றி கேள்விப்பட்டவுடன் மிகுந்த கவலைக்கு உள்ளாகியிருக்கிறோம். சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உடல் நிலை குறித்து அவ்வப்போது தந்தி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

விசித்திரமான விஷயம் என்னவென்றால் டார்ஜிலிங்கிலிருந்து ராஜ்பாரிக்கு மேஜோ குமாரின் உடல் நிலை குறித்து சத்திய பாபு அடிக்கடி அனுப்பிய தந்திகள் பிபாவதியின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும், மேஜோ குமார் இறந்த செய்தியைக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட தந்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஏன் தாக்கல் செய்யவில்லை? அதை தாக்கல் செய்தால் மேஜோ குமார் எந்த நேரத்தில் இறந்தார் என்ற உண்மை வெளியாகிவிடும். அதனால் அந்த இரங்கல் தந்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

சந்நியாசியின் கூற்றின்படி, மே மாதம் 8 ஆம் தேதி இரவு மேஜோ குமாரின் உடல் சுடுகாட்டுக்கு கமர்ஷியல் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

பிபாவதியின் கூற்றின் படி, மேஜோ குமார் மே மாதம் 8 ஆம் தேதியன்று நள்ளிரவில் இறந்தார். அவரது உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றது, மே மாதம் 9 ஆம் தேதி காலை. சுடுகாட்டுக்குச் சென்ற வழி, டார்ஜிலிங்கின் முக்கியமான தார்ன் சாலை. கமர்ஷியல் சாலை வழியாக இடுகாடு செல்வது குறைந்த தூரம். ஆனால் தார்ன் சாலை வழியாக சுடுகாட்டிற்குச் செல்வது அதிக தூரம் மற்றும் வளைந்தும், நெளிந்தும் செல்லும். தார்ன் சாலை வழியாக இடுகாடு செல்வதற்கு நிறைய நேரமாகும்.

இருதரப்பினர் சொல்வதில் யார் சொல்வது உண்மை?

மே மாதம் 9 ஆம் தேதியன்று தான், தார்ன் என்ற முக்கிய சாலை வழியாக சவ ஊர்வலம் சென்றதாக பிபாவதி தரப்பில் சொல்லப்பட்டது. அதை நிரூபிக்க அவர் தரப்பில் சுமார் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சந்நியாசியின் தரப்பில் 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பிபாவதியின் 26 சாட்சிகளும் ஒரே மாதிரி சாட்சியம் அளிக்கவில்லை. ஒரு சாட்சி சொன்னதற்கும் இன்னொருவர் சொன்னதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. பிபாவதியின் மூன்று சாட்சிகள் மிகவும் தெள்ளத் தெளிவாக சவ ஊர்வலம் கமர்ஷியல் சாலை வழியாக சென்றது என்று பிபாவதியின் கூற்றுக்கு மாறாக சாட்சியம் சொன்னார்கள்.

மே மாதம் 9 ஆம் தேதியன்று, வங்காளத்தின் கவர்னர் மிண்டோ பிரபு டார்ஜிலிங்கிற்கு வந்துவிட்டார். பொதுவாக கோடை காலத்தின் வெயிலை தாங்கமாட்டாமல் மலைவாசம் செல்லும் ஆங்கிலேய கவர்னர்கள், கோடை காலம் முடியும் வரை அந்த வாசஸ்தலத்தில்தான் இருப்பார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில், அந்தந்தப் பகுதிகளில் இருந்த கவர்னர்கள் அவரவர் ஆளுமைக்கு உட்பட்ட மலைவாசஸ்தலத்திற்குச் சென்றுவிடுவர். சென்னை மாகாண கவர்னர் ஊட்டிக்குச் சென்றுவிடுவார். பம்பாய் மாகாண கவர்னர் மகாபலேஷ்வருக்குச் சென்றுவிடுவார். பஞ்சாப் கவர்னர் சிம்லாவிற்குச் சென்றுவிடுவார். கோடை காலம் முடியும் வரை அரசாங்கமே மலைவாசஸ்தலங்களில்தான் நடைபெறும்.

டார்ஜிலிங்கைப் பொருத்த வரை அரசு தலைமைச் செயலகமாக செயல்பட்டது அங்குள்ள கச்சேரி பில்டிங்கில். இந்தக் கச்சேரி பில்டிங், டார்ஜிலிங்கின் முக்கிய சாலையில் பசாருக்கு எதிராக உள்ளது.

கவர்னர் டார்ஜிலிங்கிற்கு வந்ததால் அங்கு கெடுபிடி அதிகமாக இருந்தது. போதாத குறைக்கு சுதந்தரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்கள் மீதும், அரசு நிர்வாகத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தி வந்தனர். அதுவும் வங்காளத்தில்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக இருந்தது. அதனால் டார்ஜிலிங்கின் முக்கிய சாலைகளில் ஊர்வலங்கள் செல்ல காவல்துறை தடை விதித்திருந்தது.

எனவே நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், காவல்துறை முக்கிய சாலைகளில் ஊர்வலங்கள் செல்லத் தடை விதித்திருந்ததால் மேஜோ குமாரின் கடைசி ஊர்வலம் தார்ன் சாலை (டார்ஜிலிங்கில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்று) வழியாக சென்றிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

இடுகாட்டில் மேஜோ குமாருக்கு அந்திமக் காரியங்கள் செய்யும் பொழுது அங்கு புரோகிதர் யாரும் இல்லை. எந்தச் சடங்கும் செய்யப்படவில்லை. இறந்தவரின் முகத்தை அங்கு இருந்தவர்கள் ஒருவரும் பார்க்கவில்லை. இறந்தவரின் சடலம் முழுதும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. உடலை எரியூட்டுவதற்கு முன்னர் அவ்வுடல் குளிப்பாட்டப்படவில்லை. உடல் நெய்யால் அபிஷேகம் செய்யப்படவில்லை. சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் யாருக்கும் பிண்டம் கொடுக்கப்படவில்லை. முக்கன்னி செய்யப்படவில்லை – அதாவது சவத்தின் வாயில் நெருப்பிடுவது. சடலம் தீயூட்டப்பட்டு சாம்பலான பிறகு அதனுடைய அஸ்தி எடுத்துவரப்படவில்லை. இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைப்பது முக்கியமான சடங்கு. அதுவும் நடைபெறவில்லை.

எனவே மேஜோ குமார் இறந்து விட்டார் என்றோ, அவருடைய உடல்தான் எரியூட்டப்பட்டது என்றோ தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. மேஜோ குமார் இறந்துவிட்டார் என்று பிபாவதியால் ஐயம் திரிபுர நிரூபிக்க முடியவில்லை என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் வெளியிட்டார்.

0

சரி, மேஜோ குமார் சாகவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் சந்நியாசிதான் மேஜோ குமார் என்று எப்படி முடிவுக்கு வருவது. சந்நியாசி வங்காளியே கிடையாது. அவர் ஒரு ஹிந்துஸ்தானி. எனவே நீதிபதி இப்பொழுது முடிவு செய்ய வேண்டியது சந்நியாசி வங்காளியா அல்லது ஹிந்துஸ்தானியா?

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்திய துணைக் கண்டத்தின் வடபகுதியில் இமயமலையிலிருந்து விந்திய மலைக்கு உட்பட்ட பகுதிகள் ஹிந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டன. அங்கு வசித்து வந்த மக்கள் ஹிந்துஸ்தானிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் வங்காளிகள் ஹிந்துஸ்தானியர்கள் இல்லை. மேஜோ குமார் வங்காளி. ஆனால் சந்நியாசி, அவர் பேச்சிலும் தோற்றத்திலும் ஹிந்துஸ்தானி போலக் காட்சியளித்தார். எனவே அவர் வங்காளியாக இருக்கமுடியாது, அதுவும் அவர் குறிப்பாக மேஜோ குமாராக இருக்கமுடியாது. அவர் ஒரு போலி என்று வாதிட்டார் பிபாவதியின் வழக்கறிஞர்.

சந்நியாசி தானே மேஜோ குமார் என்று எப்பொழுது தன்னை பறைசாற்றிக்கொண்டாரோ அப்போதிருந்தே சத்திய பாபு சுறுசுறுப்பாகிவிட்டான். சந்நியாசி மேஜோ குமாராக இருக்கமுடியாது என்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் தேவைப்பட்டனவோ அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தான்.

நாம் ஏற்கெனவே பார்த்தது போல், உயர்மட்டத்தில் உள்ள பல ஆங்கில அதிகாரிகளை சந்தித்த சத்திய பாபு, தன்னுடைய தங்கைக்கு (தனுக்கு) ஆதரவு தேடிக்கொண்டான்.

பின்னர் டார்ஜிலிங் சென்று தனக்குத் தேவையான சாட்சிகளை (பொய் சாட்சிகளை) திரட்டினான். இந்த சாட்சிகளெல்லாம் மேஜோ குமார் இறந்ததாகச் சொல்ல வேண்டும். மேஜோ குமார் உடல் தகனம் செய்யப்பட்டதாக சொல்ல வேண்டும். அதை அவர்கள் பார்த்ததாக சொல்லவேண்டும்.

இன்னொரு பக்கத்தில் சந்நியாசியும் அவரைச் சார்ந்தவர்களும், டாக்கா கலெக்டர் லிண்ட்சே- ஐ சந்தித்து சன்னியாசிதான் மேஜோ குமாரா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

லிண்ட்சே விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் ஒரு காரியம் செய்தார். தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்ட ஒரு காவல்துறை ஆய்வாளரான மம்தாஜூதினை பஞ்சாபுக்கு அனுப்பி, சந்நியாசியைப் பற்றி உண்மையான விவரங்களை அறிந்து வரச் சொன்னார். அந்த ஆய்வாளருக்குத் துணையாக பாவல் ஜமீனின் காரியதரிசியான சுரேந்திர சக்ரவர்த்தியையும் அனுப்பிவைத்தார்.

உண்மையைக் கண்டறியும் இருவர் குழு, தாங்கள் டாக்காவிலிருந்து புறப்பட்டு சரியாக இரண்டு மாதம் கழித்து ஒரு அறிக்கையை பாவல் ஜமீனின் மேலாளருக்கு அனுப்பி வைத்தது. அந்த அறிக்கை வங்காள மொழியில் இருந்தது. அதை தயார் செய்தது ஜமீனின் காரியதரிசி சுரேந்திர சக்ரவர்த்தி.

அந்த அறிக்கையில் இடம் பெற்ற விவரங்கள் பின்வருமாறு :

“நாங்கள் இருவரும் டாக்காவிலிருந்து புறப்பட்டு சுமார் 2000 மைல் தொலைவில் உள்ள பஞ்சாபுக்குச் சென்றோம். போகும் வழியில் ஹரித்வாருக்குச் சென்றோம். ஹரித்வாரில் நாங்கள் நடத்திய விசாரணையில், ஹிரானந்தா என்ற சாதுவைப் பற்றிய ஒரு துப்பு கிடைத்தது. அந்த சாது ஹிரானந்தாவைத் தேடிக் கொண்டு நானும் மம்தாஜூதினும் அமிர்தசரஸுக்குச் சென்றோம்.

நாங்கள் இருவரும் அமிர்தசரசில் ஹிரானந்தா சாதுவைச் சந்தித்தோம். அவரிடம் சந்நியாசியினுடைய புகைப்படத்தைக் காட்டி இவரைத் தெரியுமா என்று கேட்டோம். அதற்கு ஹிரானந்தாவின் சிஷ்யர் சாந்தாராம், புகைப்படத்தில் இருப்பது சந்நியாசி சுந்தர தாஸ் என்றார். பின்னர் இந்த சந்நியாசி தரம் தாஸின் சிஷ்யர் என்ற விவரத்தையும் தெரிவித்தார்.

பின்னர் நாங்கள் தரம் தாஸை தேடி அவருடைய கிராமமான சோட்டு சன்சாராவுக்குச் சென்றோம். அந்த கிராமம் அமிர்தசரஸிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. அங்கு நாங்கள் சாது தரம் தாஸை சந்தித்தோம். அவருடைய சிஷ்யர் தேபதாஸும் உடன் இருந்தார். சந்நியாசியினுடைய புகைப்படத்தை அவ்விருவரிடமும் காட்டினோம். புகைப்படத்தை பார்த்த அவர்கள், இது சுந்தர் தாஸ் என்று தெரிவித்தனர்.

தரம் தாஸ், சுந்தர தாஸின் பின்னணியைப் பற்றி எங்களிடம் தெரிவித்தார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் லாகூருக்கு அருகாமையில் உள்ள அவுலா என்ற கிராமத்திலிருந்து, நாராயண் சிங் என்பவர் ஒரு சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார். அந்தச் சிறுவனின் பெற்றோர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவனை நீங்கள் உங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்தச் சிறுவனின் பெயர் மால் சிங். நானும் அவனை என்னுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொண்டேன் என்றார் சாது தரம் தாஸ்.

நாங்கள் சாது தரம் தாஸை ஒரு கவுரவ மாஜிஸ்திரேட்டான லெப்டினண்ட் ரகுபிர் சிங்கிடம் கூட்டிச் சென்றோம். இந்த லெப்டினண்ட் ரகுபிர் சிங் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி.

சாது தரம் தாஸ் லெப்டினண்ட் ரகுபிர் சிங்கிடம் ஜூன் மாதம் 27 ஆம் தேதி, 1921ம் ஆண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அச்சமயத்தில் அங்கு எங்கள் இருவர் குழுவைத் தவிர, தரம் தாஸின் சிஷ்யர் தேபதாஸ், சாது ஹிரானந்தா மற்றும் அவருடைய சிஷ்யர் சாந்தாராம் தாஸ் மற்றும் நான்கு கிராமத்தவர்கள் இருந்தனர்.

தரம் தாஸ் சொன்ன விவரங்கள் அனைத்தும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 164 வது பிரிவின் கீழ் பிரமானத்தின் அடிப்படையில், கவுரவ மாஜிஸ்திரேட்டால் பதிவு செய்யப்பட்டது. தரம் தாஸ் கூற்றை அங்கிருந்த மற்றவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்களது சாட்சியமும் கவுரவ மாஜிஸ்திரேட்டால் பதிவு செய்யப்பட்டது. நாங்கள் கொண்டு வந்த புகைப்படம் தரம் தாஸுக்கு காட்டப்பட்டு, அவர் இது சுந்திர தாஸுடையது என்று சொன்ன பிறகு, கவுரவ மாஜிஸ்திரேட்டால் அந்த புகைப்படம் P1 என்று குறியீடு செய்யப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் சந்நியாசி நின்று கொண்டிருப்பதாக கவுரவ மாஜிஸ்திரேட் ரகுபிர் சிங் தெரிவித்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் ரகுபிர் சிங் கையெழுத்து போட்டிருக்கிறார்.

தரம் தாஸ் தன்னுடைய விசாரணையில், மால் சிங் என்ற சிறுவன் தன்னிடம் ஒப்படைக்கப்படும்போது அவனுக்கு 11 வயது இருக்கும் என்றார். மேலும் அவர், தன்னுடைய சிஷ்யனான சுந்தர் தாஸ் ஆறு வருடங்களுக்கு முன்னர் தன்னை விட்டு பிரிந்து கல்கத்தாவுக்குச் சென்று விட்டதாக தெரிவித்தார்.”

சுரேந்திர சக்ரவர்த்தி அனுப்பி வைத்த இந்த ஆய்வறிக்கையை, பாவல் ஜமீனின் மேலாளர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து டாக்கா கலெக்டரான லிண்ட்சேவுக்கு ஜூலை 2 ஆம் தேதி அனுப்பி வைத்தார்.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், இந்த அறிக்கை கலெக்டருக்கு கிடைப்பதற்கு முன்னரே, ஜூன் 3 ஆம் தேதியே சந்நியாசி உண்மையானவர் இல்லை; அவர் ஒரு போலி என்ற தன்னுடைய முடிவை கலெக்டர் வெளியிட்டிருக்கிறார்.

டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த சமயத்தில், பிபாவதி தரப்பில் மேற்குறிப்பிட்ட சாட்சியங்கள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு பக்கம் சந்நியாசி தானே மேஜோ குமார் என்று நிரூபிக்கும் பொருட்டு, நான்கு சாதுக்களை தனது சார்பாக சாட்சியம் அளிக்க வைத்துள்ளார். இன்னோரு பக்கம் சந்நியாசி வங்காளத்தவர் இல்லை; அவர் ஒரு ஹிந்துஸ்தானி என்று நிரூபிக்கும் பொருட்டு அதற்குண்டான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பில், ஒரு தரப்பு சொல்வது கண்டிப்பாக பொய். யார் சொல்வது பொய் என்று நீதிபதி கண்டுபிடித்தாக வேண்டும்.

நீதிபதி கண்டுபிடித்தாரா?

(தொடரும்)

மர்ம சந்நியாசி – 6

நீதிமன்றத்தில் மேஜோ குமாரின் மரணம் அல்லது மரணமாகக் கருதப்படும் சம்பவத்தைக் குறித்து இரு வேறு கதைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று சந்நியாசியின் கூற்று. இன்னொன்று எதிர் தரப்பான பிபாவதியின் கூற்று.

மேஜோ குமார் டார்ஜிலிங்கில் இருக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தான். சிப்பிலிஸ் நோய்க்குகூட முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு அந்த நோயிலிருந்து மீண்டான். டார்ஜிலிங்கில் இருக்கும்போது தினந்தோறும் காலையில் போலோ விளையாடச் செல்வான். மாலை வேலைகளில் ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாடுவான்.

சந்நியாசி நீதிமன்ற சாட்சிக் கூண்டில், மேஜோ குமாருக்கு டார்ஜிலிங்கில் என்ன நடந்தது என்ற விவரத்தை பின்வருமாறு தெரிவித்தார்.

‘1908ம் ஆண்டு, மே மாதம் 5 ஆம் தேதி எனக்கு வாய்வுத் தொல்லை அதிகமாக இருந்தது. என்னுடைய மைத்துனன் சத்திய பாபு, மருத்துவக் கல்லூரி மாணவன் அஷுதோஷ் குப்தாவை எனக்கு வைத்தியம் பார்க்கும்படி அனுப்பி வைத்தான். (அஷுதோஷ் குப்தாவும், ஜெய்தேபூரிலிருந்து மேஜோ குமாருடன் டார்ஜிலிங் வந்த கும்பலில் ஒருவன். அவனுடைய தந்தைதான் ஜெய்தேபூர் அரண்மனையின் மருத்துவர்).

மே 6 ஆம் தேதி அன்று எனக்கு வாய்வுத் தொல்லையுடன் வயிற்று வலியும் ஏற்பட்டது. நான் வலிதாங்கமாட்டாமல் கோபப்பட்டேன், அனைவரிடமும் எரிந்து விழுந்தேன். (மேஜோ குமார் சாதரணமாகவே கோபக்காரன், முரடன். தன்னுடைய வயிற்று வலியின் காரணமாக அவன் அனைவரிடமும் கடிந்து கொண்டான். அவனுடைய மனைவி பிபாவதி ஏதும் பேசாமல் பயந்து போய், பங்களாவின் ஒர் அறையில் தனியே இருந்தாள். பிபாவதிக்கு இரண்டு ஆயாக்கள்தான் பேச்சு துணைக்கு. சத்திய பாபு, பிபாவதிக்குத் துணையாக அரண்மனையிலிருந்து யாரையும் கூட்டி வரக்கூடாது என்று சொல்லியிருந்தான்).

எனக்கு வைத்தியம் செய்வதற்கு ஐரோப்பிய மருத்துவர் ஒருவர் வந்தார். ஐரோப்பிய மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தை நான் இரண்டு நாள் உட்கொண்டேன். ஆனால் 7 ஆம் தேதி, ஆஷு பாபு ஒரு கண்ணாடிக் குடுவையில் ஏதோ ஒரு மருந்தை கொண்டுவந்து என்னை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். அந்த மருந்தை வாங்கி நான் வாயில் ஊற்றிக்கொண்டேன். அவ்வளவுதான், ஒரே நெஞ்செரிச்சல். எரிச்சல் தாங்கமுடியாமல் அலறினேன். ஆஷு நீ எனக்கு குடிப்பதற்கு என்ன கொடுத்தாய் என்று கத்தினேன். எரிச்சல் தாங்கமுடியாமல் குடித்த மருந்தை வாந்தி எடுத்தேன். வாந்தி எடுப்பது தொடர்ந்தது. நிற்கவே இல்லை.

அடுத்த நாள் 8ஆம் தேதி, மலம் கழிக்கும் போது ரத்தப் போக்கு ஏற்பட்டது. பிறகு சிறிது நேரத்துக்கெல்லாம் சுய நினைவிழந்து மயங்கி விட்டேன். அதற்குப் பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.’

அதன் பின்னர் என்ன நடந்தது என்று, தான் விசாரித்து தெரிந்துகொண்ட விவரங்களை சந்நியாசி தன்னுடைய வழக்குக்கான பிராதில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.

‘மே மாதம் 8 ஆம் தேதி, சனிக்கிழமை 6 மணியளவில் நான் இறந்ததாக நினைத்துக்கொண்டு,  ஈமக் காரியங்கள் செய்ய அன்று இரவே 7 மணியிலிருந்து 8 மணி அளவில் என்னை இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்திருக்கிறது. பலத்தக் காற்று வீசியிருக்கிறது. இந்த இயற்கை சீற்றத்தை தாக்குப் பிடிக்கமுடியாமல் என்னை தூக்கி வந்தவர்கள் என்னை வழியிலேயே விட்டுவிட்டனர்.

அந்தச் சூழ்நிலையில், அருகிலிருந்த நான்கு சாதுக்கள் நான் முனங்குவதைக் கேட்டு என்னைத் தூக்கிவந்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் எனக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் என்னை இடுகாட்டுக்குத் தூக்கி வந்த நபர்கள் என்னைக் காணாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். பிறகு அடுத்த நாள் காலை, வேறொரு இறந்தவரின் பிணத்தை தூக்கி வந்து, என்னுடைய உடம்பை தேடிக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி, மறுபடியும் இடுகாட்டுக்குச் சென்று புதிதாக தூக்கி வந்த உடம்பை எரியூட்டி இருக்கிறார்கள். அந்த உடம்பு தலை முதல் கால் வரை துணியால் சுற்றப்பட்டிருந்தது. அதன் முகத்தைக் கூட ஒருவராலும் பார்க்க முடியவில்லை.’

இந்த சம்பவங்களைப் பற்றி பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் சொன்னதாவது :

‘மேஜோ குமார் மே மாதம் 6 ஆம் தேதி முதல் உடல் நலம் இல்லாமல் இருந்தார். மே 7 ஆம் தேதியன்று அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 8 ஆம் தேதியன்று அவர் உடல் நிலை மோசமடைந்தது. அன்று டாக்டர் லெப்டினண்ட் கர்னல் ஜான் டெல்ப்பு கால்வெர்ட், மேஜோ குமாருக்கு சிகிச்சை அளிக்க வந்தார். அவர் குமாருக்கு ஊசி போட முனைந்தார். ஆனால் குமார் அதற்கு மறுத்துவிட்டார். குமார் தன்னுடைய படுக்கையறைக்கு அடுத்த அறையில் ஒரு விரிப்பில் படுத்திருந்தார். காலை 8 மணியிலிருந்து 9 மணியளவில் டாக்டர் நிப்பாரான் சந்திர சென் என்பவர் வந்து குமாரைப் பார்த்தார். நான் ஒரு அறையின் கதவருகே நின்றுகொண்டிருந்தேன். ஆஷு பாபுவும், சத்திய பாபுவும் குமாருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு காலை 10 மணியளவில் குமாருக்கு வாந்தி வந்தது. மதியம் 2 மணியளவில் குமாரின் வயிற்று வலி அதிகமானது. குமாருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டது. டாக்டர் கால்வெர்ட்டை அழைத்துவர ஆட்கள் அனுப்பப்பட்டனர். டாக்டர் கால்வெர்டு மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வந்து குமாரைப் பார்த்தார். டாக்டர் கால்வெர்டு, குமாருக்கு உடனடியாக ஊசி போட்டாகவேண்டும் என்று தெரிவித்தார். குமார் அதற்கு ஒப்புக் கொண்டார். ஊசி போட்ட பிறகு குமாரின் வலி குறைந்தது. ஆனால் குமார் ரொம்பவும் சோர்ந்து காணப்பட்டார்.
அதற்குப் பிறகு சில செவிலியர்கள் வந்து குமாரைப் பார்த்துக்கொண்டனர். குமாரின் உடம்பு சில்லென்று ஆனது. செவிலியர்கள் குமாரின் உடம்பில் ஏதோ பவுடரைப் போட்டுத் தேய்த்துவிட்டனர். டாக்டர் கால்வெர்ட் மாலை 8 மணி வரை இருந்தார். பின்னர் அவர் உணவருந்துவதற்காகச் சென்றுவிட்டார்.

இருட்டிய பிறகு என்னுடைய மாமா சூரிய நாரயாண் பாபு, பி.பி.சிர்கார் என்ற ஒரு மருத்துவருடன் குமாரைப் பார்க்க வந்தார். மே 8 ஆம் தேதி நள்ளிரவில் மேஜோ குமார் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் டாக்டர் கால்வெர்ட் மற்றும் டாக்டர் நிப்பாரான் சந்திர சென் இருவரும் இருந்தார்கள். ‘

(டாக்டர் கால்வெர்டு மற்றும் டாக்டர் நிப்பாரனை விசாரிக்கையில், தாங்கள் இரவில் குமாருடன் இருக்கவில்லை என்றும்,  வீட்டுக்குச் சென்றபிறகு மீண்டும் திரும்பிவந்து குமாரைப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர்).

பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் மேலும் சொன்னதாவது : குமார் இறந்த பிறகு, நான் குமாரின் கையைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தேன்.

(குமார் டார்ஜிலிங்கில் தங்கியிருந்த Step Aside பங்களாவின் மேற்பார்வையாளரான ராம் சிங் சுபா, பங்களா அருகில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவர் தன்னுடைய சாட்சியத்தில் கூறிய விஷயம் இது. ‘நான் லேபாங் ரேஸ் கோர்ஸில் குதிரைப் பந்தயத்தைப் பார்த்துவிட்டு அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்பினேன். வரும் வழியில் குமார் தங்கி இருந்த பங்களாவில் அனைத்து விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. அங்கு வீட்டில் பெண்கள் அழுது கொண்டிருந்தனர். நான் பங்களாவுக்குள் நுழைந்து அங்கு உள்ளவர்களை விசாரித்ததில், குமார் சற்று நேரத்துக்கு முன்னர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.’ ராம் சிங் சுபா மேலும் தொடர்ந்தார். ‘நான் 7:30 மணியளவில் பங்களாவின் மாடிக்குச் சென்று பார்த்தேன். அங்கு முன் அறையில் குமார் தரையில் கிடத்தப்பட்டு இருந்தார். அவர் உடல் முழுதும் ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அங்கு சத்திய பாபு, ஆஷு பாபு, டாக்டர் பி.பி.சிர்கார் மற்றும் பங்களாவின் உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு பத்து நிமிடம் தலையைக் குனிந்தவாறு இருந்துவிட்டு வரண்டாவின் வழியாக வெளியே வர முற்பட்டேன். அப்பொழுது ஒரு அறையைக் கடக்க நேர்ந்தது. அந்த அறையின் கண்ணாடிக் கதவின் வழியாக பிபாவதியை பார்க்கமுடிந்தது. அங்கு அவள் ஒரு இரும்புக் கட்டிலின் மேல் குப்புறப்படுத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். பிபாவதி இருந்த அறை வெளியில் பாட்லாக் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. மேற்சொன்ன சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது பிபாவதி உண்மையைச் சொல்லவில்லை என்று தெரிகிறது).

பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் மேலும் தொடர்ந்தார். ‘மேஜொ குமார் Billory colic காரணமாக உயிர் இழந்தார். நள்ளிரவு என்பதால் மேஜோ குமாரை அடக்கம் செய்யமுடியவில்லை. மறுநாள் காலை, மேஜோ குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் தீயூட்டப்பட்டது. ‘

இரு தரப்பினரும் தத்தம் நிலைப்பாடுகளை நிரூபிக்க, மொத்தமாக 96 சாட்சிகளை விசாரித்தனர். அந்த சாட்சிகளில் முக்கியமானவர் டாக்டர் லெப்டினண்ட் கர்னல் ஜான் டெல்ப்பு கால்வெர்ட். இவர் பிபாவதியின் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். டாக்டர் கால்வெர்ட், சம்பவம் நடந்த சமயத்தில் டார்ஜிலிங்கில் சிவில் சர்ஜனாகப் பணியாற்றினர். ஓய்வு பெற்றபிறகு அவர் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார். அவரை இங்கிலாந்து சென்று விசாரிக்க, டாக்கா நீதிமன்றம் ஒரு விசராணைக் கமிஷனை ஏற்படுத்தியது. தன்னுடைய தள்ளாடும் வயதில் டாக்டர் கால்வெர்ட் விசாரணைக் கமிஷன் முன்னர் ஆஜராகி, 22 வருடங்கள் முன் நடந்த சம்பவங்கள் குறித்து சாட்சியம் அளித்தார். டாக்டர் நிப்பாரன் சந்திர சென் என்பவரும் மேஜோ குமாருக்கு வைத்தியம் அளித்த வகையில் பிபாவதியின் தரப்பில் சாட்சியம் அளித்தார்.

மே மாதம் 8 ஆம் தேதி, மதியம் 12 மணியளவில் மேஜோ குமாருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டு உடல் நிலை மோசமடைந்த தருணத்தில் டாக்டர் கால்வெர்டும் டாக்டர் நிப்பாரன் சந்திர சென்னும் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர். இந்த இரண்டு மருத்துவர்களும் மேஜோ குமார் குணமடைய நிறைய மருந்துகள் எழுதிக் கொடுத்தனர்.

டார்ஜிலிங்கில் உள்ள ஸ்மித் ஸ்டெயின்ஸ்டிரீட் அன் கோ (Smith Steinstreet & Co) என்ற மருந்துக்கடையின் பதிவேட்டிலிருந்து திரட்டப்பட்ட விவரங்களின் படி, டாக்டர் கால்வெர்ட் முதலில் எழுதிக்கொடுத்த மருந்துச்சீட்டு, டாக்டர் கால்வெர்டைத் தொடர்ந்து, டாக்டர் நிப்பரான் எழுதிக்கொடுத்த மருந்துகள், டாக்டர் கால்வெர்ட் இரண்டாவது முறை எழுதிக் கொடுத்த மருந்துகள், டாக்டர் சென் மேஜோ குமாருக்காக கடைசியாக எழுதிக் கொடுத்த மருந்துகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.

மேற்சொன்ன மருந்துகள் எதற்காக வழங்கப்பட்டன என்று நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. வாதி தரப்பில் இரண்டு மருத்துவர்களும் பிரதிவாதி தரப்பில் இரண்டு மருத்துவர்களும் சாட்சியம் அளித்தனர்.

டாக்டர் மேக் கில்கிறிஸ்ட் என்பவரும் டாக்டர் பிராட்லி என்பவரும் வாதி சார்பில் சாட்சியம் அளித்தனர். மேஜர் தாமஸ் மற்றும் கர்னல் டாக்டர் டென்ஹாம் வைட் என்பவரும் பிரதிவாதி தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மருத்துவம் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டன. மருத்துவப் புத்தகங்கள் பல அலசி ஆராயப்பட்டன.

பிபாவதி தரப்பில், Biliary Colic-க்கால் தான் மேஜோ குமார் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேஜோ குமார் உடல் நலம் இல்லாமல் இருந்த சமயத்தில், அவருக்கு Biliary Colic என்று எந்த மருத்துவரும் தெரிவிக்கவில்லை. மேஜோ குமார் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில், அந்தப் பெயரை அவர் குடும்பத்தார் யாரும் கேள்விப்படவே இல்லை.  மேஜோ குமார் இறந்த பிறகு முதல் முறையாக  மே மாதம் 10 ஆம் தேதியன்று மேஜோ குமாரின் அண்ணனான மூத்த குமாருக்கு (பாரா குமாருக்கு) டாக்டர் கால்வெர்ட் எழுதிய கடிதத்தில்தான் அது குறிப்பிடப்பட்டிருப்பதாக பிரதிவாதி தரப்பில் சாட்சியம் அளிக்கப்பட்டது.

ஏன் டாக்டர் கால்வெர்ட் பாரா குமாருக்கு அந்தக் கடிதத்தை எழுதினார் என்று பிரதிவாதி தரப்பில் சொல்லப்படவில்லை? யார் இந்தக் கடிதத்தை பாரா குமாரிடம் சேர்த்தனர் என்பதற்கும் விளக்கம் இல்லை. சத்திய பாபுவால் இது தொடர்பான சரியான விளக்கம் தர முடியவில்லை.

1921ம் ஆண்டில் சந்நியாசியைப் பற்றி விசாரணை நடத்திய டாக்கா கலெக்டரான நீதாமிடம், சத்திய பாபு டாக்டர் கால்வெர்டின் கடிதத்தை முதன்முறையாக கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தை சத்திய பாபு கலெக்டரிடம் கொடுத்ததன் காரணம், மேஜோ குமாரின் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்ற விவரத்தை டாக்டர் கால்வெர்ட் அதில் தெரிவித்திருந்தார்.

டாக்டர் கால்வெர்ட் நீதிமன்ற விசாரணைக் கமிஷனிடம் அளித்த தன்னுடைய சாட்சியத்தில், மேஜோ குமார் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிர் இழந்தார் என்று தெரிவித்தார். ஆனால் அவர் பாராகுமாருக்கு எழுதியக் கடிதத்தில் மேஜோ குமார் Biliary Colic-கால் இறந்ததாக குறிப்பிட்டிருந்தார். டாக்டர் கால்வெர்ட்டின் கூற்றில் முரண்பாடு இருக்கிறது. ஒரு இடத்தில் மேஜோ குமார் இறந்ததற்கான காரணம் Biliary Colic என்று சொன்ன டாக்டர் கால்வெர்ட், இன்னொரு இடத்தில் ரத்தப் போக்கு என்றார்.

இந்த வழக்கில் Biliary Colic பற்றி அதிகம் இடம்பெறுவதால், அது குறித்து ஒரு சிறு அறிமுகம் இங்கே அவசியமாகிறது. சாட்சியம் அளித்த நான்கு மருத்துவர்களும் Biliary Colic  பற்றிய தங்களுடைய விளக்கங்களுக்கு ஆதாரமாக Price’s Treatise என்ற மருத்துவப் புத்தகத்தையே மேற்கோளாகக் காட்டினர். கல்லீரல் வெளிப்படுத்தும் பித்தமானது ஹெப்பட்டிக் சுரப்பி மூலமாக சிஸ்டிக் சுரப்பியில் சென்று சேருகிறது. பிறகு சிஸ்டிக் சுரப்பி, பித்தநீரை மண்ணீரலுக்கு எடுத்துச்செல்கிறது. சில சமயங்களில் இந்தப் பித்தநீர், சிஸ்டிக் சுரப்பியில் கட்டிப்பட்டு நாளடைவில் கற்களாக மாறிவிடுகிறது. அப்படி சிஸ்டிக் சுரப்பியில் உருவாகும் பெரிய கற்களால் வலது தோள்ப்பட்டையில் தீவிர வலி ஏற்படும். வயிற்றில் வலி ஏற்படாது. வயிறுக்கும் Biliary Colicக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  இதனால் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது. அறுவை சிகிச்சை மூலமாகத்தான் Biliary Colicக்கை சரி செய்ய முடியும். இந்நோய் ஏற்படுத்தும் வலியைக் குறைப்பதற்காக வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓபியம் வழங்கப்படும் .

அனைத்து மருத்துவர்களும் கருத்து ஒத்து சொன்ன விஷயம் ஒருவருக்கு Biliary Colic இருந்தால் அவருக்கு ரத்தப் போக்கு ஏற்படாது என்பதுதான். காரணம் சிஸ்டிக் சுரப்பியில் உருவான கல்லால் சுரப்பி பாதிக்கப்பட்டு ரத்தம் கசிந்து குடல் வழியாக வெளியேறும். அப்படி வெளியேறும் ரத்தம் சிவப்பாக இருக்காது. கறுப்பாகவும் தார் போன்றுமிருக்கும். காரணம், கல்லின் பாதிப்பால் ஏற்பட்ட ரத்தம் சிறுகுடல் வழியாக பெருங்குடலுக்குச் சென்று, அங்கிருந்து மலக்குடலுக்கு வந்து சேர்வதற்கு சுமார் 25 அடி நீளம் உள்ள குடல்பகுதிகளை கடக்கவேண்டும். அப்படி கடக்கும் வழியில் மற்ற உணவுகளுடன் ரத்தமும் ஜீரணிக்கப்பட்டு, அதனுடைய கழிவுகள் கறுப்பாகவும் தார் போன்றும் வெளியேறும். மலத்தில் ரத்தம் வெளிப்பட்டால், அது குடலின் கீழ்பகுதி அல்லது ஆசனவாயில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இருக்குமே தவிர Biliary Colicக்கால் இருக்காது”.

மேஜோ குமாருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் கால்வெர்டும் மேற்சொன்ன மருத்துவ விளக்கத்தை ஒத்துக்கொண்டார்.

நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த நான்கு மருத்துவர்களும், மேலும் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தினர். அவை “மேஜோ குமாருக்கு ஏற்பட்டது வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு) இல்லை. காரணம் மேல்சொன்ன நோய் இருந்தால் இந்த இரு உபாதைகளும் ஏற்படாது. மலச்சிக்கல்தான் ஏற்படும்.”

சத்திய பாபு ராஜ்பாரி அரண்மனைக்கு, மேஜோ குமாரின் நிலைமையை தெரிவிப்பதற்காக அனுப்பிய தந்திகளில் எதிலுமே மேஜோ குமாருக்கு Biliary Colic என்று குறிப்பிடவில்லை.

அந்தத் தந்திகள் பின்வருமாறு:

மே 6 – காலை 10 மணி. நேற்று இரவு குமாருக்கு காய்ச்சல் அடித்தது. 99-க்கு கீழ்தான் இருந்தது. இப்பொழுது காய்ச்சல் இல்லை.

மே 6 – மாலை 6:45 மணி, குமாருக்கு காய்ச்சல். தாங்க முடியாத வயிற்று வலி. சிவில் சர்ஜன் குமாரை கவனித்து வருகிறார்.

மே 6 – மாலை 8:55 மணி, காய்ச்சல் இருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வயிற்று வலி. இப்பொழுது குறைந்துவிட்டது. கவலைப்பட வேண்டியதில்லை. மறுபடியும் வரும் என்ற பயம் வேண்டாம்.

மே 7 – காலை 7:10 மணி – குமார் நன்றாகத் தூங்கினார். காய்ச்சலும் இல்லை, வயிற்று வலியும் இல்லை.

மே 8 – காலை 11:15 மணி – காய்ச்சல் இல்லை, கொஞ்சம் வலி இருந்தது. அடிக்கடி வாந்தி வருவதாக தெரிவிக்கிறார். சிவில் சர்ஜன் கவனித்துக் கொள்கிறார். கவலைப்பட வேண்டியதில்லை. உணவாக சாதம் கொடுக்கப்படுகிறது.

மேலும் டாக்டர் கால்வெர்ட் மற்றும் டாக்டர் நிப்பாரன் சந்திர சென், மேஜோ குமாருக்கு எழுதிக் கொடுத்த மருந்துகள் எதுவுமே Biliary Colicக்கான சிகிச்சை தொடர்பானது இல்லை.

டாக்டர் கால்வெர்ட், பெல்லாடோனா (Belladonna) ஆயின்மென்ட் எழுதிக் கொடுத்திருந்தார். அது வயிற்று வலி கண்டவர்களுக்கு வயிற்றின் மேல் தடவப்படும் மருந்து.

டாக்டர் கில்கிறிஸ்ட் தன்னுடைய சாட்சியத்தில், மேஜோ குமார் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று வைத்துக்கொண்டால் கூட மருந்துச் சீட்டை பார்க்கும்பொழுது அதற்காக சிகிச்சை எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

எனவே மேஜோ குமார் Biliary Colicக்கால் இறந்தார் என்பது தவறு.

எனவே அரசு மருத்துவரான டாக்டர் கால்வெர்ட் நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்திருக்கிறார். நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்வதற்கு ஆங்கிலத்தில் perjury என்று பெயர். நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்தால் அது சட்டப்படி குற்றம். அதற்கு தண்டனையும் உண்டு.

சத்திய பாபுவுக்கு, மேஜோ குமார் இன்ன காரணத்தினால்தான் இறந்தார் என்று ஒரு ஆதாரம் தேவைப்பட்டது. அந்தப் போலி ஆதாரம் தான், டாக்டர் கால்வெர்டினால் பாரா குமாருக்கு எழுதப்பட்ட கடிதம்.

அப்படியானால் மேஜோ குமாருக்கு மே மாதம் 8 ஆம் தேதி என்ன நடந்தது?

(தொடரும்)