பாலியல் குற்றம் என்பது என்ன?

fear-of-female-victim-of-domestic-violenceகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.

பொது மக்கள், மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சட்ட வல்லுனர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் என பல தரபட்டவர்களையும் விசாரித்து, கலந்தாலோசித்து தனக்கு கொடுக்கப்பட்ட கெடுவுக்கள் வர்மா குழு தன்னுடைய பரிந்துரையை அரசாங்கத்திற்கு வழங்கியது.

நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. பின்னர் அரசாங்கம் பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 வருடம் The Criminal Law (Amendment) Act, 2013 என்ற சட்ட வடிவத்தை பெற்றது.

மேற்சொன்ன சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே இருக்கும் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ள சில சட்ட பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் சில சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சட்ட திருத்தத்தால் இதுகாரும் குற்றமாக பார்க்கப்படாத சில விவகாரங்கள் குற்றமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருத்தம் செய்யப்பட்ட சில குற்றங்களுக்கு தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் புதிதாக புகுத்தப்பட்ட சில குற்றங்கள்

திராவகம் வீசுதல் 

மற்றவர்கள் மீது திராவகம் வீசினால் இ.த.ச 326 ஏ பிரிவின் படி 10 ஆண்டுகள் சிறையில் தொடங்கி ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். கூடவே 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மற்றவர்கள் மீது திராவகம் வீச முயற்சித்தால் இ.த.ச 326 பி பிரிவின் படி 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்

பாலியல் தொந்தரவு செய்தல் (Sexual Harassment)– இ.த.ச 354 ஏ

 1. தவறான நோக்கத்தாடு ஒருவரை தீண்டுதல் மற்றும் வெளிப்படையாக வன்புணர்ச்சிக்கு அழைத்தல்
 2. வன்புணர்ச்சி வைத்துக்கொள்ள மற்றவரை அழைத்தல் அல்லது வேண்டுதல்
 3. மேற்சொன்ன குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை உறுதி
 4. பாலியில் ரீதியாக மற்றவர்கள் மீது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல் அல்லது குறிப்பிடுதல்
 5. வலுக்கட்டாயமாக ஒருவரை ஆபாச படங்களை பார்க்கச் செய்தல்
 6. மற்றவர்கள் மீது பாலியில் ரீதியாக தேவையற்ற செய்கைகளில், வார்த்தைகளில் ஈடுபடுதல்

3 முதல் 5 வரை குறிப்பிடப்பட்ட குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படும்.

பொது இடங்களில் பெண்களை மானபங்க படுத்தல் (ஆடைகளை களைய செய்தல் – Public Disrobing of Women)- இ.த.ச 354 பி

மேற்சொன்ன குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

பெண்களின் அந்தரங்கத்துக்கு குந்தகம்/ பாதிப்பு / ஊறு விளைவிப்பது/ பங்கம் ஏற்படுத்துவது (Voyeurism) இ.த.ச 354 சி

ஒரு பெண் தனிமையில் இருக்கும் (பொது இடங்களில் இல்லாத போது) போது அவளுடைய அந்தரங்கங்களை பார்ப்பது அல்லது படம்பிடிப்பது குற்றமாகும்.

இதற்கு தண்டனை – முதல் முறை இந்த குற்றத்தை நிகழ்த்தினால் ஓர் ஆண்டுக்கு குறையாமல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை, கூடவே அபராதமும் விதிக்கப்படும். இரண்டாம் முறையாக மேற்சொன்ன குற்றத்தை ஒருவர் செய்தார் என்றால் அவருக்கு மூன்றாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

ஒரு நபரை அவரது விருப்பத்துக்கு மாறாக பின் தொடர்தல் (Stalking) – இ.த.ச 354 டி

ஒருவருக்கு விருப்பம் இல்லாத போதும் அவரை பின் தொடர்தல் அல்லது இணையத்தின் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு மின்னணு தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி மற்றவர்களை தொடர்வதோ (தொந்தரவு செய்வதோ) அல்லது வேவு பார்த்து மன உளைச்சலை ஏற்படுத்துவதில் ஈடுபட்டால் அவர் மேற்சொன்ன குற்றத்தை இழைத்தவர் ஆவார்.

குறிப்பிட்ட குற்றத்தை இழைத்தவருக்கான தண்டனை ஓர் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.

ஆள் கடத்துதல் – Human Trafficking – இ.த.ச 370

யாரேனும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காகவோ, அல்லது அடிமைப்படுத்துவதற்காகவோ, அல்லது கட்டாயமாக உடல் உறுப்புகளை எடுப்பதற்காகவோ ஆள் கடத்துதலில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை (கடத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை பொருத்து) சிறை தண்டனை விதிக்கப்படும். கடத்தப்பட்ட நபரை வேலைக்கு ஆட்படுத்துவதும் குற்றமாகும்.

இந்த சட்ட திருத்தங்களில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது கற்பழிப்பு குற்றத்தில் தான். இது நாள் வரை கற்பழிப்பு (rape) என்று சொல்லப்பட்ட குற்றம் சட்ட திருத்தத்திற்கு பிறகு பாலியல் தாக்குதல் Sexual Assault என்று அழைக்கப்படுகிறது. பாலியல் தாக்குதல் என்ற குற்றம் விரிவாக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை ’கற்பழிப்பு’,’பலாத்காரம்’, ’வன்புணர்ச்சி’என்றால், என்ன மாதிரியான குற்றம் என்று அனைவருக்கும் தெரிந்த விதத்திலிருந்து மேலும் சில விவகாரங்களை உட்சேர்த்து பாலியல் தாக்குதல் என்றால் என்ன? என்று திருத்தப்பட்ட சட்டம் ஒரு பெரிய விளக்கத்தை அளித்திருக்கிறது.

Sexual Assault: Sexual assault means –

(a) The introduction (to any extent) by a man of his penis, into the vagina(which term shall include the labia majora), the anus or urethra or mouth of any woman or child–

(b) the introduction to any extent by a man of an object or a part of the body (other than the penis) into the vagina(which term shall include the labia majora) or anus or urethra of a woman

(c) the introduction to any extent by a person of an object or a part of the body (other than the penis) into the vagina(which term shall include the labia majora) or anus or urethra of a child.

(d) manipulating any part of the body of a child so as to cause penetration of the vagina (which term shall include labia majora) anus or the urethra of the offender by any part of the child’s body;

In circumstances falling under any of the six following descriptions:

Firstly – Against the complainant’s will.

Secondly – Without the complainant’s consent.

Thirdly – With the complainant’s consent when such consent has been obtained by putting her or any person in whom the complainant is interested, in fear of death or hurt.

Fourthly – With the complainant’s consent, when the man knows that he is not the husband of such complainant and that the complainant’s consent is given because the complainant believes that the offender is another man to whom the complainant is or believes herself to be lawfully married.

Fifthly – With the consent of the complainant, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by the offender personally or through another of any stupefying or unwholesome substance, the complainant is unable to understand the nature and consequences of that to which such complainant gives consent.

Sixthly – With or without the complainant’s consent, when such complainant is under eighteen years of age. Provided that consent shall be a valid defence if the complainant is between sixteen years and eighteen years of age and the accused Person is not more than five years older.

இந்தப் பாலியல் தாக்குதல் சாதரணமானதாக இருந்தால் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு ஏழாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதே அந்தக் குற்றம் பெரியதாக இருந்தால் பத்தாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பாலியல் தாக்குதலினால் ஒருவர் இறந்துவிட்டால் அல்லது அந்த தாக்குதலின் காரணமாக ஒருவர் நடைபிணமாக ஆனார் என்றால், அத்தகைய குற்றத்தை இழைத்தவருக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.

கூட்டாக சேர்ந்து பாலியல் தாக்குதலில் (gang rape) ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவிற்காகவும் புணர் நிர்மானத்திற்காகவும் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும்.

ஆனால் அனைவரும் விறுவிறுப்போடு எதிர்பார்த்த, காரசாரமாக விவாதிக்கப்பட்ட ஒரு விவகாரம் மேற்சொன்ன சட்ட திருத்தத்தில் இல்லை அதுதான்  “விவாக கற்பழிப்பு’ – Marital rape.

அது என்ன விவாக கற்பழிப்பு? திருமணமான தம்பதிகளிடையே, அதாவது கணவன், மனைவியின் விருப்பதிற்கு மாறாக கட்டாயமாக உறவு வைத்துக்கொண்டால் அதற்கு பெயர்தான் விவாக கற்பழிப்பு. நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையில் விவாக கற்பழிப்பு குற்றமாக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதை செய்யவில்லை. காரணம்? மதம் தான். இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் மனைவி கணவனுக்கு கட்டுபட்டே ஆகவேண்டும் (அனைத்து விவகாரத்திலும்) என்ற சம்பிரதாயம் உள்ளது. அதனால் எதற்கடா வம்பு, ஏற்கனேவே நிலைமை சரியில்லை, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்க வேண்டாம், அதனால் விவாக கற்பழிப்பை குற்றமாகி மாட்டிகொள்ள வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் தான் விவாக கற்பழிப்பு குற்றமாக்கப்படவில்லை.

 (ஆழம் மே 2013 இதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்படாத முழு வடிவம்).

மூடுமந்திரம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்

Right-To-Informationபகலில் கிடைத்த இரண்டாவது சுதந்தரம் என்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனையாகவும்  சொல்லப்படுவது 2005ல் நடைமுறைக்கு வந்த தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.  இந்தச் சட்டம் இயற்றப்பட்ட நோக்கம் அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதன் நிர்வாக அதிகார அமைப்புகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும். அதன் வாயிலாக பொதுமக்களின் வேண்டுகைகள், கோரிக்கைகள் ஊழலின்றி, லஞ்சமின்றி நிறைவேற்றப்படுவதை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.

அந்தச் சட்டத்துக்கு இணங்க நடுவண் தகவல் ஆணையமும் மாநிலம் தோறும் மாநில தகவல் ஆணையங்களும் நிறுவப்பட்டன. இதில் துவக்கம் முதலே நடுவண் தகவல் ஆணையம் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தின்படி அரசுப் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் சமூகப் பணிகளில் முன்னணியாக அறியப்பட்ட பிரபலங்கள் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தச் சட்டம் 31 ஷரத்துக்கள் மட்டுமே கொண்ட சிறப்பான சட்டம் என்பதுடன், ஒவ்வொரு ஷரத்தும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக அமைக்கப்பட்டிருப்பதால் இதுவரை பணியாற்றிய பல தகவல் ஆணையர்கள் மிகச் சிறப்பாக இது குறித்த தாவாக்களை தீர்த்து வைத்துள்ளனர்.

குறிப்பாக நடுவண் தகவல் ஆணையம் உயர்நீதிமன்றங்களுக்கு இணையாக இரு ஆணையர்கள் அமர்வு, முழு அமர்வு என்றெல்லாம் அமர்ந்து விசாரித்து தீர்வுகள் கண்டிருக்கிறது.  பொது அதிகார அமைப்புகளின் தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டிருக்கிறார்கள். அத்தகைய சூழலிலும் சட்டத்தின் குறிப்பிட்ட அதிகார வரம்பில் நின்று பல ஆணையர்கள் நல்ல தீர்வுகளை தந்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு தகவல் ஆணையம் குறித்த வழக்கு ஒன்றின் தீர்வில் இந்திய உச்ச நீதிமன்றம் (பார்க்க பெட்டியில் குறிப்பிட்டுள்ள தீர்வு) தகவல் ஆணையர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இடம் பெறும் வகையில் சட்டக்கல்வியில் தேறி அதில் அனுபவம் பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், இரு ஆணையர்கள் அமர்வு எனில் அதில் ஒரு ஆணையர் சட்டம் பயின்றவராக இருக்க வேண்டும் என்றும் தீர்வளித்தது. அந்த தீர்ப்பு நாடு முழுவதும் அந்த சட்டத்தை பயன்படுத்துபவர்கள், ஆணையர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் மத்தியில் கருத்து முரண்களை, விவாதங்களை உருவாக்கியது. அது குறித்த நடுவண் அரசின் மேல்முறையீடு / சீராய்வு மனு உச்ச நீதிமன்றம் முன்பாக நிலுவையிலுள்ளது.

IN THE SUPREME COURT OF INDIA
CIVIL ORIGINAL JURISDICTION
WRIT PETITION (CIVIL) NO. 210 of 2012
Namit Sharma … Petitioner
Versus
Union of India … Respondent
J U D G M E N T
Swatanter Kumar, J.

2. … Thus, we hold and declare that the expression ‘knowledge and experience’ appearing in these provisions would mean and include a basic degree in the respective field and the experience gained thereafter. Further, without any peradventure and veritably, we state that appointments of legally qualified, judicially trained and experienced persons would certainly manifest in more effective serving of the ends of justice as well as ensuring 102 better administration of justice by the Commission. It would render the adjudicatory process which involves critical legal questions and nuances of law, more adherent to justice and shall enhance the public confidence in the working of the Commission. This is the obvious interpretation of the language of these provisions and, in fact, is the essence thereof…..

7. It will be just, fair and proper that the first appellate authority (i.e. the senior officers to be nominated in terms of Section 5 of the Act of 2005) preferably should be the 104 persons possessing a degree in law or having adequate knowledge and experience in the field of law….

8. The Information Commissions at the respective levels shall henceforth work in Benches of two members each. One of them being a ‘judicial member’, while the other an ‘expert member’. The judicial member should be a person possessing a degree in law, having a judicially trained mind and experience in performing judicial functions. A law officer or a lawyer may also be eligible provided he is a person who has practiced law at least for a period of twenty years as on the date of the advertisement. Such lawyer should also have experience in social work. We are of the considered view that the competent authority should prefer a person who is or has been a Judge of the High Court for appointment as Information Commissioners. Chief Information Commissioner at the Centre or State level shall only be a person who is or has been a Chief Justice of the High Court or a Judge of the Supreme Court of India.

9. The appointment of the judicial members to any of these posts shall be made ‘in consultation’ with the Chief Justice 105 of India and Chief Justices of the High Courts of the respective States, as the case may be….

நாடு முழுவதிலும் மற்றும் தமிழகத்திலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பலர் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளனர். மறுபுறம் நாட்டின் வட மாநிலங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களை, தவறுகளை, ஆக்கிரமிப்பு போன்றவைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பல தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.

இத்தகைய சூழ்நிலையின் பின்னணியில் தமிழக தகவல் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது? சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொதுமக்களில் பலர் இந்தச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசு அலவலகங்கள்? ஆய்வு செய்தால் அதிர்ச்சியான விவரங்களே கிடைக்கின்றன.

நடுவண் தகவல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே பல வழக்குகளில் தகவல் தருவதில் உள்ள தாமதத்தை ஆணையம் கண்டித்திருக்கிறது. தகவல் அளிக்கப்பட்டிருந்தாலும் தாமதத்துக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் அத்தகைய அபராத விதிப்பு நடவடிக்கைகள் அல்லது பொது அதிகார அமைப்புகளான அரசு அலுவலர்களைக் கண்டிப்பது என்பது தமிழகத்தைப் பொருத்தவரை அதிகமில்லை.

அரசு அலுவலகங்கள் துறை சார்ந்த தகவல்களை தாமாகவே முன்வந்து தமது இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்றும்,  அரசாணைகள், உத்திரவுகள், பதிவுகள் போன்றவற்றை ஆவணப்படுத்தக் கூடிய விவரங்களை மின்மயப்படுத்தி அந்தந்த துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டுமெனவும் சொல்லப்பட்டுள்ளது. நடுவண் தகவல் ஆணையமும் பல மாநில தகவல் ஆணையங்களும் சட்டத்தின்படி முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

 • ஆனால் தமிழக தகவல் ஆணையத்தின் இணையத்தளத்தில் ( http://www.tnsic.gov.in) நுழைந்தால் அரசாணை எண் 136, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 31/08/2012ன் படி நியமனம் செய்யப்பட்ட ஆணையர்களின் பெயர்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை.
 • புள்ளி விவரங்கள் எனும் இணைப்பைத் தொட்டால் Under Construction என்று வருகிறது. சட்டம் இயற்றி 8 ஆண்டுகளாக புள்ளி விவரங்களை வெளியிடாத ஆணையம், எவ்வாறு மற்ற அதிகார அமைப்பின்மீது தீர்வளிக்க தார்மீக உரிமை பெறும்?
 • ஆணையர்களின் பணி ஒதுக்கீடு என்று பார்த்தால் இரண்டு ஓய்வு பெற்ற ஆணையர்களுக்கு முன்னதாக பணி ஒதுக்கீடு செய்த விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
 • வழக்கு தீர்வுகள் டிசம்பர் 2012 வரை மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டத்தின்படி ஆண்டு அறிக்கைகள் பதிவேற்றப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு ஆணையத்தால் மட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
 • சுற்றறிக்கைகள், உத்திரவுகள் என்ற வகையில் எந்த உத்திரவும் இணையத்தில் பதிவேற்றப்படவில்லை.

ஏற்கெனவே தமிழ் நாடு தகவல் ஆணையத்துக்கு முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சியின் கருத்தை கேட்காமல் தலைமைச் செயலாளர் (ஓய்வு) திரு. ஸ்ரீபதி இ.ஆ.ப., அவர்களை நியமித்ததில் தமிழகம் முழுவதிலும் ஆர்வலர்களிடையே பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.  தலைமைச் செயலாளராக பணிபுரிந்தபோது தகவல் அறியும் உரிமைச் சட்ட தீர்வுகளை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்திருப்பவர் என்பதால் ஒரு அரசியல் கட்சி சார்ந்து செயல்பட வாய்ப்புள்ளது என்கிற ஐயம் காரணமாக அவர் நியமனத்தை எதிர்த்து சிலர் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள்.

சில தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு தமிழக ஆணையம் தற்போது எவ்வாறு செயல்படுகிறது என கேட்டேன். சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவரும், த.அ.உ.சட்டத்தை மிக அதிக அளவில் பயன்படுத்தி வருபவருமான திரு வி.அன்பழகனின் (அன்பு) மறுமொழி இது. “எனது தரப்பு இரண்டாவது மேல்முறையீடுகள் ஏறக்குறைய 36 எண்ணம் ஆணையம் முன்பாக விசாரிக்கப்படாமல், விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையிலுள்ளது.” இன்றும் தலைமை தகவல் ஆணையர் (ஸ்ரீபதி) காவல்துறை சார்ந்த த.அ.உ. சட்ட வழக்குகளைத் தானே விசாரிக்கும் வகையில் பட்டியலிட்டுக் கொண்டு பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளை தள்ளுபடி செய்துவிடுகிறார் என்றும் அவர் தெரிவிக்கிறார். மேலும், பல வழக்குகளை விசாரிக்காமலேயே யார் மீது புகார் சொல்லப்பட்டுள்ளதோ அந்தப் பொது தகவல் அலுவலருக்கே புகாரை அனுப்பி தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை தபாலில் அனுப்பிய ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் என்ற வகையில் 3 – 4 வரி உத்திரவுகளாக ஆணையம் பல வழக்குகளை தீர்வு செய்து வருகிறது. இது சட்டம் இயற்றிய நோக்கத்தையே சிதறடிப்பதாக உள்ளது என்கிறார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று 76 வயதாகும் இன்றைய நிலையிலும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பலரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சித்து வரும் மற்றொரு ஆர்வலர் பொள்ளாச்சி திரு பாஸ்கரன்.  அவரிடம் இது பற்றிக் கேட்டபோது,
தமிழகத் தகவல் ஆணையம் ஏறக்குறைய செயல்படாத நிலையில் உள்ளது என்றார். “சட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் – நடுவண் அரசுக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் கொண்டு செல்லும் வழக்கில் முந்தைய மத்திய தகவல் ஆணைய தீர்வுகள், அல்லது தமிழக தகவல் ஆணைய தீர்வுகளை சுட்டியாக (Citation) தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டோம்.  ஆனால், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஆணையர்களில் இருவர் அது முந்தைய ஆட்சி கால தீர்வு என்றும் தற்போது எங்கள் ஆட்சியின் தீர்வை கேளுங்கள் என்றும் சொல்லிவிட்டார். தங்கள் நியமனத்தையே ஏதோ ஆளுங்கட்சி சார்ந்த மாவட்டச் செயலாளர் நியமனம் போல் கருதி ஓப்பன் கமெண்ட் செய்தது எனது நண்பர்களின் வழக்கில் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் வேதனை தரக்கூடியது.”

நமக்கு அருகிலுள்ள கேரள- ஆந்திர- கர்நாடக மாநில அரசுகளின் தகவல் ஆணைய இணையளங்களைப் பார்வையிட்டால், அவர்கள் அவ்வப்போது தகவல்களை – ஆணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதும், 4 – 5 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை பதிவேற்றம் செய்திருப்பதையும் காண முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், தகவல் ஆணையர்களின் சொத்து விவரங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

அய்யன் வள்ளுவர் குறள் வழிநின்று ஆட்சி நடைபெறும் நமது மாநிலத்தில்,

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

என நடுவுநிலைமை தவறாது, வெளிப்படைத்தன்மையுடன் நமது தகவல் ஆணையம் செயல்படவேண்டுமென்பது ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் அவா. சீர்படுமா ஆணையம்? பொறுத்திருந்து பார்ப்போம்.

0

எஸ். சம்பத்

கருணையும் மரணமும்

Afzal Guruஇந்திய அரசாங்கம் சமீப காலமாக மக்களுக்கு காலையில் சுட சுட செய்திகளை வழங்கிவருகிறது. 26/11 மும்பை தாக்குதல் கைதி அஜ்மல் கசாப் பூனே ஏரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதைத் தொடர்ந்து டில்லி பாராளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளி அப்சல் குரு டில்லி திகார் சிறையில் கொல்லப்பட்டார். இந்த மரண தண்டனைகளுக்கெல்லாம் காரணம், தூக்கிலிடப்பட்டவர்களின் கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதுதான். அஜ்மல் கசாப், அப்சல் குரு சர்ச்சை ஓய்வதற்குள் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் மரண தண்டனை மீதான கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் இப்பொழுது தடாலடியாக ஒவ்வொருவராத தூக்கிலிடப்படுவதை மக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

ஏன் அவசரம்?

2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் அரசாங்கம் இவ்வாறு அவசரமாக கைதிகளை தூக்கிலிடுகிறார்கள் என்கிறார்கள் சிலர். இந்துக்களின் ஓட்டு வங்கியை குறிவைத்தே அஜ்மல் கசாப்பும், அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டதாக சிலர் விமரிசனமும் செய்கிறார்கள். எது எப்படி இருப்பினும் ஜனாதிபதியின் அதிரடி முடிவு சட்டப்படி சரிதானா என்று பலருக்கு சந்தேகம் இருந்துவருகிறது.

உண்மையில், மரண தண்டனை கைதிகளின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்வதில் ஜனாதிபதிக்கு அப்படியொன்றும் பெரும் பங்கு இல்லை. அவர் மற்ற விவகாரங்களைப் போல் இதிலும் ஒரு ரப்பர் ஸ்டாம்புதான். இந்திய அரசியல் சட்டத்தின் 72 ஆம் ஷரத்தின்படி, உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தன் மீது வழங்கப்பட்ட மரண தண்டனையை நிராகரிக்கக் கோரி ஜனாதிபதியினிடம் கருணை மனு அனுப்பி வைக்கலாம் (ஒரு மாநிலத்தின் ஆளுனரிடமும் இந்திய அரசியல் அமைப்பின் 161 வது ஷரத்தின்படி கருணை மனு தாக்கல் செய்யலாம். இது குறித்து மேலும் அறிய  தமிழ்பேப்பரில் முன்னர் வெளியான ஹாய் அட்வகேட் பகுதியைப் பார்க்கவும்).

ஜனாதிபதி, தன்னிடம் வந்து சேரும் கருணை மனுக்கள்மீது தன்னிச்சையாக முடிவெடுக்கமுடியாது. ஒவ்வொரு கருணை மனுவையும் உள்துறை அமைச்சகத்தின்மூலம் மத்திய மந்திரி சபையின் ஆலோசனைக்கு அவர் அனுப்பி வைப்பார். மத்திய மந்திரி சபை தன்னுடைய முடிவை உள்துறை அமைச்சகத்தின்மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும். மந்திரி சபை எடுத்த முடிவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. சம்பந்தப்பட்ட மரண தண்டனை கைதியை தூக்கிலிடவேண்டும் என்று அரசாங்கம் முடிவெடுத்தால் அதை ஜனாதிபதி ஏற்றுதான் ஆகவேண்டும். வேண்டுமென்றால் மறு பரிசீலனை செய்ய மறுபடியும் கருணை மனுவை மந்திரி சபைக்கு அனுப்பி வைக்கலாமே தவிர, இந்த விவகாரத்தில் ஜனாதிபதியால் செய்வதற்கு மேலதிகம் ஒன்றுமில்லை. அதனால் ஜனாதிபதியை இதில் குற்றம் சொல்லிப் பலனில்லை.

யார் காரணம்?

கருணை மனு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்பட்டால் அதற்கு முழுக் காரணமும் மத்திய அரசுதான். அதே போல் கருணை மனுவின்மீதான இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணமும் மத்திய அரசுதான். குறிப்பிட்ட ஒரு மனு ஏன் துரிதமாகச் செயல்படுத்தப்படுகிறது, இன்னொன்றுக்கு மட்டும் ஏன் காலதாமதம் போன்ற கேள்விகளுக்கு அரசுதான் பதிலளிக்கவேண்டும்.

கருணை மனுவும் தாமதமும்

ஒரு கருணை மனுவை இத்தனை நாள்களுக்குள் விசாரித்து முடிவு வழங்கவேண்டும் என்று சட்டவிதிகளெல்லாம் இல்லை. ‘எங்களிடம் 33 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் முடிவெடுப்போம். அதனால் ஏற்படக்கூடிய கால அவகாசத்தால்தான் கருணை மனுக்களின் மீதான முடிவு தாமதப்படுகிறது‘ என்று அரசாங்கம் சொல்லி வருகிறது. ஆனால், முன்னதாக தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு பின்னால் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். பின்னதாக தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் முன்னதாகத் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் (ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிளவேந்திரன்) கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ’கருணை மனுவின் மீதான முடிவை அரசாங்கம் மிகவும் தாமதமாக சுமார் 9 ஆண்டுகள் கழித்து எடுத்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களுடைய கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நாங்கள் உயிரோடு இருப்போமா அல்லது கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவோமா என்ற மன சஞ்சலத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறோம். இது இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது ஷரத்துக்கு எதிரானது. எனவே எங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும்.’

இந்த மனுதாரர்கள் தங்கள் வழக்குக்கு முன்மாதிரியாக, ஏற்கெனவே இதே போன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டுகின்றனர். அது, வைத்தீஸ்வரன் -எதிர்- தமிழ் நாடு அரசு – (1983) 2 SCR 348. அதில் குறிப்பிடப்படும் விஷயங்கள் இவை. ‘இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது ஷரத்தின்படி, கவுரவத்துடன் வாழவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. (பந்து முக்தி மோர்ச்சா -எதிர்- மத்திய அரசாங்கம் (1984) 3 SCC 161). சிறையில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. (சார்ல்ஸ் சோப்ராஞ் -எதிர்- திகார் சிறை அதிகாரி – AIR 1978 SC 514; சுனில் பாத்ரா – எதிர் – டில்லி நிர்வாகம் AIR 1994 SC 1675). வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் எங்கள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் மரண பயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறாம். எங்கள் கருணை மனு மீதான முடிவை அரசாங்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தாமதப்படுத்தியதின் மூலம் எங்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையால் எங்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்கிறது. எனவே எங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும்.’

வைத்தீஸ்வரனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து பல மரண தண்டனை கைதிகள், தங்களுடைய கருணை மனுவின் முடிவை அரசாங்கம் தாமதமாக வெளியிட்டது. அதனால் நாங்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானோம் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

உச்ச நீதிமன்றத்துக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. ஒரு கொலை வழக்கை மூன்று நீதிமன்றங்கள் விசாரித்து மரண தண்டனை வழங்குகிறது. அதாவது சாட்சிகளை விசாரித்து தீர்ப்பை வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம் (கீழ் நீதிமன்றம்); அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம்; பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம். இந்த மூன்றும் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும் என்று ஏகமனதாக முடிவெடுக்கிறது. இந்நிலையில், காலதாமதத்தை முன்னிறுத்தி ஆயுள் தண்டனையாக மாற்றுவது சரிதானா? திரிவேனிபென் – எதிர்- குஜராத் அரசு – 1989 1989 AIR SC 1335 என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய வைத்தீஸ்வரன் வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு ஆட்படுத்தியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பென்ச் திரிவேனிபென் வழக்கை விசாரித்தது. முடிவில் பின்வரும் தீர்ப்பை வெளியிட்டது.

‘ஒரு நீதிமன்றம் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய பிறகு, சம்பந்தப்பட்ட மரண தண்டனை கைதி ரிட் மனு தாக்கல் செய்து ’தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைளுக்கு எதிரானது’ என்று வாதிடமுடியாது. கருணை மனுவை முடிவெடுப்பதில் அரசாங்கம் இரண்டாண்டுகள் காலம் தாழ்த்தியதால் வைத்தீஸ்வரன் வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது தவறானது. குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு கருணை மனுவின் மீதான முடிவை ஒரு அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று கட்டளையிட முடியாது. கருணை மனுவின்மீதான விசாரணையை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதை காலதாமதமாக கருதமுடியாது. ஆனால் காரணமே இல்லாமல் ஒரு அரசாங்கம் கருணை மனுவின் மீதான தன்னுடைய முடிவை தாமதப்படுத்தினால் அதை கருத்தில் எடுத்துக்கொண்டு மரண தண்டனை கைதிகளுக்கு தகுந்த பரிகாரங்களை நீதிமன்றம் வழங்கலாம். ஆனால் அப்படி தண்டனையை குறைப்பதற்கு முன்னர் குற்றத்தின் தன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.’

கருணை மனுமீதான காலதாமதமான முடிவை எதிர்த்துதான் ரிட் மனு தாக்கல் செய்யலாமே தவிர, கருணை மனுவை தனக்கு சாதகமாக ஜனாதிபதி முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கத்தை எதிர்த்து மரண தண்டனை கைதி ரிட் மனு தாக்கல் செய்யமுடியாது. ஆனால் ஆந்திர மாநில ஆளுனர் ஒரு மரண தண்டனை கைதியின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். ஆந்திர ஆளுனர் முடிவு தவறானது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆந்திர ஆளுனர் கருணை மனுவை சரியாக யோசிக்காமல் முடிவெடுத்திருக்கிறார். அவர் அவ்வாறு முடிவு எடுத்ததற்கு காரணங்கள் தகுந்ததாக இல்லை. ஆளுனர் தன் முடிவை எடுப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் அவர் பார்வைக்கு வழங்கப்படவில்லை. எனவே ஆளுனர் எடுத்த முடிவு தவறானது. சம்பந்தப்பட்ட கைதியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது சரியில்லை என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. (எப்புரு சுதாகர் -எதிர்- ஆந்திர அரசு – AIR 2006 SC 3385).

ராஜிவ் கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 2011ல் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. கருணை மனுவை முடிவெடுப்பதில் அரசாங்கம் தேவையற்ற காலதாமாதம் செய்திருப்பதாக மேற்பஐ மூவரும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில்தான் மேற்சொன்ன வீரப்பன் கூட்டாளிகளும், ’தங்கள் கருணை மனுக்களை அரசாங்கம் தேவையற்ற கால தாமதத்துடன் நிராகரித்திருக்கிறது’ என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜிவ் காந்தி கொலையாளிகளின் ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் வேறொரு பென்ச் முடிவை வெளியிடும் தருவாயில் இருப்பதால், அந்த முடிவு வரும் வரை வீரப்பன் கூட்டாளிகளின் மனுவின் மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதற்கிடையில், மூவருக்கும் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றாதபடி இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது. ராஜிவ் கொலையாளிகளின் ரிட் மனு தீர்ப்புக்காக வீரப்பன் கூட்டாளிகள் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலவே பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

0

பதிப்புரிமை: எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்துக்கு

copyright lockபதிப்பாளர்கள், எண்ணற்ற எழுத்தாளர்கள், எண்ணிலடங்கா புத்தகங்கள் என்று சென்னை புத்தக கண்காட்சி நம்மை மலைக்கவைக்கிறது.  தினம் தினம் புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள். தங்கள் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட முடியாதவர்கள் பதிப்பாளர்களை நாடிச் செல்கிறார்கள். பதிப்பாளர்களால் புத்தகங்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும். அதற்கான கட்டமைப்பு அவர்களிடம் உண்டு. உள்நாட்டின் மூலைமுடுக்கு தொடங்கி  வெளிநாடுகள் வரை ஒரு புத்தகத்தைக் கொண்டுசெல்லமுடியும் என்றால் அது பதிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்களால்தான் முடியும்.

அதேபோல் என்னதான் வியாபார உத்தி கடைப்பிடிக்கப்பட்டாலும் புத்தகம் சுவாரஸ்யமாக இல்லை என்றால் வாசகர்கள் வாங்கமாட்டார்கள். புத்தகம் விற்காது. பதிப்பாளர்களுக்கு நட்டம்தான். ஒரு புத்தகம் மக்களிடையே பேராதரவைப் பெற வேண்டுமென்றால் நல்ல எழுத்தாளரும் தேவை, நல்ல பதிப்பாளரும் தேவை. இன்றைய புத்தக வியாபாரத்தில் பதிப்பாளரைச் சார்ந்து எழுத்தாளரும், எழுத்தாளரைச் சார்ந்து பதிப்பாளரும் இருக்கின்றனர்.

ஏனைய தொழிலைப் போல புத்தக வெளியீட்டிலும் வருமானத்தை வைத்துதான் வியாபாரம். புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பதிப்பாளரும், எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட விகிதக்கணக்கில் பங்கிட்டுக் கொள்கிறார்கள். புத்தக விற்பனையில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வருமானத்துக்கு ராயல்டி என்று பெயர்.

பிரபலமான எழுத்தாளர் என்றால் அதிகமான ராயல்டி கிடைக்கும். புதிய எழுத்தாளர் என்றால் பதிப்பாளர் நிர்ணயிக்கும் ராயல்டிதான். சில எழுத்தாளர்களுக்கு, அவர்கள் புத்தகத்தை எழுதத் தொடங்கும் முன்பே பதிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ராயல்டி கொடுத்து விடுகிறார்கள். உதாரணத்துக்கு, ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதி வரும் ஜே.கே.ரவுலிங் என்ற எழுத்தாளருக்கு ஸ்காலஸ்டிக் என்ற புத்தக நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை முன்பணமாக கொடுத்தது. ரவுலிங் எழுதிய சார்சரர்ஸ் ஸ்டோன் என்ற புத்தகம் உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்ந்தன.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. சந்தையில் வெளிவரும் புத்தகத்தின் பதிப்புரிமை யார் வசம் இருக்கிறது?  எழுத்தாளரிடமா? அல்லது பதிப்பாளரிடமா?

ஒப்பந்த அடிப்படையில் ஒரு எழுத்தாளர் பதிப்பாளருக்கு புத்தகம் எழுதிக்கொடுத்தார் என்றால், அந்த ஒப்பந்தத்தின்படி பதிப்பாளரிடம்தான் பதிப்புரிமை இருக்கும். ஏனைய சமயங்களில் எழுத்தாளரிடம் மட்டுமே புத்தகத்தின் பதிப்புரிமை இருக்கும். இந்த விவகாரத்தில் கேரள நீதிமன்றத்தின் வி.டி.தாமஸ் -எதிர்- மலையாள மனோரமா (AIR 1989 Ker 49)  என்ற வழக்கில் வெளியிட்ட தீர்ப்பு பிரபலமானது.

வி.டி.தாமஸ் மலையாள மனோரமா என்ற பத்திரிகை நிறுவனத்தில் கேலிச் சித்திர ஓவியராக வேலை பார்த்து வந்தார். அவர் ஊழியராக இருந்த சமயத்தில் மலையாள மனோரமா பத்திரிக்கைக்கு நிறைய கார்டூன்களை வரைந்துவந்தார். அதில் பொப்பன் மற்றும் மோலி என்ற கார்டூன்கள் மிகவும் பிரபலமானவை. மலையாள மனோரமா இந்த கார்டூன்களை வைத்து நிறைய படைப்புகளை வெளியிட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வி.டி. தாமஸ் மலையாள மனோரமா நிறுவனத்தை விட்டு வெளியேறி, கலா கௌமுதி என்ற பத்திரிக்கைக்கு பொப்பன், மோலி கார்டூன்களை வரைந்து கொடுத்தார். மலையாள மனோரமா வி.டி. தாமஸ் மீது வழக்கு தொடர்ந்தது.  வி.டி.தாமஸ் தங்களுடைய நிறுவனத்தில் சம்பளத்திற்காக வேலை பார்த்தபோது உருவாக்கிய கார்டூன்கள்தான் இந்த பொப்பன் மற்றும் மோலி. ஆகவே, இந்த கார்டூன்களின் மீதான பதிப்புரிமை தங்களுடையது என்றது மலையாள மனோரமா தரப்பு. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வி.டி.தாமஸ் மலையாள மனோரமாவுக்காக வரைந்து கொடுத்த பொப்பன், மோலி கார்டூன்களின் பதிப்புரிமை மலையாள மனோரமாவிடம் இருப்பதாகவும், அதைத் தவிர வி.டி.தாமஸ் மலையாள மனோரமாவை விட்டு வெளியே வந்த பிறகு வரைந்த ஏனைய பொப்பன், மோலி கார்டூன்களின் மீது மலையாள மனோரமா சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பை வெளியிட்டது.

சரி, ஒரு எழுத்தாளருக்கு தன்னுடைய படைப்புகளின் மீது எத்தனை ஆண்டுகள் பதிப்புரிமை இருக்கிறது? அவரது ஆயுள் முழுவதற்கும் உண்டு. பின்னர் அவர் இறந்து ஒருவருடம் கழிந்து 60 ஆண்டுகள் வரை அவருடைய வாரிசுகளுக்குப் பதிப்புரிமை உண்டு. பதிப்புரிமை காலம் முடிந்த பிறகு, ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பொதுவில் வந்துவிடும். பொதுவில் வந்த பிறகு அந்த புத்தகத்தை யார்வேண்டுமானாலும் அச்சிடலாம், வியாபாரம் செய்யலாம். எழுத்தாளரின் வாரிசுகளுக்குப் பதிப்பாளர்  ராயல்டி வழங்கவேண்டிய அவசியம் இல்லை.

பதிப்புரிமை நிலுவையில் உள்ள காலம் வரை ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்பைப் பதிப்பாளருக்கு உரிமை மாற்றம் செய்யலாம். அதே போல் ஒரு எழுத்தாளர் தான் எழுதப்போகும் புத்தகத்துக்கும் உரிமை மாற்று ஒப்பந்தம் செய்யலாம். ஆனால் அந்த ஒப்பந்தம் புத்தகம் வெளியிட்டபிறகுதான் அமலுக்கு வரும். இந்த உரிமை மாற்றம் பதிப்புரிமை காலம் முழுமைக்கும் இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கும் இருக்கலாம். எவ்வளவு காலத்துக்கு உரிமை மாற்றம் இருக்கவேண்டும் என்பது ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் எடுக்க வேண்டிய முடிவு.

உரிமை மாற்றம் எழுத்துப்பூர்வமாகத்தான் இருக்கவேண்டும். வாய்மொழி ஒப்பந்தம் செல்லுபடியாகாது. உரிமை மாற்று ஒப்பந்தத்தில் எந்த படைப்புக்காக உரிமை மாற்றம் செய்யப்படுகிறது, என்னவிதமான உரிமைகளெல்லாம் பதிப்பாளருக்கு வழங்கப்படுகிறது, எந்தெந்த இடங்களிலெல்லாம் சம்மந்தப்பட்ட படைப்புகளை விற்கலாம், எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உரிமை மாற்றம் செல்லும் என்பன போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும். ஒப்பந்தத்தில் உரிமை மாற்று காலம் குறிப்பிடப்படவில்லை என்றால் அது ஐந்தாண்டுகளுக்கு மட்டும்தான் என்று பதிப்புரிமை சட்டம், 1957 தெரிவிக்கிறது. மேலும் ஒப்பந்தத்தில் எந்தெந்த இடங்களிலெல்லாம் புத்தகம் விற்கப்படலாம் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை என்றால், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தகத்தின் பிரதிகளை விற்கலாம் என்பதுதான் அதன் சட்டப்படியான அர்த்தம்.

பதிப்புரிமை உரிமை ஒப்பந்தம், உரிமை மாற்று ஒப்பந்தம் ஆகியன இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை. முன்னாள் பிரதமர் நேருவின் சுயசரிதத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட சா.கணேசன் என்பவர் உரிமம் பெற்றிருந்தார். சா.கணேசன் நேருவுக்கு முறையாக ராயல்டி தராததால், நேரு அந்த உரிமையை ரத்து செய்துவிட்டு, புக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு உரிமையை வழங்கியிருக்கிறார். இருந்தபோதிலும் சா.கணேசனுடன் தொடர்புடைய திருமகள் அண்ட் கோ என்ற நிறுவனம் நேருவின் சுயசரிதத்தை தமிழில் வெளியிட்டது. இதை எதிர்த்து புக்ஸ் இந்தியா நிறுவனம் திருமகள் அண்ட் கோ நிறுவனத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கில் திருமகள் அண்ட் கோ தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்,  நேரு தனது சுயசரிதை புத்தகத்தின் உரிமை மாற்றம் சம்மந்தமாக பிரேத்யேகமாக எந்த ஒரு ஒப்பந்தத்திலும் வாதி நிறுவனத்துடன் ஈடுபடவில்லை என்பதாகும். ஆனால் புக்ஸ் இந்தியா தரப்போ,  நேருவின் பிரதிநிதி நேருவின் விருப்பத்திற்கிணங்க எங்க்ள் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில், திருமகள் அண்ட் கோ என்ற நிறுவனம் தன்னுடைய சுயசரிதத்தை தமிழில் வெளியிட எந்த அதிகாரமும் இல்லை என்றும், எங்கள் நிறுவனமே தன்னுடைய சுயசரிதத்தை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நேரு’ என்று கூறியதோடு,  நேரு எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.

கடிதத்தை பரிசீலித்த நீதிபதிகள், பதிப்புரிமை சட்டத்தின் கீழ் பதிப்புரிமை உரிமை மாற்றத்துக்கென பிரேத்யேக ஆவணங்கள் ஏதும் தேவையில்லை, கடிதத்தின் மூலமாகக் கூட ஒரு படைப்பாளி தன்னுடைய பதிப்புரிமையை மற்றவருக்கு மாற்றம் செய்து கொடுக்கலாம் என்ற தீர்ப்பை வெளியிட்டது  (AIR 1973 Mad 49) பதிப்புரிமை உரிமை மாற்று ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏனைய உரிமை மாற்றத்துக்கு விதிக்கப்படும் முத்திரைத் தீர்வை (Stamp Duty)  இதற்குk கிடையாது. அதேபோல் பதிப்புரிமை உரிமை மாற்று ஆவணத்தை, மற்ற ஆவணங்கள் போல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. பதிப்புத்துறை நன்கு வளர வேண்டும், நாட்டில் மக்கள் படிப்பதற்கு புத்தகங்கள் மலிவான விலையில் கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் சார்பாக முத்திரைத் தீர்வை வசூலிப்பதிலிருந்தும், பதிவுசெய்வதிலிருந்தும் விதி விலக்கு செய்யப்பட்டிருக்கிறது.

உரிமை மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பதிப்பாளர் ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்ட ஓர் ஆண்டுக்குள் செயல்படுத்தவில்லை என்றால் அந்த உரிமைகள் ரத்தாகிவிடும். ஆனால் ஒப்பந்தத்தில், ”பதிப்பாளர் எழுத்தாளரிடமிருந்து பெற்ற உரிமைகளை செயலபடுத்தாத போதிலும் சம்மந்தப்பட்ட ஒப்பந்தம் ரத்தாகாது” என்று ஷரத்து இருந்தால் மேலே சொன்ன சட்ட விதி பதிப்பாளரைப் பாதிக்காது. ஏனைய சமயங்களில், பதிப்பாளர் தனக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ச்செயல்படுத்தத் தவறும் பட்சத்தில், எழுத்தாளர் பதிப்புரிமை வாரியத்திடம் புகார் அளிக்கலாம். பதிப்புரிமை வாரியம் புகாரை விசாரித்து எழுத்தாளர், பதிப்பாளருக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யும். அதே போல் ஒப்பந்தம் சம்பந்தமாக எழுத்தாளருக்கும், பதிப்பாளருக்குமிடையே ஏதேனும் சண்டை சச்சரவு, ராயல்டி தொடர்பாகவோ அல்லது ஏனைய காரணங்களுக்காகவோ ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புரிமை வாரியத்திடம் புகார் செய்யலாம். புகாரை விசாரித்து பதிப்புரிமை வாரியம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். தேவைப்பட்டால் உரிமை மாற்று ஒப்பந்தத்தையே ரத்து செய்யலாம். ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பரிகாரத்தை எழுத்தாளர் நலன் கருதி தேவைப்பட்டால் மட்டுமே வழங்க வேண்டும் என்று சட்டம் வரையறை அளிக்கிறது. மேலும் சட்டம் இன்னொரு நிபந்தனையயும் முன்வைக்கிறது. அதாவது ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு உள்ளாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பதிப்புரிமை வாரியத்திற்கு அதிகாரமில்லை.

பதிப்புரிமைச் சட்டம், 1957 ஒரு எழுத்தாளருக்கு பதிப்புரிமையைத் தவிர மேலும் ஒரு உரிமையை வழங்கியிருக்கிறது. அதன் பெயர் தார்மிக உரிமை. எழுத்தாளர் தன்னுடைய படைப்பை பதிப்பாளருக்கு உரிமை மாற்றம் செய்து விட்டாலும் கூட அந்த படைப்பின் மீதான எழுத்தாளரின் தார்மீக உரிமையை பதிப்பாளர் உட்பட வேறு யாரும் மறுக்க முடியாது.

ஒரு படைப்பாளியின் தார்மீக உரிமைகள் என்னென்ன?

ஒரு படைப்பின் ஆசிரியர் தானே என்று பறைசாற்றும் உரிமை; தன்னுடைய படைப்பை மற்றவர்கள் திரித்துக் கூறாமல், உருக்குலைக்காமல், மாற்றி அமைக்காமல் இருத்தல். அவ்வாறு யாரேனும் செய்தால் அவர்களைத் தடுக்கவும், அவர்களிடமிருந்து நஷ்டயீடு பெறவும், ஒரு எழுத்தாளரின் தார்மீக உரிமை வழிவகை செய்கிறது.


{ஆழம் பிப்ரவரி 2013 இதழில் வெளியான கட்டுரை}

 

கருத்துரிமை – சட்டம் – கைதுகள்

இதற்கெல்லாமா கைது செய்வார்கள்? சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.
எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா?

சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. ’இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா? பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா? ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.’

இந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

மேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 295 A என்ன சொல்கிறது?

யாரேனும் ஒருவர் தீய நோக்கத்துடன் தன்னுடைய வார்த்தைகளாலோ அல்லது எழுத்துகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதே போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் குறித்து ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

அதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A  பிரிவு அதிகம் பயன்படுத்தப்படாத, அதிகப் பரிச்சயம் இல்லாத ஒரு சட்டப்பிரிவு. ஆனால் இப்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டது.

சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?

யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :

 1. விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது
 2.  தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது
 3. யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ

அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.

இங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.

மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எது விகல்பமான அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் தகவல்கள் என்று விவரிக்கப்படவில்லை.

அது போக 66 A பிரிவின்படி ஒருவர் மற்றவருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களை அனுப்பியிருந்தால்தான் (Send) குற்றம். தகவல்களை வெளியிட்டால் (Publish) அது குற்றம் என்று சட்டப்பிரிவு சொல்லவில்லை.

ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பொதுவாக ஒருவர் தங்களுடைய நண்பர்களிடமும் தன்னைப் பின்தொடருபவர்களிடமும் தகவல்களை வெளியிட்டு பரிமாறிக்கொள்கிறார்கள். கமெண்ட் செய்கிறார்கள். லைக் செய்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட ஒருவருக்கு தகவல்களை ஈமெயில் அனுப்புவதில்லை. அதனால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சோஷியல் நெட்வொர்க்குக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான்.

அப்படியானால் சோஷியல் நெட்வொக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி அவதூறாக செய்திகளை அனுப்பினால் அது தப்பில்லையா? குற்றமாகாதா?

தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவுவின்படி குற்றமாகாது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 499ம் பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவின்படி வழங்கப்படும் தண்டனையைவிடக் குறைவு.

கணிணியையோ அல்லது செல்ஃபோனையோ பயன்படுத்தி தனிப்பட்ட ஒரு நபருக்கு அவதூறு செய்தியை அனுப்பி வைத்தால்தான் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவை பிரயோகிக்கமுடியும்.

மேலும் இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி சுமத்தும் பழிச்சாட்டு (Imputation) எல்லாமே அவதூறு ஆகாது. எதுவெல்லாம் அவதூறு ஆகாது (விதிவிலக்கு) என்று இந்திய தண்டனை சட்டம் 499ம் பிரிவில் பத்து விளக்கங்கள் கொடுக்கிறது.

அனைத்துக்கும் மேலாக ஓர் இந்திய குடிமகனுக்கு கருத்து சுதந்தரம் என்பது அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 (1)(A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஏனையச் சட்டங்களைவிடப் பெரியது. மற்ற சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும், எதிராக செயல்படக் கூடாது.

அதற்காக கருத்து சுதந்தரம் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லமுடியாது, கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து சுதந்தரத்துக்கும் ஒரு வரையறை உண்டு. தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையானது என்றால் அதில் அவதூறு எதுவுமில்லை.

மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சமீபத்திய நிகழ்வுகளை பரிசீலனை செய்யவேண்டும். சட்ட விதிகளை பார்த்து விட்டோம். தார்மிக ரீதியாக இனி நீங்கள்தான் சின்மயி வழக்கிலும், கார்த்திக் சிதம்பரம் வழக்கிலும் தாக்கரே தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்திருக்கிறார்களா என்பதை முடிவு செய்யவேண்டும். சட்ட ரீதியில் யார் செய்தது சரி என்பதை அறிய, இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவேண்டும்.

வரலாற்றை மாற்றிய செங்கோட்டை – 3

1858ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வந்து சேர்ந்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் 17 மாகாணங்கள் இருந்தன. இவை தவிர பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியில் இல்லாத 554 ராஜ்ஜியங்கள் (Princely states) இந்திய துணைக் கண்டத்தில் இருந்தன. இந்த ராஜ்ஜியங்களை அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஆனால் ராணுவம், வெளியுறவுத் துறை மற்றும் தொலைத் தொடர்பு துறை ஆகியவற்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்வகித்து வந்தது.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவை எடுத்துக்கொண்ட பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி முறையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரயில் தொடர்பு மற்றும் தொலைத் தொடர்பை உருவாக்கியது. நீதி பரிபாலனை செய்யவேண்டி நீதிமன்றங்கள் பல நிறுவப்பட்டன. இந்தியர்கள் தொழில் துறைகளிலும், ஏனைய பாடங்களிலும் கல்வியறிவு பெற கல்லூரிகள் நிறுவப்பட்டன. ஆட்சி நிர்வாகத்தை திறன்பட நடத்த பிரத்தியேக இந்தியன் சிவில் சர்விஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய இராணுவம் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியர்கள் மத்தியில் ஆங்கிலேயர்கள் மீதான அதிருப்தி நீங்கவில்லை.

ஆங்கிலேயர்களின் ஆட்சியை இந்தியர்கள் காலனியாதிக்கமாகத்தான் பார்த்தனர். பல்வேறு விதமான வரிச் சட்டங்கள், அதனால் ஏற்பட்ட அதிகமான வரிச் சுமை, நாட்டில் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சம், தவிர்க்கப்படாத தொற்று/ கொள்ளை நோய், அதனால் ஏற்பட்ட கோடிக்கணக்கான உயிரிழப்புகள், ராணுவத்திலும் ஆட்சியிலும் ஆங்கிலேயர்களுக்கே முன்னுரிமை, இந்திய அரசர்களை அவமரியாதை செய்தது, பிரஜைகளின் விருப்பங்களை மதிக்காதது என்று பல அதிருப்திகள் ஆங்கிலேயர்கள் மீது இந்தியர்களுக்கு இருந்தன.

சிப்பாய் புரட்சிக்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து மற்றுமொரு புரட்சி நிகழ்ந்தது. இம்முறை ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தையும், அடக்குமுறையையும் எதிர்க்க வந்தது இந்திய அரசர்களோ, சிப்பாய்களோ அல்ல. சாதாரண இளைஞர்கள்தாம். ஆங்கிலேயர்களிடமிருந்து ஆதரவு பெற்று, ஓய்வூதியம் பெற்று தங்களது அரண்மனைகளில் சுகபோக வாழ்வு வாழ்ந்து வந்த மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் படை திரண்டது. இந்தப் படை உருவாவதற்கும் ஒருவிதத்தில் பிரிட்டிஷ் அரசுதான் காரணம். அது அங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்விக்கூடங்களும் கல்லூரிகளும், பாடசாலைகளும் உலகத்தை அவர்களுக்குத் திறந்துவிட்டன. கல்வி அவர்கள் கண்களைத் திறந்தது.  தர்க்க ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தியது. பிரெஞ்சு புரட்சி பற்றியும் அமெரிக்கப் புரட்சி பற்றியும் இந்திய இளைஞர்கள் தெரிந்துகொண்டனர். உத்வேகம் கொண்டனர். ஐரோப்பிய சரித்திரமும், உலக அரசியல் முறைகளும் அவர்களை உந்தித் தள்ளியது. முற்போக்கு சிந்தனைகள் தோன்றின. இந்தியா ஏன் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதே சமயத்தில் இந்து மதத்திலும் சீர்திருத்தவாதிகள் தோன்றினர். ராஜா ராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து மதக் கொள்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். பிரம்ம சமாஜும், ஆரிய சமாஜும் தோற்றுவிக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய அதே கையோடு, இந்தியர்கள் விட்டொழிக்க வேண்டிய தீமைகளையும் சாடினார். இந்து மதத்தில் புரையோடிப்போன மூட நம்பிக்கைகள் எதிர்க்கப்பட்டன. ஒற்றுமையின்மை, சாதிய பிளவுகள், தீண்டாமை, சுயநலம் ஆகியவையே இந்திய அடிமைப்பட்டதற்குக் காரணம் என்று முழங்கப்பட்டன.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள், ஆங்கிலேயர்களை எப்படியேனும் விரட்டியே ஆவது என்று வீறுகொண்டு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் முக்கியமானவர்கள், அரவிந்த கோஷ், பரின் கோஷ், பூபேந்திரனாத் தத்தா, ராஷ் பிகாரி போஸ், குதிராம் போஸ், பாகா ஜத்தின், எம்.என்.ராய், பிரஃபுல்லா சாக்கி, சூரிய சென், பீனா தாஸ், பீரித்தி லதா வாதேதார், பினய் பாசு, தினேஷ் குப்தா, பாதல் பாசு, கனய் லால் தத்தா, ராம் பிரஸாத் பிஸ்மில், சந்திர சேகர ஆசாத், சச்சிந்திரநாத் சன்யால், அஷஃபுல்லா கான், ரோஷன் சிங், ராஜேந்திர லகரி, ராஜ் குரு, பகத் சிங், சுக்தேவ், பைகுந்த ஷுக்லா, ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா, மதன்லால் திங்ரா, உதாம் சிங், ஆனந்த் கன்ஹாரே, நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், செண்பகராமன் பிள்ளை, பிக்காஜி காமா, தாமோதர் சவர்கர். (விடுபட்ட பெயர்கள் ஏராளம்). மேற்குறிப்பிட்ட இளைஞர்களில் பெரும்பான்மையானோர் போராட்டத்தின் போது கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட போராட்ட வீரர்கள், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு சொல்லமுடியாத சித்திரவதைக்கு ஆளாகினர். மேற்குறிப்பிட்ட புரட்சியாளர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள் பின்வருமாறு – அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கு, கக்கோரி ரயில் கொள்ளை வழக்கு, சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல் வழக்கு, டில்லி- லாகூர் சதி வழக்கு, மத்திய நாடாளுமன்ற குண்டு வெடிப்பு வழக்கு, இந்து-ஜெர்மனி சதி வழக்கு (காதர் கலகம்).

ஒருபுறம் இளைஞர்கள் புரட்சியில் இறங்கி போராட, மறுபுறம் அனுபவசாலிகள், வழக்கறிஞர்கள் அரசியலில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர். அந்த காலகட்டத்தில் இருந்த செல்வாக்கு பெற்ற பெரும் அரசியல் கட்சி காங்கிரஸ்தான். 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ், ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருந்தது. அப்போது சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருந்தவர்களும், செல்வந்தர்களும் மட்டுமே காங்கிரஸில் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களைப் பொருத்தவரை காங்கிரஸ் ஒரு விவாத மேடை மட்டுமே. அதைத் தவிர காங்கிரஸ்காரர்களுக்கு ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டுமென்றால் அரசாங்கத்துக்கு மனு போடுவார்கள். மற்றபடி வெகுஜன மக்களுக்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்தது. கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர் திலக், அன்னி பெஸன்ட் உள்ளிட்டோர் காங்கிரஸில் சேர்ந்த பிறகு காங்கிரஸ் வீரியம் கொண்டது. கூடவே பிளவும் ஏற்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் என்று வந்தவுடன் கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றார்கள் மிதமான கொள்கைகளை கடைபிடிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆட்சி அதிகாரத்தில் இந்தியர்களுக்கு பங்கு கிடைத்தாலே போதுமானது என்பது அவர்களது விருப்பம். ஆனால் திலகர், லாலா லஜ்பதி ராய், பிபின் சந்திர பால் போன்றோர்கள் இந்தியாவுக்கு பூரணமான சுதந்திரம் கிடைத்தாக வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். ஆங்கிலேயர்களிடமிருந்து பூரணமான சுதந்திரம் பெறவேண்டும், அதற்காக தீவிரமாகப் போராடினால் தவறில்லை என்று திலகர் கருத்து தெரிவித்தார். சுப்பிரமணிய பாரதியார் திலகருடைய கருத்தை ஆதரித்தார். காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு மிதவாத காங்கிரஸ் மற்றும் தீவிரவாத காங்கிரஸ் என்று இரு பிரிவுகள் தோன்றின.

முதல் உலக யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரவாத முழக்கங்கள் குறைந்தன. அந்த சமயத்தில்தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தி காங்கிரஸில் சேர்ந்து கோகலேவின் வழியை பின்பற்றினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தார். போராட்டங்கள் அனைத்தும் அகிம்சை வழியில் இருக்கவேண்டும் என்று விருப்பப்பட்டார். காந்தியின் தலைமையில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் வெகுஜன மக்களும், பெண்களும் அதிகளவில் கலந்து கொண்டார்கள். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களும், அதற்கு பெருவாரியான மக்களிடருந்து கிடைத்த ஆதரவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஸ்தம்பிக்க வைத்தது. காந்தியுடன் சர்தார் வல்லபபாய் பட்டேலும், ஜவாஹர்லால் நேருவும் சேர்ந்து கொண்டனர். காங்கிரஸில் காந்தி வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்பட்டது. காந்தியின் கொள்கை பிடிவாதத்தின் காரணமாக அவருக்கும் இந்தியாவின் 20ம் நூற்றாண்டின் பெரிய சமூக/அரசியல் தலைவர்களான ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பீமாராவ் அம்பேத்கார், முகமது அலி ஜின்னா, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இரண்டாம் உலக யுத்தம் மூண்ட போது இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் ஒப்புதல் இல்லாமல், இந்திய அரசியல் தலைவர்களை கலந்தாலோசிக்காமல் அப்போது இருந்த வைசிராய் லின்லித்கவ், பிரிட்டிஷ் இந்தியா பிரிட்டனுடன் சேர்ந்து போர் புரியும் என்ற அறிவிப்பை விடுத்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸை சேர்ந்த மாகாண சட்டசபை உறுப்பினர்களும், காங்கிரஸ் மந்திரிகளும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். பிரிட்டிஷ் இந்திய இராணுவம் அப்பொழுது பெரிய படைபலத்தை கொண்டிருந்தது. அதில் சுமார் 25,00,000 போர் வீரர்கள் இருந்தனர். இந்தியா இங்கிலாந்துக்கு ஆதரவாக இரண்டாவது உலக யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்று அரசியல் கட்சிகளிடமும், மக்களிடமும் கருத்து வேறுபாடு நிலவியது. இந்திய இராணுவம் இங்கிலாந்துக்கு சாதகமாக போரில் இறங்கும் என்று ஒருதலைபட்சமாக வைஸ்ராய் அறிவித்ததை கண்டித்து சுபாஷ் கல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கினார். உடனே செயல்பட்ட ஆங்கிலேய சி.ஐ.டி பிரிவு சுபாஷ் சந்திர போஸை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறையில் சுபாஷ் சந்திர போஸ் 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார். ஆங்கிலேய அரசு சிறையிலிருந்த அவரை வீட்டுக்காவலுக்கு மாற்றியது. வீட்டுக் காவலிலிருந்து தப்பிய சுபாஷ் சந்திர போஸ் 1941 ஆம் ஆண்டு, மாறுவேடத்தில் ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனிக்கு தப்பித்துச் சென்றுவிட்டார்.

1942ம் ஆண்டு, இரண்டாம் உலக யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், காங்கிரஸ் கட்சி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கியது. முஸ்லீம் லீக், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக ஆங்கிலேய அரசாங்கத்துக்கு ஆதரவாக நிறைய முஸ்லிம்கள் ராணுவ சேவையில் சேர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் தொடங்கி வைத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம், ஜெர்மனியை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த ரஷ்யாவுக்கு பிரிட்டனுடைய துணை தேவைப்பட்டது. அதன் அவசியத்தைப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்டுகள், இந்திய ராணுவம் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதில் விருப்பம் காட்டினர். இந்து மகா சபாவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கி வைத்த காந்தி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களை தங்கள் பணிகளை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டார். வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், தங்களுடைய உத்தியோகத்தைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் காந்தி. அவர் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து லட்சக்கணக்கான இந்தியர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் குதித்தனர்.

அந்த சமயத்தில் ஜப்பான் ராணுவம், ஆங்கிலேயர்களின் கட்டுபாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றியது. மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் வட கிழக்கு மாகாணங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைய ஆயத்தமாக இருந்தது. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஆங்கில அரசு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தது. காந்தி உட்பட ஏனைய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. முக்கிய தலைவர்களின் கைதினால் நாடு அமளி துமளி ஆனது. அஹிம்சையாக நடக்கவேண்டிய போராட்டம் வன்முறையாக மாறியது. நாடெங்கும் கலவரம். லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு பொது இடங்களிலேயே சாட்டை அடி வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கும், ராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கும் பலியானார்கள். சில போராட்டத் தலைவர்கள் தலைமறைவாகி, போராட்டத்தை தூண்டிக்கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களின் தீவிர அடக்குமுறையில், காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு போராட்டம் 1944 ஆம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் தேசியவாதிகளுக்கு பெருத்த ஏமாற்றம். அப்பாடா, எப்படியோ போராட்டத்தை முறியடித்து விட்டோம் என்று பெருமூச்சு விட்ட ஆங்கிலேய அரசுக்கு யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் பூதாகரமான புதிய ஒரு போராட்டம் (போராட்டம் அல்ல, அது ஒரு போர்) காத்திருந்தது.

0

யார் குற்றவாளி?

சமீபத்தில் நடந்த சம்பவங்கள் இவை. பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து ஒரு குழந்தை தவறி விழுந்து, அந்த குழந்தையின் மீது அதே பேருந்தின் சக்கரம் ஏறி குழந்தை இறந்துவிட்டது. கோரமான விபத்து. கொடுமையான மரணம்.  அடுத்ததாக, ஒரு கல்லூரி கட்டுமானப் பணியின் போது பத்து கூலித்தொழிலாளிகள் மீது சுவர் இடிந்து விழுந்து அவர்கள் பரிதாபமாக இறந்தனர். சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் நீச்சல் குளத்தில் ஒரு மாணவன் நீச்சல் பயிற்சியின் போது இறந்து போனான்.

மேலே குறிப்பிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தொடர்புடையவர்கள்  என்றால் முதல் விவகாரத்தில் பேருந்து ஓட்டுனர். க்ளீனர், பள்ளி தாளாளர், பேருந்து ஒப்பந்ததாரர், போக்குவரத்துத் துறை அதிகாரிகள். இரண்டாவது விவகாரத்தில் கல்லூரியின் தலைவர், நிர்வாக இயக்குனர், கட்டிடப்பணியின் மேற்பார்வையாளர் மற்றும் இரண்டு ஒப்பந்ததாரர்கள். மூன்றாவது விவகாரத்தில் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர், நீச்சல் குள பயிற்சியாளர்கள், நீச்சல் குள பராமரிப்பு ஒப்பந்ததாரர் மற்றும் பள்ளியின் டீன் ஆகியோர்.

தற்பொழுது காவல்துறை இவர்களை விசாரணைக்காகக் கைது செய்திருக்கிறது. விசாரணையின் பின்னணியில் பல தகலவல்கள் கிடைக்கலாம். இருப்பினும்,  அடிப்படையில்  மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் சட்டத்தின் பார்வையில் யார் குற்றவாளி?
பள்ளிக்காக வாகனம் ஓட்டுபவரா அல்லது பள்ளியின் தாளாளரா? பள்ளிக்காக நீச்சல் பயிற்சி வழங்குபவரா அல்லது பள்ளியின் முதல்வரா? கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரரா அல்லது கல்லூரியின் நிர்வாக இயக்குனரா?

இதற்கு விடை காண்பதற்கு முன்பு நாம் இன்னொரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இம்மாதிரியான சம்பவங்களில் இரண்டு விதமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒன்று குற்றவியல் நடவடிக்கை. மற்றொன்று உரிமையியல் (சிவில்) நடவடிக்கை.

சம்பவங்கள் நடைபெற்றவுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். காவல் துறையினர் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து ஆய்வு நடத்துவர். ஆய்வுக்குப் பிறகு காவல் துறை, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும். அதேசமயம், சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய பாதிக்கப்பட்டவர்கள்  சிவில் நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரி வழக்கு தொடுக்கலாம்.

ஒரே சம்பவத்துக்கு இருவேறு பரிமாணங்கள். இதை இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஒரு மோட்டார் வாகனம் விபத்துக்கு உள்ளாகி, உயிர்ச்சேதம் ஏற்பட்டால், காவல் துறை வாகன ஓட்டியின் மீது அந்த வாகனத்தை வேகமாக ஓட்டியதற்கும், கவனக்குறைவாக ஓட்டியதற்கும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரும். அதே சமயம் விபத்தில் பலியானவரின் குடும்பத்தினர் மோட்டார் விபத்து கோருரிமைத் தீர்ப்பாயத்தில் (Motor Accident Claims Tribunal) நஷ்டஈடு கோரி, வாகன ஓட்டி, வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாகனம் காப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடுப்பர்.

இந்தப் பின்னணியில் சமீபத்திய சம்பவங்களை ஆய்வு செய்வோம்.

மூன்று விவகாரங்களும் திட்டமிட்டு நடைபெறவில்லை. அது ஒரு விபத்து. விபத்து தவிர்க்க முடிந்த அல்லது தவிர்க்கவே முடியாத விபத்தாகவும் இருக்கலாம். கவனமின்மையால் (negligence), அசட்டையால்  (rashness) ஏற்படும் விபத்து தவிர்த்திருக்கப்பட வேண்டிய விபத்து.  சாலையில் ஒரு வாகனம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. குறுக்கே ஒரு சிறுவன் வந்துவிட்டான். ஓட்டுனர் மிகவும் கவனத்துடன் வாகனம் சிறுவன் மீது மோதாமலிருப்பதற்காக பிரேக்கை அழுத்துகிறார். இருப்பினும் வாகனம் சிறுவன் மீது மோதிவிடுகிறது. இது தவிர்க்கமுடியாத விபத்து. இதே ஓட்டுனர் வாகனம்  ஓட்டிக் கொண்டிருக்கும்பொழுது, அலைபேசியில் பேசியபடி சிறுவன் குறுக்கே வருவதை கவனிக்காமல் வேகமாகச் சென்று அவன் மீது மோதிவிடுகிறார். இது அசட்டையாலும் கவனக்குறைவினாலும் ஏற்பட்ட விபத்து.  இது தவிர்த்திருக்கப்பட வேண்டிய விபத்து.

தவிர்க்கப்படவேண்டிய விபத்தை தவிர்க்கத் தவறியதால் சட்டம் அதைக் கண்டிக்கிறது. குற்றமாகப் பார்க்கிறது. ஆனால் ஏனைய குற்றங்களைப் போல் அல்லாமல் அசட்டை மற்றும் கவனமற்ற செயல் சாதாரண குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அதனால் அந்த குற்றம் புரிந்தவருக்கு  தண்டனையும் குறைவு. விளைவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம். அவ்வளவே! (இ.பி.கோ – 304 A பிரிவு).

மேற்குறிப்பிட்ட மூன்றில் ஒரு வழக்கில், காவல் துறை குற்றவாளிகள் மீது இ.பி.கோ 304, பகுதி 2 ஆம் பிரிவின் கீழ் வழக்கு தொடுத்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து. இந்தப் பிரிவின் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். உயிரிழப்பு நடக்கும் என்று தெரிந்தே ஒரு செயலை செய்திருந்தால் இ.பி.கோ 304, பகுதி 2 ஆம் பிரிவு பொருந்தும். கவனக்குறைவாகவும், அசட்டையாகவும் செயல்பட்டால் இ.பி.கோ 304  A பிரிவு பொருந்தும்.

சட்டம் ஒரு விபத்தையும், திட்டமிட்டு செய்யப்படும் செயலையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. அதேபோல் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து நஷ்டஈடு பெறுவதற்காக நடத்தப்படும் சிவில் வழக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வாங்கித் தருவதற்காக நடத்தப்படும் கிரிமனல் வழக்குக்கும் தேவைப்படும் ஆதாரங்களும் வெவ்வேறானவை.

சிவில் நடவடிக்கைகளில் தொழிலாளி செய்த தவறுக்கு முதலாளியைப் பொறுப்பாளி ஆக்கமுடியும். சட்டத்தில் vicarious liability (பகரப் பொறுப்புரிமை) என்ற ஒரு கோட்பாடு உண்டு. அதாவது அந்த கோட்பாடின்படி, Master is responsible for the act of servant – தொழிலாளி செய்த தவறுக்கு முதலாளி பொறுப்பாவார்.

இந்த விதியின்படி மோட்டார் வாகன ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்துக்கு வண்டியின் உரிமையாளர் பொறுப்பாவர். அதனால் வண்டியின் உரிமையாளர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டயீடு வழங்கவேண்டும். ஆனால் மேற்சொன்ன கோட்பாடு சிவில் நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுமே ஒழிய, குற்றவியல் நடவடிக்கைகளுக்கு அல்ல. அதன்படி மோட்டார் வண்டியின் ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்துக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓட்டுனர் மட்டுமே  சிறை தண்டனை அனுபவிப்பாரே தவிர மோட்டார் வண்டியின் முதலாளி அல்ல.

மோட்டார் வாகன விபத்து என்றில்லை, ஏனைய விபத்துகளுக்கும் இதே விதிதான். விதிவிலக்கு எப்பொழுது என்றால், ஒரு குறிப்பிட்ட சட்டத்தில் தொழிலாளி செய்த குற்றத்திற்கு முதலாளியும் பொறுப்பாவர் என்று சட்ட விதி இருந்தால்தான். உதாரணத்துக்கு இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் (Essential commodities Act), மருந்துப் பொருட்கள் மற்றும் அழகுப் பொருட்கள் சட்டம் (Drugs and Cosmetics Act), இந்திய மின்சார சட்டம் (Indian Electricity Act) மற்றும் மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் (Negotiable instruments Act).

சமீபத்தில் நடைபெற்ற மூன்று விவகாரங்களும் மேற்கண்ட எந்த சட்டத்துக்கும் ஆட்படாதவை. இந்திய தண்டனைச் சட்டத்துக்கோ (இ.பி.கோ) அல்லது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் கிரிமினல் நடவடிக்கைக்கோ (penal action taken under Motor Vehicles Act) பகரப் பொறுப்புரிமை என்ற விதி பொருந்தாது. ஆனால் பழுதடைந்த, பராமரிக்கப்படாத, பாதுகாப்பற்ற வாகனத்தை இயக்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம் (பிரிவு 182 அ மற்றும் 190). பழுதடைந்த வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்பட்டால் ஓட்டுனர் மட்டுமல்லாது ஒப்பந்ததாரர் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் நேரடியாகவே குற்றவாளிகளாகின்றனர். இதற்கான தண்டனை 1 ஆண்டு சிறை மற்றும் அபராதம்.

இதைத் தவிர மற்ற விபத்துகளில்/குற்றங்களில் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் அல்லது முதல்வர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படவேண்டுமானால் கவனமின்மையும், அசட்டையும் ஓட்டுனரிடமோ, பயிற்சியாளரிடமோ அல்லது ஒப்பந்ததாரரிடமோ இருந்தது என்று நிரூபித்தால் மட்டும் போதாது. மாறாக கவனமின்மையும், அலட்சியமும் பள்ளி/கல்லூரி நிர்வாகிகளிடமும், தாளாளரிடமும் இருந்தது என்று அரசுத் தரப்பு நிரூபிக்கவேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பள்ளி/கல்லூரி நிர்வாகிகளுக்கு மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் நேரடித் தொடர்பு இல்லை. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் கவனமின்மையுடன், அசட்டையுடன் செயல்பட்டார்கள் என்று நிரூபனம் செய்யவேண்டும். செய்யுமா காவல்துறை?