சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நாவல், கட்டுரை, சிறுகதை என்று பல்வேறு வடிவங்களில் சுஜாதா எழுதி இருந்தாலும், அவரது மிக சிறந்த எழுத்துகள் வெளிப்படுவது சிறுகதையில்தான் என பலரும் கருதுவதுண்டு. சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ஸ்ரீரங்கத்து தேவதைகள். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்கமுடியும். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நம் இளமை காலத்தை தரிசிக்கமுடியும்.

ொத்தம் 14 சிறுகதைகள். அதற்குள் தான் எத்தனை மனிதர்கள் உயிரோடு வலம் வருகிறார்கள் !

நம் சிறுவயதில ஊரில் தொடர்ந்து பார்த்த ஏதாவது ஒரு பைத்தியத்தை இன்று வரை நம் நினைவு இடுக்குகளில் விடாது வைத்திருக்கிறோம் தானே? அப்படி ஒரு பைத்தியத்தின் கதை தான் கடவுளுக்கு ஒரு கடிதம். கோவிந்து என்கிற மனிதர் தினம் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். மன நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் செய்யலாம் என பேச, (” சாந்தி முகூர்த்தம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்”) நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. கதையின் இறுதியில் கோவிந்துவின் தம்பியும் அதே மாதிரி ஆகி போனதாகவும், அவர் அம்மா இருவருக்காகவும் வேண்டி கொண்டு தினம் கோவிலில் விளக்கு போடுவதாகவும் முடிக்கிற போது மனம் கனத்து போகிறது.

இன்னொரு பைத்தியத்தின் கதை குண்டு ரமணி. இது தன் குழந்தையை மரணத்திடம் கொடுத்த ஒரு பெண், புத்தி பேதலித்து திரிவதை சொல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வந்து அமர்ந்து கொண்டு சாப்பாடு கொடுக்க சொல்லி வற்புறுத்துவதும், அப்படி தராவிடில் அந்த வீட்டு வாசிலிலேயே படுத்து தூங்குவதும்… இது மாதிரி பைத்தியங்களை நிச்சயம் நாம் பார்த்திருப்போம் !

சிறு வயதின் இன்னோர் வித்தியாச அனுபவம் சொல்லும் கதை “பாம்பு”. சுஜாதா வீட்டில் பாம்பு வந்து விட, அவர் தங்கையை சைட் அடிக்கும் சுஜாதாவின் நண்பர் ஹீரோ மாதிரி பாம்பு பிடிக்க பார்க்கிறார். கடைசியில் பாம்பை பிடிப்பது அவர் தங்கை தான். “அது என்ன பாவம் பண்ணுச்சு விட்டுடலாம்” என அவள் சொன்னாலும் அந்த பாம்பு அடித்து கொல்லப்படுகிறது. “என் தங்கையை நான் நன்கு உணர அது ஒரு சந்தர்ப்பம்” என்கிறார் சுஜாதா.

நம் சிறு வயதில் ஏதாவது ஒரு நண்பன் நம்மை டாமினேட் செய்து கொண்டிருந்திருப்பான். பெஞ்சில் உட்காருவது முதல், விளையாட்டு வரை இப்படி சுஜாதாவை மிக டாமினேட் செய்த ஒருவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாய் சொல்லி விட்டு.. இன்று அவன் “வேலை கேட்டு என் அறையின் வாசலில் அமர்ந்திருக்கிறான். வேலை கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள் என முடிக்கிறார் சுஜாதா!

சுஜாதா பாட்டி வீட்டில் வளர்ந்ததால், கதைகளில் பாட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. தனிமையில் சுஜாதாவை திட்டுபவராக, மற்றவர் முன் எப்போதும் விட்டுத் தராதவராக இருக்கிறார் பாட்டி. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாக உள்ளது.

போகப்போக ரங்கு கடை, ஸ்ரீரங்கத்து தெருக்கள் எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட இடமாகி விடுகிறது. கே. வி, ரங்குடு, அம்பி ஆகிய பாத்திரங்கள் (நண்பர்கள்) பல கதைகளில் வருகிறார்கள். அனைத்து சிறுவயது விளையாட்டுகளிலும் சுஜாதா ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறார். (எல்லா எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தானோ?)

உள்ளூர் கிரிக்கெட் மேட்ச்கள் எப்போதும் சுவாரஸ்யம் தான். சுஜாதா தஞ்சை டீமுடன் ஆடி ஜெயித்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாய் சொல்கிறார். தங்களுக்கு சாதகமான அம்பயர் வைத்து கொள்வதும், அவர் எல்.பி .டபிள்யூ வுக்கு அவுட் கொடுக்காததும் எல்லாருக்கும் நடந்திருக்கும் ! இந்த மேட்ச் முடிந்து அதன் செய்தி சில வரிகளில் பத்திரிகையில் வந்த போது கிடைத்த சந்தோஷம் அதன் பின் எத்தனையோ முறை பத்திரிக்கையில் தன் பெயர் வந்த போதும் கிடைத்ததில்லை என்கிறார் சுஜாதா!

கிராமத்து டிராமாவில் சுஜாதா (சாமரம் வீசும் ) பெண் வேடம் போட்டதை ஏறக்குறைய கண்ணீருடன் நம்மிடம் சொன்னாலும், நமக்கு சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது. நாடகம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு கறவை மாடு பரிசு என்று சொல்லி விட்டு, நாடக அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒரு மாதிரி நெர்வசாக சுற்றி வந்து சாணி போட்டு கொண்டிருந்தது என்பது டிப்பிக்கல் சுஜாதா !

ஒவ்வொரு கதையும் வாசித்து விட்டு சற்று இடை வெளி விட்டு தான் அடுத்த கதை வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த மிக சிறந்த சிறுகதை தொகுப்புகளுள் ஒன்றான இந்த புத்தகத்தை வாசிக்கத் தவறாதீர்கள் !

0

மோகன் குமார்

 

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டமாகச் சொல்லப்படுகிறது. குதிரைகளில் ஏறி வந்த ஆரியர்கள் பூர்வகுடிகளான திராவிடர்களைக் கொன்று அவர்களுடைய நகரங்களை நிர்மூலமாக்கினர். வேத கலாசாரத்தை இந்தியாவில் புகுத்தினர். வேதகால நாகரிகம் எனப்படும் அந்த கங்கைச் சமவெளி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் பொதுவாக நம் பள்ளிப் புத்தகங்களில் இன்றும் சொல்லித் தரப்படும் வரலாறு.

இதுதான் மத நம்பிக்கையைவிட படு மூர்க்கமாகப் பரப்பப்பட்டு வந்திருக்கும் கோட்பாடு. சமீபகாலமாகக் கிடைத்துவரும் ஆதாரங்களின் அடிப்படையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஆரியர் என்பவர் அந்நியர் என்பதே இன்றும், குறிப்பாகத் தமிழகத்தில், பதிந்துகிடக்கிறது.  The Lost River  என்ற நூலில் ஆசிரியர் மிஷல் தனினோ இந்தக் கோட்பாட்டின் அஸ்திவாரத்தை நிதானமாகத் தகர்த்திருக்கிறார்.

ஆரியர் படையெடுப்பு என்ற கற்பிதக் கோட்பாட்டை முன்வைப்பவர்கள் சரஸ்வதி நதி இந்தியாவில் பாய்ந்த நதியே அல்ல என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் அப்படி ஒரு நதி இருந்திருக்கவே இல்லை. அது வேத கால ரிஷிகளின் கற்பனையில் உதித்த நதி மட்டுமே என்று சொல்கிறார்கள். ஏனென்றால், சிந்து சமவெளி நாகரிக குடியிருப்புகளில் பெரும்பாலானவை சரஸ்வதி நதிக்கரையில்தான் அமைந்திருக்கின்றன. ஒருவகையில் அந்த கலாசாரம் சிந்து -சரஸ்வதி கலாசாரம் என்றுதான் அழைக்கப்பட்டவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சரஸ்வதி நதியால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நதி வறண்டதைத் தொடர்ந்து அந்த மக்கள் கிழக்கு நோக்கி அதாவது கங்கைச் சமவெளி நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டால், ஆரியர்களால் அழிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் என்ற கோட்பாடு வலுவிழந்துவிடும் என்பதால், சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்திருக்கவே இல்லை என்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் மிஷல் தனினோ முதலில் சரஸ்வதி நதியின் முழு வரலாற்றை தனது நூலில் விரிவாகத் தொகுத்திருக்கிறார். சரஸ்வதி நதி தோன்றிய இடம், பாய்ந்து சென்ற வழித்தடங்கள், அது வறண்டவிதம், அதற்கான காரணங்கள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தையும் பழங்கால சமஸ்கிருத இலங்கியங்களில் ஆரம்பித்து சமகால விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் வரை கிடைத்திருக்கும் அனைத்து ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார். அடுத்ததாக, அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங் உட்பட பல்வேறு துறை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரமாண்டமான, முழுமையான சித்திரத்தை நம் முன் வைக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரமயமாக்க காலகட்டம் பொ.யு.மு. 1900 வாக்கில் மறைந்தது என்பது இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. சரஸ்வதியின் பிரதான நீரோட்டம் வறண்டு போனதும் அதே காலகட்டத்தில் என்பதை தட்ப வெப்பவியலில் ஆரம்பித்து ஆரம்பித்து கிணற்று நீரில் ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் ஐசோடோப்பு சோதனை வரையான ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார். மிக நேர்மையாக, கடந்த காலம் பற்றிய ஓர் அவதூறுக்கான விடையை நாமாகவே புரிந்துகொள்ளவைக்கிறார்.

*

ரிக்வேதத்தில் மிகவும் உயர்வாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியானது இன்றைய கக்கர்-ஹக்ரா நதிதான் என்பதை லூயி தெ செயிண்ட் மார்த்தான், சி.எஃப்.ஒல்தாம் என்ற சர்ஜன் மேஜர், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (இந்திய அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்), லூயி ரெனேயு என பலரும் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நதி இமய மலையில் ஷிவாலிக் தொடரில் கட்ச் ராண் பகுதியில் சென்று கலக்கிறது (ரிக் வேதத்தில் சரஸ்வதி நதி மலையில் ஆரம்பித்துக் கடலில் கலப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது). லூயி ரெனே சரஸ்வதி மறைந்ததாகச் சொல்லப்படும் விநாசனம் என்ற இடத்தையும் அடையாளப்படுத்தியிருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு ஒரு நதி ஓடியதாகவும் அது வறண்டதால் அந்தப் பகுதியில் மக்கள் தொகை குறைந்தது என்றும் சொல்லும் செவி வழிக் கதைகளையும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

20-ம் நூற்றாண்டில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் சரஸ்வதி நதியின் படுகை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இன்று முழுவதும் வறண்டு கிடக்கும் அந்தப் பாலை நிலத்தில் நதி ஓடிய தடத்தில் மட்டும் ஈரப்பதம் மிகுதியாக இருப்பது புகைப்படங்களில் தெரியவந்தது. அந்த வழித்தடத்தில் கிணறுகள் தோண்டப்பட்டபோது மிகவும் நல்ல தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் பிற பகுதிகளில் 100-200 அடி தோண்டியும் நீர் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் கக்கர் ஹக்ரா நதி ஓடிய படுகையில் 20-30 மீட்டர் ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. இவையெல்லாம் முன்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான நதி இங்கு பாய்ந்திருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன. சட்லெஜ் நதியை கக்கர் நதியுடன் இணைத்த ஏராளமான குறு நதிகளின் வலைப்பின்னலும் அந்த புகைப்படத்தில் தெரியவந்தது.

இதற்கு அடுத்ததாக மிஷல் தனினோ சரஸ்வதி நதியின் மறைவுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஹரப்பா-மொஹஞ்ஜோதாரோ பகுதியில் ஏற்பட்ட வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். பொ.யு.மு. இரண்டாம் ஆயிரமாண்டு வாக்கில் உலகில் எகிப்து, துருக்கி, மெசபடோமியா (அக்காடிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவைக் கொண்டுவந்தது), ஆஃப்ரிக்காவில் பல இடங்கள், சீனா, வட அமெரிக்கா போன்ற பல இடங்களும் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த வறட்சிதான் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்குக்காரணம் என்று சொல்வது ‘எளியதொரு’ பதிலாக இருக்கலாம். ஆனால், அதை முழுவதாகப் புறக்கணிப்பது தவறாகவே இருக்கும் என்கிறார்.

அடுத்ததாக, வட மேற்கு இந்தியாவில் நடக்கும் பூகம்பங்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுவிட்டு சரஸ்வதி நதி வறண்டதற்கு பூகம்பத்தின் பின் விளைவுகள் காரணமாக இருக்கலாம் என்றொரு காரணத்தை முன்வைக்கிறார். சிந்து சமவெளி முழுவதும் கிட்டத்தட்ட சமதளமானது. சிறிய அளவுக்கு மேடு அல்லது பள்ளம் ஏற்பட்டாலும் நதியின் திசையானது முற்றிலும் மாறிவிடும். ஆரம்பத்தில் கக்கர் ஹக்ரா நதிக்கு அதாவது சரஸ்வதி நதிக்கு சட்லெஜ் மற்றும் யமுனை நதியில் இருந்து நீர் கிடைத்துவந்திருக்கிறது. பூகம்பத்தினால் யமுனையில் இருந்து வந்த நீர் திசை மாற்றப்பட்டுவிட்டது. இதனால் கக்கர்-ஹக்ரா நதியின் நீர் வரத்து குறைந்துவிட்டது.

அடுத்ததாக, சிந்து சமவெளி மக்களில் நகரங்கள், கோட்டைகள், தெருக்கள், இன்னபிற கட்டுமானங்களைப் பார்க்கும்போது அவர்கள் சுட்ட செங்கல்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கான சூளைகளுக்குத் தேவைப்பட்டிருக்கும் மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுபார்க்கும்போது அந்தப் பகுதியின் மழை குறைவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்.
இப்படியான காரணங்களினால் கக்கர் ஹக்ரா நதி மெள்ள வறண்டு போய்விட்டிருக்கலாம் என்று ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, சிந்து சமவெளி நாகரிகம் அடியோடு மறைந்துபோய்விட்டது என்பதுதான் ஆரிய ஆக்கிரமிப்பு கோட்பாட்டாளர்களின் முக்கியமான வாதம். கங்கைச் சமவெளியில் முதல் ஆயிரமாண்டில் ஆரம்பித்த நாகரிகத்தில் அதன் தடயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே கங்கைச் சமவெளி நாகரிகம் என்பதை நிரூபித்திருக்கிறார். அதாவது சரஸ்வதியின் மறு அவதாரம் கங்கை. சிந்து சமவெளி நாகரிகத்தின் மறு அவதாரம் கங்கைச் சமவெளி வேத நாகரிகம்.

சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் மண் பாண்டங்களில் காளை உருவம் பிரதானமாக பொறிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் அக்னி தேவனில் ஆரம்பித்து சூரியன் வரை அனைத்து கடவுள்களும் காளையுடனே ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஆரியர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புக்குரிய விலங்காக காளையே இருந்திருப்பது தெரியவருகிறது, குதிரை அல்ல.

அதுபோல் கட்டடங்களின் கட்டுமானத்திலும் இரண்டுக்கும் இடையில் மிகப் பெரிய ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டு கலாசாரங்களிலும் 5:4 என்ற விகிதம் பிரதானமாக இருக்கிறது. 1.9 மீட்டர் என்ற அலகின் மடங்கிலான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ‘குந்துமணி’ என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதே மதிப்புகள் ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாகப் பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (Metrologist) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மக்கள் தினமும் உபயோகிக்கும் பொருட்களும் பெரிதும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்திருப்பதாக பி.பி.லால் சுட்டிக்காட்டியுள்ளார். குளியல் பொருட்கள், எண்ணெய் விளக்கு, கமண்டலம், மர விளிம்புகொண்ட சிலேட்டுகள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விளையாட்டுப் பொருட்களிலும் ஹரப்பா குழந்தைகள் உபயோகித்த கிலுகிலுப்பை, ஊதல், பம்பரம், தட்டையான மண் தட்டுகள் ஆகியவற்றை வைத்துத்தான் இன்றைய (அல்லது மிக சமீப காலம் வரையிலும்) வட இந்திய குழந்தைகளும் விளையாடுகின்றனர். ஹரப்பாவாசிகளால் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க செய்து தரப்பட்ட பொம்மை வண்டிகள் கங்கை சமவெளிப்பிரதேசத்தில் பல இடங்களில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதிலும் பெண்கள் அணியும் வளையல்கள், நடு வகிட்டில் இட்டுக் கொள்ளும் குங்குமம் என பல விஷயங்களுக்கான வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகின்றன. ஸ்வஸ்திக் சின்னம், முடிவில்லா முடிச்சு (ஸ்ரீகிருஷ்ணரின் பாதம் போன்ற வடிவம்), ஆதி சிவனை (பசுபதி) நினைவுபடுத்துவது போன்ற உருவம், யோக நிலையில் இருக்கும் உருவம் என சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படும் பல விஷயங்கள் வேத கலாசாரத்திலும் தொடர்ந்து காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்வதானால், சிந்து நதி நாகரிகத்துக்கும் பிந்தைய சரித்திரக் கால நாகரிகங்களுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன; மண்பாண்டத் தயாரிப்பு முறைகள் பெரிய அளவுக்கு மாறவில்லை. நகைகள், வேறு விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகின்றன… (ஆகவே) சரித்திரத்துக்கு முந்தைய காலத்தையும் சரித்திரக் காலத்தையும் பிரிக்கும் ‘இருண்ட காலம்’ என்று ஒன்று உண்மையில் இல்லை என்று அகழ்வாராய்ச்சியாளரும் மானுடவியலாளருமான ஜே.எம். கெனோயர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மிஷல் தனினோ முன்வைத்திருக்கும் ஆய்வுமுடிவுகளை இப்படித் தொகுக்கலாம்: இன்று வறண்டு கிடக்கும் கக்கர்-ஹக்ராதான் வேத கால சரஸ்வதி நதி; அந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் 60%க்கு மேற்பட்ட இடங்கள் இருந்திருக்கின்றன; பொ.யு.மு. 1900 வாக்கில் சரஸ்வதி நதி வறண்டுவிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிந்து சமவெளி நகரமயமாக்க காலகட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. பிற்கால ஹரப்பாவினர் கிராமப் பகுதிகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். மெள்ள தங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு கங்கைச் சமவெளியில் புதியதொரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். கலாசாரத்தில் ஆரம்பித்து லவுகீக அம்சங்கள் வரை அனைத்திலும் இரு சமவெளி நாகரிகங்களுக்கும் இடையில் தெளிவான ஒற்றுமைகள் இருக்கின்றன. தங்களை வாழ வைத்த சரஸ்வதியின் நினைவைப் போற்றும் வகையில் அதை கங்கை, யமுனை, நதிகளோடு சூட்சும வடிவில் கலந்ததாகச் சொல்லி திரிவேணி சங்கமம் என்ற ஒன்றை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். சரஸ்வதி நதியின் அனைத்து பெருமைகளையும் கங்கைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார்கள்.

மிஷல் தனினோ மேலே சொல்லப்பட்டிருக்கும் தீர்மானங்களை மிக விரிவாகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். சிந்து சமவெளி மக்கள் தொடர்பாக அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வேத கால கங்கைச் சமவெளி நாகரிகம் பற்றிய எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்றின் உடல் கிடைத்திருக்கிறது. இன்னொன்றின் தலை கிடைத்திருக்கிறது. அது ஒரே நபரின் உருவமே என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் எளிய பகுத்தறிவு மட்டும்தான். நீங்கள் பகுத்தறிவு உள்ளவரா… அல்லாதவரா..? மிஷல் தனினோ மிக எளிதாக ஒரு கேள்வியை அமைதியாக முன்வைத்திருக்கிறார்.

 

மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா நோக்கி வந்ததாகச் சொல்லப்படும் அந்த ஆரியர்கள் அகழ்வாராய்ச்சியின் எந்தவொரு வரையறைக்கும் சிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். ஆரியர்கள் இந்த வழியாக வந்தனர்; இது ஆரியர்கள் உபயோகித்த வாள் அல்லது கோப்பை என்று சொல்லுமளவுக்கு எந்தவொரு மண்பாண்டமோ வேறு பொருளோ இதுவரை கிடைக்கவில்லை. – Jean Casal

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுவது பொ.யு.மு. 1500-1000 காலகட்டத்தில்தான். சிந்து சமவெளி நாகரிகம் சிதைவுற்றதோ பொ.யு.மு. 1900 வாக்கில். அதாவது ஆரியர்கள் வருவதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒரு நிகழ்வுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது!

ஆரியப் படையெடுப்பு எனும் கொலை வெறி கொண்ட காளை வரலாற்றின் குறுக்குச் சட்டத்துக்கு அப்பால் உறுமியபடி அலை பாய்ந்துகொண்டிருக்கிறது. பிரிவினையின் போதை ஏற்றப்பட்ட அதன் கோரமான விழிகள் பேரழிவின் கிலியை நமக்குள் விதைக்கின்றன. குறுகிய அரசியலின் வாடி வாசல் மெள்ளத் திறக்கப்படும்போது,அந்த வெறுப்பின் காளை மூர்க்கத்தனமாகப் பாய்ந்து வருகிறது. உண்மையின் நிலத்தில் காலூன்றியபடி நேருக்கு நேராக நின்று ஒருவர், அதன் ஒற்றைச் சார்பு தகவல்களின் கொம்புகளைப் பிடித்து மடக்கி, ஆதாரபூர்வமான தரவுகளின் காலால் போலி வாதங்களின் கழுத்தில் ஓங்கி மிதித்து அடக்குகிறார். கழுத்து மடங்கிய காளை தோல்வியின் நுரை தள்ளியபடி கண்கள் மலங்கக் கீழே விழுகிறது.

போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. வெற்றி ஊர்ஜிதமாகிவிட்டது. தோல்வியை நேர்மையாக ஒப்புக் கொள்வதும் அடங்கா காளையை வளர்த்தவனுக்கு அழகுதான்.

0

B.R. மகாதேவன்

(மிஷல் தனினோ ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக வந்திருந்த Saraswati: The Lost River என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. மொழிபெயர்த்திருப்பவர், வை. கிருஷ்ணமூர்த்தி).

மார்க்சியம் இலக்கியத்துக்கு எதிரானதா?

மார்க்சியத்தைப் போல் தவறாகப் புரிந்துகொள்ளப்படும், மூர்க்கமாக எதிர்க்கப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் இன்னொரு சித்தாந்தம் கிடையாது. கற்பனைக்கும் எட்டாத பல குற்றச்சாட்டுகள் இன்றுவரை மார்க்சியர்கள் மீது முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, கலை மற்றும் இலக்கிய ரசனை தொடர்பானது.

‘வரட்டுச் சித்தாந்தங்களை முன்வைப்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் ரசிக்கும்படி படைக்கமுடியாது. காரணம் மார்க்சியம் கலை, இலக்கிய ரசனைக்கு எதிரானது. ‘சிவப்பு மை’ கொண்டு இதுகாறும் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் அனைத்தும் ‘அரசியல் பிரசாரங்கள்’ அன்றி வேறில்லை. சோவியத் யூனியனாக இருந்தாலும் சரி, செஞ்சீனமாக இருந்தாலும் சரி. இங்கிருந்து உயர் ரக இலக்கியங்கள் தோன்றியதில்லை.’

இது உண்மையா என்பதை லெனினின் வார்த்தைகளில் இருந்தே அணுகுவது சரியாக இருக்கும். மார்க்சியவாதியும் பெண்ணியவாதியுமான கிளாரா ஸெத்கின் லெனின் பற்றிய நினைவுகளை கட்டுரைகளாக எழுதியுள்ளார். இலக்கியம் குறித்தும் இலக்கிய வடிவங்கள் குறித்தும் பெண்ணியம் குறித்தும் கிளாரா லெனினுடன் மேற்கொண்ட உரையாடல்கள் இந்தக் கட்டுரைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தகைய மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘என் நினைவுகளில் லெனின்’ என்னும் தலைப்பில் விடியல் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து நம் தேடலைத் தொடங்குவோம்.

பல்வேறு வகையான படைப்புகள் இலக்கியச் சூழலில் வெளிவருகின்றன. சில பாரம்பரிய கலாசார வாசத்துடன் அமைந்திருக்கும். இன்னும் சில மேலைநாட்டு வடிவங்களின் தாக்கத்தில் அமைந்திருக்கும். இவற்றை எப்படி மதிப்பீடு செய்வது? ‘மெய்யாகவே எழில் படைத்த ஒன்றை பழையது என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கிவிடுவதும்… புதியது என்ற ஒரே காரணத்துக்காகப் புதியதை மறுபேச்சின்றிக் கைகட்டித் தொழ வேண்டிய தெய்வமாக வைத்துக் கும்பிடுவதும்’ அபத்தத்திலும் அபத்தம் என்கிறார் லெனின்.

மேலைநாடுகளில் பிரபலாமாகிவரும் இசங்களை அணுகுவதில் தனக்குள்ள தயக்கங்களையும் அச்சங்களையும் லெனின் பதிவு செய்கிறார். ‘ என்னைப் பொறுத்தவரை இத்துறையில் நான் ஒரு ‘காட்டுமிராண்டியே’ என்பதாகத் துணிவுடன் அறிவிக்க விரும்புகிறேன். Expressionism, futurism, cubism  இத்யாதி வாதங்களின் கலைப்படைப்புகளை என்னால் கலைமேதாவிலாசத்தின் தலையாய வெளியீடுகளாகக் கருத முடியவில்லை. என்னால் இவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு இவை இனிமை பயப்பதாயில்லை.’ தன்னுடைய புரிதலின் அடிப்படையில் கீழ்வரும் முடிவுக்கு அவர் வந்து சேர்கிறார். ‘இதில் பெரும் பகுதி வெறும் கபடக் கூத்தும், கலைத் துறையில் மேலைய நாடுகளில் ஆட்சி செலுத்தும் பாணிகளைத் தம்மையும் அறியாமல் வழிபடும் போக்குமேயன்றி வேறில்லை.’

மேலைநாட்டு கலை வாதங்களோடு மக்களின் கலை வடிவத்தை ஒப்பிட்டு எது அத்தியாவசியமானது என்று விவாதிக்கிறார் லெனின். ‘பெருந்திரளான தொழிலாளி, விவசாயி மக்களுக்குச் சாதாரண கறுப்பு ரொட்டியே அவசரத் தேவையாயிருக்கும் ஒரு நேரத்தில் சொற்பச் சிறுபான்மையோருக்கு நாம் அருஞ்சுவை விருந்துணவு தயாரித்தளித்துக் கொண்டிருப்பதா?’

லெனின் தொடர்கிறார். ‘இதனை அதன் நேர்பொருளில் மட்டுமின்றி அதன் உருவகப் பொருளிலும் உணர்ந்து செயல்பட வேண்டுமென்பது தெளிவு. ஏனெனில், எந்நேரமும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நாம் நம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். நாம் நிர்வகிக்கவும் கணக்கிடவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இவர்களை முன்னிட்டுதான். இது கலை பண்பாட்டுத் துறைக்கும் பொருந்துவதாகும்.’

இலக்கியத் தரத்தை உயர்த்துவதைக் காட்டிலும் முக்கியமான வேறொரு காரியம் இருக்கிறது என்றார் லெனின். ‘கலை மேலும் மேலும் மக்களையும், மக்கள் மேலும் மேலும் கலையையும் நெருங்கிவர வேண்டுமாயின், முதலில் நாம் பொதுவான கல்வி, பண்பாட்டு தரங்களை உயர்த்தியாக வேண்டும்.’

ஏன் என்பதை லெனின் விவரிக்கிறார். ‘நாங்கள் வறுமைப் பிணியால் பீடிக்கப்பட்ட மக்களாகவே, முற்றிலும் ஓட்டாண்டியாகவே இருக்கிறோம். எழுத்தறியாமையை எதிர்த்து மெய்யான, விடாப்பிடியான போõட்டம் நடத்துகிறோம் என்பது உண்மைதான். பெரியவை, சிறியவை என்னும் பேதமின்றி எல்லா ஊர்களிலும் எல்லாக் கிராமங்களிலும் நூலகங்களும் படிப்பறைகளும் நிறுவுகிறோம். எல்லா வகையான பயிற்சித் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்கிறோம்… ஆனால், சர்வசாதாரண அறிவும் மிகவும் ஆரம்ப நிலைக் கலாசாரமுமின்றி இருளில் வதையும் கோடானு கோடியான எம்மக்களுக்கு இவையெல்லாம் எம்மட்டில்?’

‘லட்சோப லட்சக்கணக்கான குழந்தைகள் தக்கபடி வளர்க்கப்படாமலே, கல்வி இல்லாமலே ஆளாகி வருகின்றனர். இவர்கள் தமது தந்தையரும் பாட்டான்மார்களும் எப்படி இருந்தனரோ அதே போல அறியாமை இருளில் மூழ்கியவர்களாகவே, கலாசார வளர்ச்சி இல்லாதோராகவே இருந்து வருகின்றனர். இதன் விளைவாய் எவ்வளவு ஆற்றல் மலராமலே அழிந்துவிடுகிறது, அறிவொளி பெற வேண்டுமென்ற ஆவல் காலுக்கடியில் மிதிபட்டு நசுக்கப்படுகிறது! பேரபாயம் விளைவிக்கும் நிலைமை இது!’

உயர்ந்த கலை வடிவங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும் திறன் கொண்டவை என்னும் வாதத்தை லெனின் எதிர்கொள்கிறார். ‘நமது தொழிலாளர்களும் விவசாயிகளும் தமது உழைப்பைக் கொண்டு அரசைப் பராமரித்து வருகிறார்கள். அவர்கள் புரட்சியை உண்டாக்கி, பெருக்கெடுத்து ஓடும்படி தமது இரத்தத்தைச் சிந்தி அளப்பருந்தியாகங்கள் புரிந்து புரட்சியின் இலட்சியத்தைப் பாதுகாத்தனர். நிச்சயம் நமது தொழிலாளர்களும் விவசாயிகளும் கேளிக்கைகளைக் காட்டிலும் சிறப்பானவற்றைப் பெறத் தகுதியுடையவர்கள். எனவேதான் பொதுக்கல்வியையும் போதனையையும் மிகப் பெரும் அளவில் அளித்திடுவதை நாம் தலையாய பணியாகக் கொண்டு பாடுபடுகிறோம்.’

உழைக்கும் மக்களின் கலை வடிவத்தையும் மேட்டுக்குடி மக்களின் கலை வடிவத்தையும் எதிரெதிரே நிறுத்தி ஒன்றோடொன்று மோதவிடுகிறார் லெனின். இரண்டின் அடிப்படைகளையும் அவர் ஆராய்கிறார். இரண்டும் எங்கிருந்து உதிக்கின்றன, யாரைச் சென்றடைகின்றன, யாரால் ரசிக்கப்படுகின்றன என்பதை அவர் கவனத்துடன் பார்க்கிறார். நல்ல கலை வடிவம் மக்களால், மக்களுக்காக உருவாக்கப்படுகிறது என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்கிறார். அதே சமயம், இலக்கியத்தைக் காட்டிலும் முக்கியமான பல பிரச்னைகள் நம் உடனடி கவனத்தை ஈர்க்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘தானியப் பிரச்னை தீர்க்கப்படுமாயின், இது கலாசாரத்துக்கான அடித்தளத்தின்மீது மெய்யாகவே புதியதான மாபெரும் கம்யூனிசக் கலை உதித்தெழும். இக்கலை அதன் உள்ளடக்கத்துக்கு ஏற்றதொரு வடிவத்தைத் தோற்றுவிக்கும்.’

எனில், கலையெனப்படுவது எது? ‘கலையானது மக்களுக்கு உரியதாகும். உழைப்பாளி மக்கள் திரளிடையே அதன் வேர்கள் ஆழப் பதிந்திருக்கவேண்டும். அது அவர்களுக்குப் புரியக்கூடியதாக இருக்கவேண்டும். அவர்களது நேசத்துக்கு உரியதாக இருக்கவேண்டும். அது அவர்களுடைய உணர்வுகளையும் சிந்தனைகளையும் சித்தத்தையும் ஒன்றிணைத்திட வேண்டும்; உயர்த்திட வேண்டும். அவர்களிடத்தே அது கலை உணர்ச்சியைத் தட்டியெழுப்பிச் செயல்படவைத்து வளர்த்திட வேண்டும்.’

லெனினின் மேற்கூறிய விவாதங்களைத் தொகுத்து பார்க்கும் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்து சேரும் வாய்ப்பும் இருக்கிறது. அதாவது, லெனின் காலத்தில் சோவியத் யூனியனில் கலை, இலக்கியம் ஆகியவை வளரவில்லை. மேட்டுக்குடி மக்களின் பொழுதுபோக்குகள் தடை செய்யப்பட்டன. அவை வளரவிடப்படவில்லை. கேளிக்கைகள் மறுக்கப்பட்டன. ரசனை அழித்தொழிக்கப்பட்டது. கம்யூனிசம் இலக்கியத்துக்கும் இலக்கியக் கோட்பாடுகளுக்கும் எதிரானது. நுண்உணர்வுகளுக்கு எதிரானது. படைப்பாளிகளுக்கு எதிரானது.

ஆனால், இந்த முடிவுகள் அனைத்தும் பிழையானவை என்பது புலனாகிறது. அடித்தட்டு மக்களின் இலக்கியம் மட்டுமல்ல, மேட்டுக்குடியினரின் கேளிக்கைகளும் செழிப்புற்று வளர்ந்தன. போல்ஷாய்த் தியேட்டரில் அதியற்புத பாலேக்களும் நாடகங்களும் நடத்தப்பட்டன. புதிய, நவீன கண்காட்சிகள் திறக்கப்பட்டன. ஓவியமும் சிற்பக் கலையும் வளர்ந்தது. லெனின் குறிப்பிடுவது போல் இந்த மாற்றங்கள், ‘போல்ஷ்விக்குகளான நாங்கள் வெளிநாடுகளில் பலரும் நினைத்தது போல பயங்கரமான காட்டுமிராண்டிகள் அல்ல என்பதை அங்கு ஏராளமானோருக்குக் கண்கூடாக்கின.’

ஆக, லெனினின் விருப்பு வெறுப்புகள் சோவியத் யூனியனின் அரசுக் கொள்கைகளாகப் பரிணமிக்கவில்லை என்பதை நாம் இங்கே கவனிக்கவேண்டும். அடித்தட்டு மக்களின் கலை வடிவங்களோடு சேர்ந்து, ‘சிறுபிள்ளைத்தனமான முதிர்ச்சியற்ற’ கேளிக்கைகளும் நிறையவே இடம்பெற்றன. ‘இவற்றுக்காக எங்கள் சக்தியும் சாதனங்களும் பெரிய அளவில் செலவாகிவிடுகின்றன.’ என்று தனது வருத்தத்தை லெனின் பகிர்ந்துகொள்கிறார். அவர் தொடர்கிறார்.‘சில கலைக்காட்சிகளில் காட்டப்படும் மிகவும் அற்புதமான கலைப் படைப்புகளையும்விட எங்கோ தொலைவில் ஒரு மூலையிலுள்ள கிராமங்களில் இரண்டு மூன்று ஆரம்பப் பள்ளிகளை அமைத்திடுவதே எனக்கு அதிகமாக மன மகிழ்ச்சி அளிக்கிறதென்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும்.’

கிளாரா ஸெட்கின் குறிப்பிடுவது போல், ‘சாதாரண சின்னஞ்சிறு மனிதனை அளவிலா அன்போடும் நம்பிக்கையோடும்’ அணுகினார் லெனின். எனவே, அவருடைய இலக்கியக் கொள்கை அவர்களையே சார்ந்திருந்தது. லெனின் மட்டுமல்ல மார்க்சியமும் இலக்கியத்தை இப்படித்தான் அணுகுகிறது.

0

மருதன்

பட்டாம்பூச்சி குறிப்புகள் 6 : ‘ஆயிரம் பக்கங்களில் பிரபாகரன்!’

பழ. நெடுமாறன் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீளும் பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம் என்னும் நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.  புத்தகக் கண்காட்சி கடை எண் 156, 157 தமிழ் மண் பதிப்பகத்தில் முன்பணம் செலுத்தலாம். நூல் விலை, 800. சலுகை விலை 600. பிரபாகரனுடனான 30 ஆண்டு கால நட்புறவை விரிவாக விவரித்து இந்நூலை நெடுமாறன் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ‘தமிழீழத்துக்கு 4 முறை நேரில் சென்று விரிவாகப் பயணம் செய்து சேகரித்து அபூர்வத் தகவல்கள்; பிரபாகரனே மனம் திறந்து பகிர்ந்துகொண்ட செய்திகள்; பிரபாகரனின் பெற்றோர், சகோதர-சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள், இளம் பருவத்துத் தோழர்கள், புலிகளின் மூத்தத் தளபதிகள் ஆகியோர் தெரிவித்த விவரங்கள்; பிரபாகரன் கைப்பட எழுதிய கடிதங்கள்’ ஆகியவை இந்நூலில் இடம்பெறுகின்றன. இப்புத்தகம் குறித்து மேலும் அறிய தொடர்பு கெள்ளவேண்டிய தொலைபேசி எண் : 23775536.

பாரதி பதிப்பகம்வெளியிட்டிருக்கும் முக்கிய புத்தகம். தமிழ்ப் பதிப்புலகம் பற்றியும் அதை இயக்கிய முக்கிய ஆளுமைகள் பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.

சுருக்கமான இந்திய வரலாறு, வஉசி வாழ்க்கை வரலாறு, தேசியக் கொடியின் கதை போன்ற புத்தகங்கள் பப்ளிகேஷன் டிவிஷனில் சகாய விலையில் கிடைக்கின்றன.

சீதை பதிப்பகத்திலும் பல புத்தகங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. புத்தகக் கண்காட்சி நிறைவடையும் நேரம் என்பதால் திடீரென்று இவ்வாறு விலை குறைத்திருககக்கூடும். அபிதான சிந்தாமணி, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட இலக்கிய, இலக்கண நூல்களை இங்கே வாங்கலாம்.

தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் Marxim Gorky என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்க்ஸின் கார்க்கி என்று போட்டிருந்தால்கூட பரவாயில்லை.

ஆக்ஸ்ஃபோர்ட்டில் கண்கவரும் கிளாஸிக்ஸ் அணிவகுத்து நிற்கின்றன. நிரந்தர ஆயுள் கொண்ட இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

பண்டைய இந்தியா, ஆரியர்களின் இந்தியா, கோசாம்பியின் இந்தியா, ஆர்.எஸ். சர்மாவின் இந்தியா, நம்பூதரிபாட்டின் இந்தியா, கேதரின் மாயோவின் இந்தியா, காந்தியின் நேருவின் இந்தியா, சுனிதிகுமார் கோஷின் இந்தியா, பகத் சிங்கின் இந்தியா… இந்திய வரலாறு பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக பல நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மேலே உள்ளது Orient Blackswan வெளியிட்ட நூல்.

இன்றோடு சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைகிறது என்பதால் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

இன்றைய சிபாரிசு. கிட்டத்தட்ட 1500 பக்கங்களில் ரவீந்திரநாத் தாகூரின் கட்டுரைகள் இரு பகுதிகளில் சாகித்திய அகாடெமியில் கிடைக்கிறது. விலை ரூ.250.

0

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி குறிப்புகள் 5 : அம்பேத்கர் இவ்வளவு எழுதியிருக்கிறாரா?

பாவை பதிப்பகத்தில் இருந்து அம்பேத்கர் முழுத் தொகுப்பு வாங்கினேன். மொத்தம் 37 தொகுதிகள். இடையிடையே சில பாகங்கள் இல்லை என்றும் கண்காட்சி முடிவடைவதற்குள் கிடைத்துவிடும் என்றும் சொன்னார்கள். கயிறு கொண்டு கட்டினால் கிட்டத்தட்ட ஆளுயரம் நீள்கிறது. இரண்டு கட்டுகளாக மாற்றி, ஆட்டோவில் ஏற்றினேன். இன்னா சார் இவ்ளோ புக்ஸ் என்று பேச்சுகொடுத்தார் ஓட்டுனர். அம்பேத்கர் எழுதியது என்றதும் ஆச்சரியப்பட்டார். இவ்ளோ எழுதியிருக்காரா? யூனியனில் அம்பேத்கர் படம் இருக்கிறதாம். அவர் வீட்டிலும் சிறிய படம் ஒன்றை வைத்திருக்கிறாராம். நீங்கள் அறிந்த அம்பேத்கர் எப்படிப்பட்டவர் என்று கேட்டபோது தயக்கத்துடனும் வெட்கத்துடனும் அவர் சொன்னது. ‘சட்டம் எழுதினாரு. ஆட்டோக்காரங்க, கூலி வேலை செய்யறவங்க, ஏழைங்களுக்காக உழைச்சாரு. நல்லவரு.’

நியூ செஞ்சுரி வெளியிட்டுள்ள ஆயிரம் பக்க கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு பார்க்க கம்பீரமாக இருக்கிறது. நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள். முதல் ஆங்கில வடிவம் 1973ம் ஆண்டு முன்னேற்றப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு 1977லும், மூன்றாவது பதிப்பு 1984லும் வெளிவந்தது. தமிழில் நீண்ட காலமாக அச்சில் இல்லாத பிரதியை இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். கவிஞர் புவியரசு மொழிபெயர்த்திருக்கும் கரமசோவ் சகோதரர்கள் இரு பாகங்களில் வெளிவந்திருக்கிறது. இதே அரங்கில் கிடைக்கிறது.

தென்னிந்தியப் பதிப்பகத்திலிருந்து பழைய லயன் காமிக்ஸை அடுக்கடுக்காக வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் காமிக்ஸ் பிரியர்கள். தனிப் பிரதி 10 ரூபாய். டெக்ஸ் வில்லர் கதைகள், இரும்புக் கை மாயாவி, கௌ பாய் கதைக்ள என்று சிறு வயதில் நாம் வாசித்து மகிழ்ந்த கதைகள் இப்போதும் அதே வடிவில் காணக்கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கீழைக்காற்றில் காணக்கிடைத்த ஒரு சிறிய பிரசுரம். நக்சல்பாரி : புரட்சியின் இடிமுழக்கம். 24 பக்கங்கள். விலை ரூ. 12.

ஒரு பகுதி.

‘சாவுக்கு அஞ்சாதவர்கள்தாம் நக்சல்பாரிகள். ‘போலீசுடன் மோதல்’ என்கிற பெயரில் படுகொலை செய்யப்படுவதில் இருந்து பிழைத்தவர்களைப் பிடித்து வந்து குற்றுயிரும் குலையுயிருமாக வழக்குமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் நக்சல்பாரிகள் சொன்னார்கள். ‘ஆம்! நாங்கள்தான் பண்ணையாளர்களைக் கொன்றோம். மக்கள் எதிரிகளை அழித்தொழிப்பது குற்றமில்லை! தூக்குத் தண்டனையா, கொடு! தீர்ப்பை முடிவு செய்துவிட்டு விசாரணை என்று ஏன் நாடகமாடுகிறாய்?’ என்று கலகக் குரல் எழுப்பினார்கள்.’

விடியல் பதிப்பகத்தில் வெளிவந்துள்ள சில முக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள்.

என் வாழ்க்கை, ஃபிடல் காஸ்ட்ரோ, ரூ.500
சூழலியல் புரட்சி, ஜான் பெல்லமி ஃபாஸ்டர், ரூ.250
தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் துயரமும், நந்திதா ஹஸ்கர், ரூ.200
ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம், வ.கீதா, எஸ்.வி. ராஜதுரை, ரூ.140
இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான சோசலிசம், மார்த்தா ஆர்னெக்கெர், 100

0

கருத்து பட்டறை வெளியீடுகள்.

குற்றப்பரம்பரை அரசியல் (பெருங்காமநல்லூரை முன்வைத்து) தொகுப்பு, மகராசன், ரூ.250
தந்தை முதல் தம்பி வரை (தமிழீழப் போராட்ட வரலாறு), மதுரை சு. தளபதி, ரூ.80
பள்ளு இலக்கியம், நா. வானமாமலை, ரூ.50

0

பெரியார் மையம் வெளியிட்டுள்ள பெரியாரியலா? மார்க்சியமா? நூலில் இருந்து ஒரு பகுதி.

‘திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் ‘ர்’ மறைந்தது தற்செயலான விபத்தல்ல. அதற்கு விளக்கங்கொடுத்து பார்ப்பனர்கள் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்… இன்று ஜெயலலிதா என்ற பார்ப்பன பெண்மணி ஒரு திராவிடக் கட்சியின் தலைவராக செயல்பட வழிவகுத்ததே ‘ர்’ நீக்கி பார்ப்பனரை கட்சியில் சேர்த்த அண்ணாவின் அணுகுமுறைதான்.’

ராஜராஜ சோழன்  ஆசிரியர் ச.ந. கண்ணன், திராவிட இயக்க வரலாறு  ஆசிரியர் ஆர். முத்துக்குமார் இருவரையும் சந்தித்து உரையாட முடிந்தது. இவர்களுடைய நூல்கள் கிழக்கு பதிப்பக அரங்கில் கிடைக்கின்றன. புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் டாப் செல்லர்களில் இவர்களுடைய புத்தகங்கள் முன்வரிசையில் இடம்பெறுகின்றன.

0

பட்டாம்பூச்சி

சாரு எழுதும் எக்ஸைல் விமரிசனம்

குழப்பம் வேண்டாம். தலைப்பில் எந்தப் பிழையும் இல்லை. சாருவின் எக்ஸைல் நாவல் பற்றி ஒரு விமரிசனம் எழுதலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். பின்னர் திட்டத்தை மாற்றிக்கொண்டேன். எக்ஸைல் நாவலுக்கு நான் எழுதுவதைவிட சாருவே விமரினம் எழுதினால் நன்றாக இருக்கும் அல்லவா? இதோ ஒரு கற்பனை விமரிசனம்.

நான் பொதுவாக தமிழ் இலக்கிய சூழலில் புகழப்படும் நாவல்களைப் படிப்பதில்லை. சரி, எல்லோரும் பரபரப்பாகப் பேசுகிறார்களே என்பதாலும் இந்த நாவலுக்கு என் விமர்சனம் வேண்டும் என்று இந்த நவீன் தினமும் தொல்லை செய்ததாலும் படித்தேன்.

ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி. தமிழ் எழுத்தாளனுக்கு தமிழ் எழுத்தாளன் தான் எதிரி.

எக்ஸைலை ஒரு நாவல் என்று அழைக்க முடியுமா தெரியவில்லை. நாவலோ இல்லையோ இதனை ஒரு வாசிப்பு அனுபவமாகவே முன்வைத்துப் பேசுவோம். இந்த புத்தகத்தின் மொத்தக் கொள்ளளவில் கதை என்று சொல்லக் கூடியது ஒரு மிகச் சிறிய அங்கத்துக்குள் முடிந்துவிடுகிறது. மற்றபடி புத்தகத்தின் முக்கால்வாசிப் பக்கங்கள் கீழ்கண்டவாறு நிரம்பியுள்ளன.

1 . ஒரு பிரபல சாமியார் செய்யும் மோசடிகள். அவரிடம் பணம் கட்டி ஏமாந்தது. அவர் நடத்திய விழாவுக்குச் சென்றபோது ஏற்பட்ட கஷ்டங்கள். அவரின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தனக்கு ஏற்படுத்திய துன்பங்கள்.

2 . இன்னொரு பிரபல சாமியாரை தான் முழுக்க முழுக்க நம்பியது. அவர் ஒரு நடிகையுடன் கட்டிப் புரண்டது. அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்ட பாடம். அதற்கான விளக்கங்கள். அவரிடம் ஏமாந்த கதை. அவர் தனக்கு கொடுத்த இன்னல்கள். சாமியார் தன் மனைவியின் பெயரில் வெளியிட்ட கடிதம். அதன் விளக்கங்கள்.

3 . தனது இயக்குனர் நண்பனை தன் விழாவுக்கு அழைத்தது. அவர் தன் புத்தகத்தை தவறாகப் பேசியது. அவருடைய திரைப்படத்தின் ஒரு பாடல் முழுவதும் தன்னை நடிக்க வைப்பதாகச் சொல்லி ஏமாற்றியது. இது குறித்த விவாதங்கள், விளக்கங்கள்.

4 . ஒரு வாசகியுடன் தான் நடத்திய (அல்லது இருவரும் சேந்து நடத்திய) செக்ஸ் சாட். தான் செய்தது நியாயமா இல்லையா? அந்தப் பெண் நல்லவளா இல்லையா? இது தொடர்பான விளக்கங்கள், பதில்கள்.

5 . தமிழில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்தும் 30 வருட வாழ்க்கையும் தியாகங்களும். தன்னைக் கண்டுகொள்ளாமல் போன தமிழ் மக்களின் மீது தனக்குள்ள கோபம்.

6 . தமிழ் நாட்டில் ஒரு குடிமகனாக வாழ்வது குறித்த கஷ்டங்கள். இந்தியாவில் வாழ்வது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம் என்பது பற்றிய பிரஸ்தாபங்கள். ஐரோப்பாவே தனக்கான தேசம் என்பது பற்றிய ஆதங்கம்.

7 .சிறுவயதில் நடந்த துக்கங்கள். முதல் திருமணத்தில் தனக்கு நடந்த கொடுமைகள். கடந்து வந்த இன்னல்கள்.

8 . இதுவரை கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன சுய புராணங்கள்.

ஒருவர் தன்னை தானே அறிவாளி, நல்லவன் என்று சொல்லிக் கொள்வார். அவராகவே ஒரு யோக்கியனைத் தனது குருநாதராக ஏற்றுக்கொள்வார். ஒரு சாமியாரிடம் பணம் கட்டி ஏமாறுவார். ஒரு பெண்ணுடன் செக்ஸ் சாட்டில் ஈடுபடுவார். நண்பனிடம் சண்டையிடுவார். புதிதாக ஒரு பெண்ணைக் காதலிப்பார். இதனை எல்லாம் எழுத்தாக்கி நாவல் என்று வெளியிடுவார். அதைப் படித்துவிட்டு புது முயற்சி, மைல்கல் என்று பாராட்டுகள் வேறு. நான் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று நினைக்க எனக்கே வெட்கமாக உள்ளது.

ஏன் அய்யா, நான் புரியாமல் தான் கேட்கிறேன். இதை எல்லாம் பக்கம் பக்கமாக உங்கள் தளத்தில் வடித்துவிடீர்களே. அதைப் படித்தவர்களே பரிதாபத்துக்கு உரியவர்கள்தான். அதனை அப்படியே அச்சடித்து நாவலாக வேறு வெளியிடவேண்டுமா? நாவல் என்றால் பர்சனல் டயரி எழுதுவது என்று அர்த்தமா? சுயசரிதை எழுதப் போகிறேன் என்று சொல்லியிருக்கலாமே. நான் புத்தகத்தைத் தொட்டுக்கூட பார்த்திருக்க மாட்டேனே. சுயசரிதை கூட சுவாரஸ்யமாக இருந்தால் மட்டுமே படிக்க முடியும். வெறும் புலம்பல்களை எப்படிப் படிப்பது?

இது போதாது என்று நாவலில் பாதி இடங்களில் பிரெஞ்சு. ஓரிரு இடங்களில் தவிர்க்க முடியாமல் வந்தால் பரவாயில்லை. அப்படியே பக்கம் பக்கமாக தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்டுவதா? ஒரு தமிழ் நாவல் எழுதுகிறோம் என்கிற நினைப்புக்கூட இல்லாமல்? அது சரி, தமிழ் நாவல் எழுதுவாதால் தான் இந்த தைரியம். இங்கே எழுத்துக்கே மதிப்பில்லாதபோது அதில் நடக்கும் அநியாயங்களை எங்கே தட்டிக் கேட்பது?

தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனாலும் ஒரு பிரெஞ்சு எழுத்தாளன் இப்படித் தன் நாவலில் பக்கம் பக்கமாக தமிழை எழுதிவிட்டு இருந்துவிட முடியுமா? அவனை பிரெஞ்சு மக்கள் விட்டுவிடுவார்களா? அந்தக் கொடுமை எல்லாம் இங்கே மட்டும் தான் நிகழும் .

தமிழர்களுக்கு ஏமாறுவது என்பது பிறப்போடு கிடைத்த ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். அதனால் தான் ஒருவன் தான் ஏமாந்த கதை எல்லாம் சொல்லிப் புலம்பி நாவல் என்று விற்கிறான். அதனை வாங்கி ஏமாறுகிறார்கள்.

இப்படி ஒருவர் தன்னைப் பற்றியே எழுதி, தான் இதுவரை கொண்ட காதலைப் பற்றி ஒவ்வொரு நாவலிலும் எழுதுவார். அதற்கு பாராட்டு ஒரு கேடா?

கொக்கரக்கோ கூறிய விளக்கம் அப்பட்டமான உண்மை.

/இந்த உதயா ஒவ்வொரு நாவல் எழுதும் போதும் இப்படித்தான் காதலில் விழுகிறான். அந்தக் காதலைப் பற்றி இப்படித்தான் ஆஹா ஓஹோ என்று அளக்கிறான். வேண்டுமானால் பாருங்கள். அவனுடைய அடுத்த நாவலை எழுதும் போதும், இப்படித்தான் வேறொரு காதலில் விழுந்து அதைப் பற்றியும் இதே மாதிரிதான் சொல்லப் போகிறான்./

நாவலில் வரும் பொதுவான சம்பவங்கள் கூட சுவாரசியமானதாகவோ ரசிக்கும்படியாகவோ இல்லை. இம்மாதிரியான பொதுவான சம்பவங்கள் ராசலீலாவில் நிறைய உண்டு என்றாலும் அவை தேர்ந்த அனுபவங்களையும் உள்ளார்ந்த உணர்வுகளையும் உள்ளடக்கியிருந்தது. தபால் துறையில் பணிபுரிவது பற்றிய சம்பவங்கள், அன்ரிசர்வ்டு பெட்டியில் தினமும் பயணிப்பவர்களின் நிலை போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆனால் இந்நாவலில் வருபவை மிகுந்த சலிப்பை ஏற்படுத்துபவை. வாகன ஓட்டுனராக வந்த சாரதிகள், உணவகங்கள் தேடி அலைந்த சம்பவங்கள், பாஸ்போர்ட் விண்ணப்பித்தலின் சிரமங்கள், எழுத்தாளனின் இன்னல்கள் என்று எல்லாமே முழுக்க முழுக்க புலம்பல்களின் வடிவங்கள்.

உங்களுக்கு வேண்டுமானால் இது புறக்கணிக்கக்கூடிய விஷயமாக இருக்கலாம். எனக்கு இது ஒரு குற்றமாகத் தெரிகிறது. நாவலைப் படிக்கும்போது எனக்கு ஒரு சினிமா வசனம் தான் நினைவிற்கு வருகிறது. ’தான் செய்வது குற்றம் என்றே தெரியாத அளவுக்கு உங்களுக்கு குற்றம் பழகிப் போச்சு’. அது தான் இங்கே நடக்கிறது. அதனை பெருமையாக இதே நாவலில் சொல்கிறார் நமது எழுத்தாளர்

/உதயாவை நிர்வாணமாக்கிக் கழுதையில் ஊர்வலம் விட்டது பற்றி அவனுக்குக் கவலை இல்லை. அடிப்படையில் அவன் ஈனமானம் எதுவும் இல்லாதவன். அந்த நிர்வாண ஊர்வலத்தையே தன் எழுத்துக்கான கச்சாப் பொருளாக ஆக்கி விடக் கூடிய மேஜிக் தெரிந்தவன்./

இது மேஜிக்கா? சரி விடுங்கள்.

காதலியுடன் நடக்கும் அரட்டைகள், சொந்த ஊர் போன அனுபவம், தீவு சென்று தங்கிய அனுபவம், தன் வீட்டு நாய் புணர்வதைப் பார்த்த அனுபவம், தான் சென்ற உணவகங்களில் ஏற்பட்ட அனுபவம், சபரி மலை அனுபவம், ஜாதகம் பார்ப்பது எப்படி, மந்திரம் சொல்வது எப்படி, என்றும் பதினெட்டாக வாழ்வது எப்படி, சமையல் குறிப்புகள், புலம்பல்கள், சுய புராணங்கள் போன்றவைகளால் பக்கங்களை நிரப்பிவிட்டால் போதுமா? நான் இங்கே சுயபுராணங்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்கிறேன். அதன் நீளம் எத்தனைப் பக்கங்கள் என்று புத்தகத்தைப் படிப்பவர்களுக்குத் தான் புரியும்.

காதலியுடனான நீண்ட காதல்/காம அரட்டைகள் இல்லாமல் நாவல் எங்கே நகர்வது? அதனையும் எழுத்தாளரே அரட்டையில் (அல்லது நாவலில்?) குறிப்பிடுகிறார்.

/உதயா :  the novel is going without spice

shall i add this chat as a chapter?/ 

இதற்கு நான் விமர்சனம் வேறு கொடுக்க வேண்டுமா அய்யா?

கொக்கரக்கோ சொன்னதுபோல் நாவல் முழுக்க முழுக்க உதயா தான். நாவலின் ஒரே சந்தோசம் நமக்குத் தோன்றும் எண்ணங்களை அப்படியே கொக்கரக்கோ என்னும் பாத்திரம் சொல்லிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல நாவலின் பாசிடிவான ஒரு விஷயம் – சுவாரஸ்யமாக மற்றும் விறுவிறுப்பாகச் செல்லும் கொக்கரக்கோ பற்றிய கதையும் கொக்கரக்கோவின் கடைசி பக்க விவாதங்களும்.

இவை அல்லாமல் நாவலில் நீண்ட பட்டியல்கள் பல கிடைக்கின்றன. பட்டியல் என்றால் வெறும் பத்து பெயர்கள் கொண்டவை அல்ல. எவ்வளவு நீண்டவை என்பதை நீங்கள் நாவலில் தான் பார்க்க வேண்டும் :

– எதுவும் கிடைக்காத தீவுக்குச் சென்றால் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியல்
– உதயாவின் சொந்த ஊரான நாகூரில் இருக்கும் அனைத்து தெருக்களின் பெயர்களைக் கொண்ட பட்டியல்
– தன் ஊரில் தான் கண்ட அனைத்து பாம்பு வகைகளின் பட்டியல்
– பெண்கள் அணியக் கூடிய உடைகளின் பட்டியல் (விளக்கங்களுடன்)
– 108 சரவண கோஷம் அடங்கிய பட்டியல்

பட்டியல்களின் பட்டியலே இப்படி நீண்டுகொண்டே போகிறதே. இவற்றை எல்லாம் படிக்கும்போது வாசகர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இந்த கொடுமை எல்லாம் போதாதென்று ஜாதகம் எப்படி பயன் தருகிறது, சூன்யம் செய்வது எவ்வளவு பாதிப்பை உண்டாக்குகிறது, கெட்டவனைத் தான் பாம்பு கடிக்கும், விரதங்களை கடைபிடிக்காமல் சபரி மலைக்குப் போனால் எவ்வளவு துன்பங்கள் நேரிடும் போன்ற விஷயங்களும் பக்கம் பக்கமாக வருகின்றன. இதற்கெல்லாம் நம் தமிழ் வாசகர்கள் கொடுக்கும் பெயர் ஆன்மிகம். என்ன கொடுமை அய்யா இது?

தன்னை ஒரு எழுத்தாளனாக அடையாளம் காட்டிக் கொள்பவன் ஒரு தெளிவான சிந்தனையாளன், சிறந்த படைப்புகளை அடையாளம் காண்பவன், சிறந்த படைப்புகளை கொடுக்க வல்லவன், சராசரி மனிதனின் சிந்தனையிலிருந்து மேம்பட்டவன் என்றே அவனை மறைமுகமாகக் கூறிக் கொள்கிறான். ஆனால் மேலே குறிப்பிட்டவை அப்படியா உள்ளன?

சுருக்கமாகச் சொல்லப் போனால், நான் உலக சினிமா ரசிகன் என்று சொல்லிப் பெயர் வாங்கி, கூட்டம் சேர்த்து பெரிய ஹீரோவாகி கடைசியில் விஜய் படம் போன்ற ஒரு மசாலாப் படத்தைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? படம் பிடிக்கிறதோ இல்லையோ, அது எப்படிப் பட்ட எதிர்மறையான செயல்? இவற்றுக்கெல்லாம் பதில்கள் வேண்டாம். படிக்கும் வாசகர்களுக்குக் கேள்வியே எழவில்லையே என்பது தான் என் ஆச்சரியம்.

இந்தக் கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் இதை எல்லாம் தாண்டிய கொடுமை ஒன்று உள்ளது. இப்படிச் சம்பவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போகும்போது நடுநடுவே இந்தச் சம்பவங்கள் நாவலை முடிக்கத் தடையாக உள்ளது, தொந்தரவுகள் இல்லாமல் நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்கிறார்.

உடனே நாவலை முடிக்க கொடைக்கானல் போகிறார். அங்கே அவர் நண்பர் வீட்டில் நடந்த சம்பவங்கள், பின்பு நாவலை எழுதி முடிக்க பெங்களூர் போகிறார். அங்கே நடந்த சம்பவங்கள். அதாவது – பெங்களூர் லாட்ஜில் நண்பருடன் தங்கியிருந்தது, நண்பர் அளவுக்கு அதிகமாக குடித்து அறையில் வாந்தி எடுத்தது, அதனால் அறை முழுவதும் துர்நாற்றம் அடித்தது, தானே தன் கையால் அவற்றை எல்லாம் சுத்தம் செய்தது, இதனால் நாவலை முடிக்கத் தாமதமானது என்ற கதை எல்லாம் சொல்லி இவற்றையும் நாவலிலேயே சேர்த்துவிடுகிறார். என்ன கொடுமை அய்யா இது? இந்த அநியாயம் உலகத்தில் எங்காவது நடக்குமா?

இது வெறும் குப்பை மட்டுமல்ல. பணத்திருட்டு. இப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் எழுதி நாவல் என்ற பெயரில் விற்பதும் என்னைப் பொறுத்தவரையில் திருட்டு தான். தமிழகம் என்பதால் இது மறைமுக திருட்டாகத் தெரிகிறது. பிரான்சில் மட்டும் இப்படி ஒருவன் எழுதியிருந்தால் அவனை அன்றிலிருந்து திருடன் என்று தான் அழைத்திருப்பார்கள். பிரெஞ்ச்சில் திருடனுக்கு என்னவென்று சொல்லுவேன். அது மட்டும் உங்களுக்குப் புரியவா போகிறது?

இது போன்ற நாவல்கள் தமிழகத்தின் சாபக்கேடு. இவை தான் இது எனக்கான இடமல்ல என்பதை உறுதியாகச் சொல்கின்றன. இனி என்னை எந்த தமிழ் நாவலுக்கும் விமர்சனம் எழுதச் சொல்லி தொந்தரவு செய்யாதீர்கள். எழுத்துக்காக தன்னையே அர்பணித்து 35 வருடங்களாக எழுதிவரும் என்னைப் போன்ற எழுத்தாளனையும் நான் கொடுத்த உலகத் தரமான நாவல்களையும் கண்டுகொள்ளாத தமிழினத்துக்கு இப்படிப்பட்ட நாவல்கள்தான் தேவை.

இந்த விமர்சனத்தை வெளியிடவும் கூட பயமாகத் தான் இருக்கிறது. எழுத்தாளர் இதைத் திட்டி எழுதி அதையே தன் அடுத்த நாவலுக்கான கச்சாப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார் என்று என்ன நிச்சயம்?

0

ந. நவீன் குமார்

பரத்தை கூற்று : முன்னுரை

பரத்தை கூற்று / சி.சரவணகார்த்திகேயன் / அகநாழிகை / விலை ரூ.50 

அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் ‘தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை.

ஜி.நாகராஜன் (சதங்கை, ஏப்ரல் 1984)

கற்பு – அது மகாவார்த்தை

அதுவும் இந்த தேசத்தைப் பொறுத்த வரை அது ஒரு தர்மம் – ஒருதலைப்பட்சமான ஒரு கருத்துருவாக்கத்தை த‌ர்மம் என்ற‌ழைப்பதே முரண்நகை என்ற போதிலும். கற்புக்காக உயிரை விட்ட, ஊரை எரித்த பெண் பிம்பங்கள் வாழ்ந்த இதே மண்ணில்தான் ஒருவேளை சோற்றுக்காக பெண்கள் கற்பை விற்கும் அவலமும் நிகழ்கிறது. பார்க்கப் போனால் கற்பு என்பதே ஓர் ஆணாதிக்க நுண்ணரசியல் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பெண்களுக்கு எதிரான‌ அச்சித்தாந்தத்தை மிகுந்த பிரேமையுடன்‌ முன்னெடுத்துச் செல்வதே பெண்கள் தான் – கற்புக்கரசியாய்த் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் நம் வீட்டுப் பெண்கள்.

இரு உறுப்புக்களின் சில நிமிட உராய்வு எப்படி ஒருத்தியின் ஒழுக்கவியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியத்தின் சுகந்தமே தேங்கி நிற்கிறது. ஆந்த்ரபோலஜியின் அடிப்படையில் பார்த்தால், இன்னாரை இன்னார் மட்டுமே புணரலாம் என்கிற ஆதாரக் கோட்பாட்டுடன் நாகரிக மனிதன் தொடங்கி வைத்த நமது பாரம்பரிய குடும்ப அமைப்பு முறை தான் முதல் வேசி ஜனிக்க‌க் காரணமாய் இருந்திருக்கக் கூடிய ஆணி வேர் எனத் தோன்றுகிறது. இன்று சில்லாயிரமாண்டுப் பரிணாமத்திற்குப் பின் அது முகிழ்த்தெழுந்து கிளை பரப்பி மிகப் பிரம்மாண்ட‌மானதொரு விருட்சமாகியிருக்கிறது.

இன்று இது வெறும் தொழில் அல்ல; வர்த்தகம் – ஓராண்டில் உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் புர‌ளும் விஷயம். ஆனால் அதை நேரடியாய் முன்னின்று நிகழ்த்தும் தொழிற்காரிகளுக்கு உலகின் எந்த மூலையிலும் மதிப்பில்லை – இந்த வியாபாரத்தின் தாய்நாடாகக் கருதப்படும் தாய்லாந்தில் கூட. பெண் எனப்படுபவள் இங்கு தான் நிஜமாலுமே சுரண்டப்படுகிறாள் – தன்னைச் சுற்றி இயங்கும் போலீஸ்காரன், பத்திரிக்கை நிருபன், பாலியல் மருத்துவன், சாராயம் விற்பவன், அரசியல் செய்பவன், சினிமா எடுப்பவன், ஆன்மீகம் போதிப்பவன், ரவுடித்தனம் பண்ணுபவன், வியாபாரத்தில் பழுத்தவன், காசுக்கு வருபவன் என‌ப் பாரபட்சமின்றி எல்லோராலும் எப்போதும் எங்கும்.

இந்தியாவில் 28 லட்சம் பாலியல்தொழிலாளிகள் இருக்கிறார்கள் – இது மே 8, 2007 அன்று அப்போதைய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராய் இருந்த ரேணுகா சௌத்ரி பாராளுமன்ற‌ லோக்சபாவில் அளித்த அதிகாரப்பூர்வத்தகவல். ஆனால் கிட்டதட்ட இதே காலகட்டத்தில் வெளியிடப்பட்ட‌ HUMAN RIGHTS WATCH என்ற சர்வதேசிய‌ அமைப்பின் ரிப்போர்ட் வேறு கணக்கை முன்வைக்கிற‌து. இந்தியாவில் 1½ கோடி பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அது சொல்கிறது. அதாவது‌ இந்த தேசத்தின் மொத்த மக்கட்தொகையான 110 கோடியில் சரிபாதி 55 கோடி பேர் பெண்கள் என்று வைத்துக் கொண்டால், ந‌ம் கல்லூரியில், நம் அலுவலகத்தில், நம் வீட்டில் என நம்மைச் சுற்றியுள்ள, நாம் நன்கறிந்த‌ 36 பெண்களில் ஒருத்தி தன் பாலியலை ஏதேனும் ஒருவகைப் பொருளாதாரப் பண்டமாற்றில் விற்றுக்கொண்டிருகிறாள் என்று அர்த்தம்!

0

பாலியல் தொழிலாளி என்பது நாசூக்கு – தேவடியாள் என்பதில் தெறிக்கும் வேதனையும் கம்பீரமும் இதிலிருப்பதாக‌த் தோன்ற‌வில்லை. இன்றைய தேதியில் பொருளாதார, சமூக மற்றும் மத காரணிகள் தாம் விபச்சாரத்தை நோக்கி ஓர் இந்தியப் பெண்ணை இழுப்பவை. இதில் இடம், பொருள், ஏவலுக்கேற்ப‌ Streetwalkers, Brothels, Escorts என‌ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புத்தவதாரம் கொள்கிறாள் அவள். உடலே இதன் முதலீடு.

அதிலும் இளமையே பிரதானம் (“The profession of a prostitute is the only career in which the maximum income is paid to the newest apprentice” – William Booth). இதனாலேயே‌ உலகின் வறுமையண்டிய பிரதேசங்கள் பலவற்றிலும் பூப்படையாத‌ சிறுமிகள் அல்லது just now பூப்படைந்தவர்கள் கூட என்ன நடக்கிறது என்கிற‌ புரிதல் சிறிதுமற்று விபச்சாரத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். இதில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கதை கவிதை காவியம் – இளமை வறுமை மட்டும் பொது. பெண்ணைப் பொதுவுடைமையாக்குகிற‌ புரட்சி இது!

“The world’s second oldest profession” என்ற புகழ் பெற்ற பிரயோகம் மூலம் அரசியல், உலோகவியல், யுத்தம், தத்துவம், உளவு, உழவு, கல்வி, கடவுள் என சில‌வற்றை உலகின் இரண்டாவது மிகப்புராதனமான தொழில் எனக்குறிக்கிறார்கள் – அதாவது இப்பயன்பாடு பிரபல்யமடைந்ததே மறைமுகமாக விபச்சாரத்தை முதலாவதெனக் குறிப்பதால் தான். பால் ரெனால்ட்ஸ் என்ற பிபிசி பத்திரிக்கையாளர் பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஆதாரம் சொல்லி இதன் தொன்மத்தை நிறுவுகிறார் – ஆதாம் ஏவாள் காலத்துப் பழமை!

நமது பண்டைத் தமிழ்க் கலாசாரத்தில் பரம்பரையாகப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு நேர்ந்து விட்ட யுவதிகளை ‘தேவரடியாள்’ என்பர். இதே முறை சில‌ வித்தியாசங்களுடன் வட‌ இந்தியாவில் ‘தேவதாசி’ என்றழைக்க‌ப்படும். இன்னமும் மகாராஷ்ட்டிர‌ – கர்நாடக எல்லை மாவட்டங்களில் இம்முறை புழக்கத்தில் இருக்கிறது. சங்கப்பாடல்களில் வரும் பரத்தையும், சிலப்பதிகாரம் கூறும் மாதவியும் இவ்வினமே. இவர்கள் பிரதானமாக ஆடும் கலையையும், பின் நிதானமாகக்கூடும் கலையையும் கைகொண்டிருந்த‌தார்கள். ஒழுக்க விதிகளின் அழுத்தத்தினின்று ஆண் வர்க்கம் பிசகினால் கெடக் கூடிய‌ சமூக அமைதியை நிலைநிறுத்துவதற்குக்கட்டமைக்கப்பட்ட வடிகால்களாகவே இவர்கள்தென்படுகிறார்கள்.

இவர்களுக்கென்று ஊரில் தனி இடம் (தளிர்ச்சேரி என்பர்) இருந்திருக்கிறது. இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டிய போது சிற்பிகளுக்கும், பிறருக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் 400 தேவரடியார்களை அனைத்து வசதிகளும் செய்து தந்து உடன் வைத்திருந்ததைப்பற்றியெல்லாம் படிக்கும் போது பொது மக்களுக்கும் இவர்களிடம் ஒரு வகையான கலவையான‌ மதிப்பும் மரியாதையும் இருந்திருப்பதாகவே தோன்றுகிற‌து.

பின் வந்த முகமதியர் படையெடுப்பு, ஆங்கிலேயர் ஆட்சி போன்ற பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் அதன் விளைவான கலாசார மாற்றங்களால் இந்த‌ இனம் சிதறிப் போயிருக்க வேண்டும். குறிப்பாய்க் கடைசி ஐந்து நூற்றாண்டுகளில் பிறப்பின் அடிப்படையில் மட்டுமல்லாது வறுமையின் காரணமாகவும் பெண்கள் வேசித் தொழில் புரியத்தலைப்படலாயினர். தேவரடியாள் இறந்தாள்; தேவடியாள் பிறந்தாள்.‌

0

தன் கணவனுடன் மட்டும் கூடி, அவனில்லாத போழ்து (அவனிருக்கும் போதும்!) மனதால் கூட பிற ஆடவனை நினையாத பதிவிரதைகளான உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தினர். கதையில் இங்கு தான் சிக்கல் ஆரம்பம் – ஒன்றை ஏற்றினால் மற்றொன்றை இறக்கித்தானே ஆகவேண்டும். நேரெதிர்நிலையாக‌, வழி தேடியலையும் சுக்கிலத்துக்கும் வக்கிரத்துக்கும் கட்ட‌ணக்கழிப்பிடமாய், ஆண் அவ‌ஸ்தைக்கெனப் பிர‌த்யேகமாய்ப் புனையப்பட்ட‌ தூமைத்துணிக்கிழிசலாய் வாழ்ந்து கொண்டிருந்த‌ வேசியினம் இதற்கு இல‌க்கானது. பத்தினிகள் இன்பந்துய்க்கும் பொருட்டு அத்தினிகள் துன்பமேற்கலாயினர்.

ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் தான் ஆதாரப்பிரச்சனை.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் – நம்மிடையே ஆழப்பதிந்திருக்கும் வேசிகள் குறித்த கோபமும், வெறுப்பும் எவ்வளவு தூரம் நியாயமானது, எத்தனை சதவிகிதம் நிஜமானது. யோசித்துப்பார்த்தால் வேசி என தனித்து ஓரினமும் கிடையாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு கணத்தில் விபச்சாரியாக‌ நடந்து கொள்கிறோம் – மனதாலும் உடலாலும். அதிலும் குறிப்பாய்ப் பெண்ணினம் ஆதிகாலந்தொட்டு ஆணைச் சார்ந்து வாழ நேர்வதால் தன் உடலையே மூலதனமாக்கி தான் விரும்பியதை சாதித்துக் கொள்ள முயல்கிறது. (“இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு” என்று ஒரு புளியமரத்தின் கதை நாவலில் சுந்தர ராமசாமி சொல்வதைக் கவனியுங்கள்). பரிணாமத்தின் ஓர் எளிய சமன்பாடு இது.

வேசியினம் தோன்றும் முன்பே வேசித்தனம் தோன்றி விட்டது என்ப‌து தெளிவு.

க்ளியோபாட்ரா முதல் மர்லின் மன்றோ வரை இதற்கு பல சர்வதேசிய‌ உதாரணங்கள் சொல்லலாம் (இவ்விடயத்தில் உள்நாட்டு சங்க‌திகளை எடுத்துக்காட்டுவது சரீரத்திற்கு அவ்வளவாய் உகந்ததில்லை என்பதாலும், name-dropping செய்வது நவீன‌ இலக்கிய‌‌ மோஸ்தர் என்பதாலும்). நாம் எல்லோரும் தேவையேற்படும் போது மட்டும் செய்யும் விஷயத்தை வேசிகள் தொழிலாகவே செய்கிறார்கள் என்பது தான் பிரதம‌ வித்தியாசம்.

நூற்றாண்டுகளாய் வையம் முழுக்க இது புரிந்து கொள்ளப்படவே இல்லை (அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை). வேசிகள் எதிலும் தவிர்க்கப்பட்டார்கள்; நஞ்செனத் தூற்றப்பட்டார்கள்; காறி உமிழப்பட்டார்கள். புணர்ச்சி தான் அவர்களுக்கு நாமளிக்கும் உச்சபட்ச மரியாதை. தீண்டலால் அவர்கள் அடையும்‌ தீண்டாமை இது. சட்ட‌ ரீதியாய் அவர்களுடைய களப்பணி அங்கீகரிக்கப்படாதிருப்பதால் நிகழும் பிறழ்வு. அவர்களுக்கு நேரும் அத்தனை அவமானங்களையும், துர்அனுபவங்களையும் அதன் நீட்சியாகவே கொள்ள வேண்டும். இந்தத் தொகுப்பின் நோக்கமே அல்லது தேவையே அங்கே தான் மையமிட்டிருக்கிறது – அதாவது விபச்சாரிகள் என்று சிலரை முத்திரை குத்தி, சமூக அந்தஸ்தை மறுத்து கீழானவர்களாக நடத்துவதை எதிர்க்கும் நோக்கிலான‌ அரசியல்.

ஒரு குற்றத்தை இரண்டு வழிகளில் அணுகலாம். முறையான சட்டங்களின் மூலமாக‌ யாருமே அதைச் செய்யாது கட்டுப்படுத்துவ‌து முதல் வழி. தடுக்க முடியாத அளவுக்கு கை மீறிப்போன விஷயமென்றால் எல்லோரும் அதைச்செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டப்பூர்வமாக்கி விடுவது மற்றொரு வழி. இந்த இரண்டாவதின் முக்கிய நோக்கமே அதைக் குற்றமில்லை என்று சொல்வதன் மூலமாக தொடர்புடைய உபகுற்றங்களைத் தடுப்பது தான். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதன் மூலமாக மட்டுமே அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் ஒப்பீட்டளவில் ச‌ற்ற‌திக சமூக அந்தஸ்தையும் அளிக்க முடியும்.

நளினி ஜமீலா தனது ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை நூலில் சொல்வது போல் – “இங்கே விற்பனை செய்யப்படுவது அன்போ, காதலோ அல்ல. ஒரு நபருடன் குறிப்பிட்ட நேரத்தைச்செலவிட ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அப்போதைய மன அமைதியையும் பரிவையும் அளிக்கிறோம். இதை விற்பனை செய்யக் கூடாது என்று சொல்வதை விட தேவைப்படாதவர்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வது தான் நல்லது”. இது மிக முக்கிய, முதிர்ச்சி வழி வந்த‌ ஒரு நிலைப்பாடு.

0

சங்க இலக்கியங்களின் புறத்திணைப்பாடல்களில் இன்னாரை இன்னார் பாடியது என்று பெயரோடு வெளிப்படையாகவும், அகத்திணைப்பாடல்களில் இன்னார் கூற்று என்று பெயர் தவிர்த்து பொதுப்படையாகவும் கூறுத‌ல் வழக்கம். இவற்றில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று போன்றவற்றோடு பரத்தை கூற்றும் காணக்கிடைக்கிறது – ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையில்.

பரத்தை கூற்றாய் எட்டுத்தொகையுளடங்கும் சங்க இலக்கியங்களான அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் சில பாடல்கள் இருந்த போதிலும் அவை யாவும் மேலோட்டமாய் பேசிச் செல்லும், பூசி மெழுகப்பட்ட வகையறா. அந்தச் சிற்றினத்தின் (சிற்றின்ப இனத்தின் என்றும் கொள்ளலாம்) உணர்வுகளை வெளிப்படையாய் அவை முன்வைக்கவில்லை. வள்ளுவர் கூட திருக்குறளில் அயல் மகளிரை நாடுதல் பெரும்பாவம் என்பதான ஓழுக்கவியல் கோட்பாட்டைத் தான் நிறுவியிருக்கிறாரே ஒழிய (பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் / ஏதில் பிணந்தழீஇ அற்று) அப்பெண்களின் நிலையிலிருந்து ஏதும் பேசவில்லை.‌ இப்படித் தான் பன்னெடுங்காலம் பயணித்தோம்.

பின்பு நவீனத் தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ், சாரு நிவேதிதா, புஷ்பா தங்கதுரை போன்றவர்களது படைப்புகளில் இது பற்றிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன. நவீனக் கவிதைகளில் தமிழ்நாடன் (காமரூபம்), மகுடேசுவரன் (காமக்கடும்புனல்), விக்ரமாதித்யன் (தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள்) , ஆண்டாள் பிரியதர்ஷினி (மன்மத எந்திரம்), வா.மு.கோமு (சொல்லக் கூசும் கவிதை) என நீளும் காலவரிசையிலான இப்பட்டியலின் வால்புறம் நிற்கிறதென் பரத்தை கூற்று.

இக்காப்பிய‌த்தில் பரத்தையே தலைவி.

களைத்துறங்குபவன் குறட்டையொலிக்கும், ஓயாது மனதிசைக்கும் சிருங்கார ஒலிக்கும் இடையே இழைக்கப்பட்டவை இக்கவிதைய‌னைத்தும். அழுக்காய் அசிங்கமாய் நாசி பெயர்த்தெறியும் துர்வீச்சத்துடன் இருக்கலாம் பிசுபிசுத்த‌ ஈரச்சீழ் வடிந்துலர்ந்த இந்த‌ யோனியெழுத்து – அது படிப்பவர் மனசு பொறுத்து. என் வரையில் குற்றவுணர்ச்சியோ பாசாங்கோ இல்லாததொரு நனிநெஞ்சம் மிக விரும்பும் இக்கவிதைகளை. அதே போல் இவற்றை நிராகரிக்கும் உரிமையும் தகுதியும் உண்டு உண்மையுணர்ந்த வேசிகளுக்கு.

கோயிலில் பூஜை செய்வதைப்போல், எல்லையில் யுத்தம் புரிவதைப்போல், உள்ளாடை ஏற்றுமதி செய்வதைப்போல், சாக்கடையில் மலம் அள்ளுவதைப்போல், ஐபிஎல் க்ரிகெட் விளையாடுவதைப்போல், உடம்பை விற்கும் விபச்சாரமும் மற்றுமொரு தொழில் தான் – நெல்முனையளவு கூட எந்த வித்தியாசமும் இல்லை, அதைச் செய்து பிழைக்கும் பெண் எந்த வகையிலும் தீங்கானவள் அல்ல என்ற சமூக உளவியலை ஏற்றவே இக்கவிதைகள் பிரயத்தனப்படுகின்றன – அவள் உடல் அல்லாது மனமே இதில் நிர்வாணப்பட்டிருக்கிறது.

இக்கவிதைகள் தீர்ப்போ தீர்வோ அல்ல. எது நிலையோ எது நிஜமோ அதைப் பற்றின‌ ஒரு புனிதம் கெடாத பகிரல் மட்டுமே. கோபமாக, விரக்தியாக, எள்ளலாக, புலம்பலாக, சோகமாக, சாபமாக எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையாக அவர்களின் உண‌ர்வுகளை அவர்களின் உணர்ச்சிகளை அவர்களின் பாஷையிலேயே எவ்வித‌ கவித்துவப்பூச்சுகளோ, படிமங்களின் பாசாங்கோ இன்றி‌ (கவிதைகளின் ஐந்திணைக் கருப்பொருள் பகுப்பும் கூட‌ loosely-coupled சமாச்சாரமே) அசலாய்ப் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். மற்றபடி, வசன கவிதைகள் எழுதிப் படிப்பதால் எல்லாம் மாறிவிடப்போவதில்லை இந்தப் புராதனப் பேரினத்தின் சரித்திரமும் தரித்திரமும் – புன்னகை அல்லது கண்ணீர் கூடப்பயனில்லை.

தேவை புரிதல் – இந்த Vaginal Monologues யாசிப்பதெல்லாம் அதைத்தான்.

0

காமம் என்பதை வெறும் பெயர்ச்சொல்லாக‌வும் (அதுவும் தொழிற்பெயர்!), கொஞ்சம் கற்பனையாகவும் மட்டுமே ஸ்பரிசித்திருந்த ஓர் இருபத்தியொரு வயது இளைஞனால் இன்றிலிருந்து சரியாய் நான்கரை வருடங்களுக்கு முன்பு வேசியின் கவிதைகள் என்ற தலைப்பில் ஐந்நூறு சிறுகவிதைகள் ‌(மூன்று முதல் ஒன்பது அடிகளுள்அமைந்தமையால் சிறுகவிதை என்றழைக்க விரும்புகிறேன்) எழுதப்பட்டன – கிறுக்கப்பட்டன என்பதே சரி.

அந்தக் கவிதைகள் இவை; அந்த இளைஞன் நான்.

கடந்து போன சமீபங்களில், குறைந்தபட்சம் பத்து முறைகளேனும் அக்கவிதைகளைத் திருத்தியிருக்கிறேன்; பல்வேறு அடிப்படைகளில் சொல், பொருள், வரிசை எல்லாம் கலைத்துப் போட்டு மறுபடி சீராக்கியிருக்கிறேன்; ஓர் அறுவை சிகிச்சைக்கொப்பாக அவற்றின் உருவத்தை, உள்ளடக்கத்தை கூறாக்கிக் கூராக்கியிருக்கிறேன்; கிட்டதட்ட முக்கால்வாசிக்கும் மேல் பலவீனமானவை என்று நிராகரிக்கவும் செய்திருக்கிறேன். சில புதிதாகச் சேர்த்தவை. இறுதியில் மிஞ்சியவை தாம் இந்த நூற்றைம்பது பாக்கள்.

முதலில் இத்தொகுதிக்கு வைத்திருந்த தலைப்பான வேசியின் கவிதைகள் என்பது ஓர் ஆரம்பக்கல்விப் பாடப்புத்தகத்தனத்துடன் இருப்பதாகத்தோன்றியதாலும், அத்தலைப்பில் நவீனத்துவம் அல்லது பின்நவீனத்துவம் போன்றவை கிஞ்சித்தும் இல்லாதிருந்ததாலும்‌, அந்த லேபிளெல்லாம் இல்லாவிட்டால் தீவிர இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாது புத்தக‌ விநியோகஸ்தர்கள், பழைய பேப்பர் வியாபாரிகள் கூட‌ பிரதியை நிராகரிக்கும் அபாயம் இருந்ததாலும் தொடர்புடைய‌ சிலபல பெயர்களைப்பரிசீலித்து (அவற்றில் ஒன்று யோனி; மற்றொன்று அதன் பிரபலமான‌ தமிழ்க்கொச்சை!) இறுதியில் தேர்ந்தது பரத்தை கூற்று.

யோனி என்று தலைப்பு யோசித்தது கூட‌ அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக (மட்டும்) அல்ல.அதை விடப்பொருத்தமாய் இதற்கு வேறொ‌ரு பெயர் இருக்க முடியாது என்பது என் அந்தரங்க நினைப்பு. மென்பொருள் துறையில் வேலை செய்பவர்களைப் பற்றிய ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு கணிப்பொறி என்று பெயர் வைப்பதைப் போல், சாவு மேளம் அடிக்கும் சகோதரர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட ஒரு தடிமன் நாவலுக்கு பறை என்று பெயர் வைப்பதைப் போன்றதே இது. வேசித்தொழிலுக்கு யோனியே குறியீடு. அதைத் திரிதலின்றிப் புரிந்துணரும் பக்குவம் சமூகத்துக்கு வாய்க்க‌ இன்னுமொரு யுக‌ம் தேவை. காத்திருக்கும் பொறுமையில்லாததால் சிறிய ஏற்பாடாகத் தலைப்பை மாற்றினேன்.

அதே போல், புத்தகத்தின் அட்டைக்கு எம்.எஃப்.ஹுசைனின் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஓவியங்களைப் பயன்படுத்தலாம் என்கிற எண்ணத்தை நமது கலாசார காவலர்களின் மேலுள்ள அபிரிமித மரியாதையினால் கைவிட வேண்டியதாயிற்று. பதிலாய் தற்போது அட்டையிலிருப்பது 1907ல் பிக்காஸோவால் வரையப்பட்ட Les Demoiselles d’Avignon என்ற ஆயில் பெயிண்டிங். ஒரு விபச்சார விடுதியில் ஐந்து வேசிகளை காட்சிப்படுத்தும் இதற்கு ஆணாதிக்கம் முதல் காலனியாதிக்கம் வரை பல அர்த்தங்கள் சொல்கிறார்கள்.

இக்கவிதைகள் “Of the Prostitutes, By the Prostitutes, For the Prostitutes” என்ற போதிலும் இவையாவும் யான் கண்டு கேட்டு கற்றுயிர்த்தவையின் ஞாபகச்சில்லுகளே. மற்றப‌டி, வேசியைப் பற்றி எழுத உனக்கென்ன தகுதியிருக்கிறது, உனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம், நீ போயிருக்கிறாயா ஒருத்தியிடமாவது, குறைந்தபட்சம் சாவித்துவாரம் வழியாகவேனும் பார்த்திருக்கிறாயா போன்ற அறிவுஜீவிக் கேள்விகளையெல்லாம் எளிமையான ஒரு புன்னகையின் துணையோடு கடந்து போக உத்தேசித்திருக்கிறேன்.

இங்கே நான் நிறுத்துகிறேன் – இனி வேசிகள் பேசுவார்கள்.

(பரத்தை கூற்றின் முன்னுரை)

0

சி. சரவணகார்த்திகேயன்