பால்கனி முத்தம்

கேட்டி என்றழைக்கப்படும் கேத்தரீன் மிட்டில்டன் என்ற அந்தப் பெண்ணின் கல்யாணம், உலகே உற்றுப் பார்த்த காஸ்ட்லியானதாக கல்யாணம். கல்யாண செலவுகளைக் கழித்து கல்யாணத்திற்கு லீவு எடு கொண்டாடு என்பதினால் மட்டுமே பிரிட்டனுக்கு ஐந்து பில்லியன் பவுண்டு பாழாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.[கிட்டத்தட்ட 2 லட்சம் 2G]

மாமியாரைப் போலவே, ஒரு குடிமகள், கோமகளாவது, முப்பது வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது என்பதை விட இப்படி நடப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்பது இந்த கல்யாணத்தை  வரலாற்று சிறப்பு மிக்கதாக்கலாம். சர்வாதிகாரிகளை எல்லாம் சுவாஹா செய்யும் இந்தக் காலத்தில் மன்னராட்சி மகுடம் எல்லாவற்றையும் மண்ணாக்க வேண்டும் என குரல் வலுத்துக் கொண்டிருப்பது தான் காரணம்.

கோக்குமாக்கான இது போன்றவற்றை விட்டு விட்டு கோலோகலமான கல்யாண கொண்ட்டாட்டக் கதைகளை இனி பார்க்கலாம்.

டிவிட்டர், ப்ளிக்கர், ஃபேஸ்புக், யூடூப், தனி வெப்சைட்,5 டாலருக்கு கல்யாண அப்ளிகேஷன் என தனிமனிதர்கள் பலரைத் தொட்ட முதல் டிஜிட்டல் அரச கல்யாணம்.

இப்படி சோஷியல் நெட்வொர்க்களில் கல்யாணத்தைப் பற்றி பல விஷயங்கள் பரவலாக பரப்ப பட்டிருந்தாலும் பொத்தி பொத்தி மிகவும் இரகசியமாக வைக்கப்பட்ட சமாசாரம், மணப்பெண்ணின் கல்யாண உடை. அது எப்படி இருக்குமென  மாப்பிள்ளை வில்லியம்முக்கே தெரியாமல் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பாரதிராஜா படத்து வெள்ளை உடை தேவதை போல வந்திறங்கிய கேட்டியைப் பார்த்து வில்லியம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்று சொன்னதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால் ஆ வென பல பெண்களை வாய் பிளக்க வைக்கும் சமாசாரம் ஒன்று உண்டென்றால் அது கேட்டியின் மேக்கப். பார்லருக்கு எங்கும் செல்லாமல் அவரே செய்து கொண்டது! இது தெரிந்த நமக்கு தெரியாத விஷயம், அவர் மேக்கப்பிற்கு எடுத்துக் கொண்ட நேரம்!

அதே போல், எதிர்கால மனைவியிடம் வழிந்த கையோடு, அவள் கைப்பிடித்து வந்த மாமனாரிடம், ”சின்ன பேமிலி பங்ஷன்” என இளவரசர் வில்லியம் சொன்னது மாப்பிள்ளை ஜோரில் சேர்த்தியா என்பதும் நமக்கு புரியாத ஒன்று.

கேட்டியின் கல்யாண உடைக்கு அடுத்தப் படி அனைவரின் கண்ணைப் பறித்த அயிட்டம், பெண் தோழியான கேட்டியின் தங்கை, பிப்பா. பிப்பாவை யப்பா எனப் பார்த்து வழிந்த ஜொள், பல லிட்டர் இருக்கும். அவருக்கும் மாப்பிள்ளைத் தோழரான வில்லியம்மின் தம்பி ஹாரிக்கும் பத்திக்கும் என பெட் கட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.!

லண்டனின் சொல்லாமல் கொள்ளாமல் மழை வந்து விடும். மழை வந்து கொண்டாட்டத்தைக் கெடுத்து விடுமோ என கல்யாணத்தைக் காண வந்திருந்த மில்லியன் மக்களும் ரெயின் ரெயின் கோ அவே பாடியிருப்பார்கள் போல. மழை எட்டிப்பார்க்கவில்லை.

எல்லாருக்கும் மேலாக வில்லியம் மிக சந்தோஷப்பட்டிருப்பார். கல்யாணத்திற்குப் பிறகு முதன் முறையாக தன் அதிகாரபூர்வ வீட்டிற்கு கமான் கேட்டி எனத் திறந்த காரில் கூட செக்யூரிட்டி யாருமில்லாமல் கூட்டிப் போனார். காரின் நம்பர் பிளேட் JU5T WED. சரியான சினிமாத்தனம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பைலட் மனைவியை முதல்முறையாய் காரில் கூட்டிப் போனார் என்ற அவச் சொல்லுக்கு ஆளாகி விடக் கூடாது என வில்லியம் வேலை செய்யும் விமானத் துறை நினைத்ததோ என்னமோ, காரை பின் தொடர்ந்து வானத்தில் விமானங்களைப் பறக்க விட்டனர்.

இந்த விமானங்களை விட வெயிட்டான மேட்டர் என்னவெனில், வானத்திலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி தான். வாழ்த்தியது வானத் தூதர்களல்ல. கல்யாணத்திற்கு முந்தைய நாள் இங்கிலாந்து மேல் பறந்த விண்வெளிக் கலத்திலிருந்த விண்வெளி வீர்ர்கள்.

கட்டிங், பிரியாணி, விருந்து என எதுவுமில்லையென்றாலும் பரவாயில்லை என கல்யாணத்திற்கு மில்லியன் மக்கள் வந்திருந்தாலும் அதிகாரபூர்வ அழைப்பு 1900 பேருக்கு மட்டும் தான். ஒரு மில்லியன் மட்டுமே மக்கள் தொகை கொண்ட ஸ்வாசிலாண்ட் என்ற ஊர், சாரி நாட்டின் மன்னரும் இந்த 1900 பேரில் ஒருவர். இது எங்கே இருக்கிறது என்பது திருமண தம்பதிகளுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. இவரை எல்லாம் கூப்பிட்ட அரச குடும்பம், அம்மாம்பெரிய அப்பாடக்கர் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வின்னர் ஒபாமாவைக் கூப்பிடவில்லை!

வில்லியம் பட்டத்து வாரிசு இல்லை ஆகையால் இது அரச கல்யாணமில்லை, அதனால் அவரைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை எனக் காரணம் சொல்கிறார்கள். இல்லை ஒரு வேளை, ஒபாமாவின் அமைச்சரவையில் இருக்கும் ஹில்லாரியே அவரின் மகள் கல்யாணத்திற்கு ஒபாமாவைக் கூப்பிடவில்லை நாம் ஏன் கூப்பிட வேண்டும் என நினைத்திருப்பார்கள் போல. ஓபாமாவைக் கல்யாணத்திற்கு கூப்பிடுவதில் எல்லாருக்கும் என்ன கஷ்டமோ! அங்கு அவருக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் கிப்ட் செலவு ஏன் வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்  கூடக் காரணமாயிருக்கலாம்.

ஒபாமாவைக் கூப்பிடாவிட்டாலும் பக்கத்து அயர்லாண்டில் ஒரு கத்தோலிக்க கார்டினலைக் கூப்பிட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கர்களுக்கு அரியணை ஏறும் உரிமையில்லை என சட்டம் இயற்றி வைத்திருக்கும் பிரிட்டன் அரச குடும்பத்து கல்யாணத்துக்கு ஒரு பெரிய ஐரிஷ் பிஷப் வருவது இதுவே முதல் முறை.

அன்று டயானா சார்லஸ் கல்யாணத்தைப் பார்க்க கூட்டத்தோடு கூட்டமாய்  இரவோடிரவாய் இலவு காத்த கிளியாய் காத்திருந்தவர்களில் ஒருவர் இன்று பிரிட்டனின் பிரதமர். அன்று கூட்டத்தில் தானே பார்த்தீர்கள், இன்றும் அப்படியே பாருங்கள் என சொல்லாமல்,நல்ல வேளை அவரைக் கூப்பிட்டிருந்தார்கள்.

கல்யாண வைபவங்களில் அனைவரும் ஆவலாய் எதிர் பார்த்துக் கொண்டிருந்த மிக முக்கியமான மேட்டர், முத்தம். கல்யாணம் முடிந்து அரண்மனை பால்கனியில் அரச குடும்பம் காட்சியளிக்கும் போது தம்பதியினர் கொடுத்துக் கொள்ளும் முத்தம்.

பால்கனியில் காட்சி தந்த போது, முத்தம் முத்தம் என மொத்த கூட்டமும் கத்த முத்தத்தை பரிமாறிக் கொண்டார்கள். அவர்களிருவரில் யார் மைண்ட்வாய்ஸ் யாருக்கு கேட்டதோ என்னமோ, கூட்டம் ஒன்ஸ் மோர் கேட்காமலே அவர்கள் வாயோடு வாய் கலந்தனர். அப்பொழுது அந்த சத்தத்தை [இது கூட்டத்தின் கூச்சல்] கேட்க விரும்பாமல் அங்கு இருந்த குட்டிக் குழந்தை, காதை மூடிக் கொண்டது. வில்லியம் அந்தக் குழந்தையின் காட்பாதர்.

பப்ளிக்கில் முத்தமா? அங்கே கலாசாரக் காவலர்கள் இல்லையா என்ற கேள்வி எழலாம். முத்தமிட்டிருக்காவிட்டால் தான் அந்த ஊர் கலாசார காவலர்கள் கோதாவில் குதித்திருப்பார்கள். ஹும் அங்கே, முத்தமிடல் ஒரு பாரம்பரிய சம்பிரதாயம்

அந்த சம்பிரதாய முத்தக் காட்சி பலரை முப்பது வருடங்கள் பின்னோக்கித் தள்ளியிருக்கலாம். ஏனெனில் அதே பால்கனியில் தான் டயானாவும் சார்லஸூம் முத்தமிட்டுக் கொண்டனர். இரண்டு கல்யாணங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை இதோடு முடிந்து சரித்திரம் மறுபடி மற்ற விஷயங்களில் ரீப்பிட் ஆகாமல் இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும் பிரார்த்தனையும்.

முத்தத்தை தாண்டி இப்பொழுது அனைவரின் அடுத்த எதிர்பார்ப்பு என்னவெனில், இப்பொழுது இருக்கும் இராணிக்கு பிறகு அரியணை ஏறுவதற்கு வாய்ப்பு கேட்டிக்குக் கிட்டுமா அல்லது கேட்டி கொடுக்கவிருக்கும் குலவிளக்குக்கா?

இரவெல்லாம் அழுகிறார்கள்…

[பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இயற்கை எய்திவிட்டார்.  அவருக்கு தமிழ் பேப்பரின் மனமார்ந்த அஞ்சலிகள். தமது யாழ்ப்பாணப் பயணத்தின்போது பார்வதியம்மாளைச் சந்தித்துத் திரும்பிய பத்ரி, சூரியக் கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை இது. சூரியக் கதிருக்கு நன்றியுடன் இங்கு மீள் பிரசுரம்.]

பார்வதி அம்மாள்

அது சிறிய கடற்கரை ஊர். மக்கள் தொகை ஐயாயிரம் இருந்தாலே அதிகம். மருத்துவமனை எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே வந்து சேர்ந்தோம். கடல். கடலை ஒட்டிய சாலை. அதில் கடலைப் பார்த்தபடி இருக்கிறது பிரதேச வைத்தியசாலை, வல்வெட்டித்துறை. அமைதியான சிறு கட்டடம். அங்குதான் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைப் பார்க்கத்தான் நாங்கள் சென்றிருந்தோம்.

யாழ்ப்பாணம் நகரில் கல்விக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற வாரம் நான் சென்றிருந்தேன். 2009-ல் போர் முடிந்தபின் வியாபார நிமித்தமாக இலங்கை சென்றுவந்துள்ளேன் என்றாலும் கொழும்பு தாண்டி வேறு எங்கும் செல்லவில்லை. இப்போதுதான் முதல்முறையாக யாழ்ப்பாணம் வருகிறேன். ஆனாலும் வல்வெட்டித்துறை செல்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு, காந்தளகம் மறவன்புலவு சச்சிதானந்தம் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். யாழ்ப்பாணத்துக்காரர். ஆனால் கடந்த பல வருடங்களாக அவர் வசிப்பது சென்னையில். யாழ்ப்பாணம் நகரை ஒட்டியுள்ள அவரது கிராமமான மறவன்புலவில் சுவிட்சர்லாந்து நாட்டின் உதவியுடன் வீடுகள் அனைத்தும் மீண்டும் கட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கவும், தான் ஈடுபட்டிருக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயல்களைக் கவனிக்கவும் சில நாள்களுக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். அங்கிருந்து வல்வெட்டித்துறை போகப்போவதாகவும், மருத்துவமனையில் பார்வதி அம்மாளைப் பார்க்கப்போவதாகவும் சொன்னார். உடனே வேலையை விட்டுவிட்டு நான் அவருடன் ஒட்டிக்கொண்டேன்.

யாழ் நகரத்தைச் சுற்றிக் காட்டினார். ‘இதோ, எரிக்கப்பட்ட நூலகம்’ என்று காண்பித்தார். இங்குதான் ஜனவரி 1974-ல் சர்வதேச தமிழ் ஆய்வு மாநாடு நடத்தப்பட்டது. அப்போதுதான் போலீஸ் தடியடியின்போது ஏழு பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னரே யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் எங்கும், என் இலங்கையின் தமிழர் பகுதி எங்குமே வலி தரக்கூடிய வரலாற்று நிகழ்வுகள்தானே?

எதைப் பற்றியும் பேசமுடியாத ஒரு சோகத்தில், காரில் வல்வெட்டித்துறை செல்லும் வழியில் திடீரெனப் பெருமழை. எதிரே வருவோர் யாரும் கண்ணுக்குத் தெரியாத வகையில் கொட்டிக்கொண்டிருந்தது. புதிய சாலைகளைப் போடுகிறார்கள். ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ராணுவ வீரர். மழை விடவும், நாங்கள் சாலையில் ஒரு டி-ஜங்ஷனை அடையவும் சரியாக இருந்தது. இடது பக்கம் திரும்பினால் வல்வெட்டித்துறை. வலப்பக்கம் பருத்தித்துறை.

அடையாளம் கேட்டுக்கொண்டு மருத்துவமனையை அடைந்தோம். ஒரு காவலரோ, ராணுவ வீரரோகூட காவலுக்கு இல்லை என்பது அதிசயமாக இருந்தது. உள்ளே நுழைந்து வழி கேட்டுக்கொண்டு பார்வதி அம்மாள் இருக்கும் வார்டுக்குச் சென்றோம்.

அவருக்கு என்று சிறப்பு அறை ஏதும் கிடையாது. சுமார் 12-15 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு அது. அதில் ஒரு படுக்கையில் அவர் படுத்திருந்தார். மூப்பாலும் நோயாலும் அலைக்கழிப்பாலும் சுருண்டு சிறியதாகியிருந்த உருவம். உடலின் வலப்பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்தவர். நர்ஸ்கள்தான் தூக்கி உட்காரவைக்கவேண்டும். உணவு கொடுக்கவேண்டும். உடலைத் துடைக்கவேண்டும். உடையை மாற்றவேண்டும். மீண்டும் படுக்கவைக்கவேண்டும்.

சச்சிதானந்தம் பார்வதி அம்மாளிடம் அறிமுகம் செய்துகொண்டு சில வார்த்தைகள் பேசினார். அந்த அம்மாளுக்கு தற்போது நினைவில் நிற்பவை வெகு சிலவே. கலங்கிய முகம். தன்னைச் சுற்றி நடப்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவர் இருப்பதாகத் தெரியவில்லை. அவரது இயலாமையும் பரிதவிப்பும் மனத்தைப் பிழிந்தன. அவரைப் பார்த்துக்கொள்ள உறவினர்கள் யாரும் அருகில் இல்லை. யாரும் வருவதில்லை என்றார் செவிலிப்பெண்.

இந்த வயதான, நோய்வாய்ப்பட்ட அம்மாளா இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவர் என்று சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்? அரசியலில் எந்தவிதத்திலும் ஈடுபடாத ஒரு வயதானவரை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முயற்சி செய்த தமிழக அரசியல்வாதிகள் வெட்கப்படவேண்டும். சென்னையில் பார்வதி அம்மாளின் மகள் ஒருவர் இருக்கிறார். தன் அன்னையை தன்னுடன் வைத்துக்கொள்வதில் அவருக்கு இஷ்டமில்லை என்பதாகச் செய்தி. மற்றொரு மகனும் மகளும் கனடாவில் இருக்கின்றனர்.

மருத்துவர் மயிலேறும்பெருமாள் அழைப்பதாகத் தகவல் சொன்னார்கள். உள்ளே நுழைந்தோம். எங்களைப் பார்த்த உடனேயே, ‘இந்தியாவால்தான் எல்லாப் பிரச்னையும்’ என்றார். தலையைக் குனிந்துகொண்டோம். ‘பார்வதி அம்மாளைப் பார்த்துக்கொள்ள எந்த நாட்டின் மருத்துவ உதவியும் எங்களுக்குத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் எங்களிடமே இருக்கின்றன’ என்று பெருமையுடன் சொன்னார். முந்தைய வாரம்தான் தன்னிடம் வந்திருந்த 25 லட்ச (இலங்கை) ரூபாய்க்கான காசோலையைக் காட்டினார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் அனுப்பியுள்ள பணம். ‘ஆனால், இந்த அம்மாவுக்கு, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் பாசம். இரவெல்லாம் அவர்களை நினைத்து அழுகிறார்கள். அதுதான் பிரச்னையே’ என்றார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற மயிலேறும்பெருமாளுக்கு இப்போது வயது 70. முண்டா பனியன்தான் அணிந்துள்ளார். நெற்றியில் சந்தனப்பொட்டு. கழுத்தில் இரண்டு சங்கிலிகள். அதில் ஒன்றில் அவரது தாயின் படம். அழுத்தம் திருத்தமாகப் பேசினார். 60 வயதில் ஓய்வுபெற்றவர், மருத்துவர்கள் பற்றாக்குறையால் ‘ரீ-எம்பிளாய்மெண்ட்’ என்று மறுபடியும் பணி செய்கிறார். பார்வதி அம்மாளின் கனடா மகன், மகள் தினமும் தொலைபேசியில் பேசுவார்களாம். நேரில் வந்து தாயை ஏன் அழைத்துச்செல்லக்கூடாது என்ற இவர் கேள்விக்கு, இலங்கை வந்தால் உயிர் பயம் என்ற பதில்தான் வருமாம்.

‘அப்படி என்ன உயிர்மீது பயம்? இதோ, வெளியே இதே தெருவில் ஐந்து முறை நான் கொல்லப்பட்டிருப்பேன். குண்டுகள் வீசப்பட்டபோதும் கவலை இன்றி, என் வேலையைச் செய்தேன். அன்று ஒரு நாள் மட்டுமே 29 உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்தேன். தாய்க்காக ஒருவரால் இதைக்கூடச் செய்யமுடியாதா’ என்று பொருமினார். அதற்கு முந்தைய நாள்தான் மஹிந்த ராஜபக்ஷேவின் ஒரு செயலர் அங்கு வந்திருந்தார் என்று அவரது அடையாளச் சீட்டை எடுத்துக் காண்பித்தார். என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னாராம். பலாலியிலிருந்து கனடாவரை விமானம்மூலம் பார்வதி அம்மாளை அனுப்பிவைக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால் இந்த அம்மாளை வைத்துக்கொள்ளத்தான் யாரும் தயாரில்லை போலும்.

நோயாளி ஒருவருக்கு வயிறு வீங்கியுள்ளது என்று செவிலிப்பெண் ஒருவர் எட்டிப்பார்த்துச் சொன்னார். அதற்குமேல் மருத்துவரது நேரத்தை எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

வெளியே நல்ல வெயில். புழுக்கம் அதிகரித்திருந்தது.

பூங்காற்று திரும்புமா?

மலேசியாவில் இருந்து கலைவேட்கை கொண்டு ஓர் இளைஞன் சென்னையில் கால் பதிக்கின்றான்.  எந்தவிதமான செல்வாக்கும், கலைப்பின்னணியும் இல்லாத ஒரு புது இடத்தில்தான் அவன் பாடகனாகத் தன் சுற்றை ஆரம்பிக்க வேண்டிய சவால். அவனுக்குத் தேவை ஒரு நல்ல வாய்ப்பு. டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் அவனுக்குப் பாடவாய்ப்புக் கிடைக்கின்றது. அதுவும் கிணற்றில் போட்ட கல்லாய் வெளிவராத பாட்டாக அமைந்து விடுகின்றது.  ஒரு நல்ல திருப்பத்துக்காகக் காத்திருந்த அவனுக்கு “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்ற 16 வயதினிலே படப்பாடல் அமைந்து விடுகின்றது. ஒரு வெள்ளந்தித்தனமான அந்தக் குரலே பட்டிதொட்டியெங்கும் அந்தக் கலைஞன் யாரென்று திரும்பிப் பார்க்க வைத்து விடுகின்றது.

அந்தப் பாட்டில் ஆரம்பித்த சுற்று, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அங்கீகரிக்கப்படுகின்றார். அவர் தான் மலேசியா வாசுதேவன்.

எண்பதுகளிலே ரஜனி – கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலகின் அடுத்த போக்கைத் தீர்மானிக்கும் நட்சத்திரங்களாக  உயர்ந்து நிற்கின்றார்கள். கமல்ஹாசனின் நகலாக அச்சொட்டாகப் பொருந்திப்போய் விடுகின்றது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். ஸ்டைலாக,  நடிப்பிலங்கணங்களைக் கடந்த எதார்த்தமான ரஜினிகாந்தின் குணாம்சத்துக்குப் பொருந்திப் போக ஒரு குரல் தேவைப்படுகின்றது. அந்த வேளை மலேசியா வாசுதேவனின் குரல் தான் சூப்பர் ஸ்டாராக மாறிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அணி செய்யும் விதத்தில் அமைந்து விடுகின்றது.

உதாரணமாக தர்மயுத்தம் படத்தில் வரும் தங்கை செண்டிமெண்ட் பாடல் “ஒரு தங்க ரதத்தில் என் மஞ்சள் நிலவு”, அதே படத்தில் வரும் “ஆகாய கங்கை” என்ற காதல் பாட்டு. இந்த இரண்டு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியியிருக்கும் பாணியைக் கவனித்தாலே போதும், ரஜினிகாந்த் என்ற எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு இந்தக் குரல் எவ்வளவு தூரம் நெருங்கி ஒத்துழைத்திருக்கின்றது என்று.

ஒரு காலக்கட்டத்தில் டி.எம். செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது. எண்பதுகளில் வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களிலே மலேசியா வாசுதேவன் குரல் தான் அவருக்கான குரலாகப் பொருந்தியிருக்கின்றது. குறிப்பாக, முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார்.  குறிப்பாக கைதியின் டயரி என்ற படத்தில் ஆரம்பித்து முதல் வசந்தம், ஊமை விழிகள் என்று மலேசியா வாசுதேவனுக்கான பாத்திரங்களைச் சிறப்பாகவே செய்து அதிலும் தன் முத்திரையைக் காட்டியவர்.

சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம். சாமந்திப்பூ படத்தில் தானே இசையமைத்துப் பாடிய “ஆகாயம் பூமி” பாட்டைத் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.பி.சைலஜா பாடிய “மாலை நேரம்” பாடல் வந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி ஒலிபரப்பிச் சலிக்காத பாடலாக இருந்தது.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க “நீ சிரித்தால் தீபாவளி” படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமா ரமணனோடு பாடிய “இந்த அழகு தீபம்” பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார்.  “மாமனுக்கு மைலாப்பூரு தான்” (வேலைக்காரன்) பாட்டிலே வெளிப்படும் எள்ளல் குரல், “எங்கெங்கும் கண்டேனம்மா” (உல்லாசப்பறவைகள்) பாட்டில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தித்தனமாக இன்னொரு குரல், “கோடை காலக் காற்றே” (பன்னீர் புஷ்பங்கள்) பாட்டில் வரும் மென்மையாக ஒலிக்கும் குரல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், இவரது குரலின் பரிமாணங்களை.

எண்பதுகளின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும் போது மலேசியா வாசுதேவனுக்கான பக்கங்கள் தனியாக ஒதுக்கப்படவேண்டியவை. இது அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி செலுத்தப்படவேண்டிய தருணம்.

துதிப்போர்க்கு வல்வினை போம்!

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அய்யன் திருவள்ளுவர் விழாவுக்கு வாழும் வள்ளுவப் பெருந்தகை வந்திருந்தார். ஆனால் அவர் வாய்திறந்து குறளோவியத்தை அள்ளித் தெளிப்பதற்குள் நான் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். அப்போது தன்னை ‘வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி கடிந்துகொண்டதாகக் கேள்வி.

மிக்க நல்லது.

ஆனால் கலாசார மாற்றம் அப்படியெல்லாம் ஓரிரவில் நடந்துவிடக்கூடியதா என்ன? கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் நடந்திருப்பது என்ன? மேடைகளில் நடப்பது சாதாரணப் புகழ்ச்சியா என்ன? காதுகள் இரண்டும் வலிக்க வலிக்க, கதற்கக் கதற நிகழ்த்தப்படும் வன்புகழ்ச்சி. அப்படி காது குளிரப் புகழ்ந்தால் நமக்கும் நாலு நல்லது நடக்கும் என்று நம்பத்தொடங்கும் காக்கைகள் கா கா என்று கரைவது இயல்பே. இதன் விளைவாக மேடையில் ஏற்றப்படும் நிஜமான அறிஞர்கள்மீது சுமத்தப்படும் அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களும் புகழ்ந்து தள்ளவேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகிவிடுமோ என்ற பயம்.

இதில் சொந்தத் தொலைக்காட்சிகள் செய்யும் ஆபாசம் கொஞ்சநஞ்சமல்ல. கலைஞரின் உடலில் அதிகப் புண்ணியம் செய்திருப்பது இடதுகைக் கட்டைவிரலா, வலதுகால் சுண்டுவிரலா என்று பட்டிமன்றம் நடத்திக் கொஞ்சுவது அதில் தலையாய ஒன்று. இந்தக் கூத்தில் சொந்தக் கட்சிக்காரர்கள் தாண்டி தோழமைக் கட்சிக்காரர்களும் சேர்ந்துகொள்வார்கள்.

சரி போகட்டும். கருணாநிதியே சொல்லிவிட்டாரே, இன்று முதலாவது இந்த வாழும் வள்ளுவமே, காவியமே, கற்பகமே எல்லாம் அடங்கிப்போய்விடும் என்று பார்த்தால் அது எப்படி?

சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள் அன்று நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, பொது நூலக இயக்குனர் அறிவொளி, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மேயர் சுப்பிரமணியனும் கயல் தினகரனும் கட்சிக்காரர்களுக்கே உரித்த தன்மையோடு கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளினர்.

கயல் தினகரன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவலைச் சொன்னார். ஜெயலலிதா ஆட்சியில், நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மதன் எழுதிய ‘வந்தார்கள்… வென்றார்கள்…’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாராம். மற்றபடி தமிழகத்திலேயே அண்ணாதுரைக்கு அடுத்து கருணாநிதிதான் படிப்பில் சிறந்து விளங்கும் முதல்வராம். (ஆக, முதல் இரு இடங்கள் உறுதியாகிவிட்டன. ராஜாஜி முதல் பிறர் மூன்றாவது இடத்துக்கு வேண்டுமென்றால் போட்டி போட்டுக்கொள்ளலாம்.)

இப்படித் தொடர்ந்த பேச்சைத் தாங்கமுடியாது, நேராக ‘கலைஞர் செய்திகள்’ சானலில் ‘ஒரு மணியில் ஒரு நாள்’ நேரலை நிகழ்ச்சியில் கிரிக்கெட் பற்றி உரையாடச் சென்றுவிட்டேன்.

மேயர் சுப்பிரமணியன் சொன்னதில் ஒரு உருப்படியான விஷயம். சொத்து வரிமீது வசூலிக்கப்படும் மீவரி (நூலகத்துக்குச் செல்லவேண்டியது) சுமார் 40 கோடி சென்னை மாநகராட்சி தரவேண்டியது இன்னும் நிலுவையில் உள்ளது என்று அறிவொளி கூறியிருந்தார். அதனை உடனடியாகத் தருவதோடு, இனி ஒவ்வோர் ஆண்டும் இந்த நிலை ஏற்படாது உடனடியாகத் தந்துவிடுவதாக வாக்களித்துள்ளார் மேயர். இதனை குடிமக்களாகிய நாம்தான் கண்காணிக்கவேண்டும்.

*

இன்று இறுதி நாள் ஆனதால், நடைபாதைக் கடைகளைப் பார்வையிட்டேன். இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது. முதலில் ஒரு கடையில் பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களாக அழகாக அடுக்கிவைத்திருந்தார் கடைக்காரர். அவரைப் பார்த்தால் படித்த நபராகத் தெரியவில்லை. குத்துக்காலிட்டு பீடி பிடித்தபடி இருந்தார். ஆனால் அவ்வளவு சரியாக அவர் புத்தகங்களை அடுக்கியிருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது. எப்படி அவருக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன என்று விசாரித்தேன். தெளிவான பதில் கிடைக்கவில்லை.

பைரேட் செய்யப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. ராமச்சந்திர குஹாவின் இந்தியா ஆஃப்டர் காந்தி, அமர்த்தியா சென்னின் தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ், நந்தன் நீலகெனி, நாராயண மூர்த்தி என்று எக்கச்சக்கமான புத்தகங்கள் இப்படி. இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பிற அனைவரும் பழைய புத்தகங்களை 20 ரூ, 30 ரூ, 50 ரூ என்று கூவி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒருசிலவே மாணிக்கங்கள், மீதம் உபயோகமற்றவை. உட்கார்ந்து தேடினால் மட்டுமே நல்லவை கிடைக்கும். நான் ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டேன். காவ்யாவின் பல புத்தகங்கள் கிடைத்தன. ஒரியண்ட் பிளாக்ஸ்வான் முன்னொரு காலத்தில் போட்ட தமிழ்ப் புத்தகங்கள் சில கருக்கழியாமல் கிட்டத்தட்டப் புதிதாகக் கிடைத்தன.

*

இந்தப் புத்தகக் கண்காட்சியின் சிறந்த இரண்டு நாள்கள் முதல் வார இறுதிதான். அதாவது 8, 9 ஜனவரி 2011. அந்த நாளில்தான் பெரும்பாலும் அனைத்துக் கடைக்காரர்களும் தங்கள் சிறந்த விற்பனையைப் பார்த்திருப்பார்கள். பொதுவாக இரண்டாவது சனி, ஞாயிறுதான் எல்லாப் புத்தகக் கண்காட்சிகளிலும் சிறப்பானவையாக இருக்கும். இம்முறை பொங்கல் காரணமாக அது தடைப்பட்டுள்ளது என்பதே என் கருத்து.

*

ஒரு முக்கியமான பரிசோதனையை இந்த ஆண்டு பபாஸி செய்து பார்க்கவேண்டும். ஆறு மாதம் கழித்து ஜூன், ஜூலை மாதவாக்கில், நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டரில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தவேண்டும். ஒரேயடியாக ஜனவரி கண்காட்சியை அங்கே எடுத்துக்கொண்டு போகவேண்டியதில்லை. ஆண்டுக்கு இரு புத்தகக் காட்சிகளை சென்னையில் எளிதாகச் செய்யலாம். தென் சென்னை ஆசாமிகள் வருவதற்கு எளிதாக இருக்கும்.

இதனை இம்முறை வலியுறுத்திப் பேசப்போகிறேன். வேறு சிலருக்கும் இதேபோன்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது.

*

ஹரன்பிரசன்னா சொன்னதுபோல, ஒவ்வொரு தினமும் விடாது எழுதுவது, அதுவும் இரவில் நெடுநேரம் விழித்திருந்து செய்வது அசதியாக உள்ளது. ஆனால் எடுத்துக்கொண்டுவிட்டோமே என்றுதான் ஓட்டினேன். படித்திருக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றியிருக்கும். இன்றுடன் நிறைவுபெறுகிறது இந்தத் தொல்லை. இனி, பிற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

நன்றி.

விருது கோட்டம்

திருவள்ளுவர் தினமான இன்று தமிழக அரசு பல விருதுகளை வழங்குவதை சில ஆண்டுகளாகவே நடத்திவந்துள்ளது. அய்யன் திருவள்ளுவர் விருது 1986-ம் ஆண்டு முதலே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. சென்ற ஆண்டு இந்த விருதைப் பெற்றவர் ஐராவதம் மகாதேவன். இந்த ஆண்டு, 2011-ல் விருதைப் பெற்றவர் முனைவர் பா. வளன் அரசு. கடந்த சில ஆண்டுகளில் திருவள்ளுவர் விருது என்பதுடன் மேலும் பல விருதுகளை தமிழக முதல்வர் கருணாநிதி சேர்த்துக்கொண்டார். அவை முறையே பெரியார் விருது, அண்ணா விருது, அம்பேத்கர் விருது, காமராசர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை. இவை அனைத்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் + தங்கப் பதக்கங்களுடன்.

இந்த விருதுகளை வழங்கும் விழா வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. நியாயமாக சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்கவேண்டிய நான் இங்கு செல்லவேண்டியதாயிற்று. மேற்படி விருதுகளைத் தவிர, கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது (இரு ஆண்டுகளுக்குச் சேர்த்து), சிறந்த நூல் என்று 24 நூல்களுக்கான விருதுகள் அவற்றின் ஆசிரியர்களுக்கும் பதிப்பகங்களுக்குமாக. ஆசிரியர்களுக்கு தலா ரூ. 20,000 + சான்றிதழ். பதிப்பகங்களுக்கு தலா ரூ. 5,000 + சான்றிதழ்.

கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் இரண்டு புத்தகங்களுக்குப் பரிசு கிடைத்திருந்தன. கூடவே கணியன் பூங்குன்றன் பரிசு, 2009-ம் ஆண்டுக்கானது என்.எச்.எம் ரைட்டர் மென்பொருளுக்காகக் கிடைத்திருந்தது. இது ஒரு லட்சம் ரூபாய் + சான்றிதழ்.

விழாவில் எங்கள் நிறுவனம் சார்பில் எடிட்டோரியலின் ஆர். முத்துக்குமார் பதிப்பகத்துக்கான பரிசைப் பெற மேடையேறினார். நாகராஜன் கணியன் பூங்குன்றனார் விருதைப் பெறச் சென்றார். (அனைத்தையும் வீடியோவில் காணலாம்.)

முதல்வர் கருணாநிதி, உட்கார்ந்த நிலையிலேயே முதல் சில விருதுகளுக்கு மட்டும் கழுத்தில் தங்கப் பதக்கம் அணிவித்தார். பிறகு விருது கொடுக்கும் வேலை பேராசிரியர் அன்பழகனுக்குச் சென்றது. இதில் சிலர் ஒருவேளை வருத்தமும் அடைந்திருக்கலாம்.

ஏற்புரைகள் எல்லாம் முடிந்தது, நான் வீடு சென்று உணவு முடித்து, புத்தகக் கண்காட்சி அரங்குக்குச் செல்லும்போது மணி 8.00.

அங்கே தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சின் இறுதிச் சில நிமிடங்களையும் நீங்கள் வீடியோவில் பார்க்கலாம். பாரதி பாஸ்கர் அதற்கு முன்னதாகவே பேசி முடித்திருந்தார்.

*

இன்று சிறப்பான சம்பவம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. நேற்றைக்கும் இன்றைக்குமான கூட்டம் நிச்சயமாக சென்ற வார இறுதிக் கூட்டத்துடன் ஒப்பிட்டால் குறைவுதான் என்று தோன்றியது. இது ஒருவிதத்தில் ஆச்சரியமே. பொதுவாக, இரண்டாம் வார இறுதியில்தான் கூட்டம் மொய்த்துத் தள்ளும். அது இம்முறை நடக்கவில்லை. நாளை இறுதி நாள், திங்கள் கிழமை.

ரோஸாவசந்த் கண்ணில் பட்டார். அஇஅதிமுகவின் பழ. கருப்பையாவிடம் நேற்றும் இன்றும் பேசினேன். விஜய் டிவி நடிப்பில் பாதி நேரத்துக்கு மேல் போய்விடுகிறது என்றார். நிறைய எழுதவேண்டும் என்றும் சில புத்தகங்களைத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். எப்போதும்போல விமலாதித்த மாமல்லன் காணப்பட்டார். பிரமிளின் ‘ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை’ பற்றிச் சொன்னார். பரிசலில் பிரதிகள் தீர்ந்துவிட்டது என்றார். தன் தளத்தில் அதன் பி.டி.எஃப் கோப்பை இட்டிருப்பதாகச் சொன்னார்.

*

ஸ்டால்கள் அனைத்துக்கும் வேறொரு சிக்கல் நாளைக்கு உள்ளது. நாளை இரவே கடைகளைக் காலி செய்ய ஆரம்பிக்கவேண்டுமாம். செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்குள் காலியாகவேண்டும் என்கிறார்கள். ஏனெனில் பள்ளிக்கூடம் திறக்கப்போகிறதாம். மாணவர்கள் வந்துவிடுவார்கள். அவர்களுக்குத் தொல்லை தராமல் இந்த நிகழ்வு நடக்கவேண்டும். எனக்கு என்னவோ, இது சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கடையினரும் கொண்டுவந்திருக்கும் புத்தகங்களைக் கட்டி எடுத்துப்போவது எளிதான காரியமல்ல.

இன்று ஒரே ஒரு புத்தகம் என் மகளுக்காக வாங்கினேன். அறிவியல் பரிசோதனைகள் பற்றிய அழகான புத்தகம் (ஆங்கிலத்தில்).

நாளை சற்றே விரிவான கட்டுரையுடன் தொடர்புகொள்கிறேன்.

இசையால் என்னைக் கொல்லாதே!

பொங்கல் பொங்கி, வயிறு நிறைய உண்டு, வந்த தூக்கத்தை விரட்டி மதியம் புத்தகக் கண்காட்சி அரங்கத்துக்குச் சென்றேன். தெருவில் அதிகப் போக்குவரத்து நடமாட்டம் இல்லை; ஆனால் கண்காட்சி வளாகத்தில் ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது. பிறரும் உண்ட களைப்பை மறைந்து புத்தகம் வாங்க வந்திருந்தனர்.

இரண்டு மணி நேரம் புத்தக வாசகர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களது விருப்பங்கள் சுவாரசியமானவை. அவர்கள் கேட்கும் புத்தகங்கள் பொதுவாக நம்மிடம் இருப்பதில்லை. அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யச் செய்ய, அவர்களது தேவைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அது ஒருவிதத்தில் நல்ல விஷயம்தான்.

சுமார் 3.00 மணிக்குக் கிளம்பி குரோம்பேட்டை செல்லவேண்டியிருந்தது. சேத்துப்பட்டிலிருந்து ரயிலில் சென்றால் வசதி. அங்கே எம்.ஐ.டி வளாகத்தில் விக்கிபீடியா 10-ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. தேனி சுப்பிரமணியன் (முத்துக்கமலம் தளத்தை நடத்துபவர்) எழுதியுள்ள, மெய்யப்பன் பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘தமிழ் விக்கிப்பீடியா’ என்ற புத்தகத்தை வெளியிட்டு நான் பேசுவதான நிகழ்ச்சி. புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்பவர் பத்திரிகையாளர் சுகதேவ். தினமணியில் வேலை பார்த்தவர். பின் அமெரிக்க தூதரகத்தில் ஆலோசனையாளராக இருந்தவர். இப்போது எங்கிருக்கிறார் என்று கேட்டுக்கொள்ள மறந்துவிட்டேன்.

நிகழ்ச்சி இனிமையான அனுபவமாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் ஸ்கைப் மூலம் சேர்ந்துகொண்டார். இந்திய விக்கிபீடியர்கள் சிலர் சென்னையில் கூடிக் கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மலையாளம் விக்கிபீடியர்கள், பெங்காலி விக்கிபீடியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். புத்தக வெளியீட்டையும், என் பேச்சையும், ஜிம்மி வேல்ஸின் பேச்சையும் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

எம்.ஐ.டியில் பல இளைஞர்களுடன் பேசமுடிந்தது. தங்கள் கல்லூரிகளுக்கு வந்து மானவர்களிடம் பேசுமாறு இரண்டு கல்லூரிகளின் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். ஒரு இணையத்தள தொழில் மாதிரியைத் தொடங்க விரும்பும் இரு மாணவர்கள் என்னிடம் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து விடை பெற்றுக்கொண்டு மீண்டும் சேத்துப்பட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

*

மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தேன். இப்போது கூட்டம் கணிசமாகச் சேர்ந்திருந்தது. புதுமையாக இசையுடன் கூடிய பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்தது. இந்த ஃபார்மட்டே கொஞ்சம் புதிதாக இருந்தது.

இன்றும் புத்தகக் கண்காட்சி முடிந்து, மக்கள் வெளியேறிய பிறகும், வாசலில் கூட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது. எனக்குச் சொல்லப்பட்டது, கூட்டம் எப்படியும் 8 மணிக்குள் முடிந்துவிடும்; அதன்பின் கடைகளுக்குச் சென்று புத்தகங்கள் வாங்க மக்களுக்கு அவகாசம் இருக்கும் என்றுதான். ஆனால், வாசலிலேயே மக்களை நிறுத்தி, நிகழ்ச்சியைத் தொடர்ந்து 9 மணிக்கு மேலும் தொடர்ந்து நடத்துவது நியாயமல்ல என்றே தோன்றுகிறது. இது ஒரு நிறுவனம் சார்ந்த பிரச்னை இல்லை. நான் பேசிய பல கடைக்காரர்களும் இதையே சொன்னார்கள்.

*

இகாரஸ் பிரகாஷ், நாராயண் ஆகியோர் கண்ணில் பட்டனர். விமலாதித்த மாமல்லன் வழக்கம்போலவே கண்ணில் பட்டார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். தமிழ் இலக்கியத்தை ஒரு வழி ஆக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். இன்று பேசியதும் சென்சார்ட்!

*

வரலாறு மீதான ஆர்வம் மக்களுக்கு அதீதமாக இருக்கிறது. பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, இந்தியாவின் பண்டைய மன்னர்கள் வரலாறு என்று மாறி மாறிக் கேட்கிறார்கள். அகடமிக் வரலாற்றாசிரியர்கள் எல்லாம் காலேஜ் நோட்ஸுகளைப் போடுவதற்கு பதில், இதில் கவனத்தைச் செலுத்தினால் நன்றாக இருக்கும். வரும் ஆண்டை வரலாறு ஆண்டாக கிழக்கு கொண்டாடக்கூடும்.

*

இன்றைய தினமணியைக் கட்டாயம் பாருங்கள்.

பட்டி… மன்றம்…

பொங்கல் அன்று கரும்பு இனிக்குமா, கசக்குமா என்று தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நிகழ்த்தினால், இரு பக்கமும் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் பேச ஆட்கள் இருப்பார்கள். இன்று புத்தகக் கண்காட்சியில் சுகி சிவம் தலைமையில் ஊடகங்கள் நன்மையா, தீமையா என்று பட்டிமன்றம் நிகழ்த்தப்பட்டது.

கரும்பு கசக்கும் என்றுகூடப் பேசக்கூடியவர்கள், இதுபோன்று தலைப்பு வந்தால் பின்னிப் பெடல் எடுத்துவிடுவார்கள். சிதம்பரத்தில் நடந்த ஒரு பட்டிமன்றத்தைப் பற்றி முன்னம் நான் எழுதியிருக்கிறேன். ஆனால் அந்த மாதிரி ஒட்டுமொத்தமான கேலிக்கூத்தாக இது இருக்கவில்லை. ஒரு சாராருக்குமே தெரியும், இந்த மாதிரி கருப்பு-வெள்ளை விளையாட்டு இல்லை இது என்று. ஆனாலும் எப்படி சினிமாவில் ஒல்லிப்பிச்சான் நடிகர் சுனாமியில் சும்மிங் செய்து பத்து தடிகுண்டு வில்லன்களை அலேக்காகத் தூக்கிப்போட்டு விளையாடுவதுபோல, இங்கும் அவரவர் எடுத்துக்கொண்ட பாத்திரங்களில் கச்சிதமாக நடித்துமுடித்தனர்.

ஆனாலும்… பர்வீன் சுல்தானா பேசும்போது மனத்தில் இருந்து ஆத்மார்த்தமாகப் பேசியதுபோல இருந்தது. தொலைக்காட்சி சானல்களும் இணையத்தளங்களும் ஒரு தாயாக அவருக்கு எத்தனை பதைபதைப்பைத் தருகிறது என்பதை – அது வெறுமனே பட்டிமன்றத்துக்கான தயாரிப்பாக இல்லை என்னும் பட்சத்தில் – மதிக்க முடிந்தது.

ஆனால் பெரும்பாலும் இந்த விவாதங்கள் கூர்மையற்று, கைத்தட்டலை எதிர்பார்க்கும் நிலையில்தான் இருந்தன. பட்டிமன்றங்களால் அறிவைத் தூண்டி, ஆழமாக சிந்திக்க வைக்க முடியும் என்று நான் நம்பவில்லை. எழுத்தால் மட்டுமே அது முடியும். அதுவும் ஆரவாரமில்லாத, அமைதியான எழுத்தால்தான். ஆயினும் பட்டிமன்றத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம். பின்பற்றுவதும் எளிது. அதில் நாலு பேர் சிந்தையில் நச் என்று ஏதேனும் நல்ல கருத்து புகுந்தால் நல்லதுதானே?

சுவாரசியமான விஷயம், ஊடகங்களை – அதுவும் குமுதத்தை – இவர்கள் ஒரு வாங்கு வாங்கும்போது மேடையில் உட்கார்ந்திருந்தவர் குமுதத்தின் ஜவகர் பழனியப்பன். அவர் நெளிந்தாரா இல்லை கண்டுகொள்ளவில்லையா என்று என்னால் சொல்லமுடியவில்லை. முன் வரிசையில் குமுதம் ஜோதிடத்தின் ஏ.ஆர். ராஜகோபாலன், லேனா தமிழ்வாணன், ஜவகரின் தாய் (ஆச்சி) ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.

இறுதியில் சுகி சிவம், எல்லா பட்டிமன்ற நடுவர்களும் செய்வதைப் போல, ஆளுக்குப் பாதி என்ற வழியில்தான் சென்றுகொண்டிருந்தார். ஒரு கட்டத்துக்குமேல் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். பட்டிமன்றத்தில் சில பகுதிகளைக் கீழே காணலாம்.

பட்டிமன்றம் மக்களைக் கட்டிப்போட்டதால் அரங்கில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. ஹரன்பிரசன்னா பொங்கிப் பொங்கி விசனித்துக்கொண்டிருந்தார். இட்லிவடை கட்டுரையில் இதுபற்றிய காரசாரமான தாக்குதலை எதிர்பார்க்கலாம்.

வாசல் நிகழ்ச்சிகளால் புத்தகக் கண்காட்சி வருமானம் பாதிக்கப்படுகிறதா அல்லது அதிகரிக்கிறதா என்று ஒரு பட்டிமன்றம் நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

*

விமலாதித்த மாமல்லன், ஜெயமோகனின் சில கதைகளை எடுத்துக்கொண்டு வரி வரியாக ஆழமாக அலசிக்கொண்டிருந்தார். ஹரன்பிரசன்னா நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘என்ன சொன்னாலும் ரப்பர் அதி அற்புதமான நாவல்’ என்று முடித்தார். இதற்குமேல் அந்த உரையாடலில் இருந்து நான் எந்த பிட்டையும் எடுத்துப் போட்டால் அது நியாயமாகாது.

ஒரு நல்ல எடிட்டர் இருந்தால் ஒரு தேர்ந்த எழுத்தாளன் செய்யும் சிறு சிறு குறைகளைக் களைந்துவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் சினிமாவில் செய்வதுபோல எழுத்தில் முடியாது. சினிமாவில்தான் ஏகப்பட்ட ஃபில்ம் சுருள்களைக் கையில் வைத்துக்கொண்டு, அங்கும் இங்குமாக ஒட்டுப்போட்டு டப்பிங் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தேர்ந்த எடிட்டர்கள் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியெல்லாம் புனைவெழுத்தில் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. மேலும் செலவு அதிகமில்லை (எழுத்தாளரின் ஈகோவைத்தவிர) என்னும் காரணத்தால், கதையைத் திருப்பிக்கொடுத்துவிடுதலே உத்தமம். ஃபிலிஸ்டைன் என்ற கெட்ட பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம். பாதகமில்லை.

*

சென்னை புத்தகக் கண்காட்சியில் சிடி விற்பவர்கள் அபாக்கியவான்கள். பபாஸியின் படிநிலைப்படி, உறுப்பினர், உறுப்பினரல்லாதார் என்ற பிரிவினையைத் தவிர, தமிழ், ஆங்கிலம், மல்ட்டிமீடியா என்ற மூன்று வகைகளும் உள்ளன. ஆக, நீங்கள் ஆறில் ஒருவராக இருக்கலாம். உறுப்பினரல்லாத மல்ட்டிமீடியா நிறுவனம் என்றால் நீங்கள் எக்கச்சக்கமாகப் பணம் தரவேண்டியிருக்கும். ஆனால் உங்கள் விற்பனை என்னவோ அவ்வளவு இருப்பதில்லை.

இது ஒரு பயங்கர டிஸ்கிரிமினேஷன். எங்கள் கடைக்கு எதிரில் டவ் மல்ட்டிமீடியா ஸ்டால் உள்ளது. அவர்கள் விற்கும் பொருள்களின் விலை ரூ. 100-க்குக் கீழ்தான். டிவிடி என்றால் ரூ. 149 இருக்கும். ஆனால் தலையணை போன்ற புத்தகங்கள் (எங்கள் ஸ்டாலில் 900 ரூபாய் புத்தகம் ஒன்று உள்ளது) 200, 300, 400, 500 என்றெல்லாம் போகின்றன. கூட்டம் என்று பார்த்தாலும் பொதுவாக அச்சுப் புத்தகக் கடைகளுக்குத்தான் கூட்டமே. எதற்காக மல்ட்டிமீடியா கடைகளுக்கு அதிக வாடகை வசூலிக்கவேண்டும்? அவர்களும் அம்மா இங்கே வா வா என்று தமிழ்ச் சேவைதானே பிழிந்துகொண்டிருக்கிறார்கள்?

இதேபோல ஆங்கிலப் புத்தகக் கடைகளுக்கும் அதிக வாடகை. இதற்கான காரணமும் ஏற்புடையதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியினரும் சேர்ந்துதான் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். எந்தக் கட்டத்தில் இப்படி கட்டணம் அதிகமாவதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்று புரியவில்லை. அவர்கள் எதிர்ப்பே செய்யவில்லையா? அடுத்த ஆண்டிறுதிப் பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைக்கலாம் என்று இருக்கிறேன். உறுப்பினர், உறுப்பினரல்லாதார் என்ற இரு பிரிவுகள் இருந்தாலே போதும்.

*

இன்னும் மூன்று நாள்கள்தான். எனவே நாளை முதற்கொண்டு கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வாரீர். புத்தகங்களை அள்ளி எடுத்துச் செல்வீர்.