டெசோவும் ஈழ அரசியலும் – ஒரு பேட்டி

‘வெகுஜன ஊடகங்களால் மக்களுக்குச் சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட செய்திகளைத் தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்’ என்று அறிவிக்கும் கலையரசன் ஓர் ஈழ அகதி. தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். சர்வதேச அரசியல், வரலாறு, சமூகவியல், ஈழம் என்று இணையத்தில் விரிவாக எழுதிவருகிறார். முகவிரி : http://kalaiy.blogspot.in/ டெசோ குறித்தும் ஈழ அரசியல் குறித்தும் தன் கருத்துகளை மருதனுடன்  இங்கே  சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

டெசோ மாநாட்டை நடத்துவதற்கு, ஈழத் தமிழர்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு, தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு திமுகவுக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

கலையரசன் : தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தமது எல்லைக்குட்பட்ட ஈழ அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. எல்லாக் கட்சிகளும், தமது அரசியல் இலாபத்திற்காக ஈழம் பற்றி பேசுவது வாடிக்கை. தற்பொழுது பதவியிழந்த திமுக வும், ஈழத்தைக் கையில் எடுப்பதால் எதையும் இழக்கப் போவதில்லை. திமுக மட்டுமல்ல, தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தகுதி இருப்பதாக கூற முடியாது. இந்திய மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறி எந்தக் கட்சியும் செயற்படப் போவதில்லை.

ஈழம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு இந்த நிமிடம் வரை திமுகவுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் இரண்டில் எது சரியான பதம்?

கலையரசன்: போர் தொடங்குவதற்கு முன்னர் இலங்கைத் தமிழர் என்ற பதம் பயன்பாட்டில் இருந்தது. இன்றைக்கும் அதுவே உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றது. போர் நடந்த முப்பதாண்டு காலத்தில் ஈழத்தமிழர் என்ற பதம் செல்வாக்குப் பெற்றது. தமிழகத்தில் இருந்துதான் அத்தகைய அடையாளப்படுத்தல் தோன்றியது.

ஈழத் தமிழர் என்பது பிரிவினை என்ற அர்த்தம் கொண்டுள்ளதாக, இலங்கை அரசும் இந்திய அரசும் நம்புகின்றன. அதனால்தான் மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்திய, மத்திய அரசு அந்தப் பதத்தை பயன்படுத்தி வந்தது. ஈழத் தமிழர், இலங்கைத் தமிழர் இரண்டுமே தற்பொழுது ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது. என்னைப் பொறுத்த வரையில், இரண்டுமே ஒன்று தான்.

இலங்கைத் தமிழ் தேசியம், ஈழத் தமிழ் தேசியம் என்று எப்படி அழைத்தாலும், இலங்கையில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களின் தேசிய அடையாளமாகப் பார்க்கப்படுவதில் தவறில்லை. தேசிய இனப்பிரச்சினை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகள் ஈழத் தமிழர் என்பதை, ஈழம் என்ற தனி நாட்டைச் சேர்ந்தவர்களாக கருதுகின்றனர். அதே எண்ணத்தில்தான் மத்திய அரசும் எதிர்க்கின்றது. தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழர் என்பதை ஒரு பிரிவினைக் குறியீடாக காட்டிக் கொள்ளும் வரையில், மத்திய அரசின் எதிர்ப்பும் தொடரவே செய்யும். ஏனெனில், இலங்கை இரண்டாகப் பிரிந்தால், அது இந்தியாவிலும் எதிரொலிக்கும்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தமிழகத்தால் தடுத்திருக்கமுடியுமா?

கலையரசன் : தமிழக மாநில அரசுக்கு அதிக அதிகாரம் இல்லா விட்டாலும், அரசியல் தலைவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்திருக்க முடியும். இதனால், திமுக மக்கள் ஆதரவையும் பெருக்கி இருக்கலாம். இந்த விடயத்தில், மத்திய அரசை பகைத்துக் கொள்ள திமுக தயாராக இருக்கவில்லை. அதே நேரம், கடந்த காலங்களில் புலிகளின் தொடர்பால் ஏற்பட்ட மனக்கசப்பும் அவர்களை எதிர்நிலையில் தள்ளி இருந்தது. புலிகளை ஆதரித்தவர்களை விட எதிர்த்தவர்களின் அணி பலமாக இருந்தது. அதே நேரம், எதிர்க் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், பொது வேலைநிறுத்தங்களையும் ஒழுங்கு படுத்தி இருக்க முடியும். அது நடக்காமல் தடுப்பதில், மத்திய அரசு அதிக கவனம் எடுத்து செயற்பட்டது. அதி தீவிர புலி ஆதரவு கட்சிகளும், ஒரு எல்லைக்கப்பால் செல்ல விடாது பார்த்துக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இருந்து யாரும் கடல் தாண்டி வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை இலங்கை அரசுக்கும் இருந்துள்ளது. ஏற்கனவே இந்திய மத்திய அரசு, தமிழகத்து நிலைமையை ஆய்வு செய்து அறிவித்துக் கொண்டிருந்தது.

இப்போதிருக்கும் நிலை. தனி நாடாகப் பிரிதல். கூடுதல் அதிகாரம். இந்த மூன்றில் எது ஈழத் தமிழர்களுக்கு நல்லது? அல்லது, வேறு மாற்று உள்ளதா?

கலையரசன் : உண்மையில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழீழம் என்ற பிரிவினையை அதிகபட்ச கோரிக்கையாக வைத்துக் கொண்டே, நடைமுறையில் சமஷ்டி அதிகாரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணி, ‘பாராளுமன்ற பாதையில் தமிழீழம்’ காணும் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இது வெளிப்படையாக தெரிந்தது. புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அது பற்றித் தான் பேசப்பட்டது. அதாவது. தமிழீழப் பிரிவினையை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள முன்வராது என்பது பிரபாகரன் உட்பட பல தலைவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழம் அடையாளம் என்பது பிரபாகரனின் தளராத நம்பிக்கையாக இருந்தது.

புலிகளைப் பொறுத்த வரையில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் தீர்வுக்கான வெளிப்பாடல்ல. அது ஒரு யுத்த நிறுத்தம், மீண்டும் போருக்கான தயார்படுத்தல் மட்டுமே. இறுதியில், அதையும் இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதாவது, சர்வதேச சமூகம் (மேற்கத்திய நாடுகள்) பிரிவினைக்கு எதிராக இருந்ததை சரியாகக் கணக்குப் போட்டிருந்தது. 90 % மேற்கத்திய சார்பு வலதுசாரிகளைக் கொண்ட ஈழத் தமிழரின் தலைமை அதனை புரிந்து கொள்ளாதது வியப்புக்குரியது. அமெரிக்கா மட்டுமல்ல, ஐ.நா. வரை சென்று முறையிட்டாலும், இலங்கை அரசுடன் பேசி தீர்வைக் காணுமாறு கூறுகின்றனர். அதன் அர்த்தம், தனி நாடாக பிரிவதென்பது சாத்தியமல்ல. ஆனால், முடிந்தளவு அதிகளவு அதிகாரங்களை பெறுவதற்கு முயலலாம். அந்த முடிவுக்கு வருவது துரோகம் என்று சொல்பவர்களுக்கு, தமிழ் மக்கள் மீது அக்கறை இருப்பதாக நினைக்கவில்லை. தனிநாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்வதன் மூலம் ஆதாயம் பெறுவதே அவர்களது குறிக்கோளாக உள்ளது.

ஒப்பீட்டளவில் இலங்கை ஆசியாவில் பலம் குறைந்த ஒரு சிறிய தீவு. எப்படி அவர்களால் துணிச்சலாக தமிழர்களை ஒடுக்கவும் அவர்கள்மீது போர் தொடுக்கவும் விளைவுகள் குறித்து அச்சமில்லாமல் இருக்கவும் முடிகிறது?

கலையரசன் : ஆசியாவில் சிறிய நாடாக இருந்த போதிலும், மாறி மாறி பலமான வல்லரசுகளுடன் நல்லுறவைப் பேணும் இராஜதந்திரத்தை இலங்கை தெரிந்து வைத்திருக்கிறது. சுதந்திரமடைந்த காலத்தில் பிரிட்டன், பின்னர் இந்தியா, சோவியத் யூனியன், இப்பொழுது அமெரிக்கா, சீனா என்று எதிரும் புதிருமான வல்லரசுகளுடன் இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கம் உறவுகளைப் பேணி வந்துள்ளது. எந்த வல்லரசும் அரசைக் கவிழ்ப்பதற்கு முன்னர், அரசே அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும். காலனிய காலத்துக்கு முன்னர், இலங்கையில் சிங்களவர், தமிழர் பிரச்சினை இருக்கவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் அந்தப் பிரிவினையை திட்டமிட்டு உருவாக்கினார்கள். அதனை வளர்ப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். ஜனநாயகம், பாராளுமன்றம், தேர்தல் போன்ற அரசியல் விளையாட்டுகளைச் சரியாக நடத்திக் கொண்டிருக்கும் வரையில், மேற்கத்திய நாடுகள் தலையிடப் போவதில்லை. இதெல்லாம் இலங்கை அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறு நடந்து கொள்கிறார்கள்.

***

ராமராஜன் : ‘ எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!’

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராமராஜன் இடம்பெறுகிறார். திங்கள் முலம் வெள்ளிவரை இரவு பத்து மணிக்கு. முதல் நாள் நிகழ்ச்சி பார்த்தேன். கல்கி பத்திரிகையில் இருந்தபோது
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ராமராஜனைச் சந்தித்துப் பேசியது நினைவுக்கு வந்தது.
கிராமிய சிறப்பிதழ் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டோம். யார்,யாரையெல்லாம் பேட்டி எடுக்கலாம், எதைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதலாம் என்று பட்டியல் போட்டபோது ராமராஜனின் பேட்டி அவசியம் இடம்பெறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரை எப்படிப் பிடிப்பது? எங்கே தேடுவது? யாரைக் கேட்டால் விவரம் தெரியும்? படங்கள் வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.. செல் வைத்திருப்பார். ஆனால் யாரிடம் கிடைக்கும்?சில நாள்கள் கழித்து தினந்தந்தி படித்துக்கொண்டிருந்தேன். ஏதோவொரு கோவில் திருவிழாவில் நடக்க உள்ள கலைநிகழ்ச்சியில் ராமராஜன் கலந்து கொள்வதாக விளம்பரம் வந்திருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்று கடையம் ராஜுவின் பெயர். பக்கத்தில் அவருடைய மொபைல் எண். சட்டென்று அந்த எண்ணைத் தொடர்புகொண்டேன். என்னிடம் நம்பர் இல்ல.. விஜயமுரளி நம்பர் தரேன்.. அவர்கிட்ட இருக்கும்.. என்றார்.ராமராஜனின் பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜயமுரளி. அவர் மூலம் ராமராஜனின் எண் கிடைத்தது. பேசினேன். டெல்லியில் இருப்பதாகச் சொன்னார். அவர் அப்போது எம்.பியாகவும் இல்லை. ஆனாலும் டெல்லியில் இருப்பதாகச் சொல்கிறார். நம்பித்தானே ஆகவேண்டும். சென்னை வந்ததும் பேசுவதாகச் சொன்னார். சொன்னபடியே பேசினார்.

பேட்டி வேண்டும் என்றேன். என்னை எதுக்கு சார் பேட்டியெடுக்கறீங்க? நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஒண்ணும் கஷ்டப்படல சார்.. வேண்டாம் சார்.. விடாப்பிடியாக மறுத்தார். தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு சம்மதித்தார். கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் பக்கத்தில் தங்கியிருப்பதாகச் சொனனர். ஃபோட்டோகிராபர் ராஜன் சகிதம் வீட்டுக்குச் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் வரவேற்பறை. வாசலுக்கு இடதுபக்கம் ஒரு அறை. அங்கே முகம் பார்க்கும் கண்ணாடி தெரிந்தது. ஒருவர் அவசரம் அவசரமாக முகத்துக்குப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தார். ஊதிப்போன முகம். பெரிய சைஸ் கண்கள். வகிடு எடுத்து சீவிய தலை. வேட்டி கட்டிய முதியவர் ஒருவர் எங்களை வரவேற்று, உட்காரச் சொன்னார். அமர்ந்தோம்.

வந்துட்டாங்களா.. வந்துட்டாங்களா… என்ற குரல் அவ்வப்போது கேட்டது. சில நிமிடங்களில் அறையில் இருந்து வெளியே வந்தார் ராமராஜன். ட்ரேட்மார்க் சிவப்பு, பச்சை கலந்த சட்டை. வெள்ளை பேண்ட். நெற்றியில் சந்தனப்பொட்டு. கொஞ்சம் கீழே குங்குமம். கோல்ட் வாட்ச். குண்டு சைஸ் மோதிரம். வித்தியாசமான பர்ஃப்யூம்.
பரஸ்பர அறிமுகங்கள் முடிந்ததும் பேட்டி தொடங்கியது. உண்மையில் பேட்டி கொடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. என்ன சார்… என்னைய எதுக்கு சார் பேட்டி.. என்றார். கிராமிய சிறப்பிதழ்.. நீங்கள் இல்லாமல் எப்படி? என்றேன். கிராமம்னா நானா சார்… கிராமம்னா பாரதிராஜா சாரை எடுங்க.. இசைஞானியை எடுங்க.. என்னைய போயி எதுக்கு சார்.. தயக்கம் அகலவில்லை. பிறகு பேசத் தொடங்கினார்.மேலூரில் வளர்ந்த கதையைச் சொன்னார். மூன்று ஷோவும் சினிமா பார்ப்பதற்காகவே தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையில் சேர்ந்ததாகச் சொன்னார். பிறகு மானேஜர் வேலைக்கு வந்தபிறகும் சினிமா பார்ப்பதை நிறுத்தவில்லை என்றார். சிரித்துக்கொண்டேன்.பிணமாக நடிச்சாலும் சரி, சினிமாவுல ஒரு சீன்ல வந்துடணும் என்றார். எம்.ஜி.ஆர் வெறியனாகத் திரிந்த நினைவுகளை விவரித்தபோது அவர் முகத்தில் பரவசம். சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்ததையும் உறவினர்கள் உதவிய கதையையும் விவரிக்கும்போது ராமராஜனின் கண்களில் நீர் முட்டியது. பல விஷயங்கள் பேசினார். பேச்சுக்குப் பேச்சு சினிமா.. சினிமா.. சினிமா.

இடையிடையே ஒரு விஷயத்தை அழுத்திச் சொன்னார். சார்… நான் சோத்துக்குக் கஷ்டப்படல… நல்லா இருக்கேன்… கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பத்திரிகைகள்ல அப்படி எழுதிட்டாங்க.. நீங்களும் அப்படி பண்ணிடாதீங்க சார் என்றார்.

திடீரென வீட்டில் இருந்த பெரியவரை அழைத்தார். அண்ணே… கொண்டாங்க… என்றார். கூல்டிரிங்ஸ் சகிதம் அறைக்குள் நுழைந்தார் அந்தப் பெரியவர். ஃபேண்டா. ஒரு பாட்டில். அதைத் திறந்து இரண்டு தம்ளர்களில் ஊற்றினார். நானும் ஃபோட்டோகிராபரும் சாப்பிட்டோம். எனக்கு ஜலதோஷம் சார் என்றார்.

அறையில் இருந்த எம்.ஜி.ஆர் சிலையைப் பார்ததும் ஏனோ விஜயகாந்த் ஞாபகம் வந்தது. கேட்டேன். அவரு முதல்ல நடிகர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா பண்ணனும்.. கட்சி ஆரம்பிச்ச பிறகு எப்படி நேர்மையா சங்கத்து வேலைகளைச் செய்யமுடியும்.. இப்படிக் கேக்குறதுக்கு எனக்கு உரிமை இருக்கு… நானும் ஒரு நடிகர் சங்க உறுப்பினர்தான் என்றார்.

திருமண வாழ்க்கை பற்றிக் கேட்டேன். நாங்க என்ன சார்.. அடிச்சுகிட்டா பிரிஞ்சோம்.. மனசு ஒத்துப்போகல.. பிரிஞ்சுட்டோம்.. என்றவர், சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப்போறேன் சார். சொந்தத்துல பொண்ணு இருக்கு… என்றார். வாழ்த்து சொன்னேன். அதிமுக சார்பாக எம்.பியானது நான் செய்த பாக்கியம் என்றார். அம்மா சொன்னா எப்போ வேணும்னாலும் கட்சிக்குப் பிரசாரம் பண்ணுவேன் என்றார்.

படம் பண்ணும் திட்டம் பற்றிக் கேட்டேன். ஆமா சார்.. ரெடியாயிட்டு இருக்கேன்.. ஸ்ட்ரிக்ட் டயட்.. அநேகமா துப்பறியும் நிபுணர் வேஷம். ஸ்க்ரிப்ட் ரெடி.. ஆரம்பிச்சுடுவோம் என்றார்.

பொருளாதாரம் பற்றிக் கேட்டேன். சாதாரணமான ஆளா இருந்தேன்னா காலைல கடையில போய் டீ சாப்பிடலாம்.. நான் போக முடியுமா சார்..வெட்கமா இருக்குன்னு சொல்லல… என்னைப் பார்த்துப் பரிதாபப்படறத என்னால ஏத்துக்கமுடியல. சாதா ஹோட்டல்ல சாப்பாடு சாப்பிடலாம்.. ஆனா சினிமாக்காரனா இருந்துட்டதால அதையும் செய்யமுடியல சார்..

உதவிக்கு ஒருத்தரை வேலைக்கு வச்சிருக்கேன். அவருக்கு சம்பளம் கொடுக்கணும். விசேஷம் வச்சிருக்கேன்னு நண்பர்கள் பத்திரிகை வைக்கறாங்க… போகணும்.. ஆட்டோல போகமுடியாது.. வாடகைக்கு கார் எடுக்கணும்.. இப்படி நிறைய எக்ஸ்ட்ரா செலவுகள்… சொந்தக்காரங்க.. பெரியப்பா, சித்தப்பா பசங்க உதவி பண்றாங்க… ஒண்ணும் பிரச்னை இல்ல.. சார்.. இப்பவும் சொல்றேன்.. நான் கஷ்டப்படல! சீக்கிரமே நம்ம படம் வந்துடும்.. எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!

0

ஆர். முத்துக்குமார்

தரம்பால் – நேர்காணல்

காந்தியவாதி. வரலாற்றாய்வாளர். பியூட்டிஃபுல் ட்ரீ (18-ம் நூற்றண்டில் இந்திய கல்வி), பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் போன்ற நூல்களை எழுதியவர். உத்தரபிரதேசத்தில் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் காந்தளா கிராமத்தில் 1922-ல் பிறந்தவர்.

இந்திய சமூகம் குறித்து பிரிட்டிஷார் நமக்குப் பிழையாக உருவாக்கித் தந்த பல்வேறு கருத்தாக்கங்களை பிரிட்டிஷாரின் ஆவணங்களை வைத்தே தகர்த்தவர். டெக்கான் ஹெரால்டு இதழில் 1983-ல் வெளியான பேட்டியின் ஒரு பகுதி அவருடைய நினைவுநாளை ஒட்டி (அக், 24) இங்கு மறு பிரசுரம் செய்யப்படுகிறது. பேட்டி எடுத்தவர் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்.

ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்: நீங்கள் பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்திய சமூகம் குறித்து, குறிப்பாக 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி இந்திய சமூக வாழ்க்கை சம்பந்தமாக, அதிக ஆர்வத்துடன் இருக்கிறீர்களேஏன் என்று சொல்ல முடியுமா? எதற்காகக் கேட்கிறேன் என்றால் நீங்கள், ஆய்வுப் பணிகளை தன்னார்வத்தின் அடிப்படையில் மேற்கொண்டவர்தான். நீங்கள் ஓர் அதிகாரபூர்வ கல்விப்புலம் சார்ந்த பண்டிதரோ ஆய்வாளரோ கிடையாது.

தரம்பால்: நான் அதிகாரபூர்வ ஆய்வுப் பணியாளன் அல்லதான். ஆனால், நான் ஒரு களப்பணியாளன். கிராமப்புற மேம்பாடு தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பில் நீண்ட காலம் பணிபுரிந்திருக்கிறேன். (AVARD- Associaion of Volountary Agencies for Rural Development.) 1958-ல் இருந்து 1964 வரை அதன் செகரட்டரியாக இருந்திருக்கிறேன். நம் தேசத்தில் பஞ்சாயத்துகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்த அமைப்பு அது.

அந்த நிறுவனத்தில் பணி புரிந்தபோது எனக்கு ஓர் எளிய உண்மை தெரியவந்தது. அதாவது நமது இந்திய சமூகம் பெரும்பாலும் பாரம்பரிய மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செயல்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் பெரும்பாலான ‘வெளிப்புற பார்வை’ கொண்ட  இந்தியர்களைப் போலவே எனக்கும் நம் மண் சார்ந்த வாழ்க்கை முறை பற்றி எதுவும் தெரியாமல்தான் இருந்தது.

ஓர் உதாரணம் சொல்கிறேன். பஞ்சாயத்துகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க ராஜஸ்தானில் இருந்த ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கு புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அந்த பஞ்சாயத்தின் அதிகாரபூர்வ ஆவணங்களைப் பரிசோதித்துப் பார்த்தபோது அந்தக் கட்டடம் பற்றி எந்தக் குறிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை. என்ன விஷயம் என்று அவர்களைக் கேட்டேன். பீஸ் பிஸ்வ பஞ்சாயத் (இருபது அங்க பஞ்சாயத்து) என்ற பாரம்பரிய அமைப்பின் சார்பில் அதைக் கட்டியதாகச் சொன்னார்கள். அது ஓர் அதிகாரபூர்வமற்ற அமைப்பு. கால காலமாக அந்த கிராமங்களில் அப்படியான ஓர் அமைப்பின் மூலம்தான் பணிகள் நடந்து வந்திருக்கின்றன. அது அதிகாரபூர்வ பஞ்சாயத்தைவிட செயல் ஊக்கம் மிகுந்ததாகவும் மக்களின் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றதாகவும் இருந்தது.

ஆந்திரா, தமிழகம் போன்ற பிற பல இடங்களிலும் இது போன்ற அனுபவமே எனக்குக் கிடைத்தது. 1963-65 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்தோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குப் போனேன். பஞ்சாயத்துத் தலைவர்களிடம் கலந்துரையாடினேன். வேறு பலரிடம் பேசினேன். தஞ்சாவூரில் பாரத சேவக் சமாஜ் என்ற அமைப்பின் சேர்மனைப் பார்த்துப் பேசினேன். 100-க்கு மேற்பட்ட கிராம சமுதாயங்கள் 1937 வாக்கில் தஞ்சைப் பகுதியில் இருந்ததாக அவர் சொன்னார். அதாவது கிராம சமுதாயம் என்றால், ஒட்டு மொத்த நிலமும் கிராம சமுதாயத்துக்கே சொந்தமாக இருக்கும். கிராமத்து உறுப்பினர்கள் அவரவருக்கான குறிப்பிட்ட பங்கு நிலத்தில் பயிர் செய்து விளைச்சலை எடுத்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலமானது கிராமத்தினர் அனைவருக்கும் இடையில் பரிமாற்றம் செய்துகொள்ளப்படும். ஏனென்றால், காலப்போக்கில் நிலத்தின் வளத்தில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதானே. ஒருவருக்கு மட்டுமே நல்ல நிலம் கிடைத்து மற்றவருக்கு வளம் குறைந்த நிலம் கிடைத்துவிட்டால் ஒருவித ஏற்றத் தாழ்வும் நியாயமின்மையும் உருவாகிவிடுமென்பதால் அப்படி அவ்வப்போது நிலத்தைப் பரிமாற்றிக் கொள்வார்களாம்.

பிரிட்டிஷாரின் வருவாய்த்துறை மற்றும் பிற துறை ஆவணங்களைப் பார்த்தபோது 1807 வாக்கில் தஞ்சையில் இருந்த நிலத்தில் 30 சதவிகிதம் கிராம சமுதாய நிலங்களாக இருந்தது தெரியவந்தது. 18-ம் நூற்றாண்டு, 19-ம் நூற்றாண்டு ஆவணங்களை நான் தீவிரமாக ஆராயத் தொடங்கியபோது இன்று நாம் நமது இந்திய சமுதாயம் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கும் சித்திரம் தவறு என்பது தெரியவந்தது. யாராவது ஒருவர் 18-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆவணங்களை விரிவாகப் பார்த்தாக வேண்டியிருந்தது. எனவே, என்னால் முடிந்தவற்றைச் செய்ய ஆரம்பித்தேன்.

வேறொரு கேள்வி கேட்கிறேன். நம் தேசத்தை ஆங்கிலேயர்களால் எப்படி எளிதில் அடிமைப்படுத்த முடிந்தது? இந்தியாவில் இருந்த எந்த அம்சங்கள் இதற்குக் காரணமாக இருந்தன?

ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரிட்டிஷ் காலத்துக்கு முந்தைய இந்திய சமூகத்தின் பலம், பலவீனம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 18-ம் நூற்றாண்டின் பிந்தைய பகுதி இந்தியா பற்றி, அதுவும் பிரிட்டிஷாரின் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்ட  தகவல்கள், மட்டுமே எனக்குத் தெரியும். பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியா பற்றி பதில் சொல்ல ஒருவருக்கு வேறு பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால், ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 1700 வாக்கில் முகலாயர்களின் மைய அரசு பலவீனமடைய ஆரம்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் அரசர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட ஆரம்பித்திருந்தனர். இந்த அரசியல் மாற்றம் மிகவும் மெதுவாகவும் பலவீனமாகவும் இருந்தது. பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு முன்னால் இந்திய சிற்றரசர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பிரிட்டிஷார் படிப்படியாக ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றி இந்த தேசத்தை வென்றெடுத்தபோது அதற்கு எதிராக ஒற்றுமையாகப் போராட வழியில்லாமல் போய்விட்டது.

இந்திய நிலப்பிரபுத்துவத்தால் புதிதாகப் பிறந்திருந்த மேற்கத்திய முதலாளித்துவ சமூக அமைப்பை எதிர்க்க முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாமா?

நம்மிடம் நிலபிரபுத்துவம் இருந்தாதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இது போன்ற முத்திரை குத்தல்களுக்குப் பின்னால் பல்வேறு அர்த்தங்கள், அனுமானங்கள் மறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக, முகலாயர்களின் மையப்படுத்தப்பட்ட அரசு என்று நாம் சொல்லும்போது அது மிகவும் வலுவான மையப்படுத்தப்பட்ட அரசு என்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்படும். ஆனால், அது உண்மை அல்ல. அவுரங்கஸீப் தன் பேரனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது: ஜஹாங்கீரின் காலகட்டத்தில் அரசு வருவாய் 60 லட்சம். செலவோ ஒன்றரைக் கோடி. அந்தப் பற்றாக்குறையை அக்பர் சேர்த்து வைத்திருந்த செல்வத்தில் இருந்து எடுத்து சரிக்கட்டியிருக்கிறார்கள்.

இரண்டாவதாக, ஜஹாங்கீருக்கு அடுத்ததாக வந்த ஷாஜஹான் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்தினார். செலவினத்தை ஒரு கோடியாகக் குறைத்தார். ஆனால், மொகலாயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மொத்த வருமானம் 10-20 கோடிவரை இருந்திருக்கலாமென்று கணிக்கப்பட்டுள்ளது.அதில் சொற்ப அளவே மன்னருக்கு வரியாகக் கிடைத்திருக்கிறதென்றால், எஞ்சிய பணம் எங்கே போனது? அவுரங்கஸீப்பின் காலகட்டத்தில்கூட மன்னரின் வரி வருவாய் 20%த்தைக்கூடத் தாண்டவில்லை என்பதை அனைத்து சரித்திர ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுதான் இருக்கிறார்கள். எஞ்சிய 80 சதவிகிதம் அந்தந்தப் பகுதிக்குள்ளாகவே செலவிடப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பணியாளர்களுக்கான சம்பளம் போக எஞ்சிய பணமானது சத்திரங்கள் நடத்துதல், பள்ளிகள், குளங்கள், ஏரிகளை நிர்வகித்தல், கோயில் போன்ற நிறுவனங்களுக்கான நன்கொடை, அறிஞர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள், ஜோதிடர்கள், மந்திரவாதிகள்போன்றோருக்கான சன்மானங்கள் என காலகாலமாக பின்பற்றுவந்த விஷயங்களுக்காகச் செலவிடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். மொகலாயர்கள் காலகட்டத்திலும் பின்பற்றப்பட்டு வந்த இந்த விஷயம் பிரிட்டிஷாரின் வருகையைத் தொடர்ந்து மாறியது. பிரிட்டிஷார் 50-60% வரி வசூலிக்க ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட பின்விளைவுகளை ஒருவர் எளிதில் புரிந்து கொள்ள முடியும். கிராமத்தினரிடமிருந்து பெரும்பகுதி இப்படி அரசால் பிடுங்கப்பட்டதால் சத்திரங்கள், பள்ளிகள், குளங்கள் இவற்றின் நிர்வாகத்துக்கு பெரும் இடைஞ்சல் வந்தது.

பிரிட்டிஷார் இதைத் திட்டமிட்டு செய்ததாகச் சொல்கிறீர்களா?

பிரிட்டிஷார் தங்களுக்குப் பழக்கமான ஒரு செயலைச் செய்தார்கள். இங்கிலாந்தில் விவசாயிகளிடமிருந்து 50%க்கு மேலாக வரி வசூலிக்கப்பட்டது. இந்தியாவை அடிமைப்படுத்திய பிறகு அதுபோலவே இங்கும் வசூலித்தார்கள். இந்தியாவுக்கு என்று தனியாக எதையும் புகுத்தியிருக்கவில்லை. எங்கெல்லாம் போனார்களோ அங்கெல்லாம் இதையேதான் செய்தார்கள். ஏனென்றால், மையப்படுத்தப்பட்டு வலுவான அரசு என்பதுதான் அவர்களுடைய கோட்பாடு. இதற்கான வேர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகைதான் காரணம் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, பொது சகாப்தம் 1100-ல் நார்மன் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்தின் 95% வளங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வெற்றியாளர்களால் அதாவது அரசராலும் தேவாலயங்களாலும் புதிய நிலப்பிரபுக்களாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

1750 அல்லது அதற்கு முந்தைய இந்தியாவானது இங்கிலாந்தைவிட மேலானதாக இருந்திருக்கிறதா? இந்தியாவில் சாதாரண மனிதரின் நிலை என்னவாக இருந்திருக்கிறது?

நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை மட்டுமே வைத்து இரண்டு சமூகங்களையும் முழுமையாக ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்திய சமூகம் பற்றிய மாறுபட்ட சித்திரத்தை அவற்றின் மூலம் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, 1804 ஜூலை மாதத்தில் எடின்பர்க் ரிவ்யூவில் இந்தியாவில் விவசாய உற்பத்தி பற்றியும் சம்பளங்கள் பற்றியும் கலந்துரையாடியிருக்கிறார்கள். இங்கிலாந்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்தியாவின் விவசாய உற்பத்தி பல மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரை மேலும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், இந்திய விவசாயத் தொழிலாளர்களின் சம்பளம் பிரிட்டிஷ் தொழிலாளரின் சம்பளத்தைவிட கணிசமாக அதிகமாகவே இருந்திருக்கிறது.

அதிலும் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த அந்தக் காலகட்டத்திலேயே சம்பளம் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால் அது நல்ல நிலையில் இருந்தபோது இன்னும் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்று ஆச்சரியப்பட்டுக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

1806 வாக்கில் பெல்லாரி மாவட்டத்தில் உணவு உட்கொள்ளும் விகிதம் (கன்சம்ஷன்) பற்றி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். தேசத்தின் ஒட்டு மொத்த உட்கொள்ளலை அளவிட்டதோடு மக்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி ஆராய்ந்திருக்கிறார்கள். இந்த வகைப்பாடு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதுதான். மூன்று தரப்பு மக்களும் உட்கொண்ட உணவின் அளவு கிட்டத்தட்ட சமமாகவே இருந்திருக்கிறது. அதாவது ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு கிலோ உணவு. பயறு வகைகள், நெய், எண்ணெய், தேங்காய், காய் கனிகள், வெத்தலை என மொத்தம் 23 வகைகள் பரவலான பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. மொத்த வருடாந்திர தனி நபர் உட்கொள்ளல் (பெர் கேப்பிடா கன்சம்ஷன்) முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 17 ரூபாயாகவும் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 9 ரூபாயாகவும் மூன்றாம் பிரிவினருக்கு 7 ரூபாயாகவும் இருந்திருக்கிறது.

தஞ்சாவூரில் 1805-ல் மிராசுதார்களின் (நில உடமையாளர்களின்) எண்ணிக்கை 62,000. அதில் 42,000 பேர் சூத்ரர்கள் மற்றும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜாதியினராக இருந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில், நில உடமையாளர்களாக இருந்த பறையர்களின் எண்ணிக்கை 32,474 ஆக இருந்திருக்கிறது. 1799-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த மொத்த மிராசுதார்களின் எண்ணிக்கை 8300 என்று கலெக்டர் பட்டியலிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 18-ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டத்து பிரிட்டிஷாரின் ஆவணங்களை இன்னும் ஆழமாக ஒருவர் ஆராய்ந்து பார்த்தால் இந்திய சமூகம் பற்றிய விரிவான முற்றிலும் மாறுபட்ட சித்திரம் நமக்குக் கிடைக்கும்.

உதாரணமாக, மதராஸ் வருவாய் திட்டத்தை உருவாக்கிய அலெக்சாண்டர் ரீட் சொல்கிறார்: 1780 வாக்கில் ஹைதராபாத்தில் இருந்த பிரபுக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் இருந்த வேறுபாடு என்று பார்த்தால் முன்னவருடைய ஆடை கொஞ்சம் கூடுதல் தூய்மையாக இருந்தது… அவ்வளவுதான்.

பிரிட்டிஷாருக்கு முன்னால் இந்தியாவில் கல்வி பற்றிய உங்களுடைய அடுத்த புத்தகத்தில் பல சுவாரசியமான அம்சங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆமாம். உதாரணமாக 1922-25 வாக்கில் மதராஸ் பிரஸிடென்ஸியில் இந்திய பாரம்பரியக் கல்விமுறை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 11,575 பள்ளிகளும் 1094 உயர் கல்வி மையங்களும் மதராஸ் பிரஸிடென்ஸியில் நடைபெற்றுவந்தது தெரியவந்தது. இந்த ஆய்வில் இருந்து தெரிய வந்த இன்னொரு முக்கியமான அம்சம் ஜாதி ரீதியிலான பிரதிநிதித்துவம் பற்றியதுதான்.

தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் சூத்ர மற்றும் அதற்கு அடுத்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒரிஸ்ஸாவில் இவர்களின் எண்ணிக்கை 62 சதவிகிதமாகவும் கேரளாவில் 54 சதவிகிதமாகவும் தெலுங்கு மொழி பேசப்படும் இடங்களில் 35-40 சதவிகிதமாகவும் இருந்திருந்தது தெரிய வந்தது. கேரளாவில் கல்வி கற்றவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 3,196. மாணவிகளின் எண்ணிக்கை 1,122 யாக இருந்திருக்கிறது. எனது பியூட்டிஃபுல் ட்ரீ புத்தகத்தில் பிரிட்டிஷாரின் விரிவான ஆவணங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். அதை படித்துப் பார்க்கும் ஒருவர் பிரிட்டிஷாருக்கு முந்தைய காலகட்டத்து இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பது பற்றிய தன் எண்ணங்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயாக வேண்டியிருக்கும்.

இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் எந்த நிலையில் இருந்தது?

வான சாஸ்திரம், கணிதம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் வங்காளத்தின் கமாண்டர் இன் சீஃப் ஆகவும் இருந்த சர் ராபர்ட் பார்கர், காசியில் இருந்த புகழ் பெற்ற கோளரங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில்கூட 1823 வரையில் உலகிலேமிகச் சிறந்த ஐந்து கோளரங்கங்களில் ஒன்றாக காசியில் இருந்ததும் குறிப்பிட்டிருக்கிறது. பிரபல ஃப்ரெஞ்சு வான சாஸ்திர நிபுணரான பெய்லி இந்திய வான சாஸ்திரத்தைப் பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார். அதை விரிவாக ஆராய்ந்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் பிளேஃபெயர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அதே ஆண்டில் ரூபன் பரொ இந்திய பைனாமியல் கோட்பாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இன்றைய விஞ்ஞான வழிமுறைகள், கருவிகள் எதுவும் இல்லாமலே தமிழர்கள் கிரஹணத்தைத் துல்லியமாகக் கணிக்கிறார்கள் என்பது பற்றி கேஸினியின் உதவியாளரான லே ஜெண்டில் வியந்து எழுதியிருக்கிறார். இந்திய விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.

1820 வாக்கில் கர்னல் அலெக்ஸாண்டர் வாக்கர் கேரளத்திலும் குஜராத்திலும் இருந்த விவசாய முறை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அம்மை நோய்க்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பற்றி மருத்துவரும் வங்காளத்துக்கு சிறிது காலம் கவர்னருமாக இருந்த ஹோல்வெல் எழுதியிருக்கிறார். வங்காளத்திலும் பிற பகுதிகளிலும் அந்த சிகிச்சை பரவலாக நடைமுறையில் இருந்ததை விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். 1802-03 வாக்கில் இந்திய சிகிச்சை முறையை பிரிட்டிஷார் தடை செய்தனர்.

கேப்டன் ஹால்காட் தென்னிந்தியாவில் நடைமுறையில் இருந்த விதை – கலப்பை உழவு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஐரோப்பிய கண்டுபிடிப்பாகவும் மிகவும் நவீனமான ஒன்றாகவும் கருதப்பட்ட அந்த வகை உழவு இந்தியாவில் குக்கிராமங்களில்கூட பயன்பாட்டில் இருந்ததை அவரால் கற்பனைகூட செய்து பார்க்க முடிந்திருக்கவில்லை. இந்திய விதை-கலப்பையின் வடிவமைப்பு மிகவும் எளிதாகவும் செயல் திறம் மிகுந்ததாகவும் இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

எஃகு தயாரிப்பது தொடர்பான இந்திய வழிமுறை பற்றிய குறிப்புகளும் பிரிட்டிஷ் ஆவணங்களில் காணப்படுகின்றன. டாக்டர் ஹெலெனஸ் ஸ்காட் என்பவர் இந்திய எஃகின் சில மாதிரிகளை பிரிட்டிஷ் நிபுணர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் பார்த்த எஃகுகளிலேயே இந்திய எஃகு மிகவும் உயர்ந்ததாக வலிமையானதாக இருப்பதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஐஸ் தயாரிப்பது, காகிதம் செய்தல், நெசவு என பல தொழில்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. சிற்ப, கட்டடக் கலையின் மேன்மை பற்றியெல்லாம் அவர்கள் தனியாக எதுவும் சொல்லத் தேவையே இல்லை.

ஆனால், இந்தியர்களை வேதனையில் உழல்பவர்களாகவும் அறியாமை நிறைந்தவர்களாகவும் பிரிட்டிஷார்கள் குறிப்பிட்டிருக்கிறார்களே

அறியாமை, துன்பம் என்று அவர்கள் சொன்னதெல்லாம் சமுதாய அல்லது பொருளாதார அர்த்தத்திலோ தொழில்நுட்பம், கலை, ரசனை இல்லாதவர்கள் என்ற அர்த்தத்திலோ அல்ல. 1813-ல் பிரிட்டிஷ் கீழ் சபையில் ஒரு விவாதம் நடந்தது. அதில் பெரும்பாலானோருக்கு, இந்தியா அப்போது குழப்பத்திலும் ஒழுங்கீனத்திலும் இருந்த போதிலும், அதன் சகிப்புத் தன்மை, ஒத்திசைவான சமூக கட்டமைப்பு, வளமை போன்ற பல்வேறு அம்சங்களில் பொறாமைப்படத் தகுந்த அளவுக்கு விழிப்பு உணர்வு பெற்றதாகவே தெரிந்திருக்கிறது. இந்திய மக்களின் ஆன்மாவை ரட்சிப்பது பற்றியே அந்த விவாதம் பெரிதும் அக்கறை கொண்டிருந்தது. அந்தக் கோணத்தை முன்னெடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ்.

கிரேக்கமும் ரோமும் கிறிஸ்தவத்தைத் தழுவுவது வரை இழிவான நிலையிலேயே இருந்தன. எனவே கிறிஸ்துவத்தை அறியாத நிலையில் இந்தியர்களால் எப்படி விழிப்பு உணர்வு பெற்றவர்களாக மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதுவரை அவர்களை ஒடுக்க வேண்டும். அறியாமையில் தள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

அவர்களுடைய கணிப்பின்படி கிறிஸ்தவத்தைப் பற்றித் தெரியாதென்பதால், சாக்ரடீஸ், பிளேட்டோ போன்றோருமே அறியாமையில் மூழ்கியவர்களே! எனவே, அறியாமை, துன்பம் என்று பிரிட்டிஷார் இந்தியாவைப் பற்றிச் சொன்னதெல்லாம் அதன் மத அம்சத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த அபிப்ராயத்தைத்தான் சுட்டுகிறது. உண்மையில் பார்த்தால் இந்தியாவின் சமூக, பொருளாதாரப் பின்னடைவு என்பது 1800-க்குப் பிறகு ஏற்பட்ட ஒரு நிலையே. மையப்படுத்தப்பட்ட இறுக்கமான ஓர் அரசின் உருவாக்கமும் பிரிட்டிஷாரின் சுரண்டலுமே அப்படியான ஒரு நிலைக்குக் காரணம்.

இப்படியான ஒரு அதிகாரமும் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருந்த சுரண்டலும் மேலும் மேலும் ஆக்கிரமிப்புகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டன. புதிய பெரு நகரங்கள் உருவாக்கப்பட்டன. ராணுவ குடியிருப்புகள் அதிகரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் வகையில் எல்லா வளங்களும் சூறையாடப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த சீர்குலைத்தலும் வறுமைக்குள் தள்ளுதலும் அடிமைப்படுத்தலும் தங்களுடைய வருவாயைப் பாதிக்காத அளவிலேயே பிரிட்டிஷார் செயல்பட்டனர். இந்திய சமுதாயத்தை முடங்கிய நிலையில் கொண்டுபோய் நிறுத்திய பிறகு பிரிட்டிஷ் அறிஞர் பெருமக்களின் திருப்பணிகள் ஆரம்பித்தன. இந்தியாவின் வறுமையும் சீர்குலைவும் காலகாலமாகவே இருந்துவரும் ஒன்று என்று நிறுவ ஆரம்பித்தனர்.

ஜாதி அமைப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதுவும் 1800-க்குப் பின் வந்த பிரச்சினை என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நம் பாரம்பரியத்தை நாம் நியாயப்படுத்திப் பேசும்போது இந்த ஜாதி விஷயம் நமக்கு நிறைய பிரச்சினைகளை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரிதான். இந்தியாவின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக ஜாதியே சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு எப்படி வந்து சேருகிறோம்? கிராமங்களைப் போலவே ஜாதியும் இந்திய வரலாறு முழுவதும் இந்திய சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத அங்கமாகவே இருந்துவந்திருக்கிறது. மனுஸ்மிருதி போன்றவை இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தியது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பிருந்தே பழங்குடிகளும் ஜாதிகளும் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. இன்றும் இருந்து வருகின்றன. ஆனால், இந்திய வரலாற்றில் இப்போது இருப்பதுபோல் ஜாதியானது என்றைக்குமே பெரிய பிரச்சினையாக இருந்ததாகத் தெரியவில்லை.

பல்வேறு ஜாதிகள் அருகருகே வசித்து வந்திருக்கின்றன. தமக்குள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான, பெருமைக்குரிய சடங்கு சம்பிரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று சண்டையும் இட்டும் வந்திருக்கின்றன. பொதுவாக நம்பப்படுவதற்கு முற்றிலும் மாறாக, அதாவது மனு ஸ்மிருதிக்கு முற்றிலும் எதிராக, பிரிட்டிஷார் இந்தியாவை வென்றபோது ஆட்சியில் இருந்த பெரும்பான்மையான அரசர்கள் எல்லாம் சூத்ர ஜாதியைச் சேர்ந்தவர்களே.

இந்தியாவில் தனித்தனியான ஜாதிகள் இருந்தது இந்திய அதிகாரவர்க்கத்தின் பலவீனமான நிலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அதேநேரத்தில் அந்த ஜாதி அமைப்பே இந்திய சமூகம் நீடித்து நிலைக்கவும் காரணமாக இருந்திருக்கிறது. அதன் தாக்குபிடித்தலுக்கும் மீண்டும் எழுந்து நிற்கும் வலிமைக்கும் காரணமாக இருந்திருக்கிறது. ஜாதி அமைப்பு இந்தியாவைப் பிரித்திருக்கிறதா… ஒத்திசைவுடன் இயங்க வைத்திருக்கிறதா என்பது விரிவான விவாதத்துக்கு உரியது. இன்றுவரை அதற்கு எந்த உறுதியான பதிலும் கிடைக்கவில்லை.

பிரிட்டிஷார் இந்திய ஜாதி அமைப்பைத் தீமையானது என்று சொன்னதற்கு அவர்கள் ஜாதி (குழு) அற்றதன்மையை நம்பியவர்கள் என்பதோ மேல் கீழ் கட்டுமானத்தை வெறுப்பவர்கள் என்பதோ காரணமல்ல. இந்திய சமூகத்தை அவர்கள் விரும்பியதுபோல் உடைப்பதற்கு ஜாதி தடையாக இருந்தது என்பதுதான் காரணம். இந்திய சமூகத்தை பலவீனப்படுத்தி ஒரே குடையின் கீழ்கொண்டு வந்து நிர்வாகம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்ன பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது வேறு விஷயம். ஆனால், நேற்றைய இந்திய சமூகத்துக்கு அது கெடுதலாக இருந்தது என்ற கருத்தாக்கம் பிரிட்டிஷாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்றுதான். அது உண்மை அல்ல என்பதற்கான ஆதாரங்கள் பிரிட்டிஷாரின் ஆவணங்களிலேயே ஏராளம் இருக்கின்றன.

 மொழியாக்கம்: மகாதேவன்

கொட்டிவாக்கம் கவுன்சிலர் வேட்பாளருடன் ஒரு பேட்டி

ராஜ் செருபல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக கொட்டிவாக்கம் வார்டு கவுன்சிலராகப் போட்டியிடுகிறார். அவருடன் ஒரு நேர்காணல்.

தமிழ்பேப்பர்: வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், கொட்டிவாக்கம் வார்டுக்கான கவுன்சிலர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவதாகக் கேள்விப்பட்டோம். ஏன் அரசியலுக்குள் நுழைகிறீர்கள்? தேர்தலில் நிற்காமல் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று நினைக்கிறீர்களா?

ராஜ் செருபல்: ஒரு விஷயத்தை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று கட்சி அரசியல். இன்னொன்று சமூகப் பிரச்னைகள் சார்ந்து செயல்படும் அரசியல். எம்.எல்.ஏ., எம்.பி.கள் தளத்தில் செயல்பட விரும்புபவர்களுக்கு கட்சி அரசியல் தேவையாக இருக்கும். பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு, வலைப்பின்னல் ஆகியவற்றுக்கு அப்படியான ஒரு அமைப்பு தேவைப்படும். ஆனால், சிறிய அளவில் ஒரு வார்டில் இருக்கும் பொதுவான பிரச்னைகளைத் தீர்க்கவும் மக்களை ஒன்றிணைத்துச் செயல்படவும் கட்சி போன்ற எதுவும் தேவையில்லை. குப்பையில்லா நகரம், முறையான கழிவு நீர் கால்வாய் வசதிகள், நெரிசல் இல்லாத நடைபாதைகள், சீரான சாலைகள், கொசுக்கள் இல்லாத இரவுகள், பொழுதுபோக்குக்கு விளையாட்டு மைதானம், பொது சமூக வெளிகள், ஏழைகளுக்கான பொதுக் கழிப்பிட வசதி, வெள்ள நீர் வடிகால்கள் போன்றவை எல்லாமே இதில் அடங்கும். எந்தவொரு வார்டை எடுத்துக்கொண்டாலும் பணக்காரர்கள், மத்திய வர்க்கத்தினர், ஏழைகள் என எல்லா தரப்பினரும் இருப்பார்கள். பாலின ஏற்றத் தாழ்வுகள் போன்ற பிற விஷயங்களைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கட்சி சாரா இந்த அரசியலானது குடிமக்களின் அன்றாடப் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்பது தொடர்பானது. குறைவாக இருக்கும் வளங்களை நேர்மையான செய்நேர்த்தியான வழியில் பயன்படுத்துவது, ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஆகியவை தொடர்பானது.

நான் நீண்ட காலமாகவே ஒரு களப்பணியாளனாக இருந்திருக்கிறேன். நடைபாதை வியாபாரிகள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வியாபாரம் செய்ய நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறேன். நன்கு திட்டமிடப்பட்ட தெருக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுப்பதன் மூலம் இதைச் சாதிக்க முடியும். ஏழைக் குழந்தைகளுக்கு, குறிப்பாக, தலித், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது தொடர்பாகச் செயல்பட்டுவருகிறேன். ஜனாக்ரஹாவின் ஓர் அங்கமாக ஆட்சியில் பொது மக்களின் பங்களிப்பை மேம்படுத்த முயன்றுவருகிறேன். நகர நிர்வாகம், உள்கட்டுமானம், சேவைகள் ஆகியவை தொடர்பாக சென்னை சிட்டிகனெக்ட் அமைப்பு மூலமாக செயலாற்றி வருகிறேன்.

நடைபாதை சீரமைப்பு, பொது போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் நாங்கள் செய்த விஷயங்களுக்காக இன்று பெரிதும் அறியப்பட்டிருக்கிறோம். சக்கர நாற்காலி பரிசோதனை என்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். ஒரு நகரில் நடைபாதை அமைக்கப்படும்போது இந்த சோதனை செய்து பார்க்கப்படவேண்டும். மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் போன்றவர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சக்கர நாற்காலியில் இருந்து இறங்காமல், பிறருடைய உதவியைப் பெற வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் கௌரவமாகப் போய்வர முடியுமா என்று சோதிக்கும் வழிமுறைதான் அது. மிக எளிய பரிசோதனைதான்.

நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால், நம் ஊரில் பெரும்பாலான குடிமகன்கள் இரண்டாம் தரக் குடிமகன்களாவே நடத்தப்படுகிறார்கள். வீட்டை விட்டு அவர்களால் வெளியே வரவே முடியாது. ஏனென்றால் நடைபாதைகளே கிடையாது. சாலைகளைக் கடக்க முறையான வசதிகள் கிடையாது. இன்பமாகச் சுற்றி வர பூங்காக்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்வதானால் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது. எந்த வாகனம் எப்போது வந்து இடிக்குமோ என்று எப்போதும் பயந்தபடியேதான் எங்கும் போய்வர வேண்டியிருக்கும். தெருவில் நிம்மதியாக நடக்கக்கூட முடியாமல் இருப்பது போன்ற இழிவு வேறு எதுவும் இருக்க முடியாது அல்லவா.

எங்களுடைய சிறிய முயற்சிகளின் மூலம், அதிகார வர்க்கத்தில் பெரும்பாலானார்கள் மத்தியில் நல்ல விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. புதிதாக ஆரம்பிக்கும் திட்டங்களை பாதசாரிகளுக்கும் பொது போக்குவரத்துக்கும் நட்பான முறையில் சிந்திக்கிறார்கள்.

அரசியலில் இறங்காமலேயே நிறையச் செய்ய முடியும்தான். ஏராளமான அரசு சாரா நிறுவனங்கள் நிறைய நல்ல விஷயங்கள் செய்து வருகின்றன. ஆனால், என்னைப் போல் இதுபோன்ற விஷயங்களில் ஆர்வமும் அனுபவமும் இருக்கும் ஒருவர் உள்ளாட்சி போன்ற அமைப்புகளில் பிரதிநிதித்துவம் பெற்றால் நிச்சயம் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

திமுக, அதிமுக போன்ற மிகப் பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?

விஷயம் பெரிய கட்சிகளை எதிர்ப்பது அல்ல. உங்களால் கடுமையாக உழைக்க முடியும் என்று ஏழைகளுக்கும் மத்திய வர்க்கத்தினருக்கும் புரியவைப்பது சம்பந்தப்பட்டது. இந்தப் பிரச்னைகள் பற்றி உங்களுக்குத் தெரியும்… உங்களுக்கு இந்தத் துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது… உங்களால் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்பதை எல்லாம் மக்களுக்குப் புரிய வைப்பது சம்பந்தப்பட்டது.

நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். கட்சி வேட்பாளர்களுக்கு இல்லாத, அவர்களால் ஒருபோதும் கனவு கூடக் காணமுடியாத சில ஆதாயங்கள் எனக்கு இருக்கின்றன. உதாரணமாக, என்னை எதிர்த்து நிற்கும் எந்தவொரு வேட்பாளரும் என்னைப் போல் சர்வ சாதாரணமாக, மத்திய தரக் குடும்பத்தினரின் வீட்டுக்குள் நுழைந்து சகஜமாகப் பேச முடியாது. மக்கள் என்னை அவர்கள் வீட்டுக்கு அவர்களாகவே கூப்பிட்டு அன்பாக உபசரிக்கிறார்கள். என்னுடன் ஆர்வத்துடன் பேச முன்வருகிறார்கள். என்னுடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்கிறார்கள். அவர்களுடைய பிரச்னைகள் பற்றி விரிவாக பேசுகிறார்கள். எப்படி தேர்தல் வியூகம் அமைக்க வேண்டுமென்று எனக்கு ஆலோசனை கூடச் சொல்கிறர்க்கள். ஆனால், பெரிய கட்சி வேட்பாளர்களைப் பார்த்தால் ஒருவித விலகலும் பயமும் தயக்கமும்தான் அவர்களுக்கு இருக்கிறது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ஊடகங்களில் வேறு எந்த கவுன்சிலரை விடவும் எனக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஊடகத்தினர் முட்டாள்கள் அல்ல. நகர நிர்வாகம் தொடர்பான என்னுடைய தகுதி, அனுபவம், செய்த பணிகள் ஆகியவை பற்றி அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. நான் அக்கறை மிகுந்த வேட்பாளர் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, என்னைப் பற்றி விரிவாக எழுதுகிறார்கள். பல லட்சம் மக்களிடம் என் கருத்துகளை எடுத்துச் செல்கிறார்கள். பிற கட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் இதை நினைத்தே பார்க்க முடியாது.

எனவே, என்னைப் போன்றவர்களுக்கு சில சாதகங்களும் இருக்கின்றன. பாதகங்களும் இருக்கின்றன. பல்வேறு விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும். எதையும் பொதுமைப்படுத்த முடியாது.

நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் படிக்காத அதே நேரத்தில் அதி தீவிரமாகச் செயல்படும் பிற வேட்பாளர்களை எப்படி உங்களால் சமாளிக்க முடியும்?

கடுமையாக உழைக்கும் நல்ல வேட்பாளர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இதை நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். அவர்களைப் பொதுவாக மோசமானவர்களாக நாம் சித்திரிக்கிறோம். தனிப்பட்ட முறையில் எனக்கு பல நல்ல அரசியல்வாதிகளைத் தெரியும். அவர்கள் அர்ப்பண உணர்வுடன் தங்களால் முடிந்த அளவுக்கு நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

ஆனால், நான் மிகவும் யதார்த்தவாதியும்கூட. பெரும் கனவுகளில் திளைத்திருக்கும் நிலையிலும் என் காலை அழுத்தமாகத் தரையில் ஊன்றியே இருக்கிறேன். நீங்கள் ஈடுபடும் துறையில் – அது தேர்தெடுக்கப்படும் பதவியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்- நடைமுறை யதார்த்தங்களை உங்களால் கையாள முடியவில்லையென்றால் நீங்கள் அதில் இருந்து விலகிவிடுவதே நல்லது. நீங்கள் கொஞ்சம் படித்திருக்கிறீர்கள் என்பதால் ஒரு முயற்சியில் இறங்கியதும் உலகமே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடாது.

இன்னொரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். படித்தவர்கள் எல்லாருமே புத்திசாலி என்று சொல்லிவிடமுடியாது. படிக்காதவர்கள் எல்லாருமே முட்டாள்கள் என்றும் சொல்லிவிடமுடியாது. அரசியலில் வெற்றி பெற நல்ல சிந்தனையும் அக்கறையும் தேவைதான். கூடவே, நடைமுறை பிரச்னைகளைச் சமாளிக்கும் திறமையும் மிகவும் அவசியம்.

இந்தத் தேர்தலில் எல்லா கட்சிகளும் தனியாக நிற்கின்றன. இது சுயேச்சையான உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறீர்களா?

இதுவும் வேட்பாளரைச் சார்ந்ததுதான். கொட்டிவாக்கத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களுடன் பேசியதில் இருந்தும் என்னுடைய உள்ளுணர்வு சார்ந்தும் இதைச் சொல்கிறேன். ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட திறமையை வைத்தே மக்கள் வாக்களிக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் இதுதான் உண்மை. எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல்கள் வேறு வகையானவை. மேலே நான் சொன்ன காரணங்களுக்காக, நானேகூட ஒரு கட்சிக்கே வாக்களிப்பேன். கவுன்சிலர் தேர்தல்கள் வேட்பாளரை மட்டுமே வைத்துத் தீர்மானிக்கப்படுவதாக நம்புகிறேன். பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் இதையேதான் சொல்லியிருக்கிறார்கள். எனது வார்டில் ஏழு பேர் போட்டியிருகிறார்கள். ஆனால், போட்டி என்பது இரண்டே வேட்பாளர்களுக்கு இடையிலானதாகத்தான் இருக்கும்.

உங்களுடைய பின்புலம் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். பிற அரசியல்வாதிகளைப் போல் உங்களால் சேரிகளில் வசிப்பவர்களுடன் சுமுகமாகப் பிரசாரம் செய்யவும் செயல்படவும் முடியுமா?

இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது என் வார்டில் இருக்கும் ஏழைகளின் ஆதரவினால்தான் இருக்கும். நான் செய்த களப்பணிகளையும் உள்ளுணர்வையும் வைத்து இதைச் சொல்கிறேன். என் பிரசாரத்தை என் வார்டில் இருக்கும் மிகவும் ஏழ்மையான பகுதியில் இருந்தே திட்டமிட்டு ஆரம்பித்தேன். ஏழைகள் எப்படிப்பட்டவர்கள்.. என்ன செய்வார்கள் என்பது பற்றி நம்மைப் போன்ற மத்தியவர்க்கத்தினருக்கு பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலானவை நம்முடைய கற்பனையாகவே இருக்கும். ஏழ்மையில் இருப்பவர்களிடையே, குறிப்பாக இள வயதினரிடையே, இருந்து கிடைக்கும் ஆதரவு இருக்கிறதே மிகவும் அபாரமானது. மனதுக்கு மிகவும் இதமானது.

என்னைப் போன்ற ஒருவர் ஏழ்மையான பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்… மத்தியவர்க்கத்திலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கற்பிதத்தை உடைக்க விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரையில் நீங்கள் என் வார்டில் இருக்கும் ஒரு குடிமகன் என்றால் என்னுடைய வாக்காளர்களில் நீங்களும் ஒருவரே. வங்கியில் உங்கள் பெயரில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து எனக்கு எந்த அக்கறையும் இல்லை.

சுயேச்சை வேட்பாளரான நான் வெற்றிபெற வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை ஒரு குழுவினரிடம் கேட்டேன். ஒரு ஏழை இளைஞர் அழுத்தம்திருத்தமாக எளிய வார்த்தைகளில் சொன்னார்: நாங்கள் இளைஞர்கள். நாளைய உலகம் எங்களுக்கானதுதான். ஆனால், நாங்கள் வாழும் நிலையை நீங்களே பாருங்கள். எங்கு பார்த்தாலும் ஒரே குப்பை கூளம். யாரும் இதைச் சுத்தம் செய்ய வருவதில்லை. உங்களைப் போன்ற ஒருவர் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக நாங்கள் பாடுபடத் தயார். நீங்கள் வெற்றி பெற்றால் உங்களிடம் வந்து உரிமையுடன் வசதி வாய்ப்புகளைச் செய்து தருமாறு கேட்க முடியும்.

நாம் ஏழைகள் பற்றிப் பேசும்போது ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். பணம் ஏழைகள் மீது எப்படியெல்லாம் செல்வாக்கு செலுத்துகிறது… வேறு நல்ல தேர்வுகளே இல்லை என்றால் நீங்களோ ஏழைகளோ யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதில் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது என்பதைப் பற்றி சிந்திப்பதில்லை.

சேரிகளுக்கும் ஏழைகள் வசிக்கும் பிற இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ததில் இருந்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். எந்த முன்தீர்மானமும் இல்லாமல் எல்லாரையும் சம்மாகவே அணுகுவேன் என்பதால் எனக்கும் அதே எதிர்வினைகளே கிடைக்கின்றன. ஏழையோ மத்திய வர்க்கத்தவரோ எனக்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ நான் போலிக் கண்ணீர் வடிக்கவில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

கல்வி அறிவு பெற்ற பலர் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், எந்த வெற்றியும் பெற்றதாகத் தெரியவில்லை. அரசியல் ஒரு சாக்கடை என்றும் தாங்கள் ஒரு தூய்மையான அரசியலைக் கொண்டுவரவிருப்பதாகவும் சொல்வார்கள். நீங்களும் அப்படி நினைக்கிறீர்களா? அது உண்மையென்றால் அதை எப்படிச் சுத்தம் செய்யப் போகிறீர்கள்?

உங்களுடைய முதல் வாக்கியம் தவறு. கல்வி அறிவு பெற்ற நிறைய அரசியல்வாதிகள் வெற்றிகரமாகவும் இயங்கிவருகிறார்கள். கல்வி அறிவு பெற்றிருப்பதால் நீங்கள் ஈடுபடும் எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டுமென்ற கட்டாயமும் இல்லைதான்.

நான் என் வாழ்க்கையை மிகவும் லகுவாக எடுத்துக் கொள்கிறேன். சென்னையிலேயே மிகச் சிறந்த கவுன்சிலராக விளங்க விரும்புகிறேன்… ஒவ்வொரு பைசாவையும் புத்திசாலித்தனமாகச் செலவழிக்க விரும்புகிறேன். சரியான திட்டமிடல், கண்காணிப்புப் பணிகளில் ஒவ்வொரு குடிமகனையும் பங்குபெற வைத்தல் என பல திட்டங்கள் வைத்திருக்கிறேன். வார்டை மேம்படுத்த பல்வேறு தனி நபர்களையும் நிறுவனங்களையும் ஈடுபடுத்த விரும்புகிறேன். நகராட்சிச் செயல்பாடுகளும் அமைப்புகளும் சரியாகச் செயல்பட உதவி செய்வேன். இந்த எளிய வாக்குறுதிகளை மட்டுமே தர விரும்புகிறேன்.

பல்வேறு நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், எந்த வேலையில்தான் அவை இல்லாமல் இருக்கின்றன. சிலவற்றில் கூடுதலாக இருக்கும்; சிலவற்றில் குறைவாக. நான் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அது சென்னையில் மாற்றங்களைத் தூண்டிவிடுமா… விடலாம். மாற்றங்களைக் கொண்டுவரும் என்று திடமாக நம்புகிறேன். என் வார்டில் நான் செய்யும் விஷயங்கள் பிற வார்டுகளில் இருப்பவர்களுக்குத் தூண்டுதலைத் தரலாம். ஆனால், அரசியலை அப்படியே புரட்டிப் போடப் போகிறேன்… நாட்டை தூக்கி நிறுத்தப் போகிறேன் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தால் என் வார்டு உறுப்பினர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் சிறிய விஷயங்களைக் கூடச் செய்ய முடியாமல் தோற்றுவிடுவேன். அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும். அதே நேரம் நீங்கள் யார் என்பதை மறந்துவிடக்கூடாது. நான்கு பேர் உங்கள் பேச்சைக் கேட்கக் கூடுகிறர்கள் என்றதும் தலைக்கனம் ஏறிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

உள்ளாட்சி அவைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உள்ளாட்சிக் கூட்டங்களில் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கார்ப்பரேட் மீட்டிங்களில் கல்வி அறிவு பெற்றவர்களுடன் செயல்பட்டு வந்த நீங்கள் உள்ளாட்சிக் கூட்டங்களில் நடப்பவற்றைச் சமாளிக்க முடியுமா?

பல வருடங்களாகவே உள்ளாட்சி, உள்ளூர் அதிகார வர்க்கத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறேன். மனிதர்களையும் நிறுவனங்களையும் சமாளிக்கப் பல வழிகள் இருக்கின்றன. ஒரு தடை ஏற்பட்டால் அதை மோதித் தகர்க்கலாம். தாண்டிச் செல்லலாம்… சுற்றி வளைந்தும் போகலாம். எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நன்கு ஆலோசித்த பிறகே அரசியலில் இறங்கத் தீர்மானித்திருக்கிறேன். நிச்சயம் இதை மிகவும் உற்சாகத்துடன் ரசித்துச் செய்வேன்.

உங்கள் வார்டின் பிரச்னைகள் என்னஉங்கள் வார்டு மக்களுக்கு என்ன தேவை?

யாராவது அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களுடன் நின்று நிதானமாகப் பேசிய முதல் ஆள் நான்தான் என்று பலர் சொன்னார்கள். நாட்டு நடப்புகள் குறித்து பலரும் விரக்தி அடைந்திருக்கிறார்கள். அமைப்புகள் அவர்களுடைய பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வையும் கொண்டுவரவில்லை. நீங்கள் வெற்றி பெற்றால் அதன் பிறகும் திரும்பி வந்து எங்களுடன் இதுபோல் பேசுவீர்களா என்று சிலர் கேட்டார்கள். அவர்கள் நிறையவே ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எனவே, மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

குறிப்பாகச் சொல்வதானால், குப்பைகள் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு குப்பை. டவுன் பஞ்சாயத்தைச் சேர்ந்த வார்டு என்பதாலும் மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக இருப்பதாலும் சாலைகள், நடை பாதைகள், மைதானங்கள், விளக்குகள் என எல்லாமே படு மோசமாக இருக்கின்றன. வெள்ள நீர் வடிகால் என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் ஊரே வெள்ளக்காடாகி சாலைகள் எல்லாம் மேலும் மோசமாகிவிடுகின்றன.

பிரச்னைகளைப் பொதுமைப்படுத்திப் பேசுவது தவறு என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு தெருவுக்கும் நபருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். உதாரணமாக, சேரியில் விளக்குகள் எரியாமல் இருப்பது பெரிய பிரச்னை என்பது மத்திய வர்க்க மனிதர் ஒருவருக்குத் தெரியாமலே இருக்கலாம். விளக்குகள் இல்லையென்றால் இரவில் சேரிகளில் பெண்களும் சிறுவர்களும் தெருக்களில் நடப்பது மிகவும் சிரமம் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதுகாப்பு ஒரு முக்கியமான பிரச்னையாக ஆகிறது. மோசமான போக்குவரத்துகளினால் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களுக்கு பெரும் அபாயங்கள் நேரலாம். பள்ளி தொடங்கும் நேரத்திலும் முடிவடையும் நேரத்திலும் போக்குவரத்து மிக நெரிசலாகிவிடுகிறது.

எல்லாமே ஸ்தம்பித்துப் போல்விட்டதுபோல் இருக்கிறது. மக்கள் விரக்தியின் விளிம்புக்குப் போய்விட்டார்கள். இனி யார் வந்தும் என்ன பிரயோஜனமும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது.

பிரசாரத்துக்குப் போனபோது, வரவேற்பு எப்படி இருந்தது? வெற்றி வாய்ப்புகள் எவ்வளவு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

வெற்றியோ தோல்வியோ அது வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது. வாக்களிக்கும் 17-ம் தேதிக்கும் முடிவுகள் வெளியாகும் 21-ம் தேதிக்கும் பிறகுதான் நமக்குத் தெரியவரும். எனக்கு எல்லாம் தெரியும் என்றும் மக்களை கிள்ளுக்கீரையாக மதித்தும் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன். நானும் எனது பிரசாரக் குழுவினரும் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து திக்குமுக்காடிவிட்டோம். பொறுமையாக அழைத்துப் பேசினார்கள். பிரச்னைகளை எல்லாம் சொன்னார்கள். ஆலோசனை வழங்கினார்கள். தண்ணீர், காபி கொடுத்து உபசரித்தனர். அவர்களில் எத்தனை பேர் வாக்களிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேர்தல் நாளில் அனைவரையும் வந்து வாக்களிக்கச் செய்ய எல்லா முயற்சிகளும் எடுக்கவிருக்கிறோம். ஆனால், இறுதி முடிவு மக்கள் கையில்தான்.

நீங்கள் ஜெயித்தால், உங்களுடைய உடனடித் திட்டங்கள் என்ன? ஐந்து வருட முடிவில் என்னவெல்லாம் செய்து முடித்திருப்பீர்கள்?

பல நிறுவன்ங்களையும் நிபுணர்களையும் அழைத்து சீர் குலைந்து கிடக்கும் அமைப்பைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுப்பேன். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமானால் பல்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் பல விஷயங்கள் நடந்தாக வேண்டியிருக்கும். அமைப்பு விரைவில் சீராக இயங்க ஆரம்பிக்கவில்லையென்றால், எதையும் சாதிக்க முடியாது. மக்களிடமிருந்து எந்தப் பின்னூட்டமும் (ஃபீட் பேக்) பெற முடியாமல் போய்விடும். கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டதுபோல் ஆகிவிடும்.

நான் வெற்றி பெற்றால் தெருக்களையும் சுற்றுச் சூழலையும் மிகச் சிறப்பாக ஆக்குவேன். இது ஏதோ ராக்கெட் விடுவதுபோல் சிரமமான காரியம் அல்ல. உலகில் கோடிக்கணக்கான இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மிகவும் எளிய நடைமுறை சாத்தியமான ஒன்றுதான். நவீன குப்பை அகற்றும் கருவிகள், நன்கு வடிவமைக்கப்பட்ட தெருக்கள், அருமையான மைதானம், ஏழைகளுக்கான பொது கழிப்பிடம் என எல்லாவற்றையும் அரசின் திட்டத்தோடு எங்கள் திட்டங்களும் இசைந்துபோவதுபோல் நடத்திக் காட்டுவேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். விரக்தியும் அவ நம்பிக்கையும் கணிசமான அளவு குறையும். கூடி உழைக்கக் கற்றுக்கொண்டு எங்கள் வார்டை மிகச் சிறந்த இடமாக அவர்கள் மாற்றுவார்கள். அதுவே வேறு எந்த வளர்ச்சியை விடவும் மிகவும் முக்கியமானது.

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

தேர்தலில் நிற்பதும் பிரசாரங்களில் ஈடுபடுவதும் நாங்கள் பயப்படுவதைவிட எளிதாகவே இருக்கின்றன. ஆனால், இது கடினமான ஒரு வேலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விஷயங்களில் உங்களுக்கு நல்ல அனுபவமும் சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையும் இருந்தால் துணிந்து ஒருமுறை களமிறங்கிப் பாருங்கள். நானும் என் குழுவினரும் சில தடைகளைத் தகர்த்திருப்பதாக நம்புகிறேன். பெரும்பாலும் மனத்தடைகள். எனவே பிறரும் முயன்று பார்க்கலாம். நாம் பிறருக்குச் செய்யும் பெரிய சேவையாக அது நிச்சயம் இருக்கும்.