மதுரை புத்தகக் கண்காட்சி

மதுரைக்காரர்களுக்கு தமுக்கம் என்றாலே கண்காட்சிதான் நினைவுக்கு வரும். சித்திரைக் கண்காட்சி, தொழில் வர்த்தகக் கண்காட்சி என ஆண்டு முழுவதும் ஏதாவது கண்காட்சி நடந்து கொண்டே இருக்கும். பி.ஆர்.பி, அழகிரி போன்ற மதுரையின் பெரிய பெரிய தலைகளின் இல்ல விழாக்கள் இங்கு தான் ஊர் வியக்க நடைபெறும். ராணி மங்கம்மாள் தன் அரண்மனையில் (அதுதான், இன்றைய காந்தி மியூஸியம்) இருந்து யானைகள், குதிரைகள், வீரர்களின் சாகசங்களையும் சண்டைகளையும் வேடிக்கை பார்க்கப் பயன்படுத்திய திடல்தான் தமுக்கம்.

ஆகஸ்ட் 30 அன்று தொங்கிய 7ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவைக் காணச் சென்றிருந்தேன். மாலைப் பொழுது என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. அனுமதியும் பார்க்கிங்கும் இலவசம். உள்ளே நுழைந்தவுடன் வரவேற்றது உணவுக்கடைகள் தாம். வாடிக்கையாக அனைத்து பொருட்காட்சியிலும் உள்ளதைப் போல் பானி பூரி, ஊட்டி மிளகாய் பஜ்ஜி, டெல்லி அப்பளம், செம்மண் படிந்த இருக்கைகள், சற்றும் பொருந்தாத விலை என எதிலும் மாறுதல் இல்லை.

பதிப்பகங்களின் விளம்பரப் பலகைகளையும், ஊடகங்களின் அலங்கார வளைவுகளையும் கடந்து செல்ல, புத்தகக் காட்சி அரங்கம் காட்சியளித்தது. வாயிலில் கண்காட்சியில் பங்குபெரும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையானர்களின் பெயர்களும் கடை எண்களும் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தின் அனைத்து முன்னனி பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் அங்கு கடை விரித்திருந்தனர்.

சிறுவர் நூல்கள், தமிழ் ஆங்கில கதை, கவிதைப் புத்தகங்கள், நாவல்கள், மாணவர்களுக்கான நூல்கள், அறிவுத்தள நூல்கள் என புத்தகக் காட்சி விரிந்தது. இருட்ட இருட்ட கூட்டம் பெருகிக்கொண்டே சென்றது. இதுவும் மதுரையின் வழக்கம் தான். வெயிலைச் சமாளிக்க மக்கள் இரவில் தான் வீட்டைவிட்டு வெளியேறுவர். மதுரையின் களை இரவில் தான் தெரியும்.

கண்காட்சியில் சிறார்களுக்கான பொருட்கள் தான் அதிகம் கவனத்தைக் கவர்வதாக இருந்தது. நூல்கள், சுவர்ப்படங்கள் போக ஒலி-ஒளி சிடிக்கள், ஐ க்யூ பூஸ்டர் போன்றவை குழந்தைகளையும் பெற்றோரையும் வசியம் செய்தன. குழந்தைகளுக்கு ஐ க்யூ சோதனை செய்து தருவதாகக் கூறிய ஒரு கடையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அலைமோதியது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

அடுத்து, மாணவர்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் போட்டி தேர்வுகளை சந்திக்கவிருக்கும் மாணவர்கள். 10, 12ம் வகுப்பு எனத் தொடங்கி ஏ.இ.இ.பி, ஐ.ஐ.டி.ஜே.இ.இ, டி.என்.பி.எஸ்.சி, டி. ஆர்.பி, கேட், சிவில் சர்வீசஸ் என்று புத்தகங்கள் குவிந்திருந்தன.  பல பள்ளிகள் தங்கள் மாணவர்களைக் கூட்டி வந்திருந்தன. அட்லஸ், டிக்‌ஷனரி, வரைபடங்கள், இயர்புக் போன்றவற்றை பள்ளி மாணவர்கள் அதிகம் வாங்கினர். அதேபோல், ஆங்கில நாவல்களை ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் வாங்கி குவித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் வினவிய பின்னர் அந்நூல்கள் படிப்பதற்கு மட்டும் இல்லை என நன்கு புரிந்தது.

10, 12ம் வகுப்பு மாணவர்களைக் குறிவைத்து பல ஸ்மார்ட் க்ளாஸ் பாணியிலான குறுந்தகடுகள் “பார்த்தால் மட்டும் போதும் முழு மதிப்பெண்” எனும் விளம்பரத்துடன் விற்கப்பட்டன.

பொறியியல், மருத்துவம், மேனேஜ்மெண்ட் போன்ற ஸ்டால்களில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பார்க்கக் கூடாதது எதையோ பார்த்துவிட்டதைப் போல், மாணவர்கள் மிரண்டுபோய் நகர்ந்தனர்.

விகடன், கிழக்கு போன்ற பதிப்பகங்களில் வழக்கம் போல் கூட்டம் இருந்தது. விகடனில் மூங்கில் மூச்சு, மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ், கற்றதும் பெற்றதும் போன்றவற்றை வாசகர்கள் விரும்பி வாங்கினர். கிழக்கில் வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம், தொழில் போன்றவற்றுடன் சுஜாதா, ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்றோரின் புனைவுகளும் இடம்பெற்றிருந்தது. வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள், மூன்றாம் உலகப் போர் போன்ற புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த முறை சிக்ஸ்த் சென்ஸ், எதிர் வெளியீடு, உயிர்மைப் பதிப்பகம், நக்கீரன் மற்றும் காலச்சுவடு ஆகியவற்றுக்கு அதிக வரவேற்பு இருந்தது. கோபிநாத்தின் முகத்துடன் இருந்த புத்தகங்கள் சிக்ஸ்த் சென்ஸில் தென்பட்டன. எதிர் வெளியீட்டின் ஆனி ஃப்ராங்கின் டைரிக் குறிப்புகள், ஒற்றை வைக்கோல் புரட்சி, ரெட் சன் போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் சிறப்பாக இருந்தன. மனுஷ்யபுத்திரனின் பொது ஊடக விஜயத்துக்குப் பிறகு உயிர்மை மதுரையில் எழுச்சி கண்டதைப் போல் தெரிகிறது. ஆங்காங்கே பேருந்துகளில் எல்லாம் உயிர்மையின் விளம்பரம் தென்படுகிறது. நாங்கள் சென்ற பொழுது உயிர்மை அரங்கில் முத்துகிருஷ்ணன் இருந்தார். மறுநாள் மனுஷ்யபுத்திரன் வருவதாகத் தெரிவித்தார்.

என்.சி.பி.ஹெச், பாரதி புத்தகாலயம் போன்றவற்றில் இளைஞர்களைக் காண முடிந்தது. பாரதி புத்தகாலயத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுவரொட்டிகளுக்கு வரவேற்பு இருந்தது. இவை தவிர பிற பதிப்பகங்களிலும் சே, லெனின், காஸ்ட்ரோ போன்றவர்களைப் பற்றிய புத்தகங்கள் நிறைய இருந்தன.

இந்த முறை ஆன்மீக அரங்குகள் கலர்கலராக இருந்தன. ஓலை வேயப்பட்ட உள்ளரங்குடன் ஈஷா சுண்டி இழுத்தது. மதுரைக்கு புதுவரவான ‘ரா’வின் Infinitheism அரங்கு மிக நேர்த்தியாக காணப்பட்டது. ராமகிருஷ்ண மடம் விவேகானந்தரை முன்னிறுத்தித் தன் அரங்கை அமைத்திருந்தது. கீதா ப்ரஸ் பத்து ரூபாய்க்கு கீதை அளித்தது. சித்த மருத்துவத்தை மட்டும் முன்வைத்து ஒரு புதிய அரங்கம் முளைத்திருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் விஜய பாரதத்தைக் காண முடிந்தது. பல்வேறு ஆங்கில மற்றும் தமிழ் நூல்களுடன் ரஹ்மத் பதிப்பகம் மற்றும் யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் போன்ற இஸ்லாமிய பதிப்பகங்களும் இந்தமுறை களத்தில் இருந்தன.

பிரபல ஆங்கிலப் புத்தகங்கள் பல ஹிக்கின்போதம்ஸ், சந்த் அண்ட் கோ, சர்வோதைய இலக்கியப் பண்ணை போன்ற விற்பனையாளர்களிடத்தில் கிடைத்தது.

பத்து ரூபாய், இருபது ரூபாய், அதிரடி ஆஃபர் என மலிவு விலையில் புத்தகங்களை விற்கும் பல கடைகள் இருந்தன.

இவற்றின் நடுவே டெலஸ்கோப், ஸ்டெதஸ்கோப் போன்ற அறிவியல் சாதனங்களை விற்கும் கடை ஒன்றில் ஆள் நிற்க முடியாத அளவுக்குக் மக்கள் கூட்டம் முட்டி மோதியது.

மேலும், அனிமேஷன், கட்டவியல் போன்ற துறைகளைச் சார்ந்த தனி ஊடகங்கள் அரங்கில் இருந்தன. ஹிமாச்சல் பிரதேசத்து ஆப்பிள் ஜீஸ் எனக் கூறி ஏதோ ஒன்றை கலக்கி ஒரு கடையில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஒன்பது மணிக்கு சரியாக ஒலிப்பெருக்கியில் “இன்றைய தினம் பொருட்காட்சி முடிகிறது. மீண்டும் நாளைக் காலை சந்திப்போம்” எனக் குரல் ஒலித்தது. கூட்டம் கலையாததால் ஒரு செக்யூரிட்டி வந்து அனைவரையும் விரட்டினார். அடுத்த கால் மணி நேரத்தில் தமுக்கத்தின் முதன்மை வாயில் மூடப்பட்டது. அடித்துப் பிடித்து வெளியேறினோம்.

கடந்த முறையை விட இந்த முறை புத்தகக்காட்சி பல வகையிலும் சிறப்பாக அமைத்திருந்தது. தி ஹிந்து செய்திக்குறிப்பு இங்கே. ஆகஸ்ட் 30 தொடங்கிய மதுரை புத்தகக் கண்காட்சி செப்டெம்பர் 09 அன்று முடிவடைகிறது.

0

பாபா பகுர்தீன்

துதிப்போர்க்கு வல்வினை போம்!

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அய்யன் திருவள்ளுவர் விழாவுக்கு வாழும் வள்ளுவப் பெருந்தகை வந்திருந்தார். ஆனால் அவர் வாய்திறந்து குறளோவியத்தை அள்ளித் தெளிப்பதற்குள் நான் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். அப்போது தன்னை ‘வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி கடிந்துகொண்டதாகக் கேள்வி.

மிக்க நல்லது.

ஆனால் கலாசார மாற்றம் அப்படியெல்லாம் ஓரிரவில் நடந்துவிடக்கூடியதா என்ன? கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் நடந்திருப்பது என்ன? மேடைகளில் நடப்பது சாதாரணப் புகழ்ச்சியா என்ன? காதுகள் இரண்டும் வலிக்க வலிக்க, கதற்கக் கதற நிகழ்த்தப்படும் வன்புகழ்ச்சி. அப்படி காது குளிரப் புகழ்ந்தால் நமக்கும் நாலு நல்லது நடக்கும் என்று நம்பத்தொடங்கும் காக்கைகள் கா கா என்று கரைவது இயல்பே. இதன் விளைவாக மேடையில் ஏற்றப்படும் நிஜமான அறிஞர்கள்மீது சுமத்தப்படும் அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களும் புகழ்ந்து தள்ளவேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகிவிடுமோ என்ற பயம்.

இதில் சொந்தத் தொலைக்காட்சிகள் செய்யும் ஆபாசம் கொஞ்சநஞ்சமல்ல. கலைஞரின் உடலில் அதிகப் புண்ணியம் செய்திருப்பது இடதுகைக் கட்டைவிரலா, வலதுகால் சுண்டுவிரலா என்று பட்டிமன்றம் நடத்திக் கொஞ்சுவது அதில் தலையாய ஒன்று. இந்தக் கூத்தில் சொந்தக் கட்சிக்காரர்கள் தாண்டி தோழமைக் கட்சிக்காரர்களும் சேர்ந்துகொள்வார்கள்.

சரி போகட்டும். கருணாநிதியே சொல்லிவிட்டாரே, இன்று முதலாவது இந்த வாழும் வள்ளுவமே, காவியமே, கற்பகமே எல்லாம் அடங்கிப்போய்விடும் என்று பார்த்தால் அது எப்படி?

சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள் அன்று நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, பொது நூலக இயக்குனர் அறிவொளி, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மேயர் சுப்பிரமணியனும் கயல் தினகரனும் கட்சிக்காரர்களுக்கே உரித்த தன்மையோடு கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளினர்.

கயல் தினகரன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவலைச் சொன்னார். ஜெயலலிதா ஆட்சியில், நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மதன் எழுதிய ‘வந்தார்கள்… வென்றார்கள்…’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாராம். மற்றபடி தமிழகத்திலேயே அண்ணாதுரைக்கு அடுத்து கருணாநிதிதான் படிப்பில் சிறந்து விளங்கும் முதல்வராம். (ஆக, முதல் இரு இடங்கள் உறுதியாகிவிட்டன. ராஜாஜி முதல் பிறர் மூன்றாவது இடத்துக்கு வேண்டுமென்றால் போட்டி போட்டுக்கொள்ளலாம்.)

இப்படித் தொடர்ந்த பேச்சைத் தாங்கமுடியாது, நேராக ‘கலைஞர் செய்திகள்’ சானலில் ‘ஒரு மணியில் ஒரு நாள்’ நேரலை நிகழ்ச்சியில் கிரிக்கெட் பற்றி உரையாடச் சென்றுவிட்டேன்.

மேயர் சுப்பிரமணியன் சொன்னதில் ஒரு உருப்படியான விஷயம். சொத்து வரிமீது வசூலிக்கப்படும் மீவரி (நூலகத்துக்குச் செல்லவேண்டியது) சுமார் 40 கோடி சென்னை மாநகராட்சி தரவேண்டியது இன்னும் நிலுவையில் உள்ளது என்று அறிவொளி கூறியிருந்தார். அதனை உடனடியாகத் தருவதோடு, இனி ஒவ்வோர் ஆண்டும் இந்த நிலை ஏற்படாது உடனடியாகத் தந்துவிடுவதாக வாக்களித்துள்ளார் மேயர். இதனை குடிமக்களாகிய நாம்தான் கண்காணிக்கவேண்டும்.

*

இன்று இறுதி நாள் ஆனதால், நடைபாதைக் கடைகளைப் பார்வையிட்டேன். இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது. முதலில் ஒரு கடையில் பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களாக அழகாக அடுக்கிவைத்திருந்தார் கடைக்காரர். அவரைப் பார்த்தால் படித்த நபராகத் தெரியவில்லை. குத்துக்காலிட்டு பீடி பிடித்தபடி இருந்தார். ஆனால் அவ்வளவு சரியாக அவர் புத்தகங்களை அடுக்கியிருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது. எப்படி அவருக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன என்று விசாரித்தேன். தெளிவான பதில் கிடைக்கவில்லை.

பைரேட் செய்யப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. ராமச்சந்திர குஹாவின் இந்தியா ஆஃப்டர் காந்தி, அமர்த்தியா சென்னின் தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ், நந்தன் நீலகெனி, நாராயண மூர்த்தி என்று எக்கச்சக்கமான புத்தகங்கள் இப்படி. இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பிற அனைவரும் பழைய புத்தகங்களை 20 ரூ, 30 ரூ, 50 ரூ என்று கூவி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒருசிலவே மாணிக்கங்கள், மீதம் உபயோகமற்றவை. உட்கார்ந்து தேடினால் மட்டுமே நல்லவை கிடைக்கும். நான் ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டேன். காவ்யாவின் பல புத்தகங்கள் கிடைத்தன. ஒரியண்ட் பிளாக்ஸ்வான் முன்னொரு காலத்தில் போட்ட தமிழ்ப் புத்தகங்கள் சில கருக்கழியாமல் கிட்டத்தட்டப் புதிதாகக் கிடைத்தன.

*

இந்தப் புத்தகக் கண்காட்சியின் சிறந்த இரண்டு நாள்கள் முதல் வார இறுதிதான். அதாவது 8, 9 ஜனவரி 2011. அந்த நாளில்தான் பெரும்பாலும் அனைத்துக் கடைக்காரர்களும் தங்கள் சிறந்த விற்பனையைப் பார்த்திருப்பார்கள். பொதுவாக இரண்டாவது சனி, ஞாயிறுதான் எல்லாப் புத்தகக் கண்காட்சிகளிலும் சிறப்பானவையாக இருக்கும். இம்முறை பொங்கல் காரணமாக அது தடைப்பட்டுள்ளது என்பதே என் கருத்து.

*

ஒரு முக்கியமான பரிசோதனையை இந்த ஆண்டு பபாஸி செய்து பார்க்கவேண்டும். ஆறு மாதம் கழித்து ஜூன், ஜூலை மாதவாக்கில், நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டரில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தவேண்டும். ஒரேயடியாக ஜனவரி கண்காட்சியை அங்கே எடுத்துக்கொண்டு போகவேண்டியதில்லை. ஆண்டுக்கு இரு புத்தகக் காட்சிகளை சென்னையில் எளிதாகச் செய்யலாம். தென் சென்னை ஆசாமிகள் வருவதற்கு எளிதாக இருக்கும்.

இதனை இம்முறை வலியுறுத்திப் பேசப்போகிறேன். வேறு சிலருக்கும் இதேபோன்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது.

*

ஹரன்பிரசன்னா சொன்னதுபோல, ஒவ்வொரு தினமும் விடாது எழுதுவது, அதுவும் இரவில் நெடுநேரம் விழித்திருந்து செய்வது அசதியாக உள்ளது. ஆனால் எடுத்துக்கொண்டுவிட்டோமே என்றுதான் ஓட்டினேன். படித்திருக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றியிருக்கும். இன்றுடன் நிறைவுபெறுகிறது இந்தத் தொல்லை. இனி, பிற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

நன்றி.

விருது கோட்டம்

திருவள்ளுவர் தினமான இன்று தமிழக அரசு பல விருதுகளை வழங்குவதை சில ஆண்டுகளாகவே நடத்திவந்துள்ளது. அய்யன் திருவள்ளுவர் விருது 1986-ம் ஆண்டு முதலே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. சென்ற ஆண்டு இந்த விருதைப் பெற்றவர் ஐராவதம் மகாதேவன். இந்த ஆண்டு, 2011-ல் விருதைப் பெற்றவர் முனைவர் பா. வளன் அரசு. கடந்த சில ஆண்டுகளில் திருவள்ளுவர் விருது என்பதுடன் மேலும் பல விருதுகளை தமிழக முதல்வர் கருணாநிதி சேர்த்துக்கொண்டார். அவை முறையே பெரியார் விருது, அண்ணா விருது, அம்பேத்கர் விருது, காமராசர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை. இவை அனைத்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் + தங்கப் பதக்கங்களுடன்.

இந்த விருதுகளை வழங்கும் விழா வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. நியாயமாக சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்கவேண்டிய நான் இங்கு செல்லவேண்டியதாயிற்று. மேற்படி விருதுகளைத் தவிர, கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது (இரு ஆண்டுகளுக்குச் சேர்த்து), சிறந்த நூல் என்று 24 நூல்களுக்கான விருதுகள் அவற்றின் ஆசிரியர்களுக்கும் பதிப்பகங்களுக்குமாக. ஆசிரியர்களுக்கு தலா ரூ. 20,000 + சான்றிதழ். பதிப்பகங்களுக்கு தலா ரூ. 5,000 + சான்றிதழ்.

கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் இரண்டு புத்தகங்களுக்குப் பரிசு கிடைத்திருந்தன. கூடவே கணியன் பூங்குன்றன் பரிசு, 2009-ம் ஆண்டுக்கானது என்.எச்.எம் ரைட்டர் மென்பொருளுக்காகக் கிடைத்திருந்தது. இது ஒரு லட்சம் ரூபாய் + சான்றிதழ்.

விழாவில் எங்கள் நிறுவனம் சார்பில் எடிட்டோரியலின் ஆர். முத்துக்குமார் பதிப்பகத்துக்கான பரிசைப் பெற மேடையேறினார். நாகராஜன் கணியன் பூங்குன்றனார் விருதைப் பெறச் சென்றார். (அனைத்தையும் வீடியோவில் காணலாம்.)

முதல்வர் கருணாநிதி, உட்கார்ந்த நிலையிலேயே முதல் சில விருதுகளுக்கு மட்டும் கழுத்தில் தங்கப் பதக்கம் அணிவித்தார். பிறகு விருது கொடுக்கும் வேலை பேராசிரியர் அன்பழகனுக்குச் சென்றது. இதில் சிலர் ஒருவேளை வருத்தமும் அடைந்திருக்கலாம்.

ஏற்புரைகள் எல்லாம் முடிந்தது, நான் வீடு சென்று உணவு முடித்து, புத்தகக் கண்காட்சி அரங்குக்குச் செல்லும்போது மணி 8.00.

அங்கே தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சின் இறுதிச் சில நிமிடங்களையும் நீங்கள் வீடியோவில் பார்க்கலாம். பாரதி பாஸ்கர் அதற்கு முன்னதாகவே பேசி முடித்திருந்தார்.

*

இன்று சிறப்பான சம்பவம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. நேற்றைக்கும் இன்றைக்குமான கூட்டம் நிச்சயமாக சென்ற வார இறுதிக் கூட்டத்துடன் ஒப்பிட்டால் குறைவுதான் என்று தோன்றியது. இது ஒருவிதத்தில் ஆச்சரியமே. பொதுவாக, இரண்டாம் வார இறுதியில்தான் கூட்டம் மொய்த்துத் தள்ளும். அது இம்முறை நடக்கவில்லை. நாளை இறுதி நாள், திங்கள் கிழமை.

ரோஸாவசந்த் கண்ணில் பட்டார். அஇஅதிமுகவின் பழ. கருப்பையாவிடம் நேற்றும் இன்றும் பேசினேன். விஜய் டிவி நடிப்பில் பாதி நேரத்துக்கு மேல் போய்விடுகிறது என்றார். நிறைய எழுதவேண்டும் என்றும் சில புத்தகங்களைத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். எப்போதும்போல விமலாதித்த மாமல்லன் காணப்பட்டார். பிரமிளின் ‘ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை’ பற்றிச் சொன்னார். பரிசலில் பிரதிகள் தீர்ந்துவிட்டது என்றார். தன் தளத்தில் அதன் பி.டி.எஃப் கோப்பை இட்டிருப்பதாகச் சொன்னார்.

*

ஸ்டால்கள் அனைத்துக்கும் வேறொரு சிக்கல் நாளைக்கு உள்ளது. நாளை இரவே கடைகளைக் காலி செய்ய ஆரம்பிக்கவேண்டுமாம். செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்குள் காலியாகவேண்டும் என்கிறார்கள். ஏனெனில் பள்ளிக்கூடம் திறக்கப்போகிறதாம். மாணவர்கள் வந்துவிடுவார்கள். அவர்களுக்குத் தொல்லை தராமல் இந்த நிகழ்வு நடக்கவேண்டும். எனக்கு என்னவோ, இது சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கடையினரும் கொண்டுவந்திருக்கும் புத்தகங்களைக் கட்டி எடுத்துப்போவது எளிதான காரியமல்ல.

இன்று ஒரே ஒரு புத்தகம் என் மகளுக்காக வாங்கினேன். அறிவியல் பரிசோதனைகள் பற்றிய அழகான புத்தகம் (ஆங்கிலத்தில்).

நாளை சற்றே விரிவான கட்டுரையுடன் தொடர்புகொள்கிறேன்.

இசையால் என்னைக் கொல்லாதே!

பொங்கல் பொங்கி, வயிறு நிறைய உண்டு, வந்த தூக்கத்தை விரட்டி மதியம் புத்தகக் கண்காட்சி அரங்கத்துக்குச் சென்றேன். தெருவில் அதிகப் போக்குவரத்து நடமாட்டம் இல்லை; ஆனால் கண்காட்சி வளாகத்தில் ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது. பிறரும் உண்ட களைப்பை மறைந்து புத்தகம் வாங்க வந்திருந்தனர்.

இரண்டு மணி நேரம் புத்தக வாசகர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களது விருப்பங்கள் சுவாரசியமானவை. அவர்கள் கேட்கும் புத்தகங்கள் பொதுவாக நம்மிடம் இருப்பதில்லை. அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யச் செய்ய, அவர்களது தேவைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அது ஒருவிதத்தில் நல்ல விஷயம்தான்.

சுமார் 3.00 மணிக்குக் கிளம்பி குரோம்பேட்டை செல்லவேண்டியிருந்தது. சேத்துப்பட்டிலிருந்து ரயிலில் சென்றால் வசதி. அங்கே எம்.ஐ.டி வளாகத்தில் விக்கிபீடியா 10-ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. தேனி சுப்பிரமணியன் (முத்துக்கமலம் தளத்தை நடத்துபவர்) எழுதியுள்ள, மெய்யப்பன் பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘தமிழ் விக்கிப்பீடியா’ என்ற புத்தகத்தை வெளியிட்டு நான் பேசுவதான நிகழ்ச்சி. புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்பவர் பத்திரிகையாளர் சுகதேவ். தினமணியில் வேலை பார்த்தவர். பின் அமெரிக்க தூதரகத்தில் ஆலோசனையாளராக இருந்தவர். இப்போது எங்கிருக்கிறார் என்று கேட்டுக்கொள்ள மறந்துவிட்டேன்.

நிகழ்ச்சி இனிமையான அனுபவமாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் ஸ்கைப் மூலம் சேர்ந்துகொண்டார். இந்திய விக்கிபீடியர்கள் சிலர் சென்னையில் கூடிக் கொண்டாடுவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் மலையாளம் விக்கிபீடியர்கள், பெங்காலி விக்கிபீடியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். புத்தக வெளியீட்டையும், என் பேச்சையும், ஜிம்மி வேல்ஸின் பேச்சையும் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

எம்.ஐ.டியில் பல இளைஞர்களுடன் பேசமுடிந்தது. தங்கள் கல்லூரிகளுக்கு வந்து மானவர்களிடம் பேசுமாறு இரண்டு கல்லூரிகளின் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். ஒரு இணையத்தள தொழில் மாதிரியைத் தொடங்க விரும்பும் இரு மாணவர்கள் என்னிடம் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து விடை பெற்றுக்கொண்டு மீண்டும் சேத்துப்பட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

*

மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தேன். இப்போது கூட்டம் கணிசமாகச் சேர்ந்திருந்தது. புதுமையாக இசையுடன் கூடிய பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்தது. இந்த ஃபார்மட்டே கொஞ்சம் புதிதாக இருந்தது.

இன்றும் புத்தகக் கண்காட்சி முடிந்து, மக்கள் வெளியேறிய பிறகும், வாசலில் கூட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது. எனக்குச் சொல்லப்பட்டது, கூட்டம் எப்படியும் 8 மணிக்குள் முடிந்துவிடும்; அதன்பின் கடைகளுக்குச் சென்று புத்தகங்கள் வாங்க மக்களுக்கு அவகாசம் இருக்கும் என்றுதான். ஆனால், வாசலிலேயே மக்களை நிறுத்தி, நிகழ்ச்சியைத் தொடர்ந்து 9 மணிக்கு மேலும் தொடர்ந்து நடத்துவது நியாயமல்ல என்றே தோன்றுகிறது. இது ஒரு நிறுவனம் சார்ந்த பிரச்னை இல்லை. நான் பேசிய பல கடைக்காரர்களும் இதையே சொன்னார்கள்.

*

இகாரஸ் பிரகாஷ், நாராயண் ஆகியோர் கண்ணில் பட்டனர். விமலாதித்த மாமல்லன் வழக்கம்போலவே கண்ணில் பட்டார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். தமிழ் இலக்கியத்தை ஒரு வழி ஆக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். இன்று பேசியதும் சென்சார்ட்!

*

வரலாறு மீதான ஆர்வம் மக்களுக்கு அதீதமாக இருக்கிறது. பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, இந்தியாவின் பண்டைய மன்னர்கள் வரலாறு என்று மாறி மாறிக் கேட்கிறார்கள். அகடமிக் வரலாற்றாசிரியர்கள் எல்லாம் காலேஜ் நோட்ஸுகளைப் போடுவதற்கு பதில், இதில் கவனத்தைச் செலுத்தினால் நன்றாக இருக்கும். வரும் ஆண்டை வரலாறு ஆண்டாக கிழக்கு கொண்டாடக்கூடும்.

*

இன்றைய தினமணியைக் கட்டாயம் பாருங்கள்.

பட்டி… மன்றம்…

பொங்கல் அன்று கரும்பு இனிக்குமா, கசக்குமா என்று தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நிகழ்த்தினால், இரு பக்கமும் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் பேச ஆட்கள் இருப்பார்கள். இன்று புத்தகக் கண்காட்சியில் சுகி சிவம் தலைமையில் ஊடகங்கள் நன்மையா, தீமையா என்று பட்டிமன்றம் நிகழ்த்தப்பட்டது.

கரும்பு கசக்கும் என்றுகூடப் பேசக்கூடியவர்கள், இதுபோன்று தலைப்பு வந்தால் பின்னிப் பெடல் எடுத்துவிடுவார்கள். சிதம்பரத்தில் நடந்த ஒரு பட்டிமன்றத்தைப் பற்றி முன்னம் நான் எழுதியிருக்கிறேன். ஆனால் அந்த மாதிரி ஒட்டுமொத்தமான கேலிக்கூத்தாக இது இருக்கவில்லை. ஒரு சாராருக்குமே தெரியும், இந்த மாதிரி கருப்பு-வெள்ளை விளையாட்டு இல்லை இது என்று. ஆனாலும் எப்படி சினிமாவில் ஒல்லிப்பிச்சான் நடிகர் சுனாமியில் சும்மிங் செய்து பத்து தடிகுண்டு வில்லன்களை அலேக்காகத் தூக்கிப்போட்டு விளையாடுவதுபோல, இங்கும் அவரவர் எடுத்துக்கொண்ட பாத்திரங்களில் கச்சிதமாக நடித்துமுடித்தனர்.

ஆனாலும்… பர்வீன் சுல்தானா பேசும்போது மனத்தில் இருந்து ஆத்மார்த்தமாகப் பேசியதுபோல இருந்தது. தொலைக்காட்சி சானல்களும் இணையத்தளங்களும் ஒரு தாயாக அவருக்கு எத்தனை பதைபதைப்பைத் தருகிறது என்பதை – அது வெறுமனே பட்டிமன்றத்துக்கான தயாரிப்பாக இல்லை என்னும் பட்சத்தில் – மதிக்க முடிந்தது.

ஆனால் பெரும்பாலும் இந்த விவாதங்கள் கூர்மையற்று, கைத்தட்டலை எதிர்பார்க்கும் நிலையில்தான் இருந்தன. பட்டிமன்றங்களால் அறிவைத் தூண்டி, ஆழமாக சிந்திக்க வைக்க முடியும் என்று நான் நம்பவில்லை. எழுத்தால் மட்டுமே அது முடியும். அதுவும் ஆரவாரமில்லாத, அமைதியான எழுத்தால்தான். ஆயினும் பட்டிமன்றத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம். பின்பற்றுவதும் எளிது. அதில் நாலு பேர் சிந்தையில் நச் என்று ஏதேனும் நல்ல கருத்து புகுந்தால் நல்லதுதானே?

சுவாரசியமான விஷயம், ஊடகங்களை – அதுவும் குமுதத்தை – இவர்கள் ஒரு வாங்கு வாங்கும்போது மேடையில் உட்கார்ந்திருந்தவர் குமுதத்தின் ஜவகர் பழனியப்பன். அவர் நெளிந்தாரா இல்லை கண்டுகொள்ளவில்லையா என்று என்னால் சொல்லமுடியவில்லை. முன் வரிசையில் குமுதம் ஜோதிடத்தின் ஏ.ஆர். ராஜகோபாலன், லேனா தமிழ்வாணன், ஜவகரின் தாய் (ஆச்சி) ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.

இறுதியில் சுகி சிவம், எல்லா பட்டிமன்ற நடுவர்களும் செய்வதைப் போல, ஆளுக்குப் பாதி என்ற வழியில்தான் சென்றுகொண்டிருந்தார். ஒரு கட்டத்துக்குமேல் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். பட்டிமன்றத்தில் சில பகுதிகளைக் கீழே காணலாம்.

பட்டிமன்றம் மக்களைக் கட்டிப்போட்டதால் அரங்கில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. ஹரன்பிரசன்னா பொங்கிப் பொங்கி விசனித்துக்கொண்டிருந்தார். இட்லிவடை கட்டுரையில் இதுபற்றிய காரசாரமான தாக்குதலை எதிர்பார்க்கலாம்.

வாசல் நிகழ்ச்சிகளால் புத்தகக் கண்காட்சி வருமானம் பாதிக்கப்படுகிறதா அல்லது அதிகரிக்கிறதா என்று ஒரு பட்டிமன்றம் நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

*

விமலாதித்த மாமல்லன், ஜெயமோகனின் சில கதைகளை எடுத்துக்கொண்டு வரி வரியாக ஆழமாக அலசிக்கொண்டிருந்தார். ஹரன்பிரசன்னா நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘என்ன சொன்னாலும் ரப்பர் அதி அற்புதமான நாவல்’ என்று முடித்தார். இதற்குமேல் அந்த உரையாடலில் இருந்து நான் எந்த பிட்டையும் எடுத்துப் போட்டால் அது நியாயமாகாது.

ஒரு நல்ல எடிட்டர் இருந்தால் ஒரு தேர்ந்த எழுத்தாளன் செய்யும் சிறு சிறு குறைகளைக் களைந்துவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால் சினிமாவில் செய்வதுபோல எழுத்தில் முடியாது. சினிமாவில்தான் ஏகப்பட்ட ஃபில்ம் சுருள்களைக் கையில் வைத்துக்கொண்டு, அங்கும் இங்குமாக ஒட்டுப்போட்டு டப்பிங் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தேர்ந்த எடிட்டர்கள் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியெல்லாம் புனைவெழுத்தில் சாத்தியமே இல்லை என்று தோன்றுகிறது. மேலும் செலவு அதிகமில்லை (எழுத்தாளரின் ஈகோவைத்தவிர) என்னும் காரணத்தால், கதையைத் திருப்பிக்கொடுத்துவிடுதலே உத்தமம். ஃபிலிஸ்டைன் என்ற கெட்ட பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம். பாதகமில்லை.

*

சென்னை புத்தகக் கண்காட்சியில் சிடி விற்பவர்கள் அபாக்கியவான்கள். பபாஸியின் படிநிலைப்படி, உறுப்பினர், உறுப்பினரல்லாதார் என்ற பிரிவினையைத் தவிர, தமிழ், ஆங்கிலம், மல்ட்டிமீடியா என்ற மூன்று வகைகளும் உள்ளன. ஆக, நீங்கள் ஆறில் ஒருவராக இருக்கலாம். உறுப்பினரல்லாத மல்ட்டிமீடியா நிறுவனம் என்றால் நீங்கள் எக்கச்சக்கமாகப் பணம் தரவேண்டியிருக்கும். ஆனால் உங்கள் விற்பனை என்னவோ அவ்வளவு இருப்பதில்லை.

இது ஒரு பயங்கர டிஸ்கிரிமினேஷன். எங்கள் கடைக்கு எதிரில் டவ் மல்ட்டிமீடியா ஸ்டால் உள்ளது. அவர்கள் விற்கும் பொருள்களின் விலை ரூ. 100-க்குக் கீழ்தான். டிவிடி என்றால் ரூ. 149 இருக்கும். ஆனால் தலையணை போன்ற புத்தகங்கள் (எங்கள் ஸ்டாலில் 900 ரூபாய் புத்தகம் ஒன்று உள்ளது) 200, 300, 400, 500 என்றெல்லாம் போகின்றன. கூட்டம் என்று பார்த்தாலும் பொதுவாக அச்சுப் புத்தகக் கடைகளுக்குத்தான் கூட்டமே. எதற்காக மல்ட்டிமீடியா கடைகளுக்கு அதிக வாடகை வசூலிக்கவேண்டும்? அவர்களும் அம்மா இங்கே வா வா என்று தமிழ்ச் சேவைதானே பிழிந்துகொண்டிருக்கிறார்கள்?

இதேபோல ஆங்கிலப் புத்தகக் கடைகளுக்கும் அதிக வாடகை. இதற்கான காரணமும் ஏற்புடையதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியினரும் சேர்ந்துதான் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். எந்தக் கட்டத்தில் இப்படி கட்டணம் அதிகமாவதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்று புரியவில்லை. அவர்கள் எதிர்ப்பே செய்யவில்லையா? அடுத்த ஆண்டிறுதிப் பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைக்கலாம் என்று இருக்கிறேன். உறுப்பினர், உறுப்பினரல்லாதார் என்ற இரு பிரிவுகள் இருந்தாலே போதும்.

*

இன்னும் மூன்று நாள்கள்தான். எனவே நாளை முதற்கொண்டு கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வாரீர். புத்தகங்களை அள்ளி எடுத்துச் செல்வீர்.

சூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க!

முன்பெல்லாம் புத்தகக் கண்காட்சியில் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, அவ்வப்போது வாசலில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து இரண்டு நிமிடம் படம் பிடித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிடுவேன். இப்போதோ தினமும் நிகழ்ச்சி நடக்கும் புதிய தலைமுறை அரங்குக்குப் போய்விடுகிறேன்.

இன்று சிறப்பு விருந்தினர்கள் எங்கள் ஸ்டார் எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், தமிழின் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவரான பிரபஞ்சன், கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்.

சோம. வள்ளியப்பன் மனிதவளத்துறை நிபுணர். பல பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவளத் துறையில் பணியாற்றியவர். இப்போதும் அதே துறையில்தான் இருக்கிறார். அவருக்கு வேறு இரு முகங்கள் உண்டு. சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதுதல்; தன்னம்பிக்கை தொடர்பான பயிலரங்குகள் நடத்துதல்; பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று மானவர்களிடம் பேசுதல் என்பது ஒரு முகம். மற்றொன்று பங்குச்சந்தை தொடர்பான புத்தகங்கள் எழுதுதல்; பங்குச்சந்தை பயிற்சிகளை நடத்துதல். கிழக்கு பதிப்பகம் வாயிலாக அவர் பங்குச்சந்தை தொடர்பாக, அள்ள அள்ளப் பணம் என்ற தொடர்வரிசையில் 5 நூல்களை எழுதியுள்ளார். இப்போதும் விற்பனையில் சாதனை படைத்துவரும் நூல்கள் அவை.

இவை தவிர, அவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். பல கதைகளையும் எழுதியுள்ளார். பொதுவான கட்டுரைகளை தினமணி போன்ற பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.

தன் இயல்பான மொழிவளத்துடன் மனித மனம் பற்றி, அது கவலைப்படுவது பற்றி, அதிலிருந்து மீள்வது பற்றிப் பேசினார்.

அடுத்து பேசியவர் பிரபஞ்சன். தான் ஒரு கதைசொல்லி என்று அறிமுகம் செய்துகொண்டு வரிசையாகக் கதைகளாகவே சொன்னார். இவரது பேச்சை முழுமையாகவே பிடித்துள்ளேன். பார்த்துக்கொள்ளுங்கள். புதிய சில கதைகளை அருமையாகச் சொன்னார்.

பிரபஞ்சனின் பேச்சு, முழுமையாக

இறுதியாகப் பேசிய சிற்பி பாலசுப்ரமணியன், அதிகம் அறியப்படாத, ஆனால் முக்கியமான தமிழ்க் கவிஞர்களைத் தொட்டு, கவிதைகள் அடைந்துள்ள மாற்றங்களைப் பற்றிப் பேசினார்.

இன்றைய நிகழ்ச்சிகளின் சுருக்கமான தொகுப்பு:

*

அரங்கில் நுழைந்து நேராக நான் சென்றது தமிழினி ஸ்டாலுக்கு. வசந்தகுமாரிடம் சிறிது நேரம் பேசினேன். சூடிய பூ சூடற்க மற்றும் பொதுவாக நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் எப்படி விற்கின்றன என்று கேட்டேன். நன்றாக விற்கின்றன என்றார். சூடிய பூ சூடற்க மொத்தம் 3,000 பிரதிகள் புதிதாக அடித்தாராம். இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே முழுவதும் விற்றுவிடும் என்று தெரிகிறது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரின் புத்தகங்களை மக்கள் கேட்டு வாங்கிச்செல்வது மகிழ்ச்சியைத் தருகிறது என்றேன். அப்படி ஒன்றுமில்லை; நாஞ்சில் நாடன் என்பதால்தான் இது என்றார். நாஞ்சில் பற்றி பல பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேட்டிகள் வந்தன; ஆனந்த விகடனில் எழுதுகிறார்; மேலும் அவருக்கு யாருடனும் சண்டை இல்லை; எனவே அவரை அனைவருமே பாராட்டியுள்ளனர் என்றார்.

பிற சாகித்ய அகாதெமி விருதுகளைப் பொருத்தமட்டில், ஒன்று அது தரமானவர்களுக்குப் போய்ச் சேருவதில்லை; அல்லது தரமுள்ள ஆளாக இருந்தால் அவருக்கோ பலருடன் சண்டையிருக்கும் என்பதால் அவர் பற்றிய செய்திகள் சரியாக வெளிவராது என்றார். உண்மைதான்.

எந்த விதத்தில் பார்த்தாலும், இம்முறை சாகித்ய அகாதெமி விருது, வணிகரீதியிலும் உதவியுள்ளது; பலரை, அவரது புத்தகத்தைத் தேடிவந்து வாங்கச் செய்துள்ளது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதே நிலை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நம்புவோம்.

தமிழினி ஸ்டாலில் தினமணி கதிர் ஆசிரியர் சிவகுமார், இசை விமரிசக விடிவெள்ளி லலிதா ராம் ஆகியோரைச் சந்தித்தேன். சிவகுமாரிடம் 25,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன என்றார் வசந்தகுமார். ஆனால், அந்தப் புத்தகங்களை அவர் எப்படிக் காப்பாற்றி யாருக்குத் தரப்போகிறார் என்பது பற்றிய கேள்வி எழுந்தது. பொதுவாகவே புத்தகங்களைப் பொத்திப் பொத்திச் சேகரித்து, காப்பாற்றி, பத்திரமாக வைத்திருப்பவர்களின் வாரிசுகள் புத்தகங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை; அவற்றைக் குப்பைகளாகவே பார்க்கிறார்கள். இது நிஜமாக நடப்பது. என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். மிகச் சோகமான நிகழ்வு இது. அதுபற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

வசந்தகுமாரிடம் ஃபீடில் பற்றியும் அவரது மாத இதழ் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். சிற்றிதழ்களுக்கான மின்னிதழ் சப்ஸ்கிரிப்ஷன் விற்பது பற்றிப் பேசினோம். ஏன் இலவசமாகவே தந்துவிடக்கூடாது என்று வசந்தகுமார் கேட்டார். இலவசமாகத் தரலாமா கூடாதா என்பதை முடிவு செய்யவேண்டியது இதழ் உருவாக்குனர்தான்; ஆனால் சிறு தொகை வசூலிப்பதில் தவறில்லை என்றேன். இந்த முயற்சி சரியாக வேலை செய்தால், தமிழின் சிற்றிதழ்களை முழுமையான சப்ஸ்க்ரிப்ஷனில் ஃபீடில் மூலம் தரலாம் என்றிருக்கிறோம்.

புத்தகங்களை ஃபீடில் மூலமாக விற்பது பற்றிப் பேச்சு வந்தது. என்ன விலைக்கு விற்கலாம், பல நூறு பக்கங்கள் கொண்ட புத்தகங்களைக் கணினியில் படிப்பார்களா ஆகியவை பற்றியும் பேச்சு வந்தது. ஃபீடில் எப்படிப் பல இயக்குதளங்களை நோக்கிச் செல்லும் என்பது பற்றி விளக்கினேன். அடுத்து ஆண்டிராய்ட், ஐஃபோன் போன்றவற்றை நோக்கிச் செல்ல இருப்பதையும், படிப்பான் கைக்கருவிகளில் வேலை செய்ய என்ன செய்யவேண்டும் என்பதையும் சொன்னேன். இங்கு வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது.

*

கிழக்கு வாசலில் ஞாநியும் பிரசன்னாவும் பேசிக்கொண்டிருந்தனர். ஸ்பெக்ட்ரம் பற்றி இல்லை. தன் ஸ்டாலில் அவர் தினமும் நடத்திவரும் கருத்துக் கணிப்பைப் பற்றிச் சொன்ன ஞாநி, முந்தைய நாள் கேள்வியைச் சொன்னார். கருணாநிதியின் வாரிசு யார் என்பதுதான் கேள்வி. 70% பேர் ஸ்டாலினையும், 14% பேர் தயாநிதி மாறனையும், தலா 8% பேர் கனிமொழியையும் அழகிரியையும் குறிப்பிட்டிருந்தார்களாம். இதனால்தான் மதுரையே பற்றி எரிந்தது என்றார் அருகில் இருந்த நண்பர். ஆனால் மக்கள் மனத்தில் உள்ள கருத்து இதுதான் என்றால் யாரைக் கொளுத்தி என்ன பயன்?

சொற்களைத் தெறிக்கும் ஏ.கே.47

இன்று புத்தகக் கண்காட்சியில் நுழையும்போதே நேராகச் சென்றது விழா மேடைக்குத்தான். மேடையில் தலைவர் ரவி தமிழ்வாணன் வீற்றிருந்தார். அருகிலேயே கவிதா சொக்கலிங்கமும் அமர்ந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தவர் சுயமுன்னேற்ற எழுத்தாளர் மெர்வின். வழுக்கைத்தலையும் அடர் மீசையுமாக இவரது புத்தகங்களில் நீங்காது காட்சியளிப்பவர். அவரது பேச்சின் இறுதியில்தான் நான் போய்ச் சேர்ந்தேன். ‘இல்லை’ என்ற சொல்லை விரட்டு; தோல்வி மனப்பான்மை வேண்டாம்; சாதனை செய் போன்ற போதனைகளை அளித்துக்கொண்டிருந்தார். எதிரே அமர்ந்திருந்த மக்களைத் தூண்டி பதில்களையும் வரவழைத்தார்.

அடுத்து கறுப்பு ஜிப்பாவில் தலைக்குப் பனிக்குல்லாய் அணிந்திருந்தவர் யார் என்று நிகழ்ச்சி நடத்துனர் சொன்னதும் என் பல்ஸ் எகிறியது. அரங்கில் இவர் தனக்கென தனி ஸ்டால் வைத்திருப்பவர். கவிஞர். என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருந்தேன். அடுக்குமொழியில் அதிர வைத்துவிட்டார் கவிஞர் ஜோ மல்லூரி. வானம் பொத்து ஆலங்கட்டிகளை அள்ளித் தெறித்தாற்போல, பூமி பிளந்து கோலிக்குண்டுகளை உருளவிட்டாற்போல, ஏ.கே.47 அதிர்ந்து அதிர்ந்து சொற்தோட்டாக்களை அள்ளித் தெறித்தாற்போல, மல்லூரி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். முதலில் சிறு ஒளித்துண்டை மட்டும்தான் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், இவரது சொல்வீச்சை அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் கால்கடுக்க, கை வலிக்க, முழுவதையும் பிடித்துவிட்டேன். (அவரது ஆரம்ப முகமன்களை மட்டும் கத்தரித்துவிட்டேன்.)

அடுத்து பேசவந்த சோ. சத்தியசீலன் அதிர்ந்துபோய்விட்டார். இனியும் நான் பேசத்தான் வேண்டுமோ என்றவர், பேச ஆரம்பித்த சில விநாடிகளில் நான் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டாலும், மீண்டும் 8.30 மணிக்கு அரங்கை விட்டு வெளியே வந்தபோதும் பேசிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி 8.00 மணிக்கு முடிந்துவிடவேண்டும், என்பது வேறு விஷயம். நான் பேசவும் வேண்டுமோ என்றபோதே இப்படி என்றால், பேசித்தான் ஆகவேண்டும் என்று அவர் விரும்பும்போது எப்படியோ!

நிகழ்ச்சியின் தொகுப்பு:

*

அரங்கில் நுழைந்து நேராக விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் இருக்குமிடம் போனேன்.

‘வாங்க’ என்று வரவேற்றார். தமிழ்பேப்பரில் என் நேற்றைய ரிப்போர்ட்டைப் படித்துவிட்டு, மூன்று பேர் அவரை தொலைபேசியில் விசாரித்தார்களாம். என்ன பேசினீர்கள் என்று கேட்டார்களாம். ‘இன்னும் பேசவே இல்லையே?’ என்றேன். பேச ஆரம்பித்தோம்.

அமானுஷ்யங்கள் மீது நம்பிக்கையற்ற என் நிலையை அவரிடம் சொன்னேன். அவர் தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். தனக்கு பெரியார்மீது சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு என்று ஆரம்பித்தார். அதன்பின் இங்கர்சாலைப் படிக்க ஆரம்பித்தாராம். அதிலிருந்து பகுத்தறிவு ஒன்றின்மீதுதான் அவருக்கு நம்பிக்கையாக இருந்ததாம். அவருக்கு சுமார் 20 வயதிருக்கும்போது அவருடைய தாத்தா இறந்துபோனாராம். திடீரென ஏற்பட்ட நிகழ்வாம் அது. அப்போது கொஞ்சம் சோகத்தில் இருந்திருக்கிறார். அவருடைய உறவினர் ஒருவர், தாத்தாவின் ஆவியுடன் பேசமுடியும் என்று சொன்னதும் ஔஜா பலகைமூலம் பேசியிருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட நம்பிக்கையில் அவர் தொடர்ந்து ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர ஆரம்பித்தாராம்.

‘எனக்கு யாரையும் ஏமாற்ற விருப்பமில்லை; அதற்கான தேவையும் இல்லை’ என்றார் அவர். தனக்கு நிலபுலன்கள் இருப்பதால் பணத்துக்கு எந்தக் கஷ்டமும் இல்லை என்றவர், தான் பொதுவாக யாரிடமும் இதுகுறித்து விவாதத்தில் இறங்குவதில்லை என்றார். விவாதம் மூலம் யாரையும் மாற்றிவிட முடியும் என்று நம்பவும் இல்லை என்றார். நானும் அவருடன் விவாதம் செய்வதில் இறங்கவில்லை என்றும், அவர் எந்தப் பக்கத்திலிருந்து வருகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதே என் நோக்கம் என்றும் சொன்னேன்.

ஆவிகள் வாழும் உலகம் தனியொரு பிரபஞ்சம் என்று எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். இல்லை, இப்போது நாமிருக்கும் இதே உலகம்தான்; ஆனல் அவர்கள் தனியொரு பரிமாணத்தில் – டைமென்ஷனில் – உள்ளனர் என்றார். ‘அவர்களால் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா? அவர்களைக் கட்டுப்படுத்தி பிறருக்கு நன்மை தீமைகளைச் செய்யமுடியுமா?’ என்றெல்லாம் கேட்டேன். கட்டாயமாக முடியும் என்றார்.

மன நோய் மற்றும் ஆவிகள் பற்றிப் பேச்சு வந்தது. ஏன் உளவியல் மருத்துவர்கள், சில மன நோய்களுக்கு ஆவிகள்தான் காரணம் என்று ஏற்றுக்கொள்வதில்லை என்று கேள்வி கேட்டார். தான் பல மன நோய்களைக் குணப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் அவ்வாறு குணமானவர்கள் ஊடகங்கள் முன் வரத் தயங்குவதாகவும் சொன்னார்.

அவர் நடத்திவரும் மாத இதழான ஆவிகள் உலகம் என்பதில் அவர் எழுதியுள்ள வாசகர் கேள்வி பதில்களின் தொகுப்பை எனக்கு அளித்தார் (இரு தொகுதிகள்). அவற்றைப் படித்துவிட்டு அவரிடம் பேசுவதாகச் சொல்லியிருக்கிறேன்.

இவற்றைப் படிப்பதாலோ அல்லது பிற காரணங்களுக்காகவோ ஆவிகள்மீது எனக்கு நம்பிக்கை வரப்போவதில்லை. ஆனால் ஒரு நல்ல நண்பர் கிடைத்துள்ளார் என்று மட்டும் சொல்வேன்.

உலகில் உள்ள நல்ல மனிதர்களுக்கு ஆவிகள் அள்ளிக் கொடுக்கட்டும். உலகில் உள்ள கெட்டவர்களுக்கும் பொறாமையாலும் வயிற்றெரிச்சலாலும் அவதியுறும் மக்களுக்கும்கூட ஆவிகள் நல்ல புத்தி அளிக்கட்டும். இன்று இரவு உங்கள் அனைவருக்கும் ஆவிகளின் அருளால் நல்ல தூக்கம் வரட்டும்!

நாளை மீண்டும் சந்திப்போம்.