தோழர்

அத்தியாயம் 47

கரிபால்டி

எங்கெல்ஸ் முன்னறிவித்தபடி மிகப் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்திருந்தது. மூன்றுமாத கால ஓய்வுக்குப் பிறகு எங்கெல்ஸ் மான்செஸ்டர் திரும்பியபோது, மார்க்ஸின் கடிதம் அந்தச் செய்தி தாங்கி அவருக்காகக் காத்திருந்தது. செய்தித்தாள்களும் பொருளாதார வீழ்ச்சி பற்றியே விவாதித்துக்கொண்டிருந்தன. வெளியுலகுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இதனை முன்னரே எதிர்பார்த்திருந்தனர்.

முதலாளித்துவ வரலாற்றில் முதல் முறையாக உலகம் தழுவிய அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் என்று 1857 நெருக்கடியைச் சொல்லலாம். வங்கிகளையும் பங்குச்சந்தைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் பெரிய அளவில் இந்த நெருக்கடி பாதித்தது. அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகம் முழுவதும் இதன் தாக்கங்கள் வெளிப்பட்டன. Panic of 1857 என்று பொருளாதார உலகம் இதனை அழைக்கிறது.

1850களில் உலகம் ஒரு பொருளாதார வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சியில் இருந்தது. பல நாடுகள் வெற்றிகரமாக இந்த வலைப்பின்னலில் இணைந்து உள்நாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்திக்கொண்டிருந்தன. 1850களின் தொடக்கத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் செழிப்பானதாக இருந்தது. அதற்கு சர்வதேச வர்த்தகம் ஒரு முக்கியக் காரணம். இந்நிலையில், 1857 தொடக்கத்தில் ஐரோப்பிய சந்தை பலமிழந்தபோது அது அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கியது. அயல்நாட்டுச் சந்தையை முதன்மையாகப் பாவித்து வர்த்தகம் புரிந்துவந்த அமெரிக்காவைப் பொருளாதார நெருக்கடி தாக்கியபோது அந்நாடு நிலைகுலைந்துபோனது.

1857க்கு முன்னால் ரயில்பாதை அமைக்கும் பணி அமெரிக்காவில் மும்முரமாக நடைபெற்றுவந்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அமெரிக்காவின் வடக்குப் பகுதிக்கு, குறிப்பாக கான்ஸாஸுக்குக் குடிபெயர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது என்பதால் ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் லாபகரமாகத் தங்கள் தொழிலை நடத்திவந்தனர். ரயில் என்றால் லாபம் என்பதை நேரடியாகக் கண்டுகொண்ட வங்கிகள் இத்தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தாராளமாக கடன் அளித்தன. ஒரு கட்டத்தில் வட அமெரிக்க நிலங்களின் மதிப்பு சரிய ஆரம்பித்தபோது, மக்கள் பிற பகுதிகளிலிருந்து கான்ஸாஸுக்குக் குடிபெயர்வதை நிறுத்திக்கொண்டனர். அப்போதுதான் பிரச்னை வெடித்தது. பெரும் முதலீட்டில் ரயில் பாதைகளை அமைத்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் செய்வதறியாது அதிர்ச்சியடைந்தன. திடீரென்று பணிகள் நிறுத்தப்பட, வங்கிகள் கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்க, அமெரிக்கா புயலில் சிக்கிக்கொண்டது. ரயில்வே துறையில் முதலீடு செய்திருந்த நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தன.

நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, Ohio Life Insurance and Trust Company என்னும் பெரும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த மோசடி காரணமாக, அந்நிறுவனமும் அதன் கிளைகளும் பெரும் கடனில் சிக்கிக்கொண்டு தள்ளாடின. பிற அமெரிக்க வங்கிகளும் நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும்கூட இதனால் பாதிக்கப்பட்டன.

மற்றொரு பக்கம், விளைபொருள்களின் விலை முன்னெப்போதும் இல்லாதபடி திடீரென்று படு உயரத்துக்குச் சென்றது. இந்த விலையேற்றத்தை அதிக லாபம் என்று புரிந்துகொண்ட விவசாயிகள், லாபத்தை மேலும் அதிகரிக்கும் பொருட்டு அதிக நிலங்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர். ஆனால் 1858ல் உணவு தானியங்களின் நிலை கடும் வீழ்ச்சியைக் கண்டபோது விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி விரைவில் சர்வதேச அளவில் விரிந்தபோது, ஐரோப்பாவும் திணற ஆரம்பித்தது. குறிப்பாக பிரிட்டன் அபரிமிதமான உற்பத்தியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

1857 பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுக்கும் என்று எங்கெல்ஸும் மார்க்ஸும் எதிபார்த்தனர். புதிய போராட்ட அலைகளும் புரட்சிகர மாற்றங்களும் ஏற்படும் என்று அவர்கள் கணித்தனர். மான்செஸ்டரைச் சுற்றிவந்த எங்கெல்ஸ் தான் கண்ட காட்சிகளால் மகிழ்ச்சியுற்றார். இந்த தடுமாற்றம் முதலாளித்துவத்துக்குப் பல பாடங்களைப் புகட்ட வல்லது. ஒட்டுமொத்த மான்செஸ்டரும் இருளில் மூழ்கிக்கிடந்தபோது எங்கெல்ஸ் துள்ளலும் துடிப்புமாகக் காணப்பட்டார். ‘நீச்சலைப் போலவே இந்த நெருக்கடியும் என் உடல் நிலையை முன்னேற்றும் என்று எதிர்பார்க்கிறேன்.’

எங்கெல்ஸ் எதிர்பார்த்தது போல் அரசியல் களத்தில் பெரும் புரட்சிகர மாற்றங்கள்ஏற்படவில்லை என்றாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திடம் புரட்சிகர கண்ணோட்டத்தை வளர்த்தெடுத்தது. நெருக்கடியின் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்காக பல ஆலை நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களிடமிருந்து புள்ளிவிவரங்களைப் பெற்றுக்கொண்டார் எங்கெல்ஸ். இவற்றைக் கொண்டு மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். ஒரு பிரசுரத்தை எழுதவேண்டும் என்று எங்கெல்ஸ் நினைத்திருந்தார். எண்ணம் ஈடேறவில்லை.

ஆனால், இத்தாலி பற்றி எழுதினார். மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இத்தாலியில் புரட்சிக்கான சூழல் தீவிரமடைந்திருப்பதாக எங்கெல்ஸ் கருதினார். ஒருகாலத்தில் புகழ்பெற்றிருந்த ரோம சாம்ராஜ்ஜியம், இடைக்காலத்தில் சிதறுண்டு போனது. சிறு சிறு ராஜ்ஜியங்களாகச் சிதறிப்போனது. வெனிஸ் உள்ளிட்ட நகரங்களை ஆஸ்திரயா கைப்பற்றிக்கொண்டது. ஆஸ்திரிய மன்னர்கள் இத்தாலியின் நகரங்களைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். போர்பன் மன்னர் நேபிள்ஸ் உள்ளிட்ட மேற்கு பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டார். பிட்மாண்ட் மற்றும் சார்டீனியா தீவு ஒன்றிணைக்கப்பட்டு விக்டர் இம்மானுவேல் என்னும் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டது.

நெப்போலியனின் வருகைக்குப் பிறகு நவீன இத்தாலிக்கான அடித்தளம் போடப்பட்டது. அதிகார மிடுக்குடன் பிரான்ஸின் விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த நெப்போலியனுக்கு ஐரோப்பாகூட சிறியதாகவே காட்சியளித்தது. 1796ம் ஆண்டு இத்தாலியின் ராணுவ கமாண்டராக நெப்போலியன் நியமிக்கப்பட்டார். வடக்கு இத்தாலியில் நெப்போலியன் காட்டிய தீவிரத்தைக் கண்டு ஐரோப்பா திகைத்து நின்றது. உபரிகளாகச் சிதறிக்கிடந்த இத்தாலியர்களுக்கு நெப்போலியன் சுதந்தரம் அளிப்பதாக வாக்களித்தார். நெப்போலியன் பாதி இத்தாலியனும்கூட என்பதால் ஒரே சமயத்தில் அவரால் பிரான்ஸையும் இத்தாலியையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்தது.

ஆஸ்திரியாவின் ஆதிக்கத்தை வீழ்த்திவிட்டு இத்தாலியை ஒருங்கிணைத்தார் நெப்போலியன். ஆனால் நெப்போலியனுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரியா இத்தாலியை கையகப்படுத்திக்கொண்டது. ஆனால் இந்த முறை இத்தாலியர்களின் மனநிலை மாறியிருந்தது. இனிமேலும் அவர்களால் தங்களை உதிரிகளாகக் காணமுடியவில்லை. நாம் இத்தாலியர்கள் என்னும் உணர்வு அவர்களிடையே பரவி, ஒருமித்த தேசிய உணர்வை ஏற்படுத்தியிருந்தது. ஆஸ்திரியாவின் ஆதிக்கத்தையும் ஆங்காங்கே குடியேறத் தொடங்கியிருந்த பிரெஞ்சு கொள்ளையர்களின் ஆதிக்கத்தையும் முறியடிக்க உறுதி பூண்டனர்.

இத்தாலியர்களை வழிநடத்த மூன்று தலைவர்கள் களத்தில் குதித்தனர். மாஜினி (1805-1872), கரிபால்டி (1807-1882) மற்றும் காவர் (1810-1861). இத்தாலியப் புரட்சிக்கு மாஜினி ஆன்மாவாகவும், கரிபால்டி ஆயுதமாகவும், காவல் அறிவாகவும் விளங்கினார். ‘வாருங்கள், என் படையில் சேருங்கள். வீரமுரசு ஆர்க்கும்போது வீட்டுக்குள்ளிருப்பவன் கோழை. உங்களுக்கு நான் போரும் துன்பமும் களைப்பும் அளிக்கிறேன். ஒன்று நாம் வெல்வோம் அல்லது வீழ்வோம்.’ கரிபால்டியின் இந்த முழக்கம் இத்தாலிய இளைஞர்களை வீட்டுக்குள்ளிருந்து வெளியில் இழுத்து வந்தது.

1831ல் மாஜினி உருவாக்கிய இளம் இத்தாலி என்னு இயக்கம் இளைஞர்களை பெருமளவில் ஈர்த்தது. ‘தேசம் என்பது வெறும் எல்லைக் கோடல்ல. மண்ணும் கட்டடங்களும் மட்டுமே தேசமல்ல. மக்களின் பாசமும் நேசமும் பிசைந்த உணர்வில் கலந்த ஒரு மாபெரும் உணர்வில் கலந்த ஒரு மாபெரும் கருத்தாக்கம். அவர்கள் உரிமையும் வளர்ச்சியும் கலந்த மாபெரும் கனவு.’

காவர், பிட்மாண்ட் மன்னர் இம்மானுவேலின் முதலமைச்சராக இருந்தவர். ராஜதந்திரி. மீண்டும் மன்னராட்சி மலரவேண்டும் என்பதுதான் இவர் விருப்பம் என்றாலும் கரிபால்டியோடும் மாஜினியோடும் இணைந்து குடியரசு உருவாக்கத்துக்காகப் பணியாற்றினார்.

ஜெர்மனியைப் போலவே இத்தாலியும் புரட்சிகர ஜனநாயக வழியில் ஒன்றுபடவேண்டும் என்று எங்கெல்ஸ் எழுதினார். நெப்போலியன் பாணியிலான ஒருங்கிணைப்பைக் காட்டிலும் புரட்சிகர ஜனநாயக முறையிலான ஒருங்கிணைப்பே உறுதியானது, சரியானது என்பது அவர் நம்பிக்கை. ‘1820 தொடங்கி ஆஸ்திரியா இத்தாலியை வன்முறையாலும் தீவிரவாதத்தாலும் ஆண்டு வருகிறது.’ இந்த நிலை தொடர்ந்தால் இத்தாலியர்கள் ஜெர்மானியர்களை இன்னமும் அதிகமாக வெறுப்பார்கள். இதற்கு ஒரே வழி, ‘ஆஸ்திரியாவின் மேலாதிக்கத்தை முறியடிப்பது.’ இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதற்கும் இது பொருந்தும் என்றார் எங்கெல்ஸ்.

இத்தாலியர்களின் முதன்மையான நோக்கம், அந்நியர்களைத் தங்கள் பூமியில் இருந்து விரட்டியடிப்பது. ஆஸ்திரியாவிடம் இருந்து விடுவிப்பதாகச் சொன்ன நெப்போலியன் உண்மையில், ஆஸ்திரியாவை விடுவிப்பதைவிட தன்னைப் பலப்படுத்திக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டினான். எனவே நெப்போலியன் பாணியிலான ஒருங்கிணைப்பை இத்தாலியர்கள் நம்பக்கூடாது. நெப்போலியக் கட்சிகளை ஏற்கக்கூடாது.

1859ம் ஆண்டு பிரான்ஸும் பிட்மாண்டும் போரிட்டுக்கொண்டன. இந்தப் போர் இத்தாலியர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சிகள் தேசிய விடுதலைப் போராட்டமாக உருவெடுத்தது. இதனை சற்றும் எதிர்பாராத மூன்றாம் நெப்போலியன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான். ஏப்ரல் 1860ல் சிசிலியில் இன்னொரு எழுச்சி ஏற்பட்டது. மே மாதம் கரிபால்டி தலைமையில் தன்னார்வலர்களின் பெரும்படை ஒன்று புறப்பட்டு தெற்கு நோக்கிச் சென்றது. செப்டெம்பர் 7ம் தேதி, கரிபால்டியின் படை நேபிள்ஸில் நுழைந்தபோது வெற்றி கண்களுக்குத் தெரிந்தது. விரைவில் தெற்கு இத்தாலி விடுவிக்கப்பட்டது.

எங்கெல்ஸ் கரிபால்டியை வெகுவாகப் புகழ்ந்தார். கரிபால்டியின் அசாதாரணமான ராணுவத் திறனையும், வீரத்தையும், முடிவெடுக்கும் திறனையும், செயல்திட்டத்தையும் எங்கெல்ஸ் பாராட்டி எழுதினார். ‘ஆயிரம் பேரைக் கொண்டு நேபிள்ஸை கரிபால்டி வீழ்த்தியிருக்கிறார். போனபார்ட்டின் அரசியலை முறியடித்து, இத்தாலியை ஒருங்கிணைத்திருக்கிறார்.’

(தொடரும்)

0

மருதன்

தோழர்

அத்தியாயம் 46

உலகெங்கும் நடைபெற்றுவரும் தேசியப் போராட்டங்கள் குறித்து ஆழமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, வரலாற்று நூல்களைத் தேடிப்பிடித்து படித்துக்கொண்டிருந்தார் எங்கெல்ஸ். துருக்கியிலும் ஆஸ்திரியாவிலும் உள்ள ஸ்லாவ் மக்கள் குறித்து 1853-56 காலகட்டத்தில் விரிவாகப் படித்து தெரிந்துகொண்டார் எங்கெல்ஸ். ஸ்லாவ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றியும், வரலாற்றில் அவர்கள் வகித்த பாத்திரம் பற்றியும், அவர்களுக்கு எதிரான ஜார் அரசாட்சி பற்றியும் அவர் ஆழமாக வாசித்தார்.

பிரிட்டிஷ் நூலகத்துக்கு அவ்வப்போது சென்றுவந்த மார்க்ஸ், எங்கெல்ஸுக்குத் தேவைப்பட்ட நூல்களையும் அவருக்கான குறிப்புகளையும் தந்து உதவினார். ரஷ்ய வரலாறு பற்றி எங்கெல்ஸ் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்பதை மார்க்ஸ் ஒரு நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கிழக்குலக நாடுகள் பற்றிய அவர் ஆர்வம் அதிகாரித்துக்கொண்டிருந்தது. அதே சமயம், தனக்கு அணுக்கமான துறையான, மதக் கோட்பாடுகளின் வரலாறு பற்றியும் அவர் வாசித்துக்கொண்டுதான் இருந்தார்.

கடவுள்மீதான பிடிப்பு விலகியிருந்தாலும் பைபிள்மீதான அவர் ஆர்வம் விலகிவிடவில்லை. உதாரணத்துக்கு, வேதாகமத்தை அணுகும்போது, அதை ஒரு புனித நூலாக அல்லாமல், தொன்மம் பற்றியும் வரலாறு பற்றியும் பண்டைய மக்கள் பற்றியும் தெரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாகவே கருதினார். அரபு மக்கள் பற்றியும் யூதர்கள் பற்றியும் தொல் பழங்குடியின மக்கள் பற்றியும் தகவல்களை அவர் திரட்டிக்கொண்டிருந்தார்.

முன்னரே பரிச்சயமாகியிருந்த பெர்ஷியனையும் அரபியையும் மீண்டும் படிக்கத் தொடங்கியிருந்தார் எங்கெல்ஸ். பெர்ஷியன் குழந்தை விளையாட்டு போல உள்ளது என்று மார்க்ஸுக்கு எழுதினார். ‘முழுவதும் கற்றுத் தேற மூன்று வாரங்கள் ஒதுக்கியிருக்கிறேன்.’ கோதிக், நார்டிக் உள்ளிட்ட பண்டை ஜெர்மானிய மொழிகளைக் கற்பதற்கும் நேரம் ஒதுக்கினார். பிறகு, இயற்கை அறிவியல். இயற்பியல், உயிரியில், ஒப்பீட்டு உடற்கூறியல் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள முயன்றார். வரலாறையும் அறிவியலையும் ஒன்றாக அவர் அணுகியதன் காரணம், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இயற்கை அறிவியலில் பொருத்திப் பார்க்கமுடியுமா என்பதைத் தெரிந்துகொள்ளவே. உயிரணு பற்றி புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்த சமயம் அது என்பதால் எங்கெல்ஸும் அதில் ஆர்வம் காட்டினார்.

சார்லஸ் டார்வின் எழுதி வெளிவந்திருந்த On the Origin of Species புத்தகத்தை 1850களின் இறுதியில் எங்கெல்ஸ் வாசித்தார். டார்வினின் புத்தகம் நவம்பர் 24, 1859 அன்று வெளிவந்தது. தன் கண்டுபிடிப்புகளைத் தன்னுடன் மட்டுமே வைத்துக்கொள்ள விரும்பிய டார்வின் தன் முடிவை அவசரமாக மாற்றிக்கொண்டு புத்தகத்தை வெளியிட ஒப்புக்கொண்டார். அதற்குக் காரணமாக இருந்தது அதே ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் என்னும் சக இயற்கையியலரிடம் இருந்து வந்து சேர்ந்த கடிதம். டார்வினைப் போலவே வாலஸும் உயிர்களின் தோற்றம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். இருபது ஆண்டு கால ஆய்வின் முடிவுகளைச் சுருக்கமாக எழுதி வெளியிட வாலஸ் முடிவு செய்திருந்தார். தன் முடிவை அவர் டார்வினுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். சார்லஸ் டார்வின் வாலஸை ஒரு போட்டியாளராகக் கருதியிருக்கவேண்டும். தனது ஆய்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், எதற்காக ரகசியமாக அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கவேண்டும். வாலஸின் நூல் வெளிவருவதற்குள் தன்னுடையது வெளியாகவேண்டும் என்று விரும்பிய டார்வின், நேரத்தைக் கடத்தாமல் ஒரு பதிப்பாளரை அணுகி, தன் பிரதியை ஒப்படைத்தார்.

டார்வினின் புத்தகம் வெளிவருவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் கார்ல் மார்க்ஸ் எழுதிய A Contribution to the Critique of Political Economy வெளியானது. ஒரு வகையில், இரண்டு நூல்களும் சமூகத்தில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் விருப்பத்தின் விழைவோடு கொண்டுவரப்பட்டவை. முதலாளித்துவத்தின் தத்துவார்த்த அடித்தளத்தை உடைத்து நொறுக்கும் நோக்கத்துடன் மார்க்ஸ் எழுத ஆரம்பித்த ஆய்வுக் கட்டுரைகளின் ஆரம்ப அத்தியாயங்களையே மார்க்ஸ் வெளியிட்டிருந்தார். அதே பொருளில், அவர் மேற்கொண்டு பின்னர் எழுதவிருந்தார்.

கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியான இரு நூல்களுள் ஒன்று மட்டுமே தன் நோக்கத்தில் துரித வெற்றியை அடைந்தது. மார்க்ஸின் நூல் பின்தங்கியது. ‘என்னை விமரிசிப்பார்கள் என்றும் ஏசுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன். நிச்சயமாக, உதாசீனப்படுத்தப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.’ தன் புத்தகம் வெளிவந்துவிட்டதா இல்லையா என்பதையே தன் பதிப்பாளருக்கு எழுதிக் கேட்கவேண்டிய நிலையில் இருந்தார் மார்க்ஸ். டார்வினின் புத்தகம் 1250 பிரதிகள் அச்சிட்டிருந்தார்கள். இருபத்து நான்கு மணி நேரத்தில் அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்கிறார்கள்.

டார்வினின் நூலை வாசித்து, உள்வாங்கி முதலில் வினையாற்றியவர் எங்கெல்ஸ். தன் கருததை டிசம்பர் 12ம் தேதி மார்க்ஸுடன் அவர் பகிர்ந்துகொண்டார். ‘நான் இப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் டார்வின் மிகச் சிறந்தவர்… வரலாற்று வளர்ச்சியை இதுவரை யாரும் இயற்கையில் இவ்வளவு அற்புதமாகப் பொருத்திப் பார்க்கவில்லை. அதுவும், இந்த அளவுக்கு வெற்றிகரமாக.’

அதற்கு அடுத்த மாதம், மார்க்ஸ் டார்வினின் நூலை வாசித்தார். எங்கெல்ஸின் கருத்தையே அவரும் பிரதிபலித்திருந்தார். ‘(உடல்நலக் குறைவு ஏற்பட்ட சமயத்தில)நான் வாசித்த நூல்களில் இயற்கை தேர்வு குறித்து டார்வின் எழுதிய நூலே சிறந்தது…மிக முக்கியமானது; என் நோக்கத்தோடு ஒத்துப்போவது. வர்க்கப் போராட்ட வரலாற்றுக்கு இயற்கை அறிவியலில் ஓர் அடிப்படையை உருவாக்கிக்கொடுக்கிறது.’

பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துக்கும் டார்வினின் கொள்கைக்கும் உள்ள உறவையும் பிணைப்பையும் முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மார்க்ஸ். Karl Marx: Biographical Memoirs என்னும் நூலில் ஜெர்மானிய எழுத்தாளரான Wilhelm Liebknecht குறிப்பிடும் விஷயங்கள் முக்கியமானவை. ‘டார்வினின் கண்டுபிடிப்புகளில் உள்ள முக்கியத்துவத்தை முதல் முதலாகப் புரிந்துகொண்டவர் மார்க்ஸ். 1859ம் ஆண்டுக்கு முன்னரே, டார்வினின் முக்கியத்துவத்தை அவர் அறிந்துவைத்திருந்தார். டார்வின் தன் கொள்கையை பொதுவெளியில் சமர்ப்பித்தபோது, மாதக்கணக்கில் மக்கள் அவர் அளித்த புரட்சிகர அறிவியல் சக்தியைப் பற்றியே விவாதித்தார்கள். மார்க்ஸ், டார்வினின் படைப்பை அறைமனத்துடன்தான் ஏற்றார் என்றும் அதன் மீது பொறாமை கொண்டிருந்தார் என்றும் பேசுபவர்களுக்கு நான் அழுத்தமான மறுப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’

எங்கெல்ஸ், டார்வினை வேறு திசையில் இருந்து அணுகினார். இறைவாதிகளையும் கடவுள் நம்பிக்கையாளர்களையும் தகர்க்கவல்ல ஓர் ஆயுதமாக டார்வினின் படைப்பை அவர் கண்டார். இயற்கையின் அதிசயங்களை கடவுளே உருவாக்கினார் என்னும் வாதத்தை உடைக்க டார்வினின் இயற்கை தேர்வை அவர் முன்வைக்க விரும்பினார்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் டார்வினின் கண்டுபிடிப்பைக் கருத்துமுதல்வாதத்துக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகவே கருதினார்கள். உலகம் பற்றியும் உயிர்கள் பற்றியும் இதுவரை மனிதகுலம் சிந்தித்து வந்ததற்கு மாறாக புதிய திசையில் சிந்திப்பதற்கு டார்வின் உதவுவார் என்று அவர்கள் நம்பினார்கள். இயற்கையை, அதிசயங்களை கடவுள் படைக்கவில்லை. உலகம் என்பது கடவுளின் திட்டம் அல்ல. இயற்கையையும் மனிதர்களையும் கடவுளைக் கொண்டு விளங்கிக்கொள்ளமுடியாது. மனித குல முன்னேற்றத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இயற்கையின் வளர்ச்சிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்த இரண்டையும் கடவுள் எழுதவில்லை.

ராணுவ அறிவியல் என்னும் துறைமீதும் எங்கெல்ஸுக்குத் தீராக் காதல் இருந்தது. பாட்டாளி வர்க்கத்தைத் திரட்டி அவர்களைப் போர்க்குணம் மிக்க ஒரு சக்தியாகத் திரட்ட, ராணுவ வழிமுறைகளையும் சூட்சுமங்களையும் கற்றுத்தேறவேண்டும் என்று எங்கெல்ஸ் நினைத்தார். ஜெர்மனி, பவேரியா, ஆஸ்திரியா, பெல்ஜியம் போன்ற பல நாடுகளின் வரைபடங்களை ஆழமாக வாசித்து கிட்டத்தட்ட மனனம் செய்துகொண்டார் எங்கெல்ஸ். ‘அடுத்த தாக்குதலின்போது தேவைப்படும்’ என்று சொல்லிக்கொண்டார்.

ஒரு முழுமையான உலகப் பார்வையை உருவாக்கிக்கொள்ளவே அறிவியல், அரசியல், போர் தந்திரம், தத்துவம், மதம், மொழியியல் போன்ற துறைகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் கற்று வந்தனர். ஒவ்வொரு சிறு வாசிப்பையும் சமூகத்தின்மீது பொருத்திப் பார்க்க அவர்கள் முயன்றனர். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தின்போது, ஒரு பெருளாதார வீழ்ச்சியின் நிழலை அவர்கள் 1856ல் கண்டறிந்தனர். அதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன.

செப்டெம்பர் இறுதியில் எங்கெல்ஸ் எழுதினார். ‘இந்த முறை இதற்கு முன் கண்டிராத அளவுக்கு தீர்ப்பு நாள் தீவிரமாக இருக்கப்போகிறது. அனைத்து ஐரோப்பிய தொழிற்சாலைகளும் பொடிப் பொடியாகச் சிதறப்போகின்றன. சந்தைகளில் பண்டங்கள் பிதுங்கப்போகின்றன. சொத்துள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்படவிருக்கிறார்கள். பூர்ஷ்வா வர்க்கம் திவாலாகப்போகிறது. யுத்தமும் அழிவும் நெருங்கிவிட்டது. 1857ல் இது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.’ எங்கெல்ஸின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

(தொடரும்)

0

மருதன்

தோழர்

அத்தியாயம் 45

பிரான்ஸைச் சேர்ந்த புகழ்பெற்ற பயண நூல் ஆசிரியரான பிரான்கோ பெர்னியர் இந்தியா பற்றிய எழுதிய நூல்களை மார்க்ஸ் வாசித்தார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றியும் பிற காலனி நாடுகளைப் பற்றியும் நடைபெற்ற விவாதங்களின் மூலம் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மார்க்ஸிடம் ஐரோப்பிய மையவாதக் கண்ணோட்டம் தென்பட்டதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்படும் என்றும் அதற்கு காலனி நாடுகள் பங்களிக்கும் என்றும் மார்க்ஸ் அப்போது நினைத்திருந்தார். ஆனால், இந்த எண்ணம் சிறிது சிறிதாக மாற்றம் கண்டது.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் வாழ்க்கையை, புலம்பெயர்ந்த வாழ்க்கை என்றுதான் இன்றைய சூழலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அயர்லாந்து, இந்தியா போன்ற பிரிட்டனுக்கு உட்பட்டிருந்த நாடுகளைப் பற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும் தெரிந்துகொண்டது பிரிட்டனில் இருந்தபோதுதான். ஒரு முதலாளித்துவ நாடு எப்படி வளம் பெற்று, பலம் பெற்று உருபெருகிறது என்பதையும் அதற்கு காலனி நாடுகளின் பங்களிப்பு என்ன என்பதையும் பிரிட்டனிடம் இருந்தே அவர்கள் கற்றுக்கொண்டனர்.

இந்தியாவின் பண்டைய வரலாற்று, சமூக நிலைகளை, ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’, ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்’ ‘கிழக்கிந்திய கம்பெனி : வரலாறும் விளைவுகளும்’ஆகிய கட்டுரைகளில் மார்க்ஸ் ஆழமாக அலசினார். பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களை மார்க்ஸ் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு விவாதித்தார். மார்க்ஸுக்கு முன்பு, ஹெகல் போன்றவர்கள் இந்தியாவைப் பற்றி எழுதும்போது, இந்தியாவின் சமயங்கள் பற்றியே எழுதினர். மத இலக்கியங்கள் மூலமே அவர்கள் இந்தியாவையும் அதன் சிக்கல்களையும் புரிந்துகொண்டனர். நேர் எதிராக, மார்க்ஸின் சிந்தனைப் போக்கு, இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து தொடங்குகிறது. இந்தியாவைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் முதலில் அதன் கிராமங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் மார்க்ஸ்.

ஒரு கட்டுரையில், இந்தியாவின் புவியியல் பரப்பை இத்தாலியோடு ஒப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். இத்தாலிக்கு ஆல்ப்ஸ் இருப்பது போல் இந்தியாவுக்கு இமயமலை. இத்தாலிக்கு சிஸிலித் தீவு போல் இந்தியாவுக்கு இலங்கை. இத்தாலிக்கு அப்பினைன்கள் போல் இந்தியாவுக்கு தக்காணம். ‘இத்தாலியைப் போல் இந்தியாவின் பூமியும் பலவகைப்பட்ட பொருள்களை அளிக்கிறது. இத்தாலியைப் போல் இந்தியாவும் அரசியல் ரீதியில் துண்டாடப்பட்டிருக்கிறது.’

அரசியல் ரீதியில் இத்தாலியைப் போலவே இந்தியாவும், ‘முகலாயர் அல்லது பிரிட்டிஷார் நிர்பந்தத்துககு உட்பட்டிராத பொழுது, பலப்பல சுயேச்சையான ராஜ்யங்காளச் சிதறிக் கிடந்தது. எத்தனை நகரங்கள் உள்ளனவோ அத்தனை ராஜ்யங்களாக உடைந்தது. அல்லது எத்தனை கிராமங்கள் உள்ளனவோ அத்தனை ராஜ்யங்களாகக் கூடக் கரைந்தது. அவை சுயேச்சையாக இருந்தன. ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் நின்றன. எனினும் சமுதாயக் கோணத்தில் இருந்து பார்த்தால், இந்துஸ்தான் கீழ்த் திசையின் இத்தாலியல்ல. கீழ்த்திசையின் அயர்லாந்து ஆகும்.’

முகலாயர்கள் உள்பட பலர் இந்தியாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்றாலும் ‘இதற்கு முன்னால் இந்துஸ்தானம் பட்ட துன்பத்திலிருந்து சாராம்சத்தில் மாறுபட்டதும், அதைவிட மிகமிக உக்கிரமானதுமான துன்பம் பிரிட்டிஷாரால் இந்துஸ்தானத்துக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதில் எத்தகைய சந்தேகமும் இருக்கமுடியாது.’

இந்தியாவை பிரிட்டன் இரண்டு வழிகளில் ஆக்கிரமிக்கிறது என்றார் எங்கெல்ஸ். நிதியைக் கொள்ளையடிப்பது வாயிலாக. போர் மூலமாக. ‘இந்தியாவில் வேளாண்மை நலிந்துவிட்டது. விவசாயம் சீரழிந்துவிட்டது.’ ஆனால், பிரிட்டன் எதுபற்றியும் கவலைப்படாமல், கொள்ளையடிப்பதில் மட்டுமே ஈடுபட்டு வந்தது என்றும் பொதுப் பணிகளிலும் முன்னேற்றத்திலும் அது கவனம் செலுத்தவில்லை என்றும் எங்கெல்ஸ் குறிப்பிட்டார். இந்தியா பற்றிய தன் எண்ணத்தை எங்கெல்ஸ் மார்க்ஸுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவித்தார். மார்க்ஸ் தன் கட்டுரைகளில் எங்கெல்ஸின் கருத்துகளை உபயோகித்துக்கொண்டார்.

1702ம் ஆண்டு தொடங்கி 1813 வரை, கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக இந்தியாவின் வளங்களை உறிஞ்சிகொண்டது. லட்சக்கணக்கான பவுண்டுளை இந்நிறுவனம் பிரிட்டனுக்குக் கொண்டு சென்று சேர்த்தது. மாபெரும் சந்தையாகவும் இந்தியாவைப் பாவித்து, தம் பண்டங்களைக் கொண்டு வந்து கடை பரப்பியது பிரிட்டன். எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல் விவசாயமும் கைத்தொழிலும் பாதிக்கப்பட்டதைக் கண்டு கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டனும் கவலைப்படவில்லை. இங்கிலாந்தின் இயந்திரமயமாக்கலால் இந்தியா அடைந்த துன்பத்துக்கு இணையாக வரலாற்றில் இன்னொன்றைக் காண்பது அரிது என்றார் மார்க்ஸ்.

விக் கட்சி மூலம் இங்கிலாந்தில் முதலாளித்துவம் பதவிக்கு வந்தது. 1813 தொடங்கி முதலாளிகள் இந்தியாவைப் படையெடுக்க ஆரம்பித்தனர். இந்தியா சீரழிய ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான். இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கிய அதன் கிராமங்கள் சீரழிய ஆரம்பித்தன. 1850ல் இங்கிலாந்தின் ஏற்றுமதியில் எட்டில் ஒரு பங்கு இந்தியாவுக்குச் சென்றது. துணி ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.

நவீன இந்தியாவை இரண்டு காலகட்டமாகப் பிரித்துக்கொண்டார் மார்க்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இந்தியா. பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா. இந்த இரு காலகட்டங்களிலும் இந்தியா எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தது என்பதை மார்க்ஸ் விவரித்தார். தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் இந்தியச் சமூகம் நிச்சயம் ஒருநாள் கிளர்ந்து எழும் என்று மார்க்ஸ் நம்பினார்.

1857ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற புரட்சி, மார்க்ஸையும் எங்கெல்ஸையும் புதிய வழித்தடத்தில் சிந்திக்கவைத்தது. ‘புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களின் செயல் திகைக்க வைக்கிறது, சொல்லொணா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்று பூரித்துப்போனார் மார்க்ஸ். சிப்பாய் புரட்சி ‘மிக இயல்பான ஒரு நிகழ்வு’ என்றும் குறிப்பிட்டார். பிரிட்டன் இந்தியாவுக்கு என்ன செய்ததோ அதற்கு பதிலடிதான் இது என்றார். பிரெஞ்சு முடியரசுக்கு எதிராக அன்று பிரபுக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இன்று பிரிட்டனுக்கு எதிராக இந்தியப் பிரபுக்கள் அல்ல ராணுவத்தினரே திரண்டுள்ளனர். ‘பிரிட்டனால் பாராட்டி, சீராட்டி, கவனிக்கப்பட்டு வந்த அதே ராணுவம் இன்று புரட்சி மூலம் கிழக்கிந்திய நிறுவனத்தைத் தூக்கி அடித்துள்ளது’. மேலும், ‘ஐரோப்பியர்கள் அவர்களது வரலாற்றில் செய்யாத கொடூரங்கள், சித்திரவதைகள், அழிமானங்கள் எதையும் இந்தியச் சிப்பாய்கள் செய்துவிட்டார்களா, என்ன?’

நவம்பர் 1857 தொடங்கி செப்டெம்பர் 1858 வரை, இந்தியாவின் ராணுவப் போக்குகள் குறித்தும் செயல்திட்டங்கள் குறித்தும் ‘கைப்பற்றப்பட்ட டெல்லி’, ‘இந்தியாவில் புரட்சி’ உள்ளிட்ட தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதினார் எங்கெல்ஸ். அடக்குமுறைக்கு எதிராக சிப்பாய்கள் திரண்டு நின்று எதிர்த்ததை எங்கெல்ஸ் உளப்பூர்வமாக ஆதரித்தார். மார்க்ஸுக்கு எழுதிய கடிதங்களிலும் தொடர்ந்து இந்தியாவைப் பற்றி எழுதினார் எங்கெல்ஸ். எங்கெல்ஸின் ஆர்வத்தையும், துடிப்பான பார்வையையும், எழுத்து நடையையும் மார்க்ஸ் வெகுவாக சிலாகித்தார்.

சிப்பாய் புரட்சி அடக்கப்பட்டது பற்றி எங்கெல்ஸ் தெரிவித்த கருத்து முக்கியமானது. ‘இது இரண்டாவது ஆக்கிரமிப்பு. இதன்மூலம் இந்தியாமீதான தன் பிடியை இறுக்கிக்கொண்டதாக இங்கிலாந்து கருதமுடியாது. இந்தியர்களின் உள்ளத்தை இங்கிலாந்தால் ஆக்கிரமிக்கமுடியாது.’ பிரிட்டனின் காலனியாதிக்கத்தின் மீதான ‘இந்தியர்களின் வெறுப்பு இந்த இரண்டாவது ஆக்கிரமிப்பின்மூலம் இரட்டிப்பாகுமே ஒழிய குறையாது.’ பிரிட்டனின் ஆட்சி தீவிர விளைவுகளைச் சந்திக்கப்போகும் நேரம் நெருங்கிவிட்டது என்று எச்சரித்தார் எங்கெல்ஸ்.

இந்தியாவைப் போலவே சீனாவும் மார்க்ஸின் சிந்தனையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 1850ல் இருந்தே சீனாவை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் மார்க்ஸ். காரணம், தைபிங் புரட்சி. 1850 தொடங்கி 1864 வரை நீடித்த தைபிங் புரட்சி, சீனாவை உலுக்கியெடுத்தது. தெற்கு சீனாவில் தொடங்கிய விவசாயிகளின் எழுச்சி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஆயுதபாணியாக்கவும் செய்தது. அதன் விளைவாக உள்நாட்டு யுத்தம் மூண்டது. நிலத்தைப் பங்கீடு செய்யவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முடியாட்சிக்கு எதிரான நிலமற்ற விவசாயிகளின் போராட்டமாக இதனை சிலர் கண்டனர். தைபிங் போராட்டத்தில் கம்யூனிசக் கூறுகள் தென்பட்டதாகவும் சொல்லப்பட்டது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தின் உதவியுடன் சீனா இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மீண்டும் பிரெஞ்சுப் புரட்சியோடு இதனை ஒப்பிட்டார் மார்க்ஸ். இதோ கிழக்கில் ஒரு பிரான்ஸ் என்று ஆச்சரியக் குரல் எழுப்பினார். ‘ஐரோப்பாவின் புரட்சிகரப் போராட்டங்களுக்குப் பயந்து கிழக்கு நோக்கித் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடும் ஐரோப்பியப் பிற்போக்குவாதிகள், கிழக்கில் சீனப் பெருஞ்சுவரைச் சென்று சேரும்போது அச்சுவரில் சீனக் குடியரசு: சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் எனப் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண் பார்கள்!’ என்று எழுதினார் மார்க்ஸ். தைபிங் புரட்சியை, தேசிய யுத்தம் என்றும் அவர் வருணித்தார்.

இந்தியா, சீனா இரண்டும் மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் உணர்த்திய பாடம் இதுவே. காலனிகளாக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட மக்கள் எதிர்த்துப் போராடும்போது, அப்போராட்டங்களில் வெளிப்படும் வன்முறையில் வரலாற்றுரீதியான நியாயம் உள்ளது.  1858 ஜனவரி 16 அன்று மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெரும் ஒரு வரி இது. ‘இப்போது இந்தியாவே நமது மிகச் சிறந்த கூட்டாளி!’

(தொடரும்)

0

மருதன்

தோழர்

அத்தியாயம் 44

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நடைபெறும் விடுதலை இயக்கங்களை மார்க்ஸும் எங்கெல்ஸும் கவனித்து வந்தனர். நாடு, மொழி, தேசம் கடந்து மக்கள் விடுதலையை அவர்கள் வரவேற்றனர். 1850களில் சீனாவிலும் இந்தியாவிலும் நடைபெற்ற போராட்டங்களைச் சுட்டிக்காட்டி காலனியாதிக்கத்தின் நோக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். பிரிட்டனின் காலனியாதிக்க மனோபாவத்தையும் பிரிட்டிஷ் ராணுவத்தின் கொடுங்கோன்மையையும் அவர்கள் கண்டித்தனர்.

பிரிட்டனுக்கும் சீனாவின் கிங் வம்சத்துக்கும் இடையில் 1856 தொடங்கி 1860 வரை நீடித்த இரண்டாவது ஓபியம் யுத்தத்தை, பிரிட்டனின் பட்டவர்த்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று சாடினார் எங்கெல்ஸ். விரைவில் பிரிட்டன் சீனாவின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் என்று எச்சரித்தார். ‘பிரிட்டனின் கொள்ளைக்காரத் தாக்குதல் அனைத்து சீனர்களையும் ஒன்றுதிரட்டி அனைத்து அந்நியர்களுக்கும் எதிராகப் போராட வைத்துள்ளது.’ பிரிட்டனின் ஆக்கிரமிப்பு சீன தேசியவாத உணர்வைத் தட்டியெழுப்பியுள்ளதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டினார். பிரிட்டிஷ் பூர்ஷ்வா பத்திரிகைகள் பிரிட்டனைக் குறைகூறாமல் சீனாவை விமரிசிப்பதைக் கண்டித்தார்.

எங்கெல்ஸின் உதவியுடன் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி மார்க்ஸ் தொடர்ச்சியாக எழுதினார். பிரிட்டிஷ் மார்க்சியரான ரஜனி பாமிதத் பதிவு செய்யும் செய்தி இது.‘1853ல் இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ் வரிசையாக எழுதிய கட்டுரைகள் அவருடைய தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுடன் இடம்பெறத் தக்கவையாகும். அவர் பரீசலனை செய்த பிரச்னைகளைக் குறித்து நவீன காலச் சிந்தனையாளர்கள் ஆராயும்பொழுது, அவருடைய கட்டுரைகளை முதல் பாடமாகக் கொள்கின்றனர். ஆசியாவின் பொருளாதார அமைப்பில், குறிப்பாக இந்திய, சீன நாடுகளுடைய பொருளாதார அமைப்பில் உள்ள அலாதியான பிரச்னைகளையும், அந்தப் பொருளாதார அமைப்பின்மீது ஐரோப்பிய முதலாளித்துவம் மோதியதால் நேரிட்ட விளைவுகளையும், இவற்றிலிருந்து எதிர்கால உலகப் போக்கு சம்பந்தமாகவும், இந்திய, சீன மக்களுடைய விமோசனம் சம்பந்தமாகவும் எழும் முடிவுகளைப் பற்றி மார்க்ஸ் முக்கிய கவனம் செலுத்தினார்.’

பின்னர், மார்க்ஸ் தனது மூலதனத்தில் இந்தியாவுக்காக ஐம்பது பக்கங்களை ஒதுக்கினார். எங்கெல்ஸும் மார்க்ஸும் பரிமாறிக்கொண்ட கடிதங்களிலும் இந்தியா பற்றிய அக்கறை கொண்ட பரிசீலனை காணக்கிடைக்கிறது. மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்தியாவைப் பற்றி தொடர்ந்து சிந்தித்து வந்ததையும், இந்தியா பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் மாற்றம் பெற்றதையும் முதிர்ச்சி அடைந்ததையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

‘இந்திய, சீன சந்தைகளுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதால், முதலாளித்துவ உற்பத்திமுறை மேற்கொண்டு வளரமுடியுமென்று மார்க்ஸும் எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சுட்டிக் காட்டினார்கள். அதைத் தொடர்ந்து 1848ம் வருடப் புரட்சி தோல்வியுற்றபொழுது, அந்த எழுச்சியின் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய, மார்க்ஸ் முற்பட்டார். ஐரோப்பாவுக்கு வெளியே, அதாவது ஆசியாவுக்குள்ளும் ஆஸ்திரேலியாவுக்குள்ளும் கலியோர்னியாவுக்குள்ளும் முதலாளித்துவம் புதிதாக விஸ்தரித்து வருவதே 1848ம் வருஷப் புரட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணம்.’ என்னும் முடிவுக்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் வந்து சேர்ந்ததை பாமிதத் குறிப்பிடுகிறார். ஆசிய அனுபவங்கள் மூலமாக ஐரோப்பாவை அணுகும் போக்கை இருவரும் கடைபிடித்ததை இது காட்டுகிறது.

1858ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் கருத்து தெளிவாக முன்வைக்கப்படுகிறது. ‘முதலாளித்துவ சமூகம் அதன் பதினாறாம் நூற்றாண்டு வாழ்வை இரண்டாவது தடவை அனுபவித்துக்கொண்டிருக்கிறதென்பதை நாம் மறுக்கமுடியாது. பதினாறாம் நூற்றாண்டு, முதலாளித்துவ சமூகத்துக்குப் பிறப்பளித்ததைப் போலவே, இன்றுள்ள பதினாறாம் நூற்றாண்டு நிலை அதற்குச் சாவுமணி அடிப்பது நிச்சயமென்று நான் நம்புகிறேன். உலக மார்க்கெட்டை, அல்லது அதன் பிரதான அம்சங்களையாவது சிருஷ்டிப்பதும் அதன் அடிப்படையில் உற்பத்தியை நிறுவுவதும் முதலாளித்துவ சமூக முறையின் விசேஷக் கடமை. உலகம் உருண்டையாகவிருப்பதால், கலிபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் குடியேறியதுடன், சீனாவுடனும் ஜப்பானுடனும் தொடர்பு ஏற்பட்டதுடன், அந்தக் கடமை பூர்த்தியடைந்துவிட்டது போலத் தோன்றுகிறது. அது தொடக்கத்திலிருந்தே சோஷலிஸ்ட் புரட்சியாகவிருக்கும். ஆனால் இன்னும் விரிவான பிரசதேசத்தில் பூர்ஷ்வா சமூகத்தின் இயக்கம் ஓங்கி வளர்வதால், இந்தச் சிறு மூலையில் புரட்சி நசுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாதல்லவா?’

ஐரோப்பாவுக்கு வெளியில் முதலாளித்துவம் பரவுவதால்தான் ஐரோப்பியப் புரட்சி பாதிக்கப்பட்டுள்ளது என்னும் முடிவுக்கு இருவரும் வந்து சேர்கின்றனர். அந்த வகையில், அவர்களுடைய ஆய்வு ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு விரிவடைகிறது. 1853 ஜூனில் எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில், ‘கீழ் நாடுகளுடைய பிரச்னைகளுக்குத் திறவுகோல் என்னவென்றால், அவற்றில் நிலத்தின்மீது தனிச் சொத்துரிமை இல்லாதிருப்பதுதான்’ என்று குறிப்பிட்டார்.

‘புராதனகாலப் பொதுச் சொத்துரிமை ஸ்லாவ் நாடுகளில் மாத்திரம்தான் நிலவியதென்று அல்லது ரஷ்யாவில் மாத்திரம்தான் நிலவியதென்றுகூட அனுமானிக்கப்படுகிறது. இந்தப் பரிகசிக்கத்தக்க அனுமானத்துக்குச் சமீபகாலத்தில் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் பூர்விகமுறை ரோமானியர்கள். டியூடன்கள், கெல்ட்டுகள் ஆகியோரிடம் இருந்ததென்பதை நாம் நிரூபிக்கமுடியும். ஓரளவு அழிவடைந்து விட்டபோதிலும், இந்தப் பூர்விகப் பொதுச் சொத்துரிமை முறையின் உதாரணங்கள் பலவற்றை இன்றும் இந்தியாவில் காணமுடியும். ஆசியாவின் சமூகச் சொத்துரிமை முறைகளை, குறிப்பாக இந்தியாவின் சமூகச் சொத்துரிமை முறைகளை உன்னிப்பாகக் கற்றறிந்தால், எப்படிப் பல்வகைப்பட்ட புராதனக் கம்யூனிஸ்ட் முறைக பல விதங்களில் அழிந்தனவென்பது விளங்கும். உதாரணமாக, ரோமானியர்களிடமும் டியூட்டன்களிடமும் நிலவிய தனிச் சொத்துரிமையின் பல்வேறு ஆரம்பகால ரூபங்களுக்கும் பல்வேறு இந்தியக் கம்யூனிச முறைகளுக்கும் தொடர்பிருப்பதைக் காணலாம்.’

ஆனால், மேலை நாடுகளைப் போலக் கீழ்நாடுகளிலும் புராதனக் கம்யூனிசம் ஏன் நிலப்பிரபுத்துவ முறையாக வளரவில்லை? சீதோஷ்ண நிலையும் பூகோள நிலையுமே இதற்குக் காரணம் என்று எங்கெல்ஸ் அனுமானித்தார். ரஜினி பாமிதத் எழுதுகிறார். ‘பயிர்ச் சாகுபடியைச் சாத்தியமாக்கும் நிலைமைகளுக்கும் நிலத்தில் தனி உடைமை ஏற்படுவதற்கும் ஒத்துவரவில்லை. ஆகவே, விசேஷ குணாம்சங்களுடன் கூடிய ஆசியப் பொருளாதாரம் உருவாயிற்று. கீழே, கிராம அமைப்பில் புராதனக் கம்யூனிசத்தின் மீத மிச்சங்கள் நிலைத்து நின்றன. மேலே யுத்தம் செய்வதுடனும் கொள்ளையடிப்பதுடனும், நீர்ப்பாசன வேலைகளுக்கும் பொது மராமத்து வேலைகளுக்கும் பொறுப்பாளியாக யதேச்சதிகார மத்திய சர்க்கார் நின்றது. ஆக, இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கு கிராம அமைப்பைப் புரிந்துகொள்வதுதான் பிரதானமாகும்.’ மார்க்ஸும் எங்கெல்ஸும் வந்தடைந்த முடிவு இது.

கார்ல் மார்க்ஸின் மூலதனம், இந்தியக் கிராம அமைப்பின் இலக்கணத்தை முன்வைக்கிறது. ‘இந்த இந்திய சமூகங்கள் மிக மிகப் புராதனமானவை. அவை சின்னஞ்சிறிய சமூகங்களாகும். அவற்றில் சில இந்நாள் வரை நீடித்து வந்திருக்கின்றன. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இப்பதையும், விவசாயமும் கைத்தொழில்களும் ஒன்றோடொன்று சேர்ந்திருப்பதையும், மாற்றமுடியாத வகையில் வேலைப் பிரிவினை ஏற்பட்டிருப்பதையும் இந்தச் சமூகங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. பூரணமாக வகுக்கப்பட்டுத் தயாராகவுள்ள இதே திட்டம், புதிதாகத் தொடங்கும் சமூகங்களுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. நூறு ஏக்கராக்கள் முதல் பல்லாயிரம் ஏக்கராக்கள்வரை பல்வேறு பரப்பளவுகளில் இந்த சமூகங்கள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றும் தத்தம் சுயதேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்கின்றன. உற்பத்தியாகும் பொருள்களில் பெரும்பகுதி, சமூகத்தின் நேரடியாக உபயோகத்துக்கே பயன்படுகின்றன. அவை விற்பனைச் சரக்குகளாக மாறுவதில்லை. ஆகவே, இந்தக் கிராமச் சமூகங்களில் நடைபெறும் உற்பத்தி, விற்பனைச் சரக்குகளின் பரிவர்த்தனை அடிப்படையில் இந்திய சமூகம் முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் வேலைப் பிரிவினையைச் சார்ந்திருக்கவில்லை.’

மார்க்ஸ் தொடர்கிறார்.‘கிராம சமூகங்களின் உற்பத்தியில் தேவைகளைப் பூர்த்திசெய்த பிறகு மிச்சப்படும் உபரிப்பொருள்கள்தான் விற்பனைச் சரக்குகளாகின்றன. அவற்றிலும் ஒரு பகுதி பொருள்வாரியாக அரசாங்கத்தின் கைக்கு எட்டிய பிறகே விற்பனைச் சந்தைக்கு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் ஒரு பகுதி, தொன்று தொட்டு, பொருள் வரியாக, ராஜாங்கத்துக்கு வந்திருக்கிறது.’

மேலும், ‘இந்தப் புராதன சமூகங்களின் உள்ளமைப்பு இந்தியாவின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு தினுசாக உள்ளது. சிக்கலே இல்லாததும் சுலபமானதுமான அமைப்பைப் படைத்துள்ள சமூகங்களில் நிலச்சாகுபடி பொதுவில் நடைபெறுகிறது. உற்பத்தியாகும் தானியங்களை சமூக உறுப்பினர்கள் பங்குபோட்டுக் கொள்கிறார்கள். அதே சமயத்தில், ஒவ்வொரு குடும்பமும் நூல் நூற்றலையும் துணி நெய்தலையும் உபதொழில்களாகக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கும் ஜனங்களுடன் கூடவே, கீழ்கண்டவர்களும் சமூகத்தில் இருக்கின்றனர்.’

‘சமூக நாட்டாண்மைக்காரர் வரிவசூலிக்கிறார், போலீஸ் வேலை செய்கிறார், நீதிபதியாக விளங்குகிறார். கணக்கன் உழவு சாகுபடி சம்பந்தமான சகல கணக்குகளையும் பதிவு செய்து நிர்வகிக்கிறார். இன்னொரு அதிகாரி, குற்றவாளிகள்மீது வழக்கு நடத்துவதுடன், அவ்வூர் வழியே பிரயாணம் செய்யும் அயலூர்க்காரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார். அவர்கள் அடுத்த கிராமம் செல்லும்வரை துணை செல்கிறார். காவல்காரர், அக்கம் பக்கத்துச் சமூகங்கள் ஆக்கிரமித்துவிடாமல் கிராம எல்லைகளைக் கண்காணித்து வருகிறார். தண்ணீர் மேஸ்திரி பொதுக்குளங்களிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் வினியோகம் செய்கிறார். பிராமணர் மதச்சடங்குகளை நடத்துகிறார். பள்ளிக்கூட உபாத்தியாயர் பாலர்களுக்கு மணல்மீது எழுதப்படிக்கக் கற்றுக்கொடுக்கிறார். பஞ்சாங்க பிராமணர் அல்லது சோதிடர், விதைப்புக்கும் அறுவடைக்கும் இதர விவசாய வேலைகள் ஒவ்வொன்றுக்கும் நல்ல நாள்களைப் பார்த்துச் சொல்கிறார், கெட்ட நாள்களைச் சொல்லி எச்சரிக்கிறார். விவசாயக் கருவிகள் அனைத்தையும் செய்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் ஒரு கொல்லரும் ஒரு தச்சரும் உள்ளனர். கிராமத்துக்குத் தேவையான மண்பாண்டங்களைச் செய்து தருவதற்கு ஒரு குயவன் இருக்கிறார். அம்பட்டர், துணிகளை வெளுத்துத் தருவதற்காக ஒரு சலவைத் தொழிலாளி, தட்டார் ஆகியோரும் இருக்கிறார்கள். சிற்சில கிராமங்களில் கவிராயரே தட்டராகவும் இருப்பார். இதர சமூகங்களில் கவிராயரே பள்ளிக்கூட உபாத்தியராகவும் இருப்பார். இந்த டஜன் நபர்களும் சமூகத்தின் கூட்டுச் செலவில் பராமரிக்கப்படுகிறார்கள். ஜனத் தொகை அதிகரித்தால், இதே வடிவத்தில், யாரும் குடியேறியிராத இடத்தில், ஒரு புதிய சமூகம் நிறுவப்படுகிறது.’

(தொடரும்)

0

மருதன்

தோழர்

அத்தியாயம் 43

கம்யூனிஸ்ட் லீக் சிதறிவிட்டது. தொழிலாளர் வர்க்கத்துக்கான ஓர் உறுதியான கட்டமைப்பு இல்லை. புதிதாக ஒன்றைத் தொடங்குவதும் சாத்தியமல்ல. இருந்தாலும் அப்படிப்பட்ட ஓர் அமைப்புக்கான ‘வரலாற்றுத் தேவை’ இருப்பதாக மார்க்ஸும் எங்கெல்ஸும் கருதினர். உழைக்கும் மக்களிடமும் அவர்களுக்காகச் சிந்திக்கும் தலைவர்களுடனும் இருவரும் உறவு வளர்த்துவந்தனர். ஜெர்மனியில் மீண்டும் ஒரு புரட்சிப் புயல் பரவும் என்று எங்கெல்ஸ் எதிர்பார்த்தார். புதிதாக உருவாகப்போகும் அமைப்பு, முந்தைய அமைப்புகள் செய்த தவறுகளிடம் இருந்து பாடம் படித்துக்கொண்டு வளரவேண்டும் என்று எங்கெல்ஸ் விரும்பினார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் செல்வாக்கு பரவிக்கொண்டிருந்த சமயம் அது. அறிக்கை முன்வைத்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பலர் கம்யூனிசம் குறித்த விவாதங்களில் ஈடுபட்டு வந்தனர். ‘தலைமறைவாக இருந்த காலத்திலும் நாங்கள் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளோம்’ என்று மகிழ்ந்தார் எங்கெல்ஸ். பிற நாடுகளில் உள்ள புரட்சிகர தலைவர்களின் ஆதரவையும் எங்கெல்ஸும் மார்க்ஸும் திரட்டிக்கொண்டிருந்தனர். தீவிர கண்காணிப்பு காரணமாக ஜெர்மனியை மட்டும் நெருங்கமுடியவில்லை. ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் லீக் அமைப்பை ஏற்படுத்தலாமே என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். ‘இப்போதுள்ள நிலையில் அவ்வாறு செய்வது பலனற்றது, முட்டாள்தனமானது.’

1850களில் சாசன இயக்கத்தின் செயல்பாடுகளிலும் தேக்கநிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது ஒரு காரணம். பிரிட்டிஷ் தொழிலாளர்களைச் சரியான திசையில் செலுத்தவேண்டிய கடமையில் இருந்து சாசன இயக்கத்தினர் பின்வாங்கிக்கொண்டிருந்தனர். தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வு குறைந்துபோயிருந்தது. அதற்குக் காரணம் பிரிட்டனின் செல்வச் செழிப்புதான் என்று புரிந்துகொண்டார் எங்கெல்ஸ். காலனியாதிக்கத்தின் மூலம் திரட்டப்பட்ட செழிப்பு. முதலாளிகள் அச்சமின்றி, கவலையின்றி இருந்தனர் தொழிற்சங்கங்கள் வாயிலாக தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதில் அவர்களுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. இதுவே போதும் என்று தொழிலாளர்களும் திருப்திப்பட்டுக்கொண்டனர்.

முதலாளிகள் தங்கள் பணபலத்தை வைத்துக்கொண்டு லஞ்சம் கொடுத்து தொழிலாளர்களை வளைத்துக்கொள்கின்றனர் என்று மார்க்ஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் எங்கெல்ஸ். அதனால் போர்க்குணம் மங்கிபோயிருக்கிறது. வர்க்க உணர்வு தொலைந்துபோயிருக்கிறது. புரட்சிகர மாற்றம் தேவையில்லை, ‘சீர்திருத்தங்களே’ போதும் என்று தொழிலாளி வர்க்கம் நினைக்கிறது. அப்படிப்பட்ட கருத்தாக்களையே அவர்கள் ஆதரிக்கிறார்கள். சீர்திருத்தம் வாயிலாகவே உடனடி லாபம் பெறமுடியும் என்று அவர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். சுருக்கமாகச் சொல்வதானால்,‘ஆங்கிலேய பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா வர்க்கமாக மாறிக்கொண்டிருக்கிறது.’ இந்தப் போக்கு வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் பூர்ஷ்வா வர்க்கமும் அதற்கு ஆதரவான பூர்ஷ்வா தொழிலாளர் வர்க்கமும் உருவாகிவிடும் என்று எழுதினார் எங்கெல்ஸ்.

முற்போக்கான பூர்ஷ்வா பத்திரிகைகளுக்கு எழுதிக்கொண்டிருந்தார் எங்கெல்ஸ். அவரது பல கட்டுரைகள் நியூ யார்க் டெய்லி ட்ரிப்யூனில் வெளியாகிக்கொண்டிருந்தன. மார்க்ஸுக்கு தன் ஆங்கிலத்தின்மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்பதால் எங்கெல்ஸ் அவர் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். இருவரும் இணைந்தும் எழுதினர். கிரிமியன் யுத்தம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை மார்க்ஸ் ஜெர்மனியில் மொழிபெயர்த்தார். ரஷ்ய மொழி உள்ளிட்ட ஸ்லாவ் மொழிகளிலும் எங்கெல்ஸ் தேர்ச்சி பெற்றிருந்ததால் கிழக்கு பகுதி அரசியல் குறித்தும் எங்கெல்ஸ் விரிவாக எழுதினார். துருக்கியில் நிகழும் மாற்றங்களைக் கவனித்து அதையும் பதிவு செய்தார்.

ரஷ்யா, ஜெர்மனி, துருக்கி, பிரிட்டன், பிரான்ஸ் என்று எந்தவொரு நாட்டின் அரசியல், சமூக நிலவரத்தைப் பற்றி எழுதினாலும் மேலாதிக்கத்தை எதிர்த்தும் ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாகவும் எழுதினார் எங்கெல்ஸ். அதற்கான சரியான மதிப்பீட்டை உருவாக்கிக்கொண்ட பிறகே எழுதினார். ஸ்லாவிய மக்களை துருக்கிய சாம்ராஜ்ஜியம் ஒடுக்குவதை எங்கெல்ஸ் எதிர்த்தார். பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் துருக்கிக்குத் தரும் ஆதரவை விமரிசித்தார். ரஷ்ய ஜார் ஆட்சியை எதிர்த்தார். ஜாரின் பிரதேச நீட்டிப்பு ஆர்வத்தைச் சுட்டிக் காட்டி எச்சரித்தார். ஜாரின் பலம் அதிகரித்தால் அது ‘ஐரோப்பாவின் ஜனநாயக மற்றும தொழிலாளர் அமைப்புகளை ஆபத்தில் தள்ளிவிடும்’ என்றார்.

எங்கெல்ஸுடன் மார்க்ஸும் இணைந்து ஜார் ஆட்சியை விமரிசித்தார். பால்கன் நாடுகளுக்கு நான் நண்பன் என்று ஜார் சொல்வதை நம்பவேண்டாம். ஜாரின் ஆட்சி ஜனநாயகத்தன்மையற்றது. ஜார் ரஷ்யாவால் யாருக்கும் நன்மை ஏற்படப்போவதில்லை. பால்கன் மக்களை மட்டுமல்ல ரஷ்யர்களுக்கும்கூட அது ஆபத்தில்தான் போய்முடியும். ரஷ்யாவின் ராணுவ பலத்தைக் குறைக்க பிரிட்டனும் பிரான்ஸும் திட்டமிட்டு வருகின்றன. மத்திய கிழக்கிலிருந்தும் பால்கன் பிரதேசத்திலுமிருந்தும் ரஷ்யாவை விரட்டியக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதே சமயம், ஜார் ஆட்சியை பட்டவர்த்தனமாக எதிர்க்கவும் அவர்கள் துணியமாட்டார்கள். ஜார் ஆட்சி நடைபெறவேண்டும் என்றும் அதே சமயம் அது தமக்கு தொந்தரவளிக்காதவாறு இருக்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜார் ஆட்சி ஒருவேளை அகற்றப்பட்டால் வேறு புரட்சிகர, மக்கள் ஆதரவு, ஜனநாயக ஆட்சி அமைந்துவிடக்கூடும் என்னும் பயமும் அவர்களுக்கு இருக்கிறது.

துருக்கிய ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் பிடியில் சிக்கியிருக்கும் நாடுகள் புரட்சிகரமான போராட்டங்களின் மூலமும் நடவடிக்கைகள் மூலமும் மட்டுமே சுதந்தரத்தை அடையமுடியும் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் நம்பினர். அதே போல் ரஷ்ய ஜார் ஆட்சியை வீழ்த்தவேண்டிய அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரிட்டனும் பிரான்ஸும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் ரஷ்யாமீது போர் தொடுக்கத்தான் போகின்றன. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், ‘மக்களின் ஒத்துழைப்புடன் புரட்சிகர யுத்தத்தின் மூலம் ஜார் ஆட்சியை அகற்றவேண்டும்.’

கிரிமியன் யுத்தம் 1854 முதல் 1856ம் ஆண்டு வரை நடைபெற்றது. துருக்கியைப் பங்குபோட்டுக்கொள்வதுதான் போரின் நோக்கமாக இருந்தது. ஒரு பக்கம் ரஷ்யா திரண்டு நிற்க இன்னொரு பக்கம் ரஷ்யாவை வீழ்த்த துருக்கி பிரான்ஸுடனும் பிரிட்டனுடனும் சார்டீனியாவுடனும் இணைந்துகொண்டது. துருக்கியைப் பங்கு போடுவதற்காக இரு அணிகள் மேற்கொள்ளும் போராக இதனை எங்கெல்ஸ் கண்டார். அன்றாட போர் செய்திகளையும் திட்டங்களையும் வியூகங்களையும் தயாரிப்புகளையும் விளைவுகளையும் பற்றி எங்கெல்ஸ் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். கிட்டத்தட்ட 70 கட்டுரைகள் ட்ரிப்யூனில் வெளிவந்தன.

கிரிமிய யுத்தத்தில் மார்க்ஸும் எங்கெல்ஸும் யாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்? ரஷ்யாவில் ஜார் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதால் எங்கெல்ஸ் வெளிப்படையாகவே தனது ரஷ்ய எதிர்ப்பைப் பதிவு செய்தார். ரஷ்யாவின் ராணுவ பலத்தை அவர் குறைத்தே மதிப்பிட்டார். அதே சமயம், பிரான்ஸையும் பிரிட்டனையும் அவரால் ஆதரிக்கவும் முடியவில்லை. ரஷ்யாவை ஒடுக்குவதற்காக அவர் இந்த இரு நாடுகளையும் ஆதரிக்கவில்லை. துருக்கியை ஆக்கிரமிப்பதுதான் இவற்றின் நோக்கம் என்பதால் அவற்றை எங்கெல்ஸ் கண்டித்தே எழுதினார். அதே சமயம், ஒட்டமான் சாம்ராஜ்ஜியம் ஸ்லாவ் மக்களை ஒடுக்குவதையும் எங்கெல்ஸ் கண்டித்தார்.

தீர்வாக அவர் முன்வைத்தது ஒன்றை மட்டும்தான். புரட்சிகர நடவடிக்கை. இந்தப் போரைப் பயன்படுத்திக்கொண்டு ஜார் ஆட்சிக்கு எதிராக ரஷ்ய மக்கள் அணிதிரண்டு புரட்சியில் ஈடுபடவேண்டும். பிரிட்டனிலும் பிரான்ஸிலும் ஜெர்மனியிலும் உழைக்கும் மக்கள் தங்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் திரளவேண்டும். ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தை ஸ்லாவ் மக்கள் எதிர்க்கவேண்டும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கிரிமியப் போர் அரசாங்கங்கள் நடத்தும் போராக அல்லாமல் மக்கள் நடத்தும் புரட்சிப் போராக மாறாகவேண்டும் என்று எங்கெல்ஸும் மார்க்ஸும் விரும்பினர். ஆனால், இந்தக் கனவு நிறைவேறவில்லை. ரஷ்யா தோற்கடிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யர்கள் ஜார் ஆட்சிக்கு எதிராகத் திரளவில்லை. பிரிட்டனிலும் பிரான்ஸிலும் துருக்கியிலும்கூட மக்கள் புரட்சி நடைபெறவில்லை.

எங்கெல்ஸ் தனது பிரசாரத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. காலனியாதிக்கத்துக்கு எதிராகவும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காதபோது அவர் துவண்டுவிடவில்லை. மக்கள் போராட்டங்கள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தன் ஆதரவை நீட்டித்துக்கொண்டிருந்தார். மார்க்ஸின் ஆதரவு அவரைத் தொடர்ந்து இயங்கவைத்தது. குறிப்பாக, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நடைபெறும் விடுதலை இயக்கங்களை மார்க்ஸும் எங்கெல்ஸும் தீவிரமாக ஆராய்ந்தனர். 1850 தொடங்கி சீனாவிலும் இந்தியாவிலும் நடைபெற்று வந்த மக்கள் இயக்கங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். பிரிட்டனின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்நாடுகளில் திரண்டு வந்த மக்கள் ஆதரவைக் கண்டு இருவரும் உற்சாகம் கொண்டனர்.

(தொடரும்)

0

– மருதன்

தோழர்

அத்தியாயம் 42

காலை ஒன்பது அல்லது பத்து மணிக்கு அலுவலகம் சென்றுவிட்டால் குறைந்தது மாலை நான்கு மணி வரை வேறு சிந்தனைகள் இருக்காது எங்கெல்ஸுக்கு. பணிகள் அவரை உள்வாங்கிக்கொண்டன. உள்ளுக்குள் வருத்தமும் ஏக்கமும் இருந்தாலும் எங்கெல்ஸ் வெளிப்படையாக இது குறித்து சலிப்படைந்ததில்லை. வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அவருக்கு சில மணி நேரங்களே தினமும் கிடைத்தன. மார்க்ஸின் மகள் எலியனோர் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றி எழுதும்போது இவ்வாறு குறிப்பிட்டார். ‘எங்கெல்ஸ் இப்படியே இருபது ஆண்டுகளைக் கழித்தார் என்று நினைத்து பார்ப்பதே கொடுமையாக இருக்கிறது. ஒருபோதும் அவர் புகார் சொன்னதில்லை, முணுமுணுத்ததுகூட இல்லை. நேர் மாறாக, உற்சாகத்துடனும் நிதானத்துடனும் பணியாற்றி வந்தார். வேலைக்குச் செல்வது உலகிலேயே மகிழ்ச்சியான ஒரு காரியம் என்பதாகத்தான் நடந்துகொண்டார்.’

மான்செஸ்டரில் எங்கெல்ஸ் தன் இருப்பிடத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்தார். நண்பர்களையும் அலுவலக ஆள்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க நகரின் மத்தியில் ஒரு வீட்டில் ஒதுங்கியிருந்தார். மற்ற சமயங்களில், நகருக்கு வெளியில் இருந்த ஒரு குடிலில் மேரி பர்ன்ஸுடன் இணைந்து தங்கியிருந்தார். மார்க்ஸ் சொல்வது போல், ‘அனைத்தில் இருந்தும் விலகி, சுதந்தரமாக’ இங்கே அவர்கள் இருந்தனர். இங்கே தன் நெருங்கிய நண்பர்களை எங்கெல்ஸ் சந்தித்தார். மேரியுடன் அவர் தங்கை லிடியாவும் தங்கியிருந்தார். லிடியா மான்செஸ்டரில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்தார்.

மேரியும் லிடியாவும் அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். தொழிலாளர் இயக்கங்களிலும் அவர்களுக்கு ஈடுபாடு இருந்தது. எங்கெல்ஸின் நண்பர்கள் அவர்களைத் தங்கள் சகோதரிகளாகவே கருதினர். எங்கெல்ஸின் குடும்ப நிறுவனமான எர்மென் அண்ட் எங்கெல்ஸ் ஆலையில் மேரி பணியாற்றி வந்தார். ‘திருமண உறவில் நம்பிக்கை இல்லாததால் எங்கெல்ஸும் மேரியும் சட்டப்படி மணம் செய்துகொள்ளாமல் இணைந்தே வாழ்ந்தனர்’ என்றொரு கருத்து உண்டு. எங்கெல்ஸ் இறுதிவரை மணம் செய்துகொள்ளவில்லை. மேரி பர்ன்ஸ் 1863ல் தனது 41வது வயதில் இறக்கும்வரை இருவரும் இணை பிரியாமல் வாழ்ந்துவந்தனர்.

எங்கெல்ஸால் லண்டனைவிட்டு வெளியேறமுடியவில்லை என்பதால் ஆரம்ப காலத்தில் மேரியை அயர்லாந்துக்கு அழைத்துச்செல்லமுடியவில்லை. அயர்லாந்துக்கு நேரில் சென்று பார்க்கவேண்டும் என்பது மேரியின் பெரும் விருப்பமாக இருந்திருக்கிறது. மே 1856ல் இந்தக் கனவு நிறைவேறியது. மேரியும் எங்கெல்ஸும் அயர்லாந்து முழுவதும் சுற்றி வந்தனர்.

இங்கிலாந்தின் காலனி நாடான அயர்லாந்தை எங்கெல்ஸ் கூர்மையாக கவனித்தார். குறித்துக்கொண்ட விஷயங்களை உடனுக்குடன் மார்க்ஸிடம் பகிர்ந்துகொண்டார். பணம் படைத்த நிலப்பிரபுக்கள் மட்டுமே அங்கே வாழ்ந்து வந்தனர். மற்றவர்கள் வெளியேறியிருந்தனர். ‘கிராமங்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டிருந்தன.’ இங்கிலாந்தின் செழிப்பையும் அயர்லாந்தின் நிலைமையையும் எங்கெல்ஸ் ஒப்பிட்டு பார்த்தார். சுரண்டி வளர்ந்த ஒரு நாட்டுக்கும் காலனி நாட்டுக்கும் இடையிலான வேறுபாடுகளைத்தான் இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் அவரால் காண முடிந்தது. ‘மொத்தத்தில் இது பாலைவனம்போல் இருக்கிறது.’

ஐரிஷ் மக்கள் அயர்லாந்தில் இருந்து வெளியேறியதற்குக் காரணம் இங்கிலாந்தின் ஒடுக்குமுறை கொள்கை. ‘இனி இங்கே நமக்கு இடமில்லை என்பதை ஐரிஷ் மக்கள் புரிந்துகொண்டனர். இனி அயர்லாந்தைத் தங்கள் சொந்த நாடாக அவர்களால் கருதமுடியாது.’ அயர்லாந்தை இங்கிலாந்து ‘இரவல் பெற்று வாழும் நாடாக’ மாற்றிவிட்டது. மக்களை உறிஞ்சு வாழ்வதற்கென்றே ஒரு பெரும்கூட்டம் அங்கே வசித்துவந்தது. வழக்கறிஞர்கள், காவலாளிகள், பாதிரியார்கள், நிலப்பிரபுக்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு கூட்டம் அது. தொழில்துறை உறங்கிக்கொண்டிருந்தது. இங்கிலாந்து தன் நாட்டில் நிலவும் சுதந்தரம் பற்றி பெருமை பேசிக்கொள்கிறது. உண்மையில் அது அயர்லாந்து போன்ற நாடுகளை அடிமைப்படுத்தியதால் கிடைத்த சுதந்தரமே. இது மிகவும் ‘கொடூரமானது’.

எங்கெல்ஸ் சிக்கனமாகவே வாழ்க்கை நடத்தி வந்தார். தன் தேவை போக மிச்சம் பிடித்த பணத்தை அவர் தொடர்ந்து மார்க்ஸுக்கு அனுப்பிவைத்தார். மார்க்ஸை அவர் ஒருபோதும் காக்கவைக்கவில்லை. மார்க்ஸைப் பொருத்தவரை எங்கெல்ஸின் பணஉதவியைக் காட்டிலும் அவருடைய நட்பே அவரைப் பலம் கொள்ளச் செய்யும் சக்தியாகத் திகழ்ந்தது. தன்னைப் பாதிக்கும் விஷயங்களை, தன் ஆசைகளை, தன் கனவுகளை அவர் எங்கெல்ஸிடமே பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொண்டார்.

ஏப்ரல் 6, 1855 அன்று எங்கெல்ஸின் மகன் எட்கர் இறந்துபோனான். மீளாத் துயரில் ஆழ்ந்த மார்க்ஸ் எங்கெல்ஸின் கரங்களில்தான் தஞ்சம் அடைந்தார். ‘அந்தக் கொடுமையான நேரத்தில் உன் நட்புதான் என்னை அமைதிபடுத்தியது. என் குழந்தைக்காக நான் அனுபவித்த வலியை உன்னால்தான் புரிந்துகொள்ளமுடிந்தது.’ எட்கரின் மரணத்துக்குப் பிறகு சில வாரங்களுக்கு எங்கெல்ஸுடன்தான் மார்க்ஸின் குடும்பம் தங்கிக்கொண்டது. துயரம் பொங்கும் நேரங்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. அப்போதெல்லாம் எங்கெல்ஸின் தோழமையும் அன்பும்தான் அவரைத் தாங்கிப்பிடித்தது. அப்படிப்பட்ட சந்தர்பங்களில்‘நாம் இருவரும் இணைந்து சில நல்ல காரியங்களைச் செய்யப்போகிறோம்’ என்னும் நம்பிக்கையே தன்னை வழிநடத்திச் சென்றதாக மார்க்ஸ் நினைவுகூர்ந்தார்.

மே 1857ல் எங்கெல்ஸ் உடல்நலக் கோளாறால் தீவிரமாகத் தாக்கப்பட்டபோது மார்க்ஸ் பதறிப்போனார். சில மாதங்களுக்கு எங்கெல்ஸால் பணிபுரியமுடியாமல் போய்விட்டது.
மார்க்ஸ் கவனத்துடன் அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். எங்கெல்ஸைத் தாக்கிய நோய் எப்படிப்பட்டது என்பதை அறிய சில மருத்துவப் புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு வாசித்தார். மார்க்ஸின் அன்பில் நெகிழ்ந்துபோனார் எங்கெல்ஸ்.

தனித்தனியே வசித்தாலும் அவர்கள் ‘எண்ணத்தாலும் சிந்தனையாலும் ஒன்றாகவே வசித்தனர்’ என்று பலர் ஆச்சரியப்பட்டனர். எங்கெல்ஸிடம் இருந்து கடிதம் வராத சமயங்களில் மார்க்ஸ் தவித்துப்போனார். ‘உன் கையெழுத்து என்னை உற்சாகப்படுத்துகிறது.’ இன்னொரு சமயம் இப்படி எழுதினார். ‘நாம் சிறிதுகாலம் சந்திக்கப்போவதில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.’

மார்க்ஸின் மகள் எலியனோர் கச்சிதமாக இப்படி நினைவுகூர்கிறார். ‘எனக்கு நினைவு தெரிந்து நான் கண்ட முதல் விஷயம், மான்செஸ்டரில் இருந்து வரும் கடிதங்கள். இரு நண்பர்களும் கிட்டத்தட்ட தினமும் எழுதிக்கொண்டார்கள். அந்தக் கடிதத்தை எழுதியர் ஏதோ பக்கத்திலேயே நின்றுகொண்டிருப்பதைப் போல் மூர் (என் அப்பாவை நான் அப்படித்தான் அழைப்பேன்) பேசுவார்… சில சமயங்களில், கடிதத்தைப் படித்துப் படித்து சிரிப்பார். கன்னங்களில் நீர் வரும்வரை சிரிப்பார்.’ வாழ்வின் அத்தனை சவால்களையும், அத்தனை சங்கடங்களையும் அவர்கள் நகைச்சுவையுடன் கடந்துசென்றனர். ‘எங்களிடம் இருந்து யாராலும் நகைச்சுவை உணர்வைப் பறித்துக்கொள்ளமுடியவில்லை.’

Paul Lafargue  என்னும் பிரெஞ்சு எழுத்தாளரின் வார்த்தைகளில், மார்க்ஸ் எங்கெல்ஸின் நட்பு, ‘கவிஞர்கள் தொன்றுதொட்டு பாடிவந்த நட்பு.’ எங்கெல்ஸுடன் மார்க்ஸ் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் தருணம் அற்புதமானது என்கிறார் பால். எங்கெல்ஸ் ‘பார்வையாளர்களின் கூட்டமாக’ அவருக்குத் தோற்றமளிப்பார். அவருடன் பேசுவது என்பது பல ஆயிரம் பேருடன் பேசுவதற்குச் சமமானது. மேடையில் பேசுவதற்குச் சமமானது. அப்படித்தான் மார்க்ஸ் நினைத்துக்கொள்வார்.

மார்க்ஸின் ஏதாவதொரு வாதத்தை எங்கெல்ஸ் மறுத்துவிட்டால் போதும். தான் சொன்னது சரியே என்பதை நிரூபிக்க பல புத்தகங்களை சரசரவென்று அலமாரியில் இருந்து எடுத்து வந்து, சத்தம் போட்டு படித்துக்காட்டுவார். எங்கெல்ஸ் விடைபெற்று சென்ற பிறகும் அவருடைய தேடல் முடிவடையாது. சில சமயம், இரண்டுக்கும் மேற்பட்ட புத்தகங்களை முழுவதுமாக இரவு முழுவதும் மீண்டும் வாசிப்பார். தேவைப்பட்ட பகுதிகளை அடிகோடிட்டு வைத்துக்கொள்வார். பொறுமையின்றி காத்திருப்பார். எங்கெல்ஸ் வந்ததும் விரைந்துசென்று தன் ‘கண்டுபிடிப்புகளை’ எடுத்து வந்து கொட்டுவார். எங்கெல்ஸ் ஒப்புக்கொள்ளும்வரை விடமாட்டார்.

‘என்னை எங்கெல்ஸுக்கு அறிமுகம் செய்துவைப்பதற்காகவே ஒருமுறை பிரத்தியேகமாக என்னை மான்செஸ்டருக்கு அழைத்துச் சென்றார்’ என்று நினைவுகூர்ந்தார் பால். மார்க்ஸின் இரண்டாவது மகள் லாராவைப் பால் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ‘என் மகளின் கணவனாகப்போகிறாய். நீ உடனே எங்கெல்ஸைச் சந்திக்கவேண்டும்’ என்று அவரை உடனே அழைத்துச் சென்றிருக்கிறார் மார்க்ஸ். தன் குடும்பத்தில் புதிதாக இணையப்போகும் ஒருவர் முதலில் எங்கெல்ஸைச் சந்தித்துவிடவேண்டும் என்னும் குறுகுறுப்பையே இது வெளிப்படுத்துகிறது.

எங்கெல்ஸ் மீது தனக்கிருக்கும் மரியாதையையும் அன்பையும் மார்க்ஸ் பல சமயம் வலியுறுத்தியதை பால் குறிப்பிடுகிறார். ‘எங்கெல்ஸின் பன்முக ஆற்றலை மார்க்ஸ் வியந்து போற்றினார். அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வேன் என்று அச்சத்துடன் பதறினார்.’ தன் மகனின் பாதுகாப்பை எண்ணி எண்ணி அஞ்சும் ஒரு தந்தையைப் போல் மார்க்ஸ் தோற்றமளித்தார். பாலிடம் தன் அச்சத்தை அவர் வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். ‘எங்கெல்ஸுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது. பல சமயங்களில் கண்மூடித்தனமாக, முரட்டுத்தனமாக அவர் செயல்படுகிறார்.’

(தொடரும்)

0

மருதன்

தோழர்

அத்தியாயம் 41

மார்க்ஸுக்கு மட்டுமல்ல ஜென்னிக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும்கூட எங்கெல்ஸ் ஒரு சிறந்த தோழராக விளங்கினார். அவர்களைச் சந்திக்க எங்கெல்ஸ் சற்று காலதாமதம் செய்தாலும் ஜென்னியிடம் இருந்து கடிதம் வந்துவிடும். ‘கணவரும் நாங்களும் உங்களுக்காக நீண்ட காலமாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் வந்து நாள்கள் ஆகின்றன. உங்கள் அடுத்த வருகை எப்போது?’ மார்க்ஸின் குழந்தைகளுடன் எங்கெல்ஸ் மகிழ்ச்சியாக விளையாடி வந்தார். அருகில் அமர வைத்து கதைகள் சொன்னார். பாடல்கள் பாடிக் காட்டினார். பாடவும் கற்றுக்கொடுத்தார். ‘அங்கிள் ஏஞ்சல்ஸ்’ என்று கத்திக்கொண்டே குழந்தைகள் அவருடன் ஓடி விளையாடின.

எங்கெல்ஸ் வரும் தினம் அன்று மார்க்ஸ் அமைதியின்றி காணப்படுவார். எவ்வளவு முயன்றும் இயல்பாக இருக்கமுடியாது. வேலை செய்யத் தோன்றாது. எழுதவோ படிக்கவோ மனம் இருக்காது. எங்கெல்ஸ் வந்துவிட்டால், வீடே கலகலப்பாகிவிடும். குழந்தைகளுடன் கணிசமான நேரம் செலவிட்ட பிறகு மார்க்ஸும் எங்கெல்ஸும் அமர்ந்து பேச ஆரம்பிப்பார்கள். சென்ற சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற அத்தனை விஷயங்களையும் இருவரும் பரிமாறிக்கொள்வார்கள். இரவு முழுவதும் உரையாடல் தொடரும்.

பிரிந்திருந்தாலும், இருவரும் ஒன்றாகவே பணிபுரிந்தனர். மார்க்ஸ் எழுதும் கட்டுரைகளில் எங்கெல்ஸ் குறிப்பிடப்பட்டிருப்பார். எங்கெல்ஸ் தனது ஆதாரப் பட்டியலில் மார்க்ஸை முன்னிறுத்தியிருப்பார். கம்யூனிசத்துக்கு எதிராக புரோதன் ஒரு புத்தகம் (புரட்சி பற்றி சிந்தனைகள்) எழுதியிருப்பதை அறிந்ததும் மார்க்ஸ் எங்கெல்ஸைத்தான் தொடர்பு கொண்டார். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை உடடினயாகப் படித்து அதற்கு மறுமொழி தயார் செய்துவிடு என்றும் அறிவுறுத்தினார்.

எங்கெல்ஸின் பார்வையில் புரோதன், ரூஸோ மற்றும் ரோபஸ்பியரால் உந்தப்பட்டிருந்தார். பூர்ஷ்வா வர்க்க சிந்தனைகள் அவரிடம் அதிகம் தென்பட்டன. கற்பனாவாதத்திலும் அவர் மூழ்கிப்போயிருந்தார். பூர்ஷ்வா வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் தனித்தனி வர்க்கங்கள் அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்று அவர் நிறுவ முயன்றிருந்தார். ஒரே அமைப்பில் இந்த இரு வர்க்கங்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழமுடியும் என்னும் முடிவுக்கு புரோதன் வந்திருந்தார். எங்கெல்ஸ் இந்தப் பார்வையை அழகாக உடைத்தெறிந்தார்.

புரோதன் பற்றி எங்கெல்ஸ் எழுதிய கட்டுரையைப் பதிப்பிக்கமுடியவில்லை. பதிப்பாசிரியர் கிடைக்கவில்லை. மார்க்ஸுக்கும் இதே பிரச்னைதான். அவரது கட்டுரையைப் பதிப்பிக்க தகுந்த பத்திரிகைகள் எதுவும் சிக்கவில்லை. 1851 வரை அவர்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. சார்லஸ் டானா என்னும் நண்பரின் மூலம், மார்க்ஸுக்கு ஒரு வாய்ப்பு வந்து சேர்ந்தது. இந்த டானா என்பவர் 1848ம் ஆண்டில் மார்க்ஸைச் சந்தித்திருந்தார். கற்பனாவாத சோஷலிசத்தின் பால் இவருக்கு ஈர்ப்பு இருந்தது. மார்க்ஸ் மீது நல்ல மரியாதையும் இருந்தது. நியூ யார்க் டெய்லி டிரிப்யூன் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த டானா தன் பத்திரிகைக்கு எழுதும்படி மார்க்ஸை கேட்டுக்கொண்டார்.

மார்க்ஸ் உடனடியாக ஒப்புக்கொண்டார். முதல் காரணம், அமெரிக்கா என்னும் புதிய உலகினுள் நுழையும் வாய்ப்பு. பல ஜெர்மானியப் புரட்சியாளர்கள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களைத் தன் எழுத்துகள் மூலமாகச் சந்திப்பதில் மார்க்ஸுக்கு மகிழ்ச்சி.  நியூ யார்க் டெய்லி டிரிப்யூன் அமெரிக்கா முழுவதும் பிரபலமான ஒரு இதழ் என்பதால் பல புதிய வாசகர்களை வென்றெடுக்கமுடியும். குடும்பப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் வருமானமும் கிடைக்கும் என்பது கூடுதல் ஆறுதல். தனக்கு வாய்ப்பு கிடைத்த மறுகணமே எங்கெல்ஸையும் இழுத்துக்கொண்டார் மார்க்ஸ்.

ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் என்னும் பொதுவான தலைப்பில் எங்கெல்ஸ் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் ஆகஸ்ட் 1851 தொடங்கி செப்டெம்பர் 1852 வரை வெளிவந்தன. டிரிப்யூனின் லண்டன் பத்திரிகையாளராக மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்டிருந்ததால், மேற்படி கட்டுரைகள் மார்க்ஸின் பெயரில் வெளிவந்தன. மார்க்ஸ் இந்தக் கட்டுரைகளை முழுவதுமாகப் படித்து முடித்தபிறகே அச்சுக்கு அனுப்பிவைத்தார். என்ன எழுதுவது என்பது பற்றி முன்னரே அவர் எங்கெல்ஸுடன் விரிவாக விவாதித்திருந்தார். ஜெர்மனி குறித்து மொத்தம் 19 கட்டுரைகள் டிரிப்யூனில் வெளிவந்தன. 1848-49 ஆண்டுகளில் நடைபெற்ற ஜெர்மானியப் புரட்சி பற்றி மார்க்சிய நோக்கில் முதன்முதலாக ஆய்வு செய்த படைப்பு என்று இந்தத் தொகுப்பைச் சொல்லலாம். ஒரு சமகால சம்பவத்தை எப்படி வரலாற்று பொருள்முதல்வாத நோக்கில் ஆராய்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் வழிகாட்டியாகவும் இது திகழ்ந்தது.

‘புரட்சி என்பது வரலாற்றை இழுத்துச் செல்லும் தொடர்வண்டி’ என்றார் எங்கெல்ஸ். வர்க்க முரண்பாடுகள் பகையாக வளரும்போது புரட்சி வெடிக்கிறது. இந்தப் புரட்சி புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. அடி முதல் நுனி வரையிலான மாற்றங்களைக் கொண்டு வருகிறது. பல நூற்றாண்டுகளில் ஏற்படாத மாற்றங்களை சில தினங்களில் கொண்டு வந்து சேர்க்கிறது. புரட்சி இல்லாவிட்டால் வரலாறு மெல்ல மெல்ல நத்தை போல் நகர்ந்துகொண்டிருக்கும். ‘ஜெர்மானிய பூர்ஷ்வாக்களால் அத்தேசத்தைத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லமுடியாது.’ பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.

அதே சமயம், ஜெர்மனியில் இந்தப் புரட்சி எப்படி எதிர்ப் புரட்சியாக மாறியது என்றும் ஏன் தொழிலாளி வர்க்த்தால் ஜெர்மனியில் வெற்றி பெறமுடியவில்லை என்பதையும் எங்கெல்ஸ் விவரித்தார். புரட்சிக்குத் தயாராவது என்பது போருக்குத் தயாராவது போன்றது என்றார் எங்கெல்ஸ்.  பலமான ஒரு வரிசையை முதலில் உருவாக்கிவிடவேண்டும். இந்த முன்வரிசை வீரர்கள் எதிரிகளை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டும். சுயநலம் அற்ற தன்மை, வீரம், புத்திசாலித்தனம், பலம் ஆகிய அனைத்து பண்புகளும் ஒரு புரட்சி வீரனுக்குத் தேவைப்படுகின்றன என்றார் எங்கெல்ஸ்.

அதே சமயம், போர் என்று வந்துவிட்டால் எப்போதும் வெற்றியே வந்துகொண்டிருக்குமா? எதிரிகள் தொடர்ந்த வீழ்ந்துகொண்டே இருப்பார்களா? தாக்கப்பட்டபோதும், எழுந்து நின்று வாளை உருவி வீரத்துடன் நிற்பவனே மெய்யான வீரன். இதில் சமரசத்துக்கு இடமில்லை. பயந்து ஓடுவதும், சரணடைவதும் ஒரு வீரனின் பண்புகள் அல்ல. வரலாற்றுத் தருணத்தில் போரில் கலந்துகொள்ளாமல் சரணடைபவன் நிச்சயம் துரோகம் இழைத்தவனாகிறான். எதிரிகளிடம் போரிட்டு வீழ்பவனைக் காட்டிலும் துரோகத்தனத்தால் பின்வாங்குபவர்களால்தான் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. தோல்வி சகஜமானது. திறமையாகப் போரிட்டு தோல்வி அடைவதால் பல நல்ல பாடங்களைக் கற்கமுடிகிறது. ஒரு ராணுவத் தளபதி போல் போர்க்கள சூத்திரங்களை விவரித்தார் எங்கெல்ஸ்.

ஜெர்மனி பற்றிய எங்கெல்ஸின் கட்டுரைகளை கார்ல் மார்க்ஸ் எழுதிய லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் என்னும் நூலோடு இணைத்து வாசிப்பது மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். டிசம்பர் 1851 முதல் மார்ச் 1852 வரையிலான காலகட்டத்தில் மார்க்ஸ் இந்தப் புத்தகத்தை எழுதி முடித்தார். ஜோசப் வேடிமேயர் என்பவர் நடத்தி வந்த ஒரு ஜெர்மானிய பத்திரிகையில் இது தொடராக வெளிவந்தது. 1851ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த லூயி நெப்போலியன் போனபார்ட் பற்றிய ஆய்வு நூல் இது. நெப்போலியன் போனபர்ட்டின் வழி வந்த இந்த லூயி போனபர்ட், பிரெஞ்சு குடியரசின் அதிபராக இருந்தவர். டிசம்பர் 2, 1851 அன்று இவர் கலகத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். பிரான்ஸின் பேரரசராக, மூன்றாம் நெப்போலியனாக இவர் முடிசூட்டிக்கொண்டார்.

மார்க்ஸின் நூல், வரலாற்றில் லூயி போனபார்ட்டின் பாத்திரத்தை ஆய்வு செய்தது. பிரான்ஸில் நடைபெற்ற வர்க்கப் போராட்டம் எப்படி ஒரு சாமானியனை கதாநாயகனாக மாற்றியமைத்தது என்பதை விவரிப்பதே மார்க்ஸின் நோக்கமாக இருந்தது. வரலாற்றில் தனி நபர்கள் வகிக்கும் பாத்திரம் எத்தகையது என்பதை மார்க்ஸ் இதில் ஆழமாக அலசினார். மனிதர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி அவர்கள் வரலாற்றை மாற்றியமைத்துக்கொள்வதில்லை. சூழ்நிலைகளை அவர்கள் உருவாக்குவதில்லை. கடந்த காலத்தின் மூலமாகவும் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவும் சூழ்நிலைகள் உருபெருகின்றன.

பதினெட்டாம் புரூமேரின் முன்னுரையில் எங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே. இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும்.’

இந்த இரு படைப்புகளோடு, மார்க்ஸின் பிரான்ஸில் வர்க்கப் போராட்டம் என்னும் நூலையும் இணைத்துக்கொண்டால், ஐரோப்பியப் புரட்சி பற்றிய மூன்று முக்கிய நூல்கள் நமக்குக் கிடைத்துவிடும். பொருள்முதல்வாதத்தைக் கொண்டு வரலாற்றை அணுகுவது எப்படி என்பதை மார்க்ஸ், எங்கெல்ஸின் இந்தப் படைப்புகள் சொல்லித்தருகின்றன. அரசு குறித்தும் புரட்சி குறித்தும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்தும் பின்னாள்களில் மார்க்ஸும் எங்கெல்ஸும் வந்தடைந்த முடிவுகளுக்கு இந்த மூன்று நூல்களும் துணை புரிந்தன.

(தொடரும்)

மருதன்