கொல்கத்தா புத்தகக் கண்காட்சி

Kolkata Course 1ஆசியாவின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சில முக்கிய விவரங்கள்.

 • 37வது கொல்கத்தா உலகப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 26 அன்று ஆரம்பமாகியுள்ளது. வழக்கமாக 12 நாள்கள் நடைபெறும் கண்காட்சி இந்த முறை மம்தா பாணர்ஜியின் ஆலோசனையின்படி 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறும்.
 • இடம் மிலன் மேலா மைதானம். முழுமையான வரைபடம் இங்கே.
 • சென்ற ஆண்டு விற்பனை 15 கோடி.  இந்த ஆண்டு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.
 • சென்ற ஆண்டு 14 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த முறை மேலும் 3 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 • நுழைவுக் கட்டணம் இல்லை.
 • கொல்கத்தாவின் சில முக்கிய இடங்களில் இருந்து அரங்கத்துக்குச் செல்ல இலவசப் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  புத்தக ஆர்வலர்களைக் கவர்ந்து ஈர்க்கவே இந்தத் திட்டம்.
 • கிட்டத்தட்ட 800 பதிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.
 • இந்த ஆண்டின் சிறப்பம்சம், பங்களாதேஷ். (சென்ற ஆண்டு இத்தாலி).
 • அமர்த்தியா சென், அமிதாவ் கோஷ், சஷி தாரூர்,  பிகோ ஐயர் உள்ளிட்ட 85 பிரபலங்கள் உரையாடுகிறார்கள். முழு விவரம் இங்கே.

0

 

காஷ்மிரும் மௌனத்தின் அலறலும்

Mounathin Alaral 1 copyஇந்தியப் பிரிவினை குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியப் பதிவு, மௌனத்தின் அலறல்.  ஊர்வசி புட்டாலியா எழுதிய The Other Side of Silence என்னும் நூலை கே.ஜி. ஜவர்லால்  எளிய, அழகிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.

முன்னதாக கிழக்கில் வெளியான ஆண்ட்ரூ வைட்ஹெட் எழுதிய காஷ்மிர் முதல் யுத்தம் புத்தகத்துக்கும் மௌனத்தின் அலறலுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

 • இரண்டுமே நேரடிப் பதிவுகள் (reportage).
 • முதல் காஷ்மிர் யுத்தம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் போதவில்லை, நேரடியாகக் களத்துக்குச் சென்று சாட்சியங்களைச் சந்தித்துப் பேசி அவர்களுடைய கதையைப் பதிவு செய்யவேண்டும் என்பது ஆண்ட்ரூ வைட்ஹெட்டின் நோக்கம். ஊர்வசி புட்டாலியாவின் நோக்கமும் இதுவேதான். பிரிவினை குறித்து பல்லாயிரம் பதிவுகள் இருந்தபோதும், பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லை என்னும் உந்துதலின் விளைவாக இந்நூல் உருவானது.
 • Oral History எனப்படும் முறையில் சாட்சியங்களின் நேரடிப் பதிவுகள் முக்கிய ஆவணங்களாக இந்த இரு நூல்களிலும் உருவாவதைக் காணலாம்.
 • இரு நூல்களுமே இதுவரை நாம் அறிந்திராத மனிதர்களையும் இதுவரை சொல்லப்படாத கதைகளையும் நமக்கு அறிமுகம் செய்கிறது.
 • ஆவணங்களையும் பிரதிகளையும் மட்டுமே ஆராய்ந்து வரலாற்று நூல்களை உருவாக்கிவிடமுடியாது; களப்பணி அத்தியாவசியமானது என்பதை இந்த இரு நூல்களும் உணர்த்துகின்றன.
 • வரலாறு என்பது தலைவர்கள் பற்றியது மட்டுமல்ல, அது சாமானியர்களைப் பற்றியது என்னும் மிகப் பெரிய புரிதலை இந்த இரு நூலாசிரியர்களும் நமக்கு ஏற்படுத்துகிறார்கள்.

காஷ்மிர் முதல் யுத்தம் குறித்து நான் முன்னர் எழுதிய பதிவு.

மௌனத்தின் அலறல், இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம். இதை வாசித்து முடிப்பது மிகவும் கடினம். மொழியல்ல, காரணம். இதிலுள்ள நிகழ்வுகள் நெஞ்சை உலுக்கியெடுக்கக்கூடியவை.  அகிம்சையால்தான் சுதந்தரம் பெற்றோம் என்று சாதிப்பவர்கள் ஒருமுறை இதை வாசித்துவிடுங்கள்.

352 பக்கங்கள் / விலை ரூ.250

கிழக்கு : புதிய புத்தகங்கள் / அறிமுகம் 2

Pirabala Kolai Vazhakkugal copy1) பிரபல கொலை வழக்குகள் / SP. சொக்கலிங்கம்

தமிழ்பேப்பரில் தொடராக வெளிவந்த வழக்குகளின் புத்தக வடிவம். நூலாசிரியர் SP. சொக்கலிங்கம் ஒரு வழக்கறிஞர். அவர் கவனம் செலுத்திவரும் துறை காப்புரிமை தொடர்புடையது என்றாலும் சிவில், கிரிமினல் குற்றவியல் துறைகளில் அவருக்கு ஈடுபாடு அதிகம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் திறன் படைத்தவர்.

எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு, இறந்துபோன ஒரு சமஸ்தானத்து இளவரசர் ஒரு மர்ம சந்நியாசியாகத் திரும்பி வந்த கதை, ஜின்னா வாதாடிய வழக்கின் விவரங்கள், தமிழகத்தை ஒரு காலத்தில் உலுக்கியெடுத்த விஷ ஊசிக் கொலை வழக்கு ஆகியவை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இப்போது வெளிவந்திருப்பது பிரபல கொலை வழக்குகள் பற்றிய முதல் பாகம் மட்டுமே. தொடர்ச்சியாக மேலும் பல வழக்குகள் குறித்து தமிழ்பேப்பரில் இவர் எழுதவிருக்கிறார். இதுவும் புத்தக வடிவம் பெறும்.

200 பக்கங்கள் / விலை ரூ.140

 

Che - Motor Cycle Diary copy2) மோட்டார் சைக்கிள் டைரி / மருதன்

தமிழ்பேப்பரில்  வெளிவந்த மற்றொரு தொடரின் நூல் வடிவம். தனது பயணங்கள் குறித்து எர்னஸ்டோ சே குவேரோவே விரிவாக எழுதிவிட்ட பிறகு இன்னொரு புத்தகம் எதற்கு? ஏனென்றால், ஒருவரை அவருடைய எழுத்துகளை மட்டுமே வைத்துக்கொண்டு புரிந்துகொள்ளமுடியாது.

இந்தப் புத்தகத்தில் கீழ்வரும் அம்சங்கள் இடம்பெறுகின்றன.

* எர்னஸ்டோ பயணம் மேற்கொண்டதன் பின்னணி.

* தென் அமெரிக்க நாடுகளில் அவர் மேற்கொண்ட பயணம் குறித்த விவரங்கள்.

* லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக, அரசியல் பின்னணி.

* இந்தப் பயணத்தின் வாயிலாக எர்னஸ்டோ கற்றது என்ன?

* எர்னஸ்டோ என்னும் மருத்துவக் கல்லூரி இளைஞர் சே குவேராவாக மாறுவதற்கு இந்தப் பயணம் எந்த வகையில் உதவியது?

எர்னஸ்டோ எழுதிவைத்த குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டடைவது சாத்தியமில்லை. ஜான் லீ ஆண்டர்சன், ஃபிடல் காஸ்ட்ரோ, எர்னஸ்டோவின் பயணத் தோழர் ஆல்பர்ட்டோ கிரானடோ உள்ளிட்ட பலரின் எழுத்துகள் வாயிலாக எர்னஸ்டோவின் மோட்டார் சைக்கிள் பயணத்தை மதிப்பிடும் முயற்சியே இந்நூல்.

எர்னஸ்டோ எழுதிய பயணக் குறிப்புகள்  விடியலில் கனவிலிருந்து போராட்டத்திற்கு என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அந்தப் புத்தகத்துக்கு இது எந்த வகையிலும் மாற்று அல்ல. மாறாக, அதன் ஒரு பாகத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு சிறு வழிகாட்டி மட்டுமே என் நூல்.

இன்னும் பலருடைய முக்கியப் படைப்புகளுக்கு இப்படிப்பட்ட வழிகாட்டி நூல்கள் தேவை என்று நினைக்கிறேன்.

160 பக்கங்கள் / விலை ரூ.110

0

கிழக்கு : புதிய புத்தகங்கள் / அறிமுகம் 1

Thamizhaga Arasiyel Varalaru 1 copy1) தமிழக அரசியல் வரலாறு / ஆர். முத்துக்குமார்

இரு பாகங்களில் வெளிவந்திருக்கும் புத்தகம். முதல் பாகம் 1947 தொடங்கி எமர்ஜென்ஸி வரையிலான காலகட்டத்தைப் பற்றியது. இரண்டாவது பாகம், எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொடங்கி 2000 வரையிலானது. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தியா படிப்படியாக பிராந்திய கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்த கதையின் ஒரு பகுதி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தோன்றியது எப்படி, திமுகவும் அதிமுகவும் போட்டிக்கட்சிகளாக வளர்ந்த பின்னணி என்ன, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் எப்படித் தோன்றின, தேர்தல் களத்தில் வெற்றி, தோல்விகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன ஆகியவை இந்தப் புத்தகங்களில் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளன.

எம்ஜிஆர் தொடங்கிவைத்த கவர்ச்சிவாதம் (populism) எப்படி Thamizhaga Arasiyel Varalaru 2 copyஅரசியல் களத்தை உருமாற்றியது என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது. ஆந்திராவில் என்டிஆர் ஆட்சியைப் பிடித்தது இப்படித்தான்.  இன்றும்கூட கவர்ச்சிவாதம்தான் ஓட்டு வங்கிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. அதை மட்டுமே கொண்டு ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

காவிரி பிரச்னை, தென் தமிழகத்தின் சாதிப் பிரச்னைகள், ஈழம்,  கச்சத்தீவு என்று தமிழகத்தின் அரசியல் களத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த பல விஷயங்களின் பின்னணியை முத்துக்குமார் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார்.

 

India arasiyal Varalaru copy2)  இந்திய அரசியல் வரலாறு / வி. கிருஷ்ணா அனந்த் / தமிழில் : ஜனனி ரமேஷ்

சுதந்தரத்துக்குப் பிறகான இந்திய அரசியலை விவாதிக்கும் கிருஷ்ணா அனந்த் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. தமிழக அரசியல் வரலாற்றோடு இணைத்து வாசிக்கவேண்டிய புத்தகம் இது.  தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் டெல்லியில் நடைபெற்ற மாற்றங்களுக்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுகத் தொடர்புகளை இந்நூலில் இருந்து தெரிந்துகொள்ளமுடியும். இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதால் புத்தகம் குறித்த விமரிசனத்தைப் பிறகு பார்க்கலாம்.

இந்திய அரசியல் தொடர்ந்து ஆர்வமூட்டக்ககூடியதாகவே இருக்கிறது. இந்திய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு எழுத்தாளர்களும்கூட தொடர்ந்து இந்தியா குறித்து ஆய்வு செய்துகொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். பாட்ரிக் ஃபிரெஞ்ச், வில்லியம் டார்லிம்பிள், மார்க் டுல்லி போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். இந்திய எழுத்தாளர்களிடையே சர்வதேச கவனம் பெற்றவர், சமீபத்தில் ராமச்சந்திர குஹா. கிருஷ்ணா அனந்தின் நூலை குஹாவின் நூலோடு ஒப்பிடலாம்.  ஒரே ஒரு வித்தியாசம். ராமச்சந்திர குஹாவைப் போன்ற  ஈர்க்கும் எழுத்து நடை கிருஷ்ணா அனந்திடம் இல்லை.

தமிழக அரசியல், இந்திய அரசியல் இரண்டையும் விவரிக்கும் மேற்காணும் நூல்கள் நிச்சயம் நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும்.

0

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நாவல், கட்டுரை, சிறுகதை என்று பல்வேறு வடிவங்களில் சுஜாதா எழுதி இருந்தாலும், அவரது மிக சிறந்த எழுத்துகள் வெளிப்படுவது சிறுகதையில்தான் என பலரும் கருதுவதுண்டு. சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ஸ்ரீரங்கத்து தேவதைகள். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்கமுடியும். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நம் இளமை காலத்தை தரிசிக்கமுடியும்.

ொத்தம் 14 சிறுகதைகள். அதற்குள் தான் எத்தனை மனிதர்கள் உயிரோடு வலம் வருகிறார்கள் !

நம் சிறுவயதில ஊரில் தொடர்ந்து பார்த்த ஏதாவது ஒரு பைத்தியத்தை இன்று வரை நம் நினைவு இடுக்குகளில் விடாது வைத்திருக்கிறோம் தானே? அப்படி ஒரு பைத்தியத்தின் கதை தான் கடவுளுக்கு ஒரு கடிதம். கோவிந்து என்கிற மனிதர் தினம் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். மன நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் செய்யலாம் என பேச, (” சாந்தி முகூர்த்தம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்”) நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. கதையின் இறுதியில் கோவிந்துவின் தம்பியும் அதே மாதிரி ஆகி போனதாகவும், அவர் அம்மா இருவருக்காகவும் வேண்டி கொண்டு தினம் கோவிலில் விளக்கு போடுவதாகவும் முடிக்கிற போது மனம் கனத்து போகிறது.

இன்னொரு பைத்தியத்தின் கதை குண்டு ரமணி. இது தன் குழந்தையை மரணத்திடம் கொடுத்த ஒரு பெண், புத்தி பேதலித்து திரிவதை சொல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வந்து அமர்ந்து கொண்டு சாப்பாடு கொடுக்க சொல்லி வற்புறுத்துவதும், அப்படி தராவிடில் அந்த வீட்டு வாசிலிலேயே படுத்து தூங்குவதும்… இது மாதிரி பைத்தியங்களை நிச்சயம் நாம் பார்த்திருப்போம் !

சிறு வயதின் இன்னோர் வித்தியாச அனுபவம் சொல்லும் கதை “பாம்பு”. சுஜாதா வீட்டில் பாம்பு வந்து விட, அவர் தங்கையை சைட் அடிக்கும் சுஜாதாவின் நண்பர் ஹீரோ மாதிரி பாம்பு பிடிக்க பார்க்கிறார். கடைசியில் பாம்பை பிடிப்பது அவர் தங்கை தான். “அது என்ன பாவம் பண்ணுச்சு விட்டுடலாம்” என அவள் சொன்னாலும் அந்த பாம்பு அடித்து கொல்லப்படுகிறது. “என் தங்கையை நான் நன்கு உணர அது ஒரு சந்தர்ப்பம்” என்கிறார் சுஜாதா.

நம் சிறு வயதில் ஏதாவது ஒரு நண்பன் நம்மை டாமினேட் செய்து கொண்டிருந்திருப்பான். பெஞ்சில் உட்காருவது முதல், விளையாட்டு வரை இப்படி சுஜாதாவை மிக டாமினேட் செய்த ஒருவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாய் சொல்லி விட்டு.. இன்று அவன் “வேலை கேட்டு என் அறையின் வாசலில் அமர்ந்திருக்கிறான். வேலை கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள் என முடிக்கிறார் சுஜாதா!

சுஜாதா பாட்டி வீட்டில் வளர்ந்ததால், கதைகளில் பாட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. தனிமையில் சுஜாதாவை திட்டுபவராக, மற்றவர் முன் எப்போதும் விட்டுத் தராதவராக இருக்கிறார் பாட்டி. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாக உள்ளது.

போகப்போக ரங்கு கடை, ஸ்ரீரங்கத்து தெருக்கள் எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட இடமாகி விடுகிறது. கே. வி, ரங்குடு, அம்பி ஆகிய பாத்திரங்கள் (நண்பர்கள்) பல கதைகளில் வருகிறார்கள். அனைத்து சிறுவயது விளையாட்டுகளிலும் சுஜாதா ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறார். (எல்லா எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தானோ?)

உள்ளூர் கிரிக்கெட் மேட்ச்கள் எப்போதும் சுவாரஸ்யம் தான். சுஜாதா தஞ்சை டீமுடன் ஆடி ஜெயித்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாய் சொல்கிறார். தங்களுக்கு சாதகமான அம்பயர் வைத்து கொள்வதும், அவர் எல்.பி .டபிள்யூ வுக்கு அவுட் கொடுக்காததும் எல்லாருக்கும் நடந்திருக்கும் ! இந்த மேட்ச் முடிந்து அதன் செய்தி சில வரிகளில் பத்திரிகையில் வந்த போது கிடைத்த சந்தோஷம் அதன் பின் எத்தனையோ முறை பத்திரிக்கையில் தன் பெயர் வந்த போதும் கிடைத்ததில்லை என்கிறார் சுஜாதா!

கிராமத்து டிராமாவில் சுஜாதா (சாமரம் வீசும் ) பெண் வேடம் போட்டதை ஏறக்குறைய கண்ணீருடன் நம்மிடம் சொன்னாலும், நமக்கு சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது. நாடகம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு கறவை மாடு பரிசு என்று சொல்லி விட்டு, நாடக அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒரு மாதிரி நெர்வசாக சுற்றி வந்து சாணி போட்டு கொண்டிருந்தது என்பது டிப்பிக்கல் சுஜாதா !

ஒவ்வொரு கதையும் வாசித்து விட்டு சற்று இடை வெளி விட்டு தான் அடுத்த கதை வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த மிக சிறந்த சிறுகதை தொகுப்புகளுள் ஒன்றான இந்த புத்தகத்தை வாசிக்கத் தவறாதீர்கள் !

0

மோகன் குமார்

 

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியமா?

இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது.

மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கிவிட்டது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983இல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்தோரால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் முதன்மையானதாகக் கருதப்படுகின்றன.

அவர்களுடைய படைப்புகளில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கியப் புனைவுகள் முதன்மையாகக் கருதப்பட்டபோதிலும், கலைகள் சார்ந்த வெளிப்பாடுகள், சிற்றிதழ்கள், ஓவியம், குறும்படம், கூத்துக்கலை, தெருநாடகம், ஒலி மற்றும் ஒளிச் செயல்பாடுகள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவை போக, இந்தப் படைப்பாளிகள் பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தி இலக்கிய அரங்குகளை நடத்துவதும் படைப்புகள்மீது விவாதத்தை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கன. மொழி, நிறம், பண்பாட்டுச் சிக்கல் பற்றியதாக இப் படைப்புகளின் மையங்களை அமைத்துக் கொள்கின்றனர். படைப்புகளை இதழ்கள், இணையதளம், வலைப்பூக்கள், நூல்கள், தொகுப்பு நூல்கள் வழியாக உடனுக்குடன் வெளிப்படுத்துகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் படைப்புகள் அவர்களின் தாய்நாடு குறித்த ஏக்கத்தையும், குடியேறிய நாடு அவர்களுக்கு அளித்துள்ள புதுவாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகளையும் விளக்கமாகக் கூறுகின்றன. இப்படைப்புகள் தாயகத்தின் உறவுகள், நினைவுகள் சார்ந்தும் புலம்பெயர்ந்தோர் பயணம், புகலிட அனுபவம், புகலிட மனிதனின் வாழ்வு குறித்த தேடலையும் முன்வைக்கின்றன. புனைகதையில் குறிப்பாகச் சிறுகதைகளில் புகலிடவாழ்வுதரும் துயர் கணிசமாகப் பதிவாகியுள்ளது. அப்புனைகதைகளின் பெரும்பகுதி நிஜமும் சிறுபகுதி புனைவுமாக அமைந்துள்ளன. புனைவினை நீக்கிவிட்டால் அவை உண்மைச் சம்பவக் கட்டுரைகளாக அமையக்கூடும்.

ஷோபா சக்தியின் ‘தேவதை சொன்ன கதை’ சடங்கு, சம்பிரதாயங்களோடு ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தைப் போரும் அதனால் நிகழ்ந்த புலம்பெயர்வும் எவ்வாறு சர்வதேச அளவுக்குக் கொண்டு சென்றன என்பதைக் காட்டியுள்ளது. “பாரிசில் தான் உண்டு, தன் வேலை உண்டு, தங்கையின் லண்டன் மாப்பிள்ளைக்குக் கொடுத்த சீதனத்துக்குட்பட்ட கடனுக்கு வட்டியுண்டு என்று எட்டடிக்குப் பத்தடி அறையில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு லண்டன் தங்கைதான் முதல் வெடி வைத்தாள். பாரிஸ் அண்ணைக்கும் முப்பது வயசாப் போச்சுது. நான் லண்டனில், பெரிய அண்ணை ஜொர்மனியில், தம்பி சுவிஸில், பாரிஸ் அண்ணை தனியாளா கிடந்து போறதுக்குக்கான ‘சான்று’ வெளிநாடுகளில் கூடுதலா இருக்கு. அதால பாரிஸ் அண்ணைக்குக் கெதியா ஒரு கலியாணம் செய்து வைக்க வேணும் என்று தங்கை தொலைபேசியில் ஜெர்மனிக்கு வெடிக்க ஜெர்மனி ஊடாக கொழும்பு என்று இவனது திருமணம் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்தது.” புலம்பெயர்வு, மனிதனை எவ்வாறு நாலா திசைகளிலும் வீசி எறிந்துள்ளது என்பதையும், திருமணம் குறித்த தமிழர்களின் மனநிலையினையும், அவை மனிதனிடம் ஏற்படுத்துகின்ற சிக்கல்களையும் இயல்பாக, எள்ளலோடு பதிவு செய்துள்ளது.

பொ. கருணாமூர்த்தியின் ‘போதிமரம்’ என்ற கதை புலம்பெயர் வாழ்வு தமிழர் மீது திணித்துள்ள பண்பாட்டுச் சிதைவினைக் குறிப்பிட்டுள்ளது. “ஒருமுறை சில நண்பர்களுடன் ஹம்போக்கில் வெளிநாட்டவர் குடியிருப்பு ஒன்றிற்கு இலங்கைத் தமிழர்களும் நிறையபோர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு போனோம். எதேச்சையாக அவர்கள் குசினிக்குள் நுழைந்த எனக்குப் பேரதிர்ச்சி. எங்கள் பள்ளிக்கூடத்தில் என்னைவிட 2 வகுப்புகள் ஜூனியராகப் படித்த ஐயர் பொடியன் ஒருவன் பெரிய கோழியொன்றை மல்லாக்கப் போட்டு வகிர்ந்து கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் அசடு வழிந்து கொண்டே சொன்னான் ‘என்ன செய்யிறது இங்க வந்து எல்லாத்தையும் மாத்த வேண்டியதாய்ப் போச்சு’” என்ற பகுதி அந்தணர்குலத்துப் பையன் கோழி சமைப்பது, முட்டை சாப்பிடுவது எனப் புலம்பெயர்வு அவனை அந்த நிலைக்குத் தள்ளியுள்ளமையைச் சுட்டிக்காட்டுகின்றது.

புகல்சூழலில் யாசித்துப் பிழைக்கும் காளிமுத்து என்ற தமிழரைச் சை. பீர்முகம்மது ‘சிவப்பு விளக்கு’ என்ற சிறுகதையில் “காலையில் பெரிய மார்க்கெட்டில் கையேந்திக் கொண்டு நிற்பான். மத்தியான வேளையில் ஏதாவதொரு கடையின் பின்புறமாக இருக்கும் குப்பைத் தொட்டியில் தலையை நுழைத்துக் கொண்டு எதையாவது பொறுக்கிக் கொண்டிருப்பான். எது எப்படி இருந்தாலும் மாலை நாலரை மணிக்கு சௌக்கிட்ரோட் வெள்ளை மாளிகையில் ஒரு பயிண்ட் அடிக்க வந்துவிடுவான். பிறகு நேரே மேம்பால மாளிகைக்குத் தூங்க வந்துவிடுவான். மீண்டும் மறுநாள் காலையில் பெரிய மார்க்கெட, குப்பைத்தொட்டி, கள்ளுக்கடை” என்று அடையாளப்படுத்தியுள்ளார். புலம்பெயர்ந்த மக்களுள் உடல் வலிமையோடு இருக்கும் ஒருவன் உழைத்து முன்னேற விருப்பமில்லாமல் சோம்பேறியாய், பிச்சையெடுத்து உண்பதைப் பெரிதாக எண்ணி வாழ்ந்து அழியும் விதத்தினைக் காட்டியுள்ளார்.

லெ. முருகபூபதி ‘மழை’ என்ற சிறுகதையில் மனைவி, பிள்ளைகளை ஈழத்தில் விட்டுவிட்டு வந்திருக்கும் ஒருவர். அந்நியநாட்டுப் பெண்ணுடன் நட்புக்கொண்டு பாலியல் உறவுவரை செல்வதனைக் குறிப்பிட்டுள்ளார். “வாயை மூடு அங்ஜோலா, நான்காண்டுகளுக்கு மேலாக என் ஸ்பரிசம் இன்றி எனது உடல் சுகம் கிட்டாமல் துப்பாக்கி வேட்டுக்களுக்கும் செல்அடிகளுக்கும் பயந்துகொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம் வேண்டுகோள் நியாயமாகப் பட்டால் என் மனைவியும் அங்கே இந்த சுகத்திற்காக உன்னைப் போல் ஒருவனைத் தேடி போயிருக்கலாம்” என்ற குறிப்பு, புலம்பெயர்ந்த மண்ணில் வாய்க்கும் பாலியல் தவறுகளைச் சுயநேர்மையுடன் வெளிப்படுத்தியுள்ளது.

‘அன்னையும் பிதாவும்’ என்ற கதையில், ரோகிணி வழியாகத் தம் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றை மறந்து அயல்நாட்டவர்களாக வாழத்துடிக்கும் தமிழ்ப்பெண்ணின் மனநிலையை மாத்தளை சோமு காட்டியுள்ளார். ரோகிணியின் தோற்ற வர்ணனை “தோள்பட்டை வரை தொங்குகிற முடியைக் குலுக்கிக் கொண்டு போனாள். அவள் இங்கு வருவதற்குமுன் இடுப்புவரை தொங்கியும் குறுகிவிட்டது. வெள்ளைக்காரர்களைப் போல் முடி வெட்டியதற்குச் சொன்ன காரணம், குளித்துவிட்டுத் தலைமுடி காய டைம் எடுக்குது. அடிக்கடி தலைவலி வருது என்பதுதான். ஆனால், வெள்ளைக்காரிகளின் ஹெர்ஸ்டைலில் அவள் மயங்கியதே உண்மையான காரணம்” என்று உண்மையோடு குறிப்பிடப்பட்டுள்ளது.

அ. முத்துலிங்கம் ‘கடன்’ என்ற கதையில் தன் தந்தையின் வயோதிக காலத்தில் அவரை முறையாகப் பராமரிக்காமல், மரணமடைய விட்டுவிடும் ஒரு மகனின் மனிதநேயமற்ற, சுயநலப்போக்கினைக் காட்டியுள்ளார். மகனும் மருமகளும் பணிக்குச்செல்வதால் பெரியவரைச் சரிவர கவனித்துக்கொள்ள இயலவில்லை. அவருக்கு அன்றாடம் உணவுப் பரிமாற நேரமில்லாத காரணத்தால் தனித்தனிப் பாத்திரத்தில் உணவினை வைத்து அப்பாத்திரத்தின் மேல்பகுதியில் கிழமைகளின் பெயர்களை எழுதிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகின்றனர். அப்பொரியவா; கிழமைகளின் அடிப்படையில் உணவுப் பாத்திரத்தைத் தானே தனக்குப் பரிமாறிக்கொண்டு உண்கிறார். அவசர உலகத்தில் முதியவர்கள் தனிமைப் படுத்தப்படுவதனை இக்கதை சுட்டிக்காட்டுகின்றது. அது மட்டும் இக்கதையின் மையம் அல்ல. அப்பொரியவரின் மகன், கிழமையின் பெயர் குறித்து வைக்கப்பட்ட உணவுப் பாத்திரங்கள் இரண்டு பயன்படுத்தப்படாததைக் கண்டு குழப்பமடைகிறார்.  தனிமையிலேயே வசித்த தன் தந்தையைப் பார்க்க அவரது நிலவறைக்குச் செல்கிறார். இரண்டு நாட்களாக உடல் விறைத்த நிலையில் உள்ள தன் தந்தையின் சடலத்தை மகன் காண்கிறார்.  பெற்றோரைக் கூடப் பேணிக்காக்க இயலாத அளவுக்கு நேரமின்மையும் பணிச்சுமையும் புலம்பெயர்ந்த மக்களின் தலைமுறைக்கு நேர்ந்துவிட்ட கொடுமையை அ. முத்துலிங்கம் காட்டியுள்ளார்.

புலம்பெயந்தோர் இலக்கியத்தைப் ‘புலம்பல் இலக்கியம்’ என்று எள்ளிநகையாடும் போக்கு தமிழ்ச்சூழலில் உள்ளது. புலம்பல் அற்ற வாழ்க்கை எத்தமிழனுக்கு வாய்த்தது? சங்கத்தமிழனின் வறுமை குறித்தப் புலம்பல்தானே பெரும்பான்மையான செவ்விலக்கியங்களின் மையமாக உள்ளன! புலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோரர் இலக்கியம் உருக்கொள்கின்றது. துயருராத மனிதனுக்கு இவை ‘புலம்பல் இலக்கியம்’. சராசரி மனிதனுக்கு இவை தீவிர இலக்கியம்தான். தன்வாழ்விலிருந்து இலக்கியம் படைக்கும் எப்படைப்பாளரும் வணங்கத்தக்கவரே. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள புலம்பெயர்ந்த படைப்பாளர்கள் அறுவரையும் நான் வணங்குகின்றேன்.

0

முனைவர் ப. சரவணன்

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டமாகச் சொல்லப்படுகிறது. குதிரைகளில் ஏறி வந்த ஆரியர்கள் பூர்வகுடிகளான திராவிடர்களைக் கொன்று அவர்களுடைய நகரங்களை நிர்மூலமாக்கினர். வேத கலாசாரத்தை இந்தியாவில் புகுத்தினர். வேதகால நாகரிகம் எனப்படும் அந்த கங்கைச் சமவெளி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் பொதுவாக நம் பள்ளிப் புத்தகங்களில் இன்றும் சொல்லித் தரப்படும் வரலாறு.

இதுதான் மத நம்பிக்கையைவிட படு மூர்க்கமாகப் பரப்பப்பட்டு வந்திருக்கும் கோட்பாடு. சமீபகாலமாகக் கிடைத்துவரும் ஆதாரங்களின் அடிப்படையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஆரியர் என்பவர் அந்நியர் என்பதே இன்றும், குறிப்பாகத் தமிழகத்தில், பதிந்துகிடக்கிறது.  The Lost River  என்ற நூலில் ஆசிரியர் மிஷல் தனினோ இந்தக் கோட்பாட்டின் அஸ்திவாரத்தை நிதானமாகத் தகர்த்திருக்கிறார்.

ஆரியர் படையெடுப்பு என்ற கற்பிதக் கோட்பாட்டை முன்வைப்பவர்கள் சரஸ்வதி நதி இந்தியாவில் பாய்ந்த நதியே அல்ல என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் அப்படி ஒரு நதி இருந்திருக்கவே இல்லை. அது வேத கால ரிஷிகளின் கற்பனையில் உதித்த நதி மட்டுமே என்று சொல்கிறார்கள். ஏனென்றால், சிந்து சமவெளி நாகரிக குடியிருப்புகளில் பெரும்பாலானவை சரஸ்வதி நதிக்கரையில்தான் அமைந்திருக்கின்றன. ஒருவகையில் அந்த கலாசாரம் சிந்து -சரஸ்வதி கலாசாரம் என்றுதான் அழைக்கப்பட்டவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சரஸ்வதி நதியால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நதி வறண்டதைத் தொடர்ந்து அந்த மக்கள் கிழக்கு நோக்கி அதாவது கங்கைச் சமவெளி நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டால், ஆரியர்களால் அழிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் என்ற கோட்பாடு வலுவிழந்துவிடும் என்பதால், சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்திருக்கவே இல்லை என்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் மிஷல் தனினோ முதலில் சரஸ்வதி நதியின் முழு வரலாற்றை தனது நூலில் விரிவாகத் தொகுத்திருக்கிறார். சரஸ்வதி நதி தோன்றிய இடம், பாய்ந்து சென்ற வழித்தடங்கள், அது வறண்டவிதம், அதற்கான காரணங்கள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தையும் பழங்கால சமஸ்கிருத இலங்கியங்களில் ஆரம்பித்து சமகால விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் வரை கிடைத்திருக்கும் அனைத்து ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார். அடுத்ததாக, அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங் உட்பட பல்வேறு துறை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரமாண்டமான, முழுமையான சித்திரத்தை நம் முன் வைக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரமயமாக்க காலகட்டம் பொ.யு.மு. 1900 வாக்கில் மறைந்தது என்பது இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. சரஸ்வதியின் பிரதான நீரோட்டம் வறண்டு போனதும் அதே காலகட்டத்தில் என்பதை தட்ப வெப்பவியலில் ஆரம்பித்து ஆரம்பித்து கிணற்று நீரில் ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் ஐசோடோப்பு சோதனை வரையான ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார். மிக நேர்மையாக, கடந்த காலம் பற்றிய ஓர் அவதூறுக்கான விடையை நாமாகவே புரிந்துகொள்ளவைக்கிறார்.

*

ரிக்வேதத்தில் மிகவும் உயர்வாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியானது இன்றைய கக்கர்-ஹக்ரா நதிதான் என்பதை லூயி தெ செயிண்ட் மார்த்தான், சி.எஃப்.ஒல்தாம் என்ற சர்ஜன் மேஜர், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (இந்திய அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்), லூயி ரெனேயு என பலரும் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நதி இமய மலையில் ஷிவாலிக் தொடரில் கட்ச் ராண் பகுதியில் சென்று கலக்கிறது (ரிக் வேதத்தில் சரஸ்வதி நதி மலையில் ஆரம்பித்துக் கடலில் கலப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது). லூயி ரெனே சரஸ்வதி மறைந்ததாகச் சொல்லப்படும் விநாசனம் என்ற இடத்தையும் அடையாளப்படுத்தியிருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு ஒரு நதி ஓடியதாகவும் அது வறண்டதால் அந்தப் பகுதியில் மக்கள் தொகை குறைந்தது என்றும் சொல்லும் செவி வழிக் கதைகளையும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

20-ம் நூற்றாண்டில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் சரஸ்வதி நதியின் படுகை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இன்று முழுவதும் வறண்டு கிடக்கும் அந்தப் பாலை நிலத்தில் நதி ஓடிய தடத்தில் மட்டும் ஈரப்பதம் மிகுதியாக இருப்பது புகைப்படங்களில் தெரியவந்தது. அந்த வழித்தடத்தில் கிணறுகள் தோண்டப்பட்டபோது மிகவும் நல்ல தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் பிற பகுதிகளில் 100-200 அடி தோண்டியும் நீர் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் கக்கர் ஹக்ரா நதி ஓடிய படுகையில் 20-30 மீட்டர் ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. இவையெல்லாம் முன்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான நதி இங்கு பாய்ந்திருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன. சட்லெஜ் நதியை கக்கர் நதியுடன் இணைத்த ஏராளமான குறு நதிகளின் வலைப்பின்னலும் அந்த புகைப்படத்தில் தெரியவந்தது.

இதற்கு அடுத்ததாக மிஷல் தனினோ சரஸ்வதி நதியின் மறைவுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஹரப்பா-மொஹஞ்ஜோதாரோ பகுதியில் ஏற்பட்ட வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். பொ.யு.மு. இரண்டாம் ஆயிரமாண்டு வாக்கில் உலகில் எகிப்து, துருக்கி, மெசபடோமியா (அக்காடிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவைக் கொண்டுவந்தது), ஆஃப்ரிக்காவில் பல இடங்கள், சீனா, வட அமெரிக்கா போன்ற பல இடங்களும் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த வறட்சிதான் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்குக்காரணம் என்று சொல்வது ‘எளியதொரு’ பதிலாக இருக்கலாம். ஆனால், அதை முழுவதாகப் புறக்கணிப்பது தவறாகவே இருக்கும் என்கிறார்.

அடுத்ததாக, வட மேற்கு இந்தியாவில் நடக்கும் பூகம்பங்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுவிட்டு சரஸ்வதி நதி வறண்டதற்கு பூகம்பத்தின் பின் விளைவுகள் காரணமாக இருக்கலாம் என்றொரு காரணத்தை முன்வைக்கிறார். சிந்து சமவெளி முழுவதும் கிட்டத்தட்ட சமதளமானது. சிறிய அளவுக்கு மேடு அல்லது பள்ளம் ஏற்பட்டாலும் நதியின் திசையானது முற்றிலும் மாறிவிடும். ஆரம்பத்தில் கக்கர் ஹக்ரா நதிக்கு அதாவது சரஸ்வதி நதிக்கு சட்லெஜ் மற்றும் யமுனை நதியில் இருந்து நீர் கிடைத்துவந்திருக்கிறது. பூகம்பத்தினால் யமுனையில் இருந்து வந்த நீர் திசை மாற்றப்பட்டுவிட்டது. இதனால் கக்கர்-ஹக்ரா நதியின் நீர் வரத்து குறைந்துவிட்டது.

அடுத்ததாக, சிந்து சமவெளி மக்களில் நகரங்கள், கோட்டைகள், தெருக்கள், இன்னபிற கட்டுமானங்களைப் பார்க்கும்போது அவர்கள் சுட்ட செங்கல்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கான சூளைகளுக்குத் தேவைப்பட்டிருக்கும் மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுபார்க்கும்போது அந்தப் பகுதியின் மழை குறைவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்.
இப்படியான காரணங்களினால் கக்கர் ஹக்ரா நதி மெள்ள வறண்டு போய்விட்டிருக்கலாம் என்று ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, சிந்து சமவெளி நாகரிகம் அடியோடு மறைந்துபோய்விட்டது என்பதுதான் ஆரிய ஆக்கிரமிப்பு கோட்பாட்டாளர்களின் முக்கியமான வாதம். கங்கைச் சமவெளியில் முதல் ஆயிரமாண்டில் ஆரம்பித்த நாகரிகத்தில் அதன் தடயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே கங்கைச் சமவெளி நாகரிகம் என்பதை நிரூபித்திருக்கிறார். அதாவது சரஸ்வதியின் மறு அவதாரம் கங்கை. சிந்து சமவெளி நாகரிகத்தின் மறு அவதாரம் கங்கைச் சமவெளி வேத நாகரிகம்.

சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் மண் பாண்டங்களில் காளை உருவம் பிரதானமாக பொறிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் அக்னி தேவனில் ஆரம்பித்து சூரியன் வரை அனைத்து கடவுள்களும் காளையுடனே ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஆரியர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புக்குரிய விலங்காக காளையே இருந்திருப்பது தெரியவருகிறது, குதிரை அல்ல.

அதுபோல் கட்டடங்களின் கட்டுமானத்திலும் இரண்டுக்கும் இடையில் மிகப் பெரிய ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டு கலாசாரங்களிலும் 5:4 என்ற விகிதம் பிரதானமாக இருக்கிறது. 1.9 மீட்டர் என்ற அலகின் மடங்கிலான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ‘குந்துமணி’ என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதே மதிப்புகள் ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாகப் பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (Metrologist) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மக்கள் தினமும் உபயோகிக்கும் பொருட்களும் பெரிதும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்திருப்பதாக பி.பி.லால் சுட்டிக்காட்டியுள்ளார். குளியல் பொருட்கள், எண்ணெய் விளக்கு, கமண்டலம், மர விளிம்புகொண்ட சிலேட்டுகள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விளையாட்டுப் பொருட்களிலும் ஹரப்பா குழந்தைகள் உபயோகித்த கிலுகிலுப்பை, ஊதல், பம்பரம், தட்டையான மண் தட்டுகள் ஆகியவற்றை வைத்துத்தான் இன்றைய (அல்லது மிக சமீப காலம் வரையிலும்) வட இந்திய குழந்தைகளும் விளையாடுகின்றனர். ஹரப்பாவாசிகளால் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க செய்து தரப்பட்ட பொம்மை வண்டிகள் கங்கை சமவெளிப்பிரதேசத்தில் பல இடங்களில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதிலும் பெண்கள் அணியும் வளையல்கள், நடு வகிட்டில் இட்டுக் கொள்ளும் குங்குமம் என பல விஷயங்களுக்கான வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகின்றன. ஸ்வஸ்திக் சின்னம், முடிவில்லா முடிச்சு (ஸ்ரீகிருஷ்ணரின் பாதம் போன்ற வடிவம்), ஆதி சிவனை (பசுபதி) நினைவுபடுத்துவது போன்ற உருவம், யோக நிலையில் இருக்கும் உருவம் என சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படும் பல விஷயங்கள் வேத கலாசாரத்திலும் தொடர்ந்து காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்வதானால், சிந்து நதி நாகரிகத்துக்கும் பிந்தைய சரித்திரக் கால நாகரிகங்களுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன; மண்பாண்டத் தயாரிப்பு முறைகள் பெரிய அளவுக்கு மாறவில்லை. நகைகள், வேறு விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகின்றன… (ஆகவே) சரித்திரத்துக்கு முந்தைய காலத்தையும் சரித்திரக் காலத்தையும் பிரிக்கும் ‘இருண்ட காலம்’ என்று ஒன்று உண்மையில் இல்லை என்று அகழ்வாராய்ச்சியாளரும் மானுடவியலாளருமான ஜே.எம். கெனோயர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மிஷல் தனினோ முன்வைத்திருக்கும் ஆய்வுமுடிவுகளை இப்படித் தொகுக்கலாம்: இன்று வறண்டு கிடக்கும் கக்கர்-ஹக்ராதான் வேத கால சரஸ்வதி நதி; அந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் 60%க்கு மேற்பட்ட இடங்கள் இருந்திருக்கின்றன; பொ.யு.மு. 1900 வாக்கில் சரஸ்வதி நதி வறண்டுவிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிந்து சமவெளி நகரமயமாக்க காலகட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. பிற்கால ஹரப்பாவினர் கிராமப் பகுதிகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். மெள்ள தங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு கங்கைச் சமவெளியில் புதியதொரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். கலாசாரத்தில் ஆரம்பித்து லவுகீக அம்சங்கள் வரை அனைத்திலும் இரு சமவெளி நாகரிகங்களுக்கும் இடையில் தெளிவான ஒற்றுமைகள் இருக்கின்றன. தங்களை வாழ வைத்த சரஸ்வதியின் நினைவைப் போற்றும் வகையில் அதை கங்கை, யமுனை, நதிகளோடு சூட்சும வடிவில் கலந்ததாகச் சொல்லி திரிவேணி சங்கமம் என்ற ஒன்றை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். சரஸ்வதி நதியின் அனைத்து பெருமைகளையும் கங்கைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார்கள்.

மிஷல் தனினோ மேலே சொல்லப்பட்டிருக்கும் தீர்மானங்களை மிக விரிவாகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். சிந்து சமவெளி மக்கள் தொடர்பாக அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வேத கால கங்கைச் சமவெளி நாகரிகம் பற்றிய எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்றின் உடல் கிடைத்திருக்கிறது. இன்னொன்றின் தலை கிடைத்திருக்கிறது. அது ஒரே நபரின் உருவமே என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் எளிய பகுத்தறிவு மட்டும்தான். நீங்கள் பகுத்தறிவு உள்ளவரா… அல்லாதவரா..? மிஷல் தனினோ மிக எளிதாக ஒரு கேள்வியை அமைதியாக முன்வைத்திருக்கிறார்.

 

மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா நோக்கி வந்ததாகச் சொல்லப்படும் அந்த ஆரியர்கள் அகழ்வாராய்ச்சியின் எந்தவொரு வரையறைக்கும் சிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். ஆரியர்கள் இந்த வழியாக வந்தனர்; இது ஆரியர்கள் உபயோகித்த வாள் அல்லது கோப்பை என்று சொல்லுமளவுக்கு எந்தவொரு மண்பாண்டமோ வேறு பொருளோ இதுவரை கிடைக்கவில்லை. – Jean Casal

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுவது பொ.யு.மு. 1500-1000 காலகட்டத்தில்தான். சிந்து சமவெளி நாகரிகம் சிதைவுற்றதோ பொ.யு.மு. 1900 வாக்கில். அதாவது ஆரியர்கள் வருவதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒரு நிகழ்வுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது!

ஆரியப் படையெடுப்பு எனும் கொலை வெறி கொண்ட காளை வரலாற்றின் குறுக்குச் சட்டத்துக்கு அப்பால் உறுமியபடி அலை பாய்ந்துகொண்டிருக்கிறது. பிரிவினையின் போதை ஏற்றப்பட்ட அதன் கோரமான விழிகள் பேரழிவின் கிலியை நமக்குள் விதைக்கின்றன. குறுகிய அரசியலின் வாடி வாசல் மெள்ளத் திறக்கப்படும்போது,அந்த வெறுப்பின் காளை மூர்க்கத்தனமாகப் பாய்ந்து வருகிறது. உண்மையின் நிலத்தில் காலூன்றியபடி நேருக்கு நேராக நின்று ஒருவர், அதன் ஒற்றைச் சார்பு தகவல்களின் கொம்புகளைப் பிடித்து மடக்கி, ஆதாரபூர்வமான தரவுகளின் காலால் போலி வாதங்களின் கழுத்தில் ஓங்கி மிதித்து அடக்குகிறார். கழுத்து மடங்கிய காளை தோல்வியின் நுரை தள்ளியபடி கண்கள் மலங்கக் கீழே விழுகிறது.

போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. வெற்றி ஊர்ஜிதமாகிவிட்டது. தோல்வியை நேர்மையாக ஒப்புக் கொள்வதும் அடங்கா காளையை வளர்த்தவனுக்கு அழகுதான்.

0

B.R. மகாதேவன்

(மிஷல் தனினோ ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக வந்திருந்த Saraswati: The Lost River என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. மொழிபெயர்த்திருப்பவர், வை. கிருஷ்ணமூர்த்தி).