யார் கொன்றது?

காட்சி – 1

வெள்ளைச் சீருடையில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு குழந்தை தட்டுத் தடுமாறி மேலுலகம் செல்கிறது. ராட்சஸ எருமை ஒன்று உட்கார்ந்திருப்பதுபோல் தூரத்தில் ஒரு அரண்மனை தென்படுகிறது. நீதி கேட்டுக் குழந்தை அதை நெருங்க நெருங்க அது பின்னோக்கி நகர்ந்து செல்வதுபோல் தெரிகிறது. சாலை மருங்கில் இருக்கும் பட்டுப்போன மரங்களின் கிளைகளில் இருந்து பனித்துளிகள், கண்ணீர்போல் வழிகின்றன. ஒருவழியாகக் குழந்தை அரண்மனையை நெருங்குகிறது. அரண்மனையின் மாடங்களில் அமர்ந்திருக்கும் கழுகுகள் அலறி அடித்தபடி பறக்கின்றன.

குழந்தை பிரமாண்ட அரண்மனைக்குள் நுழைகிறது. குழந்தை வருவது தெரிந்ததும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மரண தேவன் மாயமாக மறைகிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களில் பலர் மாயமாக மறைகின்றனர். சிலர் சிலையாக உறைந்துபோகின்றனர். குழந்தை தானாக பிரமாண்ட மாளிகையில் ஒவ்வொரு அறையாக ஒரு பதிலைத் தேடி அலைகிறது. குழந்தையின் ஷூ சத்தம் மட்டும் பூதாகாரமாக அரண்மனையின் சுவர்களில் பட்டு எதிரொலிக்கிறது.

ஒரு இடத்தில் மறைந்து இருக்கும் மரண தேவனைக் குழந்தை பார்த்துவிடுகிறது. குழந்தையை அப்போதுதான் பார்ப்பதுபோல் நடித்தபடி அருகில் வருகிறார் மரண தேவன்.

(பொய்யாகப் பதறியபடியே) மரண தேவன் : என்ன நடந்தது குழந்தை…

குழந்தை : நான் கொல்லப்பட்டுவிட்டேன்.

தேவன் வேதனையோடு முழங்காலிட்டு அமர்ந்து குழந்தையின் தலையைத் தடவிக் கொடுக்கிறார். கண்களை மூடிக்கொண்டு வருந்துகிறார்.

குழந்தை : பள்ளிக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தேன். வேனில் நான் அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே இருந்த துவாரத்தின் வழியே கீழே விழுந்து இறந்துவிட்டேன். நீதி கேட்டு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

(சிறிது நேரம் குழந்தையையே உற்றுப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டபடியே) மரண தேவன் : நீ சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறாய். கவலையைவிடு. உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவேன். (முழங்காலிட்டு அமர்ந்திருந்த மரண தேவன் எழுந்து நிற்கிறார்).

குழந்தை : அது தேவையில்லை. இனிமேல் இதுபோல் நடக்காமல் இருந்தால் அதுவே போதும்.

மரண தேவன் : சரி… உன்னை பூமிக்கு அனுப்புகிறேன். உன்னுடைய நிலைக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடி. செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டால் அந்த நிமிடமே உனக்கு திரும்பவும் உயிர் கிடைத்துவிடும். நீ பூமிக்குத் திரும்பிவிடலாம்.

குழந்தை : நிஜமாகவா?

மரண தேவன் : தெய்வங்கள் பொய் சொல்லாது குழந்தை.

குழந்தை : படுகொலைகள் மட்டும்தான் செய்யும் இல்லையா..?

மரண தேவன் (லேசாக அதிர்ந்து, பின் சுதாரித்துக் கொள்கிறார்) : சரி சரி நேரமாகிறது புறப்படு. உன்னை யாருக்கும் தெரியாமல் திருப்பி அனுப்பிவிட இன்னும் அவகாசம் இருக்கிறது.
குழந்தை: நீங்கள் என்னுடன் வரவில்லையா…

தெய்வம் : இல்லை நான் உன்னுடனே இருப்பேன். கவலைப்படாதே.

குழந்தை : சரி…

குழந்தை நம்பிக்கையுடன் புறப்படுகிறது.

குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒரே ஒரு நபர்… ஒரே ஒரு நபர் கிடைத்தால் போதும் என்று சொல்லியபடியே குழந்தை நடந்து செல்கிறது.

காட்சி – 2

இருண்ட வீடு. நடு அறையில் ஒருவர் கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறார். குழந்தை அவருக்கு அருகில் சென்று நிற்கிறது.

குழந்தை: என்னை ஏன் கொன்னீங்க அங்கிள்..? என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு விழிக்கிறார்.

சுற்றிலும் இருள் படர்ந்திருக்கிறது. திறந்த ஜன்னல் உள்ளே நுழையும் குளிர் காற்று உடலை ஊடுருவத் தொடங்குகிறது.

குழந்தை: உங்களை நம்பித்தான எங்க அப்பா அம்மா வேன்ல ஏத்தி அனுப்பினாங்க. இப்படிச் சாகடிச்சிட்டீங்களே… நான் என்ன பாவம் செஞ்சேன் குமரேசன் அங்கிள்?

குமரேசன் நடுங்க ஆரம்பித்தார். பதற்றத்தில் வேர்த்துக் கொட்டியது. கண்களை நன்கு திறந்து பார்த்தார். இருட்டுக்குள்ளிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஐந்து வயதுக் குழந்தை நடந்து வந்தது.

குழந்தை: என்னைத் தெரியலையா அங்கிள். நீங்கதான என்னை தினமும் ஸ்கூலுக்கு உங்க வேன்ல கொண்டு போவீங்க. கடைசியா என்னோட பிறந்த நாளன்னிகுக் கூட உங்க வண்டியிலதான வந்தேன்.

குமரேசன் அலறி அடித்தபடி சுவரோரமாக ஒடுங்கிக் கொள்கிறார். முகத்தைப் பொத்தியபடி கதறி அழ ஆரம்பிக்கிறார். சிறிது நேரம் மவுனம் நிலவுகிறது. யாரோ தன் கைகளைத் தொட்டுக் கூப்பிடுவது போல் உணர்ந்து மெள்ளக் கண்களைத் திறக்கிறார். சுற்று முற்றும் பார்த்தால் யாரும் இல்லை.

பெருமூச்சுவிட்டபடியே முகத்தை நன்கு துடைத்தபடி மீண்டும் துங்கப் போகிறவர் எதிரில் இருந்த கண்ணாடியை யதேச்சையாகப் பார்க்கிறார். முகத்தில் திட்டுத் திட்டாக ரத்தக் கறை படிந்திருக்கிறது. திடுக்கிட்டுக் கைகளைக் கூர்ந்து பார்க்கிறார். கைகளிலும் ரத்தம் படிந்திருக்கிறது. தரையைக் குனிந்து பார்க்கிறார்… தரையில் சொட்டுச் சொட்டாக ரத்தம் படிந்திருக்கிறது. அதைப் பின் தொடர்ந்து டார்ச் அடித்தபடியே செல்கிறார். ரத்தத்துளிகள் நேராக அவர் வேன் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கிச் செல்கிறது. அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. சிறு குழந்தை ஒன்று குத்துக்காலிட்டபடி ரத்தம் சொட்டச் சொட்ட வேனின் டயரின் முன்னே அமர்ந்திருக்கிறது.

குழந்தை: இந்த டயர்தான அங்கிள் என் மேல ஏறிச்சுது. இதுல மாட்டித்தான நான் செத்துப் போனேன்.

நாக்கை வெளியே தள்ளி தலையை லேசாகச் சாய்த்து சைகையில் காட்டுகிறது.

(எழுந்து நடந்து) குழந்தை: இந்த ஸீட்டுக்குக் கீழதான் இத்துப் போயிருந்தது. வெல்டிங் செஞ்ச இடமெல்லாம் பேந்துபோயிருந்தது. ஒரு பெரிய பலகையை வெச்சு மூடியிருந்தீங்க. ஒரு பள்ளத்துல வேன் விழுந்து எந்திரிச்சபோது பலகை மேல ஸீட் வேகமா மோதி உடைஞ்சிருச்சு. நான் தொபுக்கடீர்ன்னு கீழ விழுந்திட்டேன். பின்னாலயே வந்த வேன் சக்கரம் என் மேல அப்படியே ஏறிக் கொன்னுடிச்சு.

குழந்தை தன் இடுப்பின் மேல் டயர் ஏறிய தடத்தைக் காட்டுகிறது.

குழந்தை: ஏன் அங்கிள் என்னை கொன்னிங்க..?

குமரேசனின் முகம் இறுக்கமடைகிறது. பதற்றத்தில் கைகள் நடுங்கின. குரல் உடைந்து உடைந்து வந்தது.

டிரைவர் : இங்க பாரு… உன்னை நான் கொல்லலை. உன் தலைவிதி அப்படி. அதை யார் மாத்த முடியும்?

குழந்தை: அதெப்படி அங்கிள்… வண்டில இருந்த ஓட்டையை சரியா அடைச்சிருந்தா நான் கீழ விழுந்து செத்திருக்க மாட்டேனே.

டிரைவர்: அதுக்கு நான் என்னம்மா செய்யட்டும்… கிடைக்கற வாடகையை வெச்சு என் குடும்பத்தை ஓட்டறதே கஷ்டமா இருக்கு. பெட்ரோல் விலை வேற ஏறிக்கிட்டே இருக்கு. எல்லா பொருளோட விலையும் ஏறிகிட்டே இருக்கு. சமாளிக்க முடியலைம்மா. வண்டியை அடிக்கடி ரிப்பேர் பண்ணினா கட்டுப்படியாகாதும்மா…

குழந்தை: சாராயத்துக்குக் கொடுக்கற காசை மிச்சம் பிடிச்சிருந்தா குடும்பத்துக்கு காசு கிடைச்சிருக்குமே அங்கிள். அதுவும் இல்லாம ஸ்கூல் வேனை வேகமா ஓட்டக்கூடாதுன்னு தெரிஞ்சிருந்தும் வேகமா ஓட்டிட்டுப் போனீங்களே. அந்த டிரிப் முடிஞ்சதும் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர்றவங்களை கூட்டிட்டு போறதுக்காகத்தான் வேகமா ஓட்டினீங்க. உங்க பேராசைதான இந்த விபத்துக்குக் காரணம்.

டிரைவர்: நான் பேராசைப்படலைமா. நீ படிக்கற ஸ்கூல் நிர்வாகம்தானம்மா அதுக்குக் காரணம். வண்டி வாடகையை கூட்டிக் கொடுங்கன்னு எத்தனியோ தடவை கேட்டுப் பார்த்துட்டேன். இஷ்டமிருந்தா இந்த ரேட்டுக்கு வா. இல்லைன்னா வேற வேன் கம்பெனியை பாத்துக்கறோம்னு கறாரா சொல்லிட்டாங்க. அவங்க தர்ற வாடகையை வெச்சு வண்டிக்குப் பெட்ரோல் போடுவேனா… புள்ள குட்டிகளைப் பார்ப்பேனே… வண்டியை ரிப்பேர் பார்ப்பேனா… நாங்க கேட்ட பைசாவை உங்க ஸ்கூல் தந்திருந்தா வண்டியை சரியா ரிப்பேர் பார்த்து வெச்சிருப்பேன்மா. அவங்கதான் உன் சாவுக்குக் காரணம்… ஒவ்வொரு அப்பா அம்மாகிட்டயும் ஆயிரக்கணக்குல காசை வாங்கிட்டு என்னை மாதிரி அன்னாடங்காச்சிகிட்ட கணக்கு பாக்கற அவங்கதான்ம்மா உன் சாவுக்குக் காரணம் நான் புள்ளக் குட்டிக்காரன்மா.
என்று சொல்லியபடியே வீட்டுக்குள் நுழைந்து குழந்தையின் முகத்துக்கு நேரே கதவை ஓங்கி அறைந்து சாத்திக் கொள்கிறார்.

குழந்தை மெள்ள நடந்துசென்று இருளுக்குள் மறைகிறது.

காட்சி – 3

அதிகாலை நேரம். பிரமாண்ட ஸ்கூல் கட்டடம் மயான அமைதியில் உறைந்திருக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்கின்றனர். இருவர் சிவப்பு, வெள்ளை மலர்களையும் பச்சை வண்ண இலைகளையும் பறிக்கிறார்கள். செம்மண் தரையில் மூவர்ணக் கொடி விரிக்கப்படுகிறது. அதில் மலர்களையும் இலைகளையும் வைத்து பந்துபோல் சுருட்டி கொடிக் கம்பத்தில் கட்டுகிறார்கள். பள்ளிக்கூட அறைகளின் ஒவ்வொரு ஜன்னலாகத் திறக்கப்படுகிறது. வேன் ஒன்று மெதுவாக பள்ளிக்குள் நுழைகிறது. குழந்தைகள் இறங்கி வகுப்பறைக்குள் செல்கிறார்கள். சிறிது நேரத்தில் ஒவ்வொரு வேனாக குழந்தைகளைத் திணித்துக்கொண்டு வந்து சேர்கிறது. பள்ளி, குழந்தைகளின் கூச்சல் கும்மாளத்தில் நிறைகிறது.

ஆடம்பரமான கார் ஒன்று மூடிய வாசல் கதவின் முன் வந்து நிற்கிறது. அதன் ஹார்ன் சத்தம் ஓரமாக நின்று கொண்டிருந்த காவலாளியைப் பதற்றமடைய வைக்கிறது. பாய்ந்து வந்து கதவைத் திறக்கிறார். கப்பல் போல் மிதந்தபடி கார் உள்ளே நுழைகிறது. ஏற்றி விடப்பட்ட காரின் கண்ணாடிக்கு காவலாளி விறைப்பாக சல்யூட் வைக்கிறார். போர்டிகோவில் சென்று கார் நிற்கிறது. ஒரு ஆசிரியர் சென்று கதவைத் திறக்கிறார். விறைப்பான புடவை கட்டிய சற்று வயதான பெண்மணி காரில் இருந்து இறங்குகிறார். அவர் நடந்து செல்லச் செல்ல பள்ளி அறைகளில் ஸ்விட்ச்சை அணைத்ததும் ரேடியோவில் சத்தம் இல்லாமல் போவதுபோல் ஒவ்வொரு வகுப்பாக மவுனத்துக்குள் ஆழ்கிறது. எதிரில் வரும் குழந்தைகள், ஆசிரியர்கள் எல்லாரும் சுவரோரமாக ஒடுங்கி வணக்கம் சொல்கிறார்கள்.

பிரின்சிபால் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட அறைக்குள் அந்தப் பெண்மணி செல்கிறார். அறைக்கதவு மூடிக்கொள்கிறது. உள்ளே சென்ற பிரின்சிபால் தனது நாற்காலி என்றும் இல்லாத வகையில் திரும்பி இருப்பதை ஆச்சரியத்துடனும் கோபத்துடனும் பார்க்கிறார்.

யார் இதைத் திருப்பிப் போட்டது என்று அதட்டியபடியே நாற்காலியை நெருங்குகிறார். நாற்காலி தானாகவே திரும்பிக்கொள்கிறது. அதில் ஒரு குழந்தை தன் கையில் இருந்து வழியும் ரத்தத்தை பஞ்சால் துடைத்தபடியே அமர்ந்திருக்கிறது. பிரின்சிபால் அதிர்ந்து இரண்டடி பின்னால்செல்கிறார்.

பிரின்சிபால் : யார் நீ… எப்படி இங்க வந்த..? உனக்கு எப்படி அடிபட்டுச்சு..?

குழந்தை: மேடம் என்னைத் தெரியலையா…. உங்க ஸ்கூல் பர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் படிச்சிட்டிருந்தேனே. ஒரு நாள் தோட்டத்துல ஒரு செடியில இருந்து பூவைப் பறிச்சிட்டேன்னு ஒரு மணி நேரம் முட்டிக்கால் போட்டு நிற்கச் சொன்னீங்களே… என்னை மறந்து போச்சா உங்களுக்கு.

பிரின்சிபால்: எனக்கு டிசிப்பிளின்தான் முக்கியம். யு ஆர் நாட் சப்போஸ் டு பிளக் தி ஃபிளவர்ஸ் வித் அவுட் அவர் பெர்மிஷன். என்னோட விதிகளுக்கு மீறி ஸ்கூல்ல எதுவுமே நடக்கக்கூடாது.

குழந்தை: அப்போ நான் இறந்து போனேனே… அதுகூட உங்கள் கட்டுப்பாட்டுக்குள்ள நடந்த ஒண்ணுதான. அதுக்கு நீங்க தான காரணம். உங்களோட அஜாக்ரதைதான காரணம்.
வேகமாக மறுத்தபடியே பிரின்சிபால்: நோ நோ…. அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். அது அந்த டிரைவரோட அஜாக்கிரதை. உங்க அப்பா அம்மாவோட அலட்சியம் இதுதான் காரணம்.

குழந்தை: உங்க ஸ்கூல்ல தான நான் படிச்சேன். நீங்க ஏற்பாடு பண்ணின வண்டிதான அது. எங்க அப்பா அம்மா உங்களை நம்பித்தான் என்னை இந்த ஸ்கூலுக்கு அனுப்பினாங்க.

பிரின்சிபால்: இதோ பாரும்மா… எங்களால நல்ல கோச்சிங் மட்டும்தான் கொடுக்க முடியும். மாநிலத்துலயே எங்க பள்ளிதான் நம்பர் ஒன் அப்படிங்கற பேரை எடுக்கணும் அதுதான் என் லட்சியம். அதுக்கு என்ன செய்யணுமோ அதைத்தான் நான் செஞ்சிட்டு இருக்கேன். என் கவனமெல்லாம் அதுல மட்டுமே இருக்கும். நல்ல கோச்சிங் வேணும்னு ஆசைப்படவங்க எங்க ஸ்கூலைத் தேடி ரொம்ப தூரத்துல இருந்துகூட வர்றாங்க. நாங்க அவங்களுக்கு சீட் இல்லைன்னு சொல்ல முடியாது. பழங்காலத்துல குருகுலத்துல தங்கிப் படிச்சதுபோல இங்கயே தங்கிப் படிக்க வைக்க இப்ப வழியில்லை. ஸ்கூல் கேம்பஸ்குள்ள நடக்கற விஷயங்களுக்கு மட்டுமே நாங்க பொறுப்பு ஏற்க முடியும். கேட்டைத் தாண்டி நடக்கற எதுக்குமே நாங்க எதுவுமே செய்ய முடியாது

குழந்தை: உங்க ஸ்கூலுக்குக் குழந்தைகளைக் கொண்டு வர நீங்க ஏற்பாடு செஞ்சு வெச்சிருக்கற வேன் நல்ல நிலைமைல இருக்கா…. அதுல அதிகக் குழந்தைகளை ஏத்தறாங்களா அப்படிங்கறதைப் பாக்கற பொறுப்பு உங்களுக்கு இருக்கு இல்லையா..?

பிரின்சிபால்: நோ மைல் சைட். தாட் ஈஸ் நாட் அவர் பிராப்ளம். வண்டியோட கண்டிஷனைப் பார்க்க வேண்டியது ஆர்.டி.ஓக்களோட பொறுப்பு. வண்டில அதிக ஆட்களை ஏத்தறாங்களா, ஓவர் ஸ்பீட்ல போறாங்களா அப்படிங்கறதையெல்லாம் பாக்க வேண்டியது போக்குவரத்து காவல் துறையோட வேலை. இன் வாட் வே வீ ஆர் ரெஸ்பான்ஸிபிள். குழந்தையோட அறிவு கம்மியா இருக்கா… பள்ளிக்கூடத்தோட ரிசல்ட் கம்மியா இருக்கா… அப்போ என்னை நடு ஹால்ல நிக்க வெச்சு கேள்வி கேளு. ஐ ஆம் ஆன்ஸரபிள் டு தட். ஐ ஆம் ஆன்ஸரபிள் டு தட் ஒன்லி மை சைல்ட். என்று கண்ணாடியை சரி செய்தபடியே பதில் சொல்கிறார்.

குழந்தை: அப்போ உங்க மேல எந்த தப்பும் இல்லையா என்று குழந்தை சோகத்துடன் கேட்கிறது. நோ மை டியர் சைல்ட்… என்று பிரின்சிபால் புன்முறுவல் பூத்தபடியே தலையை அசைக்கிறார்.

குழந்தை நாற்காலியில் இருந்து சிரமப்பட்டு இறங்கி நடந்து வெளியே செல்கிறது. கதவுப் பக்கம் சென்றதும் பிரின்ஸிபாலைத் திரும்பிப் பார்க்கிறது. அவரோ கையில் இருந்த ஃபைலை டேபிளில் வைத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து அழைப்பு மணியை அழுத்துகிறார். குழந்தையைக் வெளியே போ என்பதுபோல் கை காட்டுகிறார். குழந்தை கண்களில் நீர் கசிய வெளியேறுகிறது.

காட்சி 4

பெரிய ஆலமரத்தின் மீது ஒட்டுண்ணிச் செடிகள் இடைவெளியின்றிப் படர்ந்திருக்கின்றன. ராட்சஸ கிரில் கேட் கதவுகள் துருப்பிடித்துக் கிடக்கின்றன. அதன் முகப்பில் ஆர்.டி.ஓ. அலுவலகம் என்று ஒரு போர்டில் எழுதிப்போடப்பட்டிருக்கிறது. சின்னக் குழந்தை ரத்தம் சொட்டச் சொட்ட நடந்து செல்கிறது. அரசு அலுவலகத்தில் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையில் மும்மரமாக இருக்கின்றனர். ஃபைல்கள் மலைபோல் ஒவ்வொரு டேபிளிலும் தேங்கிக் கிடக்கின்றன. குழந்தை நேராக ஆர்.டி.ஓ. அறைக்குள் நுழைகிறது.

ஆர்.டி.ஓ. எந்தச் சலனமும் இல்லாமல் குழந்தையை நிமிர்ந்து பார்க்கிறார். நாற்காலியைக் காண்பித்து உட்காரும்படிச் சொல்கிறார். குழந்தை சிரமப்பட்டு ஏறி உட்கார்ந்து கொள்கிறது.
டெலிபோன் மணி ஒலிக்கிறது. அதை எடுத்துக் காதில் வைத்தபடியே குழந்தை பக்கம் திரும்பி என்ன பாப்பா வேணும் என்கிறார்.

குழந்தை: என்னை ஏன் அங்கிள் கொன்னீங்க?

எதிர் முனையில் தெரிந்த நபர் யாரோ பேச ஆரம்பிக்க ஆர்.டி.ஓ. உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார்.

ஆர்.டி.ஓ: அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க கவலையே படவேண்டாம். இன்ஸ்பெக்ஷன் பண்ணி ரிபோர்ட் தரவேண்டியதே நான் தான்…. சேச்சே.. நீங்க இவ்வளவு சொல்லணுங்கற தேவையே இல்லை. தைரியமா வேற வேலைகளைப் பாருங்க. என்னை மீறி இந்த கேஸ்ல வேற யாரும் ஒண்ணும் பண்ண முடியாது…. அதெல்லாம் வேண்டாம். உங்களுக்குப் பண்ணாம வேற யாருக்குப் பண்ணப் போறேன். உங்க மன திருப்திக்காக வேணும்னா ஏத்துக்கறேன். மத்தபடி எனக்கு இதுல எதுவுமே தேவையில்லை.

பேசி முடித்துவிட்டு குழந்தையைப் பார்க்கிறார்.

ஆர்.டி.ஓ: என்னம்மோ சொல்ல வந்தியே?என்னம்மா?

குழந்தை: ஏன் அங்கிள் என்னைக் கொன்னிங்க?

ஆர்.டி.ஓ: இப்படி மொட்டையா கேட்டா எப்படிம்மா? எப்படிச் செத்துபோன? என்னிக்குச் செத்துப் போன? விவரமா சொல்லு.

குழந்தை: ஸ்கூல் வேன்ல இருந்த ஓட்டைனால கீழ விழுந்து செத்துப் போனேனே…

ஆர்.டி.ஓ: ஓ. அந்த கேஸா. அதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும்? எங்க டிபார்ட்மெண்ட் இருக்கே குறைவான ஆட்களை வெச்சுக்கிட்டு திறமையாகச் செயல்படும் ஒரு துறை. ரொம்பவும் ஸ்ட்ரிக்டானது. இதுவரைக்கும் போன மாசம் மட்டும் 1435 வழக்குகள் பதிவு செய்திருக்கோம். 147 ஓவர் லோடு கேஸ், 376 பர்மிட் இல்லாத கேஸ், 34 டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினது, 21 வண்டில முதலுதவி பெட்டி இல்லாதது அப்படின்னு கேஸ் புக் பண்ணியிருக்கோம். மூணு வண்டியை டீடெய்னே பண்ணிட்டோம். அதுல கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வாகனங்களும் உண்டு.

குழந்தை: இல்லை அங்கிள். நீங்க பெர்மிட் கொடுக்கறதோட சரி. அதுக்கப்பறம் வண்டி என்ன கண்டிஷன்ல இருக்குன்னு சோதிக்கறதே கிடையாது. வருஷா வருஷம் சோதிச்சுப் பார்க்கும்போதும் என்ன குறை இருந்தாலும் கண்டுக்காம லஞ்சம் வாங்கிட்டு ஓ.கே. சர்டிபிகேட் தந்திட்டு வர்றீங்க. நீங்க ஒழுங்கா சோதனை போட்டிருந்தா நான் வந்த வண்டில வெல்டிங் சரியா செய்யலைங்கறதையும் பெரிய ஓட்டை இருந்தத்தையும் கண்டு பிடிச்சிருப்பீங்களே… அந்த வண்டிக்கு அனுமதி தராம இருந்திருந்தா நான் செத்திருக்க மாட்டேனே அங்கிள். நீங்க தான என் சாவுக்குக் காரணம்.

ஆர்.டி.ஓ: உன் மரணத்துக்குக் காரணம் நான் இல்லைம்மா… விபத்து நடக்கறதுக்கு பத்து நாள் முன்னால கூட நான் சோதனை செஞ்சிருந்தேன். எல்லாம் நல்லாத்தான் இருந்தது. லஞ்சமெல்லாம் வாங்கலை. மழை பெஞ்சதுல ரோடு குண்டும் குழியுமா இருந்திருக்கு. தூக்கித் தூக்கிப் போட்டதுனால ஸீட்டோட அழுத்தம் தாங்காம தகரம் உடைஞ்சிருக்கு. பொதுவா இப்படி நடக்காது. உன் விஷயத்துல என்னமோ துரதிஷ்டவசமா இப்படி ஆயிடிச்சி. உண்மையில உன்னோட மரணத்துக்குக் காரணம் உன்னோட அப்பா அம்மாதான். இந்த பிஞ்சு வயசுல உன்னையைப் போய் வண்டியில ஏத்தி அனுப்பினாங்க பாரு அவங்க மேலதான் தப்பு. அவங்க கிட்டப் போய்க் கேளும்மா…

குழந்தை: என்ன சொல்றீங்க?

ஆர்.டி.ஓ: ஆமாம்மா. பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல உன்னைச் சேர்த்திருந்தா வண்டில போக வேண்டிய கஷ்டம் உனக்கு இருந்திருக்காதுல்ல. நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. உன்னை மாதிரி ரெண்டு மடங்கு எடையுள்ள புத்தகங்களை முதுகுல ஏத்திக்கிட்டு அந்த ஸ்கூல் வேன்ல போற குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மனசு எவ்வளவு கஷ்டப்படும் தெரியுமா..? ஓடி விளையாட வேண்டிய இந்தச் சின்ன வயசுல இப்படிப் போட்டு பாடாப்படுத்தறாங்களேனு கோபம் கோபமா வரும். உங்க அப்பா அம்மாதாம்மா இது எல்லாத்துக்கும் காரணம். அவங்க தான உன்னை பத்து 20 கிமீ தொலைவுல இருக்கற ஸ்கூல போல் சேர்த்தாங்க. அவங்கதாம்மா இந்த சாவுக்குக் காரணம்.

குழந்தை அவர் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாமல் வெறித்துப் பார்க்கிறது. பதிலைச் சொல்லிவிட்டு ஃபைலில் மூழ்கிய ஆர்.டி.ஓ. சிரிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்து, நீ இன்னும் போகல்லியா என்று சற்று மிரட்டும் தொனியில் கேட்கிறார்.
குழந்தை பயந்தபடியே எதுவும் பேசாமல் வெளியேறுகிறது.

காட்சி – 5

இருண்ட வீட்டில் குழந்தை தட்டுத்தடுமாறி நடந்து வருகிறது. குழந்தையின் சிறிய சைக்கிள் துருப்பிடித்து ஒரு ஓரமாகக் கிடக்கிறது. பெற்றோருடன் சேர்ந்து சிரித்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் சிலந்தி படிந்திருக்கிறது.

பெரிய மெத்தையில் குழந்தையின் தந்தையும் தாயும் படுத்திருக்கிறார்கள். அவர்களைக் கட்டிப் பிடித்தபடி இன்னொரு குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. விபத்தில் இறந்த குழந்தை நிம்மதியாகத் தூங்கும் அவர்களை ஏக்கத்துடன் பார்க்கிறது. பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு அப்பாவை மெள்ள எழுப்புகிறது. தூக்கம் கலைபவர் கண்களைத் திறக்காமலேயே எழுந்து உட்காருகிறார். டேபிளில் வைத்த கண்ணாடியை எடுக்கத் துழாவுகிறார். விபத்தில் இறந்த குழந்தையின் தலையில் கை படுகிறது. கண்களைத் திறக்காமலேயே, என் பட்டுக் குஞ்சலம் அதுக்குள்ள எழுந்திருச்சிடிச்சா என்றபடியே அந்தக் குழந்தையின் முகத்தை ஆசையோடு தடவுகிறார். முத்தமிடுவதற்காக குழந்தையை நோக்கி முகத்தைக் கொண்டுசெல்பவர் கண்ணைத் திறந்து பார்த்ததும் ரத்தம் வழியும் முகத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார்.

படுக்கையில் இருந்து பதறி அடித்து எழுந்து கொள்பவர் திரும்பிப் பார்க்கிறார். மனைவியும் இரண்டாவது குழந்தையும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இறந்த குழந்தை அவரைத் தொட்டுக் கூப்பிடுகிறது. குழந்தையின் அருகே மண்டியிட்டு அமர்கிறார்.

குழந்தை: என்னை ஏனப்பா கொன்னீங்க?

குழந்தையின் அப்பா காதைப் பொத்திக் கொள்கிறார். இங்க வேண்டாம் பக்கத்து அறைக்குப் போயிடுவோம் என்று குழந்தையை அழைத்துச் செல்கிறார்.

(பின்னால் நடந்தபடியே) குழந்தை: பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல என்னைச் சேர்த்திருந்தா நான் செத்திருக்க மாட்டேனே அப்பா…

சிறிது நேரம் எதுவும் பேசாமல் கண்களை மூடியபடி நிற்கிறார். அவரது கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிகிறது.

அப்பா: செல்லமே… நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வ்ரணுங்கறதுக்காகத்தனம்மா தள்ளி இருந்தாலும் பரவாயில்லைன்னு அந்த ஸ்கூல்ல சேர்த்தேன். அந்த ஸ்கூல்ல தானம்மா நல்ல கோச்சிங் கிடைச்சது. ராத்திரியும் பகலும் கஷ்டப்பட்டு உழைச்சதெல்லாம் நீ நல்ல நிலைக்கு வரணுங்கறதுக்குத்தானடா செல்லம். இந்த உலகத்துல இருக்கறதுலயே மிக நல்ல கோச்சிங் என் மகளுக்குக் கிடைக்கணும்னு நான் ஆசைப்பட்டேண்டா செல்லம். அது தப்பா..? விடிய விடிய க்யூல காத்து நின்னு அப்ளிகேஷன் வாங்கினதும் கேட்ட பணத்தை ஃபீஸாக் கட்டினதும் எல்லாம் நீ நல்லா வரணுங்கறதுக்காகத்தானம்மா

குழந்தை: அது தப்பில்லைப்பா… நல்ல ஸ்கூல்ல சேர்க்கறதுல காட்டின ஆர்வத்தை நல்லபடியா போயிட்டு வர்றதுக்கு ஏற்பாடு செய்யறதுலயும் காட்டியிருக்கணுமே அப்பா…

அப்பா: ஸ்கூல நம்பித்தானம்மா உன்னை அனுப்பினோம். மாநிலத்துலயே மிகச் சிறந்த பள்ளி அது… குழந்தைகள் மேல அக்கறையா இருப்பாங்கன்னு நம்பித்தானம்மா அனுப்பிவெச்சோம்.

குழந்தை: அதெப்படிப்பா சொல்லலாம். ஃபீஸ் கட்டினதோட உங்க பொறுப்பு முடிஞ்சிடுச்சுன்னு போயிட்டீங்களே அப்பா. என்னிக்காவது நான் ஸ்கூலுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டுப் போயிட்டு வர்றேன்னு பார்த்திருக்கீங்களா அப்பா… நீங்களும் அம்மாவும் வேலைக்கு போகனுங்கறதுக்கான என்னை காலைலயே எழுப்பி தூக்கக் கலக்கத்துலயே பிரெட்டோ பழமொ வாயில திணிச்சு யூனிபார்மை மாட்டி ஷுவும் சாக்ஸும் மாட்டி வேன்ல ஏற்றிட்டு அரக்கப் பரக்க ஓடிட்டுத்தான் இருந்தீங்க. அந்த வேன்ல நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு ஒரு நாளாவது கூட வந்து பார்த்திருகீங்களா…

தங்களோட குழந்தைங்க உட்கார்ந்துட்டுத்தான் போகுதுன்னு எல்லா அப்பா அம்மாவும் நம்பனுங்கறதுக்காக ஏற்கெனவெ உட்கார்ந்திட்டிருக்கற குழந்தையை வேன் டிரைவர் எழுப்பிவிட்டுட்டு அந்தக் குழந்தைய உட்காரவைப்பாரு. நான் உங்க கண் முன்னால ஸீட்ல உட்கார்ந்திருப்பேன். தெரு திரும்பினதும் என்னை எந்திரிச்சு நிற்கச் சொல்லிடுவாரு. குண்டும் குழியுமா இருக்கற ரோட்ல சரியான பிடிமானமும் கிடைக்காம பேகையும் தூக்கிட்டு நான் படற கஷ்டம் உங்களுக்குத் தெரியவே தெரியதே அப்பா… மத்யானம் இத்துணுண்டு டிஃபன் பாக்ஸ்ல ஆறிப் போயிருக்கற சாப்பாட்டைச் சாப்பிட்டு சாயந்திரம் ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் முடிஞ்சு செத்துச் சுண்ணாம்பா வீட்டுக்குத் திரும்புவேன். வேன்ல போகும்போதும் வரும்போதும் கவர்மெண்ட் ஸ்கூல குழந்தைங்க சிரிச்சு விளையாடிட்டு இருக்கறதைப் பார்ப்பேன். அப்படி ஒரு உற்சாகம் என்கிட்ட என்னிக்குமே இருந்ததேயில்லையே அப்பா… குழந்தையா இருக்கற வயசுல குழந்தையா இருக்கறதுதான அப்பா அழகு… பெரிய மனுஷங்க மாதிரி பேசறதா அழகு..?

அப்பா: நீ இப்படி வேதனைப்பட்டங்கறதை என் கிட்ட ஒரு நாள் கூட சொல்லவே இல்லையேம்மா..?

குழந்தை: நீங்க கேட்கவே இல்லையே அப்பா..? உங்களைப் பொறுத்தவரை காலைல கிளப்பி ஸ்கூலுக்கு வேன்ல ஏத்திவிட்டுட்டுச் சிரிச்ச மொகத்தோட் டாட்டா காட்டிட்டு தெருமுனைல வேன் திரும்பறவரை பாத்துட்டு நிக்கறதோட உங்க கடமை முடிச்சுபோச்சுன்னுதான் நினைச்சிட்டிருந்தீங்க. ஆனா, என் வேதனை ஆரம்பிச்சதே அதுக்கு அப்பறம்தானப்பா…

அப்பா: இதெல்லாம் எனக்கு எப்படிம்மா தெரியும். ஊர்லயே ரொம்பவும் நல்ல கோச்சிங் கிடைக்கற ஸ்கூல். கண்டிப்புக்கும் பெயர் போன ஸ்கூல். உன் எதிர்காலம் நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டுத்தான அங்க கொண்டு போய்ச் சேர்த்தேன். அரசுப் பள்ளியில எல்லாம் படிச்சா இந்தப் போட்டி நிறைஞ்ச உலகத்துல எதுவுமே சாதிக்க முடியாதும்மா. பக்கத்துல இருக்கற பள்ளியிலயே நல்ல கோச்சிங் கிடைச்சா எல்லாரும் ஏன் இப்படி தூரத்துல இருக்கற பள்ளிக்கு அனுப்பப்போறங்க. எல்லா பள்ளியிலயும் நல்ல கோச்சிங் கிடைக்க வழி செய்யாத கல்வி அமைச்சர்தானமா இந்த பிரச்னைக்குக் காரணம். ஒருவகையில அவர் தான்ம்மா உன் சாவுக்குக் காரணம்…

அப்பா துக்கம் தாங்காமல் விம்மி விம்மி அழுகிறார்.

குழந்தை அப்பா சொன்னதை கேட்டு அதிர்ந்தபடியே பின்னால் நடந்து இருளுக்குள் மறைகிறது.

காட்சி 6

கல்வி அமைச்சர். நீண்ட மேஜையின் இரண்டு பக்கங்களிலும் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாற்காலிக்கு முன்னாலும் சிறிய பலகையில் அதில் அமரப்போகிறவரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கு முன்னாலும் மினரல் பாட்டிலும் டிஷ்யூ பேப்பரும் வைக்கப்பட்டிருக்கிறது. சிறிது நேரத்தில் கோட் சூட் அணிந்த அதிகாரிகள் வரிசையாக வந்து அமர்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்த அமைச்சர் வந்து அமர்கிறார்.

அதிகாரிகளில் இருந்து ஒருவர் எழுந்து பேச ஆரம்பிக்கிறார்.

எல்லாருக்கும் வணக்கம். இந்த கல்வித்துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் அமைச்சர் அவர்களை குழுவினர் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம். (ஒருவர் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்துகிறார்.)

மாண்புமிகு முதல்வரின் லட்சியக் கனவான அரை கிலோமீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற இலக்கை நடப்பு ஆண்டுக்குள் நிச்சயம் எட்டிவிடுவோம்.

மற்ற அதிகாரிகள் மேஜையை நாசூக்காகத் தட்டி உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்போது சட்டென்று ஜன்னல் கதவுகள் படார் படார் என்று அடித்துக்கொள்கின்றன. திரைச்சீலைகள் பேய்க்காற்றில் அலைபாய்கின்றன. விளக்குகள் அணைந்து அணைந்து எரிய ஆரம்பிக்கின்றன. அதிகாரிகளும் பிற பணியாளர்களும் பதறி அடித்து ஜன்னல்களை மூடுகின்றனர். விளக்குகள் வழக்கம்போல் எரிய ஆரம்பிக்கின்றன. அனைவரும் தங்கள் இருக்கைக்கு முன்னால் வந்து நிற்கின்றனர். திடீரென்று மினரல் வாட்டர் பாட்டிலில் இருக்கும் நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் மாறுகிறது. அனைவரும் திடுக்கிட்டுப் பின்வாங்குகிறார்கள்.

குழந்தை: ஏன் அங்கிள் என்னைக் கொன்னீங்க? என்ற குரல் அசரீரியாகக் கேட்கிறது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். சிலர் மேஜை அடியில் தேடுகின்றனர்.

குழந்தை: அமைச்சர் அங்கிள் உங்களைத்தான் கேட்கிறேன். ஏன் அங்கிள் என்னைக் கொன்னீங்க?

அமைச்சர் முகத்தில் வழியும் வியர்வையைத் துண்டால் துடைத்துக் கொள்கிறார். அதிகாரிகளில் சிலர் அவருக்குப் பாதுகாப்பாக வந்து நிற்கிறார்கள்.

குழந்தை: நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க அங்கிள்

அமைச்சர் பதறியபடியே: நீ… நீ… யாரும்மா. எங்க முன்னால வா. இல்லைன்னா குறை கேட்பு நாள் அன்னிக்குக் கோட்டைக்கு வா.

குழந்தை: நான் கேக்கற கேள்வி சின்னதுதான் அங்கிள். ஸ்கூல் வேன் ஏறிச் செத்துப் போன எத்தனியோ குழந்தைகள்ல நானும் ஒருத்தி. என்னைப் பத்தி அது தெரிஞ்சா போதும். என் சாவுக்குக் காரணமான நீங்க அதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க.

அமைச்சர்: நான் எப்படிம்மா உன் சாவுக்குக் காரணமாவேன். என் தானைத்தலைவன் ஏழு கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவன் ஆட்சியில் அரைகிலோமீட்டருக்கு ஒரு பள்ளி என்ற கனவு கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டிருக்கிறது. உன் தந்தை அந்தப் பள்ளியில் உன்னைச் சேர்த்திருந்தால் நீ வேனில் ஏற வேண்டிய அவசியமே இருந்திருக்காது. உனக்கு இந்த துர் மரணம் நேர்ந்திருக்காது.

குழந்தை: அரை கிலோமீட்டருக்கு ஒரு பள்ளி என்ற இலக்கு சரிதான். ஆனால், அந்தப் பள்ளிகளில் தரப்படும் கல்வி எந்த நிலையில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும் இல்லையா? அந்தக் கல்வி கற்றால் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் ஒருவருக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் இல்லையா?

அமைச்சர்: ஏன் குழந்தாய் அப்படிச் சொல்கிறாய்… அந்தப் பள்ளியில் கிடைக்கும் கல்விக்கு என்ன குறை? இப்போது சமச்சீர் கல்வி என்று அனைத்து இடத்திலும் ஒரே கல்வி கிடைக்க வழி செய்துவிட்டிருக்கிறோம்.

குழந்தை: பாடங்கள் ஒரே மாதிரி இருந்தால் போதுமா? சொல்லித் தரும் விதம் ஒரேமாதிரி தரமானதாக இருக்க வேண்டாமா..?

அமைச்சர்: அரசுப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு என்னம்மா குறை? அருகில் இருக்கும் பள்ளியில் படித்து உலகில் சாதனைகள் படைத்தவர்கள்தானே நம் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அறிஞர்கள் எல்லாம்.

குழந்தை: அவர்களுடைய காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவு. எனவே போட்டியும் குறைவு. இன்றைய உலகில் அந்தப் படிப்பு போதாதே அங்கிள். சரி உங்களை ஒன்று கேட்கிறேன். அரசுப் பள்ளிகள் சிறபாக நடப்பதாகச் சொல்கிறீர்களே… உங்கள் குழந்தைகள் அங்குதான் படிக்கிறார்களா.?

அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.

குழந்தை: இங்கு கூடியிருக்கும் அதிகாரிகளில் யாருடைய குழந்தை அரசுப் பள்ளியில் படிக்கிறது என்று கை தூக்குங்கள் பார்க்கலாம்.

அனைவரும் மவுனமாக தலை குனிந்து நிற்கிறார்கள்.

குழந்தை: இப்போது சொல்லுங்கள்… என் அப்பாவும் அம்மாவும் நல்ல கல்வி கிடைக்கும் பள்ளிக்கு அனுப்பியது தவறா? அரை கிலோமீட்டருக்கு பள்ளி என்று ஆயிரக்கணக்கில் பள்ளிகளைத் திறந்ததற்குப் பதிலாக ஓரிரு கிலோமீட்டருக்குள் நல்ல கல்வி கிடைக்கும் பள்ளிகள் நூறைத் திறந்திருந்தாலும் பிரச்னை தீர்ந்திருக்குமே… ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுவிட்டு நீரும் உரமும் வைக்காமல் வாட விடுவதைவிட நூறு மரங்களை நட்டு நன்கு பராமரிப்பது அல்லவா சிறந்தது. அதுதானே நீங்கள் செய்ய வேண்டியது. அதைச் செய்யாததால்தானே என் போன்றவர்கள் இறக்க வேண்டி வந்திருக்கிறது.

அமைச்சர்: நீ சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமானால், உன் பெற்றோருக்குத் தரும் இழப்பீட்டை கொஞ்சம் அதிகரித்துத் தரச் சொல்கிறேன். நம்மை இப்போது ஆள்பவர் நம்மில் ஒருவர். நமது நலனையே அல்லும் பகலும் அயராது சிந்தித்து வருபவர். என்ன வேண்டும்? எவ்வலவு வேண்டும்? கேள் தரச் சொல்கிறேன்.

குழந்தை: என் உயிரைத் திருப்பிக் கொடுங்கள். அது போதும் வேறு எதுவும் வேண்டாம்.
அமைச்சரும் அதிகாரிகளும் எதுவும் பேச முடியாமல் நிற்கிறார்கள்.

காட்சி: 7

டிரைவர் : பெட்ரோல் விலை ஏறிப் போச்சு. விலைவாசி ஏறிப் போச்சு… வாடகை பத்த மாட்டேங்குது…

பிரின்ஸிபால் : ஸ்கூல் கேம்பஸுக்கு வெளியில் நடக்கும் எதற்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. இந்த வருடம் எங்கள் பள்ளியில் இருந்து மாநில தேர்வுகளில் பத்து இடங்களில் ஐந்தையாவது பிடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. இதை நாங்கள் செய்து காட்டுவோம். இதை மட்டுமே செய்து காட்டுவோம்.

ஆர்.டி.ஓ. இதுவரை 576 வண்டிகள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதில் 47 அதிக ஆட்களை ஏற்றியது… 36-ல் நம்பர் பிளேட் சரியில்லை… 76-ல்…

பெற்றோர் : என் குழந்தை டாக்டராகவும். அப்படியே இன்ஜினியராகவும் ஆகிடணும். இரண்டையும் முடிச்சதும் ஐ.ஏ.எஸ். மட்டும் பாஸ் பண்ணிட்டா போதும்.

கல்வி அமைச்சர்: தானைத் தலைவன், இதய தெய்வம், தமிழர்களின் விடி வெள்ளி, இன்றைய தமிழகம், நாளைய இந்தியா, நாளை மறு நாள் இந்த பூவுலகம்…

ஒவ்வொருவரும் குறுக்கும் மறுக்குமாகப் பேசியபடி நடக்கிறார்கள். மெள்ள தங்கள் கைகளைப் பார்க்கிறார்கள். அனைவருடைய கைகளிலும் ரத்தக் கறை படிந்திருப்பதைப் பார்க்கிறார்கள். பதறி அடித்தபடி ஓடுகிறார்கள்.

நான் கொல்லவில்லை…
அவர்தான் காரணம்…
இவர்தான் காரணம்
என ஆளாளுக்கு சரமாரியாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

அவர்கள் மேலிருந்து வெளிச்சம் மங்குகிறது. சற்று தள்ளி நின்று கொண்டிருக்கும் குழந்தை மீது வெளிச்சம் பாய்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லியபடி குழந்தையை நெருங்குகிறார்கள்.

குழந்தை காதைப் பொத்திக் கொள்கிறது. அவர்களுடைய சத்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் குழந்தை, நிறுத்துங்க என்று கத்துகிறது. அனைவரும் சட்டென்று உறைகிறார்கள்.

(நிதானமாக) குழந்தை: உங்க மேல தப்பு இல்லை இல்ல… என்று சொல்லியபடியே ஒவ்வொருவராகப் பார்த்துப் பேசுகிறது.

உங்க குழந்தைகள்ல யாருக்காவது இப்படி நடந்திருந்தா இந்த பதிலைச் சொல்லியிருப்பீங்களா என்று அவர்களைப் பார்த்துக் கேட்கிறது. அனைவரும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிகிறார்கள். குழந்தை பெற்றோருக்கு அருகில் வந்து நிற்கிறது. அலட்சியமாகச் சிரிக்கிறது. உங்க கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்க முடியாது. அவங்களாவது அவங்க குழந்தைகளை நல்லபடியா பாத்துக்கிட்டிருக்காங்க. மத்த குழந்தைகளைத்தான் அம்போன்னு விட்டிருக்காங்க. நீங்க உங்க குழந்தையையே அம்போன்னு விட்டுட்டீங்களே என்று வேதனையுடன் சொல்கிறது. பெற்றோர் வாயடைத்துப் போய் நிற்கிறார்கள்.
குழந்தை கண்களைத் துடைத்துக் கொள்கிறது.

உங்க யார் மேலயும் எந்தத் தவறும் இல்லை.

(டிரைவரைப் பார்த்து) வாடகை கட்டுப்படியாகலைன்னா நீங்க என்ன செய்வீங்க. மெயிண்டனென்ஸுக்கு காசு கொடுத்தா குடும்பம் கஷ்டப்பட வேண்டி வருமே… உங்க குடும்பம்தான உங்களுக்கு முக்கியம்… உங்க மேல தப்பு இல்லை.

(பிரின்ஸிபாலைப் பார்த்து) உங்க மேல எந்தத் தப்பும் இல்லை. பாடம் ஒழுங்கா சொல்லித் தர்றாங்களா… டிசிபிளின் இருக்கா… ரிசல்ட் வருதா… இதுதான் உங்களோட இலக்கு… மற்ற விஷயங்களுக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்…

(ஆர்.டி.ஓ.வைப் பார்த்து) நீங்க பண்ணாத ஆய்வா… போடாத ஃபைனா… குறைஞ்ச ஆட்களை வெச்சுகிட்டு திறமையா துறைய நடத்தறவர் ஆச்சே… உங்க மேல தப்பு சொல்ல முடியுமா..?

(கல்வி அமைச்சரைப் பார்த்து) உங்க மேல தப்பே இல்ல அங்கிள். அடுத்த தேர்தல்ல எப்படி ஜெயிக்கறது அப்படிங்கறதுதான் உங்களோட இலக்கு. பெரிசு பெரிசா திட்டங்கள் அறிவிக்கணும். அதை நாடு பூரா விளம்பரப்படுத்தணும். தேர்தல் நேரத்துல இலவசங்களைக் கொடுத்து மக்களை மயக்கி ஆட்சியைப் பிடிச்சிட முடியும் அப்படிங்கற எளிய தந்திரம் தெரிய வந்த பிறகு ஆட்சி நிர்வாகத்துல எதுக்கு கவனம் செலுத்தணும் இல்லையா… உங்க மேல ஒரு தப்பும் இல்லை. அரைக் கிலோமீட்டருக்கு பள்ளிக்கூடம் திறந்து முட்டையோட மத்தியான சாப்பாடும் வேற போடறீங்க… உங்க மேல ஒரு தப்பும் இல்லை அமைச்சர் அங்கிள்…

(பெற்றோரைப் பார்த்து) உங்களை நான் குத்தம் சொல்ல முடியுமா… குழந்தை தொட்டில்ல இருக்கும்போதே ரைம்ஸ் சொல்ல வைக்க புதுசா ஒரு ஸ்கூல்ல ஆரம்பிச்சிருக்காங்களாம்… அடுத்தது கர்ப்பத்துல இருக்கும்போது கணக்குப் பாடமெல்லாம் சொல்லித் தர ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்களாம். என்ன… தினமும் போயிட்டு வர கொஞ்சம் சிரமமா இருக்கும். ஸ்கூல்ல இருக்கற நேரத்தைவிட வண்டியில போயிட்டு வர அதிக நேரம் ஆகும். அதனாலென்ன… குழந்தைகளோட எதிர்காலம்தான முக்கியம். உங்க மேல தப்பே இல்லை

நீங்க உங்க வேலைகளை விட்ட இடத்துல இருந்து தொடங்குங்க.
உங்க யார் மேலயும் தப்பே இல்லை.
உங்களை மாதிரியானவங்க மத்தியில பிறந்த என் மேலதான் தப்பு.
இன்னும் சொல்லப் போனா நான் பிறந்ததே தப்புத்தான்.
அதான் சீக்கிரமே அனுப்பி வெச்சிட்டீங்க…
ரொம்ப நன்றி… நல்லா இருங்க…
உங்க யார் மேலயும் தப்பு இல்லை
தப்பு என் மேலதான்.
என்று சொல்லியபடியே இருளுக்குள் சென்று மறைகிறது.
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள்.

(திரை)

மைதானத்தில் மூன்றாம் அரங்கு – ஸ்பர்டகஸ்

நாடகப் பிரதி: பாதல் சர்க்கார்,
தமிழில்: கோ ராஜாராம்
நெறியாள்கை: பேராசிரியர் மு ராமசாமி
குரலிசை: அந்திகாற்று பாலா
வீர விளையாட்டுப் பயிற்சி: பழனி, ஜெட்லி சம்பத்
புகைப்பட உதவி: டேனி
தயாரிப்பு: மூன்றாம் அரங்கு
பங்குபெற்ற நடிகர்கள்: பேராசிரியர் மு ராமசாமி, கருணா பிரசாத், யோகேஷ் ராஜேந்திரன், சுபாஷ்கர், கேசவன், பாக்யராஜ், ராஜன், வேலாயுதம், கே சரவணன், ஜெ சரவணன், சதீஷ், பாலமுருகன், அழகுராஜ், செந்தமிழ்ச் செல்வன்
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பயிற்சிப் பள்ளியில் ஹோவர்ட் ஃபாஸ்ட் தனது பயிற்சியை நிறைவு செய்யும் பொழுது, 1888 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “The Ancient Lowly” என்ற புராதன தொழிலாளர்களைப் பற்றிய வரலாற்றுப் புத்தகத்தைப் பரிசாகப் பெறுகிறார். இரண்டு தொகுதிகளைக்கொண்ட  இப்புத்தகம் இரண்டாயிரம் பக்கங்களைக்கொண்ட து. அதிலிருந்துதான் ஸ்பார்டகஸ் பற்றிய கதைக்கரு ஃபாஸ்ட்டுக்கு உதித்திருக்கிறது. அதனை நாவலாக்கும் எண்ணம் நீண்ட நாட்களாக இருந்தாலும் ‘வில் பாயின்ட்’ சிறைவாசம்தான் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது. அதன்படி 1951-ஆம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகம், கடந்த 60 ஆண்டுகளில் உலகின் 100 மொழிகளுக்கும் மேல் மொழி மாற்றம் செய்யப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. “ஸ்பர்டகஸ், கிளாடியேட்டர்” என்ற பெயர்களில் திரைப்படமாகவும் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. “ஹைதராபாத் புக் டிரஸ்ட்” முயற்சி எடுத்து இந்நாவலை தெலுங்கில் வெளியிட்டுள்ளார்கள். அதனையும் ஆங்கிலத்தையும் மூலமாகக்கொண்டு ஏ. ஜி. எத்திராஜிலு இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அதற்கும் முன்பே, ஆங்கில மூலத்தினைக்கொண்டு இந்திய அளவில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர்களில் ஒருவரான பாதல் சர்க்கார் இதனை நாடகமாக்க விரும்பி இருக்கிறார். அரங்க மேடை வடிவத்தில் இந்நாடகத்தை அரங்கேற்ற முடியுமா என்ற தயக்கம் அவருக்கு இருந்திருக்க வேண்டும். என்றாலும் 1972ம் ஆண்டில் அதனை செய்து முடித்தார். திறந்த வெளி நாடக வடிவத்தை முயற்சித்த போதுதான் அதற்கான துணிச்சலையும் பெற்றிருக்கிறார். 1973-ல் ‘சதாப்தி’ என்ற குழுவினரோடு இந்நாடகத்தை முதன் முறையாக அரங்கேற்றி அதன் பின் பல முறை அரங்கேற்றியிருக்கிறார்.

1989-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த பாதல் சர்க்கார் நாடகவிழாவில் மு. ராமசாமியால் முதன்முறையாக இந்நாடகம் தமிழில் அரங்கேற்றப்பட்டது. கோ. ராஜாராம் மொழிபெயர்த்திருந்தார். 86 வயதில் காலஞ்சென்ற பாதல் சர்க்காரின் நினைவை போற்றும் வகையில் கருணா பிரசாத்தின் “மூன்றாம் அரங்கு” இதனை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்த்தி வருகிறார்கள். அதன் காரணமாக தற்கால இளம் நடிகர்களைக்கொண்டு மறுபடியும் DG வைஷ்ணவா கல்லூரி மாணவர்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு “ஸ்பார்டகஸ்” நாடகத்தை மு ராமசாமி நெறியாள்கை செய்திருந்தார். அக்கல்லூரியின் விஸ்காம் துறையினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மைதானத்தை நெருங்கும்போது நறுக்கி வீசப்பட்ட கோரைப் புல்லின் பச்சை வாசம் நாசியில் இறங்கியது. நடிகர்கள் ஒத்திகையில் இருந்தனர். சினிமா மற்றும் நாடகக் கலைஞர் நாசர் ஒத்திகையின் பார்வையாளனாக ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார். குழுக்குழுவாக மாணவர்கள் வரத் துவங்கினர். வந்தவர்கள் எல்லோரும் வட்ட வடிவில் அமர்த்தப்பட்டனர். வட்டத்தின் நான்கு திசையிலும் நுழைவாயில் இருக்குமாறு சற்றே இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.

ஊலையிட்டுக்கொண்டு நான்கு வாயில்களிலும் அடிமைகள் மையம்நோக்கி நகர்கிறார்கள். அதுவே சந்தையாக மாறுகிறது. காற்றைக் கிழித்துக்கொண்டு குதிரைகள் மையம் நோக்கி முன்னேறுகின்றன. வட்டமடிக்கும் குதிரைகளின் குளம்படி சத்தம் அடிமைகளை நடுங்கச்செய்கிறது. சந்தைக்கு வருவோர் அடிமைகளின் புஜபலத்தைப் பார்த்து விலைபேசுகிறார்கள். விலைக்கு வாங்கப்படும் அடிமைகள் எஜமானனின் சொல்லைக் கேட்டு ஆயுள் முழுவதும் நடக்க வேண்டும். விவசாயம், கல்வெட்டுதல், வியாபாரம், தோட்ட வேலை, கால்நடை பராமரிப்பு என எல்லா வேலைகளிலும் இவர்கள் அமர்த்தப்படுவார்கள். அதில் ஒருவருக்கொருவர் சண்டையிடும் வீர விளையாட்டும் அடங்கும்.

பிரபு வம்சத்தினரும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டவர்களும் கூடியுள்ள ஓர் உள்ளரங்கில், விலைக்கு வாங்கி பழக்கப்பட்ட அடிமையானவன் தனக்கு நிகரான மற்றொரு அடிமையோடு விலங்கினைப் போல மோதிச் சண்டையிட வேண்டும். பலம்கொண்ட  அடிமை தன்னால் அடித்து வீழ்த்தப்பட்ட சக அடிமையைக் குத்திக் கொன்று, தன் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன், தன் சக மனிதனோடு மோதிச் சண்டையிட்டு மடியும் இந்நிகழ்வைக் குதூகலத்துடன் கரவொலி எழுப்பி மகிழ்ந்தது கலாச்சாரத்தில் முன்னேறியிருந்த அன்றைய ரோமானிய அரவ வம்சம். இந்தச் சண்டையில் பங்குபெறும் அடிமைகளுக்கு கிளாடியேட்டர் என்று பெயர். ஸ்பார்டகஸ் புகழ்பெற்ற கிளாடியேட்டராக இருந்தவன்.

கிறிஸ்து பிறப்பதற்கு 71 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியிலுள்ள புகழ்பெற்ற நகரில் நிகழும், அரக்கத் தனமான ரோமாபுரி அரசர்களின் பூர்ஷ்வா வாழ்க்கையையும், அதனால் சிக்கலுக்கு உள்ளாகும் அடிமைகளின் எழுச்சிப் போராட்டமுமே இக்தை. ஸ்பார்டகஸ் கொல்லப்பட்ட பிறகு, அவனைக் குறித்த சம்பவங்களை பிரபுக் குலத்தினர் பேசி உரையாடி நினைவு கூர்வதாக இந்நாடகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அடிமை முறை தற்போது ஒழிந்துவிட்டாலும் முள்ளிவாய்க்கால், சானல்4 போன்ற சம்பவங்களின் ஒப்பீட்டுடனே நாடகம் துவங்கியது. அந்த நொடியில் பாரததேசம் ரோம் சாம்ராஜ்ஜியமாக மாறியது.

கையஸ் கிராசஸஸூம், அவன் தங்கை ஹெலினாவும் ரோமபுரியில் இருந்து கேப்புவா செல்லும் சாலையில் பயணிக்கிறார்கள். பாதையின் இரு மருங்கிலும் ஆயிரமாயிரம் சிலுவைகள் காணக் கிடைக்கின்றன. சிலுவையில் அறையப்பட்ட அடிமைகளின் பிணங்களைத் தாண்டியே அழகிய நகரான கேப்புவாவிற்குச் செல்ல வேண்டும். மூன்றாம் படையின் தளபதியாக இருந்த ஃபிலேவியஸ் அடிமைத் தரகனாக அறிமுகமாகிறான். பிட்சை எடுப்பதை காட்டிலும் தரகனாக இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறான். அவனிடம் “இவன்தான் ஸ்பர்டகஸா?” என்று கேட்கிறார்கள்.

“அவன் பிணம்தான் கிடைக்கவில்லையே, தெரியாதா?” என்று பதில் கூறுகிறான்.

“ஸ்பார்டகஸ் சின்னா பின்னமாகிவிட்டான். ஆனால் இதோ இருக்கிறானே இவன் பெயர் பேர்டாக்ஸ். அவனை விட மோசமானவன். ஆனால் உயிருடனே பிடித்துவிட்டார்கள்” என்கிறான் தரகன். மேலும் பிடிபட்டவன் அமைதியாகவே இருந்தான். சிலுவையில் அறையப்பட்டு மரணத்தைத் தழுவும் முன் “நான் திரும்பி வருவேன்… லட்சலட்சமாய் கோடிகோடியாய்..” என்ற அற்புதமான வார்த்தையை சொல்லிச் சென்றதாகக் கூறுகிறான்.

வில்லா சாலேரியா மாளிகையில் ரோம் செனட்டின் படைத் தலைவன் கிராகஸ், அறிஞர் மற்றும் தத்துவன ஞானியான சிகாரோ, பணக்காரனான ஆக்டேநியஸ், பிரபு வம்சத்தவர்களான கையஸ் மற்றும் அவன் தங்கை ஹெலனா ஆகியோர் கூடுகின்றனர். அடிமைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகின்றனர்.

ரம்யமான இரவில் அறிஞர் சிகாரோ பேசத் துவங்குகிறார். “ரோம் நாகரிகமே அடிமைகளின் மீதுதான் நிற்கிறது. இது ஆபத்தான விஷயம். இப்படியே சென்றால் என்றாவது ஒருநாள் நம்மை அவர்கள் அழித்துவிடுவார்கள்” என்கிறார். அதற்கான காரணங்களை ஆதாரத்துடன் முன்மொழிகிறார். மு ராமசாமி இந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி இருந்தார். அவருடைய வயதும், நாடகக் கலையின் முதிற்சியும் அறிஞரின் பாத்திரமாக வெளிப்பட்டது.

சிகாரோவின் வார்த்தைகளை மற்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே “ஸ்பார்டகஸின் கதை என்ன ஆனது?. நர்த்தமாவின் மண்ணுக்கு அவன் இறையாகவில்லையா? அதே நிலைமைதான் மற்ற அடிமைகளுக்கும்” என்று கருத்து சொல்கிறார்கள். நான்கு வருடங்கள் படைத் தளபதியாக இருந்த கிராசிஸ் கொஞ்சம் அழுத்தமாகவே சீருகிறான். ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் கூட்டம் கலைகிறது. கையஸ் மற்றும் ஹெலனா ஆகிய இருவரும் பூங்காவிற்குச் செல்கிறார்கள். சண்டை மைதானத்தின் முதலாளியான லெண்டுலஸ் பாடியாட்டஸ் வருவதற்காக இருவரும் காத்திருக்கிறார்கள். அவனிடம் சண்டை பயின்ற ஸ்பர்டகஸ் பற்றி தெரிந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். அவனோ குடித்துவிட்டு கழிவிறக்கத்தில் பொருமுகிறான். கிளாடியேட்டர் அடிமைகளை சண்டைக்குப் பழக்கும் தன்னையும் தீண்டத்தகாதவனாக பார்க்கும் மேல்தர சமூகத்தை நினைத்துக் குமுறுகிறான். இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்த கருணா பிரசாத் செம்மையாகச் செய்திருந்தார். குதிரையின் குலம்படிச் சத்தத்தை குரல் வழியாக வெளிப்படுத்தியபோது நிஜக் குதிரையே வந்ததுபோல மெய்சிலிர்க்க வைத்தார். ஹெலனாவாக நடித்தவர், சந்தையின் அடிமைகளைப் பார்த்து காமப் பார்வையில் சந்தோஷிப்பது போன்ற முகபாவம் செய்தது யாதார்த்தமாக இருந்தது. ரோம் கலாச்சாரத்தின் காமக் குறியீடாக அவருடைய முகபாவம் அமைந்திருந்தது. முக்கியமான கதாப் பாத்திரங்களைத் தவிர்த்து மற்ற எல்லோரும் ஸ்பார்டகஸாக வந்து சென்றார்கள். புரட்சியின் குறியீடான சிகப்பு நிற துணியே அவனை அடையாளப்படுத்துகிறது. சோக இழையோடும் அந்திகாற்று பாலாவின் குரல் கிளாடியேட்டர்களின் துயரை காற்றில் நிரப்பியது. நாடகம் முடிந்தும் அதன் ரம்யம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

“அடிமைமுறை தற்போது முற்றிலும் ஒழிந்துவிட்டது. அப்படி இருக்கையில் இதுபோன்ற நாடகங்கள் தேவைதானா?” என்று நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களில் இருந்த நண்பரொருவர் என்னிடம் கேட்டார்.

அடிமைகளை வைத்துக் கொள்வதை கௌரவமாக நினைத்த நாகரிகம் முற்றிலும் மாறி, நவீன நாகரிகத்தில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறோம். என்றாலும் ரத்தம் சொட்டச்சொட்ட முகத்தில் தாக்கி குத்துச்சண்டை விளையாடுகிறார்கள். அதற்கான பெரிய வியாபாரமே விளையாட்டுச் சந்தையில் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அதிவேக கார் பந்தையங்கள் உலகெல்லாம் நடக்கின்றன. பணம் படைத்தவர்கள் கண்டு ரசிக்கும் விளையாட்டில் இதுவும் ஒன்று. தனிமனிதச் சுதந்திரம் கட்டுக்கோப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும், பண அடிமைகள் விருப்பத்துடன் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கிறார்கள். உலகமெல்லாம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பெரு நிறுவனங்கள் இதற்கான பணத்தை வாரி இறைக்கின்றன. மொழி, இனம், தேசம் கடந்து பார்வையாளர்கள் இதனை ரசிக்கிறார்கள். ரோம பிரபுக்களுக்கும், இதுபோன்ற பார்வையாளர்களுக்கும் என்ன வித்யாசம்? மரபில் வந்த அரக்கத்தனத்தின் புத்தாக்க வடிவம் தானே இது.

“இது போன்ற நாடகங்கள் தேவையா? ஸ்பர்டகஸ் இருக்கிறானா? இறந்துவிட்டானா?” என்பது போன்ற புதிர் கேள்விகளின் விடையைத் தேடுவதல்ல இதுபோன்ற நிகழ்த்துக் கலையின் நோக்கம். அவன் கொல்லப்பட்ட பின்பு, அடிமைகளின் சார்பாக தீபத்தை ஏந்தி யார் வேண்டுமானாலும் ஸ்பார்டகஸாக மாறமுடியும் என்ற நிதர்சன உண்மையை அனுபவமாக பரிமாற்றுவதே இதன் உள்ளர்த்தம். பணத்தாலும், அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ள சமூகம் அடிமை முறையை வேறுவிதத்தில் உருமாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப அடிமைத் தலைவனும் ஜனிக்க வேண்டியது அவசியம் இருக்கிறது. அதன் கருவை கலைதான் சுமக்க வேண்டும். நம் கலைஞர்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். பிரசவ நாளை எதிர்பார்த்து.

(முற்றும்)

ஒப்பனை கலைந்த வாழ்க்கை – பாலாமணியம்மாள்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி. ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில் செல்வி. பாலாமணி அம்மாள் குறிப்பிடத்தக்கவர்.

அந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த மொத்த நாடக சபைகள் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறுசபைகளைப் பெண்களே ஏற்று நடத்தி வந்தனர். அவற்றுள் ஒன்று செல்வி. பாலாமணி அம்மாளும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் இணைந்து நடத்திய ‘பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி’ ஆகும். இதில் முழுவதும் பெண்களே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 70 பெண்கள்.

திருமணம் தன் நாடக வாழ்வைப் பாதிக்கும் என்பதால் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் காசி விசுவநாத முதலியாரின் டம்பாச்சாரி விலாசத்தை (தமிழில் முதல் சமூக நாடகம்) மீண்டும் மீண்டும் அரங்கேற்றிப் பேரும் புகழும் பெற்றதுடன் நல்ல வருமானத்தையும் ஈட்டினார். அக்காலத்திலிருந்த பெண்களின் நாடகச் சபைகளில் இவரது சபைதான் மிகவும் புகழ்பெற்றது. செல்வி. பாலாமணி அம்மாளை மக்கள் ‘நாடக அரசி’ என்று மெச்சினர். கி.பி., 1880 – 1890களில் அவர் மிகப்புகழோடு இருந்தார். நாடகங்களால் ஈட்டிய பணத்தில், பெரும் பகுதியை கோவில் திருப்பணிகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்குமே செலவிட்டார். குடந்தை கும்பேஸ்வரர் கோவிலிலுள்ள திருமண மண்டபம் இவர் பெயரில் உள்ளது.

நாடகங்களில் பலவற்றை முதலாவதாகவும் புதுமையாகவும் செய்த பாலாமணி அம்மாளின் நாடகங்களைக் காண பார்வையாளர்கள் பெருமளவில் கூடுவர். கும்பகோணத்தில் இவரது நாடகம் இரவு ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகும். இதற்காகவே சிறப்பு ரயில் ஒன்று 40 கி.மீ. தொலைவில் உள்ள மாயவரத்திலிருந்து விடப்பட்டது. அது மாயவரத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு ஒரு ரயில் கும்பகோணத்திற்கு வரும். அதேபோல எட்டரை மணிக்கு திருச்சியிலிருந்து ஒரு ரயில் வரும். அந்த ரயில்கள், கும்பகோணத்தில் நின்று விட்டு, இரவு மூன்று மணிக்கு மீண்டும் புறப்பட்டு, மாயவரத்துக்கும், திருச்சிக்கும் போய்விடும். பாலாமணி நாடகங்களைப் பார்க்க ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக விடப்பட்ட காரணத்தால் அந்த ரயில்களை, ’பாலாமணி ஸ்பெஷல்’ என்று அழைத்தனர்.

‘தாரா சசாங்கம்’ என்ற நாடகத்தில் அவர் கதாநாயகி தாரையாக வந்து, காதலன் சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாக ஒரு காட்சி வரும். குறிப்பாக  ’உடலில் உடையின்றி எண்ணெய் தேய்த்துவிட வேண்டும்’ என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதான காட்சியாக அது அமைந்திருந்தது. அக்காட்சியைக் காண்பதற்காகப் ‘பாலாமணி ஸ்பெஷல்’ ரயிலில் வந்திறங்குவர். அக்காட்சியில் அவர் உடலோடு ஒட்டிய துணியினை அணிந்திருப்பது பார்வையாளர்களுக்குத் தெரியாது. இந்த நாடகம் பற்றி 08.07.1928ஆம் நாளிட்ட குடி அரசு இதழில் உரையாடல் வடிவில் நகைச்சுவையுடன் கூடிய சமுதாயச் சிந்தனை, புராணம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

“கும்பகோணத்தில், பாலாமணியின் வீடு பெரிய அரண்மனை போல இருக்கும். வீட்டில், ஆண்களும், பெண்களுமாக 50, 60 பணியாட்கள் இருப்பர். கல்யாண வீடு போல தினமும் சமையல் நடக்கும். நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டியில்தான் பாலாமணி அம்மாள் போவார். வெல்வெட் திரைச் சீலைகளால் அதன் பக்கவாட்டுப் பகுதிகள் மூடப்பட்டிருக்கும். வண்டியைக் காண்பதன் மூலமே மானசீகமாக பாலாமணியைப் பார்த்தது போல இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் பெருமூச்சு விடுவர். அவரை நாடகங்களில் ஒப்பனையுடன் தானே பார்க்கிறோம். நேராகப் பார்க்க வேண்டுமென்று நீண்ட தூர கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளிலும், கால்நடையாகவும் வந்து, அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பர். இப்படியே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பர். பாலாமணியின் வீட்டு முன்புறம் மாடியில் ஒரு பெரிய உப்பரிகை இருக்கும். அங்கு சென்று பாலாமணி தன்னுடைய தலைக் கேசத்தை கோதி, அது காய்வதற்காக அங்குமிங்கும் நடப்பார். வாசலில் நின்று கொண்டிருக்கும் மக்கள், பாலாமணியை வானிலிருந்து இறங்கிய தேவதை என நினைத்து, திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பர்” என்று நடிகர் எம்.கே.ராதா குறிப்பிட்டுள்ளார்.

தான் ஈட்டிய பணத்தில் எதிர்காலத்திற்கென ஏதும் அவர் சேமித்துவைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டு மதுரைக்குச் சென்று ஒரு சிறிய குடிசை போன்ற இடத்தில் தங்கினார். நாடகக் குழுவில் உடனிருந்த மற்ற பெண்கள் எல்லாம் வெவ்வேறு இடங்களுக்குச்  சென்று விட்டனர். அறுபத்து ஐந்து வயதில் செல்வி. பாலாமணியம்மாள் இறந்தார்.   நாடக நடிகர்களின் எளிய நிதியுதவியோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பார்வை:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF

http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034113.htm

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=4676&ncat=2

http://cinema.natpu.in/thiraippadam/cinebits/padal.php

http://www.tamilvu.org/courses/degree/p102/p1024/html/p1024112.htm

http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034332.htm

http://amuthamthamizh.blogspot.com/2010/12/blog-post_13.html

http://periyardk.org/PHP/Details.php?key1=Kudiyarasu&key2=1928&fileName=Jul&cCount=2

முனைவர் ப. சரவணன்

ஏக்கத்தின் குரல் – கூத்துப்பட்டறையின் இரு நாடகங்களை முன்வைத்து

பதினைந்து வருடங்களுக்கு முன் சண்டிகரில் ஒரு நாடகம் நடக்கிறது. ஒத்திகைக்குப் பின் நாடகக்காரி விரதம் இருப்பது போல் தனித்திருக்கிறாள். பிராணாயாமம் அவளை விழித்திருக்கச் செய்கிறது. ரசிகர்களின் பசிக்காக மேடையேறியவள் சபையினரை வணங்குகிறாள். மீண்டும் வணங்குகிறாள். மறுபடியும் மறுபடியும் வணங்குகிறாள். நாட்டியம், கிராமியக் கலை, சிலம்பாட்டம் உள்ளிட்ட சில பாரம்பரிய கலை வடிவங்களின் குரு வணக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வார்த்தைகளற்ற பாவங்களை உடலசைவில் உண்டாக்கி, அதையே படிமமாகக் கொண்டு – ஒரு பெண் தனக்குள் இருக்கும் அக்னியை (சக்தியை) வெளிக்கொணர்வதாக மேடையில் நாடகம் அரங்கேறுகிறது. கூத்துப்பட்டறையில் தன்னை புடம் போட்டுக்கொண்ட கலைராணியின் ‘பெண்’ என்ற இந்நாடகம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறுகிறது.

அரங்கின் மூலையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த, கோவாவைச் சோந்த ஹாட்மேன் டிசூசா என்ற நாடக இயக்குநர் கலைராணியின் திறமையால் கவரப்பட்டு தன்னுடன் ஒரு நாடகம் செய்ய அழைக்கிறார். அதற்காக உகாண்டா கவிஞர் Okot p’Bitek’ எழுதிய ‘Song of Lowino’ என்ற கவிதையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கணவனை இழந்த பழங்குடிப் பெண் ஒருத்தி தன் மணவாழ்க்கையில் அனுபவிக்க நேர்ந்த ஒடுக்குமுறை அவஸ்தைகளையே இக்கவிதை பேசுகிறது. ஜாஸ் இசையின் பின்னணியில் ஆங்கிலத்தில் போடப்பட்ட இந்நாடகம் பின்னர் மு. நடேஷ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, இந்திய வாத்தியக் கருவிகளின் இசைப் பின்னணியில், 1994 ம் ஆண்டிலிருந்து பல மேடைகளில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூத்துப்பட்டறை நவராத்திரி விழாவிற்காக நீண்டநாள் கழித்து மீண்டுமொரு முறை கடந்த வியாழனன்று அரங்கேற்றப்பட்டது.

செம்மண் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் கொலுவில் வைக்கப்பட்ட பொம்மைகள் பிரகாசிக்கின்றன. பொம்மையின் பல வண்ணத் திட்டுக்கள் இருண்ட அரங்கில் தெறிக்கின்றன. அமைதியை குலைக்கும் வகையில் பறையொலி முழக்கம் அதிர்வை உண்டாக்குகிறது. பறையொலி தேய்ந்து பூனையின் கத்தல் லேசாக ஒலிக்கிறது. விம்மிக்கொண்டே தன்னுடைய கணவன் இறந்ததாக நினைத்து அழத் தொடங்குகிறாள் பழங்குடிப் பெண் லெவினோ. ஆப்ரிக்க தொல்குடி அச்சோலி மரபில் வாழும் இவளுக்கும், மேற்கத்திய மோகத்தில் திளைக்கும் தன் கணவன் ஒகோல் என்பவனுக்குமான முரண் எண்ணங்களே நாடகத்தின் அடிநாதம். கலாசாரத்தையும், சகமனித உணர்வுகளையும் மதிக்கத் தெரியாத தன்னுடைய கணவன் இறந்ததாக நினைத்து அழுகிறாள்.

ஒகோல் இறந்தான். ஊர் தலைவனின் மகன், எருதின் மைந்தன், அளவில்லாத வன்முறைகளால் கொல்லப்பட்டான். ஓர் அசைவில்லாத குட்டை போல பிணமாகக் கிடக்கிறான்’ என்ற ஒப்பாரியுடன் பிதற்றலை ஆரம்பிக்கிறாள். சொந்த கலாசாரத்தை மறந்து மேற்கத்திய மோகத்தில் வாழும் அவனைச் சாடுகிறாள். பாழடைந்த கட்டடத்தில் விட்டுவிட்டுப் போன பயன்படுத்த முடியாத பொருளைப் போலவும், காட்டு விலங்கினைப் போலவும் தன்னை பாவித்த கணவனை கொச்சையான அசைவுகளின் மூலம் நையாண்டி செய்கிறாள். தன்னுடைய முன்னோர்களின் மரபுசார் கலாசாரத்தை அன்றாட வாழ்வில் பின்பற்றியதை நினைத்து கர்வமும் கொள்கிறாள். தன்னுடைய இயலாமையை நினைத்து கொலுவிற்கு மத்தியில் நின்று லெவினோ மூர்க்கமாக அழுகிறாள். சாம்பலை எடுத்துத் தூவிக்கொண்டே ருத்ரதாண்டவம் ஆடுகிறாள். அப்பொழுது பழைய நினைவுகளின் பொருட்டு தலையிலும், பாசத்தின் வெளிப்பாடாக மார்பிலும், விரக வேதனையில் பெண்ணுறுப்பிலும் அடித்துக்கொண்டு அழுகிறாள்.

நவீன உலகுடன் தொடர்பற்று வாழும் லெவினோவை முற்றிலும் வெறுக்கிறான் ஒகோல். அவனுடைய நெருக்கத்தையும், அந்தரங்க உணர்வுகளை நேசமுடன் பகிர்ந்து கொள்ளவும் லெவினோ விரும்புகிறாள். அது முடியாமல் போகவே தனிமையில் பேசிக்கொள்கிறாள். உலகத்தின் ஆண்கள் தங்களை நேசிக்கும் பெண்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்துவதே இல்லை. அதற்கு பெரும்பாலான ஆண்கள் முயல்வதுகூட இல்லை. உலகமெல்லாம் இந்த முரண் பொருந்திப் போவதால் காலனியாதிக்க கலாசார நகலெடுப்பின் குறியீடாகவே ஓகோலை கருத வேண்டியிருக்கிறது. தேவையான இடத்தில் பறவைகளின் சப்தங்களையும், விலங்குகளின் கேவல்களையும் கச்சிதமாகப் பயன்படுத்தி நாடகத்தின் உணர்ச்சி வெளிப்பாட்டை வேறு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறார் கலைராணி.

சூரியனின் மறைவிற்காக காத்திருக்கிறாள் லெவினோ. “அவன் வருவானா? அடுத்து சாவதற்குமுன் இதே இடத்திற்கு நேரத்தில் வந்து சேர்வானா?” என்று தனிமையில் ஏங்குகிறாள். ‘பிறப்புறுப்பை பித்தநீர் எரிக்கிறது. அவயங்கள் காற்றில் அலைக்கழிக்கப் படும் அதே நேரத்தில் அவர்களது கொட்டைகள் வகுப்பறையில் நசுக்கப்பட்டன, பெரிய பக்கங்களுக்கு இடையே’ என்று, ஏட்டுப்படிப்பின் மேற்கத்திய மோகத்தில் தறிகெட்டுத் திரியும் அறிவுஜீவி ஆண்களை விரையடிக்கப்பட்ட வண்டி மாடுகளாகச் சித்தரிக்கிறாள். சிலர் கோவில் மாடுகளாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே. மேற்கின் சூரியன் சீக்கிரமே அஸ்தமிக்கும். அவளுடைய கணவன் ஒகோலும் வந்து சேர்வான். இரவின் முடிவில் உதயமாகும் விடிகாலைச் சூரியனை பூனை விழுங்கி சப்தமிடும் அதே வேலையில் லெவினோவின் குரல் மீண்டும் ஒலிக்கத் துவங்கும்.

சாங் ஆஃப் லெவினோ–வைத் தொடர்ந்து நந்திகிராமில் 1993ம் ஆண்டு முதன்முறையாக பரிசோதனை முயற்சியில் அரங்கேற்றப்பட்ட கலைராணியின் மற்றொரு நாடகமான ‘வருகலாமோ அய்யா… நிகழ்த்தப்பட்டது.

ஓர் ஊர்வலத்தில் தேரானது நகரும்பொழுது நாதஸ்வரத்தில் மல்லாரி ராகம் வாசிப்பார்கள். அதற்குமுன் பறை மேளம் கொட்டப்பட வேண்டுமென்பது ஐதீகம். அப்பொழுதுதான் தேர் புறப்படும். இதனை நா.முத்துசாமி தான் எழுதிய ‘England’ என்ற நாடகத்தில் பயன்படுத்தி இருப்பார்.

‘மல்லாரியில் நகராத தேருக்கு
பறை கொட்டும் வேண்டும்’

இதனை ஆரம்ப வரிகளாக வைத்து, நந்தனார் சரித்திரக் கீர்த்தனையின் பல்லவி மற்றும் அனுபல்லவியைத் தவிர்த்துவிட்டு சரணத்தை மட்டுமே முழுவதுமாக எடுத்துக்கொண்டு, நா.முத்துசாமியின் வரிகளுக்கு அடுத்து வருமாறு அமைந்த கலைராணியின் தனிநடிப்பு பல பரிசோதனை முயற்சிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பக்தியை லட்சியமாகக் கொண்ட நந்தனார் தில்லை நடராஜனை தரிசிக்க பேராவல் கொள்ளும் பகுதிகளை பரதத்தின் அபிநய சாயலிலும், ஒடுக்கப்படும் பெண்களின் குரலாக வெளிப்படும் கலைராணியின் உள்ளார்த்த சுயபரிசோதனைப் பகுதிகளை நவீனத்தின் சாயலிலும் அமைத்து திறம்படச் செய்திருந்தார். ஓர் ஆணின் குரலில் நந்தனாராகவும், அதேவேளையில்  ஒடுக்கப்படும் பெண்களின் குரலாகவும் ஒலிப்பதால் இருபாலினரையும் அடையாளப்படுத்தும் விதமாக உடையலங்காரத்தில் கவனம் செலுத்தியிருந்தார்.

கோபலகிருஷ்ண பாரதியார் தான் இயற்றிய நந்தனார் சரித்திர பாடல்களில் தில்லை நடராஜனின் அருங்குணத்தையும், நந்தனாரது எளிமையான திட பக்தியையும் புகழ்ந்துப் பாடியுள்ளார். நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் கோவிலுக்குள் நுழைய தடைவிதிக்கிறார்கள். எனவே சந்நிதிக்குள் நுழைந்து மூலவரை தரிசிக்க முடியாமல் தவிக்கிறார்.

திட பக்தியால் ஈசனின் மனம் குளிர்ந்து, நந்தனின் கனவில் தோன்றி “நான் உன்னைப் பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன்” என்று உறுதிமொழி கொடுக்கிறார். நந்தனுக்கு சந்தேகம் வலுக்கிறது. “இவ்வளவு நாள் தன்னை கீழ் சாதியன் என்று கோவிலுக்குள் நுழையவிடாத சமூகம் இதற்கு எப்படி சம்மதிப்பார்கள்?” என்ற பயம் அவருக்கு ஏற்படுகிறது. தன்னுடைய கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

எனவே ‘உன் அருகில் நான் வருகலாமோ ஐயா’ என்று சிவனை நோக்கி கசிந்துருகிப் பாடுகிறார். புண்ணியம் செய்யாததால் இந்தப் பூவுலகில் கீழ்சாதியில் பிறந்து, சந்நிதிக்கு வெளியே நின்று உன் தரிசனம் கிடைக்காமல் தவிக்கிறேன்’ என்று ஏங்குகிறார்.

“பூமியில் புலையனாய்ப் பிறந்தேனே
புண்ணியம் செய்யாமல் இருந்தேனே
சாமி உன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே (வருகலாமோ ஐயா…)”

நந்தனார் தில்லை அம்பல நடராஜனை வெளியில் தேடுகிறார். சிவம்தான் அவருக்கு லட்சியம். ஆருத்ரா நன்னாளில் நடராஜரை நேரில் தரிசித்து அவருடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள். ஆகவே பக்தி வழியில் மென்மையாக வெளிப்படுகிறார். நந்தனார் சிவத்தில் கலந்தபோது கலைராணி ரசிகர்களுடன் கலந்ததை நான் உணர்ந்தேன். ஒரு நடிகையாகவும் ஒரு ரசிகனாகவும் இது ஓர் உச்சம். கலையே தெய்வம் என்ற அகம் வெளிப்படும் தருணம். சாமானியர்களின் லட்சியம் இருப்பைச் சார்ந்தது. இருப்பின் தேவைகளைச் சார்ந்தது. வாழ்வின் இருப்பில் கோவம் வெறுப்பு, காதல், தோழமை என்று எல்லாமே கலந்திருக்கும். அதற்கேற்பவே நம் குரல் அமையும்.

இரண்டு வெவ்வேறு முரண் தன்மைக்கேற்ப குரலையும், உடல் மொழியையும் சரியாக வெளிக்கொணர்வது மிகக் கடினமான செயல். கலைராணிக்கு அது சர்வ சாதாரணமாக வாய்க்கிறது.

இயக்கி நடித்தவர்: நடிகை கலைராணி
அரங்க ஒளியமைப்பு: ஆவணப்பட இயக்குனர் R.V.ரமணி
இசை: கருணா பிரசாத், மணிகண்டன், சரத் மற்றும் பரத்
அரங்க வடிவமைப்பு: கலைச் செல்வன்.
பின்னரங்க உதவி: பிரபு.

– கிருஷ்ண பிரபு

பயன்பட்ட தளங்கள்:

1. http://www.youtube.com/watch?v=mrvk-aFVjUw
2. http://kalairaani.weebly.com