ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 24

Restart

ஸ்டீவ் ஜாப்ஸின் ராஜினாமா கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு சிறிய விடுமுறைக்குப் பிறகு மீண்டும் வழக்கம் போல் திரும்பி வந்துவிடுவார் என்றுதான் அவர்கள் எடுத்துக்கொண்டனர். ஐ-பேட்-2ஐ அறிமுகப்படுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் வந்தது போல் ஐ-போன் 5ஐ அறிமுகப்படுத்தவும் ஸ்டீவ் ஜாப்ஸ் வருவார் என்றுதான் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆப்பிள், ஐ-போன்4S என்று அறிமுகப்படுத்தி அனைவரையும் ஏமாற்றியது என்றால் அதற்கு அடுத்த நாள் ஸ்டீவ் ஜாப்ஸ் அதை விட பெரிதாக ஏமாற்றினார். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.

ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதி தினம்கூட திட்டமிட்டபடியேதான் கழிந்தது. விருந்து நிகழ்ச்சிகள், அழைப்புகள் அனைத்தையும் அவர் தவிர்த்துவிட்டார். வீட்டில் நேரத்தைச் செலவழித்தார். தன் வாழ்வில் மிக முக்கியமானவர்கள் என்று கருதியவர்களை எல்லாம் நேரில் பார்த்து பேசினார். என் வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டேன் என்று அனைவரிடமும் சொல்லி விடைபெற்றுக்கொண்டார். எதிர்காலத்தை நிகழ்காலத்தில் உருவாக்கியவருக்குத் தன்னுடைய எதிர்காலமும் தெரிந்திருந்தது விந்தைதான்.

சுயசரிதத்தை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டவரை நேரில் அழைத்து பேட்டி கொடுத்தார். ‘என் குழந்தைகளுடன் நான் அவ்வளவாக நேரம் செலவழிக்கவில்லை. ஏன் என்று அவர்களுக்குப் புரிய வேண்டும். அதற்காகத்தான் சுயசரிதம் எழுதுவதற்கு ஒப்புக்கொண்டேன்.’  ஆனால், பெற்ற தந்தையை கடைசிவரை அவர் பார்க்கவில்லை, பேசவில்லை. அவர் அனுப்பிய மெயில்களுக்கு ரிப்ளையும் செய்யவில்லை. தத்து கொடுத்த கோபம் சாகும் போதும் போகவில்லை.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் பற்றி வெளிவந்த செய்திகளிலும் பல விஷயங்கள் வழக்கம் போல் ரகசியமாகவே வைக்கப்பட்டன. குடும்பத்தார் சூழ்ந்திருக்க அமைதியாக உயிர் பிரிந்தது என்று மட்டுமே சொன்னார்கள்.  ஏன், எப்படி, எப்பொழுது போன்ற விவரங்கள் எதுவுமில்லை. அவருடைய இறப்புச் சான்றிதழில், புற்று நோயின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்றபடி, பொதுவான அஞ்சலியோ அரசு மரியாதையோ இல்லை. அக்டோபர் 16 இனி ஸ்டீவ் ஜாப்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று கலிபோர்னியா கவர்னர் சமீபத்தில் அறிவித்தார். அத்தோடு சரி.

ஸ்டீவின் இறுதிச் சடங்குகள் எங்கு, எப்பொழுது நடைபெற்றன? யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்? எதுவும் தெரியாது. அவருடைய சொத்து என்ன ஆனது? யாருக்கு இனி? தெரியாது. உயில் எழுதியிருக்கிறாரா? தானம் செய்துவிட்டாரா? தெரியாது.

குறிப்பிட்ட சிலர் மட்டும் அழைக்கப் பட்ட அஞ்சலி கூட்டத்துக்கு சாம்சங்கின் முக்கிய அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அதே சாம்சங்கோடு உலகெங்கும் உள்ள கோர்ட்களில் சட்டை கிழியும் அளவு ஆப்பிள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது தனி விஷயம். ஸ்டீவின் ரசிகர்கள் அவரால் பார்த்துப் பார்த்து கட்டப்பட்ட ஆப்பிள் கடைகளில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் அடைந்தனர்.

உண்மையில், ஸ்டீவ் குடும்பத்தினர் உள்ளூர் போலிஸுக்கு முன்பே தகவல் தெரிவித்து வைத்திருந்தனர். இறப்புச் செய்தி வெளியாகி, வீட்டுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடிவிட்டால் சமாளிக்கவேண்டும் என்பதற்காக. ஆனால், அதற்கான அவசியம் ஏற்படவில்லை.

பில் கேட்ஸ் முதல் ஒபாமா வரை அஞ்சலி செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்க ஆப்பிள், வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது. அதைத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பியிருப்பார். எனவே, நாங்கள் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி இதுதான் என்றார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பிறகு ஆப்பிள் என்னாகும்? அடுத்த பல வருடங்களுக்கு என்னென்ன ஆப்பிளில் இருந்து ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்கான திட்டத்தை ஸ்டீவ் முன்கூட்டியே போட்டுக்கொடுத்துவிட்டார் என்கிறார்கள். ஆண்டிராய்ட் ஆப்பிளை விழுங்குமா? டிம் குக் ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரைக் காப்பாற்றுவாரா? போகப் போகத்தான் தெரியவரும்.

புத்த மதத்தைத் தழுவிய ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை பலருக்கும் பல விதங்களில் போதி மரம் தான். அவரால், ஆப்பிளால் பலர் மகிழ்ந்திருக்கிறார்கள் என்றபோதும் அவருடைய வாழ்க்கை பெரும்பாலும் சோகத்திலேயே கழிந்தது. அவற்றை மீறித்தான் அவரால் சாதிக்கமுடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் நமக்கு அளித்திருக்கும் மிக முக்கியமான ஒரு படிப்பினை, அவருடைய  ஸ்டான்ஃபோர்ட் உரையில் இருக்கிறது.

யாரும் இறக்க விரும்புவதில்லை.சொர்கத்துக்குப் போக வேண்டும் என விரும்புவன்கூட அங்கு போவதற்காக இறக்க விரும்புவதில்லை. இறப்பே நம் அனைவருக்கு இறுதி முடிவு. அதில் இருந்து தப்பித்தவர் யாரும் இல்லை. சாவு தான் உலகின் மிக உன்னதமான கண்டுபிடிப்பு. பழையதைக் கழித்து புதியதற்கு வழி செய்கிறது. இன்று புதிதாகப் பிறந்தவர்களான நீங்களும் நாளை பழையதாகி மறைந்து போவீர்கள்.  கஷ்டமாக இருந்தாலும் இது தான் சாசுவதமான உண்மை.

வாழும் காலம் கொஞ்ச காலமே. அதை மற்றவர்களின் வாழ்க்கையாக வாழ்ந்து வீணாக்காதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்பதை விட உங்கள் மனம் என்ன சொல்கிறது என்று கேளுங்கள். உங்கள் உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாகச் செல்லுங்கள்.  நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களை விட உங்கள் மனதுக்கு மிகச் சரியாகத் தெரியும்.

‘ஸ்டீவ் ஜாப்ஸ் செய்தது ஒன்றுமே இல்லை, இதையெல்லாம் புரட்சி என்று சொல்வது வீண். உண்மையில் புரட்சி என்னவென்றால்…!’ என்று சொல்லி யாராவது ஒருவர் மெய்யாகவே ஸ்டீவ் ஜாப்ஸின் சாதனைகளை முறியடிக்கவேண்டும். அதுதான் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மனித குலம் செலுத்தும் மரியாதை. இந்தச் சாதனையைச் செய்துமுடிக்க ஸ்டீவே வழியையும் காட்டியிருக்கிறார்.

‘பசியோடு இருங்கள்.முட்டாளாக இருங்கள்!’.

(முற்றும்)

0

அப்பு

ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 23

 

Log off

கேன்சர் வந்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் படுத்துக்கிடந்த சமயத்திலும் தன் தயாரிப்புகளை அவரால் மறக்கமுடியவில்லை.

‘மக்களே, உங்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி சொல்லவேண்டும். அதை நானே உங்களுக்குச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இணையப் புற்றுநோயினால் நான் அவதிப்பட்டு வந்தேன். பயப்பட வேண்டாம், இது அறுவை சிகிச்சையினால் குணப்படுத்தக் கூடிய ஒன்று. போன வார இறுதியில் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வேறு சிகிச்சை எதுவும் தேவைப்படாது. இந்த மாதம் ஒய்வெடுத்துக் கொண்டு அடுத்த மாதம் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவேன்… பிறகு, 17 இன்ச் பவர்புக் மற்றும் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலம் இந்த மெயிலை அனுப்பியிருக்கிறேன்.’

இப்படி ஒரு மெயிலை 2004-ல் ஸ்டீவ் ஜாப்ஸே அனுப்பிய பிறகுதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாதது உலகுக்குத் தெரியவந்தது. ஆனாலும் இதற்கு மேல் எந்த விவரத்தையும் யாரும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை! பின்னாளில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் தன்னைப் பற்றி சற்றே கூடுதல் விவரங்கள் அளித்தார் ஸ்டீவ்.

வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இது தான் கடைசி நாள் என்று நினைத்து கழியுங்கள். ஒரு நாள் அது நிச்சயம் உண்மையாகி விடும். என்னுடைய 17-வது வயதில் இதைப் படித்தேன். கடந்த 33 வருடங்களாக காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்த்து, இது தான் என்னுடைய கடைசி நாள் என்றால் அதை எவ்வாறு கழிக்கப் போகிறேன் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் சீக்கிரம் இறந்து விடுவேன் என்பதை நான் நன்கு அறிந்துகொண்டதுதான் என் வாழ்வின் மிகப் பெரிய முடிவுகளை எடுக்க உதவியாக இருந்திருக்கிறது. ஏனெனில் இறப்புக்கு முன் மானம், அவமானம், தோல்வி எல்லாம் காணாமல் போய் விடுகிறது.

இந்தத் தத்துவங்களை உதிர்த்தபிறகு தன் புற்றுநோய் கதையைச் சொன்னார். காலை செக்கப் போனபோது கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மூன்று முதல் ஆறு மாதங்கள் என்று வாழ்க்கைக்குக் கெடு விதிக்கப்பட்டதாகவும், பிறகு சாயங்காலம் மேலும் சில பரிசோதனைகள் செய்த பிறகு, கவலைப்படவேண்டாம் குணப்படுத்தக்கூடிய கான்சர்தான் என்று சொல்லப்பட்டதாகவும் சொன்னார்.

அவர் சொல்லாமல் விட்ட விஷயம், அறுவை சிகிச்சை பற்றியது. இவருடைய புற்றுநோயை ஆபரேஷன்மூலம் குணப்படுத்தமுடியும்.  ஆபரேஷன் செய்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பத்து வருடங்கள் தாண்டியும் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். இருந்தும் ஸ்டீவ் ஜாப்ஸ் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. சுற்றி இருந்தவர்கள் பைத்தியம் பிடிக்காத குறையாக கெஞ்சிய பிறகும் ஸ்டீவ் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

பத்திய உணவு சாப்பிட்டு கேன்சரைக் கரைக்க முடியுமா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்கினார். ஒன்பது மாதங்களுக்கு பின்னர், அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கினார் என நம்பத் தகுந்த தகவல்கள் உள்ளன. பிறகுதான் மேலே பார்த்த மெயில் அவரிடம் இருந்து வந்தது.

2006 வாக்கில் ஸ்டீவ் ஜாப்ஸ் மிகவும் மெலிந்து காணப்பட்டார். 2008ல் முன்பைவிட மோசம்.  என்ன பிரச்னை என்ற துருவி கேட்டவர்களுக்கு கிடைத்த ஒரே பதில், அது அவருடைய அந்தரங்கம்.

ஆப்பிள் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம். நிறுவனத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி உள்ளிட்ட லாப நஷ்டத்துக்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியையும் சட்டப்படி பங்குச் சந்தைக்கு தெரிவித்தாக வேண்டும். ஆனால் அமெரிக்காவில் ஒரு மனிதனின் உடல் நிலை அவனுடைய தனிப்பட்ட அந்தரங்க விவகாரம். சட்டப்படி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. என்றாலும் தார்மீக அடிப்படையில் ஆப்பிள் ஸ்டீவின் உடல் நிலை பற்றிய உண்மையை தெரிவிக்கவேண்டும் என்ற கூக்குரல்கள் எழுந்தன. வழக்கம் போல ஆப்பிளும் ஸ்டீவ் ஜாப்ஸும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்துவிட்டார் என்று ப்ளூம்பர்க் நிறுவனம் தவறாகச் செய்தி வெளியிட்டது. பிரபலமானவர்கள் திடீரென இறந்து விட்டால் அவர்களைப் பற்றி செய்திக் குறிப்பு வெளியிட செய்தி நிறுவனங்கள் அவ்வப்போது செய்திகளை சேகரித்து வைக்கும். அப்படி செய்யும்போது,  தவறுதலாக மரணச் செய்தி வெளிவந்துவிட்டது.

சும்மா இருப்பாரா? இதே போன்ற ஒரு சூழலில், எழுத்தாளர் மார்க் ட்வைன் அளித்த பதில் சுவாரஸ்யமானது.  ‘என் இறப்பு பற்றிய செய்திகள் மிகவும் மிகைப்படுத்தப் பட்டவை.’  ஸ்டீவ் இதை வேறு வகையில் கையாண்டார். ஆப்பிள் தயாரிப்புகள் பற்றிய ஸ்லைட்ஷோ ஒன்றின் இறுதியில் எனது ரத்த அழுத்தம் 110/70 என்று ஒரு ஸ்லைட் போட்டு காட்டினார். அதாவது, நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று அர்த்தம்.

ஆனால் அடுத்த சில மாதங்களில், 2009-ல் ஆப்பிளின் முக்கிய நிகழ்ச்சிக்கு அவர் வராமல் தன் சார்பாக ஒருவரை அனுப்பிவைத்தபோது மீண்டும் சந்தேகங்கள் கிளம்பின. வழக்கம் போல் மீண்டும் ஸ்டீவ் கடிதம் எழுதினார். ஆம், என் எடை குறைந்துகொண்டிருக்கிறது. ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம்.  11 வருடங்களாக ஆப்பிளுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் கடமைகளை செய்யமுடியாத சூழல் உருவானால், முதல் ஆளாக நானே அதைத் தெரிவிப்பேன்.

பத்து நாள்கள்கூட ஆகவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதும் கட்டாயம் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு!  நாங்கள் எதிர்பார்த்ததைவிட நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. என் பொருட்டும் என் குடும்பத்தினரின் பொருட்டும் கம்பெனியின் நன்மையைக் கருதியும் விடுமுறையில் செல்லவிருக்கிறேன். தினசரி கடமைகளில் கவனம் செலுத்த மாட்டேன். ஆனால் தலைமைச் செயல் அதிகாரி என்ற பொறுப்பில் இருப்பதால் அனைத்து முக்கிய முடிவுகளிலும் என் முத்திரை இருக்கும்.

இரண்டு மாதங்களுக்குமுன் ஸ்டீவுக்குக் கல்லீரல் மாற்று சிகிச்சை நடந்த விஷயம் அப்போது வெளியானது. ஆபரேஷன் செய்த ஆஸ்பத்திரி முதலில் இதை ஒப்புக்கொண்டாலும் பின்னர் மாற்றி சொன்னது. ஸ்டீவிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. மாற்று கல்லீரல் எப்படி உடனடியாகக் கிடைத்திருக்கும்? வரிசையில் காத்திருந்து அல்லவா பெறவேண்டும்? பணம் இருந்ததால் இந்த ஒழுங்கு முறை மாற்றப்பட்டதா? எதற்கும் பதிலில்லை.

பின்னாளில் வழக்கம் போல வீடியோ கேமரா, கேமரா செல்போன் எல்லாம் தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ஸ்டீவ் தோன்றினார். அப்போது பதிலளித்தார். உங்களில் சிலருக்கு எனக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை நடந்தது தெரிந்திருக்கும். கார் விபத்தில் உயிர் இழந்த 20 வயதுக்காரர் தன் உறுப்புகளை பெருந்தன்மையாக தானம் செய்ய முன்வந்த காரணத்தால் நான் இன்று உங்கள் முன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கலிபோர்னியா மாகாணத்தில், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கும் போது, விபத்தில் உயிர் இழந்தால் உறுப்புகளை தானமாக கொடுக்க விருப்பமா என்று அனைவரையும் அரசு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.  கவர்னர் அர்னால்ட்டை கட்டாயப்படுத்தி இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது என்றும் சொல்வார்கள்.

இது ஒரு பக்கமிருக்க, 2011 ஜனவரியில் மறுபடியும் கடிதம் எழுதினார் ஸ்டீவ். என்னுடைய உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளும் பொருட்டு எனக்கு விடுமுறை வேண்டும் என கேட்டேன். லீவு கொடுத்தப்படியால் விடுமுறையில் செல்கிறேன். வழக்கம் போல் நான்தான் இன்னும் தலைவராக இருக்கிறேன். தினசரி நடவடிக்கைகளை டிம் குக் பார்த்துக் கொள்வார். எவ்வளவு விரைவில் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவேன்.

ஆகஸ்ட் மாதம் ராஜினாமா கடிதம் வந்தது. என்னால் என் வேலைகளைச் சரிவர கவனிக்க முடியவில்லை என்று தோன்றும் தினத்தில் நானாக பதவி விலகி விடுவேன் என்று பல நாட்களாகச் சொல்லி வருகிறேன். துரதிருஷ்டவசமாக அந்த நாள் வந்துவிட்டது. தலைமைச் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்கிறேன். போர்ட் உறுப்பினர்களுக்குச் சம்மதம் என்றால் போர்ட் சேர்மனாகவும் ஆப்பிளின் தொழிலாளியாகவும் தொடர விரும்புகிறேன். ஆப்பிள் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க என்னால் இயன்றதைச் செய்வேன். ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதிக் கடிதம் இது.

(அடுத்த இதழில் முடியும்)

0

அப்பு

ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 22

அந்தரங்கம் 

ஆப்பிள் பளபளப்பாக வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாடிக்கொண்டிருந்தார். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளைக் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைத்திருந்ததுபோல் தன் அந்தரங்க வாழ்க்கையையும் அவர் ரகசியமாகத்தான் வைத்திருந்தார். தன்னைப் பற்றி நல்லவிதமான செய்திகள் வெளிவருவதைக்கூட அவர் விரும்பவில்லை.

ஒரு முறை, ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய ஒரு புத்தகத்தைஒரு பதிப்பம் வெளியிட்டது. வேண்டாம் என்று பலமுறை மறுத்தபிறகும் இந்தப் புத்தகம் வெளிவந்தது. அந்த பதிப்பகத்தாரின் புத்தகங்கள் பல ஆப்பிளின் இணையக் கடையில் நல்ல லாபத்துக்கு விற்பனையாகிக்கொண்டிருந்தன. ஆனாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் கொதித்துப்போனார். இணையம் மூலமாக விற்றுக்கொண்டிருந்த அந்தப் பதிப்பகத்தாரின் அத்தனை புத்தகங்களையும் இரவோடு இரவாக தூக்கி எறிய உத்தரவிட்டார். ஸ்டீவ் ஜாப்ஸின் கோபம், குணாதிசயம் அவ்வளவு விசித்திரமானது.

ஸ்டீவ் ஜாப்ஸ் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். தன் தாயைப் பற்றியும் அவர் தத்து கொடுத்ததைப் பற்றியும் இவர் பின்னர் அறிந்துகொண்டார். எப்படி என்று தெரியவில்லை. தத்து கொடுக்கப்பட்டது மிகவும் நல்ல விஷயம் என கருதும் ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தன் நிஜ தாய் மீது பெரிதாக கோபமில்லை.  ஆனால் அவர் தந்தையைத் தெரிந்துகொண்ட பிறகும் அவருடன் உறவு கொண்டாடவில்லை.

ஸ்டீவ் ஜாப்சின் தங்கை மோனா சிம்ப்சன் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். பிரிந்து சென்ற தந்தையை வைத்து ஒரு நாவல், ஸ்டீவ் ஜாப்சை வைத்து ஒரு நாவல் என்று நிஜத்துக்கு மிக அருகே எழுதினார். அந்த நாவல்கள் சூப்பர் ஹிட் ஆயின. Regular Guy என்னும் நாவல் அச்சு அசல் ஸ்டீவ் ஜாப்ஸின் சுய சரிதம். கதாநாயகனின் குணாதிசயமும் என் குணாதிசயமும் சுமார் 25 சதவிகிதம் ஒத்துப்போகிறது என்று ஸ்டீவ் ஜாப்ஸ் மிகவும் பகிரங்கமாக ஓப்புக்கொண்டார். ஆனால் குறிப்பாக எந்த குணாதிசயம் என்று எல்லாம் சொல்லமாட்டேன் என்றார். தன்னைப் பற்றி மிகவும் பகிரங்கமாக எழுதியதற்காக தங்கையைக் கோபித்துக்கொண்டது உண்மையா என்னும் கேள்விக்கு பாசமலர் அண்ணன் விடையளிக்கவில்லை..

மணமாகாத பெற்றொருக்குப் பிறந்து, தாய் தந்தை யார் என அறியாமல் துன்புற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் தன் மகளையும் அவ்வாறு அலைக்கழித்ததை என்னவென்று சொல்வது? கல்லூரியில் இருந்த காலத்தில் [படித்த காலம் என்று எல்லாம் சொல்லி படிப்பை கேவலப்படுத்த வேண்டாம்] கிரிஸ் ஆன் என்ற பெண்ணுடன் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு முதல் காதல். ஆனால் அந்த காதலிக்கு சக்களத்தியாக அதே சமயத்தில் இன்னொரு காதல், ஆப்பிள். ஆதலினால் முதல் காதலியின் கருவைக் கலைக்க ஸ்டீவ் ஜாப்ஸ் வற்புறுத்தினார். கிரிஸ் ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.

கோபித்துக்கொண்டு கிரிஸ் ஆன் சென்ற இடம் அவர்கள் பழகிய அதே ஆப்பிள் தோட்டங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் வசந்த காலத்தைக் கழித்த இடமாகக் கருதி தன் கம்பெனிக்கு பெயர் வைக்க காரணமாக இருந்த அதே ஆப்பிள் தோட்டம். அங்குதான் ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் பெண் லிசா பிறந்தார். அப்பொழுது ஆப்பிளுக்கு வயது இரண்டு. ஸ்டீவ் ஜாப்ஸின் வயது 23. அவர் பிறந்தபோது அவர் பெற்றோருக்கு இருந்த அதே வயது. ஸ்டீவ் ஜாப்ஸ் கிரிஸ் ஆனை மணம் செய்யவில்லை!

குழந்தை பிறந்த சில நாட்கள் கழித்து அங்கு ஆஜரான ஸ்டீவ் ஜாப்ஸ் குழந்தைக்கு லிஸா என பெயர் வைத்தார். காரியம் முடிந்தது என கிளம்பி விட்டார். குழந்தையை வளர்க்கக் காசு வேண்டும். இருபதாயிரம் தந்தால் சமாதானம், இல்லை என்றால் சண்டை என்று கிரிஸ் ஆன் சொன்னதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை. இத்தனைக்கும் அது அவருக்கு பிசாத்துப் பணம். விளைவு? வீட்டுப் பிரச்னை நீதிமன்றம் சென்றது.

கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு எனக்கு ஆண்மையே இல்லை என்று அறிவித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இருபத்தெட்டு சதவீத அமெரிக்க ஆண் மக்கள்தொகையில் யார் வேண்டுமானாலும் இந்தக் குழந்தைக்குத் தந்தையாக இருக்கலாம் என்றார். மரபணு சோதனை நடந்தது. 94.97 சதவீதம் அவர்தான் தந்தை என்று ரிப்போர்ட் வந்தது. அப்போதும், செட்டில் பண்ணாமல் இழுத்தடித்தார்.

ஆப்பிள் பங்குச்சந்தையில் அறிமுகமாக ஆயுத்தமாகிக்கொண்டிருந்த வேளை அது. அதாவது அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரராக ஸ்டீவ் ஜாப்ஸ் மாறும் வேளை. ஆனால் அவர் குழந்தை அரசாங்க மானியத்தில் வளர்ந்துகொண்டிருந்தது. வெளியே விஷயம் தெரிந்தால் பிழைப்பு கெட்டுவிடும், மதிப்பு சரிந்துவிடும் என்று அஞ்சி பின்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் சமரசத்துக்கு ஒப்புக்கொண்டார். தன் மகளை அப்போதும் அவர் பார்க்கவில்லை. விரும்பவில்லை. என்றாலும், தன்  மேற்பார்வையில் உருவாகிக்கொண்டிருந்த கணிப்பொறிக்கு அவர் வைத்த பெயர், லிஸா.

சில சமயங்களில், கிரிஸ் ஆன் கூடுதல் பணம் கேட்டு அனுப்புவார். ஸ்டீவ் தரமாட்டார். லிஸாவுக்கு பத்து வயது இருக்கும் போது, அதுவும் அவளே ஓட்டிக்கொண்டு வந்த வண்டியில் ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டு வாசலில் வந்து நின்றதாகவும், ஸ்டீவ் பாய்ந்து வந்து கட்டியணைத்துக்கொண்டதாகவும் கதைகள் உள்ளன.  லிஸா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து இன்று எழுத்தாளராக இருப்பதெல்லாம் தற்காலக் கதை.

குழந்தை பிறந்து, சண்டையில் கிரிஸ் ஆன் பிரிந்த பின்பு ஸ்டீவ் ஜாப்ஸ் தனி மரம் ஆனார். ஆனால் பணக்காரத் தனி மரம். மன்மத மரம். கூடு கட்டிய பறவைகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை. காட்ஃபாதர் போன்ற படங்களில் நடித்து ஆஸ்கர் வாங்கிய டயான் கீய்ட்டன் ஒரு நாள் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு போன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது, போனை வைக்கும் முன், எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது உங்கள் முழுப் பெயர் என்ன என்று கேட்டு அவரை அதிர வைத்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸுடன் சுற்றியவர்களில் மிக முக்கியமானவர், ஜோயன் பேய்ஜ் என்ற புகழ் பெற்ற பாடகி. ஒரு பெண்ணொடு உறவு கொண்டிருக்கிறேன் என்று அந்த காலத்திலேயே பேட்டி கொடுத்தவர். ஸ்டீவ் ஜாப்ஸுக்கு பிடித்த பாடகரான பாப் டைலனின் முன்னாள் காதலி இவர் என்பதால்தான் ஸ்டீவ் இவரோடு இணைந்திருந்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரைவிட பாடகிக்கு 15 வயது அதிகம் என்பதால் அவர் மூலம் வாரிசு இல்லாமல் போகலாம் என்று ஸ்டீவ் பயந்தார் என்று சொல்வார்கள்.

அப்போதுதான் ஸ்டீவ் ஜாப்ஸை காதல் தாக்கியது. கல்லூரி படிப்புக்கூட முடிக்காத ஸ்டீவ் ஜாப்ஸை கல்லூரிகளில் பேசக் கூப்பிடுவார்கள். அப்படி ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கும் மாணவர்கள் கூட்டத்தில் பேசச் சென்ற போது,  ஸ்டீவ் ஜாப்ஸ் காதல் வயப்பட்டார்.

கூட்டம் முடிந்தபிறகு அந்தப் பெண்ணிடம் தன் பிரத்தியேக தொலைப்பேசி எண்ணைக் கொடுத்தார். ஒரு முக்கியமான மீட்டிங்குக்கு கிளம்ப வேண்டியவர் சட்டென்று திரும்பினார். ‘லாரன் பவுல், டின்னருக்கு வருவாயா?’ அன்று வந்தவர் இன்றுவரை ஸ்டீவ் ஜாப்ஸுடன்தான் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்படி அடிக்கடி டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்த காரணத்தால் லாரனுக்கு தலை சுற்றலும் வாந்தியும் வர ஆரம்பித்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் திருமணத்துக்குச் சம்மதித்தார். திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்களை அவர் கூப்பிடவில்லை. தேவைப்பட்டபோது மட்டுமே அவர் மீடியாவை பயன்படுத்திக்கொண்டார்.  மிக எளிமையாக நடந்து முடிந்தது திருமணம். பௌத்த ஜென் குரு கொபின் ஸைனொ என்பவர் தலைமையில் ஊதுபத்தி வாசனையில் மடாலய மணிகள் முழங்க யோஸ்மைட் தேசியப் பூங்காவில் திருமண விழா நடைபெற்றது. ஸ்டீவைவிட ஒன்பது வயது குறைந்த லாரன் பவுல், மேக் விளம்பரத்தில் வரும் மாடல் பெண்ணைப் போல் இருந்ததை என்னவென்று சொல்வது!

மாளிகையைப் போல வீடு இருந்தபோதும், தன் கல்லூரிக்குப் பக்கத்தில் ஒரு சிறிய வீடு அமைத்துக்கொள்ளலாம் என்றார் லாரன். ஸ்டீவ் ஒப்புக்கொண்டார்.

ஸ்டான்போர்டில் படிக்கும் உங்கள் மகளைப் பார்க்கவரும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று ஸ்டீவ் கேட்டுக்கொண்டதால் அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் ஸ்டீவின் பழைய மாளிகையைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். ஸ்டீவ் சுத்த சைவம் என்பதால் மாளிகையில் தங்கிய கிளிண்டனுக்கும் சைவ உணவே அளிக்கப்பட்டது.

முதன் முதலாக தான் காலடி எடுத்து வைத்த கல்லூரியின் நினைவாக முதல் குழந்தைக்கு ரீட் (Reed) என்று பெயர் வைத்தார்கள் ஸ்டீவ் தம்பதியினர். ஸ்டீவ் ரொம்பவும் நல்லவராகிவிட்டார் என்று பலர் கூற ஆரம்பித்தார்கள். ரீடுக்குப் பிறகு இரு குழந்தைகள், லிஸா என்று வீடு குழந்தைகளால் நிரம்பியிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஸ்டீவ் நல்லவராக மாறிய அதே சமயம், அவர் உடல்நிலை மோசமடைய ஆரம்பித்தது.

(தொடரும்)

– அப்பு

ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 21

ஸ்லிம்

நடிக நடிகையரின் அந்தரங்கங்களை வெளியிடுவதற்கு வெப்சைட்கள் இருப்பது போல ஆப்பிளைப் பற்றி மட்டும் செய்திகள் வெளியிடுவதற்குத் தனி வெப்சைட்கள் உள்ளன. ஆப்பிள் பொருள்களைத் துரத்தும் பாப்பராசி புகைப்படக்காரர்களும் உண்டு.

ஐ-பேட்டின் தயாரிப்புகளை மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தனர். ஆப்பிள் டேப்லட் பிசி தயாரித்தால் அதன் பெயர் ஐ-டேப்லட் அல்லது ஐ-ஸ்லேட் என்று மக்களாகவே பெயர் சூட்டி மகிழ்ந்தனர். கல்யாணத்துக்கு முன்பே குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழும் பொற்றோரைப் போல்.

ஆப்பிள் டேப்லெட்டையோ அதன் புகைப்படத்தையோ நேரில் கொண்டு வருபவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு என ஒரு வெப்சைட் அறிவித்திருந்தது என்றால் மக்கள் எவ்வளவு ஆவல் கொண்டு அலைந்தனர் என்று அறிந்துகொள்ளலாம். ‘இப்படி எல்லாம் மக்களைக் குற்றம் செய்ய தூண்டுவது சட்டப்படி தவறு’ என்று ஆப்பிள் லாயர்கள் அனுப்பிய கடிதம் மட்டும்தான் அந்த வெப்சைட்டுக்குக் கிடைத்தது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏன் இந்தக் கொலைவெறி? மற்ற துறைகளை மாற்றியமைத்தது போல் ஸ்டீவ் ஜாப்ஸால் டிவியில் சொல்லும்படி எதுவும் செய்ய இயலவில்லை. டிவி மக்களை முட்டாளாக்குகிறது என்ற ஸ்டீவ் ஜாப்ஸின் நல்லெண்ண நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம்.

கம்புயூட்டர், மியூசிக் பிளேயர், போன் அனைத்திலும் முத்திரை பதித்தாயிற்று. ஸ்டீவ் ஜாப்ஸ் மிச்சம் வைத்திருந்தது டேப்லட் அல்லது நெட்புக் எனப்படும் வகையறா மட்டும்தான்.

மற்ற கணிணித் தயாரிப்பாளர்கள் எல்லாம் நெட்புக் தயாரிப்பில் அல்லது விற்பனையில் இறங்கி இருந்தனர். இதற்கு பின் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகிறார் என்னும் கவலை ஆப்பிள் ஆர்வலர்களுக்கு இருந்தது.

டேப்லட்டின் காரணமாக மேக்கின் விற்பனை விழுந்து விட்டால்? இந்த பயம் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு இல்லை.  ‘எங்களுக்கு நாங்களே போட்டியாக இருப்பதை பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. போட்டியாளர்களின் பொருள்களுக்கு பதில் எங்களுடைய ஏதாவது ஒரு பொருள் விற்றால் போதும்!’  அப்படித்தான் ஐ-போனில் போனை மட்டும் எடுத்து ஐ-டச் என்ற ஐ-பாட் வகையறாவை வெளியிட்டார்.

கைக்கு அடங்கி அடங்காமல் இருக்கும் அந்த ஐ-டச்சை சற்றே பெரிதாக்கி கைக்கு அடக்காமல் மாற்றினால் டேப்லட் ரெடி. ஆனால் ஐ-டச் வந்து வருடம் பல ஆகியும் டேப்லட் வரும் வழி தெரியவில்லை.

மேலும் கீபோர்ட் இல்லாமல் டச் மூலமாக கையடக்கக் கணிணி ஒன்றை உருவாக்க இயலும் என்று ஆப்பிள் எஞ்சினியர்கள் காட்டியதில் இருந்துதான் ஐ-போன் ஐடியா உதித்தது என்றும் செய்திகள் சுற்றிக் கொண்டிருந்தன. [பின்னாளில் ஸ்டீவ் ஜாப்ஸே இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.]

மிக முக்கியமாக 2003 வாக்கில், ‘டேப்லட் தயாரிக்கும் எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை. மக்கள் கீபோர்டை விரும்புகிறார்கள். டேப்லட் மார்க்கெட்டில் இறங்கலாமா என்று ஆராய்ந்துப் பார்த்தோம். டேப்லட்டில் தோல்வி நிச்சயம்’ என்று ஸ்டீவ் ஜாப்ஸ் பேட்டி கொடுத்த நாளில் இருந்து, இல்லை என்றால் இருக்கு என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

‘உங்கள் பணம் எங்கள் பணமாக வேண்டும் என நீங்கள் எல்லாரும் இவ்வளவு விருப்பப்படும் போது அதை நிறைவேற்றுவதைவிட எனக்கு வேறு என்ன வேலை? அது என கடமை! என ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு வழியாக ஜனவரி 27, 2010 அன்று ஐ-பேட்டை அறிமுகப் படுத்தினார்.

ஐ-பேட் அறிமுகப்படுத்துவதற்கு சில நாள்களுக்கு முன் சில பத்திரிகைகளில், ஆப்பிளின் டேப்லட் 1000 டாலர் வரை இருக்கலாம் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். ஐ-பேட் அறிமுகப் படுத்தும் போது இதைக் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். ‘ஐ-பேட்டின் விலை 500 டாலர்கள் தான்.’ ஆப்பிளின் மற்ற பொருள்களுக்கு வைக்கும் விலையைவிட இது குறைவு தான் என்றாலும் மற்ற டேப்லட்களைவிட விலை மிக அதிகமே.

அதிக விலை இருக்கும் என எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு கம்மியான விலையில் அறிமுகப்படுத்துவது வாடிக்கை. இதற்காகவே பொய்யான தகவல்களை ஆப்பிள் பரப்புகிறது என்றும்கூட சொல்வார்கள்.

எப்படியோ, எண்பது நாட்களில் மூன்று மில்லியன் ஐ-பேட்களை மக்கள் வாங்கிக் குவித்தார்கள். அறிமுகப்படுத்தியே சில மாதங்களில் மேக் விற்பனையைவிட ஐ-பேட்கள் அதிகம் விற்றன.

அதே சமயம்,  ஆப்பிளை கார்பரேட்கள் கடிக்கத் தொடங்கியிருந்தன! அது நாள் வரை பிசிக்கள் [விண்டோஸ் மைக்ரோசாஃப்ட் எனப் படிக்கவும்] மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்த கம்பெனிகளில் ஐ-பேட் பயன் படுத்தத்தொடங்கினர். அக்செஞ்சர் நிறுவனம் ஒரே நாளில் ஐநூறு ஐ-பேட்கள் வாங்கியது.

அது நாள் வரை பொதுமக்களுக்காகவும் பொழுதுபோக்குவதற்கும் பந்தா காட்டுவதற்கும் என இருந்த ஆப்பிளின் பொருட்களில் ஒன்று முதல் முறையாக சீரியஸ் உபயோகத்துக்கு வரப்போகிறது என்று மக்கள் முடிவு செய்தனர். இது அனைவரையும்விட ஆப்பிளை அதிகம் ஆச்சரியப்படுத்தியது.

பில்கேட்ஸை உண்மையாக கணிணித் துறையில் ஸ்டீவ் ஜாப்ஸ் வென்றது,  ஐ-பேட்டுக்கு கம்பெனிகள் ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுத்த அன்று தான்.

2001-ல் பில் கேட்ஸ் டெமோ காட்டியதை ஸ்டீவ் ஜாப்ஸ் 2010-ல் அறிமுகப்படுத்தினார் என்று சிலர் சொல்லக்கூடும். டேப்லட் பிசி என்ற வார்த்தையை பில்கேட்ஸ்தான் பிரபலப்படுத்தினார் என்ற வரலாற்றில் பாதி உண்மைதான் இருக்கிறது.

மீதி உண்மை என்னவெனில், மக்கள் கணிணியை இயக்கும், பயன்படுத்தும் முறையை மேக்கின் மூலமாக வரையறுத்தது ஆப்பிள்தான். நியூட்டன் என்ற முதல் பெர்ஸனல் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் கருவியின் வழியாக மீண்டும் அந்த விதிமுறைகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் வெற்றி கொண்டதும் ஆப்பிள்தான். ஒரு வகையில் பார்த்தால் முதல் டேப்லட், ஆப்பிளின் நியூட்டன்தான்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளுக்கு திரும்பி வந்த புதிதில் புதைக்கப்பட்ட பொருள்களில் நியூட்டனும் ஒன்று. தனக்குப் பிடிக்காத ஜான் ஸ்கல்லி அறிமுகப்படுத்திய பொருள் என்பதாலேயே அதை ஸ்டீவ் ஒரங்கட்டினார் என்பதை மறுப்பதற்கில்லை. விலை அதிகம். பத்து வருடம் கழித்து அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது என்பதால் ஸ்டீவ் ஜாப்ஸ் செய்ததுதான் சரி என்று சொல்லபவர்களும் உண்டு.

ஸ்டீவ் ஜாப்ஸ் நினைத்திருந்தால் நியூட்டன் நீடுழி வாழ்ந்திருக்கலாம். 2009-ல் ஐ-பேட்டை அறிமுகப்படுத்தும்முன் நியூட்டனின் காரணகர்த்தா என அறியப்பட்ட ஒருவரை 15 வருடம் கழித்து மீண்டும் ஆப்பிளில் வேலைக்கு எடுத்தனர். இதன் மூலம் டேப்லட் பிசிகளில் நியூட்டன் மற்றும் ஆப்பிளின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது புரியும்.

டேப்லட் பிசி தயாரிக்கும் எண்ணம் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு முதன்முதலில் வந்தது 1983-ல். ஆம் மேக் தயாரிக்கும் முன்னதாகவே. ஸ்டீவ் ஜாப்ஸின் ஆஸ்தான இண்டஸ்டரி டிசைன் நிறுவனமான பிராக் [மேகிண்டாஷ், நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் மாதிரிகளை உருவாக்கிய நிறுவனம்] பேஷ்புல் எனப் பெயரிடப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட டேப்லட் மாதிரிகளை தயாரித்திருந்தன. ஆனால் அவை ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை என்ற உண்மை ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஐ-பேட்டில் ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்யமுடிகிறது. கேமரா இல்லை. பிளாஷ் இல்லை.அது இல்லை இது இல்லை என்று குறைகளைத் தாண்டி அறிமுகப்படுத்திய புதிதில் டேப்லட் பிசியில் 95% மார்க்கெட் ஷேரை ஐ-பேட் வைத்திருந்தது. ஏதோ ஆண்ட்ராய்ட் புண்ணியத்தில் மக்களுக்கு புத்தி வந்து இப்பொழுது 75% மார்க்கெட் ஷேரில் இருக்கிறது. 2014-15 வாக்கில்தான் ஆண்ட்ராய்ட் டேப்லட்கள் ஐ-பேட்டை விட அதிகம் விற்கும் என ஆருடம் சொல்கிறார்கள்.

ஐ-பேட் கொஞ்சம் பெரிதாக இருக்கிறது 10 அங்குலத்துக்கு பதில் மற்றவர்களைப் போல் 7 அங்குலத்தில் தயாரிக்கக்கூடாதா என்றால் அப்படியெல்லாம் முடியாது. 7 அங்குல டேப்லட்டுக்கு சாஃப்ட்வேர் எழுதினால் சரி வராது. நல்ல சாஃப்ட்வேர் எழுத 10 அங்குலம் அவசியம் என்று பதில் சொல்லிவிட்டார்.

அளவைத்தான் குறைக்கவில்லையே தவிர ஐ-பேடின் தடிமானத்தைக் குறைத்து ஸ்லிம்மாக ஐ-பேட்-2 வை வெளியிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

முதல் ஐ-பேடில் இருந்த சில குறைகளை இதில் நீக்கியிருந்தது மக்களை அதிகமாக ஆச்சரியப் படுத்தவில்லை. ஸ்லிம்மான ஐ-பேடைவிட ஆச்சரியப்படுத்தியது அதை அறிமுகப்படுத்த வந்த ஸ்லிம்மான ஸ்டீவ் ஜாப்ஸ்! உடல்நிலை சரியில்லாமல் விடுமுறையில் இருந்தவர் வர மாட்டார் எனத்தான் எதிர்பார்த்தார்கள்.

ஐ-பேட்-2-ல் சில காலமாகவே அதிக கவனம் செலுத்திக்கொண்டு இருந்தோம். இந்த நாளை மிஸ் செய்ய விருப்பமில்லை. அதுதான் அறிமுகப் படுத்த நானே வந்தேன் என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்திய கடைசிப் பொருள் அதுவாக இருக்கலாம்!

(தொடரும்)

0

அப்பு

ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 20

பரவும் ஆப்பிள் காய்ச்சல்

ஆப்பிள் செல்போன் தயாரிப்பதற்கு முன்னரே பல கம்பெனிகள் பல செல்போன்களை பல்வேறு ஆப்ஷன்களோடு விற்றுக்கொண்டு தான் இருந்தன. புது செல்போன்களையும் அவ்வப்போது அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருந்தன.

அப்படியிருக்க ஒரு கம்பெனி ஒரே ஒரு செல்போன் மூலம் எப்படி ஒரு துறையின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது? அதற்கு முன் இருந்த செல்போன்கள் அவ்வளவு மோசமாக இருந்ததா? அல்லது ஆப்பிளின் செல்போன் அவ்வளவு மேம்பட்டதாக இருந்ததா? இல்லை என்பதுதான் பதில்.

செல்போன் எவ்வளவு சிறிதாக இருக்கிறதோ அந்தளவு சிறப்பானது என்ற நிலைமையில் ஐ-போன் கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. ஒரே ஒரு நெட்வொர்க்கில் அதுவும் நொட்டை நொடிசலான நெட்வொர்க்கில் மட்டும்தான் கிடைக்கும். அதிலும் செல்போனை ஆக்டிவேட் செய்வதில் பல பிரச்னைகள். ஆபீஸ் மெயில்கள் பார்க்க முடியாது. மெசஞ்சர் கிடையாது. ஒரு செல்போனுக்கான விலையா இல்லை செல்போன் கடைக்கான விலையா என்னுமளவு அதிகமான விலை. இப்படி பல குற்றங்குறைகள் இருந்தும் ஸ்டீவ் ஜாப்ஸை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாட காரணம் என்ன? அத்தனை குறைபாடுகளையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு, மணிக்கணக்கில் கால் கடுக்க க்யூவில் நின்று அறிமுகனான முதல் நாளே வாங்கிக் குவித்த மாயம் என்ன? ஆப்பிளின் அம்சமான அழகா? ஸ்டீவ் ஜாப்ஸின் மந்திர மார்க்கெட்டிங்கா?

முன்பும் சரி இப்போதும் சரி, அமெரிக்காவில் ப்ரீ பெயிட் அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. போஸ்ட்பெய்ட் தான். ஏர்டெல், ஏர்செல் போல முதலில் நீங்கள் ஒரு நெட்வொர்க்கை தேர்ந்தேடுக்க வேண்டும். பிறகு மாதாந்திர பிளான். அப்புறம் அவர்கள் தரும் போனில் இருந்து ஒன்றைத் தேர்ந்தேடுக்க வேண்டும். போனில் இன்ன இன்ன ஆப்ஷன்கள் தான் இருக்கும் என்பதையும் நெட்வொர்க் தான் முடிவு செய்யும். போனுக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தனை வருடம் காணட்ராக்ட் என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தால் போன் விலையை மாதாந்திர தவணையில் கழித்துக் கொள்வார்கள். நம்பர் மொபிலிட்டி இருந்தாலும் நெட்வொர்க்கை யாரும் அவ்வளவு எளிதில் மாற்ற மாட்டார்கள். விசுவாசம் எல்லாம் காரணமில்லை. காண்ட்ராக்ட், கட்டணம் என்ற கண்றாவிகள் தான் காரணம்.

கஸ்டமர்களைக் கவர பொதுவாக என்ன செய்வார்கள்? வருடம் முழுவதும் ஒரு நம்பருக்கு எவ்வளவு வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள் என்று அறிவிப்பார்கள்.  ஒரு போனைப் பொறுத்து கஸ்டமர் நெட்வொர்க்கைத் தேர்ந்தேடுப்பார்கள் என்று யாரும் யோசித்துப் பார்க்கவில்லை, நம்பவும் இல்லை. செல்போன் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் தயவில் தான் இருந்தனர்.

அப்படி இருக்கையில், ஸ்டீவ் ஜாப்ஸ் சிங்குலர் என்ற கம்பெனியிடம் சென்று, நான் செல்போன் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். ஐந்து வருடத்துக்கு உங்களுக்கு மட்டுமே விற்கிறேன், சம்மதமா என்றார். தன் எதிர்பார்ப்புகளையும் சொன்னார். ‘நானும் விற்பேன். நீங்களும் விற்கலாம். ஆனால் அதில் எனக்கு பத்து சதவிகிதம் வேண்டும். என் போனை பயன்படுத்துபவர்கள் மாதா மாதம் பில் கட்டுவார்கள், அதிலும் எனக்கு கொஞ்சம் பங்கு கொடுத்துவிடுங்கள். அதிகம் வேண்டாம். மாதம் பத்து டாலர். பிறகு, என் போன் அளிக்கும் வசதிக்கேற்ப உங்கள் வாய்ஸ் மெயில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உங்களிடம் போன் கனெக்‌ஷன் வாங்க ஆன்லைனில் பாரத்தை பூர்த்தி செய்வதற்குள் உலகம் முடிந்துவிடும். இதை மாற்றுங்கள். சில மில்லியன் டாலர்கள் செலவு ஆகும். பொருட்படுத்த வேண்டாம். மற்றபடி போன் எப்படி இருக்கும் எப்படி வேலை செய்யும் எப்படி மார்க்கெட் செய்வோம் எல்லாம் நாங்கள் தான் முடிவு செய்வோம். இதில் எதிலும் நீங்கள் தலையிடக் கூடாது. சம்மதமா?’ போன் என்ற ஒன்றை உருப்படியாக தயாரிக்கும் முன்னே. அதுவும் தயாரிப்பு முன் அனுபவம் எதுவுமில்லாமலேயே ஸ்டீவ் ஜாப்ஸால் இப்படிப் பேரம் பேசமுடிந்தது ஆச்சரியம்தான்!

இவ்வளவு பஞ்சாயத்தையும் பேசி முடிக்க ஒன்றரை வருடம் பிடித்தது. ஒவ்வொரு முறை பேரம் பேச செல்லும் போதும் ஆப்பிள் ஆட்கள், இன்பீனியன் என்ற கம்பெனியின் ஆட்கள் என்று சொல்லி விட்டு தான் செல்வார்கள். ரகசியம் காக்க வேண்டுமே. சிங்குலரிடம் பேச்சு வார்த்தை முடிக்கும் முன் அதன் பெயர் ஏடி அண்ட் டி என்று மாற்றப்பட்டது. அவ்வளவு ரகசியம்!

கணிணியை கைக்குள் கொண்டு வந்ததை விட நெட்வொர்க்கை கைக்குள் போட்டுக் கொண்டது தான் ஒரு வகையில் உண்மையான சாதனை. ஆப்பிள் ஐ-போன் தயாரிக்க அதிகம் பாடுபட்டதா அல்லது பேச்சு வார்த்தைக்கு அதிகம் பாடுபட்டதா என்று பட்டிமன்றம் நடத்தினால் தீர்ப்பு சொல்வது கடினம்.

வெரிசான் என்ற நிறுவனம், இந்த கண்டிஷன்களை எல்லாம் கேட்ட பின் ஆப்பிளிடம் சொன்ன ஒற்றை வரி, கதவு அந்தப் பக்கம் வெளியே போங்கள்.

சிங்குலர் இப்படி அனைத்துக்கும் ஒப்புக்கொண்டதற்கு காரணம், நாம் ஒப்புக்கொள்ளாவிடில் என்ன ஆகும் என்ற பயம் ஒருபுறம். மறுபுறம் ஆப்பிளின் செல்போன் நிறைய கஸ்டமர்களை கொண்டு சேர்க்கும். பேசுவதையும் தாண்டி மற்ற சேவைகளிலும் பணம் பார்க்கலாம் என்ற விருப்பம். இது போன்ற மாற்றங்கள் செல்போன் கம்பெனிகளுக்கு தேவையாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லவும் வழிக்கு கொண்டு வரவும் ஸ்டீவ் ஜாப்ஸ் செல்போன்களின் பக்கம் பார்வையைத் திருப்ப வேண்டி இருந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன அனைத்துக்கும் ஆமாம் சாமி போட்ட ஏடி அண்ட் டி க்கு ஆனந்த கொண்டாட்டம். விற்பனைக்கு வந்த ஆறு மாதத்தில் மூன்று மில்லியன் ஐ-போன்கள். நியூ யார்க், சான் பிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களில் நெட்வொர்க்கின் டிராபிக் மூன்று மடங்கு அதிகரித்தது. ஆறே மாதத்தில் ஏடி அண்ட் டி க்கு ஐ-போன் மூலமாக மட்டும் சுமார் 12 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்!

இந்த வானளாவிய விற்பனை வெற்றியிலும் ஸ்டீவ் ஜாப்ஸின் பங்கு இல்லாமல் இல்லை. அறிமுகப்படுத்தி விற்பனைக்கு வரும் முன்னரே அனைவரும் ஐ-போனுக்கு அப்ளிகேஷன் எழுதும் ஆப்ஷன் இருக்கும் என அறிவித்தார். அப்படி அப்ளிகேஷன் எழுதியே மில்லியன் டாலர் வருமானம் பார்த்தவர்களும் உண்டு.

ஒரு பொருள் சரியாக விற்பனை ஆகவில்லையென்றால் விழாக்கால சலுகை என்று விலையைக் குறைத்து விற்பார்கள்.  அல்லது ஆரம்ப கால சலுகை தருவார்கள். ஆனால் விற்பனைக்கு வந்த முப்பது மணி நேரத்தில் 2,70,000 ஐ-போன்கள் விற்றிருந்தும் 68 நாட்களில் 600 டாலருக்கு விற்றுக் கொண்டிருந்த ஐ-போன் விலையை 400 டாலருக்கு குறைத்தார், ஸ்டீவ் ஜாப்ஸ்.

விலை குறைப்பின் விளைவாக கொண்டாட்டத்துக்கு பதில் கொந்தளிப்பு. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆற பொறுத்தவனுக்கு அதிர்ஷ்டமா? சீறினார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு கடிதம் எழுதினார். ‘உங்கள் வருத்தம் புரிகிறது. நியாயமானது. ஆனால் அது விலைகுறைப்பு சரி என்பதை உறுதிப்படுத்துகிறது. பண்டிகைக் காலம். விற்பனைக்காக விலையை நான் குறைத்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை. என் முப்பது வருட கால டெக்னாலஜி வாழ்க்கையிலிருந்து சொல்கிறேன். இது போன்ற மேடு பள்ளங்கள் டெக்னாலஜி சாலையில் சகஜம்.எப்பவும் ஒன்றை விட ஒன்று பெட்டராக வ்ந்துக் கொண்டு தான் இருக்கும் அப்படி காத்துக் கொண்டு இருந்தால் யாரும் எதையும் வாங்க முடியாது. அதே சமயம் உங்கள் நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகையினால் இதற்கு முன்னர் வாங்கிய அனைவரும் ஆப்பிள் ஸ்டோர்களில் 100 டாலருக்கு ஏதாவது வாங்கிக் கொள்ளலாம்.’

பின்னாளில் ஐ-போன் 4 வந்து ஆண்டெனா பிரச்னை செய்த போதும் ஸ்டீவ் ஜாப்ஸ் களத்தில் குதித்தார். ஆண்டெனாவில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் முன்பு போல் இல்லாமல் பேசும் போது பாதியில் கட் ஆகி விடுகிறது. இது எங்கள் போனில் மட்டும் இல்லை எல்லா போனிலும் இருக்கிறது என டெமோ காட்டினார்.  உங்களுக்கு போனை சரியாகப் பிடிக்கத் தெரியவில்லை. அதான் இவ்வளவு பிரச்னை. ஒரு ரப்பர் பம்பர் தருகிறேன். போட்டால் சரி ஆகிவிடும். அதை இலவசமாக தருகிறேன். முன்பே வாங்கி இருந்தால் காசு திருப்பி கொடுக்கப் பட்டு விடும் என்றார்.

சிறப்பான பொருட்கள் மூலம் குஷிப்படுத்துவது மட்டுமில்லாமல் இப்படி எல்லாம் கஸ்டமர்களை கஷ்டப்படுத்தாமல் பார்த்துக் கொள்வதால் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் பக்தர்களுக்கு ஆண்டவராகக் காட்சி அளிக்கிறார்!

பிளாக்பெரி, நோக்கியாவின் சரிவை ஆரம்பித்து வைத்த ஐ-போனின் ஆட்சி லேசாக ஆட்டம் கண்டது கூகிள் ஆண்ட்ராயிடும் சாம்சங்கும் வந்தபிறகே. ஐ-போன் தயாரிக்கும் போது பதிவு செய்த 200 பேடண்ட்களை காரணம் காட்டி மற்ற செல்போன் தயாரிப்பாளர்களுக்கு தலைவலி கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது ஆப்பிள்!

ஆப்பிள் 11, மேக்கின்டாஷ், ஐ-பாட், ஐ-போன் என உலகை உலுக்கிய நான்கு பொருள்களை அறிமுகப்படுத்தியும் ஸ்டீவ் ஜாப்ஸ் அடங்குவதாக இல்லை! அடுத்த ஆட்டத்துக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

0

அப்பு

முந்தைய அத்தியாயங்கள்

ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 19

ஜனவரி 9,  2007. ‘இன்று நாங்கள் மூன்று புரட்சிகரமான பொருள்களை அறிமுகம் செய்கிறோம். டச் கண்ட்ரோல் இருக்கும் பெரிய ஸ்கீரின் ஐ-பாட், அப்புறம் போன், அப்புறம் இணையத்தை அணுக ஒரு கருவி.’ சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஏன் இப்படி சொல்கிறார் என்று யோசிக்கும் போதுதான் உண்மை புரிந்தது. இந்த மூன்று பொருள்களும் உண்மையில் ஒன்றுதான். ‘அதற்கு ஐ-போன் என்று பெயரிட்டிருக்கிறோம்!’. இப்படி அறிவித்துதான் ஆப்பிள் போனை அவர் அறிமுகப்படுத்தினார்.

அதே ஸ்டீவ் ஜாப்ஸ், 20004-ல் ஒரு பேட்டியில், போன் தயாரிக்கும் எண்ணம் ஆப்பிளுக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு, நிச்சயமாக இல்லை. அது எங்களுக்கு சரி வரும் என்று தோன்றவில்லை என்று பதிலளித்தார்.

தனது திட்டம் என்ன என்பதைத் தயாரிக்கும் வேலையில் இருப்பவர்களுக்கே  ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்ல மாட்டார். ஹார்ட்வேர் தனி ஏரியா, சாப்ட்வேர் தனி ஏரியா. யாரும் அவர்கள் ஏரியா தாண்டி போகக் கூடாது என்று கட்டி மேய்த்ததில், சுமார் 200 பேர் வேலை பார்த்த ஐ-போன் புராஜக்ட்டில், ஐ-போன் மேடையில் அறிமுகப்படுத்தும் முன் முழுதாகப் பார்த்தவர்கள் முப்பது பேருக்கு மேல் இல்லை!

போன் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு 2002-ல் இருந்தே உண்டு என்று சொல்கிறார்கள். அதாவது ஐ-பாடை அறிமுகப் படுத்திய கொஞ்ச காலத்திலேயே! ஒரு பக்கம் சாதா போன்கள், பேஜர்கள், டிஜிட்டல் டைரிகள், பிளாக்பெரிகள் என பாக்கெட்டுகளும் கைகளும் கொள்ளாத வகையில் கேட்ஜட்கள் மக்களை படுத்திக்கொண்டிருந்தன. அது போதாது என இப்பொழுது ஐ-பாட்கள். இது அனைத்தும் ஒரே கேட்ஜட்டில் இருந்தால் வசதியாக இருக்கும் மக்கள் விரும்புவார்கள் என்ற யோசனை ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மெதுவாக எட்டிப் பார்த்தது. மக்களின் வாழ்வை உன்னதமாக்குவது தானே அவருடைய வாழ்க்கை லட்சியம்.

2003-ம் ஆண்டு, பாம் (Palm) கம்பெனி, போன், டிஜிட்டல் டைரி, பிளாக்பெர்ரி அனைத்தையும் இணைத்து பாம் டிரையோ 600 என்று ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். மக்களிடையே அமோக வரவேற்பு. அது போதாது என 3-ஜி போன்கள், வை-பை (wi-fi) போன்கள் எல்லாம் வர ஆரம்பித்திருந்தன. [ஒரு வகையில் மிகவும் பிரபலமான முதல் ஸ்மார்ட் போன் இது தான். ஆனால் பின்னாளில் இந்த பாம் நிறுவனம் ஹச்பியால் வாங்கப்பட்டு, சமீபத்தில் ஹச்பி நிறுவனம் இனிமேல் ஸ்மார்ட் போன் தயாரிக்கப் போவதில்லை என்று அறிவித்தது எல்லாம் காலத்தின் கோலம்]

இவ்வளவு செய்தவர்களுக்கு இதனுடன் மியூசிக் பிளேயரை இணைக்க அதிக நாட்கள் பிடிக்காது. அப்படி செய்தால் ஐ-பாடு அடி வாங்கும். ஆப்பிள் அதோகதி என்ற அபாய மணி அடித்தது, ஸ்டீவ் ஜாப்ஸின் மனதில்.

ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஐ-பாடு ஆப்பிளின் முக்கிய அடையாளம் ஆகியிருந்தது. கம்பெனியின் பெரும்பான்மையான வருமானம் ஐ-பாட் விற்பனையில் இருந்தது.

அந்த ஐ-பாடுக்கு ஆபத்து என்றால், அழிவிலிருந்து தப்ப வேண்டுமென்றால் ஆப்பிளுக்கு போன்கள் தேவை என்ற கட்டாயம். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆசை எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு போன் தயாரிப்பதில் ஏகப் பட்ட நடைமுறை பிரச்னைகள் இருந்தது.

பேசுவதற்கே சிக்னலில் சிக்கல். இதில் தடையெதுமில்லாமல் இணையத்தில் ஒரு போனில் உலாவரும் அளவு டெக்னாலஜி முன்னேறியிருக்கவில்லை. கம்புயூட்டரை கைக்கு அடக்கமாக கொண்டு வர வேண்டுமெனில், கம்புயூட்டரில் இருக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தையும் அதற்கு தக்கவாறு அடக்க வேண்டும். அது முதலில் இருந்து ஆபரேட்டிங் சிஸ்டம் எழுதுவதற்கு சமமானது. அப்படியே எழுதினாலும் அந்த சாப்ட்வேருக்கு ஏற்ற ஹார்ட்வேருக்கு எங்கு போவது?

காலம் வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம். ஆனாலும் போன் தயாரிப்பில் நாங்களும் இருக்கிறோம் என்று ஒரு மாயை உருவாக்க வேண்டும்.

அப்போழுது RAZR என்று ஒரு போனை அறிமுகப்படுத்தி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது மோட்டோரோலோ நிறுவனம். இதற்கு அடுத்தப்படியாக தயாரிக்கும் போனை இதை விட அட்டகாசமாகத் தயாரிப்பார்கள் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் எதிர்பார்த்தார்.

ஒரு மியூசிக் பிளேயர் இருக்கும் போனை தயாரிக்கலாமா என்று மோட்டோரோலோவோடும் சிங்குலர் என்ற போன் சேவைகள் தயாரிக்கும் நிறுவனத்தோடும் கை கோர்த்தார்.

கை கோர்த்தபின் ஒரே கை கலப்பு தான். எந்த கம்பெனியின் பேர் எங்கு இருக்க வேண்டும்? இப்படித்தான் வேலை செய்ய வேண்டும் அப்படித்தான் வேலை செய்யும் என்று தினமும் கட்டிப் புடி சண்டைதான். ஒரு வழியாக ROKR என்ற மிக அசிங்கமான போனை அட்டகாசமான போன் என்று வழக்கம் போல அமர்க்களமாக அறிமுகப்படுத்தினார் ஸ்டீவ் ஜாப்ஸ்! [முதன் முதலில் செல்போனை அறிமுகப் படுத்தியது மோட்டோரோலா தான். அந்த மோட்டோரோலோவையும் ஆப்பிளோடு போட்டிப் போட கூகிள் சமீபத்தில் விழுங்கியது மன்னிக்கவும் வாங்கியது]

இப்படி மனசார பொய் சொன்ன பாவத்துக்குப் பரிகாரம் தேடியாக வேண்டும். நிச்சயம் ஒரு அழகான ஆப்பிளின் பேரைக் காப்பாற்றும் போனை கட்டாயம் தயாரித்தாக வேண்டும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் அப்பொழுதுதான் முடிவு செய்திருக்க வேண்டும்.

மோட்டோரோலோவை கழட்டி விட்டார். நேராக சிங்குலர் கம்பெனியிடம் சென்றார். இது வரை யாரும் பார்த்திருக்காத யோசித்துக் கூட பார்த்திராத சயன்ஸ் பிக்‌ஷன் படங்களில் இருபது வருடம் கழித்து வரும் போனை போல ஒன்றை நான் இன்று தயாரித்து தருகிறேன். என்ன சம்மதமா? என்றார். தேவையெனில் வயர்லெஸ் ஸ்பெக்ட்ரமையும் வாங்கிக் கொள்ள ரெடி என்றார்.

கங்கணம் கட்டிக் கொண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் களத்தில் குதிக்கக் காரணம், அப்போது காலம் கனிந்திருந்தது என்பதுதான். முன்பு இருந்த தடைக்கற்கள் காணாமல் போயிருந்தன. ஒரு டேப்லட் பிஸிக்காக டச் ஸ்கீரினை தயார் செய்திருந்தனர். அதன் அளவை கொஞ்சமாகக் குறைத்து போனுக்குத் தகுந்தவாறு மாற்றித் தர நாங்கள் ரெடி என ஆப்பிளின் ஹார்ட்வேர் மக்கள் உறுதி தந்தனர். ஆபேரட்டிங் சிஸ்டத்தை அலேக்காக தாங்குமளவு சூப்பரான சிப்கள் வந்திருந்தன. அனைத்துக்கும் மேலாக, மக்களை போன் பேசுவது மட்டுமில்லாமல்  டேட்டா சர்வீஸ்களை (இணையச் சேவைகள், 3ஜி) எவ்வாறு பயன்படுத்த வைப்பது என்று அமெரிக்க டெலிகாம் கம்பெனிகள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தன. இன்று இந்தியாவில் இருக்கும் அதே நிலை அன்று அமெரிக்காவில்!

இப்படி ஒரு போன் வந்தால் வருமானத்துக்கு வானம் கூட எல்லையில்லை என்று உணர்ந்தனர். நாம் ஒப்புக்கொள்ளாவிட்டால் வேறு ஏதாவது ஒரு கம்பெனி லாபத்தை அள்ளிவிடும் என்றும் பயந்தார்கள்.

இப்படி பேரம் ஒரு புறம் நடந்துகொண்டிருந்த போதே கொண்டு வாருங்கள் ஐ-போனை என்று ஆப்பிள் மக்களுக்கு ஆணையிட்டார், ஸ்டீவ் ஜாப்ஸ். பர்ப்பிள் 2 பிராஜக்ட் ஆரம்பமானது. ஒரு காலத்தில் ஆரம்பித்து அந்தரத்தில் விட்டிருந்த ஐ-பாட் போன் பிராஜக்ட்டின் பெயர், பர்ப்பிள்-1.

போன் தயாரிப்பில் புது பிரச்னைகள் பிறந்தன. கம்பூயூட்டரில் கரை கண்ட ஆப்பிள் மக்களுக்கு வயர்லெஸ், போன் ஆண்டென்னா, ரேடியோ சிக்னல் என்பது எல்லாம் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது. ஐ-போனைத் தயாரிக்க ஆப்பிள் பட்ட டெக்னாலஜி கஷ்டங்கள் எல்லாம் சொல்லி மாளாது. ஐ-போனின் மாதிரியைத் தயாரிக்க மட்டும் 150 மில்லியன் டாலர் வரை செலவாயிருக்கும் என்பதில் இருந்து எவ்வளவு கஷ்டங்கள் இருந்திருக்கும் என்று கணக்கு போட்டுக் கொள்ளலாம்.

போனில் வேலை செய்ய வேண்டிய அடிப்படை சமாச்சாரங்கள் எதுவும் வேலை செய்யவில்லை. போனை கட்டாயமாக அறிமுகப் படுத்தியே தீர வேண்டிய நாள் அதிக தூரத்தில் இல்லை. ஒரு பொருளை சொன்ன தேதியில் அறிமுகப்படுத்த முடியவில்லை என்பது ஒரு பக்கம். ஒரு போனை தயாரித்து தருகிறோம் என்று மற்ற ஒரு கம்பெனியிடம் கொடுத்திருக்கும் வாக்கு இன்னொரு பக்கம். மானப் பிரச்னை!

ஸ்டீவ் ஜாப்ஸ் கத்தல் கூப்பாடு எதுவுமில்லாமல் மிக அமைதியாக முறைத்தார். அதற்கு அவர் வழக்கம் போல கடித்து குதறியிருக்கலாம் என ஆப்பிள் மக்கள் ஆசைப்பட்டனர்.

அப்புறம் என்ன, போன் புராஜக்ட்டில் இருந்தவர்கள் அடுத்த சில மாதங்களுக்கு சோறு தண்ணி மறந்தனர். குடும்பத்தை மறந்தனர்.  தீயாக வேலை பார்த்தனர். எதிர்பார்த்தவாறு எதிர்பார்த்த தேதிக்குள் ஐ-போன் ரெடியானது. மொபைல் துறையின் தலையெழுத்து மாற்றி எழுதப் பட்டது.

(தொடரும்)

0

அப்பு

 

ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 18

இணையம், இசை, இனிமை

ஆப்பிளின் அடையாளத்தையே அடியோடு மாற்றிய ஐ-பாடின் விற்பனை அறிமுகப்படுத்திய நேரத்தில் ஆமை வேகத்தில் தான் இருந்தது.  ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் அசரவில்லை. மார்க்கெட்டில் அடுத்தடுத்து மாடல்களை இறக்கிக் கொண்டே இருந்தார்.

அறிமுகப் படுத்திய காலத்தில் ஐ-பாடை பயன்படுத்த வேண்டுமென்றால் மேக் கம்ப்யூட்டர் அவசியமாக இருந்தது. என்னுடைய அழகான ஐ-பாட் வேண்டுமெனில் என் அழகான மேக்கையும் வாங்கு. இல்லையா, என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று பிடிவாதம் பிடித்திருக்கலாம். ஐ-பாடடுக்கு ஆசைப்பட்டு மேக்கையும் வாங்குவார்கள் வருமானம் வளரும் என தப்புக் கணக்கு போட்டிருக்கலாம். ஸ்டீவ் ஜாப்ஸ் அதை எல்லாம் செய்யவில்லை.

விண்டோஸில் இருக்கும் அப்ளிகேஷன்கள் எல்லாம் மேக்கில் வேண்டும் என்று ஆசையும் அவதியும் பட்டுக் கொண்டிருந்தது போய் மேக்கில் இருக்கும் ஒரு அப்ளிகேஷன் விண்டோஸில் வேண்டும் என்ற நிலை வந்த அந்த தருணத்தில் பில்கேட்ஸுடனான பல வருட யுத்தத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் வெற்றி பெற்றிருந்தார்.

பெரிய மனசுக்காரரான ஸ்டீவ் ஜாப்ஸ், போனால் போகட்டும் விண்டோஸிலும் ஐ-பாடை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஆசிர்வாதம் செய்தார்.

அவ்வளவு தான். தமிழ் சினிமாக்களில் ஒரே பாட்டில் பணக்காரன் ஆகும் கதாநாயகனின் வளர்ச்சியை விட மிக வேகமான விற்பனை. செப்டம்பர் 2008 வரை 173,000,000 ஐபாட்கள் விற்பனை!

மக்கள் பாட்டு கேட்கும் விதத்தை மாற்றி விட்டோம். ஆனால் வாங்கும் விதம் இன்னும் மாறவில்லையே என்று ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தோன்றியது. விளைவு, பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ஐ-டியூன்ஸ் ஸ்டோர்ஸ் உருவானது. உலக வரலாற்றில் முதன் முறையாக, இணையம் வழியாக, ஒழுங்காக, சட்டப் பூர்வமாக இசைப் பாடல்களை விற்கும் முதல் கம்பெனியானது, ஆப்பிள். மில்லியன் பாடல்கள் விற்க ஆறு மாதங்கள் ஆகும் என ஆப்பிள் போட்ட கணக்கு தப்புக் கணக்காகி அந்த இலக்கை ஆறே நாட்களில் எட்டினார்கள்.

மூன்று வருடங்களுக்குள் பில்லியன் பாடல்கள். இந்திய மக்கள் தொகை வெறும் 1.17 பில்லியன் தான். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் 6 முறை அங்கு வாங்கியதற்கு சமமான விற்பனையாக 2009  வருட ஆரம்பத்தில் 6 பில்லியன் பாடல்கள். இது இல்லாமல் டிவி ஷோக்கள் மற்றும் படங்களையும் விற்கிறார்கள். [ஐ-டியூன்ஸ் ஸ்டோர் அறிமுகப்படுத்திய காலத்தில் இணையத்தில் பாடல்களை விற்பது போல படங்களை விற்க முடியும் என்று தோன்றவில்லை என்று பேட்டி கொடுத்திருந்தார், ஸ்டீவ் ஜாப்ஸ்].

ஸ்டீவ் ஜாப்ஸ் மாற்றியமைத்த, முத்திரை பதித்த துறைகளில் ஆன்லைன் விற்பனையும் ஒன்று என்பதற்கு சாட்சியாக இன்றும் இசை விற்பனையில் ஐ-டியூன்ஸ் கொழித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஆப்பிள் ஸ்டோர்ஸ் என்று இணையம் வழியாக முன்பே சாப்ட்வேர் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதோடு பாடல்களையும் சேர்த்து விற்பனை செய்ய ஆன்லைன் கடையை எளிதாக மாற்றியமைத்தார்கள்.

கடையை பெரிது படுத்தி என்ன செய்வது? விற்பதற்கு சரக்கு வேண்டாமா? எங்கள் பாடல்களை அதுவும் இணையம் மூலமாக நீங்கள் தாராளமாக விற்பனை செய்யுங்கள் என்று ஆப்பிளை நம்பி மியூசிக் நிறுவனங்கள் விற்பனை உரிமை தருவார்களா? இணையம் என்ற வார்த்தையை சொன்னாலே கொலைவெறி கொண்டு கடித்துக் குதற மியூசிக் நிறுவனங்கள் தயாராக இருந்த காலம் அது. மிகவும் சிக்கலான பிரச்னை என்று வெற்று வார்த்தைகளால் விவரிக்க முடியாத சவால் அது.

அமெரிக்காவில் எல்லாம் சினிமா பாடல்கள் என்று தனியாக எதுவும் இல்லை. மியூசிக் ஆர்ட்டிஸ்ட்கள் பாடல் எழுதுவார்கள் இசை அமைப்பார்கள் அதன் உரிமையை ஏதாவது நிறுவனம் வைத்திருக்கும். அந்த நிறுவனங்களின் நிலைமையைப் பொறுத்து தான் மியூசிக் இண்டஸ்டரியின் வாழ்வும் வீழ்ச்சியும்.

இணையம் வழியாக இலவசமாக பாடல்கள் பகிர்ந்துக் கொள்ள வழி செய்தது மூலம், மியூசிக் இண்டஸ்டரியின் வருமானத்துக்கு வேட்டு வைத்திருந்தன, நாப்ஸ்டர் காஸ்ஸா என்ற இரண்டு சமாச்சாரங்கள். இதனால் இணையம் நாசமாக போக என்று சபித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வருடத்துக்குள்ளாக ஐ-பாடை உருவாக்க முடிந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மியூசிக் கம்பெனிகளை வழிக்கு கொண்டு வர 18 மாதங்கள் பிடித்தது.

இந்தக் காலதாமதத்துக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன மிக முக்கிய காரணம் அவர்களின் அறியாமை. 5000 பேரில் மிக திறமையான ஒருவனை அடையாளம் கண்டு கொள்ள முடியும்,  இந்த மியூசிக் கம்பெனிகளுக்கு டெக்னாலஜி பற்றி ஒரு மண்னும் தெரியவில்லை என்று பத்திரிகை பேட்டியில் வெளிப்படையாக மானத்தை வாங்கினார்.

மியூசிக் கம்பெனிகளுக்கு டெக்னாலஜி தெரிய வில்லை. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு இசையின் அருமை பெருமை தெரிந்திருந்தது. ஒரு மிகப் பெரிய ரசிகர் என்பதால் அவரால் மியூசிக் கம்பெனிகளிடம் இசையின் மொழியைப் பேச முடிந்தது.

இணையத்தை யாராலும் இழுத்து மூட முடியாது. ஒரே ஒரு திருட்டு காப்பி நெட்டில் இருந்தால் போதும். உலகம் முழுக்க பரவி விடும். அதை தடுக்க ஒரே வழி அதோடு போட்டி போட வேண்டியது தான் என்று மியூசிக் கம்பெனிகளுக்குப் போதனை வழங்கினார். ஸ்டீவ் ஜாப்ஸ் இளமைப் பருவத்திலேயே அவருக்கு பிடித்த பாடகரான பாப் டைலானின் பாடல்கள் அனைத்தையும் திருட்டுக் காப்பியாக வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் திருட்டைத் தடுக்க முடியாது என்று சொல்லும் போதே இந்த மியூசிக் கம்பெனிகள் கேட்டிருக்க வேண்டும்.

கேட்கவில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் மியூசிக் கம்பெனிகளின் கதவைத் தட்டினார். இணையம் கண்டுபிடிக்கப் பட்டதே இசையை மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கத்தான் அது புரியாமல் இருக்கிறீர்களே என்று புலம்பினார்.

அன்றைய கால கட்டத்தில் மியூசிக் கம்பெனிகள் இசையை இணையம் வழியாக வாடகைக்கு விட்டுக் கொண்டிருந்தனர். பத்து டாலர் செலவழித்து வாங்க முடியும் போது எந்த முட்டாள் மாதம் பத்து டாலர் சந்தா கட்டி பாடல்களைக் கேட்பான்? சந்தாவைப் புதுப்பிக்கவில்லை என்றால் இது வரை இருந்த பாட்டு எல்லாம் கோவிந்தா. இந்த மாடல் வேலைக்காகாது என்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அருள்வாக்கு பலிக்க ஆரம்பித்த போதுதான் மியூசிக் கம்பெனிகளுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. இது சரி வராது என்றால் சரியான வழி சொல்லுங்கள் என்று வழிக்கு வந்தார்கள்.

ரத்தம் வேர்வை சிந்தி நீங்கள் பாடல்கள் தயாரிப்பது போலத்தான் நாங்களும் சாப்ட்வேர் தயாரிக்கிறோம். அப்படி தயாரித்த ஒன்று திருடப் படும் போது வரும் வலி எங்களுக்கும் தெரியும். உங்கள் பாடல்களை முடிந்த வரை பாதுக்காக்க பாடுபடுவேன் என்று உறுதிமொழி அளித்தார்.

இணையத்தில் பாடல்களை திருடுபவர்களில் 80% பேர் நியாயமான வழி இல்லாத காரணத்தினால் தான் திருடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சரியான மாற்று வழி வேண்டும். அந்த வழி தான் ஐ-டியூன்ஸ் ஸ்டோர் என்றார். [அவர் திருடுபவர்களைப் பற்றி சொன்ன கருத்துகள் எல்லாம் அமெரிக்கர்களை மனதில் கொண்டு சொன்னவை. நம்மவர்களை வைத்து அல்ல!]

இப்படி எல்லாம் பேசியதன் பயனாக, முதலில் வார்னர் கம்பெனி ஆப்பிளுக்கு அனுமதி அளித்தது. பின்னர் சோனி, யூனிவர்சல், இ.ம்.ஐ., பி.ம்.ஜி என்று மொத்தம் மியூசிக் இண்டஸ்ட்ரியும் ஐந்து பெரிய ஜாம்பவான்களையும் ஜாடிக்குள் போட்டு மூடினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

பேரங்களில் நேரடியாகப் பங்கு கொண்டார். கம்பெனியை சார்ந்த ஆர்ட்டிஸ்ட்கள் சிலர் அவர்களின் பாடலை விற்க அனுமதி தரவில்லையா, நான் பேசிப் பார்க்கிறேன் என்றார். மகுடிக்கு மயங்காமல் போனவர்கள் ஒரு சிலர் தான். இணையத்தில் விற்க மாட்டேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இசையை இப்படித்தான் விற்க வேண்டும் என்பது இவ்வளவு நாள் யாருக்கும் தெரியவில்லையே என்று வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்.

மொத்தமாக ஒரு ஆல்பம் என்றால் பத்து டாலர். ஆல்பம் வேண்டாம் ஒரே ஒரு பாடல் மட்டும் வேண்டுமா அதுவும் சரி. ஒரு பாடல் ஒரு டாலர் என்றார். வாங்குபவர்கள் விருப்பம், விற்பவர்கள் விருப்பம் என விட்டு விட்டார்.

பெரும்பாலான பாடல்கள், சிடி கவர்கள் எல்லாம் மேக்கில்தான் தயாராகின்றன. பெரிய மியூசிக் ஆர்ட்டிஸ்டுகள் எல்லாம் ஐ-பாடில் தான் பாட்டு கேட்கிறார்கள். விற்பனையும் ஆப்பிளின் ஐ-டியூன்ஸ் வழியாகத்தான். இசையின் உருவாக்கத்தில் இருந்து விற்பனை வரை ஆப்பிள் வழியாகத்தான் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் பெருமையோடு சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ரஹ்மான்னின் இசை உருவாவதும் ஆப்பிளின் பொருள்களில்தான்!

தற்கால இசையை ரசிக்காத, மியூசிக் இண்டஸ்டரிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத கம்புயூட்டர்காரர்தான் சாகக் கிடந்த மியூசிக் இண்டஸ்டரியை மாற்றிய மகாசக்கரவர்த்தி!  இப்போது அவர்அமைதியாக  மற்றுமொரு இண்டஸ்டரியை புரட்டிப் போட கிளம்பியிருந்தார்!

(தொடரும்)

0

அப்பு