இந்துத்துவ பயங்கரவாதத்தின் பலியாடுகள்

‘பழகுவதற்கு இனிமையானவர். உதவி யாருக்குத் தேவைப்பட்டாலும் தயங்காமல் செய்யக்கூடியவர். நரோடா பாட்டியாவில் (கலவரத்தின்போது) அவர் இருந்தார் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை!’ மாயா கோட்னானியுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பணியாற்றிய ஒரு பாஜக தலைவரின் ஆச்சரியம் இது. (தி வீக், செப்டெம்பர் 16, 2012).

குஜராத் 2012 கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளி என்று தீர்ப்பாகி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மாயா கோட்னானி. அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் உறுப்பினராகத் தன் பணியைத் தொடங்கிய மாயா கோட்னானிக்கு மருத்துவத் தொழிலைக் காட்டிலும் அரசியலில் ஈடுபாடு அதிகம் இருந்ததால் விரைவில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உயர்ந்தார்.

பரோடா மருத்துவக் கல்லூரியில் சேரும்போதே ஆர்.எஸ்.எஸ் பெண்கள் அமைப்பிலும் இணைந்துகொண்டார் மாயா கோட்னானி. அவர் தந்தை, பிரிவினையின்போது இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர். தீவிர ஆர்எஸ்எஸ் ஊழியர். (மாயா கோட்னானி பற்றிய அறிமுகம் இங்கே கிடைக்கிறது.) காவி அரசியல் இயல்பாகவே அவரையும் பற்றிக்கொண்டது.

நரோடா பாட்டியா சம்பவத்தின்போது கலவரக்காரர்களைத் தூண்டிவிட்டதாகவும், துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆயுதங்களை விநியோகித்தாகவும் மாயா கோட்னானிமீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.  தனது காரில் ஆயுதங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு மாயா கோட்னானி நரோடா பாட்டியா சென்றபோது கணவர் சுரேந்திரா (அவரும் மருத்துவரே) அவரைத் தடுக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. ’ஆனால், கோத்ரா சம்பவத்தால் கோபமடைந்த’ மாயா தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

மாயாவின் மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். தான் நடத்தி வந்த மருத்துவமனையை இன்னொரு மருத்துவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விற்றிருக்கிறார் மாயா. எனில், தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று அவருக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டதா?

2002 குஜராத் படுகொலைகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரை குற்றவாளிகள் என்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி அவர்களுள் ஒருவர். அவருக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கும் மற்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘மாயாபென் அடிப்படைவாதத்தை மானசீகமாகப் பின்பற்றுபவர் ‘ என்கிறார் குஜராத் பல்கலைக்கழகப் பேராசிரியர் கவுரங் ஜானி. ‘தனக்கு ஒதுக்கப்பட்ட பணியைத்தான் அவர் செய்திருக்கிறார்.’

‘அமைதியான’, ‘அனைவருக்கும் உதவும் மனப்பான்மை’ கொண்ட ஒருவரை  மதவாத வன்முறையாளராக உருமாற்றும் ஆற்றல் இந்துத்துவ பயங்கரவாத அரசியலுக்கு இருக்கிறது என்பதற்கு மாயா கோட்னானி ஒரு கண்முன் சாட்சி. காவி அரசியலால் பீடிக்கப்பட்டு கைதி எண். 14261 ஆக புகழற்று தேய்ந்துபோன கதை அவருடையது.

மாயா கோட்னானி பற்றி நரேந்திர மோடி என்ன நினைக்கிறார்? பாஜகவின் நிலைப்பாடு என்ன? ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறது? அரசியல் சதியின் காரணமாகத் தான் ஒரு பலியாடாக மாற்றப்பட்டுவிட்டதாக மாயா கோட்னானி கருதுகிறார். (தி வீக், செப்டெம்பர் 16, 2012). இது உண்மை எனில், தான் மானசீகமாக நம்பிய இந்துத்துவ அரசியலுக்கு அவரும்கூட பலியாகிவிட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.  அந்த வகையில், இந்துத்துவம் இருமுனை கூர் ஆயுதம். எதிரிகளை மட்டுமல்ல, பற்றியிருப்பவர்களையும்கூட அது அழித்தொழிக்க வல்லது.

0

மருதன்

பாபா ப்ளாக் ஷீப்

வீட்டைவிட்டு ஓடிப்போவது என்று ராமகிருஷ்ணன் முடிவெடுத்தபோது அவனுக்கு வயது பதினைந்து. ஹரியானா மாவட்டத்தில் இருக்கும் அலிப்பூர் கிராமம். புழுதிபடிந்த பஞ்சபூமி அது. அவனுடைய தந்தைக்கு கைவசம் வேலை மட்டும்தான் இருந்தது.  சம்பளம் என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் கிடைக்கவில்லை. வறுமை. ராமகிருஷ்ணனுக்கோ படிப்பு ஏறவில்லை. வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டான். எங்கே போவது?

ஓடிப்போகும் சிறுவர்கள் எல்லாம் ஒன்று ராணுவத்தில் சேர்வார்கள் அல்லது பிச்சை எடுப்பார்கள். ஆனால் ராமகிருஷ்ணன் தேர்வு செய்தது ஆசிரமத்தை. இலவசமாக சோறுபோடும் அனாதை ஆசிரமத்தை அல்ல; யோகா போன்ற ஆரோக்கியக் கலைகளைக் கற்றுத்தருகின்ற குருகுல ஆசிரமத்தை.

கிராமத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்தியது இப்போது வசதியாக இருந்தது. ஆச்சார்ய பிரதம் என்ற யோகா குருவிடம் மெல்ல மெல்ல ஆசனங்களைக் கற்றுக்கொண்டான். அது தொடர்பான புத்தகங்களையும் படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டான்.

யோகக்  கலையைக் கற்றது போக எஞ்சியிருந்த நேரத்தில் சமஸ்கிருத மொழியைக் கற்பதிலும் கவனம் செலுத்தினான். அதற்கு அந்த ஆசிரமத்தில் வாய்ப்பு இருந்தது. பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டான். அடித்தளம் அமைவது முக்கியமில்லை; ஆழமாக இருக்கவேண்டும்; வலுவாக அமைய வேண்டும் என்பதில் அந்தச் சிறுவன் காட்டிய ஆர்வம் ஆசிரம நிர்வாகிகளை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.

கலையில் கணிசமான தேர்ச்சியைப் பெற்றபோதும் ராமகிருஷ்ணனுடைய தேடல் நின்றுவிடவில்லை. ஆச்சார்ய பல்தேவ்ஜி என்ற சாமியாரைச் சந்தித்தான். பேசினான். பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டான். பல்தேவ்ஜியின் வழிகாட்டுதலில் தனது பெயரை மாற்றிக்கொள்ளவும் முடிவுசெய்தான். சுவாமி ராம்தேவ். ஆம். இன்று யோகக்கலை வித்தகராக, சமூக ஆர்வலராக, மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக, நடுத்தர மக்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக, ஏழை மக்களின் ஆபத்பாந்தவராக ஊடகங்கள் முன்னிறுத்தும் பாபா ராம்தேவ்தான் இந்த சுவாமி ராம்தேவ்.

புதிய பெயரை வைத்துக்கொண்ட ராம்தேவ், தான் கற்றுக்கொண்ட ஆசனங்களையும் படித்த விஷயங்களையும் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க முடிவுசெய்தார். சின்னதும் பெரியதுமாக அவர் நடத்திய யோகா முகாம்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. உடல்பிரச்னைகளைத் தீர்க்க மருத்துவ உதவிகளை நாடி, அதுவும் பலிக்காதபோது மக்களின் ஒரே வடிகாலாக இருந்தது யோகா மட்டுமே. அதைத்தான் ராம்தேவ் குறிவைத்தார்.

நடுத்தர, வசதி நிறைந்த மக்கள் பலரும் அவருடைய முகாம்களுக்கு வரத்தொடங்கினர். மெல்ல மெல்ல பிரபலம் அடையத் தொடங்கினார். பெரிய மனிதர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பணமும் சேரத் தொடங்கியது. கிடைத்த பணத்தைக் கொண்டு ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் குருகுலம் ஒன்றை உருவாக்கினார் ராம்தேவ். அங்கு வைத்து இலவச யோகா முகாம்களை நடத்தினார். இதன்மூலம் வசதியற்ற ஏழை மக்களையும் அவருடைய குருகுலத்துக்கு அழைத்துவர முடிந்தது. இலவச முகாம்களுக்கு வந்தவர்கள் செய்த வாய்வழி பிரசாரம் ராம்தேவுக்கு மேன்மேலும் பிரபலத்தைப் பெற்றுக் கொடுத்தது.

அப்போது ராம்தேவுக்கு புதிய யோசனை ஒன்று உதித்தது. நாம் ஏன் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கக்கூடாது? அப்போது உதவிக்கு வந்தவர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா. அவருடன் இணைந்து திவ்ய யோக மந்திர் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார் ராம்தேவ். யோகக்கலையை பெரிய வர்த்தக நிறுவனமாக மாற்ற விரும்பிய ராம்தேவ் எடுத்துவைத்த முதல் அடி இது.

நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. போதாக்குறைக்கு ஆஸ்தா என்ற டிவி சேனல் ஒன்று ராம்தேவை அணுகியது. காலை நேரத்தில் யோகா கலையைக் கற்றுத்தரும் நிகழ்ச்சி ஒன்றை எங்கள் சேனலில் நடத்த இருக்கிறோம். நீங்களே அதைச் செய்துகொடுத்தால் நல்லது.  ஒப்புக்கொண்டார் ராம்தேவ். 2003ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. விளைவு, வீட்டின் வரவேற்பறைக்கே வந்து யோகா கற்றுத்தரத் தொடங்கினார் ராம்தேவ்.

அடுத்தடுத்து காட்சிகள் மாறத் தொடங்கின. பத்தும் இருபதுமாக உயர்ந்துகொண்டிருந்த சீடர்களின் (ஆம், சுவாமி ராம்தேவ் குரு என்றால் அவரிடம் கற்றுக்கொள்பவர் சீடர்கள்தானே!) எண்ணிக்கை ஆயிரங்களில் பெருகத் தொடங்கியது. செய்தித்தாள்கள். பத்திரிகைகள். தொலைக்காட்சிகள். எல்லாவற்றிலும் ராம்தேவின் பெயர்தான். தொலைக்காட்சியில் கிடைத்த பிரபலத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அடிக்கடி முகாம்கள் நடத்தினார்.

அடுத்து பதஞ்சலி யோக பீடம் என்ற புதிய அறக்கட்டளையைத் தொடங்கினார் ராம்தேவ். இதைத் தொடங்கிவைத்தவர் பைரோன்சிங் ஷெகாவத். புகழ்பெற்ற ஆர்.எஸ்.எஸ்காரர். முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர். வெறுமனே யோகக்கலைக் கற்றுத்தருவது என்பதைத் தாண்டி நோய் தீர்க்கும் காரியங்களில் ராம்தேவ் ஈடுபடத் தொடங்கியது இதன்பிறகுதான். நீரிழிவு, மன அழுத்தம், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு யோகாவின் மூலன் பலன் கிடைக்கும் என்ற ராம்தேவின் பிரசாரத்துக்கு நல்ல பலன். கூடுதல் சீடர்கள்.

விளைவு, ராம்தேவின் அறக்கட்டளை அகலவாக்கில் வளரத் தொடங்கியது. பதஞ்சலி ஆயுர்வேதக் கல்லூரி, பதஞ்சலி மூலிகைத் தோட்டம், ஆர்கானிக் விவசாயப் பண்ணை, பதஞ்சலி உணவு மற்றும் மூலிகைப் பூங்கா என்பன போன்ற ஏராளமான நிறுவனங்களை உருவாக்கி, நடத்தத் தொடங்கினார் ராம்தேவ். அனைத்தையும் நேர்த்தியாக நிர்வகிக்கும் பொறுப்பு ஆச்சார்ய பாலகிருஷ்ணாவுடையது. அவரை நிர்வகிப்பவர் பாபா ராம்தேவ். ஆம். சுவாமி ராம்தேவ் இனிமே பாபா ராம்தேவ்.

திவ்ய பிரகாஷன் என்ற நிறுவனத்தின் மூலம் யோகக்கலை தொடர்பான புத்தகங்கள் சிலவற்றைக் கொண்டுவந்தார் ராம்தேவ். யோக சந்தேஷ் என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். இந்தப் பத்திரிகை இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட 11 மொழிகளில் வெளியாகிறது. நேபாள மொழியிலும் ஒரு பதிப்பு வருகிறது.

பத்திரிகை. தொலைக்காட்சி. புத்தகங்கள். இலவச முகாம்கள். எல்லாமே இருந்ததால் ராம்தேவின் பதஞ்சலி யோக பீடம் பணம் காய்ச்சி மரமாக மாறியது. கிடைத்த பணத்தைக் கொண்டு நிறுவனங்களை மேன்மேலும் விரிவுபடுத்தினார். வெளிநாடுகளில் அவருடைய யோகா மையங்களுக்குக் கிளைகள் தொடங்கப்பட்டன. அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த ராம்தேவுக்கு உலகின் பல நாடுகளில் சீடர்கள் உருவாகினர்.

பணம் இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கிறது. அடுத்தது என்ன? அரசியல். அதுதான் உண்மையான இலக்கு. ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடுத்துவைத்தார். யோகா முகாம்களில் யோகக்கலை பற்றியும் வாழ்க்கைக்கலை பற்றியும் பேசிய ராம்தேவ், சமூக சீர்திருத்த விஷயங்கள் பற்றிப் பேசினார். இந்தியாவின் அதிமுக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அரசியலை ஆன்மிகம் கலந்துபேசினார்.

ஆன்மிகத்தையும் அரசியலையும் பேசிய ராம்தேவ், திடீரென பாரத் சுவாபிமான் அந்தோலன் என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பில் இலக்குகள் ஐந்து. நூறு சதவீத வாக்குப்பதிவு. நூறு சதவீத தேசிய உணர்வு. நூறு சதவீத அயல்நாட்டு நிறுவன புறக்கணிப்பு. நூறு சதவீத ஒற்றுமை. நூறு சதவீத யோகா மயமாக்கப்பட்ட தேசம்.

வெறுமனே இயக்கம் ஆரம்பித்துவிட்டால் போதாது. இயக்கம் மக்களைக் கவர வேண்டும். எனில், மக்களைக் கவரக்கூடிய விஷயங்களில் கருத்து சொல்லத் தொடங்கினார் பாபா ராம்தேவ். அடைக்கப்பட்ட உணவுகளை உண்ணாதீர்கள் என்றார். குளிர்பானங்கள் அனைத்தும் கழிவறையைச் சுத்தம் செய்ய மட்டுமே லாயக்கு என்றார். கேன்சர், எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு யோகாவில் தீர்வு உண்டு என்றார். பள்ளிகளில் பாலியல் கல்வியை அகற்றிவிட்டு யோகாவை அறிமுகம் செய்யவேண்டும் என்றார்.

கருத்து தெரிவித்த அனைத்து விஷயங்களும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏற்படுத்தவும் செய்தன. ஆதரவும் கண்டனமும் மாறிமாறி வந்தன. பத்திரிகைகள் அவருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. அவருடைய முகாம்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டன. பக்கம் பக்கமாக அவருடைய பேட்டிகள் பிரசுரமாகின. பாபா ராம்தேவுக்குச் சொந்தமான நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளில் மனித மற்றும் மிருக எலும்புத் துகள்கள் கலக்கப்படுவதாக ஒரு சர்ச்சை வெடித்தது. ஆனால் அது மெல்ல மெல்ல அடங்கிவிட்டது.

உள்ளுக்குள் அடங்கிக்கிடந்த அரசியல் ஆர்வம் ஒருநாள் அப்பட்டமாக வெளியில் வந்தது. நான் தொடங்கிய பாரத் சுவாபிமான் அந்தோலன் இயக்கம் தேர்தல் அரசியலில் இறங்கப்போகிறது. அதன் சார்பில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். சாது ராம்தேவின் மனத்துக்குள் சக்கரவர்த்தியாகும் எண்ணம் உருவாகிவிட்டது என்பது அன்றைய தினம் அம்பலமானது.

கிட்டத்தட்ட இந்தச்சமயத்தில்தான் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணம் பற்றிப் பேசத் தொடங்கின. 2009 மக்களவைத் தேர்தலின்போது தனது தேர்தல் அறிக்கையில் கறுப்புப்பண மீட்பு பற்றிப் பேசியது பாஜக. பிறகு ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியாகி, ஊழலுக்கு எதிரான கருத்துகள் வெளிவந்தன. ஊழல் ஒழிப்பும் கறுப்புப்பண மீட்பும் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பின. எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார் பாபா ராம்தேவ்.

களத்தில் இறங்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த ராம்தேவுக்கு வசதியாக வந்து சேர்ந்தது லோக்பால் மசோதா விவகாரம். சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் தொடங்க, அதற்கு நாடு தழுவிய அளவில் பேராதரவு கிடைத்தது.

ராம்தேவாகப்பட்டவர் ஆன்மிகத்தில் இருந்து அரசியலுக்குள் குதித்த வரலாற்றின் சாராம்சம் இதுவே.

0

ஆர். முத்துக்குமார்

அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்!

ஈமு கோழி விளம்பரங்களுக்கு நடிகர்கள் சிரித்துக் கொண்டே நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள். நம்பி கையில் வைத்திருந்த காசை கொண்டு போய் கொட்டியவர்கள் மட்டும் சிரிக்க முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் நொந்து கொண்டுருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் இது போன்ற பரபரப்பு பத்திரிக்கைகளுக்கு தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு முக்கியமாக தேவைப்படுகின்றது. பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தொடங்கும் போது விளம்பரத்திற்கான காசு, முடியும் போது பரபரப்பு செய்திகள்.

நம்பியவ்ர்களுக்கு? ஒன்றை மறக்க மற்றொன்று, அதை மறக்க இன்னொன்று என்று மாறி மாறி நமக்கு ஏதோவொன்று சூடாக தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. தொடக்கத்தில் திண்டபங்களுக்குத்தான் கொறிக்க சுவைக்க என்று விளம்பரப்படுத்துவார்கள். இப்போது ஊடகங்களுக்கும் தேவையாக இருக்கிறது. இது போன்ற செய்திகளை விரும்பத் தொடங்க அதுவே இறுதியில் திணிப்பது போல மாறிவிடுகின்றது. வாங்கிவிட்டீர்களா? என்று கத்தி நமது செவிப்பறையைக் கிழித்து செவிடர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வலைதளம் முதல் செய்திதாள்கள் வரை அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது. கடினமான விசயத்தை கொடுத்தால் பக்கத்தை நகர்த்தி சென்று விடுவார்கள் என்று நடிகை கிசுகிசுக்களைப் போட்டு நமக்கு சந்தனம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.  திரை அரங்கத்தில் சென்றால் மூன்று மணி நேரம் ‘கவலைகளை மறக்க’  போதை ஊட்டப்படுகிறது. கலை என்பது பணம் சம்பாதிக்க என்ற ஆன பிறகு அங்கு கலைக்கு வேலையில்லை. சதைக்குத் தான் வேலை.

ஒரு செய்தியை முக்கியத்துவப்படுத்த வேண்டுமானால் நமது பத்திரிகைகள் கொடுக்கும் வார்த்தைகளை கவனித்துப் பார்த்தாலே நமக்கு நன்றாக புரியும். கிரானைட் ஊழல் என்று சொன்னால் அதில் ஒரு கிக் இருக்காது என்பதால் கிரானைட் மாஃபியா என்று ஏதோவொரு நோய்க்கான ஃபோபியா போலவே புனைக்கதைகளை சுருட்டி சூறாவளியாக்கி மக்கள் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

நாலைந்து வாரமாக அன்றடாட பத்திரிக்கையில் வந்துகொண்டுருக்கும் பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பழனிச்சாமி கதையும் திடுக் திடுக் என்று மர்மக் கதை போல் நகர்ந்துகொண்டிருக்கிறது.

முன்பிருந்த தியோனேஸ்வரன் தொட்ங்கி இன்று வரைக்கும் உள்ள அதிகாரிகளின் சொத்து பட்டியலைப் பார்த்தாலே சொர்க்கம் என்பது கனிம வளத் துறைதான் என்பதை புரிந்து கொள்ள முடியும். சில துறைகளின் ஊழல்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரியும். அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் இன்று வரைக்கும் பலருக்கும் தெரிய வாய்பில்லை.

அருண் ஷோரி மத்திய அமைச்சராக இருந்தபோது அலைக்கற்றை ஊழல் என்பது இத்தனை பிரமாண்டமானதாக இருக்கும் என்பதை எவராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? இல்லை தயாநிதி மாறனுக்குத் தான் காமதேனு பசு மேல் அமர்ந்திருக்கிறோம் என்று தெரிந்திருக்குமா? அல்லது ராசாவுக்கு, தான் கறவை மாடு கணக்காக மாற்றப் போகிறோம் என்று தெரிந்திருக்குமா?

இன்று சூறாவளியாக செய்தித் தாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் கிரானைட் ஊழலைப் பற்றி கலைஞருக்குத் தெரியாதா? இல்லை இப்போது நடவடிக்கை எடுத்துக்கொண்டுருக்கும் ஜெயலலிதாவுக்குத்தான் தெரியாதா? கடந்த பத்தாண்டுகளாக இந்த கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை கிராம மக்களும் அரசாங்கத்துக்கு அனுப்பிய மனுக்களும், நினைவூட்டல் கடிதங்களும் அரசாங்க அதிகாரிகளுக்கு கிடைக்காமல் தபால் துறை ஏதும் சதி செய்து இருக்குமோ? இல்லை, கிராம நிர்வாக அதிகாரி முதல் கோட்டையில் இருக்கும் துறை சார்ந்த அத்தனை கோமகன்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லாமலா போயிருக்கும்? ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான படையல் செய்யும் உலகத்தில் இருக்கும் போது அமைச்சர் முதல் அதிகாரிகள் வரைக்கும் எப்படி கவனிக்க வேண்டும் என்று கூடவா பழனிச்சாமிக்கு தெரியாமல் போயிருக்கும்?

ஒருவர் வளரும் போது குடிசையில் இருந்து கோபுரத்துக்கு உயர்ந்தவர் என்று நான்கு பக்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு வாழ்த்தும் அதே பத்திரிக்கைகள்தான் வீழும்போது மாஃபியா உலகத்தில் அவிழும் மர்ம முடிச்சுகள் என்று சிறப்புக்கட்டுரை எழுதுகின்றன.

அரசியலுக்கு பலியாடுகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக இந்தியா பலியாடுகளை நம்பித்தான் அரசியலே நடத்துகிறது. திருவிழா காலத்தில் அடிக்கப்படும் கோழி, ஆடுகளைப் போல ஒவ்வொரு சமயத்திலும் ஒருவர் கிடைப்பார். அவர் அமைச்சராக இருக்கலாம். அல்லது அதிகாரியாக இருக்கலாம்.

ஊழல் என்றறொரு வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போன உலகில் மீண்டும் மீண்டும் இதில் ஊழல், அதில் ஊழல் என்று சொல்லும் போது படிப்பவர்களும் துணுக்கு செய்திகளைப் போல படித்து விட்டு நகர்ந்து போய் விடுகின்றனர். மறுநாளும் அதையே படிக்கும் போது எரிச்சல்தான் உருவாகிறது. காரணம் செய்திகளை உள்வாங்கிக்கொள்பவர்களும்கூட நமக்கு எப்போது இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பவர்களாக இருப்பதால் மூச்சடைக்கும் ஊழல் என்பது கூட இன்று எளிதாக மாறிவிட்டது.

பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது பணம் என்று இன்றைய உலகம் நினைக்கிறது. அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும். அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவனைப் பணம் ஆளத் தொடங்கிவிடுகிறது. அப்போது மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகிறது.

0

ஜோதிஜி திருப்பூர் 

தேவை இன்னொரு பசுமைப் புரட்சி!

1

எத்தனை பேர் இந்தச் செய்தியைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. கவனித்தும், சிலருக்கு மனதில் பதியாமல் போயிருக்கலாம். காரணம், விலைவாசி உயர்வு என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தி அல்லவே? தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை!! நிஜமாகவே புலி வந்தே விட்டது. அரிசி, கோதுமை போன்ற தானியப் பொருட்களின் தட்டுப்பாடும், தொடர்ந்து விலையேற்றமும் வருகிறது, பராக், பராக்!

சர்வதேச உணவு மற்றும் விவசாயக் கழகம், கடந்த ஜூலை மாதம் “உணவுக் குறியீடு” 213-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளது. இந்த உணவுக் குறியீடு என்பது, குறிப்பிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் நிறைந்த ஒரு உணவுக் கூடையின் விலை. தற்போது ஒரே மாதத்தில் 6% அதிகரித்துள்ளதுதான் கவலைக்குரியது.

கடந்த 2008-ம் ஆண்டு இதேபோல உணவுத் தட்டுப்பாடும், தொடர்ச்சியாக விலைவாசி உயர்வும் இருந்தது நினைவிருக்கிறதா? அது மறந்திருக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் திருவாளர் ஜார்ஜ் புஷ், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட இந்தியர்களின் அதீத உண்ணும் பழக்கம்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே, அது மறந்திருக்காது!

ஆனால், இந்த மற்றும் அடுத்த வருடம் அதைவிட மோசமான நிலை ஏற்படலாம் என்று ஐ.நா. எச்சரிக்கிறது.

2

கடந்த 56 வருடங்களாக இல்லாத அளவிலான அமெரிக்காவின் வறட்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கும்கூட. இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பெய்யாமல் பொய்த்துக் கெடுத்திருக்கும் பருவ மழை, ஐரோப்பாவில், சீனாவில், ஃபிலிப்பைன்ஸில் பெய்து கெடுக்கிறது. அங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உணவுப் பயிர்களான சோளம் மற்றும் சோயாவை, இயற்கை எரிபொருளான ethenol தயாரிப்புக்காகத் திருப்பிவிட்டதும் பஞ்சத்துக்குக் கட்டியம் கூறிய இன்னொரு காரணம். சரி, இனி அந்தப் பயிர்களை உணவாக்கிக் கொள்ளலாமே என்றால், தற்போது விளைவிக்கப்படும் பெரும்பான்மையான பயிர் ரகங்கள் உண்ணத் தகுதியில்லாத, எரிபொருள் எடுக்க மட்டுமே லாயக்கான வகையிலானது. இவ்வகைப் பயிர்களை விளைவிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளுக்கு அதிக மானியம் மற்றும் வரிவிலக்கு கொடுத்து ஊக்குவித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே உணவுக்கான சோளத்தின் உற்பத்தி 50% குறைந்துவிட்டது.

போகட்டும், இனியேனும் உணவுப் பயிர்களை விளைவிப்போமே என்றால், விளைநிலத்துக்கு எங்கே போவது? இருந்த விளைநிலங்கள் எல்லாமே ரியல் எஸ்டேட்டுகளால் பட்டா போடப்பட்டு, வீடுகளாக, பங்களாக்களாக, அடுக்கு மாடிகளாக, வணிக வளாகங்களாக உருமாறி விட்டதே!

அப்படியொன்றுமில்லை, கொஞ்சமாவது விவசாய நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதிலெல்லாம் விவசாயம் நடக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், உலகம் உருண்டை – மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறோம். மழை இல்லாமல் வறட்சியால் தவிக்கும்போது எங்கே விவசாயம் செய்ய? அப்படியே செய்தாலும், யானைப்பசிக்குச் சோளப்பொறிதான் அது! மட்டுமல்ல, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுமென்பதால், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பணப்பயிர்களைத்தான் விவசாயிகள் தேர்வு செய்வார்கள்.

செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்கிறோம்; நிலவில் நீரைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், இல்லாத மண்ணில் பொல்லாத உணவை விளையவைக்கத்தான் வழி தெரியவில்லை. சமீபகால ‘அரேபிய வசந்தம்’ புரட்சிகளின் தொடக்கப் புள்ளியான துனிஷியா புரட்சிக்கு வித்திட்டது அடிப்படையில் வயிற்றுப் பசியே. எனில், இன்னும் வருங்காலங்களில் எத்தனைப் புரட்சிகளைச் சந்திக்க இருக்கிறோமோ?

க்ளோபல் வார்மிங்கின் விளைவுகளைப் பற்றி இத்தனை நாட்கள் பேசிக்கொண்டு மட்டுமே இருந்தோம். காலம் தப்பிய மழை, பொய்த்த மழை, அதீத வெயில் என்று காலநிலை மாற்றங்களை பார்த்தும் நாம் திருந்தவில்லை. நாம் அன்றாடம் வீடுகளிலும், விருந்துகளிலும், உணவகங்களிலும் வீணாக்கிய உணவுகள் மனக்கண்ணில் வந்துபோகுதா?

3

சரி இறக்குமதி செய்துகொள்ளலாமே என்றால் அதுவும் முடியாது. காரணம், உலகமெங்கும் தட்டுப்பாடு பரவுகிறது. 2008-ல் நடந்ததுபோலவே, எல்லா நாடுகளும் உணவு ஏற்றுமதியைத் தடை செய்யும் சாத்தியங்கள் அதிகம். ரஷ்யா இவ்வருட இறுதிவரை மட்டுமே கோதுமை ஏற்றுமதி என்று இப்போதே அறிவித்துவிட்டது.

இதே போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவரும் சீனா  போன்ற பல நாடுகள், செழிப்பான விளைநிலங்கள் அபரிமிதமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயத்தில் பெரும் முதலீடு செய்துள்ளன. இதில் கிடைக்கும் மிகுதியான விளைச்சலைத் தம்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்வதுதான் நோக்கம்.

கடந்த ஜூன் மாதம் நடந்த ரியோ +20 ‘வளங்குன்றா வளர்ச்சி’ (Sustainable Development) உச்சி மாநாட்டில், ஐ.நா. செயலர் பான் கீ மூன், வறுமைப்பசியை ஒழிப்பதற்காக ‘Zero Hunger Challenge’ என்ற உலகளாவிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐந்து அம்ச திட்டமான இதில், சிறு-குறு விவசாயிகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களைச் சரியான முறையில் ஆதரித்து, அவர்களின் வருமானம் மற்றும் உற்பத்தியை இருமடங்காகப் பெருகச் செய்வது மிக அத்தியாவசியமானது என்று வலியுறுத்துகிறார்.

அதன் இன்னொரு அம்சம், உணவுப் பண்டங்களை வீணாக்குதலைத் தடுத்தல் மற்றும் முறையான உணவு நுகர்வு. விளைநிலங்கள் தொடங்கி, வீட்டு டைனிங் டேபிள் வரை நடக்கும் பெரும் விரயத்தைத் தவிர்த்தாலே பஞ்சம், பசியைப் போக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு, சஹாராவை மையப்படுத்திய ஆப்பிரிக்காவின் மொத்த உணவு உற்பத்திக்குச் சமம் என்றால் எந்தளவு விரயம் நடக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தள்ள ஆரம்பித்திருக்கும். சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களும் அந்த வெள்ளத்தில் வருடாவருடம் மிதக்கும். ஆனால், இந்த வருடம்? வெள்ளத்திலிருந்து தப்பிவிட்டோமே என்று சந்தோஷப்பட முடியாதபடி, வறட்சி நம்மை விரட்டிக் கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டிலும், வருட ஆரம்ப குறுவை சாகுபடி அப்போது நிலவிவந்த கடும் மின்சாரத் தடை காரணமாகக் கைவிடப்பட்டது. இப்போது செய்திருக்க வேண்டிய சம்பா சாகுபடிகள், மழை இல்லாததால் செய்யவில்லை.

மழை பொய்த்ததன் விளைவுகளில் ஒன்றாகத்தான், கடந்த ஆடிப்பெருக்கின்போது காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனது. சென்னையின் நீராதாரமான வீராணம் ஏரி, இவ்வருடம் ஜூலை மாதத்திலேயே காய்ந்து விட்டது.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் போக்கு காட்டிய காவிரி கொண்ட கர்நாடகாவின் பி.ஜே.பி. அரசு மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தியுள்ளது. கேரளாவும் தன் தலைநகரில் குழாய்த் தண்ணீர் விநியோகத்துக்கு ரேஷன் முறை கொண்டுவரலாமா என்று ஆலோசிக்கும் அளவுக்கு, அங்கும் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. ஆனால், மழை இல்லாததால், விதைக்கும் பருவமும் தாண்டிப் போய்விட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதா குறுவை சாகுபடி முறையாக நடக்கும் என்று கூறுகிறார். மந்திரக்கோல் எதுவும் வைத்திருக்கிறாரோ என்னவோ!

உணவுப் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல, மெத்தனமாக இருக்கின்றன. அவர்களுக்கென்ன, திட்டக் கமிஷனே, மக்களின் அன்றாடச் செலவுக்கு இருபத்தைந்து ரூபாய் போதும் என்று சொல்லிவிட்டதே.

பஞ்சம் அடித்தட்டு மக்களுக்குத்தானே தவிர, பணம் படைத்தவர்களுக்கல்ல என்கிற அலட்சியம். அவர்களுக்குப் புரியவில்லை, பணம் இருக்கும், ஆனால் வாங்க அரிசி இருக்காது – இதுதான் பஞ்சம் என்று. அப்போது பணத்தையா தின்னமுடியும்?

இந்தியாவில் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான அவசியம் இப்போது வந்திருக்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இப்போதே தொடங்கினால்தான், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக வருங்காலங்களில் அடிக்கடி வர சாத்தியமுள்ள இதுபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள முடியும்.

தற்போதைக்கு, அரசு உணவுக் கிடங்குகளில் தேவைக்கு மேலேயே இருக்கும் கோதுமையையும் நெல்லையும் பத்திரமாக வைத்திருந்தாலே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, எதிர்வரும் தட்டுப்பாட்டையும் ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.

பண்டைய காலத்தில் எகிப்தில் கடும்பஞ்சம் வரப்போகிறதென்றுஅந்நாட்டு அரசருக்குக் கனவில் அறிவிப்பு வந்ததும், முறையாகப் பயிரிடுதல், சேமிப்பு, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், தன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும்கூட, ஏழு ஆண்டு கடும் பஞ்சத்தின்போது உணவளிக்க முடிந்தது.

தனது சுதந்தர தின உரையில், விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளுக்கு ராக்கெட் டெக்னாலஜி தேவையில்லை என்பதையும் யாராவது ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’ மூலம் அரசாள்பவர்களின் கனவில் வர வையுங்களேன்!

0

ஹுஸைனம்மா

அன்னா ஹசாரே தாக்குப்பிடிப்பாரா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஜன்லோக்பால், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று படிப்படியாக முன்னேறி இறுதியாக அரசியல் களத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் அன்னா ஹஸாரே குழுவினர்.

ஜன்லோக்பாலை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அன்னா ஹஸாரே. தளபதி அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் அதில் கலந்துகொண்டனர். கடந்தமுறை ஹஸாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களின்போது கூடிய கூட்டம், திரண்ட ஆதரவு இம்முறை இல்லை என்றபோதும் ஹஸாரே கூடுதல் உற்சாகத்துடன் இருந்தார். இந்நிலையில் திடீரென உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அன்னா ஹசாரே அறிவித்தார். தொடர்ந்து அன்னா குழுவினர் வெளியிட்ட அறிவிப்புதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ‘ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை அறவழிப்போராட்டம் மூலம் தீர்த்துவிடலாம் என்று நினைத்து போராடினோம். அரசு அசைந்துகொடுப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, வலுவான லோக்பால் விஷயத்தில் அரசு காட்டிவரும் அலட்சியம் எங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. இனி பிரச்னைகளை அரசியல்ரீதியாகத் தீர்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறோம். விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போகிறோம்.’

உண்ணாவிரதம் முடித்தபிறகு அன்னா ஹஸாரே பேசினார். ‘நம் நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் நிரம்பியவை; தார்மிக நெறிமுறைகள் அனைத்தையும் உதறித்தள்ளியவை. ஏழைகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளாதவை. ஆகவே, மக்களுக்கு ஒரு மாற்று சக்தியை, மாற்று அரசியல் கட்சியை அடையாளம் காட்டப்போகிறேன். மக்கள் கொதித்து எழுந்தால் ஊழல் நாட்டைவிட்டு ஓடிவிடும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நாடு தழுவிய பிரசாரப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். ஊழலுக்கு எதிராக மக்களைத் திரட்டும் எங்களுடைய முயற்சிகள் இறுதிவரை தொடரும். ஆனால், நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.’

அன்னா ஹஸாரேவின் தலைமைத் தளபதி அர்விந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் தொடங்கிய சில தினங்களிலேயே மிகவும் பலவீனமடைந்துவிட்டபோதும் கட்சி தொடங்கும் அறிவிப்பை உற்சாகமாக வெளியிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்கான இதுதான் சரியான தருணம் என்று ஆரம்பித்த கெஜ்ரிவால், ‘எங்கள் கட்சியின் பெயரை மக்களே தேர்வுசெய்வார்கள். கட்சியின் கட்டமைப்பையும் மக்களே தீர்மானிப்பார்கள். வேட்பாளர்களையும் மக்களே தேர்வுசெய்வார்கள். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார்செய்ய மாட்டோம். அதை மக்களே தயாரிப்பார்கள். ஏனென்றால், எங்கள் கட்சி மக்கள் கட்சி’ என்றார்.

இன்று தெருக்களில் போராடிக்கொண்டிருக்கும் நாங்கள் நாளை நாடாளுமன்றத்துக்குள்ளும் போராடப்போகிறோம் என்று ஆவேசப்பட்ட கெஜ்ரிவால், காங்கிரஸ், பாஜக கட்சிகளில் அதிருப்தி எண்ணத்துடன் இருப்பவர்களையும் இளைஞர்களையும் தங்களுடைய புதிய கட்சிக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். ஊழல் நிரம்பிய அரசுக்கு எதிரான மக்கள் யுத்தம் தொடங்கிவிட்டது. நாட்டில் முழுப்புரட்சிக்கான அவசியம் உருவாகிவிட்டது என்றார் கெஜ்ரிவால்.

அன்னா ஹஸாரே குழுவினரின் பத்துநாள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தவர் சமீபத்தில் ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் வி.கே. சிங். மத்திய அரசுடன் ஏற்கெனவே மோதியவர் என்பதால் அவருக்கு மேடையில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ‘நாட்டில் தற்போது நடந்துகொண்டிருப்பது ஊழலுக்கு எதிரான புரட்சி. அன்னா ஹஸாரே ஒரு புரட்சியை நோக்கி மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தற்போதைய அரசின் கொள்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. ஜனநாயகத்தைப் புனரமைக்கும் புனிதப்பணியை அன்னா ஹஸாரேவின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்படவிருக்கும் புதிய கட்சி செய்யும்’ என்று சொன்ன வி.கே. சிங், ‘நாடு திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்தால், கேள்வி எழுப்பினால் அவர்கள் நம்மைப் பழிவாங்குவார்கள். ஆகவே, எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும்’ என்று எச்சரித்தார். இப்படி முடித்துக்கொண்டார். ‘மக்கள் வருகிறார்கள். ஆட்சியாளர்களே, நாற்காலிகளைக் காலிசெய்யுங்கள்!’

உண்மையில் அன்னா ஹஸாரேவை அரசியல் களத்துக்கு அழைத்துவந்தவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலோ கிரன்பேடியோ அல்ல; காங்கிரஸ் தலைவர்கள்தாம். மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடாதீர்கள்; துணிச்சல் இருந்தால் அரசியல் கட்சி தொடங்குங்கள்; மக்களைச் சந்தியுங்கள்; தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு வாருங்கள். அதன்பிறகு கேள்வி கேளுங்கள் என்று அன்னா குழுவினரை உசுப்பேற்றி
விட்டவர்களும் அவர்கள்தாம்.

இப்போது அன்னா ஹஸாரே குழுவினருக்கு இரண்டே வாய்ப்புகள்தாம் இருக்கின்றன. ஒன்று, ‘ஊழலுக்கு எதிராக’ என்ற கோஷத்தை முன்வைத்து தனித்துப் போட்டியிடுவது. மற்றொன்று, ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது. இரண்டில் எதைத் தேர்வுசெய்தாலும் அது காங்கிரஸ் கட்சிக்குத்தான் சாதகமாக அமையும். தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போகும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதையே அன்னா குழுவினருக்கு எதிரான ஆயுதமாகப் பிரயோகம் செய்துவிடலாம்.

இப்போது அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் புதிய கட்சியைத் தொடங்கும் நிலையில் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன. சமூக செயல்பாட்டாளராக அன்னா ஹஸாரேவைப் பார்ப்பவர்கள் அவரை ஒரு அரசியல் கட்சியின் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வார்களா? ஏனென்றால், அன்னா ஹஸாரேவின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த, இருக்கின்ற பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மேதா பட்கர், சுவாமி அக்னிவேஷ் போன்றவர்கள் அன்னா ஹஸாரேவின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை.

அன்னா ஹஸாரேவின் அரசியல் பிரவேசம் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை என்கிறார் பாபா ராம்தேவ். ஹஸாரேவின் முடிவு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறியுள்ளஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ‘நான் அரசியலிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார். அன்னா ஹஸாரேவுக்கு அரசியல் வேண்டாம் என்ற கருத்தையே பிரபல சமூக சேவகர் மேதா பட்கரும் முன்வைத்திருக்கிறார். எல்லோரையும்விட ஒருபடி மேலே சென்றுவிட்டார் சுவாமி அக்னிவேஷ். உண்ணாவிரதம் என்ற புனிதமான அகிம்சைப் போராட்டமுறையின் கற்பை சூறையாடிவிட்டார் அன்னா ஹசாரே என்பதுதான் அக்னிவேஷின் எதிர்வினை.

இவர்கள் மட்டுமல்ல; இன்றைய அரசியலை விரும்பாத, ஆனால் அன்னா ஹஸாரேவை ஆதரிக்கும் பலர் அவருடைய அரசியல் பிரவேசத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பது முக்கியமான கேள்வி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்னா ஹஸாரே தீவிரமாக செயல்படத் தொடங்கியபோது காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என்று மூன்று முக்கிய முறைகேடுகள் நாட்டை உலுக்கிக்கொண்டிருந்தன. அரசியல்வாதிகள் மீது, குறிப்பாக, ஆட்சியாளர்கள் மீது இளைஞர்களும் பொதுமக்களும் ஆவேசத்துடன் இருந்த சமயம் அது. அவர்களுடைய கோபத்துக்கு வடிகாலாக அன்னா ஹஸாரே இருந்தார். நாடு தழுவிய அளவில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு குவிந்தது.

ஆக, ஹஸாரேவை ஒரு சமூகப் போராளியாக, சமூக ஆர்வலராக ஏற்றவர்களே அதிகம். அப்போது ஹஸாரேவின் பேச்சுகளுக்குக் கைத்தட்டி ஆதரவளித்தவர்களும், அவரைப்போல குல்லாய் அணிந்து கொண்டவர்களும் ஹஸாரே படம் பொறித்த டீஷர்ட் போட்டுக்கொண்டவர்களும் அரசியல்வாதி ஹஸாரேவுக்கும் ஆதரவளிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆக, இதுவரை தன்னை ஆதரித்தவர்களையும் தனக்குப் பின்னால் நின்றவர்களையும் தனக்கு ஆதரவாக இருக்கவைப்பது ஹஸாரேவின் முன்னால் இருக்கும் முதல் சவால். புதிய ஆதரவாளர்களைத் தேடுவது அடுத்த சவால்.

ஊழலுக்கு எதிராக யுத்தம் நடத்தவேண்டும், மாற்று அரசியல் கட்சியை உருவாக்கவேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பும் ஹஸாரே, தான் தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை என்கிறார். எனில், அவருடைய புதிய கட்சியின் தலைமைப்பொறுப்பை நிர்வகிக்கப்போவது யார்? புதிய கட்சியின் ஆதாரப்புள்ளியே ஹஸாரே என்ற நிலையில் புதிய கட்சிக்கு யாரை நம்பி வாக்களிக்கச் சொல்கிறார்? ஒருவேளை அன்னா ஹஸாரேவின் கட்சி ஆட்சியைப் பிடித்துவிட்டால், பிரதமர் யார்?

நிதியின்றி அரசியல் கட்சி இயங்காது என்பதுதான் இன்றைய நியதி. ஊழலை எதிர்க்கும் அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் தங்கள் கட்சிக்கான நிதியாதாரத்தை எங்கிருந்து பெறப்போகிறார்கள்? காங்கிரஸும் பாஜகவும் இன்னபிற கட்சிகளும் நாடுகின்ற கார்ப்பரேட் முதலாளிகளைத்தான் என்றால் அவர்களுக்கும் புதிய கட்சிக்கும் என்ன வித்தியாசம்?

ஊழலுக்கு எதிரான இயக்கம் என்னும் பெயருமேகூட அவர்களுக்குப் போதுமானதா என்பது தெரியவில்லை. ஊழல்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை; அதை ஒழித்து விட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்பதை அன்னா ஹஸாரா ஆதரவாளர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில், ஊழலைத்தாண்டிய பல பிரச்னைகள் இருக்கின்றன. சாதி, மதச் சிக்கல்கள், பொருளாதாரப் பின்னடைவு, தீவிரவாதம், எல்லைத்தகராறுகள், நீர்ப்பங்கீட்டுச் சிக்கல் உள்ளிட்டவற்றுக்கு அன்னாவின் தீர்வு என்ன? இதுபோன்ற பிராந்திய, தேசிய பிரச்னைகளையும் கையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்னா ஹசாரேவால் தனது கட்சிக்கான ஆதரவுத் தளத்தை விரிவாக்கிக்கொள்ளமுடியும்.

முழுப்புரட்சி என்ற பதத்தை அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த பலரும் மேடைகளில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அதாவது, ஊழல் மலிந்த காங்கிரஸ் கூட்டணி அரசை அப்புறப்படுத்த முழுமையான புரட்சி அவசியம் என்கிறார்கள். இந்திய அரசியல் இப்படியொரு பதம் எழுபதுகளின் மத்தியில் பயன்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது பிகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, மாணவர்கள் களமிறங்கி நடத்திய போராட்டங்கள். அவர்களை வழிநடத்தியவர் ஜெயப்ரகாஷ் நாராயணன்.

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, அரசியல் அத்துமீறல்களில் ஈடுபட்டபோது, ‘நாட்டின் இன்றைய தேவை முழுப்புரட்சி மட்டுமே’ என்றார் ஜெயப்ரகாஷ் நாராயணன். அன்று அவர் விடுத்த அழைப்புக்கு தேசம் தழுவிய அளவில் ஆதரவு கிடைத்தது. அடுத்து வந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தது. தற்போது அதேபோன்றதொரு ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே அன்னா குழுவினர் முழுப்புரட்சி தேவை என்கிறார்கள்.

இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய விஷயம் ஜெயப்ரகாஷ் நாராயணனின் அணுகுமுறை. அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். மாணவர்களைத் திரட்டினார். பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தல் என்று வந்தபோது ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த மக்களையும் மாணவர்களையும் மட்டும் நம்பவில்லை. தனது தலைமையில் புதிய கட்சியைத் தொடங்கவில்லை. இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சக்திகளை, கட்சிகளை ஓரணியில் திரட்டினார். ஓரளவுக்கு ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகளை ஒரே கட்சியாக இணைத்தார்; இந்திரா காங்கிரஸுக்கு எதிரான வேறு சில கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டுவந்தார்; அதன்பிறகே ஆட்சிமாற்றம் நடந்தது.

இந்த இடத்தில்தான் அன்னா ஹஸாரே குழுவினரின் நடவடிக்கைகள் வேறுபடுகின்றன. எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எதையும் அன்னா குழுவினர் செய்யவில்லை. நேரடியாகக் களம் காணத் தயாராகி விட்டனர். தேசிய அளவில் விரிந்துபரந்துகிடக்கும் ஒரு கட்சியை – மாநில அளவில் பலம்பொருந்திய கட்சிகளைக் கூட்டணிக்குள் வைத்திருக்கும் ஒரு கட்சியை – வீழ்த்துவதற்கு அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் எடுத்துள்ள இந்த தனிக்கட்சி முயற்சி எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது கேள்விக்குறி. அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுப்பது எலியூருக்குப் பயந்து புலியூருக்குப் போவது போன்றது.

என்ன செய்யப்போகிறார்கள் அன்னா குழுவினர்?

0

ஆர். முத்துக்குமார்

அசாம் : மடிந்த உயிர்களும் மறைந்த உண்மைகளும்

கலவரங்கள் இரு வகைப்படும். திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம். முதல் வகை, லாப நோக்கத்தோடு அரங்கேறும். அடையவேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதுரியமாக காய்கள் நகர்த்தப்பட்டு, என்ன நடந்தது என்றே தெரியாதபடி மக்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். கடந்த மாதம் அசாமில் நிகழ்ந்தது இந்த வகை கலவரம்தான்.

ஜூலை 19 அன்று கொக்ரஜார் (Kokrajhar) மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள்மீது, வங்கதேசத்தினர் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அந்த வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை வங்கதேசத்தினர் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம். இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பிள்ளது.

இந்தக் கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்? எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?

அந்நிய ஊடுருவல் 

வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அசாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப, அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 84.55% அசாமியர்கள் ஹிந்து /பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?

அசாம் மாநிலம், வங்கதேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவி அசாமில் குடியேறத் தொடங்கினர். தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்களின் ஓட்டுக்காக, இந்த ஆக்கிரமிப்புக்குத் தூபம் போடுகின்றன. இந்த ஊடுருவலால் பாதிக்கப்படுபவர்களில் போடோ பழங்குடிகளும் அடங்குவர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Tibeto-Burman பிரிவைச் சேர்ந்த, போடோ மொழியை தாய் மொழியாகக் கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம் பேர். இவர்கள் கொக்ரஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வகுடிகள். இந்த ஊடுருவலால் பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களுடைய பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏற்பட்டு விட்டது.

தேசிய அபாயம்

வங்கதேச ஊடுருவல் கட்டுக்கடங்காமல் போவதையும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை அவர்கள் தட்டிப்பறித்துக்கொள்வதையும் கண்ட போடோ மக்கள் கோபம் கொண்டனர். சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையை அடைந்தனர்.

ஐரோப்பிய-அமெக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷினரிகள், போடோ மக்களின் போராட்டத்தைப் பாரதத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டமாகத் திருப்பும் முயற்சியில் வெற்றி பெற்றனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தனர். உண்மையில் இது 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு.  உல்ஃபா போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்கவேண்டும் என்ற கோரிகையை முன்வைத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும், தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.

2003ம் ஆண்டு, 3,082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் என்ற சுயாட்சிப் பகுதி அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2,500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆனால், ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது நேஷனல் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் ஆஃப் போடோலாண்ட் அமைப்பு.

ஓட்டு வங்கி அரசியல் அபாயம்

1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர்தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வாய்ப்பு தேடி நுழையும் வெளி மாநிலத்தவர்களை எதிர்த்து உள்ளூர் மக்கள் போராடத் தொடங்கினர்.  அசாமில் நடந்ததும் இதுதான். உள்புகுந்த வங்கதேச முஸ்லிம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants (Determination by Tribunal) – IMDT என்ற  சட்டத்தை 1983ல் அசாம் மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும்படிகொண்டு காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. காரணம், அவர்களுடைய ஓட்டு வங்கி.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும்போது அசாமிலிருந்து ஓர் உறுப்பனர்கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லிம்கள், இந்தியக் குடிமக்களாக நம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  இவர்கள் அசாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக்காட்டி இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் 2005-ல் ரத்து செய்தது.

அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று தெரிந்தே கொண்டுவரப்பட்ட சட்டம் இது. 2004ல் வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து, 2005ல் உச்ச நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்துக்குள் அசாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது.

ஆக அசாம் அரசியலின் மூன்று கதாநாயகர்கள், வெளிநாட்டு முஸ்லிம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள் மற்றும் ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள்.

குடியுரிமை கிடைக்கப்போகிறது

இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் பேர் முஸ்லிம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லிம்களும் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்கள் ஆகப்போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப்போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. ‘அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின்மீது நம்பக்கை இல்லை’ என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரகுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லிம் எம்.பிக்கள் குழு, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அது மட்டுமின்றி ஒரு முஸ்லிம் குழு அசாம் செல்ல வேண்டுமாம்.

இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லிம்களின், அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் அசாமில் முஸ்லிம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அசாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்ஃபா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அந்நியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அசாமுக்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டிகளும் கோரிக்கைகளும் டெல்லியிலும் மும்பையிலும் அரங்கேறும்போது, கலவர பூமியான அசாமின் மோகன்பூர் மற்றும் சோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பறப்பதை டைம்ஸ் நௌ என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லிம்கள் ஏன் பாகிஸ்தான் கொடியை ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அந்நிய நாடு இல்லையா? இவர்கள்தான் அப்பாவி முஸ்லிம்களா?

இவர்களைக் காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் கோருகிறார்கள். இவர்களுக்குக் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்கின்றன முஸ்லிம் அரசு சாரா அமைப்புகள். வெளிநாட்டுத் தலையீடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர்.  ஜூலை 29 அன்று அசாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குடி அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவித்துவிட்டார்.

ராணுவத்தை அவமதித்த முதல்வர்

கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகோய் தவறிவிட்டார் என்ற புகார் வந்ததும், ராணுவத்தின்மீது பழியைத் திருப்பிவிட்டார் முதல்வர். ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்குக் கொண்டுவந்திருக்கலாம் என்கிறார். அவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்றால், வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறதா?

எந்த இனம் அழியப் போகிறது?

வங்கதேச அந்நிய முஸ்லிம்கள், இப்போது அநாதைகள் என்ற போர்வையில் குடி அமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம் காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமில் இருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அநாதைகளாக இருப்பார்கள். அவர்கள்மீது வழக்கு தொடரப்படும். அரசியல் கட்சிகளோ ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கும். பாவம் அந்த 59 ஜீவன்கள்!

0

பால. கௌதமன்

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

ஜூலை 19 அன்று இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இரு தினங்களுக்கு முன்னால், மமதாவும் முலாயம் சிங்கும் இணைந்து அப்துல் கலாமைத் தங்களின் முதல் விருப்ப வேட்பாளாராக அறிவித்தனர். காங்கிரசுக்கு மமதா பாணர்ஜி வைத்த செக் என்று ஊடகங்கள் அதனைக் குறிப்பிட்டன. இந்த ஆண்டே தேர்தல் நடைபெறலாம் என்றும் ஆருடம் கூறின.
பதிலுக்கு பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தியிருக்கிறது சோனியா. சோனியாவின் விருப்ப வேட்பாளர் அல்ல அவர் என்றாலும், அப்துல் கலாமுக்கு மாற்றாக பிரணாப் அமைவார் என்பது சோனியாவின் நம்பிக்கை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது நிஜமே, என்றாலும் முலாயம் சிங், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக அடித்த அந்தர் பல்டி, மமதா தனக்குத் தானே செக் வைத்துக் கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பிஜேபி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. இனி ஆட்டம் சூடு பிடிக்க வேண்டுமானால் மாயாவதியும் கம்யூனிஸ்டுகளும் பிரணாப் முகர்ஜிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறவேண்டும். அப்போதுதான் பிஜேபியால் தெளிந்த நிலைப்பாட்டை எடுக்க இயலும்.  சங்மாவைப் பொறுத்தவரையில் அதிமுகவும் பிஜூ ஜனதாதளமும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் வேட்பாளராக அவர் நிற்கப் போவது உறுதி.

அலங்காரப் பதவி என்று வருணிக்கப்பட்டாலும், தற்போது சிக்கலான சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது குடியரசுத் தலைவர் பதவி. இந்தப் பின்னணியில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று பார்க்கலாம்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை யாருக்கு இருக்கிறது? 

  1. மாநில சட்டசபை உறுப்பினர்கள்
  2. மக்களவை லோக்சபா உறுப்பினர்கள்
  3. மாநிலங்களவை ராஜ்யசபா உறுப்பினர்கள்.  
ஒரு எம்ல்ஏவின் ஓட்டு  மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒரு எம்எல்ஏவின் ஓட்டு என்பது அவரது மாநில மக்கள் தொகைக்கு ஏற்றவாறு எண்ணிக்கை அளவில் வேறுபடும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒரு எம்எல்ஏ வின் ஓட்டின் மதிப்பும் மணிப்பூரில் உள்ள ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் வேறு.

(குறிப்பு: இந்திய அரசின் சட்டப் பிரிவு 52 -2 ன் கீழ் , 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால் , அதையே இங்கு கணக்கீட்டுக்காக எடுத்துள்ளேன்.)

எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை (1971 ஆம் ஆண்டின் கணக்கின்படி) / மாநிலத்தின் மொத்த சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000

உதாரணம் :

தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 4,11,99,168/234*1000=176.06 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 7,21,38,958/234*1000=308 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 2,09,843/32*1000 = 7 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 6,07,688/32*1000=18 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 30 மாநிலங்களில், ஒரு எம் எல் ஏ வுக்கான அதிக ஓட்டுகளைப் பெற்றுள்ள மாநிலம், உத்தரப் பிரதேசம். மதிப்பு, 495. குறைந்த ஓட்டுகளை சிக்கிம் மாநிலம் பெற்றுள்ளது. மதிப்பு, 18. தமிழ்நாடு 308 எம் எல் ஏக்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மொத்த மாநில சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120 ஆகும். எம் எல் ஏ க்களின் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை மதிப்பு  5,49,474 .(2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி).

எல்லா மாநிலங்களின் , எம் எல் ஏ வின் எண்ணிக்கை மதிப்பை அறிய இங்கே செல்லவும்.

எம்.பிக்களின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் = லோக்சபா உறுப்பினர்கள் (543 ) + ராஜ்ய சபா உறுப்பினர்கள் (233 ) = 776.

ஒரு எம்.பியின் ஓட்டு மதிப்பு = மாநில சட்டசபை உறுப்பினர்களின் மொத்த ஓட்டு மதிப்பு / மொத்த எம் பிக்களின் எண்ணிக்கை (லோக்சபா + ராஜ்யசபா)

ஒரு எம் பியின் ஓட்டு மதிப்பு = 5,49,474/776=708

மொத்த எம் பிக்களின் ஓட்டு எண்ணிக்கையின் மதிப்பு = 776 * 708 = 5,49,408

ஆதலால், குடியரசுத் தலைவருக்கு விழும் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை = 50% (எம் எல் ஏ ) + 50 % (எம் பி )

அந்த அடிப்படையில் மொத்த ஓட்டுகளின் மதிப்பு = 5,49,474+5,49,408=10,98,882 .

குடியரசுத் தலைவராக தகுதி பெற வேண்டிய ஓட்டு மதிப்பு என்ன?

குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் வெற்றி பெற தேவைப்படும் ஓட்டுகள் = (மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை/2 )+1

அதாவது, 10,98,882/2+1= 5,49,441+1=5,49,442

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்நதெடுக்கப்படுகிறார்?

இரண்டே இரண்டு பேர் தேர்தல் களத்தில் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், முதல் விருப்ப வேட்பாளர் 50 % க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருப்பார். அவர் வெற்றி பெற்றவர் என எளிதாக அறிவித்து விடலாம். ஆனால், நான்கு பேர் நிற்கும் பட்சத்தில் எவ்வாறு தேர்ந்தடுக்கப்படுவார்? கீழே கொடுக்கப்பட்ட பெயர்கள் தங்களின் கற்பனைக்கு மட்டுமே.

உதாரணமாக ,

அப்துல் கலாம், பி ஏ சங்மா, பிரணாப் முகர்ஜி, ராம்ஜெத்மலானி என நான்கு பேர் நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  விழுந்த மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 15௦௦௦ எனக் கணக்கில் கொள்வோம். ஒவ்வொரு வாக்காளரும் தனது விருப்ப அடிப்படையில் முதல், இரண்டு, மூன்று, நான்கு  என வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?

அப்துல்கலாம் = 5,250

பிரணாப் முகர்ஜி=4,800

ராம்ஜெத்மலானி = 2,700

பி ஏ சங்மா =2,250

7501 ஓட்டுகள் வாங்கியவர் தான் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட வேண்டும். முடிவுகள் மேற்கூறிய நால்வருக்கும் வராத பட்சத்தில்,  நான்காம் இடத்தில் இருப்பவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப  ஓட்டுகள் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதாவது, அவருடைய ஓட்டு சீட்டில், இரண்டாம் விருப்ப ஓட்டுகள் யாருக்கு என்பதைப் பொறுத்து அந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த நிலையில் பி ஏ சங்மா போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப ஓட்டுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் அந்த ஓட்டுகள் அந்தந்த வேட்பாளருக்குப் போய்ச்சேரும்.

பி ஏ சங்மாவின் ஓட்டு சீட்டில் இரண்டாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை  :

அப்துல் கலாம் = 600

பிரணாப் முகர்ஜி=750

ராம் ஜெத்மலானி = 900

இப்போது வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

அப்துல்கலாம்= 5,250+600= 5,850

பிரணாப் முகர்ஜி= 4800+ 750 = 5,550

ராம் ஜெத்மலானி = 2,700+900=3,600

இந்நிலையிலும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறுவதற்கான 7501 ஓட்டுகளைப் பெறாத காரணத்தினால் , மூன்றாம் நிலையில் உள்ளவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் . மூன்றாவது முறையும் வாக்குகள் எண்ணப்பட்டு, மூன்றாம்  நிலையில் உள்ளவரின் மூன்றாம்  விருப்ப ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும்.

ராம் ஜெத்மலானி ஓட்டு சீட்டில்  மூன்றாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை  :

அப்துல்கலாம் = 1,450
பிரணாப் முகர்ஜி = 2 ,150
இந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும் பட்சத்தில் அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி பெற்ற வாக்குகள்:
அப்துல் கலாம் = 5,850+1,450=7,300
பிரணாப் முகர்ஜி = 5,550 + 2,150= 7,700
இறுதி சுற்றில் பிரணாப் முகர்ஜி 7 ,501 ஓட்டுகளை விட அதிகமாக பெற்று விட்டதால் அவரே இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆட்டத்தின் போக்கு எந்த சுற்றில் வேண்டுமானாலும் மாறலாம். ஆகையால் அதிக வேட்பாளர்கள் நிற்கிற பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது மிகச் சிறந்த சதுரங்க ஆட்டமாகவே இருக்கும்.
இன்னும் சில தினங்களில் வேட்பாளர்கள் எத்தனை பேர் , எதிர் கட்சிகள் சார்பில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள், ஆளுங்கட்சி சார்பில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இந்த ஆட்டம் சூடு பிடிக்கும்.  தற்போதைய நிலையில் வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவின் வர்த்தகத் துறை அமைச்சராக இருமுறையும், வெளியுறவு அமைச்சராக ஏற்கெனவே ஒரு முறையும் பணியாற்றிய தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட முடிவு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
0
லஷ்மண பெருமாள்