ஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு

hugo-chavez 1999 தொடங்கி வெனிசூலாவின் அதிபராக நீடித்துவரும் ஹியூகோ சாவேஸ் (ஜூலை 28, 1954-மார்ச் 5, 2013) இன்று அதிகாலை மரணமடைந்தார். தலைநகரம் காரகாஸில் நடைபெறவிருக்கும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள்  கலந்துகொள்வார்கள் என்று வெனிசூலா எதிர்பார்க்கிறது. அவர்களில் பலர் சாவேஸின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன் பெற்றவர்கள். சாவேஸின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் இந்த நிமிடம் இவர்கள் கதறியழுவதை டிவி காமிராக்கள் காண்பித்துக்கொண்டிருக்கின்றன.

கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்குப் பல முறை மரணமடைந்துவிட்ட தனது 86 வயது அரசியல் ஆசானை சாவேஸ் முந்திகொண்டுவிட்டார்.  2005ல் கிரான்மாவுக்கு அளித்த பேட்டியொன்றில்  ‘ஃபிடல் எனக்குத் தந்தையும் தோழரும் ஆவார்.’  என்று சாவேஸ் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அரசியல் மேடையில் இரட்டையர்கள் போல் இருவரும் கம்பீரமாக வலம் வந்ததை மகிழ்ச்சியுடனும் கலக்கத்துடனும் தரிசித்தவர்கள் ஏராளம்.

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. க்யூபாவில் நிலவுவது மக்கள் விரோத அரசு, எப்பாடுபட்டாவது அதைத் தூக்கியெறிந்தே தீரவேண்டும் என்று காஸ்ட்ரோ முடிவு செய்தார். அதே முடிவுக்குத்தான் வெனிசூலாவில் சாவேஸும் வந்து சேர்ந்தார். காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டனர்.

காஸ்ட்ரோ தனது பலத்தை க்யூபாவின் தேசத் தந்தையான ஹொசே மார்த்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சாவேஸ் வெனிசூலாவின் போராளியான சிமோன் பொலிவாரைத் தனது முன்மாதிரியாக வரித்துக்கொண்டார். மார்த்தியை ஓர் சக்திவாய்ந்த அடையாளமாக காஸ்ட்ரோ உருமாற்றியதைப் போலவே பொலிவாரின் பெயரால் மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்து அவரை லத்தீன் அமெரிக்கா முழுமைக்கும் கொண்டு சேர்த்தார் சாவேஸ்.

மக்களை வழிநடத்த இரவரும் கையாண்ட சித்தாந்தமும் ஒன்றேதான். சீனாவுக்கு ஏற்றபடி மார்க்சியத்தைப் பொருத்திப் பார்த்த மாவோவைப் போல், ரஷ்யாவுக்கு ஏற்றபடி மார்க்சியத்தைத் தகவமைத்த லெனினைப் போல் லத்தீன் அமெரிக்காவுக்கான நடைமுறை சோஷலிசப் பாதையை வகுத்ததில் காஸ்ட்ரோவுக்கும் சாவேஸுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு.

ஆட்சிக்கு வந்ததுமே, அமெரிக்கவின் நிழலாகச் செயல்பட்டு வந்த சர்க்கரை நிறுவனங்களை காஸ்ட்ரோ ஒழித்துக்காட்டினார். சாவேஸ், எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்கினார். இருவரும் இதற்காகச் சந்தித்த எதிர்ப்புகள் அசாதாரணமானவை. மருத்துவம், கல்வி, அயலுறவு என்று க்யூபாவும் வெனிசூலாவும் பல முக்கியத் துறைகளில் ஒன்றிணைந்து நடைபோட்டன.

இருவருக்குமே எதிரி ஒன்றுதான். நோக்கமும் ஒன்றே. அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்தைக் குறைந்தபட்சம் லத்தீன் அமெரிக்காவிலும் முடிந்தவரை உலகம் முழுவதிலும் இருந்து அகற்றவேண்டும் என்பதுதான் அது. தங்கள் எதிரியை இருவரும் அதிகபட்ச சீற்றத்துடனும் பலத்துடனும் கையாண்டார்கள். அதனாலேயே ஏராளமான எதிரிகளையும் எதிர்ப் பிரசாரங்களையும் சம்பாதித்துக்கொண்டனர்.

இடதுசாரிகளிலேயேகூட பலர் ஃபிடல் காஸ்ட்ரோவை ஒரு கம்யூனிஸ்டாகவோ சோஷலிஸ்டாகவோ ஏற்கமாட்டார்கள். மார்க்சியத்தை அவர் தத்துவார்த்தரீதியாக எந்த வகையிலும் செழுமைப்படுத்தவில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று. 21ம் நூற்றாண்டு சோஷலிசத்தை முன்னெடுத்த சாவேஸையும் இதே காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரித்தவர்கள் பலர்.

தெளிவான அரசியல் பார்வையுடன் இயங்கும் ஒவ்வொருவருக்கும் நண்பர்களும் எதிரிகளும் இருக்கவே செய்வார்கள்.  யார் ஏற்கிறார்கள், யார் நிராகரிக்கிறார்கள் என்பதைப் பொருத்தே அவருடைய பணிகள் மதிப்பிடப்படுகின்றன. இந்த அளவுகோலின்படி, காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் பெரும்பான்மை மக்களின் தலைவராகவும் தோழராகவும் திகழ்கிறார். அதனால்தான் தங்கள் நாட்டு எல்லைகளைக் கடந்தும் இந்த இருவருக்கும் பெரும் திரளான மக்கள் ஆதரவு திரண்டு நிற்கிறது.

ஹியூகோ சாவேஸின் மரணம் லத்தீன் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்குமே ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.

மேற்கொண்டு வாசிக்க :

Hugo Chavez Obituary – The Guardian

Reaction to Hugo Chavez’s Death

Hugo Chavez : Death of a Socialist

Hugo Chavez : A Life in pictures

0

மருதன்

மலர்மன்னன் மறைவு

malarmannan_1திமுக உருவானது ஏன்?, ஆரிய சமாஜம், திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும் உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் மலர்மன்னன் 9 பிப்ரவரி 2013 அன்று காலை மரணம் அடைந்துவிட்டார். மேற்சொன்ன மூன்று புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடுகள்.

திமுக உருவானது ஏன்?, ஆரிய சமாஜம் என்ற இரண்டு புத்தகங்ககளையும் எடிட் செய்தது சுவையான அனுபவம். குறிப்பாக, திமுக உருவானது ஏன் என்ற புத்தகத்துக்கு அவர் கொடுத்த தலைப்பு “திமுக தோன்றுவானேன்?’ – ஓர் ஆய்வுப்பார்வை என்பதுதான். மேற்கோள்களாலும் விமரிசனங்களாலும் நிறைந்த புத்தகம். பெரியாரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசிக்கும் மலர்மன்னன், அண்ணாவின் செயல்பாடுகளைக் கொஞ்சம் மென்மையாகவே கையாண்டிருப்பார்.

திமுக உருவானதன் பின்னணியை ஆய்வுசெய்யும் புத்தகம் என்பதால் புத்தகம் முழுக்க கருணாநிதி என்ற பெயரே வராதவாறு பார்த்துக்கொண்டிருந்தார் மலர்மன்னன். அந்தப் புத்தகத்தில் ஆறேழு முறை கருணாநிதியின் பெயர் வரும். அவற்றில் மூன்று முறை, கவிஞர் கருணானந்தம் பற்றிய செய்திகளை எழுதும்போது, “இவர் கருணாநிதியின் நண்பர்’ என்று குறிப்பிட்டிருப்பார். அண்ணா பேரவையை திமுகவே நடத்தும் என்று சொன்னபோது ஒருமுறையும் கண்ணதாசனுடனான மோதல் குறித்துச் சொல்லும்போது ஒருமுறையும் கருணாநிதியின் பெயர் வரும். இவையும்கூட திமுகவின் உருவாக்கத்துக்குப் பிறகு நடந்த சம்பவங்களே. ஆக, திமுகவின் உருவாக்கத்துக்கும் கருணாநிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்த இந்தப் புத்தகத்தில் முயற்சி செய்திருப்பார் மலர்மன்னன்.

புத்தகத்தை எடிட் செய்யும் சமயத்தில் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். தனக்கும் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கும் உள்ள தொடர்புகள் பற்றிப் பேசுவார். அண்ணாவுடன் அமர்ந்து அசைவ உணவு (மீன்) உண்ட சம்பவத்தைப் பெருமிதத்துடன் சொல்வார். எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர்களுள் அடியேனும் ஒருவன் என்பார். பெரியாரின் மீது அளவற்ற கோபமும் அண்ணாவின் மீது அளவுகடந்த அன்பும் கொண்டவர் என்பதைத் தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்துவார்.

malarmannan murasoliகருணாநிதியைக் கடுமையாக விமரிசிக்கக்கூடியவர். எம்.ஜி.ஆருக்கும் மலர்மன்னனுக்கும் இருந்த நட்பு கருணாநிதியை அதிருப்தியடையச் செய்தது என்றும் அதனை வெளிப்படுத்தும் வகையில் முரசொலியில் “மலர் மன்னன் கதை’ என்ற தலைப்பில் கதை வடிவிலான கட்டுரை ஒன்றை கருணாநிதி எழுதியிருக்கிறார் என்றும் சொல்வார். ஒருமுறை அந்தக் கதையின் ஒளிநகலை அனுப்பிவைத்தார்.

இந்துத்வ சிந்தனையாளராகவும் தீவிர திராவிட இயக்க எதிர்ப்பாளராகவும் அறியப்பட்ட மலர்மன்னனின் ஆரிய சமாஜம் புத்தகத்தை எடிட் செய்துகொண்டிருந்த சமயத்திலும் திமுக, திராவிட இயக்கம் பற்றியே என்னிடம் அதிகம் பேசுவார். குறிப்பாக, காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் அவர் எழுதும் கட்டுரைகள், அவற்றுக்கான எதிர்வினைகள், பாராட்டுகள் பற்றிப் பேசுவார். இரண்டு புத்தகங்களும் வெளியான பிறகுதான் அவரை நேரில் சந்தித்தேன். கிழக்கு அலுவலகத்துக்கு வந்தபோது சில மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கலைஞரின் கல்லக்குடி போராட்டம் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசினார்.

பின்னர் திராவிட இயக்கம்: புனைவும் புரட்டும் என்ற தலைப்பில் தான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றியும் நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகம் பற்றியும் பேசினார்.

அவர் எழுதிய அந்தப் புத்தகம் தற்போது “திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. கடந்த சென்னை புத்தக்காட்சியில் நல்ல கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த மலர்மன்னனின் மறைவு தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வ எழுத்தாளர் சமூகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

0

ஆர். முத்துக்குமார்

வெண்மைப் புரட்சியின் தந்தை

வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வர்கீஸ் குரியன் நேற்று காலமானார். அவர் வயது 90.

என். சொக்கன் எழுதிய அமுல் – ஓர் அதிசய வெற்றிக் கதை என்னும் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள், அவர் நினைவாக இங்கே.

1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி, கேரா (Kaira) மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முழு நேர ஊழியராக இணைந்தார் வர்கீஸ் குரியன். கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை மேலாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

தன்னுடைய நிஜமான முதலாளிகள், கிராமத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள்தான் என்பது வர்கீஸ் குரியனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. தன்னை அந்தப் ‘பால்காரர்களின் ஊழியன்’ என்றே பெருமையுடன் அழைத்துக்கொண்ட அவர், இனிமேல் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், கேரா மாவட்டப் பால் உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்தை நோக்கியே இருக்கும் என்று உறுதியாகத் தீர்மானித்துக்கொண்டார்.

வர்கீஸ் குரியன் நினைத்திருந்தால், அவருக்கு இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ பல பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கும். சொல்லப்போனால், அவர் இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் மேலாளராகப் பொறுப்பேற்றபிறகும்கூட, புதிய வேலை வாய்ப்புகள், பதவிகள் அவரைத் தேடி வந்துகொண்டுதான் இருந்தன. இத்தனைக்கும், கூட்டுறவுச் சங்கத்தில் குரியனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மிகக் குறைவு. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இந்தத் துறையில் பணியாற்றிய வர்கீஸ் குரியன் வாங்கிய அதிகபட்ச சம்பளம், மாதம் ஐந்தாயிரம் ரூபாய்தான்!

ஆனால், இதே காலகட்டத்தில்தான், லட்சக்கணக்கான கிராமவாசிகளின் வாழ்த்துகளைச் சம்பாதித்துக்கொண்டிருந்தார் வர்கீஸ் குரியன். தன்னுடைய பணிகளின்மூலம், சமூகத்தில், பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம், முன்னேற்றம் கொண்டுவரமுடிகிறது என்கிற இந்த எண்ணம்தான், குரியனை மேலும் மேலும் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடத் தூண்டியது.

0

இன்னும் ஒரு வாரத்தில் அமுல் தொழிற்சாலையின் திறப்புவிழா. இந்தியப் பிரதமர் சட்டையில் ரோஜாப்பூவுடன் வந்து நிற்கப்போகிறார். அவர் ரிப்பன் வெட்டித் தொழிற்சாலையைத் திறந்துவைக்கும்போது, பால் பவுடர் கொட்டவேண்டும். இல்லாவிட்டால், மொத்தக் கூட்டுறவுச் சங்கத்துக்கும் அவமானம்.

கடந்த பத்தரை மாதங்களாக, வர்கீஸ் குரியன் சரியாகத் தூங்கக்கூட இல்லை. ஒருபக்கம் கட்டட வேலைகளை மேற்பார்வை செய்யவேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் ஒவ்வோர் இயந்திரமாக வரவழைத்து, அவற்றைப் பொருத்துவதற்கான நிபுணர்களை ஒன்றுசேர்த்து வேலை வாங்குகிற அவசியம். எப்படியோ, பேச வேண்டியவர்களிடம் நல்லவிதமாகப் பேசி அத்தனையையும் முடித்துவிட்டார் குரியன். இன்னும் சில கடைசி நேரப் பூச்சு வேலைகள், அலங்கரிப்புதான் மிச்சம். மற்றபடி புதிய பால் பண்ணை கம்பீரமாகத் தயாராகிவிட்டது.

ஆனால், எருமைப் பாலில் இருந்து பால் பவுடர் தயாரிப்பதற்கான பரிசோதனைதான், இன்னும் முடிவடையவில்லை. வர்கீஸ் குரியன் பதற்றத்தோடு சுற்றிக்கொண்டிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் திறப்புவிழா. அதற்குள் தலாயாவின் இயந்திரம் பால் பவுடரைக் கொட்டத் தொடங்கிவிடுமா? யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை! இந்த நேரத்தில்தான், மொரார்ஜி தேசாய், வர்கீஸ் குரியனைச் சந்திக்க வந்தார்.

கேரா மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு விதை போட்ட மொரார்ஜி தேசாய், இப்போது பம்பாய் மாகாணத்தின் முதலமைச்சர். ஆகவே, பிரதமரின் விழா ஏற்பாடுகளைக் கவனித்து உறுதி செய்துகொள்வதற்காக அவர் ஆனந்த் வந்திருந்தார்.
வர்கீஸ் குரியனை அவர் வீட்டில் சந்தித்த மொரார்ஜி தேசாய், அவரிடம் சில கடிதங்களைக் காண்பித்தார். அந்தக் கடிதங்கள் அனைத்தும், பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், பால் பண்ணைத்துறை நிபுணர்கள் எழுதியவை.

எல்லாக் கடிதங்களிலும் மையமாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே விஷயம் இதுதான்: எருமைப் பாலைக் கொண்டு பால் பவுடர் தயாரிக்கவே முடியாது. வர்கீஸ் குரியன் அநாவசியமாக நேரத்தை, உழைப்பை, பணத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்தக் கடிதங்களைக் குரியனிடம் காண்பித்த மொரார்ஜி தேசாய் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. ‘என்ன குரியன், எல்லோரும் இப்படிச் சொல்கிறார்கள்?’

‘கவலைப்படாதீர்கள் சார், நாம் திட்டமிட்டபடி இந்தத் தொழிற்சாலை கச்சிதமாகத் தயாராகிவிடும்’ என்றார் வர்கீஸ் குரியன். ‘எருமைப் பாலில் இருந்து பால் பவுடர் வரும். உங்களுக்கு அதில் சந்தேகமே வேண்டாம்.’

அப்போதும், மொரார்ஜி தேசாய்க்கு முழு நம்பிக்கை வரவில்லை. வர்கீஸ் குரியனைக் குழப்பமாகப் பார்த்த அவர், ‘நான் இந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப்பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.

உடனடியாக, முதலமைச்சரைப் புதிய பால் பண்ணைத் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார் வர்கீஸ் குரியன். ஒவ்வோர் அறையாகச் சுற்றிக் காண்பித்து, எங்கே, என்ன நடக்கிறது என்று விளக்கிச் சொன்னார். ‘இன்னும் ஒரு வாரத்தில் எல்லா வேலைகளும் முடிந்துவிடும் சார், எந்தப் பிரச்னையும் இருக்காது.’

கடைசியாக, வர்கீஸ் குரியன் அவருக்குப் பால் பவுடர் இயந்திரத்தைக் காண்பித்தார். ‘இந்தக் குழாயின் வழியாகத்தான், பால் பவுடர் கொட்டப்போகிறது சார்!’

மொரார்ஜி தேசாய் அந்த இயந்திரத்தைச் சந்தேகமாக உற்றுப் பார்த்தார்.

‘குரியன், நான் கேட்கிறேனே என்று தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள். ஒருவேளை, உங்களுடைய பரிசோதனை தோல்வி அடைந்துவிட்டால், என்ன செய்வது?’

‘கவலைப்படாதீர்கள் சார், அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறேன்’ என்றார் வர்கீஸ் குரியன்.
‘அந்தப் பால் பவுடர் இயந்திரத்தின் மேலே இருந்த ஓர் அறையைச் சுட்டிக் காண்பித்தார் வர்கீஸ் குரியன். ‘அங்கே ஏற்கெனவே நான்கு மூட்டை வெளிநாட்டுப் பால் பவுடர் வாங்கி வைத்திருக்கிறேன், ஒருவேளை இந்த இயந்திரம் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால், அங்கிருக்கும் பால் பவுடர் மூட்டைகளைப் பிரித்துக் கொட்டுவோம். இந்தக் குழாயின் வழியே பால் பவுடர் வரும், பிரதமருக்கு எந்தச் சந்தேகமும் வராது.’

ஆனால், இந்த ஏற்பாட்டில் குரியனுக்குத் துளி சந்தோஷம் இல்லை. பிரதம மந்திரிக்காக இல்லாவிட்டாலும், நம்மை நம்பிப் பணம் கொடுத்த கூட்டுறவுச் சங்கத்தினருக்காகவேனும், நாம் இந்தப் பரிசோதனையில் வெற்றியடையவேண்டும். எருமைப் பாலில் இருந்து பவுடர் தயாரித்தாகவேண்டும்.

குரியனின் அவசரமும் தவிப்பும் தலாயாவுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. ஆனால், அவர் என்ன செய்வார், பாவம்? இந்தப் பரிசோதனை முன்னால் போனால் கடிக்கிறது, பின்னால் போனால் முட்டுகிறது.

அதே சமயம், எப்படியாவது இதைச் சரி செய்துவிடமுடியும் என்று உறுதியாக நம்பிய தலாயா, ராத்திரி பகலாக அந்த இயந்திரத்தின் அருகேதான் நின்றிருந்தார். பலவிதமான கலவைகள், வெப்பநிலைகளை மாற்றி மாற்றி முயன்று பார்த்தும், எருமைப் பால் கெட்டுப்போனதே தவிர, பவுடராக மாறவே இல்லை.

ஒருபக்கம் தலாயா தொடர்ந்து தனது பரிசோதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் வர்கீஸ் குரியன் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். மெல்ல, பிரதமர் வரும் நேரம் நெருங்கியது.

அக்டோபர் 30ம் தேதி, புதிய பால் பண்ணைத் தொழிற்சாலையின் திறப்புவிழாவுக்கு இன்னும் சில மணி நேரங்களே பாக்கியிருந்த சூழ்நிலையில், தலாயாவின் கடும் உழைப்புக்குப் பரிசு கிடைத்தது. அந்த மாய பிளாஸ்டிக் குழாயின் வழியே, எருமைப் பால் பவுடர் கொட்டத் தொடங்கியது.

மகிழ்ச்சியில், வர்கீஸ் குரியனுக்குத் தலை கால் புரியவில்லை. அந்தப் பவுடரை அப்படியே அள்ளி, தலாயாவின் (அமெரிக்காவில் அறிமுகமான நண்பர் ஹரிசந்த் மேகா தலாயா) வழுக்கைத் தலையில் பூசினார் அவர். பதிலுக்குத் தலாயாவும் பவுடரை குரியன் முகத்தில் வீசினார். இருவரும் சின்னக் குழந்தைகளைப்போல் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

பின்னே? அவர்கள் சாதித்திருப்பது சாதாரண விஷயமா? எருமைப் பாலில் பவுடர் வராது என்று ஒட்டுமொத்த உலகமும் சொல்லும்போது, அதை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுடைய திறமைமீது அவர்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இன்னொரு பெருமை, எந்த வெளிநாட்டு நிபுணரையும் கலந்து ஆலோசிக்காமல் உருவாக்கப்பட்ட 100% இந்திய தொழில்நுட்பம் இது. அதைவிட முக்கியம், இனிமேல் கேரா மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், உபரிப் பாலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திணறவேண்டியதில்லை. எவ்வளவு பால் மிஞ்சினாலும், அதைப் பவுடராக்கிப் பாதுகாத்துக்கொள்கிற தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்துவிட்டது.

எருமைப் பாலில் இருந்து பவுடர் வருகிறது என்றால், இன்னும் சாக்லேட், ஐஸ் க்ரீம், பாலாடைக்கட்டி (சீஸ்), குழந்தை உணவுகள் என்று ஏகப்பட்ட பொருள்களை அதிலிருந்து தயாரிக்கமுடியும் என்றுதான் அர்த்தம். இதன்மூலம், எருமைப் பாலுக்குப் பல புதிய பயன்கள் கிடைக்கவிருக்கின்றன, வருங்காலத்தில், கேரா கூட்டுறவுச் சங்கம் அதிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கால் பதிக்கலாம்.

1955ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, ஆனந்தில் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான பால் பண்ணையைத் தொழிற்சாலையைத் திறந்துவைத்தார் நேரு. ஆசியாவிலேயே மிகப் பெரிய பால் பண்ணைத் தொழிற்சாலையான இங்குதான், நம் நாட்டிலேயே முதன்முறையாகப் பால் பவுடர் தயாரிக்கப்பட்டது. அதுவும் எருமைப் பாலைக் கொண்டு!

அதுவரை, இந்தியாவில் எந்தப் பால் பண்ணையை எடுத்துக்கொண்டாலும், அங்கே பாலைப் பாதுகாப்பது, பதப்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். மிஞ்சிப்போனால், பாலில் இருந்து வெண்ணெய் எடுப்பார்கள். அதை நெய்யாக மாற்றி விற்பனை செய்வார்கள். அதைத் தாண்டி யாரும் சிந்தித்தது கிடையாது. முதல்முறையாக, ஆனந்தில் அமைக்கப்பட்ட கூட்டுறவுப் பால் பண்ணை, பாலில் இருந்து பால் பொருள்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அதன் முதல் படியாகதான், தங்களுக்குச் சொந்தமாக ஒரு பால் பவுடர் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தார்கள்.

ஒருபக்கம் பால் சேகரிக்கப்படும். குளிரூட்டப்பட்டு, பதப்படுத்தப்பட்டு பம்பாய்க்கோ, வேறு நகரங்களுக்கோ அனுப்பப்படும். இதுதவிர மிஞ்சிய பால், பவுடராக்கப்படும். அதிலிருந்து வேறு பல பொருள்களாகத் தயாரிக்கப்படும். இதைத் தனியாக விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம். வர்கீஸ் குரியனின் திட்டம் இதுதான்.

தைரியமாகக் களத்தில் இறங்கலாம் என்று தீர்மானித்தார் வர்கீஸ் குரியன். தங்களுடைய அனுபவக் குறைவை, கடும் உழைப்பால் ஈடுகட்டிக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டார்.

ஆனந்தில் கூட்டுறவுச் சங்கப் பால் பண்ணை திறக்கப்பட்டு மூன்றே மாதங்களில், அவர்களுடைய தயாரிப்புகள் நேரடியாக மக்களைச் சென்றடையத் தொடங்கின. 1956 பிப்ரவரியில் தங்களுடைய பால் பவுடரை அறிமுகப்படுத்திய கேரா கூட்டுறவுச் சங்கம், அடுத்த மாதம் வெண்ணெய் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்தது.
இந்தத் தயாரிப்புகளைப் பரவலாகப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குக் கேடா கூட்டுறவுச் சங்கம் மிகவும் பாடுபட்டது. அப்போதும், அவர்களால் குறிப்பிடத்தக்க விற்பனையை எட்டமுடியவில்லை.

குறிப்பாக, கேடா கூட்டுறவுச் சங்கம் தயாரித்த வெண்ணெய், பால்ஸன் நிறுவனத்துடன் போட்டியிடமுடியாமல் திணறியது. ஏற்கெனவே பம்பாய் வெண்ணெய்ச் சந்தையை முற்றிலுமாக வளைத்துப்போட்டிருந்த பால்ஸன், இப்போது கூட்டுறவுச் சங்கத்தின் வெண்ணெய்க்கு இடம் தராமல் கடும் போட்டி கொடுத்தது.

என்ன செய்யலாம் என்று வர்கீஸ் குரியன் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த நேரம். அவருடைய உறவினர் கே எம் ஃபிலிப் ஒரு யோசனை சொன்னார்.

‘உங்களுடைய தயாரிப்புகள், மக்கள் மனத்தில் சட்டென்று பதியவேண்டுமானால், அதற்கு ஒரு நல்ல பெயர் தேவை.’

அதாவது, ‘கேரா மாவட்டக் கூட்டுறவுச் சங்கத்தின் வெண்ணெய்’ என்று நீட்டி முழக்குவதைவிட, சிறியதாக, சுலபத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியான பிராண்ட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதன்பிறகு, அந்த பிராண்ட் தயாரிப்புகள் தரமானவை என்கிற எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதற்குச் சரியான விளம்பரங்களைச் செய்யவேண்டும்.

அமுல் (Anand Milk Union Limited ) பிறந்தது இப்படித்தான்.

0

வர்கீஸ் குரியன் விக்கிபீடியா பக்கம்

Dr Varghese Kurien – From mechanical engineer to milkman

C மொழித் தந்தைக்கு ஒரு மாணவனின் அஞ்சலி

“It’s not the actual programming that’s interesting. But it’s what you can accomplish with the end results that are important.”

–    Dennis Ritchie (in an interview to ‘Investor’s Business Daily’)

சமீபத்தைய ஏராள ஸ்டீவ் ஜாப்ஸ் அஞ்சலிக்குறிப்புகள் படித்த அயர்ச்சியிலிருந்த எனக்கு அத்தகையதோர் கட்டுரையை விரைவில் நானே எழுதப் போகிறேன் என்று யாரேனும் சொல்லியிருந்தால் எதன்பொருட்டும் அதனை நம்பியிருக்க மாட்டேன். இன்று டென்னிஸ் ரிட்ச்சிக்காக அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

இதை எழுதிக்கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனாக அல்ல; ஒரு மாணவனாக‌.

மென்பொருள் தர உத்திரவாதப் பொறியாளனாக நிரல் எழுதுவது என்பது சற்றே அந்நியப்பட்டுப்போயிருந்தாலும் அவ்வப்போதான தேவைக்கென்று தொடுப்பு வைத்திருப்பது ஜாவா மொழியோடு மட்டும்தான் என்றாலும் தற்போதைக்கு எனக்கு நன்கு தெரிந்த நிரலாக்க மொழி எனில் அது C தான். போலவே, பழக்கம் தந்த சொகுசின் காரணமாக, பிடித்த இயங்குதளம் விண்டோஸ்தான் என்றாலும் அலுவலகத்தில் தினசரி அதிகப்படி பயன்படுத்த நேர்வது லின‌க்ஸ்தான்.

நேர்முகத் தேர்வுகளில், பிடித்த ஏதேனும் மொழியில் குறிப்பிட்ட விஷ‌யத்துக்கு நிரல் எழுதச் சொன்னபோதெல்லாம் C மொழியையே தேர்ந்திருக்கிறேன். நான் மற்றவர்களை நேர்காணல் செய்ய நேர்ந்தபோதும் இதே கேள்விக்கு C மொழி பயன்படுத்தி எழுதியவர்கள்பால் தனியானதொரு வாஞ்சை ஏற்பட்டிருக்கிறது.

எண்ணங்களிலும் செயல்களிலும் ஊறிப்போயிருக்கும் இத்தொழில்நுட்பங்களின் ஆதிவடிவங்களை ஆக்கியவர் டென்னிஸ் ரிட்ச்சி – ஒன்று C மொழி; மற்ற‌து யூனிக்ஸ் இயங்குதளம். இவைதவிர அவரது முக்கியமான ஆக்கம் என நான் கருதுவது அவரது புத்தகங்களை: The C Programming Language மற்றும் Unix Programmer’s Manual.

கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் சமகாலத்தவர் எவரையும்விட‌ தொழில்நுட்பத்தின்வழி நம் தினசரி வாழ்வின்மீது ஆகப்பெரிய பாதிப்பை எற்படுத்தியவர் என டென்னிஸ் ரிட்ச்சியையே சொல்லவேண்டியிருக்கிறது – ‘எவரையும்’ என்பது பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவரையும் சேர்த்துத்தான்.

விண்டோஸ் உட்பட கணிசமான இயங்குதளங்கள் C மொழியில் எழுதப்பட்டவை, பேர்ல் (Perl) உட்பட பல நிரலாக்க மொழி கம்பைலர்கள் C மொழியில் எழுதப்பட்டவை. இன்றும் ஒட்டுமொத்தப் பயன்பாட்டில் ஜாவாவுக்கு அடுத்து C மொழி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. யூனிக்ஸின் நீட்சியான லினக்ஸ் பரவலாக நிரலாக்கத்தில் பயன்படுகிறது. இப்படியாக, இன்றைய தேதியில் நாம் பயன்படுத்தும் எந்த மின்னணுச் சரக்கிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தவிர்க்கவே முடியாத‌படி டென்னிஸ் ரிட்ச்சியின் தொழில்நுட்பம் ஒளிந்திருக்கிறது.

ஆனால் அவரது இறப்புச் செய்தி அவர் இறந்து மூன்று நாட்கள் கழித்து அவரது முன்னாள் பணிச்சகாவான ராப் பைக் என்பவர் தன் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் நேற்று அதிகாலை 6:32-க்கு பகிர்ந்து கொண்டதன் வாயிலாகவே வெளி உலகத்துக்கு வந்ததிருக்கிறது. அதிலும் அவரது மரணத்தேதி சரியாகக் குறிப்பிடப்படவில்லை.

நேற்று காலை 9 மணிவரை எந்த ஆங்கில வலைதளத்திலுமே இந்தச் செய்தி வெளியாகவில்லை. காலை 10 மணிவரை விக்கிப்பீடியாவில் தகவல் பதியப்படவில்லை. நேற்று மதியம் 2 மணி வரை பிபிசி போன்ற பிரபல செய்தி நிறுவன‌ங்கள் இச்செய்தியை வெளியிடவில்லை. இப்போதும்கூட ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகவில்லை. தவிர்க்க இயலாது, ஸ்டீவ் ஜாப்ஸின் சமீப‌ மரணத்துக்குக் கிடைத்த அளப்பரிய அலப்பறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மனம் ஆதங்கம் கொள்கிறது.

கணிமையின் வரலாற்றில் ஒரு முக்கியமான சகாப்தமான அவரைப் பற்றி அவர் இறந்தபின்னரே எழுத நேர்ந்தது குற்றவுணர்ச்சியை எழுப்புவதாகவே இருக்கிறது.

டென்னிஸ் ரிட்ச்சி தனது வலைப்பக்கத்தில் தன் வாழ்க்கையை ஓர் அஞ்சலிக் குறிப்பைப்போல் சொல்ல விரும்பாமல் தன்மையிலேயே விவரிக்கிறார். (“A brief biography, in first person instead of obituary style.”) இப்போது அவர் இறப்புக்குப்பின் எழுதப்படும் இக்குறிப்பும் அவர் விருப்பம் போல் அப்படியே சொல்லப்படுகிறது:

“நான் டென்னிஸ் ரிட்ச்சி. 1941ம் வருடம் செப்டெம்பர் மாதம் 9-ம் தேதி நியூ யார்க் நகரில் உள்ள ப்ரான்க்ஸ்வில் என்ற செல்வச்செழிப்பானதொரு கிராமத்தில் பிறந்தேன். என் அப்பா அலிஸ்டைர் ரிட்ச்சி பெல் பரிசோதனைக்கூடத்தில் ஸ்விட்சிங் சிஸ்டம் எஞ்சினியராகப் பணியாற்றினார்; அம்மா ஜீன் மெக்ஜீ வீட்டைக் கவனித்துக்கொண்டிருந்தார். என் பாலியப் பருவமும் பள்ளிப்படிப்பும் நியூ ஜெர்சியில் நிகழ்ந்தன. படிப்பில் நான் கெட்டிக்காரனாகவே இருந்தேன்.

பின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலை இயற்பியல் படித்தேன். அப்போது ஹார்வார்ட்டில் இருந்த Univac – I என்ற கணினி பற்றிய ஒரு விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. அதுதான் கணினியியல்மீதான காதல் எனக்குள் உண்டாவ‌தற்கான முதல் விதை. பின்னர் கணினிகள் பற்றி, குறிப்பாக அவற்றின் நிரலாக்கம் பற்றித் தேடிப் படிக்கத் தொடங்கினேன்.

பின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலேயே பயன்பாட்டுக் கணிதத்தில் (Applied Mathematics) முதுநிலை பயின்றேன். கணினியியல் அப்போது தனிப்படிப்பு ஆகாததால் கணினி அறிவு இருப்பவர்கள் யார் என்றாலும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அவர்களைப் பணிக்குச் சேர்த்துக்கொண்டிருந்த காலம் அது. அதன் காரணமாக கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போதே எம்.ஐ.டி.யில் கணினித்துறையில் வேலை கிடைத்தது. அனுபவசாலிகளுடன் பல ஆண்டுகள் உயர் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் வாய்ப்பு அங்கே வாய்த்தது. அது இரண்டாவது விதை.

அப்போதைய கணினிகள் அளவில் மிகப் பெரியவை. ஒரு கணினி, ஒரு மொத்த அறையையே ஆக்ரமித்துக்கொண்டிருக்கும். மேசைக்கணினி (Desktop) உருவாக்கம் அப்போது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்தது. BASIC போன்ற ஆரம்ப நிரலாக்க மொழிகளே உருவாகாத காலம். மேசைக்கணினிக்கு என தனி இயங்குதளம் (Operating System) உருவாகாத காலம். நான் அதன் தேவை உணர்ந்து மேசைக்கணினிக்கு என தனி இயங்குதளம் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்தேன்.

எம்.ஐ.டி தவிர பெல், ஜெனரல் எலெக்ட்ரிக், ஹனிவெல் ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்துக்கு உதவின. கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்தவர்களும், நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களும் இதில் பங்கெடுத்துக்கொண்டனர். அப்போது நிரலாக்கம் எனக்கு ஒரு சிக்கலான பிரச்னையாக அல்லாமல், சுவாரசியமான புதிராகவே தோன்றியது. இறுதியில் 1,000 பேர் பயன்படுத்தவல்ல, 24 மணி நேரமும் செயல்படும் ஓர் இயங்குதளத்தை வெற்றிகரமாக உருவாக்கினோம். அது மூன்றாவது பலமான‌ விதை.

1967-ல் என் அப்பா வேலை பார்த்த பெல் பரிசோதனைக்கூடத்திலேயே எனக்கும் வேலை கிடைத்தது. அங்கே கணினியியல் ஆராய்ச்சி மையத்தில் பணி. பின் 1968-ல், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பேட்ரிக் ஃபிஷர் என்ற புகழ்மிக்க கணினி விஞ்ஞானியின் கீழ் ஆய்வு செய்து பி.ஹெச்டி பெற்றேன். என் ஆய்வு subrecursive hierarchies of functions என்பது தொடர்பானது. இளநிலையில் நான் கற்றுக்கொண்ட விஷயம், இயற்பியல் என்பது எனக்கு ஒத்துவராது என்பதையே; அதேபோல் முதுநிலையில் நான் கற்றுக்கொண்ட விஷயம் அல்காரிதம் எனக்கு ஒத்துவராது என்பதையே. இவ்வாறுதான் நான் மெல்ல கணினியியலை வந்தடைந்தேன்.

பெல் பரிசோதனைக்கூடத்தில் சேர்ந்த புதிதில் மல்ட்டிக்ஸ் இயங்குதளத்தை (Multics OS) வடிவமைப்பதில் ஈடுபட்டிருந்தேன். பெல், எம்.ஐ.டி, ஜெனரல் எலெக்ட்ரிக் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் நடந்துவந்தது அத்திட்டம். அதில் இருந்தபோதுதான் BCPL, ALTRAN ஆகிய நிரலாக்க மொழிகளின் கம்பைலர்களை எழுதினேன்.

பெல் பரிசோதனைக்கூடத்தில் கென் தாம்ப்ஸனின் அறிமுகம் கிடைத்தது. அவர் எனக்கு ஓராண்டுமுன்பு அதாவது 1966ல்-தான் பெல் பரிசோதனைக்கூடத்தில் சேர்ந்திருந்தார். என் வாழ்வில் என்னை அதிகம் பாதித்த ஒருவர் இருப்பாரெனில் அது கென்னாகவே இருக்க முடியும். அவருடன் பணியாற்றிய அந்த ஆண்டுகள் என் ஒட்டுமொத்த வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் எனக் கருதுகிறேன்.

சிறிய கணினிகளுக்கென உருவாக்கப்பட்ட மல்டிக்ஸ் இயங்குதளம் நிறைய புதிய விஷயங்களைக் கொண்டிருந்தாலும் கூடவே நிறைய பிரச்னைகளையும் கொண்டிருந்தது. கென்னும் நானும் அதனைச் சரிபடுத்தும் பணியில் ஈடுபடுவது என முடிவெடுத்தோம். கோப்புகளைச் சுலபமாக உருவாக்க, திருத்த, சேமிக்க, அச்சிட, அழிக்கவல்ல ஓர் இயக்குதளம்; ஒரு கணினியிலிருந்து ம‌ற்றொன்றுக்கு சிக்கலின்றித் தொடர்புகொள்ள உதவும் ஓர் இயக்குதளம்; சாதாரணர்களும் பயன்படுத்தத் தோதான, சுலபமான ஆணைகளைக் கொண்ட ஓர் இயக்குதளம்; வெளி மென்பொருட்களைப் பிரச்னை இன்றி இயக்க அனுமதிக்கும் ஓர் இயங்குதளம்; சிறிய கணினிகளுக்குத் தகுந்தமாதிரியான சல்லிசான விலையிலான ஓர் இயங்குதளம். இதுதான் எங்கள் கனவு. மாதக்கணக்கில் கடுமையாக இதற்கு உழைக்க நேர்ந்தது. யூனிக்ஸ் (Unix) இயங்குதளம் உருவானது.

1971-ல் யூனிக்ஸ் உதவிக் கையேடு (UNIX Programmer’s Manual) வெளியிடப்பட்டது.

ஐ.பி.எம் நடத்திய இயங்குதள ஆராய்ச்சி மாநாட்டில்தான் யூனிக்ஸ் முதன்முதலில் உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. யூனிக்ஸ் இயங்குதளம் ஓர் உடனடி வெற்றி என்பேன். நிறைய சிறிய கணினிப் பயனர்கள் யூனிக்ஸ் இயங்கு தளத்துக்கு மாறினார்கள். கல்விக்கூடங்கள், அரசாங்க அலுவலகங்கள், வணிக நிறுவங்கள் என் எல்லா இடங்களிலும் யூனிக்ஸைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். யூனிக்ஸ் உலகெங்கிலும் ஒரு மோசமான‌ தொற்றுநோய்போலப் பரவத்தொடங்கியது.

“UNIX is very simple, it just needs a genius to understand its simplicity” என்று நினைக்கிறேன்.

பின் 1970-களின் தொடக்கத்தில் C நிரலாக்க மொழியின் உருவாக்கத்தில் நான் தனியே ஈடுபட்டேன். BCPL மொழியின் நீட்சியாக கென் தாம்ப்ஸன் உருவாக்கியதுதான் B மொழி. அதை நீட்டித்து நான் C மொழியை உருவாக்கத் தொடங்கினேன்.

யூனிக்ஸ் இயங்குதளத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே முதலில் C மொழியை உருவாக்கினேன். யூனிக்ஸின் ஆரம்ப வடிவம் அசெம்ப்ளி மொழியில் (Assembly Language) எழுதப்பட்டது. அசெம்ப்ளி மொழி சிக்கலான‌து; நிரல் பெரிதாக வள‌ரும்போது நிர்வகிக்கச் சுமையானது; எல்லோராலும் சுலபாகப் புரிந்துகொள்ளக் கூடியதும் அல்ல. அதனால் யூனிக்ஸை மாற்றி ழுத‌ முயற்சித்தபோது புதிய கணினி வன்பொருட்களுடன் ஒத்துழைப்பதில் அசெம்ப்ளி மொழிக்குச் சில போதாமைகள் இருப்பதை உணர்ந்தோம். அதன் காரண‌மாகவே C உருவானது.

1973-ல் C மொழியின் முதல் வடிவம் வெளியிடப்பட்ட‌து. தொடர்ந்து நானும் தாம்ப்ஸனும் யூனிக்ஸ் இயங்குதளத்தை C மொழியில் மாற்றி எழுதுவதில் ஈடுபட்டோம். 1973-லேயே C மொழியில் எழுதப்பட்ட யூனிக்ஸ் வெளியானது.

1978-ல் ப்ரையன் கெர்னிகன் என்பவருடன் இணைந்து C மொழியைப் பயன்படுத்துவது குறித்து ‘The C Programming Language’ என்ற புத்தகத்தை எழுதினேன்.

பின்னர் யூனிக்ஸ் என்ற நோக்கத்தைத் தாண்டி C மொழியைப் பல்வேறு அமைப்பு நிரலாக்கங்களுக்கு (System Programming), பயன்பாட்டு நிரலாக்கங்களுக்கு (Application Programming) பயன்படுத்தத் தொடங்கினார்கள். அதன் விஸ்தரிப்பின் பிரம்மாண்டம் அதன் பிரம்மாவான எனக்கே வியப்பளிக்கக்கூடியதாகவே இருந்துவருகிறது.

C மொழிக்கு ஒத்துவராத கணினி ஆர்க்கிடெக்ச்சர்கள் அதன்பிறகு அதிகம் எழுதப்படவில்லை. கணினி நிரல் எழுதுகிற ஒவ்வொருவருமே C மொழியைப் பயன்படுத்த விரும்பினார்கள். “C is quirky, flawed, and an enormous success” – அதுவே அதன் வெற்றி. பிற்பாடு 1983-ல் யார்ன் ஸ்த்ரோஸ்த்ரூப் C++ மொழியை உருவாக்க C மொழியே அடிப்படையாக அமைந்தது. Java, Javascript, C#, Objective C போன்ற பிற மொழிகளும் C மொழியின் மறைமுக பாதிப்பைக் கொண்டிருக்கின்றன‌.

1984-க்குப் பின் GNU, BSD, MINIX இயங்குதளங்கள் யூனிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன‌. இவற்றின் அடுத்தகட்டமாக லினக்ஸ் இயங்குதளம் இலவச, திறமூல மென்பொருளாக (Free and Open Source Software) 1991-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்று இயங்குதளச் சந்தையில் பிரம்மாண்டமான, தவிர்க்க இயலாத‌ ஓர் அங்கமாக வளர்ந்து நிற்பது திருப்தியை அளிக்கிறது.

பின்னர் தொடர்ந்து பெல் பரிசோதனைக்கூடத்திலேயே பல திட்டங்களில் பங்கெடுத்தேன். 1995-ல் Plan 9 என்ற இயங்குதளத்தையும் 1996-ல் Inferno என்ற இயங்குதளத்தையும் எனது தலைமையிலான குழு உருவாக்கி வெளியிட்டது.

எனது பணிகளுக்காக‌ நான் பெற்ற விருதுகள்: ACM award for outstanding paper in systems and languages (1974), IEEE Emmanuel Piore Award (1982), Bell Laboratories Fellow (1983), ACM Turing Award (1983), ACM Software Systems Award (1983), United States National Academy of Engineering Membership (1988), C&C Foundation Award of NEC (1989), IEEE Richard W. Hamming Medal (1990), National Medal of Technology (1998), Japan Prize for Information and Communications (2011).

இதில் பல விருதுகள் கென் தாம்ப்ஸனுடன் கூட்டாகப் பெற்றவை. இவற்றில் முக்கியமானது National Medal of Technology – தொழில்நுட்பத்துறையில் சாதனை நிகழ்த்திய அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு வழங்கும் உயரிய விருது. இவிவிருதினை 1999-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டனிடமிருந்து நானும் கென்னும் பெற்றுக்கொண்ட‌து மிகச் சந்தோஷமான தருணம்.

Bell Telephone Laboratories, Bell Laboratories, AT&T Bell Laboratories, Lucent Bell Labs Innovations, Alcatel-Lucent Bell Labs என பெல் ப‌ரிசோதனைக்கூடத்தின் பல்வேறு பெயர் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கிடையே கிட்ட்த்தட்ட நாற்ப‌தாண்டுகள் அதனோடு இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். 2007-ல் பணி ஓய்வு பெறும்போது பெல் கணிமை மற்றும் மென்பொருள் துறையின் தலைவராக இருந்தேன். இப்போது பார்க்கையில் கணிமைக்கான என் ஆகச்சிறந்த பங்களிப்பு என யூனிக்ஸ் உருவாக்கத்தில் பங்கெடுத்ததையும் C மொழியை வார்த்தெடுத்ததையுமே சொல்வேன்.

தற்போது இந்த 2011-ல் 70 வயதாகிறது. நியூ ஜெர்சியின் பெர்க்லி ஹைட்ஸ் பகுதியில் இருக்கும் என் பெரிய வீட்டில் முழுக்கவே தனிமையில் அடைந்து கிடக்கிறேன். ப்ரோஸ்டேட் புற்று நோய்க்கான சிகிச்சை நடக்கிறது. உடன் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும். ஆனால் நான் இப்பூமிக்கு வந்த கடமையைச் சரியாக‌ முடித்துவிட்டேன். தொழில்நுட்பத்தில் மனித குலத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு முக்கியமானதொரு பங்களிப்பைச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. அது ஒருவித திருப்தியையும் மனநிறைவையும் அளிக்கிறது.”   

– சி.சரவணகார்த்திகேயன்

ஸ்டீவ் ஜாப்ஸின் தொழில்நுட்ப தரிசனம்

நான் கணினித்துறையில் நுழைந்து மென்பொருள் எழுதிய ஆரம்ப கால கட்டங்களில் எங்கள் கம்பெனியில் ஒரு பிஸ்தா இருந்தான். மென்பொருள் வேலை செய்யாமல் முரண்டு பிடித்தால் அவன்தான் கதி. எந்த பிரச்சினைக்கும் உடனடியான தீர்வு கண்டுபிடிக்கும் துல்லியமான தர்க்க புத்தி படைத்தவன். மென்பொருள் துறையில் புதியதாக எது வந்தாலும் அவனுக்குத் தெரியாமல் இருக்காது. ஆனால் ஒரு விஷயத்துக்கு மட்டும் அவனிடம் உதவிக்குப் போக முடியாது. அதுதான் யூஸர் இண்டர்ஃபேஸ் என்னும் பயனர் முகப்பு. ஒரு இளக்காரமான புன்னகையுடன் “அது பெண்கள் வேலை” என்று விலகி விடுவான். அதன் பிறகும் பல மென்பொருள் பிஸ்தாக்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோருமே இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார்கள்: ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண் துருவம் என்றால் பயனர் முகப்பு பெண் துருவம். உழவுக்குச்செல்பவன் ஆண், கோலம் போடுவது பெண் என்பது மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். வாழ்க்கைக்கு உழவு முக்கியம். கோலம்? அது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

ஸ்டீவ் ஜாப்ஸ் கோலத்துக்காகத்தான் உழவு என்றார். உலகம் அவரை விசித்திரமாகப் பார்த்தது.

விசித்திரங்களும் விதி மீறல்களும் தொழில்நுட்ப உலகத்துக்குப் புதியது அல்ல. 19ம் நூற்றாண்டில் சார்லஸ் பாபேஜ் கண்டுபிடித்த கணக்கிடும் யந்திரம் அன்றைய விசித்திரம். ஆனால் இங்கிலாந்தின் முதலீடு, யந்திரத்தறியிலும் காலனீய ஆதிக்கத்தில் கிடைத்த சுலப செல்வங்களாலும் கவரப்பட்டிருந்தது. பாபேஜின் யந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பாபேஜின் யந்திரத்தை அது கண்காட்சிப் பொருளாக்கியது. அன்றைய பாபேஜ் போலவே இன்றைய ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் இந்திய சிந்தனைகளுடன் பரிச்சயம் இருந்தது.

அமெரிக்காவின் புதிய தொழில்நுட்ப வெற்றிகள் ஒவ்வொரு பத்தாண்டிலும் பழசாகிப்போய் விடுபவை. முதலியம், உலகமயமாக்கல் ஆகிய இரட்டைக் குதிரைகளால் ஓட்டப்படும் அமெரிக்கப் பொருளாதாரம் எந்தக் கண்டுபிடிப்பிலும் அதிக காலம் இளைப்பாற முடிவதில்லை. தனது புதிய கண்டுபிடிப்பை தானே முதலில் முன்நின்று பழையதாக்கி விடுவதில்தான் அதன் தொழில்நுட்ப வெற்றி அடங்கியுள்ளது. பழையதைத்தாண்டி புதியதைப் படைப்பதன் மூலமாகவே அது முன்-நிலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

70களிலும் இதே நிலைதான். கணினித் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா உலகிலேயே முதலிடம் வகித்து வந்தது. பெரியதொரு அறையையே அடைக்கும் பெருங்கணினிகளின் காலம் அது. அன்றைய தேதியில் கணினி என்றால் அது பாதுகாப்புத்துறை, பல்கலைக்கழகங்கள், பெரு நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான ஏதோ சிக்கலான சமாசாரம். இந்நிலையில் 1974ல் இண்டெல் நிறுவனம் உலகின் முதல் மைக்ரோப்ராஸ்ஸரை (8080) வெகு குறைவான விலையில் வெளியிட்டது. தனிக்கணினி (personal computer) என்பதன் உருவாக்கத்துக்கான முதல் அடிக்கல் இதன்மூலம் போடப்பட்டது. பொழுதுபோக்காய் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யுட்களில் விளையாடிக்கொண்டிருந்த பல தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இண்டெலின் விலை குறைந்த மைக்ரோப்ராஸ்சர் மிகப்பெரும் உற்சாகத்தை அளித்தது.

பள்ளியில் படிக்கும்போதே ஸ்டீவ் ஜாப்ஸுக்கு வாஸ் (Woz) என்று அழைக்கப்பட்ட ஸ்டீபன் வாஸ்னியாக் என்கிற கணினித் தொழில்நுட்பத்தில் கில்லாடி மாணவன் ஒருவனுடன் நட்பு தொடங்கியிருந்தது. வாஸ் உருவாக்கிய முதல் தனிக்கணினி (personal computer) சிலிக்கன் பள்ளத்தாக்கின் கணினி ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைக்கண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் அதை அவர்களுக்கு ஒரு விலை வைத்து விற்கத் தொடங்கினால் என்ன என்று கேட்டார். ஸ்டிவ் ஜாப்ஸ் வீட்டின் கார் நிறுத்தும் அறை, கணினி தயாரிக்கும் இடமாயிற்று. இரண்டு பேரும் சேர்ந்து 1000 டாலர் முதலீடு செய்தனர். கம்ப்யுட்டர் பாகங்களுக்கு $220 செலவு. கணினி போர்டை கட்டி முடிக்க உதவிய ஸ்டீவ் ஜாப்ஸின் நண்பனுக்கும் சகோதரிக்கும் போர்ட் ஒன்றுக்கு 1 டாலர் தரப்பட்டது. முடிக்கப்பட்ட ஒவ்வொரு போர்டும் 500 டாலருக்கு மொத்த காண்ட்ராக்டில் விற்கப்பட்டது. இப்படியாகத் தொடங்கிய விற்பனை நல்ல லாபம் தரவே 1976 ஏப்ரல் 1ல் ஆப்பிள் என்ற பெயரில் முறைப்படி கம்பெனியாக பதிவு செய்தனர்.

ஆப்பிள் கம்ப்யுட்டரின் தொழில்நுட்ப மூளையான வாஸ்னியாக் அடுத்ததாக உருவாக்கிய ஆப்பிள் II அன்றையை நிலையில் ஒரு பெரும் புரட்சி- அதனை கலர் டிவியில் இணைத்து வண்ணக் கணினியாக உபயோகப்படுத்த முடியும். அன்றைய ஆப்பிளின் லோகோவில் இருந்த வானவில் பட்டைகளின் பின்னணி இதுவே. 1977ல் வெளிவந்ததுமே ஆப்பிள் II பலத்த வரவேற்பைப் பெற்றது. (ஆப்பிள் II உபயோகப்படுத்தியது மைக்ரோசாஃப்டின் பேஸிக் மொழிபெயர்ப்பு மென்பொருள் என்பது உபரிச்செய்தி.)

2500 ஆப்பிள் II கணினிகளை 1977ல் விற்றது. அடுத்த வருட விற்பனை மூன்றுமடங்குக்கும் மேலாக இருந்தது. 1979ல் 35000 கணினிகள் விற்றுத்தீர்ந்தன. இன்று போலவே அன்றைய நிலையிலும் அமெரிக்கா பொருளாதாரச் சரிவின் பிடியில்தான் இருந்தது. ஆனால் 1980ல் பொது நிறுவனமாக்கி தனது பங்குகளை முதல் பொது விற்பனையாக (ஐபிஓ) ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தையில் விட்டபோது, அதன் பங்குகளுக்கு மாபெரும் டிமாண்ட் இருந்தது. அதற்கு முந்தைய கால் நூற்றாண்டு அமெரிக்கப் பங்குச்சந்தை வரலாற்றில், ஃபோர்டு கார் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக மதிப்புடையதாக ஆப்பிளின் ஐபிஓ அமைந்தது. 1979ல் 7 மில்லியன் டாலர் மதிப்புடையதாய் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸின் சொத்து ஐபிஓ-விற்குப்பின்னால் 217.5 மில்லியன் டாலராக அதிகரித்தது.

ஆனால் இந்த வெற்றி முகத்திற்கு சவால்கள் பல வரத்தொடங்கின. ஐபிஎம் கம்பெனி பெரும் கணினிகளில் பெரு வெற்றி கண்டு, பெரு நிறுவனங்களில் கால் பதித்திருந்த நிறுவனம். 1981ல் அது தனது தனிக்கணினியை சந்தைக்குகொண்டு வந்தது ஆப்பிளுக்கு மிகப்பெரும் சவாலானது. மைக்ரோசாப்ட் ஐபிஎம் கணினிகளுக்கு ஏகபோகமாக இயங்கு மென்பொருள் வழுங்கும் கம்பெனியானது. இந்நிலையில், ஆப்பிளின் அடுத்த தயாரிப்பான ஆப்பிள் III பெரும் தோல்வியடைந்தது. தொடர்ந்து ஸ்டீவ் ஜாப்ஸ் 1984ல் ஆரவாரமாக அறிமுகப்படுத்திய ஆப்பிள் மாக் கம்ப்யுட்டர் முதல் சில மாத விற்பனைக்குப்பின் படிப்படியாக தோல்வியடையத் தொடங்கியது.

இந்த நேரத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் மேலாண்மை முறை பற்றி சொல்ல வேண்டும். பிறரை அனுசரித்துப்போவதோ, வளைந்து கொடுப்பதோ அவரது இயல்பிலேயே இல்லை. ஆப்பிளில் ஸ்டீவ் ஜாப்ஸ் “மாக்” கணினிக்குழுவின் தலைவராய் இருந்தார். ஆனால் பிற மென்பொருள் குழுக்களும் இருந்தன. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் தன் குழுவுக்கு வெளியில் இருக்கும் அனைவரையும் – அவர்கள் ஆப்பிள் கம்பெனிக்காரர்களாயிருந்தாலும் அவர்களை ரெண்டாம் தரம், மூன்றாம் தரம் என்று வெளிப்படையாக ஏளனப்படுத்திப்பேசி வந்தார். இதில் வாஸ்னியாக்கின் ஆப்பிள் II குழுவும் அடங்கும். ஆப்பிள் II மட்டும்தான் கம்பெனிக்கு தொடர்ந்த வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருந்தது என்ற நிலையிலேயே இப்படி! விளைவு, ஜாப்ஸுடன் சேர்ந்து ஆப்பிளைத் தொடங்கிய வாஸ்னியாக் 1985 தொடக்கத்தில் ஆப்பிளில் இருந்து விலகினார். ஆப்பிளின் விற்பனை தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டே வந்தது. கம்பெனியை தன் விருப்பப்படி மட்டுமே செலுத்த முயலும் ஸ்டீவ் ஜாப்ஸின் போக்கை சகித்துக்கொள்வதில்லை என போர்டு உறுப்பினர்கள் முடிவு செய்தனர். 1985ல் தன் முப்பதாவது வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் தொடங்கிய கம்பெனியின் அனைத்து மேலாண்மை பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

1985ல் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் இறங்கு முகம் அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடரும். ஆனால் உண்மையில் அந்தப்பத்தாண்டுகளின் உழைப்பும் அனுபவமும்தான் 1995க்குப் பின் ஸ்டீவ் ஜாப்ஸ் அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமானது.

ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்டபின், நெக்ஸ்ட் என்கிற கம்பெனியைத் தொடங்கினார். தனது மனதிலுள்ள உன்னத கணிப்பொறிக்கு உயிர்கொடுக்க சிலிகான் பள்ளத்தாக்கின் தலை சிறந்த தொழில்நுட்ப வித்தகர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டார். கனசதுர வடிவில்தான் நெஸ்ட் கணினியின் வடிவம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நெக்ஸ்ட் கணினி உருவாக்கத்தில் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் ஸ்டீவ் ஜாப்ஸின் பங்கு இருந்தது. மெக்னீஸியத்தாலான கறுப்பு நிறத்தில் கனசதுரம் இருக்க வேண்டும் என்றும், வெளியே மட்டுமல்லாமல் உள்ளிருக்கும் பாகங்களும் போர்டுகளும்கூட துல்லியமாக அழகாக அமைய வேண்டும் என்பதில் கறாராக இருந்தார். யுனிக்ஸ் அப்ஜக்ட்-ஓரியண்ட்டட் நிரலி அடிப்படையில் இயங்கு செயலியை (operating system) உருவாக்க முடிவு செய்தார்.

நெக்ஸ்ட் கம்ப்யுட்டர் வெளி மாதக்கணக்கில் தாமதமாகிக்கொண்டே போனது. வெளி வந்தபோது சந்தையில் பெரும் தோல்வி அடைந்தது.

ஆப்பிளை விட்டு வெளியே வந்த அதே நேரத்தில் வரை-கணினி (computer graphics) துறையில் மிகச்சிறந்த நிபுணர்களைக்கொண்ட குழு ஒன்றை, லுகாஸ் பிலிம் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கினார். பிக்ஸார் என்கிற பெயரில் அனிமேஷன் துறையில் மென்பொருள் மற்றும் உயர் கணினி தயாரிப்புகளில் அது ஈடுபடத் தொடங்கியது. ஆனால் பிக்ஸார் நிறுவனமும் தொடர்ந்து நஷ்டத்தையே ஏற்படுத்திக்கொண்டிருந்தது – 1995 வரை. 1995ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸுக்கு திருப்பு முனையாய் அமைந்தது. முழு அனிமேஷன் திரைப்படம் ஒன்றை உருவாக்கும் காண்ட்ராக்ட்டை டிஸ்னி நிறுவனம் 1995ல் பிக்ஸார் நிறுவனத்திற்கு அளித்தது. “டாய் ஸ்டோரி” என்கிற அந்த முழு அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது., நெக்ஸ்ட், பிக்ஸார் ஆகிய இரண்டு கம்பெனிகளின் நஷ்டத்தையும் ஈடு செய்யும் அளவுக்கு வசூலில் சாதனை படைத்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் ஏறு முகம் தொடங்கியது.

1995ல் வெளி வந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 3.0 மாபெரும் வெற்றியடைந்ததில், ஆப்பிளின் விற்பனை வெகுவாகச் சரியத்தொடங்கியது. மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை இணையும்படி ஆப்பிள் போர்டு கேட்டுக்கொண்டது. நஷ்டத்தில் இருந்த நெக்ஸ்ட் கம்பெனியை வாங்கிக்கொள்ள ஆப்பிள் தலைமையை சம்மதிக்கச்செய்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். நெக்ஸ்டின் இயங்கு செயலி எதிர்கால ஆப்பிள் கணினிகளின் இயங்கு செயலியாக உருவெடுக்கத்தொடங்கியது. நெக்ஸ்டைப்போலவே இங்கும் கணினிகளின் கவர்ச்சிகர வெளிப்புறத்தோற்றக் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரத் தொடங்கினார். 1998ல் புதுமையான வடிவமைப்பில் பல வண்ணங்களில் வெளிவந்த ஐ-மாக் கணினி மாபெரும் வெற்றி பெற்றது. அழகு, பயனர் உபயோகம் ஆகிய இரண்டு அம்சங்களிலும் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்ட கணினி அது. அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து கணினியின் வேகத்தைக்கூட்டி வடிவமைப்பில் பல மாற்றங்களையும் புதுமைகளையும் புகுத்தி புதிய மாடல்களை அறிமுகப்படுத்தினார். சரிந்திருந்த விற்பனை வேகமாக மேலெழத் தொடங்கியது.

 கடந்த பத்து வருட அனுபவங்கள் ஸ்டீவ் ஜாப்ஸை பல விதங்களில் முதிர்ச்சியடையச் செய்திருந்தன. பிக்ஸார் அனுபவம் பொழுதுபோக்குத்துறையில் உள்ள பெரும் வியாபார சாத்தியத்தை அவருக்கு கோடி காட்டியிருந்தது. ஐமாக், ஏர்போர்ட் ஆகிய தொழில்நுட்ப சாதனங்களின் உருவாக்கத்தில் இண்டர்நெட்டின் வளர்ச்சியையும் அவர் கவனிக்க முடிந்தது. 1990களின் இறுதியில் கணினி, பொழுதுபோக்கு, வலையுலகம் ஆகியவை இணைந்த வாழ்-நிலையை (Lifestyle) வியாபார நோக்கில் யோசித்த முதல் தொழில்நுட்ப நிபுணர் ஸ்டீவ் ஜாப்ஸ்தான். வலையுலக வாழ்விற்கான தொழில்நுட்ப விஷயங்களை உருவாக்குவதில் ஆப்பிள் முன்னணி வகித்தது. தொடர்ந்து வெளி வந்த ஐபாட் மிகப்பெரும் வெற்றியடைந்தது. ஐ-ட்யுன்ஸ் பாடல்களைத் தரவிறக்குவதை எளிதாக்கியது. அடுத்து வந்த ஐபாட் மினியும் பெரும் வெற்றியடைந்தது.

தோல்வியடைந்த தயாரிப்புகளும் இல்லாமலில்லை. ஐபாட் ஹைஃபி, ஆப்பிள் டிவி ஆகியவை வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சும் அளவுக்கு ஆப்பிள் 2007ல் ஐ-ஃபோனை வெளியிட்டது. ஐஃபோனின் கவர்ச்சிகர வடிவமைப்பும், பயனர் முகப்பும், உபயோக எளிமையும் அதனை மாபெரும் வெற்றிப் படைப்பாக்கின. 2007ல் முக்கியமான இன்னொரு அறிவிப்பையும் ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியிட்டார்- ஆப்பிள் கம்ப்யூட்டர் என்பதிலுள்ள கம்ப்யூட்டரை நீக்கிவிட்டு கம்பெனியின் பெயரை “ஆப்பிள்” என்று மாற்றினார். 2010ல் ஐபேட் வெளிவந்து அதுவும் பெரும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிகள் ஜாப்ஸை ஒரு தொலைநோக்கு மிக்க தொழில்நுட்பவாதியாக அடையாளம் காட்டுகின்றன. ஆனால் ஜாப்ஸின் வெற்றியின் ரகசியம், இரண்டாம் முறை அவர் ஆப்பிள் தலைமைப்பொறுப்பை ஏற்றவுடன் பழையனவற்றை அழித்து விட்டு புதியதாய்த் தொடங்கியதில் இருக்கிறது. பழைய பொருட்கள் அனைத்தையும் கண்காட்சியகத்திற்கு தானம் செய்துவிட்டு புதிய பார்வையில் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை அணுக முற்பட்டதில் அவரது வெற்றி அடங்கியுள்ளது. வன்பொருளையும் மென்பொருளையும் இறுக்கமாய்க் கட்டிய தொழில்நுட்பம் ஆப்பிளுடையது. இந்த தனிச்சிறப்பை அழகிய வடிவமைப்பிலும், பயனர் முகப்பிலும், உபயோகிக்க எளியதாய் கருவிகளைக்கொண்டு வருவதிலும் பயன்படுத்தியதில் ஸ்டீவ் ஜாப்ஸின் மேதைமை உள்ளது. இதற்காக கணினி என்பதிலிருந்து கன்ஸ்யுமர் பொருட்களை உற்பத்திசெய்யும் தொழில்நுட்ப நிறுவனமாக ஆப்பிள் கம்பெனியின் போக்கையே மாற்றியமைத்தார்.

ஆப்பிளுக்குத் திரும்பி வந்தபின்பு “மாற்றி யோசி” என்பதையே தன் கம்பெனியின் தாரக மந்திரமாக்கிக் கொண்டார். அதுவே அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு அடித்தளமாய் அமைந்தது. ஆப்பிள் விளம்பரம் ஒன்று இவ்வாறு அறிவித்தது: “கிறுக்கர்களை, கோட்டிகளை, கலகக்காரர்களை, வட்டத்திற்குள் சதுரமாகும் மனிதர்களை வரவேற்போம். மாற்றிப் போட்டுப்பார்ப்பவர்கள் அவர்கள். சட்டதிட்டங்களில் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களை நீங்கள் விரும்பலாம், வெறுக்கலாம், பாராட்டலாம், அவர்களுடன் கருத்து வேறுபடலாம். ஆனால் அவர்களை உதாசீனப்படுத்த உங்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் விஷயங்களை மாற்றியமைக்கிறார்கள். அவர்கள் மனித குலத்தை முன் நகர்த்துகிறார்கள். பைத்தியக்காரத்தனம் என்று அவர்களைப்பலர் பார்த்தாலும் நாங்கள் அவர்களிடத்தில் வித்தகர்களைப் பார்க்கிறோம். ஏனெனில் உலகை மாற்றி விடலாம் என்று சிந்திக்கும் அளவுக்கு பைத்தியங்கள்தான், உண்மையில் உலகை மாற்றி அமைக்கவும் செய்கிறார்கள்.”

 ஒரு கம்பெனியின் தொழில்நுட்ப படைப்புக்கு போதைபோல உலகளாவிய ஒரு தொண்டர் படையே உருவானது எவ்வாறு? இந்தக்கேள்விக்கு எனக்குத் தெரிகின்ற ஒரே பதில், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பயனர்களை வெகுவாக மதித்தார் என்பதுதான். வெறும் தொழில்நுட்பப் படைப்பு என்பதைத்தாண்டி வடிவ நேர்த்தியையும் அழகியலையும் உபயோக எளிமையையும் தன் நிறுவன தயாரிப்புகளில் உக்கிரமாக முன்வைத்தார். ஆப்பிள் தயாரிப்புகளை வைத்திருப்பதே பெருமை என்கிற உணர்வை தொடர்ந்து பயனர்களிடத்தில் வலுவாக்கிக்கொண்டே இருந்தார். இதற்காக அவர் தொடர்ந்து தன் தயாரிப்புகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. இவ்வாறு புதுப்பிக்க தலைசிறந்த தொழில்நுட்பக்குழு தேவைப்பட்டது. அதனையே தன் வெற்றியின் அச்சாணியாக்கிக் கொண்டார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் புதியதாய் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவரில்லை. அவரது பல தொழில்நுட்பங்கள் ஹெச்பி, ஜெராக்ஸ் போன்ற கம்பெனிகள் ஏற்கனவே உருவாக்கியவைதான். தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பாளர்கள் வேறு நிறுவனங்களில் இருந்திருக்காலம், ஆனால் தொழில்நுட்பத்தின் தொலைநோக்கு சாத்தியக்கூறுகளை முதலில் கண்டுகொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவ்வாறு கண்டறிய எதிர்காலம் குறித்த தன் பார்வையை புதுப்பித்துக்கொண்டே இருக்கின்ற மனோதிடமும், மாற்றி யோசிக்கும் தன்மையும் வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸிடத்தில் அது இருந்த அளவுக்கு அவரது சம காலத்தவர் யாரிடம் இல்லை. அதனாலேயே அவரது தயாரிப்புகளின் பின்னுள்ள தொலை சிந்தனை பலருக்கு அந்த நேரத்தில் பிடிபடாமல் போயிருக்கிறது. ஆனால் அதுவே அவரது பலம். தனது தொலைநோக்குப் பார்வையை தெளிவாகவும் ஆர்ப்பாட்டமாகவும் மறக்கமுடியா விதத்திலும் ஊடகங்களுக்கு கவர்ச்சிகரமாக எடுத்துச் சொல்லத் தெரிந்திருந்தது அவருக்கு. ஸ்டீவ் ஜாப்ஸின் ஊடக பிம்பம் ஆப்பிளின் ஊடக பிம்பத்துடன் பின்னிப்பிணந்தது வளர்ந்தது இவ்வாறுதான்.

இன்று ஆப்பிளுக்கு உள்ள சவால்கள் மைக்ரோசாஃப்டிடமிருந்தோ ஐபிஎம்மிடமிருந்தோ அல்ல. கூகுளிடமிருந்து. ஆனாலும், அதன் தன்மைகூட ஒருவகையில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே மைக்ரோசாஃப்ட்டிடம் எதிர்கொண்டதுதான். கூகுளின் ஆண்ட்ராய்ட் வெகு வேகமாக ஆப்பிளுக்கு எதிராக வளர்ந்து வருகிறது. இயங்கு செயலி மென்பொருளை பிரித்தெடுத்து பல கருவிகளுக்கு லைசென்ஸ் செய்ததன் மூலம் அன்றைய மைக்ரோஸாஃப்டின் அதே அணுகுமுறையை ஆப்பிளுக்கு எதிராக உபயோகப்படுத்துகிறது கூகுள். ஆப்பிளின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது கூகுளின் இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதில்தான் உள்ளது. அந்த திறமை ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸைத்தாண்டி பலரிடத்தில் இருந்திருக்கலாம். ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கும்வரை அவர்கள் வெளியே வெளிச்சத்திற்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்டீவ் ஜாப்ஸின் ஒளிவட்டம் அத்தகையது. அத்தகையவர்கள் இனி முன்னணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னிலையில் 2005ல் அவர் பேசிய உரை அருமையான ஒன்று. எல்லா மகத்தான உண்மைகளையும் போல அது நம் எல்லோருக்குமே அழகாகப்பொருந்துவது.

“நீங்கள் செய்யும் வேலை என்பது உங்கள் வாழ்வின் ஆகப்பெரும் பகுதியை நிரப்பும், அதில் திருப்தி காண ஒரே வழி நேர்த்தியுடன் அதைச் செய்வதுதான். அது எப்போது சாத்தியமாகும் என்றால், நீங்கள் செய்யும் வேலையை நீங்கள் மனதார விரும்பிச்செய்யும்போதுதான். அப்படிப்பட்ட உங்களுக்கான வேலையை நீங்கள் கண்டறியும்வரை தேடிக்கொண்டே இருங்கள். ஒரே இடத்தில் நின்று விடாதீர்கள்.”

“எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின்” என்கிற விவேகானந்தரின் அறைகூவல் நவீன தொழில்நுட்ப தீர்க்கதரிசி ஒருவரது குரலில் எதிரொலிப்பதாகவே தோன்றுகிறது. உன்னதங்களின் தேடல் எல்லாக்காலங்களிலும் ஒரே குரலில்தான் ஒலிக்கும் போலிருக்கிறது.

-அருணகிரி

 

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன செய்திருப்பார்?

“சாகவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறோம் என்று நினைப்பவர்கள்கூட அங்கு விரைவில் செல்லவேண்டும் என்று விரும்புவதில்லை. இருப்பினும், மரணம் என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒரு முடிவு. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மரணம் என்பது மனித வாழ்வின் ஒரு மகத்தான நிகழ்வு. மனித வாழ்வில் மாற்றத்தின் காரணி அதுதான். பழையதைக் களைந்து புதியனவற்றுக்கு வழிவகுப்பது அது. இன்றைய அளவில் நீங்கள் புதியவர்கள். ஆனால் சில காலங்களில் நீங்கள் மெல்ல மெல்ல பழையவர்களாகி களையப்படுவீர்கள். இப்படி வெடுக்கென்று சொல்வதற்கு மன்னிக்கவும், ஆனால் உண்மை இதுதான்.

உங்களுக்கான நேரம் குறைவு. ஆகையால், மற்றொருவரின் வாழ்க்கையை வாழ்வதில் அதை வீணடிக்காதீர்கள். வகுக்கப்பட்ட விதிகள் என்பன மற்றவர்களின் சிந்தனைகளில் விளைந்தவை – அவற்றில் சிக்கிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களின் கருத்துக்கள் என்ற இரைச்சலில் உங்கள் உள்மனக் குரலைத் தொலைத்து விடாதீர்கள். முக்கியமாக, உங்கள் மனம் சொல்லும் பாதையைத் தொடரவும், உங்கள் உள்ளுணர்வை நம்பும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனமும் உள்ளுணர்வும் நீங்கள் உண்மையில் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை அறியும். மற்றவை எதுவும் முக்கியமில்லை.”

ஸ்டீவ் ஜாப்ஸ், 2005, ஸ்டான்ஃபர்ட் மாணவர்களுக்கு ஆற்றிய உரையிலிருந்து.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்தில்கூட ஒரு அழகிருக்கிறது. திவாலாவதற்கு மிக அருகில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்குள் நுழைந்து, தலைமையேற்று, சுமார் பதினைந்து வருடங்களுக்குள் அதை உலகத்திலேயே – உலகத்திலேயே! – மதிப்பு அதிகமுள்ள நிறுவனமாக மாற்றி விட்டு, சில வாரங்களில் செத்துப்போனார். ஆம், அவர் சாக வேண்டும் என்று விரும்பவில்லைதான். திட்டமிடவில்லைதான். ஆனாலும், இந்த ‘வந்தான், வென்றான், சென்றான்’ என்ற திரைக்கதையில் இருக்கும் அழகை அவரேகூட ரசிக்கத்தான் செய்வார்.

ஆனால் இந்த அழகை ரசிக்கக் கூடிய மனநிலையில் அவரது பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்று இல்லை. செய்தியைக் கேட்டதும் என் கண்களில் நீர் மல்கியது உண்மை. ஈடு செய்ய முடியாத இழப்பு இது என்று சட்டென்று உறைத்தது உண்மை. இணையத்தில் ஏராளமான பதிவுகளில் இதே போன்ற உணர்ச்சிகளுடன் பலர் எழுதியிருப்பதைப் பார்த்தபோது ஒரு பெரும் சமூக சோகத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஆசுவாசம் கிடைத்தது நிஜம்.

இத்தனைக்கும் ஜாப்ஸ் எளிதில் நேசிக்கப்படக்கூடிய ஒரு மனிதர் இல்லை. ஒரு கனிவான, தோழமையான தோற்றத்தைத் தர அவர் என்றும் முயன்றதில்லை. ஒரு கண்டிப்பான ஆசிரியரின் ஆளுமையுடன்தான் அவரது வாடிக்கையாளர்களை, அவரது படைப்புகளின் பயனாளிகளை அவர் அணுகினார். இருப்பினும் அவரது படைப்புகளைக் கண்டு மோகித்தவர்களுக்கு, அவரது பேச்சுவன்மையில் வசீகரிக்கப்பட்டவர்களுக்கு, இந்த கண்டிப்பிலும் பிடிவாதத்திலும் ஒரு கவர்ச்சி இருந்தது. அதை ரசிக்கவும், அதையே அவரது வெற்றிக்குக் காரணமாகவும் கருதக் கற்றுக்கொண்ட னர்.

இந்தப் பிடிவாத குணமும் அதன் பின்னிருந்த அசாத்திய தன்னம்பிக்கையும்தாம் ஜாப்ஸின் ஆளுமைக்கு இலக்கணக் குறிப்புகளாக விளங்குகின்றன. எதைச் செய்தாலும் இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு உறுதியோடுதான் செயல்பட்டு வந்தார். மார்கெடிங்கை பொருத்தவரை நான்கு முக்கியக் கோணங்களை ஆதாரமாகச் சொல்வார்கள் – 4Ps என்று – Product, Pricing, Promotion, Placement. ஒரு பொருளை வர்த்தக வெற்றி அடைய வைப்பதற்கு அது எத்தகையது, எப்படி விலை குறிக்கப்படுகிறது, எப்படி விளம்பரப்படுத்தப்படுகிறது, எப்படி விற்கப்படுகிறது – இவை நான்கும் அடிப்படையானவை. ஜாப்ஸ் இந்த நான்கில் ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக, வர்த்தக பொதுப்புத்திக்கு முரணாகச் செயல்பட்டு வெற்றி கண்டார். கணினி தயாரிப்பாளர்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கருவிகளுக்குள் விஷயங்களைத் திணித்துக் கொண்டிருந்தபோது, இவர் வந்து ஒரு கருவி உபயோகமான முறையில் பயன்பட என்ன தேவையோ அவை மட்டும் இருந்தால் போதும் என்றார். எல்லோரும் விலைகளை சகட்டுமேனிக்குக் குறைத்துக் கொண்டிருந்தபோது, இவர் மட்டும் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் அதே அதிக அளவு லாப விகிதத்தில் விற்றுக் கொண்டிருந்தார். மற்றவர்கள் இல்லாத பொருட்களை என்றைக்கோ வரப்போகும் கருவிகளைப் பற்றிக் கூவிக் கொண்டிருக்கையில், இவர் ஏற்கெனவே தயாராக இருந்த கருவிகளைக்கூட ரகசியமாக வைத்துக்கொண்டிருந்தார். வர்த்தக உலகமே ‘இனி கணினிகள் இணையத்தில் மட்டும்தான் விற்கப்படும்’ என்று முடிவு செய்தபோது, இவர் தைரியமாக நாடெங்கிலும் (பின் உலகெங்கிலும்) ஆப்பிள் கடைகளைத் திறக்கத் துவங்கினார்.

ஒவ்வொன்றும் வித்தியாசமான செயல்திட்டம், ஒவ்வொன்றிலும் மாபெரும் வெற்றி. ஒரு கருவியை அறிமுகப்படுத்தும் ஜாப்ஸின் உரைக்காகக் காத்திருந்து, அடித்துப் பிடித்து ஓடி, க்யூவில் நின்று, காசைப் புரட்டி, கேட்டதைக் கொடுத்து வாங்கி வீட்டுக்கு வந்து புளகாங்கிதப்பட்ட ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய அளவுக்கு வெற்றி.

எந்த ஒரு பயனாளரிடமும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்காமல், ஒரு தனி மனிதன், தனது விருப்பப்படி, தனது உள்ளுணர்வு உணர்த்தும் வழியில் பொருட்களைத் தயாரித்து அவை மீண்டும் மீண்டும் ஒரு சர்வதேச சமுதாயத்தினால் உவகையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது ஒரு பிரமிக்க வைக்கும், நம்ப முடியாத சாதனை. நாம் நிகழ்காலத்தில் இதைக் கண்டோம் என்பது மட்டுமே சாட்சி.

அவரது மரணத்தின்போது அவர் கொண்டாடப்படும் அளவிற்கு அவரது பிறப்பின்போது கொண்டாடப் படவில்லை என்பது பலருக்குச் செய்தியாய் இருக்கலாம். ஜாப்ஸ் தம்பதியினர் அவரைப் பெற்ற பெற்றோர்கள் இல்லை. ஒரு அமெரிக்கப் பெண்மணிக்கும் ஒரு சிரிய நாட்டு மனிதருக்கும் பிறந்து தத்தாகக் கொடுக்கப்பட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரது வாழ்வில் மற்றொரு தருணத்தில் இதே போன்றதொரு நிராகரிப்பு நிகழ்ந்தது. அவர் பார்த்து ஆப்பிளில் வேலையில் அமர்த்திய ஒரு நபர், ஜாப்ஸுடன் வேலை செய்ய முடியாது என்று சொல்லி உள்ளரசியல் செய்து அவரை ஆப்பிளிலிருந்து வெளியேற்றினார். பனிரெண்டு ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு மீண்டும் அழைக்கப்பட்டார். தத்தளித்துக் கொண்டிருந்த நிறுவனத்திற்குள் தயங்காமல் நுழைந்து நமது வி.வி.எஸ்.லட்சுமணன் போல் இரண்டாம் இன்னிங்ஸில் பிரமாதமாக ஆடி நிறுவனத்தை தொட முடியாத உயரத்திற்கு இட்டுச் சென்றார்.

இவருக்குப் பிறகு ஆப்பிள் என்னவாகும் என்பது என்னளவில் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆப்பிள் ஆயிரக்கணக்கானோர் உழைக்கும் ஒரு நிறுவனம் என்றாலும், ஜாப்ஸின் தொழில்நுட்ப தரிசனம் இல்லாமல் அவர்களால் இதே சாதனைகளைத் தொடர முடியுமா, எவ்வளவு நாட்களுக்கு என்பன போன்ற கேள்விகளுக்கு நல்ல பதில்களில்லை. அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ, ஜாப்ஸ் இல்லாத ஆப்பிள் எப்படி இருக்கும் என்பதை நாம் அதிகம் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை – 1997 வரை பனிரெண்டு ஆண்டுகள் திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி இளைத்த ஒரு சாதாரணமான நிறுவனமாகத்தான் ஆப்பிள் இருந்தது.

அமெரிக்காவில் கிறித்துவ மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றுபவர்களிடயே ஒரு பழக்கம் உண்டு. ஒரு பிரச்சினை அல்லது ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் என்று வந்தால், அப்போது ஜீசஸ் இந்த நிலையில் என்ன செய்வார் என்று முதலில் சிந்தித்து அதன்படி செயல்படுவது. இதை ‘What would Jesus do?’ என்ற கேள்வியாகவும், WWJD என்று சுருக்கமாகவும் சொல்வார்கள்.

இன்று ஆப்பிள் நிறுவனத்திற்குள் ஒவ்வொரு விஷயத்திற்கும் இப்படித்தான் யோசிப்பார்கள் என்று தோன்றுகிறது – WWJD – What would Jobs Do? – என்று யோசித்து யோசித்து முடிவெடுப்பார்கள். ஜாப்ஸ் நினைத்திருந்தால்கூட அவரது திறமைகளை, உள்ளுணர்வை மற்றவர்களுக்கு போதித்திருக்க முடியாது. ஆகையால் இப்படிக் கேள்வி கேட்டுக் கேட்டு செயல்பட்டால்கூட சரியாகச் செய்வார்களா என்பது சந்தேகமே.

ஒரே நம்பிக்கை என்னவென்றால் ஜாப்ஸ் அடுத்த பல ஆண்டுகளுக்கு ஒரு திசைகாட்டி வரைபடத்தைத் தந்து விட்டுப் போயிருப்பார் என்பதுதான். ஆனால் வர்த்தகம் என்பது அத்தனை தீர்மானமாகத் திட்டமிட்டு செயல்படுத்தக் கூடிய விஷயமா என்ன?

நான் 2003ல் எனது முதல் ஆப்பிள் கணினியை வாங்கினேன். நான்கு வருடங்கள் கழித்து 2007ல் அதை விற்றேன் (ஒரே நாளில், வாங்கிய விலையில் மூன்றில் ஒரு பாகத்திற்கு!) விற்ற சில நாட்களில் வாங்கிய புதுக்கணினி இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கிறது. மாற்ற வேண்டிய வேளை வந்து விட்டது. அடுத்த நான்கு வருடங்களின் மென்/வன் பொருள் முன்னேற்றங்களோடு ஆப்பிள் தாக்குப் பிடிக்குமா? அதிக விலை கொடுத்து ஆப்பிள் வாங்குவது இன்னமும் புத்திசாலித்தனமான முடிவுதானா? தெரியவில்லை.

-ஸ்ரீகாந்த் மீனாக்ஷி

வங்காரி மாத்தாய் : ஒரு தேன்சிட்டின் மௌனம்

பெரிய பெரிய விலங்குகளும் சின்ன சின்ன விலங்குகளும் உள்ள ரொம்ப பெரிய காடு அது. விதம் விதமான பறவைகள். பற்பல பூச்சிகள். உயர்ந்த மரங்கள். எல்லாவிதமான உயிர்களுக்கும் அந்த காடுதான் வீடு. ஆனால் ஒருநாள் அங்கே எவரோ தீ மூட்டிவிட்டனர். காடு எரிய ஆரம்பித்தது. காட்டில் வாழும் விலங்குகள் பதறின. அங்கும் இங்கும் ஓடின. மரங்களோ ஓட முடியாமல் இறுதி வரை எரிய தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஓடிய விலங்குகள் எல்லாம் ஒரு தடாகத்தின் அருகே சிறிய குன்றொன்றில் நின்று கொண்டு தம் நல்ல இல்லம் எரிந்து சாம்பலாவதைச் செயலிழந்து பார்த்துக் கொண்டிருந்தன.

அப்போது அங்கு ஒரு விசித்திரம் நடந்தது. ஒரு சின்னஞ்சிறிய தேன் சிட்டு எரியும் காட்டுக்குள் சென்றது. பின் திரும்பியது. தடாகத்துக்குள் மூழ்கியது. பின் மீண்டும் காட்டுக்குள் சென்றது. இப்படி பல முறை.

யானைதான் கேட்டது முதலில். ‘என்ன செய்கிறாய் நீ?’

‘காட்டு நெருப்பை அணைக்கப் பார்க்கிறேன்’ என்று வந்தது பதில். ‘என் வாய் நிறைய தடாக நீரை நிரப்பி காட்டுத் தீயை அணைக்கப் பார்க்கிறேன். நம் வீடல்லவா பற்றி எரிகிறது. பார்த்துக் கொண்டு சும்மா நிற்க முடியுமா?’

யானை சிரித்தது. அதன் நீண்ட தும்பிக்கை முழுவதிலும் அலை அலையாக சிரிப்பு நழுவி நழுவி ஓடியது.

‘என்னா பெரிய வாய்…பாருங்கடா டேய் இன்னுமா தீ அணையலை ஹா ஹா ஹா’.

சிரிப்பு நோயாக பரவியது. எல்லா விலங்குகளும் அவற்றின் பெரிய பெரிய வாய்களை திறந்து சிரிக்க ஆரம்பித்தன. அவற்றைப் பார்த்து காட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அந்த தேன் சிட்டு சொன்னது. ‘என் வாய் சிறியதுதான். ஆனால் என் வாய் முழுக்க நீரை நிரப்பிக் கொள்கிறேன். என்னால் முடிந்த ஆகச்சிறந்த முயற்சியை செய்கிறேன்.’

அவ்வளவுதான். அதை மட்டும்தான் சொன்னது அந்த சின்னஞ்சிறிய தேன் சிட்டு. ‘ஆனால் நீங்கள்?’ என்று அது கேட்கவில்லை.

அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யாவைச் சேர்ந்த சுற்றுப்புறச் சூழல் போராளி. கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண். விலங்கியல் உடல் கூறு அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். கென்யாவின் கிக்கியு சமுதாயத்தைச் சார்ந்த இவர் மிஷினரி கல்வி நிலையங்களில் வளர்ந்தவர். அவர்களின் அன்பும் ஆதரவும் அவரது பெயரை மேரி ஜோசப்பைன்  என மாற்ற அனுமதித்தன. அவர்கள் அளித்த விவிலியம் அவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாயிற்று. அமெரிக்காவில் அவர் பட்டம் பெறச் சென்றார். ஆனால் திரும்ப வரும் போது அவர் தனது பண்பாட்டு இயற்பெயரான வங்காரி என்பதைக் கொண்டிருந்தார். ஆப்பிரிக்காவின் சுய பண்பாட்டில் ஒரு பெருமிதம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.

அவரது ஆராய்ச்சி வாழ்க்கையில் பெண் என்பதாலும் தன் வேர் அடையாளங்களை துறக்காமல் வாழ துணிந்தவர் என்பதாலும் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. 1977ல் கென்யாவின் தேசியப் பெண்கள் அமைப்பில் அவர் பொறுப்பேற்ற போது ஒரு விஷயத்தை அவதானித்தார். பெண்களின் நல்வாழ்வுக்கு கிராமம் பசுமை அடைய வேண்டும். பசுமையான கிராமம் பெண்களின் பெரும் பேறு. கென்யாவில் ஒரு காலத்தில் 30 விழுக்காடு காடுகள் இருந்தன. பசுமை போர்வை இருந்தது. இன்றைக்கு? இருந்த பசுமைப் போர்வையில் 3 சதவிகிதம் கூட இல்லை. 10 சதவிதமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நாடு நாடாக இருக்கும் என்கிறார்கள் சர்வதேச சுற்றுப்புற ஆர்வலர்கள். என்ன செய்யலாம்?

ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மரத்தை நட வேண்டும். அதை பாதுகாத்து வளர்க்க வேண்டும். அதற்கு ஓர் இயக்கமாக மக்கள் களமிறங்க வேண்டும். இப்படித்தான் பிறந்தது பசுமை வெளிகளை உருவாக்கும் இயக்கம். Green Belt Movement.  ஒரு சமுதாய இயக்கமாக அது வளர வளர சூழலியல் என்பது எப்படி அதிகார பகிர்வுடன் இணைந்தது என்பதை வங்காரி கண்டார். அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம். மக்களுடன் அதிகார பகிர்வு அவசியம்.  போராட்டங்களும் அவசியம். பசுமைக்கான போராட்டம், மக்கள் உரிமைகளுக்கான போராட்டமாக விரிந்தது. வங்காரியின் வார்த்தைகளில் :

பசுமைக்கான விதைகளை விதைக்க ஆரம்பித்தோம். விரைவில் வேறு சில விதைகளையும் நாங்கள் விதைத்தாக வேண்டும் என்பது புரிந்தது. மக்கள் சமுதாயங்களுக்கு சுய அறிதலையும் சுய சார்பையும் ஏற்படுத்த வேண்டிய விதைகளை நாங்கள் விதைக்க வேண்டும். தங்களுடைய சொந்த குரலில் அவர்கள் தங்களுக்கு உரிமையான அதிகாரங்களை பெற வேண்டும்.

வங்காரி மாத்தாயின் போராட்டத்தால் ஏற்பட்ட சமூக அரசியல் சீர்திருத்தங்களை கென்யாவின் இரண்டாம் விடுதலை என்று குறிப்பிடுகிறார் இன்றைய கென்ய அதிபர். வங்காரி மாத்தாயின் போராட்டம் அவருக்குள் உருவாக்கிய மதிப்பீடு மாற்றங்கள் முக்கியமானவை. அதையும் அவரது வார்த்தைகளிலேயே கேட்கலாம்: ‘என்னுடைய அனுபவங்கள் மூலமாகவும் அவதானிப்புகள் வழியாகவும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். எந்த அளவு பூமியை நாம் அழிவுக்கு ஆட்படுத்துகிறோமோ அந்த அளவு அழிவு நமக்கும் ஏற்படுகிறது. களங்கமான நீர், மாசுபடுத்தப்பட்ட காற்று, கடும் உலோக மாசு ஏறிய உணவு, மாசடைந்த மண்… என நம் சூழல் அமையும் போது நம்மை நாமே அழிவுக்கு ஆட்படுத்துகிறோம். நம்மில் உடல் ரீதியாகவும் மனது ரீதியாகவும் நம் ஆன்மாவிலும் காயங்களை உண்டாக்குகிறோம். மாசுபடுவது சூழல் மட்டுமல்ல கீழ்மை அடைவது நாமும்தான். ‘

இதற்கு நேர் மாறானதும் உண்மைதான். எந்த அளவுக்கு பூமி குணமடைய நாம் உதவுகிறோமோ அந்த அளவுக்கு நாம் நமக்கு நாமே உதவுகிறோம். பூமி அதன் வளமிக்க மேல் மண்ணையும், உயிரி பன்மையையும் இழந்து வருந்தும் போது அதை குணப்படுத்த நாம் முனைகிறோமே – அதற்காக மரங்களை நடுகிறோமே அத்தகைய தருணங்களில் – அப்போது இந்த பூமி நம் அகங்களை குணப்படுத்துகிறாள். அந்த அளவுக்கு நாம் ஜீவித்திருப்பதை உறுதி செய்கிறாள்.

சுற்றுப்புற சூழலியலாளர்கள் சுனிதா நாரயண் (Down to Earth) மற்றும் வந்தனா சிவா ஆகியோருடன் வங்காரி தொடர்பிலிருந்தார். உலகம் முழுவதற்குமான பசுமை சார்ந்த மானுட மேம்பாட்டுக்கான தாயின் குரலாக அவரது குரல் ஒலித்தது. காட்டுத் தீயை அணைக்க முயலும் தேன் சிட்டின் குரல் அவருடையது.

கான்சரை எதிர்த்து போராடிய அவர் கடந்த ஞாயிறு அன்று இயற்கை அடைந்தார். அவரது கிக்கியு சமுதாயத்தின் ஆதார ஆன்மிக நம்பிக்கை புனித மரங்கள் விண்ணையும் மண்ணையும் இணைப்பதாக.

0

அரவிந்தன் நீலகண்டன்

 

தொடர்புடைய கட்டுரை:

மரங்களின் தாய்