ஜே.சி.குமரப்பா : காந்திய கம்யூனிஸ்ட்
ஜனவரி 30 – ஜே.சி. குமரப்பா நினைவு நாள்
1929, மே 29. சபர்மதி ஆறு அதன் கரையில் அமைந்திருந்த ஆஸ்ரமத்தைத் தழுவியபடி ஓடிக்கொண்டிருந்தது. மேற்கத்திய பாணியிலான உடை அணிந்த ஒரு புதிய மனிதர் தன் ஆடம்பரக் கைத்தடியைச் சுழற்றியபடி, நிலைகொள்ளாமல் தவித்தபடி குறுக்கும்நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார். அவருடைய மேட்டிமைத்தனத்துக்கு சபர்மதி ஆஸ்ரம விடுதி மிகவும் அசவுகரியத்தைத் தருவதாக இருந்தது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொருட்கள் என்று பார்த்தால் ஒரே ஒரு கயிற்றுக் கட்டில் மட்டுமே இருந்தது. நகர்ப்புறத்தில் பரபரப்புடன் இயங்கி வந்தவருக்கு அந்த ஆஸ்ரமத்தில் காலம் கல்லைக் காலில் கட்டிக் கொண்ட நத்தையைப் போல் ஊர்ந்து கொண்டிருந்தது. தான் சந்திக்க வேண்டிய நபரை சீக்கிரமே சந்தித்துவிட்டு நகருக்குத் திரும்பிவிடவேண்டும் என்று அறையில் இருந்து புறப்பட்டார்.
வெய்யில் கண்ணைக் கூசச் செய்தது. மேற்கத்திய உடை வெப்பத்தை மேலும் அதிகரித்துக் காட்டியது. போகும் வழியில் முதியவர் ஒருவர் தரையில் அமர்ந்துகொண்டு சக்கர வடிவில் விசித்திரமான ஒரு கருவியைச் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பிருமாண்டமாக வளர்ந்திருந்த மரம் ஒன்று அவருக்கு நிழல் தந்துகொண்டிருந்தது. நவ நாகரிக மனிதர் அந்த முதியவருக்கு அருகில் போய் நின்று அவர் செய்வதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தார். அடிக்கடி தன் கடிகாரத்தை திரும்பத் திரும்பப் பார்த்தபடியே இருந்தார். தரையில் அமர்ந்திருந்த முதியவர் அவ்வப்போது நிமிர்ந்து பார்த்து பிறகு தன் வேலையில் ஆழ்ந்தார். நேரம் சரியாக 2.30 ஆனது. முதியவர் ராட்டையைச் சுற்றுவதை நிறுத்திவிட்டு, நீங்கள்தானே ஜே.சி.குமரப்பா என்று கேட்டார். நவ நாகரிக உடை அணிந்தவர் சிறிது ஆச்சரியப்பட்டபடியே ஆமாம் என்றார். வாருங்கள் நீங்கள் சந்திக்க வந்திருக்கும் காந்தி நான்தான் என்றார் அந்த முதியவர். அடுத்த விநாடியே ஜே.சி.குமரப்பா தனது விலை உயர்ந்த ஆடை அழுக்காகும் என்ற கவலை எதுவும் இல்லாமல் சட்டென்று மண் தரையில் உட்கார்ந்தார். ஒரு சிஷ்யன் தன் குருவைக் கண்டடைந்த தருணம் அது.
***
பிரிட்டிஷ் அரசின் தவறான கொள்கைகள் இந்தியாவை எப்படியெல்லாம் சூறையாடி வந்திருக்கின்றன என்பதை பொருளாதார அடிப்படையில் விரிவாக ஆராய்ந்து எழுதிய இந்திய பொருளியல் மேதைகளில் முதன்மையானவர் ஜே.சி.குமரப்பா (1892 ஜனவரி 4 – 1960 ஜனவரி 30). சாலமன் துரைசாமி கர்னேலியஸுக்கும் எஸ்தர் ராஜநாயகத்துக்கும் ஏழாவது மகனாகப் பிறந்தவர். பொருளாதாரம், சார்டர்ட் அக்கவுண்டன்ஸி ஆகிய படிப்புகளை இங்கிலாந்தில் படித்து முடித்தவர். அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சிறு செமினார் படிப்பை மேற்கொண்டார். டாக்டர் ஹெச்.ஜே.டெவன்போர்ட் (H.J. Davenport) என்ற பேராசிரியரின் புத்தகம் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேராசிரியரின் பொருளாதாரக் கொள்கை மிகவும் தெளிவானது: ஒரு திருடன் பீரோவை உடைத்து நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு போகிறான் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு அவன் பயன்படுத்தும் கருவிகளும் வழிமுறைகளும் அவனைப் பொறுத்தவரையில் உற்பத்திக்கான கருவிகளே. ஏனென்றால், மாண்புமிகு திருடரின் கோணத்தில் பார்த்தால், அந்தக் கருவிகள் அவருடைய லாபத்தைப் பெருக்க உதவியிருக்கின்றன. வாங்கும் சக்தியை அதிகரித்திருக்கின்றன.
அதை கேட்ட அடுத்த விநாடியே ஜே.சி.குமரப்பா இந்தியாவுக்கு விமானம் ஏறிவிட்டார். ஜே.சி. குமரப்பாவை உருவாக்கியது நீங்கள்தானே என்று பிற்காலத்தில் யாரோ காந்தியைக் கேட்டார்களாம். அதற்கு காந்தி சிரித்தபடியே, இல்லை டெவன்போர்ட் உருவாக்கினார் என்று சொன்னாராம்.
நன்கு பழுத்த கனியைப் பறிப்பதுபோல் மரத்துக்கு வலிக்காமல் வரியை வசூலிக்க வேண்டும் என்பது ஜே.சி.குமரப்பாவின் பொருளாதாரக் கோட்பாடு. நன்கு திட்டமிடப்பட்டு முறையாக வசூலிக்கப்படும் வரியானது வரி செலுத்துபவரின் உற்பத்தித் திறனை எந்தவகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும். ஒரு கரி வியாபாரி நன்கு வளர்ந்த மரத்தை வெட்டி விறகை எரித்து கரியை உற்பத்தி செய்வதுபோல் ஓர் அரசன் வரி வசூலிக்கக்கூடாது. செடியை எந்தவகையிலும் சிதைக்காமல் மலரை மட்டும் கொய்யும் பூந்தோட்டக்காரனைப் போல் அரசன் வரி வசூலிக்க வேண்டும் என்பதே ஜே.சி.குமரப்பாவின் கோட்பாடு.
***
ரெவரண்ட் வெஸ்ட்காட் என்ற இந்திய திருச்சபைகளின் தலைமை பிஷப், அஹிம்சை முறையிலான காந்தியின் போராட்டம் யேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிரானது என்று பைபிளில் இருந்து ஏராளமான மேற்கோள்களைக் காட்டி பிரசாரம் செய்துவந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட குமரப்பா உண்மையான கிறிஸ்தவர்கள் காந்தியின் பக்கமே இருக்கவேண்டும் என்று அதே பைபிள் வாசகங்களை வைத்தே பதிலளித்தார்.
சத்தியாகிரகிகளான காந்தியவாதிகளுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு கைக்கொள்ளும் அடக்குமுறைகளை கிறிஸ்துவின் வழியில் நடப்பவர் என்ன… குறைந்தபட்ச மனிதாபிமான, நாகரிக சிந்தை உடையவர்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏசுவின் போதனைகளில் அஹிம்சை இல்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.
கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர்கள் முதலில் தங்களை பிரிட்டிஷார்களாக உணர்கிறார்கள்… அதன் பிறகே வசதிப்பட்டால் கிறிஸ்தவர்களாக தங்களை உணர்கிறார்கள். முதல் உலகப் போர் காலகட்டத்தில் ஒவ்வொரு தேவாலயத்தின் பிரசங்க மேடைகளும் குறுகிய கண்ணோட்டம் கொண்ட தேசியவாதத்தை முன்னிறுத்தி வன்முறையின் முரசுகளை முழங்கி அப்பாவிகளை போருக்கு அனுப்பி வைத்தன என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கர்த்தரே… இவர்கள் தாம் செய்வது யாதென்று அறியாதவர்கள் இவர்களை மன்னியும் என்று மன்றாடிக் கெட்டுக்கொண்டது உங்களைப் போன்றவர்களுக்கும் சேர்த்துத்தானோ என்னவோ…
ரோமாபுரி மன்னரிடமிருந்து தங்களை விடுவிப்பார் என்று மக்கள் அவர் (இயேசு) பின்னால் போனபோது அதை மறுத்து மலைக்கு தனியனாகத் திரும்பிச் சென்றார் என்பதைச் சுட்டிக்காட்டி அரச கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் விடுதலை பெறுவதை அவர் விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டியிருகிறீர்கள். ஐயோ பாவம். இயேசுவின் சாம்ராஜ்ஜியம் என்னவென்றும் அவர் உத்தேசித்த விடுதலை என்னவென்றும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியிருப்பது வருத்தத்தையே தருகிறது. அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் அவரைத் தாற்காலிக சாம்ராஜ்ஜியத்தின் ராஜாவாக இருக்கச் சொன்னார்கள். அவரோ நித்தியத்துவத்தின் தேவனாக இருக்கத் தீர்மானித்திருந்தார். எனவேதான் அவர் ரோமாபுரியின் மன்னராக விரும்பியிருக்கவில்லை.
அதுபோல் ராயனுக்கு உரியதை ராயனுக்குக் கொடுங்கள் தேவனுக்கு உரியதை தேவனுக்குக் கொடுங்கள் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார் என்று சொல்லி பிரிட்டிஷாரின் வரி வசூலிப்பை நியாயப்படுத்துகிறீர்கள். ஆனால், இயேசு சொன்னதன் உண்மையான அர்த்தம் அது அல்ல. தேவனுக்குத்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்துமே சொந்தம். ராயனுக்கு எதுவுமே சொந்தமில்லை. எனவே தேவனுக்கு ராஜ்ஜியத்தைக் கொடுங்கள். ராயனுக்கு பூஜ்ஜியத்தைக் கொடுங்கள் என்ற அர்த்தத்தில்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
***
ஒரு முறை காந்தி காசியில் இருந்து குமரப்பாவை சந்திக்க பாட்னா வந்திருந்தார். பீகாரில் அப்போது நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் தொடர்பான கணக்கு வழக்குகளை ஜே.சி. குமரப்பாதான் கவனித்துவந்தார். ஓரிரு நாட்களில் அது தொடர்பான முக்கியமான மீட்டிங் நடக்கவிருந்தது. வரவு செலவு கணக்கில் ஏதோ சிறிய பிழை நேர்ந்திருந்தது. ஆடிட்டர்கள் அதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. ஜே.சி குமரப்பாவுக்கு திருப்தியில்லை. என்ன தவறு என்பதைக் கண்டே பிடித்தாகவேண்டும் என்று இரவு முழுவதும் தூங்காமல் ரசீதுகளை அலசிக்கொண்டிருந்தார். காந்தி அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், சரி நாளை காலையில் சந்தித்துக்கொள்கிறேன் என்று சொல்லி தன் அறைக்குப் போய்விட்டார்.
மறுநாள் காலையில் குமரப்பாவை சந்திக்க போயிருக்கிறார். குமரப்பாவோ இன்று முடியாது நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டார். அது முடியாதே. இன்று இரவே வார்தாவுக்கு திரும்பப் போகிறேன் என்று காந்தி சொல்லியிருக்கிறார். சரி, அப்படியானால் என்னைப் பார்க்காமலேயே திரும்புங்கள் என்று குமரப்பா சொல்லிவிட்டார். உங்களைச் சந்திப்பதற்காக நான் காசியில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன். இன்று நாம் சந்தித்தே ஆகவேண்டும் என்று காந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதோ பாருங்கள். நான் காந்தியல்ல. நினைத்த இடத்துக்கு நினைத்தபடி போய்வர. கணக்கு வழக்குகள் தொடர்பான ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அது முடிந்த பிறகு நானே உங்களைச் சந்திக்க வருகிறேன். இன்று உங்களைச் சந்திக்க முடியாது என்றூ கறாராகச் சொல்லிவிட்டார். காந்தி அன்று அவரைச் சந்திக்காமலேயே திரும்பினார்.
***
பொருளாதாரம் தொடர்பாக ஜே.சி.குமரப்பா முன்வைத்த சில கருத்துகள்:
வேட்டைப் பொருளாதாரம்: விலங்குகள் தங்கள் உள்ளுணர்வுக்கு ஏற்ப ஒரு வாழ்க்கையை வாழ்கின்றன. சிங்கம் புலி என வன் மிருகங்கள் இருக்கின்றன. அவை கைக்குக் கிடைக்கும் மான், முயல், எருமை என அனைத்தையும் கொன்று தின்கின்றன. தான் தின்றது போக மிச்சத்தை அழியவிட்டுச் செல்கின்றன. இந்த வகையில், எல்லாமே எனக்கு என்ற உரிமை மட்டுமே காணப்படும். கடமை என்று ஒன்றுமே இருக்காது. கொல்லப்படும் உயிர்கள் பற்றி அவற்றுக்குச் சிறிதும் கவலை கிடையாது. முழுவதும் சுயநலமான விலங்குகள் அவை. வன்முறையையே தங்கள் வழிமுறையாகக் கொண்டவை. பேராசை பிடித்த வியாபாரிகள், போதைப் பொருட்கள் விற்பவர்கள், இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்கள், இயற்கைச் சீர்கேட்டை விளைவிக்கும் தொழில் செய்பவர்கள் இந்த வகையில் வருவார்கள்.
சேகரிப்புப் பொருளாதாரம் : குரங்குகள் மரங்களில் வளர்ந்திருக்கும் காய், கனிகளை உண்டு வாழ்கின்றன. அந்த மரங்களை அவை நட்டு வளர்க்கவில்லை. ஆனால், அதன் கனிகளை மட்டும் பறித்து உண்ணுகின்றன. இவையும் சுயநலமானவையே. இங்கும் உரிமை மட்டுமே இருக்கும். கடமை இருக்காது. ஆனால், இவற்றினால் பெரிய அழிவுகள் நடப்பதில்லை. வன்முறையும் பெருமளவுக்கு இருக்காது. உற்பத்தியில் பங்கு பெறாமல் லாபத்தை மட்டும் பெற்றுச் செல்லும் நவீன நிதியாளர்கள், திருடர்கள், பிக் பாக்கெட்கள் இந்த வகையில் வருவார்கள்.
உழைப்புப் பொருளாதாரம்: முதலில் கூறிய இரண்டும் விலங்கு நிலையிலானவை. முன்றாவது வகையில் கடமையும் உரிமையும் கல்ந்து காணப்படும். ஒரு விவசாயி நிலத்தை சீர்திருத்தி, பயிர் நட்டு, நீர் பாய்ச்சி, களை பறித்து, உரம் போட்டு கடைசியில் அறுவடை செய்து எடுத்துக்கொள்வதைப் போன்றது. பேராசை இல்லாத வியாபாரி, குறைந்த லாபம் வைத்துத் தொழில் செய்பவர் இந்த வகைக்குள் வருவார்கள்.
கூட்டுறவுப் பொருளாதாரம்: இதற்கான மிகச் சிறந்த உதாரணம் தேனீக்கள். அவை தமக்காக உழைப்பதில்லை. அவை செய்வது எல்லாமே சமூகத்தின் நலனுக்காகத்தான். கூட்டுக்குடும்ப வாழ்க்கை இதைப் போன்றதுதான். குடும்பத்தின் நலனுக்கு ஏற்ப தனி நபர் விருப்பு வெறுப்புகள் வரையறுக்கப்பட்டிருக்கும். சமூகம், தேசம் என எந்த அடையாளத்துடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்களோ அதன் நலன் இதில் உங்களை ஒழுங்குபடுத்துவதாக இருக்கும்.
சேவைப் பொருளாதாரம்: மிகவும் உயர்வான பொருளாதாரம் இதுவே. ஒரு தாய்தான் இதற்கான மிகச் சிறந்த உதாரணம். குழந்தைக்காக அவள் உழைக்கிறாள். எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பதில்லை. குழந்தைக்கு பணிவிடை செய்வதே அவளுக்கான சன்மானம். காந்தியடிகள் இப்படியானதொரு நிலையை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருந்தார்.
நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த ஐந்து நிலைகளும் இருக்கவே செய்யும். நாளொன்றில் நாம் எத்தனை தடவை புலியாக வாழ்கிறோம். எத்தனை தடவை குரங்காக வாழ்கிறோம். எத்தனை தடவை விவசாயிபோல் வாழ்கிறோம். எத்தனை தடவை தேனீ போல் வாழ்கிறோம். எத்தனை தடவை ஒரு தாயாக வாழ்கிறோம் என்பதை நமக்கு நாமே அலசிப் பார்த்துக்கொள்ள வேண்டும். தாய்மை நிலை நோக்கி நகர்கிறோம் என்றால்தான் நாம் நாகரிகமாகி வருகிறோம் என்று அர்த்தம். இல்லையேல் நாம் மீண்டும் மிருக நிலைக்குத் திரும்புகிறோம் என்றுதான் அர்த்தம்.
***
சீனா பற்றி குமரப்பா (1951):
சீனாவின் பிரதான தொழிலான விவசாயத்தில் மிகக் குறுகிய காலகட்டத்தில் சீன கம்யூனிஸ்ட்கள் மாபெரும் சாதனை செய்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் வரை நிலப்பிரபுக்களும் மன்னர்களும் நிலமற்ற ஏழை விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வந்திருக்கிறார்கள். தேசம் முழுவதும் கூட்டுப் பண்ணைகளை கம்யூனிஸ்ட்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
தெருக்கள் மிகவும் தூய்மையாக இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் சைக்கிள், ரிக்ஷா, பஸ்களில்தான் செல்கிறார்கள். கார்கள் குறைவாகவே இருக்கின்றன. அவை கூட அரசுக்குச் சொந்தமானவையே. வாடகைக் கார்களோ டாக்ஸிகளோ கண்ணில் படவில்லை. விமான நிலையங்கள் பார்க்க குடிசை போல்தான் இருக்கின்றன. ஓடு தளங்களில் வெறும் தார்தான் போடப்பட்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் எளிமையே தென்படுகிறது. அதீத செல்வச் செழிப்போ, அதீத வறுமையோ தென்படவில்லை. அனைவருமே ஏறத்தாழ சமமாகவே இருக்கிறார்கள். உணவு தாராளமாகக் கிடைக்கிற்து. பிற அடிப்படைத் தேவைகளும் மிகவும் மலிவான விலையிலேயே கிடைக்கின்றன.
அனைவரிடத்திலும் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. தரிசு நிலம் என்று எதுவுமே தென்படவில்லை. மிகக் கடுமையான உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். இந்தியாவைவிட பல மைல்கள் முன்னேறிய நிலையில் இருக்கிறார்கள். ஒருமுகப்பட்ட சிந்தனை அவர்களுக்கு இருக்கிறது. இரும்புக் கரம் கொண்டு காரியங்களை முடிக்கும் தலைமை இருக்கிறது. நமக்கு தொலை நோக்குப் பார்வையும் இல்லை. உத்வேகமும் இல்லை.
ரஷ்யா பற்றி குமரப்பா (1952):
ரஷ்யா இந்தியாவைவிட ஏழு மடங்கு பெரியது. ஆனால், மக்கள் தொகையோ நம்மில் பாதிதான்! ரஷ்யாவில் அனைத்துமே அரசின் கட்டுப்பட்டில் இருக்கின்றன. இயக்குநர்கள், அதிகரிகள், நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். தேவையான சம்பளம் தரப்படுகிறது. ரஷ்ய அரசு கல்வி மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்கு 35% செலவிடுகிறது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த 40%, பாதுகாப்புக்கு 20% எஞ்சிய தொகை நிர்வாகப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.
அனைவருக்கும் தேவையான உணவு, உடை, உறையுள் கிடைத்திருக்கிறது. உற்பத்தி தரப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு தயாராகும் பொருட்கள் அமெரிக்கா போலவோ பிரிட்டன் போலவோ உயர்தரமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவற்றைத்தான் அந்த மக்கள் பயன்படுத்தியாக வேண்டும். அந்நியப் பொருட்களுக்கு அனுமதி கிடையாது.
அங்கு பொருட்களுக்கு நாம் விலை நிர்ணயிப்பதுபோல் செய்வதில்லை. தயாரிப்பு செலவு என்னவாக இருந்தாலும் ஆடம்பரப் பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கும். சாதாரண மக்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் மிக மலிவாகக் கிடைக்கும்.
பொதுவாகவே பல பொருட்களின் விலை அதிகமாகவே அங்கு இருக்கிறது. ஏனென்றால், பொறியாளர்களுக்கும் நிபுணர்களுக்கும் தரப்படுவது போலவே உழைப்பாளிகளுக்கும் அதிக சம்பளம் தரப்படுகிறது.
நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சுதந்தரம் என்றால் எளியவர்களைச் சுரண்டுவதற்கான சுதந்தரம் என்று நினைக்கக்கூடாது. ரஷ்யாவில் நிலவும் சமத்துவமானது நேர்வழியில் வந்த ஒன்று அல்ல. அவர்களும் அஹிம்சை முறையில் அதை சாதித்ததாக ஒன்றும் சொல்லிக் கொள்ளவும் இல்லை. என்றாலும் சர்வோதயாவின் பல கோட்பாடுகளை அவர்கள் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். நாம் உண்மையான சர்வோதய வாழ்க்கையை அஹிம்சை முறையில் இந்தியாவில் கொண்டுவரப் பாடுபடவேண்டும். ரஷ்யர்களின் ஒருமுகப்பட்ட முனைப்பு, சமத்துவ மனோபாவம், செயலில் சளைககாத தீவிரம் ஆகியவற்றை ரஷ்யர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.
கம்யூனிச வன்முறையைப் பற்றிச் சொல்வதானால், ஒரு புரட்சியைத் தொடர்ந்து அரசுக் கட்டுப்பாட்டிலான பொருளாதாரம் பின்பற்றப்பட்டால் வன்முறை இருந்தே தீரும். அது சமூகத்தை அடியோடு புரட்டிப் போடும் ஒன்று அல்லவா. ரஷ்யர்கள் வன்முறையில் ஈடுபடாதவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள்வே இல்லை. அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழி தெரியாது. தங்களுடைய புரிதலுக்கு ஏற்ப தங்களுக்கு சரியென்றுபட்டதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
0
B.R. மகாதேவன்











