வந்தது எமர்ஜென்ஸி!

க – 32

ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தைத் தொடரவேண்டும்! அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான தென்னகம் இதழில் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

இன்னொரு பக்கம் தமிழகத்துக்கு வரும் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதற்கு ஒத்தாசையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துகொண்டது.

முதல் விஷயம், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் காரியம். இரண்டாவது விஷயம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை. இரண்டையும் சமாளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முதலமைச்சர் கருணாநிதி. ஆம், தமிழகம் வரும் ஜெ.பிக்கு திமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு தரப்படும். அதேசமயம், நாடு தழுவிய அளவில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நடத்திவரும் ஜெ.பி. தமிழகத்தில் ஏதேனும் சுட்டிக்காட்டுவாரானால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தார்.

திட்டமிட்டபடி 5 மே 1975 அன்று ராஜாஜி நினைவாலயத் திறப்புவிழாவுக்கு வந்தார் ஜெ.பி. ஆனால், அன்றைய தினம் இந்திரா காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை மிஞ்சும் அளவுக்கு திமுக கொடிகளுடன் தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஜெ.பிக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டவந்த இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்தனர்.

விஷயம் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், ‘கருணாநிதி எங்கு சென்றாலும் அதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டத் தீர்மானித்துள்ளனர். அதற்கு நானும் அனுமதி கொடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் நானும் தோழமைக் கட்சியினரும் மற்றவர்களும் ஊர்வலமாகச் சென்று கோபாலபுரத்தில் நுழைய ஆரம்பித்தால் என்ன ஆகும்?’ என்று கேள்வி எழுப்பினார். அதன் எதிரொலி சில நாள்களுக்குப் பிறகு திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் நடந்த மோதல்களில் கேட்டது.

அதைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். இப்போது ராஜாஜி நினைவாலயத்துக்கு வந்துவிடலாம். திமுகவின் கறுப்பு சிவப்பு கொடிகளுக்கும் இந்திரா காங்கிரஸாரின் கறுப்புக்கொடிகளுக்கும் மத்தியில் விழாவில் கலந்து கொண்டார் ஜெ.பி. அப்போது ராஜாஜியின் சிலையை மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன் திறந்துவைத்தார். நினைவாலயத்தை திறந்துவைத்துப் பேசினார் ஜெ.பி.

ஜெ.பி வருவதற்கு முன்புதான் மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்தியிருந்தார் கருணாநிதி. குதிரைப் பந்தயத்தையும் ஒழித்திருந்தார். அவற்றுக்கு மேடையில் பாராட்டு தெரிவித்தார் ஜெ.பி. குஜராத் மாநிலத்தில் மது கிடையாது; குதிரைப்பந்தயம் கிடையாது; லாட்டரி சீட்டும் கிடையாது; அதைப்போலவே தமிழகத்திலும் லாட்டரி சீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அண்ணா ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு அரசு பரிசுச்சீட்டுத் திட்டம் என்ற பெயரில் லாட்டரி சீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஏழைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கக்கூடிய லாட்டரி சீட்டுத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்ற ஜெ.பியின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட கருணாநிதி, செப்டெம்பர் 15 முதல் லாட்டரி சீட்டுத் திட்டம் தமிழகத்தில் இருக்காது என்று அறிவித்தார். நினைவாலயத்தைக் காட்டிலும் இந்த அறிவிப்புகள்தான் ராஜாஜிக்கு உண்மையான அஞ்சலி என்றார் ஜெ.பி. நடந்தது அரசு விழா என்பதாலோ என்னவோ, எம்.ஜி.ஆரின் கடிதம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் மறுநாள் நடந்த பொதுக்கூட்டத்தில் அதைப் பற்றிப் பேசினார். அதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர் பத்திரிகையில் எழுதிய பகிரங்க கடிதம் ஜெ.பியிடம் நேரடியாகவும் தரப்பட்டிருந்தது.

திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். எம்.ஜி. ராமச்சந்திரனின் கடிதத்தில் உள்ள வாசகங்கள் மிகவும் தரம் குறைந்த கசப்பான வசைமாரிகள். நடைபெறுகின்ற அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாலேயே இது ஊழல் உள்ள அரசு என்றாகிவிடாது. வேறு எந்த மாநில முதல்வரும் செய்ய முன்வராத சமயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிதான் தன்னுடைய அமைச்சரவை மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு களுக்கான பதில்களை அச்சடித்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி சரிவர நடத்தவில்லை என்றும் தவறுகளைச் செய்திருக்கிறது என்றும் குறை கூறுகிறார்கள். குற்றச்சாட்டுகளைக் கூறுவது சுலபம்; அவற்றை ஆதாரத்துடன் நிரூபிப்பது கடினம். இதுதான் எம்.ஜி.ஆரின் கடிதத்துக்கு ஜெ.பி காட்டிய எதிர்வினை.

இந்திரா காந்திக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜெயப்ரகாஷ் நாராயணனை தமிழகத்துக்கு அழைத்து விழா நடத்துவதும் அவரைப் புகழ்ந்து பேசுவதும் இந்திரா காங்கிரஸ் தலைவர்களைக் கலவரமடையச் செய்தன. அதேசமயம் அவர்களுடைய கவனத்தைக் கலைக்கும் வகையில் இன்னொரு பிரச்னை உருவானது. அது இந்திரா காந்தியின் பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்னை.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகியிருந்த இந்திரா காந்தியின் மீது வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷலிஸ்ட் வேட்பாளர் ராஜ் நாராயணன். அரசு ஊழியரைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தியது, அரசுக்குச் சொந்தமான இடங்களைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் அவர்மீது கூறப்பட்டிருந்தன. மொத்தத்தில், தேர்தல் வெற்றிக்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியிருக்கிறார் என்பதுதான் அடிப்படையான விஷயம்.

மக்களவைக்குத் தேர்வாகி ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைக் கொடுத்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123, விதி ஏழின் படி இந்திரா காந்தி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இருந்து அவர் மக்களவைக்குத் தேர்வானது செல்லாது. தவிரவும், அவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவித்தார் நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா.

தீர்ப்பு வெளியான நொடியில் இருந்தே தேசிய அரசியலில் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. அலகாபாத் தீர்ப்புக்குத் தலைவணங்கும் வகையில் பிரதமர் இந்திரா காந்தி உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தத் தொடங்கின. ஆனால் பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினர் இந்திரா காங்கிரஸ் தலைவர்கள். தங்கள் கட்சித் தலைவியின்மீது முழு நம்பிக்கை இருப்பதாக அவர்கள் அழுத்தந்திருத்தமாகக் கூறினர். உச்சபட்சமாக, இந்தியா என்றால் இந்திரா; இந்திரா என்றால் இந்தியா என்றார் இந்திரா காங்கிரஸ் தலைவராக இருந்த தேவ காந்த் பரூவா.

இந்திரா காங்கிரஸ் கட்சியினர் காட்டிய பிடிவாதம் எதிர்க்கட்சிகளை ஆத்திரப்படுத்தியது. பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தியை உடனடியாக நீக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் ஃபக்ருதீன் அலி அகமதுவிடம் மனு கொடுத்தனர். இன்னொரு பக்கம் அலகாபாத் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஆளும் காங்கிரஸ் இந்தியாவில் மிகப்பெரிய கட்சி. இந்தியா, உலகத்தில் மதிக்கத்தக்க மிகப்பெரிய ஜனநாயக நாடு. இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்து இப்போது மத்திய அரசில் இருப்பவர்கள் என்ன முடிவை எடுக்கிறார்களோ, அந்த முடிவுதான் இந்தியாவின் எதிர்கால அரசியல் முன்மாதிரியாகத் திகழும். அவர்களாகவே ராஜினாமா செய்திருந்தால் நாங்கள் பாராட்டியிருப்போம் என்றார் கருணாநிதி. ஏன் இன்னமும் ராஜினாமா செய்யாமல்
இந்திரா காந்தி பதவியில் நீடிக்கிறார் என்பதுதான் கருணாநிதி சொன்ன கருத்தின் அர்த்தம். கவனமாகக் குறித்து வைத்துக்கொண்டனர் இந்திரா காங்கிரஸ் தலைவர்கள்.

அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்திரா காந்தி. அந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர். அவர் கொடுத்த இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் நாடாளுமன்றத்தில் ஏதேனும் வாக்கெடுப்பு நடந்தால் அதில் கலந்துகொள்ள அவருக்கு உரிமை இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

சட்ட ரீதியான சிக்கல்கள் இந்திரா காந்தியின் கழுத்தை நெரிக்கத் தொடங்கின. போதாக்குறைக்கு, எதிர்க்கட்சிகள் வேறு ஓரணியில் திரண்டு இந்திராவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. நாட்டில் நிலவிக் கொண்டிருப்பது அசாதாரணமாக சூழ்நிலை. அதைச் சமாளிக்க வேண்டும் என்றால் சட்டரீதியான, வலுவான
புதிய ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் பிரதமர் இந்திரா காந்தி. அதன் பெயர், எமர்ஜென்ஸி. ஆம். இந்திராவுக்கு உருவான நெருக்கடி, இந்தியாவுக்கான நெருக்கடியாக மாறிப்போனது!

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

வேண்டும் மாநில சுயாட்சி!

க – 31

மாநில சுயாட்சி. தங்களுடைய உயிர்நாடிக் கொள்கையான திராவிட நாடு கோரிக்கையை ஒத்திவைத்ததற்குப் பிறகு திமுக முன்வைத்த கோரிக்கை. மாநிங்களுக்குப் போதுமான அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டால் போதும் என்பதுதான் அண்ணா சொன்ன கருத்து. அதை அடிப்படையாக வைத்து மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தத் தொடங்கினார் கருணாநிதி.

1972 ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் திமுக மாநாடு ஒன்றை நடத்தினார் கருணாநிதி. மாநில சுயாட்சி மாநாடாக அடையாளப்படுத்தப்பட்ட அந்த மாநாட்டில் மாநில சுயாட்சிக் கோரிக்கை அழுத்தம்திருத்தமாக வலியுறுத்தப்பட்டது. தற்போது அந்தக் கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றும் முடிவுக்கு வந்திருந்தார் கருணாநிதி. திமுக இன்னமும் பிரிவினை எண்ணங்களில் இருந்து விடுபடவில்லை; மாநில சுயாட்சி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பிரிவினைக் கருத்துகளைத்தான் பரப்பிவருகிறது என்பது இந்திரா காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு.

16 ஏப்ரல் 1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதி முன்மொழிந்தார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்படவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் சுருக்கம்.

மாநில சுயாட்சி என்பது திமுகவினரின் சிந்தனையில் உருவான கோட்பாடு அல்ல; மாறாக, இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் வலியுறுத்திய கோரிக்கைதான்; ஆனால் அது நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் அதைப்பற்றிப் பேசுவதை காங்கிரஸ் தவிர்த்துவிட்டது என்று ஒரு சாரார் கூறினர். தமிழரசுக் கழகத்தின் தலைவரான ம. பொ. சிவஞானம் பல ஆண்டுகளாக வலியுறுத்திவரும் கொள்கைதான் மாநில சுயாட்சி. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் அவர். அவருடைய கோஷத்தைத்தான் திமுகவும் கருணாநிதியும் கைப்பற்றிக் கொண்டனர் என்ற கருத்தும் இருந்தது. அந்த விமரிசனங்களுக்கு சட்டமன்ற மேலவையில் விளக்கம் கொடுத்தார் ம. பொ. சிவஞானம்.

‘யாரோ சொன்னார்களாம், ‘ம. பொ. சியின் கொள்கையைக் கருணாநிதி எடுத்துக்கொண்டார் என்று!’ ஆணவம் இல்லாமல் மட்டுமல்ல; அடக்கத்தால் மட்டுமல்ல, சத்தியமாகவும் சொல்கிறேன். இந்தத் தத்துவம் எனக்குச் சொந்தமல்ல. இது, அகில உலகின் அரசியல் சாத்திரம் – சரித்திரம். அதற்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கியவன் என்ற சிறப்பு எனக்கு இருக்கலாமே ஒழிய, சுயாட்சித் தத்துவமே எனக்கு ஏகபோகமல்ல. ’

கருணாநிதி கொண்டுவந்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை அதிமுக கடுமையாக எதிர்த்தது. இத்தனைக்கும் அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர், திமுகவின் பொருளாராக இருந்தபோது நடந்த மதுரை மாவட்ட திமுக மாநாட்டில் மாநில சுயாட்சி பற்றி மேடையில் ஆவேசமாகப் பேசியிருந்தார். மாநாட்டுக்கு வந்திருந்தவர்களை நோக்கி “மாநில சுயாட்சியை’ என்று உரத்த குரலில் கூறினார் எம்.ஜி.ஆர். அதற்கு பொதுமக்கள், “அடைந்தே தீருவோம்’ என்று பதில் குரல் எழுப்பினர். ஆனால் தற்போது கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் முகாமுக்கு வந்திருந்தனர். ஆகவே, மாநில சுயாட்சிக்குத் தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது அதிமுக.

‘நீங்கள் மாநில சுயாட்சி கேட்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள். உங்களுக்கு அந்தச் சாவியைக் கொடுத்தால் தீமைகள் இன்னும் அதிகமாக வரும்’ என்றார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஹெச். வி. ஹண்டே.

எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து மாநில சுயாட்சி கேட்கலாமா? அப்போது கொடுக்கவேண்டும் என்று கேட்பீர்களா? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் கருணாநிதி.

‘நல்ல ஆட்சியாக இருந்தால் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. நாங்கள் வந்தால் நிச்சயமாகக் கேட்போம். அப்போது கொடுக்கவேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ’- இது ஹண்டே கொடுத்த பதில்.

‘அப்படி நீங்கள் கேட்கும்பட்சத்தில் ஒருவேளை நாங்கள் எதிர்க்கட்சியிலே இருந்தால் நிச்சயமாக ஆதரிப்போம், பரந்த மனப்பான்மையோடு’ என்றார் கருணாநிதி.

மாநில சுயாட்சித் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் பேசினர். பிறகு முதலமைச்சர் கருணாநிதி விவாதங்களுக்குப் பதிலளிக்கும்போது மாநில சுயாட்சியின் அவசியம் பற்றிப் பேசினார்.

‘1973 – 74 நிதி நிலை அறிக்கையில் மால்கோ தேசிய மயமாக்கப்படவேண்டும் என்று அறிவித்தோம். அதற்கான சட்ட நகலை மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், இதுவரையில் அந்தப் பிரச்னை என்னவாயிற்று? முடியுமா? முடியாதா? என்கின்ற எந்தத் திட்டவட்டமான பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

‘தொழிலாளிகளுக்கு நிர்வாகத்திலே பொறுப்பு – முதலீட்டில் பங்கு’ என்ற திட்டத்தை அறிவித்து, விதிமுறைகள் வகுத்து, மசோதா கொண்டுவந்து – இன்றைக்கு அந்தச் சட்டம் மத்திய சர்க்காருடைய தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குச் செல்லக் கூடாது என்று தடை இருந்தது. அந்தத் தடையை மத்திய சர்க்கார் நீக்கிவிட்டார்கள். யாரைக் கேட்டுக் கொண்டு நீக்கினார்கள்? நம் மாநிலத்தைக் கலந்துகொண்டு செய்யப்பட்டதா? இல்லை.

எண்ணெய் விலையை ஒரளவுக்காவது கட்டுப்படுத்தலாம் என்றுதான் வேர்க்கடலைக்கு லெவி வேண்டும் என்றும் வியாபாரத்துக்கு லைசென்ஸ் தரப்படவேண்டும் என்றும் அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என்றும் அனுமதி கேட்டோம். இதுவரை அந்த அனுமதி தரப்படவில்லை.

மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே இதுவரை எண்ணெய் டிப்போக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய உத்தரவிடுகிற அதிகாரம் இதுவரை மாநிலத்துக்கு இருந்தது. ஆனால் திடீரென்று 1972ல் இந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டது.

எனவே, அதிகாரம் கேட்பது இங்கே அமர்ந்திருக்கிற அமைச்சர் பெருமக்கள் அந்த அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவா? அதிகாரம் எங்களுக்காக அல்ல; மாநிலத்துக்காகக் கேட்கிறோம். அது புரிய வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சி என்று சொல்கிறோம். மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தின் சுயாட்சி என்று கூறுகிற நேரத்திலேயே அங்கு பிரிவினைக்கு எள்ளளவும் இடமில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.. மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல என்று 21 ஜூலை 1968ல் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா பேசினார்’

மொத்தம் ஐந்து நாள்களுக்கு விவாதம் நடந்தது. வாக்கெடுப்பு நடத்தவேண்டியதுதான் பாக்கி. தீர்மானத்துக்கு ஆதரவாக திமுக தவிர முஸ்லிம் லீக், ஃபார்வர்ட் ப்ளாக், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மணலி கந்தசாமி), தமிழரசு கழகம் (ம. பொ. சி) உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்தன. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்தன.

வாக்கெடுப்பு முடிந்தபோது 161 பேரும் எதிராக 23 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அவையில் இருந்து வெளியேறியது அதிமுக. அதற்காக அதிமுக தரப்பில் சொல்லப்பட்ட காரணம், தீர்மானம் பற்றி, விவாதித்து, முடிவெடுக்க கால அவகாசம் போதவில்லை என்பதுதான். கருணாநிதியின் கனவுத் தீர்மானங்களுள் ஒன்றான மாநில சுயாட்சித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. அதில் கருணாநிதிக்கு மிகுந்த மகிழ்ச்சி.

மாநில சுயாட்சி என்ற பதத்தை வைத்துக்கொண்டு இயங்கிய கருணாநிதிக்கும் திமுகவுக்கும் பின்னாளில் மிகப்பெரிய நெருக்கடிகள் அந்த பதத்தை வைத்தே உருவாக்கப்பட்டன. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன; ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகக் குறிப்பெடுக்கப்பட்டன. உபயம்: மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள். நிற்க.

சுதந்தரா கட்சித் தலைவர் ராஜாஜிக்கு நினைவாலயம் ஒன்றை எழுப்பியிருந்தது தமிழக அரசு. அதை யாரைக் கொண்டு திறந்துவைப்பது என்ற கேள்வி எழுந்தபோது கருணாநிதியின் நினைவுக்கு வந்த பெயர், ஜெயப்ரகாஷ் நாராயணன். அழைப்பு ஏற்றுக்கொண்டார் ஜெ. பி. ஆனால் அவர் வருவதில் இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை.

காரணம், பீகாரில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிராக மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியிருந்தார் ஜெ. பி. உண்மையில் அவர் இந்திரா காந்திக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அணி திரட்டுவதாகவே இந்திரா காங்கிரஸார் சந்தேகப்பட்டனர். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் தமிழகம் வரும்போது அவரை எதிர்த்துக் கறுப்புக்கொடி காட்டுவது என்று இந்திரா காங்கிரஸார் முடிவுசெய்தனர். போதாக்குறைக்கு, தமிழகத்துக்கு வந்து ஊழலை ஒழிக்கப் போராடவேண்டும் என்று ஜெ. பிக்குக் கடிதம்

ஒன்றை எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

புதிய நெருக்கடி உருவாகியிருந்தது கருணாநிதிக்கு!

-ஆர். முத்துக்குமார்

(களம் வளரும்)

முந்தைய பாகங்களைப் படிக்க…

கைமாறிய கச்சத்தீவு!

க – 30

மனிதனை வண்டியில் உட்கார வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, சைக்கிள் ரிக்ஷாக்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவரவேண்டும். முதலமைச்சர் கருணாநிதியின் முக்கியமான கனவுகளுள் இதுவும் ஒன்று. 3 ஜூன் 1973 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அதற்கான பணிகளைத் தொடங்கினார்.

என்னை வாழ்த்த வருபவர்கள் எனக்கு சால்வை போர்த்தவேண்டாம்; மாலை போடவேண்டாம். மாறாக, நிதி கொடுங்கள். அந்த நிதியைக் கொண்டு சைக்கிள் ரிக்ஷாக்கள் வாங்கப்படும். ஏழைத் தொழிலாளிகளுக்கு இலவசமாகத் தரப்படும். உதவுங்கள்.

தலைவரே கேட்டுவிட்டபிறகு தொண்டர்கள் வெறும் கையுடன் வந்துவிடுவார்களா என்ன? நிதி திரளத் தொடங்கியது. அதைக்கொண்டு முதல் கட்டமாக 301 சைக்கிள் ரிக்ஷாக்கள் வாங்கப்பட்டன. சொன்னபடியே ஏழைத் தொழிலாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டன. சைக்கிள் ரிக்ஷா வாங்க விரும்புவர்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் கருணாநிதி. தங்களுடைய கை ரிக்ஷாக்களை அரசிடம் ஒப்படைத்தவர்களுக்கு நட்ட ஈடாக இருநூறு ரூபாய் தருவதற்கும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்தியாவில் பல மாநிலங்களிலும் இன்னமும் புழக்கத்தில் இருக்கும் கைரிக்ஷாக்கள் தமிழகத்தில் மட்டுமே நீக்கப்பட்டது. தொழிலாளர்களின் தோழர்களாக அறியப்பட்ட கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில்கூட கைரிக்ஷாக்கள் ஒழிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கைரிக்ஷா ஓட்டுனர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றும் விதமாக நடவடிக்கை எடுத்த பெருமிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி இருந்தபோது ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி கிடைத்தது. அது, சுயமரியாதைத் தலைவர் பெரியாரின் மரணம். உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்த திராவிடர் கழகத் தலைவர் பெரியார், 24 டிசம்பர் 1973 அன்று மரணம் அடைந்தார்.

திமுக அரசே பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னவர் அண்ணா. அப்படிப்பட்ட பெரியாருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதைகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு வந்திருந்தது. உடனடியாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசினார். அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

பெரியாரின் உடலைப் பொதுமக்கள் பார்வையிட ராஜாஜி மண்டபத்தில் வைப்பதற்கு ஏற்பாடுசெய்யுங்கள். அவருடைய உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அதைக் கேட்டதும் தமிழக தலைமைச் செயலாளர் சபாநாயகத்துக்கு ஆச்சரியம். கூடவே, கொஞ்சம் அதிர்ச்சி.

அய்யா எந்த அரசுப் பொறுப்பிலும் இருந்தவர் அல்ல; ஆகவே, அரசு மரியாதை செய்வது சட்டப்படி முடியாது என்று தயக்கம் காட்டினார் தலைமைச் செயலாளர்.

மகாத்மா காந்தி எந்தப் பதவியில் இருந்தார்? அவருக்கு அரசு மரியாதை செய்தார்களே.. அதைப்போல செய்ய வேண்டியதுதானே?

கருணாநிதி கேட்ட எதிர்க்கேள்விக்கு சட்டென்று பதில் வந்தது தலைமைச் செயலாளரிடம் இருந்து.

He is the Father of our Nation.

தலைமைச் செயலாளரின் பதிலுக்கு கருணாநிதியின் எதிர்வினை அதிரடியாக இருந்தது.

Periyar is the Father of Tamilnadu.. Father of our DMK Government.. இந்த மரியாதையை அவருக்குச் செய்வதன்மூலம் என்னுடைய பதவி போனாலும் பரவாயில்லை. மேற்கொண்டு ஆகவேண்டியதைச் செய்யுங்கள்.

முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பத்தின்படி அரசு மரியாதையுடன் பெரியாரின் இறுதிக்காரியங்கள் நடந்தன. கறுப்புக் கட்டமிட்ட தனி அரசிதழ் வெளியிடப்பட்டது.

பெரியாரின் இறுதிமரியாதையில் கலந்துகொண்ட பிறகு ஒரு முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அது, பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதம்.

இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க முடிவுசெய்துவிட்டோம். உங்களுக்குக் கருத்து ஏதும் இருக்கிறதா? இதுதான் இந்திரா தலைமையிலான மத்திய அரசு, தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்.

தமிழக மீனவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் முடிவு என்பது முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமல்ல; காமராஜருக்குத் தெரியும்; முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்துக்குத் தெரியும்.தமிழகத்தின் இன்னபிற அரசியல் தலைவர்கள் அத்தனை பேருக்குமே தெரியும். இத்தனை பேருக்குத் தெரிந்த சங்கதி இந்தியாவை ஆளும் பிரதமர் இந்திரா காந்திக்குத் தெரியாதா என்ன? தெரியும். இருந்தும் அந்த முடிவுக்கு அவர் வந்திருந்தார். பதில் சொல்லியே ஆகவேண்டும்.

உடனடியாக அமைச்சர் செ. மாதவன் சகிதம் டெல்லி புறப்பட்டார். கைவசம் பல கோப்புகளை எடுத்துச்சென்றார். அத்தனையும் ஆதாரங்கள். கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். இந்தியாவின் நிலப்பகுதி என்பதற்கான ஆதாரங்கள். முக்கியமாக, இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார் கருணாநிதி.

ராமநாதபுரம் அரசர் சேதுபதி, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருப்பது பற்றிய ஜமீன் நிர்வாகப் பதிவேடுகளைப் பிரதமரிடம் காட்டினார். கைவசம் கொண்டுவந்திருந்த ஆதாரங்களைக் காட்டி விளக்கினார். தமிழக மீனவர்களின் வாழ்க்கை பற்றிப் பேசினார். அனைத்துக்கும் நோக்கம் ஒன்றுதான். கச்சத்தீவு தாரை வார்க்கப்படக்கூடாது. தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் மண் விழுந்துவிடக்கூடாது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார் பிரதமர் இந்திரா. விடைபெற்றார் கருணாநிதி.

சந்திப்பு மட்டுமே பலன் தராது என்று நினைத்தார் கருணாநிதி. தமிழகம் திரும்பியதும் கச்சத்தீவு தொடர்பான தமிழக அரசின் கருத்தை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி.

முதல் அம்சம், கச்சத்தீவு பற்றிய ஆதாரங்கள் ஆராய்ந்து பார்த்தால் பலவிஷயங்கள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954ல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை.

இரண்டாவது அம்சம், கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியதுகூட இல்லை.

ஆக, கைவசம் இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி ‘கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமல்ல‘ என்று நிரூபிக்க முடியும் என்பதுதான் கருணாநிதி முன்வைத்த வாதம்.

கருணாநிதி அனுப்பிய கடிதத்தை வாங்கிவைத்துக் கொண்ட இந்திரா காந்தி, அடுத்தடுத்த காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினார். ஆம். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கத் தயாராகியிருந்தார் இந்திரா. ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஷரத்தும் நுணுக்கமாகத் தயார் செய்யப்பட்டது.

26 ஜூன் 1974 அன்று இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் பிரதமர் இந்திராவும் இலங்கை சார்பில் சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்து போட்டனர். ஆம். கச்சத்தீவு தாரை வார்ப்பு ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதையும் இதில் மாநில முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை, கருத்து சொல்வதைத் தவிர என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார் பிரதமர் இந்திரா காந்தி.

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

முந்தைய ‘க’

திண்டுக்கல் தோல்வி!

க – 29

சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.

பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது அந்த நடவடிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

சட்டென்று சுதாரித்த எம்.ஜி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவை மீது நாங்கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் மதியழகனிடம் கோரினர். கோரிக்கை ஏற்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று எம்.ஜி.ஆரை அழைத்தார். உடனே எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய பேச்சு எதுவும் வெளியே கேட்கவில்லை.

விஷயம் இதுதான். சபாநாயகர், எம்.ஜி.ஆர் இருவருடைய மைக்குகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை. துணை சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே மைக் இணைப்புகள் தரப்பட்டிருந்தன. நுணுக்கமாகச் செயல்பட்டிருந்தனர் ஆளுங்கட்சியினர். இணைப்பு இல்லாததைப் பற்றி எம்.ஜி.ஆர் கவலைப்படவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

புதிய நாற்காலியில் அமர்ந்த துணை சபாநாயகர் சீனிவாசன் முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். விவாதம் தொடங்கியது. உடனடியாகத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். மாறாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். தீர்மானம் வெகு எளிதாக நிறைவேறியது. சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

அந்த அறிவிப்பு வெளியானபோதும் சபாநாயகர் இருக்கையில் மதியழகனே இருந்தார். இன்னொரு பக்கம் இணைப்பு இல்லாத மைக்கில் பேசிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். சட்டென்று சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். ஆனாலும் சபை தொடர்ந்து நடந்தது. உடனடியாக எம்.ஜி.ஆரும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறினர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு சபையை நடத்திவிட்டு சபையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் நினைத்தனர். ஆனால் கருணாநிதி அத்துடன் நிறுத்தவில்லை. அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் தயாரானார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அமைச்சரவைக்கு ஆதரவாக 172 வாக்குகள் விழுந்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் பூஜ்ஜியம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தன்னுடைய பலத்தை உணர்த்தியிருந்தார் கருணாநிதி.

லஞ்சம் , ஊழல் என்று எம்.ஜி.ஆர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அதே ரீதியிலான நடவடிக்கை ஒன்றை எடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. தமிழக சட்டமன்றத்தில் புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு மசோதா என்பது அதன்பெயர். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்;  தேவைப்பட்டால், மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.

புதிய மசோதாவின்படி பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் பட்டியலில் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் – இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர், நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து யூனியனின் முன்னாள் – இந்நாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டியவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

மத்திய அரசின் லோக்பால், லோக் அயுக்த் மசோதாக்களில்கூட பிரதமர் போன்றவர்கள் வராத சமயத்தில் மாநில அரசு கொண்டுவந்திருக்கும் மசோதாவில் முதலமைச்சரும் கொண்டுவந்தது நேர்மையான விஷயம் என்று பாராட்டப்பட்டது இந்த மசோதா. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க நீதிபதி வெங்கடாத்ரி நியமிக்கப்பட்டார். 5 ஏப்ரல் 1973 அன்று இந்த மசோதா சட்டமன்றம் மற்றும் சட்டமேலவையில் நிறைவேறியது.

புதிய மசோதவை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் இருந்தபோது கருணாநிதிக்கு ஒரு சவால் காத்திருந்தது. இடைத்தேர்தல். திண்டுக்கல் மக்களவை திமுக உறுப்பினர் ராஜாங்கம் மரணம் அடைந்திருந்தார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது பொதுவான கருத்து. அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி. செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம். சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. உற்சாகமாகக் களமிறங்கினர் திமுக தொண்டர்கள்.

புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது எம்.ஜி.ஆரின் கணிப்பு. மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.

கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கினார். அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குக் காரணம் இருந்தது. 1964ல் திடீரென மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது திமுகவினர் பலத்த அதிருப்தி அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக வெளியான என் கடமை படம் தோல்வியைச் சந்தித்தது. ஆகவே, உலகம் சுற்றும் வாலிபன் படமும் தோல்வியடையும் என்று நினைத்தனர். முடிவு நேர்மாறாக அமைந்திருந்தது.

இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார்.

‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

கருணாநிதி மீது நம்பிக்கை இல்லை!

க – 28

தனிக்கட்சி தொடங்கிவிட்டார் எம்.ஜி.ஆர். இனி பிரச்னை இல்லை என்றுதான் எல்லோருமே நினைத்தனர். ஆனால் கருணாநிதியால் அப்படி நினைக்கமுடியவில்லை. காரணம், எம்.ஜி.ஆரைப் பற்றி முழுமையாகப் புரிந்தவர். ஒருவேளை அவர் அமைதியாக இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அமைதியாக இருக்கவிட மாட்டார்கள். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம் இருக்கிறார். மோகன் குமாரமங்கலம் இருக்கிறார். ஈ.வெ.கி. சம்பத் வேறு அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள். இதுதான் கருணாநிதியின் கணிப்பு.

அடுத்தது என்ன செய்யப்போகிறார் எம்.ஜி.ஆர் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருந்த கே.ஏ. மதியழகனும் எம்.ஜி.ஆரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவதாகக் காற்றுவாக்கில் காதில் விழுந்தது கருணாநிதிக்கு. ஏதோ தீய்ந்த வாடை அடிப்பது போல இருந்தது அவருக்கு. ஆம். எம்.ஜி.ஆர் வலைவிரிக்கத் தொடங்கிவிட்டார். உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டென்று கருணாநிதியின் நினைவுக்கு வந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம்.

திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக இருந்தவர். தஞ்சாவூர் பகுதியில் செல்வாக்கு நிறைந்தவர். திமுகவின் முக்கியப் பிரமுகர்களுள் ஒருவர். கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். முக்கியமாக, மதியழகனின் நெருங்கிய நண்பர். ஆகவே எஸ்.டி. சோமசுந்தரத்தை அழைத்தார். கே.ஏ. மதியழகனைச் சென்று பாருங்கள். அவருடைய மனநிலையைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை முகாம் மாறும் முடிவுக்கு வந்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். இதுதான் எஸ்.டி. சோமசுந்தரத்துக்கு கருணாநிதி கொடுத்த பணி.

சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் சேரப்போகிறார் மதியழகன் என்ற செய்தி அரசல் புரசலாகக் கசிந்துவிட்ட நிலையில் மதியழகனைச் சந்தித்துப் பேசுவது நேர விரயம் என்பது எஸ்.டி. சோமசுந்தரத்தின் கருத்து. ஆனாலும் கருணாநிதியின் வற்புறுத்தல் காரணமாக மதியழகனைச் சந்தித்துப் பேசினார். சிலபல வார்த்தைகள் வெளிப்பட்டபோதே தெரிந்துவிட்டது மதியழகன் முகாம் மாறப்போகிறார் என்பது. உடனடியாக கருணாநிதியைச் சந்தித்து விஷயத்தைக் கூறினார்.

ஆனாலும் மதியழகனை இழக்க மனம் வரவில்லை கருணாநிதிக்கு. எத்தனை ஆண்டுகால நட்பு. திமுகவின் முக்கியத் தூண்களுள் ஒருவர். செயல்வீரர். அதன் காரணமாகவே தன்னுடைய முதல் அமைச்சரவையில் மதியழகனுக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்திருந்தார் கருணாநிதி. ஆனால் மதியழகனின் சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி தொடர்பாக எழுந்த சொத்து முறைகேடு காரணமாக பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்ததால் மதியழகனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது.

இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனபோது மதியழகனுக்கு அமைச்சராக வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் சர்ச்சைகளையும் தவிர்க்கவேண்டும்; கௌரவத்தையும் கொடுக்கவேண்டும் என்பதால் சபாநாயகர் என்ற கௌரவம் நிறைந்த பொறுப்பைக் கொடுத்தார் கருணாநிதி. அந்தஸ்துதான் பெரியதே தவிர ஆஸ்திகள் பெருக வாய்ப்பில்லாத பதவி என்பது பொதுவான கணிப்பு. ஆகவே, சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவையில் இணைவதற்கே அதிகம் விரும்பினார் மதியழகன். ஆனால் அதற்கு கருணாநிதி சம்மதிக்கவில்லை.

அதிருப்தியில் இருந்த மதியழகனை அழைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர் முயற்சி மேற்கொண்டார். அதைத் தடுக்கவே மீண்டும் ஒருமுறை எஸ்.டி. சோமசுந்தரத்தைத் தூது அனுப்பினார் கருணாநிதி. அப்போது அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துசேர்ந்தது. ஆம். மதியழகனுடன் எஸ்.டி.சோமசுந்தரமும் கைகுலுக்கிவிட்டார். அவரும் அதிமுகவில் இணையப் போகிறார். எஸ்.டி. சோமசுந்தரத்தைத் தூதராக அனுப்பியது எத்தனைப் பெரிய தவறு என்பது கருணாநிதிக்குப் புரிந்தது. அவருடைய கணிப்புகள் அடுத்தடுத்து பொய்த்துப் போகத் தொடங்கின.

அப்போது கருணாநிதி அரசுக்கு எதிராக அதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்றை சென்னையில் நடத்தின. 10 நவம்பர் 1972 அன்று நடந்த ஊர்வலத்தை அண்ணா சாலையில் இருந்து பார்வையிட்டார் சபாநாயகர் மதியழகன். தார்மீக அடிப்படையில் அது சரியா என்ற சர்ச்சை எழுந்தபோதும் மதியழகன் முகாம் மாறிவிட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. அதேசமயம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யாமல் சட்டமன்றத்தில் நடக்கப் போகும் குழப்பங்களுக்குத் தலைமையேற்கப் போகிறார் என்பது பிறகுதான் தெரியவந்தது.

13 நவம்பர் 1972 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது. கம்யூனிஸ்ட் கட்சியின் கே.டி.கே. தங்கமணி ஒழுங்குப் பிரச்னை ஒன்ø எழுப்பினார். கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னால் ஒழுங்குப் பிரச்னையை எதையும் கிளப்பக்கூடாது என்பது சட்டமன்ற விதி. ஆனாலும் அந்த ஒழுங்குப் பிரச்னைக்கு அனுமதி கொடுத்தார் சபாநாயகர் மதியழகன். அதுதான் சபாநாயகர் முகாம் மாறிவிட்டார் என்பதற்கான நேரடி சாட்சி. அப்போது சமீபத்தில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் ராஜினாமா செய்தது பற்றியும் பிறகு அமைச்சரவையில் இணைந்தது பற்றியும் ஒழுங்குப் பிரச்னை எழுப்பப்பட்டது. ஆனால் அமைச்சரவையை மாற்றியமைப்பது முதலமைச்சரின் தனி உரிமை என்றது ஆளுங்கட்சித் தரப்பு.

அடுத்ததாக, எம்.ஜி.ஆர் எழுந்து இன்னொரு பிரச்னையைக் கிளப்பினார். மாநில அமைச்சரவை ஆளுங்கட்சியின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது; மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது. ஆகவே, இந்த அமைச்சரவை தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்டவிதி ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதா? என்பதுதான் எம்.ஜி.ஆர் எழுப்பிய ஒழுங்குப் பிரச்னையின் சாரம்.

எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிவிட்டார் என்பது உண்மை. அவருடன் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களும் திமுகவில் இருந்து விலகிவிட்டார்கள் என்பதும் உண்மை. அதன்மூலம் ஒட்டுமொத்த திமுகவும் அமைச்சரவையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டது என்பது எம்.ஜி.ஆரின் வாதம். அதேசமயம், மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது என்பதை நிரூபிக்க எந்தவிதமான சாட்சியத்தையும் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில் வைக்கவில்லை. இருந்தாலும் ஒழுங்குப் பிரச்னை எழுந்துவிட்டது.

பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற நிலை. எழுந்தார் கருணாநிதி. சபையில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டால் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு வேறு விவாதத்தை எடுத்துக் கொள்ள நாங்கள் தயார். அமைச்சரவை மீது கொண்டுவரப்படும் கண்டனத் தீர்மானத்தை விவாதிக்கவும் தயார்!

எம்.ஜி.ஆரும் சபாநாயகரும் விரும்பியது விவாதங்களை அல்ல; சட்டமன்றக் கலைப்பை. சபாநாயகர் பேசினார்.

‘இன்று கிளப்பப்பட்டுள்ள பிரச்னை அசாதாரணமான பிரச்னை. இதற்கு ஓர் அசாதாரண தீர்வு கண்டுதான் சமாளிக்க முடியும்… இன்று மாநிலத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலைக்குத் தீர்வு காண சட்டசபையைக் கலைக்கும்படி கவர்னருக்கு முதலமைச்சர் சிபாரிசு செய்யவேண்டும் என்ற என்னுடைய யோசனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்… சபாநாயகர் என்ற முறையில் அல்ல; ஒரு நண்பர் என்ற முறையில் சொல்கிறேன். மக்களை இன்றைக்கே சந்திக்கிறீர்களா என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார். அதற்கு முதலமைச்சர் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறாரா?’

சட்டமன்றத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் பொதுவாகச் செயல்படவேண்டிய சபாநாயகர், திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டது கருணாநிதியை கவலைகொள்ளச் செய்தது. சபாநாயகர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்பதை சைகை மூலம் காட்டிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது அவையின் மூத்த உறுப்பினர்கள் தங்கமணி போன்றோரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப, 5 டிசம்பர் 1972க்கு அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் மதியழகன்.

சபாநாயகரின் மனமாற்றம் கருணாநிதியைக் கவலைக்குள்ளாக்கவில்லை. ஆனால் அவருடைய அதிரடியான செயல்பாடுகள் ஆத்திரத்தை வரவழைத்தன. அப்போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது பற்றிப் பேச்சுகள் எழுந்தன. தயாரானார் நாவலர் நெடுஞ்செழியன்.

நாங்கள் எல்லாம் தங்களிடம் முழு நம்பிக்கை வைத்து ஏகமனதாகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் நம்பிக்கை வீணாகும் வண்ணம் அண்மைக் காலத்தில் ஜனநாயகப் பாரம்பரியத்துக்கு விரோதமாகத் தாங்கள் நடந்துகொண்டது கண்டு வருந்துகிறோம். தங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆகவே தாங்கள் சட்டப் பேரவைத் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம் என்று தீர்மானம் எழுதப்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் 185 பேர் அதில் கையெழுத்திட்டனர்.

தீர்மானம் தயார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சட்டசபையைக் கூட்டுவதில் சிக்கல். காரணம், சபாநாயகர் மதியழகன் கூட்டத்தொடரை ஒத்திவைத்துவிட்டுச் சென்றிருந்தார். பிறகு நிபுணர்களின் ஆலோசனையின்படி சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கையில் கவர்னர் இறங்கினார். 2 டிசம்பர் 1972 அன்று சட்டமன்றம் மீண்டும் கூடியது.

மொத்தம் இரண்டு திட்டங்கள் தயாராக இருந்தன. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது ஆளுங்கட்சியின் திட்டம். அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பது அதிமுக, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் திட்டம்.

2 டிசம்பர் 1972 அன்று சட்டமன்றம் கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும் எழுந்த திமுக உறுப்பினர் ஆற்காடு வீராசாமி எழுந்தார். தற்போதைய சபாநாயகர் மீது 185 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 179 ஆவது விதியின்படி அதைத்தான் முதலில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து எழுந்த அவை முன்னவரான நெடுஞ்செழியன், அரசியல் சட்ட 181 ஆவது பிரிவின்படி சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் வருமானால் அப்போது சபாநாயகர் அவையில் இருந்தாலும் அவர் அவைக்குத் தலைமை தாங்கக்கூடாது என்று உள்ளது. ஆகவே, துணை சபாநாயகர் இந்த அவைக்குத் தலைமை தாங்கிட வேண்டும் என்றார்.

சபாநாயகர் எதிர்க்கட்சிகளின் பக்கம். துணை சபாநாயகர் ஆளுங்கட்சியின் பக்கம். அடுத்தது என்ன நடக்கும்? இடியாப்பச் சிக்கல்தான்!

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

முந்தைய அத்தியாயங்கள்

புகார்ப் பட்டியல் தயார்!

க – 27

கலைஞர் தலைமையில் வழிநடப்போம்! தமிழக அரசைக் காப்போம்! என்று பேசிய எம்.ஜி.ஆர் திடுதிப்பென கருணாநிதிக்கு எதிராகப் பேசத் தொடங்கியது ஏன்? கருணாநிதி உள்ளிட்ட கட்சிக்காரர்கள் அத்தனை பேருடைய சொத்துக்கணக்கையும் எதற்காக பகிரங்கமாகக் கேட்கவேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எல்லோருக்குமே எழுந்தது. தமிழ் பேப்பரில் “க’ தொடரை வாசிப்பவர்களும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கான பதிலைப் பார்த்துவிட்டு அடுத்த விஷயங்களுக்குச் செல்லலாம்.

உண்மையில் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான பனிப்போர் அண்ணா உயிருடன் இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் இருவருக்குமே அரசியல் ரீதியாக நிறைய உயரங்கள் காத்துக்கொண்டிருந்தன. அவற்றை அடைவதற்கு பரஸ்பரம் உதவிசெய்துகொள்ளவேண்டும் என்பதில் இருவருமே கவனமாக இருந்தனர். அதன் விளைவுதான் கருணாநிதியை எம்.ஜி.ஆர் புகழ்வதும் எம்.ஜி.ஆரை கருணாநிதி பாராட்டுவதும்.

அமைச்சர் பதவி தரவில்லை. அவருக்குப் பிடிக்காத ஆதித்தனாரை அமைச்சராக்கினார். மு.க. முத்துவை சினிமாவில் நுழைத்தார் என்று எம்.ஜி.ஆருக்கு கருணாநிதி மீது கசப்புகள் இருந்தபோதும் அவருக்குத் தனிப்பட்ட முறையில் சில பிரச்னைகள் இருந்தன. வேறொன்றுமில்லை. நடிகர்களுக்கே உரித்தான கறுப்பு – வெள்ளை பிரச்னைதான். சாதாரண நடிகர்களே கொஞ்சம் வெள்ளை, நிறைய கறுப்பு கொடுங்கள் என்று கேட்டுவாங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் உச்சநட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர் மட்டும் விதிவிலக்காக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

கறுப்புப்பணம் வாங்குகிறார்கள் என்றால் ஏன் வாங்குகிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சட்டத்தை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம். வேறு வழியில்லை என்பதால்தான் வாங்குகின்றனர். சட்டமும் அரசும்தான் எங்களை இந்த நிலைமைக்கு மாற்றியிருக்கின்றன. அப்படிப் பார்த்தால் நாங்களும் திருடர்கள் தான்… லட்ச ரூபாய் ஊதியம் பெற்றால் அதில் அதிகபட்ச அளவாக 97 சதவீதம் டாக்ஸ் கட்டுகின்றனர். . இதில் இப்போது சூப்பர் டாக்ஸ், அது இது என்று வரி வசூலிக்கின்றனர். இதில் எப்படி நேர்மையாக வாழ முடியும்… நேர்மையாக நடக்க சட்டம் இடம்தராதபோது மனம் குறுக்கு வழியில் செல்கிறது. அதனால்தான் நல்லவர்களும் திருடர்களாக மாறுகின்றனர் என்று பிலிமாலயா இதழில் கருத்து தெரிவித்தவர் எம்.ஜி.ஆர்.

ஆக, சம்பாதிக்கும் பணத்தில் பெருமளவு பணத்தை வருமான வரியாகக் கட்டுவதில் எம்.ஜி.ஆருக்கு அதிருப்திகள் இருந்தன என்பது நிதர்சனம். இந்த இடத்தில் 23 மார்ச் 1992 தேதியிட்ட ஜூனியர் விகடன் பத்திரிகையில் இடம்பெற்ற தகவல் ஒன்றைப் பதிவுசெய்வது பொருத்தமாக இருக்கும்.

அந்தப் பத்திரிகையில் அப்போது போலீஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் ஒன்று வெளியாகிக் கொண்டிருந்தது. உயர்பதவியில் இருந்த காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் அனுபவக் குறிப்புகளே அந்தத் தொடர். அதன் பதிமூன்றாவது அத்தியாயத்தில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தனது பணிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள் மட்டும் இங்கே:

எம்.ஜி.ஆரைத் திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம். எப்படித் தெரியுமா?

1971. அப்போது திமுக பதினைந்து எம்.பிக்களை வைத்திருந்தது. திமுக எம்.பிக்களின் ஆதரவு இந்திரா காந்தியின் அரசுக்குத் தேவைப்பட்டது. அதே சமயத்தில் கருணாநிதி தன் கைக்குள் இருக்கவேண்டும் என்று நினைத்தார் இந்திரா காந்தி. இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தார். திமுகவை உடைத்துவிட்டால்தான் அந்தக் கட்சி காங்கிரஸ் உதவியைத் தமிழ்நாட்டில் நாடும் என்று முடிவெடுத்தார். அதற்கான வேலைகளைச் செய்ய இண்டலிஜென்ஸ் உயர் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.

திமுகவில் முக்கியப் புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது எம்.ஜி.ஆர்தான் முன்னணியில் இருந்தார். அதனால்தான் அவரைத் திமுகவிலிருந்து இழுக்க முயற்சி செய்தோம். அப்போது ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வருமானமும் அவருக்கு அதிகமாக இருந்த நேரம்.

இதைக் கருத்தில்கொண்டு வருமான வரி அதிகாரிகள், வருவாய் கண்காணிப்பு அமலாக்கப் பிரிவு என்று எல்லா அதிகாரிகளும் எம்.ஜி.ஆர் வீட்டை முற்றுகையிட்டு அவரைக் குடைந்தெடுத்தார்கள். அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார். அதற்கான கணக்கு வழக்குகளையும் விசாரித்தார்கள். ஆனால் இதற்கெல்லாம் பெரும் பின்னணி இருப்பது அவருக்குத் தெரியாது!

இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆருடன் பேச என்னை அனுப்பினார்கள். நான் போனபோது எம்.ஜி.ஆர் மிகவும் சோர்வாக இருந்தார். நானே வலியப் பேசி, ‘பிரச்னைகளை சமாளிக்க டெல்லிக்குப் போய் அம்மாவை (இந்திரா காந்தி) பாருங்க.. எல்லாம் சரியாகப் போய்விடும்’ என்று யோசனை சொன்னேன்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் எம்.ஜி.ஆர். பிறகு நானே, முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக அம்மாவை (இந்திரா காந்தி) மீட் பண்ணுங்க என்று கூறி,வழிகாட்டிக் கொடுத்தேன். அதன்படியே எம்.ஜி.ஆர் அந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன்னுடைய வழக்கறிஞர், ஆடிட்டருடன் சென்று பிரதமர் இந்திராவைச் சந்தித்தார். சந்திப்பு முடிந்து எம்.ஜி.ஆர் உற்சாகமாகத் திரும்பினார்.

இப்படித்தான் மெதுவாகத் தொடங்கி, திமுகவில் உட்பூசல் உண்டாக்கிக் கடைசியில் 1972-ல் எம்.ஜி.ஆரைத் திமுகவில் இருந்தே வெளியேற வைத்தோம்.

கருணாநிதி மீதான அதிருப்திகள் ஒருபக்கம். வருமானவரிப் பிரச்னைகள் ஒருபக்கம். இந்திரா காந்தி கொடுத்த நெருக்கடிகள் ஒரு பக்கம். அழுத்தம் தாங்கமுடியாமல் தவித்தார் எம்.ஜி.ஆர். புரட்சி வெடிப்பதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? வெடித்துவிட்டது. நிற்க.

கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அதை 14 அக்டோபர் 1972 அன்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெளிவுபடுத்தினார் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து நான் அறவே விலகிவிட்டேன். இரண்டொரு நாளில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க இருக்கிறேன்.

15 அக்டோபர் 1972 அன்று சென்னை கடற்கரையில் திமுக சார்பாக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரின் நீக்கம் பற்றிய பொதுக்குழுவின் முடிவுக்கு விளக்கம் கொடுப்பதுதான் அந்தக் கூட்டத்தின் நோக்கம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்துக் கணக்கு காட்டவேண்டும் என்று 1969ல் சட்டம் கொண்டுவந்தவர் கலைஞர். அப்படி நாங்கள் மூன்றாண்டுகளாகத் தந்துவருகிற கணக்கில் தவறு இருந்தால் சொல்லட்டும்; ஆனால் எம்.ஜி.ஆர் முதலாண்டு மட்டுமே கணக்கு தந்தாரே தவிர கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கணக்கு தரவில்லை. 13 தடவை நோட்டீஸ் அனுப்பியும்கூட தரவில்லை என்று பேசினார் நாவலர் நெடுஞ்செழியன்.

பிறகு அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசினார். ஒரு கனி மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன். அதுதான் எம்.ஜி.ஆர் – என்று ஒருமுறை நீ கூறினாய். நீ மறைந்தபிறகு உன் இதயத்தை எனக்குக் கொடு என்று கேட்டேன். நீயும் தந்துவிட்டாய்! ஆம், அந்தக் கனியோடுதான் இதயத்தைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் இன்று அந்தக் கனியை வண்டு துளைத்துவிட்டது. இனியும் வைத்திருந்தால் நீ கொடுத்த இதயத்தையும் துளைத்துவிடும் என்பதற்காகத்தான் அந்தக் கனியை எடுத்து எறிந்து விடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்! என்னை மன்னித்துவிடு அண்ணா! என்னை மன்னித்துவிடு அண்ணா!

எம்.ஜி.ஆரின் விலகல் திமுகவை செங்குத்தாகப் பிளந்துவிடும்; பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் எம்.ஜி.ஆருடன் ஐக்கியமாகிவிடுவார்கள் என்று ஏகப்பட்ட கற்பனைகள். கணிப்புகள். எதிர்பார்ப்புகள். ஆனால் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேலும் சில முக்கியப் பிரமுகர்களும் மட்டுமே எம்.ஜி.ஆருடன் சென்றனர். எம்.ஜி.ஆரின் உண்மையான பலம் அவருடைய ரசிகர்கள். அவர்கள் அவருடனேயே இருந்தனர், சில விதிவிலக்குகள் தவிர.
பலத்த ஆலோசனைகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.

கட்சிக்குள் இருக்கும்போதே போர்க்கொடி உயர்த்தியவர் எம்.ஜி.ஆர். இப்போது புதுக்கட்சி வேறு தொடங்கி விட்டார். போதாக்குறைக்கு, கருணாநிதியின் எதிரிகளான ஈ.வெ.கி. சம்பத், கம்யூனிஸ்ட் கட்சியின் எம். கல்யாண சுந்தரம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆருக்குப் பக்கபலமாக இருந்தனர். தனக்கு எதிராக எதையோ செய்யப்போகிறார் எம்.ஜி.ஆர் என்பது கருணாநிதிக்குப் புரிந்துவிட்டது. அநேகமாக ஊழல் புகார் எழுப்புவார் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு. அதைத்தான் எம்.ஜி.ஆரும் செய்தார்.

திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை ஆளுநர் கே.கே. ஷாவிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். கூடவே, கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் ஒரு புகார் பட்டியலைக் கொடுத்தார். அதுவும் கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் பற்றிய ஊழல் புகார்களே. புகார்ப்பட்டியலை வாங்கிய ஆளுநர் எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றைக் கொடுத்தார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி என்னிடம் வந்துள்ள புகார்ப்பட்டியல் முதலமைச்சரிடமே தரப்படும் என்றார் ஆளுநர். அதில் எம்.ஜி.ஆருக்கு விருப்பமில்லை. நேரே டெல்லிக்குக் கிளம்பிவிட்டார் ஜனாதிபதி வி.வி.கிரியைச் சந்திக்க. இந்தக் கையில் வாங்கிய புகார் பட்டியலை அந்தக் கையால் இந்திரா காந்தியிடம் கொடுத்துவிட்டார் கிரி. பின்னாளில் உதவக்கூடும் என்பதாலோ என்னவோ அவற்றைப் பத்திரமாக வாங்கி வைத்துக்கொண்டார் இந்திரா!

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

வெடித்தது புரட்சி!

க – 26

உற்சாக வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தார் உறந்தை உலகப்பன். மணப்பாறையைச் சேர்ந்த வசந்தகலா நாடக மன்றத்தின் நிர்வாகி அவர். எளிமையான முறையில் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த அவருக்கு பிரபலங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தும் ஆசை வந்தது. அதன்மூலம் தன்னுடைய நாடகத்துக்கு விளம்பரமும் கிடைக்கும்; கூடுதல் வசூலும் கிடைக்கும் என்று நினைத்தார்.

ஆசை வந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர். கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். இருவருக்கும் முறைப்படி கடிதம் எழுதினார் உலகப்பன். இருவருமே தேதி கொடுத்தனர். 5 ஏப்ரல் 1952 அன்று நடந்த அரும்பு நாடகத்துக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதி. முன்னிலை வகித்தவர் எம்.ஜி.ஆர்.

நாடகம் தொடங்கியது. சில நிமிடங்களில் கருணாநிதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார் உறந்தை உலகப்பன். எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தை இந்த மேடையில் வைத்து நீங்கள் கொடுக்கவேண்டும். தலையசைத்துவிட்டு மேடையேறினார் கருணாநிதி.

அன்பு மூன்றெழுத்து. பாசம் மூன்றெழுத்து. காதல் மூன்றெழுத்து. வீரம் மூன்றெழுத்து. களம் மூன்றெழுத்து. வெற்றி மூன்றெழுத்து. அந்த வெற்றியை நோக்கி நம்மையெல்லாம் அழைத்துச் செல்கின்ற அண்ணா மூன்றெழுத்து. அதைப் போலவே மூன்றெழுத்துக்காரரான எம்.ஜி.ஆருக்கு இந்த மேடையில் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்.

பிறகு எம்.ஜி.ஆர் பேசினார். புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்கிய கருணாநிதிக்கும் உலகப்பனுக்கும் நன்றி தெரிவித்தார். புரட்சி நடிகராகவே தன்னைக் கழகத்துக்கு அர்ப்பணித்துக் கொள்வதாகச் சொன்னவர், கலைஞருடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே தனக்கு இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு வந்தது; என் உடலில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும்வரை அண்ணாவுக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவும் கடைசி வரை உழைப்பேன் என்றார். கழகத்தில் இணைகிறேன் என்று எம்.ஜி.ஆர் சொன்னதில் கருணாநிதிக்கு நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி.

நிற்க.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்தான் மேலே இருப்பது. காலம் எத்தனை வேகமாக சுழல்கிறது… அந்த வேகத்தில் எத்தனை முரண்பாடுகள் முளைக்கின்றன… தன்னுடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே திமுகவில் இணைந்ததாகச் சொன்ன எம்.ஜி.ஆர் தற்போது தனக்கு எதிராகவே சண்டமாருதம் செய்யத் தயாராகி விட்டார் என்பதில் கருணாநிதிக்கு ஆச்சரியம் அதிகம். அதிர்ச்சி அதைவிட. ஆகட்டும் பார்த்துவிடலாம் என்று கருணாநிதியும் தயாராகிவிட்டார்.

எம்.ஜி.ஆரின் திருக்கழுக்குன்றம் மற்றும் ராயப்பேட்டை பேச்சுகள் திமுக தொண்டர்கள் மத்தியில் கலவையான உணர்வுகளை எழுப்பியிருந்தன. தலைவருக்கு எதிராகப் போர்கொடி தூக்கத் தயாராகிவிட்ட எம்.ஜி.ஆரை இனியும் கழகத்தில் விட்டுவைக்கக்கூடாது என்று ஆவேசப்பட்டனர் சிலர். வாத்தியார் வரிந்துகட்டிவிட்டார், கருணாநிதியை ஒருகை பார்த்தே தீரவேண்டும் என்றனர் இன்னும் சிலர். தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல; கட்சியின் மூத்த மற்றும் முக்கியத் தலைவர்கள் மத்தியிலும் இதே ரீதியிலான விவாதங்கள்தான்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பற்றிய செய்திகள் எல்லாம் கருணாநிதியின் கவனத்துக்கு வந்துகொண்டே இருந்தன. ஆலோசனைகளும்தான். எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசுங்கள்; எல்லாம் சரியாகிவிடும் என்றார் ஒருவர். இல்லையில்லை, எல்லை மீறிப் பேசுபவர்கள் எவரும் திமுகவின் எல்லைக்குள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள் என்றார் இன்னொருவர்.

வெறுமனே வாய்வார்த்தையாகச் சொல்லிக்கொண்டிருந்த சிலர் எழுத்து மூலமாகவே வற்புறுத்தத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட இருபத்தியாறு செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட முறையீட்டு மனு 10 அக்டோபர் 1972 அன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியனிடம் தரப்பட்டது.

கழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் அந்த மனுவின் சாரம். க. அன்பழகன், என்.வி. நடராசன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, சாதிக் பாட்சா, சத்தியவாணி முத்து, ப. உ. சண்முகம், க. ராசாராம், மதுரை எஸ். முத்து, ஏ.வி.பி. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் அந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஒழுங்கு நடவடிக்கை விஷயத்தில் அவசரம் வேண்டாம் என்றார் நாஞ்சில் மனோகரன். அதை முரசொலி மாறனும் வழிமொழிந்தார். பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ளமுடியும் என்றுதான் இருவருமே விரும்பினர். ஒழுங்கு நடவடிக்கை திமுகவை இரண்டாகப் பிளந்துவிடும் என்பதை மனோகரன், மாறன் இருவருமே அனுமானித்திருக்கக்கூடும்.

எனினும், தம்வசம் வந்த முறையீட்டு மனுவைப் பரிசீலித்தார் திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன். ‘இந்த விண்ணப்பத்தை ஏற்று எம்.ஜி.ஆர் அவர்களைக் கழகத்தின் எல்லா பொறுப்புகளில் இருந்தும் தாற்காலிகமாக விலக்கி வைத்து, விளக்கம் கேட்கலாம்’ என்று குறிப்பு எழுதினார். அந்தக் குறிப்புடன் கூடிய முறையிட்டு மனு திமுக தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

மக்களைச் சந்திப்பேன், மக்கள் முன்னால் நிறுத்துவோம், தூக்கி எறிவோம் என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களை கருணாநிதி துளியும் ரசிக்கவில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளை எம்.ஜி.ஆரிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவும் இல்லை. விளைவு, எம்.ஜி.ஆர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்தார் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாக துணைப் பொதுச்செயலாளர் என்.வி. நடராசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் மீது திமுக தலைமை எடுத்திருக்கும் நடவடிக்கையை வாசித்துக் காட்டினார்.

தலைமைக் கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர் அவர்கள், அண்மைக் காலத்தில் கழகக் கட்டுப்பாடுகளை மீறியும் கழகத்துக்குக் களங்கம் ஏற்படும் வகையிலும் தொடர்ந்து தன்னுடைய நடவடிக்கைகளின்மூலம் செயல்பட்டு வருவதால் அவர் இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் மற்றும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் உள்பட எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் தாற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார். அவர் பெயரில் விரைவில் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஊடகங்களுக்குச் சொல்லியாகிவிட்டது. அடுத்தது, உரியவருக்குச் சொல்லவேண்டும். திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பினார். எம்.ஜி.ஆர் மீது செயற்குழு உறுப்பினர்கள் கொடுத்த முறையீட்டு மனுவின் விவரம், அது தொடர்பாக திமுக தலைமை எடுத்த நடவடிக்கை போன்ற சங்கதிகள் அந்தக் கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர் தன்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு பதினைந்து நாள்கள் அவகாசமும் தரப்பட்டது.

ஆபத்து சூழ்ந்துகொண்டிருக்கிறது; அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் தீவிரம் காட்டினர். எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்துப் பேசினர். ம்ஹூம். எதற்கும் எம்.ஜி.ஆர் அசைந்து கொடுக்கவில்லை. கருணாநிதியும் இறங்கிவருவதாக இல்லை. சமாதானம் ஏற்படுவதற்கான சூழல் எதுவுமே தட்டுப்படவில்லை.

12 அக்டோபர் 1972 அன்று திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் தொடங்கின. அதில் பேசிய நாஞ்சில் மனோகரன், ‘எம்.ஜி.ஆர் பொதுக்கூட்டங்களில் பேசிய கருத்துகள் தவறானவைதான். என்றாலும், அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி செயற்குழு யோசிக்க வேண்டும்’ என்றார். ஆகட்டும் என்றார் கருணாநிதி. அவகாசம் தரப்பட்டது.

திமுகவுக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் பெரியாரின் கவனத்துக்குச் சென்றது. திமுக உடைவதையோ, திமுக அரசுக்கு ஆபத்து வருவதையோ பெரியார் விரும்பவில்லை. உடனடியாக எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசினார். ஆனால் எம்.ஜி.ஆரோ, ‘என் மீது தவறு இல்லை. திமுக தலைமைதான் சரியாக நடந்துகொள்ளவில்லை. இருப்பினும் நண்பர்களுடன் கலந்துபேசி முடிவு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

பிறகு முதலமைச்சர் கருணாநிதி, பெரியாரைச் சந்திக்கச் சென்றார். கூடவே, அமைச்சர்கள் நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டோரும் சென்றனர். பெரியாருக்கு மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டய விருதை அவரிடம் கொடுப்பதற்காக வந்திருந்தனர். அப்போது, கட்சியின் ஒற்றுமை, ஆட்சி நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்சி பிளவுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கருணாநிதிக்கு ஆலோசனை கொடுத்து அனுப்பினார் பெரியார்.

நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் சென்று எம்.ஜி.ஆரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதிருப்தி. ஆதங்கம். வெறுப்பு. வேதனை. எல்லாவற்றையும் பற்றிப் பேசப்பட்டது. அவற்றுக்கான சமாதான நடவடிக்கைகள் பற்றியும் அலசப்பட்டன. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். எம்.ஜி.ஆர் கரைந்துகொண்டிருந்தார். இருவரும் எம்.ஜி.ஆரின் மனத்தைக் கரைத்துக்கொண்டிருந்தனர்.

சரி, திமுக தலைமைக்கும் கடிதம் எழுதுகிறேன். கடிதத்தின் உள்ளடக்கம் பற்றி பிற்பகலில் விவாதிக்கலாம் என்றார் எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் மனோகரன். கூடவே, மாறன். ஆனால் திடீரென அந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. கடிதம் எழுதுவதாக முதலில் ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர் திடீரென பின்வாங்கியதற்குக் காரணம் அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு.

எதிர்முனையில் பேசியவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்; எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தியதால்தான் எம்.ஜி.ஆர் பின்வாங்கினார் என்றனர் கருணாநிதி ஆதரவாளர்கள். ஆனால் ரசிகர்களை திமுகவினர் தாக்குகிறார்கள் என்ற செய்தி எம்.ஜி.ஆருக்குத் தொலைபேசி மூலமாகக் கிடைத்தது. அதுதான் எம்.ஜி.ஆர் மனத்தை மாற்றிவிட்டது என்றார்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள்.

விளக்கங்கள் கொடுத்த குழப்பங்களுக்கு மத்தியில் திமுக செயற்குழு கூடியது. அதிரடி தீர்மானம் ஒன்று அங்கே நிறைவேறியது.

கழக நலனுக்காக எம்.ஜி.ஆர் அவர்கள் வருத்தம் தெரிவித்து, கழகப் பணியில் ஈடுபட வாய்ப்பு அளித்தும் கூட அவர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாதது வருந்தத்தக்கதாகும். எனவே, அவர் கழகத்தின் ஒழுங்கு முறைகள் குலையும் அளவுக்கு நடந்துகொண்டதற்காக பொதுச் செயலாளர் அவர்மீது கழகச் சட்டதிட்ட விதி 31-ன்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்தச் செயற்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, இந்தத் தீர்மானத்தைப் பொதுக்குழுவுக்குப் பரிந்துரை செய்கிறது.

செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் பொதுக் குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் 310 பேர். அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் 277 பேர். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவுக்குள் உண்மையிலேயே புரட்சி வெடித்திருந்தது!

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்