கல்வியை மேம்படுத்த ஒரு தனி மனிதனின் போராட்டம்
62 வயதாகும் T.K. சந்திரசேகரன் ஒரு போராளி. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (ஆர்.டி.ஐ) தன் ஆயுதமாக எடுத்துள்ளார். அதனைக் கொண்டு, கல்வித் துறை சார்ந்த சில தகவல்களை அவர் பெற்றுள்ளார். அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் அனைவரும் தம் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்க்கிறார்கள்? எத்தனை சதவிகிதம் பேர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்? பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டக் கல்வி அதிகாரிக்கும் கடிதம் எழுதி சந்திரசேகர் இந்தத் தகவலைச் சேகரித்திருக்கிறார்.
சந்திரசேகரன் ஏன் இந்தத் தகவலைச் சேகரிக்கத் தொடங்கினார்?
பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டவர் இவர். பின்னர் சில காலம் தனியார் துறையில் வேலை பார்த்துள்ளார். ஐந்தாண்டுகள் கனடா நாட்டில் வேலை செய்துள்ளார். பிறகு அதனை விட்டுவிட்டு இந்தியா வந்து, கல்வி சார்ந்த துறையில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க விரும்பினார். அதற்கு ஓர் உந்துகோல் இருந்தது. அவருடைய ஒரு மகன் சிறு வயதிலேயே மூளைக் காய்ச்சலால் இறந்துபோயிருந்தான்.
சந்திரசேகரன் தேர்ந்தெடுத்தது சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில், விடியங்காடு பஞ்சாயத்தில் உள்ள தாமரைக்குளம் என்ற சிறு கிராமத்தை. அங்கு சென்று வசிக்கத்தொடங்கிய அவர் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். கணினிப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவினார். அதில் படிக்க யாருமே முன்வரவில்லை.
அந்த ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இவரது உதவியை நாடினர். பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க யாரும் இல்லை. சந்திரசேகரனால் பத்து, பன்னிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர முடியுமா? சரி என்று செயலில் இறங்கினார் சந்திரசேகரன். அந்தப் பள்ளியின் சக ஆசிரியர்கள் சந்திரசேகரனை நட்புடன் வரவேற்றனர்.
பாடம் சொல்லித்தருவதோடு நிற்காமல், ஏன் ஆசிரியர்கள் இல்லை என்பதையும் ஆராயப் புகுந்தார் சந்திரசேகரன். அந்தப் பள்ளிக்கு நியமிக்கப்படும் பல ஆசிரியர்கள் பணிக்கே வருவதில்லை. சில மாதங்கள் அப்படியே இருந்துவிட்டு, மேலதிகாரிகளைக் கெஞ்சி எப்படியாவது டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வேறு இடத்துக்குச் சென்றுவிடுவார்கள். பிறகு அடுத்த ஆசிரியரை நியமிக்க வெகு காலம் பிடிக்கும். அப்படி ஒருவர் வந்தாலும் அவரும் இதேபோல் பள்ளிக்கு வரமாட்டார். கதை இப்படியே செல்லும்.
பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களைக் கலந்தாலோசித்து அவர்களுடைய அனுமதியுடன் சந்திரசேகரன் ஒரு பெட்டிஷனை மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பினார். அப்போது பிடித்தது சனி.
விவரம் தெரிந்த சில ஆசிரியர்கள் சந்திரசேகரனை அடிக்க வந்துவிட்டார்கள். ‘நீ யார்கிட்ட வேணாப் போய் கம்ப்ளெயின் பண்ணிக்கோ’ என்று அசிங்கமாகப் பேசினார்கள். அத்துடன் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து அவரைப் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். மாணவர்களுக்குக் கிடைத்து வந்த ஆங்கிலப் பாடமும் ஒழிக்கப்பட்டது. இது சந்திரசேகரன் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது.
அப்போது தொடங்கியதுதான் இந்த ஆர்.டி.ஐ யுத்தம்.
ஏன் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? கை நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அக்கவுண்டபிலிட்டியே இல்லையே? இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் படிப்பதால், இவர்கள் தம் பள்ளிகள் நாசமாகப் போவதைப் பற்றிக் கவலைப்படுவே இல்லையா? இதற்கான தகவலைத் திரட்டிப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.
அவர் பெற்ற தகவல்கள் மிகத் தெளிவான உண்மையைச் சொல்லின. ஆசிரியர்களின் 73% பேர் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க, உயர்நிலைப் பள்ளிகளை விட்டுவிட்டு தொடக்கப் பள்ளிகளை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார் சந்திரசேகரன். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ‘ஹல்லோ இங்க்லீஷ்’ என்ற ஆங்கிலம் கற்றுத்தரும் 20 மணி நேரப் பாடம் கொண்ட டிவிடி, ஒரு டிவிடி பிளேயர் ஆகியவை கொடுக்கப்பட்டிருப்பதை செய்தித்தாளில் பார்த்துத் தெரிந்துகொண்டார். அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று விசாரித்ததில் அந்த டிவிடியில் உள்ளதை மாணவர்களுக்குச் சொல்லித்தர ஒரு ஆசிரியருக்கும் தெரியவில்லை என்று தெரிந்துகொண்டார். ஆனாலும் குழந்தைகள் அந்த டிவிடியைப் போட்டுப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை அவர் பார்த்தார். எனவே பள்ளிகளிடம் அனுமதி பெற்று இவரே அந்த டிவிடியில் உள்ள ஆங்கிலத்தை வரிவரியாகச் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார்.
அப்போது அக்கம் பக்கம் ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருக்கும் ஆசாமிகள் ‘ஐ! இந்தப் பள்ளிக்கூடத்த கான்வெண்டா மாத்திட்டாங்களா!’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது இவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
*
ஒரு பக்கம் தனியார் கல்வி நிலையங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன; அரசுப் பள்ளிகளின் படிப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. மறுபக்கம் அரசு விடாமல் மேலும் மேலும் பணத்தை அரசுப் பள்ளிகளில் கொட்டிக்கொண்டே இருக்கிறது.
ஒரு மேல்நிலைப் பள்ளியில் வெறும் 17 மாணவர்களே படிக்கின்றனர் என்கிறார் சந்திரசேகரன். இன்னொரு ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை சேர்த்து மொத்தமே 23 மாணவர்கள்தான். அதில் மேலும் மோசம் புது ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் ஒரு புதிய மாணவர்கூடச் சேர்க்கை இல்லை. ‘ஓர் அரசுப் பள்ளியில் மொத்தமே இரண்டு மாணவர்கள் என்று தினமலரில் படத்துடன் செய்தி வந்துள்ளது’ என்கிறார் இவர்.
தனியார் பள்ளிகளில் மட்டும் கல்வியின் தரம் நன்றாக இருக்கிதா என்று நான் அவரிடம் கேட்டேன். ‘நிச்சயமாக அரசுப் பள்ளிகளைவிடச் சிறப்பாகத்தான் உள்ளது’ என்கிறார் அவர். ‘பள்ளிகளில் மட்டுமல்ல, கல்லூரியிலும் அப்படித்தான். வாலாஜாவில் அறிஞர் அண்ணா கல்லூரி என்று பெண்களுக்கான பிரத்யேக அரசுக் கல்லூரி உள்ளது. ஆனால் அங்கு லெக்சரர்களே கிடையாது. வாலாஜா, ராணிப்பேட்டை, ஷோலிங்கர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு 8,000 ரூபாய் கட்டணம் என்றாலும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஏதோ கொஞ்சமாவது சொல்லித் தருகிறார்கள். எங்கள் ஊரில் 12வது படித்தவுடனே பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். ஏன் என்றால் வேலை எதுவும் கிடையாது. ஆனால் இப்போது இந்தத் தனியார் கல்லூரிகள் இருப்பதால் பெண்களை பி.ஏ, பி.காம் என்று எதையாவது படிக்க அனுப்புகிறார்கள்’ என்கிறார் இவர்.
இந்த அளவு கல்வித்துறை சீரழிந்துவருகிறதே, இதற்கு என்னதான் மாற்று என்று நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். கீழ்க்கண்டவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்பது அவருடைய பதில்.
- அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஆகவேண்டும் என்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கட்டாயம் அரசுப் பள்ளியில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று வேலை விதியை (Service Rule) உருவாக்கவேண்டும்.
- மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் என்ன தெரிந்துவைத்திருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு எவால்யுவேஷன் பரீட்சை வைத்து, அதில் அவர்கள் தேறவில்லை என்றால், ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியரையும் காரணம் கேட்டு, அவர்களுக்குத் தண்டனை தரவேண்டும்.
- சுற்றியுள்ள மாநிலங்களில் ஆசிரியர்களுக்கு என்ன சம்பளம் என்று பார்த்து நாம் அதிகமாகச் சம்பளம் தருகிறோமா என்பதை ஆராயவேண்டும்.
- கிராமப்புறத்திலிருந்து வரும் பொறியியல் மாணவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்கள் என்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அது கிராமப்புற மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. ஆனால் இந்த நிலைமைக்கு யார் காரணம்? மாணவர்களா அல்லது ஆசிரியர்களா? குற்றம் முழுதுமே ஆசிரியர்கள்மீதுதான். எனவே இதற்காகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டியது ஆசிரியர்கள்மீதுதான்.
- ஸ்கூல் சாய்ஸ் சிஸ்டம் (School Choice System) என்ற ஐடியாவை Centre for Civil Society என்னும் அமைப்பு முன்வைத்துள்ளது. அதைக் கேள்விப்பட்டு அதனைப் பற்றிப் படித்துப் பார்த்தேன். அதுகுறித்து முதல்வருக்குக் கடிதமும் எழுதியுள்ளேன். (கீழே இணைக்கப்பட்டுள்ளது.)
ஸ்கூல் சாய்ஸ் சிஸ்டம் என்பது சரியாக வேலை செய்யும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். ‘நாம் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கவேண்டியுள்ளது. ஏதாவது ஒன்று வேலை செய்யும் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்தார் அவர்.
அவர் இருக்கும் பகுதியிலிருந்து 28 கிமீ தொலைவில் அரசியல்வாதி ஒருவரால் ஒரு தனியார் பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஏசி வேனில் இவருடைய கிராமம் வரை வந்து குழந்தைகளை அழைத்துப்போகிறார்கள். ஆனால் ஆண்டுக் கட்டணம் ரூ. 80,000/- ‘பணம் உள்ளவர்கள் எப்படியாவது படித்துப் பிழைத்துவிடுவார்கள். பிரச்னையே ஏழைகளுக்குத்தான்’ என்றார்.
இவருக்குப் பெயரே ‘பெட்டிஷன் மாஸ்டர்’ என்பதுதானாம். சுற்றியுள்ள மக்கள் தன்னை ‘பைத்தியக்காரன்’ என்று அழைக்கிறார்கள் என்றார். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால் இவரிடம் வந்து பெட்டிஷன் எழுதித் தரச் சொல்லிப்போவதுதான் அவர்களுடைய வழக்கம். உள்ளூரில் ஆங்கன்வாடிக்குச் சரியான நபரைப் போடாததை எதிர்த்து கிராம மக்கள் சார்பில் போராடி, மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார். ஆனால் யார் தவறு செய்தாலும் அதனை இவர் எதிர்ப்பதால் இவருடைய பாபுலாரிட்டி அடிமட்டத்தில்தான் உள்ளது.
ஆனாலும் தைரியமாகத் தேர்தலில் நின்றுள்ளார். சென்ற ஆண்டு நடந்துமுடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் விடியங்காடு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்றார். தேர்தலில் நின்றது மொத்தம் மூன்று பேர். இவர் செலவு செய்தது ரூ. 4,100. கிடைத்த வாக்குகள் 181. கிடைத்த இடம் மூன்றாவது. இரண்டாவது இடத்துக்கு வந்தவர் ஒரு ரைஸ்மில் ஓனர். செய்த செலவு ரூ. 13 லட்சம். பெற்ற வாக்குகள் சுமார் 1,500. முதலிடம் வந்து பஞ்சாயத்துத் தலைவரானவர் செய்த செலவு ரூ. 9 லட்சம். பெற்ற வாக்குகள் சுமார் 1,700.
போட்ட செலவுக்குப் பணத்தை ரெட்டிப்பாகப் பெறவேண்டுமே. என்ன செய்தாரோ தெரியாது. ஆனால் பஞ்சாயத்துத் தலைவர்மீது ஏதோ குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, காசோலையில் கையெழுத்திடும் உரிமை அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. சந்திரசேகரனுக்கு வாக்களித்திருந்தால் அவர் ஒரு பைசா திருடியிருக்க மாட்டார் என்று பொதுமக்களே வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.
அப்படியானால் அடுத்த தேர்தலில் நீங்கள்தானே கட்டாயம் ஜெயிக்கப்போகிறீர்கள் என்றேன். ‘உயிரோடு இருந்தால்…’ என்று பதில் சொன்னார். ‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பதில் பெரும் விரக்தி ஏற்பட்டு, சென்ற டிசம்பரில் நெஞ்சு வலி வந்து, பை பாஸ் சர்ஜரி நடந்தது. இப்போதுதான் மீண்டு வந்துகொண்டிருக்கிறேன். இன்னும் முழுதாக வீட்டை விட்டு வெளியே போகத் தொடங்கவில்லை. மேலும் நான் எல்லோரையும் பகைத்துக்கொண்டுள்ளேன். யதார்த்தவாதி வெகுஜன விரோதி…’ என்றார்.
ஆனால் அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. மாற்றம் கட்டாயம் வரும் என்று நம்புகிறார். அந்த மாற்றம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்கிறார். ‘தினம் தினம் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு ஜனநாயகம் முதிர்ச்சி அடையக் குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும் என்கிறார்கள். நமக்குச் சுதந்தரம் வந்து 65 ஆண்டுகள்தானே ஆகியுள்ளன. தொடர்ந்து அடிமேல் அடி கொடுத்துக்கொண்டே இருப்போம். மாற்றம் வந்துவிடாதா என்ன?’ என்கிறார்.
மாற்றம் வந்துவிடாதா என்ன?
*
சந்திரசேகரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்
அனுப்புனர்: தா.கோ.சந்திரசேகரன்,
5/894, தாமரைக்குளம் கிராமம் அஞ்சல்
(வழி) எரும்பி, பள்ளிப்பட்டு வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம், 631302பெறுநர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம்
சென்னை 600009பொருள்: கல்வி அளிக்கும் முறையில் ஒரு புதிய அணுகுமுறை.
தமிழக அரசு கல்வி அளிப்பது பற்றி பல்வேறு முறைகளை ஆராய்ந்து அவைகளை செயல்படுத்தி வருகிறது. கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதிய வசதிகள் மாணவ/மாணவியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டும், நகரங்களில் உள்ள பள்ளிகளில் புதிய வசதிகள் மற்றும் மேலும் ஆசிரியர்கள்/ஆசிரியைகள் நியமனங்கள் செய்தும் முயற்சிகள் பல எடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைக்க விருப்பம் உள்ளவர்களாக இருப்பதால் அரசுக்கு வீண் செலவு தான் ஆகிறது.
இதற்கு மாற்றாக புதுடெல்லியில் உள்ள School Choice System முறையை தாங்கள் அறிந்து கொண்டு இது நல்ல முறையில் பயன்படுமா என யோசிக்கலாம். அவர்கள் கொடுத்துள்ள துண்டறிக்கையை இணைத்துள்ளோம். விலாசம் கீழ்க்கண்டவாறு:
School Choice Campaign
Centre for Civil Society
A-69, Hauz Khas, New Delhi 110 016
Ph: 011-2653 7456/ 26521882, Fax: 011-2651 2347Email: schoolchoice@ccs.in — www.schoolchoice.in
இம்முறையை சுருக்கமாக சொன்னால் அரசாங்கம் ஒவ்வொரு குழந்தையிடமும் படிப்புக்கு செலவழிக்கும் பணத்தை கணக்கிட்டு ஒரு வவுச்சர் கொடுத்து விடும். அக்குழந்தையின் பெற்றோரகள் அந்த வவுச்சரை தங்களுக்குப் பிடித்த பள்ளியில் கொடுத்துவிட்டு படிக்க வைப்பார்கள். சொல்லிக்கொடுப்பது சரியில்லை என்றால் வேறு பள்ளிக்கு அந்த வவுச்சரை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். எனவே பள்ளிக்கல்வியளிப்பதில், அதாவது அந்த வவுச்சரைப் பெறுவதில், (பணத்தைப் பெறுவதில்) போட்டிகள் உருவாகி நல்ல கல்வியளிக்கும் பள்ளிகள் பல உருவாகும். இம்முறை பல நாடுகளிலும் உள்ளது என அறிகிறோம்.
தாங்கள் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பள்ளிக்குழந்தைகள் சிறந்த கல்வி பெற வழிமுறைகள் செய்திட வேண்டுகிறோம்.
இங்கனம் உண்மையுடன்,
தா.கோ. சந்திரசேகரன்
12/10/2012

















