பாண்டிங் உடைத்த டிவி

ரிக்கி பாண்டிங்

நேற்று ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயுடன் ஆடி வெற்றி பெற்றாலும் அந்த அணியின் காப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு பிரச்னையில் சிக்கியிருக்கிறார் என்று ஒரு ஆங்கில டீவி சானலில் ஒரு கொசுறு நியூஸ். பாண்டிங் ரன் அவுட் ஆனாராம். கோபத்தில் போகிற வழியில் இருந்த ஒரு டீ.வியைப் போட்டு உடைத்துவிட்டாராம். அவர் இல்லை என்று மறுக்கிறார். ஆனால் மாட்ச் நடைபெற்ற குஜராத் நகர கிரிக்கெட் வாரியக் குழுவினர் ஐசிசியிடம் முறையிட்டு இருக்கின்றனர். அங்கே நம்மூர் போல் எல்லாம் இலவச டீ.வி வினியோகம் கிடையாதே. புது டீவி கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்களோ என்னவோ. யார் கண்டது.

பத்தாததுக்கு இந்த பாண்டிங் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் எதையோ வேறு ‘அருளி’ இருக்கிறார். உலகக் கோப்பையில் ரொம்ப தண்ட டீம்களளோடு ஆட வேண்டியிருக்கிறதாம். நம்மூர் ரஞ்சி டிராபி போல் சுமார் டீம்கள் எல்லாம் ஒரு பக்கம், நல்ல டீம்களளெல்லாம் இன்னொரு பக்கம் ஆடினால் தேவலை என்றிருக்கிறார்.

நம் டீமைச் சொல்லவில்லை அய்யா, ஏன் கோபப்படுகிறீர்கள்! இந்த அயர்லேண்ட், கனடா என்று அடி படுவதற்கென்றே ஒரு கோஷ்டி வருகிறது பாருங்கள். அவர்களைச் சொல்லியிருக்கிறார். இது வேவையில்லாத பிதற்றல். அதற்காக தேவையான பிதற்றல் உண்டா என்று கேட்காதீர்கள்.

நியாயமாக இந்த மாதிரி சின்ன சின்ன டீம்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். உலக அரங்கில் ஆடுவது அவர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு பயிற்சி. எப்பேற்பட்ட எக்ஸ்பீரியென்ஸ். அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. மேலும், எத்தனை நாள் தான் பார்த்த முகங்களையே பார்த்துக் கொண்டிருப்பது. ஒரு சேஞ்சுக்காக புது அயிட்டங்களையும் கொஞ்சம் பார்த்துத்தான் வைப்போமே.

யார் கண்டது. 1979 ‘சிலோன்’ என்ற பெயருடன் ‘அலோனாக’ ஆடிய இலங்கை அணி 1996 உலகக் கோப்பையை வெல்லவில்லையா. அது போல் ‘வேணாடா’ என்று எல்லா அணிகளிடமும் கெஞ்சி அடி வாங்கும் ‘கானடா’ 2024 உலகக் கோப்பையை வெல்லாது என்று எப்படிச் சொல்ல முடியும்.

பாண்டிங் கிடக்கிறார் விடுங்கள். இப்படி நல்வாக்கு சொல்வதற்கு பதில் அவர் பேசாமல் ஆடும் க்ரவுண்டுகளில் எல்லாம் டீ.வியை உடைத்துக் கொண்டிருப்பது எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது.

இன்னொன்றை கவனித்தீர்களா? இது வரை ஆடிய அணிகள் பலவும் அநியாயத்துக்கு பீல்டிங்கில் கோட்டை விட்ட வண்ணம் இருக்கின்றன. நேற்று இங்கிலாந்து பீல்டிங்? அட அட அட. இந்திய அணி தோற்றது. ஒருத்தர் கையிலும் பால் நிற்கவே இல்லை. பீல்டிங் தான் இந்த லட்சணம் என்றால் கிரிக்கெட் ரூல்ஸ் பற்றிய அடிப்படை கூடவா இருக்காது கிரிக்கெட் என்கிற அற்புத ஆட்டத்தை நமக்கு அளித்த இங்கிலாந்திற்கு? ஸ்லாக் ஓவர்களில் 30 அடி வளையத்துக்குள் 4 பீல்டர்கள் இருக்க வேண்டும் என்ற ஆதார அறிவு கூட இல்லை. 3 பேர் தான் இருக்க, க்ரிஸ் ப்ரோட் போட பாட்ஸ்மென் அவுட் ஆக, அம்பயர் ‘நோ பால்’ என்று சிக்னல் கொடுத்து விட்டார்.

இதனால் அறிவது யாதென்றால் –

வேண்டாம். நாமெல்லோருமே அறிவோம்!

கண்றாவி பவுலிங்கும் கசுமால ஃபீல்டிங்கும்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதும் பத்தி இன்று ஆரம்பம். மார்க்கெடிங் மாயாஜாலம், விளம்பர மாயாஜாலம் நூல்களின் ஆசிரியரான சதீஷ், ஒரு கிரிக்கெட்டரும்கூட.  உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு என்னும் இவருடைய புத்தகம் இப்போது ரிலீஸ் ஆகிறது.

உலகக் கோப்பை ஒரு வழியாக ஆரம்பித்துவிட்டது. நமக்குத் தான் கை கால் கொள்ளவில்லை. இருக்காதா பின்னே? இந்திய மண்ணிலேயே உலகக் கோப்பை என்றால் சும்மாவா? நாள்தோறும் திருவிழா தான். பொழுதெல்லாம் கோலாகலம் தான். காணாததைக் கண்டது போல் குதிக்கிறோம். கண் மண் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த முறை இந்தியா கண்டிப்பாய், கட் அண்டு ரைட்டாய் வெற்றி பெற்றுவிடும் என்று நம்மில் பலரும் முடிவே கட்டிவிட்டோம். வெற்றி பெற்று கப்பை எங்கு வைப்பது என்று முடிவு செய்வது தான் பாக்கி. ம்ம்ம்ம்ம்ம்… ஆசை இருக்கு தாசில் பண்ண!

இது வரை ஐந்து மாட்சுகள் முடிவடைந்து விட்டன. இந்த மாட்சுகள் நடந்த லட்சணத்தை வைத்துப் பார்த்தால் ஒன்று நன்றாகப் புரிகிறது. மாட்சுகள் நடக்கும் பிட்சுகள் அநியாயத்துக்கு வெத்து வேட்டுகள். பிட்சில் லவலேசம் பவுன்ஸ் இல்லை. மருந்துக்குக் கூட ஸ்விங் இல்லை. ஸ்னானப் ப்ராப்த்திக்குக் கூட பிட்சில் புல்லோ, ஈரமோ இல்லாத கட்டாந்தரைகளை பிட்ச் என்று போர்டு போட்டு மாட்சுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். பவுலர்களுக்கு வேலையே இல்லை. வந்து எப்படிப் போட்டாலும் ஒரு எழவும் ஆகப் போவதில்லை. பேசாமல் விக்கெட் கீப்பரையே போடச் சொல்லலாம். அது கூட வேண்டாம். சும்மா கையை கட்டிக் கொண்டிருக்கும் அம்பயரையே பந்து போடச் சொல்லலாம். தரித்திரம் பிடித்த பிட்சுகளில் யார் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது!

பாட்டிங் ப்ராப்ளமே இல்லை. எவன் வேண்டுமானாலும் வந்து ஆடலாம். காசி பட கண்ணில்லாத ‘சீயான் விக்ரம்’ வந்து ஆடினாலும் அரை சதம் காரண்டி. அப்பேற்பட்ட ஒரு பிட்சில் ஒரு சோப்ளாங்கி அணியான பங்களாதேஷுடன் 370 ரன்கள் அடித்து விட்டோமாம். ஊரெல்லாம் ஒரே பேச்சு. சேவாக் அடித்தார். கோலி அடித்தார் என்று ஏகத்துக்கும் இறுமாப்பு. என்னவோ போங்கள். எனக்குத் தான் ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது.

இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். 370 அடித்தோம், இல்லை என்று சொல்லவில்லை. பங்களாதேஷ் என்ன அப்படி ஒரு பெரிய கொம்பா? சொல்லப் போனால் அது டீமே இல்லை! கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்னி சேனல் பார்க்கும் பாலகர்களின் தொகுப்பு. அந்த டீமுடன் 370 அடிக்கவில்லை என்றால்தான் அசிங்கம். சரி எதோ தெய்வ கடாட்சத்தில் அடித்துத் தொலைத்து விட்டோம். அதற்குப் பிற்கு ஒரு பவுலிங் போட்டோம் பாருங்கள். ஆஹா…ஆஹா….அதி அற்புதம். போட்ட பாதி பந்துகளுக்கும் மேல் பிட்சிலேயே படாமல் கிட்டத்தட்ட ஸ்கொயர் லெக் அம்பயர் காலின் அருகில் போய் பிட்ச் ஆகும் அளவுக்கு வைட் பந்துகள். ஓரிரு பந்துகள் அவர் காலை பதம் பார்த்ததாகக் கூடக் கேள்வி! ஸ்ரீசாந்த் போடும் அழகுக்கு நான்கு விக்கெட் கீப்பர்கள் வைத்தாலும் அவர்களையும் தாண்டி வைடாய் பவுண்ட்ரிக்கு போகும். எதோ பிட்சில் ஸ்பின் எடுப்பதால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் விக்கெட்டும் எடுத்துத் தொலைத்தோம். இல்லையேல் 370 பங்களாதேஷிற்கு முக்காமலேயே கிடைத்திருக்கும்.

அதோடு நம்மவர்களின் பீல்டிங்கைப் பார்த்தீர்களா? பீல்டிங் செய்ய வருவதற்கு முன் நம்மவர்கள் நாலு நெய் ரோஸ்டை வெண்ணெயை தொட்டுக் கொண்டு வெறும் கையில் சாப்பிட்டு கை அலம்பாமல் வந்ததைப் போல் அப்படி ஒரு தேவல். கையில் வரும் காட்சை கோட்டை விடுகிறோம். ரன் அவுட்டைத் தொலைக்கிறோம். கையில் பந்தைப் பிடிக்க முடிந்தால் தானேய்யா. அது சரி, பிடிக்க முடியவில்லை என்றால் நம்மவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்.

இந்த டீமை வைத்துக் கொண்டு ஜெயிப்போமா? பாட்டிங் ஏதோ தேறினாலும் தேறும். ஆனாலும் சொல்வதற்கில்லை. அடித்தால் அனைவரும் அடிப்பது. அவுட் ஆனால் அனைவரும் கோஷ்டி கானமாய் எதிர்க்கட்சி வெளிநடப்பு மாதிரி சேர்ந்து போவது என்று ஒரு வழக்கத்தை வைத்துத் தொலைத்திருக்கிறோம். அதையாவது விட்டுத் தள்ளுங்கள். நம்மவர்களின் பவுலிங்கை வைத்துக் கொண்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது. மகா தண்டம். வேண்டுமானால் நாங்கள் ஐம்பது ஓவர்கள் பாட்டிங் செய்கிறோம், ஆனால் பவுலிங் போடும் போது முப்பது ஓவர்கள் தான் போடுவோம். நாங்கள் ஐம்பது ஓவர்களில் அடித்ததை எதிர் அணியினர் 30 ஓவர்களில் அடிக்க சொல்லுங்கள் என்று ஐசிசியிடம் கேட்டுப் பார்கலாம். இந்த தண்ட பவுலிங்கை வைத்துக் கொண்டு இது கூட கொஞ்சம் ரிஸ்கான சமாசாரம் தான்.

இல்லை, இன்னொன்று செய்யலாம். பீல்டிங் செய்யும் போது 14 பேர் பீல்டிங் செய்வோம் என்று கோரலாம். ஆனால் அதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. நாம் தான் பாலை விட்டுவிட்டு புல்லை தேவும் ‘தேவாதி தேவர்’களை வைத்துக் கொண்டிருக்கிறோமே. என்னத்தை பீல்ட் செய்து என்னத்தை கிழிப்பது.

இந்த கன்றாவி பவுலிங்கையும் கேனத்தனமான பீல்டிங்கையும் வைத்துக் கொண்டு ஜெயிக்க வேண்டுமானால் நாம் முதலில் ஆடி ஒரு 400, 500 அடிக்க வேண்டும். ஒரு சான்ஸ் இருக்கலாம் வெற்றி பெற!

இப்பேர்ப்பட்ட சரித்திர தரித்திரங்களை வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டிய தலையெழுத்து நமக்கு. பேசமால் தலையில் அடித்துக் கொண்டு தலை ஸ்நானம் செய்து கை கழுவி வேறு வேலை பார்க்கப் போகலாம். ஆனால் என்ன, இந்த பாழாய்ப் போன மனசு தான் கேட்டுத் தொலைக்க மாட்டேன் என்கிறது. மதியம் 2.30 மணி ஆனால் புத்தி தானாய் டீவி முன் தான் போவேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது. அந்த மாட்சு முடியும் வரை ஏதோ நேர்த்திக் கடன் போல் எண்சாண் உடம்பும் தொலைக்காட்சியே சரணம் என்று விழுந்து தோப்புக் கரணம் போடுகிறது.

இதற்காகவாவது நம்மவர்கள் கோப்பையை வென்று தொலைத்தால் தேவலை…

[ஒரு மாதம் தொடரும்]

சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் உலகக் கோப்பை வரலாறு இங்கே.