ஆழி பெரிது!

சில வரலாற்றுப் புதிர்கள்

 

வேத காலத்தை ஒரு பொற்காலமாகவோ ஆதர்சமாகவோ சித்தரிக்கும் எண்ணம் இக்கட்டுரைத் தொடருக்கு இல்லை என்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். வேத ரிஷிகள் அல்லது கவிகள் வேறெந்த பண்டைய சமுதாயத்தையும் போன்ற சமுதாயத்திலேயே வாழ்ந்தார்கள். நன்மைகளும் தீமைகளும் குறைகளும் நிறைகளும் அதிகார மையங்களும் விளிம்பு நிலைகளும் கொண்ட சமுதாயம். ஆனால் இந்த கவிகள் இச்சமுதாய கட்டுப்பாடுகளுக்கு அப்பால் தங்கள் பார்வையை அகமும் புறமும் செலுத்தினார்கள். அவர்கள் கண்டுணர்ந்த உண்மைகளை பாடல்களாக வெளிப்படுத்தினார்கள். இந்த ரிஷிகள் யார்? குல மூப்பர்கள், குருக்கள், பெண்கள், புரோகிதர்கள், தொழிலாளிகள், மருத்துவர்கள் என பல்வேறு தொழில்களை செய்தவர்கள். சமுதாயத்தின் பல்வேறு அடுக்குகளிலிருந்து வந்தவர்கள். மிக முக்கியமாக பல்வேறு சித்தாந்தப்பற்றுகளுடன் சத்தியத்தை தேடி அப்பற்றுகளையும் ஒரு தருணத்தில் துறந்தவர்கள்.

இவர்களின் தரிசனங்களின் தொகுப்பே வேத இலக்கியம் என்பது. இது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது சாதிக்கோ அல்லது மொழியினருக்கோ சொந்தமானது அல்ல. ஆனால் மேற்கத்திய இந்தியவியலாளர்கள் இந்திய வேதங்களை ஆராய்ந்த போது அவற்றை தாம் கொண்டிருந்த இனவாத அடிப்படையிலேயே ஆராய்ந்தார்கள். குறிப்பாக தஸ்யு-ஆரிய என்பதை இன அடிப்படையிலான வேறுபாடாக கண்டார்கள். இதனை ஒரு வரலாற்று உண்மையாக நம் மீது சுமத்தினார்கள். நம்மவர்களும் இதை உண்மை என நம்பி ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இந்திய மரபுவழி சிந்தனையாளர்களும் சரி சுய புத்தி கொண்ட ஆராய்ச்சியாளர்களும் சரி இந்த இனவாதக் கோட்பாட்டினை எதிர்த்தார்கள்.

உதாரணமாக சுவாமி விவேகானந்தர். கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விக வாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர், எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாக கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாக கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும். சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை என கருதுகிறேன். ஆண்டவர் ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி’ களைப் பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால் நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை, ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூறச் சான்றாக இல்லை…அதைப்போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர் , ஆரியரன்றி வேறல்ல. ‘

விவேகானந்தருக்கு பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் சாதியத்தின் உருவாக்கத்தை ஆராயப் புகுந்த பாபா சாகேப் அம்பேத்கர் விவேகானந்தரின் முடிவை இன்னும் அதிகாரபூர்வமான ஆதாரத்தன்மையுடன் முன்வைக்கிறார்:

”ஆரிய படையெடுப்பு என்பது புனையப்பட்ட ஒரு கதை. இந்த புனைவு சிலரை மனமகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் பிறகு அந்த  நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களாலும் கட்டப்பட்டது.

அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் செய்யப் பட்ட வக்கிரத்தின் விளைவே இந்தக் கோட்பாடு. ஆரிய இனக் கோட்பாடு உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல. மாறாக முதலில் ஒரு கோட்பாட்டினை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.”

வேத இலக்கியங்களில் சொல்லப்படும் ஆரியர்கள் மற்றும் தஸ்யுக்கள் குறித்து அம்பேத்கர் கூறுகிறார்:

”இது குறித்து என் முடிவுகள் பின்வருமாறு:

1. வேதங்கள் ஆரியர் என்போரை ஒரு இனமாக அறியவில்லை.

2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.

3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

4.வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘

இன்றைக்கு தொல்லியலும். மரபணுவியலும் சத்தியமென சொல்லும் வார்த்தைகளை அம்பேத்கர் வேதங்களை தன் பார்வையில் ஆராய்ச்சி செய்து சொல்லிவிட்டார்.

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுவதையும் சிறிது காணலாம்:

ஆரிய இனவாத கோட்பாடு மொழியியல் புனைவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பிறகு இனவாத வரலாறாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இக்கோட்பாட்டை உருவாக்கியவர்கள் ஒரு மொழி எவ்விதமாக சமூக பரிமாணம் அடைகிறது என்பதை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். மொழிகளின் பரிணாமம் என்பது மிகவும் மெதுவாக நடக்கக்கூடியது. மொழிக்குடும்பங்கள் என்று இன்று அறியப்படுபவை மிகப் பழமையான ஒரு வடிவிலிருந்து உருவானவை.

அந்த மூத்த வடிவங்களின் காலத்தை மிகப் பழங்காலத்துக்கு தள்ளுகின்றன.  எனும் முறையில் அவை பழமை வாய்ந்தவை ஆகும். உதாரணமாக இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களை சார்ந்த மொழியாக கருதப்படுபவை ஆரிய-படையெடுப்பு வாதிகளால் அண்மைக்கால தோற்றமுடையவை என கூறப்பட்டன.  ஆனால் நவீன ஆராய்ச்சியாளர்கள் (உதாரணமாக ரென்ஃப்ரு) அனதோலிய பிரதேசங்களில் கிமு 7000 காலகட்டத்திலேயே இம்மொழி பேசுபவர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களால் இப்படையெடுப்பு அல்லது மக்கள் புலப்பெயர்ச்சி நிகழ்வுகள் எப்போது நடைபெற்றதாகக் கணிக்கின்றனர்? அவர்கள் கணக்கின் படி கிமு இரண்டாயிரம் ஆண்டுகளில் மேற்காசியாவிலும் பின்னர் கிமு 1500 காலகட்டங்களில் வட இந்தியாவிலும் நிகழ்ந்திருக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே கிமு 2700 களிலேயே உச்சமடைந்த ஹரப்பா பண்பாட்டுக்கும் வேத பண்பாட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்க முடியாது என சொல்லப்படுகிறது. ஆனால் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் என அறியப்படும் ஹிட்டைட்கள் எனப்படுவோர், அனதோலியாவில் கிமு 2200 காலகட்டங்களிலும், ஹாஸைட்கள் எனப்படுவோரும் மற்றும் மித்தானிகள் என்போரும் கிமு 1600 களிலும் அரச பரம்பரைகளை நிறுவும் அளவுக்கு பண்பாடும் வலிமையும் அடைந்திருந்தார்கள்.  இந்த வரலாற்று உண்மைகள் ஆரியர்கள் அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோர் ஏதோ நாடோடிகளாக, அல்லது நிலையான வாழ்க்கையற்ற புலம் பெயர்வோராக நகர்ந்த படி இருந்தார்கள் என்பதைக்  கேள்விக்குள்ளாக்குகின்றன.

மேலும் இந்திய இலக்கியங்கள் எதிலும் -வேத-பௌத்த-ஜைன-தமிழ் இலக்கியங்களில்- இத்தகைய புலப்பெயர்வு அல்லது படையெடுப்பின் நினைவு குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. ஜைன இலக்கியங்களிலும் தஸ்யு என்பது இனரீதியான பதமாக பயன்படுத்தப்படவில்லை குணரீதியிலான பதமாகவே பயன்படுத்தப்படுகிறது.

இன்று சிந்து-சரஸ்வதி பண்பாடு என அறியப்படும் ஹரப்பா பண்பாட்டு கூறுகளுக்கும் பிற்கால பாரத பண்பாட்டு அம்சங்களுக்கும் மறுக்கவியலாத தொடர்ச்சியான தொடர்புகள் தெளிவாக உள்ளன. சமய-ஆன்மிக கோட்பாடுகள் மட்டுமல்ல சாதாரண எடைகற்களில் கூட இந்த தொடர்பு அறுந்து படாமல் உள்ளது. உதாரணமாக அர்த்த சாஸ்திரம் கூறும் அங்குலம் என்பதன் அளவு 17.86 மில்லி மீட்டராகும். இது சிந்து சரஸ்வதி பண்பாட்டில் கண்டறியப்பட்ட அளவான 17.7 மில்லி மீட்டரிலிருந்து பெறப்பட்டதாகும் (டி.பி.அக்ரவால், Ecological Factors and the Harappan Civilisation) .

ஆழி பெரிது!

19. பூமி தியானம்

அதர்வ வேதத்தின் பூமி சூக்தம் ஓர் அதி அற்புதமான புவி வணக்கம். இதிலிருக்கும் சில வரிகளை மட்டும், அவற்றிலிருந்து கிடைக்கும் அகவிரிவுகளின் சாத்தியங்களை, சற்றே தியானிக்கலாம்.

சத்தியம், மகத்தானதும் மாறாததுமான முடிவில்லாத பிரபஞ்ச லயம்,

புனிதம், தவம், தெய்வீக ஆற்றல், வேள்வி

இவையே பூமியைத் தாங்குகின்றன.

கடந்தவைகளுக்கும் வருபவைகளுக்கும் அரசியான அவள்

நமக்காக, வாழும் உலகமாய்ப் பரந்திடுக. (1)

புவியைத் தாங்கும் முடிவில்லாத பிரபஞ்ச லயம் குறித்து நாம் ஏற்கெனவே இத்தொடரில் பார்த்துள்ளோம். ரிதம் எனும் அது சத்தியத்துடன் தொடர்புடையது. இங்கு வேள்வியும் கூறப்படுகிறது. வேள்வி வேத காலம் முதல் ஒரு முக்கியமான குறியீடாக உள்ளது. சக-சிருஷ்டி என்பதற்கான குறியீடு அது, எந்தச் செயலும் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் கொண்டே நடைபெறுகிறது. அது ஒரு இயற்கை நியதி. இயற்கையின் பல அமைப்புகள் இந்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பாலேயே உருவாகின்றன. இந்த ஒருங்கிணைந்த சக-சிருஷ்டியே அடிப்படை இயக்கம் என வேதம் கருதுகிறது.

ஒன்றையொன்று பேணும் இப்போக்கினை பூமியின் அடிப்படை நியதிகளில் ஒன்றாக வேதம் சொல்கிறது, இப்புவி எப்போதும் தன்னைத்தானே புத்துருவாக்கம் செய்து கொண்டிருக்கிறது, உயிர்கள் தோன்றுகின்றன. உயிர்கள் அழிகின்றன. நாமும் அவ்விதமே. இதோ இப்புவியின் கண் சிமிட்டுதலில் நாம் உருவானோம். யார் அறிவார்? அடுத்த கண் சிமிட்டுதலில் மானுடம் ஒரு நினைவாகக் கூட இருந்திடாது யாதும் சுவடு படாமல் அழிந்துவிடலாம். இப்போது இந்தத் தருணத்தில் இப்புவி நம் வாழ்க்கைக்கு வளம் அளிக்கும் இடமாக இருக்கட்டும் என்று மட்டுமே இயற்கை எனும் அந்த மகத்தான சக்தியிடம் இறைஞ்சிட முடியும்.

உச்சிகளும், சரிவுகளும்

மனிதர்களைப் பிணைக்கும் பல சமவெளிகளும் கொண்ட பூமி

பல்வேறு சக்திகள் பொருந்திய மூலிகைகளைத் தாங்கும் பூமி

நமக்காகப் பரந்து வளம் பொருந்தியதாகுக (2)

பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களைக் குறித்து பேசும் இப்பாடல் அம்மக்களை பிணைக்கும் நிலப்பரப்புகளை கொண்டதாக பூமியை கூறுகிறது. இப்பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ சக்திகள் கொண்ட தாவர வளங்கள் உள்ளன. மனிதன் அவற்றையெல்லாம் கண்டுபிடிப்பதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையை வளமும் ஆனந்தமும் கொண்டதாக ஆக்க முடியும். இங்கு பூமி மனிதர்களைப் பிணைக்கும் சக்தியாகவும் அவர்களுக்கு வளமளிக்கும் இயற்கை செல்வங்களை கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, இது பூமியின் மீதான ஆக்கிரமிப்பை அல்ல; அமைதி நிறைந்த நல்வாழ்க்கையையே கோரி நிற்கிறது.

நன்னீர் நிலைகளும் ஓடும் ஆறுகளும் பெருங்கடலும் கொண்டது இப்பூமி! இதிலிருந்தே எழுந்தன உணவும் அனைத்து மானுட குழுக்களும்! இதிலேயே வாழ்கின்றன சுவாசிப்பன முதல் நகர்வன வரை என அனைத்து உயிர்களும்! இப்புவி நமக்கு நீர் அருந்த முதன்மை அளிக்கட்டும். (3)

இங்கு ஓர் உன்னதமான வேத சிந்தனை வெளிப்படுகிறது. அனைத்து உயிர்களும் நீரில் தோன்றின. அவ்வாறே அனைத்து மனிதர்களும் அவர்களின் உணவுகளும் நீரிலேயே நிலை பெறுகின்றன. நீர் எப்படி உணவாகிறது? நீரே உணவாகிறது என்பது பாரத சிந்தனை முழுவதும் உள்ள ஒன்று. துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி – உண்பார்க்கு நல்ல உணவுகளை உளதாக்கி; துப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை – அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. இது பரிமேலழகர் உரை. புறநானூற்றில் ஒரு பாடல் ”உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” எனக் கூறுகிறது.

இன்றைக்கு சூழலியலில் உள்ளுறை நீர் (embedded water) என்கிற கோட்பாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. இன்றைக்கு எந்த உணவுப் பதார்த்தத்தின் விலையுடனும் அதன் உள்ளுறை நீரும் கணக்கிடப் படவேண்டும் என்கின்றனர் சூழலியல் வல்லுனர்கள். இந்தக் கோணத்தில் நோக்கும் போது இந்த தொன்மையான பிரார்த்தனை திருக்குறளைப் போலவே ஒரு புதிய பரிமாணம் பெறுகிறது.

ஆதியில் அவள் ஆழ்கடலின் நீருள் இருந்தாள்

மெய்யுணர்ந்த ரிஷிகள் தம் அற்புத சக்திகளால் அவளை நாடினர்

அமுதமயமான அழிவற்ற சத்தியத்தால் மூடப்பட்டு

அவள் இதயம் அப்பால் உள்ள ஆகாயவெளியில் இருந்தது.

அந்த பூமி நமக்கு உன்னதமான தேசத்தையும்,

அதில் ஒளியையும், வலிமையும் அளித்திடுக. (4)

கவித்துவம் கொண்ட பல படிமங்களைக் கொண்ட இப்பாடல் ஒரு பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. நம் தேசங்கள் பூமியால் அளிக்கப்பட்டவையே. குறுகிய தேசியவாதிகள் தங்கள் தேசமே பூமியின் மற்றனைத்து தேசங்களைக் காட்டிலும் உயர்ந்ததெனக் கருதலாம். ஒவ்வொருவருக்கும் தான் பிறந்து வளர்ந்த தேசத்தின் மீது அன்பு வருவது இயற்கையே. ஆனால் அது பிற தேசங்கள் மீதான இகழ்ச்சியாக மாறும் போது ஒவ்வொரு தேசமும் பூமி எனும் பெரும் அருட்சக்தியின் அங்கமே என்பதை நினைவுறுத்துகிறது இப்பாடல். தேசத்தின் ஒளியும் வலிமையும் எந்த அளவுக்கு பூமியில் அது ஒரு பாகம் என்பதை உணர்ந்து செயல்படுகிறோமோ அந்த அளவே நிலவும்.

இவ்வாறு இப்பூமி சூக்தமெங்கும் பல அழகிய சிந்தனைகள் இவ்விதமாக கூறப்படுகின்றன. ஒவ்வொன்றையும் தியானிக்க தியானிக்க, அவை நம்முடன் வளரும், நம் சிந்தனைகளை ஆழப்படுத்தும் தன்மை கொண்டவை. உதாரணமாக,

பூமி தாய்; நான் புவியின் மகன். தந்தை வடிவான வானம் நம்மை நிறைத்திடுக. (11-12)

பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும். உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக.(35)

மனிதனின் மிகப்பெரிய அடையாளம் இதுவே. ஹிந்து, கிறிஸ்தவன், இந்தியன், பாகிஸ்தானி, தமிழன், மலையாளி, கறுப்பினத்தவன், வெள்ளைத் தோலன் எனும் அனைத்துக்கும் மேலாக விளங்கும் அடையாளப் பிரகடனம் இது “பூமி என் தாய் நான் புவியின் மைந்தன்,” வேதம் மானுடத்துக்கு தந்த மாபெரும் அடையாளம் இதுவே. வீர சாவர்க்கர் சொல்கிறார்: “ஒரு ஹிந்து அவன் ஹிந்துத்துவத்தின் உன்னத உச்சத்தில் ஹிந்துவாக நீடிப்பதில்லை. ஒரு கபீருடன் இவ்வுலகனைத்தும் தன் வாரணாசி என அவன் பாடுவான் அல்லது துகாராமுடன் ”என் தேசமா சகோதரரே? என் தேசம் என்பது இப்பிரபஞ்சத்தின் எல்லைகள் தொடுமிடமனைத்தும் என் தேசமே” என கொண்டாடுவான்.” என்கிறார்.

ஆனால் இது வெறும் உணர்ச்சிகரமான யதார்த்தவாதமற்ற சர்வதேசியமன்று. பூமியின் புனிதத்துவத்தை அனைவரும் உணர்வதால் ஏற்படும் சத்திய உணர்ச்சி. அதற்கு மிகவும் அதிகமாகவே யதார்த்த உணர்வு தேவை, எனவேதான் பூமி சூக்தம் இதையும் சொல்கிறது:

ஆண்களிலும், பெண்களிலும் உள்ள உனது நறுமணம் எதுவோ

இளைஞனின் ஒளியும், கம்பீரமும் எதுவோ

வீரர்களிலும், புரவிகளிலும் உள்ளது எதுவோ

வனமிருகங்களிலும், யானைகளிலும் உள்ளது எதுவோ

கன்னிப் பெண்ணின் இளமை ஒளி எதுவோ

பூமி, இவற்றுடன் எம்மை ஒன்றுகூட்டுவாய்

யாரும் என்னை வெறுக்காதிருக்கட்டும்.

வீரமும் ஒளியும் வலிமையும் கம்பீரமும் கொண்டு வெறுப்பினை வெல்ல வேண்டும். என்பதை வலியுறுத்துகிறது. நாம் எவரையும் வென்று அடக்க வேண்டாம். ஆனால் எவரும் நம்மை அச்சுறுத்தவும் வெறுக்கவும் வேண்டாம். அதற்கான வலிமையுடன் நாம் அனைவரையும் பூமியின் மைந்தர்களாக அன்பு செய்வோம்.

கருமையும் வெண்மையும் இணைந்து

இரவு பகல்களாக பூமி மீது படர்கின்றன.

மழை அவளைத் திரையிட்டு மூடுகிறது.

ஒவ்வொரு அன்பு ததும்பும் வீட்டிலும்

பூமியாகிய அவள் நமக்கு இன்பம் அளிக்கட்டும். (52)

இப்புவி எனும் பேருணர்வு எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும் கவி சுட்டுகிறார். ஒவ்வொரு அன்பு ததும்பும் வீட்டிலும் அது நிகழ்கிறது. இன்றைக்கு குழந்தை முதலே earth consiciousness குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படவேண்டுமென சொல்கிறார்கள். தாயைக் காட்டிலும் யார் அதைச் சொல்லிக் கொடுக்க முடியும்? தாயன்பு நிலவும் குடும்பச்சூழல் பூமி மானுடத்துக்கு வளங்குன்றா வளமையை வழங்க ஒரு அடிப்படை நியதி.

பூமி மீது

கிராமங்களிலும் காடுகளிலும்

சபைகளிலும் குழுக்களிலும் கூட்டங்களிலும்

உனக்கு இனியதையே பேசுவோம்.

இப்போது அந்த அன்பின் வட்டம் விரிகிறது. இன்சொல் என்பது ஒரு முக்கிய விழுமியமாக பாரத பண்பாடு என்றைக்கும் முன்வைத்து வருகிறது. இனிய பேச்சுக்கள். பூமிக்கு இனிய பேச்சுக்கள். அனைத்து மக்கள் மன்றங்களிலும் அந்த அன்பே உரையாடல்களின் அடிப்படையாக வேண்டும். இங்கு கவி காடுகளையும் சேர்க்கிறார். வனமும் சமுதாயத்தின் ஒரு அங்கம் எனும் சிந்தனை எழுகிறது.

தான் பிறந்தது முதல்

பூமி நிலத்தில் வாழும் மக்களை (பல்வேறு இடங்களிலும்) சிதறச் செய்தாள்

குதிரை தன் காலால் புழுதியைச் சிதறடிப்பது போல.

பின் அவள் மகிழ்ச்சியுடன் விரைந்தாள்.

உலகைக் காப்பவள்

காட்டு மரங்களையும், செடிகளையும் அரவணைப்பவள். (56-57)

மானுடத்தின் பரவல் ஒரு தொல்-வரலாற்று சத்தியம், இன்றைக்கும் தொடரும் யதார்த்தம். எந்த மனிதக்குழுவும் ஓரிடத்தில் தங்கி வாழவே விரும்பும். ஆனால் கட்டாயங்களே அவர்களை நகர செய்யும். மனிதக்குழுக்கள் உலகெங்கும் செல்கிறார்கள் பரவுகிறார்கள். அவர்களை அப்படி செய்வது பூமியே. மழையின்மையோ அல்லது மேய்ச்சல்நிலத் தேவையோ அல்லது இயற்கை பேரிடரோ மானுடத்தை வாழ வழி தேடி புவியெங்கும் செல்ல வைக்கிறது. அவ்வாறு சென்ற இடங்களிலெல்லாம் அவளே மானுடத்தை வாழவும் வைக்கிறாள்.

அழகிய பூமி சூக்தத்திலிருந்து சில வரிகளை இங்கே தியானித்தோம். இன்றைக்கும் ஒருவேளை இன்னும் பல நூற்றாண்டுகள் கழிந்தும் கூட, ஏன் இன்னொரு கிரகத்தில் மானுடம் குடியேறினாலும் கூட இப்பூமி சூக்தம் அப்போதும் தரிசன சாத்தியங்களை உள்ளடக்கிய ஒரு பெட்டகமாகவே விளங்கும் என்றே தோன்றுகிறது.

(இங்கு எடுத்தாளப்பட்ட பூமி சூக்த மொழி பெயர்ப்புகளைச் செய்தவர் ஜடாயு.)

ஆழி பெரிது

18. ப்ருத்வி

புவியை ஏந்திய வராக மூர்த்தியின் சிற்பம்

வேதம் சொல்லும் இன்னொரு முக்கிய பெண் தெய்வம் குறித்து நாம் பார்ப்பதற்கு முன்னால், இன்னொரு பண்பாட்டின் அடிப்படை ஐதீகத்தை காண்போம். அந்த ஐதீகத்திலிருந்து முளைத்தெழுந்த அமைப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் காண்போம்.

ஏதோ ஒரு தருணத்தில் மனிதன் பூமிக்கு அன்னியமானான். மனிதன் சுய உணர்வை கொண்டதே அத்தருணம். இதர புவி உயிர்களிடமிருந்து அவன் பிரிந்தான். அதுவரை அனைத்து உயிர்களின் தோட்டக்காரனாக இருந்தவன் மனிதன். இப்போதும் அவனே எஜமானனாக இருக்கும் தகுதி பெற்றவன். ஆனால் அந்நிலை இழந்தான். அவன் வாழ்க்கை போராட்டமாக மாறியது. அவன் வாழ அவன் அழிக்க வேண்டும். அவன் உண்ண அவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ வேண்டும். ஆதிபாவம் எனும் ஆபிரகாமிய ஐதீகம் அளிக்கும் உலகப்பார்வை இது. ஆதி பாவத்தின் அத்துமீறல் சர்ப்பத்தாலும் ஏவாளாலும் நிகழ்ந்தது. இவை இரண்டுமே பெண்மையின் குறியீடுகள். பெண் நிலத்தின் பூமியின் குறியீடு. இரண்டாயிரம் ஆண்டுகளாக பூமி எனும் இயற்கைக்கு எதிராக ஒரு இறையியல் கட்டமைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளாக அது ஒரு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டது. கீழே விழுந்த மனிதனின் மீட்பு மீண்டும் ஒரு பெண் ஆண் தெய்வத்தின் முன் தலை வணங்கியதால் கிட்டியது. புனித மரங்கள், நாக வழிபாடுகள், புனித வனங்கள், பெண் தெய்வ வழிபாட்டாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வேட்டையாடி அழிக்கப்பட்டனர்.

அறிவியல் மேலெழுந்த போது அதுவும் ஒரு அதிகார நிறுவனமாக உயர்ந்தெழுந்தது. சூழலியல் ஒரு முக்கிய அறிவியல் புலமாக உருவான போது அதன் கண்டடைவுகள் அறிவியலில் அடிப்படை பார்வை மாற்றங்களை கோரியது. சூழலியல் பிரச்சனைகளுக்கு வெறும் குறுக்கல் பார்வையிலான தொழில்நுட்ப தீர்வுகள் உதவாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். முழுமைப் பார்வையை அளிக்கும் சட்டகங்களைத் தேடினர். அத்தகைய ஒரு சட்டகம்தான் கய்யா – Gaia. பண்டைய கிரேக்கத்தின் புவித் தெய்வம். இப்புவியை ஒரு பெரும் உயிரியல் இயக்கமாக காணும் பார்வை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் ஐரோப்பியம் தான் மறந்த ஒரு தாய் தெய்வத்தை இன்னொரு வடிவில் தரிசிக்கிறது.

வேதத்தின் பெண் தெய்வங்களில் மற்றொரு மகத்தான தெய்வம் பிருத்வி எனும் பூமி. புவி எனும் பிருத்வியும் வானுமே நம் பெற்றோர். மனிதர்களுடைய பெற்றோர் மாத்திரமல்ல. பிற உயிரினங்களின் பெற்றோர் மாத்திரமல்ல. தெய்வங்களும் அவற்றின் குழந்தைகளே. ரிக் வேத கவி பாடுகிறார்:

சுமை மிக்க பர்வதங்களைத் தாங்கி நிற்பவளே நன்னீர் பெருக்குகள் உன்னிலிருந்தே உருவாகி ஓடுகின்றன. உன்னில் விதைகள் வேகமாக பல்கிப் வளம் பெருக்குகின்றன.

ஓங்கி ஒலிக்கும் எம் பாடல்கள் உன் புகழை இன்று பாடுகின்றன. எங்கும் பரந்து விளங்கும் வெண்ணொளி கொண்ட பூமியே (பிருத்வியே). கனைக்கும் குதிரையைப் போல நீ புயல் மேகங்களை செலுத்துவாயாக.

உனது மேகங்களிலிருந்து புயலடித்து பெரும் மழை பெய்யும் போது உன் ஆற்றலினாலேயே நீ மரங்களையும் பெரும் வனங்களையும் வீழாமல் காப்பாற்றுகின்றாய். (ரிக் வேதம் 5:84: 1-3)

பூமியை தாயாக மட்டுமல்ல பெரும் சக்தியாக உலகின் அனைத்து உயிர்களுடனும் வளி மண்டலத்துடனும் தொடர்புடைய இயக்க சக்தியாக உருவகிக்கிறது இப்பாடல். மரங்களை வேருடன் பிடுங்கும் சக்தி கொண்ட புயல் மழைகளை கொட்டும் மேகங்களும் அவளுடைய ஆற்றலே. அப்புயலையும் மிஞ்சி மரங்கள் மண்ணில் வேரூன்றி பலமாக நிற்க வைப்பதும் அவளது ஆற்றலே. இன்றைய Gaia சூழலியல் சட்டகத்தை எதிர்நோக்கும் ஒன்றாகவே திகழ்கிறது.

அவள் விண்ணுடன் இணைந்து அனைவருக்கும் வாழ்வளிப்பவள். அனைவரையும் காப்பாற்றுபவள். (ரிக் 1.160.1,2) இந்த தெய்வீக இணைப்பின் குழந்தைகளே ரிக் வேத கவிகள் அவர்கள். விண்ணும் பூமியும் காளையும் பசுவுமாக உருவகிக்கப்படுகின்றன. அவற்றின் பாலை கறந்து அளிப்பவனாக ரிக்வேத கவி காட்டப்படுகிறார். (1.160.3)

பிருத்வி வாழ்வளிப்பவள் மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவில் மனிதனை அவள் மீண்டும் அரவணைத்துக் கொள்கிறாள். ஒரு அன்னை தன் குழந்தையை தன் ஆடையாலேயே மூடிக்கொள்வது போல பிருத்வி மரணமடைந்தவனை அரவணைத்துக் கொள்கிறாள் என்கிறார் வேத கவி (ரிக் 10.18.10)

பிருத்விக்கு மற்றொரு முக்கிய பரிணாம வளர்ச்சியும் இருந்தது. கலை வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் வரலாற்றாசிரியர் வித்யா தெஹேஜா என்பவர் பிருத்வி எனும் பெண் தெய்வமாக நிலத்தை காணும் பார்வை பெரும்பாலான இந்திய நிலத்தோற்றங்களுக்கு பெண் பெயர்களை அளித்ததது என்றும் இதுவே இந்தியாவை பாரத அன்னையாக காணும் பார்வையாக உருபெற்றது என்றும் கூறுகிறார். பாரத அன்னை எனும் கருத்தாக்கத்தின் வேரில் பிருத்வி எனும் புவியனைத்தையும் அன்னையாக காணும் பார்வை இருப்பதாக டேவிட் கின்ஸ்லே எனும் ஆராய்ச்சியாளரும் கூறுகிறார். இதில் ஒரு சுவாரசியமான பண்பாட்டு உளவியல் பரிணாமம் உள்ளது.

பின்னாட்களில் பிருத்வி குறித்த முக்கியமான தொன்ம-சிற்ப வடிவாக்கங்களில் முதன்மையானது விஷ்ணு வராக வடிவமாக பிருத்வியை காப்பாற்றுவதாகும். இதில் பிருத்வி விஷ்ணுவின் அரவணைப்பில் அல்லது பாதுகாப்பில் இருக்கும் தெய்வமாகவே காட்டப்படுகிறாள். பாரத விடுதலை இயக்கத்தின் போது பிருத்வி பாரத அன்னையாக காட்டப்படலானாள். அப்போது அவள் எவ்வித ஆண் தெய்வ பாதுகாப்பும் இல்லாத தனிப்பெரும் தெய்வமாக வரைபடங்களில் வெளிப்பட்டாள். பாரத அன்னையாக இந்தியா உருவகிப்படுவது குறித்த தன்னுடைய அண்மை நூலில் சுமதி ராமசாமி இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டி இது புதிய தேசபக்தியின் உத்வேகத்தால் விளைந்ததாக கூறுகிறார். ஆனால் வேதம் அளிக்கும் பிருத்வியின் சித்திரத்தை காணும் போது என்ன தோன்றுகிறது? அவள் பல பாடல்களில் விண்ணுடன் இணைத்துப் பேசப்பட்டாலும் கூட அவளைக் குறித்த மூன்று தனிப்பாடல்கள் அவளை தனித்தியங்கும் பேரியக்க சக்தியாக உருவகிப்பதை காண்கிறோம். இந்திய தேசிய இயக்கம் உருவாக்கிய ‘புதிய’ புவி அன்னையாகிய பாரதமாதா எனும் தனிப்பெரும் பெண் தெய்வத்தின் வடிவ சாத்தியம் வேதத்திலிருந்து உருவானதாகவே கருத வேண்டும்.

இந்தியாவின் அனைத்து சக்தி பீடங்களுமே சதி தேவியின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் எனும் பின்னாள் புராணக் கதை பார்வதியை பிருத்வியுடன் இணைக்கிறது. ஆக அனைத்து பெண் தெய்வ பரிணாம சாத்தியங்களையும் வேத பிருத்வி தன்னுள் கொண்டிருந்தாள்.

இந்த பிருத்விக்கு இணையான தொல்-ஐரோப்பிய பெண் தெய்வம் கய்யா (Gaia). பிருத்வியையும் Gaia வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏன் ஐரோப்பிய பாகனீயத்தை ஆபிரகாமியம் அழித்தொழிக்க முடிந்தது என்பதை ஒருவாறு ஊகிக்கலாம்.

உதாரணமாக, ஹெஸியாட் (Hesiod கிமு ஏழாம் நூற்றாண்டு) என்கிற கிரேக்க கவி பண்டோரா எனும் முதல் பெண்ணை விண் இறைவனான ஸீயஸ் தெய்வம் மனிதனுக்கு தண்டனை அளிக்க படைத்ததாகவும் அவள் வெளியே அழகாகவும் உள்ளே மண்ணால் நிறைந்திருந்ததாகவும் கூறுகிறார். இந்த மண் கய்யா எனும் புவித்தெய்வம். பெண்ணை சாபமாக பார்க்கும் இந்த போக்குக்கு நேர் எதிரான போக்கை இந்திய வேத தொன்மத்தின் வளர்த்தெடுப்பில் காண்கிறோம். இங்கும் பெண்ணை சாபமாகவும் மாயப்பிசாசாகவும் பார்க்கும் போக்குகள் இருந்தன. ஆனால் அதற்கு எதிராக பெண் தெய்வத்தை பிரதானப்படுத்தும் போக்கும் இங்கு இருந்து கொண்டே இருந்தது.

பூமி தெய்வத்தை அதன் அனைத்து சிறப்புகளுடனும் துதிக்கும் துதி அதர்வண வேதத்தில் உள்ளது. அதன் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு எழுத்தாளர் ஜடாயுவால் செய்யப்பட்டுள்ளது. அது காட்டும் சில விஷயங்கள் குறித்து அடுத்து காணலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

ஸ்ரீ அரவிந்தர், The Secret of the Veda, ஸ்ரீ அரவிந்தர் ஆஸிரமம் பாண்டிச்சேரி

Madhu Bazaz Wangu, Images of Indian goddesses: myths, meanings, and models, Abhinav Publications, 2003

சுமதி ராமசாமி, The Goddess and the Nation: Mapping Mother India, Duke University Press, 2010

ராய்முண்டோ பணிக்கர், The Vedic experience: Mantramañajari: an anthology of the Vedas for modern man and contemporary celebration, மோதிலால் பனார்ஸிதாஸ், 1983

வேதம் சொல்லும் இன்னொரு முக்கிய பெண் தெய்வம் குறித்து நாம் பார்ப்பதற்கு முன்னால், இன்னொரு பண்பாட்டின் அடிப்படை ஐதீகத்தை காண்போம். அந்த ஐதீகத்திலிருந்து முளைத்தெழுந்த அமைப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் காண்போம்.

ஏதோ ஒரு தருணத்தில் மனிதன் பூமிக்கு அன்னியமானான். மனிதன் சுய உணர்வை கொண்டதே அத்தருணம். இதர புவி உயிர்களிடமிருந்து அவன் பிரிந்தான். அதுவரை அனைத்து உயிர்களின் தோட்டக்காரனாக இருந்தவன் மனிதன். இப்போதும் அவனே எஜமானனாக இருக்கும் தகுதி பெற்றவன். ஆனால் அந்நிலை இழந்தான். அவன் வாழ்க்கை போராட்டமாக மாறியது. அவன் வாழ அவன் அழிக்க வேண்டும். அவன் உண்ண அவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ வேண்டும். ஆதிபாவம் எனும் ஆபிரகாமிய ஐதீகம் அளிக்கும் உலகப்பார்வை இது. ஆதி பாவத்தின் அத்துமீறல் சர்ப்பத்தாலும் ஏவாளாலும் நிகழ்ந்தது. இவை இரண்டுமே பெண்மையின் குறியீடுகள். பெண் நிலத்தின் பூமியின் குறியீடு. இரண்டாயிரம் ஆண்டுகளாக பூமி எனும் இயற்கைக்கு எதிராக ஒரு இறையியல் கட்டமைக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளாக அது ஒரு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டது. கீழே விழுந்த மனிதனின் மீட்பு மீண்டும் ஒரு பெண் ஆண் தெய்வத்தின் முன் தலை வணங்கியதால் கிட்டியது. புனித மரங்கள், நாக வழிபாடுகள், புனித வனங்கள், பெண் தெய்வ வழிபாட்டாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வேட்டையாடி அழிக்கப்பட்டனர்.

அறிவியல் மேலெழுந்த போது அதுவும் ஒரு அதிகார நிறுவனமாக உயர்ந்தெழுந்தது. சூழலியல் ஒரு முக்கிய அறிவியல் புலமாக உருவான போது அதன் கண்டடைவுகள் அறிவியலில் அடிப்படை பார்வை மாற்றங்களை கோரியது. சூழலியல் பிரச்சனைகளுக்கு வெறும் குறுக்கல் பார்வையிலான தொழில்நுட்ப தீர்வுகள் உதவாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். முழுமைப் பார்வையை அளிக்கும் சட்டகங்களைத் தேடினர். அத்தகைய ஒரு சட்டகம்தான் கய்யா – Gaia. பண்டைய கிரேக்கத்தின் புவித் தெய்வம். இப்புவியை ஒரு பெரும் உயிரியல் இயக்கமாக காணும் பார்வை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின் ஐரோப்பியம் தான் மறந்த ஒரு தாய் தெய்வத்தை இன்னொரு வடிவில் தரிசிக்கிறது.

வேதத்தின் பெண் தெய்வங்களில் மற்றொரு மகத்தான தெய்வம் பிருத்வி எனும் பூமி. புவி எனும் பிருத்வியும் வானுமே நம் பெற்றோர். மனிதர்களுடைய பெற்றோர் மாத்திரமல்ல. பிற உயிரினங்களின் பெற்றோர் மாத்திரமல்ல. தெய்வங்களும் அவற்றின் குழந்தைகளே. ரிக் வேத கவி பாடுகிறார்:

சுமை மிக்க பர்வதங்களைத் தாங்கி நிற்பவளே நன்னீர் பெருக்குகள் உன்னிலிருந்தே உருவாகி ஓடுகின்றன. உன்னில் விதைகள் வேகமாக பல்கிப் வளம் பெருக்குகின்றன.

ஓங்கி ஒலிக்கும் எம் பாடல்கள் உன் புகழை இன்று பாடுகின்றன. எங்கும் பரந்து விளங்கும் வெண்ணொளி கொண்ட பூமியே (பிருத்வியே). கனைக்கும் குதிரையைப் போல நீ புயல் மேகங்களை செலுத்துவாயாக.

உனது மேகங்களிலிருந்து புயலடித்து பெரும் மழை பெய்யும் போது உன் ஆற்றலினாலேயே நீ மரங்களையும் பெரும் வனங்களையும் வீழாமல் காப்பாற்றுகின்றாய். (ரிக் வேதம் 5:84: 1-3)

பூமியை தாயாக மட்டுமல்ல பெரும் சக்தியாக உலகின் அனைத்து உயிர்களுடனும் வளி மண்டலத்துடனும் தொடர்புடைய இயக்க சக்தியாக உருவகிக்கிறது இப்பாடல். மரங்களை வேருடன் பிடுங்கும் சக்தி கொண்ட புயல் மழைகளை கொட்டும் மேகங்களும் அவளுடைய ஆற்றலே. அப்புயலையும் மிஞ்சி மரங்கள் மண்ணில் வேரூன்றி பலமாக நிற்க வைப்பதும் அவளது ஆற்றலே. இன்றைய Gaia சூழலியல் சட்டகத்தை எதிர்நோக்கும் ஒன்றாகவே திகழ்கிறது.

அவள் விண்ணுடன் இணைந்து அனைவருக்கும் வாழ்வளிப்பவள். அனைவரையும் காப்பாற்றுபவள். (ரிக் 1.160.1,2) இந்த தெய்வீக இணைப்பின் குழந்தைகளே ரிக் வேத கவிகள் அவர்கள். விண்ணும் பூமியும் காளையும் பசுவுமாக உருவகிக்கப்படுகின்றன. அவற்றின் பாலை கறந்து அளிப்பவனாக ரிக்வேத கவி காட்டப்படுகிறார். (1.160.3)

பிருத்வி வாழ்வளிப்பவள் மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவில் மனிதனை அவள் மீண்டும் அரவணைத்துக் கொள்கிறாள். ஒரு அன்னை தன் குழந்தையை தன் ஆடையாலேயே மூடிக்கொள்வது போல பிருத்வி மரணமடைந்தவனை அரவணைத்துக் கொள்கிறாள் என்கிறார் வேத கவி (ரிக் 10.18.10)

பிருத்விக்கு மற்றொரு முக்கிய பரிணாம வளர்ச்சியும் இருந்தது. கலை வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் வரலாற்றாசிரியர் வித்யா தெஹேஜா என்பவர் பிருத்வி எனும் பெண் தெய்வமாக நிலத்தை காணும் பார்வை பெரும்பாலான இந்திய நிலத்தோற்றங்களுக்கு பெண் பெயர்களை அளித்ததது என்றும் இதுவே இந்தியாவை பாரத அன்னையாக காணும் பார்வையாக உருபெற்றது என்றும் கூறுகிறார். பாரத அன்னை எனும் கருத்தாக்கத்தின் வேரில் பிருத்வி எனும் புவியனைத்தையும் அன்னையாக காணும் பார்வை இருப்பதாக டேவிட் கின்ஸ்லே எனும் ஆராய்ச்சியாளரும் கூறுகிறார். இதில் ஒரு சுவாரசியமான பண்பாட்டு உளவியல் பரிணாமம் உள்ளது.

பின்னாட்களில் பிருத்வி குறித்த முக்கியமான தொன்ம-சிற்ப வடிவாக்கங்களில் முதன்மையானது விஷ்ணு வராக வடிவமாக பிருத்வியை காப்பாற்றுவதாகும். இதில் பிருத்வி விஷ்ணுவின் அரவணைப்பில் அல்லது பாதுகாப்பில் இருக்கும் தெய்வமாகவே காட்டப்படுகிறாள். பாரத விடுதலை இயக்கத்தின் போது பிருத்வி பாரத அன்னையாக காட்டப்படலானாள். அப்போது அவள் எவ்வித ஆண் தெய்வ பாதுகாப்பும் இல்லாத தனிப்பெரும் தெய்வமாக வரைபடங்களில் வெளிப்பட்டாள். பாரத அன்னையாக இந்தியா உருவகிப்படுவது குறித்த தன்னுடைய அண்மை நூலில் சுமதி ராமசாமி இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டி இது புதிய தேசபக்தியின் உத்வேகத்தால் விளைந்ததாக கூறுகிறார். ஆனால் வேதம் அளிக்கும் பிருத்வியின் சித்திரத்தை காணும் போது என்ன தோன்றுகிறது? அவள் பல பாடல்களில் விண்ணுடன் இணைத்துப் பேசப்பட்டாலும் கூட அவளைக் குறித்த மூன்று தனிப்பாடல்கள் அவளை தனித்தியங்கும் பேரியக்க சக்தியாக உருவகிப்பதை காண்கிறோம். இந்திய தேசிய இயக்கம் உருவாக்கிய ‘புதிய’ புவி அன்னையாகிய பாரதமாதா எனும் தனிப்பெரும் பெண் தெய்வத்தின் வடிவ சாத்தியம் வேதத்திலிருந்து உருவானதாகவே கருத வேண்டும்.

இந்தியாவின் அனைத்து சக்தி பீடங்களுமே சதி தேவியின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் எனும் பின்னாள் புராணக் கதை பார்வதியை பிருத்வியுடன் இணைக்கிறது. ஆக அனைத்து பெண் தெய்வ பரிணாம சாத்தியங்களையும் வேத பிருத்வி தன்னுள் கொண்டிருந்தாள்.

இந்த பிருத்விக்கு இணையான தொல்-ஐரோப்பிய பெண் தெய்வம் கய்யா (Gaia). பிருத்வியையும் Gaia வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏன் ஐரோப்பிய பாகனீயத்தை ஆபிரகாமியம் அழித்தொழிக்க முடிந்தது என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். உதாரணமாக ஹெஸியாட் (Hesiod கிமு ஏழாம் நூற்றாண்டு) என்கிற கிரேக்க கவி பண்டோரா எனும் முதல் பெண்ணை விண் இறைவனான ஸீயஸ் தெய்வம் மனிதனுக்கு தண்டனை அளிக்க படைத்ததாகவும் அவள் வெளியே அழகாகவும் உள்ளே மண்ணால் நிறைந்திருந்ததாகவும் கூறுகிறார். இந்த மண் கய்யா எனும் புவித்தெய்வம். பெண்ணை சாபமாக பார்க்கும் இந்த போக்குக்கு நேர் எதிரான போக்கை இந்திய வேத தொன்மத்தின் வளர்த்தெடுப்பில் காண்கிறோம். இங்கும் பெண்ணை சாபமாகவும் மாயப்பிசாசாகவும் பார்க்கும் போக்குகள் இருந்தன. ஆனால் அதற்கு எதிராக பெண் தெய்வத்தை பிரதானப்படுத்தும் போக்கும் இங்கு இருந்து கொண்டே இருந்தது.

பூமி தெய்வத்தை அதன் அனைத்து சிறப்புகளுடனும் துதிக்கும் துதி அதர்வண வேதத்தில் உள்ளது. அதன் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு எழுத்தாளர் ஜடாயுவால் செய்யப்பட்டுள்ளது. அது காட்டும் சில விஷயங்கள் குறித்து அடுத்து காணலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

ஸ்ரீ அரவிந்தர், The Secret of the Veda, ஸ்ரீ அரவிந்தர் ஆஸிரமம் பாண்டிச்சேரி

Madhu Bazaz Wangu, Images of Indian goddesses: myths, meanings, and models, Abhinav Publications, 2003

சுமதி ராமசாமி, The Goddess and the Nation: Mapping Mother India, Duke University Press, 2010

ராய்முண்டோ பணிக்கர், The Vedic experience: Mantramañajari: an anthology of the Vedas for modern man and contemporary celebration, மோதிலால் பனார்ஸிதாஸ், 1983

ஆழி பெரிது!

17. உஷஸ்: ஞானத்தின் விடியல்

 

மற்றொரு வேத பெண் தெய்வம் உஷஸ். இதே தெய்வம் கிரேக்கத்தில் ஈயோஸ் என்றும் ரோமானியர்களால் அரோரா என்றும் வணங்கப்பட்ட பெண் தெய்வம். இந்தியாவின் வேத இலக்கியத்தில் இந்த தெய்வம் வடிக்கப்பட்டிருப்பதற்கும் பிற பாகனீய மதங்களில் இத்தெய்வம் சொல்லப்பட்டிருப்பதற்குமான வேறுபாடு முக்கியமானது. வேத பண்பாட்டில் மட்டுமே ஒரு பெண் தெய்வ வடிவம் தொடர்ந்து பரிணாமத்துக்கு உள்ளாகும் படியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என யோசித்தால் அதற்கு பதிலாக ஒன்றுதான் தோன்றுகிறது. அது வேதம்தான். தெய்வ வடிவங்களின் ஆதார படிமம் வேதங்களில் பாதுகாக்கப்பட்டது. அதே நேரத்தில் சமுதாயத்தில் அவற்றை பல தேவைகளுக்கு ஏற்ப மேலெடுத்து செல்ல முழு சுதந்திரம் நிலவியது. இந்த பாதுகாப்புத்தன்மைக்கும் சுதந்திர புத்தாக்கத் தன்மைக்குமான தொடர்பு மிகவும் நுணுக்கமாக பேணப்பட்டது. இதுவே இந்த பண்பாட்டின் அதிசயிக்கத்தக்க தொடர்ச்சி. இது இன்மையே பிற பாகனீய மதங்களை ஏக-இறைக் கோட்பாட்டாளர்களால் எளிதாக அழிக்க முடிந்தது.

உஷஸ் அடிப்படையில் அதிகாலை. அவள் ஒளிக்கிரகணங்களாகிய பசுக்களின் தாய். அவள் தேவர்களின் தாய் தெய்வமான அதிதியின் சக்தி (ரிக் 1.113.19) பிரபஞ்ச ஒழுங்கினை அடியொற்றி செல்பவள். எந்த திசையையும் அவள் விட்டுவிடுபவளல்ல. (ரிக் 1.124.3) அவள் சத்தியங்களை வெளிக் கொணர்பவள். சத்தியத்துக்கு கட்டுப்பட்ட ஒழுங்கினை கொண்டு வருபவள். தனது பாதையில் ஒளியைக் கொணர்பவள். (ரிக் 5.80.1) அவள் உண்மையின் ஒளியாக தோன்றி விரிவடைபவள், சத்தியத்தால் மேன்மையானவற்றை வெளிக்காட்டுபவள். பௌதீகமான அதிகாலையிலிருந்து அகவெளியில் சத்தியத்தை தரிசிக்கும் ஓர் உணர்வொளியாக உஷஸ் வேத கவிதைகளில் மாறுகிறாள்.

அத்துடன் பின்னாட்களில் ஹிந்து இறை வடிவங்களின் ஒரு அடிப்படை படிமத்தை ரிக் வேதம் உஷஸ் மூலமாக நமக்கு அளிக்கிறது. அவள் சத்தியமான (தெய்வங்களின்) சத்தியமாக இருக்கிறாள். மகோன்னதமான (தெய்வங்களின்) மகோன்னதமாக இருக்கிறாள். தெய்வங்களின் இறைவியாக இருக்கிறாள். (ரிக் 7.75.7) பின்னாட்களின் இறைவனின் சக்தியாக அவன் தேவி உருவகிக்கப்படுவாள்.

உஷஸின் மற்றொரு முக்கியத் தன்மை அவள் நல்லவை நாடி இனிய சொல்லும் வாக்கினள். அதனால் வளம் சேர்ப்பவள். (ரிக். 1.92.7 மற்றும் 1.92.14) நல்லுண்மைகளை சொல்பவள் என்கிறது வேதம். உண்மையே நன்மை தருவது என்பதால் உண்மையே (அதுவே ரிதம்) இதமானது. அந்த இதமான உண்மையை அவள் வழங்குகிறாள். அல்லது உண்மையின் வலிமையை முழு ஒளியை நாம் தாங்குவோமோ இல்லையோ அவள் அதனை இனிமையாக இதமாக நமக்கு அளிப்பவள். சைவ சித்தாந்திகள் சொல்லுவார்கள் இறைவனின் கருணையை முழுமையாக தாங்கிக் கொள்ள நம்மால் இயலாது என்பதால் அன்னை அதை வாங்கி நாம் தாங்கிக் கொள்ளும் படி தக்கவாறு அளிக்கிறாள் என்று. இத்தகைய பிற்கால பல விரிவு சாத்தியங்களுக்கான விதையை வேத இலக்கிய படிமம் தன்னுள் கொண்டிருக்கிறது. சுன்ருதா என்கிற வார்த்தையை வேதம் பயன்படுத்துகிறது. சாயனர் அதை ‘இனிமையும் உண்மையும் கொண்ட வாக்கு” என பொருள் கொடுக்கிறார். உண்மையை சொல்வது அதை இனிமையாக இதமாக சொல்வது என்பது ஒரு முக்கியமான வேத மதிப்பீடு. அதனை நாம் வள்ளுவத்திலும் தரிசிக்கிறோம்.

உஷஸ் படர்ந்து பரவும் ஒளியின் கண்ணாக எங்கும் விரிகிறாள். அறிவு கொண்டவர்களால் பாடப்படும் ஞானத்தின் அனைத்துப் பாடல்களையும் அவள் கேட்கிறாள். உயிர்களின் அனைத்து இயக்கமாகவும் அவள் இருக்கிறாள். (ரிக். 1.92.9) மனதையும் உயிரையும் இயக்கும் புத்தியக்க ஒளி சக்தியாக உஷஸ் இங்கே காட்டப்படுகிறாள்..

உஷஸ் அகவெளியில் சத்தியத்தின் தேவி. புற வெளியில் பிரபஞ்ச ஒழுங்கின் வெளிப்பாடாக மனிதர்கள் உணரும் அதிகாலை விடியல். சமூக தளத்தில் அவள் .  உஷஸ் நீதியின் தேவியாக விளங்குகிறாள். வலிமையானவர்கள் கட்டுப்படுத்தி வேலியிட்டு வைத்திருக்கும் இயற்கையின் செல்வங்களை எளியோருக்கு வழங்குபவள். (7.75.7)

ஸ்ரீ அரவிந்தர் வேதத்தின் ரகசியம்  நூலில் உஷஸை இவ்வாறு விளக்குகிறார்: ‘ஒளிமயமான அதிகாலையின் வடிவம் (உஷஸ்) நம்மை புற இருள், சடங்கு இருள், மற்றும் வேதங்களின் உண்மை பொருள் குறித்த அறியாமையின் இருள் ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறாள். இந்த இருள்களே இரவில் ஒரு குழியிலிருந்து மறுகுழியாக நம்மை கீழே விழ வைக்கின்றன. உஷஸ் மூடிய கதவை திறக்க செய்து நம்மை வேதத்தின் இதயத்துக்கே அழைத்துச் செல்கிறாள் உஷஸ்”

அதென்ன சடங்கின் இருள்? உஷஸ் தெய்வங்களின் பார்வை என அழைக்கப்படுகிறாள். தெய்வங்கள் வேத பரிபாஷையில் உயர் சத்தியங்கள். சத்தியத்தின் நல் பார்வையாகவே உஷஸ் சொல்லப்படுகிறாள். இந்த அறியாமையை அகற்றும் நல்பார்வை வைணவத்தில் சக்கரத்தாழ்வாராக சுதர்ஸனமாக உருவகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஆணாக உருவகப்படுத்தப்பட்டாலும் அதன் 27 ஆரங்கள் பிரஜாபதியிலிருந்து உதித்த பெண் சக்திகளின் உருவகமாகவும் அதை முழுமையாகவே காலத்தின் உருவகமாகவும் கூறுவது உண்டு.

திருமழிசையாழ்வார் வாழ்க்கையில் ஒரு ஐதீக நிகழ்ச்சி சொல்வதுண்டு. பெரும் புலியூர் அடிகள் எனும் தீட்சிதர் திருமழிசையாழ்வாரை வேத வேள்வியில் முதல் மரியாதை (அக்ர பூஜை) பெற அழைத்தார். அங்கு வேள்வியின் முதன்மை பூசகராக இருந்தவர்களும் பிற சடங்காச்சார வாதிகளும் இதை எதிர்த்தனர். ’பிரப்பங்கூடை முடைந்து விற்றுப் பிழைக்கும் இந்த தாழ்குலத்தவனை இங்கே வேள்வியின் முதல் மரியாதை பெற அழைத்து வந்துவிட்டீர்களே” என அவர்கள் கடிந்தனர். திருமழிசையாழ்வாரையும் அவமதிக்க துணிந்தனர். அப்போது திருமழிசையாழ்வார் பாடினார்:

அக்கரங்கள் அக்கரங்கள்

என்றுமாவ தென்கொலோ?

இக்குறும்பை நீக்கிஎன்னை

ஈசனாக்க வல்லையேல்,

சக்கரங்கொள் கையனே!

சடங்கர் வாய் அடங்கிட

உட்கிடந்த வண்ணமே

புறம்பொசிந்து காட்டிடே!

அந்த வேள்விசாலையின் வைதிக சடங்கரெல்லாம் அதிசயிக்கும் வண்ணம் அவருடைய நெஞ்சிலிருந்து அனற்பிழம்பின் ஒளி வீச ஆரம்பித்ததாம். பின்னர் ஆழ்வார் மேனியிலேயே விஷ்ணு காட்சியளித்தார் என்கிறது ஐதீகம். சத்தியத்தின் முதல் தரிசனமாக சடங்கர் வாய் அடங்கிட ஒளி வீசிய அந்த ஞான ஒளி சக்கரத்தின் வேத பெண் உரு உஷஸ் என்றே கொள்ளலாம்.

உஷஸ் பின்னாட்களில் உருவான அனைத்து இறை உருவங்களுடன் இணைந்த சக்தியாக மாறினாள். அவளது வேத பெயர் வழக்கில்லாமல் போனாலும் வேதத்தில் என்றென்றும் உள்ளது. மற்றொரு முக்கியமான, இன்றைக்கு நமக்கு மிகவும் தேவையான வேத பெண் தெய்வத்தை அடுத்து காண இருக்கின்றோம்.

மேலதிக விவரங்களுக்கு:

  • ஸ்ரீ அரவிந்தர், The Secret of the Veda, ஸ்ரீ அரவிந்தர் ஆஸிரமம் பாண்டிச்சேரி
  • பி.ஸ்ரீ, தொண்டக்குலமே தொழுகுலம், கலைமகள் 1957.

ஆழி பெரிது!

16. வேதத்தில் பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள் வேதங்களில் இல்லை. ஆண் தெய்வங்களே அதில் அதிகமாக உள்ளன என்கிற மேலைநாட்டு இந்தியவியலாளர்களின் கோட்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் பிற்காலத்திய இந்தியவியலாளர்கள். மேற்கத்திய மனதிற்கு பொதுவாகவே இருமைப்படுத்தும் பார்வை இருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களும், பொதுவான மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களும், வெளியில் இருந்து வந்த ஆரியர்களின் பண்பாடே வேதப்பண்பாடு என்றும் இங்குள்ள பூர்விகவாசிகளின் பண்பாடு வேறானது என்றும் கூறினார்கள். பின்னாட்களில் பிஷப் கால்டுவெல் என்கிற கிறிஸ்தவ மத பிரச்சாரகர் திராவிட இனம் இங்கே ஆரியர்கள் வருவதற்கு முன்னதாக இருந்ததாகவும் அந்த திராவிடர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள்தாம் என்றும் கூறினார். இன்றைய மரபணு ஆராய்ச்சிகளும் அகழ்வாராய்ச்சிகளும் இந்த ஆரிய-திராவிட இனவாதங்களை பெருமளவில் பொய்யாக்கியுள்ளன. என்றாலும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது. அதாவது அவர்கள் இன்னும் ஆரிய-திராவிட இனவாதத்தை நம்புகிறார்கள். அதை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட அது அவர்களின் அறிதலில் ஒரு பாகமாகிவிட்டது.

இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மார்க்சிய வரலாற்று அறிஞரான கோசாம்பியைச் சுட்டிக்காட்டலாம். அவர் வேதங்களில் ஆரியர்கள் ஆரியரல்லாத அல்லது ஆரியருக்கு முந்தைய தாய் தெய்வ வழிபாடுகளைத் தம்முடையதாக்கிக் கொண்டதாகக் கூறுகிறார். எந்த தாய் தெய்வ வழிபாட்டையும் அல்லது தாய் தெய்வம் சார்ந்த தொன்மத்தையும் இனக்குழு வரலாற்றின் நினைவாகவே காண்கிறார். உதாரணமாக மகிஷாசுரமர்த்தினி தொன்மம் என்பது எருமையை இனக்குழு குறியீடாகக் கொண்ட ஒரு குழுவின் போராட்ட வரலாறு தொன்மமானதே என்கிறார். இத்தகைய மார்க்சிய புரிதல்கள் தொன்மங்களை வரலாற்று நினைவுகளாக அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளின் குறியீடுகளாக புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றன. மார்க்சிய அறிதல் முறையில் கோசாம்பி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கினார். ஆனால் இந்திய அறிதல் முறையில் இதை நாம் காண வேண்டியுள்ளது. தொன்மம் அல்லது ஒரு குறியீடு குறித்த ஒரு முழுமையான பார்வை தேவை. அதாவது அந்த குறியீட்டை யார் உருவாக்கினார்களோ எந்த காரணத்துக்காக அதனை உருவாக்கினார்களோ அவர்களின் பார்வையில் அதனை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழலை நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்ன தேவைகள் –சமூக, பொருளாதார அரசியல் சூழல்கள் மற்றும் அகத்தேவைகள் இணைந்து இந்த குறியீட்டை உருவாக்க ஒரு கவியின் அதி-உணர்வுகளைத் தூண்டின? இதனை நாம் கேள்வியாகக் கொண்டால் அந்த தேடலில் துரதிர்ஷ்டவசமாக நாம் கோசாம்பியின் அணுகலை முழுமையான ஒரு பார்வையாக கொள்ள முடியாது. மேலும் மார்க்சியத்தில் இன்றியமையாத அடிப்படையான மோதலை மையப்படுத்தும் பார்வை நம்மை தவறான திசையிலும் இட்டுச்சென்றுவிடக் கூடும்.

ஏற்கனவே ஆரிய-திராவிட அல்லது ஆரியரல்லாத ஒரு பண்பாட்டு இருமை அவற்றுக்கிடையிலேயான மோதல் ஆகிய கோட்பாடுகள் நம் சமூக ஆராய்ச்சிகளுக்கு ஒரு பெரும் சுமையை அளித்துவிட்டன. இந்த இருமைத்தன்மையின் மேல் மேலும் மேலும் இரட்டை நிலைபாடுகள் சுமத்தப்படுவது நமது அறிதலை மேலும் மேலும் குழப்பங்களிலும் தெளிவான பார்வையின்மையிலும் ஆழ்த்திவிடுகின்றன.

ஆரிய-திராவிட இரட்டை நிலைபாடுகள் தவறானது என்பதே அறிஞர்களின் ஆன்ற முடிவு. இந்த தொடரும் அந்த நிலைப்பாட்டுடன்தான் வேதங்களை அணுகுகிறது. இந்த அணுகலுடன் வேத பெண் தெய்வங்களை இந்திய பண்பாட்டின் மிக முக்கிய அம்சமான பெண் தெய்வ வழிபாட்டுடன் இணைக்க முடியுமா என பரிசீலிக்கிறது. ஆண் தெய்வங்களே வேதங்களில் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ள போது எப்படி இன்றைய சூழலில் தனிப்பெரும் பிரதான வழிபாட்டு முறையாக விளங்கும் பெண் தெய்வ வழிபாட்டை (சாக்தம்) வேதத்துடன் இணைக்கமுடியும்?

இன்று பரந்து விரிந்து செழித்திருக்கும் பாரத பெண் தெய்வ வழிபாட்டுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகில் இந்த அளவு செழுமையும் பன்மைத்தன்மையும் கொண்ட பெண் தெய்வ வழிபாட்டை இந்தியாவில் மட்டுமே காணமுடியும். இந்த தனித்தன்மையின் பரிணாம வேர்களை நாம் தேடினால் அவற்றை வேத இலக்கியத்தில் கண்டடைய முடிகிறதா என்பதையே நாம் காண வேண்டியுள்ளது. வேதத்தின் மொழிப் பிரவாகமே அன்னையாக –வாக் எனும் பெண் தெய்வமாக- உருவகிக்கப்பட்டுள்ளது. ஆக வேதமே வாக் எனும் பெண் தெய்வத்துக்குள்ளாக இருப்பது என உருவகிக்கமுடியும். வேதத்தின் ஆதி தாய் தெய்வம் அதிதி. தெய்வங்களின் தாய். நன்மாந்தர்களின் தாய். ரிதமெனும் பிரபஞ்ச ஒழுங்கின் என்றென்றைக்குமான அரசி அவளே. அரசர்களின் அறமெனும் பாதுகாப்பு அவளே. என்றென்றும் அழியாமல் என்றென்றைக்கும் விரிவாகும் தாய் தெய்வம். காப்பதில் அதி-உயர் சான்றாண்மை கொண்டவள் அவள். சான்றாண்மையின் பாதையில் மாந்தரை வழிநடத்துபவள் அவள். இவ்வாறு யஜுர் வேதம் (21.5) அவளைப் போற்றுகிறது. ஒரு தாய் தனக்கு மிகவும் செல்லமான ஒரு குழந்தை அளிக்கும் மலர் மாலையை எப்படி ஆனந்தத்துடன் அணிந்து கொள்வாளோ அதே போல நான் அளிக்கும் இந்த பாடலை ஏற்றுக்கொள் என அதிதியிடம் வேண்டுகிறார் ரிக்வேத கவி.(5.42.2)

புகழ்பெற்ற இந்தியவியலாளர் ஆனந்த குமாரசாமி இந்தியாவின் மிகப்பழமையான தாய் தெய்வ சிற்பங்கள் அதிதியையே காட்டுவனவாக இருக்கலாம் என ஊகிக்கிறார்.வேதத்தின் பெண் தெய்வ சொற்சித்திரங்களே பின்னர் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள பெண் தேவதை வடிவங்களின் படிம ஆதாரமாயிற்று என்கிறார் ஸ்டெல்லா க்ராம்ரிஷ் என்கிற இந்தியவியலாளர். இதிலிருந்து மேலும் பரிணமித்து மக்களிடையே பரவிய பெண் தெய்வ வடிவம் இப்போது லஜ்ஜா கௌரி என அழைக்கப்படுகிறது. பொதுவாக மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் வளமைக்கான பெண் தெய்வம் (fertility goddess) என்பார்களே அத்தகைய பெண் தெய்வத்துக்கான அனைத்து தன்மைகளும் கொண்ட தெய்வம் இது. இதன் மிகப் பழமையான வடிவத்தை ஹரப்பா பண்பாட்டுக் காலங்கள் கொண்டே காணலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதே தன்மை கொண்ட படிமம் சந்திரகேதுதுர்க்கத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சுதை வடிவமாகக் கிடைக்கிறது. லஜ்ஜா கௌரி என அறியப்படுபவள் தலையற்ற பெண் தெய்வம். பத்மத்தை தலையாகக் கொண்டு இருகால்கள் விரித்து குத்த வைத்திருக்கும் பெண் தெய்வம். இவளது மிகத் தொன்மையான கவிப்படிமம் ரிக்வேதத்தில் கிடைக்கிறது. அவள் களங்கமற்றவள்; புவியைத் தன் மடியில் கொண்டவள்; அனைத்து வளங்களையும் அள்ள அள்ள குறையாமல் தருபவள்; புவியின் மையம்; அனைத்து தேவர்களின் அன்னை. ஆம். லஜ்ஜா கௌரியின் ஆதார வடிவம் வேதங்களில் அதிதி என அறியப்படும் பெண் தெய்வமே. அதிதி எனும் வேத இலக்கிய வடிவத்தை அவள் ஏற்பதற்கு முன்னால் பல மக்கட் சமுதாயங்களால் அவள் என்னென்னவோ பெயர்களில் வணங்கப்பட்டிருக்கலாம். ரிக் வேதத்தின் ஒரு பாடல் அவ்வாறு அதிதி வணங்கப்பட்ட அனைத்து வகைகளையும் அறிவிப்பது போலவே சொல்கிறது:

அதிதியே வான்; அவளே காற்று; அவளே அனைத்து தெய்வங்களும். அவளே அரசனும் மகவும்; அவளே அனைத்து மக்களும். அவளே இதுவரை பிறந்த அனைத்து வடிவங்களும். அவளே இனி தோன்றப்போகும் அனைத்து வடிவங்களும். (1.89.10)

லஜ்ஜா கௌரி என்கிற தெய்வமாக அவள் வழிபடப்பட்ட தெய்வமே வேதங்களில் அதிதி எனும் வடிவெடுத்தாள். அதிதி எனும் வேத பெண் தெய்வமே லஜ்ஜா கௌரி என்றும் வடிவெடுத்தாள். வடிவங்கள் அனைத்திலும் அவள் தனிப்பெரும் தாய் தெய்வமாகவே இருந்தாள்.  வேதத்தின் ஒரு முக்கியமான தன்மை இது அதில் காணப்படும் தெய்வ வடிவங்கள் ஆன்மீகக் குறியீடுகள் மெல்ல மெல்ல கனிந்து உள்ளேறியவை. மேலும் மேலும் வளர்பவை. வேதங்கள் முடிந்துவிட்ட இறை அறிவிப்புகளோ உறைந்துவிட்ட இறை வாக்குகளோ அல்ல. அவை உயிர்துடிப்பும் பரிணாம சாத்தியமும் கொண்ட ஆன்மிக வித்துக்களின் களஞ்சியம்.

மேலதிக விவரங்களுக்கு:

ஆழி பெரிது

15.  சரஸ்வதி  – அகமும் புறமும்

ஏன் நதி தெய்வங்களில் சரஸ்வதி மட்டுமே வாக் தேவதையாக வேத கவிகளால்
உணரப்பட்டாள் என ஸ்ரீ அரவிந்தர் கேட்கிறார். “வேதத்தின் ரகசியம்” (The
Secret of the Veda) எனும் தனது நூலில் அவரே அதற்கு பதிலும் அளிக்கிறார்.
இதனை அறிந்து கொள்ள வேத இலக்கியத்தில் சரஸ்வதி எப்படி மற்ற நதிகளுடன்
இணைத்துப் பேசப்பட்டுள்ளதோ அதே போல சரஸ்வதி ஒரு தெய்வமாக எப்படி பிற பெண்
தெய்வங்களுடன் இணைத்துப் பேசப்படுகிறாள் என நோக்க வேண்டுமென்கிறார் அவர்.

அவ்வாறு சரஸ்வதி இரு பெண் தெய்வங்களுடன் இணைக்கப்படுகிறாள். அந்த
தெய்வங்கள் பாரதி மற்றும் இளா என வேத இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றன.
பொதுவாக ஒரு அபிப்பிராயம் மேற்கத்திய இந்தியவியலாளர்களிடம் உண்டு. வேத
பண்பாட்டில் பெண் தெய்வங்களுக்கு மிகவும் ஒரு ஒதுங்கிய நிலைதான்
கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்திரன் வருணன் போன்ற ஆண் தெய்வங்களே
முக்கியத்துவம் பெறுகின்றன என்பது அவர்களின் நிலைபாடு.

ஆனால் ஸ்ரீ அரவிந்தர் போன்ற இந்திய யோக மரபு மற்றும் குறியீட்டு பரிபாஷை மரபுகள்
சார்ந்து வேத வியாக்கியானங்களை முன்னெடுத்தவர்கள் இவ்விஷயத்தில்
மாறுபடுகின்றனர்.  வேதங்களில் உண்மையில் பெண் தெய்வங்கள் உயர்ந்த
இடங்களில் வைத்து பேசப்படுகின்றன. உயர் ஆன்மிக சக்திகளின் உருவகங்களாக
பெண் தெய்வங்கள் காட்டப்படுகின்றன .

பிற்கால புராணங்களில் சரஸ்வதியும் பாரதியும் ஒரே தெய்வத்தின் இரு
பெயர்களாக கருதப்பட்டாலும் வேதங்களில் அவை இரு வேறு தெய்வங்களே.
வேதத்தின் அக்னி சடங்குகளில் சரஸ்வதி, பாரதி, இளா ஆகிய
முப்பெருந்தேவியர் எப்போதுமே அழைக்கப்படுகின்றனர். பாரதி அல்லது மகி ஒளி
நிறைந்தவள் – கோமதி என அழைக்கப்படுகிறாள். அவளது இருப்பினில் ஆனந்தமான
உண்மை ஒளியினால் நிரம்பி வேள்விக்கு பயனளிக்கிறது. பின்னாட்களில் மகி
அல்லது பாரதி சரஸ்வதியின் மற்றோர் பெயராகவே ஆகிவிடுகிறாள் என்பதை இந்த
வேத உருவகங்களுடன் இணைத்து ஒரு முழுமைப்பார்வையை உருவாக்குகிறார் ஸ்ரீ
அரவிந்தர். அவர் வேத நதியான சரஸ்வதி குறித்து கூறும் விஷயங்களை இப்படி
தொகுத்துக் கொள்ளலாம்:

ஒரு பேருண்மையை கவி கண்டுணர்கிறான். அவனில் ஒரு ஒளிக்கீற்றாக அது
தோன்றுகிறது. பிரபஞ்ச பேரொழுங்கின் ஒரு அகதரிசனமான அந்த உண்மை ஒரு ஒளி
ஓட்டமாக அவனுக்குத் தெரிகிறது. தங்கு தடையற்றதோர் அக ஒளிப்பிரவாகம் அது.
அதுதான் சரஸ்வதி. பின்னர் அது அவனில் விரிவடைகிறது. தன்னுள் ஒரு
அகப்பிரவாகமாக அவன் தரிசித்த அந்த உண்மை அவனே வியக்கும் விதத்தில் அவன்
காணும் தளங்களிலெல்லாம் ஒத்திசைவுடன் விரிந்து நிரம்புகிறது. இவ்விரிவே
மகி அல்லது பாரதி. பிரபஞ்ச பேரொழுங்கை ரிதம் என வேத கவிகள் அழைத்தனர்.
ரிதம் எப்போதும் விரிவானதென்றே வேதங்களில் அழைக்கப்படுகிறது. சரஸ்வதி
என்பது சத்திய தரிசனம் அகத்தில் தோன்றி வார்த்தைகளாக வெளிப்படும்
செயல்பாட்டுச் சக்தியின் உருவக தெய்வம். அவள் ஒரு நதிப்பிரவாகம் உள்ளும்
வெளியிலும்.

சரஸ்வதி உள்ளுணர்வின் ஓட்டத்தை பிரபஞ்ச பேரொழுங்கான ரிதத்துடன் ஒத்திசைவு
கொள்ளச் செய்கிறாள். அவளே உள்ளுணர்வை விழித்தெழ வைப்பவள். மகி அல்லது
பாரதி இந்த உள்ளுணர்வின் தரிசனங்களை விரிந்துபட செய்கிறாள். சரஸ்வதியுடன்
தொடர்புடைய மூன்றாவது தெய்வம் இளா. இவளும் சத்தியத்துடன் தொடர்புடையவளே.
இவள் அறிவாக இந்த உள்ளுணர்வின் விழிப்புடனும் வெளிப்பாடுடனும்
கலக்கிறாள். அவளே சத்தியத்தின் திருஷ்டி. இவை மூன்றும் ஒன்றன் பின்
ஒன்றாக நடக்கும் நிகழ்வுகளல்ல. அனைத்தும் ஒன்றாக நிகழும் நிகழ்வுகள்.
ஆனால் இவை எல்லாம் சரஸ்வதி எனும் நதிக்கும் தெய்வத்துக்குமான
பொதுத்தன்மைகளுடன் இசைகின்றன? ஸ்ரீ அரவிந்தர் சரஸ்வதியுடனான ஆறு
நதிகளுமான அந்த உருவகமே உள்ளுணர்வின் எண் குறியீடு என கருதுகிறார். ஏழு
என்பது உள்ளுணர்வின் எண் வடிவமாக வேதங்களில் குறிப்பிடப்படுவதாக அவர்
கருதுகிறார்.

வேதரிஷிகள் தங்களைச் சுற்றியுள்ள புவிபரப்பின் இயற்கை அமைப்புகளையே
தங்கள் அக உலகக் குறியீடுகளாக மாற்றி அமைத்தார்கள். பின்னாட்களில்
பாரதத்தின் புராண மரபெங்கிலும் இது ஒரு முக்கிய அறிதல் முறையாக
பயன்படுத்தப்பட்டது. புற இயற்கைச் சின்னமொன்று அகவெளி தொன்மத்தின்
குறியீடாக மாற்றப்படுவது. புனித புவிப்பரப்பு (sacred geography)
இவ்விதமாகவே உருவாகியது. நாட்டார் வழக்குகள், இதிகாச வழக்குகள் என
அனைத்திலும் இந்த பார்வை பாரதமெங்கிலும் வழங்குவதை காணலாம். இது
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் ஒரு முக்கிய வழிமுறையாக அமைந்தது என
தற்போதைய சூழலியலாளர்களும் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

அடுத்ததாக வேதம் சொல்லும் பெண் தெய்வங்கள் குறித்து காணலாம். மார்க்சிய
வரலாற்றாராய்ச்சியாளர் கோசாம்பி இந்திய வரலாறே தோற்கடிக்கப்பட்ட தாய்
தெய்வங்களின் வரலாறு என்பார். ஆரியர்கள் ஆண் தெய்வ வழிபாடு செய்த
தந்தைவழி சமூகத்தவர்கள் என்றும் இந்திய பூர்வக்குடிகள் தாய்வழி
சமூகத்தினர் என்றும் கருதும் கருத்து சட்டகத்திலிருந்து உருவானதே
இக்கருத்து. இன்று இந்தியாவில் பரந்து காணப்படும் தாய் தெய்வ/பெண் தெய்வ
வழிபாடுகளுக்கும் வேத மதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே இதன்
உள்ளார்ந்த பொருள். இது உண்மையா? என்பதை அடுத்ததாக ஆராயலாம்.

மேலதிக விவரங்களுக்கு: Sri Aurobindo: The secret of the Veda: Saraswati
and Her Consorts (Chapter : IX)

ஆழி பெரிது!

14. சரஸ்வதி : சில நவீன ஆராய்ச்சிகள்

சரஸ்வதி நதி குறித்த விவரணங்கள் வேத இலக்கியங்களுடன் நின்றுவிடவில்லை. புராணங்களிலும் நீள்கின்றன. சரஸ்வதியை வரலாற்றில் ஓடிய நதியாக நாம் ஏற்றுக்கொண்டால், ஒரு பழமையான உண்மை குறித்த நினைவு எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம மாற்றங்கள் அடைகிறது என்பதை காண முடியும். உதாரணமாக மிகவும் முக்கியமான முதன்மையான புராணமாகக் கூறப்படும் விஷ்ணு புராணத்தில் சரஸ்வதி நதி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. ஆனால் மார்கண்டேய புராணத்தில் அந்த நதி வேதத்தில் சரஸ்வதி எந்த வரிசையில் கூறப்படுகிறதோ அதே வரிசையில்தான் கூறப்படுகிறது. பத்மபுராணம் மற்றொரு சுவாரசியமான விஷயத்தை சொல்கிறது. அனைத்தையும் விழுங்கும் அக்னி பரவையதால் சரஸ்வதி நதி மறைந்ததாக அது சொல்கிறது.  இங்கு அக்னி என கூறப்படுவது அந்த நிலப்பரப்பு முழுக்க பரந்து விழுங்கிய ஒரு வறட்சியை குறித்த நினைவாக இருக்கலாம்.

நவீன ஆராய்ச்சிகளில் சரஸ்வதி நதி ஒரு மர்மத்தின் ஊற்றுக்கண்ணாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். நிலத்தகடுகளின் இயக்கம் குறித்த ஆராய்ச்சியும் செயற்கைகோள் தூர-புகைப்படத் துறையும் இந்த நதியின் இருப்பில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தின. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரு தேச பண்பாடு தன் நினைவுகளில் பதிவு செய்து வைத்திருந்த தொன்ம நதி அது. அறிவியல் – தொழில்நுட்பத்தின் உதவியுடன் அது மக்கள் நினைவில் மீண்டும் ஒரு ஆராய்ச்சித் தேடலாக பிரவாகிக்கத் தொடங்கியது. இத்தேடலின் தொடக்கப்புள்ளியான ஆராய்ச்சி தாள் விஞ்ஞானி யஷ்பால்-ஆராய்ச்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டது: ‘Remote Sensing of the ‘Lost’ Sarasvati River’.

சரஸ்வதி நதி குறித்த அறிவியல் ஆராய்ச்சி பலதுறை நிபுணத்துவமில்லாமல் செய்யப்பட முடியாத ஒன்று.. இன்னும் சொன்னால் பல துறைகளிலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு,  அந்த ஆராய்ச்சிகளின் போது கிடைத்த தரவுகள் ஒருங்கிணைந்து சரஸ்வதியின் தேடலை மேலும் மேலும் விரிவாக்குகின்றன. உதாரணமாக ராஜஸ்தானின் ஜெய்ஸால்மிர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர்கள் நிலத்தடி நீரில் ஒரு தனித்தன்மையை காண்கின்றனர். மழை நீர் சேகரிப்பினால் ஒரு இயக்கமற்ற  ஒரு தேக்கமாக இருக்க வேண்டிய நிலத்தடி நீர் ஒரு நீர் பிரவாகமாக ஓடிக்கொண்டிருப்பதை அவர்கள் காண்கிறார்கள். அது அண்மைக்கால மழைநீர் சேகரிப்பிலிருந்து பெறப்பட்டதல்ல மாறாக ஹிமாலய நதி நீர்களின் தன்மை கொண்டதாக இருப்பதை ஐஸடோப் ஆய்வுகள் மூலமாக அறிகிறார்கள். தொன்ம நதி ஒன்று ஐஸோடோப் ஆராய்ச்சியின் மூலம் உருபெறும் ஆராய்ச்சி அரங்கேறுகிறது.

நிலத்தடி நீர் பம்புகள் மூலம் வெளிக்கொணரப் படும் போது சில இடங்களில் நாற்பதாண்டுகளாக நீர் தங்கு தடையின்றி வந்துகொண்டே இருக்கிறது. 1999 இல் மற்றொரு ஆராய்ச்சி நிலத்தடி நீர் மட்டம் இந்த பாலைவனப்பகுதியில் குறையாமல் நீரோட்டமாக ஒரே அளவில் இருந்து வருவதைக் காட்டுகிறது. மகாபாரத்த்தின் கவித்துவ வரிகளை வேத சரஸ்வதி நதியை   “பூமியின் உள் உறுப்புகளூடாக ஓடும் கண்ணுக்குத் தெரியாத பிரவாகம்”  என்றல்லவா வர்ணித்தது! ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகள் இன்னும் உறுதியாக இதுதான் சரஸ்வதி நதி என தீர்மானித்துவிடவில்லைதான். அப்படி தீர்மானித்துவிட முடிந்த ஒற்றைக் கோட்டு சமாச்சாரமும் இல்லை இது. இதற்கிடையில் அரசியலும் புகுந்து கொண்டு விட்டது துரதிர்ஷ்டவசமானது.

சரஸ்வதி ஏன் மறைந்தாள்?  உண்மையில் மறைந்துவிட்டாளா என்ன?

இன்று ஹரப்பன் பண்பாடு என அகழ்வாராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில் சரஸ்வதி நதி ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவேதான் பல அகழ்வாராய்ச்சியாளர்கள் அதை சரஸ்வதி-சிந்து பண்பாடு என அழைக்க தயங்குவதில்லை. இந்த நதிப்படுகை நாகரிகத்துடன் நம் இன்றைய பாரத சமுதாயம் தொடர்ச்சியான பண்பாட்டு உறவு கொண்டுள்ளது. மேலே கூறியது போல இன்றைக்கும் ராஜஸ்தான் ஆழ்கிணறுகளுக்கு சரஸ்வதி நதியின் நிலத்தடி பிரவாகம் நன்னீர் அளித்து வருவது போல பாரத பண்பாட்டுக்கு ஊற்றுக்கண்களாக சரஸ்வதி பண்பாடு இருந்து வருகிறது. அதன் நினைவு நம் கூட்டு நனவிலியில்.

ஆனால் இந்த மகாநதியின் வரலாற்றில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த அந்த இயற்கை நிகழ்வுதான் என்ன? அது திடீரென நிகழ்ந்த பெருநிகழ்வா அல்லது நூற்றாண்டுகளாக நிகழ்ந்த ஒரு மெதுவான மாற்றமா? அண்மையில் வெளியான நூலில் இந்திய பண்பாட்டு ஆர்வலரான மிஷேல் தனினோ சரஸ்வதி பாய்ந்ததாகக் கருதப்படும் பிரதேசங்களில் செய்யப்பட்ட அனைத்து துறை ஆராய்ச்சிகளையும் தொகுத்து ஒரு சுவாரசியமான நூலாக தந்திருக்கிறார். அவர் இந்த நிலவியல், தொல்-தட்பவெப்பவியல், அகழ்வாராய்ச்சிகள் ஆகிய பலதுறை ஆராய்ச்சிகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அவர் பின்வருமாறு சரஸ்வதியின் மறைவினைக் காண்கிறார்:

பழங்கால தட்பவெப்ப சூழலை ஆராய்ச்சி செய்த ஏழு ஆராய்ச்சி முடிவுகள் ஹரப்பா பண்பாட்டு முதிர்ச்சி அடைந்த காலக்கட்டத்தை தொடர்ந்து அங்கு வறண்ட சூழல் நிலவியதென முடிவுக்கு வருகின்றன. இன்னும் ஏழு ஆராய்ச்சிகளோ அதே காலகட்டத்தில் அங்கு அதீத மழைச்சூழல் நிலவியதென முடிவுக்கு வருகின்றன இரண்டுமே நிகழ்ந்திருக்கலாம் அதீத மழை அதீத வறட்சி. நிலத்தடுக்குகளின் உராய்வு என  அனைத்துமே சரஸ்வதியின் “விநாசனத்தை” ஏற்படுத்தியிருக்கலாம் என கூறுகிறார் தனினோ.

அதன் கிளைகள் வேறு நதிகளுடன் இணைந்தன. ஒரு நதி மறைந்தது. அது வளர்த்த ஒரு பண்பாடு தடுமாறியது. வீழ்ச்சியடைந்தது. கடும் பிரயத்தனங்களின் பின்னால் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டு மீண்டது.

ஸ்ரீ அரவிந்தர் ஒரு கேள்வியை எழுப்புகிறார். வேத கால கட்டத்தில் சரஸ்வதி நதியாக மட்டுமில்லாமல் வாக் தேவதையாக, உள்ளுணர்வின் இறைவியாக சித்தரிக்கப்பட்டாள். வேத கால கவிகளுக்கு ஏழு நதிகள் தெரிந்திருந்தன. ஆனால் சரஸ்வதி மட்டுமே ஏன் வாக்காக வெளிப்படும் உள்ளுணர்வின் இறைவியாக சித்தரிக்கப்பட்டாள்?

மேலும் அறிய:

இந்த கட்டுரையின் அறிவியல் தரவுகள் மிஷேல் தனினோவின் The Lost River –On the trail of the Sarasvati (Penguin Books, 2010) எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.