அரை உண்மைகளின் அபாயம்

images (3)லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.

இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.

மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.

இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாகப் பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் பங்களாதேஷிகள் இன்றும் உண்டு (அந்தப் போரில் அப்படி ஒரு ரட்சகனாக இருந்த இந்திய ராணுவம் இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது… இதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை).

கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது (மிஷன் ஆல்ரெடி அக்கம்ப்ளிஸ்ட்). ஏற்கெனவே, மூத்த இளவரசர் சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த இளைய இளவரசர் ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.

கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.

ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.

இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.

இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.

இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும். தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.

கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் ஈழத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%)  அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள். இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவையெல்லாம் 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய நிலை. அப்படியாக தனி நாடு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. ‘தன்னெழுச்சியாகப்’ போராட முன் வந்திருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களும் இதையே முன்வைத்திருக்கிறார்கள். அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.

இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.

பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.

பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன. மீட்பு தேடி ஓடும் நம்மை, புதிய அவதாரமெடுத்து அரவணைக்கக் காத்திருப்பதோ தெய்வ வடிவில் இருக்கும் சாத்தான். சூனியக்காரிக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது.

மகாராஷ்டிரா : செழுமையும் வறட்சியும்

தி ஹிந்துவில் பிப்ரவரி 27, 2013 அன்று பி. சாய்நாத் எழுதிய How the other half dries கட்டுரையின் மொழியாக்கம்

27Sainath_jpg_1378079gஎவ்வாறு மறுபகுதி வறண்டு போகிறது ?

“அடுக்குமாடி குடியிருப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக் கனவு. அரசனின் மகுடத்தின் உச்சியில் பதிக்கப்படும் நவரத்தினம் போன்றது இது.”  படாடோபமான வாழ்க்கை முறை அவற்றை இன்னும் பெரியதாகச் சொல்கிறது.  ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திலும் சொந்தமாக நீச்சல்குளம் இருக்கிறது.  “மிக ஆடம்பரமானது”, “சிறப்பான கலைநயமான வடிவமைப்புகள்” “உங்கள் வாழ்நிலை உயர்வுக்கு பொருந்தும் அமைப்புகள்” என்று விளம்பரங்கள் பளபளக்கின்றன.

 தோட்டங்களுடன் கூடிய தனி வீடுகளை (வில்லா) உருவாக்குபவர்களும் கட்டடக் கட்டுமான முதலாளிகளும் இப்படிப்பட்ட குடியிருப்புகளை “முதல் தரத்தில் மதிப்பிடக் கூடியவை” என்று உயர்வாக சொல்கின்றனர்.  அவை 9000 முதல் 22000 சதுர அடி அளவுகளில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் நீச்சல் குளம் உண்டு.  இன்னும் வரவிருக்கிற ஒரு குடியிருப்பு வளாகத்தின் உச்சியில் அதாவது மேல்தளத்தில் ஓர் ஆச்சர்யம் அமையவிருக்கிறது. ஆம், நீங்கள் அனுமானிப்பது போல் அங்கும் ஒரு நீச்சல் குளம் இருக்கும்.

இவையெல்லாம் புனே நகரத்தில் மட்டும்.  இவையனைத்துக்கும் கூடுதலான வசதிகளோடு, கூடுதலான தண்ணீரும் தேவைப்படுகிறது. ஒரு சிறிய ஆனால் கர்வம் கொள்ள வைக்கும் போக்கு யாதெனில், இன்னும் இது போல் நிறைய வரப்போகிறது என்பதுதான்.  எந்த மண்டலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வறட்சி நிலவி வருகிறதோ, அங்குதான்  இவையனைத்தும் தற்போது தோன்றியுள்ளன.  மகாராஷ்டிராவில் அதன் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவாண் பார்வையில், அந்த மாநிலம் இது வரை சந்தித்திராத மிக மோசமான வறட்சியைச் சந்திக்கிறது.  அந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தற்போது தண்ணீர் லாரியின் வருகையை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றன.  ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் லாரி வந்தால் நீங்கள் அதிருஷ்டசாலி. இல்லாவிட்டால் வாரத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வரும்.

ஆம், நீச்சல் குளங்களுக்கும், வறண்ட ஏரிகளுக்குமிடையே தொடர்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அது பற்றி நிச்சயமாக சிறிய அளவிலான விவாதம்கூட இல்லை.  கடந்த 24 ஆண்டுகளில், 12-க்கும் மேற்பட்ட நீர் நிலை பூங்காக்கள், செயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், நீர் விளையாடு களங்கள் உள்ள (தீம் பார்க்) பொழுதுபோக்கு பூங்காக்கள் தோன்றியுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.  ஆனால் ஒரு கட்டத்தில் அவை மாநகர் மும்பையில் மட்டும் இருப்பனவாக அமைந்தது.

பெரிய அளவிலான மாற்றங்கள்

 

மாநிலம் முழுவதும் அனைத்து வறட்சி பாதித்த மண்டலங்களிலும் நம்பிக்கையின்மை வளர்ந்தது.  7000 கிராமங்களுக்கு மேல் கடுமையான வறட்சி அல்லது உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.  அலுவலக விவரங்களின்படி இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மண்டலங்களும் மோசமடைந்து வருகின்றன.  ஆனால் வறட்சி பாதித்த பகுதி என வகைப்படுத்தப்படவில்லை. அது போல் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் மிகச் சிலர் சிறிய அளவில் உதவிகள் பெற்றனர்.  அதாவது அந்தப் பகுதிகளுக்கு தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.  ஏறக்குறைய ஐம்பது லட்சம் கால்நடைகள் வளர்ப்பு முகாம்களை நம்பியிருக்கின்றன.  நம்பிக்கையின்மையின் காரணமாக கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.  நீர் தேக்கங்களில் 15 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பு இருந்தது.  சிலவற்றில் அவையும் இன்றி வறண்டிருந்தன.  ஆனால் 1972ல் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்கு பிறகு தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியாகும்.

கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவில் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பிவிடப்பட்டது.  அதே போல் வாழ்க்கை தரத்தை மாற்றிக் காட்டுகிறோம் என விளம்பர உத்தியை கையாண்ட வியாபார நிறுவனங்களுக்கும் தண்ணீர் பெருமளவில் அளிக்கப்பட்டது.  கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அவ்வாறு திருப்பிவிட்ட வகையில் மக்களின் ரத்தம் சிந்தப்பட்டது.  மாவல் நகரத்தில் 2011ல் கோபமுற்ற விவசாயிகளை நோக்கி காவல்துறையினர் சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் காயமுற்றனர்.  பாவனா அணையிலிருந்து பிம்ரிசின்ச்வாட் எனுமிடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல விளைநிலங்களின் வழியாக குழாய்கள் அமைத்த அரசின் நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் போராடியபோது அந்த சம்பவம் நடைபெற்றது.

இதனால் ஏற்படப்போகும் நீர் இழப்பை கணக்கிட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  அந்த நேரத்தில் அரசு சுமார் 1200 பேர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தது.  வன்முறையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டது.

துணை முதலமைச்சர் அஜித்பவார் அவர் பங்கிற்கு விவசாயத்தை மூடும் வகையில் தொழிற்சாலைகளின் கட்டுபாட்டில் நிலங்களை கொண்டு வந்தார்.  இன்னும் சற்று மோசமாகும் வகையில் சட்டத்திருத்தமே அவரால் கொண்டு வரப்பட்டது.  ஏற்கெனவே மோசமாக உள்ள மகாராஷ்டிரா நீர்வள சீரமைப்பு அதிகார ஆயச்சட்டத்தில் ஒரு புதிய ஷ‌ரத்தைச் சேர்த்து தண்ணீர் விநியோக கொள்கை முடிவை யாரும் எதிர்க்க இயலாத வண்ணம் தடை ஏற்படுத்தினார்.

பொழுது போக்கு கேளிக்கைகளுக்கு தண்ணீரை திருப்பிவிடுவது ஒன்றும் புதிதல்ல என்ற போதிலும், 2005ல் பெரிய அளவில் கேளிக்கை மற்றும் உணவு கிராமம், நீர் விளையாட்டுகள் நிறைந்த மகிழ்வு பூங்காக்கள் ஆகியவை நாக்பூர் மாவட்ட ஊரக பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது.  உண்மையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிய நேரம் அது. அந்தக் கேளிக்கை கிராமத்தில் 18 விதமான நீர் வீழ்ச்சிகள், நீர் விளையாட்டு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  அந்த இடத்தில்தான் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை பனி மலை மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் அமையப்பெற்றது.  47 டிகிரி வெப்பம் நிலவுகையில் தொடர்ந்து பனிக்கட்டியாக பராமரிப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல.  அதற்கு மிக அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், அந்த மண்டலத்தில் வசித்த சாதாரண மக்களுக்கு 15 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டது.  மேலும் அதிக அளவிலான நீரும் அதற்காக செலவிடப்பட்டது.

 லாவாசா மற்றும் விவசாயம்

கடந்த ஆண்டுகளில் சில கோல்ப் மைதானங்கள் தோன்றியதும் இந்த மாநிலத்தில்தான்.  ஆழ்துளை குழாய்கள் பதிக்கப்பட்டு தற்போது 22 மைதானங்கள் உள்ளன.  கோல்ப் மைதானத்தை பராமரிக்க மிகுதியான தண்ணீர் செலவழிக்கப்படுகிறது.  கடந்த காலங்களில் இதனால் விவசாயிகளிடம் கோபத்தை விளைவித்து பல மோதல்கள் நடைபெற்றுள்ளது.  கோல்ப் மைதானங்களைப் பராமரிக்க அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகள் தூவப்படுவதால் அவை மற்ற நீர் ஆதாரங்கைளயும் மாசுபடுத்துகிறது. இவற்றுக்கு அப்பாற்பட்டு “சுதந்தர இந்தியாவின் முதல் மலை நகரம்” என்றழைக்கப்படும் லாவாசா திட்டத்துக்காக பெருமளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து பல எதிர்ப்பு இயக்கங்களை நாங்கள் இந்த மாநிலத்தில் பார்க்க முடிந்தது.

மாநிலத்தில் மிகுதியான வறட்சி நிலவுகையில் தனது குடும்ப திருமணத்தை ஆடம்பரமாக நிகழ்த்தியதற்காக சரத்பவார் தனது சொந்த கட்சியின் அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் என்பவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்காக பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றார்.  ஆனால் மத்திய விவசாயத் துறை அமைச்சரான பவார் எப்போதும் லாவாசா திட்டத்தைப் பற்றி பெருமை பேசுவதிலேயே நேரத்தைச் செலவழித்தார்.  லாவாசா திட்டம் குறித்து இணையத்தளத்தில் உள்ள புள்ளி விவரங்களிலிருந்து 0.87 டிஎம்சி தண்ணீரை இருத்தி வைக்க அனுமதி உள்ளதாக தெரிய வருகிறது.  அதாவது ஏறக்குறைய 24.6 பில்லியன் லிட்டர் தண்ணீர் ஆகும்.

எந்த மாநிலமும் குறைவான பாசனத்துக்கு மிகுதியான பணம் செலவழிப்பது இல்லை.  பொருளாதார ஆய்வறிக்கை 2011-12 லிருந்து கடந்த 12 ஆண்டுகளில் 0.1 சதவீத நிலங்களில்தான் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிய வருகிறது.  அதாவது இந்த மாநிலத்தில் 18 சதவீதத்திற்கு குறைவான நிலங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.

பத்தாயிரம் கோடிகளில் பணம் செலவழிக்கப்பட்டு பல கோடீஸ்வரர்களை உருவாக்குகிறது. மறுபுறம் மிகக் குறைவாகவே பாசனம் மேற்கொள்ளப் படுகிறது.  விவசாயம் குறைந்து கொண்டே வரும் அதே நேரத்தில் பெரும் அளிவில் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டது. (2011-12 பொருளாதார ஆய்வின்படி உணவு தானிய உற்பத்தியில் 23 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது).

ஒருபுறம் உணவு தானிய உற்பத்தி குறைந்த போதிலும் மகாராஷ்டிராவில் மூன்றில் 2 பங்கு நிலங்களில் வறட்சி மிகுந்து, தண்ணீர் கிடைக்காத நிலையிலும் கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.  ஒரு மாவட்ட ஆட்சியர்கூட இந்த வறட்சி காலத்தில் கரும்பு பிழிவதை நிறுத்த தலைப்படவில்லை.  கரும்பாலைகள் தினசரி 90 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தின.  சர்க்கரை ஆலை முதலாளிகளின் அதிகாரத்தால் கரும்பு பிழிவதை தற்காலிக இடை நீக்கம் செய்வதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர்கள் தற்காலிக இடை நீக்கம செய்யப்பட்டனர்.

ஒரு ஏக்கரில் பயிராகும் கரும்புக்கு தேவையான தண்ணீரை கொண்டு 10 முதல் 12 ஏக்கர் நிலங்களில் ஜோவார் போன்ற உணவுப் பயிர்களை விளைவித்துவிட முடியும்.  மகாராஷ்டிராவில் பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீரில் பாதி இந்த கரும்பிற்கு செல்வதால், 6 சதவீத நிலங்கள் மட்டுமே பாசனம் பெறும் பகுதியாக இருந்தது.  கரும்புக்கு 180 ஏக்கர் இன்ச் தண்ணீர் தேவை.  அதாவது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டு 3000 ஊரக பகுதி வீடுகளின் ஒரு மாத தண்ணீர் தேவையை நிறைவேற்றிவிட முடியும்.

சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் நீர் தேவை என்ற கணக்கின்படி,  இந்த மண்டலத்தில்தான் நீர் இருப்பு பட்டியல் வருடந்தோறும் குறைந்து வருகிறது. இவையெல்லாம் மகாராஷ்டிராவில் பயிரிடப்படும் ரோஜாப்பூ விவசாய உற்சாகத்தை குறைத்துவிடவில்லை.  அதற்கு கிடைக்கும் சிறிய உத்திரவாத வியாபார போக்கினால் மேலும் சிலரை அந்தப் பயிருக்கு கவர்ந்திழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.  ரோஜாக்களுக்கு அதிக நீர் தேவை.  அதற்கு “212 ஏக்கர் இன்ச்” தண்ணீர் தேவை.  அதாவது 21.2 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு ஏக்கருக்கு. ரோஜா உற்பத்தி சிறிதளவானாலும் மாநிலத்தில் நடைபெறும் சில கொண்டாட்டங்களால் அதற்கு வரவேற்பு உள்ளது.  இதன் ஏற்றுமதி இந்த வருடம் 15 – 25 சதவீதம் உயர்ந்துள்ளது.  ரூபாயின் வீழ்ச்சி, நீடித்த குளிர்காலம், மற்றும் “காதலர் தினம்” போன்றவை ரோஜா உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் சீரமைப்பு நடவடிக்கைகள் என்பதைப் பொறுத்தவரை பெரிய அளவிலான தண்ணீரைத் தனியார்மயப்படுத்துதலில்தான் இருந்துள்ளது.  இந்த இயற்கை வளத்தின் மீதான சமூக கட்டுப்பாடு மிகவும் வேகமாக செயலிழக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் நிலத்தடி நீரை மிகுதியாக வீணடிப்பதாலும் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.  தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை அங்கு கொண்டுவர மகாராஷ்டிரா கடுமையாக உழைத்துள்ளது. கடல் போல் விரிந்து பரந்த வறண்ட நிலங்களுக்கு நடுவில் தனியார் நீச்சல் குளங்கள்.  பணக்காரர்களுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இல்லை.  ஆனால் மீதமுள்ளவர்களின் எதிர்பார்ப்பு தினந்தோறும் ஆவியாகிக்கொண்டிருக்கிறது.

0

நன்றி : பி. சாய்நாத், தி ஹிந்து / தமிழில் : எஸ். சம்பத்

தாக்கரேவுக்கு ஏன் அஞ்சலி செலுத்தமுடியாது?

இன்றைய தி ஹிந்துவில் (நவம்பர் 19, 2012) வெளியான ஜஸ்டிஸ் மார்கண்டேய கட்ஜுவின் கட்டுரை Why I can’t pay tribute to Thackarey, அவர் அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் : மருதன்.

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களிடம் இருந்து புகழஞ்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.

பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1(1) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களின் யூனியனாக இருக்கும்.’ அதாவது, இந்தியா என்பது கூட்டுக்குழு அல்ல, யூனியன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 19(1)(e) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தங்கவும், குடியமரவும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.’

ஒரு குஜராத்தியோ, தென் இந்தியனோ, பிகாரியோ, உத்தரப் பிரதேசத்துக்காரரோ அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவுக்குக் குடிபெயரலாம். இது அனைவருக்குமான அடிப்படை உரிமை. (சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவ்வாறு குடியேறுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.)

ஆனால், பூமிபுத்ரா கோட்பாட்டின்படி, மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கு மட்டுமே உரியது. குஜராத்திகள், தென் இந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோர் ‘வெளியில் இருப்பவர்கள்’. நாம் மேலே கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு நேர் எதிரான கோட்பாடு அல்லவா இது! இந்தியா என்பது ஒரு தேசம். மராத்தியர் அல்லாதாரை அயல்நாட்டினரைப் போல் மகாராஷ்டிராவில் நடத்தமுடியாது.

தாக்கரே தோற்றுவித்த சிவ சேனா, அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் தென் இந்தியர்களைத் தாக்கி, அவர்களுடைய வீடுகளையும் உணவிடங்களையும் அழித்தொழித்தது. மும்பையில் செய்தித்தாள்கள் விற்பவர்களாகவும் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் இருந்த பிகாரிகளையும் உத்தரப் பிரசேத்துக்காரர்களையும் 2008ல் தாக்கினார்கள். அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டார்கள். இஸ்லாமியர்கள் வில்லன்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

இவையனைத்தும் ஓட்டு வங்கிகள் உருவாக தாக்கரேவுக்கு உதவி செய்தன. வெறுப்புணர்வின் அடிப்படையில் திரண்ட வங்கிகள் இவை. ஹிட்லரும் இப்படித்தான் செய்தார் என்பதையும் தாக்கரே ஹிட்லரை நேசித்தவர் என்பதையும் இங்கே நினைவுபடுததிக்கொள்ளவேண்டும்.

தாக்கரோவை நான் விமரிசிப்பதற்குக் அவருடைய தேச விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கோட்பாடு மட்டும் காரணமல்ல. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

What is India? என்னும் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா என்பது வட அமெரிக்காவைப் போல குடியேறிகளால் உருவான ஒரு நாடு. இன்று இங்கு வசிக்கும் 92 முதல் 93 சதவிகித மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் அல்லர். அவர்கள் குடியேறிகளின் வழிவந்தவர்கள். நல்ல வாழ்வு தேடி வட மேற்குப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள். இதுபற்றி மேலும் விரிவாக அறிய என் வலைப்பதிவுக்குச் செல்லுங்கள்.  இந்தியாவின் அசலான பூர்வகுடிகள் (பூமிபுத்ராக்கள்) ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்ட திராவிட பழங்குடிகளுக்கு முந்தையவர்கள். (கோண்டுகள், சாந்தல்கள், தோடாக்கள் போன்றவர்கள்.) இப்போது அவர்களுடைய மக்கள்தொகை 7 அல்லது 8 சதவிகிதம் மட்டுமே.

பூமிபுத்ரா கோட்பாட்டை நிர்தாட்சண்யமாக அமல்படுத்தவேண்டுமானால், 92 முதல் 93 சதவிகிதி மகாராஷ்டிரியர்களை நாம் அந்நியர்களாக மதிப்பிடவேண்டியிருக்கும். இவர்களுள் தாக்கரே குடும்பத்தினரும் அடக்கம். மகாராஷ்டிராவைப் பொருத்தவரை உண்மையான பூமிபுத்ராக்கள் எனப்படுவோர் பழங்குடிகள் (Bhils போன்றவர்கள்). இவர்கள் தற்போது 7 முதல் சதவிகிதம் வரையிலேயே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பல பிரிவினைவாத சக்திகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டுகளாக உடைப்பதே இவர்கள் குறிக்கோள். நாட்டுப்பற்று உள்ள அனைவரும் இவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.

நாம் எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தாகவேண்டும். விவசாயத்தால் மட்டும் இதனை நம்மால் சாதிக்கமுடியாது. நமக்கு நவீனத் தொழிற்சாலைகள் தேவை. நவீனத் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய சந்தை தேவைப்படுகிறது. ஒன்றுபட்ட இந்தியாவால்தான் இப்படிப்பட்ட மிகப் பெரிய சந்தையை அளிக்கமுடியும். வறுமையை ஒழிக்கவேண்டுமானால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டுமானால், பிற சமூக அவலங்களை ஒழிக்கவேண்டுமானால் நவீன தொழிற்சாலைகள் தேவை. நவீன கல்விமுறையையும், நல்ல மருத்துவ வசதிகளையும் நாம் உருவாக்கவேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இருக்கவேண்டியது அவசியம். உலகின் முன்னேறிய நவீன நாடுகளில் ஒன்றாக இந்தியா வளரவேண்டும்.

எனவே, திரு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு நான் வருந்துகிறேன்.

0

(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).

இலங்கையில் நீதி கோருவோம் – ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல்

 

ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் கையெழுத்து இயக்கப் பிரசுரத்தின் தமிழாக்கம்

ஆம்னெஸ்டியின் பிரசாரத்துக்கு ஆதரவு தாருங்கள். இலங்கையில் நீதி கோருங்கள். 080670-06666 என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தாருங்கள். அல்லது இந்த இணையத்தளத்துக்குச் சென்று கையெழுத்திடுங்கள்.

இலங்கையில் தற்போது நடந்துவரும் மனித உரிமை மீறல்களை நிறுத்துவதாகவும் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதாகவும் இலங்கை அரசு உறுதிகூறியிருந்தது. இலங்கை சொன்னபடி நடக்குமாறு அதனை வற்புறுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைக் கேட்டுகொண்டு ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இந்தியா ஒரு இணையக் கோரிக்கைப் பிரசாரம் ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் மாதம் அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆண்டுமுழுதும் நடக்கப்போகும் இந்தப் பிரசாரத்தின் இரண்டாம் கட்டத்தை ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இப்போது செயல்படுத்த உள்ளது. இந்தியக் குடிமக்களின் கையெழுத்துடன் ஓர் இணையக் கோரிக்கை, ஐ.நாவின் மனித உரிமை மீதான யுனிவர்சல் பீரியாடிக் ரிவ்யூ (யூ.பி.ஆர்) நடக்கப்போவதற்கு முன்பாக, நவம்பர் 1-ம் தேதி அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்படும்.

‘இலங்கையில் நீதி கோருவோம்’ பிரசாரம், ஆகஸ்ட் மாதத்தில் வெறும் ஏழே நாள்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் பங்களிப்பைப் பெற்றது. அதில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனலின் இரண்டாம் கட்டப் பிரசாரம் இந்தியா முழுமையிலிருந்தும் ஐந்து லட்சம் பேரின் பங்களிப்பைப் பெற விழைகிறது.

ஐ.நாவின் யூ.பி.ஆரில் தொடங்கி அக்டோபர் 2013-ல் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுவரை, இலங்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கப்போகிறது.

சர்வதேச அளவிலும் பிராந்தியத்திலும், இந்தியா மனித உரிமையில் தலைமை வகிக்கவும் ஓர் ‘உண்மையான குடியாட்சி’யாக நடந்துகொள்ளவும் செய்யும் ஓர் இயக்கத்தில் ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் சேர்ந்துகொண்டுள்ளது என்றார் ஆம்னெஸ்டி இந்தியாவின் தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மநாபன்.

‘இந்தியா தன் தென் அண்டை நாட்டின்மீது கட்டாயம் அழுத்தம் செலுத்தவேண்டும். உலகளாவிய தலைமை நாடு, உண்மையான குடியாட்சி என்று கருதப்படவேண்டும் என்று இந்தியா நினைத்தால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் பெரும் பங்கு வகிக்கவேண்டும் என்று இந்தியா கருதினால், உள்நாட்டிலும் சரி, பிராந்தியத்திலும் சரி, மனித உரிமை சார்பாக வலுவான தலைமைத்துவத்தைக் காண்பிக்கவேண்டும்’ என்றார் அவர்.

நவம்பரில், இந்தியாவின் தலையீட்டில் இலங்கையின் மனித உரிமை நிலை, யு.பி.ஆரால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ராஜபக்‌ஷே அரசின் கடந்த நான்கரை ஆண்டுகால மனித உரிமைச் செயல்பாடுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படும். ஐ.நாவால் தரப்படும் பரிந்துரைகளுக்கு இலங்கை பதில் சொல்லவேண்டிவரும். 2008-ல் இலங்கை, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஐ.நா அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த அந்த நாடு தவறிவிட்டது. இந்த ஆண்டு, இலங்கையை வற்புறுத்தி நிஜமான மாற்றத்தைக் கொண்டுவர இந்தியாவுக்கு ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘இலங்கையுடன் தான் நெருங்கிய உறவு கொண்டுள்ளதாக இந்தியா சொல்கிறது. அப்படியானால், இலங்கை அரசிடம் அல்ல, இலங்கை மக்களிடம்தான் அதன் உண்மையான கடப்பாடு உள்ளது என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும்’ என்கிறார் அனந்தபத்மநாபன்.

இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்குக் கீழ்க்கண்ட வகையில் அழுத்தம் தரவேண்டும் என்கிறது இந்தக் கோரிக்கை:

  • சித்திரவதை, காணாமல்போதல், கொலைகள் ஆகியவை தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • ஐ.நாவின் தனி விசாரணையை அனுமதிக்கவேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தன் வேலையைத் திறம்படச் செய்ய அனுமதிக்கவேண்டும்.
  •  வழக்கே போடாமல் கைது செய்தவர்களையும் சர்வதேச மனித உரிமை எதிர்பார்க்கும் தரத்துக்கு அருகில் வராத ‘நெருக்கடி நிலை’ அல்லது ‘தீவிரவாத எதிர்ப்பு’ சட்டத்தின்கீழ் கைது செய்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

2008-ல் இலங்கை மேலே குறிப்பிட்டவற்றை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னது. ஆனால் சில மாதங்களுக்குள்ளாகத் தான் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. வலுவான அண்டை நாடாக உள்ள இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சாதாரண இலங்கை மக்களின் மனித உரிமை காக்கப்படுவதில் தனக்குள்ள உறுதியை நிலைநாட்டவேண்டும்.

இந்தப் பிரசாரத்துக்கான உங்கள் ஆதரவைக் காண்பிக்கவும் இலங்கையில் நீதியைக் கோரவும் 080670-06666 என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தரவும் அல்லது கீழ்வரும் தளத்துக்குச் சென்று கையெழுத்திடவும்.

 0

இந்திய நாகரிகம் – ஓர் அறிமுகம்

இந்திய நாகரிகம் தொன்மையானது, தொடர்ச்சியானது. அரிதானதும்கூட. சீன நாகரிகத்தில் மட்டுமே இத்தகைய தொன்மையையும் தொடர்ச்சியையும் பார்க்க முடியும் என்று பண்டைய இந்திய வரலாறு என்ற நூலில் கே.சி. சௌத்திரி என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

‘அந்நியர்கள் வரும்போது அவர்களுடைய கருத்துகளும், ஏற்கெனவே பாவிக்கப்பட்டு வந்த கருத்துகளும் — இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் –  இணைக்கப்பட்டன. அதன்மூலம் புதிய கருத்துகள் வார்த்தெடுக்கப்பட்டன. இதுவே இந்திய நாகரிகத்தின் உயிராகவும் மூச்சாகவும் இருந்தது. காலாகாலத்துக்கும் அதற்கு ஒரு தொடர்ச்சியைக் கொடுத்தது.’

மனிதன் நாகரிக உருவாக்கத்துக்கு முந்தியவன், பழைமையானவன். தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னோக்கி எடுத்துச்சென்றன. அவற்றை இணைத்துப்பார்க்கும் போது பல கண்ணிகள் விடுபட்டுப் போயிருப்பதும் புலப்படத்தான் செய்கிறது.

மனிதன் மிகப் பலவீனமான மிருகம். அதே சமயம் மனிதன் மட்டுமே சுற்றுச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் தன் தேவைக்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தவும் தெரிந்துகொண்ட மிருகம்.

This begining is as animal as social life itself at this stage. It is mere herd-consciousness, and at this point man is only distinguished from sheep by the fact that with him consciousness takes the place of instinct or that his instinct is a conscious one. (The German Ideology, Marx and Engels).

சுற்றுப்புறத்தைக் கட்டுப்படுத்த அவன் எடுத்துக்கொண்ட விவேகமான முறைமைகளும், மற்ற மனிதர்கள், மனிதக் குழுக்கள் ஆகியவற்றோடு ஒட்டி வாழ அவன் முயன்றதும்தான் மனித நாகரிக முன்னேற்றத்துக்கான ஆணிவேர்களாகும்.

நாகரிக வளர்ச்சியின் அஸ்திவாரம் முதலாவது விவேகம், இரண்டாவது அவனுடைய சூழ்நிலை. சூழ்நிலை என்பது அவன் வாழும் பகுதியின் இயற்கை தன்மையையும், சிறப்புத் தன்மையையும் பொறுத்துள்ளது.

வரலாறு என்பது காலக்கணக்குக்கு உட்பட்டதாகும். இல்லையென்றால் தொடர்பற்ற சில கதைகளாக மாறிவிடும். வரலாற்றின் ஒரு கண் காலக் கணக்கு. மற்றொன்று அது எழுதப்படும் மண்ணின் புவியியலாகும். (Physical Geography).

உலக நாகரிகங்களை, சிந்துவெளி நாகரிகம், நைல் நாகரிகம், டைகரிஸ் – ஈப்ரிடஸ் நாகரிகம், யாங்ஸி நாகரிகம் என்று நான்காகப் பார்க்கிறார்கள். இந்திய நாகரிகம் அல்லது சிந்துவெளி நாகரிகம் என்பது இணையற்ற சில சிறப்பு அம்சங்களைப் பெற்றிருக்கிறது. ஒரு தொய்வில்லாத தொடர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

அந்நிய கருத்துகள் வந்தபோதும் அதனைச் செரிமானம் செய்துகொண்ட போதும் தனக்கென்று உள்ள சில அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டது. மேற்கத்திய கலாசாரம் கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் அதன் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. இயற்கையை வெல்வதன் மூலம் இது முன்னேறியது. இயற்கையை வெல்வதுதான் நாகரிகத்தின் சாராகக் கருதி தன்னை வளர்த்துக் கொண்டது.

இந்திய நாகரிகமோ ஒத்து வாழ்வதும், சுற்றுச் சுழலோடு இணைந்து வாழ்வதும்தான் முக்கியமானது என்று கருதியது.

‘இயற்கையை ஆளுவோம் என்று மேலை நாகரிகங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மனிதனுக்கு நேர் எதிராக நிற்கும் இயற்கையிடமிருந்து வளமான வாழ்வைப் பறிக்க முனைவதுதான் மேற்கத்திய நாகரிகத்தின் அடிநாதம்…. ஆனால் இந்தியாவின் பார்வை வித்தியாசமாக இருந்தது. மனிதனும் உலகமும் வெவ்வேறானவை என்று பார்க்காமல், இரண்டும் இணைந்ததுதான் முழுமையான உண்மை, தனி மனிதனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையேயுள்ள இணக்கம்தான் முக்கியமானது என்று இந்தியா கருதியது.’ (குருதேவர் ரவீந்தரநாத் தாகூர் 1912 – 12ம் ஆண்டுகளில் சிகாகோ, ஹார்வர்டு பல்கலைப்கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து).

இந்திய நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதையும் வரலாற்றாளர்கள் சிறப்பான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அது மொழியில், சமூக அமைப்பில், மதத்தில், இலக்கியத்தில் பரவியுள்ளது.

‘ஹரப்பா நாகரிகத்தில் ஈசன் என்றும், பசுபதி என்றும், அன்னை தெய்வம் என்றும் வழிபட்டு வந்தார்கள். இன்றும் சிவனாகவும் பார்வதியாகவும் வழிபாடு நடப்பது அதன் எச்சம்’ என்கிறார் கே.சி. சௌத்திரி.

‘பனிக்கட்டி உருண்டு வரும்போது தன்னுள் ஏராளமானவற்றை சேர்த்துக் கொள்கிறது. மேலும் மேலும் கனமடைந்தாலும் அதன் உட்பகுதியை மேலே சேர்ந்தவை மூடாமல் பளிங்கு போல வெளிக்காட்டுகிறது. இந்திய நாகரிகமும் இப்படிப்பட்டதுதான்!’ என்று பண்டித ஜவஹர்லால் நேரு தன்னுடைய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திய நாகரிகத்தின் அடிப்படை சகிப்புத்தன்மை. அதனை அமல்படுத்தும்போது ஏற்படுவதுதான் ஒற்றுமையில் வேற்றுமை சகிப்புத் தன்மையும், சகோதரத்துவமும் பரந்துபட்ட உலகில் பரவ வேண்டும் என்பதுதான் இந்திய நாகரிகத்தின் அடிப்படையான நோக்கம்.

Brothers and Sisters என்று விவேகானந்தர் சிகாகோ நகரத்துச் சிறு மண்டபத்தில் அழைத்ததன் முழு அர்த்தமும், சாரமும், இந்திய நாகரிகத்தின் வெளிப்பாடுதான். இதுதான் இந்திய நாகரிகத்தின் அழிவற்ற குணம்.

இந்த சகிப்புத்தன்மை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல்ரீதியான பலவீனமாகவும் இருந்ததுண்டு. இருந்தும் இதுதான் இந்தியத் தன்மையின் சிறப்பு என்றும் அந்நிய மோதல்கள் ஏற்பட்ட போதும் இந்தச் சிறப்புத் தன்மை தொடர்வதும் முக்கியமானதாகும்.

இந்தியாவில் புவியியல் இருப்பும் அதன் நாகரிகத்தில் சிறப்பான வளர்ச்சியை உருவாக்கியது. கடும்பனியுள்ள வடக்கு மலைப்பகுதி, சிந்து, கங்கை, பிரம்மபுத்திராவால் நனைக்கப்படும் சமவெளிகள், தக்காண பீடபூமி, உயரத்திலிருந்து சரிந்து கடலைச் சந்திக்கும் தென்பகுதி என்று உலகத்தின் எந்த நாட்டுக்கும் இல்லாத வானிலை சூழல் அந்த மக்களின் அன்றாட வாழ்வில் வேறுபாடுகளை உருவாக்கியது.

புகைப்படத்தில் மட்டுமே கடலைப் பார்க்கும் உ.பி. டில்லி கிராமத்துச் சிறுவனும், அதே வயதில் சீறிப் பாயும் கடல் அலை மேல் ஏறி விளையாடும் குமரிச் சிறுவனையும் இந்த தேசத்தில் பார்க்க முடியும். புவியியல் மனிதனின் திறமையை நிர்ணயிக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்பாடு வரலாற்றையும் வரலாறு நாகரிகத்தையும் பாதிக்கத்தான் செய்யும்.

வானுயர்ந்த மலைத் தொடர், பிரம்மாண்டமான நதிபுரத்து வெளிகள், உயர்ந்த பீடபூமி, பரந்துபட்ட பாலைவனம் ஆகியவை சிறப்புத் தன்மையை அளித்தன. ஷிவாளி மலை முகட்டில் பிறக்கும் கங்கை வங்கத்தில் சங்கமமாகிறாள். எத்தனை மனிதர்கள் – எத்தனை வேறுபாடுகள் – இருந்தும் அந்த வேறுபாட்டை வளப்படுத்திக் கொண்டே அந்த மக்களை இணைக்கும் நூலாகவும் அவள் இருக்கிறாள்.

கைபர் கணவாய் அந்நியர்கள் புக வாய்ப்பளித்தது. ஆரியர்களிலிருந்து அகமது ஷா அப்தாலி வரை பலரும் வந்தார்கள். எத்தனை கருத்துக்கள் வந்து சேர்ந்தன. பாரசீகத்தினர், கிரேக்கர்கள், சாகர்கள், ஹீனர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், முகலாயர்கள் என்று இந்தக் கணவாய் பலருடைய வருகைக்குச் சாட்சியாக இருந்தது.

தென் பகுதியின் நீண்ட கடற்கரைகள், ரோம், சினா, மலாய், தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு தொடர்பைத் தந்தன. இதன்மூலம், இந்தியா, உலக மக்கள் அதிகமாக வாழக்கூடும் மையப்பகுதியாக மாறியது. வேறுபட்ட மதங்கள், இனங்கள், மரபுகள், பழக்க வழக்கங்கள் சங்கமிக்கும் பகுதியாக மாறியது.

இங்கு ஆரியர்களும், ஆரியரல்லாதவர்களும் திராவிடர்களும், சீனர்களும், சாகர்கள், ஹீனர்கள், பாதன்கள், முகலாயர்கள் ஆகியோரும் மிகப் பெரிய சமுத்திரமாக மாறி தங்கள் அடையாளங்களை இழந்தார்கள் என்று ரவீந்திரநாத தாகூர் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

இந்தியா, இந்துக்களுக்கு பௌத்தர்களுக்கு சமணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்களுக்கு, பார்சிகளுக்கு, கிறிஸ்துவர்களுக்கு தாய் வீடாக மாறியது. இனம், மதம், மொழி, பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று பார்ப்போமானால், இந்தியா பன்முகத் தன்மை கொண்ட மக்கள் தொகுதியாகும்.

அந்தமான், நிகோபர், நாகாலாந்தில் தென்படும் நீக்ரோ சாயல், சிக்கிம், பூட்டான் சிட்டகாங் பகுதியில் காணப்படும் மங்கோலியச் சாயல், வங்கம், பீகார், ஒரிசா, உ.பி., தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள பரந்த நெற்றியைக் கொண்ட சாயல், பஞ்சாப், ராஜஸ்தான் சிந்து பகுதியில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதிச் சாயல் என்று எத்தனை இனங்களின் சாயல்கள் இங்கு உள்ளன! இந்தச் சாயல் கொண்டவர்கள் ஒரு பகுதி என்றில்லாமல் பரந்து வசிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

இயற்கை தன்னுடைய பன்முக வெளிப்பாட்டைக் காட்ட இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வேறெந்தப் பூமிப் பகுதியிலும், இயற்கை இத்தனை அழகாக, கம்பீரமாக அமையவில்லை. இதுவே இந்தியாவில் காணும் ஒற்றுமைக்குள் வேற்றுமை என்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

இந்தியா என்பது பல்வேறு இனங்களின் கண்காட்சி சாலையாகும் என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்மித். கடும்பனி உள்ள காஷ்மீர், பனிக் காலத்தில் கடும் குளிரும், கோடை காலத்தில் கடும் வெப்பமும் கொண்ட வங்காளம், ஒரிசா, பீகார் எப்போதுமே வெப்பம் கொண்ட தென் இந்தியா ஆகியவை இங்கு மட்டுமே உள்ளன. விதவிதமான விலங்குகள், தாவரங்கள் ஆகியவை இந்த மண்ணில் மட்டுமே உள்ளன. மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் அளவுக்கு வேறுபாடுகள் தென்படும்.

அணுகிப் பார்த்தால் இதற்கிடையே ஓர் இணக்கம் இருப்பது புலப்படும். இந்த இணக்கம் தான் இந்தியாவின் ஆத்மா. இந்திய நாகரிகத்தின் அடிநாதம்.

ஆரியர்களும், ஹீனர்களும், முகலாயர்களும் வந்தார்கள். பின்னாளில் டச்சு, பிரான்சு, ஆங்கிலேயர்கள் என்று வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை பின்னங்களாக்கி, அதனை முழுமையாக்கிய ரசாயனம் தான் இந்திய நாகரிகத்தின் உள்ளார்ந்த சுவையாகும். இதன்பால் உருவானதுதான் ஓர் ஒன்றிணைந்த கலாசாரம்.

இந்திய ஒற்றுமை என்பது அரசியல் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல. மௌரிய, குப்த, மொகலாய சாம்ராஜ்ஜியங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் மக்களின், சமூக, பொருளாதார ஒற்றுமை என்பது அப்படியே இருந்தது. இது இந்தியர்களிடைய ஒருமைப்பாட்டை வளர்ந்தது. (ஜே.என். சர்க்கார் எழுதிய இந்திய ஒற்றுமை – என்ற கட்டுரை).

‘இந்திய ஒற்றுமை என்பது ரத்தம், நிறம், மொழி, உடை, பிரிவு ஆகியவற்றைக் கடந்த ஒன்று’ என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு ஹிஸ்டரி ஆஃப் இந்தியா நூலாசிரியர் வி.ஏ. ஸ்மித். இதன் உன்னதம் பிரிட்டிஷாரை எதிர்த்து நடைபெற்ற சுதந்தரப் போராட்டத்தின்போது வெளிப்பட்டது. மகாராஷ்டிரா மட்டும் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்று மராட்டியனோ, வங்காளம் விடுதலை பெற வேண்டுமென்று வங்காளியோ, தமிழ்நாடு மட்டும் விடுதலையடையவேண்டும் என்று தமிழனோ போராடவில்லை. ஒட்டுமொத்த இந்திய விடுதலைக்காக அனைவரும் போராடினார்கள்.

இயற்கையோடு மட்டுமல்லாமல், சக மனிதனோடும் சேர்ந்து இணைந்து வாழ்வதுதான் இந்திய நாகரிகத்தின் வேரும், சாரமும் ஆகும்.

0

திலீபன்

கூடங்குளம் : என்ன செய்யவேண்டும்?

அதிமுக, திமுக, காங்கிரஸ், பி.ஜே.பி., கம்யூனிஸ்ட் கட்சி, அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள், பெரும்பாலான ஊடகங்கள் என அனைத்துப் பிரிவுகளும் கூடங்குளத்தில் அணு உலை வந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. இந்திய அரசியல் களத்தை உற்றுக் கவனித்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்குக் கூட இந்த ஒற்றுமை நம்ப முடியாத ஒன்றாகத்தான் இருக்கும். ஆளுங்கட்சி செய்வதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம் என்பதுதான் இதுவரையிலான இந்திய அரசியலாக இருந்து வந்திருக்கிறது. கூடங்குளத்தில் மட்டும் ஒரு அதிசயம் நடந்துவிட்டிருக்கிறது.

விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால், அணு குண்டு வெடிப்பையும் அணு உலையையும் மக்கள் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். மிகப் பெரிய செர்னோஃபில் அணு உலை விபத்தில் கூட இழப்பு என்பது அணு உலை எதிர்ப்பாளர்கள் சொல்வதுபோல் அதிகம் அல்ல. அதோடு, தொழில்நுட்பம் நிறைய முன்னேறி இருக்கிறது. விபத்துகளைத் தடுக்க முடியாவிட்டாலும் இழப்பை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். எனவே, மக்களின் பயம் தேவையற்ற ஒன்று என்று சொல்கிறார்கள்.

பி.ஜே.பி. போன்ற வலதுசாரி கட்சிகள், இந்தியா வல்லரசாவதைத் தடுக்க அந்நிய நாடு செய்யும் சதி என்கிறார்கள். திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஊழலுக்கான வசதி வாய்ப்புகளைத்தவிர இதில் பெரிதாக எதையும் யோசித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் ரஷ்ய உலை என்பதாலோ என்னவோ அவர்களும் வளர்ச்சி தேவைதான் என்கிறார்கள். ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆண்டை எவ்வழி அடியாள் அவ்வழி.

ஒரு மான் கூட்டத்தை சிங்கம், புலி, ஓநாய், நரி, நாய், மலைப் பாம்பு என அனைத்து வன் மிருகங்களும் சுற்றி வளைத்திருக்கின்றன. மான் கூட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் விருப்பம் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாக இருப்பது நன்கு புலப்படுகிறது. எனவே, குறைந்தபட்ச இழப்புடன் தப்புவது எப்படி என்பதை யோசிக்கிறேன். ஆதிக்க சக்திக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதாக இது பார்க்கப்படும் அபாயம் இருக்கிறது என்றாலும் என் அந்தராத்மா சொல்வதைக் கேட்டு இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒருவேளை, இந்த பயம் வீணானதாகக் கூட இருக்கலாம். மக்கள் சக்திக்கு முன்னால் அரசு எந்திரம் பணிந்து போய்விடக்கூடச் செய்யலாம். அப்படி நடந்தால் நல்லதுதான். ஆல் ஈஸ் வெல் தட் எண்ட்ஸ் வெல் தானே.

ஆனால், எரிபொருள் நிரப்ப முயற்சி எடுக்கும் நாளில் மக்கள் இதுபோல் மறியலில் ஈடுபட்டால், காவல்துறை நிச்சயம் தன் உண்மை குணத்தைக் காட்டும் என்றே தோன்றுகிறது. இதுவரை அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படவில்லை. எனவே, மக்களின் போராட்டத்தை காவல்துறை மிதமாகவே கையாண்டிருக்கிறது. நாளை எரிபொருள் நிரப்பட்ட பிறகும் மக்கள் இதுபோல் போராடினால், உலை வெடித்து லட்சக்கனக்கானவர்கள் உயிரிழக்க நேர்ந்துவிடும். எனவே, மறியலில் ஈடுபடுபவர்களில் 50-100 பேர் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை. அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கு என்று அரசு உத்தரவிடக்கூடும். இதுவரை அணு உலைக்கு ஆதரவு தெரிவித்த விஞ்ஞானிகள்கூட பயந்து பின் வாங்கும் அளவுக்கு அந்த வன்முறை கோரமாக வெளிப்படும் என்றே மனம் பதறுகிறது. எனவே, மாற்று வழிகளை யோசிக்கிறேன்.

அணு மின் நிலையத்தைக் கூடுதல் செலவு செய்து அனல் மின் நிலையமாக ஆக்க அணு உலை எதிர்ப்பாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இப்போதே கூட, அதிகப் பணம் செலவழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லித்தான் அரசானது உலையை மூட முடியாது என்கிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் நிலைபாடு அதுவாகத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் காவல்துறையின் செயல்பாடுகளை கலைஞர் கண்டித்தும் அறிக்கைவிட்டிருக்கிறார். அவர் ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயம் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியுடன் கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கையை அவருடைய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

தமிழக மக்களிடமிருந்தும் உலகம் முழுவதிலும் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்களிடமிருந்தும் கணிசமான தொகையை நன்கொடையாகச் சேகரித்து அனல் மின் நிலையமாக ஆக்குவதற்கு அரசிடம் கொடுத்துவிடலாம். அதற்கான இயக்கத்தை கலைஞரே முன்னெடுக்கலாம்.

கிருஷ்ணம்மாள் – ஜகந்நாதன் தம்பதியினர் இதைத்தான் செய்தார்கள். உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்பினார்கள். நில உரிமையாளர்கள் நிலத்தை உழைப்பவர்களுக்குக் கொடுக்க முன்வரத் தயாரில்லை. ஆனால், விற்கத் தயாராக இருந்தார்கள். உழைப்பவர்களிடம் பணம் இல்லை. ஆனால், யாராவது கடன் கொடுத்து அந்த நிலத்தை வாங்கிக் கொடுத்தால் உழைத்து அந்தக் கடனை அடைக்கும் நேர்மை இருந்தது. கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் தம்பதியினர் நேராக அரசிடம் சென்று கடன் வாங்கினார்கள். நில உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்து அரசின் பேரின் நிலத்தைப் பதிவு செய்துகொண்டார்கள். ஏழைகளை அந்த நிலத்தில் உழைக்கச் சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கடனைக் கட்டி உழவர்கள் நிலத்தைத் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள். கையில் இருந்து ஒரு நயா பைசா செலவழிக்காமல் அந்த காந்திய தம்பதியினர் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அப்படியாக உழுபவர்களுக்குப் பெற்றுத் தந்தனர். அதே போல் அனல் மின் நிலையமாக ஆக்கத் தேவைப்படும் பணத்தை அரசுக்கு மக்களே சேகரித்துத் தந்துவிடலாம். தமிழுக்காக உயிரைக் கொடுக்கத் தயாரான அரசியல் தலைவர்களும், தமிழர்களிடமிருந்து கோடிகளை சம்பளமாகப் பெற்றுச் செல்லும் நடிகர்களும் மனது வைத்தால் இது கொஞ்சம் சாத்தியமான திட்டம்தான்.

மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுய ஆட்சி என்ற தத்துவத்தைத்தான் ஈழத்தமிழர்கள் போராட்டத்திலும் அவர் முன்வைத்தார். அது ஏற்றுக் கொள்ளப்படாததால் ஏற்பட்ட இழப்புகளுக்கு கலைஞரே அதிகமும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார் என்ற வகையில் இந்த கூடங்குளம் விஷயத்தில் அவர் இன்னும் கொஞ்சம் அதிக அக்கறையுடன் செயல்படுவது அவசியமாகியிருக்கிறது. மத்திய அரசில் அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் காய்களை நகர்த்துவது தமிழ் சமூகத்துக்குச் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

இந்துத்துவ பயங்கரவாதத்தின் பலியாடுகள்

‘பழகுவதற்கு இனிமையானவர். உதவி யாருக்குத் தேவைப்பட்டாலும் தயங்காமல் செய்யக்கூடியவர். நரோடா பாட்டியாவில் (கலவரத்தின்போது) அவர் இருந்தார் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை!’ மாயா கோட்னானியுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பணியாற்றிய ஒரு பாஜக தலைவரின் ஆச்சரியம் இது. (தி வீக், செப்டெம்பர் 16, 2012).

குஜராத் 2012 கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளி என்று தீர்ப்பாகி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மாயா கோட்னானி. அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் உறுப்பினராகத் தன் பணியைத் தொடங்கிய மாயா கோட்னானிக்கு மருத்துவத் தொழிலைக் காட்டிலும் அரசியலில் ஈடுபாடு அதிகம் இருந்ததால் விரைவில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உயர்ந்தார்.

பரோடா மருத்துவக் கல்லூரியில் சேரும்போதே ஆர்.எஸ்.எஸ் பெண்கள் அமைப்பிலும் இணைந்துகொண்டார் மாயா கோட்னானி. அவர் தந்தை, பிரிவினையின்போது இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர். தீவிர ஆர்எஸ்எஸ் ஊழியர். (மாயா கோட்னானி பற்றிய அறிமுகம் இங்கே கிடைக்கிறது.) காவி அரசியல் இயல்பாகவே அவரையும் பற்றிக்கொண்டது.

நரோடா பாட்டியா சம்பவத்தின்போது கலவரக்காரர்களைத் தூண்டிவிட்டதாகவும், துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆயுதங்களை விநியோகித்தாகவும் மாயா கோட்னானிமீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.  தனது காரில் ஆயுதங்களை அள்ளிப்போட்டுக்கொண்டு மாயா கோட்னானி நரோடா பாட்டியா சென்றபோது கணவர் சுரேந்திரா (அவரும் மருத்துவரே) அவரைத் தடுக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. ’ஆனால், கோத்ரா சம்பவத்தால் கோபமடைந்த’ மாயா தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

மாயாவின் மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். தான் நடத்தி வந்த மருத்துவமனையை இன்னொரு மருத்துவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விற்றிருக்கிறார் மாயா. எனில், தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று அவருக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டதா?

2002 குஜராத் படுகொலைகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரை குற்றவாளிகள் என்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி அவர்களுள் ஒருவர். அவருக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கும் மற்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘மாயாபென் அடிப்படைவாதத்தை மானசீகமாகப் பின்பற்றுபவர் ‘ என்கிறார் குஜராத் பல்கலைக்கழகப் பேராசிரியர் கவுரங் ஜானி. ‘தனக்கு ஒதுக்கப்பட்ட பணியைத்தான் அவர் செய்திருக்கிறார்.’

‘அமைதியான’, ‘அனைவருக்கும் உதவும் மனப்பான்மை’ கொண்ட ஒருவரை  மதவாத வன்முறையாளராக உருமாற்றும் ஆற்றல் இந்துத்துவ பயங்கரவாத அரசியலுக்கு இருக்கிறது என்பதற்கு மாயா கோட்னானி ஒரு கண்முன் சாட்சி. காவி அரசியலால் பீடிக்கப்பட்டு கைதி எண். 14261 ஆக புகழற்று தேய்ந்துபோன கதை அவருடையது.

மாயா கோட்னானி பற்றி நரேந்திர மோடி என்ன நினைக்கிறார்? பாஜகவின் நிலைப்பாடு என்ன? ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறது? அரசியல் சதியின் காரணமாகத் தான் ஒரு பலியாடாக மாற்றப்பட்டுவிட்டதாக மாயா கோட்னானி கருதுகிறார். (தி வீக், செப்டெம்பர் 16, 2012). இது உண்மை எனில், தான் மானசீகமாக நம்பிய இந்துத்துவ அரசியலுக்கு அவரும்கூட பலியாகிவிட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.  அந்த வகையில், இந்துத்துவம் இருமுனை கூர் ஆயுதம். எதிரிகளை மட்டுமல்ல, பற்றியிருப்பவர்களையும்கூட அது அழித்தொழிக்க வல்லது.

0

மருதன்