இந்திய தேசியவாதம் எப்படிப்பட்டது?

நவீன இந்தியா / அத்தியாயம் 7

6a00d8341c464853ef019101fb0f25970c-500wi1905ம் ஆண்டு முதல் தேசியவாத தலைவர்களும் அறிவுஜீவிகளும் சுயாட்சி குறித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதை ஒரு கோரிக்கையாக மக்கள் முன்வைக்கவும் அவர்கள் தயாராயினர். முதல் உலகப் போர் முடிவில், 1918ம் ஆண்டு அவர்கள் வயது வந்தவர்களுக்கான வாக்குரிமை பற்றியும் அரசாங்கத்தில் பங்கேற்பதன் அவசியம் பற்றியும் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். 1929ம் ஆண்டு முழுமையான சுதந்தரத்தை இந்திய தேசியவாத இயக்கம் முன்வைத்தது. இதையே தனது அரசியல் நோக்கமாகவும் அது வரித்துக்கொண்டது என்கிறார் பிபன் சந்திரா. இந்தப் போராட்டம் பல கட்டங்களில் நடைபெற்றது. இறுதிக் கட்டத்தில்தான் பெரும் திரளமான மக்கள் பங்கேற்பு இருந்தது. இதுவே விடுதலைப் போராட்டத்தை உந்தி முன் தள்ளவும் செய்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் பங்கு இதில் குறிப்பிடத்தக்கது என்கிறார் பிபன் சந்திரா. தேசியவாத இயக்கத்தை ஒரு விரிவான கோட்பாட்டுத் தளத்தில் வைத்து ஆராய்ந்த வரலாற்றாசிரியர்களில் இவர் முக்கியமானவர். சுதந்தரப் போராட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்த காங்கிரஸின் பாத்திரத்தை விரிவாக ஆராயும்போது சில முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறார் பிபன் சந்திரா. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி ஒரு நாடாளுமன்ற அமைப்பின் வடிவமாகவே இருந்தது வந்தது. அதன் செயல்பாடுகளில் ஜனநாயகத்தன்மை இருந்தது. வெவ்வேறு சிந்தனையோட்டம் கொண்டவர்கள் அதில் அங்கம் வகித்தபோதும் தொடக்கம் முதலே எதேச்சதிகாரப் போக்கு அமைப்பில் பரவவில்லை.

தேசத்தின் பிரச்னைகள் சீரானமுறையில் விவாதங்கள்மூலம் அலசப்பட்டன. இந்தச் சந்திப்புகள் அனைத்தும் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டன. குறிப்பிட்ட ஒரு முடிவு எடுக்கப்பட்ட பிறகு அது வாக்களிப்புக்கு விடப்பட்டது. அனைவரின் ஒப்புதலும் பெற்றபிறகே திட்டம் நடைமுறைக்குச் சென்றது. ஜனநாயகமும் மதச்சார்பற்ற தேசியவாதமும் அமைப்பின் அடிப்படைகளாகத் திகழ்ந்தன. இந்த அடிப்படைகள் முக்கியமானவை; வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு மொழிகள் பேசும், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும், வெவ்வேறு சமூகப்பொருளாதாரப் பின்னணியில் வாழும் மக்களை ஒன்றுதிரட்ட இந்த நோக்கங்கள் பயன்பட்டன.

இந்தியா முழுக்க உள்ள பொதுவான பிரச்னைகளை எடுத்துப் பேசினால்தான் அனைவரும் திரள்வார்கள் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கணக்கிட்டது. சமூக சீர்திருத்தத்தை இப்போதைக்கு காங்கிரஸ் எடுத்துக்கொள்ளாது என்று தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தினார் தாதாபாய் நவுரோஜி. இதில் பலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்ததுதான் இதற்குக் காரணம். ‘ஒட்டுமொத்த தேசமும் நேரடியாகப் பங்கேற்கும்படியான விஷயங்களை மட்டுமே தேசிய காங்கிரஸ் கையாளவேண்டும். நம்முடைய அரசியல் விழைவுகளை நம்முடைய ஆட்சியாளர்களுக்குப் பிரதிபலிப்பதற்காகத்தான் ஓர் அரசியல் அமைப்பாக நாம் திரண்டிருக்கிறோம்.’ இந்தத் திரட்சி சாத்தியமாகத் தொடங்கிய பிறகே சமூக மாற்றம், பொருளாதாரம், சமூக நீதி உள்ளிட்ட அம்சங்களில் காங்கிரஸ் கவனம் செலுத்தத் தொடங்கியது என்கிறார் பிபன் சந்திரா.

கலாசாரத்தை மையமாக வைத்து தேசியவாத இயக்கத்தைக் கட்டமைக்கும் போக்கையும் காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்திய வேற்றுமையின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்ததால் மதம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய தேசத்தை அவர்கள் நிர்மாணிக்க விரும்பவில்லை. மதச்சார்பின்மையே இந்தியாவின் அடையாளமாக இருக்கும் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். மதச்சார்பின்மையை வலியுறுத்தினால்தான் பல்வேறு மதப் பிரிவினரும் ஒருங்கிணைந்து வாழ்வது சாத்தியம் என்று அவர்கள் நம்பினர்.

பெரும்பாலான இந்திய மக்கள் அப்போது படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தனர் என்பதால் அவர்களுக்குப் புரியும்படியான அம்சங்களைக் கொண்டு அவர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களால் ஏற்கமுடியாதவற்றை ஒதுக்கித் தள்ளவும் தேசியவாதத் தலைவர்கள் தயாராகயிருந்தனர். மதத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட தேசியவாத எழுச்சிகளை காங்கிரஸ் ஏற்கமுன்வரவில்லை. இந்து தேசியவாதம், சீக்கிய தேசியவாதம், இஸ்லாமிய தேசியவாதம் என்று அவற்றை அழைக்காமல் வகுப்புவாத எழுச்சிகள் என்றே அவற்றை காங்கிரஸ் அடையாளப்படுத்தியது. அமைப்பில் இருந்த வகுப்புவாதச் சக்திகளை அடையாளம் கண்டு 1938ம் ஆண்டு வெளியேற்றியது காங்கிரஸ். இதன்மூலம் வகுப்புவாதத்துக்கு இடமில்லை என்பதையும் அது உறுதிபடுத்தியது.

அதே சமயம், இந்திய தேசிய காங்கிரஸால் வகுப்புவாதத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. (இது பற்றி நாம் பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்). காலனியாதிக்கத்தை எதிர்த்ததைப் போல் வகுப்புவாதத்தை ஒரு வலுவான செயல்திட்டத்தை வடிவமைத்து எதிர்க்க காங்கிரஸ் முன்வரவில்லை. 1946-47ல் வெடித்த வகுப்புவாத மோதல்களும் பாகிஸ்தான் பிரிவினையும் உணர்த்தும் உண்மை இதுவே.

பிபன் சந்திராவைப் பொருத்தவரை, இந்திய தேசிய காங்கிரஸின் முதன்மையான வெற்றி என்பது ஒரு வலுவான தேசியவாத இயக்கத்தைக் கட்டமைத்து காலனியாதிக்க எதிர்ப்பை மேற்கொண்டதில்தான் அடங்கியிருக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்க வேறுபாடு, வகுப்புவாதம், சமூக மாற்றம், பாலின வேறுபாடு ஆகியவற்றில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை.

0

தேசியவாதிகளின் வரலாற்றுப் பிரதிகள் காலனியாதிக்க வரலாற்றுப் பிரதிகளின் தொடர்ச்சியாக எழுதப்பட்டவை. காலனியாதிக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை அல்லது காலனியாதிக்கத்தை எதிர்க்கும் நோக்கில் எழுதப்பட்டவை என்றும் இவற்றை அழைக்கமுடியும். பிபன் சந்திரா அடிப்படையில் ஓர் இடதுசாரி என்றபோதும் அவர் தேசியவாத வரலாற்றாசிரியராகவும் மதிப்பிடப்படுபவர். காந்தி, கார்ல் மார்க்ஸ் இருவரையுமே இவரால் ஏற்கமுடிந்தது. ஆனால் தீவிர இடதுசாரிகள் பிபன் சந்திரா போன்ற தேசியவாதிகளின் வரலாற்றுப் பார்வையை ஏற்பதில்லை.

1967ல் உருவான நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு தோற்றம் பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் நிறுவக உறுப்பினர்களில்ஒருவர், சுனிதி குமார் கோஷ். இந்திய தேசியவாதத்தை மட்டுமல்ல, அதன் நாயகமாக தேசியவாதிகளுக்குத் தோற்றமளிக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் பாத்திரத்தையும் சுனிதி குமார் கோஷ் கேள்விக்கு உட்படுத்துகிறார். தனது India & the Raj என்னும் புத்தகத்தின் முன்னுரையே இதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. ‘அந்நிய ஆட்சிக்கு எதிராக விடுதலையை நோக்கி இந்தியமக்களை வழிநடத்திச் சென்றது இந்தியத் தேசிய காங்கிஸே; முப்பதாண்டுகாலம் இதன் தலைவராக இருந்த காந்திதான் ஆழ்துயிலில் இருந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்; உலகிலேயே வலிமைவாய்ந்த பேரரசைத் தோற்கடித்தத் தனிச் சிறப்பான ஆயுதத்தை (சத்தியாகிரகத்தை) இம்மக்களுக்காக வடிவமைத்துத் தந்தவரும்இவரே; விடுதலை வேள்வியின் ஊடாக இந்த மாபெரும் தேசத்தை உருவமைத்தது இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைமையே; இந்தியராயினும் சரி, வெளிநாட்டினராயினும் சரி, வரலாற்றாளர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் பெரும்பாலும் இந்தக் கருத்தே கொண்டிருந்தனர்.’

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் இரண்டு சக்திகள் பங்கேற்றன என்று குறிப்பிடும் சுனிதி குமார் கோஷ் அந்த இரண்டின் பண்புகளையும் விவரிக்கிறார். ‘நீண்டகாலக் காலனிய ஆட்சியின்போது ஒன்றுடன் ஒன்று போராடும் இரண்டு சக்திகள் இந்தியச் சமூகத்தில் தோன்றின. ஒன்று, பழங்குடிகள், விவசாயிகள், கைத்தொழில்கள், ஆலைத் தொழிலாளிகள், நகர்ப்புறச் சிறுமுதலாளிகள் ஆகியோரின் அணி. இரண்டு, (வணிகம் சார்ந்த அல்லது தொழில் சார்ந்த) பெருந்த தரகு முதலாளிகள், பெரு நிலப்பிரபுக்கள், இளவரசர்கள் மற்றும் அந்நிய ஆட்சியாளர்களின் கருத்துகளில் ஊறித் திளைத்தவர்களும், அவர்களின் ஆட்சி இந்தியாவுக்கு நன்மை தரக்கூடியதென்றும், முற்போக்கானதென்றும் முழுமையாக நம்பி வந்தவர்களும், சலுகைகளை அனுபவித்து வந்தவர்களுமான மேல்தட்டு அறிவுஜீவிகள், அதாவது பெரும் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அரசாங்க உயர் அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய அணி. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட இந்த அணியினர் தம் இருப்புக்கும் செழிப்புக்கும் வசதிகளுக்கும் காலனிய ஆட்சிக்குக் கடன்பட்டிருந்தார்கள். ஏகாதிபத்தியத்துக்கு ஒத்துழைக்கும் அதனுடன் சமசரம் செய்துகொள்ளும் அரசியலைப் பின்பற்றினார்கள். முதலில் சொல்லப்பட்ட அணியினரோ ஏகாதிபத்தியத்தின் மற்றும் உள்நாட்டில் அதற்கு ஒத்துழைப்பாக இருந்தவர்களின் கொள்ளைக்கும் ஒடுக்குமுறைக்கும் பலியாகிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் அரசியல், போதுமான அளவில் தெளிவாக முன்வைக்கப்பட்டதோ, இல்லையோ ஏகாதிபத்தியத்துக்கும் அதன் சுதேசிக் கூட்டாளிகளுக்கும் எதிரான சமரசமற்ற போராட்ட அரசியலாக இருந்தது. ’

கோஷ் தொடர்கிறார். ‘இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான எல்லை அரசியல்ரீதியாக தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்று குறிப்பிடும் கோஷ், அவற்றுக்கு இடையிலான உறவு மிகவும் சிக்கலானாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். விவசாயிகள், தொழிலாளர்கள், நகர்ப்புறச் சிறு முதலாளிகள் ஆகியோரின் பொருளியல் நலன்கள், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடைத்தரகர்களாகப் பணியாற்றிய இளவரசர்கள், நிலக்கிழார்கள், பெருமுதலாளிகள் ஆகியோரின் பொருளியல் நலன்களுடன் தீவிரமாக மோதிக்கொண்டன. இருப்பினும் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகள் சூழ்ச்சியாளர்களாக இருந்தனர். கடுமையாகச் சுரண்டப்பட்டுவந்த பொதுமக்களை ஏறத்தாழ முதல் உலகப்போரின் முடிவிலிருந்தே குழப்பி வந்தனர். சில நேரங்களில் அவர்களைத் தமக்குப் பின்னால் அணிதிரட்டிக் கொண்டனர். பிற நேரங்களில் பிரிட்டிஷ் அரசுடன் சதி செய்து அவர்களின் போராட்டங்களைத் தடம்புறளச் செய்தனர். திசை திருப்பினர். அடக்கி ஒடுக்கினர். இது முரண்பாடு போல் தோன்றினாலும் இதுதான் உண்மை.’

விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாக அறியப்படும் தேசியவாதத் தலைவர்களின் நோக்கத்தை சுனிதி குமார் கோஷ் கேள்விக்கு உட்படுத்துகிறார். அவர்களுடைய நோக்கம் இந்திய விடுதலை அல்ல, அதற்கு எதிரானது என்னும் முடிவுக்கும் அவர் வந்து சேர்கிறார். ‘உண்மையான தேசிய விடுதலையை எதிர்த்த அவர்கள் (மேலே குறிப்பிட்டப்பட்டிருக்கும் இரண்டாம் அணியைச் சேர்ந்தவர்கள்) முன்யோசனையுடன் கூடிய செயலுத்தியாக காலனிய எதிர்ப்புப் போராட்டக் கொடியையும் உயர்த்திப் பிடித்தார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைத் தடுப்பதற்காக அவ்வப்போது கட்டாயத்தின் பேரில் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கங்கள், தலைமை வரையறுத்த வரம்புகளைத் தாண்டியபோது மட்டுமே உண்மையான தேசிய விடுதலைப் போராட்டத் தன்மையைப் பெற்றன.’

இந்திய விடுதலைப் போராட்டத்தின்முக்கிய மைல்கற்களாக கருதப்பட்டுவரும் பல இயக்கங்கள் இவ்வாறு வரம்புகளைத் தாண்டியவையேஎன்கிறார் சுனிதி குமார் கோஷ். 1919ல் நடைபெற்ற ரவுலட் சத்தியாக்கிரகம், 1920-22ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930-31ல் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கம் ஆகியவை வெற்றிகரமான தேசியவாதப் போராட்டங்கள் அல்ல. இவை தேசிய விடுதலைப் போராட்டத்தின் ‘தன்மையை அடையும்போல அச்சுறுத்தல் தோன்றியதுமே, அவசர அவசரமாகத் திடுதிடுப்பென திரும்பப் பெறப்பட்டன. அதனால் நாடு பலத்த ஏமாற்றத்துக்கும், உளச் சீரழிவுக்கும் உள்ளானது.’

படித்த, மேல்தட்டுப் பிரிவினர் விடுதலைப் போராட்டத்தில் வகித்த பாத்திரம் மக்களுக்கு விரோதமானதான அமைந்தது என்பதை பல மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி வாதிடுகிறார் கோஷ். மும்பையின் கவர்னராகவும் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினராகவும் இருந்த சர். பர்ட்டல் ஃபிரேரியின் கருத்து இது. ‘இப்போது நான் செல்லுமிடமெல்லாம் ஆங்கிலேய அரசாங்கத்தின் மிகச் சிறந்த கொள்கை விளக்குநர்களை, இந்திய மக்களுடைய தனித்தன்மைகளுக்குத் தக அந்தக் கொள்கையை மிகத் திறமையாக முன்வைக்கும் விளக்குநர்களை, படித்த சுதேசிப் பிரிவினரிடையே பார்க்கிறேன்.’

தாதாபாய் நவுரோஜியின் கருத்து இது. ‘அவர்கள் (இந்தியாவில் உள்ள படித்த வர்க்கங்கள்) பிரிட்டனுடன் இந்தியா மென்மேலும் உறுதியாகப் பிணைக்கப்படுவதற்கான பலம்வாய்ந்த இணைப்புக் கண்ணியாக இருக்கிறார்கள்.’ காலனியாட்சி படித்த வர்க்கங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது என்று வேறோரிடத்தில் அவர் எழுதுகிறார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இந்தியாவுக்கு ஆசிர்வாதத்தையும் இங்கிலாந்துக்கு பெரும் புகழையும் தரும் என்றே நான் நம்புகிறேன். புவிமீது மிகச் சிறந்ததும் மிகுந்த மனிதத்தன்மை உள்ளதுமான தேசத்துக்குத் தகுதியான விளைவுதான் இது. ’

இந்திய நடுத்தர வர்க்கத்தைக் குறித்து ஆய்வு செய்துள்ள பி.பி. மிஸ்ராவின் வார்த்தைகள் இவை. அவரைப் பொருத்தவரை மேல் நடுத்தரவர்க்க அறிவாளிகள் ‘இந்தியாவின் உள்நாட்டுச் சமூகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான அணைப்பாக அமைந்தார்கள். சார்லஸ் கிராண்ட், மெக்காலே, சர். சார்லஸ் உட் போன்றவர்களின் சமூக, அரசியல் கோட்பாடுகளின் பயன்பாட்டினால் உருவான ஆதாரகோல்களாக விளங்கினார்கள் .’

0

இந்திய தேசியவாதம் : ஓர் அறிமுகம்

நவீன இந்திய வரலாறு / அத்தியாயம் 6

RBதேசியவாதம் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ள எரிக் ஹாப்ஸ்பாம், இது ஒரு நவீன கருத்தாக்கம் என்றும் ஐரோப்பாவே அதன் பிறப்பிடம் என்றும் குறிப்பிடுகிறார். 18ம் நூற்றாண்டு முடிவில் குறிப்பாக, 1789 மற்றும் 1848 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் இந்தக் கருத்தாக்கம் உதயமானது என்கிறார் ஹாப்ஸ்பாம். அறிவொளி தத்துவங்களால் உந்தப்பட்டு 1789ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி அரசியல் மற்றும் சிந்தாந்தத் தளங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஜனநாயகம், தேசியவாதம், லிபரலிசம் ஆகிய சிந்தனைகள் அரும்பி, பரவவும் தொடங்கின. மற்றொரு பக்கம் தொழில்புரட்சியின் விளைவாக நவீன தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை வளர்ச்சிபெற்றன. இரட்டைப் புரட்சி என்று இதனை அழைக்கிறார் ஹாப்ஸ்பாம்.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ஐரோப்பாவின் ஆதார சக்தியாக தேசியவாதம் மாறிப்போனது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் தங்களுக்கிடையில் உள்ள கலாசார, மொழி ஒற்றுமையை அங்கீகரித்து ஒரே தேசமாக அணிதிரளத் தொடங்கினர். தேசிய அடையாளத்தின் முக்கியத்துவத்தை ஐரோப்பா உணரத் தொடங்கியது. சொந்த நாட்டின்மீதான பற்று மக்களை ஒன்றிணைத்தது நல்ல அம்சம்தான். ஆனால் இதே தேசியவாதம் காலனியாதிக்கத்தையும் ஐரோப்பாவையும் தோற்றுவித்தது. இதற்கும் நாட்டுப்பற்றே ஆதாரமான சக்தியாகஇருந்தது.

ஐரோப்பிய தேசியவாதத்துக்கும் இந்திய தேசியவாதத்துக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன என்கிறார் பிபன் சந்திரா. நிலப்பிரபுத்துவம் உடைந்து முதலாளித்துவம் தோன்றும்போது ஐரோப்பாவில் தேசங்கள் உருவாயின. அல்லது, நவீன தொழில்மயமாக்கலோடு இணைந்து உருவாயின. அந்த வகையில் ஐரோப்பிய தேசியவாதம் என்பது ஒரு பூர்ஷ்வா கருத்தியலாக இருந்தது. பல சமயங்களில் முடியாட்சியின் ஆதரவும் அதற்குக் கிடைத்தது. ஐரோப்பிய தேசியவாதம் இனம் சார்ந்ததாக இருந்தது. மொழி, கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் ஒன்றுதிரண்டனர். அல்லது, 19ம் நூற்றாண்டில் நடந்ததைப்போல் பாசிசம், நாசிசம் என்னும் தேசவெறி கொள்கையாக உரு திரியலாம். ஜெர்மனியும் ஜப்பானும் இத்தாலியும் தேசியவாதத்தின் கோர வடிவங்களை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவிலும் பிற காலனிகளிலும் (அரை காலனிகளிலும்) தேசியவாதம் காலனியாதிக்க எதிர்ப்பாக வெளிப்பட்டது. சீனாவில் நடந்ததும் இதுதான். ஜப்பானில் முதலில் காலனி எதிர்ப்பாகத் தொடங்கி பிறகு ஜிங்கோயிசமாக மாறிப்போனது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும்இடையிலான ஒரு வேறுபாட்டை பிபன் சந்திரா சுட்டிக்காட்டுகிறார். இந்திய மக்கள் ஒரு தேசமாகத் திரண்டபோது இந்திய தேசம் என்று அந்த வரலாற்று நிகழ்வை அழைத்தனர். சீனர்கள் தேசம் என்னும் பதத்தைப் பயன்படுத்தவில்லை; தங்கள் தேச உணர்வை சீன மக்கள் என்னும் பதத்தில் வெளிப்படுத்தினார்கள். இந்தியாவுக்கு இந்த உணர்வு ஏற்பட்டது தேசியவாதம் 19ம் நூற்றாண்டின் விளைவு என்பதால் அந்தக் காலகட்டத்துப் பெயரான தேசியம் என்பதை அது இணைத்துக்கொண்டது.

இந்திய தேசியம் பற்றி நிலவிவரும் இரண்டு சிந்தனைப் போக்குகளை பிபன் சந்திரா சுட்டிக்காட்டி இரண்டையும் மறுதலிக்கிறார். முதல் பிரிவினர் இந்தியா என்றொரு தேசம் 19ம் நூற்றாண்டில் உருவாகவில்லை என்றும் இனி அது சாத்தியமும் இல்லை என்றும் வாதிட்டனர். இவர்களைப் பொருத்தவரை படித்த, மேல்தட்ட வர்க்கத்தினரின் நலன்களே இந்திய தேசியமாக முன்மொழியப்பட்டது. பிரிட்டிஷ் வர்த்தக நலன்களுக்கு எதிராகத் தங்கள் நலன்களை முன்னிறுத்தி இவர்கள் மேற்கொண்ட போராட்டமே தேசியவாதப் போராட்டமாக அறியப்படுகிறது. இரண்டாவது பிரிவினர் இந்திய தேசியம் என்பது 19ம் நூற்றாண்டு சிந்தனை அல்ல; இந்திய நாகரிகம் எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமையானது இந்திய தேசியமும் என்று நிறுவ முயல்கின்றனர்.

இந்திய தேசியம் என்பது ஐரோப்பிய தேசியம் அல்ல. அது மேல்தட்டுப் பிரிவனரின் முழக்கமும் அல்ல. வேத காலத்திலேயே தோன்றிவிட்ட ஓர் உணர்வும் அல்ல. ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே ரத்த உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தேசியம் உருவாகவில்லை. நவீன தொழில்மயமாக்கல், முதலாளித்துவத்தின் தோற்றம் ஆகியவற்றோடு இந்திய தேசியத்தின் தோற்றத்தைத் தொடர்புபடுத்தமுடியாது. இந்திய தேசம், இந்திய தேசியவாதம் ஆகியவை காலனியாதிக்கத்தின் தாக்கத்தால் நேரடியாக எழுச்சிபெற்றன. சுதந்தரத்துக்காக நடத்தப்பட்ட காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து தேசியவாதம் கிளர்ந்தெழுந்தது.

இந்திய தேசம், தேசியவாதம் இரண்டுமே வரலாற்றின் விளைவுகள் என்கிறார் பிபன் சந்திரா. இந்திய மக்களின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் சிந்தாந்த வளர்ச்சியை ஆராய்வதன்மூலம் இந்திய தேசியத்தின் பரிணாம வளர்ச்சியை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். 19ம் நூற்றாண்டு தொடங்கி இந்தியாவில் அகநிலையிலும் புறநிலையிலும் தேசக் கட்டுமானம் தொடங்கிவிட்டது. பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார சக்திகள் ஒன்றிணைந்து, ஒன்றுடன் ஒன்று வினை புரிந்து இந்திய மக்களிடையே ஒற்றுமை உணர்வை உண்டாக்கியது. தங்களுடைய நலன்கள் ஒன்றுபட்டிருந்ததையும் காலனிய ஆக்கிரமிப்பை எதிர்க்கவேண்டி அனைவரும் ஒன்றிணையவேண்டிருந்ததையும் இந்தியர்கள் உணர்ந்திருந்தனர் என்கிறார் பிபன் சந்திரா. இந்திய தேசியவாதம் அல்ல, காலனியாதிக்கமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தியது. காலனியாதிக்கமே அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. காலனியாதிக்கத்துக்கும் இந்தியர்களின் நலன்களுக்கும் இடையில் தீர்க்கமுடியாத முரண்பாடு ஏற்பட்டபோது அந்த எதிர்ப்புணர்வு தேசியவாதமாக மாறியது.

இந்திய மக்கள் காலனியாதிக்கத்துக்கு எதிராகத் திரண்டது உண்மை என்றால் அவர்களுடைய தேசியவாதமும் உண்மைதான் என்கிறார் பிபன் சந்திரா. காலனியாதிக்கத்துடனான முரண்பாடு சாதி, வர்க்கம், பிரதேசம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்துசென்ற காரணத்தால் தேசிய விடுதலைப் போராட்டம்இந்தியா எங்கும் பரவிப் படர்ந்தது. அனைவருக்கும் ஒரு பொது எதிரி இருந்ததால் எதிர்ப்பு ஒருமுகப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு பொதுவானது என்னும் ஒரு காரணமே போதும்; அதனை எதிர்க்கவேண்டும் என்னும் விருப்பம் பிறந்துவிடும் என்று நேருவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாதத்தை அழுத்தமாக நிறுவ, பிபன் சந்திரா ஒரு கற்பனை ஒப்பீட்டை நிகழ்த்துகிறார். ஒருவேளை இந்தியா முழுமையாக ஒரே காலனியாக பிரிட்டனால் ஆளப்படாமல் வெவ்வேறு காலனிய சக்திகளால் தனித்தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தனித்தனியே அல்லவா எதிர்ப்புச் சக்திகள் பிரதேச வாரியாகத் தோன்றியிருக்கும்? விடுதலைப் போராட்ட உணர்வும் தேசியவாத உணர்வும் சிதறடிக்கப்பட்டிருக்கும் அல்லவா? பொது எதிரி இல்லாததால் பொது எதிர்ப்புணர்வும் இல்லாமல் போகியிருக்கும் அல்லவா? இந்தியா என்றொரு தேசம் உருவாகாமல் போகியிருக்கவே வாய்ப்புகள் அதிகம், இல்லையா?
லத்தின் அமெரிக்காவை உதாரணத்துக்குக் கொண்டு வருகிறார் பிபன் சந்திரா.

ஸ்பெயின் லத்தின் அமெரிக்காவைக் கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. ஆனால் மேலே குறிப்பிட்டதைப் போல் தனித்தனி காலனிகளாக உடைத்து லத்தின் அமெரிக்காவை ஆட்சி செய்தது. அதனால் ஒரே மொழி பேசும் மக்கள் இருந்தும், ஒரே மதத்தை அவர்கள் கடைபிடித்தபோதும், ஒரே கலாசாரத்தைப் பின்பற்றியபோதும் லத்தின் அமெரிக்கா என்றொரு தேசமோ லத்தின் அமெரிக்க தேசியவாதம் என்றொரு உணர்வோ அங்கே உருவாகவில்லை. எதிர்ப்புகள் சிதறிப்போனது. தனித்தனியே தேசியப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தனித்தனியே விடுதலைக்கான பாதைகள் ஆராயப்பட்டன. மக்கள் தனித்தனியே தங்களுக்குள் திரண்டனர். இந்தியாவில் அப்படி நேராமல் போனதற்குக் காரணம் ஒரே காலனியாக அதனை பிரிட்டன் பாவித்ததுதான்.

இந்தியாவைப்போலவே இந்தோனேஷியாவும் நீண்டகாலம் ஒரே அந்நிய ஆதிக்கத்தின் கீழ் (டச்சு) இருந்ததால் அங்கும் தேசிய விடுதலைப் போராட்டம் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டமாக மலர்ந்து மக்களை ஒன்றுதிரட்டியது. இந்தோனேஷியா என்னும் தேசம் ஒன்றும் உருவானது. ஆனால் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து இந்தோ சீனா ஒரே தேசியமாகத் திரளவில்லை. வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்னும் மூன்று பிரதேசங்கள் தனித்தனியே தங்கள் காலனிய எதிர்ப்பை முன்வைத்துப் போராடி மூன்று நாடுகளைத் தோற்றுவித்தன. விடுதலைக்குப் பிறகு இந்த மூன்றும் ஒன்றையொன்று எதிர்க்கத் தொடங்கியதும் வரலாறே. சோவியத் யூனியனில் ஜார் ஆட்சிக்கு எதிரான போராட்டம் எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுபோல் இருக்கவில்லை. ஜார் ரஷ்யா பல்வேறு தேசியங்களின் சிறைச்சாலையாக இருந்து என்று லெனின் சுட்டிக்காட்டியிருந்ததை அலசும் பிபன் சந்திரா, சோவியத் யூனியன் பின்னாள்களில் சிதறிப்போனதற்கு ஒன்றுபட்ட தேசிய உணர்வு ஏற்படாததே ஒரு காரணம் என்கிறார். தேசிய உணர்வு, போராட்டத்தைத் தூண்டிவிடுகிறது. போராட்டம், மக்களிடையே புரிதல் உணர்வை உண்டாக்குகிறது. இந்த இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை; இந்த இரண்டுக்கும் இடையில் இயங்கியல் உறவு உள்ளது என்கிறார் பிபன் சந்திரா.

பிரிட்டிஷ் ஆட்சி இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஒரே அரசியல் மற்றும் நிர்வாகமுறையின்கீழ் கொண்டுவந்தது. ஆட்சிசெய்வதற்கு வசதியாக இருந்த இந்த ஏற்பாடு வெவ்வேறு பிரதேசங்களில் வசித்த மக்களை ஒரே பக்கத்தில் திரட்டவும் உதவியது. கிராமப்புறங்கள், மூலை முடுக்குகள், நகரங்கள் எதுவும் இதிலிருந்து தப்பவில்லை. நவீன போக்குவரத்து வசதியும் புதிய சாலைகளும் மோட்டார் வாகன வசதிகளும் புவியியல் ரீதியாக சிதறிக்கிடந்த மக்களை ஒன்றுபடுத்தியது. நவீன தொழிற்சாலைகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்தின. பெரும்பாலான இந்த நடுத்தர ஆலைகள் பிரதேச எல்லைகளைக் கடந்து அனைத்திந்திய அளவில் இயங்கின. புதிய சமூக வர்க்கங்கள் உருவாயின. முதலாளிகள், தொழிலாளர்கள் இருவருமே அனைத்திந்திய தன்மை கொண்டிருந்தனர் என்கிறார் பிபன் சந்திரா. அனைத்திந்திய தொழிற்சங்கம் (ஏஐடியுசி), ஃபெட்ரேஷன் ஆஃப் இந்தியன் சாம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (எஃப்ஐசிசிஐ) இரண்டுமே 1920களில் நிறுவப்பட்டன. இந்த இரண்டுமே இந்தியா தழுவிய அளவில் இயங்கியதோடு தேசியவாதத்தன்மையும் கொண்டிருந்தன. மதம், பிரதேசம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்தும் செயல்பட்டன. இன்னும் சொல்லப்போனால் இந்த இரண்டும் இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிபிம்பகளாக இருந்தன என்கிறார் பிபன் சந்திரா.

இந்திய தேசிய உணர்வை ஊட்டியதில் அறிவுஜீவிகளின் பங்களிப்பையும் பிபன் சந்திரா பதிவு செய்துள்ளார். தொடக்கத்தில் ஆடம் ஸ்மித், ஜெரமி பெந்தம், ஜான் ஸ்டூவர்ட் மில் போல் காலனியாதிக்கம் வளர்ச்சியையே கொண்டுவரும் என்று படித்த, இந்திய அறிவுஜீவிகள் முதலில் நம்பினாலும் பின்னாள்களில் தங்கள் எண்ணத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர் என்கிறார் இவர். சமூக யதார்த்தத்தைக் கண்டதும் 1870களில் இந்த மனமாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அறிவுஜீவிகள் காலனியாதிக்கக் கொள்கைகளை மக்களிடையே அம்பலப்படுத்தி விமரிசிக்கத் தொடங்கினர். அப்போது இவர்கள் தேசியவாத அறிவுஜீவிகளாக மாற்றம் கண்டனர். மக்களின் சிந்தனைகளை இவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். தேசத்தின் பிரதிநிதிகளாக அறிவுஜீவிகள் தங்களை உணர்ந்த தருணமும் இதுவே. அதாவது, தேசம் என்றொன்று உருவாவதற்கு முன்பே அதனை இவர்கள் உருவகப்படுத்திக்கொண்டு அதன் அடிப்படையில் சிந்திக்கவும் மக்களை ஒன்றுதிரட்டவும் தொடங்கினர்.

எங்கள் மொழியில் நேஷன் என்னும் ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒரு பதமே இல்லை என்று 1916ம் ஆண்டு பிபின் சந்திர பால் எழுதினார். இந்தி மொழியில் உள்ள தேஸ், பர்தேஸ் ஆகிய வார்த்தைகள்கூட அருகில் உள்ள பிரதேசங்களையே குறித்தன. தனியொரு தேசத்தை அல்ல. 1866ம் ஆண்டு நேடிவ் ஒப்பீனியன் என்னும் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது. தற்போதுள்ள நிலையில் மராத்தியர்கள், குஜராத்திகள், பெங்காலிகள் என்று பலரும் தங்களைத் தனித்தனி பிரிவினராகவே கருதுகின்றனர். ஒரு முழு தேசத்தின் பகுதிகளாக அல்ல. 19ம் நூற்றாண்டின் இறுதியில்கூட ஒரியாவில் இருந்தவர்கள் வங்காளர்களையும் பிகாரிகளையும் அயல்நாட்டவர்களாவே கண்டனர். 1926ம் ஆண்டு நேரு இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘இந்தியாவின் இலக்கியம், வரலாறு, மத ரீதியலான பாரம்பரியம் அனைத்தும் தொடக்க காலத்தில் இருந்தே இந்திய ஒற்றுமையைப் போதித்து வந்துள்ளன. ஆனால் அரசியல் ரீதியில் தேசம் என்றொரு கருத்தாக்கத்தை இவை உருவாக்கவில்லை.மேற்கிலேயே இது ஒரு சமீபத்திய வரவுதான்.’

இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாடுகளை 1896ம் ஆண்டு விவேகானந்தர் இவ்வாறு மதிப்பிடுகிறார். ‘இது மிக முக்கியமான இயக்கம்; இதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறேன். வெவ்வேறான இனங்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில் இருந்து ஒரு தேசம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெவ்வேறு இனங்கள் ஐரேப்பாவில் உள்ள வெவ்வேறு விதமான மக்களையே நினைவுபடுத்துகிறார்கள்.’

1902ல் பிபின் சந்திர பால் இந்தியாவை புதிய இந்தியா என்றும் இந்தியர்களை புதிய மக்கள் என்றும் தொடர்ச்சியாக அழைத்தார். புதிய இந்திய தேசத்தில் இந்துக்கள், முகம்மதியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், சமூகப் பரிணான வளர்ச்சியில் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஆதிவாசிகள் அனைவரும் முக்கிய உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அவர் கனவு கண்டார். இந்தியா என்பது வெறும் புவியியல் பரப்பை மட்டும் குறிக்கவில்லை; தனித்துவமான ஒரு தேசமாக அது உருவாகிக்கொண்டிருக்கிறது என்று1908ம் ஆண்டு லாலா லஜபதி ராய் எழுதினார். ஒரு தேசமாக உருவாக என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணவேண்டியது அவசியம் என்று 1909ம் ஆண்டு அரவிந்த கோஷ் எழுதினார்.

இந்த மேற்கோள்கள் தெளிவாக உணர்த்தும் உண்மை இதுதான். பொதுவான வரலாறு, கலாசாரம், புவியியல் ஆகியவை இருந்தபோதும், இந்தியா என்றொரு தேசம் உருவாகியிருக்கவில்லை என்பதை இந்திய தேசியவாதிகள் உணர்ந்திருந்தனர். ஆனால் அந்தத் தேசிய கருத்தாக்கம் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளைப்போல் அவர்கள் நம்பவில்லை. வரலாற்றுச் சக்திகள் ஒன்றிணைந்துகொண்டிருக்கின்றன; நம் கண்முன்னால் இந்தியா ஒரு தேசமாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் நம்பினர். பிளவுகள், வேறுபாடுகள், குறைபாடுகள், சமமற்ற நிலை, குழப்பங்கள், இக்கட்டுகள் அனைத்தையும்மீறி ஒன்றுபட்ட ஒரு தேசம் பிறப்பெடுக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

0

முத்தமிழ்: சொல்லேர் உழவர்

சங்க காலம் / தேடல் – 21

3303மானுட மனத்தில் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு, முயற்சிக்கூறு என்ற மூக்கூறுகளும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. தமிழ்மொழி சங்க காலத்தில் மூன்று வகைகளில் நிலைபெற்றிருந்தது. ஒன்று இயல், மற்றொன்று இசை, பிறிதொன்று நாடகம். தமிழ் மொழி, “இயல்“ வழியாக மானுடத்தின் அறிவுக்கூறையும் “இசை“ வழியாக உணர்ச்சிக் கூறையும் இயலும் இசையும் இணைந்த “நாடக“த்தின் வழியாக முயற்சிக்கூறையும் வளர்த்தது. இயலையும் நாடகத்தினையும் இணைக்கும் கயிறுதான் இசை. முத்தமிழின் மையமும் அதுதான்.

கூத்தும் நாடகமும் ஒரு பொருள் குறித்த சொற்கள்தான். அக்காலத்தில் “கூத்து“ என்று அறிய்பட்டது பின்னாளில் நாடகமாக நிலைபெற்றது. முத்தமிழைப் “பரிபாடல்“ என்ற நூல் “தமிழ்மும்மை“ என்றது. “ஒரு விஷயத்தைச் சொல்லால் விளக்குவது இயல், பாட்டால் விளக்குவது இசை, நடிப்பால் விளக்குவது நாடகம்“ என்று குறிப்பிட்டுள்ளார் ஆறு. அழகப்பன். “நடனமும் நாடகமும் கூத்துமெல்லாம் முதன் முதல் கண்டறிந்து நூல்கள் எழுதினோர் பண்டைத் தமிழாசிரியர்களே. தொன்று தொட்டு இயலும் இசையும் நாடகமும் தமிழுக்கே உரியவாதலில் தெரிந்து சான்றோர் எல்லாம் தமிழை “முத்தமிழ்“ என வழங்கி வருகின்றனர்“ என்றார் மறைமலை அடிகள். பிற்கால ஔவையின் செய்யுளில் உள்ள “சங்கத் தமிழ் மூன்றும் தா“ என்ற அடியிலிருந்து, “இயல், இசை, நாடகம் (கூத்து) ஆகிய மூன்றும் இணைந்ததே சங்கத் தமிழ்“ என்பது தெளிவாகின்றது.

புலவர் மரபு

இயற்றமிழை வளர்த்து, வாழச்செய்த அக்காலச் செந்நாப் புலவர்களைச் “சொல்லேர் உழவர்“ என்று இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. “இளவேனிற் காலத்தில் சான்றோர் நாவிற்பிறந்த கவிதைகளின் புதுமையை மதுரை மக்கள் கொண்டாடுவர். புலவர்கள் தம் செவிகளை வயலாகவும் தமக்கு முற்பட்ட சான்றோர் கூறிய செய்யுட்களைத் தம் சொல்லை வளர்க்கும் நீராகவும் கொண்டு தமது அறிவுடைய நாவாகிய கலப்பையால் உழுது உண்டனர். இத்தகு புலவர் பெருமக்கள் கவிகளைப் பாண்டியன் கேட்டு மகிழ்வான்“ என்ற செய்தியைக் கலித்தொகையின் நெய்தற்கலி 35ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது. விவசாயி ஏரினைக் கொண்டு நிலத்தினை உழுது நல்ல பயிரினை விளைவிப்பதைப் போலப் புலவர்கள் சொற்கள் என்ற ஏரினைக் கொண்டு தமிழ்மொழியினை உழுது நல்ல செய்யுட்களைப் புனைந்துள்ளனர். ஆதலால், அப் புலவர்களைச் “சொல்லேர் உழவர்“ என்று “தமிழ்விடுதூது“ என்ற சிற்றிலக்கியம் குறிப்பிட்டுள்ளது.

இப் புலவர்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகையான பாக்களைக் கொண்டு இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளனர். சங்க காலப் புலவர்களாக 473 பேரைக் குறிப்பிடுவர். 102 பாடல்களை இயற்றிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. 473பேரில் 41பேர் பெண் புலவர்கள். மொத்தச் சங்க இலக்கியப் பாடல்கள் 2381. இவற்றுள் 235 பாடல்கள் கபிலர் இயற்றியவை. சங்க இலக்கியத்தில் மூன்று அடிகளிலும் ஒரு பாட்டு உண்டு, 782 அடிகளிலும் ஒரு பாட்டு உண்டு. பாட்டும் தொகையும்தான் சங்க இலக்கியம் என்பர். பாட்டு என்பது பத்துப்பாட்டினைக் குறிக்கும். தொகை என்பது எட்டுத்தொகையினைக் குறிக்கும்.

எட்டுத்தொகை

தனிப்பாடல்களின் தொகுப்புதான் எட்டுத்தொகை. அதாவது எட்டுத்தொகுப்புகள். ஒவ்வொரு தொகுப்பும் பாடல்களின் அடிவரையறை மற்றும் பொருள்மரபு (பாடல் அடிகளின் எண்ணிக்கை, அகப்பொருள், புறப்பொருள்) ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பெற்றுள்ளது. இத்தொகுப்பு நூல்களை “எண்பெருந்தொகை“ என்பர். எட்டுத்தொகையில் உள்ள மொத்தப் பாடல்களில் மிகக் குறைந்த அடி அளவு மூன்றாகவும் மிகுதியான அடி அளவு 140 ஆகவும் உள்ளது.

நற்றிணை

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் ஒன்பது அடிகள் முதல் பன்னிரண்டு அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் நற்றிணை. விதிவிலக்காக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 110 மற்றும் 379 ஆகிய பாடல்கள் உள்ளன. “நல்ல திணை“ என்ற பொருளில் இத்தொகுப்பு நூலின் தலைப்பு வைக்கப்பெற்றுள்ளது. இதிலுள்ள பாடல்களை 187 புலவர்கள் இயற்றியுள்ளனர். 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. நற்றிணைப் பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இந்நூலுக்கு “நற்றிணை நானூறு“ என்ற பெயரும் உண்டு.

காதலன் (தலைவன்) வரவினைப் பல்லி ஒலி எழுப்பிக் கூறுவதாகக் கருதி, நம்பிக்கையுடன் காத்திருக்கும் காதலி (தலைவி), காதலர் வரும் வரை சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கத்தினை இத்தொகுப்பு நூலில் காணமுடிகின்றது.

சோழ மன்னர் அழிசிக்குரிய பெருங்காட்டில் விளைந்த நெல்லிக்கனிகளின் புளிப்புச் சுவையை நினைத்து வாவல் (வெளவால்) தன் கனவிலும் ஏங்கும் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது.
இத்தொகைநூலில் அதியமான் அஞ்சி, அழிசி, ஆய் அண்டிரன், உதியன், ஓரி, காரி, குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர்.

குறுந்தொகை

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் குறுந்தொகை. இதிலுள்ள பாடல்களை 203 புலவர்கள் இயற்றியுள்ளனர். 10 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. குறுந்தொகைப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். விதிவிலக்காக இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள 307 மற்றும் 391 ஆகிய பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குக் “குறுந்தொகை நானூறு“ என்ற பெயரும் உண்டு. இத்தொகைநூலில் ஆகுதை, அதியன், ஆய், எவ்வி, ஓரி, கட்டி, குட்டுவன், நள்ளி, நன்னன், பாரி, மலையன், வடுகர் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர். காஞ்சியூர், உறந்தை, தொண்டி, குறும்பூர், மாந்தை, சிறுநல்லூர், குன்றூர் முதலிய பழந்தமிழக ஊர்களும் சுட்டப்பெற்றுள்ளன.
குழந்தைகள் சிறுதேர் இழுத்தும் பெண்கள் குரவைக்கூத்து ஆடியும் மகிழ்ந்துள்ளனர். நல்வினை, தீவினை, வீடுபேறு, சுவர்க்கம், நரகம், கூற்றுவன் (எமன்) போன்ற தொன்மக் கருத்துகளையும் வீட்டின் கூரையின் மீதமர்ந்து காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கைசார்ந்த கருத்துகளையும் இத்தொகுப்பு நூலினுள் காணமுடிகின்றது.
பண்டமாற்றாக இடையவர் பாலைக்கொடுத்துத் தானியத்தைப் பெற்றதனையும் உமணர்கள் உப்பினைக் கொடுத்து நெல்லினைப் பெற்றதனையும் இத்தொகுப்பு நூலின் வழியாக அறியமுடிகின்றது.

நடனப் பெண்ணை “ஆடுகள மகள்“ என்றும் நடனமாடும் ஆடவரை “ஆடுகள மகன்“ என்று அக்காலத்தில் அழைத்துள்ளனர். அக்காலத்தில் பறை, பண்லம், பதலை, முழவு, தட்டப்பறை, குளிர் முரசு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தியுள்ளனர். இவற்றை இத்தொகுப்பு நூலின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

தலைவன் மீது தலைவிகொண்ட காதல் நிலத்தைவிடப் பெரியதாகவும் வானத்தைவிட உயர்ந்ததாகவும் கடலைவிட ஆழமானதாகவும் உள்ளது என்று நீள, அகல, உயர (ஆழ) கணித அளவீடுகளால் புலவர் குறிப்பிட்டுள்ளார். இது, அம் மூன்றின் (நிலம், வானம், கடல்) தன்மை சார்ந்தும் உயர்வானதாகக் குறிக்கப்பெற்றுள்ளது எனலாம்.

தமிழர்கள் அக்காலத்திலேயே “சேமச்செப்பு“ என்ற மட்பாண்டத்தை இக்கால ஃபிளாஸ்க் (தெர்மாசு குடுவை) போலப் பயன்படுத்தியுள்ளனர். “முன்பனிக் காலத்திற்கு உகந்த சூட்டையுடைய நீரைச் சேமச்செப்பிலிருந்து பருகலாம்“ என்ற செய்தி குறுந்தொகையின் 277ஆவது பாடலில் இடம்பெற்றுள்ளது. வெப்பத் தண்ணீரை நெடுநேரம்வரை வெப்பமாகவே வைத்திருக்கும் கலத்தினைத் தமிழர்கள் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது இப்பாடலின் வழியாக உறுதிப்படுகின்றது.

ஐங்குறுநூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் மூன்று அடிகள் முதல் ஐந்து அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 500 பாடல்களின் தொகுப்பு நூல் ஐங்குறுநூறு. இதிலுள்ள பாடல்களை ஓரம்போகி, அம்மூவன், கபிலர், ஓதலாந்தை, பேயன் ஆகிய ஐந்து புலவர்கள் இயற்றியுள்ளனர். இப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் கூடலூர்கிழார் ஆவார். இப்பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவார். திணைக்கு நூறு பாடல்கள் வீதம் அன்பின் ஐந்திணைகளுக்கு ஐநூறு பாடல்கள் இயற்றப்பெற்றுள்ளன. ஒவ்வொரு நூறு பாடலும் பத்துப் பிரிவுகளாகவும் பிரிவுக்குப் பத்துப் பாடல்கள் வீதமும் தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தொகுப்புகள் ஒவ்வொன்றும் “பத்து“ என்ற சொல்லினைப் பின்னொட்டாகக்கொண்ட தலைப்பினைப் பெற்றுள்ளன. நெய்தல் திணையில் அம்மூவனார் இயற்றிய “தொண்டிப்பத்து“ என்ற தொகுப்பு அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. இத்தொகுப்பு நூலில் சோழன் கடுமான் கிள்ளி, குட்டுவன், பாண்டியன், சேரன் ஆதன்அவினி, விராஅன், மத்தி, கொற்கைக்கோமான் ஆகியோர் சுட்டப்பெற்றுள்ளனர். ஆமூர், தேனூர், இருப்பை, கொற்கை, மாந்தை, கோவலூர், கழார் (காவிரி), தொண்டி ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இத்தொகுப்பு நூலில் “அம்மை“, “அழகு“ ஆகிய வனப்புகள் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

இந்திரவிழா, தைந்நீராடல் போன்ற பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இறைவனை வேண்டி நோன்பு நோற்றுப் பிள்ளைபெற்ற தம்பதியரை இத் தொகுப்பு நூலில் காணமுடிகின்றது.

பதிற்றுப்பத்து

பாடாண்திணையில் (புறத்திணை) ஆசிரியப்பாவில் எட்டு அடிகள் முதல் 57 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 100 பாடல்களின் தொகுப்பு நூல் பதிற்றுப்பத்து. இது, பத்துப்பத்துப் பாடல்களின் தொகுப்பாகப் பத்துத் தொகுப்புகள் அடங்கிய 100 பாடல்களின் தொகுப்பு நூல். முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கப்பெறவில்லை (20 பாடல்கள்). நான்காம் பத்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பத்துப்பாடல்களின் இறுதியிலும் பதிகம் காணப்படுகின்றது. அப்பதிகத்தில் பாடினோர் பெயர், செய்யுட்களின் பெயர், புலவர் பெற்ற பரிசில், அரசர் ஆண்ட கால அளவு, வேந்தனின் பெற்றோர், வேந்தனின் சிறப்புகள் ஆகியன குறிப்பிடப்பெற்றுள்ளன. பாடலின் சிறப்பான தொடரே அப்பாடலின் தலைப்பாக வைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் முதலிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 18 துறைகள் இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன. பயன்பாட்டில் இல்லாத சொற்கள் பல இத்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளமையால் இத்தொகுப்புநூலினை “இரும்புக்கடலை“ என்பர்.

புலவர் குமட்டூர்க்கண்ணனார் 58ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றிப் பாடிய பாடல் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் உம்பற்காட்டில் 500 ஊர்களை பிரமதேயமாகவும் தென்னாட்டு வருவாயுள் பாதியினைச் சில ஆண்டுகளுக்கும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.
புலவர் பாலைக்கௌதமனார் 25ஆண்டுகள் ஆட்சிபுரிந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பற்றிப் பாடிய பாடல் மூன்றாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் பெற்ற பரிசில் குறிப்பிடத்தக்கது. அவர் விரும்பிய வண்ணம் பத்துப் பெரு வேள்விகள் செய்து அவரும் அவரின் மனைவியும் விண்ணுலகம் அடைய வேந்தர் உதவியுள்ளார்.
புலவர் காப்பியாற்றுக்காப்பியனார் 25ஆண்டுகள் ஆட்சிபுரிந்த களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பற்றிப் பாடிய பாடல் நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 40,00,000 பொன்னும் ஆளுவதில் பாதியையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் பரணர் 55ஆண்டுகள் ஆட்சிபுரிந்த கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பற்றிப் பாடிய பாடல் ஐந்தாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் உம்பற்காட்டு வருவாயையும் வேந்தரின் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் காக்கைப்பாடினியார் 88ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிப் பாடிய பாடல் ஆறாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் ஒன்பது துலாம் (காய்ப்) பொன்னும் 1,00,000 பொற்காசுகளும் “அவைக்களப் புலவர்“ என்ற தகுதியையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

புலவர் கபிலர் 22ஆண்டுகள் ஆட்சிபுரிந்த செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிப் பாடியபாடல் ஏழாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 1,00,000 (காணம்) பொற்காசுகளும் “நன்றா“ என்ற குன்றின் மீதேறி அவரின் கண்களுக்கு எட்டிய எல்லைவரையிலுள்ள நிலங்களையும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.
புலவர் அரிசில் கிழார் 17ஆண்டுகள் ஆட்சிபுரிந்த தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பாடிய பாடல் எட்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 9,00,000 (காணம்) பொன்னும் அரசுக் கட்டிலும் பெற்றார்.
புலவர் பெருங்குன்றூர்க் கிழார் 16ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்பதாம் பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலைப் பாடியமைக்காக அவர் 32,000 பொற்காசுகளும் பல நூறாயிரம் அருங்கலன்களும் ஊரும் மனையும் ஏரும் பிறவும் பரிசிலாகப் பெற்றுள்ளார்.

செல்வக்கடுங்கோ வாழியாதன் வேள்விகள் பல செய்ய புரோசுகளுக்கு (புரோகிதர்கள்) மிகுதியான பொருட்களை வழங்கியுள்ளார். வேள்வியில் ஆகுதியாக்குவதற்குச் சிறந்த நெல்லான ஓத்திரநெல் ஓகந்தூரில் மிகுதியாக விளைந்துள்ளது. ஆதலால், அந்த ஊரினை தேவதானமாக புரோசுகளுக்கு இவ் வேந்தர் வழங்கியுள்ளார். தன்னைப் “புரோசு மயக்கி“ என்று பெருமையாக அழைத்துக்கொண்டார்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் துணங்கைக் கூத்தாடுவோரோடு தானும் சேர்ந்து அக் கூத்தினை ஆடி மகிழ்ந்துள்ளார்.

யாழ் போன்று இனிய இசையைத் தரவல்ல “இன்னரம்“ என்ற கருவியைப் பற்றிய குறிப்பு இத்தொகுப்பு நூலினுள் உள்ளது. ஆம்பற்குழல், கொம்பு, வலம்புரிச்சங்கு போன்ற இசைக்கருவிகள் சிறப்பித்துக் கூறுப்பெற்றுள்ளன.

இத்தொகுப்பு நூலில் போரில் விழுப்புண்ணடைந்து வருந்தும் வீரர்களை விறலியர்கள் யாழிசைத்து ஆறுதல் படுத்திய செய்தியைக் காணமுடிகின்றது.

சகுனம் பார்த்தலை “நிமித்தம்“ என்பர். இதனை நல்நிமித்தம், தீநிமித்தம் என்று இருவகைப்படுத்துவர். “நிமித்தம்“ என்பதனை இத்தொகுப்பு நூல் “உன்னம்“ என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு வகை மரம் என்றும் அதன் நிலையைக் குறித்து நிமித்தம் கணிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

பேய்கள் தாம் விரும்பிய உயிர்களின் மீது மேவும் என்றும் உரிய பலியினை அவற்றுக்குத் தந்தால் அவை அவ் உயிரை விட்டு நீங்கும் என்று நம்பினர்.

பரிபாடல்

அகத்திணையும் புறத்திணையும் கலந்து, பரிபாட்டு என்ற பாவகையில் 32 அடிகள் முதல் 140 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 70 பாடல்களின் தொகுப்பு நூல் பரிபாடல். ஆனால், 22 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றைப் பாடியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 13. மதுரை மாநகரை ஒட்டி ஓடும் வைகையாற்றில் புதுவெள்ளம் வந்தபோது மக்கள் அடைந்த மகிழ்ச்சியும் அவர்களின் செயல்பாடுகளும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மதுரை, வையைஆறு, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், காளி ஆகியன சிறப்பிக்கப்பெற்றுள்ளன. பாலையாழ், நோதிறம், காந்தாரம் ஆகிய மூப்பண்களைக் கொண்டு பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

இந்நூலுள் மருத நிலத்திற்குரிய தெய்வமாக மதுரை மாதெய்வமும் நெய்தலுக்குரிய தெய்வமாக வைகையாகிய நீர்த்தெய்வமும் உள்ளீடாகக் குறிக்கப்பெற்றுள்ளன என்பர்.
சுழியத்தை (பூசியம்) “பாழ்“ என்றும் அரையைப் “பாகு“ என்றும் ஒன்பதைத் “தொண்டு“ என்றும் இந்நூல் குறிப்பிட்டுள்ளது.

சாக்தம் (காடுகாள்), கௌமாரம் (செவ்வேள்), வைணவம் ஆகிய மூன்று சமயங்கள் பற்றி இந்நூல் பகர்ந்துள்ளது.

புலவரின் கற்பனைத் திறத்திற்கு ஒரு பெருஞ்சான்று – “விரும்பத்தகுந்த ஈரமான அணிகளைக் கொண்ட உடலினது ஈரமானது தீரும்பொருட்டு, ஒருத்தி வண்டு மொய்க்கும் போதை கொண்ட கள்ளைத்தன் கையில் ஏந்தி நின்றாள். அவ்வேளையில் அவள் கண்கள் கரிய நெய்தல் மலரைப் போலத் தோன்றின. அவள் பெருமகிழ்ச்சியை உண்டாக்கும் போதை மிகக் கள்ளைக் குடித்தாள். குடித்ததும் அவளுடைய கருநிறக் கண்கள், பெரிய நறவம் பூவைப் போலச் செந்நிறத்தை அடைந்தன“. இக் கற்பனைசார்ந்த வருணனை பரிபாடலின் 60 முதல் 65 வரையிலான அடிகளில் உள்ளன.

பழந்தமிழகத்தில் இருந்த தைநீராடல் வழக்கம், காலப்போக்கில் மார்கழி நீராடலாக மாற்றம் பெற்றதோடு, பனிநீர் தோய்தலும் பாவையாடலுமாகத் திகழ்ந்த இளம் பெண்களின் விளையாட்டு, காலப்போக்கில் வழிபாடும் பாவைநோன்புமாக வளர்ந்துவிட்டது. பாகவதத்தில் கார்த்தியாயினி விரதம் நோற்று கண்ணனை அடையும் நெறி மார்கழி மாதத்தில் நிகழ்கின்றது. இக்குறிப்பு, பழந்தமிழகத்தின் பாவை நோன்புடன் உறவுடையது. பரிபாடலில், “அம்பா ஆடல்“ என்று கூறப்பெறுவதுதான் கேரளத்தில் திருவாதிரைத் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது.

கலித்தொகை

அகத்திணை சார்ந்து கலிப்பாவில் 11 அடிகள் முதல் 80 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 149 பாடல்களின் தொகுப்பு நூல் கலித்தொகை. இதிலுள்ள பாடல்களைத் திணைக்கு ஒரு புலவராக பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை), கபிலர் (குறிஞ்சி), மருதன் இளநாகனார் (மருதம்), சோழன் நல்லுருத்திரன் (முல்லை), நல்லந்துவனார் (நெய்தல்) ஆகிய ஐந்து புலவர்களும் ஐந்து திணைகள் சார்ந்த பாடல்களை இயற்றியுள்ளனர். இப்பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார். இத்தொகுப்பு நூலினை “நல்லந்துவனார் கலித்தொகை“ என்றும் குறிப்பிடுவர். இந்நூலுள் 641 உவமைகள் உள்ளன.
இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஓரங்க நாடக அமைப்பினைப் பெற்றுள்ளன. கைக்கிளையும் பெருந்திணையும் இந்நூலுள் காணப்படுகின்றன. குறிஞ்சிக்கலியில் ஒத்தாழிசைக்கலியும் கொச்சகக்கலியும் பெருமளிவில் இடம்பெற்றுள்ளன. முல்லைக்கலியில் ஏறுதழுவுதல், குரவையாடுதல் போன்றன பற்றிய செய்திகள் சுட்டப்பெற்றுள்ளன. நெய்தற்கலியில் தைநீராடுதல், மடலேறுதல் போன்றன பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. “பெண்கள் பிறந்தவீட்டிற்கு உரியவர்கள் அல்லர்“ என்ற சிந்தனையை இத்தொகுப்பு நூல் வலியுறுத்தியுள்ளது.

கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் அன்னாய் வாழிப் பத்து என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடலில் புலவர் கபிலர் ஓர் உளவியல் நிபுணர்போலச் செயல்பட்டுள்ளார். தலைவனால் தலைவிக்கு ஏற்பட்ட காதல்நோயினைத் தலைவியின் தாய் ஏதோ அணங்கு பற்றியதாகக் கருதி, அதனை நீக்க வெறியாடல் நிகழ்த்த ஏற்பாடுசெய்கின்றாள். அன்னையின் அச்செயலினைத் தடுத்த தலைவியின் தோழி, “அன்னையே! நான் சொல்வதைக் கேட்பாயாக. நின் மகள் அடைந்துள்ள இந்நோய் தீர்வதற்குரிய மற்றொரு முறையும் உள்ளது. அது யாதெனில்? நின் மகளை நமது வீட்டுப் புழக்கடையில் உள்ள, விலங்குகளைப் பலியிடுவதால் புலால் நாற்றம் தாங்கிய துறு கல்லின் மீது ஏற்றி நிறுத்தி, அவர் நாட்டில் உள்ள பூக்கள் பொருந்திய குன்றத்தை நோக்கி, நீலமணி போல் விளங்கும் இழையை அணிந்த இவள் நிற்கும் நிலைபெறின் இவள் உற்ற நோய் எளிதி்ல் தீரும். வெறியாடற் செயலினும் இச்செயல் சிறந்தது“ என்று கூறுகின்றாள். தலைவியின் மன அழுத்தத்தினைப் போக்கத் தலைவன் வாழும் இடத்தின் காட்சி ஒரு மருந்தாகப் பயன்படுவதனைக் கபிலர் உளவியல் நோக்குடன் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் எட்டு அறக்கருத்துகளை எடுத்துரைத்துள்ளது. அவை செல்வம் நிலையாமை, வறியவரது இளமை சிறக்காது, ஈகையற்றவரின் செல்வம் அவரை அண்டியோர்க்குப் பயன்படாது, பிறருக்குத் தீங்கு செய்வோர் தாமே ஒழிவர், இளமையும் காலமும் தாமே கழியும் தன்மையுடையன, அறவழியில் பொருளீட்டினால் அச்செல்வம் இவ் உலக வாழ்விற்கும் மறு உலக வாழ்விற்கும் பயன்படும், நிலையாமையை உணர்ந்தவர் ஈகைபுரிவர், மனித உடல் பெறுவதற்கு அரியது என்பனவாகும்.

கலித்தொகைப் பாடல்கள் யாப்பால் இயற்றமிழ், வழங்கொலியால் இசைத்தமிழ், பா அமைப்பால் நாடகத்தமிழ் என்று முத்தமிழையும் கலித்தொகையில் கண்ணுறமுடிகின்றது.

அகநானூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 400 பாடல்களின் தொகுப்பு நூல் அகநானூறு. இதிலுள்ள பாடல்களை 158 புலவர்கள் இயற்றியுள்ளனர். மூன்று பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. அகநானூற்றுப் பாடல்களைத் திரட்டித் தொகுத்தவர் உருத்திரன் சன்மனார் ஆவார். இப்பாடல்களைத் திரட்டித் தொகுக்கச் செய்த வேந்தர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆவார். இத்தொகுப்பு நூலுக்கு நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு, அகப்பாட்டு என்ற பெயர்களும் உண்டு. இத்தொகுப்பு நூலில் உள்ள பாடல்கள் களிற்றியானைநிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக்கோவை (301-400) என்ற மூப்பிரிவினை உடையன. பாலைத்திணைப் பாடல்கள் 1,3,5,7,9 என ஒற்றைப்படை எண்வரிசையிலும் குறிஞ்சித்திணைப் பாடல்கள் 2,8,12,18 என்ற எண்வரிசையிலும் முல்லைத்திணைப் பாடல்கள் 4,14,24,34 என்ற எண்வரிசையிலும் மருதத்திணைப் பாடல்கள் 6,16,26,36 என்ற எண்வரிசையிலும் நெய்தற்திணைப் பாடல்கள் 10,20,30,40 என்ற எண்வரிசையிலும் வைக்கப்பெற்றுள்ளன.

இத்தொகுப்பு நூலுள் அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, உதியஞ் சேரலாதன், அவ்வி, எழினி, கரிகால் வளவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் குறிப்பிடப்பெற்றுள்ளனர்.

சங்க இலக்கியங்களிலேயே அகநானூற்றில்தான் “முதலிரவு“ நிகழ்வு இலக்கிய நயத்துடன் காட்டப்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் ஒரு கோட்டோவியமாகவே இது இடம்பெற்றுள்ளது. அகநானூற்றில், திருமணம் முடிந்தபின் புதுமண மக்கள் தனித்து விடப்படுகின்றனர். தலைவி நாண மிகுதியால் முகம் புதைத்து நிற்கின்றாள். தலைவன் விருப்பமுடன் அவள் முகத்தை மூடிய கைகளை விலக்கிவிடத் தொடுகின்றான். தலைவனின் முதல் தீண்டலில் தலைவியின் நாணம் அச்சமாக மாறிப் பெருமூச்சாக மிகுந்துவிடுகின்றது. தலைவியின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்து கொண்ட தலைவன், அவளின் அச்ச உணர்வினைப் போக்கும்விதமாக, “நின் மனத்தில் நினைப்பதை அஞ்சாமல் கூறு“ என்று தணிந்த குரலில் இனிமையாகப் பேசுகின்றான். தலைவனின் மென்மையான சிரிப்பும் அருகில் அமர வைத்து, பேசத்தூண்டியதுமான அணுகுமுறையும் தலைவின் அச்சத்தை நீக்குகின்றன. தலைவியின் மனத்தில் தோன்றிய மகிழ்ச்சி அவளின் முகத்தில் வெளிப்படுகின்றது என்ற செய்தி நயத்துடன் கூறப்பெற்றுள்ளது.

குடவேலைத் தேர்தல் முறை, ஆடுமகள் (நடனப்பெண்) பாவைபோல வெறியாடும் நிலை போன்றன இத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.

பொ.யு.மு. 326 ஆம் ஆண்டுல் நடைபெற்ற அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சிய வடநாட்டைச் சார்ந்த நந்தர்கள் தங்களின் செல்வங்களைக் கங்கை நதிக்கு அடியில் மறைத்து வைத்த செய்தியையும் பொ.யு.மு. 310 ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திரகுப்த மோரியரின் மாமன் பிந்துசாரனின் தென்னகப் படையெடுப்புக்கு வடுகர் உதவினர் என்ற செய்தியையும் இத்தொகுப்பு நூலின் வழியாக அறியமுடிகின்றது.

புறநானூறு

அகத்திணை சார்ந்து ஆசிரியப்பாவில் நான்கு அடிகள் முதல் 40 அடிகள் வரை எழுதப்பெற்றுள்ள 399 பாடல்களின் தொகுப்பு நூல் புறநானூறு. இதிலுள்ள பாடல்களை 157 புலவர்கள் இயற்றியுள்ளனர். 14 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடல் எழுந்த சூழல் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
பாண்டிய வேந்தர்கள் 12பேர், சேர வேந்தர்கள் 18பேர், சோழ வேந்தர்கள் 13பேர் வேளிர்கள் 18பேர் பற்றியும் அவர்களின் வீர, தீர, ஈர உணர்வுகளையும் இத்தொகுப்பு நூல் விரித்துக்கூறியுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சி, ஆய் அண்டிரன், ஓய்மான் நல்லியக்கோடன், சோழன் கரிகாற் பெருளத்தான், குமணன், கோப்பெருஞ்சோழன் ஆகியோருக்கும் அவர்களைச் சார்ந்த புலவர்களுக்கும் இருந்த உறவுநிலையினை விரிவாகக் கூறியுள்ளது.

அருவிக்குத் துகில் (துணி), அருளுக்கு நீர், கந்தைத்துணிக்குப் பாசியின் வேர், கள்ளின் மயக்கத்திற்கு தேளின் கடுப்பு, கலிங்க ஆடைக்குப் பாம்பின் தோல், குதிரையின் வேகத்திற்குக் காற்றின் வேகம், நரைத்த கூந்தலுக்குக் கொக்கின் இறகு, பொறுமைக்கு நிலம் ஆகியன உவமையாக இத்தொகுப்பு நூலில் கூறப்பெற்றுள்ளன. 10 வகையான ஆடைகள், 28 வகையான அணிகலன்கள், 30 வகையான படைக்கருவிகள், 67 வகையான உணவுகள் முதலியன சுட்டப்பெற்றுள்ளன.

தனிமனிதனின் உரிமைகளும் கடமைகளும் சமூக இணைப்பும் பழக்கவழக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் ஆகிய இயல்புகள் எல்லாம் அறக்கோட்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்டன. இவ் அறக்கோட்பாட்டினை உருவாக்குவதும் வழிநடத்துவதும் சமூகத்தின் பொருளாதார உறவு முறைகளே. பொருளாதார வளர்ச்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்போர் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சமூகத்தின் கருத்துகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை நெறிப்படுத்துவதே அறத்தன் முதன்மைநோக்கம். அறத்தின் இயல்பு, சிறப்பு, ஆற்றல் பற்றிப் புறநானூற்றில் ஏறத்தாழ 35 பாடல்கள் எடுத்துரைத்துள்ளன. நிலையாமை பற்றி ஏறத்தாழ 40 பாடல்கள் வலியுறுத்தியுள்ளன.66 “மறவாழ்வில் அறநெறி முதன்மையானது“ என்பதனை மீண்டும் மீண்டும் கூறுகின்றன. “சங்க இலக்கியங்களுக்கு முன்னர் தமிழ் மக்களிடையே தோன்றி வளர்ந்த அறநூல்கள் பல இருந்து, அவை பற்றி அறிவதற்குப் போதிய சான்றுகள் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஆலத்தூர் கிழார் காலத்த்திலும் திருவள்ளுவரின் காலத்திலும் அவை இருந்துள்ளன. அக்கால அரசர்கள் அறங்கூறவையங்களில் அவற்றைப் பேணிக்காத்தனர். அவையே அறங்கூறுவோர்க்கும் பிறர்க்கும் வழிகாட்டியாக இருந்துள்ளன“67 என்ற சிந்தனையைச் சொ. இலக்குமணசாமி முன்வைத்துள்ளார். “அறம்“ என்ற சொல் புறநானூற்றில் ஆட்சி, நீதி, கொடை, மக்கள் நலம் ஆகியவற்றைக் குறிப்புணர்த்தும் சொல்லாகவே புறநானூற்றில் கையாளப்பெற்றுள்ளது.

கணவரை இழந்த கைம்மைப் பெண்கள் தங்களின் பொருளாதாரத்திற்கு பருத்தி நூல்நூற்றல் தொழிலினைச் செய்கின்றனர் என்ற செய்தியினை இத்தொகுப்பு நூல் சுட்டியுள்ளது. அத்தகைய பெண்களைப் “பருத்திப்பெண்டிர்“ என்று சுட்டியுள்ளது.
இத்தொகுப்பு நூல் வெண்ணிப்பறந்தலை, வாகைப் பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், காணப்பேரெயில் போன்ற போர்க்களங்களின் விரிவான வரலாற்றை எடுத்துக்கூறியுள்ளது.

பத்துப்பாட்டு

பத்து நெடிய தனிப்பாடல்களின் தொகுப்புதான் பத்துப்பாட்டு. ஒரு பாடல் ஒரு தனிநூல். இந்தப் பத்துப் பாடல்களும் ஆசிரியப்பாவினால் பாடப்பட்டுள்ளன. எல்லாம் பாடாண்திணையில் அமைந்தவை. எட்டுப் புலவர்கள் ஆறு தலைவர்களைப் பற்றிப் பாடப்பட்ட பத்துப் பாடல்களின் தொகுப்பினைத்தான் “பத்துப்பாட்டு“ என்கிறோம். இதில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படையைச் சார்ந்தவை. ஆற்றுப்படை என்றால் “வழிப்படுத்துதல்“ என்று பொருள். ஆற்றுப்படை நூல்கள் ஒருவகையில் பயணக்குறிப்பு இலக்கியங்கள்.

திருமுருகாற்றுப்படை

புலவர் நக்கீரர், செவ்வேளாகிய முருகப்பெருமானைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 317 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.

இந்நூலுக்குப் “புலவராற்றுப்படை“ என்றும் “முருகு“ என்றும் வேறுபெயர்கள் உண்டு. துன்பப்படுவோரை முருகனிடம் செல்லுமாறு கூறி (ஆற்றுப்படுத்தி – வழிகாட்டி) அவர்கள் தம் துயரிலிருந்து விடுபட நக்கீரர் உதவியுள்ளார். இந்நூலின் நோக்கமும் இதுதான். முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவி நன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என ஆறுபடைவீடுகள் உண்டு. அவற்றைச் சென்றடைந்து முருகப்பெருமான வழிபட நக்கீரர் வழிகாட்டியுள்ளார். ஒரு படைவீட்டிற்கு ஒரு பகுதியென இந்நூல் ஆறு பகுதிகளை உடையது.

இந்நூலுள் திருமால், பரமசிவன், இந்திரன், பிரம்மன் முதலிய தெய்வங்கள் பற்றிய குறி்ப்புகளும் உண்டு. முருகனைக் காட்டிலும் சோலைகளிலும் ஆற்றிலும் குளக்கரையிலும் கடம்பமரத்திலும் முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் அம்பலத்திலும் மரத்தடியிலும் மரக்கட்டையிலும் உறைந்திருப்பதாகக் கருதி வழிபட்டனர் என்பதனை இப்பாடலின் வழியாக அறியமுடிகின்றது. முருகப்பெருமானை ஆறு முகங்களையும் 12 கரங்களையும் உடைய உருவமாகக் கற்பனைசெய்து வழிபட்டனர். சிறிய தினை அரிசியை மலரோடு கலந்து வைத்தும் ஆடறுத்தும் கோழிக் கொடியோடு முருகனை வரிசையாக நிறுத்தியும் ஊர்கள் தோறும் முருகனுக்குச் சிறந்த விழாக்களை நடத்தினர். பலிப் பொருட்களைப் பிரப்பங்கூடைகளில் வைத்து முருகனைத் தொழுதனர். இந்நூலுள் மாபுராணம், பூத புராணம், கந்தபுராணம் போன்றவற்றின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பொருநராற்றுப்படை

புலவர் முடத்தாமக் கண்ணியார், கரிகாற்பெருவளத்தானைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 248 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் பொருநராற்றுப்படை. இந்நூல் வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.

வேடம் புனைந்து பாடுவோரைப் (பாடுநர்) “பொருநர்“ என்பர். வேளாண்மையைப் பற்றிப் பாடும் ஏர்க்களம் பாடுநர், போர்க்களத்தில் நின்று அது பற்றி வர்ணித்துப்பாடும் போர்க்களம் பாடுநர், போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற மன்னரின் வெற்றியைப் பாடும் பரணி பாடுநர் எனப் பொருநரில் மூன்று வகையினர் உண்டு. இந்நூலில் குறிப்பிடப்படும் பொருநர் போர்க்களம் பாடுநராவர்.

கரிகாற்பெருவளத்தானிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு பொருநர் தன்னை எதிர்ப்படும் வறிய பொருநரிடம், “கரிகாற்பெருவளத்தானின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பொருநரின் மனைவியர் யாழ்வாசிப்பதிலும் இன்னிசை பாடுவதிலும் வல்லவர்களாக இருந்தனர். ஆதலால், அவர்களைப் “பாடினி“ என்றனர். அந்தப் பாடினியின் உருவ அழகினைப் பொருநராற்றுப்படை நுட்பமாக வர்ணித்துள்ளது. ஆற்றுமணல் போன்ற கூந்தல், எட்டாம் பிறைபோன்ற நெற்றி, வில் போன்ற புருவங்கள், மழைபோன்ற கண்கள், இலவம் பூப்போன்ற வாய், முததுப்போன்ற பற்கள், மகரக் குழைகள் ஆடுபவை போன்ற காதுகள், வெட்கத்தால் கவிழ்ந்திருக்கும் கழுத்து, மூங்கில் போன்ற தோள்கள், மெல்லிய மயிர் நிறைந்த முன் கைகள், காந்தள் போன்ற மெல்லிய விரல்கள், கிளியின் வாய் போன்ற நகங்கள், பிறருக்கு வருத்தம் விளைவிக்கும் மார்புகள், நீர்ச்சுழி போன்ற கொப்பூழ், உண்டென்று உணரப் படாத நுண்ணிடை, மேகலை அணியப்பெற்ற அல்குல், யானையின் துதிக்கை போன்ற தொடைகள், மயி்ர் ஒழுங்குபட்ட கணைக்கால், ஓடி இளைத்த நாயின் நாக்கு போன்ற சிவந்த பாதங்கள் என அவளது தலை முதல் பாதம் வரையுள்ள 19 உறுப்புகளையும் புலவர் வர்ணித்துள்ளார்.
யாழினிசை, “தீயோரின் குணத்தை மாற்றி, அவர்களை நல்லோராக மாற்றவல்லது“ என்று இந்நூல் தெரிவித்துள்ளது.

அக்காலக்கட்டத்தில் மக்களிடையே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வினை இருவேறு வர்ணனைகளின் வழியாக இந்நூல் தெரிவித்துள்ளது. செல்வ வளமுடையவர்கள் கண்ணால் காணமுடியாத அளவு மெல்லிய நூலால் நெய்யப்பெற்ற, அழகான பூவேலைப்பாடுகள் செய்யப்பெற்ற, பாம்பின் தோலைப் போல மென்மையும் வழவழப்பும் பளபளப்பும் உடைய மெல்லி துணியினை அணிந்தனர். கொட்டைக் கரை போட்ட பட்டாடையை அணிந்தனர். வறுமையில் வாடுவோர் ஈரும் பேனும் கூடிக் குடியிருந்து அரசாட்சி செய்யக்கூடிய, வேர்வையால் நனைந்து நாற்றமடிக்கக்கூடிய, வேறு நூல்கள் நுழைந்திருக்கின்ற தையல் போடப்பெற்ற, கிழிந்த கந்தையினை அணிந்திருந்தனர்.

அக்காலத் தமிழர்கள் தாம் உணவு உண்பதற்கு முன்னர் காக்கைக்கு உணவிடும் வழக்கத்தினை இந்நூலின் 181 முதல் 184 வரையிலுள்ள அடிகள் குறிப்பிட்டுள்ளன. “உயர மற்ற தென்னை மரங்கள் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த சோலை. அந்தத் தென்னந்தோப்பின் வாசலில் நெற்குதிர் நிற்கின்ற குடிசை. அக் குடிசையில் குடியிருப்போர் இரத்தங்கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாகக் கொடுத்தனர். அந்தப் பலியைக் கருங்காக்கைகள் உண்டன“ என்ற செய்தி அவ் அடிகளில் உள்ளன.

அக் காலத்தில் வழக்கிலிருந்த பண்டமாற்றுமுறை பற்றியும் இந் நூலில் அறியமுடிகின்றது. தேனையும் நெய்யையும் கிழங்கையும் கரும்பினையும் அவலினையும் கொடுத்து, மீனையும் நெய்யையும் மதுவையும் மானிறைச்சியையும் கள்ளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
விருந்தினரைப் பேணிப் பின்னர் அவர்களை வழியனுப்பும்போது அவர்களுடன் ஏழடி நடந்துசென்று வழியனுப்பும் பண்பாடு அக்காலத்தில் இருந்துள்ளமையை இந் நூல் குறிப்பிட்டுள்ளது.

சிறுபாணாற்றுப்படை

புலவர் இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், மாவிலங்கையைத் தலைநகரமாகக் கொண்ட ஆட்சிபுரிந்த ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 269 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் சிறுபாணாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.

“பாண்“ வாசிக்கும் தொழிலைச் செய்ய ஒரு பிரிவினரைப் “பாணர்“ என்றனர். பாணர்கள் மூவகைப்படுவர். இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர். யாழ்ப்பாணர் இரண்டு வகைப்படுவர். சீறியாழ்ப்பாணர், பேரியாழ்ப்பாணர். இந்நூலில் இடம்பெறும் பாணர் சீறியாழ்ப்பாணர். ஆதலால்தான் “சிறுபாணாற்றுப்படை“ என்ற பெயரினைப் புலவர் இந்நூலுக்கு இட்டுள்ளார்.

ஓய்மா நாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு சிறுபாணன் தன்னை எதிர்ப்படும் வறிய சிறுபாணனிடம், “ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

இந்நூலில் விறலியின் உருவ அழகு வர்ணிக்கப்பட்டு்ள்ளது. அவளின் கன்னம், கூந்தல், நுதல், நோக்கு, பல் முதலிய பத்து உறுப்புகள் மட்டும் வர்ணிக்கப்பட்டுள்ளன.
இந்நூலில் உப்பு வணிகர்களின் குடும்பம் சுட்டப்பெற்றுள்ளது. அவர்கள் உப்பு விற்பனைக்காக வண்டிகளில் உப்பு மூடைகளை ஏற்றிக்கொண்டுச் செல்லும்போது அவ் வணிகரும் அவருடைய மனைவியும் அவரின் குழந்தைகளும் அவர்கள் வளர்த்த பெண் குரங்கும் (மந்தி) உடன் செல்வதாகக் குறிப்பு உள்ளது. நுணா மரத்தின் கட்டையினைக் கடைந்து மணிகள் (மரமணிகள்) செய்து, மாலையாகக் கோத்து, தாங்கள் வளர்க்கும் பெண்குரங்கின் கழுத்தில் கட்டியிருந்தனர். வேளாளர்கள் தங்களின் வீட்டு வளர்ப்பு விலங்காக நாயினை வைத்திருந்தனர் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது.

நல்லியக்கோடனின் 16 நற்குணங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1. செய்ந்நன்றி அறிதல், 2. சிற்றினம் இன்மை, 3. இன்முகம் உடைமை, 4. இனியன் ஆதல், 5. அஞ்சினோர்க்கு அளித்தல், 6. வெஞ்சினம் இன்மை, 7. ஆண் அணி புகுதல் (போர்க்கலத்தில் எதிரியின் படைக்குள் புகுதல்), 8. அழிபடை தாங்கள் (போர்க்கலத்தில் தன் படை சிதறாமல் காத்தல்), 9. கருதியது முடித்தல், 10. காமுறப்படுதல், 11. ஒருவழிப்படாமை, 12. ஓதியது உணர்தல், 13. அறிவு மடல் படுதல், 14. அறிவு நன்கு உடைமை, 15. வரிசை அறிதல், 16. வரையாது கொடுத்தல்.
இந்நூலில் அக்காலத்தில் நிலவிய உணவுப் பண்பாட்டினை அறியமுடிகின்றது. நெய்தல் நிலத்தினர் வறல் குழல் மீன் கருவாடினை விருந்தளிப்பர் என்றும் வேடர்குலத்தினர் புளிக்கறியுடன் சோறும் வேட்டையாடிவந்த ஆமான் முதலியவற்றைச் சமைத்து விருந்தளிப்பர் என்றும் உழவர் குலத்தினர் கைக்குத்தல் அரிசிச் சோற்றினையும் வயல் நண்டினையும் பீர்க்கங்காய்க் கூட்டினையும் விருந்தளிப்பர்.

பெரும்பாணாற்றுப்படை

புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், தொண்டைமான் இளந்திரையனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 500 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் பெரும்பாணாற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது.
இந்நூலில் இடம்பெறும் பாணர் பேரியாழ்ப்பாணர். ஆதலால்தான் “பெரும்பாணாற்றுப்படை“ என்ற பெயரினைப் புலவர் இந்நூலுக்கு இட்டுள்ளார்.

தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு பெரும்பாணன் தன்னை எதிர்ப்படும் வறிய பெரும்பாணனிடம், “தொண்டைமான் இளந்திரையனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

நிலம் சார்ந்த குடியிருப்புகள் பற்றிய குறிப்புகளை இந்நூலுள் காணமுடிகின்றது. வரகு வைக்கோலால் வேயப்பட்ட முல்லை நிலக் கோவலர் குடில், வைக்கோலால் வேயப்பட்ட மருதநில வேளாளரின் அழகிய குடில், தருப்பைப் புல்லால் வேயப்பட்ட நெய்தல் நில வலைஞர் குடில், ஈந்தின் இலையாலும் ஊகம் புல்லாலும் வேயப்பட்ட பாலைநில எயினரின் குடில், அக் குடிலினைச் சுற்றி அமைக்கப்பெற்ற உயிருடன் வளரும் செடியால் ஆன வாழ் முள் வேலி, கன்றுகள் பிணிக்கப்பட்ட பந்தல், சாணத்தால் மெழுகப்பட்ட தரையுடன் கூடிய அந்தணர்க் குடியிருப்பு போன்றவற்றைப் பற்றி இந்நூல் குறிப்பிட்டுள்ளது.

இவர்களின் உணவுப் பண்பாட்டினை பற்றியும் அறியமுடிகின்றது. ஏற்றை அறுத்துச் சமைத்தும் வீட்டிலேயே நெல்லால் காய்ச்சிய கொழியல் அரிசிக் கள் முதலியவற்றையும் உண்ணும் குறிஞ்சி நிலமக்கள், அவரைப் பருப்பு கலந்த வரகுச் சோற்றை (கும்மாயம்?) உண்ணும் முல்லை நில மக்கள், நெல்லரிசியுடன் கோழிவறுவல், தினைச்சோறும் பாலும் உண்ணும் மருத நிலமக்கள், மீன் இறாலுடன் கொழியல் அரிசிக் கஞ்சியினை உண்ணும் நெய்தல் நில மக்கள், முயல், பன்றி, உடும்பு, ஈந்தின் விதை போன்ற சிவந்த சோறு, புல்லரிசியுடன் கூடிய கருவாட்டுக்குழம்பு முதலியவற்றை உண்ணும் பாலை நிலமக்கள், கருடன் சம்பா என்று குறிப்பிடப்படும் இராசா அன்னம், நெய்ச்சோறு, கறிவேப்பிலை கருவேம்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வெண்ணெயில் செய்த மாதுளைக் கறியையும் மாவடு ஊறுகாயையும் உண்ணும் அந்தணர்கள் என அக்கால மக்களின் பொருளாதாரம் சார்ந்த உணவுமுறைகளை இந்நூல் பட்டியலிட்டுள்ளது.

உழுதுவாழும் விவசாயக்கூலிகளை உழவர்கள் என்றனர். இவர்கள் நிலஉரிமையுடைய வேளாளர்கள் அல்லர். இவர்களின் புன்செய் நிலத்தில் விளையும் வரகினையும் அவரையினையும் தம் உணவாகக்கொண்டனர். வரகரிசிச் சோற்றை, புழுக்கிய அவரைப் பருப்புடன் கலந்து பெருகிய சோற்றை உண்டனர். நன்செய் நிலஉரிமையாளர்களான வேளாளர்கள் வீடுகளில் இனிப்பான சுளைகள் நிறைந்த பெரியபலாப்பழம், நல்ல இன்சுவை இளநீர், யானைக் கொம்புகளைப் போன்ற தோற்றமுடைய வளைந்து, குலையிலே பழுத்திருக்கும் வாழைக்கனிகள், நல்ல பனை நுங்கு, இனிய பண்டங்கள், சேப்பம் இலையுடன் முற்றிய நல்ல கிழங்கு போன்ற உணவுகளாக உள்ளன. உழுகுடிகளுக்கும் நன்செய் உழவுநிலங்களை வைத்திருக்கும் வேளாளர்களுக்கும் இடையே உள்ள வர்க்க வேறுபாடுகளை அவர்களின் உணவுப் பண்பாட்டின் வழியாக அறியa முடிகின்றது.
“நீர்ப்பாயல்துறை“ (நீர்ப்பெயற்று) என்ற இடத்தில் மிகப்பெரிய கலங்கரைவிளக்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. aதொண்டைநாட்டின் தலைநகரான் காஞ்சிமாநகரின் செல்வச் செழிப்பினையும் பெருமையினையும் இந்நூல் 393 முதல் 420 வரையிலான அடிகளில் குறிப்பிட்டுள்ளது. இந்நகர்த் தெருக்களில் எப்பொழுதும் தேர்கள் ஓடிக்கொண்டிருப்பதால் தெருக்கள் பள்ளமும் மேடுமாகவும் படுகுழியுமாகவும் சிதைந்து காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரைச் சார்ந்த திருவெஃகா அக்காலத்திலேயே திருமால் திருப்பதியாகப் பெயர்பெற்றிருந்துள்ளது. காஞ்சி நகரத்தில் சோலைகள் பல இருந்தன. அச்சோலைகளில் குரங்குகள் பலவுண்டு. யானைப் பாகர்கள், யானைகளுக்கு நெய் கலந்த சோற்றுக் கவளத்தை வைக்கின்றனர். யானைகள் அக்கவளங்களைத் தம் கால்களில் இட்டு மிதிக்கின்றன. அக்கவளங்களைக் குரங்குகள் கவர்ந்துகொண்டு சோலைக்குள் ஓடுகின்றன. இந்நூல் இதனைக் காட்சிபடுத்தியுள்ளது.

கூத்தராற்றுப்படை

புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனைத் தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 583 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் கூத்தராற்றுப்படை. இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலுக்கு “மலைபடுகடாம்“ என்ற சிறப்புப்பெயரும் உண்டு.

பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனிடம் பரிசில் பெற்றுத் திரும்பிய ஒரு கூத்தர் தன்னை எதிர்ப்படும் வறிய கூத்தரிடம், “பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேஎய் நன்னனின் பெருமைகளைக் கூறி, அவனிடம் சென்று நீயும் பரிசில் பெற்று வளம்பெருக“ என்று வழிகாட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

கூத்தர்கள் என்போர் நாடகக் கலைஞர்கள். இவர்கள் தம்மோடு இசைக்கருவிகள் பலவற்றை எடுத்துச்செல்வது இயல்பு. முழவு, ஆகுளி, பதலை, கோடு, தூம்பு, குழல், யாழ், பாண்டில் முதலிய இசைக்கருவிகளைத் தம்மோடு எடுத்துச்சென்றதாக இந்நூல் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் தம்முடன் பேரியாழினையும் வைத்திருந்தனர். அந்தப் பேரியாழின் அமைப்பினையும் இந்நூல் விளக்கியுள்ளது. பேரியாழ் முறுக்கிய நரம்புகள், வரகின் கதிர் போன்ற துளைகள், சுள்ளாணிகள், பத்தல், யானைக் கொம்பினால் ஆன யாப்பு, பொல்லம் பொத்தப்பட்ட போர்வை, உந்தி, கோடு, வணர் என பல உறுப்புகளை உடையது என்று விளக்கியுள்ளது.

கூத்தர்கள் செல்லும் வழி மலைப்பாதை. அங்குள்ள சிக்கல்கள் பற்றியும் இந்நூல் சுட்டியுள்ளது. ஆங்காங்கு பன்றிகளைப் பிடிப்பதற்காகப் பன்றிப்பொறிகள் வைக்கப்பெற்றிருக்கும். பரற்கற்கள் நிரம்பிய குழிகளில் பாம்புகள் மறைந்திருக்கும். தினைப்புனத்தைக் காக்கும் குறவர்கள் யானைகளை விரட்ட எறியும் கவண்கற்கள் பறந்துகொண்டிருக்கும். காட்டாற்று வழியில் வழுக்கும் இடங்கள் மிகுதி. மலையின் இயற்கைப் பேரழகினை இரசித்துக்கொண்டு நடந்தால் வழிதவறிவிடு வாய்ப்புண்டு. அவ்வாறு வழிதவறியவர்களுக்குக் குறவர்கள் வழிகாட்டுவார்கள். இரவில் குகைகளில் தங்கிக்கொள்ளலாம். செல்லும் வழியில் பல நடுகற்கள் காணப்படும். திரும்பி வரும்போது வந்த வழியினை அறியவேண்டும் என்பதற்காகச் செல்லும்போதே ஆங்காங்கே புல்லை முடிந்துகொண்டே வழிநெடுகச் செல்லவேண்டும் எனப் பல அறிவுரைகள் இந்நூலுள் கூறப்பெற்றுள்ளன.

இந்நூலில் 20 வகையான ஓசைகள் கூறப்பெற்றுள்ளன. அருவி விழும் ஒலி, குறவர்களின் சங்கொலி, காயம்பட்ட கானவரின் அழுகை ஒலி, புண் ஆற்றும் கொடிச்சியரின் பாட்டொலி, வேங்கை மலரைப் பார்த்து அஞ்சும் பெண்களின் அச்ச ஒலி, தன் துணையை இழந்த ஆண் யானையின் ஆற்றாமை ஒலி, தன் குட்டியை இழந்த பெண்குரங்கின் தவிப்பொலி, மலைத்தேனைக் கைப்பற்றிய கானவரின் ஆரவார ஒலி, குறுநில மன்னரின் பாதுகாவல்களை அழித்துவிட்ட கானவரின் வெற்றி ஒலி, குரவைக்கூத்தாடும் குறவர்களின் ஒலி, ஆற்றுவெள்ளத்தின் ஒலி, யானைப் பாகரின் ஒலி, கிளிகளை ஓட்டும் பெண்களின் குரலாசை, மலைக்காளையும் வளர்ப்புக்காளையும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் ஒலி, எருமைக் கடாக்களின் போர் ஒலி, பலாச்சுளையிலிருந்து கொட்டைகளைப் பிரித்தெடுக்க அதன் மீது கன்றுகளை மிதிக்கச்செய்யும் சிறுவர்களின் ஒலி, கரும்பிலிருந்து சாறினைப் பிழிந்து எடுக்கும் எந்திரத்தின் ஒலி, தினையைக் குற்றும் மகளிரின் பாட்டொலி, பன்றிகளை விரட்டுவதற்காக முழக்கப்படும் பறையொலி, இந்த ஓசைகள் மலையில்பட்டு எதிரொலிப்பதால் ஏற்படும் எதிரொலி என 20 வகையான ஒலிகளை (ஓசைகளை) இந்நூல் சுட்டியுள்ளது.

கூத்தர்களின் பழக்க வழக்கங்கள் பலவற்றை இந்நூலினுள் காணமுடிகின்றது. நடுகற்களை வணங்குதல், பாடுவதற்கு முன்போ அல்லது ஆடுவதற்கு முன்போ அவர்கள் இறைவனை வணங்குதல், ஓரிடம் விட்டுப் பிறிதொரு இடம்செல்வதற்கு முன்பு நிமித்தம் பார்த்தல், மது, எருமைத் தயிர் முதலியவற்றைச் சேமித்துவைக்கும் கலமாக (பாத்திரம்) மூங்கிற் குழாய்களைப் பயன்படுத்தியுள்ளனர். இசைக்கருவிகளை உறையிட்டுப் பாதுகாத்தனர். சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுழற்றி மட்கலன்கள் செய்துள்ளனர். மனித உயிரைப்பறிக்கும் தெய்வத்திற்குக் “கூற்றுவன்“ (எமன்) என்று பெயரிட்டிருந்தனர்.

முல்லைப்பாட்டு

புலவர் நப்பூதனார், முல்லைத் திணையில் 103 அடிகளில் அகப்பொருளில் ஆற்றியிருத்தல் என்ற பொருளில் பாடிய பாடல் முல்லைப்பாட்டு. இந்தக் குறுநூலுக்கு “நெஞ்சாற்றுப்படை“ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. போர் நிமித்தமாகத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்துத் தலைவி துன்பப்படுவதும், பின்னர் தன் மனத்தினைத் தாமே தேற்றிக்கொள்வதும் (ஆற்றியிருத்தல்) முல்லைப்பாட்டின் மையக்கரு.

தலைவியின் இல்லறக்காட்சிகளும் தலைவரின் பாசறைக்காட்சிகளும் சரிபாதியாக இந்தக் குறுநூலில் பதிவாகியுள்ளன. முல்லைநிலக்காட்சியும் கார்கால (மழைக்காலம்) வர்ணனையும் சிறப்புற பதிவாகியுள்ளன. விரிச்சிகேட்டல், நற்சொல்கேட்டல், நாழிகை அறிதல், யானையைப் பழக்குதல், பாசறை அமைத்தல், பாசறையைப் பேணுதல், பாசறையில் இருக்கும் ஆயுதமேந்திய பணிப்பெண்கள், மெய்க்காப்பாளர்களாக விளங்கிய யவனர்கள், குற்றேவல்புரியும் மிலேச்சர்கள், வீரர்கள் பற்றிய குறிப்புகள், முதல்நாள் போரின் பின்விளைவுகள் எனப் பிற இலக்கியங்களில் இல்லாத பல செய்திகள் இந்தக் குறுநூலில் இடம்பெற்றுள்ளன.

நிறைந்த இலைகளையுடைய இருண்ட காசாஞ்செடிகள், வெண்காந்தள் மொட்டுக்கள், பொன்னிறமுடைய கொன்றை, இரத்த வண்ணத்தில் பூத்திருக்கும் தோன்றிச் செடிகள் என்று மழைக்காலச் செடிகள், மலர்கள் பற்றிய குறிப்புகளும் இதில் உள்ளன.

குறிஞ்சிப்பாட்டு

புலவர் கபிலர், குறிஞ்சித் திணையில் 261 அடிகளில் அகப்பொருளில் பாடிய பாடல் குறிஞ்சிப்பாட்டு. இப்பாடலுக்குப் “பெருங்குறிஞ்சி“ என்ற பெயரும் உண்டு. தலைவன் மீது தலைவிகொண்ட காதலைத் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தெரியப்படுத்துதலே (அறத்தொடு நிற்றல்) குறிஞ்சிப்பாட்டின் மையக்கரு. தலைவன்-தலைவியின் காதலைப் பின்நோக்கு உத்தியில் தோழி எடுத்துரைத்துள்ளாள். தோழி அறத்தொடு நிற்றலுக்கு எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்பும் கிளவி, கூறுதல் உசாதல் என்ற ஏழு நிலைகள் உள்ளன. இப்பாடலில் தோழி, “கூறுதல் உசாதல்“ நிலையைத் தவிர்த்து மற்ற ஆறுநிலைகளில் தலைவியின் செவிலிக்கு அறத்தொடு நிற்கின்றாள்.

இப்பாடலில் பழந்தமிழ் நிலத்தில் பூத்துக்குலுங்கிய 99 வகையான மலர்கள் பற்றிய பட்டியல் இடம்பெற்றுள்ளது. தலைவியைச் சந்தித்து, காதலித்து, கந்தர்வ மணம் புரிந்த தலைவன் அவளை விட்டுச் செல்லும்போது, “உன்னை ஊரறிய மணந்துகொள்வேன்“ என்று உறுதியளிக்கின்றான். அப்போது அவன் அவ் உறுதியளித்தலைச் சிறு சடங்கின் வழியாகச் செய்தான். மலையில் உறைந்துள்ள இறைவனை வாழ்த்தி, தன் மனத்தில் உள்ள உண்மைநிலையினை இறைவனிடம் கூறுகின்றான். எந்நிலையிலும் எக்காரணம் கொண்டும் தலைவியைப் பிரியேன் என்று தன் வாய்மையைத் தெளிவுபடுத்தித் தலைவியின் மனத்திற்கு உறுதியளிக்கின்றான். அருகில் வீழ்ந்திருந்த அருவியின் தெளிந்த நீரைக் கையால் அள்ளி, உன்னை ஊரறிய மணப்பேன் என்று உறுதியளித்து அந் நீரைப் பருகினான்.
“மறுபிறப்பு“ குறித்த நம்பிக்கை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தன்னை ஊரறிய மணந்துகொள்வதாக உறுதியளித்த தலைவன் வாராததால் தலைவி வருந்தி, பின்னர், “இப்பொழுது நம்மை அவர் மணந்துகொள்ளாவிட்டாலும் மறு உலகத்திலாயினும் அவரைக் கூடி இன்புறும் வாழ்வு கிடைப்பதாக“ என்று வேண்டிக்கொள்கின்றாள்.

“ஓர் இறைக்கோட்பாடு“ இந்நூலில் சுட்டப்பெற்றுள்ளது. “இறைவன் ஒருவனே. அவரே பல்வேறு உருவங்களில் பல்வேறு தெய்வங்களாகக் காட்சிதருகின்றார்“ என்ற கருத்தினை, “வேறு பல் உருவின் கடவுள்“ என்ற அடியில் இந்நூல் தெரிவித்துள்ளது.

“கழைக்கூத்தாடிகள்“ பற்றிய குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. விலகி நிற்கும் இரண்டு மரங்களுக்கு இடையில் கயிற்றைக்கட்டி அதன்மீது நின்றுகொண்டு, கைகளில் ஒரு கழையினைப் பற்றிக்கொண்டு நடனமாடும் கழைக்கூத்தாடிகள் பற்றியும் அவர்களின் ஆட்டத்திற்கு ஏற்ற இசைக்கும் கலைஞர்கள் பற்றியும் குறிப்பிடப்பெற்றுள்ளது.

மதுரைக்காஞ்சி

புலவர் மாங்குடி மருதனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவராகக்கொண்டு மருதத்திணையில் புறத்திணை இலக்கணத்தில் 782 அடிகளில் வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவினால் பாடிய நெடும்பாடல்தான் மதுரைக்காஞ்சி. இந்நூலினைக் காஞ்சிப்பாட்டு, கூடல்தமிழ், காஞ்சித்திணை என்றும் சிறப்பித்துள்ளனர். மதுரை நகரின் ஒருநாள் நிகழ்வுதான் இந்நூலின் மையக்கரு.
இப்பாடலின் 346ஆவது அடிமுதல் 699ஆவது அடி வரையுள்ள 354 அடிகள் ஒருநாள் மதுரையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் விவரிக்கின்றன. ஆதலால், இப்பாட்டினை “மாநகர்ப்பாட்டு“ என்றனர். ஒரு தனிப்பாடல் இப்பாடலைக் “கூடற்றமிழ்“ என்று குறிப்பிட்டுள்ளது.

தலையாலங்கானம் திருவாதவூருக்கு அருகில் இருக்கிறது. இவ் இடத்தில் இப்பாடலின் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் சேர, சோழரோடு ஐம்பெரும் குறுநில வேளிரையும் சேர்த்து வென்றதாக இப்பாடல் தெரிவித்துள்ளது.
இவ் வேந்தருக்கு நிலையாமைக் கருத்தை வலியுறுத்த இப்பாடல் பாடப்பெற்றதாகவும் அதனால்தான் இப்பாடல் “மதுரைக்காஞ்சி“ (காஞ்சி-நிலையாமை) என்ற பெயரினைப் பெற்றதாகவும் கூறுகின்றனர். இக்கருத்தினைச் சு. வேணுகோபால் ஏற்கவில்லை. அவர், “ தொல்காப்பியம், “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை“ என்று வஞ்சினக் காஞ்சித்துறையைப் பற்றிக் கூறியுள்ளது. பகைவரின் படையெடுப்பை எதிர்த்துப் போர்செய்து, முறியடிக்கிற வெற்றி என்பது இதன் பொருளாகும். மதுரைக்காஞ்சி போர் வெற்றியோடு பண்பாட்டு இயக்கத்தைத்தான் மிகுதியாக விவரிக்கின்றது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள “ஒண்பெண் அவிர் இழை தெழிப்ப இயலி“, “திண்சுவர் நல் இல்“, “ கதவம் கரைதல்“, “வானம் நீங்கிய நீல் நிற விசும்பு“, “திரையிடும் மணலினும் பலரே உரைசெய மலர்தலை உலகம் ஆண்டு அழிந்தோரே“ என்பன போன்ற சொற்றொடர்களில் நிலையில்லாது அழிந்துவிடும் நிலத்தியல் வாழ்க்கை பற்றியும் நிலைத்து நிற்கக்கூடியதாக நம்பப்படும் மேலுலகு வாழ்க்கையின் வீடுபேறு பற்றியும் சொல்லப்பட்டிருந்தாலும் நிலையாமையை வலியுறுத்துவதற்காகவே இப்பாடல் பாடப்பட்டதன்று. உண்மையில் வாழ்க்கையின் பல்வேறு விதமான அம்சங்களை ஒருங்குதிரட்டி முன்வைப்பது நோக்கமாக இருக்கிறது. மனித வாழ்க்கையின் அகம்,புறம் இரண்டையும் முழுமையாகத் திரட்டி வைக்கிறது எனலாம். கொடை, ஆட்சித்திறம், உண்மை, நீதி, வணிகம், விவசாயம், தொழில் இவற்றிற்கான வளத்தைப் பெருக்கும் தன்மைகள், நீடித்த நிலைபேறுக்கு உரியவை என்ற அடிப்படையில்தான் “காஞ்சி“ என்ற கருத்தியல் மதுரைக்காஞ்சி முழுமைக்கும் ஊடாடி வருகின்றது. பத்துப்பாட்டின் நூல்வரிசையைக் குறிப்பிடும் வெண்பா, இப்பாட்டினைப் “பெருகு வள மதுரைக்காஞ்சி“ என்று சரியாகக் குறிப்பிட்டுள்ளது“68 என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.

பாண்டியர் புகழ்பாடும் இந்நூலின் பெரும்பகுதி மதுரைமாநகரை வர்ணித்துள்ளது. பாண்டிய நெடுஞ்செழியனின் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் விளைந்த பொருட்களை இந்நூல் வரிசைப்படுத்தியுள்ளது. அகில், சந்தனம், தோரை என்னும் நெல்வகை, வெண்சிறு கடுகு, ஐவன நெல் போன்றன குறிஞ்சி நிலத்திலும் வரகு, அழகிய மணிகள், தினை, எள், முசுண்டை, முல்லை, கிழங்கு வகைகள் போன்றன முல்லை நிலத்திலும் நெல், கவலைக் கிழங்குகள், தாமரை, நெய்தல், நீலம், ஆம்பல் போன்றன மருத நிலத்திலும் முத்து, சங்கு, உப்பு, தீம்புளி, மீன் போன்றன நெய்தல் நிலத்திலும் மூங்கில், ஊகம்புல் போன்றன பாலை நிலத்திலும் மிகுதியாக விளைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

மதுரை நகரில் பறந்த விழாக்கொடி, வெற்றிக்கொடி, வணிகக்கொடி போன்றவற்றைப் பற்றி இந்நூல் குறிப்பிட்டுள்ளது. வணிகக்கொடிகளின் வரிசையில் “உயர்ரக மதுபானம் கிடைக்கும்“ என்பதனை உணர்த்தும் கொடியும் இருந்ததாகக் குறிப்பு உள்ளது.
பல்வேறு கோயில்கள், பௌத்தப் பள்ளிகள், சமணப்பள்ளிகள் ஆகிய பல சமயங்களுக்கும் உரிய நிலையங்கள் அக்கால மதுரையில் இருந்துள்ளமையை இப்பாடலால் அறியமுடிகின்றது. இருப்பினும், சிவனே முழுமுதற் கடவுளாக இருந்தமையைத் “தெள் அரிப்பொற்சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் தா அறிவிளங்கிய ஆய்பெண் அவிர் இழை“ என்ற அடி குறிப்புணர்த்தியுள்ளது.

“திருவோணநாள்விழா“ மதுரையில் கொண்டாடப்பட்ட செய்தியினை “மாயோன் மேய ஓணநல்நாள்“ என்ற அடியின் வழியாப் பெறமுடிகின்றது. இப்பாடல் திருப்பரங்குன்ற விழா, வேந்தரின் பிறப்புநாள்விழா, அந்திவிழா போன்ற பல்வேறு விழாக்களையும் குறிப்பிட்டுள்ளது.

சூலுற்ற மகளிர் விளக்கேந்தி கோயிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றமையும் யாழ், முழவு, ஆகுளி முதலான இசைக்கருவிகள் இசைக்க அவ் ஊர்வலம் நகர்ந்தமையையும் கடவுளைத் தொழுது சாலினி என்ற தேவராட்டி முன் பலி கொடுத்தமையையும் காணமுடிகின்றது. இவ் வழிபாடு பற்றிச் சு. வேணுகோபால், “சூல் உற்றதற்குப் பலிச்சோறு படைத்த இனக்குழுச் சடங்கு, இங்குச் சமய வழிபாடு கலந்த்தொரு வழக்கமாக மாறியுள்ளது“69 என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு இலவசமாக உணவளிக்கும் “அன்னசாலைகள்“ மதுரையில் நிறைந்திருந்தனஎன்ற குறிப்பு இந்நூலில் உள்ளது. அந்த அன்னசாலைகளில் தேன் மணம் கமழும் பலாச்சுளைகள், பலவகைப்பட்ட மாம்பழங்கள், பலவகையான காய்கறிகள், வாழைப்பழம், மழையினால் கொடிகளில் அழகாக முளைத்திருக்கின்ற இளங்கீரை, அமுதம் போன்ற இனிமையான பலவகைப்பட்டச் சாதம், புலவுச்சோறு (சைவமும் அசைவமும் கலந்தது), முற்றிய கிழங்கு ஆகியவை இலவசமாக அளிக்கப்பெற்றன.

நெடுநல்வாடை

புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவராகக்கொண்டு முல்லை மற்றும் வஞ்சித்திணையில் அகமும் புறமும் கலந்து 188 அடிகளில் ஆசிரியப்பாவினால் பாடிய பாடல்தான் நெடுநல்வாடை. இந்நூலினைச் “சிற்பப்பாட்டு“ என்றும் சிறப்பித்துள்ளனர்.
கூதிர்காலத்தில் வீசக்கூடிய வாடைக்காற்று, தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பம் தருவதாகவும் போர்த்தொழிலுக்குச் சென்ற தலைவனுக்கு அதே வாடைக்காற்று இன்பம் தருவதாகவும் அமைந்துள்ள முரண்நிலையே இந்நூலின் மையக்கரு.

“வாடை“ என்பதற்குக் “குளிர்காற்று“ என்று பொருள். இது வடதிசையிலிருந்து வீசுவதால் “வாடைக்காற்று“ என்ற பெயரினைப் பெற்றது. தெற்கிலிருந்து வீசுவது “தென்றல்“ என்றதனைப் போல இதற்குப் பொருள்கொள்ளலாம்.

பெண்கள் மாலைக் காலத்தில் விளக்கேற்றி, நெல்லையும் மலரையும் தூவி அந்த விளக்கின் ஒளியை வணங்கியுள்ளனர். சந்தனக் கற்கள் வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். சந்தனக்கல்லினை “வான்கேழ் வட்டம்“ என்று அழைத்துள்ளனர். கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரைப் பருகுவதற்காக வாய் குறுகலாக அமைந்த மட்பாண்டத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய மண் கூஜாக்கள் பரவலான பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்த மண் கூஜாக்களைத் “தொகுவாய்க்கன்னல்“ (சிறிய வாயுடைய நீர்ப்பாண்டம்) என்று அழைத்துள்ளனர்.

40 வயதுவரை வாழ்ந்து மடிந்த யானையின் தந்தத்தினை அறுத்தெடுத்து, அதனைக்கொண்டு கட்டிலுக்குக் கால்கள் செய்துள்ளனர். அக் கட்டில்காலில் பலவிதமான சித்திர வேலைப்பாடுகளையும் செய்துள்ளனர். இச்செய்திகளை இந்நூலின் வழியாக அறியமுடிகின்றது.

பட்டினப்பாலை

புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகாற்பெருவளத்தானைத் தலைவராகக்கொண்டு நெய்தல் மற்றும் பாலைத்திணையில் பொருள் வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல் (செல்லாமல் விடுதல்) எனும் துறையில் 301 அடிகளில் வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவினால் பாடிய பாடல்தான் பட்டினப்பாலை. இந்நூலினைக் “வஞ்சிநெடும்பாட்டு“ சிறப்பித்துள்ளனர். காவிரிப்பூம்பட்டினத்தின் சிற்பினை விரிவாகக் கூறுவதே இந்நூலின் மையக்கரு.

இப் பாடலைப் பாடிய உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகாற்பெருவளத்தான் பதினாறுகால் மண்டபத்தைப் பரிசாக வழங்கினார். பிற்காலத்தில், பாண்டிய மன்னர் சோழநாட்டினை முற்றுகையிட்டுத் தரைமட்டமாக்கியபோது, கரிகாற்பெருவளத்தான் உருத்திரங் கண்ணனாருக்குப் பரிசாக வழங்கிய பதினாறுகால் மண்டபத்தையும் தஞ்சைப் பெரியகோவிலையும் இடிக்காமல் விட்டுவிட்டதாகத் திருவெள்ளறைக் கல்வெட்டு தெரிவித்துள்ளது.

இந்நூலில் பல செய்திகள் விரவியுள்ளன. வெண்மீன் என்ற வெள்ளிக் கோள்மீன் வடக்குத் திசையில் நின்றால் நாட்டில் மழை பொழிவு ஏற்பட்டு வளம்பெருகும் என்றும் அது தெற்கு திசையில் நின்றால் மழைநீங்கி வறட்சிமிகும் என்றும் இந்நூலில் வானியல் செய்தி குறிக்கப்பெற்றுள்ளது.

வணிகத்திற்காகப் படகில் (பஃறி) உப்பினைக் கொணர்ந்த உமணர்கள், அவற்றை நெல்லுக்குப் பண்டமாற்றாக விற்றுத் திரும்பும்போது அவர்களின் படகில் உப்புக்குப் பதிலாக நெல் இருந்தமையைச் சுட்டியுள்ளது. இச்செய்தியிலிருந்து, அக்காலத்தில் உப்பும் நெல்லும் சம மதிப்பில் இருந்தமையை அறியமுடிகின்றது.

பழம் புலவர்கள் படைத்தளித்துள்ள தனிப்பாடல்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தினை நம் கண்முன் காட்டவல்லது. அவர்கள் மிகைப்படுத்திப் பலவற்றை அவற்றில் கூறியிருந்தாலும், அவற்றின் மையப்பொருளில் மாற்றமோ, திரிபோ, முழுக் கற்பனையோ இருக்க வாய்ப்பில்லை. ஆதலால், இலக்கியச் சான்றுகளான இத் தனிப்பாடல்கள் 50 சதவிகிதம் வரலாற்றாய்வுக்கு ஏற்றவை. அதேவேளையில், பழம் புலவர்களின் கவிப் புலமைத்திறத்திற்கு 100 சதவிகிதம் வலுவான ஆதாரமாகத் திகழ்பவை.

0

பழங்காசுகள்

சங்க காலம் / தேடல் – 20

PandyasSangamAgeMCSIObverseபழங்கால வாணிபத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவந்த “பண்டமாற்று“ முறையின் அடுத்த கட்ட வளர்ச்சிநிலையாகக் குறிப்பிட்ட அளவு பொன்னைக் கொடுத்து எப்பொருளினையும் பெறும்நிலை ஏற்பட்டது. இங்குப் பொன் ஒரு “பொதுப்பொருள்“ என்ற நிலையில் அது கையாளப்பெற்றது. அதன் பின்னர் இந்தியாவின் நிலையான அரசுகள் பிற நாட்டினரின் நாணயப் பயன்பாட்டினைப் பார்த்துத் தாங்களும் நாணய சாலைகளை அமைத்து, காசுகளை உருவாக்கி, தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகப் புழக்கத்திற்காக அவற்றைப் பொதுமக்கள் மத்தியில் பரப்பினர். இக்காசுகள் பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகத்தால் சதுரம் அல்லது செவ்வக வடிவில் உருவாக்கப்பெற்றன.

குத்துக்குறி நாணயங்கள்

பண்டைய இந்தியாவில் வேத காலத்திலிருந்தே நாணயங்கள் வழக்கில் இருந்துள்ளன. ஓரின மக்களால் “அடும்பரா“ என்ற நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வகையான இந்திய நாணயங்களை அலெக்சாந்தர் பார்த்துள்ளதாகக் குறிப்பு உள்ளது. நந்தர், மௌரியர், சுங்கர், கண்வர் முதலிய பேரரசர்களும் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். அந் நாணயங்களில் சின்னங்கள் பொறிக்கப்பெற்றன. ஆதலால் அந் நாணயங்களை “முத்திரை நாணயங்கள்“ என்றனர். இவற்றைத் தமிழில் “குத்துக்குறி நாணயங்கள்“ என்று அழைத்தனர். மோரியர் ஆட்சியில் கர்ஷபணம், சுவர்ண, தரணம், மாசகம் போன்ற காசுவகைகள் புழக்கத்தில் இருந்ததாக கௌடில்யர் குறிப்பிட்டுள்ளார். மௌரியரின் முத்திரை நாணயங்கள் தமிழகத்தில் வீரசிகாமணி, தாராபுரம், வெம்பாவூர், கவுனியண்குட்டை, தொண்டமானத்தம், மாம்பலம் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. ஆதலால், இந்தியாவின் உள்நாட்டு வாணிபத்தில் குறிப்பாக வட, தென்னிந்திய வாணிப உறவில் குத்துக்குறி நாணயங்கள் பெரும்பங்காற்றியுள்ளமையை அறியமுடிகின்றது. இவற்றின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. 175 ஆம் ஆண்டு வரை என்று கணித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து குஷானர்களும் நாணயங்களை வெளியிட்டனர்.

சங்க காலப் பாண்டியர் காசுகள்

மூவேந்தருள் பாண்டியரே முதன்முதலில் வெள்ளி முத்திரைக் காசுகளை வெளியிட்டனர். இவை நந்தர்களாலும் மோரியராலும் வெளியிடப்பட்ட “கர்ஷபணம்“போன்று இருந்தன. இக் கர்ஷ பணம் ஒரு கர்ஷ எடையில் (146.4 க்ரைன் என்பது ஒரு கர்ஷ எடை) இருந்தன. பாண்டியரின் காசுகளில் ஒருபுறம் மீன் சின்னமும் மறுபுறம் சூரியன் மற்றும் மங்கலச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவை பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் வெளியிடப்பெற்றிருக்கலாம்.

மதுரை கோவலன்பொட்டல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் சங்க காலப் பாண்டியரின் சதுர வடிவச் செப்புக் காசு ஒன்றும் வெண்மையான இதய வடிவ மணி ஒன்றும் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்கள் இரண்டும் மனிதனின் எலும்புக்கூடும் கிடைத்துள்ளன.59 மதுரை வைகையாற்றுப் பகுதியில் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த நாணயங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளன. இக்காலப் பகுதியைச் சார்ந்த மோரியரின் முத்திரை இடப்பெற்ற வெள்ளிக் காசுகளும் கிடைத்துள்ளன. இக்காசுகளைப் பின்பற்றிப் பாண்டியர்கள் தங்களின் காசுகளில் மீன் சின்னத்தைப் பொறித்து வெளியிட்டனர். பாண்டியரின் சதுர வடிவிலமைந்த காசுகளில் ஒருபுறத்தில் மங்கலச் சின்னங்களுடன் நிற்கும் யானையும் மறுபுறம் கோட்டுருவமாக உள்ள மீன் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன.

மதுரையில் கிடைக்கப்பெற்றுள்ள சங்க காலக் காசுகளுள் ஒன்றில் “பெருவழுதி“ என்ற பெயர் பொறிக்கப்பெற்றுள்ளது. இதன் ஒருபுறத்தில் கடல் ஆமைகள் உள்ள நீர்த்தொட்டியின் முன் நிற்கும் குதிரையின் உருவம் உள்ளது. குதிரையின் கீழ்ப் புறத்தில் எழுத்துகளைப் பொறிக்கவில்லை. “டவுரின்“ சின்னத்தைத்தான் பொறித்துள்ளனர். இதன் மேற்புறத்தில் தமிழி எழுத்துருவில் “பெருவழுதி“ என்று எழுதப்பெற்றுள்ளது. இந்தச் செப்புக் காசு 1.7 செ.மீ. நீளமும் 1.7. செ.மீ. அகலமும் 4.100கிராம் எடையும் உடையது.60 இக் காசின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு ஆகும். இக்கருத்துகளை இரா. கிருஷ்ணமூர்த்தி உறுதிபடுத்தியுள்ளார்.

சங்க காலப் பாண்டியர் வெளியிட்டுள்ள செப்பு நாணயங்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளன. அந் நாணயங்களுள் சிலவற்றில் குதிரை, தொட்டி, ஆமை சின்னங்களும் சிலவற்றில் யானை, தொட்டி, ஆமை சின்னங்களும் சிலவற்றில் கோயில், ஆமை சின்னங்களும் சிலவற்றில் தமிழி எழுத்துருவில் “பெருவழுதி“ என்ற சொல்லும் சிலவற்றில் பெருவழுதியின் தலை உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன. இவை அனைத்திலும் ஒரு புறத்தில் மீன் சின்னம் பொறிக்கப் பெற்றுள்ளமையால் இவை பாண்டியரின் காசுகள்தான் என்று உறுதிப்படுத்த முடிகின்றது.

அழகன் குளத்தில் நடத்தப்பெற்ற அகழாய்வில் பாண்டியரின் நீள்சதுரச் செப்புக்காசு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் ஒரு புறத்தில் மீன் உருவமும் மறுபுறத்தில் திமிலோடு கூடிய காளையின் நின்றநிலை உருவமும் காளையின் முகத்திற்குக் கீழ் தொட்டியும் காணப்படுகின்றது.

பெருவழுதி என்று தமிழி எழுத்துருவில் பொறிக்கப்பெற்ற காசுகளில் சில அறுபக்க வடிவிலும் உள்ளன. அவற்றின் முன்புறம் குதிரை, தொட்டில் ஆமை, “பொருவழுதி“ என்ற சொல் ஆகியனவும் பின்புறம் இரண்டு மீன் உருவங்களும் (இணைக்கயல்) (கயல்-மீன்) பொறிக்கப்பெற்றுள்ளன.

சதுர வடிவில் கிடைக்கப்பெற்றுள்ள காசுகளின் ஒருபுறத்தில் குதிரை, வியூபத் தம்பம், வேலியிட்ட மரம், நந்திபாதம், யாககுண்டம் முதலான உருவங்களும் மறுபுறத்தில் மீன் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன. இக் காசுகளில் “பெருவழுதி“ என்ற சொல் இல்லை. இக்காசுகளில் யாகங்கள் பற்றிய குறிப்புகள் உருவங்களாக வெளிப்படுவதால், இவை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கருதலாம். இப் பாண்டியர் அசுவமேதயாகம் செய்துள்ளார் என்பதற்கு இக்காசுகள் சான்றாக உள்ளன.

கிரேக்க, ரோமானியரின் காசுகளில் அரசரின் தலைவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். அக் காசுகளைப் பின்பற்றிப் பாண்டியரும் தங்களின் தலைவடிவத்தினைக் காசுகளில் பொறித்திருக்கலாம். இத்தகைய காசுகளின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

கரூரில் கிடைக்கப்பெற்ற காசு ஒன்றில் ஒருபுறம் யானையும் அதன்மேல் எட்டு மங்கலச் சின்னங்களும் யானையின் முன்புறம் சூலமும் வில்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. இதன் மறுபுறத்தில் வேலியிட்ட மரமும் மீன் குறியீடும் உள்ளன.

மதுரையில் 1917ஆம் ஆண்டு ஹார்விமில் கட்டுவதற்காக வானம்தோண்டியபோது (நிலத்தைத் தோண்டுதல்), ரோமானியரின் பழங்காலத் தங்கக்காசுகள் 11 கிடைக்கப்பெற்றன. இவற்றுள் கிளாடியஸ், நீரோ, டோமிட்டன் ஆகியோரின் தங்கக்காசுகளும் அடக்கம். பழங்காலத்தில் மதுரையோடு ரோமானியர்கள் வணிகவுறவு கொண்டிருந்தனர் என்பதற்கு இவை சான்றாக அமைகின்றன.

சங்க காலச் சேரர் காசுகள்

சேரர்கள் தங்களின் வெள்ளிக் காசுகளில் ஐந்து முத்திரைகளைப் பதித்தனர். கரூர் அமராவதி ஆற்றுப்படுகைகளில் கண்டறியப்பெற்ற காசுகளின் முன்புறத்தில் முகடு, சூரியன், சந்திரன், ஸ்தூபம், தொட்டிக்குள் மீன் ஆகியனவும் பின்புறத்தில் சேரரின் அரச முத்திரையான வில்லும் அம்பும் பொறிக்கப்பெற்றன. இவை “அச்சுக்குத்தப்பெற்ற காசுகள்“ என்று அழைக்கப்பெற்றன.61 சேரரின் செப்புக்காசுகள் இரண்டு கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அதில் ஒன்றின் ஒருபுறம் காளையின் நின்றநிலை உருவமும் கலப்பையும் மறுபுறம் வில், அம்பு, அங்குசம் ஆகியனவும் பொறிக்கப்பெற்றுள்ளன. மற்றொன்றின் ஒருபுறம் காளையின் நின்ற நிலை உருவமும் மறுபுறத்தில் வில், அம்பு, அம்பின் இருபுறத்தலும் ஸ்வஸ்திக் சின்னம், அங்குசம் ஆகியன பொறிக்கப்பெற்றுள்ளன. இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.

கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பெற்ற காசுகளுள் சிலவற்றில் சேரமான் மாக்காதையின் பெயர் தமிழி எழுத்துருவிலும் அவரின் தலை உருவங்கள் ஐந்து வகையில் (ஒரு காசில் ஓர் உருவ வகை என) பொறிக்கப்பெற்றுள்ளன. ஆதலால், வரலாற்றில் மாக்கோதை என்ற பெயரொட்டுடைய சேரவேந்தர்கள் ஐவர் இருந்தார்களா? இவர்களுள் ஒருவர் புறநானூற்றின் ஐந்தாம் பாடலில் இடம்பெற்றுள்ள சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையா? என்ற வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை. இக் காசுகளின் காலம் பொ.யு. முதல் நூற்றாண்டாகும்.

சேரர் மரபில் “பொறையர்“ குலத்து வேந்தரான் அந்துவன் சேரல் இரும்பொறையின் காசும் கண்டெடுக்கப்பெற்றுள்ளது. இதில் எழுத்துகளும் உள்ளன. சேர வேந்தர் கொல்லி மலையினை வென்றதன் நினைவாக ஒரு காசினை வெளியிட்டுள்ளார். அக்காசின் ஒருபுறத்தில் தோரணவாயிலின் உள்ளே ஒரு வேந்தர் நின்றநிலையில் உருவமும் அக்காசின் விளிம்புகளில் தமிழி எழுத்துருவில் “கொல் ஈப்புறை“ என்ற சொல்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. அதனை ஒட்டி ஆற்றுநீரில் இரண்டு மீன்கள் நீந்திக்கொண்டிருப்பது போலவும் பொறிப்புகள் உள்ளன. அக்காசின் மறுபுறம் வில்லும் அம்பும் பொறிக்கப்பெற்றுள்ளன. இது சேர வேந்தர் கொல்லிப் பொறையன் வெளியிட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. மற்றொரு காசில் ஒருபுறம் தமிழி எழுத்தில் “கொல்லிப்பொறையன்“ என்று எழுதப்பெற்றும் மறுபுறம் தோரணவாயிலின் நடுவில் நிற்கும் வேந்தரின் உருவமும் அவரது வலதுகரத்தில் ஏந்திய நிலையில் போர்க்கருவியும் வேந்தரின் இடதுபுறத்தில் நெடிய வேலியிட்ட மரம் ஒன்றும் வலப்புறம் ஒன்றெயொன்று தொடர்ந்து வேந்தரை நோக்கி நீந்திவரும் மூன்று மீன்களும் பொறிக்கப்பெற்றுள்ளன. இக்காசுகள் வட்ட வடிவத்திலும் தடித்தும் இருக்கின்றன. கரூரில் சீனம், கிரேக்கம், ரோம், சிரியா, பொனிசியா ஆகிய நாடுகளின் நாணயங்களும் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. இவை அந்நாடுகளுடனான கரூரின் வாணிப நடவடிக்கைகளுக்குச் சான்றுகளாக உள்ளன.

சங்க காலச் சோழர் காசுகள்

சங்கப் பாண்டியர், சங்கச் சேரர்களைப் போலச் சங்கச் சோழர்கள் மிகுதியான வகைகளிலும் எண்ணிக்கைகளிலும் காசுகளை வெளியிடவில்லை என்றே கருத இடமுள்ளது. சங்கச் சோழர்கள் செப்பு நாணயங்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.62 பூம்புகார் அகழாய்வில் சங்கச் சோழரின் சதுர வடிவ செப்புக்காசுகள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. அதில் ஒருபுறம் யானையும் மறுபுறம் புலியின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளன. சிலவற்றில் முன்புறம் குடை, யானை, குதிரை ஆகிய சின்னங்களும் மறுபுறம் புலியின் சின்னமும் பொறிக்கப்பெற்றுள்ளன. சோழரின் முட்டை வடிவ செப்புக்காசும் கிடைக்கப்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள சோழர் காசுகளில் உள்ள சின்னங்களைக் காணும்போது, அவற்றில் ஒரு புறம் புலியும் மறுபுறம் தேர், குதிரைகள் பூட்டப்பெற்றத் தேர், யானை, வேலியிட்ட மரம், குடை, வேல், விலங்கு, மரம் போன்றனவற்றுள் ஒன்றா சிலவோ பொறிக்கப்பெற்றுள்ளன என்பதனை அறியமுடிகின்றது. சோழர் காசுகளில் எழுத்துப்பொறிப்புகள் உடைய காசுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.63 இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள சங்கச் சோழர்களின் காசுகளின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. முதல் நூற்றாண்டு வரையில் என்று கணித்துள்ளனர்.

தமிழகத்தில் அயல்நாட்டு நாணயங்கள்

பழந்தமிழகத்தின் அயல் வாணிபக் களமாகத் திகழ்ந்த பூம்புகார், முசிறி, கொற்கை, கொல்லத்துறை, எயிற்பட்டினம், தொண்டி, மருங்கூர்ப்பட்டினம், பந்தர், கொடுமணம், தரங்கம்பாடி, நீர்க்குன்றம், புதுச்சேரி, நீர்ப்பெயற்று ஆகிய இடங்களில் அருகாமையில் அயல் நாணயங்கள் புதையுண்டிருக்க வாய்ப்புகள் மிகுதி. 64

பொ.யு.மு. 350ஆம் ஆண்டுக்கும் பொ.யு.மு. 100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த கிரேக்க நாணயங்கள் 50-க்கும் மேற்பட்டவை கரூர் ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. இவ் ஆற்றுப்பகுதியில் திரேஸ், கிரீஸ், கீரீட், ரோட்ஸ், சிரியா, பொனீசிய (லெபனான்), பிலிஸ்தியா, அஸ்கலோன், எதியோப்பியா, சூடான், ஜூடேயா, ஆகிய நாட்டு நாணயங்கள் சில கிடைத்துள்ளன. இவற்றுள் சில தங்க நாணயங்கள். இவற்றின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.

ரோம் நாட்டு நாணயங்கள் கரூர், கோவை (கத்தாங்கன்னி, குருத்துப்பாளையம், பெண்ணார், வெள்ளலூர், பொள்ளாச்சி), ஈரோடு போன்ற ஊர்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. பாண்டிய நாட்டிலுள்ள மதுரை கலயம் புத்தூர், நெல்லை கரிவலம் வந்தநல்லூர், சோழ நாட்டில் உள்ள பூம்புகார், தஞ்சாவூர், தொண்டை நாட்டில் உள்ள மாமல்லபுரம், மாம்பலம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. பொ.யு. 54ஆம் ஆண்டு முதல் 68ஆம் ஆண்டு வரையில் ரோமை ஆண்ட நீரோ மன்னரின் காலத்தில் ரோம் நாணயங்களில் போலிகள் (கள்ளக் காசுகள்) ஊடுறுவின. இதனால் தமிழக வணிகர்கள் ரோம நாணயங்களை சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர்.

பொ.யு.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே சீனா, தமிழகத்துடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தபோதும் தமிழகப் பகுதியில் இதுவரை பொ.யு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய சீனாக்காசுகள் (சீனக்கனகம்) கிடைக்கவில்லை.65 பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும்,பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக் குன்னம் என்ற ஊரிலும்மன்னார்குடி வட்டத்திலுள்ள தாலிக்கோட்டை என்ற கிராமத்திலும் சீன நாணயங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.

ஒரு பழங்காசினைக் கொண்டு வரலாற்றுச் செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ளமுடியும். அக்காசு கண்டெடுக்கப்பெற்ற இடத்தினையும் அக்காசில் உள்ள குறிகளையும் கொண்டு அக்காசினை வெளியிட்ட பேரரசின் எல்லைகளும் பரப்பும், அப்பேரரசின் பொருளாதாரம், வணிபத்தொர்புகள், அப்பேரரசரின் மரபுவரிசைநிலை, எழுத்துவடிவம், சமயப்பற்று, சடங்குகள் இன்ன பிறவற்றையும் கணிக்க முடியும்.

வீரவாளும் வெற்றிவேலும்

சங்க காலம் / தேடல் – 19

640px-Puhar-ILango

தம் வீர வாளினைச் சுழற்றிய திசையெங்கும் வேந்தர்களுக்கு வெற்றிதான். அவர்களுக்கு உதவியாக இருந்த படைவீரர்கள் வேலேந்தினர். வாளும் வேலும்கொண்டு படையை நடத்தி, குடிகாத்து, நாட்டினை விரிவாக்கினர். முடியுடை மூவேந்தர் மரபினரின் வெற்றிகள் அனைத்தும் இவ்வகையில் பெறப்பட்டவையே. ஒரு விதத்தில் போர்களின் வழியாகத்தான் வேந்தர்களை நாம் அடையாளம் காணமுடிகின்றது.

மூவேந்தர்களின் மரபில் சங்ககாலச் சேரர்கள், சங்ககாலச் சோழர்கள், சங்ககாலப் பாண்டியர்கள் பற்றியும் அவர்களுக்கு நட்பாக அல்லது எதிரியாக இருந்த வேளிர்கள், சிற்றரசர்கள் பற்றியும் அறிந்துகொண்டால்தான் சங்க காலத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றிய தெளிவான ஒரு வரைபடம் நமக்குக் கிடைக்கும்.

போர்

மூன்று வேந்தர் மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை, குடை, முடி, கோல் என்பனவாகும். “வெண்கொற்றக்குடை“ என்பது, காவல் தொழிலையும் “மணிமுடி“ என்பது, அரசியல் தலைமையையும் “செங்கோல்“ என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தமக்கு நிலைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே போர் மேற்கொண்டனர். போர் இரண்டு நிலைகளில் நடைபெற்றது. ஒன்று தன் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள. மற்றொன்று தன் நாட்டை விரிவாக்கிக்கொள்ள.

அக்காலப் போர்க்களத்தில் வில், அம்பு, வாள், வேல், குந்தம், கோல், கைக்கோடரி, எஃகம், முசலம் போன்றவற்றை ஆயுதங்களாகவும் இரும்பாலான மெய்மறைகள், கடுவாத்தோலால் செய்யப்பட்ட சட்டை, கேடயம், உடலில் போர்த்தும் கவசம் ஆகியன தடுப்பாயுதங்களாகவும் பயன்படுத்தினர். போரைத் தொடங்கும் முன்பு கொம்பு, சங்கு, முரசு போன்றவற்றை முழக்கினர். முரசில் வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு என மூன்று வகைகள் இருந்தன. போரில் வீர முரசினை முழக்கினர். பகைவர் போரைத் தவிர்க்க விரும்பினால் அவரிடமிருந்து திறைப்பொருளினைப் பெற்றுக்கொண்டனர்.

எதிரிகளின் கோட்டை வாயில்களையும் சுற்றுச் சுவர்களையும் உடைக்க யானைப் படையினைப் பயன்படுத்தினர். வேந்தர்களுக்கு யானைகளே தாம் உலா வரும் வாகனமாகவும் போர்க்கள வாகனமாகவும் பயன்பட்டன. போர்க்களத்துக்குச் செல்லும் முன் படையானைகளுக்கு மதுவினை ஊட்டி வெறியேற்றியுள்ளனர். தேர்கள் மிகுதியாகப் பொதுவாழ்வில் பயன்படுத்தப்பட்டன. சிறுபான்மையாகப் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. தேர்ப்படையில் பலவகைத்தேர்கள் அணிவகுத்தன. தேர், நெடுந்தேர், கொடுவஞ்சித்தேர் என்பன அத்தேர்களுள் முதன்மையானவை. பெரும்பாலும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையே பயன்படுத்தினர். யானைகள் பூட்டப்பட்ட தேர்களும் இருந்துள்ளன. குதிரைப் (இவுளி) படைகள் பெரும்பாலும் போர்வீரர்களால் பயன்படுத்தப்பட்டன. வாளும் வேலும் ஏந்திய வீரர்கள் குதிரைமீது சென்று எதிரிகளைத் தாக்கினர். தமிழக வேந்தர்கள் இக் குதிரைப் படைகளால்தான் தமிழகத்தின் மீது படையெடுத்த வம்பமோரியர்களையும் மோரியர்களின் தடுத்தனர். நூறு எண்ணிக்கையிலான வேல் ஏந்திய காலாட்படை வீரர்கள் தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து, அணிவகுத்தனர். இப் படையினைத் தூசுப்படை என்றனர். போரில் இப்படையினரே முன்சென்றனர். கடல்வழியாக வரும் எதிரிகளைத் தாக்கக் கப்பற்படையினையும் வேந்தர்கள் வைத்திருந்தனர். இது அவர்களின் கடல் வாணிபத்திற்குப் பாதுகாப்பாக இருந்தது. சேரர்களின் கப்பற்படையும் யானைப் படையும் புகழ்பெற்றவை. ஈழத்தை இக் கப்பற்படையினால்தான் இரண்டாம் கரிகாற்சோழன் (பெருந்திருமாவளவன்) வெற்றிகொண்டார்.

ஒவ்வொரு வேந்தரும் நிலையான படைகளை வைத்திருந்தனர். போர்க்காலத்தில் கூடுதல் படைக்காக வாட்குடி மக்களைத் திரட்டிப் படையினைப் பெருக்கிக்கொண்டனர். அப்படையில் மறவர், எயினர், மழவர், மல்லர் போன்ற மறக்குடியினரே இருந்துள்ளனர். தனக்குக் கீழ் உள்ள சிற்றரசுகளின் படைகளை உரிமையோடு தம் படையுடன் இணைத்துக்கொண்டனர். படைவீர்ர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளித்தனர். இப் போர்ப் பயிற்சிப் பட்டறைக்கு “முரண் களரி“ என்று பெயர். போரற்ற காலங்களில் பொதுமக்களின் பார்வைக்காகவும் படையினரின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. இதனை “வாளுடைவிழா“ என்றனர்.

போருக்குச் செல்லுதலை ஒரு விழாவாகவே கொண்டாடியுள்ளனர். இதற்காகப் பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. நன்னிமித்தம் பார்த்தல், நற்சொல்கேட்டல் (வரிச்சி), போர்வாளினை நீராட்டுதல், குடை மற்றும் முரசினைக்கொண்டு அணிவகுப்பினை நடத்துதல், வஞ்சின மொழி கூறுதல், கொற்றவை வழிபாடு (பலியிடுதலுடன்), மரபுக்குரிய மாலையணிதல், தங்கள் சின்னம் தாங்கிய கொடியினை ஏந்துதல், அடையாளப் பூவினைச் சூடுதல் போன்றன போருக்குச் செல்லும்முன் செய்யப்பெற்ற சடங்குகளாகும். வேந்தர் தன் வீரர்களுக்கு உணவளித்து மகிழ்விப்பார். இதனைப் “பெருஞ்சோற்றுநிலை“ என்பர்.

போர் நிகழும் இடத்துக்குச் சற்று தூரத்தில் வேந்தர் பாசறை அமைத்துத் தங்குவதும் உண்டு. இது கூதிர் பாசறை, வேனிற் பாசறை என இரண்டு வகைப்படும். இந்தப் பாசறை ஓர் ஊர் போலத்தோன்றும். ஆதலால், இதனைக் “கட்டூர்“ என்றனர். பாசறைப் பணியாளர்களுள் பெண்களும் இருந்தனர்.

போருக்குப் பின்னரும் சில சடங்குகள் செய்யப்பட்டன. போரில் வீரமரணம் அடைந்தவருக்கு நடுகல் எடுத்துள்ளனர். அந் நடுகல்லைச் சுற்றி வேல் நட்டி, அரண் அமைத்துக் கோவிலும் அமைக்கப்பட்டது. அங்கு நெல் உகுத்து, நீராட்டி, நாட்பலி ஊட்டி, விளக்கேற்றி வழிபட்டுள்ளனர். போரில் வெற்றிபெற்றால் வேந்தர் வீரர்களுடன் சேர்ந்து துணங்கைக் கூத்தாடுதலும் நடைபெற்றுள்ளது. வேந்தர் தம் வீரர்களுக்கு “உண்டாட்டு“ நடத்துவர். இதில் கள்ளும் உண்வும் மிகுதியா இருக்கும். பகைநாட்டில் கொள்ளையிட்ட பொருட்களின் சில பகுதியை வரிசையறிந்து வீரர்களுக்கு வழங்குவதும் உண்டு.

தாம் வெற்றிபெற்ற நாட்டில், கொள்ளையிட்ட பின்னர் தீயிட்டு அழித்தல் (மழபுல வஞ்சி, கொற்றவள்ளை ஆகிய துறைகள் இவை பற்றி விளக்கியுள்ளன), வயல்களைக் கழுதைபூட்டப்பட்ட ஏர்கொண்டு உழுதல், நீர் நிலைகளில் யானையை இறக்கிப் பாழாக்குதல், பெண்களின் கூந்தலை அறுத்தல், ஆண்களின் பற்களைப் பிடுங்குதல் போன்ற வன்முறைகளை மேற்கொண்டனர். தாம் போர்தொடுத்த நாட்டில், ஊரில் உள்ள காவல்மரத்தை அழித்தனர். ஏன் காவல் மரத்தை அழிக்கவேண்டும்? அதன் பின்னணியில், “ஒரு குலத்தின் கருவறுத்தல் சார்ந்ததொரு பெரிய நம்பிக்கை“ இருக்கின்றது.

ஓர் இனக்குழு, மூதாதையர் உறவு வைத்துக்கொள்ளும் உயிரினமே குலக்குறி. எருமை, புலி, சிங்கம், பாம்பு, கங்காரு, மீன், பல்வேறு வகை மரங்கள், செடி – கொடிகள், புறா, கோழி, மயில், முதலான பறவைகள் இனக்குழு வாழ்வில் குலக்குறியாகக் கொள்ளப்பெற்றன. இக்குலக்குறி அந்த இனத்தின் அடையாளச் சின்னமாக அமைந்தன.

புறப்பாடல்களில், மூவேந்தர்கள் பகைவர்களை வெற்றிகொள்ளும்போது அவர்களுடைய காவல் மரங்களையும் காவல் மரங்கள் இடம்பெற்றுள்ள காவற்காட்டினையும் கோடரியால் வெட்டி எரிக்கின்ற செயல் விரித்துக்கூறப்பெற்றுள்ளன. பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதன் பகைவர்களின் கடம்ப மரத்தை வெட்டிய செய்தி விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. புறநானூற்றின் 3, 23, 59 ஆகிய பாடல்கள் “காவல்மரம்“ பற்றி எடுத்துரைத்துள்ளன. காவல் மரங்கள் சூரிய ஒளிக்கதிர்கள் நுழைய முடியாதவாறு அடர்ந்த சோலைக்குள் (காவு) இருந்ததாகச் சுட்டியுள்ளன. சங்க காலத்தில் இனக்குழு மக்களால் காவல் மரங்கள் புனிதமானவையாகவும் வழிபாட்டிற்குரியனவாகவும் கருதப்பெற்றிருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் காவற்காட்டினைக் காவு, கடிமிளை என்று குறிப்பிட்டுள்ளன.

காவல் மரம் வழிபாட்டுக்குரிய புனிதப் பொருளாகக் கருதப்பட்டதால்தான் அதனை அவமதிக்கும் வகையில் வேந்தர் அதனை இழிவுபடுத்தும் நோக்கோடு அதில் தமது யானைகளைக் கட்டுதல், வெட்டுதல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். “ஓர் இனத்தினை அழிக்கும்போது அவ் இனத்தின் உயிர் ஆற்றலாகவும் வளமாகவும் இருக்கும் குலக்குறியினை அழித்துவிட்டால் அவ் இனம் முற்றாக அழிந்துவிடும்“ என்ற நம்பிக்கையில் இச்செயல்கள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன.

சிறந்த படைத்தலைவருக்கு வேந்தர், “ஏனாதிப் பட்டம்“ வழங்கினார். இப்பட்டம் அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கும் குடியிருப்புப் பகுதிக்கு “ஏனாதிப்பாடி“ என்ற பெயரும் இருந்துள்ளது.

சங்கச் சேரர்கள்

கொங்கணக் கடற்கரைக்குத் தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரையும் கெங்குநாடும் இணைந்த பகுதி சேரநாடாகும். மங்களுருக்கு அருகில் கடலோடு கலக்கும் சந்தகிரி ஆற்றுக்குத் தெற்கிலுள்ள மலைப்பாங்கான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சேரநாடு அமைந்திருந்தது. சேரர்கள் மலைநாட்டுக்காரர்கள். “சேரல்“ என்பது மலையைக் குறிக்கும். மலைவேடர்களுக்கு வில்லும் அம்பும் வேட்டை ஆயுதமாக இருந்ததால், அவற்றையே தங்களின் சின்னமாகக் கொண்டனர். கரூவூர், தொண்டி, நறவு, மாந்தை, வஞ்சி முதலானவை சேரநாட்டின் முதன்மையான பெரிய ஊருகளாகும். சேரநாடு “உம்பற்காடு“ என்றும் “வேழக்காடு“ என்றும் அழைக்கப்பட்டது. சேரர்களைச் சேரர், வானவர், வில்லவர், குடவர், குட்டுவர், பொறையர், மலையர் என்று அழைத்தனர்.

சேரரில் இரண்டு கிளைவழியினர் உண்டு. 1. உதியன் சேரலாதன் கிளைவழி, 2. இரும்பொறை கிளைவழி. உதியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பெருஞ்சேரலாதன், செங்குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர் உதியன் கிளைவழியில் தோன்றியவர்கள். அந்துவன் சேரல் இரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரலிரும்பொறை, கணைக்கால் இரும்பொறை முதலியோர் இரும்பொறை கிளைவழியினர்.

சேர நாட்டின் தெற்கில் உதியன் சேரலாதன் மரபினரும் வடக்கில் இரும்பொறை மரபினரும் ஆதிக்கம் செலுத்தினர். இரும்பொறையினர் கரூரைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்தனர்.

சேரநாட்டை முதன்முதலில் வரிவாக்கம் செய்தவர் உதியன் சேரலாதன். இவர் குழுமூரில் இருந்துகொண்டு, சேரநாட்டைச் சிறுகச்சிறுக விரிவாக்கினார். இவ் ஊரில் உள்ள ஏழை, எளியவருக்கு இவர் தொடர்ந்து உணவளித்துள்ளார். ஆதலால், இவ் ஊர் “உதியன் அட்டில்“ என்று அழைக்கப்பட்டது. இவர், பாடலிபுத்திரத்தினை ஆண்ட இறுதி நந்த மன்னரின் காலத்தைச் சேர்ந்தவர். அக்காலத்தில், இறந்தவர் நினைவாக இருப்போருக்கு உணவளிக்கும் வழக்கம் (பெரும்பிடி, பொருஞ்சோறு) தமிழகத்தில் மிகுதியாக இருந்துள்ளது. அதனைப் பின்பற்றி இவர் முன்னோர் வழிபாட்டுச் சடங்கினைப் பெரியளவில் நடத்தினார். முன்னோர் நினைவாகத் தம் படையினருக்குப் “பெருஞ்சோறு“ அளித்துள்ளார். ஆதலால், இவரைப் “முதியர்ப் பேணிய உதியன் சேரலாதன்“ என்று சிறப்பித்துள்ளனர். பாடலிபுத்திரத்தில் நந்த மன்னருக்கும் சந்திரகுப்தமோரியருக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, நந்த மன்னருக்கு உதவியாகப் படைநடத்திச் சென்றுள்ளார். வேணாட்டு வேளிர்கள் இவருக்கு வேண்டியவர்களாக இருந்ததால், காலம் கனிந்தபோது தம் நாட்டுக்குத் தெற்கே தென்குமரியைச் சூழ்ந்திருந்த தென்பாண்டி நாட்டை வென்று, தென் கடற்கோடியைத் தம் நாட்டுக்கு எல்லையாக்கினார். இவர் இரண்டாம் நன்னனைப் போரில் வென்றார்.

உதியன் சேரலாதன், வெளியன் வேண்மாள் நல்லினி தம்பதியருக்குப் பிறந்தவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவர் வடஇந்தியாவரை படையெடுத்திச் சென்றுள்ளார். யவனர்களுடனும் கடற்கொள்ளையருடனும் போரிட்டு வென்றுள்ளார். இவர் கடம்பர்களை வென்று அவர்களின் காவல் மரத்தினை வெட்டித் தனக்கு முரசு செய்தார். இவர் காலத்தில் பாடலிபுத்திரத்திற்கும் தமிழகத்திற்கும் நட்புறவு நீடித்தது. அது இந்தியாவின் உள்நாட்டு (வட, தென் இந்திய) வாணிபத்திற்கு உதவியது. இவரைக் “குடக்கோ நெடுஞ்சேரலாதன்“, “குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்“, “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்“ என்றெல்லாம் அழைத்துள்ளனர். 58ஆண்டுகள் ஆட்சிசெய்த இவர், போர்வை என்ற இடத்தை ஆண்ட சோழவேந்தர் “பெருவிறற்கிள்ளி“ என்று அழைக்கப்பட்ட வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியுடன் போஓர் என்னுமிடத்தில் போரிட்டு மாண்டார்.

இவருக்குப் பின்னர் இவரது தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன் ஆண்டார். இவர், மலை நாட்டுப் பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்ட “உம்பற்காடு“ எனும் பகுதியைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவந்தார். இவர் காலத்தில் “கொற்றவை“ வழிபாடு சிறப்புற்று இருந்தது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் பிறந்தவர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவர், “தான் சேர நாட்டிற்குரிய அனைத்துப் பகுதிகளையும் ஆளும் வரை மணிமுடி அணியாமல், களங்காயால் செய்த கண்ணியும் நாரால் செய்த முடியும் அணிந்துதான் அரசாட்சி புரிவேன்“ என்று கூறி, அவ்வாறே அரச பதவியினை ஏற்றமையால் இவருக்கு இப்பெயர் வந்தது. இவர் நேரிமலையில் இருந்து சேர நாட்டினைச் சீர்ப்படுத்தினார். இவர் சேர நாட்டையொட்டி மேலைக் கடற்கரையில் வியலூரை ஆண்ட மூன்றாம் நன்னன்வேண்மானை வாகைப் பெருந்துறையில் எதிர்கொண்டு அழித்தார். அவ்வெற்றியின் வழியாகச் சேரநாடு இழந்திருந்த பகுதிகளைத் திரும்பப் பெற்றார்.பூழிநாட்டின் மீது படையெடுத்து அதனையும் சேரநாட்டுடன் இணைத்தார். சேர நாட்டுப் பெருவழிகளில் இருந்த கள்வர் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தினார். பசும்பூண் பாண்டியருக்கும் தனக்கும் பகையாக இருந்த நெடுமிடல் என்ற மன்னரை அழித்ததோடு, அம் மன்னனின் வளமான நாட்டினையும் அழித்தார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை தம்பதியருக்குப் பிறந்த வெல்கெழுகுட்டுவன் ஆட்சிக்கு வந்தார். இவரைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “செங்குட்டுவன்“ என்று வரலாற்றாசிரியர்கள் பலர் தவறாகக் கணித்துள்ளனர். இவர் கடற்கொள்ளையரை முற்றாக அழித்தார். ஆதலால், இவருக்குக் “கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன்,“ “கடற்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவன்“ போன்ற சிறப்புப் பெயர்கள் வழங்கலாயிற்று. இவர் காலத்தில் மோகூரைப் பழையன் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மீது வெல்கெழுகுட்டுவனின் நண்பர் அருகை என்பவர் பகைகொண்டார். பழையன், அருகையைப் போரில் வென்று, அவரைப் புறமுதுகிடச்செய்தார். அருகை தலைமறைவானார். இதனை அறிந்த வெல்கொழுகுட்டுவன் பழையன் மீது போர்தொடுத்தார். “மோகூர்“ என்ற பெயரில் பல ஊர்கள் இருந்துள்ளன. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சிக்கு அருகில், மதுரை மாவட்டத்திலுள்ள மேலூருக்கு அடுத்து, பொதியமலைக்கு அருகில் என இருந்த இ்ம் மூன்று மோகூர்கள் அல்லாத ஒரு மோகூரை ஆண்ட பழையனை அழித்து, அந்த மோகூரை வெல்கெழுகுட்டுவன் கைப்பற்றினார். பழையனின் காவல் மரமான வேம்பினை வெட்டிப் பழையனின் மனைவியரின் கூந்தல்களை அறுத்து, அவற்றைக் கொண்டு கயிறுதிரித்து, அக்கயிற்றின் (மயிர்க்கயிறு) ஒரு முனையினை வீழ்த்தப்பட்ட வேம்புமரத்தினைப் பிணைத்து, மறுமுனையினை யானைக் காலில் கட்டி, யானையால் அம் மரத்தினை இழுக்கச்செய்தார். அந்த அதன் நினைவாக அப்பகுதியில் இருந்த ஒரு ஊருக்கு “குட்டுவனஞ்சூர்“ என்ற பெயரிடப்பட்டது. இது “குட்டுவன் அஞ்சிய ஊர்“ அல்ல. இதனைக் “குட்டுவனைக் கண்டு அஞ்சிய ஊர்“ என்று பொருள் கொள்ளவும். இவர் வியலூர், கொடுகூர், நேரிவாயில் போர்களில் வெற்றிபெற்றார்.

இவரது மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது இயற்பெயர் “அத்தி“. இவர் இளமையில் ஆடற்கலையில் சிறந்து விளங்கி “ஆட்டனத்தி“ என்ற பெயரினைப் பெற்றவர். இவர் இயல், இசை, நாடகம், ஆடல், பாடல் ஆகிய கலைகளைக் கற்றும் கற்பித்தும் வந்தார். இவர் முதற்கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியை மணந்தார். கழாஅர் முன்துறையில் காவிரி நீரில் இவர் நடனமாடும்போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை மருதி என்பவள் காப்பாற்றி அவரை மணந்துகொண்டாள். தன் கணவரைத் தேடிவந்த ஆதிமந்தியிடம் மருதி இவரை ஒப்படைத்துவிட்டு, கடலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாள். இவரது நாட்டின் வடஎல்லையில் வாழ்ந்திருந்த ஓரினத்தவர் இவரது நாட்டிற்குள் புகுந்து ஆட்டு மந்தையினைக் கவர்ந்து சென்றனர். இவர் தாமே சென்று அவ் ஆட்டுமந்தையினை மீட்டுவந்தமையால் இவருக்கு, “ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவருக்குப் பின்னர் அந்துவன் சேரல் முதலான சிலர் ஆட்சிக்கு வந்தனர். அப்போது சோழநாட்டினை முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி ஆண்டுவந்தார். இச்சேரர்களின் காலத்தில் பூழிநாடும் கொங்குநாடும் சேரநாட்டுடன் இணைக்கப்பெற்றன.

இவர்களைத் தொடர்ந்து செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் காலூன்றியது. இவ் வேந்தரும் மற்ற சீறூர் மன்னர்களும் வணிகர்களும் பௌத்த துறவிகள் தங்குவதற்காகக் குகைகளைச் செப்பம்செய்து வழங்கினர். புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடும் “கோ ஆதன் செல்லிரும் பொறை“ இவராகவும் இருக்கக்கூடும்.

இவரது மகன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார். இவர் “அஞ்சி“ என்ற மன்னரை எதிர்த்துத் தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டார். யார் இந்த அஞ்சி? வரலாற்றில் இரண்டு அஞ்சிகள் உள்ளனர். ஒருவர் அதியமான் நெடுமான் அஞ்சி. மற்றொருவர் இவரின் முன்னோரான அஞ்சி. இருவரையுமே “அஞ்சி“ என்றே குறிப்பிட்டுள்ளனர். தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக் கொண்டு குதிரைமலை (குதிரை மூக்கு மலை) உள்ளிட்ட நாட்டினை ஆட்சிபுரிந்தவர் அதிய மரபினரான அதியமான் நெடுமான் அஞ்சி. “எழினி“ என்பது, இவருக்குரிய குடிப்பெயராகும். இவரைக் “கொங்குநாட்டு மழவர்“ என்றும் குறிப்பிடுகின்றனர். அஞ்சி தன்னைப் பகைத்த ஏழு அரசர்களையும் எதிர்த்தவர். அஞ்சி மலையமான் திருமுடிக்காரியின் மீது படையெடுத்துச் சென்று அவருடைய திருக்கோவலூரை அழித்தார். திருமுடிக்காரி தம்பியோடிச் சென்று சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் கொல்லிமலை ஓரியும் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் பகையில் இருந்தார். காரியின் துணையுடன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின்மீது படையெடுத்தார். இதனை அறிந்த பாண்டியரும் சோழரும் அதியமானுக்குத் துணையாகப் படைகொண்டுவந்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை பகைவர் அனைவரையும் துணிந்து தாக்கித் தோல்வியடையச் செய்தார். அதியமானைக் கொன்று, களவேள்வி செய்தார். இவரின் தகடூர் வெற்றியைத் “தகடூர் யாத்திரை“ என்ற நூல் விரித்துரைத்துள்ளது. “முன்னொரு காலத்தில் 14 வேளிர்கள் ஒன்றுகூடிக் காமூரை எறித்தார்கள்“ என்று புலவர் பரணர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய காமூர் நாட்டை ஆண்டவர் கழுவுள். இவர் ஆயர்குலத் தலைவர். இவர் மூவேந்தருக்கும் அடங்காமல் இருந்தார். இவரைப் பெருஞ்சேரல் இரும்பொறைத் தாக்கி, காமூரை எறித்து, கழுவுள் கோட்டையினைக் கைப்பற்றினார். சேரநாட்டின் எல்லைக்கு வெளியிலிருந்த பூழி, கொல்லிக்கூற்றம் ஆகிய பகுதிகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தார். இவரது காலத்தில் பாண்டிய நாட்டில் அறிவுடை நம்பியும் சோழ நாட்டில் கோப்பெருஞ்சோழனும் ஆட்சியிலிருந்தனர். அவ் இருவருக்கும் இணையான பெருவேந்தராக இவர் விளங்கினார்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் இளஞ்சேரல் இரும்பொறை. இவரது காலத்தில் சோழரும் பாண்டியரும் சேரநாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களை இவர் வென்றார். விச்சி மலையினையும் அதனைச் சூழ்ந்திருந்த காட்டையும் குறுநிலங்களையும் ஐந்து பெருங்கோட்டைகளையும் கைப்பற்றினார்.

இவருக்குப் பின்னர் ஆண்ட யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் தலைநகர் தொண்டியாகும். இவரது இயற்பெயர் “வேழநோக்கின் விறல்வெஞ் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை“ என்பதாகும். இவரது கண் யானையின் கண்போன்று இருந்தமையால் இவ் அடைமொழியைப் பெற்றார். இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் தலையாலங்கானப் போரில் தோல்வியடைந்து கைதியானார். பின்னர் இவருக்கும் சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, சோழருக்குத் துணையாக வந்த முள்ளூர் மலைப்பகுதியினை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியிடம் (இவர் மூவேந்தரில் யார் படையுதவிகோரினாலும் உதவுவார்.) சேரர் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோல்வியுற்றார்.

இவருக்குப் பின்னர், குட்டுவன்கோதை ஆண்டார்.“வானவன்“ என்று அழைப்பர். வானவன் சேரமான் குட்டுவன் கோதையின் படைத்தலைவர் பிட்டன். இவரைப் பிட்டங்கொற்றன் என்றனர். அதியர் குடியைச் சேர்ந்த அஞ்சிக்கும் எழினிக்கும் உரிமையாக இருந்த குதிரைமலைப் பகுதியைச் சேரர் கைப்பற்றித் தன் படைத்தலைவராகிய பிட்டங்கொற்றனுக்கு வழங்கினார். அதன்பின்னர் பிட்டங்கோற்றன் குதிரைமலைப் பகுதியினை ஆண்டுவந்தார். இவர் கொங்கு நாட்டிலுள்ள குறும்பொறைக்குக் கிழக்கேயுள்ள ஆமூரை ஆண்டக் கொடுமுடியைத் தாக்கினார். கொடுமுடி வென்றார். சோழநாட்டிலும் ஆமூர் உள்ளதால், இந்தக் கொடுமுடியைச் சோழரின் படைத்தலைவர் என்று கருதலாம்.

வானவன் சேரமான் குட்டுவன் கோதைக்குப் பின்னர் திருக்குட்டுவன், இளம்கடுங்கோ ஆகியோர் ஆண்டனர்.

அதன் பின்னர் கோக்கோதை மார்பன் மாரிவெண்கோ ஆட்சிக்கு வந்தார். மாந்தரஞ்சேரல் இறந்தவுடன் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சிமாநகரை முற்றுகையிட்டார். கோக்கோதை மார்பன் கோட்டைக்குள் ஒளிந்திருந்தார். “ஒளிந்திருக்கும் வேந்தரைத் தாக்குவது உமது சிறப்பிற்கு அழகல்ல“ என்று புலவர் ஆலத்தூர் கிழாரும் புலவர் மாறோக்கத்து நப்பசலையாரும் கூறியதைப் புறக்கணித்துவிட்ட கிள்ளிவளவன், வஞ்சிமாநகரின் அகழியையும் நீர்நிலைகளையும் மதிலையும் ஊர்களையும் அழித்தார். தொண்டியைத் தலைநகராகக்கொண்டு சேரநாட்டினை ஆண்டதாக மற்றொரு கோக்காதை மார்பனும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர், கிள்ளிவளவன் மதுரைப் பாண்டியரைத் தாக்கமுயற்சித்தபோது, அவரைத் தடுத்துப் போரிட்ட, பழையன்மாறன் என்பவரிடம் தோல்வியுற்றதனை அறிந்து, மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

சேரப் பேரரசு தொய்வடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டபோது சேரலாதன் ஆட்சிக்கு வந்தார். இவர் ஞாயிற்றுச் சோழனுடைய மகள் நற்சோணையை மணந்தார். இத்தம்பதியருக்குப் பிறந்தவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவன்தான் சேரர் குலம் மீண்டும் உயர்வடையக் காரணமாக இருந்தார். இவரது மனைவி இளங்கோவேண்மாள். இவரது காலத்தில் இலங்கையை முதலாம் கயவாகு ஆண்டுவந்தார். “கயவாகு பொ.யு.171 முதல் பொ.யு. 193 வரை ஆண்டார்“ என்று இலங்கை வரலாற்று நூலான மாகவம்சத்தைப் புதுப்பித்த கெய்சர் குறிப்பிட்டுள்ளார். சாதவாஹனர் ஸ்ரீ சதகர்ணியும் இவரது காலத்தவரே. கொடுங்கூரை ஆண்ட கொங்கரை எதிர்த்துச் செங்களத்தில் செய்தபோரிலும் வட ஆரியரோடு புரிந்த வண்டமிழ்ப் போரிலும் கங்கை நதிக்கரையில் நடைபெற்ற போரிலும் இமயத்தை நோக்கிய படையெடுப்பிலும் வெற்றிபெற்றார். இமயத்தில் கல்லெடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி, கண்ணகிக்குச் சிலைசெய்து, கோயில் அமைத்துப் பத்தினித் தெய்வ வழிபாட்டினை நடத்தினார். அவ் விழாவில் இலங்கை வேந்தர் கயவாகுவும் கலந்துகொண்டார். இது தொடர்பான செய்திகளைச் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் காணமுடிகின்றது.

சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தர் கணைக்கால் இரும்பொறை ஆவார். இவர் சோழ வேந்தர் வெங்கணானிடம் தோல்வியுற்றார்.

சங்கச் சோழர்கள்

காடுகளை அழித்துக் கழனிகளாக்கிய (கழனி – விளைநிலம்) பெருமையுடையோர் சோழர்கள். இவர்கள் நாட்டைச் “சோழநாடு“ அல்லது “சோணாடு“ என்று அழைத்தனர். வடக்கில் நெல்லூரிலிருந்து தெற்கில் புதுக்கோட்டை வரையுள்ள பகுதி சோழநாடு. காடுகளில் வாழ்ந்த புள்ளிப்புலிகளின் நினைவாக இவர்கள் தமது கொடியில் புலிச்சின்னத்தைப் பொறித்தனர். சோழர்களைச் சென்னி, செம்பியன், வளவன், கிள்ளி என அழைத்துள்ளனர். புகார், உறையூர், அழுந்தூர், ஆவூர், குடமூக்கு போன்றன சோழநாட்டின் முதன்மையான நகரங்களாகும். வளம்மிகுந்த நன்செய் நிலங்களை உடைய இப்பகுதியில் நெல்விளைச்சல் மிகுதி. முதற்சோழன் வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி. இவர் இங்கு ஆட்சிசெய்தபோது வட இந்தியாவில் நந்தர்கள் ஆண்டனர். சேரநாட்டினை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆண்டார். சேரரும் சோழரும் பகைகொண்டு, போர்க்களத்தில் கடும்போர் புரிந்து, அக்களத்திலேயே இருவரும் மாண்டனர்.

இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி. வரலாற்றில் “இளஞ்சேட்சென்னி“ என்ற பெயரில் நால்வர் உள்ளனர். உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, வம்ப வடுகரை ஓட்டிப் பாழியை அழித்த இளம்பெருஞ்சேட்சென்னி. இவர்கள் நால்வரும் ஒருவரே என்ற கருத்தும் உள்ளது.

இவரது காலத்தில் சேரநாட்டினை வெல்கெழு குட்டுவனும் பாண்டிய நாட்டினைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் ஆண்டுவந்தனர். மோரியர் மற்றும் கோசர்கள் இணைந்து கூட்டுப்படை நடத்திவந்து எதிர்த்தபோது, அப் படைகளைச் சோழன் உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னி எழில்மலை பாழிகோட்டையில் எதிர்கொண்டார். வெற்றிபெற்றார். இவரது படையில் தேர்ப்படைக்கு முதன்மைத்தன்மை தரப்பட்டுள்ளது. இவர் வம்பவடுகரை வென்றார். இவர் வேளிர் குலத்துடன் மணவுறவு கொண்டவர். இவரின் மனைவி கருவுற்றிருந்த போது, இவர் ஒரு போர்க்களத்தில் மாண்டார். குழந்தை பிறந்தது. அக் குழந்தைதான் முதலாம் கரிகாற்சோழன் (கரிகால் வளவன்). இவரை இவரது தாய்மாமன் இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) வளர்த்தார். கரிகால் வளவனை அழிக்கப் பெரும் எரியூட்டும் சதி நடந்தது. அதிலிருந்து தப்பும்போது இவரது கால் தீயால் கருகிப் புண்ணாகியது. அதனால் “கரிகாற்சோழன்“ என்று குறிப்பிடப்பட்டார். அதன் பின்னர் பல எதிர்ப்புகளையும் தாண்டி, தன் தாய்மாமன் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார்.

முதலாம் கரிகாற்சோழன் தன் இளம்வயதிலேயே ஒரு பெரும்போரினை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சிறுவன்தானே எளிதில் வென்றுவிடலாம் என்ற தவறான கணிப்புடன், சேரரும் பாண்டியரும் வேளிர் ஒன்பதுபேர்களுடன் கூடிப் பெரும்படைநடத்தி, நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள “வெண்ணி“ என்ற ஊரின் வாசலில் (கோவில்வெண்ணி), முதலாம் கரிகாற்சோழனை எதிர்த்தபோது, துணிவுடன் போராடி அனைவரையும் அழித்தார். இவர் சேரன் பெருஞ்சேரலாதன் மீது எறிந்த வேல், பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து, முதுகின் வழியாக வெளிப்பட்டது. முதுகில் புண் ஏற்பட்டதால், அவமானமடைந்த பெருஞ்சேரலாதன் போர்க்களத்தில் வடக்கு திசைநோக்கி அமர்ந்து, உண்ணா நோம்பிருந்து (உண்ணாவிரதம்) இருந்து உயிர்நீத்தார். அப்போர் நடந்த ஊர் “வெண்ணிவாயில்“ என்றும் அவ் ஊரின் வெளிப்புறங்கள் போர்க்களமாகப் பயன்படுத்தப்பட்டதால் “வெண்ணிப் பறந்தலை“ என்றும் இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் கோசர்கள் ஆண்டுவந்தனர். முதலாம் கரிகாற்சோழன் முதலில் உறையூரையும் பின்னர் புகாரையும் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தார். இவர் தன் மகள் ஆதிமந்தியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்று அறியப்பட்ட அத்திக்கு (ஆட்டனத்தி) மணம்செய்து கொடுத்தார். இவர் ஆட்டனத்தி கழாஅர் முன்துறையில் (கழுதகாரன் துறை) நடனம் செய்ததனைக் கண்டுகளித்துள்ளார். வலிமையான கடற்படையை நிறுவி, இலங்கைமீது படையெடுத்து வென்றார். ஊளியர், அருளாளர், வடவர், வேளிர் குலத் தலைவர் இருக்கோவேள் ஆகியோரையும் வென்றார். கழாஅர் முன்துறையை ஆண்டவர் “மத்தி“. இவர் பரதவர் குலச் சிற்றரசர். இவர் கரிகாற்சோழருக்குக் கீழ்ப் பணிந்திருந்தார். ஒருமுறை யானை பிடிக்கக் கடமைப்பட்டிருந்த எழினி என்பவர் வராததால், கரிகாற்சோழர் சினம்கொண்டார். அவரது ஏவலின்பேரில் மத்தி, எழினியைத் தேடிச்சென்றார். நெடுந்தொலைவில் இருந்த எழினியைக் கண்டுபிடித்து அவரின் பல்லினைப் பிடுங்கி, அதனை வெண்மணி வாயில் கோட்டைக் கதவில் பதித்தார். தன் பெயர் எழுதிய கல்லை அவ் ஊரின் நீர்த்துறையில் அமைத்தார்.

கரிகாற்சோழருக்குப் பின்னர் தித்தன் ஆட்சிக்கு வந்தார். கடற்கரைப் பட்டினமான வீரையை ஆண்ட வெளியன் என்ற வேளிரின் மகன் தித்தன். இவர் சோழரின் மகளை மணந்து சோழரானார். இவரது முழுமையான பெயர் “வீரை வேண்மான் வெளியன் தித்தன்“ என்பதாகும். ஆர்க்காட்டுத் தலைவர் ஆட்சியில் இருந்த உறையூரை வென்று அங்குச் சோழ அரசினை நிறுவினார். உறையூரைச் சுற்றிலும் காவற்காட்டினை அமைத்து உறையூரைப் பாதுகாப்பான நகராக மாற்றினார். இவருக்குக் கோப்பெருநற்கிள்ளி, வெளியன் என்ற மகன்களும் ஐயை என்ற மகளும் இருந்தனர். வெளியனின் பெயர் “தித்தன் வெளியன்“ என்பதாகும். பொருநன் என்பவர் உறையூரைத் தாக்கியபோது, தித்தனுக்கு உதவியாகப் போர்வையை (போஓர்) ஆண்ட பொருநற்கிள்ளி என்பவர் உதவ விரும்பினார். ஆனால், தித்தன் அவர் உதவியைப் பெறாமலே, பொருநனை எதிர்கொண்டார். தித்தன் கொடைத்தன்மை மிகுந்தவராகவும் இருந்துள்ளார். இவரது காலத்தில் “பெருந்துறை“ சோழர்களின் முதன்மையான துறைமுகமாக இருந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் இங்குப் பெருகியிருந்தது. தித்தன் வெளியனின் படைத்தளபதியாகப் “பிண்டன்“ என்பவர் இருந்தார். இவர், தித்தன் வெளியனின் கட்டளைப்படி முதலாம் நன்னனின் தலைநகரான பாழியைத் தாக்கியபோது, நன்னனால் தேற்கடிக்கப்பட்டார்.

தித்தனின் மகன் கோப்பெருநற்கிள்ளி. இவர் ஆட்சிக்கு வரும்முன்னரே ஆமூர் மல்லனை வென்றார். இவர் போர்வை (போர்அவை, போஓர்) கோப்பெருநற்கிள்ளி என்று அறியப்பட்டார். ஆட்சிக்கு வந்தபின்னர் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியானார். “இராஜசூயம் யாகம்“ செய்ததால் இவரை “இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி“ என்று அழைத்தனர். இவரது காலத்தில் கரூரைத் தலைநகராகக்கொண்டு மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். பாண்டிய நாட்டினைக் கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆண்டுவந்தார். இவர் உறையூர்ப் பகுதியை ஆட்சிசெய்த போது அழுந்தூர்ப் பகுதியைப் பெரும்பூண் சென்னி ஆண்டதாகக் கூறுகின்றனர். இவரே கழுமலத்தில் வெற்றிவாகை சூடியதாகக் கூறப்படுகின்றது.

இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைத் தொடர்ந்து கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் ஆண்டனர்.

இரண்டு சோழ வேந்தர்களான நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே போட்டி நிலவியுள்ளது. நலங்கிள்ளிக்கு அஞ்சி உறையூர், ஆவூர் ஆகிய இடங்களில் உள்ள கோட்டைகளில் மாறிமாறி நெடுங்கிள்ளி ஒழிந்துகொண்டார். பின்னர், காரியாறு என்ற இடத்தில் அவர் கொல்லப்பட்டார்.

நலங்கிள்ளிக்குப் பின்னர் அவரின் மகன் கிள்ளிவளவன் ஆட்சிக்கு வந்தார். இவரின் தந்தைப் பெயரின் பின் பின்னொட்டான “கிள்ளி“ (நலங்கிள்ளி) என்பதனையும் அவரின் தந்தைப் பெயரின் பின்னொட்டான “வளவன்“ (கரிகால்வளவன்) என்பதனையும் இணைத்து இவருக்குக் “கிள்ளிவளவன்“ என்று பெயரிட்டுள்ளனர். இவர் பாண்டியன் பழையன் மாறனை வென்று கூடல்நகரினைக் கைப்பற்றினார். இவர் வடதிசையில் இருந்த கோசரையும் அழித்துள்ளார். பாண்டிய நெடுஞ்செழியன் மதுரையிலும் சோழன் கிள்ளி வளவன் உறையூரிலும் ஆட்சியிலிருந்தபோது தொண்டையர் கடல்வழியாக்க் கூடூருக்குள் நுழைந்து வேங்கடலைப் பகுதியில் ஊடுருவினர். அவ்வாறு வந்த தொண்டையர் மரபில் மூத்தவர் திரையன். இவர் காஞ்சிபுரத்தினைத் தலைநகராகக்கொண்டு ஆண்டார். இவர் கடலரசர் குடியைச் சேர்ந்தவர். இரண்டாம் கரிகாற்சோழன் சிறுவனாக இருந்தபோது, இத்திரையன் சோழப்பேரரசினைக் கைப்பற்றியுள்ளார். இவரைப் பல்வேல் திரையன், தொண்டைமான் இளந்திரையன் என்றும் போற்றியுள்ளனர். கிள்ளிவளவனால் பாடப்பெற்ற புகழையுடைய சிற்றரசன் “பண்ணன்“. இவர் அருமனையை அடுத்துள்ள சிறுகுடியை ஆண்டவர். இவர் வயதில் முதியவர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியநெடுஞ்செழியன் காலத்தில் இருந்து வாழ்ந்துவருபவர். இவர் காலத்தில் செம்பியனும் சேரனும் மற்ற ஐவரும் தலையாலங்கானத்தில் கொல்லப்பட்டனர். இவரது உதவியால் சோழநாடு நெடுஞ்செழியனின் மேலாண்மைக்கு வந்த்து. இவர் பாண்டியரோடும் நல்லுறவு கொண்டிருந்தார். இவர் துறவி இயக்கனுக்குப் பாழி (சமணர் படுக்கை) அமைத்துக்கொடுத்துள்ளார். இவர் “செழியன் பெருங்குளம்“ என்ற பெயரில் ஒரு குளத்தை வெட்டியுள்ளார். இவரின் முதுமையைப் போக்கக் கிள்ளிவளவன் தன் இளமையைத் தர விரும்பினார்.

சோழன் கிள்ளி வளவனுக்குப் பின்னால் பெருந்திருமாவளவன் (இரண்டாம் கரிகாற்சோழன்) ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன் இவர் சிறைப்பட்டிருந்தார் என்று குறிப்புகள் உள்ளன. இவர் காவிரிக்குக் கரை எழுப்பினார். இவர் வெட்டிய வாய்க்கால்களுள் ஒன்று “பெருவளவாய்க்கால்“ ஆகும். இவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் வடக்கில் திரையர்கள் வலிமையுடன் இருந்துள்ளனர். காஞ்சியைத் தொண்டைமான்களின் மரபினர் ஆண்டனர். இரண்டாம் கரிகாற்சோழன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்த வீரர்களை அடிமைகளாக்கிச் சோழநாட்டின் நிர்மாணப் பணிகளுக்குப் பயன்படுத்தினார்.

இவருக்குப் பின்னர் செங்கணான், நல்லுருத்திரன் போன்றார் ஆட்சிக்கு வந்தனர். செங்கணான் சிவாலயங்கள் பலவற்றை ஏற்படுத்தினார். இவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளிவளவனின் சமகாலத்தவர். செங்கணானைப் ‘பெரும்பூட்சென்னி’ என்றும் அழைத்துள்ளனர்.இவரது கழுமலப்போர் குறிப்பிடத்தக்கது. சங்கச் சேரர் குலத்தின் இறுதி வேந்தரான கணைக்கால் இரும்பொறையை இவர் கைதுசெய்தார்.

சங்கப் பாண்டியர்கள்

வடக்கில் வெள்ளாறிலிருந்து தெற்கில் கன்னியாகுமரி வரையிலும் கிழக்கில் சோழமண்டலக் கரையிலிருந்து மேற்கில் கேரளாவிற்குச் செல்லும் அச்சன் கோயில் கணவாய் வரையிலும் உள்ள பகுதி பாண்டியநாடு. பாண்டியர்களின் கொடியிலுள்ள சின்னம் மீன். பாண்டியர்களை மீனவர், கவுரியர், பஞ்சவர், தென்னர், செழியர், மாறர், வழுதி, தென்னவர் என்றெல்லாம் அழைத்துள்ளனர். பாண்டியர் மரபில் பழைமையானவராகக் கருதப்படுபவர் முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன். அவருக்குப் பின்னர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் நிலந்தரு திருவிற் பாண்டியன்.

பாண்டியருக்கு முன்னர் மதுரையை (கூடல்) ஆண்டவர் அகுதை. இவர் ஆண்ட கூடல் நகரினை “அகுதைகூடல்“ என்று புலவர் கபிலர் குறிப்பட்டுள்ளார். இவர் வெளியன் வேண்மான் ஆஅய் எயினனுடன் நட்புடன் இருந்தார். ஆஅய் எயினன் புன்னாட்டினை ஆண்டவருடன் நட்புடன் இருந்தார். புன்னாட்டின் மீது பாழிநாட்டை (இது சேரநாட்டின் வடகோடியில் உள்ள எழிற்குன்றத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதி) ஆண்ட முதலாம் நன்னன் தொடர்ந்து போர்தொடுத்து அம்மக்களை வாட்டினான். இந்த அறமற்ற செயலைக்கண்டு வருந்திய ஆஅய் எயினன், நன்னனின் பாழி நாட்டின் மீது போர்தொடுத்தார். அப்போரில் நன்னனின் படைத்தலைவர் மிஞிலி, ஆஅய் எயினனுடன் மோதினார். இப்போரில் ஆஅய் எயினன் மாண்டார். போர்க்களத்தில் இருந்த ஆஅய் எயினனின் உடலை அப்புறப்படுத்த விரும்பாத நன்னன் அதனைப் பறவைகள் உண்ணட்டும் என்று இருந்துவிட்டார். இக்கெடுமையைக் கண்டு கொத்தித ஆஅய் எயினனின் நண்பர் அகுதை பாழிநாட்டின் மீது படையெடுத்தார். ஆஅய் எயினனின் உறவினரின் துன்பத்தை அகுதை நீக்கியதாகக் குறிப்புகள் உள்ளன. ஆஅய் எயினன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரரின் படைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் படைத்தலைவரைக் கொன்ற நன்னன்மீது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் படையெடுத்துச்சென்றுப் பெருந்துறைப்போரில் நன்னனை அழித்தார் என்பது தனிவரலாறு.

வலிமை மிக்க அகுதையைப் பூதப்பாண்டியனின் மகனான நெடியோன் விரட்டியடித்துவிட்டு, கூடலில் பாண்டியப் பேரரசிற்குக் கடைக்காலிட்டார். தப்பியோடிய அகுதைக்குக் கோசர் அடைக்கலம் தந்தார். நிலம் தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியர்தான் பாண்டிய நாட்டினை விரிவாக்கம் செய்தார். ஆதலால், இவரைப் “பன்னாடு தந்த பாண்டியன்“ என்று சிறப்பிக்கின்றனர்.

இவரை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர்வழுதி ஆவார். இவரைப் புகழந்து இரும்பிடர்த் தலையார் (பிடாத்தலையன்) பாடியுள்ளார். இவர் முதற்கரிகாற்சோழனின் தாய்மாமன் ஆவார். இவரது காலத்தில் சேரநாட்டினைப் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் சோழநாட்டினை உருவப் பஃதேர் இளஞ்சேட்சென்னியும் ஆண்டுவந்தனர்.

இவரை அடுத்து உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆண்டுள்ளார். இவரது காலத்தில் சேரநாட்டினை மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினை முடித் தலைக்கோ பெரு நற்கிள்ளியும் ஆண்டனர். இவர் வேங்கை மார்பன் என்ற அரசரின் பெரிய கோட்டையினைக் கைப்பற்றியதால் “கானப்பேரெயில்கடந்த“ என்ற அடைமொழியினைப் பெற்றுக் “கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி“யானார்.

இவரைத் தொடர்ந்து அறிவுடைநம்பி என்ற பாண்டியர் ஆண்டார். இவர்காலத்தில் சேரநாட்டினைக் கருவூர் ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறையும் சோழநாட்டினைக் கோப்பெருஞ்சோழனும் ஆண்டனர்.

இவருக்குப் பின்னர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆட்சிக்கு வந்தார். “ஒல்லையூர்“ என்பது, புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலத்து வட்டத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இது சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதனை மீட்டுத் தன்வசப்படுத்தியதால் இவருக்கு “ஒல்லையூர் தந்த“ என்ற அடைமொழி ஏற்பட்டது.

இவரை அடுத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சியினை ஏற்றார். இவரது காலத்தில் சேரநாட்டினை யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆண்டுவந்தார். அவ் வேந்தரைத் தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் இருக்கும் தலையாலங்கானம் (ஆலங்கானம்) என்ற இடத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். அவரைக் கைதுசெய்து தன் சிறையில் அடைத்தார். அச் சிறையிலிருந்து யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் தப்பிச் சென்றார். இவரை எதிர்த்துச் சோழரும் சேரரும் பெரும்படையோடு “கூடற்பறந்தலை“ என்ற இடத்தில் இவருடன் மோதினர். இவர் அவ் இருவரின் படையோடும் கடுமையாகமோதினார். அவர்கள் தமது வெற்றிமுரசினைப் போர்களத்தில் விட்டுவிட்டுப் புறமுதுகிட்டனர். அவர்களைத் துரத்திச் சென்றபோது அவர்கள் தலையாலங்கானம் என்ற இடத்தில் இவரை எதிர்த்து எழுவர் (சேரர், சோழர், திதியன், எழினி, எருமையூரன், இளங்கோ வேண்மான், பொருநன்) ஒன்றாகப் படைதிரண்டனர். அவர்கள் அனைவரையும் நெடுஞ்செழியன் ஒருபகற்பொழுதிலேயே வீழ்த்தி வெற்றிபெற்றார். இவர் பாண்டிய நாட்டினை நல்லூர் வரை விரிவுபடுத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்புக்கோயில் என்று அழைக்கப்படும் அழும்பில் என்ற இடத்தை ஆண்டுவந்த விறல்வேள் என்பவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எதிர்த்துத் தன் நாட்டினை இழந்தார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியருக்குப் பின்னர் அழும்பில் சோழர் கைக்குச் சென்றது. பின்னாட்களில் விறல்வேள் மரபினர் தம்மை “அழும்பில்வேள்“ என்ற பெயரில் அழைத்துக்கொண்டு அழும்பிலை ஆளத்தொடங்கினர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை “வென்வேற்செழியன்“ என்றும் “நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவரின் படைத்தளபதி அதிகன் என்பார் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் கொங்கரை எதிர்கொண்டார். கொங்கர் பாண்டியரின் யானைப் படையினை அழித்தார். செய்தியறிந்த நெடுஞ்செழியன் வாகைப் பறந்தலைக்கு விரைந்தார். கொங்கரை அழித்து, கொங்கருக்குரிய நாடுகள் பலவற்றைக் கைப்பற்றினார். இவரைத் “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்“ என்றும் “பாண்டிய நெடுஞ்செழியன்“ என்றும் குறிப்பிடுகின்றனர். இவரது படைத்தலைவன் “கடலன் வழுதி“. இவர் “விளங்கில்“ என்ற ஊரில் ஆட்சிசெய்தவர். துறவி இயக்கனுக்கு மலைக்குகையில் படுக்கை (சமணப் பாழி) வெட்டிக்கொடுத்தவருள் இவரும் ஒருவர். இவர் கணிய நந்தி என்பவருக்கும் பாழி அமைத்துக்கொடுத்துள்ளார். இதனை மாங்குளம் மலைக்குகைக் கல்வெட்டு தெரிவித்துள்ளது.

சங்க இலக்கியங்களில் “நெடுஞ்செழியன்“ என்ற பெயரில் இரண்டு பாண்டிய அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மற்றொருவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். “செழியன்“ என்ற பெயர் சங்க இலக்கியத்தில் 23 இடங்களில் வந்துள்ளது. இச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையே குறித்துள்ளது. இவரையே பசும்பூட்செழியன், பசும்பூண் பாண்டியன், பசும்பூண் வழுதி என்றும் குறித்துள்ளனர்.

இவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தர் உக்கிரப் பெருவழுதியாவார். இவரே, சித்திரமாடத்துச் துஞ்சிய நன்மாறன் என்று கருத இடமுள்ளது.

பசும்பூண் பாண்டியன் என்ற வேந்தர் பற்றிய செய்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவரைப் பாண்டியர் மரபில் எவ் இடத்தில் இணைப்பது என்று தெரியவில்லை.

கூடல்நகரில் பாண்டிய அரசினை நிறுவிய நெடியோனின் மகன் பசும்பூண் பாண்டியர் ஆவார். இவர் யானைப் படையுடன் சென்று கொல்லிமலையை ஆண்ட சிற்றரசரான அதிகனை வென்று, அங்குத் தன் யானைப்படையின் வெற்றி அணிவகுப்பினை நடத்தினார். அதன்பின் அதிகன் இவருக்கு நண்பராகி, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தன் நாட்டினை இழந்து, பாண்டியருக்குப் படைத்தலைவராக மாறினார். அதிகன் கீழைக் கொங்கர்களின் தலைவராக இருந்தார். இவர் பாண்டியருக்கு நண்பராகியதால் அவர்களும் பாண்டியருக்கு நண்பர்களாகினர். இச் சூழலில் மேலைக் கொங்கர்கள் பொறையர் குடியைச் சேர்ந்த சேர வேந்தர்களுடன் இணைந்து கீழைக் கொங்கர்கள் மீது படையெடுத்தபோது, கீழைக்கொங்கர்களுக்கு ஆதரவாகப் படைநடத்திய பசும்பூண் பாண்டியர் மேலைக்கொங்கரை வென்றார். இவருக்குப் படைத்தலைவராக இருந்தவர் “அதிகன்“ என்றும் “நெடுமிடல்“ என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவரை வில்கெடு தானைப் பசும்பூட் பாண்டியன், நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன், பலர்புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியர், இயல்தேர்ச்செழியன், கைவன் செழியன், கொடித்தேர்ச் செழியன், கொற்றச் செழியன், மறப்போர்ச் செழியன் என்றெல்லாம் சிறப்பித்துள்ளனர்.

சங்கப் பாண்டியரின் இறுதி வேந்தர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவார். இவரைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் காணமுடிகின்றது.

– – –

காலனியமும் கல்வியும்

அத்தியாயம் 5

schoolingtheworld4

கரீபிய நாவலாசிரியரான ஜார்ஜ் லாமிங் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘காலனியம் என்பது வரலாற்றில் ஒரு கட்டத்தில் வந்து இன்னொரு சமயம் மறைந்து ஓடிவிடுகிற ஒரு விஷயமல்ல. அது தொடர்ச்சியானது; வாழ்ந்துகொண்டிருப்பது. காலனிய சூழல் முடிவுக்கு வந்தபிறகும்கூட நினைவுகளில் அது தொடர்ந்து வாழ்கிறது.’

2012ம் ஆண்டு பிரிட்டன் ஹை கமிஷனர் சர் ஜேம்ஸ் பெவன் உறையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சீக்கியர் எழுந்து நின்று இடைமறித்தார். ‘நான் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர். ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டுப் போராடியதற்காக நீங்கள் என்னைச் சிறையில் அடைத்தீர்கள். அதற்காக ஏன் பிரிட்டன் இப்போது மன்னிப்பு கேட்கக்கூடாது?’ இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சார்லஸ் ஆலென் தி டெலிகிராஃப் இதழில் எழுதுகிறார். ‘அந்த சீக்கிய அதிகாரியிடம் பிரிட்டிஷ் அதிகாரி திருப்பிக்கேட்டிருக்கவேண்டும். ஜனநாயகம் குறித்தும் தேசியம் குறித்தும் யோசிக்கவேண்டும் என்று முதலில் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் யார்? தவிரவும் காலனியாதிக்கத்துக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்பது என்பது ஜோன் ஆஃப் ஆர்க் கொல்லப்பட்டதற்காக இப்போது மன்னிப்பு கேட்கச் சொல்வதற்கு ஒப்பானது.’

சார்லஸ் ஆலெனைப் பொருத்தவரை காலனியம் என்பது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர்மீது தங்கள் கருத்துகளைப் பலவந்தமாகத் திணிப்பது. இந்திய வரலாற்றை ஆராயும்போது இத்தகைய ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்துள்ளதைப் பார்க்கலாம் என்கிறார் ஆலென். உள்ளூர் ஆதிவாசிகள்மீதான ஆரியர்களின் ஆக்கிரமிப்பை மகாபாரதம் புகழ்ந்து போற்றுகிறது. வேத காலத்தில் ஆக்கிரமிப்பாளரே ஆட்சியாளராக இருந்துள்ளார். அவருடைய கடமை தனது ஜனபதாவை (ராஜ்ஜியம்) மகாஜனபதாவாக (சாம்ராஜ்ஜியம்) மாற்றுவதுதான். ஆக்கிரமிப்புகள்மூலமே இது சாத்தியம். என்னைப் பொருத்தவரை இவையனைத்துமே ஏகாதிபத்தியம்தான் என்கிறார் சார்லஸ் ஆலென். பௌத்தத்துக்கு மாறிய பிறகு அசோகர் இத்தகைய ஆக்கிரமிப்புகளை எதிர்த்தார் ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்கிறார் ஆலென்.

மைசூரைக் கிழக்கிந்திய கம்பெனி மட்டுமல்ல ஹைதர் அலியும்கூடத்தான் ஆக்கிரமித்தார். ராஜபுத்திர ராஜ்ஜியங்களை மராத்தியர்கள் ஆக்கிரமித்தனர். பஞ்சாபை சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். இதில் பிரிட்டனின் காலனியாதிக்கம் பிறவற்றில் இருந்து எப்படி, ஏன் மாறுபடுகிறது? ஏன் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார் ஆலென். அதற்கான பதிலை அவரே அளிக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தை அதிகம் சீரழித்தது பிரிட்டனின் காலனியம்தான். மான்செஸ்டரும் பிர்மிங்ஹாமும் செழித்து வளர்ந்தபோது இந்தியாவின் கிராமப்புறங்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாயின. மற்றவர்களைப் போலன்றி இந்தியக் கலாசாரத்தை பிரிட்டன் தாழ்வாகப் பார்த்தது. ஆங்கிலத்தை இந்தியா முழுமைக்கும் சிபாரிசு செய்த தாமஸ் மெக்காலே ஓர் உதாரணம்.

இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்த மற்ற ஆட்சியாளர்களுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள மற்றொரு முக்கிய வேறுபாட்டை ஈ.எம்.எஸ். நம்பூதரிபாட்  சுட்டிக்காட்டுகிறார். மற்ற ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை ஓர் அந்நியப் பிரதேசமாகவே கருதி ஆட்சி நடத்தினார்கள். இந்தியாவுடன் அவர்கள் ஒன்றவில்லை. தங்கள் கலாசாரத்தை, தங்கள் பண்பாட்டை, வழிபாட்டு முறையை, சமூக மதிப்பீடுகளை அவர்கள் இந்தியாமீது திணிக்க முயன்றனர். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் முகலாயர்கள் பிரிட்டனைப்போலன்றி இந்தியர்களுடன் ஒன்று கலந்தனர்.

பிரிட்டனின் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும்; காலனியம் பற்றிக் குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தானில் பிரிட்டன் இழைத்த கொடுமைகள் பற்றிப் போதிக்கவேண்டும் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். ‘என் குழந்தைகள் ட்யூடர்கள் குறித்தும் நாஜிகள் குறித்தும் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் காலனியத்தால் கொல்லப்பட்டதை அவர்கள் கற்பதேயில்லை. மலையளவு குவிந்துகிடக்கும் மண்டையோடுகளின்மீதுதான் காலனிய ஆட்சி நடைபெற்றது என்பதை மக்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்‘ என்கிறார் டால்ரிம்பிள்.

பிரிட்டிஷ் மாணவர்கள் மட்டுமல்ல காலனியத்தின் தாக்கத்துக்கு உட்பட்டுக்கிடக்கும் இந்தியர்கள் குறிப்பாகக் காலனியம் பற்றி விரிவாகக் கற்கவேண்டியிருக்கிறது. அதற்கு முதல் படியாக தனது கலாசார அடையாளத்தை இந்தியா கண்டெடுக்கவேண்டும் என்கிறார் பவன் கே வர்மா. இந்தியர்களின் உள்ளத்திலும் கலாசார பழக்கவழக்கங்களிலும் பிரிட்டிஷ் ராஜ் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு நம்முடைய கலாசார வேர்களைச் சென்றடைவதுதான் நம்முன் இப்போதுள்ள மிகப் பெரிய சவால் என்கிறார் பவன் கே வர்மா. யூனியன் ஜாக் கொடியைக் கீழிறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருளில்லை. நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டை இன்னொன்று ஆண்டிருக்கிறது என்னும்போது கடந்தகாலம் நிச்சயம் நிகழ்காலத்தோடு கலந்தே இருக்கும் என்கிறார் வர்மா.

சமூகக் கட்டமைப்பில் பிரிட்டன் கொண்டுவந்த முக்கிய மாற்றம் உயர்குடிகளைக் கொண்டிருந்த ராணுவத் தலைமையை மாற்றி நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தையும் கொண்டுவந்ததுதான் என்கிறார் ஆங்கஸ் மாடிசன். மற்றொரு மாற்றம் ஆங்கிலத்தை கல்வி மொழியாக  அறிமுகப்படுத்தியது. பிரிட்டனின் வருகைக்கு முன்பு பெருமளவில் மதம் சார்ந்த போதனைகளே உயர் கல்வி என்னும் பெயரில் அரபி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்பட்டன. தொடக்கத்தில் பிரிட்டன் இந்தக் கல்விமுறையை ஊக்குவிக்கவே செய்தது. கல்கத்தாவிலுள்ள மதராஸாவுக்கும் பெனாரஸ் சமஸ்கிருத கல்லூரிக்கும் பிரிட்டன் நிதியுதவி அளித்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹாஸ்டிங்ஸ் சஸ்கிருதம், பெர்ஷியன் உள்ளிட்ட மொழிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். சர் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருத இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததோடு 1785ம் ஆண்டு ஏஷியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் என்னும் அமைப்பை உருவாக்கவும் செய்தார்.

Thomas Babington Macaulay

Thomas Babington Macaulay

ஆனால் தாமஸ் மெக்காலேவுக்கு ஓரியண்டல் காதல் இல்லை. இந்திய இலக்கியங்களால் பயன் எதுவும் இல்லை, அவற்றை ஆதரிப்பது வீண் வேலை என்பது அவர் கருத்து. ஆய்வுகள் என்னும் பெயரில் பிரிட்டன் பணத்தை இந்தியாவில் வீணடிக்கிறது. இந்திய இலக்கியங்களை மொழிபெயர்ப்பது, அச்சடிப்பது ஆகியவற்றால் காகிதங்கள்தான் பாழாகின்றன. இந்திய வரலாறு, தத்துவம், மதம், அறிவியல் அனைத்தும் முட்டாள்தனமாவை என்று மெக்காலே அறிவித்தார். பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப்போல் எனக்கு சமஸ்கிருதம், அரபி இரண்டும் தெரியாது என்றும் பெருமிதப்பட்டுக்கொண்டார். இந்தியா, அரேபியாவில் எழுதப்பட்ட அனைத்து இலக்கியப் பதிவுகளையும்விட ஒரே ஒரு அலமாரி நல்ல ஐரோப்பிய இலக்கியம் மேலானது என்பது மெக்காலே வந்தடைந்த முடிவு.

இந்த மனநிலையோடுதான் ஆங்கிலம் இங்கே நுழைக்கப்பட்டது. இது நல்லதுதானே, ஆங்கிலம் நம் அறிவின் வாசலை அல்லவா திறந்து வைத்தது? வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இதற்காக மட்டுமாவது நாம் காலனியத்துக்கு நன்றி செலுத்தவேண்டாமா என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில் மெக்காலேயிடமிருந்தே வருகிறது. ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என்ன என்பதை அவரே சொல்கிறார். ‘இங்குள்ள மக்கள் கூட்டம் அனைவருக்கும் கல்வி போதிப்பது என்பது முடியாத செயல். அப்படியொரு முயற்சி மேற்கொள்வதற்குக்கூட நம்மிடம் வசதியில்லை. நாம் ஆளப்போகும் லட்சக்கணக்கானவர்களுக்கும் நமக்கும் பாலமாகச் செயல்படக்கூடிய ஓர் இடைநிலை வர்க்கத்தை உருவாக்குவதே நம்முடைய இப்போது பணி. இவர்கள் நிறம், உடலில் பாயும் ரத்தம் ஆகியவை இந்தியர்களுடையதாகவே இருக்கும். ஆனால் இவர்களுடைய ரசனை, சிந்தனைகள், அறம், அறிவு அனைத்தும் ஆங்கிலேயர்களுடையதாக இருக்கும். இந்நாட்டின் பல்வேறு வட்டார வழக்குகளை மேம்படுத்தும் பணியை இந்த வர்க்கத்தினரிடம் நாம் விட்டுவிடலாம்.’

இந்தப் பணி என்னவானது? ஆங்கிலக் கல்விமுறையால் விளைந்த பலன் என்ன? 1857ம் ஆண்டு கல்கத்தா, மெட்ராஸ், பாம்பே ஆகிய இடங்களில் மூன்று பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.  ஆனால் இவை மேற்பார்வையிடும் நிறுவனங்கள் மட்டுமே. அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட பிற பல்கலைக்கழகங்களில் இரண்டாண்டு பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மனனம் செய்து எழுதும் பாடமுறையே இங்கு கையாளப்பட்டது. இங்கிருந்து வெளியேறும் பட்டதாரிகள் அரைகுறை ஆங்கில அறிவு, மேற்கத்திய மோகம் ஆகிய இரண்டையும் மட்டுமே சம்பாதித்துக்கொண்டனர். 19ம் நூற்றாண்டு முழுக்க பெண்களுக்குக் கல்வி சென்று சேரவில்லை. ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கல்வியைக் கொண்டு மூட பழக்கவழக்கங்களை அகற்றியிருக்கமுடியும். மத ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியிருக்கமுடியும். பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கமுடியும். ஆனால் கல்வியை அப்படியொரு உபகரணமாகப் பயன்படுத்தும் நோக்கம் மெக்காலேவுக்கும் இல்லை, பிரிட்டனுக்கும் இல்லை. அவர்கள் எதிர்பார்த்தபடி படித்த, சிறிய இடைநிலை வர்க்கத்தை மட்டும் இந்தக் கல்விமுறை உருவாக்கியது.

காந்தி 1921ம் ஆண்டு கீழ்வருமாறு எழுதினார்.

‘தற்போது ஆங்கிலம் கற்பிக்கப்படும் வழிமுறை, இந்திய மாணவர்களின்மீது அதிகச் சுமையை ஏற்றி, ஆங்கிலம் பயின்ற இந்தியர்களை வலிமையற்றவர்களாக மாற்றிவிட்டது என்பது என் முடிவான கருத்து. அது நம்மைப் போலிகளாக ஆக்கிவிட்டது. பிராந்திய மொழிகள் ஆங்கிலத்தால் ஒதுக்கப்பட்டது ஆங்கிலேயர்களின் தொடர்பினால் நடந்த மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆங்கிலத்திலேயே சிந்திக்கவும் எண்ணங்களை ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ளவும் வேண்டிய நெருக்கடி இருந்திருக்காவிட்டால், ராம் மோகன் ராய் இன்னும் பெரிய சீர்திருத்தவாதியாகவும், லோகமான்ய திலகர் மேலும் பெரிய அறிவாளியாகவும் இருந்திருப்பார்கள்.

அவர்கள் ஆங்கில இலக்கியம் என்னும் புதையலில் இருந்து நல்ல அறிவை அடைந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை அவர்களுடைய தாய்மொழியிலேயே கிடைத்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் எனும் இனத்தை உருவாக்குவதால் என்றுமே எந்த ஒரு நாடும் தேசமாகிவிடாது. பைபிளின் அதிகாரபூர்வமான பிரதி கிடைத்திராவிட்டால், ஆங்கிலம் (ஆங்கிலேயர்கள்) என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். சைதன்யர், கபீர், நானக், குரு கோவிந்த் சிங், சிவாஜி மற்றும் பிரதாப் ஆகியோர் ராம் மோகன் ராய், திலகர் இவர்களைவிடச் சிறந்தவர்கள் என்று நம்புகிறேன். ஆங்கில மொழி அறிவு இன்றி ராஜாவும் லோகமான்யரும் இந்தவிதமாகச் சிந்திருக்கமுடியாது என்பதை நம்ப மறுக்கிறேன்.

சுதந்தர உணர்ச்சியை மக்களிடம் விதைப்பதற்கும் சரியான எண்ணங்களை உருவாக்கி வளர்ப்பதற்கும் ஆங்கில அறிவு மிகவும் அவசியம் என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்து மூட நம்பிக்கைகளிலும் மிகவும் பெரியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரே மாதிரியான கல்வித் திட்டம்தான் இருந்தது என்பதையும், ஒரே மொழியில்தான் அவை நம்மீது திணிக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். அதனால் இப்போதுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கல்வி இல்லாவிட்டால் என்ன ஆகியிருப்போம் என்று தெரிந்துகொள்ள நம்மிடையே எந்தத் தகவல்களும் இல்லை. ஒன்று மட்டும் தெரியும். இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று ஏழ்மையாக இருக்கிறது. கல்விமுறைதான் இதில் மிகவும் பழுதடைந்த பகுதி. சுதேசக் கல்விமுறை பயனில்லாதது மட்டுமல்ல மிகவும் மோசமானது என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள உண்மையாகவே நம்பினர். அவர்கள் முன்வைத்த கல்விமுறை தவறிலேயே பிறந்தது. இந்தியர்களின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றைக் கூனிக் குறுகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அது உருவாக்கப்பட்டது.’

நேருவும் இதையேதான் வலியுறுத்தினார் என்று சுட்டிக்காட்டுகிறார் பவன் கே வர்மா. ஆங்கிலம் கற்ற இந்திர்கள் தனியொரு உலகில் பிற இந்தியர்களிடம் இருந்து விலகி வாழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் வருந்தினார். ‘இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் வரும் என்று சிலர் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். சொற்பமான மேல் தட்டு அறிவுஜீவிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய ஒன்றாக அது இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. பெரும்பாலானோருக்கான கல்வி, கலாசாரத்தைப் பற்றி பிரச்னைகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் முதலியவற்றில் அதுவும் உலகளவில், அதிகமாக உபயோகப்படும் மொழியாக ஆங்கிலம் ஆகப்போகிறது என்பது உண்மைதான். ஆனால் உலகைப் பற்றிய சமநோக்கோடு கூடிய சித்திரம் கிடைக்கவேண்டுமென்றால், நாம் ஆங்கிலம் என்னும் மூக்குக் கண்ணாடியின்மூலம் மட்டுமே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.’

1947 வாக்கில் 88 சதவிகித இந்தியர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டி பிரிட்டனின் நோக்கங்களை வெளிப்படுத்துகிறார் மாடிசன். பிரிட்டிஷ்  அதிகாரிகள் தங்களை ஆளும் வர்க்கமாகவும் ஆளும் சாதியினராகவும் வலுப்படுத்திக்கொண்டனர். இந்திய உயர் சாதியினரைப் போலவே இவர்கள் தாழ்ந்த சாதியினருடன் நெருங்கி பழகாமலும் அவர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமலும் தனித்து நின்றனர். அவர்களுடைய குழந்தைகள் பூர்விக இந்தியக் குழந்தைகளுடன் ஒன்று கலக்கவில்லை. (ஆனால் முகலாயர்கள் இப்படி விலகி நிற்காமல் இந்தியாவுடன் ஒன்று கலந்தனர் என்பதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). மொத்தத்தில், பிரிட்டனின் ஆட்சி மேல்மட்ட அளவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தன என்றபோதும் பெருமளவிலான மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் ஆங்கஸ் மாடிசன்.

மேற்கொண்டு வாசிக்க :

  1. The history of India is a history of colonialism, Charles Allen, The Telegraph
  2. Class Structure and Economic Growth, Angus Madisson
  3. Becoming Indian, Pavan K Varma, Penugin/Viking
  4. இந்தியன் ஆவது எப்படி? பவன் கே. வர்மா, கிழக்கு பதிப்பகம்

தென்னிந்திய நிலவியல்

சங்க காலம் / தேடல் – 18

DSC00769இந்தியாவின் பழம்பெயர் “நாவலம்“ என்பதாகும். சிலப்பதிகாரம் இப்பகுதியினை ‘நாவலந் தண்பொழில்’ என்று குறிப்பிட்டுள்ளது. இது வடபகுதி, தென்பகுதி எனப் பிரிக்கப்பட்டிருந்தது. சங்க காலத்தின் இறுதியில் ஒட்டுமொத்த இந்தியாவின் தென்பகுதியில் இருந்த முதன்மையான இடங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். ஆபிரர், புளிந்தர், கலிங்கம், சாதவாஹனப் பேரரசு, பூழிநாடு, குடநாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு, புனல்நாடு, பன்றிநாடு, பாண்டிநாடு, வேணாடு, அஜந்தா, சோபாரா, கன்ஹேரி, நாஸிக், பைத்தான், தந்தபுரம், ஹதிகும்ப, கார்லெ, பாஜா, தெரா, பிஷ்டபுரம், வேங்கி, அமராவதி, மஸாலியா, நாகார்ச்சுனகொண்டா, பட்டிப்ரோலு, ஏற்றகுடி, வனவாசி, சித்தபுரம், சிரவணபெல்கொளா, வேங்கடம், காஞ்சி, எய்தபட்டினம் (சொபத்மா), தலைக்காடு, தொண்டி, கரூர், முசிறி, உறையூர், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், வஞ்சி, தலையாலங்கானம், நெல்கின்றா, வைக்கரை, மதுரை, சாலியூர், கொற்கை, கோட்டியற, குமரி.

ஒட்டுமொத்த இந்தியாவின் கீழ்த் தென்பகுதி முடியுடை வேந்தர் மூவரால் ஆளப்பட்டது. இம் மூன்று வேந்தர் பரம்பரையினரைச் சங்க இலக்கியங்கள், “தமிழ்கெழு மூவர்“, தண்டமிழ்க் கிவர் … மூவர்“ என்றெல்லாம் அழைத்துள்ளன. அவர்கள் ஆண்ட அந்த மொத்தப் பகுதியைத் “தமிழகம்“ என்றனர். பிட்டங்கொற்றனைப் புகழ்ந்து பாடிய கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார், “வையக வரைப்பில் தமிழகம் கேட்ப“ என்று தமிழகம் என்ற சொல்லி்னைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, “தமிழகம்“ என்ற சொல், சங்க காலத்திலேயே வழக்கிலிருந்துள்ளது. தமிழ்மொழியைப் பேசும் மக்களின் எல்லையாக வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரிமுனையும் இருந்தன. சோழ மன்னரால் ஆளப்பட்ட சோழநாடு காவிரியாற்றினால் நீர்வளம் பெற்றுச் சிறந்திருந்தது. அதன் தென் பகுதி வளம் குன்றி இருந்தது. பாண்டியரால் ஆளப்பட்ட பாண்டிநாட்டின் வடபகுதியில் எயினர்களின் இருப்பிடங்களும் காடும் இடையிடையே தண்பூங்காக்களும் தடந்தாழ் வயல்களும் இருந்தன. வையை நதியால் வளம்பெற்றது. சேர மன்னரால் ஆளப்பட்ட சேரநாடு பேரியாற்றின் வழியாக நீர்வளம் பெற்றுச் சிறந்திருந்தது. இதற்குக் “குடநாடு“ என்றும் பெயருண்டு. சேர, சோழ, பாண்டிய நாடுகளும் கொங்குநாட்டின் பகுதிகளும் பண்டைத் தமிழகத்திற்குரிய நிலப்பரப்பாக இருந்தன.

வச்சிரம், அவந்தி, கலிங்கம், மகதம், மத்திம நாடு, ஆரிய நாடு, யவனர் வளநாடு, குடகு, கொங்கணம், கருநடம், பங்களம், கோசர் நாடு போன்றவைத் தமிழகத்திற்கு வெளியிலுள்ள நாடுகளாக இருந்தன.

பழைய நாடுகள்

செந்தமிழ்நாட்டில் தென்பாண்டி, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு, சீதநாடு, மலைநாடு, புனல்நாடு எனப் பன்னிரு உட்பிரிவுகள் இருந்ததாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இவை தவிர குறும்பொறை நாடு, பொறைநாடு, வானமலை நாடு, கொண்கானம், கடுங்கோநாடு, பாயல்நாடு, வள்ளுவநாடு, வைநாடு போன்றவற்றையும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பழைய ஊர்கள்

பழந்தமிழர்கள் வாழ்ந்த ஊர்களுள், 240 ஊர்களின் பெயர்களை மட்டும் இலக்கியங்களிலிருந்து அறியமுடிகின்றது. அவற்றைக் கொண்டு பழந்தமிழ்நாட்டின் வரைபடத்தினை உருவாக்கலாம். அவ் ஊர்களின் பெயர்கள் சில பின்வருமாறு – அட்டவாயில், அரிமணவாயில், அலைவாய், அழுந்தை, அழும்பில், அள்ளூர், ஆமூர், ஆலங்கானம், ஆலமுற்றம், ஆன்பொருநை, இடையாறு, உறத்தூர், உறந்தை, உறந்தைக்குன்றம், ஊனூர், எருமை நன்னாடு, ஏழில், கடிகை, கண்டீரம், கருவூர், கவிரம், கழாஅர், கழுமலம், கள்ளில், கள்ளூர், காமூர், குடந்தை, குடவாயில், குடநாடு, குடபுலம், குடவரை, குதிரை மலை, குறுக்கைப் பறந்தலை, குறுக்கை, குறும்பொறை, குழுமூர், குன்றம், கூடல், கூடற் பறந்தலை, கொடுங்கால், கொல்லி, கோடி, கோடை, கோவல், சாய்க்கானம், சிறுமலை, செல்லி, செல்லூர், தகடூர், தலையாறு, தேமுதுகுன்றம், நியமம், நீடூர், நெடுவரை, பட்டினம், பரங்குன்றம், பருவூர்ப் பறந்தலை, பவத்திரி, பறம்பு, பாக்கம், பாரம், பாணாடு, பாழி, பாழிப் பறந்தலை, பாணன்நாடு, புகாஅர், புறந்தை, புன்னாடு, பெருந்துறை, பொதியில், போஓர், பொதினி, மருங்கூர்ப்பட்டினம், மாங்காடு, மாந்தை, மிளைநாடு, முசிறி, முள்ளூர், மோகூர், வடவரை, வல்லம், வாகைப் பறந்தலை, வாகை, வீரை, வியலூர்,விளங்கில், வெண்ணி, வெண்ணிப் பறந்தலை, வெண்ணி வாயில், வெண்ணிமணிவாயில், வெளியம், வேங்கடம், வேம்மி, வேளூர்.

பெரும்பாலும் நிலம் அடிப்படையில் சில சொற்குறியீடுகளோடு ஊர்ப்பெயர்கள் அமைக்கப்பெற்றுள்ளன. குறிஞ்சி நிலப்பகுதியாக இருந்தால் “சிறுகுடி“, “குறிஞ்சி“, “குன்றம்“ என்றோ, முல்லை நிலப்பகுதியாக இருந்தால் “பாடி“, “சேரி“, “பள்ளி“ என்றோ, மருத நிலப்பகுதியாக இருந்தால் “ஊர்“ என்றோ, நெய்தல் நிலப்பகுதியாக இருந்தால் “பட்டினம்“ என்றோ, பாலை நிலப்பகுதியாக இருந்தால் “பறந்தலை“ என்றோ பின்னொட்டுடன் ஊர்ப்பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இல்லாமலும் பல ஊர்களின் பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பு மிக்க சில நகரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வஞ்சி

சேரர் ஆண்ட பகுதி “வஞ்சிமாநகர்“ எனப்பட்டது. “கருவூர்“ என்றும் சுட்டப்பெற்றது. சேரர்கள் ஆண்ட பகுதிகளில் சிவன்கோவில், ஆடக மாடம், குணவாயில், வேண்மாடம் முதலிய பகுதிகள் ஒன்றோ சிலவோ அமைக்கப்பட்டன. “முசிறி“, “தொண்டி“ என்னும் துறைமுகங்கள் இந்நாட்டுக்குரியன. சேர மன்னர் செங்குட்டுவன், மைசூரிலும் அதைச் சுற்றி உள்ள கங்க நாட்டுக்காரர்களையும் கிழக்கில் தமிழ் வழங்கிய எல்லையில் இருந்த கட்டி நாட்டுக்காரர்களையும் கங்கரின் எருமை நாட்டுக்கு வடக்கிலிருந்த கருநடரையும் கொண்கானத்தின் வடக்கெல்லையான வானியாற்றின் வடபுறம் இருந்த பங்கள நாட்டினரையும் துளு நாட்டுக்கு வடக்கே இருந்த கொங்கணத்தவரையும் தமிழகத்தின் வடக்கில் கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுப் பகுதிகளில் பரவியிருந்த கலிங்கரையும் வென்றுள்ளார். ஆக, சேரரின் நிலப்பரப்பு இவ்வகையில் விரிவுபெற்றது.

புகார்

சோழ மன்னருக்குரிய காவிரியாறு சங்கமத்துறைக்குரிய “புகார்“ என்ற பெயர் அவரது நாட்டிற்கும் உரியதாகியது. காகந்தி, கோலப்பட்டணம், சம்பாபதி, பூம்புகார், காவேரிப் பட்டணம், காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெயர்களாலும் இந்நகர் குறிக்கப்பெறுகின்றது. இது நீர், நில, தொழில், வாணிப, கலை ஆகிய பலவளங்களை உடைய துறைமுகநகரம். இது மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு பிரிவுகளை உடையது. இவ் இரண்டிலும் நாளங்காடிகள் இருந்தன. நாளங்காடியில் காவல் பூதப்பீடிகை இருந்தது. ஐந்து மன்றங்களும் இரண்டு ஏரிகளும் பதினெட்டு கோவில்களும் புகாரில் இருந்தன.

மருவூர்ப்பாக்கத்தில் பல்வேறு தொழிலாளர்களும் வேற்று நாட்டவரும் குடியிருந்தனர். பண்டகசாலைகளும் பெரும்பாணிருக்கையும் கூலமறுகும் நெய்தலங்கானலும் இருந்தன. கூல மறுகில் அல்லங்காடி செயல்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் மன்னர், அரசு ஊழியர், மருத்துவர், வானநூல் வல்லோர், பன்முறைக் கருவியர், படைப்பிரிவினர், கணிகையர், வேதியர், வணிகர், வேளாளர், சங்குவளை செய்வோர், மணிகளைத் துளையிடுவோர் முதலியோர் முறைப்படி தனித்தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். காமன் கோவிலும் இரண்டு ஏரிகளும் இருந்தன.

பட்டினப்பாக்கத்தில் உலகஇடைகழியும் அதையடுத்து நகரின் எல்லையில் இலவந்திகைச் சோலையும் அங்கிருந்து காவிரியின் கடைமுகத்திற்குச் செல்லும் பாதையும் இருந்தன. மேற்கு நோக்கிய உறையூர்ச்சாலை காவிரியின் கடைமுகத்தில் தொடங்கி நீண்டது. வச்சிரக்கோவில், தருக்கோவில், திருமால் கோவில், சமணர் மற்றம் பௌத்தர் வழிபாட்டிடங்களும் பட்டினப்பாக்கத்தில் இருந்தன.

மதுரை

பாண்டிய மன்னர் ஆண்ட “மதுரை“ பழம்பெரும் நகரமாகும். கடல்கோளுக்குப் பின்னர் புலவர் பலர் கூடிய இடம் என்ற பொருளில் “கூடல்“ என்ற பெயரினைப் பெற்றது. கோட்டை வாயில்களின் மேல் இருந்த கோபுரங்களால் இது “மாடக்கூடல்“ எனப்பட்டது. இப்பகுதியில் மருத மரங்கள் மிகுதியாக இருந்தமையால் “மருதை“ என்று அழைக்கப்பட்டு, பின்னர் அச்சொலல் மருவி மதுரையானது. இதுகுறித்து அ. முத்துவேலன், “கொள்ளிடமும் காவிரியும் குலவிடும் திருவரங்கம்போல் வடபுலத்தில் வையை ஆறு வளங்கொழித்திடச் செய்ய தெற்கில் ஓர் தேனாறாய்த் திகழ்ந்த கிருதமால் நதி திரட்டித் தந்த மருதநிலத் திரவியத்தால், மருதை என்று துலங்கியது மருவி, மதிரையாக மாறி, மதுரை என்று திரிநது வழங்கிவருகிறது“55 என்று கருத்துத் தெரிவித்துள்ளார். கொங்கர்கள் மதுரையை முற்றுகையிட்டபோது பசும்பூண் பாண்டியன் கொங்கரை எதிர்த்து வென்றார்.

மதுரை, “கொற்கை“ என்ற பெரிய துறைமுகத்தினை உடைய நகரம். வையை ஆறு தற்போது ஓடவில்லையெனினும் சங்க காலம் முதல் இன்றுவரை தன் ஓடுபாதையினை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், அதன் அகலமும் ஆழமும் மாறிவிட்டன. நில, நீர், பூ வளமுள்ள மதுரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிபத்திற்குச் சிறப்புபெற்றுத் திகழ்ந்தது. சிவன், திருமால், முருகன், கொற்றவை, பலதேவன் முதலிய பெருந்தெய்வங்களுக்கும் மதுராபதி, இயக்கி போன்ற சிறுதெய்வங்களுக்கும் இங்குக் கோயில்கள் இருந்தன. சமண, பௌத்த பள்ளிகளும் இருந்தன. பல்வேறு கொடிகள் ஏற்றப்பட்ட இந்நகரினைச் சுற்றிக் கோபுரம் கொண்ட நான்கு வாயில்களுடன் பலபொறிகளை உடைய கோட்டையும் அகழியும் காவற்காடும் கிழக்குப் பகுதியில் புறஞ்சிறை மூதூரும் இருந்தன. அந்த மூதூர்தான் இன்றைய மதுரை. நகருக்குள் காவற்கணியர் வீதியும் ஆடற்கத்தியர்க்கு இரண்டு பெரிய வீதிகளும் அங்காடி வீதியும் பொற்கடை வீதியும் இரத்தினக்கடை வீதியும் அறுவைக் கடை வீதியும் கூலக்கடை வீதியும் ஆய்ச்சியர் குடியிருப்பும் குறுந்தெருக்களும் சந்திகளும் முடுக்குகளும் இருந்தன.

kJமதுரை நகரில் சங்க காலத்திலேயே சமண முனிவர்கள் வாழ்ந்து வந்தமை பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிட்டுள்ளது. குன்றைக் குடைந்து செய்விக்கப்பெற்ற சமணப் பள்ளிகளில் (சமணர்களின் வாழிடம்) சமண முனிவர்கள் வாழ்ந்தனர். இம் முனிவர்களை, இல்லறத்தில் உள்ள பொதுமக்கள் பூவும் புகையும் கொண்டுசென்று பணிந்து வணங்கினர் என்ற குறிப்பினை மதுரைக்காஞ்சியில் காணமுடிகின்றது. இலக்கியத்தில் உள்ள இக்குறிப்பினை மெய்ப்பிக்கும் வகையில், மதுரை அணைப்பட்டி அருகிலுள்ள குன்றக்குகைத்தளப்பள்ளியில் தமிழி எழுத்தில் செதுக்கப்பெற்றுள்ள கல்வெட்டு அமைந்துள்ளது. இக் கல்வெட்டின் காலம் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு. இக்கல்வெட்டில், “மதிரை அமணன் அதினன்“ என்பவரது பெயர் இடம்பெற்றுள்ளது. பூலாங்குறிச்சி, சித்தன்னவாசல், சமணர் மலை, சித்தர்கள் நத்தம் போன்ற இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் மதுரையில் சமணர்கள் வாழ்ந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. மதுரையில் சமணர்களின் இருத்தல் (குடியிருத்தல்), எண்ணற்ற இடையூறுகள் பலவற்றைக் கடந்தும் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை (பொ.யு. 2014) நீட்டித்துவருகின்றது.

காஞ்சி

இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நகரங்களுள் ஒன்று காஞ்சி மாநகரம். காஞ்சிக்குப் பொ.யு. 640ஆம் ஆண்டு வந்த சீனப் பயணி யுவான்சுவாங், பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வநது பௌத்த சமயக்கொள்கைகளைப் பரப்பியதாகவும் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுதுபட்டுக்கிடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நகரம் சார்ந்த பகுதியினைத் “தொண்டைமண்டலம்“ என்று சங்க இலக்கியங்கள் தெரிவித்துள்ளன. பெரும்பாணாற்றுப்படையில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்நகரம் அக்காலத்தில் நான்கு பகுதிகளாக விளங்கியது. சிவக்காஞ்சி, விஷ்ணுக்காஞ்சி, ஜீனக்காஞ்சி, பௌத்தக்காஞ்சி. “சிவக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள பெரியகாஞ்சிபுரம். “விஷ்ணுக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள சின்னக்காஞ்சிபுறம். “ஜீனக்காஞ்சி“ என்பது, திருப்பருத்திக்குன்றம். “பௌத்தக்காஞ்சி“ என்பது, இன்றுள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள். அக்காலத்தில் காஞ்சியில் பௌத்தர்கள் மிகுதியாக வாழ்ந்திருந்தனர்.

தொல்லியல் துறையினர் காஞ்சியில் அகழாய்வுசெய்தபோது, பௌத்த விகாரை ஒன்றைக் கண்டறிந்தனர். இவ் விகாரையில் சுட்ட செங்கற்களும் வட்டவடிவிலான சிறிய ஸ்தூபியின் அடிப்பகுதியும் காணப்பட்டன. பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டடம் நான்கு வரிசையிலான செங்கற்களைக் கொண்டிருந்தது. கீழ் இரண்டு வரிசை வட்ட வடிவிலும் மேல் வரிசைகள் நீண்ட செவ்வக அமைப்பிலும் இருந்தன. இந்த ஸ்தூபியின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பெற்றுள்ளது. இதன் கீழ் உள்ள மண் அடுக்கில் கண்டெடுக்கப்பெற்ற மட்கல ஓட்டில் “புதலதிச“ என்ற சொல் தமிழி எழுத்துருவில் பொறிக்கப்பெற்றிருந்தது.56

பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவனின் தம்பி இளங்கள்ளி காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை ஆண்டார். அப்போது அவர் புத்தருக்குக்கோயில் கட்டியதாக மணிமேகலையின் 28ஆவது காதையில் குறிப்பு உள்ளது.

பிற நகரங்கள்

முடியுடை மூவேந்தருக்கு உட்பட்ட இம் மூன்று பெருநகரங்களைத் தவிர்த்து, சிங்கபுரம், உறையூர், நாகநீள்நகர், குமரிக்கோடு, குமரியம் பெருந்துறை, உஞ்சை (அவந்தி), வடவேங்கடம், அரங்கம், மாங்காடு, கொடும்பை, திருமால்குன்றம், அயோத்தி, தொண்டி, வயலூர், கபிலபுரம். நெடுவேள் குன்றம், தலைச்செங்கானம், தங்கால், வாரணம், செந்தில், வெண்குன்று, ஏரகம், செங்களம், அழும்பில், நீலகிரி, பறையூர், குயிலாலுவம், வியலூர், நேரிவாயில், இடும்பில், அகப்பா, காப்பியத்தொல்குடி 32 நகரங்களைப் பற்றிய குறிப்புகளைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகின்றது. சிறப்பு மிக்க சில ஊர்களைப் பற்றிப் பார்ப்போம்.

உறையூர்

சோழர்கள் வாழ்ந்த ஊர் உறையூர். “உறந்தை“ என்ற பழம்பெயர்கொண்ட இவ் ஊரில் புலவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களின் பெயரின் முன்னொட்டுச் சொல்லாக “உறையூர்“ குறிக்கப்பெற்றுள்ளது. சான்றாக, உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், உறையூர்க் கதுவாய் சாத்தனார், உறையூர்ச் சல்லியன் குமரன், உறையூர்ச் சிறுகந்தன், உறையூர்ப் பல்காயனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் முதுகூத்தனார், உறையூர் முதுகொற்றன் முதலிய புலவர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டலாம். உறையூர்க்குக் “கோழி“ என்ற பெயரும் இருந்துள்ளது. “ஊர் என்றால் அது உறையூர்தான்“ என்ற பொருளில் நக்கீரர் இறையனார்க் களவியலுரையில் குறி்ப்பிட்டுள்ளார். உறையூரிலிருந்த “அறங்கூறும் அவையம்“ (நீதிமன்றம்) அக்காலத்தில் புகழ்பெற்றது. இந்த அவையின் சிறப்பினை நற்றிணையின் 400, அகநானூற்றின் 93, புறநானூற்றின் 39, 58 ஆகிய பாடல்கள் புகழ்ந்துள்ளன. இங்கு நன்செய் நிலங்கள் மிகுதியாக இருந்துள்ளன. மலையும் காடும் ஆறும் இந்த ஊரில் இருந்துள்ளன. ஆதலால், இவ் ஊர் வளம்மிக்கதாகவும் இயற்கையான அரண்களை உடையதாகவும் இருந்துள்ளது.

கழுமலம்

“கழுமலம்“ என்ற பெயர் பிற்காலத்தில் “காழி“ என்றாகி, இப்போது சீர்காழி என்றுள்ளது. கரிகாற்சோழனை வேந்தராகத் தேர்ந்தெடுத்த யானை கழுமலத்திலிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரியவருகிறது. கரிகாற்சோழன் இவ் ஊரிலிருந்து ஆண்டதாகக் கூறப்படுகின்றது. பின்னர் இவ் ஊர் சேர மன்னர் குட்டுவனுக்குரியதாக மாறியது. அவரிடமிருந்து இவ் ஊரினைக் கைப்பற்ற சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி முயற்சி செய்தார். இதனை அறிந்த குட்டுவன் தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களுக்கு ஓர் அவசர ஓலையினை அனுப்பித் தனக்குப் படைபலம் தருமாறு ஆணையிட்டார். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை ஆகிய சிற்றரசர்கள் தமது படையுடன் குட்டுவனுக்கு உதவ வந்தனர். இந்தக் கூட்டுப்படைக்குக் கணையன் என்பவர் ஒட்டுமொத்த படைத்தளபதியாக இருந்தார். கணையன் நன்னனின் நண்பர்.அழுந்தூரை ஆண்ட சோழன் கண்ணீப் பெரும்பூண் சென்னி என்பவர் இளஞ்சேட் சென்னிக்கு உதவியாகத் தனக்குக் கீழிருந்து, “போர்“ எனும் ஊரினை ஆளும் பழையன் என்பவரைத் தலைமையாகக் கொண்டு பெரும்படையினை அனுப்பினார். எதிரிகளின் பாசறையைத் தாக்கி அழித்த பழையன், தானும் மாண்டார். இதனை அறிந்த கண்ணீப் பெரும்பூட் சென்னி தானே முன்னின்று படை நடத்திச் சென்று, கணையனைக் கைதுசெய்தார். கழுமலத்தினைக் கைப்பற்றினார்.இவ் வெற்றியினைத் தன் தலைநகரான அழுந்தூரில் கண்ணிப் பெரும்பூட் சென்னி கொண்டாடியதாகக் குறிப்புள்ளது. இவரைச் “செங்கணான்“ என்றும் குறித்துள்ளனர். இருப்பினும் “சென்னி“ என்பது, சோழர்களின் பொதுப் பெயர்களுள் ஒன்று என்பதால் இங்குக் குறிப்பிடப்படும் “சென்னி“, கண்ணிப் பெரும்பூட் சென்னியா அல்லது நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியா அல்லது உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியா என்பது விவாதத்திற்குரியது.

கருவூர்

அக்காலத்தில் மூன்று கருவூர்கள் இருந்துள்ளன. அதில் சேரர்கள் ஆண்ட கருவூர், “சேரபோத்ரர்களின் அரண்மையுள்ள கரோரா“ என்று தாலமியால் சுட்டப்பட்டு்ள்ளது. இது கொங்குநாட்டில் ஆன்பொருநை நதிக்கரையில், சேரர்களின் இரும்பொறை மரபினரால் ஆளப்பட்ட கருவூர் ஆகும். இதற்கு “வஞ்சி“ என்ற வேறொருபெயரும் உண்டு. இது இன்றைய “கரூர்“ ஆகும். மற்ற இரண்டு கருவூர்களுள் ஒன்று மேலைக்கடற்கரையிலும் மற்றொன்று தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ள கருவூரைச் சேரர்களின் குட்டுவன் மரபினரால் ஆளப்பட்டுவந்துள்ளது.

இன்றைய கரூர் அன்றைய காலத்தில் செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்துள்ளது. இது அயல்நாட்டு வாணிபத்தோடு மிகுந்த தொடர்புடையது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் யவனர்களின் காசுகள் பல கிடைத்துள்ளன.

குடவாயில்

சோழன் கண்ணிப் பெரும்பூட் சென்னிக்குரிய ஊர் “குடவாயில்“. இதனைக் “குடந்தை“ என்றும் “குடந்தைவாயில்“ என்றும் குறிப்பிடுகின்றனர். இன்று “குடவாசல்“ என்று அழைக்கப்படுகின்றது. தஞ்சை நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் – கும்பகோணம் சாலையில் உள்ளது. அக்காலத்தில் இங்குப் பழைய நெல்லை மிகுதியாகச் சேமித்துவைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சோழர்களின் கருவூலமாகவும் (கஜானா) இது இருந்துள்ளது. அதனால், இவ் ஊருக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அரண்களும் மதில்களும் இவ் ஊரினைச் சுற்றி இருந்துள்ளன. அவற்றைச் சுற்றி அகழிகளும் இருந்துள்ளன. இது மக்கள் தொகை பெருகிய ஊராகவும் இருந்துள்ளது. சோழன் செங்கணான் கழுமலப்போரில் தன்னால் கைதுசெய்யப்பெற்ற சேரன் கணைக்கால் இரும்பொறையை இவ் ஊரில் சிறைப்படுத்தினான். அந்தப் பகுதி இப்போது “கோட்டவம்“ என்று அழைக்கப்படுகின்றது.

தொண்டி

இரண்டு தொண்டிகள் உள்ளன. ஒன்று சேர நாட்டின் மேற்குப்பகுதியிலும் மற்றொன்று பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையின் பகுதியிலும் உள்ளன. பாண்டிய நாட்டிலுள்ள தொண்டியில் கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு அகில், துகில், ஆரம், வாசம், கற்பூரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இப்போது இராமநாதபுரத்திற்கு அருகில் ஒரு சிற்றூராகத் தொண்டி முடங்கிப்போனது. சேர நாட்டிலுள்ள தொண்டி இன்று ஆழப்புழை ஆற்றின் கரையில் இருந்துள்ளது. ஊருக்குச் செல்லும் வழி இருக்கிறது. ஆனால், ஊர்தான் இல்லை. தொண்டிக்குச் செல்லும் வழியில் “தொண்டிப்போயில்“ என்ற சிற்றூர் மட்டுமே உள்ளது. தொண்டி இல்லை.

பரங்குன்று

கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதப்படும் திருப்பரங்குன்றம் பழங்காலத்தில் பரங்குன்று என்று அழைக்கப்பட்டுள்ளது. இது மதுரையின் தென்மேற்கில் உள்ளது. இக்குன்றின் மேலுள்ள குகைத்தளங்களில் சமண முனிவர்களின் கற்படுக்கைகளும் பாறைகளில் தமிழி எழுத்தில் பொறிக்கப்பெற்றுள்ள வாசகங்களும் உள்ளன. சங்ககாலப் புலவர் நல்லந்துவனாரின் பெயரும் அவ் வாகசத்தின் ஓரிடத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது. இராவணன் கைலாய மலையைப் பெயர்க்கும் காட்சி சிற்பவடிவில் உள்ளது. இது பிற்காலத்தது.

அறுபடை வீடுகள் பற்றிப்பேசும் திருமுருகாற்றுப்படையும் முதல் படைவீடாகத் திருப்பரங்குன்றத்தையே சுட்டுகிறது. எண்பெருங்குன்றங்களை வரிசைப் படுத்தும் சமணப் பழம்பாடல் ஒன்றும் திருப்பரங்குன்றத்தையே முதல் சமணத் தலமாகக் குறிப்பிட்டுள்ளது. புலவர் மருதன் இளநாகனார் அகநானூற்றின் 59ஆவது பாடலில், திருப்பரங்குன்றத்தை “முருகன் குன்றம்“ என்று சுட்டியுள்ளார். அதே நூலில் 149ஆவது பாடலில் புலவர் எருக்காட்டூர் தாயங் கண்ணனார் திருப்பரங்குன்றத்தை “ஒடியா விழவின் நெடியோன் குன்றம்“ என்கிறார். மதுரைக்காஞ்சியின் 264ஆவது அடியில் “தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்“ என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.பரிபாடலில் உள்ள பாடல்களுள் ஏழு பாடல்கள் பரங்குன்றின் முருகனைப் பற்றியதாக அமைந்துள்ளன. அவ் ஏழ் பாடல்களுள் ஒன்றில் பரங்குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும் அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவற்றைக்காண வந்த மதுரை மக்கள் அங்கிருந்த ரதி, மன்மதன், அகலிகை, கௌதமர், பூனை உருக்கெண்ட இந்திரன் ஆகியோரை அடையாளங்கண்டு வியந்ததாகவும் சுட்டப்பெற்றுள்ளது. பெரும்பான்மையான சங்க இலக்கியப் பாடகல்கள் பரங்குன்றை முருகனோடு இணைத்துப் பேசியுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே சமணத்துறவியர் வாழ்ந்ததற்காக சான்றுகள் உள்ளன.57 அவர்கள் வாழ்ந்த குகைகளின் முகப்புகளிலும் குகைக்குள் அவர்கள் படுத்துத் தூங்கிய கற்படுக்கைகளிலும் தமிழி எழுத்தில் அமைந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சான்றாக, “அந்துவன் கொடுபிதவன்“, எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தான் ஆய்சயன நெடுநாதன்“, “மாரயது கயம“ இம்மூன்றினையும் குறிப்பிடலாம்.

பாழி

எழிமல்லைப் பகுதியில் “பாழி“ என்ற ஒரு நகரம் இருந்துள்ளது. அதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் ஆண்டுவந்தார். இந்நகர், வடநாட்டிலிருந்து மேற்குக் கடற்கரை வழியாகத் தமிழ்நாட்டின் கிழக்கி நோக்கி நுழைய ஒரு வாசலாக இருந்தமையால், பலரும் இதனைப் பயன்படுத்தித் தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைய முடிந்தது. அவர்களை எதிர்த்து நம்மவர்கள் தொடர்ந்து போர் புரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நகர் தொடர்ந்து போர்க்களமாகவே இருந்துவந்தது. ஆதலால், இந்நகரத்திற்குச் “செருப்பாழி“ (செரு-பகை,போர்) என்ற மற்றொரு பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

வேங்கடம்

“கடம்“ என்றால், பாலைநிலம் என்று பொருள். வேங்கடமலைக்கு வடக்கிலுள்ள பாலைநிலத்தைக் குறித்த இச்சொல் பின்னர் அங்கிருந்த மலைக்குரிய பெயராக மாறிவிட்டது. இதனை “வெங்கடம்“ என்றும் அழைத்துள்ளனர். தொல்காப்பித்திற்குச் சிறப்புப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் தமிழ்மொழி பேசும் மக்களின் வாழிட எல்லையை “வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து“ என்று இம்மலையைத் வடதிசை எல்லையாகக் காட்டியுள்ளார். இம்மலைப்பகுதியினை ஆதனுங்கன், புல்லி, கரும்பனூரன், தொண்டைமான், தொண்டைமான் வழியினர், திரையன் ஆகியோர் ஆண்டுள்ளனர். இம் மலைப்பகுதியிலிருந்துதான் பாண்டிய நாட்டிற்கு யானைகள் பல கொண்டுவரப்பட்டன.

நெடுவழிகள்

ஒவ்வொரு நகரினையும் இணைக்கும் வழிகளும் பல வகையில் இருந்துள்ளன. பண்டைத் பெருவழிகளும் சிறுவழிகளும் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பெற்று ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துள்ளன. புகாரிலிருந்து காவிரியின் வடகரை வழியாகத் திருவரங்கத்திற்குச் செல்லும்பாதை இப்போது மேலையூருக்கும் கீழையூருக்கம் இடையே மாற்றம் பெற்றுள்ளது. உறையூரிலிருந்து கொடும்பாளூர் வழியாக மதுரைக்கு வரும் பாதைகள் சேத்துப்பட்டி என்ற ஊரையடுத்து மூன்றாகப் பரிந்துள்ளன. இதனால் சூலம் போன்ற அமைப்பினை இன்றும் காணமுடிகின்றது. இவற்றுள் ஒன்று சிறுமலை வழியாகவும் மற்றொன்று நத்தம் கணவாய் வழியாகவும் பிரிதொன்று அழகர்மலை வழியாகவும் மதுரையை அடைந்துள்ளன. இன்று திருச்சியிலிருந்து கொடும்பாளுர் வழியாகத் துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி ஊர்களைக் கடந்தபின்னர் வேறுபாதையில் பிரிந்து மதுரையை அடைகின்றது. மதுரையிலிருந்து வையையின் தென்கரை வழியே நெடுவேள்குன்று வரை பாதை இருந்துள்ளது. சோழ நாட்டிலிருந்து பொதிய மலையைக் கடந்து சேரநாட்டினை அடையமுடிந்துள்ளது. சேரநாட்டிலிருந்து கூமாபட்டி கணவாய் வழியாகத் தங்கால் ஊரினை அடைந்தனர். வஞ்சியிலிருந்து நீலகிரி நெடும்புறம் வரை பாலக்காட்டுக் கணவாய் வழியாக ஒரு பெருவழி இருந்துள்ளது. tவடதிசையிலுள்ள கனகவிசயரை வென்று, கண்ணகிக்குச் சிலைசெய்ய இமயத்தில் கல்லெடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி வஞ்சிக்கு வந்த சேரன் செங்குட்டுவன் வஞ்சி முதல் கங்கை வரை ஒரு பெருவழியினைப் பயன்படுத்தியிருப்பாரே! கங்கையிலிருந்து குமரி முனைக்குப் புனித நீராட வந்தவர்கள் ஒரு நெடுவழியினைப் பயன்படுத்தியிருப்பனரே! இவ் வழிகள் வட, தென் இந்தியாவை இணைத்த நிலப் பாதைகள்தானே!