பெரியார் : ‘முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்!’

இந்து மதத்தையும் பார்ப்பனீயத்தையும் கடுமையாக விமரிசனம் செய்த இரு பெரும் தலைவர்களான அம்பேத்கரும் பெரியாரும் மத மாற்றம் குறித்து உரையாடியிருக்கிறார்கள். இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் மதத்தில் இருந்த வெளியேறி பௌத்தத்தைத் தழுவவேண்டும் என்றார் அம்பேத்கர். ஏன் பௌத்தம் என்பதற்கான காரணங்களை விரிவாகவும் ஆழமாகவும் அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார். மத மாற்றத்துக்கு அம்பேத்கர் முன்வைத்த காரணங்களை பெரியார் ஏற்றுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கரைப் போல் அவர் பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைக்கவில்லை. மாறாக, அவரது தேர்வு இஸ்லாமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மதங்களை நிராகரித்து பகுத்தறிவை முன்வைத்த பெரியார், இஸ்லாத்தை ஏன் தேர்வு செய்யவேண்டும்? இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே கிடையாதா? இஸ்லாத்தை பகுத்தறிவு ஏற்றுக்கொள்கிறதா?

இந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னால், மதம் குறித்த பெரியாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்ப்போம். மதம் பற்றிய பெரியாரின் பார்வை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. முதலாவதாக, அவர் பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாக்கினார். இரண்டாவதாக, புனித நூல்களை ஊடுருவிச் சென்று உண்மை கண்டறிந்து, தோலுரித்தார். மூன்றாவதாக, மதம் முன்வைக்கும் உலகப் பார்வையை விமரிசித்தார். மதத்தின் புனிதத்தன்மை பற்றியும், மதச் சார்பின்மை பற்றியும் கேள்விகள் எழுப்பினார். நான்காவதாக, மத நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம், கடவுள் நம்பிக்கை உருவான பின்புலத்தையும் சித்தாந்தத்தையும் விமரிசித்தார். ஐந்தாவதாக, சடங்குகளையும் விழாக்களையும் சம்பிரதாயங்களையும் சாடினார்.

அம்பேத்கரைப் போலவே பெரியாரும் இந்து மதக் கட்டுமானத்தையும் சாதியப் படிநிலை அமைப்பையும் நிராகரித்தார். பார்ப்பனீயம் எப்படி அதிகாரத்தைக் குவித்துக்கொண்டது என்பதையும் எப்படிப் பிற பிரிவினரை ஆதிக்கம் செய்கிறது என்பதையும் குறித்து அவர் விரிவாக உரையாடினார். இந்து மதம் வலுக்கட்டாயமாக தமிழர்கள்மீது திணிக்கப்பட்டது என்னும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்தார்.

ஆனால், இதற்கு தீர்வாக இந்து மதத்துக்கு மாற்றாக இன்னொரு மதத்தை நிறுவவேண்டிய அவசியத்தை பெரியார் ஏற்கவில்லை. அம்பேத்கர் பௌத்தத்தை ஏற்றது போல், வேறொரு மதத்தை ஏற்கவோ சிபாரிசு செய்யவோ பெரியார் துணியவில்லை. ஒரு கடவுளுக்கு மாற்றாக இன்னொரு கடவுள் முன்னிறுத்தப்படுவதை அவர் பகுத்தறிவு கொள்கை ஏற்கவில்லை. பெரியாரைப் பொருத்தவரை, மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே ஓட்டை படகில்தான் பயணம் செய்கிறார்கள். ஒரு மனிதனுக்கு நிச்சயம் மதம் தேவைதானா? மதத்தை மனிதனிடம் இருந்து பிரித்து எடுத்துவிட்டால் அங்கே ஓர் வெற்றிடம் உருவாகிவிடுமா? அதை எதைக் கொண்டாவது நிரப்பியாகவேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு பெரியாரின் பதில்:‘மதம் மனிதனுக்குத் தேவையற்றது!’ இது பெரியாரின் இறுதியும் உறுதியுமான முடிவு என்று கொள்ளலாம்.

சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான புதிதில் பெரியார் இஸ்லாத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தது உண்மை. செப்டெம்பர் 1929ல், கோயம்புத்தூர், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, இஸ்லாத்துக்குச் சாதகமான கருத்துகளை வெளிப்படுத்தினார். ‘நான் ஒரு முஸ்லிமாக இறக்கவே விரும்புகிறேன்!’ என்று அவர் பேசியதாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது.

அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறினார்கள். இது நடந்த சில தினங்களில், பெரியார் ஈரோட்டில் ஓர் உரை நிகழ்த்தினார். அக்டோபர் 10 குடி அரசு இதழில் இந்த உரை முழுமையாக இடம்பெற்றிருந்தது. இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்குச் சார்பாகவும் இஸ்லாத்துக்குச் சார்பாகவும் பெரியார் தன் கருத்துகளை இதில் முன்வைத்தார். நாம் பஞ்சமர்களாகவோ முஸ்லிம்களாகவோ மாறினாலொழிய நமக்கு நீதியும் மரியாதையும் முன்னேற்றமும் கிடைக்காது என்று பிறிதோரிடத்தில் பெரியார் பேசியிருக்கிறார். அவர் குறைந்த அளவு விமரிசனம் செய்த மதம் இஸ்லாம் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

ஆனால், இஸ்லாமிய மதமாற்றத்தை அவர் தொடர்ந்து முன்வைக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அதை ஓர் இயக்கமாகவும் போராட்டமாகவும் பிரசாரமாகவும் அவர் உருமாற்றவில்லை. ஆதி திராவிடர்கள் மதம் மாறவேண்டும் என்று 1935ல் அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது, பெரியார் அவருக்குத் தன் ஆதரவை வெளிப்படுத்தினார். ஆனால், அம்பேத்கரைப் போல் மதமாற்றத்தை முனைப்புடன் ஒருபோதும் அவர் மேற்கொண்டதில்லை.

1929ல் பெரியார் இஸ்லாத்துக்குச் சாதகமாக பேசியதற்கு வேறு வலுவான காரணங்கள் இருக்கின்றன. அவருடைய உரையிலேயே அதற்கான விடையைத் தேடுவோம். ‘சகோதரர்களே, 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு ‘மோட்ச லோகம்’ கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, ‘கடவுளோடு கலந்து விட்டார்கள்’ என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை… உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.’

எனில் ஏன் அவர்களுடைய மதமாற்றம் பெரியாரை மகிழ்ச்சியடைய வைத்தது? ‘இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் தொடர்கிறார். ‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.’

பெரியார் இந்து மதத்தை மட்டுமல்லாமல், கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் சேர்த்தே விமரிசித்து வந்தார். இருந்தும் இந்து மதத்துக்கு நிகராகப் பிற மதங்களை அவர் சாடாமல் இருந்ததற்குக் காரணம், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்து மதத்தின் தீமைகளை அதிகம் சந்திக்க நேர்ந்ததுதான். உயர்வு, தாழ்வு பிரிவினைகள் அனைத்து மதங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் இயங்கிவந்தாலும், அப்பட்டமான, மிருகத்தனமான தீண்டாமையை அதன் முழுவடிவில் இந்து மதத்தில் மட்டுமே அவர் கண்டார்.

இந்தக் காரணத்தால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவர் விடுதலையடைந்துவிட்டார் என்றே பெரியார் பொருள் கொண்டார். ‘இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவற்றை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனென்றால், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.’

பெரியார் தொடர்கிறார். ‘தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணிமானதுமான அபிப்பிராயம்.’

மதம் மாறுவதற்கு இந்து மதத்தின் தீண்டாமை ஒரு வலுவான காரணம் என்பதை ஏற்க முடிகிறது. ஆனால் எதற்காக இஸ்லாம்? கிறிஸ்தவத்துக்கோ பௌத்தத்துக்கோ சமணத்துக்கோ மாறலாமே? ‘சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையான நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?’

மிக மிக நேரடியான ஒரு விளக்கம் இது. தீண்டப்படாதவர்கள் அவ்வாறு நீடித்திருப்பதற்குக் காரணம் அவர்களுடைய பலவீனம். இந்த சுபாவத்தை மாற்றவேண்டுமானால் போராட்ட குணம் தேவை. பௌத்தமும் சமணமும் கிறிஸ்தவமும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிப்பவை. எனவே, பெரியார் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். அப்படியென்றால் பெரியார் இஸ்லாத்தை முரட்டுத்தனமான மதம் என்று சொல்கிறாரா? இல்லை.‘ஒடுக்க முடியாத, தாழ்மையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம்’ இஸ்லாத்தில் இருக்கிறது என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறார் பெரியார்.

அந்த வகையில், பெரியார் இஸ்லாமிய மதமாற்றத்தை முன்வைத்தார் என்பதைவிட தீண்டப்படாதவர்களின் ‘சுபாவ மனமாற்றத்தை’ முன்வைத்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்த 69 ஆதிதிராவிடர்களும் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பெரியாரின் முதல் மகிழ்ச்சி. இரண்டாவது மகிழ்ச்சி, ‘துணிச்சல் சுபாவத்தோடு’ அடையாளப்படுத்தப்படும் இஸ்லாத்தை அவர்கள் தழுவிக்கொண்டார்கள் என்பது. கட்டுரையின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான விடை இதுவே.

தன் உரையை நிறைவுசெய்யும்போது பெரியார் தன் கருத்தை கூர்மையாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறார். ‘அந்த சுபாவம் (தைரியம்) இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்து விட்டால் கூடப் போதுமானது என்றும் மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லலாம். ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை சுலபத்தில் அவர்களுக்கு அந்தச் சுபாவம் வராது என்பதோடு, மேல் வகுப்புக்காரர்கள் என்பவர்கள் சுலபத்தில் வரவிட மாட்டார்கள் என்றே சொல்லுவேன்.’

0

நந்தன்

தொடர்புடைய கட்டுரைகள் :

அம்பேத்கர் : ‘ஆகவே மதம் மாறுங்கள்!’
அம்பேத்கரா காந்தியா

அம்பேத்கர் : ‘ஆகவே, மதம் மாறுங்கள்!’

அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக இந்தப் போக்கு முன்பைக்காட்டிலும் அதிகரித்து வருகிறது. இது உண்மையிலேயே விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் அவர் தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த மதத்தைவிட்டு வெளியேறி வந்தாரோ, அந்த மதத்தின் அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகளை முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கர் முன்வைத்த மதமாற்றக் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வதுதான்.

‘மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது பொழுதுபோக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்… உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.’

பம்பாயில் 1936ம் ஆண்டு, மே மாதம் 30,31 இரு தினங்களிலும் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை இப்படித்தான் தொடங்குகிறது. இந்த உரையின் நோக்கம் இரண்டு. முதலாவதாக, தீண்டத்தகாத மக்களிடம் அவர்கள் நித்தம் நித்தம் அனுபவித்து வரும் துன்பங்களுக்கான மூலக்காரணத்தை விளக்குவது. இரண்டாவது, அந்த மூலக்காரணத்தைத் தகர்த்து எறிவதற்கான வழிமுறையைச் சொல்லித் தருவது.

இந்து மதம், அதைக் கடைபிடிக்கும் அனைவருக்கும் பொதுவானது என்றால், இந்துக்களில் ஒரு பிரிவினர் ஏன் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் மேல்சாதி இந்துக்களால் ஆளப்படுகிறார்கள்? மேல், கீழ் என்னும் பிரிவுகள் எப்படி, ஏன் தோன்றின? கால ஓட்டத்தில், இந்நிலைகள் ஏன் மாறாமல் அப்படியே நீடிக்கின்றன?

‘சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதம் என்றுமே மாற்றமுடியாத ஒன்றாகும். காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்கமுடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.’

ஒரு போராட்டத்தைச் சந்திக்க மூன்று பலம் தேவை. மனித ஆற்றல், நிதிபலம் மற்றும் அறிவு வலிமை. பம்பாய் மாகாணத்தில் தீண்டத்தகாதவர்கள் மொத்த மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கே இருந்த நிலையில், அவர்கள் ஓரணியாகத் திரண்டு, அதாவது மனித ஆற்றலைக் கொண்டு போராட முடியாது. பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையில் அவர்களால் நிதிபலத்தையும் திரட்டமுடியாது. நீதிமன்றங்களை அணுகி, வாதாடி நீதி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. ‘ஆயிரக்கணக்கான தீண்டத்தகாதவர்கள், தங்கள்மீது இழைக்கப்படும் அவமானங்களைச் சகித்துக் கொள்பவர்களாகவும் சாதி இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறையையும் துளியளவும் எதிர்த்துப் பேச முடியாத நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.’

மூன்றாவது பலத்தையும் அம்பேத்கர் பரிசீலித்தார். ‘அறிவாற்றலைப் பொருத்தவரை, நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சாதி இந்துக்களின் இழிவையும் கொடுமைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத அளவுக்கு, வன்கொடுமைகளால் ஏற்பட்ட சகிப்புத்தன்மை, அவர்களிடையே கிளர்ந்தெழும் போர்க்குணத்தை மழுங்கடித்துவிட்டது. தன்னம்பிக்கை, உற்சாகம், இலக்கு முற்றிலுமாக உங்களிடமிருந்து மறைந்துவிட்டது. நீங்கள் எல்லாம் ஆதரவற்றோராக, வலிமையிழந்து காணப்படுகின்றீர்கள்.’

மூன்று அத்தியாவசிய பலங்களையும் இழந்துவிட்ட நிலையில் தீண்டத்தகாதவர்களின் கதி என்ன? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், அம்பேத்கர் இன்னொரு கேள்வியை எழுப்புகிறார். தீண்டத்தகாத இந்துக்கள்சிறுபான்மையினராகவும் பலமற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், மகர், மாங் மக்களைப் போலவே முஸ்லிம்களும்தானே சிறுபான்மையினர்? அவர்கள் ஏன் இந்துக்களால் தாக்கப்படுவதில்லை?‘ஒரு கிராமத்தில் இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தாலும், அவர்களைத் தாக்க எவரும் துணிவதில்லை. ஆனால், உங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், மொத்த கிராமமே உங்கள்மீது வன்மையான தாக்குதலைத் தொடுக்கிறதே. ஏன் இந்த நிலை?’

இந்துக்களுக்குத் துணிவில்லை என்றார் அம்பேத்கர். ‘இந்த இரு முஸ்லிம் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன், அச்சமற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். ஏனென்றால், இந்துக்கள் அவர்களைத் தாக்கினால், பஞ்சாப் முதல் சென்னைவரை வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எப்பாடுபட்டாவது தங்களைப் பாதுகாக்க அணிதிரளுவார்கள் என்று உறுதியாக அவர்கள் நம்புகின்றனர். ஆனால், உங்கள்மீது தாக்குதல் நடத்தினால் உங்களைப் பாதுகாக்க எவரும் முன்வர மாட்டார்கள் என்பதில் தெளிவாக உள்ளனர்.’

இந்த இடத்தில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை நினைவுபடுத்திக்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் தலித் மக்கள் சாதி இந்துக்களால் தாக்கப்படுவது ஏன்? அவர்களைக் காக்க ஏன் யாரும் முன்வரவில்லை? ‘காரணம், தாசில்தாரும் போலிசும் சாதி இந்துக்களாகவே இருக்கின்றனர். இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே பிரச்னை என்றால், அவர்கள் தாங்கள் பணிசெய்யும் வேலைக்கு நேர்மையாக இருப்பதைவிட, தங்கள் சாதிக்கே விசுவாசமாக இருப்பர். நீங்கள் ஆதரவற்று இருப்பதால்தான், இந்துக்கள் உங்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். உங்களைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.’

இதிலிருந்து தப்பவேண்டுமானால், பலமற்றவர்கள் ‘வெளியில் இருந்து பலத்தைப் பெற்றாகவேண்டும்’ என்கிறார் அம்பேத்கர். ‘வேறு சமூகத்துடன் நீங்கள் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளாமல், வேறு மதங்களில் நீங்கள் உங்களை இணைத்துக்கொள்ளாமல், வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெறமுடியாது… உங்களுக்கு வலிமை இல்லாதவரை, நீங்களும் உங்கள் எதிர்காலத் தலைமுறையும் இதே போன்ற துன்பகரமான வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’

அம்பேத்கர் தொடர்கிறார். ‘இந்துக்களின் பார்வையில் மட்டும் நாம் கீழான மக்கள் அல்ல. இந்துக்கள் நம்மை நடத்தும் நிலை, நம்மை இந்தியா முழுவதும் கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையில் இருந்து நாம் விடுபடவேண்டும் எனில், இந்தக் கசடுகளை அகற்றி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது என்ன? இந்து மதத்தாலும் இந்து சமூகத்தாலும் பூட்டப்பட்டுள்ள இரும்பு வேலிகளைத் தகர்த்தெறிய வேண்டும்.’

ஏன் தகர்க்கவேண்டும்? சீர்திருத்த முடியாதா? தீண்டாமையை அகற்றிவிட்டு, சாதிகளை ஒழித்துவிட்டு, ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்துவிட்டு, இந்து மதத்திலேயே தொடர்ந்து நீடிக்கமுடியாதா? காந்தி சொன்னது போல் சாதி இந்துக்களின் மனத்தை மாற்றமுடியாதா? ‘இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்தரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்தரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்கவேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்யவேண்டும்?… நம் நோக்கம் தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.’

ஒரு பேச்சுக்கு, இந்து மதத்தில் இருந்துகொண்டே அதனைச் சீர்திருத்துவோம் என்று வைத்துக்கொண்டாலும், முதலில் சதுர்வர்ணத்தை ஒழித்தாகவேண்டும். பிறகு, பார்ப்பன மதம் வேரறுக்கப்படவேண்டும். இதெல்லாம் சாத்தியமா? ‘இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா?’

எந்த மதத்துக்கு மாறுவது? கிறிஸ்தவமா? இஸ்லாமா? அவற்றில் சாதிகள் இல்லையா? ஏற்றத்தாழ்வுகள் இல்லையா? ‘இருக்கிறது என்றாலும் அது இந்துக்களிடையே கடைபிடிக்கப்படுவது போலுள்ளது என்று சொல்வது சிறுபிள்ளைத் தனமானது… இந்துக்களின் சாதி அமைப்புக்கு மத அங்கீகாரம் உள்ளது. பிற மதங்களில் இருக்கும் சாதிகளுக்கு அந்த மதங்களின் அங்கீகாரம் கிடையாது. மதத்தை ஒழிக்காமல் இந்துக்களால் சாதியை ஒழிக்கவே முடியாது. சாதியை ஒழிக்க முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் மதத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மாறாக, சாதிகளை ஒழிக்க இவர்களின் மதங்களே பெரிதும் துணை நிற்கும்.’

தன் உரையை அம்பேத்கர் இப்படி நிறைவு செய்கிறார். ‘இந்து மதம் என் மனசாட்சியை ஈர்ப்பதாக இல்லை. என்னுடைய சுயமரியாதைக்கு மதிப்பளிப்பதாக இல்லை… மனிதனுக்காகத்தான் மதம். மதத்துக்காக மனிதன் என்பதல்ல. மனிதத் தன்மை கிடைக்க வேண்டும் எனில், மதம் மாறுங்கள். ஒருங்கிணைவதற்கு மதம் மாறுங்கள். வலிமையாகத் திகழ மதம் மாறுங்கள். சமத்துவத்தை அடைய மதம் மாறுங்கள். விடுதலைக்காக மதம் மாறுங்கள். வீட்டில் மனமகிழ்வுடன் இருக்க மதம் மாறுங்கள்… உங்களுக்கு எது நல்லது என்று சொல்வது என் கடமையாகும். என் கடமையை நான் செய்யவேண்டும். இப்பொழுது அதை நான் செய்து விட்டேன். இனி, முடிவெடுத்து கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு.’

0

நந்தன்

வெறும் கை

சில நாள்களுக்கு முன்பு என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். அவரது ஒரு கண் மட்டும் பால்வெள்ளையாய் இருந்தது. கராத்தே பயிற்சியின்போது ஏற்பட்டது என்று புன்னகைத்தார். எனக்கு சற்றுச் சந்தேகமாக இருந்தது. அதைச் செய்தவன் என்று தனுஷ் மாதிரி ஒரு பையனைக் காட்டியபோது இன்னும் சந்தேகமாக இருந்தது. குறைந்தது சத்யராஜ் மாதிரியாவது எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கராத்தே பயில தனுஷ் மாதிரி இருந்தால்கூட போதும்தான்.

எல்லாருக்கும் அறிமுகமானது போல் எனக்கும் கராத்தே சினிமாவில்தான் அறிமுகமானது. பாளையம்கோட்டை கலைவாணி தியேட்டரில் ஜெயபாரதி முண்டுடுத்தியும் இல்லாமலும் குளிக்கும் ரதி நிர்வேதங்களுக்கு நடுவே அவ்வப்போது வெளியிடும் சாவலின் வெர்சஸ் லாமா வகைப் படங்களில் அறிமுகமானதுதான் கராத்தே மற்றும் அதைப் போன்ற போர்க் கலைகள். நான் காலையில் ரதி நிர்வேதம் பார்த்துவிட்டு மதியம் ரோட்டோரக் கடையில் காய்ந்த புரோட்டா சாப்பிட்டுவிட்டு புரூஸ் லீயையும் பார்ப்பேன்.

புரூஸ் லீ நடித்த என்டர் ட்ராகன், பிஸ்ட் ஒப் ப்யூரி போன்ற படங்கள்தான் உலகமெங்கும் போர்க் கலைகள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தின என்று தைரியமாகச் சொல்லலாம். ஆனால் 1930களிலேயே அதைப் பற்றி ஹாலிவுட்டில் படங்கள் வரத் துவங்கிவிட்டன என்றாலும், போர்க் கலைகள் என்று பொதுவாகச் சொன்னாலும் அவை பெரும்பாலும் சீனப் போர்க் கலைகளே. அதுவரை அவை பிரபலம் ஆகாததற்கு வேறு காரணங்களும் இருந்தன.

சீனப் போர்க் கலைகளை, ஆசியர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சொல்லித் தருவது தடுக்கப் பட்டிருந்தது. புரூஸ் லீக்கே அவர் அம்மா பாதி வெள்ளையர் என்பதால் சொல்லித் தரத் தயங்கினார்கள். புரூஸ் லீ அமெரிக்காவில் மற்ற வெள்ளையர்களுக்குச் சொல்லித் தந்ததையும் கடுமையாக எதிர்த்தார்கள். ஒரு சவால் போட்டியில் அவர் வென்ற பிறகே அவரை அனுமதித்தார்கள் என்பார்கள். இது தவிர சீனாவில் புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் பழமையான எல்லா சீனக் கலைகளையும் அவர்கள் வெறுத்தார்கள். அதன் பிறகு மனதை மாற்றிக் கொண்டு அவற்றை வளர்க்கவும் பரப்பவும் முயற்சி எடுத்தார்கள்.

பிஸ்ட் ஒப் ப்யூரி 1971ல் வந்தது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ‘வாட்டர்கேட் புகழ்’ நிக்சன் சீனாவுக்கு விஜயம் செய்தார். அவருடன் பெரிய பத்திரிகையாளர் மற்றும் அறிஞர் கூட்டமும் சென்றது. அங்கு அவர்களுக்கு சீனத்தின் பாரம்பரியப் பெருமைகள் அணிவகுத்துக் காட்டப்பட்டன. எங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒன்றுமே இல்லை, இன்னும் துவங்கக்கூட இல்லை என்பது சூசகம் செய்யப்பட்டது. மயக்க மருந்தே இல்லாமல் அக்கு பங்க்சர் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்து காட்டப்பட்டது. நிக்சனின் ஒற்றைத் தலைவலியைக்கூட சரி பண்ணியதாகச் சொல்லப் படுகிறது.

நிக்சன் என்றால் நமக்கு ஊழல்தான் நினைவு வருகிறது. ஆனால் இந்த நபர்தான் வியட்நாம் யுத்தத்தை நிறுத்தியவர். சோவியத்துடன் நட்புறவுக்கு முயற்சி செய்தவர். சீனத்துக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி. ரொம்ப மோசமில்லை. ஆள் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். அமெரிக்காவை சீனாவிற்குத் திறந்துவைத்தார். இந்த சீனப் பயணத்தின் மூலமாக சீனாவும் ஓரளவாவது மேற்கிற்கு திறக்கப்பட்டது. ஏற்கெனவே ஜப்பானியத் தொடர்புகள் மூலமாக சீனக் கலைகள்மேல் சற்று ஆர்வம் இருந்தது தீயைப் போல் பற்றிக் கொண்டுவிட்டது. இதற்கு நல்லதொரு வாசலாக இங்கிலாந்தின் கையில் அப்போது இருந்த ஹாங்காங்கில் மேற்கும் கிழக்கும் கைக் குலுக்கிக்கொண்டன. அங்கிருந்து அமெரிக்காவிற்கு சீன உணவிலிருந்து சீனப் படங்கள், சீனக் கலைகள், சீன மருத்துவம் என எல்லாம் ஏற்றுமதியாகின. அவை பெரும் வரவேற்பையும் பெற்றன.

1973 -புரூஸ் லீயின் என்டர் தி டிராகன் வந்தது அவ்வளவுதான் அமெரிக்காவே புரூஸ் லீ ஜுரத்தில் எரிந்தது. நாடெங்கும் போர்க் கலைகளைப் பயிற்றுவிப்பவர்கள் தோன்றி அமெரிக்க மக்களை பெண்டு நிமிர்த்தினார்கள். போர்க் கலைப் படங்கள் வரிசையாக வந்து வசூலை அள்ளிக் குவித்தன. அது இன்றைக்கு அங்கு மில்லியன்கள் புழங்கும் பெரியதொரு வணிகம்.. அங்கு புரூஸ் லீ ஒரு சிறிய தேவன் போல் ஆனார். அவரைப் பற்றி நிறைய புராணங்கள் புனையப்பட்டன. அவரது மரணம்கூட ஒரு பெரிய காவியத்தின் முடிவு போலவே விவரிக்கப் படுகிறது.

இந்தியாவுக்கும் இந்தப் படங்கள் வந்தன. ஏற்கெனவே கர்லாக் கட்டை தூக்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அவற்றைக் கடாசிவிட்டு பைஜாமா அணிந்து கராத்தே கற்றுக் கொல்லப் போனார்கள். எழுத்துப் பிழை இல்லை. கொல்லதான். அமெரிக்க ராணுவம்கூட இவற்றைப் பயின்றது. அமெரிக்காவில் எந்த அலை அடித்தாலும் இந்தியாவிலும் ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகுதான் அதே அலை அடிக்கும். இப்போது இணையம் சாட்டலைட் எல்லாம் வந்துவிட்டதால் இந்த இடைவெளி குறைந்திருக்கிறது. ஆனால் எந்த ஒரு போக்கையும் ஆரம்பிக்கிறவர்கள் அவர்கள்தான். அவர்கள் பிரான்சிலிருந்து இவற்றைக் கடன் வாங்குகிறார்கள் என்றொரு கிசுகிசுப்பு உண்டு. உண்மையா தெரியவில்லை.

இந்தியாவிலும் கராத்தே அலை புரூஸ் லீயோடு வந்தது. ஒரு தலைமுறையே கராத்தே கற்றுக் கொள்ள முயற்சித்தது – என்னையும் சேர்த்து. போர்க் கலைகளில் பல வகைகள் உண்டு. கராத்தே அதில் ஒரு வகைதான். ஆனால் எல்லாவற்றையுமே கராத்தே என்றே நாம் புரிந்துவைத்திருந்தோம். உண்மையில் ப்ரூஸ் லீ போட்டதே கராத்தே கிடையாது. அவர் அதன் பெயர் ஜி க்வண்டோ என்று சொல்லிக் கொண்டார். வூ சு, குங் பூ என்று பல வகைப் போர்க் கலைகளின் அவியல் இது.

போர்க் கலைகளில் அகிடோ, ஜூடோ, டேக் வண்டோ, குங் பூ, தை சி, சம்போ நிஞ்சா, கராத்தே கெஞ்சு, கெண்டோ எனப் பல வகைகள் உண்டு. பெரும்பாலும் ஆயுதமற்ற சண்டை முறைகள். எனினும் நிஞ்சா, களரி போன்ற ஆயுதச் சண்டை முறைகளும் உண்டு. அதேபோல் சீனக் கலைகள் மட்டுமல்லாது ஜப்பானியக் கொரிய பிரசிலிய இந்திய மரபுக் கலைகள் எனத் தனித்தனியாக உண்டு. கராத்தே ஜப்பானியர்களின் கலை. களரி நம்முடையது.

உண்மையில் மொத்த சமாச்சாரமும் இந்தியாவிலிருந்து போனது என்றொரு கதை உண்டு. அதுவும் தமிழ் நாட்டிலிருந்து போனதாகச் சொல்கிறார்கள்.

போதி தர்மர் என்ற காஞ்சிபுரத் துறவி சீனத்துக்கு மதத்தைப் பரப்பப் போனபோது, அங்கிருந்த பௌத்தத் துறவிகள் எல்லாம் உட்கார்ந்தே தியானம் செய்து செய்து, வட காற்றில் அலையும் சருகுகள் போலிருப்பதைக் கண்டு, ஒரு உடற்பயிற்சியாகவும், அப்போது சீனா முழுக்க சுற்றிக் கொண்டிருந்த கொள்ளைக்கார பிரபுக்களிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கலையாகவும் இந்தப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார் என்கிறார்கள். இதற்கு நம் பக்கமிருந்து ஓர் ஆதாரமும் கிடையாது. எல்லாம் சீனர்கள் எழுதியதே.

தமிழ்நாட்டில் பௌத்தம் எந்த அளவில் இருந்தது என்பதையே நாம் சரியாகப் பதிவு செய்யவில்லை. தலைவன் தலைவி ஊடல், களவு கற்பு பசலை உசிலை என்றிருந்துவிட்டோம். போதிதர்மர் ஒரு பல்லவ குல இளவரசன் என்றும் போர்க் கலைப் பிராமணர் என்றும் இரு வேறு அனுமானங்கள் உலவுகின்றன. அந்தச் சமயத்தில் சேர தேசத்துப் பிராமணர்கள், களரி வர்மம் போன்ற அடிமுறைகளில் சிறந்து விளங்கினார்கள். பொன்னியின் செல்வனில் ஆதித்திய கரிகாலனைக் கொன்றதாக வரும் ரவிதாசன் கிரமவித்தன் நினைவிருக்கிறதா? அவன் ஒரு கேரள நம்பூதிரியே. காந்தளூர்ச் சாலை என்று அவர்களது படைப் பயிற்சி நிலையத்தை, ராஜ ராஜ சோழன் பின்னாளில் அழித்தான். ஆகவே போதிதர்மர் பௌத்தத்துக்கு மாறிய ஒரு பிராமணனாக இருந்ததற்கு வாய்ப்புகள் உண்டு.

இந்த போதிதர்மர் மஞ்சள் ஆற்றை ஒரு மூங்கில் கீற்று மீது நின்றுகொண்டே கடந்து ஷாவலின் என்ற இடத்துக்குப் போய் ஒரு மடத்தை நிர்ணயித்து அங்கு காந்தளூர்ச் சாலை போலவே ஒரு பெரிய போர்க் கலைப் பயிற்சி நிலையத்தை நிறுவினார். அங்கு அவருக்கு இன்னமும் ஒரு கோயில் இருக்கிறது. அங்கு இன்னமும் அவரது வழியென்று சொல்லும் சீடப் பரம்பரை இருக்கிறது. அடிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.

அங்கு மட்டுமல்ல, ஜப்பானிலும் போதி தர்மர் உண்டு. அங்கு போதி தர்மர் தருமா என்றழைக்கப்படுகிறார். நம்மூர் செட்டியார் பொம்மைகளைப் போல் உருண்டையான அவரது சிகப்புப் பொம்மைகள் அங்கு லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். வருடத்தில் ஒருநாள் இப்படி சேர்ந்த போதிதர்மர் பொம்மைகளை ஓர் இடத்தில் போகி போல் குவித்து எரித்துவிட்டு புது பொம்மைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.

வேறு அடிமுறைகளும் இந்தியாவில் இருந்தாலும் கராத்தேதான் இந்தியாவில் பிரபலம். அதற்கான தேசிய அளவு போட்டிகள் உண்டு. சிறு நகரங்களில்கூடப் பயிற்சி தருபவர்கள் உண்டு. சிறு வயதிலிருந்தே வருடக் கணக்கில் பயில்பவர்கள் உண்டு. வெள்ளை பெல்ட், மஞ்சள் பெல்ட் என்று ஆரம்பித்து கருப்பு பெல்ட் வரை பல நிலைகள் உண்டு. பெண்களும் பயிலும் போர்க் கலை இது. தெளிவாக வரையறுக்கப்பட்ட பயிற்சி முறைகளும் மூச்சுப் பயிற்சிகளும் உணவு வரையறைகளும் மனப் பயிற்சிகளும் உண்டு.

கராத்தே என்றால் வெறும் கை என்று அர்த்தம். வெறும்கைப்போர் அது. வெறுமனே தாக்குவது மட்டுமல்ல. தாக்கும் முன்பு அவர்கள் செய்யும் கட்டாக்கள் எனப்படும் அசைவுகள் ஒரு நடனத்தைப் போலவே இருக்கும். என் நண்பர் -அவர் ஒரு கருப்பு பெல்ட் மாஸ்டர்-அதை ஒரு வாழ்க்கை முறை என்பார்.

பொதுவாகவே இந்தக் கலைகளில் பௌத்தத்தின் செல்வாக்கு உண்டு. தத்துவ நோக்கு உண்டு. புரூஸ் லீக்கு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியின் தத்துவத்தில் எல்லாம் பரிச்சயம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என் நண்பர் ஒரு கராத்தே மாஸ்டர் எதற்கும் பதற்றப் படக் கூடாது என்பார். நான் இயல்பிலேயே அதிகம் படபடப்பவன். ஆகவே அதற்கு ஒரு சிகிச்சையாகவே அவர் என்னையும் கராத்தே கற்றுக் கொள்ளச் சொன்னார். ஆசை யாரை விட்டது? ஆனால் நான் முட்டைகூட சாப்பிட மாட்டேனே என்றேன். அது ஒரு விசயமில்லை என்றார் அவர். அவரும் ஒரு சைவ உணவாளர்தான் என்று தெரிந்ததும் எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது.

முதலில் ஒரு தயாரிப்பாக அவர் இரு சிறிய மணல் மூட்டைகளை என்னிடம் கொடுத்து கையில் கட்டிக் கொண்டு அலையும்படிச் சொன்னார். அது என் கைகளைப் பலப் படுத்த உதவும் என்று சொன்னார். நான் அன்று முழுவதும் அந்த மூட்டைகளோடு திரிந்தேன். அன்றிரவு அந்த மூட்டைகளோடுதான் தூங்கினேன். அன்றிரவு கனவில் சக் நாரிசை (chuck norris – புரூஸ் லீயின் சீடர், நடிகர்) மயிர்க் கூச்செறியும் அலறல்களோடு எகிறி எகிறி மிதித்தேன்.

மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது எனது இரண்டு தோள்பட்டைகளையும் தூக்க இயலவில்லை. கடுமையான வலி. இரண்டும் வீங்கி விட்டன. டாக்டரிடம் செல்லவேண்டியதாயிற்று. அதன்பிறகு நான் ஒருபோதும் கராத்தே கற்றுக் கொள்வது பற்றிச் சிந்திக்கவே இல்லை. ஜாக்கி சானின் கராத்தே கிட் படம் பார்த்தபோதுகூட.

மீண்டும் ஓர் இறைத்தூதர்

அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர். அவருக்கே அது தெரியாது. ஆனால் சிறுவயதிலிருந்தே அதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவர் இறைத்தேடலுடன் வளர்ந்தார். தனிமையில் தீவிரமாக பிரார்த்தனை செய்தார். ‘என் இறைவா எனக்கு வழி காட்டு.’ அவருக்கு 20 வயது. அவரது தனிமையில் அவர் முன்னால் ஒரு பிரகாசமான உருவம் தோன்றியது. வெண் பிரகாசத்தில் வெண்மைக்கே வெண்மையான ஓர் உருவம் அவர் பெயர் சொல்லி அழைத்தது. அவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர். பின்னர்தான் ஆரம்பமாகின சோதனைகளும் சாகசங்களும்.

மத்திய கிழக்குக்கு அப்பால் எந்தப் பாலைவனத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கக்கூடிய நிகழ்வுதான் இது. ஆனால் இது நிகழ்ந்தது நியூயார்க்கில். 19ம் நூற்றாண்டில். ஜோஸப் ஸ்மித் இறை ஆர்வம்கொண்ட இளைஞர் மட்டுமல்ல, ‘புதைந்த பொக்கிஷங்களை அற்புதத்தன்மைகொண்ட கற்கள் மூலம் அடையாளம் காணமுடியும்’ எனும் நம்பிக்கையுடன் இயங்கிய பொக்கிஷ வேட்டையாளர். இப்போது அவர்முன்னால் நின்ற அந்த வெண்ணொளியில் பிரகாசித்த வெண் உருவமும் அதைத்தான் சொன்னது. பூமிக்கடியில் இருக்கும் ஒரு பொக்கிஷத்தின் இருப்பிடத்தை. தங்கப் பக்கங்களில் மர்மமான மொழியில் செதுக்கப்பட்ட இறைச்செய்தி. “ஆனால் நீ அதை எடுத்து உருக்கி அதை லௌகீகமாக பயன்படுத்தக் கூடாது.”

அந்த வெண்ணுருவம் சாதாரண இறைத்தூதன் அல்ல. பொதுவாக ஆபிரகாமிய இறைவாக்கினரின் ஐதீகங்களில் வரும் கபிரியேல் அல்ல. ஒரு நல்ல இனத்தின் இறுதிப் பெருமகன் அவன். இஸ்ரவேலர்களில் பன்னிரெண்டு குழுவினர் உண்டு. அதில் இருவர் அமெரிக்காவுக்கு வந்தார்களாம். அதில் ஆபிரகாமிலிருந்து தோன்றியவர்கள் நல்லவர்கள். மற்றொரு குழுவினரோ தங்கள் பாதையில் தவறிவிட்டவர்கள். வழி தவறியவர்களிடம் நல்லோர் தோற்றனர். இறுதி நல்லவன் இறைச்செய்தியை – எகிப்திய மொழியும் எபிரேயமும் கலந்த ஒரு மொழியில் – தங்க பாளங்களில் செதுக்கி வைத்தான். எங்கே? இன்று நியூ யார்க் இருக்கும் இடத்தில் எங்கோ ஓரிடத்தில். ‘இறைவனுக்கு பிரியமான ஸ்மித் உனக்கு அதை காட்டுவேன்… ஆனால் நீ அதை எடுத்து உருக்கி லௌதீகமாக பயன்படுத்தக் கூடாது.” இப்படிச் சொல்லி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி ஸ்மித்தை அழைத்து சென்று பிரார்த்திக்க வைத்த அந்த உருவம் இப்படியே நான்கு ஆண்டுகள் ஸ்மித்தை பரிசீலனைக்கு ஆளாக்கி இறுதியில் அந்த தங்கப் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஸ்மித்திடம் அளித்தது.

அரசல்புரசலாக விஷயம் வெளிவரலாயிற்று. ஆண்டவன் அருளால் கிடைத்த ஓர் உபகரணத்துடன் ஸ்மித் அதை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்துச் சீடர்கள் உடனிருக்க அந்தத் தங்கப் பக்கங்கள்மீது அவற்றின் ஒளியை சகிக்க ஒரு துணியால் போர்த்தியபடி ஸ்மித் மொழிபெயர்ப்பார். துணி மூடியிருந்தாலும் அந்த எழுத்துகள் ஸ்மித்துக்குத் தெரியும். இன்னும் சொன்னால் அதன் பிரகாசத்தை தன் தொப்பியால் மூடியபடி ஸ்மித் அதை மொழிபெயர்த்தார்.

தங்கப்பாளங்கள், அதில் மர்ம எழுத்துகள், பூமிக்கடியில் இருந்து கிடைத்தது. இதெல்லாம் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியபோது, கொடுத்த அந்த உருவமே அந்தத் தங்கப் பக்கங்கள்கொண்ட புத்தகத்தை எடுத்துக்கொண்டு மறைந்தது. 1830ல் மோர்மோன்களின் இறைநூல் வெளிவந்தது. உடனிருந்த சீடர்கள் தாங்கள் இவற்றை கண்டதாக சத்தியம் செய்தார்கள். “எத்தனை செய்திகள்! எந்த விதத்திலும் முரண்பாடில்லாத ஆற்றோட்டமான கருத்துகள். இதெல்லாம் மானுட சாத்தியமற்றவை. ‘மொழி பெயர்ப்பை’ ஆண்டவரே ஸ்மித்துக்கு காட்டினார். எனவே அவர் புத்தகத்தின் தங்கப் பக்கங்களைத் திருப்பவேண்டிய அவசியம்கூட இருக்கவில்லை. சில நேரங்களில் எழுதிக் கொண்டிருப்பவருக்கு ஓய்வுக்காக இடைவெளிவிட்டு, பிறகு தொடங்கும்போது ஸ்மித் விட்டஇடத்திலிருந்து தங்குத்தடையின்றி ஆரம்பிப்பார். இதையெல்லாம் பார்க்கும்போதே தெரியவில்லையா, இது ஓர் இறைநூல் என்று? இதைப் போல ஒரு நூலை நீங்கள் உருவாக்க முடியுமா?” நம்பிக்கையாளர்கள் சவால் விட்டார்கள். விசுவாசிகளில் முக்கியமான பல பிரமுகர்கள்கூட இருந்தார்கள்.

சரி இந்த இறை நூல் என்னதான் சொல்கிறது?

கிமு 2600ல் அமெரிக்காவுக்கு ஜாரெட் என்பவனும் அவனது சந்ததிகளும் வந்து ஒரு பண்பாட்டை உருவாக்கினர். இவர்கள் விவிலியத்தின் பாபேல் கோபுரம் சிதைக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதர்களுக்கு மொழிக்குழப்பம் ஏற்பட்ட காலத்தில் இவர்கள் ஆண்டவரிடம் மன்றாடி தாங்கள்மட்டும் உலகத்தின் ஆதிமொழியை பேசுபவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஏசு குறித்த முன்னறிவிப்புகளை அறிவார்கள். ஆனால் அவர்கள் எப்படியோ சிதைந்து போனார்கள். அவர்களுக்கு பிறகு கிமு 600ம் ஆண்டு ஜெருசலேமிலிருந்து லெகி என்கிற இறைவாக்கினனும் அவனுடைய மகனான நெபி என்கிற இறைவாக்கினனும் அமெரிக்கா வந்தார்கள். ஏனெனில் அமெரிக்கா இறைவனால் இவர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம். ஆனால் விரைவில் இம்மக்கள் பல்கிப் பெருகி இரு கிளைகளாகப் பிரிந்தனர். வெண்ணிற தோல் கொண்ட நல்லவர்களான நெபைட் தேசத்தார் மற்றும் கறுநிற தோல் கொண்ட லமனைட்கள். லமனைட்கள் விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள். மோசமாகிவிட்டவர்கள். வழி தவறிவிட்டவர்கள். இவர்கள் கொடுமைக்காரர்கள். இவர்கள் நெபைட்களை அழித்தனர். அப்படி அழிக்கும்போது, ஏசுவின் விசுவாசிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு வருவார்கள் என்பதை கடைசி நெபைட் முன்னுணர்ந்தார். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி மூலம் உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்காகவும் லமனைட்களை மனம் மாற்றவும் அந்த கடைசி நெபைட் சத்தியங்களை தங்க நூலில் பொறித்துவிட்டு இறந்து போனார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இறைதூதனே ஸ்மித். இதை பின்னர் மேலுகத்திலிருந்து நெபைட் வானவர் வந்து ஸ்மித்துக்கு அறிவிக்க உண்மை உலகத்துக்கு தெரிந்தது.

இதுபோக அவ்வப்போது இறைவசனங்கள் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தப்படும். அதன்வழியே வரலாறு ஒழுக்க விதிகள் எல்லாம் வெளிப்படும். ஸ்மித் கவர்ச்சிகரமான இறைத்தூதர். கூட்டம் கும்மியது. விசுவாசம் ததும்பி வழிந்தது. நம்பிக்கையாளர்கள் பெருக ஆரம்பித்தனர். அரசாங்கம் எச்சரிக்கை அடைந்தது. ஸ்மித் ஓஹியோ சென்றார். ஆண்டவர் மிகவும் யதார்த்தவாத வெளிப்பாடுகளை ஸ்மித்துக்கு அளித்தார். “அத்தனைக்கும் ஆசைப்படு. செல்வத்தைச் சேர்த்துக்கொள்.” விசுவாசிகள் ஒரு அதீத ஆர்வத்தில் அவர்களே வங்கி ஆரம்பித்து காசடிக்க ஆரம்பித்தபோது உள்ளூர் மக்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் ஆண்டவரின் வெளிப்பாடு ஸ்மித்துக்கு பிரசன்னமானது. “மிஸோரிக்கு போ மகனே… அதுதான் என் தேர்ந்தெடுக்கப்பட்ட சீயான் பிரதேசம்.” மோர்மோன்கள் என அழைக்கப்படும் தனது கூட்டத்தாருடன் இறைவாக்கினர் ஸ்மித் மிஸோரிக்கு ஏகினார்.

இந்த மோர்மோன்கள் புதிய உலகை வாக்களித்தார்கள். இந்த உலகத்தில் சேவைசெய்ய பெண்களே மிக அதிகமாக முன்வந்தார்கள். மோர்மோன்களின் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. இப்போது ஆண்டவர் தமது இறைத்தூதருக்கு வெளிப்படுத்திய விசயம் அந்தச் சூழலுக்கு கனகச்சிதமாக இருந்தது. “விசுவாசிகளுக்கு பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது.” கணிசமான பெண்கள் இதை ஒரு நல்லாணையாக ஏற்றுக்கொண்டனர். பிறர் இதை தாம் இவ்வுலகில் சுமக்க வேண்டிய சிலுவையாக ஏற்றனர். மோர்மோனிய இறையியலில் பெண்களின் பங்கு முக்கியமானது – அவர்கள் பிள்ளைகள் பெற்று கொடுப்பது அவசியம். ஒருவன் எந்த அளவு அதிகமாக குழந்தைகள் பெறுகிறானோ அந்த அளவு சுவனத்தில் ஆண்டவர் அவனை மகிமைப்படுத்துவார். குழந்தைகள் பெறுவதும் வளர்ப்பதும் பெண்ணின் கடனே.

1838ல் ஆண்டவர் அடுத்தபடிக்கு ஸ்மித்தை அழைத்துச் சென்றார். ஸ்மித் ஒரு படையை ஏற்படுத்தினார். ‘வன்மத்தின் சம்மனசுகள்’ (avenging angels) என்கிற இப்படை மிஸோரியில் இருந்த மோர்மோன்களல்லாதவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது. பார்த்தார் மிஸோரி கவர்னர். ஏற்கனவே புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ஸ்மித்திடம் பரம எரிச்சலுடன் இருந்தனர். கவர்னர் லில்பர்ன் போக்ஸ் சொன்னார், “எதிரிகளை போல நினைத்து மோர்மோன்களை துடைத்தழியுங்கள்.” ‘எதிரிகளை போல’ என்கிற வார்த்தைகள் முக்கியமானவை. அதாவது சக வெள்ளைக்காரர்கள் என நினைக்காமல் பூர்விக அமெரிக்க குடிகளை துடைத்தழிப்பது போல் அழியுங்கள்.

தாக்குதல்கள் மறு தாக்குதல்கள் தற்காலிக சமாதானங்கள் மீண்டும் இருப்பக்கங்களிலும் ஒப்பந்த மீறல் குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என சில வாரங்கள் இருந்தன. இதன் உச்சகட்டம் மோர்மோன்களின் வரலாற்றில் ‘ஹான்ஸ் மில் படுகொலை’ என அழைக்கப்படுகிறது. மிஸோரி படைக்கும்பல் ஒரு மோர்மோன் கிராமத்தில் நுழைந்து வெறியாட்டம் போட்டது. அகப்பட்டவர்களை சிறுவர் வயதானவர் என வித்தியாசம் இல்லாமல் அழித்தது. பெண்கள் வெட்டவெளியில் சாகும் வரை வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். குறிப்பாக இது மோர்மோன்களின் பழிவாங்கும் உணர்ச்சியை வெகுவாகத் தூண்டியது. இப்போது மோர்மோன்கள் மிஸோரியிலிருந்து வெளியேறினர். ஆனால் பழிவாங்கத் தயாராகிய படை அணிகள் அவர்களில் பெருகியிருந்தனர். ஸ்மித் இதை சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். இலினாய்ஸ் ஆளுநரிடம் பேரம் பேசினார். “நாங்கள் அமைதியாக வாழ எங்களுக்கு சுதந்திர பிரதேசம் ஒன்றை வழங்குங்கள். நாங்கள் வன்முறை இல்லாத வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம்.” அமெரிக்கா அப்போது மேலும் குழப்பங்களை சந்திக்கும் நிலையில் இல்லை.

நவ்வோ அரசாங்கத்துக்குள் அரசாங்கம். மோர்மோன்களுக்கு கிடைத்த மண்ணுலகில் விண்ணரசு. ஆண்டவரின் தூதரால் ஏற்படுத்தப்பட்ட அரசு. ஆனால் அங்கு அனைவரும் மோர்மோன்கள் இல்லை. என்றாலும் என்ன? ஸ்மித்தான் அரசர். ஏறக்குறைய. உலகெங்கும் இருந்து விசுவாசிகள் குவிந்தார்கள். வெள்ளை இனத்தவர்கள் வெளி உலகில் செய்த தவறுகள் மன்னிக்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதால் குற்றவாளிகள் இந்நகரில் அடைக்கலம் புகுந்தார்கள். ஆண்டவரின் ராஜ்ஜியத்துக்கான படையை ஸ்மித் இங்கும் உருவாக்கினார். 4000 முழுநேர வீரர்கள். அன்றைய அமெரிக்க அரசின் காவல்படையே 8000 முழுநேர வீரர்கள் கொண்டதாகத்தான் அமைந்திருந்தது என்பதைக் கணக்கில் கொண்டால் ஸ்மித் எத்தனை முக்கிய ராணுவ-அரசியல்-மதத் தலைமையாக விளங்கினார் என்பது தெரியும். ஆக அன்றைய அமெரிக்காவின் ஆகப்பெரிய படையின் முழுமயான பெரும் தலைவர் ஸ்மித்தான்.

இப்போது ஸ்மித்தின் செயல்பாடுகள் நம்பிக்கையாளர்களின் அதிகார உள்வட்டத்திலேயே பிரச்சினைகளை உருவாக்க ஆரம்பித்தது. ஜோஸப் ஸ்மித்தின் வாழ்க்கை பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பதாலும், மோர்மோன்களுக்கு எல்லாவற்றையும் ஒழுங்காகப் பதிவு செய்ய வேண்டியதை ஒரு இறைக்கடமையாக ஸ்மித் விதித்ததாலும் எல்லாம் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு விஷயத்தில் மோர்மோன்களின் வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் பல எண்ணிக்கைகளை சொல்கிறார்கள். 27 என்கிறார் ஒருவர். 48 என்கிறார் இன்னொருவர். ஸ்டான்லி இவின்ஸ் என்பவரோ 84 என்கிறார். இறைவாக்கினர் ஜோஸப் ஸ்மித் தமது இறைப்பணியில் மணந்துகொண்ட மணவாட்டிகளின் எண்ணிக்கையே இவை.

ஏற்கெனவே பணக்கஷ்டத்திலிருந்த பெண்களுக்கும் குடும்பத்தில் கஷ்டப்பட்ட பெண்களுக்கும் உதவிகள் செய்து மறுக்க முடியாத சூழல்களை உண்டாக்கி தன் மனைவிகளாக்கியிருந்தார். இப்போது தன்னுடைய அதிகார குழுவில் இருந்தவர்களின் குடும்ப பெண்களையும், தனது மனைவிகளாக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார். அப்படி ஒரு பெண்ணின் கணவர் ஸ்மித்தின் படையில் தளபதி. ஏற்கனவே ஊரில் மோர்மோன்களல்லாதவர்கள் புகைந்து கொண்டிருந்தனர். உள்வட்ட ஆசாமிகள் இவர்களுடன் இணைந்தனர். உள்ளூர் பத்திரிகை கடுமையாக தாக்கி ஸ்மித்தை விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. ஸ்மித் இப்போது ஒரு பெரிய தவறை செய்தார். அந்த பத்திரிகையை தடை செய்தார். இது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மக்கள் வெகுண்டெழுந்தனர். இதுதான் சமயம் என்று அரசும் அவரை கைது செய்ய ஆயத்தமானது. ஸ்மித் ஆண்டவர் ஆணைப்படி அவரே கைதானார். ஒரு கும்பல் திரண்டு கைதாகியிருந்த இடத்தை தாக்கியது. அதன் பிறகு நடந்த துப்பாக்கி சண்டையின்போது, சிறைக்குள் கடத்திக்கொண்டு வரப்பட்டிருந்த, துப்பாக்கியால் தற்காப்புக்காக சுட்டு போரிட்ட, ஏசுவின் பின்னாளைய அப்போஸ்தல சபையின் நிறுவனரும் அமெரிக்காவின் சொந்த இறைவாக்கினருமான ஜோஸப் ஸ்மித் (1805-1844) குண்டுகள் துளைத்து மரித்துப் போனார்.

ஆண்டவருக்கான ரத்தசாட்சியாக மரித்தார் என்கிறார்கள் மோர்மோன்கள். இன்று அமெரிக்காவில் 50 இலட்சம் மோர்மோன்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும்கூட சபைகள் இருக்கின்றன. அன்பையும் அமைதியையும் போதிக்கும் இறைத்தூதர்களின் மார்க்கங்களில் மற்றொரு வளர்செடி.

– அரவிந்தன் நீலகண்டன்