க்யூபா காட்டும் வழி

aaaaaஏழைகளின்  நிலையைப் போக்க எடுத்துக்கொண்ட பொருளாதார முயற்சிகளில் ஒரு நாடு எவ்வாறு ஒரு முற்போக்கான பாதையில் செல்லும் என்பதை க்யூபா நிரூபித்து வருகிறது. வறியவர்களுக்கான ஒரு பொருளாதார அறிக்கை எவ்வாறு நாட்டின் பொருளாதார அடித்தளத்தையே மாற்றும் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

உலகில் நிலவிய பனிப்போர் முடிந்த நேரம், பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கருதிய சோஷ‌லிச பொருளாதாரக் கொள்கையைக் காட்டிலும், முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையே வெற்றிக்கு உகந்தது என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது.

ஆனால் இந்த சுய தம்பட்ட முதலாளித்துவ மேலாண்மை உயர்வு மறைந்துவிட்டது.  அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கிறது.  ஐரோப்பிய நாடுகளோ தங்களது யூரோ கூட்டணி நாடுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் தவித்துவருகின்றன. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போன்ற பெரும் எழுச்சிகள் அனுதினமும் குலுக்கிக் கொண்டிருப்பதும், ஐரோப்பா முழுவதும் எழுச்சிகள் நடைபெறுவதும்  முதலாளித்துவ பொருளாதாரத் திட்டம் குறித்த உண்மையை வெகுவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத்தில் நிலவும் குழப்பம், ஒரு புதிய சோஷ‌லிச பொருளாதார முறையை நோக்கி உலகை நகர்த்தி கொண்டிருக்கிறது.

இந்த வெளித் தெரியாத மாற்றத்துக்கு தலைமை ஏற்றிருக்கும் க்யூபா, அமெரிக்காவின் அனைத்து வகை எதிர்ப்புகளையும் ஏற்று அதற்கு எதிர் தாக்குதல் தொடுத்து, தற்போது உலகின் பல முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் பல்வேறு வகையில் பொருளாதார முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா பல்வேறு வகையில் க்யூபாவுக்கு செல்லக்கூடிய பல நாடுகளை, கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வர்த்தகப் போக்குவரத்தை தடுத்து வருவதுடன், ஜப்பானிலிருந்து மருத்துவ உபகரணங்கள், இத்தாலியிலிருந்து ரசாயனப் பொருட்கள், பிரான்சிலிருந்து எக்ஸ்ரே கருவிகள் இறக்குமதி செய்யப்படுவது உட்பட அனைத்துக்கும் தடைகளை உண்டாக்கி வருகிறது.

ஆனால், அமெரிக்காவின் இந்த தடங்கலை எல்லாம் மீறி க்யூபா தனக்கென்று ஒரு வழிமுறையை உருவாக்கி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒரு கூட்டு முயற்சியை உண்டாக்கி தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை பெற்று வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டுத்திட்ட முயற்சியின் பலனாக க்யூபாவின் திட்ட மதிப்பீடு 5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.  இது தற்போது வளர்ந்து, 60 வெவ்வெறு நாடுகளிலுள்ள 40 துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 240 திட்டங்களாக பெருகியுள்ளது.

இதை க்யூபா தன் சுய முயற்சியில் சோஷ‌லிச வழிமுறைகளில் சாதித்துள்ளது.  அதன் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9.6% தொட்டுள்ளது.

இன்னும் அதிகம் சொல்லலாம்.  ஆரம்பக் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் பெறும்வரை அனைவருக்கும் இலவசக் கல்வியை க்யூபா உத்திரவாதம் செய்துள்ளது. அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ-வின் fact book படி க்யூபாவின் அண்டை முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக படிப்பறிவு 99% உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளது.

அது போல மருத்துவ வசதியை உறுதி செய்துள்ளது.  க்யூபா போன்ற வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளில் உள்ளது போல், மருத்துவத் துறையில் உள்ள அசுத்தமும், கவனிப்பாரற்ற தன்மையும், ஊழலும் க்யூபாவில் இல்லவே இல்லை.

ஆச்சரியப்படும் வகையில், க்யூபா தனது நாட்டின் ஆண்டு நிதி நிலையில் 45 சதவீதத்தை மருத்துவத்திற்கும், கல்விக்கும் மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறது.  ஐக்கிய நாடுகளின் அங்கமான உலக ஆரோக்கிய நிறுவனத்தின் (WHO) குழந்தை இறப்பு விகிதம் 1000-க்கு 4.7 என்ற விகிதத்தில் குறைந்திருப்பதாக பதிவு செய்துள்ளது.  மேற்கத்திய நாடுகளில் பல நாட்டின் நிலைமையைக் காட்டிலும் சிறந்திருப்பதை உறுதி செய்கிறது.

இன்று முதலாளித்துவ நாடுகள் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்கிறது. க்யூபா தனது சோஷ‌லிசப் பாதையில், நாட்டின் அனைத்து மக்களையும் வறுமையிலிருந்து, வேலையின்மையிலிருந்து, நோயிலிருந்து காத்திருப்பது அசாதாரண சாதனையாகும்.

சோஷ‌லிசக் கோட்பாட்டின் உள்ளடக்கத்தை முற்றாக பேணுவதுடன், தனது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமிடுதலை அந்த நாட்டின் தொழிலாளர்களுடனும், உழைப்பாளர்களுடனும், உள்ளாட்சி அமைப்புகளுடனும் முற்றாக கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கிறது க்யூபா.  அதுதான் உண்மையான சோஷ‌லிசப் பாதையின் உள்ளடக்கம்.  அத்தோடில்லாமல் நேட்டோ அமைப்பிலுள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளையும், தனது சோஷ‌லிச வழிமுறைகளை மாதிரியாக கொண்டு திட்டமிடும் அளவுக்கு ஊக்குவித்து வருகிறது.

பெர்கலேயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் “அமெரிக்காக்கள் பற்றிய ஆய்வு” மையத்தின் இயக்குனர் திரு ரோஜர் பர்பேக் எழுதிய ஒரு கட்டுரையில், க்யூபா தனது சோஷ‌லிசத் திட்டங்களின் மூலமாக பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்ததுடன், அதில் வெற்றியும் கண்டதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

க்யூபா போல் உலகின் எந்த நாடும் தனது பொருளாதாரத் திட்டங்களை தனது நாட்டு தொழிலாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதில்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பனான மனிதாபிமானமற்ற முதலாளித்துவக் கணக்கீடுகளை சார்ந்திராமல், நாட்டின் தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது நலனையே பேணி வருகிறது க்யூபா.

அமெரிக்க வழியில் லாபம் மற்றும் வணிகத்தில் புரளும் தொகைகளை வைத்து நாட்டு மக்களின் வாழும் நிலையை குறிப்பதென்பது ஒரு அப்பட்டமான மோசடியாகத்தான் இருக்கும்.  ஏனென்றால், அந்தப் புள்ளி விவரங்கள் உண்மையில் அந்த நாட்டு மக்களின் உண்மையான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதில்லை.

முந்தைய சோவியத் ரஷ்ய கூட்டணித் திட்டங்கள் சரியானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் சோஷ‌லிசத்தின் மதிப்பு, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் மூழ்கிவிடவில்லை.  மாறாக, சரியான திட்டமிடுதலால்,  சோஷ‌லிச கொள்கை இன்னும் வீறுகொண்டதாக எழும்.

மந்திர ஒலியால் கட்டுண்டு குழல் வாசிப்பவன் பின்னால் செல்லும் எலிகளைப் போல, பல்வேறு நாடுகளை தனது  சோஷ‌லிச கொள்கை திட்டங்கள் மீது ஈர்க்க க்யூபாவால் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நன்றி : அரிந்தம் செளத்ரி, டெக்கான கிரானிக்கல், தி சண்டே இந்தியன்

தமிழில் – சித்ரகுப்தன்

மாவோ-ஹூ ஜிண்டாவ் : நவீன சீனாவின் சித்தாந்த முரண்பாடு

1

நூற்றாண்டுகளாக சீனாவில் நிலவிவந்த முடியாட்சி முறை அக்டோபர் 1911ல் முடிவுக்கு வந்தது. கடைசியாக எஞ்சியிருந்த கிங் வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சன் யாட் ஸென் ஒரு முக்கிய உந்துசக்தியாக இருந்தார். புரட்சிகர அரசியல் நடவடிக்கைகள் மூலம் கொடுங்கோல் ஆட்சிமுறையை ஒழிக்கலாம் என்பதை சன் யாட் ஸென் சீனாவுக்கு உணர்த்தினார். ஜனவரி 1, 1912 அன்று சீனக் குடியரசு மலர்ந்தபோது, அதன் அரசுத் தலைவராக ஸென் பொறுப்பேற்றுக்கொண்டார். ஸென் தொடங்கி வைத்த கோமிண்டாங் கட்சி, அவர் மரணத்துக்குப் பிறகு சிதறுண்டது.

சன் யாட் ஸென் சந்தித்த அதே எதிர்ப்புகளை மாவோவும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. 1949ம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு உதயமானது. உள்நாட்டு யுத்தங்களையும் ஜப்பான் ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டு வெற்றிபெற்றபிறகே இது சாத்தியமானது. புரட்சியில் வெல்வதை விடவும் சவாலானது புரட்சியை தக்கவைத்துக்கொள்வது. கலாசாரப் புரட்சி தொடங்கப்பட்டது இதற்காகத்தான். முன்னதாக, 1958ல் மாவோ மாபெரும் பாய்ச்சல் என்னும் திட்டத்தை முன்னெடுத்துச்சென்றார். விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்டிருந்த சீனாவை நவீனப்படுத்தி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான பொருளாதார, சமூக திட்டமாக மாபெரும் பாய்ச்சல் வளர்த்தெடுக்கப்பட்டது. தொழில்மயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளையும் உற்பத்தி கருவிகளையும் கட்டமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

கலாசாரப் புரட்சியைப் போலவே மாபெரும் பாய்ச்சல் திட்டமும் எதிர்ப்புகளை சந்தித்தது. கட்சிக்குள் இருந்துகொண்டு திட்டத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்த லியு ஷோகி (Liu Shaoqi), டெங்சியோபிங் இருவரும் நீக்கப்பட்டனர். மாபெரும் பாய்ச்சல் திட்டத்துக்கு மாற்றாக அவர்கள் முன்வைத்தது முதலாளித்துவ மாதிரி பொருளாதாரத்தை. மாவோ இதனை எதிர்த்தார். முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தை தொடரவேண்டிய சமயத்தில் இதுபோன்ற சிந்தனைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று மாவோ சுட்டிக்காட்டினார்.

சோவியத்தில் நிகிதா குருஷேவ் இழைத்துவரும் தவறுகளை அவர் ஆதாரமாகச் சுட்டிக்காட்டினார். லெனின், ஸ்டாலின் ஆகியோர் உருவாக்கி வைத்திருந்த சோஷலிச கட்டுமானத்தை உடைத்து தகர்த்து முதலாளித்துவத்தை வரவேற்றிருந்தார் குருஷேவ். சோவியத் யூனியன் சறுக்கியது போல் சீனா சறுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மாவோ. சீனாவை குருஷேவின் சோவியத்தாக மாற்ற முயன்ற அனைவரையும் மாவோ நிராகரித்தார்.

விவசாயிகள், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டத்தை ஆரம்பித்தார் மாவோ. அந்த வகையில், மாணவர்களையும் அவர்கள் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்கள். மே 1966ல் செம்படையின் முதல் மாணவர் பிரிவு சிங்குவா பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய சிங்குவா மத்திய பள்ளியில் தொடங்கப்பட்டது. ஹூ ஜிண்டாவ் தன் படிப்பை முடித்துக்கொண்டு அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். பிற்போக்குவாதிகளுக்கு எதிரான மாவோவின் முழக்கத்தால் உந்தப்பட்ட பல மாணவர்கள் கிளர்ச்சியிலும் கலகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் முறை தவறி வன்முறையிலும் ஈடுபட நேர்ந்தது.

முதலாளித்துவத்தை ஆதரித்த டெங்சியோபிங் 1966ல் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதே எண்ணம் கொண்ட லியு ஷோகி இரண்டு ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டார். அரசியல், கல்வி, தொழில் துறைகள் மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளிலும் உள்ள புரட்சி விரோத மனப்பான்மை கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஹூ ஜிண்டாவின் தந்தையும் இதில் அடங்கும்.

கலாசாரப் புரட்சியில் ஹூவின் பங்களிப்பு என்ன என்பது தெரியவில்லை. கலாசாரப் புரட்சியை அப்போது அவர் ஆதரித்தாரா? தன் தந்தையை கைது செய்தததால் கம்யூனிஸ்ட் கட்சி மீது சினம் கொண்டாரா? தனது எதிர்ப்பை யாரிடமாவது பதிவு செய்தாரா? அல்லது கலாசாரப் புரட்சியின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு அங்கீகரித்தாரா? இந்தக் கேள்விகளுக்கு விடையில்லை. சிங்குவா செம்படைப் பிரிவில் அப்போது பல மாணவர்களும் மாணவர் தலைவர்களும் ஆசிரியர்களும்கூட இணைந்திருந்தனர் என்பதால் ஹூவும் அதில் இணைந்திருக்கலாம் என்று யூகங்கள் உள்ளன. அவை யூகங்கள் மட்டுமே.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1968ல், கிராமப்புறத்துக்குச் செல்வோம் என்று அறைகூவல் விடுத்தார் மாவோ. ‘உங்கள் தந்தையர் நாடு உங்களை எங்கே அழைக்கிறதோ அங்கே செல்லுங்கள்!’ எல்லா நாடுகளைப் போல சீனாவும் அப்போது கிராமம், நகரம் என்று இருவேறாகப் பிரிந்துகிடந்தது. கிராம மக்களின் நலன் குறித்த அக்கறை நகரவாசிகளுக்கு இருக்காது. நம்மளவில் வசதியாக இருந்தால் போதுமானது என்னும் நடுத்தர வர்க்க மனோநிலை இயல்பாக நிலவிவந்தது.

முடியாட்சி சீனாவை, கம்யூனிச சீனாவாகவும் பிறகு சோஷலிச சீனாவாகவும் வளர்த்தெடுக்க விரும்பிய மாவோ, நகர மக்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே நிலவிவந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியை ஆரம்பித்தார். கலாசாரப் புரட்சியோடு சேர்த்து அல்லது அதன் ஒரு பகுதியாக இதனை சாதிக்கலாம் என்று திட்டமிட்டார்.

அதற்கு முதலில் கிராமங்களை அறிந்துகொள்ளவேண்டும். கிராம மக்களின் சிரமங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை அறியவேண்டும். எனவே, கிராமத்துக்குச் செல்வோம் என்றார் மாவோ. சீனாவின் இன்னொரு பக்கத்தைக் காண மலைகள் மீது ஏறி கிராமப்புறங்களுக்கு இறங்கிச் செல்ல இளைஞர்களை வரவேற்றது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. நகரங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் இளைஞர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து கிராமங்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாடப்புத்தகங்களால் அளிக்கமுடியாத நேரடி அறிவை இந்த இடப்பெயர்ச்சி ஏற்படுத்தும் என்பது மாவோவின் நம்பிக்கை.

மாணவர்களோடு சேர்த்து அறிவுஜீவிகள் பலரும்கூட இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டனர். கிராமங்களில் அவர்களுக்குத் தனி சலுகைகள் அளிக்கப்படவில்லை. ஏழை விவசாயிகளோடு சேர்ந்து அவர்களும் ஒண்டிக்கொள்ளவேண்டியது. அவர்களுடன் தங்கி, உண்டு, உறங்கி அவர்கள் பணி கற்று, அவர்களுடன் சேற்றில் இறங்கி, களை அகற்றி, நெல் விதைத்து, அறுவடை செய்து வாழவேண்டியது. அப்போதுதான் உடலுழைப்பு அறிவுழைப்பைவிட தாழ்ந்தது என்னும் எண்ணம் மறையும். உடலுழைப்புக்குக் குறைந்த கூலியும் அறிவுழைப்புக்கு பன்மடங்கு அதிக கூலியும் அளிக்கும் வழக்கம் மாறும். மனிதர்களை அவர்கள் செய்யும் பணியை வைத்து தரம் பிரித்து அணுகும் முறையும் மாற்றமடையும். கற்றுக்கொள்வதோடு சேர்த்து, பிறருக்குக் கற்றுக்கொடுக்கவும் முடியும். நகர்புற மக்கள் கிராமங்களைப் புரிந்துகொள்வதைப் போல் கிராமப்புற மக்கள் நகரங்களைப் புரிந்துகொள்வார்கள்.

ஹூ கான்சு மாகாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஒரு ஹைட்ரோ எலெக்ட்ரிக் எஞ்சினியராக, கட்டுமானப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. கலாசாரப் புரட்சி நீடித்த காலம் முழுவதும் ஹூ இங்கேதான் இருந்தார்.

2

மாவோ குறித்த இன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு, அவர் நல்லதும் செய்தார், தீங்கும் செய்தார் என்பதுதான். எத்தனை விழுக்காடு நன்மைகள் செய்தார், எத்தனை விழுக்காடு தீமைகள் செய்தார் என்பதற்கான கணக்கும் அவர்களிடம் இருக்கிறது. பொதுவுடைமை என்பது பொதுவறுமை ஆகிவிடக்கூடாது என்றார் மாவோவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த டெங்சியோபிங். மாவோவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அவர் செயல்களை நிராகரிக்கலாம் என்றார் இவர். முதலாளித்துவம் அப்படியொன்றும் தீங்கான சொல் அல்ல என்னும் டெங்கின் கருத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டது.

டெங்சியோபிங்கின் வழிதான் ஹூ ஜிண்டாவின் வழியும். ஹூ ஜிண்டாவ் இரண்டாவது முறையாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (2007ல்) அதிபராகவும் (2008ல்) தேர்ந்தெடுக்கப்பட்டபோது சீனா அமெரிக்காவுக்குச் சவால்விடும் மாபெரும் சக்தியாக வளர்ந்திருந்தது. பொருளாதார ரீதியில், ஹூ ஆட்சிக் காலத்தில் சீனா தொட்டுள்ள உயரம் அசாத்தியமானது. வளர்ச்சியற்ற கிராமப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புக் கவனம் குவித்து அவற்றை தொழில்மயமாக்கும் பணியில் ஆர்வம் காட்டினார். ஜிங்ஜியாங், கான்சு உள்ளிட்ட பகுதிகள் லாபமீட்டும் வர்த்தக கேந்திரங்களாக மாற்றியமைக்கப்பட்டன.

விசித்திரம் என்னவென்றால், சந்தைப் பொருளாதாரத்தை விரும்பி ஏற்றுக்கொண்டபிறகும்கூட அவ்வப்போது மாவோவை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. ஹூ தான் பங்குபெறும் கூட்டங்களில் உரையாடும்போது சில சமயம் மார்க்சியத்தையும் உரையில் இழுத்து வருவார். ’உலகம் முழுவதும் பல துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சீனாவும் புதிய சவால்களை, புதிய பிரச்னைகளை, புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், மார்க்சிய சித்தாந்தத்தை வாசிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கட்சி கருதுகிறது.’

ஹூ குறிப்பிடும் மார்க்சியர்களில் மார்க்ஸ், லெனின், மாவோ மட்டுமல்லாமல் டெங்கியோபிங்கும் அடங்குவார். மாவோவும் வேண்டும். டெங்சியோபிங்கும் வேண்டும். இதில் உள்ள முரண் ஹூவை பாதிக்கவில்லை. ’இவர்களது சித்தாந்தங்களை நாம் வளர்த்தெடுக்கவேண்டும். மாற்றங்களோடு சேர்ந்து நாமும் பயணம் செய்யவேண்டும். சீனாவில் கம்யூனிசம் வளர பாடுபடவேண்டும். வளமான ஒரு சமூகத்தை உருவாக்க முனையவேண்டும்.’

அதே சமயம், சீனர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கலாசாரமும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் ஊழல், மேலை நாட்டு கலாசாரத்தைப் பின்பற்றியதால் ஏற்பட்ட கலாசார தேக்கம், போதை மருந்துகளுக்கு அடிமையாதல், பாலியல் ஒழுக்கீனங்கள், துளிர் விடும் மதப் பிற்போக்குத்தனம் ஆகியவை பற்றிய புகார்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இளைஞர்களுக்கு அறம் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் எடுத்துரைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உலகமயமாக்கலின் விளைவுதான் இது என்பது ஹூவுக்குத் தெரியாமல் இல்லை. சீனர்களின் நலனுக்காக ஹூ முன்வைத்த அறம் சார்ந்த முழக்கம், Eight Honours and Eight Shames என்று அழைக்கப்பட்டது. ஹூவின் எட்டு அம்சத் திட்டம் என்று இது அழைக்கப்பட்டது. ஒருவரது பணி, நடவடிக்கை மற்றும் நோக்கத்தை அளவிட இந்த எட்டு அம்சங்கள் ஒரு அளவீடாக இருக்கும் என்றார் ஹூ. குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இதனை கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த எட்டு அம்சங்கள். 1) நாட்டை, நேசி, நாட்டுக்கு பங்கம் விளைவிக்காதே. 2) மக்களுக்கு சேவை செய், அவர்களை ஏமாற்றாதே. 3) அறிவியலை பின்பற்று, அறியாமையை அகற்று. 4) சோம்பேறித்தனத்தை ஒழி, அக்கறையுடன் பணியாற்று. 5) ஒற்றுமையை வளர்த்துக்கொள், உதவி செய், அடுத்துவரை ஏமாற்றி லாபம் சம்பாதிக்காதே. 6) நேர்மையாகவும் உண்மையாகவும் இரு, லாபத்துக்காக அறத்தை விட்டுக்கொடுக்காதே. 7) சட்டத்தை மதி 8. கடினமான உழைப்பு, எளிமை இரண்டையும் கடைபிடி. ஆடம்பரங்கள் வேண்டாம்.

உலக அரங்கில் சீனா பொருளாதார ரீதியில் முதலிடம் வகிக்கவேண்டும் என்பதுதான் ஹூவின் நீண்ட கால கனவு. பிற கனவுகளைக் காட்டிலும் இதையே அவர் முதன்மைப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறார். இது சாத்தியமாகவேண்டுமானால் தற்போதைய முதலாளித்துவ, உலகமய சூழலுக்கு ஏற்ற தத்துவத்தை மட்டுமே உயர்த்திப்பிடிக்கவேண்டும். இதன் பொருள் மாவோவை முற்றிலுமாக கைவிடவேண்டும் என்பதுதான்.

மாவோவின் ஆன்மாவை அகற்றிவிட்டு அவர் நிழலை மட்டும் ஓர் அடையாளத்துக்காக வைத்துக்கொண்டார் டெங்சியோபிங். அந்த நிழலையும் ஹூ ஜிண்டாவ் இப்போது அகற்றவேண்டியிருக்கும். 2006ம் ஆண்டு வெளிவந்த வரலாற்று பாடப்புத்தகங்கள் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த காலங்களில் வெளிவந்த புத்தகங்களைக் காட்டிலும் இந்த முறை கம்யூனிசம், சோஷலிசம் குறித்த அறிமுகம் குறைவாகவே அளிக்கப்பட்டிருந்தது. வரலாற்றை பாடமாக படிக்கும் உயர் கல்வி மாணவர்களுக்கு சோஷலிச சித்தாந்தம் குறித்து மிக சுருக்கமான அறிமுகமே கிடைக்கும். 1979ல் பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்பட்டதற்கு முந்தைய காலகட்டம் பற்றி ஒரே ஒரு வரி செய்திதான் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ பற்றியல்ல, முதலாளித்துவம், முதலாளித்துவப் பாணி உற்பத்தி முறை, நவீன பொருளாதாரம் பற்றித்தான் எதிர்கால மாணவர்கள் அதிகம் படிக்கப்போகிறார்கள். ஹூ ஜிண்டாவ் அரசாங்கமும் இதைத்தான் விரும்புகிறது.

கம்யூனிச, சோஷலிச சித்தாந்தத்துக்கு மாற்றாக முதலாளித்துவத்தையும் கட்டுப்பாடற்ற வர்த்தகத்தையும் தழுவிக்கொண்டதன் மூலம், சீனாவின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருப்பதாக எழுத்தாளர் வில்லியம் ஹிண்டன் கருதுகிறார்.

‘டெங்கின் தலைமையில் சீனா சுதந்தரச் சந்தையை நோக்கி முன்னேறும்போது, வெளிநாட்டு மூலதனத்துக்கு கதவு திறக்கப்படும்போது, உலகப் பொருளாதாரத்துடன் மேலும் நெருக்கமாகப் பின்னிப் பிணையும்போது, அது தவிர்க்கவியலாதபடி துன்புறும்.’ ‘புதிய சந்தைப் பொருளாதாரத்தால் உந்தப்பட்டு லட்சக்கணக்கானோர் தனது பக்கத்திலிருப்பவரைக் கொண்டு தாம் முன்னேற முனைகையில் ஊழல் நோய் பரவும். மேற்கத்தியக் கலாசாரம் ஒவ்வொன்றிலும் ஊடுறுவி ஆதிக்கம் செலுத்துகையில் கலாசாரப் பின்னடைவும், தார்மீகச் சீரழிவும் ஏற்படும்.’

‘பணக்காரர்களும், சக்திமிக்கவர்களும் மேலும் பணக்காரர்களாகவும், மேலும் சக்திமிக்கவர்களாகவும் ஆகும்போது முந்தைய பங்குதாரர்களான விவசாயிகள் அனைத்து நிகர மதிப்பையும் இழந்து சந்தையில் விற்பதற்கு தமது உழைப்புச் சக்தியைத் தவிர வேறு எதுவுமின்றி நுழைவர்.’ ‘போட்டி அதிகமாகி, மந்த நிலை ஆழமாகி, ஒரு நாட்டைத் தொடர்ந்து மற்றொரு நாட்டை தாழ்வு நிலை ஆக்கிரமித்து, உலக மோதல்கள் கூர்மையடையும்.’

‘1949ல் சீனா புரட்சியில் வெற்றி பெறுமுன் அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனிய பிரபுத்துவ முதலாளித்துவ நாடாக இருந்தது. தற்போது, சீனா விரைவான திருப்பத்துடன் அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனிய, பிரபுத்துவ முதலாளித்துவ தகுதியுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது. இது துயரமானது.’

0

மருதன்

ராகுல்ஜியின் பிரிட்டன் பயணம்

படிக்கும் வயதில் வீட்டைவிட்டு ஓடிச்சென்ற ராகுல்ஜி தன் வாழ்நாளின் இறுதிவரை பயணம் செய்துகொண்டே இருந்தார். தன் பெற்றோரையும் நண்பர்களையும் கிராமத்தையும் விட்டு அவர் பிரிந்துசென்றதற்குக் காரணமே பயணங்கள் மீது அவருக்கு ஏற்பட்டிருந்த காதல்தான். எங்கோ புத்தகம் ஒன்றில் படித்த இந்த நான்கு வரிகள் ராகுல்ஜியை ஓர் ஊர்சுற்றியாக மாற்றியமைத்தன. அசந்து ஓரிடத்தில் ஓய்வெடுக்கும்போது, இந்த வரிகள் நினைவுக்கு வந்துவிடும். கிளம்பிவிடுவார். இப்படியே 45 ஆண்டுகளை அவர் கழித்திருந்தார்.

உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து,
மறுமுறையும் மனிதப் பிறப்பு வாய்க்குமா உனக்கு?
மனிதப் பிறப்பு தொடர்ந்தாலும்
மறுமுறையும் இளமை கிடைக்குமா உனக்கு?

ராகுல் சாங்கிருத்யாயன் (ஏப்ரல் 9, 1893 – ஏப்ரல் 14, 1963), கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆஸிம்கர் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கேதாரநாத் பாண்டே ஆழ்ந்த இறைபக்தி கொண்ட பிராமணர். ராகுல்ஜியும் அவ்வாறே வளர்க்கப்பட்டார். பிறர் சமைத்தால் தீட்டு ஒட்டிவிடும் என்பதற்காக எங்கு சென்றாலும் தானே சமைத்து உண்பவராகவும், பிரம்மனே அனைத்தும் என்று தீவிரமாக நம்பியவராகவும், தன் மதத்தைத் தரக்குறைவாகப் பேசுபவர்களோடு மல்லுக்கட்டி சண்டை போடுபவராகவும் வளர்ந்தவர். பள்ளிப்பாடங்கள் அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தின. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் படிக்கவேண்டியவற்றை எப்படி ஓராண்டு முழுவதும் படித்துக்கொண்டிருப்பது?

பாடப்புத்தகங்களைக் கடந்து, ஆன்மிகப் புத்தகங்களைக் கடந்து, இந்து மத இலக்கியங்களையும் தத்துவங்களையும் கடந்து, அடுத்து என்ன என்னும் யோசனை பிறப்பதற்குள் அவர் ஊர்சுற்ற ஆரம்பித்துவிட்டார். காசியில் தொடங்கி கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் ராகுல்ஜி சுற்றிவந்தார். தன் பயணங்கள் குறித்தும், கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்தும் அவர் ஆழமாகச் சிந்தித்தார். இதுகாறும் சேகரித்து வைத்திருந்த அறிவையும் கறாராகக் கடைபிடித்து வந்த நம்பிக்கைகளையும் நேர்மையாக மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தார். இலங்கை, திபெத் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் காரணமாக பௌத்தத்தைத் தழுவினார். ஒரு பௌத்த துறவியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றபோது, சோவியத் யூனியன் குறித்து அவர் தெரிந்துகொண்டார். சோஷலிசம் குறித்து ஆழ்ந்து வாசிக்கவும் ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக சோவியத் யூனியன் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, பௌத்தத்தின் வசீகரித்தையும் கடந்து மார்க்சியத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டார்.

தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று ராகுல்ஜியின் பங்களிப்பு படர்ந்து விரிகிறது. ராகுல்ஜியின் சுயசரிதையை நியூ செஞ்சுரி தமிழில் வெளியிட்டிருக்கிறது. ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் முற்றுப்பெறாத இந்த சுயசரிதையின் மூலம், ராகுல்ஜியின் அறிவுத் தேடலையும் அவர் சென்றடைந்த உயரங்களையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ளமுடிகிறது.

1932-33 ஆண்டுகளில் இலங்கையில் தொடங்கி லண்டன் வரை ராகுல்ஜி விரிவாகப் பயணம் செய்தார். மஞ்சள் வண்ண அங்கிகளை அணிந்துகொண்டு லண்டன் வீதிகளில் அலைந்துகொண்டிருந்த ராகுல்ஜியை ஒரு விநோதப் பொருளாகவே அங்கிருந்தவர்கள் கண்டார்கள். கேள்விகளால் அவரைக் குடைந்து எடுத்தார்கள். பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் அவரைத் தேடி வந்து பேட்டி கண்டார்கள். ராகுல்ஜியும் தன் பயண அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்துகொண்டார். மறுநாள் அவரைப் பற்றி வெளியான செய்திகளைக் கண்டு அவர் திகைத்துப்போனார்.

‘உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் சித்திரிப்பதில் பிரிட்டிஷ் பத்திரிகைகள் இந்தியப் பத்திரிகைகளைத் தோற்கடிக்கின்றன. இங்கிலாந்தில் மிக அதிகமாகப் படிக்கப்படும் பத்திரிகைகளில் ஒன்றான தொழிலாளர் கட்சியின் டெய்லி ஹெரால்ட் நிருபர் எங்கள் நோக்கம் பற்றிக் கேட்டார். இங்கிலாந்து மக்கள் முன்பு புத்தரின் உபதேசங்களை வைக்க விரும்புகிறோமென்று நாங்கள் கூறினோம். மறுநாள் பத்திரிகையைப் பார்த்தால் இங்கிலாந்து முழுவதையும் நாங்கள் பவுத்த நாடாக மாற்றிவிட விரும்புகிறோமென்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.’

இதே போல் இன்னொரு அனுபவம். ‘டெய்லி மெயில் என்னும் இன்னொரு பெரிய பத்திரிகையின் நிருபர் வந்து என்னுடைய திபேத்திய பயணத்தைப் பற்றிக் கேட்டார். என் திபேத்திய அனுபவங்களை விவரித்தேன். மறுநாள் பத்திரிகையில் அந்த நிருபர் ஒரு கதையே கட்டிவிட்டிருந்தார். ‘இந்தப் பவுத்த பிட்சு திபேத்திய பயங்கரக் காடுகளில் தனியாக எவ்வளவோ தூரம் பிரயாணம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு மிருகமும் அவருக்குத் தீங்கிழைத்ததில்லை. ஒருநாள் அவர் காட்டிலே சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று ஆறேழு கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்க வந்தார்கள். அப்போது கர்ஜித்துகொண்டே தாவிய சிங்கத்தைக் கண்டு அவர்கள் ஓடிப் போய்விட்டார்கள். ஆனால் அந்தச் சிங்கம் இந்தப் பிட்சுவை மட்டும் ஒன்றும் செய்யவில்லை.’ இந்தப் பேட்டியைப் படிக்கும் பகுத்தறவாளர்கள் என்னைப் பொய்யன், புரட்டன் என்று கருதிக் கொள்வார்கள். சாதாரண அப்பாவி வாசகர்களாக இருந்தால் இன்னும் மந்திர சக்தி இருப்பதாக நம்புவார்கள். மதத்தையும் தெய்வீக சக்தியையும் நம்பக்கூடாதென்று சொல்லும் புத்துலக இளைஞர்களுக்கு எதிராக இந்த அப்பாவிகளை ஏவிவிடலாமல்லவா! இதற்காகத்தான் இந்தப் பணமூட்டைப் பத்திரிகைகள் இவ்வாறெல்லாம் எழுதுகின்றன.’

பிரிட்டனின் பணமூட்டைப் பத்திரிகைகள் எப்படி இயங்குகின்றன என்பதை ராகுல்ஜி நமக்குப் புரியவைக்கிறார். இது பிரிட்டனுக்கு மட்டுமே பொருந்தும் உண்மை அல்ல. ‘இங்கிலாந்தில் கோடீஸ்வரர்கள்தான் பத்திரிகைகளை நடத்தமுடியும். பொய்யை இனிப்புடன் கலந்து பரப்புவதுதான் அவர்களுடைய வேலை.’

மதவாதிகளை மட்டுமல்ல பகுத்தறிவுக்கு முரணாக இயங்கும் அனைவரையும் ராகுல்ஜி கடுமையாக விமரிசிக்கிறார். பிரிட்டன் கல்வித்துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘பள்ளிகள், புத்தகங்கள், பத்திரிகைகள் முதலியவை பகுத்தறிவைப் பரப்பக்கூடியவை என்று கருதப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் இவற்றின் மகத்தான பணி முட்டாள்தனத்தைப் பரப்புவதுதான். குதிரைப் பந்தயம், நாய்ப் பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற எத்தனையோ சட்ட பூர்வமான சூதாட்டங்கள் அங்கே நடைபெறுகின்றன. நாளை தாம் வேலையில்லாதோர் பட்டாளத்தில் சேர்ந்து விடுவோமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தம்முடைய வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி இந்தச் சூதாட்டங்களுக்காகத் தம் பணத்தைச் செலவழிக்கின்றனர். பிரிட்டிஷ் பத்திரிகைகள் இந்தச் சூதாட்டங்கள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுகின்றன.’

ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ‘காரணம் என்னவெனில், பிரிட்டிஷ் பாட்டாளி மக்கள் தலைவிதிக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமென்பதும், பண முதலைகளின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கக்கூடாது என்பதும்தான்.’

எங்கெல்ஸைப் போலவே ராகுல்ஜியும் பிரிட்டனின் இருண்ட பகுதிகளுக்குச் செல்கிறார். கூடுகள் போன்ற குடிசைகளையும் எலும்பும் தோலுமாக வாடும் மனிதர்களையும் அவர் கண்டுகொண்டார். ‘வசதி படைத்தவர்கள் லண்டனில் வெஸ்டெண்ட் பகுதியில் இருந்தார்கள். ஏழைகள் ஈஸ்டெண்ட் பகுதியில் இருந்தார்கள். அந்தப் பகுதியில் சென்று பார்த்தோம். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அங்கே தமது சகோதரர்களுக்காக எப்படிப்பட்ட நகரத்தை சிருஷ்டித்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம்.’ அந்த வகையில் பிரிட்டன், இந்தியர்களை மட்டுமல்ல, தன் மக்களையும்கூட அடிமைப்படுத்தியே வைத்திருக்கிறது என்பதை ராகுல்ஜி நேரடியாகத் தெரிந்துகொண்டார். ஒரு முதலாளித்துவ அமைப்பால் வேறு எப்படியும் இருக்கமுடியாது என்பதையும் அவர் அறிந்துகொண்டார்.

0

மருதன்

லண்டன் ரங்கநாதன் தெருவில் இருந்து…

சென்னை ரங்கநாதன் தெரு வெறிச்சோடி கிடக்கும் இந்த நேரத்தில், லண்டனுக்கு அருகிலுள்ள ரங்கநாதன் தெருவை ஒருமுறை சற்றி வரலாம், வாருங்கள்!

லண்டனிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு சிறிய நகரம், நியூகாஸில். முழுப்பெயர் Newcastle Upon Tyne & Wear.  ஊரைச் சுற்றி ஆறு; ஆற்றின் மேல் அமைந்திருக்கும் நகரம் என்று பொருள். வருடத்தில் முக்கால் வாசி நேரம் குளு குளுதான். சூரியன் வருவதும் தெரியாதும், விலகுவதும் தெரியாது.

நகரத்தின் மையப்பகுதியை சிட்டி செண்டர் என்று அழைக்கிறார்கள். இங்குதான் நியூகாஸிலின் ரங்கநாதன் தெரு, Northumberland Street உள்ளது. குட்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை ஒரு சேர இங்கே அணிவகுத்து நிற்கின்றன. பேருந்து மற்றும் ரயில் மூலமாக இந்தத் தெருவை அடையலாம். பேருந்தில் வருபவர்கள் Pilgrim Street என்று கேட்டு இறங்க வேண்டும். ரயிலென்றால் Monument என்ற நிலையத்தில் இறங்கவேண்டும்.

நடைபாதையில் ஆக்கிரமிப்பு இல்லை. திடீரென்று சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டும் வழக்கம் இல்லை. மின்சார வெட்டில்லை. குளிரும் இளம் தூறலும் சர்வ சாதாரணம் என்றாலும் சாலைகளில் குட்டைகளோ குளங்களோ இல்லை. எறும்புக் கூட்டம் போல் மக்கள் வரிசை வரிசையாக குவிந்துகொண்டிருப்பார்கள். சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.

அனைத்து வயதினருக்கும், அனைத்து விருப்பங்களுக்கும் தீனிபோடும் இடம் இது. சாப்பாட்டுப் பிரியர்களுக்கு மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங், க்ரெக்ஸ் போன்ற ஜாம்பவான்களும், சுவையான சிற்றுண்டிகளும் கிடைக்கும். ஜவுளிக்கு ப்ரைமார்க், மார்க் & ஸ்பென்சர், பீகாக். வீட்டு உபயோகப் பொருள்களுக்கு க்லாஸ்ஹோல்ஸன், W.H ஸ்மித், பிசி கர்ரி வோல்ட், அர்கோஸ், ஃபென்விக், பூட்ஸ் மருந்தகம் என்று பல கடைகள். எல்டன் ஸ்கொயர் என்னும் மிகப்பிரிய வணிக வளாகம் இந்தத் தெருவுக்கு மிக அருகில் இருக்கிறது.

குழந்தைகளை யாரும் தோளில் தூக்கி வருவதில்லை. அதற்கென்றே இருக்கும் வண்டிகளில்தான் (ப்ராம் / ஸ்ட்ராலர்) அழைத்து வருகிறார்கள். என்றாலும், சாலைகள் அகலாமாக இருப்பதால், இடிபடாமல் வண்டிகளை உருட்டிக்கொண்டு செல்லலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கும் நல்ல வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் இவர்களுக்கென்றே தனியாக லிஃப்ட் வசதி உள்ளது.

நம் ஊரைப்போல வீதிகளில் படம் வரைவது, நடனமாடுவது, வேடிக்கை பார்த்துவிட்டு காசு போடாமல் போவது ஆகிய நிகழ்ச்சிகள் வார இறுதியில் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாள், தெருமுனையில் அழகான மாடி பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தால் ஜாப் ஃபேர். இங்கும் வேலை தேடுவோர் கணிசமாக இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நான் மிகவும் வியந்துப் பார்தத ஒரு கடை, Argos. ஏனெனில் இங்கு விற்பனையே மிக வித்தியாசமாகயிருக்கும். கடையில் நுழைந்தவுடன் அங்கிருக்கும் மானிட்டரின் அருகில் செல்லவேண்டும் (கடையின் அளவைப் பொறுத்து சில இடத்தில் 5 அல்லது 10 மானிடர்கள் இருக்கின்றன). தொடுதிரை மூலம் ஷாப்பிங் செய்யவேண்டும். என்னென்ன வாங்கலாம்? விலை என்ன? ஸ்டாக் இருக்கிறதா? இதே பொருள் வேறு எந்த கிளையிலுள்ளது? அனைத்துக்கும் ஒரு சில விநாடிகளில் பதில் கிடைத்துவிடுகிறது.  மானிடருக்கு அருகில் இருக்கும் பென்சில், பேப்பரை எடுத்து நமக்கு தேவையான பொருள்களின் விவரத்தை எழுதி எடுத்துக்கொண்டு (பென்சிலை அங்கேயே வைத்துவிட்டு) பணம் செலுத்தும் இயந்திரத்தில் விவரங்களைத் தட்டச்சு செய்யவேண்டும். கூட்டிப் பார்த்து எவ்வளவு என்று மெஷின் சொல்லும். செலுத்திவிட்டு, அது கொடுக்கும் ரசீதை வாங்கிக்கொள்ளவேண்டும். உங்கள் சரக்கு எந்த கவுண்டரில் கிடைக்கும் என்பதை அறிவிக்க ஒரு பெரிய எலெக்ட்ரிக் டிஸ்ப்ளே உள்ளது. ரசீதைக் காண்பித்து பையை வாங்கிக்கொண்டு கிளம்பலாம். மற்ற கடைகளைவிட இங்கு விலையும் கூட்டமும் ஓரளவு குறைவு.

சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான ஒரு கடைதான் Primark. இங்கு அதிக அளவில் இந்தியர்களைப் பார்க்கலாம். வாங்குபவர்களாகவும் விற்பவர்களாவும் அவர்கள் இருக்கிறார்கள். மற்ற கடைகளைப் பார்க்கும்போது இங்கு துணி மணிகளின் விலை கணிசமாக குறைவு என்பதால் கூட்டம் அலைமோதும். இவ்வளவு குறைவாக தருகிறார்கள் என்றால் மட்டமான பொருளாகத்தான் இருக்கும் என்று சந்தேகிப்பவர்களும், அப்பப்பா இந்தக்கூட்டத்தோடு யார் மல்லுகட்டுவார்கள் என்று அஞ்சுபவர்களும் ஒதுங்கியே இருப்பார்கள். நான் பார்த்தவரை, ஆங்கிலேயர்கள் கணிசமான அளவில் இங்கு வருகிறார்கள். எனில், அங்கலாய்த்து ஒதுங்குபவர்கள் யார் என்று பார்த்தால், அட இந்தியர்கள்!

இன்னொரு ஆச்சரியம், இங்கு அடுக்குமாடி கட்டடங்கள் எதுவும் கிடையாது என்பது. பெரும்பாலும் தரைத்தளம். மிஞ்சி மிஞ்சிப் போனால், முதல் தளம். அவ்வளவுதான். ஆனால், ஒவ்வொரு கட்டடமும் பரந்து விரிந்து பிரமாண்டமாகப் பயமுறுத்தும். குறிப்பாக, தரைத்தளம் பெண்களுக்கான பிரிவாக இருக்கும். முதல் தளத்தில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்குமான பண்டங்கள் அணிவகுக்கும்.

துணிக்கடை இயங்கும் விதமும் அலாதியானது. கடையின் முகப்பில், நூற்றுக்கணக்கான பெரிய பைகள் அடுக்கப்பட்டிருக்கும்.  உள்ளே நுழையும்போதே அவரவர் தேவைக்கேற்ப பைகளை எடுத்துக்கொண்டு, பிடித்த துணிகளை அள்ள ஆரம்பிக்கலாம். பிறகு,  உடை சரியாகப் பொருந்துகிறதா என்பதை டிரைலர் ரூமில் சோதித்துக்கொள்ளலாம்.  இங்கு அழகான பெண்மணி ஒருவர் நின்றுகொண்டிருப்பார் (ஆண்கள் பகுதியிலும்). வரிசையில்தான் செல்ல வேண்டும்; அவரிடம் சென்று, மொத்தம் எத்தனை துணிகளைப் பரிசோதிக்கவேண்டும் என்பதைச் சொல்லவேண்டும். உடனே ஒரு அட்டையை எடுத்து இயந்திரத்தில் செருகி, நாம் குறிப்பிடும் எண்ணை அழுத்திக்கொடுப்பார்கள்.  டிரைலர் ரூமில் உடையைப் போட்டுப் பார்த்துவிட்டு, திரும்ப வரும்போது அந்த அட்டையையும், தேர்ந்தெடுக்காத உடைகளையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டும்.  மிச்சத்தை எடுததுக்கொண்டு நேராக பில்லிங் பகுதிக்கு செல்லவேண்டும். அங்கு மறுபடியும் வரிசை. காத்திருந்து பணம் கட்டிவிட்டு நடையைக் கட்டிவிடலாம். பிடிக்காத, ஒத்துவராத உடைகளை இரண்டு வாரங்களுக்குள் ரசீதுகொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

பொதுவாக ஆங்கிலேயர்கள் சரியான நேரத்தில் கடையைத் திறக்கிறார்கள், மூடுகிறார்கள். வார நாட்களில் இந்தத் தெருவில் இரவு ஏழு மணிக்கு மேல் கூட்டமிருக்காது. வெறிச்சோடியிருக்கும். வாரயிறுதியில் அதிக நேரம் திறந்துவைத்திருப்பார்கள் என்று நினைத்தால் தவறு. ஒரு சனிக்கிழமை 5 மணிக்குச் சென்று பார்த்து, ஏமாந்து வீடு திரும்பினோம். பிறகுதான் தெரிந்தது. மாலை 4 மணிக்கு மேல் ஒரு கடைகூட இங்கே திறந்திருக்காது.

ப்ரைமார்க்குக்கு எதிரிலேயே, போட்டியாளரான Mark & Spencer அமைந்துள்ளது. ஒருவகையில் இக்கடை எல்லா வணிகர்களுக்குமே போட்டிதான். ஏனெனில் இங்கு துணிகள் மட்டுமின்றி ஏராளமான தின்பண்டங்களும் கிடைக்கும். நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஒரு பிரிவு. கேக், பஃப், ரொட்டி என்று ஒரு பேக்கரி பிரிவு. காய்கறிகளுக்கும் கனிகளுக்கும் ஒரு பிரிவு. வீட்டு மளிகைக்கு ஒரு பிரிவு. பூனை, நாய் உணவுகள் ஒரு பக்கம். பூங்கொத்துகளுக்கும் நாளிதழ்களுக்கும் ஒரு பிரிவு. இப்படிப் பல பிரிவுகள் அமைந்துள்ளன. காலை கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியதை வாங்கிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, இன்னபிற விஷயங்களையும் முடித்துவிட்டு சாவகாசமாக வீடு திரும்பலாம். இக்கடைக்கு மொத்தம் மூன்று வித நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சாலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். முதலில் சென்றபோது நான் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.

ஒரு நாள் ப்ரைமார்க்கில் ஷாப்பிங் முடித்துக்கொண்டு Burger King சென்றோம். சைவம் சாப்பிடுபவர்களுக்கென்றே இப்பொழுது எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு ஐட்டமிருக்கிறது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, நான்கைந்து முறை கேட்டுவிட்டு, வெஜ் மீல் டீல் ஆர்டர் செய்தோம். இதில் வெஜ் பர்கர், பிரெஞ்ச் ஃப்ரை, ஜஹாங்கீர் க்ளாஸில் கோக், பெப்ஸி அல்லது ஸ்ப்ரைட் இருக்கும். விலை 3.99 பவுண்ட்ஸ். இதை நம் ஊர் பணத்துக்கு மாற்ற முயன்றால் தலைச்சுற்றல் வரும் என்பதால் விட்டுவிடுங்கள். இங்கு ஐம்பது பேர் அமர்ந்து சாப்பிடலாம். இருபது பேர் நின்றுகொண்டு கொரிக்கலாம். சாப்பிட்டு முடித்து, குப்பைகளைக் கொட்டிவிட்டு, ப்ளாஸ்டிக் தட்டை அதற்குரிய இடத்தில் சேர்க்கவேண்டும். மேஜைகளை மட்டும் அவர்களே துடைத்துக்கொள்கிறார்கள்.

புத்தகப் பிரியர்களுக்கு, W H Smith நல்ல இடம். இங்கு ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன. புத்தக ஆர்வம் இல்லாதவர்களும் இங்கே நுழைவார்கள். காரணம், கடைகளில் வெப்பமூட்டப்பட்டிருக்கும். நானும்கூட குளிரில இருந்து தப்புவதற்காகவே இங்கே சென்றேன். புத்தகங்களுக்கு இணையாக மாத, நாளிதழ்கள் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக முதல் தளம். பொடிசுகள் முதல் டீனேஜ் வரை ரகவாரியாக புத்தகங்கள் அடுக்குகள். வாழ்த்து அட்டைகளும் ஏராளம் குவிந்திருக்கிறது. பல வண்ணங்களில், அழகான குறுஞ்செய்திகளுடன்.  ஸ்டேஷனரி, சாக்லெட், பிஸ்கட், குளிர் பானம் ஆகியவையும் கிடைக்கின்றன. வெறும் கை வீசிக்கொண்டு வந்தால் ஒருமாதிரியாகப் பார்ப்பார்களோ என்று நினைத்து, சாக்லெட்டும் பெப்ஸியும் வாங்கிக்கொண்டு நகர்ந்தேன்.

அநேகமாக ஒவ்வொரு வாரமும் இங்கு சென்றுகொண்டிருக்கிறேன். சென்ற வாரம் சென்றபோது, வண்ண விளக்குகளும், மயக்கும் அலங்காரங்களும் கண்களைக் கொள்ளை கொண்டன.  இன்னும் நேரமிருக்கிறது என்றாலும் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். Merry Christmas!

0

R. விஜய்

அழிவிற் சிறந்தது – அப்துல் கலாம் கட்டுரைகளை முன்வைத்து

அப்துல் கலாம் கூடன்குளம் விவகாரத்தில் நுழைந்து புதுக் குமிழிகளை உருவாக்கியிருக்கிறார். அணு உலைக்கு எதிரான போராட்டத்தை சாதூர்யமாக சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அப்துல் கலாம் அரசால் இறக்கப் பட்டிருக்கிறார் என்பதில் ஐயம் கொள்ள எதுவும் இல்லை. சில வாரங்கள் முன்பு ‘கூடன்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் அப்துல் கலாமின் ஆலோசனை பெறப்படும்’ என்று மத்திய அமைச்சர் சொன்னார். அரசுக்கு கலாமின் ஆலோசனை எதுவும் (குறைந்த பட்சம் புதிதாக) இப்போது தேவையில்லை; இங்கே ஆலோசனை என்பதன் அர்த்தம், அவர் கருத்து சொல்லி, அது பரவாலான மக்கள் மற்றும் ஊடக கவனம் பெறுவது; அவர் என்ன கருத்து சொல்வார் என்பது அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, கலாமிற்கு பிடித்த குழந்தைகளுக்கும்கூட தெரியும்.

ஆகையால் கலாம் கூடன்குளம் சென்று, ‘ஆய்வு செய்து’, கருத்து சொல்வது என்பது விவாதத்திற்காகவோ, நம் அறிவுப்பரிசீலனைக்காக உதிர்க்கப்படுவதோ அல்ல. ஒரு பிரபலமாக, முன்னாள் குடியரசு தலைவராக அவர் கருத்து சொல்கிறார்; அக்கருத்து அரசியல் காரணங்களால் முன்வைக்கப்பட்டது; இன்று ஒரு நிறுவப்பட்ட உண்மையாக மாறிவிட்டது. பொதுமக்கள் எல்லார் மனங்களிலும் படிந்துவிட்ட பிம்பமான, ‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி‘யின் கூற்றாக, அவர் கருத்து அரசாலும் ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. அணு அறிவியல் மற்றும் அணுவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட, விண்கலப் பொறியியலாளரான கலாம் என்பவர், வேறு பல காரணங்களால் அடையும் அதிகாரத்தின் அங்கீகாரத்துடன், அணு உலைக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்க கருத்து சொல்கிறார்.

கலாம் அணு விஞ்ஞானியா இல்லையா என்பது, அணு மின்சாரம் சார்ந்த ஒரு விவாதத்தில் ஒரு முக்கிய பிரச்சினை அல்ல; கூடன்குளம் அணு உலைக்கு அவர் அளிக்கும் சான்றிதழ், அவர் அணு விஞ்ஞானி என்று சொல்லப்பட்டு, அந்த அதிகாரத்தின் பாற்பட்டு முன்வைக்கப்படுகிறது. அவரின் கருத்துக்கள் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதாகவும் ஆக்கப்படுகிறது. அவர் அளித்த உத்தரவாதத்தையும் மீறி, எதிர்ப்பாளர்கள் பிடிவாதம் பிடிப்பது அறிவுக்கும் நாட்டிற்கும் எதிரானதாகப் பரப்புரை செய்யப்படுகிறது.

அணு உலை, அணு மின்சாரம் குறித்து ஓரளவு அறிதல் உள்ள எவரும் கருத்து சொல்லி, அது விவாதப் பொருள் ஆகலாம். ஆனால் இங்கே எதிர் கருத்துக்களை விவாதமின்றி முறியடிக்க, அவரை தலை சிறந்த விஞ்ஞானியாக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு முன்வைப்பதுதான் பிரச்சினை. அரசியல் நிலைப்பாடு சார்ந்த கோஷங்களால், கலாமை அவதூறு செய்து, அணு மின்சாரம் சார்ந்த அவரது வாதங்களை நிராகரிப்பது அபத்தம் என்றால், அதைவிட அபத்தம் அவரது செலிபிரிடி நிலையை முன்வைத்து, எல்லாம் அறிந்த விஞ்ஞானியின் கூற்றாக அவர் சொல்வதைப் பரப்புவது.

இந்த காரணங்களால், கலாம் ஓர் அணு விஞ்ஞானி என்கிற ‘உண்மையை’ மறுதலிக்க வேண்டியுள்ளது. ஒரு பொறியியலாளராக தொடங்கி, பல்வேறு அனுபவங்கள் மூலம் அவர் பெற்றிருக்கக் கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அறிவை பற்றி சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் கலாம் எந்த விதத்திலும் ஒரு அணு விஞ்ஞானி இல்லை என்பது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு வகையில் நேரடியான பங்களிப்பை அறிவியலுக்கு செய்வது என்ற வகையில், ஒரு விஞ்ஞானி என்று கூட அவரை அழைக்க முடியாது. நான் அறிந்தவரை, ஆக்கபூர்வம் அழிவுபூர்வம் என்கிற எந்த நோக்கில் பார்த்தாலும், எந்த ஒரு தனித்துவமான அறிவியல் பங்களிப்பையும் அவர் செய்யவில்லை. இதற்கு மாறான தகவலை யார் எங்கிருந்து தந்தாலும் பரிசீலித்து கருத்தை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கலாமை பற்றிய பொய்யான தகவலைச் சொல்லி, அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து தரப்பிற்கு பலம் சேர்க்க முயல்வதாலும், அவரை ஒரு அணு விஞ்ஞானியாக அணுமின்நிலைய ஆதரவாளர்கள் மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களும் பார்ப்பதாலும் மட்டுமே இதைச் சொல்ல வேண்டியுள்ளது.

தமிழ் மக்களை ஓர் அணு உலை விபத்திற்குப் பலிகடாவாக்குவதுதான் இந்திய மையஅரசின் அடிப்படை நோக்கம் என்று சொல்வது எவ்வளவு ஆதாரமற்ற அவதூறோ, அதைப் போலவே கூடன்குளம் உலையை எதிர்ப்பது அன்னிய நாட்டுச் சதி என்பதும், மதரீதியான உள்நோக்கங்கள் கற்பிப்பதும். அவை ஆதாரமற்ற அவதூறுகள். பிரச்சினையைத் தீர்க்காமல் இழுத்துக்கொண்டு போவதுதான் நோக்கம் என்றால், தாரளமாக இந்த இரு எதிர் எதிர்த் திசைகளில் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கலாம். இருபது ஆண்டுகளாக இருக்கும் ஒரு எதிர்ப்பை பற்றிப் பேச தொடங்கும் ஒவ்வொரு முறையும், ஊடகங்கள் திடீரென கிளம்பிய எதிர்ப்பாக இதை வர்ணித்துவிட்டுத் துவங்குவதைக் காணலாம்.

அணு உலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாதங்கள், பதில்கள் பல்லாண்டுகளாக ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கலாமின் கட்டுரை புதிய வெளிச்சம் எதையும் தரவில்லை.

ஏற்கனவே ஒப்புக்கொண்டது போல், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களை பலியிடும் திட்டத்துடன் நிச்சயமாக கூடன்குளத் திட்டத்தைத் தொடங்கவில்லை. ஆகையால் அணு உலைக்கான பாதுகாப்பு என்கிற வகையில் என்னவெல்லாம் இன்றைய நிலையில் சாத்தியமாகுமோ, அவையனைத்தும் கொண்டதாக கூடன்குளம் அணு உலை இருக்கும் என்று அரசாங்கம் சொல்வதையே நேரடியாக நம்பலாம். அதை தாண்டி கலாம் ஆய்வு செய்து சொல்ல என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை. பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு பெறுவதைத் தவிர, ஒரு நாளில் கூடன்குள அணு உலையில் என்ன ஆய்வை அவர் செய்திருக்க முடியும் என்பதும் புரியவில்லை. கலாமின் ஆங்கிலம்  மற்றும் தமிழ்  இரண்டு கட்டுரைகளும் ஓர் ஆய்வுக் கட்டுரையின் எந்தப் பண்பையும் கொண்டது அல்ல; மாறாக முழுக்க பிரசார தொனியில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தகவல்களை அளிப்பது மட்டுமே. புதிது என்று தோன்றக்கூடிய, தோரியத்தை முன்வைத்து அவர் சொன்ன தகவல்களும் ஏற்கெனவே என்டிடிவி வரை வெளிவந்த செய்திகள்தான்.

கலாமின் கட்டுரையில் தரப்படும் உலையின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை யாவும் உண்மை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். வேறு ஒரு அணு உலை தொழில் நுட்ப நிபுணர் அதில் கருத்து வேறுபாடும், ஐயங்களும், பிரச்சினைகளும் கொள்ள இயலலாம். ஆனால் அரசாங்கத்தின் கையாளாக கலாம் திட்டமிட்ட பொய்யை சொல்வதாக நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம், விபத்து நேரவே நேராது, விபத்திற்கான நிகழ்தகவு பூஜ்யம் என்ற உத்தரவாதத்தை அளிக்காது என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றுவரை மனித சமுதாயம் படைத்த எந்த தொழில்நுட்பமும், மனிதப் பிழை மற்றும் இயந்திரக் கோளாறு சார்ந்து, தவறு என்று எதுவுமே நடக்காமல் ஒரு விதிவிலக்காக இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்கிற அடிப்படை விதியை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். துல்லியம் என்பது கணித அறிவியல் விதிகளின்படியே முழுதும் கறாரான ஒரு சாத்தியமில்லை. எல்லா சோதனைகளும், கணித்தல்களும் பிழை அளவுகட்கு உட்பட்டவைதான். இந்தப் பிழையின் இடைவெளியை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே செல்ல இயலுமே ஒழிய, பிழையே இல்லாமல் சோதனைகளும், அறிவியல் செயல்பாடுகளும் சாத்தியமில்லை.

அந்த வகையில் அணு உலையிலும், மனிதர்கள் இழைக்கும் தவறுகளும், இயந்திரங்கள் குறித்த கணித்தல்களில் நிகழும் எதிர்பாராத தவறுகளும் முற்றிலுமாக தவிர்க்க கூடியது அல்ல; முன்னேறிய நாடுகளிலேயே இது சாத்தியமில்லை என்பதைத்தான் அமேரிக்க, ரஷ்ய, ஜப்பானிய விபத்துக்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அணு உலையில் பலவேறு தளங்களில் நடக்கும் செயல்பாடுகள் சிக்கலானாவை. அதில் எதிரே பார்க்காத ஒரு கோணத்தில் பிரச்சினைகள் நிச்சயமாக ஏற்படலாம்; எந்த நிலையிலும், எந்தச் சிக்கலும், என்றுமே உருவாகாது என்று சொல்ல இங்கு யாரும் கடவுள் அல்ல.

இன்று பிரச்சினையுள்ளதாக கருதப்படும் ஃபுகுஷிமா உலையை, சென்ற வருட சுனாமிக்கு முன்பு யாரும் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதவில்லை. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், அவர்கள் செய்த மூன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும், உலையின் செயல்பாடு நின்றபின் குளிரூட்ட இயலாமல் வெடித்தது. நம்மூர் கூடன்குளத்தில் ஃபுக்குஷிமா விபத்தின் அதே சாத்தியம் இல்லை என்று உத்தரவாதம் அளிப்பதால், விபத்திற்கான எதிர்பாராத வேறு சாத்தியங்கள் இல்லை என்று நம்புவதற்கு அறிவியல்ரீதியான எந்த அடிப்படையும் இல்லை. அவ்வாறு நம்புவது அறிவியல் மனம் அல்ல; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மமதை மட்டுமே.

ஒரே ஒரு உயிரை காக்க ஜப்பானிய அதிகார வர்க்கம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளும், பொதுவாகவே பாதுகாப்பு சார்ந்து, ஜப்பானியர்கள் அதீத obsessionடன் எடுக்கும் முன்னேற்பாடுகளையும் கணக்கில் கொண்டு, ஃபுகுஷிமா விஷயத்தில் நடந்த தவறைப் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்பார்த்து செய்திருந்த அதீத பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, கண்களைக் கட்டி விட்டிருக்கிறது இயற்கை. பொது மக்களின் உயிர்கள் குறித்து நம் அரசின், அதிகார வர்க்கத்தின் அதீத உதாசீனங்களுக்கு விளக்கமும் ஆதாரமும் காட்டத் தேவையில்லை. உதாசீனமும் ஊழலும், இன்னும் பல சீர்கேடுகளும், நெருக்கடியான தருணத்தில் நம் பொதுமக்களின் பொறுப்பற்றதன்மை எல்லாம் கலந்து, எந்த வித அழிவிற்கும் நம்மை இட்டுச் செல்லுக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

‘விபத்து நடந்த காரணத்தால் நாமெல்லாம் விமான பயணம் போவதில்லையா’ என்கிற அபத்த உதாரணத்தை கலாமும் கேட்பது எரிச்சலூட்டினாலும், அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. விமான விபத்துக்களையும், அணு உலை விபத்துக்களையும் இணையாக வைத்து ஒப்பிட்டு பேசுவது ஒரு அறிவுள்ளவாதமா என்கிற சுய சந்தேகம் கிஞ்சித்தும் இல்லாமல், ரொம்ப கூலாக எல்லா அறிவாளிகளும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு அணு உலை விபத்திற்கும், விமான விபத்திற்கும் – விபத்தின் பாதிப்பு, அளவு (magnitude) சார்ந்த பரிமாணங்கள், தொடரப்போகும் பின் விளைவுகள் என்ற – வித்தியாசங்களை பற்றிய கேள்விகளையும் புரிதல்களையும், அவரவர் மனவிவாதத்திற்கு விட்டுவிட்டு, நேரெதிராக இந்த வாதத்தை எதிர்கொள்வோம்.

‘நூறு விழுக்காடு பாதுகாப்பு ஏற்பாடு’ என்று சொல்லப்படுவதுடன்தான், விபத்து நடந்த எல்லா விமானங்களும், விபத்து நடப்பதற்குமுன் பறக்கத் தொடங்கின; மீறி தவறுகள் நடக்கின்றன. விமானத்தில் போகிறவர்கள், விபத்து நடப்பதற்கான சிறிய சாத்தியம் இருப்பதை நன்றாக உணர்ந்து, தெளிவாக முன்னமே அறிந்து, தங்கள் தேர்வாகப் பயணம் செய்கிறார்கள். மாறாக கூடன்குளம் விவகாரத்தில் விபத்து நடக்கவே நடக்காது, அதற்கான சாத்தியம் பூஜ்யம், நூறு சதவிகித பாதுகாப்பு என்று பொய் சொல்லி அணு உலையை இயக்கப் போகிறார்கள்; கூடன்குள அணு மின் உற்பத்திக்கான தேர்வை அரசும், அதிகார வர்க்கமும் முடிவு செய்து, நம் எலீட் சமூகம் அதற்கு ஆதரவாக பேசி பிரசாரம் செய்து, அதே எலீட் சமூகம் அதன் பயனை மிகுதியாக துய்க்கப் போகிறது. அபாயம் அதை தேர்வு செய்யாத, அதை எதிர்க்கும் மக்களுக்கு மட்டும்.

கலாம் தனது கட்டுரையில் விசித்திரமான ஒரு பாயிண்டை சொல்கிறார். ‘Many accidents followed, and even today air accidents kill more than 1,500 people every year’ என்கிற தகவலை தந்துவிட்டு அதனால் பறப்பதை நாம் விட்டுவிட்டோமா என வினவுகிறார். நல்ல உதாரணம்; இன்றய நமது முன்னேறிய நிலையில் கூட நம்மால் ஆண்டிற்கு 1500பேர் விமான விபத்துக்களில் சாவதை தடுக்க முடியவில்லை. ஆனாலும் பறக்கிறோம். அதே போன்ற வாதத்தைதானே மக்களிடம் கூடன்குள விவகாரத்திலும் முன்வைக்க வேண்டும்?

‘நாங்கள் எங்களால் முடிந்த எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். அதையும் மீறி ஏதேனும் நடக்க சிறு வாய்ப்பு உண்டு; விபத்து நடக்க சில வாய்ப்புகள் உள்ளதால் மட்டும் மின்சார உற்பத்தியை எங்களால் நிறுத்த முடியாது’ என்று நேரடி யதார்த்தமான கூற்றை மக்கள் முன்வைத்திருக்க வேண்டும். பல லட்சம் தடவைகள் பயன்படுத்தி பயன்பாட்டில் நாம் மிகவும் முதிர்ந்த பின்னும் விமான விபத்துக்கள் இன்றும் நடக்க்கிறது; ஒப்பீட்டளவில் பயன்பாட்டில் இன்னமும் முதிரா நிலையில் இருக்கும் அணு மின்னுற்பத்தியின் போது என்னவகை விபத்து நடக்கக்கூடும் என்பதையும் மக்களுக்கு முன்னமே சொல்லி, நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்வதுதானே நியாயம். அதற்குப் பிறகும், கூடன்குளம் மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக, அந்த ஒருவேளை நடக்க சாத்தியக்குறைவுள்ள ஆனால் சாத்தியமுள்ள ஆபத்தை எதிர்கொள்ளத் தயராக இருக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். நூறு விழுக்காடு பாதுகாப்பு உள்ளதாக கூறி, விபத்து நடக்க சாத்தியம் இல்லவே இல்லை என்று மறுப்பது ஏமாற்று வேலையல்லவா?

அணு உலையின் பலனான மின்சாரத்தையும், முன்னேற்றத்தையும், வேறு ஒரு மேல்தட்டு சமூகம் நுகர, பாதிக்க சாத்தியமுள்ள மக்களை ‘நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்’ என்கிற அரிய கருத்தை சொல்லி ஏமாற்ற முனைவது என்னவகை நேர்மை? பேரணைகள் எழுப்பும்போதும், கனிமங்களுக்காக மக்கள் நிலத்தை பிடுங்கும்போது சொல்லப்படும் அதே நேர்மையற்ற ‘நாமல்ல நாடுதான் நம்மைவிட முக்கியம்’ வாதம்தானே இது.

ஃபுகுஷிமாவில் பொருட்சேதம் ஏற்பட்டாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று ஒரு வாதத்தை கலாம் முன்வைக்கிறார். நியாயமாக அவர் செய்திருக்க வேண்டியது, ஜப்பானில் நடந்த அதே விபத்து அப்படியே இங்கே நடந்திருந்தால், என்னவகை பாதிப்பு நடந்திருக்கும் என்று நம் சூழலில் கற்பனையில் நிகழ்த்தி ஒப்பிட்டு பார்ப்பதுதான். குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் லட்சக்கணக்கில் உயிர்சேதம் நடந்தது. அதைவிட வலிமை வாய்ந்த பல பல ஜப்பானிய பூகம்பங்களில் வெறும் 25 பேர் கூட பலியாகவில்லை. ஒரு பேரழிவின் போதும் ஜப்பானியர் காட்டும் பொறுப்புணர்ச்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, அரசாங்கத்தின் அதி தீவிர துரித நடவடிக்கை, இவை எல்லாவற்றையும் நாம் நம் சூழலுடன் ஒப்பிட்டே பார்க்கமுடியாது. பத்து லட்சம் மக்கள், கூடன்குள அணு உலையிலிருந்து, 30 கிமீ ஆரத்தில் வசிப்பதாக சொல்கிறார்கள்; இது சரியென்றால், நம் ஊரில் விபத்து நிகழ்ந்தால் ஏற்படும் உயிர் சேதத்தைக் கற்பனையே செய்து பார்க்கமுடியாது.

அணு உலை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு முக்கிய வாதம் – ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழக்கூடிய சாத்தியத்தின் அச்சுறுத்தல். ஏனோ கலாம் இந்த பிரச்சினையை சுத்தமாகக் கண்டு கொள்ளவேயில்லை. ஒரு பயங்கரவாதத் தாக்குதல் மூலமோ, வேறு வகை சதிகளின் மூலமோ அணு உலைக்கு எந்தத் தீங்கும் யாராலும் நிகழ்த்த முடியாது என்று எந்த உத்தரவாதமும் அவர் தரவில்லை. (பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவே நடக்காது என்று உத்தரவாதம் தருவது நோய்க்கூறு கொண்ட நகைச்சுவையாக இருக்கும்.)

தொடர்ந்து அரசு மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு, எல்லாவகை தடுப்புகளையும் மீறி அணு உலையில் இருந்து வெளிப்படப்போகும் (ஆபத்தில்லை என்று கருதப்படும்) கதிர்வீச்சின் அளவு குறித்து அரசு உண்மை தகவல்களை முன்வைப்பதில்லை என்பது. கலாம், பொத்தாம் பொதுவாக இதுவரையான அரசு அறிக்கையைப் போலவே, பாதுக்காப்பான கதிர்வீச்சே ஊருக்குள் கலக்கிறது என்கிறாரே தவிர, குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதிலாக எதுவும் சொல்லவில்லை.

நடைமுறையில் மக்களை அன்றாடம் பாதிக்கப் போவதாக சொல்லப்படும் பல பிரச்சினைகளை, மிகைப்படுத்தப்பட்ட பயம் என்று எளிதாக கலாம் புறம் தள்ளுகிறார். அணு நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள், அணு உலை உள்ள ஊரில் வசிப்பவர்கள் பலவிதப் புற்றுநோய்களால் பாதிக்கபடுவதாகப் பல புள்ளி விவரங்கள் வந்துள்ளன. நான் நேரடியாக இந்தப் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதிலும், சரிபார்ப்பதிலும் ஈடுபட்டவன் அல்லன். ஆனால் அவை அத்தனையும் மிகை என்று ஒரு வாக்கியமாக கலாம் சொல்வதைமட்டும் வைத்து நம்பவது சாத்தியமில்லை. இது குறித்து செய்திகளை முதலில் கேள்விப்பட்டு, சரி பார்த்து, பின் தகவல்ரீதியான எதிர் பதிலை கைவசம் வைத்து கொண்டுதான் சொல்கிறாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றிய செய்திகள் பரப்பப்பட்ட பொய் என்றால், பொய் என்று நிறுவி, பொய்த் தகவல்களை தேசத்தின் முக்கியப் பிரச்சினைகளின்போது பரப்பியதற்கு, அதைப் பரப்பியவர்களின்மீது நடவடிக்கை எடுத்தால் நாமும் கலாமின் கட்டுரையை நம்புவது பற்றி யோசிக்கலாம். உதாரணமாக இங்கேயும், இங்கேயும் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு எதிரான ஆறுதல்களை கலாமின் கட்டுரையில் காண முடியவில்லை.

விபத்து என்பது சாத்தியக்கூறு மட்டும் உள்ள, தடுக்க எல்லா முயற்சிகளும் செய்யகூடிய ஒன்று. விஞ்ஞானத் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஆதரவான எல்லா வாதங்களையும், விபத்து நிகழ்வதை முன்வைத்துச் சொல்லப்படும் வாதத்திற்கு எதிராக முன்வைக்கலாம். நிதர்சனமான பிரச்சினை அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது; அதாவது பாதுகாப்பது.

கலாம் அது குறித்தும் புதிதாக எதுவும் சொல்லவில்லை. ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான இடத்தில் வைத்து நூறு ஆண்டுகாலம் பாதுகாக்கலாம் என்கிறார். சரி, அதற்குப் பிறகு? சில லட்சம் வருடங்களை half-life காலமாகக் கொண்டவற்றை, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்வதாக உத்தேசம்? அதனுடைய கதீர்விச்சு சில நூறு வருடங்களில் மங்கி, பாதுகாப்பான அளவிற்குள் வந்துவிடும் என்பது ஒரு வசதியான கணிப்பு மட்டுமே. நூறு வருடங்களுக்கு பிறகும் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கொண்டதாகவே எதிர்கால சந்ததியினருக்கு அது இருக்கும்.

இப்போதய நமது மின்தேவை, முன்னிலிருந்து பன்மடங்கு பெருகி, அணு மின்சாரம் இல்லாமல் ஆகாது என்கிற நிலையில் உள்ளது. அது exponentialஆக வளர்ந்து, இன்னும் பல பல பெருமடங்குளாகவே எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அப்துல் கலாம் வேறு நாம் 2030இல் நிச்சயம் வளர்ந்த நாடாகிவிடுவோம் என்கிறார். அதற்கு ஏற்ப இன்னும் மின் தேவை எத்தனை மடங்கு பெருகும் என்பதையும் அவரே சொல்கிறார். அதற்கு இன்னும் எவ்வளவு உலைகள் வேண்டுமோ? மேலும் மேலும் அப்புறப்படுத்த வழியில்லாத, தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், சேர்மானம் ஆகிக்கொண்டே  இருக்க போகும் அணுக் கழிவை பற்றி எந்த பொறுப்புமே இல்லாமல் சாதாரணமாக ஒரு இடத்தில் வைத்து சமாளிக்கலாம் என்கிறார். பத்ரியாவது, பிரச்சினைதான், ஆனால் எதிர்காலத்தில் சமாளித்துவிடலாம் என்று தன் அறிவியல் மனம் நம்புவதாக மட்டும் சொன்னார்.

நம் நுகர்வு கலாசாரம் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக்கை சாமாளிப்பதற்கே, உருப்படியான எந்த நடைமுறை உத்தியும், உலகம் முழுக்க எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. நாம் வாழும் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விடுவோம். காட்டையும், கடலையும் பிளாஸ்டிக் கழிவுகள் அழித்து வருகின்றன. கடலில் சேரும் கழிவுகளில் பெரும் விழுக்காடு ப்ளாஸ்டிக் கழிவுகள். பல கடல்வாழ் உயிரினங்களின் அழிவுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக உள்ளன. சில திமிங்கல இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள ஆவணப் படங்களைப் பார்த்தால் எவ்வளவு அற்புத உலகை நாம் அயோக்கியத்தனமாக அழித்து வருகிறோம் என்று அறியலாம்,

இந்த யதார்த்தத்தில் அணுக் கழிவுகளை பிரச்சினையின்றி சமாளிப்போம் என்று அறிஞர்கள் சொல்வது அத்தனையும், நம்மை ஏமாற்றும் வேலை மட்டுமின்றி அவர்களையே ஏமாற்றிக் கொள்ளும் வேலை. அவர்களில் பலருடைய அறிவியல் மனமே எதிர்காலத்தில் அணுக்கழிவுகளை சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் போடலாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறது. மறு சுழற்சி என்பது ப்ளாஸ்டிக் விஷயத்தில் பயனாளிகளுக்கு மனச்சமாதானத்தை தந்து, குற்றவுணர்வு நீக்கும் ஒரு பொய் நாடகம்; ஏனெனில் செய்யப்படும் அற்ப மறு சுழற்சிகள், தொடர்ந்து பெருமளவில் ப்ளாஸ்டிக் உற்பத்தியாகும் சூழலைத் தடுக்கவில்லை. மாறாக இது மறுசுழற்சியாகிறது என்று, அதைப் பயன்படுத்துபவரின் குற்றவுணர்வை மட்டுமே நீக்குகிறது. அணுக்கழிவுகள் விஷயத்திலும் மறு சுழற்சி என்பது வாதத்திற்காகவும் மனச்சமாதானத்திற்காகவும் சொல்லப்படுவதே. கழிவுகள் மேலும் மேலும் சேர்வதையும், அதை பாதுகாக்கும் பிரச்சினையும் இதனால் தவிர்க்கப்பட போவதில்லை. இந்த அணுக்கழிவுகளை சமாளிப்பது, என்றென்றைக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கு – ஒருவேளை அவர்கள் எல்லா வகை எதிர்கால அழிவுகளையும் தாண்டி பிழைத்திருந்தால்-அணு மின்சார உற்பத்தியை நிறுத்திய பின்பும்- பெரும் பிரச்சினையாக இருக்கும். அதாவது முந்தய தலைமுறை அனுபவித்துவிட்ட பயனின் பாவத்திற்காக, அடுத்த தலைமுறை பெரும் செலவுகளையும், பெரும் அர்பணிப்புகளையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இது தவிர ஒவ்வொரு நிலையிலும் அணு கழிவுகளை பாதுகாக்கும்போது கையாள்வதிலும், இடமாற்றம் செய்யும் போக்குவரத்திலும் எந்த பிரச்சினையும் நேரவே நேராது என்பதற்கும் உத்தரவாதமில்லை. கலாம் சொல்வதுபோல் அணு மின்சாரம்தான் நம் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படை என்றானபின், பெருமளவில் சேர்ந்துகொண்டே இருக்கப்போகும் கழிவுகளைத் தொடர்ந்து கையாண்டுகொண்டே இருக்க வேண்டும். மருத்துக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சுற்று சூழல் கேடு எதைப் பற்றியும் – தன் வீட்டிற்கு வெளியே – எந்த தளத்திலும் பிரக்ஞை இல்லாத நம் நடுத்தர வர்க்கமும், எலீட் மக்களும் இருக்கையில், பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் நிச்சயம் இல்லை.

அப்துல் கலாம் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகம் அடையக்கூடிய வளர்ச்சிப் பாதையில் அசையா நம்பிக்கை உடையவர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரான மனம் என்று ஒன்று இருக்கமுடியாது. எல்லா வகை பழைமைவாதிகளும்கூட தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் தங்கள் சுதந்திரத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். எத்தனையோ விதங்களில் கடந்த ஒரு நூற்றாண்டு தொழில்நுட்பம் நம்மை விடுதலை செய்திதிருக்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாத எல்லா வகை பற்றுக்களைப் போலவே தொழில்நுட்ப வெறியும் புதிய நெருக்கடிகளுக்கே இட்டுச் செல்லும்.

ஒருமுறை கேள்விக்கு பதில் சொல்லும்போது, பிருத்வி ஏவுகணை வானில் எழுந்ததையே தன் வாழ்வின் மகத்தான தருணமாக அப்துல் கலாம் சொல்கிறார். எவுகணைக்கான தவிர்க்க முடியாத அவசியம் பற்றி நாட்டுப்பற்றுள்ள ஒருவர் வாதிட்டால் புரிந்துகொள்ளலம். ஆனால் ஏவுகணை வானில் எழுவதை வாழ்வின் மகத்தான தருணமாக நினைக்கும் மனதை விமர்சனம் செய்து கொள்வதில், தொழில்நுட்பம் தரும் நெருக்கடியையும் அழிவையும் எதிர்கொள்வதன் தொடக்கம் இருக்கலாம்.  இன்றைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கும் பேராசையும், பெருந்தேவைகளையும், பெரும் நெருக்கடிகளையும் பற்றிப் பலர் பேசும்போது, தொழில்நுட்பத்தின்மீது மதப்பற்று போன்ற தீவிர ஆதரவுடன், முழுக்க ஒரு பிரசாரத்திற்கான மொழியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலாம் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதை அரசும் ஊடகங்களும் பரப்புரையாக மக்கள் மனதில் திணிக்கிறது.

 

ன்னளவில் கலாமின் கட்டுரையில் எதிர்க்க மட்டும் செய்யாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. கலாம் தனது கட்டுரையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சுத்தமான மின் உற்பத்தி முறையாக அணு மின்சாரத்தைக் குறிப்பிடுகிறார். இதைக் குறிப்பிடும்போது புவி சூடேற்றம் பற்றியும், அதன் ஆபத்துக்கள் பற்றியும் பேசுகிறார். இந்த வாதமும் ஏற்கெனவே வேறு சிலரால் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டதுதான்.

கலாம் புவி சூடேற்றம் பற்றி பேசுவதன் நேர்மையை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் சூழலியவாதிகள் புவி சூடேற்றத்தை முன்வைத்து பேசுவதை எல்லாம் எள்ளி நகையாடும் ஒரு எலீட் கூட்டம், அணு மின்சாரத்திற்கு ஆதரவாக வாதிடும்போது மட்டும் புவி சூடேற்றத்தை ஒரு வாதமாக முன்வைப்பது அப்பட்டமான நேர்மையின்மை.

அணுக்கழிவுகளைத் தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையிலிருந்து கழற்றி வைத்துவிட்டுப் பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது. ஆனால் கலாம் சொல்வதுபோல் மற்றவகை மின் உற்பத்திகளை நிறுத்தி, அணு மின்சார உற்பத்தியை மட்டும் மேற்கொண்டால் Green house வாயு உமிழ்வுகள் உண்மையில் குறையுமா? தன் வாதத்திற்கு ஆதரவாகப் பல புள்ளி விவரங்களைத் தருகிறார். உதாரணமாக 26% CO2 வெளியேற்றம் (அணு சாராத மற்ற) மின் உற்பத்தியால் மட்டும் ஏற்படுகிறது என்கிறார். அவற்றை நான் சரி பார்க்க முயலவில்லை. ஆனால் நான் காண விரும்பிய ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரத்தை அவர் தரவில்லை.

ஜப்பான் போன்ற நாடுகள் பெருமளவில் அணு உற்பத்தியை மட்டும் சார்ந்து நிற்கத் தொடங்கியபின், அந்நாட்டிலிருந்து வெளியேறும் கரிமில வாயுவின் அளவு கூடிக்கொண்டிருக்கிறதா, குறைந்து கொண்டிருக்கிறதா என்பதன் புள்ளி விவரம்தான் எனக்கு முக்கியமானதாகத் தெரிகிறது. கரிமில வாயு உமிழ்வுப் புள்ளிவிவரம், வரைபடத்தில் மேல் நோக்கிய வளைவாக, செங்குத்தாக தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. ஆகையால் அணு மின் உற்பத்தி புவி சூடேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக நம்ப ஆதாரம் உண்மையில் இல்லை; மாறாக மின்பற்றாக்குறை நீங்கி, அபரிமிதமான மின்சாரம் கைவசம் இருக்கும்போது, பொறுப்பற்ற எல்லாவகைக் குளிரூட்டுதலாலும் புவி சூடேற்றம் அதிகமாகவே எல்லா சாத்தியங்களும் உள்ளது.

நிலக்கரி, தொல்லுயிர் எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களின் இருப்பு வற்றும் நிலைமையில், நாம் அணு எரிபொருளைத் தேடவேண்டியுள்ளது என்கிறார் கலாம். மட்கிக் கிடக்கும் இயற்கை எரிபொருட்கள் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப் பிரச்சினை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும். இன்னும் நேரடியாக அணு சக்தியிலேயே ஓடக்கூடிய கார்களையும், விமானங்களையும் படைத்து விட்டால் மிகவும் உசிதம்; உண்மையிலேயே அதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய வாகனங்களைப் போலப் புகை கக்க வேண்டிய தேவையும் இருக்காது. அணுக் கழிவுகளை மட்டும் எப்படி ஒவ்வொரு குடிமகன்களும் சமாளிப்பார்கள் என்பதை எதிர்கால அறிவியல் முன்னேற்றத்திடம் விட்டுவிடலாம்.

புவி சுடேற்றத்தை அணு மின்சாரம் குறைக்கும் என்கிற வாதம் சந்தேகக் கேஸாக இருந்தாலும், எதிர்காலத்தை பற்றிக் கவலை கொள்ளாமல், உடனடிச் சூழல் மாசை மட்டும் கணக்கில் கொண்டால், மற்ற அனல், புனல் மின்சாரங்களுக்கு அணு மின்சாரம் மேல்தான். உதாரணமாக கலாம் நிலக்கரிச் சுரங்கங்கள் நிகழ்த்தும் நாசத்தை முன்வைத்து அப்படி ஒரு வாதத்தை முன்வைக்கிறார். இந்த சந்தர்ப்பத்திற்கான ஒரு சாமர்த்தியமான வாதமாக இல்லாமல், அணு மின்சாரம் தொடங்கிய உடன், நிலக்கரிக்காகத் தோண்டுவதை நம் கார்ப்பரேட்டுகள் நிஜமாகவே முழுக்க விட்டுவிடுவார்கள் என்றால், அந்த வகையில் கலாம் சொல்வதை- சேரப்போகும் அணுக்கழிவு குறித்து யோசிக்காத நிலையில்- ஒப்புக் கொள்ளலாம்.

என்னை பொருத்த அளவில் எல்லா விதத்திலும் அழிவை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகள் நம்மை மட்டுமின்றி, கடலையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. புவி சூடேற்றம் பற்றிக் கறாரான புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பின்பும், நன்றாய்ப் படித்த அறிவாளிகளே கிராக்குத்தனமான வாதங்களால் மறுக்கிறார்கள். இன்னும் பைத்தியக்காரத்தனமான தீர்வுகளையும் தருகிறார்கள். இதற்குமேல் வெடிக்க சாத்தியமுள்ள போர்கள், முதலீட்டியம் எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகும் தீவிர சுரண்டல், அளிக்கக்போகும் நெருக்கடிகள் என்றும் ஏராளமாக இருக்கின்றன. இதில் உடனடி ஆபத்து என்று பார்த்தால் அணுக்கழிவுகள் குறைந்த வீர்யத்துடனேயே இருப்பது போல் தெரிகிறது.

ஆற்றலுக்காக நவீனமான வாழ்க்கையில் எத்தனையோ விதத்தில் அழிவை தேடுகிறோம்; அணு மின்சாரம் உற்பத்தி மூலம் இன்னொன்றை இழுத்துக்கொண்டு அழிவைத் தேடுவதில் என்ன குடி முழுகப்போகிறது என்றால் – பதில் எதுவும் இல்லை. ஆகையால் நேர்மையாக அழிவிற் சிறந்தது எது என்பதைப் பற்றி விவாதிப்போம். அதில் அணு ஆற்றல்தான் நம் பார்வையில் இப்போதைக்கு சாதகமான அழிவு என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். சைனா இந்தப் பாதையில்தானே போகிறது, நாம் பின்தங்கி விட மாட்டோமா என்று கேட்கிறார்கள். உண்மைதான்; எல்லோரும் அழிவுப்பாதையில் போகும்போது நாமும் அதையே செய்வோம். தனிமைப்பட்டுத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை. தவிர்க்க முயன்றாலும் மற்றவர்கள் அனுமதிக்கப் போவதில்லை. புவி சூடேற்றப் பிரச்சினையிலும் மற்ற நாடுகள் யோக்கியமாக நடக்காதபோது, கரிமில வாயு உமிழ்வை நாம் மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். உண்மைதான்; மற்றவர்கள் செய்யும் போது நாமும் நம் பங்களிப்பை அழிவிற்குச் செலுத்த வேண்டாமா?

எல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் ஐரோப்பிய அமேரிக்க நாடுகளைப் போல நவீனமாதலின் பயன் நம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை; நாம் சைனா போன்ற எதேச்சதிகார அரசமைப்பு கொண்ட நாடும் அல்ல. ஆகையால் ஒரு ஜனநாயக நாட்டில், நம் (அதாவது நானும் உறுப்பினராகியுள்ள மேல்தட்டின்) தேர்வுக்கு, வேறு ஒரு மக்களை விலை கொடுக்கச் சொல்லக் கூடாது. வேறு ஒரு மக்கள் என்று கூடன்குளத்தில் வசிக்கும் மக்களை போன்றவர்களைத்தான் சொல்கிறேன். (எதிர்கால சந்ததியினரை நம் பாவங்களை சுமக்கத்தான் உருவாக்குகிறோம் என்பதால் அவர்களை சொல்லவில்லை.) எத்தனையோ விஷயங்களில், எத்தனையோ விதங்களில் ஒரு தட்டினரின் தேர்விற்கு வேறு யாரோ விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இதிலும் செய்தாலென்ன என்று நேரடியான ஒரு கேள்வியை எலீட் கூட்டம் கேட்பது ஒருவேளை அடுத்த கட்ட வாதமாக இருக்கலாம்.

இந்த புலம்பல்களை விட்டுவிட்டு இதற்கான மாற்றுத் தீர்வு என்னவென்று கேட்டால், நிறைவான பதில் எதுவும் எனக்கு தெரியவில்லை. அணு உலையை எதிர்ப்பவர்கள் காற்றாலை, சூரிய மின்சாரம் என்று பலவற்றை முன்வைக்கிறார்கள். விரிந்துகொண்டே போகும் தேவைகளை அது முழுவதும் தீர்த்து வைக்கும் என்று கலாமை போலவே எனக்கும் நம்பிக்கையில்லை. உருவாக்கி கொண்டே செல்லும் தேவைகளை குறைக்காமல், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் எந்த தீர்வையும் எட்டமுடியாது. டெவலப்மெண்ட் என்கிற வளர்ச்சியின் வன்முறையையும், அழிவையும் உணராமல் அது குறித்து யோசிக்க வாய்ப்பில்லை. தொடர்ந்த மின் பற்றாக்குறையும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஒருவேளை நம்மை யோசிக்க வைக்கலாம். அந்த வகையில் கூடன்குளம் அணு மின்சாரம் வந்து நம் மின்பற்றாக்குறையை தீர்க்குமானால், நாம் யோசிக்கவே போவதில்லை.

ஃபுகுஷிமா விபத்திற்கு பிறகு, இயக்காமல் இருந்த பல அணு உலைகளின் காரணமாக, ஜப்பானியர்கள் மின் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது; மின்சிக்கனம் குறித்த பரப்புரை செய்யப்பட்டது. குளுரூட்டுதலை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஒட்டு மொத்த ஜப்பானே மின் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் கடந்த பல வருடங்களைவிட குளிர்ந்து இருந்ததாக ஒரு செய்தி வாசித்தேன். இது போன்ற ஒரு செயல் இந்தியர்களாகிய நம்மாலும் முடியும் என்று கூறுவதற்கான முகாந்திரம் இல்லாததால்தான், கலாம் அணு மின்சாரத்தில் ஜப்பானை போல நாம் சாதித்து காட்ட முடியும்… முடியும்… முடியும்… என்று கோஷிக்கிறார் போலும்.

பி.கு. 1. கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள் குறிப்பாக பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர். அது குறித்து எந்த அளவிற்கு நிறைவான, நியாயமான பதில்களை கலாம் கூறியிருக்கிறார் என்று அலச நான் முயலவில்லை. வேறு யாராவதுதான் அந்த வேலையைச் செய்யவேண்டும்.

பி.கு. 2. ஹிந்து பத்திரிகையில் ஆங்கிலத்திலும், பின் கலாமின் வலைத்தளத்தில் முதலில் வெளியாகி பின் விகடனில் தமிழிலும் இரண்டு கட்டுரைகள் கலாமின் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. இரண்டுமே இணை ஆசிரியர்களாக வேறு ஒருவரையும் கொண்டது. ஶ்ரீ ஜன்பால் சிங் ஆங்கிலக் கட்டுரையிலும், பொன்ராஜ் தமிழ்க் கட்டுரையிலும் இணை ஆசிரியர்கள். ஆய்வுக் கட்டுரையாக அல்லாமல், வெகுஜன வாசிப்பிற்கான ஒரு பரப்புரை கட்டுரையில், இவர்கள் பங்கு என்னவென்று தெரியாவிட்டாலும், பலரும் இதைக் கலாமின் கட்டுரையாகவே வாசிக்கின்றனர். என் கருத்தில், கலாமின் மேற்பார்வையில், இந்த இரண்டு கட்டுரைகளுமே முழுமையாகவே மற்றவர்களால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு நிறைய உள்ளதாகவே கருதுகிறேன். ஆனால் இங்கே கலாமின் கட்டுரை என்று விளித்துள்ளதன் பொருள், அவர் எழுதியது என்பதல்ல. அவரின் பெயரால் முன்வைக்கப்பட்டதை எதிர்கொள்வதுதான்.

- ரோஸா வசந்த்

 

 

வால் ஸ்ட்ரீட் முற்றுகை

இந்தியாவோடு ஒப்பிடும்போது நாலில் ஒரு பங்கு மக்கள் தொகை. ஆனால் உலகின் சூப்பர் பவர். பூமிப் பந்தின் மூலை முடுக்குகளில் நடப்பவற்றைக் கழுகுக் கண்களோடு 24 மணிநேரமும் கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதி. அசுர ராணுவ பலம். எல்லாம் இருந்தும் அமெரிக்கா கடந்த சில வருடங்களாக பல்வேறு முனைகளில் சரிவுகளைச் சந்தித்துவருகிறது. புதிதான சவால்கள் என்று சொல்லிவிடமுடியாது – அமெரிக்கா ஏற்கெனவே சந்தித்தவைதான். எல்லாவற்றையும் சமாளித்து ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டெழும் சாமர்த்தியம் அமெரிக்காவுக்கு உண்டு. ஆனால் இப்போது நடப்பதுபோல ஒரே சமயத்தில் பல்முனைச் சவால்களைச் சந்திக்க நேர்வது அமெரிக்காவுக்குச் சற்றே புதிது.

வெள்ளை மாளிகை அதிபர் ஒபாமாவின் அறையில் இருக்கும் ஒரே இந்தியத் தலைவரின் படம் மகாத்மா காந்தி என்று ஒரு தகவல் உண்டு. ஒபாமாவும் அவ்வப்போது மகாத்மாவின் அகிம்சாரீதியான போராட்டங்களைச் சிலாகிப்பது உண்டு. யாருடன் டின்னர் சாப்பிட விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு காந்தியுடன் என்று அவர் சொல்லியிருக்கிறார். இன்று அவர் காந்தியின் சத்யாகிரகத்தை நியூ யார்க்கின் உலகப்புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் எதிர்கொள்கிறார்.

வால் ஸ்ட்ரீட் பற்றித் தெரியாதவர்களுக்குச் சுருக்கமாக. உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தையான நியூ யார்க் பங்குச் சந்தையும், நாஸ்டாக், நியூ யார்க் மெர்க்கென்டைல் எக்சேஞ்ச், நியூ யார்க் போர்ட் ஆஃப் ட்ரேட் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களும் இருக்கும் இடம். வால் ஸ்ட்ரீட்டில் பங்கு வர்த்தகம் சரிந்தால் உலகளவில் அது எதிரொலிக்கும் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்காவின் அசுர நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படும் இடம் நியூ யார்க் பங்குச்சந்தை. குறிப்பாக உலகளாவிய நிதி மற்றும் வங்கி நிறுவனங்கள்.

கடந்த நான்கு வாரங்களாக வால் ஸ்ட்ரீட்டை மக்கள் முற்றுகை இட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் கூட்டத்தின் அளவு கூடி, நூற்றுக்கணக்கில் ஆரம்பத்தில் இருந்தது இன்று ஆயிரக்கணக்காக ஆகியுள்ளது. அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் மக்கள் கூடி முற்றுகைப் போராட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது அரசுக்குப் பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

மக்கள் எதனால் முற்றுகை இடுகிறார்கள்? நம்மூரில் நிலம், கட்டடம் தொடர்பான ரியல் எஸ்டேட்டின் நிலவரம் நாம் அறிந்ததுதான். சென்னையில் நல்ல ஏரியாவில் வசதிகளோடு இரண்டு படுக்கையறை அபார்ட்மெண்ட் ஒன்று வாங்கவேண்டும் என்றால் குறைந்தது ஒரு கோடி ரூபாய் வேண்டும். கட்டுங்கடங்காது அசுரத்தனமாக விலை ஏறிக்கொண்டிருக்கிறது. சாமான்யர்களுக்கு வீடு என்பது எட்டாக்கனி. அமெரிக்காவிலும் 2005,-2006 வரை வீட்டுவிலை படிப்படியாக ஏறிக்கொண்டேபோய் உச்சகட்டத்தில் நின்றது. வாங்குபவர்கள் எல்லாருமே வங்கிகளிடமும் நிதி நிறுவனங்களிடமும்தான் கடன் பெற்று வீட்டை வாங்குவார்கள். கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் அதைச் சும்மா வைத்திருக்காமல் பத்திரங்களாக அந்தக் கடன்களை மற்ற நிதி நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்கள். இப்படிக் கைமாறிக் கைமாறி ஒரு கட்டத்தில் கடன் யாரிடம் இருக்கிறது என்பதே கடன் பெற்றவருக்குத் தெரியாது.

இம்மாதிரி வீட்டுக்கடன்களைக் கையாளும் அலுவலர்களுக்கு கடனையும் வட்டி விகிதத்தையும் பொருத்து கமிஷன் கிடைக்கும். கமிஷன் நிறையப் பெறவேண்டும் என்ற பேராசை கடன் அலுவலர்களை உந்த, இம்மாதிரி கொடுக்கும் கடன்களை உடனடியாகப் பெரிய நிறுவனங்களிடம் விற்றுக் காசு பார்க்கும் பேராசை நிதி நிறுவனங்களை உந்தியது. கடன் பெற்றவர்கள் வீட்டுக் கடன்களைச் செலுத்தத் தொடங்கியதும்தான் பிரச்னைகள் தொடங்கின. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தமாதிரி கடன் வாங்கத் தகுதி இல்லாதவர்களையெல்லாம் கண்ட இடத்தில் கையெழுத்து போடச்செய்து கண்மண் தெரியாமல் சகட்டுமேனிக்குக் கடன்கொடுத்துத் தள்ளியிருந்தார்கள். இம்மாதிரி கொடுத்த கடன்களையெல்லாம் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது பேலன்ஸ் ஷீட்டில் பெரும் சொத்தாகக் காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆளாளுக்கு வீடுகள் வாங்க, வீட்டு விலை ஆகாயத்துக்கு எகிறியது. ஒரு கோடி பெறுமானமுள்ள வீட்டை நான்கு கோடிக்கு வாங்கினார்கள். இப்படி வாங்கியவர்கள் மாதத் தவணையைச் செலுத்தமுடியாமல் திணற, வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. பத்து நூறு என்று தொடங்கி ஆயிரம் லட்சம் என்று பெருமளவு கடன்கள் செலுத்த முடியாமல் சொந்தக்காரர்கள் சாவிகளை ஒப்படைத்துவிட்டு வீடுகளைக் காலி செய்ய ஆரம்பித்ததும் பிரச்னை பூதாகாரமானது. சந்தையில் சகட்டுமேனிக்கு வீடுகள் குவிய, விலை பாதாளத்துக்கு விழுந்தது.

நான்கு கோடிக்கு வாங்கிய வீட்டை எழுபது எண்பது லட்சத்திற்குக்கூட விற்க முடியாமல் திணறினால் என்ன ஆகும்? முப்பது வருட காலக் கடன்களைப் பெற்றவர்கள் வாங்கிய முதல் சில வருடங்களில் செலுத்தும் மாதத் தவணைகளில் பெரும்பாலான தொகை வட்டியை அடைக்க மட்டுமே போய்விடும். வாங்கி ஐந்து வருடங்களில் அசல் மிகச் சொற்பமான அளவே குறைந்திருக்கும்.

ஒரு சிறிய கணக்கைப் பார்ப்போம்.

வீடு வாங்கிய விலை: நாலு கோடி. மாதத் தவணை – ஒரு லட்சம் (எண்பதாயிரம் வட்டி, இருபதாயிரம் அசல்). ஒரு வருட முடிவில் 2,40,000 மட்டுமே அசலில் கழிய பாக்கிக் கடன் 3,97,60,000 இருக்கும். விலை விழுந்ததால் வீட்டின் மதிப்பு எண்பது லட்சம்!

மாதத் தவணையைக் கட்ட முடியாமல் வீட்டை விற்றால் கிடைப்பது எண்பது லட்சம். வங்கிக்குக் கட்டவேண்டியது நாலு கோடி. என்ன செய்வார் வாங்கியவர்? சாவியைக் கொடுத்துவிட்டு வீட்டை ஜப்தி செய்ய விட்டுவிடுவார்.

வங்கிகள் வீட்டை ஜப்தி செய்தாலும் என்ன செய்யமுடியும்? அவர்கள் விற்றாலும் கிடைக்கப்போவது 80 லட்சம்தான். ஆனால் வரவேண்டிய தொகை நாலு கோடி. ஆக “வாராக் கடன்” என்று 3 கோடிக்கு மேல் கணக்கு எழுதுவார்கள். இப்படிப் பெருமளவில் எழுதினால் என்ன ஆகும்? லாபம் எதுவும் காட்ட முடியாமல் கடும் நஷ்டத்துக்கு உள்ளாகி, வங்கி திவாலாகிவிடும். வங்கிகளில் பணம் போட்ட வாடிக்கையாளர்களுக்குப் பட்டை நாமமும் ஒரு கை சுண்டலும்தான் மிச்சம்!

இப்படி நூற்றுக் கணக்கில் வங்கிகள் திவாலாகத் தொடங்கியதும்தான் சூழ்நிலையின் விபரீதம் எல்லாருக்கும் உறைக்க ஆரம்பித்தது. வேலையிழப்பு, சேமிப்பு இழப்பு, பங்குகளின் மதிப்பிழப்பு என்று எல்லாப் பக்கமும் அமெரிக்கப் பொது ஜனத்துக்கு அடிமேல் அடி. விழுந்த பொருளாதாரத்தினால் பல வணிக நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின. பழம்பெருமை வாய்ந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களான க்ரைஸ்லர், ஃபோர்ட் நிறுவனங்களும் திவாலாகும் நிலைக்கு வந்தன. இதன் சங்கிலித் தொடர் விளைவுகள் புரிகிறதா?

அவசர அவசரமாக அமெரிக்க அரசு தாற்காலிகக் கடனாக பல பில்லியன் டாலர்களை இந்த நிறுவனங்களுக்குக் கொடுத்துச் சமாளித்தது. (அவர்கள் அதை ஒன்றிரண்டு வருடங்களில் ஒழுங்காகத் திருப்பிக் கட்டியது வேறு விஷயம்.) சிட்டி பேங்க் உள்ளிட்ட உலகளாவிய பெரும் வங்கிகளும் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டவுடன் அமெரிக்க அரசு அதிரடியாக அரசு நிதியிலிருந்து பல பில்லியன் டாலர் தாற்காலிகக் கடனாக வழங்கி முட்டுக்கொடுத்தது. இது இப்படி இருக்க, இப்படி அரசுப் பணத்தில் (அதாவது மக்கள் பணத்தில்) மீட்டெடுக்கப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் மில்லியன் டாலர் கணக்கில் சம்பளம், படி, போனஸ் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நிறுவனத்தைவிட்டு வெளியேறினர்.

இதற்கு “கோல்டன் பாராசூட்” என்றொரு சொலவடை இருக்கிறது. அதாவது விமானம் விழுந்து காலியாக எல்லாப் பயணிகளும் சிவலோகம் போகும் தருணத்தில் பைலட் மட்டும் பிரத்யேகமான பாராசூட்டைக் கட்டிக்கொண்டு எல்லாரையும் அம்போவென்று விட்டுவிட்டுத் தான்மட்டும் குதித்துத் தப்பிப்பதைப் போல! எல்லாப் பக்கங்களிலும் விழுந்த அடிகளால் நொந்துபோயிருந்த அமெரிக்கர்களுக்கு இந்த நடவடிக்கைகள் எல்லாம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இருந்தது. அவ்வளவுதான்! “உங்களது பேராசைக்கு எல்லையே இல்லையா?“ என்று கொதித்து எழுந்தார்கள் அமெரிக்கர்கள்.

இதன் விளைவுதான் கடந்த ஒரு மாதமாகச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் வால் ஸ்ட்ரீட் முற்றுகை! இப்போராட்டங்கள் நியூ யார்க் நகரோடு நிற்காமல் இப்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக “பாஸ்டன் முற்றுகைப் போராட்ட”த்தைத் தொடங்கி நூற்றுக்கணக்கானோர் கைதாகியிருக்கிறார்கள். அரசுக்குப் பெரிய தர்மசங்கடமான நிலை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. ரிபப்ளிகன் கட்சி சார்பான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் விவாதங்களில் போட்டியிடும் ஆசாமிகள் ஒபாமாவைக் கிழிகிழியென்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனிமேல் தாங்க முடியாது என்ற நிலைக்கு அமெரிக்கர்கள் வந்துவிட்டார்கள். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது என்று சொல்வார்களே, – அதுதான் அமெரிக்கா விஷயத்தில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பொருளாதாரச் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், திவாலாகும் பெரும் நிறுவனங்கள், நிதியிருப்புக் குறைவு (ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க கஜானாவைவிட அதிக ரொக்கக் கையிருப்பு வைத்திருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!), டாலர் மதிப்பு சரிவு, வங்கிகளின் ஊதாரித்தனம், பேராசை, பங்குச் சந்தைச் சரிவு என்று உள்நாட்டுப் பிரச்னைகள். இன்னொரு பக்கம் வேலியில் போகும் ஓணானை மடியில் கட்டிக்கொண்ட கதையாக ஆக்கிரமிப்பு செய்துள்ள ஈராக், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் படைகளுக்காக ஒவ்வொரு நாளும் செலவாகும் பில்லியன் டாலர்கள்.

ஈராக்கிலிருந்து படிப்படியாக படைகளை விலக்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் அங்கு இதுவரை நிர்மாணித்திருந்த ராணுவத் தளங்கள், சாதனங்கள், ஆயுதங்கள், டாங்குகள், வண்டிகள் என்று கிட்டத்தட்ட முந்நூறு மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ளவற்றைத் திரும்ப அமெரிக்கா கொண்டுவர அதைவிட அதிகச் செலவாகும் என்பதால் அங்கேயே ஈராக்கியர்களுக்கு “தானமாக” கொடுக்க முடிவெடுத்த செய்தியும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதையெல்லாம் பார்த்த அமெரிக்கர்கள், தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.

இம்முற்றுகைப் போராட்டங்களில் விநோதமானது என்னவென்றால், அண்ணா ஹசாரே போன்று தலைவர் என்று யாரும் இல்லாமல் மக்களாகவே கூட்டம் கூடிப் போராட்டம் நடத்துவதுதான். தலைவன் இல்லாத மக்களின் சுயப் போராட்டம்! கிட்டத்தட்ட எகிப்து அல்லது சில அரபு நாடுகளில் நடைபெறும் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் போன்றது என்றும் சொல்லலாம்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா, எதிர்ப்பதா என்று ஆளுங்கட்சிக்காரர்களான டெமாக்ரடிக் கட்சியினர் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள். எதிர்த்தால் அதிபர் தேர்தலின்போது, மக்கள் ஒபாமாவுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள். ஆதரித்தால் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்ததுபோல ஆகிவிடும். சும்மா இருந்தால் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். இருதலைக்கொள்ளி உள்ளிட்ட எறும்பு நிலை!

இது பிசுபிசுத்துப் போகிற போராட்டமாகத் தெரியவல்லை. வடகிழக்கு மாகாணங்கள் தவிர இப்போது மற்ற நகரங்களிலும் சிறு குழுக்களாக மக்கள் கூட ஆரம்பித்துவிட்டார்கள். இது எந்நேரமும் பெரிய அளவில் வெடிக்கலாம். இப்படி வங்கி, நிதி நிறுவனங்கள், பெரும் முதலைகளான எண்ணெய் நிறுவனங்கள் என்று அசுர முதலாளிகளை எதிர்த்து நடைபெறும் இம்முற்றுகைப் போராட்டங்களுக்கு மக்களிடம் அபார ஆதரவு இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. அபிப்ராய பேதங்களும் இருக்கின்றன.

போன வாரம் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்ததால் உலகமே துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறது. “ஆப்பிளின் லாப சதவிகிதம் கிட்டத்தட்ட 25%. ஆப்பிளின் கையிருப்பு 80 பில்லியன் டாலர்கள். இதுவரை நன்கொடை என்று ஒரு நயாபைசாகூட அவர்கள் செலவழித்ததில்லை. ஆனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுடன், பெரும் கட்டுமானங்களுடன், ஏராளமான முதலீடுகளுடன் பெரும் தொழில் அமைப்பை நடத்திக்கொண்டிருக்கும் – எல்லார் வாயிலும் விழும் – எண்ணெய் நிறுவனங்களின் (இதயம் நல்லெண்ணை இல்லை – பெட்ரோல், கேஸ், இத்யாதி இத்யாதி) லாப சதவிகிதம் 5 அல்லது 6 சதவிகிதம்தான். இதில் யாரை எதிர்த்து மக்கள் போராடவேண்டும்?” என்றார் என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஒரு அமெரிக்கர்.

யோசிக்கவேண்டிய விஷயம்!

வற்றாயிருப்பு சுந்தர்

காந்தி தோளில் ஹிட்லர்

அதை மகாத்மாவின் விஸ்வரூப தரிசனம் என்று சொல்லலாம். விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தில் எப்படி தெய்வங்களெல்லாம் அவருடைய உடலெங்கும் இருந்தார்களோ, அதேபோல எல்லா தலைவர்களும், அபுல் கலாம் ஆசாத், பகத் சிங், திலகர், நேரு என எல்லா இந்தித் தலைவர்களும், காந்தியின் உடலெங்கும் வியாபித்திருக்க, மகாத்மா அருளாசி வழங்குவது போல கையை உயர்த்திக்கொண்டிருக்கிறார். அவரது தோளில் பண்டா பகதூர், அடால்ப் ஹிட்லர் மற்றும் முஸோலினி. அவரது இடதுதோளின் மேல் அகண்ட பாரதத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு ஆசி அளிக்கிறார். வலதுபக்கம் அவருக்கு மேலே பாரத அன்னை அவருக்கு ஆசி அளிக்கிறார். 1940களில் விடுதலைக்கு சில ஆண்டுகள் முன்னால் மத்திய இந்தியாவில் புழங்கிய காந்தி படம் இது.

இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்கிற எண்ணம் ஒரு பக்கம். மறுபக்கம் பிரிட்டிஷார் மீது உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச கட்டாயங்கள் இறை சித்தம் என்கிற எண்ணம். இதில் மகாத்மா காந்தி ஒரு மனிதரல்ல. அவர் ஒரு மகா மனிதன். இந்திய விடுதலைக்காக போராடியவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் காந்தியின் அணியில் வலு சேர்த்தவர்கள் என்கிற ஒரு கருத்தாக்கம் வெளிப்படுகிறது.

மற்றொரு சித்தரிப்பு. மார்கண்டேயனாக இந்திய அன்னை சிவலிங்கத்தை அணைக்க, எமனாக வரும் பிரிட்டிஷை எட்டி உதைக்கும் சிவன் சிவலிங்கத்திலிருந்து வெளிப்படுகிறார். அப்படி வெளிப்படும் சிவபெருமான் காந்தியேதான். பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட ஆனால் பிரபலமாகிவிட்ட 1930களின் காந்தி சித்தரிப்பு இது.

நுணுக்கமான விதத்தில் ‘காந்தி நீட்சேயின் மகாமனிதனா’ என்கிற கேள்வியை இது எழுப்புகிறது. சங்கல்பத்தின் சக்தியை ஆயுதமாக முன் வைத்தவர். சூரியன் அஸ்தமிக்காத பேரரசுக்கு எதிராக ஆயுதமற்ற மக்கள் கூட்டத்தின் தனிமனித எதிர்ப்பை அவர் முன்வைத்தார். ஹிட்லருக்கும் காந்திக்கும் உள்ள ஒற்றுமையும் அதிமுக்கிய வேற்றுமையும் இதிலேயே உள்ளன. ஹிட்லர் தன்னை நீட்சேயின் மகாமனிதனாக கற்பனை செய்துகொண்ட தலைவர்.

காந்தியும் சரி ஹிட்லரும் சரி இருவருமே விசித்திர சித்தர்கள்தான். தங்கள் முடிவுகளை அறிவுக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு அக-அறிதலிலிருந்து பெற்றார்கள். இருவரும் அதற்கு பயன்படுத்திய வார்த்தைகள்கூட ஏறக்குறைய ஒன்றுதான் – ‘inner voice’  - அகக்குரல்.

”அழிக்கமுடியாத அக ஏற்பு இருந்தால் மட்டுமே நான் செயல்படுவேன். இதுதான் சரி என அந்த அக ஏற்பு இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன். நான் காத்திருப்பேன். கட்சியினர் அனைவருமே என்னை செயல்பட நிர்ப்பந்தித்தாலும் நான் செயல்பட மாட்டேன். நான் காத்திருப்பேன். என்ன நடந்தாலும் சரி, நான் காத்திருப்பேன். ஆனால் என் அகக்குரல் பேசினால் அப்போது செயல்படவேண்டிய காலம் வந்துவிட்டது என்று பொருள்.” காந்தி சொல்லியிருக்க முடிந்த ஹிட்லரின் வார்த்தைகள் இவை. காந்தி மீண்டும் மீண்டும் தன் அகக்குரலின் முக்கியத்துவத்தை குறித்துக் பேசியிருக்கிறார். அதுவே தன்னை தன் செயல்பாடுகளை முழுமையாக வழி நடத்திச் செல்வதை அவர் கூறியிருக்கிறார்.

காந்தியின் முதல் அகக்குரல் ஒலித்த தருணம் சுவாரசியமானது:

15 பிப்ரவரி 1918. அகமதாபாத் துணி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றை காந்தி வழிகாட்டி நடத்திக்கொண்டிருந்தார். 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இயக்கம் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளிலிருந்து பின்னடைவதை காந்தி உணர்ந்தார். “அன்று காலை தொழிலாளர் தலைவர்களுடன் நான் பேசியபோது என்னை அறியாமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் அவையாகவே வெளிவந்தன: ஒரு முடிவு காணும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு இணைங்கி இணையவேண்டும். அதுவரை நான் உணவைத் தொட மாட்டேன்.”

அதற்குப் பின்னரும் அவர் செய்த பல உண்ணா விரதப் போராட்டங்கள் இந்த ‘அகக்குரல்’ இட்ட ஆணையின்படி அவர் செய்த முடிவுகளே ஆகும். இந்தக் குரல் அவருக்கு இடும் கட்டளைகள் அவருடைய மிக அணுக்கமானவர்களுக்குகூட தெரியாமலே இருந்தது. பல நேரங்களில் அவரது அணுக்கத் தளபதிகளான நேரு, படேல் போன்றவர்களுக்குக்கூட அது அதிசயமான எதிர்பாராத முடிவாக அமைந்தது. காந்தி தன் அகக்குரலை இறை குரலாக கண்டறிந்தார். அது தனது அகம்பாவத்தின் குரல் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

காந்தியின் அகக்குரலுக்கும் ஹிட்லரின் அகக்குரலுக்குமான வேறுபாடு இறுதியாக தனிமனிதனில் முடிகிறது. தனிமனிதன் அவன் முழுமையான சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலையில் காந்தியின் இயக்கம் அவனை நிறுத்துகிறது. அகிம்சை, சத்தியம் ஆகியவை குறித்த தனிமனித புரிதலே இறுதி கணத்தில் அதிகாரத்தின் முன்னால் தனிமனித எதிர்வினையை தீர்மானிக்கிறது. ஹிட்லரின் அகக்குரல் உருவாக்கிய இயக்கத்தில் இறுதி முடிவு தனிமனித சுதந்திரத்தால் அல்ல, கீழ்படிதல் மூலமாக மட்டுமே.

காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதங்களும், ஹிட்லர் காந்தி குறித்து பிரிட்டிஷாருக்கு அளித்த அறிவுரையும் இவ்வேறுபாடுகளை வெளிப்படுத்தும். இந்தியாவில் வைஸிராயாக இருந்த இர்வின் ஹிட்லரை சந்தித்தபோது ஹிட்லர் கூறினார், “இந்தியாவில் நீங்கள் ஏன் இத்தனை கஷ்டப்படுகிறீர்கள்? காந்தியைச் சுட்டுக் கொல்லுங்கள்… கலகம் அடங்கவில்லையா, இன்னும் கொஞ்சம் காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக் கொல்லுங்கள். எத்தனை சீக்கிரமாக இது ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்யும் மக்களை அடக்கும் என்பது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.”

காந்தியின் முதல் கடிதம் 23-ஜூலை-1939ல் எழுதப்பட்டது. காந்திக்கே உரிய விதத்தில், தன்னைச் சுட்டுக்கொல்ல அறிவுரை கொடுத்த ஹிட்லரை, தன் நண்பன் என்றே அழைக்கிறார். ‘இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதலாமா தெரியவில்லை. தவறென்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.’ மேலும் எழுதுகிறார்: “இன்றைய சூழலில் உலகின் மிக மோசமான போரை தவிர்க்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நபர் நீங்கள்தான்.” பிறகு அகிம்சையே சிறந்த ஆயுதம் எனச் சொல்லி அதனைப் பயன்படுத்த கோருகிறார் காந்தி. எதற்கான ஆயுதம்? ‘நீங்கள் விரும்பும் இலக்கை – அது எத்தனை மதிப்பு வாய்ந்ததாக உங்கள் பார்வையில் இருந்தாலும் – அந்த இலக்கை அடைய அகிம்சையே சிறந்த ஆயுதம்’. ஹிட்லரின் இந்த ‘மதிப்பு வாய்ந்த இலக்கு’ போலந்து என்பதை 1939ன் சூழல் காட்டும். போலந்தின் ஜெர்மானிய இன சிறுபான்மையினர் அன்றைய போலந்தில் கொடுமைகளை அனுபவித்தனர். யூதர்களுடன் ஒப்பிடுகையில் அது பெரிய ஒரு கொடுமை இல்லை என்றாலும், போலந்தின் ஜெர்மானிய சிறுபான்மையினருக்கு ஆதரவாக ஜெர்மனி குரல் எழுப்பி வந்தது. அதை தன் ஆக்கிரமிப்புக்கான துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்தி வந்தது. இந்நிலையில்தான் போலந்தின் ஜெர்மானிய சிறுபான்மையினருக்காக அகிம்சையைப் பயன்படுத்தும்படி ஹிட்லருக்கு ஆலோசனை அளிக்கிறார் காந்தி.

ஆனால் காந்தி கடிதத்தை எழுதிய நேரம் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரின் முழுமையான சுழலுக்குள் தேசங்கள் இழுக்கப்படவில்லை. ஹிட்லர் அகிம்சைப் போராட்டம் ஒன்றின் மூலம் போலந்து ஜெர்மானிய சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது சுவாரசியமான மாற்று வரலாறு! Parallel Universes வைத்து அறிவியல் புனைகதை எழுதுவோர் கற்பனை செய்யலாம்! எதுவானாலும் பிரிட்டிஷ் அரசாங்கம் இக்கடிதத்தைப் போக அனுமதிக்கவில்லை.

காந்தியின் இரண்டாவது கடிதம் 1940ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் முன்னிரவில் எழுதப்பட்டது. இதிலும் காந்தி ஹிட்லரை ‘என் நண்பரே’ என விளித்து ‘தங்கள் உண்மையுள்ள நண்பன்’ என்றே முடிக்கிறார். ‘நான் உங்களை நண்பனாக விளிப்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் இல்லை. …எனக்கு எதிரிகள் இல்லை. என் 33 ஆண்டு காலப் பொதுவாழ்வில் நான் எப்போதும் அனைத்து மக்களிடமும், நிறம், மதம், தேசம் ஆகிய பிளவுக்களுக்கெல்லாம் அப்பால், நட்புடன் இருக்கவே முயன்று வருகிறேன்…’ அடுத்ததாக ஹிட்லரின் தேசப்பற்றையும் வீரத்தையும் பாராட்டுகிறார். அதில் அவருக்கு ஐயமில்லை. அதே போல ஹிட்லருக்கு எதிராக அவரது எதிரிகள் உருவாக்கும் ராட்சச சித்திரம் பொய்யானதாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் ‘உங்கள் எழுத்துகளையும் செய்கைகளையும் பார்க்கும்போது உங்கள் செயல்பாடுகளில் பல அரக்கத்தனமாகவும் மானுட நன்மைக்கு எதிராகவும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.’ காந்தி நேராக வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அடுத்ததாக ‘நாசியிசத்தையும்’ ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும்’ ஒரு சேர எதிர்ப்பதாக காந்தி கூறுகிறார். இறுதியாக கூறுகிறார், “பிரிட்டிஷ் இல்லையென்றால் உங்கள் செயல்முறைகளில் உங்களைவிட வலிமையான இன்னொரு எதிரி உங்களை தோற்கடிப்பார். நீங்கள் உங்கள் தேச மக்கள் பெருமைப்படும்படியான ஒரு பாரம்பரியத்தை அவர்களுக்கு அளிக்கப் போவதில்லை.”

வரலாறு காந்திய சொன்ன வார்த்தைகளின் உண்மையை பறைச்சாற்றும். காந்தியின் அகக்குரல் ஹிட்லரின் அகக்குரலைக் காட்டிலும், சர்வதேச நிலையையும் அதன் விளைவுகளையும் நன்றாகவே புரிந்து வைத்திருந்தது.  இந்தியாவைப் பொருத்தவரை இந்திய தேசியவாதிகளின் பொதுப்புத்தி ஹிட்லரை தம் ஆதரவாளராகவே கண்டது. ஸ்ரீ அரவிந்தர் போன்றவர்கள் ஹிட்லரைத் தீய சக்தி என்று வர்ணித்தனர். நாசிகளுக்கு எதிராக இந்தியர்கள் பிரிட்டிஷை ஆதரித்தால்கூடத் தவறில்லை என்பது அரவிந்தரின் நிலைபாடு. ஆனால் சுபாஷ் போஸின் நாசி ஆதரவு கோரல் மக்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. ஆனால் காந்தியே மகாத்மா. விடுதலைப் போராட்டத்தின் இறை அவதாரம். உலக நிகழ்வுகள் அனைத்தும் அந்த அவதாரத்தின் போக்குக்கு இணைந்தே செயல்படுகின்றன. இந்த இந்தியப் பொதுப்புத்தியில் ஹிட்லரும் காந்தியின் ஒரு கருவி.

எனவேதான் காந்தி தோளில் ஹிட்லர்.

-அரவிந்தன் நீலகண்டன்