நிலவறை ஊறுகாய்
ஆத்துலே போகிற தண்ணியை அய்யா குடி அம்மா குடின்னு கூப்பிட்டுக் கொடுத்தாலும், ஒரு வினாடி யோசித்து விட்டு ஆளை விடுங்க சாமி என்று அவங்கவங்க நகர்ந்து கொண்டிருப்பது நம்ம நாட்டில் தான் நடக்கும்.
போன அக்டோபரில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுகள் இன்னும் உலக அரங்கில் நம் பெயரைச் சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. புதுசாக ஒரு சமாசாரம் இதோடு கூட சேர்ந்திருக்கிறது. சமையல் அறை.
சமையல்கட்டை தினசரி மெழுகித் துடைத்து ராத்திரி மொறிச் என்று வைக்காவிட்டால் பாட்டித் தள்ளை பழைய கற்காலத்தில் சொல்வது – உக்கிராணத்தை ஊழலா வச்சா நாளெயும் பின்னெயும் கழிக்க ஆகாரம் கிட்டாது.
காமன்வெல்த் விளையாட்டு நடந்தபோது தில்லியில் ஏற்படுத்திய சமையலறையை அவள் உயிரோடு இருந்து பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், கல்மாடிக்கு ஊரில் இருக்கப்பட்ட சிறு, பெருந் தெய்வங்களின் அனுக்கிரஹம் கிடைக்க மனுப் போட்டு டன் கணக்கில் புண்ணியம் அவர் கணக்கில் வரவு வைத்திருப்பாள். ஊழலே புகுந்து புறப்படாத இடம் அந்த காமன்வெல்த் அடுப்படி.
வெறும் ஆட்டுக்கல், அம்மிக்கல் சாம்ராஜ்யம் இல்லை அது. அரைக்க, கரைக்க, வெட்ட, நறுக்க, வேகவைக்க, வறுக்க, பொறிக்க, தீயில் வாட்ட என்று சகல விதமான சமையலுக்கும் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த, வெளிநாடுகளில் கிரமமாகப் பயன்படுத்துகிற கருவிகள். இதை வாங்கிய விலை, அடுத்தடுத்து வரும் திருட்டு, புரட்டு செய்திகளோடு ஒப்பிட்டால் ஆகக் குறைவு. வெறும் பதினேழு கோடி ரூபாய் தான். ஒரு தமிழ் மசாலா படம் இடைவேளைக்கு அரை மணி நேரம் முந்தி மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத ஆண்டிரியாவும் மற்ற இன்குரல் கந்தர்விகளும் கூவும் துள்ளாட்டக் கனவுப் பாட்டு வரை தயாரிக்க ஆன செலவு.
தினம் 36000 பேருக்கு சமைத்துக் கொட்ட ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் செகண்ட் ஹீரோ ஒபீலிக்ஸ் சைஸில் மின்சார அடுப்புகள். சைஸ் வாரியான மிக்சர், கிரைண்டர்கள். நூறு பிணங்களை அடுக்கடுகாகக் கிடத்த வாகான ஆஸ்பத்திரி மினி மார்ச்சுவரி அளவில் குளிர் பதனப் பெட்டிகள். இப்படி வெளிநாட்டு சாதனங்களை, நம்ம ஊர் சப்பாத்தி, தோசை வகையறாக்களை சமைத்துத் தள்ள வசதியாக அங்கே இங்கே தட்டிக் கொட்டி வடிவமைத்து வாங்கிப் போட்டார்கள். வாய்க்கு ருசியாக இவற்றை வைத்துக் காமன்வெல்த் விளையாட்டுகளின் போது வயிறு வளர்த்த வகையில் கல்மாடியை யாரும் இதுவரை குற்றம் குறை சொல்லவில்லை. அவரை அறியாமலே நல்லா நிறைவேறின ஒரே செயல் இது.
பதினேழு கோடி கொடுத்துக் கட்டும்போதே கேட்கப்பட்ட கேள்வி ஒன்று உண்டு. ரெண்டு வாரக் கூத்தான காமன்வெல்த் முடிந்த பிற்பாடு இந்த சமையல்கட்டையும், சாதனங்களையும், மிஞ்சிப் போன சப்பாத்தியையும் என்ன செய்ய? இதிலே கடைசி ஐட்டம் மிஞ்சாமல் தின்று தீர்க்க ஆள் கூட்டம் ரெடியாக இருந்ததால் அது பிரச்சனை இல்லை. மத்த ரெண்டும்?
காமன்வெல்த் முடிந்ததும் நீ முந்தி நான் முந்தி என்று இந்தியத் தொழில் அதிபர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த ராட்சச சமையல் கூடத்தை வாங்க வருவார்கள் என்று ஏகமாக எதிர்பார்ப்பு இருந்தது. இன்போசிஸ் போல் ஒரு கூரைக்குக் கீழே ஐம்பதாயிரத்துச் சொச்சம் இளந்தாரிகளை உட்கார்த்தி பெட்டி தட்ட வைத்து காசு சம்பாதிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் எத்தனை உண்டு? ஏன், ஹுண்டாய், மாருதி மோட்டார், உருக்கு ஆலை, சர்க்கரை ஆலை எத்தனை இங்கே? ஏர் இண்டியா விமானத்தில் பறக்கிறவர்களுக்குக் கொடுக்கிற பனிஷ்மெண்ட் சாப்பாட்டை இந்தியில் யோசித்து இந்தியில் கிண்டிக் கிளறி ஒரே இடத்தில் சமைத்தெடுத்து தேசிய உணவாக விமானம் தோறும் வழங்க காமன்வெல்த் கிச்சன் வரப்பிரசாதமாச்சே. தில்லியில் இருந்தாலோ, திருவனந்தபுரத்தில் இருந்தாலோ என்ன, நட்டு போல்டு முதல்கொண்டு கழற்றி எடுத்துப் போய் திரும்பத் தேவைப்பட்ட ஸ்தலத்தில் சமையல்கட்டை எழுப்ப எவ்வளவு நேரம் பிடிக்கப் போகிறது? நூறு ஸ்பேனர், நூறு ஸ்க்ரூ ட்ரைவர், நூற்றுச் சில்லறை தொழிலாளிகள் எதேஷ்டம்.
காமன்வெல்த் விளையாட்டு முடிந்து கைது விளையாட்டு ஆரம்பமாகாத இடைவேளையில் இந்த சமையலறையை ஏலம் விட ஏற்பாடு நடந்தது. பதினேழு கோடிக்கு வாங்கிய சாதனங்கள் ஆச்சே, பதினைந்து நாளில் இத்தணூண்டு தேய்வு ஏற்பட்டிருக்கலாம் என்பதால் பதினாறே முக்கால் கோடி விலை வைத்தார்கள். ஏலம் கேட்கக் குறைந்த தொகை வெறும் ஆறே கால் கோடி. அதுக்கு மேலே, வந்தால் நாட்டுக்கு. வராவிட்டால் செலவுக் கணக்கில் இன்னொரு வரி ஏறும்.
என்ன ஆச்சரியம், இருபத்தொண்ணாம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான, ஸ்டேட் ஆப் தி ஆர்ட் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையை ஏலம் எடுக்க நாட்டில் இருக்கப்பட்ட சின்ன, பெரிய கம்பெனிகள் ஒன்று கூட முன்வரவில்லை. ஏலம் எடுக்க மனுக் கொடுக்க வேண்டிய கடைசி தினத்தை ஒன்று இல்லை, ரெண்டு தடவை மாதக் கணக்கில் நீட்டிப் பார்த்தார்கள். ஊஹும், இந்தப் பழம் புளிக்கும் என்று கம்பெனிகள் ஒட்டுமொத்தமாக ஒதுங்கி விட்டன.
பின்னே இல்லியா? காமன்வெல்த் விளையாட்டு என்றாலே ஊழல் என்று ஊரே சொன்னபோது – ரெண்டு ஜீ ஊழல் பற்றி அப்போது தான் ரிலீஸுக்குத் தயாராக போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள் – ஊழல் விளையாட்டு சமையலறையை சல்லிசாக வாங்கி மடியில் கட்டிக் கொண்டால், நாளைக்கு கோர்ட், கேஸ் என்று இழுத்தால் யார் போய் கையைக் கட்டி நின்று அவதிப்படுவது?
வேணம்யா, விட்டுடுங்க என்று கம்பெனிகள் ஒதுங்க, தினசரி லட்சக் கணக்கான பிரயாணிகள் பயணம் செய்யும் இந்திய ரயில்வேயையும், இதேபோல் ஆள் புழக்கம் அதிகமுள்ள ராணுவத்தையும் அரசாங்க விளையாட்டுத் துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. பதினேழு கோடி எல்லாம் கொடுக்க முடியாது என்று அரசு நிறுவனமும், அரசு அமைப்பும் கறாராகச் சொல்லிவிட, அமைச்சகத்தில் நோட் போட்டு, காமன்வெல்த் கிச்சனில் இல்லாமல் கெட்டில் சாய் நாயர் விளையாட்டுத் துறை அமைச்சரக ஆபீஸில் விளம்பிக் கொடுத்த டீ குடித்து கோஷ்டியாக விவாதம் செய்து வழி கண்டுபிடித்தார்கள்.
காசு எதுக்கு? அது இன்னிக்குப் போகும், நாளைக்கும் போகும். அரசு தானே முக்கியம், சும்மாவே தரோம். காமன்வெல்த் சமையல்கட்டை வாங்கிக்குங்க.
அரசு காலில் விழுந்து கெஞ்சாத குறையாகக் கேட்கிறது. ராணுவமும் ரயில்வேயும் ஆகட்டும் பார்க்கலாம், ஆலோசித்து ஆவன செய்வோம் என்று தோரணையாகச் சொல்கின்றன. அவங்களுக்கு என்ன தலைவலியோ, இந்த திருகுவலியும் எதுக்கு?
ஜாபர்கான் பேட்டையில் காயலான்கடை வைத்திருக்கும் நம்ம முத்தலீப் சொல்கிறார் – எதுக்கு டெண்டரும் மத்ததும்? நம்ம கிட்டே சொல்லியிருந்தா இன்னேரம் காதும் காதும் வச்ச மாதிரி காரியத்தை முடிச்சுட்டு நாலு காசோ நாப்பது கிலோ பேரிச்சம்பழமோ கொடுத்திருப்போமில்லே?
ஜாபர்கான் பேட்டைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஒரு நடை போய்ப் பார்த்து விட்டு வர சிபாரிசு செய்யப்படுகிறது.
O
அரசியலும் மதமும் கை கோர்த்துக் கொள்வது உலகம் முழுக்க, இன்று நேற்று என்றில்லாமல் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் சங்கதி. சில கூட்டணிகள் விநோதமானவை. நடந்து முடிந்து, காங்கிரஸ் ஏதோ கொஞ்சம்போல் மெஜாரிட்டி பெற்று உம்மன் சாண்டி தலைமையில் கேரள அரசைப் பிடித்த தேர்தல் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுவது இப்படியான ஒன்று.
சிறுபான்மையினர் மார்க்சிஸ்டுகளுக்கு எதிரணியில் கிட்டத்தட்ட ஒன்று திரண்டு நின்றதைக் காணமுடிந்தது அப்போது. மாதாகோவில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்து வாசிக்கப்பட்டது வேதாகமத்தின் பகுதிகள் அல்ல. இடைய லேகனம். அதாவது நல் மேய்ப்பராகிய ஆர்ச் பிஷப் மாநில அரசியல் நிலை குறித்து விஸ்தாரமாக எழுதி, தேர்தல் நேரத்தில் விசுவாசிகள் செய்ய வேண்டியது என்ன என்று விளக்கிய கடிதங்கள்.
இந்த தேவ இடையர்களின் லிகிதங்களுக்கு என்ன மதிப்பு இருந்ததோ தெரியாது. ஆனால் சிறுபான்மை சமூகம் இந்த முறை காங்கிரஸையும், எத்தனை பிரிவாகப் பிரிந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆக்டோபஸ் மாதிரி ஊர்கிற கேரள காங்கிரஸையும் குஞ்ஞாலிக் குட்டியின் முஸ்லீம் லீகையும் சேர்த்து அமைத்த ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களிக்க முடிவு செய்ததாகத் தகவல்.
மார்க்சிஸ்ட்கள் இடம் போனால் அவர்கள் கண்ணில் படாத தூரத்தில் வலம் போன இந்துத்துவ கட்சிகளும், ஜாதி அமைப்புகளுமோ இந்தத் தடவை ஆச்சரியகரமாக மார்க்சிஸ்டுகளுக்கு மறைமுக ஆதரவு கொடுத்ததாகவும் பரவலான பேச்சு உண்டு. ஆலப்புழையிலும் எர்ணாகுளத்திலும் லெனினையும் மார்க்ஸையும், மகாதேவனும் குருவாயூரப்பனும், செங்கண்ணூர் பகவதியும் காப்பாற்றியதாலேயே அவர்கள் வென்றிலர் என்ற போதும் தோற்றும் இலர் என்று மதிப்போடு வலம் வருகிறார்கள்.
மதமும் அரசியலும் சந்திப்பதை ஐம்பெருங்காப்பியமான மணிமேகலையிலேயே பார்த்தவர்கள் நாம் எல்லாரும். பௌத்த தேவதையான சதுக்க பூதம் பூம்புகாரில் ஒரு நாற்சந்தியில் சட்டமாக உட்கார்ந்து அந்தக் காலத்திலேயே லோக்பால் வேலை பார்த்திருக்கிறது. அரசவை, நீதியமைப்பான ஐம்பேராயம் எல்லாம் போக, ஊழல், கொலை, கொள்ளை இப்படி பஞ்சமா பாதகங்களுக்கு சதுக்க பூதம் தண்டனை கொடுத்த விதம் எளிதானது. குற்றம் சாட்டப்பட்டவரை அப்படியே வாரியெடுத்து வாயில் போட்டு காராச்சேவு மாதிரி மென்று முழுங்கி விடுவது.
சதுக்க லோக்பால் சாப்பாட்டு இடைவெளியில் பெண்கள் எப்படி கணவனே கண்கண்ட தெய்வமாக சதா அவன் காலடி தொழ வேண்டும், கோவிலுக்குப் போகாமல், அந்த புருஷ தெய்வங்களையே வணங்க வேண்டும் என்றெல்லாம் தாலிபானிசப் போதனைகளையும் செய்ததாக சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் காட்டுகிறார். சதுக்க பூதம் ரீல் என்று தெரிந்தாலும், சாத்தனார் சொல்வது அவராக எழுதியதா, யாரோ தூண்டி எழுத வைத்தார்களா என்று தெரியாது. கணவனைத் தொழாத பெண்களை பகல் சாப்பாட்டாக ச.பூ விழுங்கியதாக மணிமேகலையில் ஒரு வரியாவது பார்க்க முயன்றேன். கிடையாது.
சதுக்க பூதம் கிடக்கட்டும். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய கேரளத்துக்கு திரும்ப ஒரு விசிட் அடிப்போம். அரசியல் மதத்தைத் தேடி வர வேண்டிய கட்டாயம் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு ஏற்பட்டது அப்போதுதான். ஏழை பாழைகளுக்கு விளைநிலத்தைப் பங்கு போட்டுக் கொடுக்க எல்லா நட்சத்திரங்களில் அவதரித்த திருநாள் பட்டம் தாங்கிய மகாராஜாக்களுக்கும் மார்த்தாண்ட, மற்ற வர்மாக்களுக்கும் பிடிக்கவில்லை. ராஜா தன்னை பகவான் சாட்சாத் பத்மநாபனின் தாசன் என்று அறிவித்துக் கொண்டார்.
ராஜாவே பெருமாளுக்கு டெர்ரஸ்டியல் ரெப்ரெசெண்டேடிவ் ஆன பிற்பாடு நிலம் எல்லாம் பெருமாள் உடமை. யாராவது அதிலே கையளவு மண் கேட்டால் அவன் தெய்வ துரோகி. தண்டனை தான் தீர்வு. ஒருத்தனாவது வாயைத் திறப்பானா?
தண்டனையில் எத்தனை வகை? கோயில் உருளியில் எண்ணெயைக் காய்ச்சி குற்றவாளியின் கையை முக்கச் சொல்வது கேள்வி கேட்காமல் அங்கீகரீக்கப்பட்ட தண்டனை முறை. அரசுக்கு வேண்டப்பட்டவர்கள் கை முக்க வரும் முன், எண்ணெயில் கலந்த ரசாயனம் அடுப்பைப் பற்ற வைத்த இளஞ்சூட்டிலேயே எண்ணெயைத் தளைப்பிக்க, வெதுவெது சூட்டில் கைமுக்கி வேதனைப் படாது தப்பித்தவர்களும் உண்டாம். வாய்மொழிச் செய்திதான் இதுவும்.
ராஜராஜசோழன் கால வரி உயர்வை எதிர்த்து விவசாயிகள் கலகம் செய்த செய்தியாவது கல்வெட்டு வழியாகவோ என்னவோ கசிந்து விட்டது. பத்மநாப தாசன்களின் திருவிளையாடலை கேரளம் மறந்தும் மன்னித்தும் விட்டது. இங்கே இன்னமும் கூடச் சோழனை விமர்சித்தால் தமிழ்த் துரோகிகள். அங்கே தாசனை விமர்சிக்க நேரம் யாருக்கும் இல்லை.
அரசியல் பிழைத்தார்க்கும் அரசியலால் பிழைத்தார்க்கும் ஆலயமே அபயமாக இருந்த காலம் நமக்குப் பழையது என்றால், கர்னாடகத்தில் இன்னும் அது தொடர்கிறது. அரசியல் மோதல் வழிபாட்டு இடத்துக்கு எடுத்துப் போகப்படுவது கர்னாடகத்தில் இன்று பரபரப்பான செய்தியாகி இருக்கிறது.
தர்மஸ்தலம் மஞ்சுநாத சுவாமி ஆலயம் ஒரு சமண ஆலயம். எப்படியோ இந்து மகா சமுத்திரத்தில் கலந்து அது லட்சக் கணக்கான ஆத்திகர்கள் கர்னாடகத்தில் இருந்தும், மற்ற தென் மாநிலங்களில் இருந்தும் வந்து தொழும் பெருங்கோயிலாகவும் பெயர் எடுத்து விட்டது. திருப்பதி போல தினசரி அன்னதானம் செய்கிற ஏற்பாடும், எந்த அரசு இடையூறும் இல்லாமல் பரம்பரை அறங்காவலரான ஹெக்டே நிர்வகிக்கிற நேர்த்தியும் நாத்திகர்களையும் இந்தக் கோவிலைப் பற்றி நல்லபடியே பேச வைத்திருக்கின்றன.
தற்போது இரண்டு அரசியல் பூனைகள் தர்மஸ்தலத்தில் நுழையப் பார்க்கின்றன. அந்த ஸ்தலத்து ஈசன் முன் ‘முதல்மந்திரி எட்டியூரப்பா ஊழல் பேர்வழி’ என்று சத்தியம் செய்ய ஜனதா தளக் கட்சித் தலைவர் குமாரசாமியும், ‘நான் பரிசுத்தமானவன்’ என்று பதில் சத்தியம் செய்ய முதல்வர் எத்தியூரப்பாவும் சூளுரைத்து ஆதரவாளர்களோடு தர்மஸ்தலத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள்.
இரண்டு பேரின் ஊழல் சரித்திரமும் கர்னாடகம் முழுக்கத் தெரிந்த ஒன்று. ஆனாலும் தங்களுக்குத் தாங்களே தினசரி தண்டனை விதித்துக் கொண்டது போல், கர்னாடக மக்கள் தொடர்ந்து இந்த இரண்டு பேரையும் ஆள வைத்தும் அடித்துக் கொள்ள வைத்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தர்மஸ்தலம் போனதும் மனது மாறி, ‘கர்னாடகத்துக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு’ திரும்புகிறார் எட்டியூரப்பா. அவருக்கு தைரியம் இல்லை. போகிறது. உலகம் நலமாக வாழட்டும் என்று புனித பாவனைகளோடு குமாரசாமி இறங்கிப் போகிறார். இரண்டு அபத்தங்களையும் மாநில வழக்கப்படி சும்மா பார்த்துக்கொண்டு ஒரு மாநிலமே பூவரச இலையில் கரண்டி கரண்டியாகக் குல்கந்தை விழுதாக நிரப்பி ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
O
உதிர்ந்து விழுந்த சொத்தைப் பல்லைப் புதைக்க ஒண்ணரை செண்டிமீட்டர் ஆழத்துக்குக் குழி தோண்டினாலும் திருவனந்தபுரத்தில் வேட்டியை மடக்கிக் குத்தி, தரையில் குடையை ஊன்றிக் கொண்டு என்ன நடக்குது என்று வேடிக்கை பார்க்கப் பத்துப் பேராவது சுற்றி நின்றுவிடுவார்கள். பத்மநாப சுவாமி கோவிலில் நிலவறை விஷயத்தில் மட்டும் கேரள மனப்பான்மை மாறுபட்டது அதிசயம்தான்.
மொத்தம் ஆறு நிலவறைகள். காலம் காலமாக, அதாவது, குறைந்தது இருநூறு வருடமாவது பழமை கொண்ட குகை போன்ற அமைப்புகள். செங்கலும் சுண்ணாம்பும் காரையும் உபயோகித்து விலை மதிப்பு மிகுந்த பொருட்களை ரகசியமாக, பாதுகாப்பாக வைக்க திருவிதாங்கூர் சமஸ்தானம் நிர்மாணம் செய்தது. எல்லாம் கோவிலுக்குக் காணிக்கையாகக் கிடைத்த பொருட்கள்.
நாட்டின் வேறு பல பகுதிகளில் இப்படி கோவில் நிலவறைகள் இருந்தால், கோவில் நிலங்கள் போல அவையும் யார்யார் கையிலோ எந்தக் காலத்திலோ போய்ச் சேர்ந்து அங்கே தற்போது வெறும் தூசி துப்பட்டை மட்டும் தான் அண்டிக் கிடக்கும். கேரளத்தில் அந்த விஷயத்தில் வித்தியாசமான நடைமுறை. நிலவறைகளுக்கு ஏ, பி, சி என்று எஃப் வரைக்குமாக பெயர் கொடுத்து, அடைத்தது அடைத்தபடியே இத்தனை காலம் பாதுகாத்து வந்தார்கள்.
ஒவ்வொரு அறைக்குள்ளும் கோடிக்கணக்கில் பொன்னும் வைரமும் இருப்பதாக பருப்பு வடை தின்று விட்டு கட்டன் காப்பி குடிக்கிற சாயந்திரக் கடைகளிலும், ராத்திரி வீட்டுத் திண்ணைகளில் ராச்சாப்பாடு முடிந்து தூங்கப் போகிறதுக்கு முன்பும் பேசிக் கொண்டார்களே தவிர ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக் கொண்டார்கள். அந்த அறைகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை சமீப காலமாகத்தான் எழுந்திருக்க வேண்டும்.
கோரிக்கையை எழுப்பிய சுந்தர்ராஜன் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட் வரை போய் இதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் கமிஷனின் உத்தரவை வாங்கினார். ரெண்டு சுப்ரீம் கோர்ட் ரிடையர்ட் நீதிபதிகள், ராஜ குடும்ப பிரதிநிதி, கோரிக்கை வைத்த சுந்தர்ராஜன், தொல்பொருள் துறை அதிகாரி இப்படி ஒரு குழு இந்த வாரம் ஆறு நிலவறைகளையும் திறந்து பார்க்க உத்தரவோடு அனந்தை வந்து சேர்ந்தது.
முதலில் கோவிலின் தெற்குப் புறத்தில் வியாசர்கோணப் பகுதியில் சி நிலவறை திறந்ததும், காப்பிக்கடைப் பேச்சும், ராச்சாப்பாட்டுக்கு அப்புறமான அரட்டையும் சங்கதி இல்லாத சமாசாரம் இல்லை என்று நிரூபணமானது. மொத்தம் 450 கோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்கக் குடம், வெள்ளிக் குடம், வெள்ளி விளக்கு, வெள்ளி உருளிகள், பூஜா பாத்திரங்கள் என்று எதெது எந்த வருடம் யாரால் கொடுக்கப் பட்டது என்று எழுதிய விவரத்தோடு துணியில் பொதிந்து நிலவறை உள்ளே வரிசையாக அடுக்கி வைத்திருந்ததைக் கண்டார்கள்.
அடுத்த நாள் டி, எஃப் நிலவறைகள் திறக்கப்பட பத்மநாப சுவாமி சொத்துக் கணக்கு இன்னும் உயர்ந்தது. இந்த இரண்டு அறைகளிலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தவை வைரக் கிரீடங்கள், மரகதம் பதித்த மூவாயிரத்துச் சொச்சம் தங்க செயின்கள், மற்றப்படி தங்கக்குடம் இத்யாதி. மொத்த மதிப்பு 350 கோடி ரூபாய்.
இன்னும் மூன்று நிலவறை திறந்ததும் தான் தெரியும் ஸ்ரீபத்மநாபன் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை நிதிநிலைமையில் முந்துவாரா பிந்துவாரா என்று.
எதற்காக உபயோக சூனியமாக கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இப்படி ஆண்டவன் பெயரில் நிலவறையில் வைத்து நூறு இருநூறு வருடம் பூதம் காத்த புதையலாகக் காக்கப்பட வேண்டும்? தினசரி கோவில் காரியங்களுக்கு இதெல்லாம் உபயோகமாகலாமா? சரி. மூவாயிரம் தங்கக் குடம், நாலாயிரம் வெள்ளி உருளி இதையெல்லாம் கோவில் மடைப்பள்ளியில் உபயோகித்து எந்த பூஜைக்கு நைவேத்தியம் சமைக்க முடியும்? காசி அல்வா போல் காசு அல்வாவெல்லாம் செய்கிற வழக்கமில்லையே எங்கேயும்?
கோவில்களில் குறைந்த வாடகையில் ஏழைகளுக்குத் திருமணம் செய்து வைக்க கல்யாண மண்டபம் கட்ட, குறைந்த கட்டணம் வசூலித்து ஸ்ரிபத்மநாபனைத் துதித்துப் பள்ளிக்கூடம் நடத்த, அந்தக் கோவில் ஊழியர்களுக்கு கொஞ்சம் அதிகம் மாதச் சம்பளம் கொடுக்க, விளக்குக்கு தாராளமாக எண்ணெய் வார்க்க மானியம் அளிக்க, கோவில் வாசலில் வேட்டி-வாடகைக் குத்தகையை ஒழித்து, வேட்டியோ, பைஜாமாவோ, முழுக்கால் டிரவுசரோ, கவுரவமாக எதையாவது அணிந்து மனதில் சுத்தியோடு வரும் பக்தர்களுக்கு ஒரு பூவன் பழமாவது பிரசாதமாகக் கொடுக்க, சகலருக்கும் இலவச உணவு அளிக்க ஊட்டுப்புரை ஏற்படுத்த இந்தப் பணத்தை நிலவறை ஊறுகாய் போடாமல் பயன்படுத்தலாமே?
கேட்டால் உடனே பதில் கிடைக்கும். மற்ற மத வழிபாட்டு ஸ்தலங்களைப் பற்றி இப்படிக் கேட்டு விட்டு அப்புறம் இங்கே வந்து கேள். ஏன் இங்கே ஆரம்பிக்கக் கூடாதா?
O
ஜெஜூரிக்குப் பயணம் போய் வந்து கவிஞர் அருண் கொலெட்கர் அங்கே இருக்கிற சாமானியர்களின் கடவுளான யஷ்வந்த்ராவ் பற்றிக் கவிதை எழுதினார்.
யஷ்வந்த்ராவ்
ஒரு கருப்புக் களிமண் பொதி.
தபால்பெட்டி போல் பிரகாசம்.
உயிர்ச்சத்தின் உருவம்.
எரிமலைக் குழம்பை உருட்டிச்
சுவரில் எரிந்த மாதிரி
கையில்லை. கால் கிடையாது.
தலையும்தான்.
அதியற்புதமாக ஒன்றும் இல்லை.
உலகத்தையே உங்களுக்குத் தருவதாக
உறுதிமொழி எல்லாம் அளிக்கமாட்டார் அவர்.
சொர்க்கத்துக்குக் கிளம்பும் அடுத்த ராக்கெட்டில்
உங்களுக்கு ஒரு இடம் பிடித்துக் கொடுக்க மாட்டார்.
ஆனாலும், உங்களுக்கு ஏதாவது
எலும்பு முறிந்துபோனதென்றால்
கட்டாயம் சரி செய்து விடுவார்.
யஷ்வந்த்ராவ் போல் நான் தினசரி வாக்கிங் போகும் பூங்காவில் ஒரு விநாயகர் உண்டு. மக்களின் கடவுள். இவர் குளிக்க நீரை பூங்கா கழிவறைக் குழாயில் இருந்து ரப்பர் குழாய் மூலம் பிடித்து வைப்பார் குருக்கள். சந்தோஷமாகக் குளித்து முடித்து பக்தர்களுக்கு அருள் செய்ய மின்னி மின்னி எரியும் டியூப் லைட் வெளிச்சதில் உட்கார்ந்து விடுவார் கடவுள்.
வருகிற பக்தர்கள் ஷூ அணிந்து ஓடியபடி ஒரு வினாடி நிற்பார்கள். நின்று கும்பிட்டுவிட்டு அதே படிக்கு திரும்ப அடுத்த ரவுண்ட் ஓடுவார்கள். சிலர் சாமர்த்தியமாக கோவிலைச் சுற்றியே ஐம்பது ரவுண்ட் செருப்புக் காலோடு ஓடி ஒவ்வொரு தடவையும் கும்பிட்டு காலுக்கும் கைக்கும் உடற்பயிற்சி பெற்ற சந்தோஷத்தோடு திரும்புவார்கள்.
இன்னும் சில பக்தர்கள் ஓடத் தொடங்கும் முன் அவர்களுடைய ஹெல்மெட், தண்ணீர் பாட்டில், ஜலதோஷ இன்ஹேலர் இன்ன பிற சொத்துக்களை, சிலர் கால் செருப்பையும், பிள்ளையார் பொறுப்பில் அவர் முன்னால் வைத்துவிட்டு நடப்பார்கள். ஓடுவார்கள். அவர் அதுக்கெல்லாம் காசு வாங்காத காவல் காரனாக ஊழியம் செய்தபடிக்கு உட்கார்ந்திருப்பார்.
நேற்று மாலையில் பார்த்தது இது. பூங்காவைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி, நடுநடுவே இரும்புக் கம்பிகளால் தடுப்பு கொடுத்திருக்கிறார்கள். காம்பவுண்ட் சுவருக்கு வெளியே சுற்றி விரியும் தெருவில் கூரியர் தபால் கம்பெனி, தினசரி ஏசி பஸ் தமிழகமெங்கும் ஓட்டி விபத்துக்குள்ளாக்கும் கம்பெனி, அதன் பஸ்களில் ஏற்ற சின்ன சின்ன பார்சல்களைச் சேகரித்துப் போட்டு அனுப்பத் தோதான மினி லாரிகள் நிற்கிற இடம், புதுசான புரட்சித் தலைவி டிபன் ஹவுஸ், மோட்டார் டயர் ரிடிரீடிங் கம்பெனி, பதிப்பகம் இப்படி பல தினுசாக வியாபார நிறுவனங்கள்.
மினி லாரி டிரைவர் ஒருத்தர் லோடு எடுத்துப் போக வேண்டிய அவசரத்தோடு சுவருக்கு அந்தப் பக்கம் நின்று விநாயகரை விக்னம் தீர்ந்த விபத்தில்லாத பயணத்துக்காக வணங்கிக் கொண்டிருக்கிறார். கையில் புகைந்த சிகரெட், கம்பிக்கு மேல் பத்திரமாக வைக்கப்பட்டு புகை வந்தபடிக்கு இருக்கிறது.
பூங்கா விநாயகரின் குருக்கள் கற்பூர தீபம் காட்டி தீபத் தட்டோடு காம்பவுண்ட் சுவரோரம் நடக்கிறார். கம்பிகள் வழியாகத் தீபாராதனைத் தட்டு நீட்டப்பட மினி லாரி டிரைவர் கண்ணில் ஒற்றிக் கொண்டு காக்கிச் சட்டைப் பையில் இருந்து பத்து ரூபாய் எடுத்துத் தட்டில் போட்டு விட்டு குருக்கள் கொடுத்த திருநீற்றை நெற்றி நிறைய இட்டுக் கொண்டு கிளம்புகிறார்.
போகிற அவசரத்தில் பாதி புகைத்த சிகரெட்டை மறந்துவிட்டார். குருக்கள் வலது கையில் அணைந்து கொண்டிருக்கும் தீபாராதனையோடு, இடது கை விரல் fநுனியால் காம்பவுண்ட் சுவரில் வைத்த சிகரெட்டைத் தள்ளி விட்டு, கையை வேட்டியில் துடைத்தபடி அடுத்த ஷூ அணிந்த பக்தருக்கு பிரசாதம் தர நடக்கிறார். ‘சகலத்துக்கும் அட்ஜஸ்ட் செய்து அருள் பாலிக்கும் அஷ்ட சித்தி கணபதி’க்கு நானும் மனதில் ஒரு கும்பிடு போடுகிறேன்.
பூங்கா கணபதி பூசாரி எங்கேபார்
ஓங்காரம் சொன்னபடி ஓரமாய் – சாய்ங்காலம்
தும்பிக்கை சாமியை நம்பிடும் பக்தனுக்குக்
கம்பிக்குள் தீபம் நுழைத்து.
இவ்வெண்பாவுக்குச் சுடச்சுட ஒரு பதில் வெண்பாவும் உண்டு காணீர் உலகீரே. நண்பர் க்ரேஸி மோகன் அருளிச் செய்தது –
தம்பிக்குக் காதல் துணைபோன தந்திக்குக்
கம்பிக்குள் கற்பூரம் காட்டினாலும் – நம்பிக்கை
கோர்க்கும் அடியார்க்குக் கோரியன தந்திடுவார்
பார்க்கில் கணபதி பார்.
















