முகம் காட்டாத முதலாளி

அகர முதல எழுத்தெல்லாம் ஆஸ்கார் ரவி முதற்றே உலகு – கோடம்பாக்கத்தில் ஜீவிக்கும் அநேக உதவி இயக்குனர்களின் திருக்’குரல்’தான் இது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களை குரல் விட்டு எண்ண நினைத்தால் அகர வரிசைப்படி மட்டுமல்ல, சிகர வரிசைப்படியும் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் பெயர்தான் முதலில் வரும். ஏன், ஏவிஎம் இல்லையா? அவர் இல்லையா இவர் இல்லையா என்று அடுக்குவோருக்கு ஒரே பதில்தான். ரவிச்சந்திரன் ஓடுகிற குதிரையை மட்டுமே நம்பினவர் இல்லை. பரியை நரியாக்குவார். நரியைப் பரியாக்குவார். அப்படி ஒரு அசாத்திய ராஜதந்திரம் அவருக்கு.

வேங்கடவனின் பிரசாதமான ‘லட்டு’ என்பது இவரது அலுவலகத்தின் பெயர். இறுக்கிப் பிடிச்சா லட்டு. உதறிப்போட்டா பூந்தி என்ற லாஜிக்கை ஒரு ‘குக்’கை விட நன்கு அறிந்தவர் என்பதால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் முதலாளி என்ற சகல திசைகளிலும் பயணம் போய் கொண்டிருக்கிறார். அதுவும் வெற்றிகரமாக!

“ஆஸ்கார்ல கதை சொல்லியிருக்கேன். பண்ணலாம்னு சொல்லிட்டார்” இந்த வார்த்தையை பல உதவி இயக்குனர்களிடம் கேட்டு அதிர்ந்திருக்கிறேன். இதிலென்ன அதிர்ச்சி?

அவர்களிடம், “எப்ப சொன்னீங்க?” என்று கேட்டுப்பாருங்களேன். “இப்பதான். நாலு வருஷம் ஆச்சு” என்பார்கள் கண்களில் ‘பல்ப்’ எரிய! இந்த நாலு வருடத்தில் ஒரு சந்திப்பில் கூட அவர்களது நம்பிக்கையின் ‘டங்ஸ்ட்டன்’ இழையை அறுத்திருக்கமாட்டார் ரவி.

மூன்று நான்கு கோடிகளில் படம் எடுப்பது பிரமாண்டம் என்று பேசிக் கொண்டிருந்த காலத்தில், முப்பது, நாற்பது கோடியை அசால்ட்டாக எடுத்து வைப்பார் ஒரு படத்திற்கு. அதில் பாதி விளம்பரத்திற்கு மட்டும் போய்விடும். இன்றைய மெகா விளம்பர  ‘சன்’னுக்கெல்லாம் டாடியே இந்த ஆஸ்கர் ரவிதான்!

‘வானத்தைப் போல’ என்கிற இமாலய வெற்றிப்படத்துடன் தொடங்கியது ஆஸ்கர் ரவியின் தயாரிப்பாளர் வாழ்க்கை. இவரது தயாரிப்பில் உருவான ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் திரைக்கு வரவிருந்த நேரம். கவர்னர் மாளிகையில் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ஜெயா டிவியில். ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ரோஜாக் கூட்டம் விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. கவர்னர் ஜெ.வை அழைத்தபின், அவர்  இருக்கையிலிருந்து எழுந்து வந்து ‘போடியம்’ முன் நிற்பாரல்லவா? அந்தச் சில நிமிடங்கள் எத்தனை முக்கியமானது? மொத்தத் தமிழகமும் உற்று நோக்குகிற நேரமல்லவா அது! நாற்காலிக்கும் போடியத்திற்கும் நடுவில் அம்மா நடந்த அந்தத் துளி நேரத்தில் நம்ம ரோஜாக்கூட்டம் விளம்பரம் வரணும் என்றார் ரவி.

ரோஜாக்கூட்டம்

அம்மா கவனித்தால் என்னாகும் என்பது ஜெயா டிவிக்காரர்களின் கவலை. கவனித்துக் கேட்டாலும், டேரிஃப் ரேட்டைச் சொல்கிற மாதிரி கவுரவமான தொகை இருந்தால் ஓ.கே என்றது அவர்கள் தரப்பு. அப்புறம் என்ன? ரவியின் ஆசைதான் நிறைவேறியது. இதற்காக அவர் கொடுத்த லட்சங்களை வைத்து ஒரு மினி பட்ஜெட் படத்தைத் தயாரித்திருக்கலாம். அதுதான் ரவிச்சந்திரன்!

ஆமாம்… ரவிச்சந்திரன் எப்படியிருப்பார்? யாராவது பார்த்திருக்கிறீர்களா? நேரில் போனால் மட்டுமே அது சாத்தியம். புகைப்படமோ, வரை(ந்த) படமோ எதுவாகவும் இருக்கட்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு, பார்ட் ‘போஸ்’ கூட தந்ததில்லை அவர். இதில் அவருக்குப் பல வசதிகள் இருந்தன.

தன்னிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டு வந்த ஓர் இளைஞருடன் பக்கத்திலிருக்கிற ஓட்டலுக்கு நாலைந்து நாட்கள் போய் வந்தார் ரவிச்சந்திரன். படகு காரில் போய் இறங்குவார்கள் இருவரும். லேசான டிபனுடன் சினிமாவையும் சேர்த்துக் கொறித்துவிட்டுத் திரும்புவார்கள். ஒருநாள் ரவிச்சந்திரன் போகாமல் நடிகர் மட்டும் போயிருந்தார் அங்கே. சார்… உங்க டிரைவர் வர்லியா? என்றாராம் சர்வர்! இதைக் கேள்விப்பட்டாலும் கவலைப்படமாட்டார் ரவிச்சந்திரன். ஏனென்றால் அவரது வெற்றி அதற்குள்தான் அடங்கியிருக்கிறது.

பட ரிலீஸ் தினத்தில், முன் வரிசை டிக்கெட்டில் கூட அவரைப் பார்க்கலாம். சி கிளாஸ் ரசிகனின் ஒவ்வொரு கமென்ட்டையும் காது குளிரக் கேட்பார். இப்படிப் பல தியேட்டர்களில் படம் பார்த்த அனுபவம்தான் எந்தெந்த இடங்களில் ரசிகன் பிரத்தியேக இன்டர்வெல் விடுவான் என்பதைக் கூட யூகிக்க வைக்கிறது அவரை. கோடம்பாக்கத்தில் எந்த முக்கியஸ்தர் படமெடுத்து முடித்தாலும் ‘ரவி சார்’ ஒருமுறை பார்த்துவிட்டால் நல்லது என்று நினைக்காமல் இருக்க மாட்டார்கள். ப்ரீ வ்யூ பார்த்துவிட்டு அவர் சொல்லும் ஒருவரிக் கருத்துக்கு ராணுவ மரியாதை தருவது கோலிவுட் கலாசாரம். ஒரே காரணம், அவர் சொன்னதுக்கு மாற்றாக ரிசல்ட் வந்ததில்லை இதுவரை என்பதுதான்!

அசோக் நகரைச் சுற்றியுள்ள ஏரியாவின் ஆட்டோ டிரைவர்களுக்கு ஓர் அனுபவம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும். தெரு முனையில் நின்று கொண்டிருப்பார் ரவிச்சந்திரன். ஏம்ப்பா ஆட்டோ வருமா? எங்க சார் போவணும்? என்ற டயலாக்குகளை அடுத்து இருவரும் போய் இறங்குகிற இடம் ஏதாவது ஒரு பிரிவியூ தியேட்டராக இருக்கும். தன்னுடன் வந்த ஆட்டோ டிரைவரையும் தியேட்டருக்குள் அழைத்துப் போவார். கையோடு கொண்டு போகிற ரீல்களைக் கொடுத்து அவர் தயாரித்து வரும் படத்தின் பாடல்களைப் போடச் சொல்வார். இது அவர் பார்ப்பதற்காக அல்ல. ஆட்டோ டிரைவர் பார்ப்பதற்காக!

எனக்காக சொல்லக் கூடாது. உன் அபிப்பிராயம் என்ன? நிஜத்தை சொன்னால் மீட்டர் சார்ஜ் ப்ளஸ் ஆயிரம்! யாருக்கு வலிக்கும்?

“இன்னா சார். ஈரோ மூஞ்சே சர்யா தெர்ல…” என்று டிரைவர் சொல்லிவிட்டால் போதும். அந்தப் பாடல் எத்தனை லட்சம் செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரீ ஷூட் போகும். ஹீரோவுக்கு குளோஸ் அப் வச்சு ஒரு முறை எடுங்கப்பா என்பார் இயக்குனரிடம். சில நேரங்களில் இந்த ஆட்டோ ரேஞ்ச் இன்னும் குறைந்து காய்கறி வியாபாரி, கடலை மிட்டாய் வியாபாரி என்று இறங்கும்.

அவர் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது இன்னும் வேடிக்கை. தனது பட பாடல்களை ஒரு சிடியில் பதிந்து கொள்வார். இதைக் கேட்பதற்கென்றே அவரது அறையில் ஒரு பாடாவதி டேப் ரெக்கார்டர் இருக்கும். அதில் “குறையன்றுமில்லை… மறை மூர்த்தி கண்ணா” பாடலைப் போட்டாலும், “குறை தவிர வேறில்லை கண்ணா” என்றுதான் பாடும். அப்படியொரு பழ பழஸ்.

எல்லார் வீட்டிலேயும் காஸ்ட்லி செட் இருக்காதுல்ல சார். இந்த மாதிரி டேப்ல போட்டு கேக்கும்போதும்கூட அந்தப் பாட்டு புடிச்சிருக்கணும் சார், அதுதான் ஹிட் ஆவும் என்பார்.

அமாவசை, கார்த்திகை, பவுர்ணமி, பஞ்சமி, ஓரை, ராகு, குளிகை, எமகண்டம், சதுர்த்தி, கரிநாள்னு காசு பணத்தை மதிக்கிற மாதிரி பஞ்சாங்கத்தையும் மதிப்பார். இத்தனை சங்கதிகளும் இடம் கொடுக்கிற நேரத்தில்தான் அன்ன ஆகாரம், ஆழமான தூக்கம் எல்லாம்.

“ஆபிஸ் பாய் இருந்தா தண்ணி கொடுக்க சொல்லுங்களேன்” என்றால், “சாருக்கு சாப்பாடு வாங்க போயிருக்கான்” என்பார்கள் அலுவலக ஊழியர்கள். போன பையன் கேரியரோடு திரும்புவான் என்று எதிர்பார்ப்பவர்கள் பேஸ்த் அடித்துப் போவார்கள். நாலு கேரட், கொஞ்சம் முட்டைகோஸ், கால் கிலோ தக்காளியோடு வருவான் பையன். சாருக்கு அதுதான் மதிய உணவு. மாலை உணவு எல்லாம்!

தசாவதாரம் படம் எத்தனையோ கோடியில் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் இவர்தான் என்பது ஊர் உலகமே அறிந்த விஷயம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஆசியாவின் பெரிய சம்பள நடிகர் ஜாக்கி சான். அப்புறம் மனிஷா கொய்ராலா, தமிழக முதல்வர் கலைஞர் இன்னும் இன்னும்… ஆனால் முக்கியமாக மேடையில் இருக்க வேண்டிய ரவிச்சந்திரன், அங்கு வரவேயில்லை. ஏன்? அதான் சொன்னோமே, பஞ்சமி சதுர்த்தி பிரதர்ஸ்… அவர்கள்தான் காரணம்.

முகம் வெளியே தெரியாத வரைக்கும்தான் உங்களுக்கு யோகம் என்று எந்த ஜோசியனோ சொல்லி வைக்க, கோடம்பாக்கத்தில் எத்தனையோ பேருக்கு முகவரி தருகிற மனுஷர், தன் முகம் மறைத்துக் கிடக்கிறார்.

அதனாலென்ன… காற்றுக்கு முகமா இருக்கிறது?

‘வந்துவிட்டது, தமிழிலும்!’

அருள்செல்வன்

தொலைக்காட்சி இந்தியாவுக்கே வந்திருக்கவில்லை. வானொலியில் கோவை நிலையம் வாரத்துக்கு அரைமணி நேரம் குழந்தைகள் நிகழ்ச்சியும் அரைமணி நேரம் சினிமாப்  பாட்டும் போடும். தினமும் பஜனைப் பாட்டு தவறாமல் போடுவார்கள். டேப் ரெகார்டர் சந்தைக்கு வரவே இன்னும் ஐந்து வருடம் போகவேண்டும்.

‘கிராமத்தில் குழந்தைகள் அப்போது எப்படித்தான் வளர்ந்தீர்களோ… ’,  அரைமணி நேர பவர்கட்டில் ஐந்துமுறை வந்து ‘அப்பா போர் அடிக்கிறது, என்ன செய்யலாம்’ என்று கேட்கும் மகன் வியக்கிறான்.  என்னதான் செய்தோம் நாம் அந்த இருண்டகாலத்தில்?

‘வீடு மட்டும் இல்லைடா, ஊரே எங்களுக்கு ஆடுகளம்’ என்றால் அவனுக்கு நான் என்ன சொல்லவருகிறேன் என்பதே புரிவதில்லை. தீபாவளி என்றால் நாம் மட்டும் வெடிப்பதில்லை, துப்பாக்கியை இடுப்பில் செருகிக்கொண்டு ரோல் கேப் போட்டுக்கொண்டு கிராமத்து சந்துபொந்துகளிலும், குட்டிச்சுவர்களைத் தாண்டிக்குதித்தும், களர்மேடுகளிலும் பன்றி, கழுதை, எருமை,  நாய் என்று விரட்டி விரட்டி சுட்டுத் தீர்ப்போம்.  பன்னாட்டு மால்களில் ஷாப்பிங், அகில இந்திய இனிப்புப் பொட்டலங்கள், தொலைக்காட்சிப் பெட்டியில் நடிகர் பேட்டி என்பது இன்றைய குழந்தைகளின் தீபாவளி.  கொண்டாட்டம் என்றால் பங்குபெறல் என்பது மாறிப்போய், மற்றவர்கள் கொண்டாடுவதாக பாவனை செய்வதைப் பார்ப்பதே கொண்டாட்டம் என்பது நவீன முறை.

கற்கால கிராமக்குழந்தையாக வளர்ந்ததால் வீட்டுப்பாடங்கள், தினமும் படிப்பு என்றெல்லாம் இல்லாமல் நாள்முழுவதும் வெட்டித்தனமாக ஊர்சுற்ற, விளையாட நேரமோநேரம்.    குழந்தைகளுக்கு எழுதக் கற்றுக்கொடுக்கிறார்கள். குழந்தைகள் எழுத்துக்கள் சரியாக வராமல் முட்டைமுட்டையாகப்  போடுகின்றன, பிறகு கிறுக்கத் தொடங்குகின்றன. இந்தக்கட்டத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து எழுத்துக்களைக் கற்றுக்கொடுத்துவிடுகிறோம். கிறுக்கல்களையே தொடரவிட்டால் என்ன ஆகும்? உண்மையில் குழந்தைகளின் கற்பனைத் திறன் வளரத்தான் செய்யும்.

நான் என்றுமே ஒரு கிறுக்கன்தான். சிறுவயதுகளில் சிலேட்டில் எத்தனை எழுதி இருப்பேனோ அத்தனை கிறுக்கியும் இருப்பேன். மூன்றாம் நான்காம் வகுப்பு படிக்கும்போது நோட்டுப் புத்தகங்கள் ஒன்றோ இரண்டோதான். பென்சில் மட்டும்தான். வெறும் சிலேட்டுதான். வீட்டுப்பாடம் எதுவானாலும் சிலேட்டில்தான் செய்யவேண்டும். ஐந்தாம் வகுப்பில் இருந்துதான் முழுவதும் நோட்டுப் புத்தகம் மற்றும் இங்க் பேனா.

சிலேட்டிலேயே நிறைய படங்கள் போட்டு பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்குக் கதை சொல்லிச் சொல்லியே ஆசிரியரிடம் திட்டு வாங்குவேன். எல்லாம் மிருகங்கள் நிறைந்த கதைகள். போலீஸ் திருடன் கதைகள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தேவி பாகவதம் இரண்டு தொகுதிகளில் இருந்த கதைகளைப் படித்துவிட்டேன். அதனால் என்னுடைய கதைகளில் ராட்சதர்கள்  வரத் தொடங்கிவிட்டனர். நண்பர்களை ராட்சசப் படங்களைப் போட்டு பயமுறுத்துவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. பெரிய கண்கள், நீண்ட பற்கள் இதெல்லாம் போட்டால் பயங்கரம் என்று வரைதலின் குறியீடுகள் மெல்ல மெல்லப் புலப்பட்டன.

அப்பா எப்போதும் எதையாவது வரைந்துகொண்டே இருப்பதைப்  பார்த்ததாலோ என்னவோ, எழுதுவது, வரைவது இரண்டும் சிறுவனாக இருக்கும்போதே எனக்கு இயல்பாக வந்துவிட்டது. அது தவிர, வீட்டில் அப்பா பைண்ட் செய்து வைத்திருந்த பழைய ‘ஸ்போர்ட்ஸ் அண்ட்  பாஸ்டைம்’ இதழ்களில் மிக்கி மவுஸ், டோனால்ட் டக் கார்ட்டூன்கள் ஒரு புது உலகத்தையே காட்டின. அதில்லாமல் ஆனந்தவிகடன் சிறுவர் வண்ண மலர் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதிலிருந்த வண்ணப் படங்களைப் பார்த்து  கண்டபடி எல்லாவற்றையும் வரைந்து தள்ள ஆரம்பித்தேன். அதன்பிறகு அடித்தது காமிக்ஸ் அலை. இந்திரஜால்,முத்து காமிக்ஸ்.  இவை குழந்தைகளை முழுதுமாக ஆக்கிரமித்துக்கொண்டன.

நமக்கு எதிராக எப்போதும் சதி செய்துகொண்டிருக்கும் தம்பிகளையும் நண்பர்களையும் கைக்குள் கொண்டுவர ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை போடலாம் என்று ஆரம்பித்தேன். பழைய நோட்டுப்பேப்பர், கோடு போட்டது, போடாதது, நண்பர்கள் கொடுத்த பல ஆண்டு வரலாறு கொண்ட பழுப்பில் ஆயிரம் வண்ணம் கொண்ட பலாளவு காகிதங்கள் எல்லாம் சேர்ந்து சிலபல இதழ்கள் வந்தது ‘பூம்புனல்’.

அதில் ‘பறக்கும் தட்டு மர்மம்’ எனும் முழுநீளச் சித்திரக்கதை எல்லோரையும் கவிழ்த்துவிட்டது. என்னுடைய கடைசித் தம்பி பார்த்தான். தானும் ஒரு பத்திரிகை நடத்துவேன் என்று சொல்லி ஒரு தாளில் ‘வந்துவிட்டது தமிழிலும்’ என்று போட்டு ஒரு பத்திரிக்கை ஆரம்பித்துவிட்டான். ‘என்னடா, பெங்காலி, தெலுங்கு, ஆங்கிலம் என்று பலமொழிகளில் வந்து சக்கைப்போடு போட்ட பத்திரிகையா இது, இப்போ தமிழிலும் வருது…’  என்று பல வருடங்கள் கிண்டல் அடித்தோம். ‘வந்துவிட்டது தமிழிலும்’ – இது அந்தக் கால கிராமச் சிறார்களின் தன்னம்பிக்கையின் எல்லை என்று இப்போது எனக்கு உறைக்கிறது.

கோவையில் பிஎஸ்ஜி டெக்கில் படிக்கும்போது வெள்ளிவிழா கொண்டாட்டங்கள் நடந்தன.  பதினைந்து இருபது அறிவியல் நகைச்சுவை கார்ட்டூன்களை பெரிய ஏ1 தாளில் வரைந்து காட்சியாகவே அமைத்தோம். இது நல்லதா கெட்டதா என்று சந்தேகத்துடன் காட்சிக்கு வந்த ‘பெரியவர்கள்’ குழம்பியது தெரிந்தது. அவற்றை வைத்து நண்பர்கள் நன்றாக ரகளை செய்தார்கள்.

சிறிது சிறிதாக கார்ட்டூன் வெறியேற, கோவை டவுன்ஹால் பக்கத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் ‘Mad’ இதழ்களைப் பொறுக்கினேன். அதற்குப்பிறகு ஒரு (உலக) சினிமாவைக்கூட  ‘இதை எப்படி  ‘மேட்’-ல் திரிப்பார்கள்’ என்று யோசிக்காமல் பார்க்கமுடிவதில்லை. கார்ட்டூன் போட்டால் கூடவே வளர்ந்துவிடும் இந்த காக்காய்ப் பார்வை படு சிக்கலானது. எந்தக் கணத்திலும் வந்து தாக்கும் வாழ்வின் மேம்பட்ட உண்மைத் தரிசனங்களிடமிருந்து நம்மைக் காக்கும் அரண் போன்றது.

மூன்றாம் வருடம் படிக்கும்போது கல்லூரி அறிவியல் சங்கத்துக்கு நான்தான் தலைவன். கார்ட்டூன் போடுவது எப்படி என்று அறிவியல் சங்கத்தில் வகுப்புகள் எடுத்து, ‘பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தாதே’, ‘கோபமாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள்தான் நல்ல மாடல்கள்’ போன்ற அறிவுரைகள் உள்ளடங்கிய ‘டெக்னிக்ஸ்’ புத்தகம் ஒன்றை உருவாக்கி  சிறு புத்தகமாக மாணவர்களுக்குக் கொடுத்தேன்.  எல்லா இடத்திலும் வேண்டாத வேலையை செய்து, பேரும் வாங்குவது எப்படி என்று முறையாகக் கற்றுக்கொண்டேன்.

மின்னணுவியல் பாடங்கள் நிறைந்த இயல்பியல் பேப்பர் 5-ல் எனது பல்கலைத்தேர்வு மதிப்பெண் முழுசாக 100 என்றால் இப்போது நண்பர்கள் நம்பாமல் கேவலமாகப் பார்கிறார்கள். விடைகளுக்கு நடுவில் விளக்கப் படங்களாகப் போடுபவற்றில் சில கார்ட்டூன் அம்சங்களான லைட்டிங், ஷேடிங் போன்றவற்றைப் பயன்படுத்தி பேப்பர் திருத்தும் ஆசிரியரிடமிருந்து அவரே அறியாமல் ‘உருவிய’ மதிப்பெண்கள் இவை என்பது எனக்குத்தான் தெரியும். இப்படி கார்ட்டூன் போடும் பொழுதுபோக்கு என்பது மாணவனாக ‘தொழில்’ முறையில் சாதகமாக இருந்தது.

‘என்னடா எப்பவும் படம் போடுகிறாய், பாட்டுப் பாடுகிறாய், உடம்பை உடம்பை அசைத்து ஆடிக்கொண்டே இருக்கிறாய், இதனால் பைசா புண்ணியம் உண்டா?’ என்று படிக்கும் பசங்களுக்கு அப்பா அம்மா புத்தி சொல்லுமுன் இனியாவது தயக்கத்துடன் யோசியுங்கள். ஒரு இளைஞனின் எந்தத் திறமை அவனுக்கு மதிப்பெண் பெற்றுத்தரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆசிரியர்களுக்கும் அப்பா அம்மாவுக்கும் நிச்சயம் தெரியாது.

பிறகு படிக்க ஒரு ஆகஸ்ட்டில் பெங்களூர் வந்தபிறகு குளிர் பழக ஒரு மாதம் ஆனது. ராகிங் எல்லாம் முடிந்தபிறகு குளிர் விட்டுப்போயிற்று. அப்போதுதான் இந்தியா செயற்கைக் கோள்களை ஏவுவதற்காக  எஸ்.எல்.வி என்ற ராக்கெட்டைப் பறக்கவிட்டுச் சோதனை செய்தது. வங்காள விரிகுடாவில் விழுந்த அந்த ராக்கெட்டினால் மாணவர்களுக்கெல்லாம் பெரும் ஏமாற்றம்தான்.

எங்கள்  மாணவர்கள் நடத்தும் பத்திரிகையாக ‘drag’ என்ற இதழ் மாதாமாதம் வரும். அதன் அட்டையில் ஒரு கார்ட்டூன் போடலாம் என்று கை பரபரத்தது. எங்கள் இன்ஸ்டிட்யூட்டின் குறியீடாக நிற்கும் அந்த நடு மைய வளாகக் கட்டடத்தின் கடிகார கோபுரம் ஒரு ராக்கெட் போலத்தான் இருக்கும். அதுமட்டும் அப்படியே பெயர்ந்து பிய்த்துக்கொண்டு வ.விரிகுடாவுக்கு போவதாக ஒரு கார்ட்டூன் போட்டுத் தர, அதை அச்சும் செய்து வெளியிட்டும் விட்டர்கள். நிறைய பேராசிரியர்களிடமிருந்து ஆமோதிப்பும் சிலரிடமிருந்து ‘என்ன இருந்தாலும் இப்படி ஒரு கொடுமையான எண்ணம் ஒரு முதல் வருட மாணவனுக்கு ஆகாது’ என்ற முணுமுணுப்பும் வந்ததாகச் சொன்னார்கள். ஆனால் அந்த கார்ட்டூன் போட்டதால் பொதுவாக பொறியியல் மாணவர்கள்தவிர அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களும், ‘ஓ அவனா!’ என்று  என்னை அறிந்திருந்தார்கள்.

ஒரு சீனியர் ஆராய்ச்சி மாணவி ஒருநாள் மெஸ்ஸில் என்னைப் பார்த்து ‘நீதானே அருள்? ஒரு உதவி செய்வாயா?’ என்று கேட்டார். அவர்கள் டிபார்ட்மென்டில் (மெஷர் ஜீரோ டிபார்ட்மென்ட்ஸ் என ஒரு கணிதக் கோட்பாட்டை வைத்து  எங்கள் குழு கிண்டல் செய்யும்  உயிரியல் துறையைச் சார்ந்தவர்) ஒரு சிறு பிரசுரம் கொண்டுவருகிறார்களாம். அதற்கு சில அறிவியல் கார்ட்டூன்கள் தரமுடியுமா என்று கேட்டார். தான் ஐடியா கொடுப்பதாகவும் தனக்கு வரையத் தெரியாது என்றும் கூறினார். எனக்கு இது படு கிண்டலாகப்  பட்டது. எனக்கு மற்றவர் ஐடியாவுக்குப் படம் வரையத்தெரியாது என்று சொல்லிவிட்டு  நானே இரவெல்லாம் உட்கார்ந்து நாலைந்து  கார்ட்டூன்கள் போட்டுக்கொடுத்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அந்தத் துறையிலிருந்த சில சீனியர் மாணவிகள் என்னைப்பார்த்து ஒரு மாதிரி சிரித்தார்கள். என்ன விஷயம் எனறு கேட்டால், நான் கொடுத்த கார்ட்டூன்களை மாணவி தன் பெயரில் போட்டு வெளியிட்டுவிட்டார் என்று தெரிந்தது. நான் பொதுவாக கையெழுத்தே போடாமல்தான் வரைவேன்.  அதனால் என்ன பரவாயில்லை என்று வழிந்துகொண்டே சொல்லிவிட்டேன். அதனால் பின்னால் சிலபல சாதகங்கள் இருந்தன என்பது வேறு கதை.

சரி, நமக்குத்தான் அறிவியல் கார்ட்டூன் போட ஆண்டவன் அருள் கொடுத்திருக்கிறானே என்று ஏதோ ஒரு வேகத்தில் அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திவந்த சயன்ஸ் டுடே என்ற பத்திரிகைக்கு சில கார்ட்டூன்களை அனுப்பினேன். அப்போது முகுல் ஷர்மா அதன் எடிட்டராக இருந்தார். அடுத்த மாத இதழிலிலேயே அவை பிரசுரமாயின. ஸ்வாஹிலி மொழியில் மொகல்வானே எனும் சொல்லைச் சேர்த்து சும்மா விளையாட்டாக அருள் மொகொல்வானே என்ற பெயரில் அனுப்ப அவை வெளிவந்தன. ஒரு கார்ட்டூனுக்கு நூறு ரூபாய் என்று பணம் வேறு!

அப்போதுதான் நாகார்ஜுனன் அறிமுகமானார். சென்னையில் இருந்து பின் பெங்களூருக்கு வந்து  டெக்கான் ஹெரால்டு நாளிதழில் பணி செய்துகொண்டிருந்தார். அவர் மூலம் ‘படிகள்’ குழுவினரான தமிழவன், காவ்யா சண்முகசுந்தரம், கிருஷ்ணசுவாமி போன்றோரும் அறிமுகமாயினர். படிகள் இதழ் வெளியிடுவதைப் பற்றிய கூட்டங்கள் நடக்கும்போது ஏழெட்டு பேர் தொடர்ந்து கூடி விவாதிப்பது நடக்கும். தமிழவனின் ஸ்டரக்சுரலிசம் புத்தகத்தை முன்பே படித்திருந்தேன். சமகால மேலைக் கலை இலக்கியக் கோட்பாடுகளை படிகள்தான் முதன்முதலில் தமிழில் தொடர்ச்சியாக வெளிக்கொண்டுவந்தது. குழுவில் அனைவரும் உயர்கல்வி கற்றவர்களாக இருந்ததால் ஒரு அகடமிக் ஸ்லாண்ட் படிகளில் இருந்தது.  ‘இலக்கியவாதிகள்’ கூட்டம்போல அது இல்லை.

மட்டுமல்லாமல் மக்கள் கலை சார்ந்த கோட்பாட்டு விவாதங்களும் நிறைய  நடந்தன. அதற்குமுன் சிறு பத்திரிகை வட்டத்தில் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த சுஜாதாவை நீண்ட பேட்டியின் மூலம் அவரது ஆர்வங்களையும் பரிமாணத்தையும் முதல்முறையாக படிகள் வெளிக்கொணர்ந்தது. சுஜாதாவே தனது சிறந்த பேட்டி அதுதான் என்று  பின்னால் சொன்னார்.

கூடவே எங்கள் இன்ஸ்டிட்யூட்டின் அறிவியல் விவாதக் குழுக்களில் பங்குபெற்றுக் கொண்டிருந்ததால் கோட்பாட்டு வகையில் அறிவியல்-கலை இவற்றின் இணைத்தன்மை என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வியாகப் பட்டது. ஒரு படம் வரைவதற்கும் ஒரு அறிவியல் கோட்பாட்டை வடிப்பதற்கும் அவை மனிதனின் சிந்தனையில் நடைபெறும் நிகழ்வுகள் என்ற அளவில் என்ன இணை அல்லது வெட்டுச் செயல்படிகள் உள்ளன? இதன் பதில் இச்செயல்களுக்குள் வேறுபாடு உள்ளதா என்பதை உட்கொண்டுள்ளது. இதை மெய்யியல் சட்டகத்தில் வைத்துப் பார்த்தால், ஒரு ப்ரிமெச்சூர்  முயற்சியாக  ஆகக்கூடிய எல்லாச்  சாத்தியங்களும் உள்ளன. வடிவியல் எனும் ஃபார்மலிஸம் கலைகளை அணுக முதல்படி.

அதாவது வகைப்படுத்துதல் (classification) என்பது ஒரு புது அறிவியல் துறையின் தர்க்கரீதியான முதல் படி என்பதுபோல கலைகளை கறாராக அணுக வடிவஇயல் கோட்பாடுகள் ஒரு தொடக்கப் படியாக உள்ளன. மேலைக் கோட்பாடுகளின் துறைகடந்த கோட்பாட்டுத் தளங்கள் இப்புள்ளியிலிருந்தே தொடங்குகின்றன. இதுவே அறிவியல்-கலை இருமையை நோக்கிய ஒரு ஒருமைப்பட்ட பார்வையின் தொடக்கமாக இருக்கவேண்டும். இதற்கே இன்னும் நிறைய வேலை செய்யவேண்டும்.

இந்தவகையில் ஓவியர்கள் தங்கள் துறை பற்றிய வடிவஇயல் கருத்துகளை கவனத்தோடு எதை மீறுகிறோம், எதை உடைக்கிறோம் என்ற பிரக்ஞையுடன், பிரகடனங்களுடன் செயல்பட்டார்கள். எனவே ஓவிய/சிற்ப நவ படைப்புகளை கோட்பாட்டுரீதியாக அணுகுவது, பிற கலைகளைவிட சற்றே எளிது. அறிவியலையும் இந்தச் சட்டகத்தூடே பார்க்கலாம். அதைப்பற்றி விரிவாக எழுத சில முயற்சிகள் தேவை.

இதன் முன்னெடுப்பாக 1983/1984-ல் பெங்களூரில் நடந்த ஒரு அகில இந்திய ஓவியக்  கண்காட்சியின் விமரிசனமாக ஒரு கட்டுரையை படிகளில் எழுதினேன். இதன் பிரதி இப்போது என்னிடம் இல்லை. பிகாஷ் பட்டாச்சார்ய முதற்கொண்டு தோட்டா தரணி வரை  அப்போதைய சமகால ஓவியர்கள் பங்கு பெற்ற காட்சி அது. (தோட்டா தரணியின் இரு ஓவியங்களை அவற்றின் சோம்பேறித்தனத்துக்காக விமரிசனம் செய்தது நினைவிருக்கிறது.) அக்கட்டுரையில் இந்தக் கோட்பாட்டுத்  தொடக்கப்புள்ளிகளை கவனமாக்க முயற்சித்தேன். ஆனால் அதைத் தொடரவில்லை.  இன்று முப்பதாண்டுகள் கழித்து, மாறியுள்ள சூழலில், அறிவுத்துறைகளின் வளர்ச்சியில்  பல முனைப்புகளைச் செய்ய சாத்தியம் இருக்கிறது.  அப்போதுதான் தமிழவன் தன்னுடைய முதல்  நாவலான ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’-ஐ எழுதிமுடித்திருந்தார்.

நான் ஒரு கிறுக்குப் பையன் என்று தெரிந்து, இந்த நாவலுக்கு இல்லஸ்டிரேட்  செய் என்று கத்தை பேப்பர்களைக் கொடுத்தார். தமிழின் அன்றைய கட்டத்துக்கு புதுமுயற்சியாகவே அந்த நாவல் இருந்தது. எனக்குப் பிடித்ததாகவும் இருந்தது.  எனக்கு வடிவியல் சார்ந்த ஒரு வாசிப்பும் அந்த நாவலைப்பற்றித் தோன்றியது. அதைப் படங்களாக வரைந்தேன். கூர்ந்து பார்த்தால் தொடக்கத்திலிருந்து முடிவுவரை மெல்லமெல்லச் சிதைவுறும் நாவலின் வடிவத்தை பிரதிபலிக்க சித்திரங்களிலும் நீண்ட அழுத்தக் கோடுகளிலிருந்து உடைந்து சிதறும் சிறுசிறு கோடுகளால் ஆனதுவரை படிப்படியாகக் கோடுகளையும் உருவத்தையும் சிதைத்தே அந்தப் படங்களை வரைந்தேன். யாருக்கும் இதை இதுவரை சொன்னதில்லை.

திராவிட வெற்றுக் கோஷங்களைக் குறிக்க ஒன்றுமில்லாத வெறும் பேச்சு பலூன் முதற்கொண்டு காமிக்ஸ்களின் மொழியும் அந்தச் சித்திரங்களில் உண்டு. அப்போது படித்துக்கொண்டிருந்த ஃபங்ஷனல் அனாலிஸிஸ் கணிதப் புத்தகம் கிழிந்து போய்விட்டது. அதன் துண்டும் ஒரு கொலாஜாக ஒரு சித்திரத்தில் உண்டு.  பெரிய போஸ்டர்களாக நான் வரைந்த சித்திரங்களை நண்பர்கள் ஆட்டையைப் போட்டுவிடுவார்கள். அப்படி ஒன்றை ஒரு நண்பன் எடுத்துக்கொண்டுபோய் அறையில் ஒட்டிவைத்திருந்தான். பார்த்தவர்கள் பதற்றமுற்று, ‘ஈஸ் திஸ் கை ஸ்டில் ஸேன்?’ (படம் வரைந்த ஆசாமி இன்னும் புத்தி சுவாதீனத்துடன் இருக்கிறானா?) என்று கேட்க அவர்களுக்கு, ‘இல்லை, இவன் ஆராய்சி செய்யப்போய்விட்டான்’ என்று கூறியதாக என்னைப் பார்த்தபோது சிரித்தபடி சொன்னான். அதன்பிறகு ஆராய்ச்சியில் புகுந்து, நேரம் அந்தப் பைத்தியக்காரத்தனத்திலேயே போய்விட்டது.

இப்போதெல்லாம் இப்படி பொழுதுபோக்காக வெறும் கம்ப்யூட்டர் மவுஸும் விண்டோஸின் பெயின்ட் செயலியும் கொண்டே போட்ட பல கார்ட்டூன்களை என் வலைப்பூவில் பார்க்கலாம். 600-800 dpi பகுத்திறன் வாய்ந்த சாதாரண மவுஸ்களில் நடுங்காமல் கோடுகள் போடுவது கடினம். முயற்சித்துப் பாருங்கள்.

பள்ளி இறுத் தேர்வு எழுதி முடித்தபின் அப்பா கேட்டார், ‘என்னடா படிக்கப்போறே? முதல் குரூப் எடுத்து அறிவியலா, இல்லை சென்னை காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் ஓவியமா?’

அப்பா முறைப்படி ஓவியம் கற்றவர். அற்புதமான வாட்டர்கலர் ஓவியர். எண்ணைய் வண்ணம் தீட்டலிலும் தேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய வாட்டர்கலர் மேதமை உலகத்தரமானது. ஆனால் அவர் தொழில்முறை ஓவியர் ஆகவில்லை.. காரணங்கள் பல. அவை வேண்டாம்.

நான் அப்போது ஓரளவு ஓவியம் வரைவேன். அதே அளவு அறிவியலும் கற்பேன்.  எனக்கும் ஓவியத்தில் ஆசைதான். ஆனால் அதே அளவு ஆசை அறிவியலிலும் இருந்தது. அறிவியல் முறையாகத்தான் படிக்கவேண்டும், ஓவியம் எப்படியும் கூடவே வரும் என்று அறிவியலைத் தேர்ந்தெடுத்தேன்.

அந்தச் சிறுவனின் முடிவு சரியானதா? அவன் உருப்பட்டானா? இல்லை பின்னாளில் ஏமாற்றங்களைத் தந்ததா?

இந்தத் திடுக்கிடும் வாழ்க்கை வரலாறு என்னுடையது. அதனால் உங்களுக்கில்லை. வேண்டுமானால் டுவிட்டரில் DM செய்தால் 140 எழுத்துகளுக்கு மிகாமல் கதையின் நிகழ்வைத்  தெரிவிக்கிறேன்.

‘கீதையின் வழியே மறுபடி பிறந்தேன்’ – ஜெயமோகன் பேட்டி

தமது அபாரமான சிறுகதைகளுக்காகவும் பிரமிக்கச் செய்யும் நாவல்களுக்காகவும் தடாலடி விமரிசனங்களுக்காகவும் எப்போதும் நினைக்கப்படுபவர், ஜெயமோகன். தமிழ் பேப்பர் தீபாவளி சிறப்பிதழுக்காக அவர் அளித்த பேட்டி இது:

இன்று அதிகம் பாராட்டப்படும், அதிகம் விமரிசிக்கப்படும், அதிகம் தூற்றப்படும் எழுத்தாளராகத் தமிழில் நீங்கள் இருக்கிறீர்கள். சுமார் கால் நூற்றாண்டு காலமாக எழுதிவரும் உங்களுக்கு இந்தக் கட்டம் எம்மாதிரியான உணர்வைத் தருகிறது? எழுத்தில் உங்களுடைய வளர்ச்சியையும் வாசிப்பில் வாசகர்களின் வளர்ச்சியையும் ஒப்பிட முடியுமா?

நான் தமிழில் 1986ல் எழுத ஆரம்பித்தேன். கல்லூரி நாட்களின் எழுத்தை நான் கணக்கில் சேர்க்கவில்லை.  ’அதிகம் விமரிசிக்கப்படும், அதிகம் தூற்றப்படும்’ என்ற சொல்லாட்சியை மிகப்பெரிய அங்கீகாரமாகவே கொள்கிறேன். பாரதி, புதுமைப்பித்தன் முதலிய அத்தனை முதன்மையான படைப்பாளிகளும் தங்கள் வாழ்க்கைக் காலக்கட்டத்தில்  அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

என்னுடைய ஆக்கங்கள், எனக்காகத் தங்கள் கவனத்தை அளிக்கத் தயாராக உள்ள வாசகர்களின் ஆழங்களுடன் உரையாடுகின்றன. அவர்களின் கற்பனைகளில் நான் எனக்கான உலகை உருவாக்குகிறேன். அவ்வாறு உருவாக்குவதற்காக அவர்களின் சொந்த அந்தரங்க உலகை நான் கலைக்கிறேன். உங்களை நிலைகுலையச் செய்யாத நல்ல ஆக்கமே இருக்க முடியாது.

இவ்வாறு வாசகனை ஆசிரியன் சீண்டி நிலைகுலையச் செய்யும்போது அவன் சாதகமாகவும் எதிர்மறையாகவும் வினை புரிகிறான். சிலசமயம் அவன் பெரும் பரவசம் கொள்கிறான். சிலசமயம் தன் சுயத்தை எண்ணி அஞ்சுகிறான். அதைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறான். அதை இழக்கிறோம் என்ற உணர்வேற்படுகையில் எரிச்சலுற்று, அந்த ஆசிரியனுடன் விவாதிக்கவும் அவனை நிராகரிக்கவும் முயல்கிறான். உண்மையில் இரண்டுமே எழுத்தாளனுடனான உரையாடல்கள்தாம். என் நல்ல வாசகர்கள் பலர் என்னை வெறுத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தவர்கள்.

இது தவிர ஒரு தரப்பு உண்டு. அவர்கள் என் வாசகர்கள் அல்ல. நான் உருவாக்கும் விவாதங்களைக் கண்டு காழ்ப்பு கொண்டவர்கள். என் நூல்களை வாசிக்காமல் அபிப்பிராயங்களை மட்டும் பொதுச் சூழலில் இருந்து பெற்று, அதையே சொல்லிக்கொண்டிருப்பவர்கள். நான் அவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை. நான் உரையாடுவது திரளிடம் அல்ல. என்னுடைய வாசகர்கள் என்ற சிறு வட்டத்துடன் மட்டும். பிறர் கண்ணாடிக் கதவுக்கு அப்பால் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். நான் சொல்வது அவர்களுக்குக் கேட்கவில்லை. ஆகவே அவர்கள் சொல்வது எனக்கும் முக்கியமல்ல.

நான் எழுதவந்தபோது, எழுத்து சிறிய சிற்றிதழ்களுக்குள் இருந்தது. 200 பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்கள். நான் அந்த உலகுக்குள் மட்டுமே நிற்கும் மனப்பயிற்சியுடன் எழுத வந்தேன். நான் என் மனைவுக்கு எழுதிய காதல் கடிதத்தில், நான் என் சிறிய வேலை, சிற்றிதழ் எழுத்து என்ற இரு வட்டங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என அவள் கோரக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தேன்.

எண்பதுகளின் இறுதியில் ஐராவதம் மகாதேவன் தினமணி நாளிதழில் தமிழ்மணி என்ற பகுதியை வெளியிட ஆரம்பித்ததும் நிலைமை மாற ஆரம்பித்தது. அதன் பின் இந்தியா டுடே, சுபமங்களா முதலிய நடு இதழ்கள். புத்தகக் கண்காட்சிகள். கடைசியாக இணையம். இன்று எனக்கும் என்னைப்போன்ற பிற எழுத்தாளர்களுக்கும் இருக்கும் புகழ், புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது.

ஆனால் தமிழகத்தின் மக்கள்தொகையை வைத்துப் பார்த்தால் மிகமிகக் குறைவான ஒரு பங்கினரே எதையாவது வாசிக்கிறார்கள். ஒரு சதவீதம் பேர்கூட இல்லை. ஆகவே இங்கே ஒரு அறிவியக்கமே இல்லை. பரப்பியக்கங்கள் மட்டுமே உள்ளன. கேளிக்கைக் கலைகளும் கேளிக்கை இதழியலும் மட்டுமே பரவலாக உள்ளன. எழுத்தாளன் அவை உருவாக்கும் எதிர்மறைச் சூழலுடன் போரிடும் நிலை இன்றும் நீடிக்கிறது.

சிலகாலம் தொழிற்சங்கவாதிகளுடன் பழகிய அனுபவம் குறித்து எழுதியிருக்கிறீர்கள். சில காலம் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்களில் கலந்துகொண்டவர் என்றும் கேள்விப்படுகிறோம். இந்த இருவேறுபட்ட அனுபவங்கள் உங்கள் ஆளுமை உருவாக்கத்தில் நிகழ்த்தியிருக்கக்கூடிய தாக்கத்தை விவரிக்க முடியுமா?

நான் தொலைபேசித்துறை இடதுசாரித் தொழிற்சங்கத்தில் பல பொறுப்புகளில் சமீபகாலம் வரை பணியாற்றியிருக்கிறேன்.  தொழிற்சங்க அரசியலை வைத்துத்தான் பின்தொடரும் நிழலின் குரல் என்ற நாவலை எழுதியிருக்கிறேன். பள்ளி நாட்களில் ஆர் எஸ் எஸ் இயக்கத்துடன் தொடர்பிருந்தது. அதைப் பற்றியும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன்.

குமரி மாவட்டத்தில் அன்று கிறித்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த இடங்களில் இந்துக்கள் மேல் கடுமையான அடக்குமுறையும் கட்டுப்பாடும் இருந்தது. சிறுவனாக இருந்தபோது விபூதி போட்டுக்கொண்டு காப்புக்காடு என்ற ஊரில் நடந்து சென்றமைக்காக நான் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறேன். ஆலயங்களில் மணி அடிப்பது, சங்கூதுவது தடைசெய்யப்பட்டிருந்தது. பெண்கள் கிறித்தவ தெரு தாண்டியபின்னர் பொட்டு வைத்துக்கொள்வார்கள். இது இன்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் சீர்திருத்த கிறித்தவர்களின் மனநிலை இன்றும் இதுவே. இந்த அடக்குமுறைக்கு எதிரான சக்தியாக வந்தது ஆர் எஸ் எஸ். அது என்னைக் கவர்ந்தது.

பின்னர் நான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தைவிட்டு விலகினேன். அது முழுக்க முழுக்க கொள்கை சார்ந்தது. தனிப்பட்ட முறையில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் என்னுடைய மதிப்புக்கும் பிரியத்துக்கும் உரியவர்களாக இருந்தார்கள்.  ஆனால் என்னுடைய ஆன்மிகமும் அரசியலும் அவர்களின் இந்துத்துவ குறுக்கல்வாதத்துக்குள் அடங்குவன அல்ல. நான் மதம் கடந்த ஆன்மிகத்துக்கான தேடலில் இருந்தேன்.

இடதுசாரி தொழிற்சங்க அரசியலுக்குள் அதன் பின்னரே சென்றேன். காசர்கோட்டில் ஐந்து வருடங்கள் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தொழிற்சங்க கம்யூனில் வாழ்ந்தேன். கட்சியிலும் குறைந்த காலம் இருந்தேன். பின்னர் கட்சி ஈடுபாட்டை விட்டு, தொழிற்சங்க அரசியலுடன் நிறுத்திக்கொண்டேன். வலது கம்யூனிஸ்டு கட்சி சார்புள்ள தொழிற்சங்க ஊழியனாக இருதேன். சினிமாவில் ஈடுபடும்வரை.

தர்மபுரி மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சிக் கிளையில் எனக்கு பாவேல் என்று புனைபெயர் அளிக்கப்பட்டது. நான்  அப்போது எழுதிய ஜகன்மித்யை கதையில் ஒரு பிற்போக்கான நம்பூதிரி ஹிட்லரை ஆதரித்துப் பேசுகிறார். அந்த வரிகளை நான் எழுதினேன் என்று என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள், அவை என் வரிகள் அல்ல என்று நான் விளக்கம் அளித்ததை ஏற்காமல் எச்சரிக்கை விடுத்தார்கள். நான் அந்தப் புள்ளியில்தான் ஒன்றை உணர்ந்தேன். எழுத்தாளனுக்கு அரசியல் இருக்கக்கூடாது. இருந்தால் அது அவனது தனிப்பட்ட அரசியலாகவே இருக்கவேண்டும். அவன் திரளில் ஒரு துளியாக இருக்கவே கூடாது.

எந்த அரசியல் அமைப்பிலும் எழுத்தாளன் இருக்கக்கூடாது என நினைக்கிறேன். தன் உறுப்பினர்களின் சிந்தனைக்கு ஓர் எல்லை வகுக்காமல் ஓர் அமைப்பு செயல்பட முடியாது. எல்லையிடப்பட்ட சிந்தனை கொண்டவன் எழுத்தாளனாக இருக்கமுடியாது. தன் எழுத்துக்களுக்காக எழுத்தாளன் எவரிடமும் சமாதானம் சொல்லவேண்டிய நிலையில் இருக்கக் கூடாது. சிலசமயம் அவன் அபத்தமாகக் கூடப் பேசக்கூடும். ஏனென்றால் எழுத்தாளன் உணர்ச்சிகரமானவன், உள்ளுணர்ச்சி சார்ந்து செயல்படக்கூடியவன். அது அவனை அதீதமாகக் கொண்டுசெல்லலாம். குழப்பலாம். அவன் தத்துவ ஞானியோ தலைவனோ அல்ல. மாபெரும் கலைஞர்கள்கூட நடைமுறை அரசியலில் முட்டாள்த்தனமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ஹிட்லரை ஆதரித்த எஸ்ரா பவுண்டைப் போல. ஆனால் அந்த சுதந்தரம் எழுத்தாளனுக்குத் தேவை.

என் ஆளுமை உருவாக்கத்தில் இந்த இரு இயக்கங்களுமே எந்த பாதிப்பையும் செலுத்தவில்லை என்றே நினைக்கிறேன். நான் இவற்றில் இருந்த காலம் மிகக் குறைவு. நான் உள்ளே நுழையாமல் தயங்கிக்கொண்டே இருந்தேன். என்னால் இரண்டிலுமே இணையவும் கலக்கவும் முடியவில்லை.

சித்திரிப்புகளில் உங்களுடைய நுணுக்கம் எப்போதும் வாசகர்களை அசரடிக்கக்கூடியது. உங்கள் முன்னோடிகளாக நீங்கள் குறிப்பிடுவோரைக் காட்டிலும் பல தளங்கள் நகர்ந்து போயிருக்கிறீர்கள். (குறிப்பாகக் காடு, விஷ்ணுபுரம், பல சிறுகதைகள்) எழுதும்போது ஜாக்கிரதை உணர்ச்சி என்பதை எந்தளவு நீங்கள் கைக்கொள்கிறீர்கள்? அல்லது தொழில்நுட்பத் தேர்ச்சியின் தாக்கத்தை எவ்வளவு ஒரு கலைப்படைப்பில் அனுமதிப்பீர்கள்?

சுந்தர ராமசாமி

கலைப் படைப்பு வேறு, தொழில்நுட்பம் வேறு என்ற பிரிவினையை ஏதோ ஒரு பலவீனமான தருணத்தில் சுந்தர ராமசாமி உருவாக்கினார். சுஜாதா போன்ற திறன் மிக்க புனைகதையாளரை இலக்கியவாதியிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட அவர் உருவாக்கிய பிரிவினை இது. பலரது மனத்தில் இந்த இருமை அப்படியே பதிந்துவிட்டது. கலையில் தொழில்நுட்பம் இருக்காது, கலை தொழில்நுட்பத்துக்கு எதிரானது என்று எண்ணிக்கொண்டுவிட்டார்கள். எழுதத் தெரியாதவர்களுக்கான சாக்கு போக்காகவும் ஆகிவிட்டிருக்கிறது இது. கலையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத நிலையில் உருவாக்கப்பட்ட ஒரு ஊகம் மட்டும்தான் இது.

நல்ல கலை என்பது உச்சக்கட்ட தொழில்நுட்பத் தேர்ச்சியில் இருந்தே மேலே செல்லக்கூடியதாக இருக்கும். ஒரு சாதாரண  உருவப்பட ஓவியனைப் பார்த்து அவனுடையது தொழில்நுட்பம் மட்டுமே என்கிறோம். ஆனால் ரெம்பிராண்ட் என்ற மாபெரும் கலைஞன், அவனைவிடப் பல மடங்கு தொழில்நுட்பத் தேர்ச்சி கொண்டவன் என்பதை நாம் உணர்வதில்லை. அவனது கலை அந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே அடையப்பெற்றது.

மொழியிலும் வடிவிலும் உள்ள தொழில்நுட்பம் இல்லாமல் பெரும் கலை சாத்தியமாவதில்லை. நல்ல கலைஞனைப் பொறுத்தவரை அவனது பயிற்சிக் காலத்திலேயே அவன் அந்த பிரச்னைகளை தாண்டிச் சென்றிருப்பான். லால்குடி ஜெயராமன் வயலின் வாசிக்கும்போது வயலின் தொழில் நுட்பமாக அவரது இசை தெரியக்கூடாது என முயல்வாரா என்ன? பத்து வயதுக்குள் அவரது கைகளில் இருந்து வயலின் பற்றிய பிரக்ஞையே இல்லாமலாகிவிட்டிருக்கும். அதன்பின் அவர கற்பனை செய்கிறார், வயலின் அதை வாசிக்கிறது. அவ்வளவுதான்.

நான் என் மொழியை அதேபோலத் தீட்டியிருக்கிறேன். அதற்கு என் நாற்பதாண்டுக் கால வாழ்க்கையைச் செலவிட்டிருக்கிறேன்.  ஒவ்வொரு நாளும் எழுதி வாசித்து வாழ்ந்திருக்கிறேன். இந்த உழைப்பை எங்கு செலவிட்டிருந்தாலும் அது பெரும் செல்வமாக, வெற்றியாகவே ஆகியிருக்கும். இன்று மொழியின், புனைவின் தொழில்நுட்பம் எனக்கு ஒரு பிரச்னையே அல்ல. அதை நான் அறிவதே இல்லை. என் சவால் என்னுடைய ஆன்மிகமான அடுத்தபடி, என்னுடைய கற்பனையின் புதிய சாத்தியம் இரண்டில் மட்டுமே உள்ளது.

தீவிரமாகப் புனைகதைகள் மட்டுமே பலகாலம் எழுதி வந்தீர்கள். திடீரென்று  கதையல்லாத எழுத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள். இது வாசகர்களின் தேவையறிந்த செயல்பாடா? இயல்பாகவே கட்டுரைகள் எழுதுவதில்தான் இப்போது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? உங்கள் நாவல்களைக் காட்டிலும் கட்டுரைகளின் மூலமே அதிக அளவு வாசகர்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றால் ஒப்புக்கொள்வீர்களா?

இந்த பிம்பமே பிழையானது. நான் ஆரம்பம் முதலே கட்டுரைகள் எழுதி வந்தவன். சொல்லப்போனால் நான் கட்டுரைகளை எழுதிக்கொண்டே உள்ளே வந்தேன்.  மாறிமாறி புனைகதைகளையும் கட்டுரைகளையும் கால் நூற்றாண்டாகத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். ரப்பர் என்ற முதல் நாவல் வெளிவந்ததும் உடனே வந்தது, நாவல் என்ற கோட்பாட்டு நூல்தான்.

பிரமிள் ஓரிடத்தில் சொன்னார். நல்ல நாவலாசிரியனுக்குரிய தகுதி ஒன்றுதான், நீண்ட விரிவான கட்டுரைகள் எழுதும் திறன் அவனுக்கிருக்கவேண்டும். [வியாசங்கள் என்கிறார் பிரமிள்] உலகம் முழுக்க நாவலாசிரியர்கள் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்களே. தஸ்தயேவ்ஸ்கி அல்லது தாமஸ் மன் அல்லது கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ்… எந்த உதாரணத்தை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

என்னுடையது ஓர் அடிப்படைத் தேடல். நான் அனைத்தையும் வரலாற்றிலும் தத்துவத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் வைத்துப் பார்க்கும் முழுமை நோக்கை விரும்புகிறேன். இதையே ஆன்மிகம் என்கிறேன். இந்தத் தேடலை கட்டுரை கதை நாவல் என மூன்று தளத்திலும் நிகழ்த்துகிறேன்.

என் கட்டுரைகள் என் நாவல்களுக்கான வழிகளாக உள்ளன. என் பெரிய நாவல்கள் கட்டுரைகளைப்போல எளிதாக வாசிக்க முடியாது. அதற்கான உழைப்பு தேவை. நாவல்கள் நிரந்தரமான கருப்பொருள்கள் கொண்டவை. ஆனால் கட்டுரைகள் அன்றாட விஷயங்களில் இருந்து எழுபவை. ஆகவே கட்டுரைகளுக்கான வாசகர்கள் அதிகம் இருப்பது நியாயமே. ஆனாலும் அடிப்படையில் நான் நாவலாசிரியன். என் கட்டுரைகள் நாவலாசிரியனின் கட்டுரைகளே.

மலையாள, வங்காள மொழி இலக்கியங்களுக்கு உள்ள வாசக எண்ணிக்கையைக் காட்டிலும் தமிழில் குறைவாகவே உள்ளதற்கு அரசியல் காரணங்கள் இருக்க முடியுமா?

பொதுவாக வாசிப்புப் பழக்கம் என்பது மாபெரும் சமூக இயக்கங்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது. வங்கத்திலும் கேரளத்திலும் மார்க்ஸிய இயக்கங்கள் வாசிப்பைப் பெரும் சமூகச் செயல்பாடாக மாற்றின. கர்நாடகத்தில் – சொல்லப்போனால் தெற்கு கர்நாடகத்தில் மட்டும் – சோஷலிச இயக்கம் வாசிப்பை சமூகச் செயல்பாடாக வளர்த்தது. அவ்வியக்கங்களின் தொடர்புமுறையே வாசிப்பாக இருந்தது. அவை பெரும் எழுத்தாளர்களை உருவாக்கின.

தமிழகத்தின் சமூக இயக்கமாக இருந்தது காங்கிரஸ். அக்காலக்கட்டத்தில் இங்கே வாசிப்பலை உருவானது. கலைமகளும் மணிக்கொடியும் ஆனந்தவிகடனும் கல்கியும் அவ்வியக்கத்தின் விளைவுகளே. ந. பிச்சமூர்த்தியும் கல்கியும் அவ்வியக்கத்தின் உருவாக்கங்களே. ஆனால் அதன் பின் உருவாகி ஐம்பதாண்டுக் காலமாகத் தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட இயக்கம் வாசிப்பை மையமாக்கிய இயக்கம் அல்ல. அது மேடையை மையமாக்கிய இயக்கம். அது ஏராளமான பேச்சாளர்களை உருவாக்கியது. எழுத்தாளர்களை உருவாக்கவில்லை.

ஆகவே இங்கே இன்றும் மேடையே முக்கியமான ஊடகம். இன்று தமிழ்நாட்டில் ஒரு சாதாரணப் பேச்சாளர் பெறும் பணமும் புகழும் இலக்கிய மேதைகளுக்குக் கூடக் கிடைப்பதில்லை. நம்முடைய இணைய அரட்டைகளைப் பார்த்தால் நம் இளைய தலைமுறை முழுக்க முழுக்க பேச்சுக்களை கேட்டே சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டிருப்பது தெரியவருகிறது.

இலக்கியத்துக்கு என்றுள்ள குறைவான வாசகர்கள் எண்ணிக்கை, மனச்சோர்வு கொள்ளத்தக்க விஷயமாக  உங்களுக்குத் தோன்றுமா? நீங்கள் வெகுஜன இதழ்களில் எழுத ஆரம்பித்ததும் அதன் தொடர்ச்சியாகத் திரைப்படங்களுக்கு எழுத ஆரம்பித்ததும் இதனால்தானா?

குறைவான வாசகர்கள் என்பது தனிப்பட்ட முறையில் ஒரு சோர்வூட்டும் அம்சமாக  இல்லை. நுட்பமான வாசகர்களே என் இலக்கு. நான் எப்போதுமே எல்லாருக்குமான எழுத்தாளனாக இருக்க முடியாது என அறிவேன். ஆகவே அறிவார்ந்த உழைப்புக்கும் கற்பனைக்கும் தயாராக இல்லாத வாசகர்கள் என்னை வாசிக்க வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

அதேசமயம் தமிழில் வாசிப்பே இல்லாமலிருப்பது, இங்கே ஓர் அறிவியக்கமே நிகழாத நிலையை உருவாக்கிவிட்டிருக்கிறது. ஆகவே இங்கே வாசிப்பு பெருகவேண்டும் என விரும்புகிறேன். பல தளங்களில் காத்திரமான நூல்கள் வந்து விவாதங்கள் நிகழவேண்டுமென ஆசைப்படுகிறேன்.

நான் வணிக இதழ்களில் எழுதியது என் எழுத்தை நோக்கி நல்ல வாசகர்களை ஈர்ப்பதற்காக ஓர் அடையாளத்தை அங்கே விட்டுவைப்பதற்காகவே. அங்கே நல்ல இலக்கியம் படைக்க இன்னும் இடமில்லாமல்தான் இருக்கிறது. ஆனால் இன்று, இணையத்தின் காலக்கட்டத்தில் அது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சினிமாவில் நுழைந்தமைக்கு காரணம் ஒரு சுதந்திரமான தொழில் தேவை என்பதனால் மட்டுமே. இது எனக்கு நல்ல வருமானத்தை, நிறைய ஓய்வு நேரத்தை அளிக்கிறது. வாசிக்க, எழுத, பயணம்செய்ய முடிகிறது. ஒரு தொழிலாக, தரமான படங்களில் என் கதைத் தொழில்நுட்பத்தை அளிக்கிறேன். வாய்ப்பு வந்தால் நல்ல படங்கள் செய்யக்கூடும்.

திரைப்பட எழுத்தின் காரணமாக இனி காடு, விஷ்ணுபுரம் போன்ற நாவல்கள் உங்களிடமிருந்து வர வாய்ப்பில்லாது போகுமா? நீண்ட காலமாக எழுதிவரும் அசோகவனம் வருமா? திரைப்படம் உங்களை விழுங்கிவிட்டதா?

நேர்மாறாக, சென்ற சில வருடங்களில்தான் பெரிய அளவில் படைப்புகள் வந்திருக்கின்றன. சென்ற வருடத்திலேயே பாருங்கள், இன்றைய காந்தி போன்ற பெரிய கட்டுரை நூல். பலவருட உழைப்பு இல்லாமல் பிறிதொருவரால் இம்மாதிரி எழுதமுடியாது. அதற்காகச் செலவிடப்பட்ட உழைப்பும் நேரமும் சாதாரணமல்ல. வேலையில் இருந்திருந்தால் அதை முடிக்க எனக்கு இரு வருடங்கள் ஆகியிருக்கும். நான்கு சிறு நாவல்கள் வந்திருக்கின்றன. அதைத் தவிர இலக்கிய விமர்சனம், பண்பாட்டு விமர்சனம் மற்றும் இந்திய ஞானமரபு சார்ந்து இருபது நூல்கள். இந்த அளவுக்கு எழுதும் வேறெந்த எழுத்தாளர்கள் எந்த மொழியில் இருக்கிறார்கள்? நான் தினமும் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன் என நீங்கள் அறிவீர்கள்.

அசோகவனம் 2500 பக்கம் அச்சில் வரும் நாவல். அதை முடித்துவிட்டேன். அடுத்த வருடம் தமிழினி வெளியீடாக வரும். அசோகவனம் நான்கு வருடங்களாக எழுதப்படுகிறது. விஷ்ணுபுரம் பத்து வருடங்களாக எழுதப்பட்டது என்பதை மறக்கவேண்டாம். அது பெரும் உழைப்பைக் கோரும் மிகப்பெரிய வரலாற்று நாவல்.

பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி வரிசையில் உங்களை வைத்து ஆராதிக்கக் கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் திரைப்படங்களுக்கு எழுதுவதன்மூலம் சாத்தியமாகும் பொருளாதார வசதிகள் குறித்து எழுதுகிறீர்கள். எழுத்தாளருக்கும் பொருளாதார வசதிகள் அவசியமே என்றாலும், இத்தனை காலமாக நீங்கள் உயர்த்திப் பிடித்து வந்த நம்பிக்கைகளையும், விமரிசித்து வந்த அவலங்களையும், கடைப்பிடித்துவந்த மதிப்பீடுகளையும் நீங்களே நிராகரிப்பதாக நினைக்கமாட்டார்களா?

நான் உயர்த்திப்பிடித்த நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றை எந்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றே சொல்வேன். அதை என் இணையத்தளத்திலேயே நீங்கள் காணலாம். நான் சுந்தர ராமசாமியின் பள்ளியில் உருவானவன். அவருக்கு ஆரம்பத்தில் சிற்றிதழ் உலகை புறப்பாதிப்புகள் இல்லாமல் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. வணிக எழுத்தை அவர் முழுமையாக நிராகரித்தார். வணிக எழுத்தின் பொற்காலத்தில் சிற்றிதழ் என்ற மரபு நசித்துவிடாமல் பாதுகாத்த முன்னோடிகளின் பார்வை அது.

ஆரம்பத்தில் அவரது எண்ணங்களே எனக்கும் இருந்தன. ஆனால் பின்னர் ஒடுங்கிக்கொள்வதும் அடங்கியிருப்பதும் தேவையில்லை என்ற எண்ணத்தை அடைந்தேன். சிற்றிதழ்களின் எல்லையை விட்டு இலக்கியம் வெளியே வந்தாகவேண்டும் என தொண்ணூறுகளிலேயே எழுத ஆரம்பித்தேன். அது அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டு மேலே எழவேண்டும் என்று வாதாடினேன். சுந்தர ராமசாமியும் காலப்போக்கில் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார். பொத்திப் பாதுகாப்பது குழந்தைப் பருவத்தில் சரி. இப்போது இலக்கியம் துடிப்பான இளமையை அடைந்து விட்டது.

நான் வணிக இலக்கியத்தை நிராகரிப்பவனல்ல என என் எழுத்துக்களைப் படித்தால் அறியலாம். வணிகக் கலைகளையும் நிராகரிப்பவனல்ல. அவற்றை வணிக எழுத்தாகவும் வணிகக் கலையாகவும் கண்டு அவற்றுக்கான இடத்தை அளித்து ஆராய்வதே என் வழிமுறை. கேளிக்கைக் கலைகள் இல்லாமல் எந்தச் சமூகமும் இல்லை. நான் கேளிக்கை எழுத்தை எழுதுவேனா என்றால் அது என் இலக்கல்ல என்றே சொல்வேன்.

நான் சினிமாவில் ஈடுபடுவது ஒரு சமரசமா என்றால் ஒருவகையில் ஆம் என்றே சொல்வேன். என்னுடைய எழுத்து எதுவோ அதற்கு அங்கே  இன்று இடமில்லை. ஆனால் நான் அதை அங்கே உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் அங்கே மெல்லிதாகவேனும் தென்படுகின்றன. அந்த நம்பிக்கையே அங்கே செயல்படசெய்கிறது. கிட்டத்தட்ட எழுபதுகளில் மலையாளத்தில் இருந்த நிலை – பத்மராஜன் போன்றவர்கள் உள்ளே நுழைந்த சூழல் – இன்று நிலவுகிறது. தமிழ் சினிமாவில் புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும் எல்லாம் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள்.   இன்றுள்ள வாய்ப்புகள் அவர்களுக்கு என்றும் இருந்ததில்லை.

உண்மையில் சினிமா உலகம் இலக்கியத்தின்மீது பெருமதிப்புடன் இருக்கிறதென நீங்கள் அறிவீர்கள். இலக்கியவாதி என்பதே ஒரு பெரிய மணிமுடியாக உள்ளது. ஆனால் இலக்கியத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. இலக்கியவாதியின் பங்களிப்பு வணிகரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அது நிகழலாம்.

ஆனால் ஒன்று. என்னுடைய ஆளுமையையும், ஒழுக்க மதிப்பீடுகளையும் எங்கும் நான் சமரசம் செய்துகொள்ளவில்லை. எங்கும் எழுத்தாளனுக்குரிய தலைநிமிர்வை இழப்பதில்லை.  அதற்கான எந்தக் கட்டாயமும் எனக்கு சினிமாவில் வரவும் இல்லை. இது எனக்குப்பின் சினிமாவுக்கு வரப்போகும் அடுத்த தலைமுறையினருக்காக நான் கொள்ளும் உறுதி.

ஒரு திரைப்படத்தில் நீங்கள் பங்குபெற்றால் அது குறித்த உங்கள் இணையப் பதிவுகள் எல்லாமே விளம்பரங்கள் போல அமைந்துவிடுவது ஏன்? போற்றிப் பாடாமல் திரையுலகத்தில் நீடிக்கமுடியாது என்பது உண்மைதானா?

நான் கடவுள்-படக்காட்சி

நான் இதுவரை பங்குபெற்ற சினிமாக்களில் இரு படங்களைப் பற்றி மட்டுமே செய்தி வெளியிட்டிருக்கிறேன். நான் கடவுள் மற்றும் அங்காடித் தெரு. அப்படங்கள் தமிழில் நல்ல சினிமாவின் வளர்ச்சியின் முக்கியமான படிகள் என்றே நினைக்கிறேன். ஆகவே அவற்றைக் கவனப்படுத்துகிறேன். இவை விளம்பரங்கள் அல்ல. இந்த விளம்பரம் மூலம் அந்த படங்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை.

இவை என்னுடைய ஆக்கங்களும் கூட என்பதனால் எதிர்வினைகளும் விவாதங்களும் நிகழ என் இணையத்தளத்தில் இடமளிக்கிறேன். எப்படி என் இணையத்தளம்  விஷ்ணுபுரம் பற்றிய விவாதத்திற்கு இடமளிக்கிறதோ அப்படி நான் கடவுளுக்கும் இடமளிக்கிறது, அவ்வளவுதான்.

ஆனால் மிருகம் பட இயக்குநர் சாமி குறித்து நீங்கள் எழுதியதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சிந்து சமவெளி, மாமனாரின் இன்பவெறியின் நாகரிகமான மறுபதிப்பு என்று ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களும் தீர்ப்பளித்துவிட்டார்கள். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு திரைப்படம் கூட்டு முயற்சி. அதன் வெற்றி தோல்வியில் அனைவருக்குமே பங்குண்டு. தோல்விக்குப் பின்னர் கருத்துச் சொல்வது அறமில்லாத ஒன்றாகவே கருதப்படும்.  ஆகவே நான் கருத்து சொல்லத் தயங்குகிறேன்.

சிந்துசமவெளி ஒரு தரமான திரை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது. இவான் துர்கனேவின் முதற்காதல் என்ற குறுநாவலை ஒட்டி ஒரு தமிழ் நாவல் வடிவதை எழுதித் தரும்படி சாமி கேட்டார். நான் அதை எழுதி அளித்தேன். அதுவே அதில் என் பங்களிப்பு.

அந்தக் கதையைக் கிட்டத்தட்ட முழுமையாகவே நிராகரித்துத்தான் சிந்து சமவெளி எடுக்கப்பட்டது. ஆகவே அதை நான் என் ஆக்கம் என சொல்லிக்கொள்ளவில்லை. படம் வெளிவரும் முன்னரே இதைத் தெளிவாக்கியிருக்கிறேன். படத்திலும் கதை திரைக்கதை வசனம் என சாமி பெயரே உள்ளது. அது அவரது ஆக்கம். முழுமையாக.

சாமி உத்தேசித்தது எழுபதுகளில் பத்மராஜன், பரதன் எடுத்தவற்றைப் போன்ற ஒரு நியூவேவ் படம். ஆனால் அது கைகூடவில்லை. சினிமாவில் இது சாதாரணம். பல்வேறு திசைகளில் பல்வேறு சக்திகள் இழுக்க படம் உருவாகிறது.  ஒரு கட்டத்தில் அது அனைவர் கையையும் மீறி அதுவே வடிவம் கொள்கிறது. படம் எடுக்கையில் பெருந்திரளின் மனநிலையைப் பற்றிய, வெற்றியைக் குறித்த ஓர் அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அச்சத்தை மீறி படம் உருவாவது ஒரு தற்செயல்போலத்தான்.

சிந்து சமவெளி-படக்காட்சி

கடைசியாக ஒன்று. மாமனாரின் இன்ப வெறி என்ற மலையாளப்படம் ஒரு ’பிட்டு’படம் அல்ல. அது கேரளத்தின் புது யதார்த்தவாதப் படங்களில் ஒன்று. மழு என்பது மூலப்பெயர். மலையாளத்தில் சிறிய யதார்த்தப் படங்கள் எழுபதுகளில் வெளிவந்தன. அவை  பெரிய வணிகப்படங்களைத் தோற்கடித்தன.  அந்த வெற்றியே மலையாளத்தில் நல்ல படங்கள் உருவாக வழியமைத்தது.

இவ்வாறு வந்த புது யதார்த்தப் படங்கள் ஏறத்தாழ அனைத்துமே காமத்தைக் கருப்பொருளாகக் கொண்டவைதான். தகரா, மதனோஸ்தவம்,  ஈற்றா, அவளுடே ராவுகள், ரதி நிர்வேதம், வேனல் போன்ற பல படங்கள். அவை இன்று பெரும் செவ்வியல் படங்களாக கேரள விமர்சகர்களால் கருதப்படுகின்றன. அவை தமிழகத்தில் பிட்டுப் படங்களாக ஓடியவை. இன்றும் அப்படியே பேசப்படுகின்றன அவற்றில் பல படங்களின் கரு, பொருந்தா உறவே. அவற்றை எழுதியவர்கள் பத்மராஜன், ஜான்பால் போன்றவர்கள். இயக்கியவர்கள் பரதன் ,மோகன், ஐவி சசி போன்ற பெரும் இயக்குநர்கள். பல படங்களில் கமல் நடித்திருக்கிறார். அடுத்தக் கட்டத்தில், யதார்த்தம் வேரூன்றிய பின் மேலும் சிக்கலான படங்கள் வந்தன.

சாமியின் முன்னுதாரணம், அவரது யத்தனம் அதுவே என்று என்னிடம் சொன்னார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை அவ்வளவுதான். அவர் சர்வ சாதாரணமான ஒரு  வணிகப்படம் எடுக்க முனையவில்லை. ஒரு முயற்சி செய்தார். அவரது நோக்கம் மதிக்கத்தக்கது என்றே நினைக்கிறேன்.

உங்களைத் தொடர்ந்து பல நல்ல எழுத்தாளர்கள் திரைப்படங்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தக்கூடிய காரணியாக அமையுமா? அல்லது நல்ல எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் தமிழ் சினிமா தன் மதத்துக்கு மாற்றப்போகிற விஷயமா?

கண்டிப்பாக. தமிழில் நல்ல படங்களுக்கான ஒரு தேடல் இருந்துகொண்டிருக்கிறது. நீங்களே பார்க்கலாம். இன்று எந்த உதவி இயக்குநரை எடுத்துக் கொண்டாலும் ஒரு நல்ல படம் எடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறார். நல்ல யதார்த்தக் கதைதான் வைத்திருக்கிறார்.  ஒரு பெரிய வணிக இயக்குநராக ஆகவேண்டும் என்ற கனவுள்ள உதவி இயக்குநர்களைக் கண்டுபிடிப்பதே அரிதாக இருக்கிறது. பலர் பெரும் இலக்கிய வாசகர்கள். தமிழ் சினிமாவின் இத்தனைக்கால வரலாற்றில் இதுபோன்று நிகழ்ந்ததில்லை. இது சினிமாவின் முகத்தை மாற்றக்கூடும்.

உலகமெங்கும் எழுத்தாளர்கள் சினிமாவுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். மலையாளத்தில் ஐம்பதாண்டுக் காலமாக அப்படித்தான். சினிமாவுக்கு எழுதாத இலக்கியவாதியே அங்கே இல்லை. தகழி,  பஷீர் உட்பட. சினிமா அவர்களைத் தங்கள் மதத்துக்கு மாற்றியதா என்ன?

எது குறித்தும் மிகத் தீவிரமான கருத்துகளையே தொடர்ந்து தெரிவித்து வருபவர் நீங்கள். இனி சினிமா குறித்து அவ்வாறு உங்களால் பேச முடியுமா?

உண்மையைச் சொல்லப்போனால் சினிமாவின் வணிகத்தை பாதிக்கும் எந்தக் கருத்தயும் நான் சொல்ல முடியாது. அதைப்பற்றி அதிகம் தெரியவும் தெரியாது. அது இந்த தொழிலுக்குரிய நெறிகளில் ஒன்று. வேறு வழியில்லை. இருபதாண்டுக்காலமாக நான் தொலைபேசித்துறை பற்றி  எதுவும் எழுதியதில்லை. அரசூழியர்களான எழுத்தாளர்கள் அரசைப் பற்றி எழுதுவதில்லை, அதைப்போலத்தான். இன்றியமையாத சமரசம்.

அறுபது, எழுபது, எண்பதுகளில் வந்ததுபோல் தொண்ணூறுகளுக்குப் பிறகு  ஒரு நல்ல எழுத்துத் தலைமுறை தமிழில் உருவாகாதிருப்பதன் காரணம்என்னவாயிருக்கலாம்? ஒருவேளை அப்படியொரு தலைமுறை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

தொண்ணூறுகளுக்குப் பின்னரும் பல நல்ல படைப்பாளிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நானே நிறைய எழுதியிருக்கிறேன். சு வெங்கடேசன், ஜோ டி குரூஸ், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், அழகியபெரியவன், சோ.தருமன், இமையம் எனப் பலர் தங்கள் இருப்பை நிறுவியிருக்கிறார்களே.

இன்று புதியதாக வந்திருப்பவர்களில் எதிர்காலச் சாதனையாளர்கள் பலர் உண்டு. பா. திருச்செந்தாழை, எஸ்.செந்தில்குமார், என்.ஸ்ரீராம், கீரனூர் ஜாகிர் ராஜா, உமா மகேஸ்வரி, என்று பலரைச் சொல்லலாம். இவர்களை அறிமுகம் செய்து விரிவாக எழுதலாமெனத் தோன்றுகிறது. தமிழின் இலக்கியம் ஒரு அறுபடாத மரபு.

கவிதைக்கான முகாமெல்லாம் நடத்துகிறீர்கள். கவிதைகள் குறித்து நிறையப் பேசுகிறீர்கள். நீங்கள் கவிதை எழுதுவதுண்டா? ரகசியமாகவாவது முயற்சி செய்திருக்கிறீர்களா?

ஆரம்பத்தில் எழுதியிருக்கிறேன். என் நாவல்களில் உள்ள கவிதைகள் நான் எழுதியவை. கவிதை என் ஊடகமல்ல. நான் சொற்களை நம்பி இயங்குபவனல்ல. அகப் படிமங்களை நம்பி இயங்குபவன். நான் உயர்ந்த கவித்துவங்களை என் ஆக்கங்களில் தொட்டிருக்கிறேன். நேரடியான கவிதையை நான் முயல்வதில்லை.

நிறைய எழுதுகிறீர்கள். உங்கள் சுறுசுறுப்பு எப்போதும் மற்ற எழுத்தாளர்களைப் பொறாமை கொள்ள வைப்பது. எப்போது நினைத்தாலும் எழுதக்கூடிய அளவுக்கு உற்சாகமான மனநிலையைத் தொடர்ந்து தக்கவைக்க நீங்கள் கடைப்பிடிக்கும் உத்தி எது?

கீதை. அதன் வழியாக நான் மறுபடி பிறந்து வந்தேன். நான் என் இறுதிக் கணத்தில்கூட புன்னகையுடன் கண்மூடுவேன்.

சுந்தர ராமசாமி, சுஜாதா போன்றவர்களைக் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் உயர்த்திக் கொண்டாடிய உங்கள் எழுத்து, சடாரென்று திட்டமிட்டுத் தாக்குவது போன்ற தோற்றத்தைக் கொடுப்பதும் எதனால்? உங்களது விமரிசனப் பார்வையை உங்கள் வாசகர்கள் சரியாகப் புரிந்துகொள்கிறார்களா? உங்களது இலக்கிய விமரிசனங்கள் உங்கள் சுய முரண்பாட்டின் வெளிப்பாடுகளாகப் பல சமயம் புரிந்துகொள்ளப்படுவதை நீங்கள் அறிவீர்களா?

என்னுடைய விமர்சனங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு வாசிக்காமல் அபிப்பிராயங்களாக மட்டுமே எடுத்துக்கொள்வதன் விளைவே இந்தப் புரிதல். இப்படிச் சொல்பவர்கள் கட்டுரைகளை வாசித்து ஆதாரம் காட்டிப் பேசவேண்டும். அதுவே பயனுள்ள வழிமுறை.

1994 ல் சுந்தர ராமசாமிக்கு அறுபது வயதானபோது நான் வெளியிட்ட மலரில் அவரைப்பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பாருங்கள். அதில் உள்ள அதே விமர்சன அணுகுமுறையையே நான் கடைசிவரை பலபடிகளில் மேம்படுத்தி முன்னெடுத்திருக்கிறேன். 2004ல் வெளிவந்த நவீனத்துவத்தின் முகங்கள் நூலிலுள்ள சுந்தர ராமசாமி பற்றிய விமர்சனக்  கட்டுரையை அதனுடன் ஒப்பிட்டால் அது தெளிவாகும்.

1992ல் வெளிவந்த என்னுடைய திசைகளின் நடுவில் நூலில் உள்ள சுஜாதா பற்றிய கோணத்தையே இன்றுவரை பல்வேறு அடிப்படையில் வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.

என்னுடையது தீர்ப்பு அல்ல.  விமர்சன அணுகுமுறை. அதில் வளர்ச்சிப் போக்கு இருக்கும். அதற்கான காரண காரியங்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அந்த காரண காரியங்களை எவரும் பரிசீலிக்கலாம். விவாதிக்கலாம். அந்த விவாதம் மூலம் அவர்களின் பார்வை அகலமாகும். இலக்கிய விமர்சனத்தின் பயன் அதுவே. தலைகீழான பல்டிகள் இருக்காது.

உங்களுடைய சக / சமகாலத் திரைப்பட வசனகர்த்தா கலைஞரின் வசனங்கள் பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்ன?

வசனம் சினிமாவின் இன்றியமையாத பகுதியாக இருந்த காலக்கட்டத்தைச் சேர்ந்தவர் அவர். இயக்குநருக்கு இணையான இடத்தில் வசனகர்த்தா இருந்த பொற்காலத்தைச் சேர்ந்தவர். அக்காலக்கட்டத்தின் தேவைக்கேற்ப நாடகத்தன்மையும், விளக்கும் தன்மையும் கொண்ட வசனங்களை வெற்றிகரமாக எழுதியிருக்கிறார். இன்றைய சினிமாவில் வசனத்துக்குப் பெரிய இடம் இல்லை.

பேட்டி: தமிழ் பேப்பர் குழு

ரிலீஸ் குறிப்புகள்

சினிமா ரசிகர்களுக்கு ஒரு பத்து வருடங்களுக்கு முன் தீபாவளி, என்றால் உடனே அன்று வெளியாகும் திரைப்படங்கள்தான் ஞாபகம் வரும். குறைந்தது எட்டு படங்களாவது அன்றைக்கு ரிலீசாகும். ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து நான்கைந்து வருவதே பெரிது என்றாகிவிட்டதற்கு மிக முக்கியக் காரணம் இப்போதெல்லாம் ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

இம்முறை தீபாவளிக்குப் பெரிய நடிகர்களான கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று யாருமில்லாததால் நிறைய பேர் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தும் கடைசியில் நான்கு படங்களே வெளியாகின்றன.

உத்தமபுத்திரன்

தனுஷ், ஜெனிலியா, விவேக், பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், அம்பிகா, மயில்சாமி என்று இருபதுக்கும் மேற்பட்ட நடிகர்கள் குழுமியிருக்கும் படம். ரீமேக் இயக்குனரான ஜவஹரின் மூன்றாவது ரீமேக்.

தெலுங்கின் கமர்ஷியல் ஹிட் டைரக்டரான ஸ்ரீனி வைத்தாலா இயக்கி ராம் நடித்து வெற்றி பெற்ற ரெடி படத்தின் ரீமேக் தான் இந்த உத்தமபுத்திரன். தெலுங்கு ஜெனிலியா மட்டும் தமிழிலும் தொடர்கிறார். தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட்.. ஆனால் தமிழில் விஜய் ஆண்டனியின் இசையில்  இதுவரை அப்படியேதும் தெரியவில்லை.

ஒரு ஜாயிண்ட் பேமிலி குடும்பத்திலிருந்து வரும் தனுஷ் தன் நண்பன் ஒருவனுக்குத் திருட்டுக் கல்யாணம் செய்து வைப்பதன்பொருட்டு அப்பெண்ணை கடத்துகிறார். அது ஆள் மாறி விட.. அதனால் ஏற்படும் குழப்பங்களும், கடத்தப்பட்ட பெண்ணான ஜெனிலியாவுடனான காதலும், ஜெனிலியா தனுஷ் காதலைப் பிரிக்க ஒரு புறமும், ஜெனிலியாவை அவரது நூறு கோடி சொத்துக்காகத் திருமணம் செய்யும் திட்டம் மறுபுறமுமாக போட்டி போடும் இரண்டு கும்பலைப் பற்றிய கதை.

பட்ஜெட் சுமார் 12 கோடி.

மைனா

ஒரு சின்ன படம் பெரிய ஆட்களின் கைகளில் சிக்கியதால் பெரிய படமாகிவிட்டது. சிறு வயது முதலே அன்பும் காதலுமாய் வளரும் அனகா, வித்யார்த்துக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவத்தால் பிரிய நேரிடுகிறது. பின்பு என்ன என்பதை பதைக்கப் பதைக்க சொல்லியிருக்கிறார்கள் என்று படத்தை வாங்கிய ஏ.ஜி.எஸ் நிறுவனத்தாரும், விநியோகிக்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸாரும் சொல்கிறார்கள்.

லாடம் படத்தின் தோல்விக்குப் பிறகு பீனிக்ஸ் பறவையாய் எழ பிரபு சாலமன் முயற்சித்திருக்கும் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. டி. இமானின் இசையில் ஏற்கெனவே ஒரு பாடல் ஹிட். இன்னும் மற்ற பாடல்கள் படத்தோடு பார்க்கும் போது சரியான இம்பாக்டைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அவுட்டோர் யூனிட்டையே பெரும்பாலும் பயன்படுத்தாமல், கிடைக்கும் வெளிச்சத்திலேயே படம்பிடித்திருக்கிறாரகள். ஒரு குட்டி ஆச்சர்யம் என்னவென்றால் இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விஜய் டிவி வாங்கியிருப்பதுதான். மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல விலைக்கு வாங்கப்பட்டிருக்கும் படம்.

பட்ஜெட் : சுமார் ஒன்றரைக் கோடி

வ – குவாட்டர் கட்டிங்

தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் படம். அதற்குக் காரணம் தமிழ் படம் ஹிட் கொடுத்த கூட்டணியான தயாநிதி அழகிரியின் க்ளவூட் நைன், சிவா, தயாரிப்பாளர் சசிகாந்தும், இப்படத்தின் ட்ரைலரும்தான். வழக்கமாய் அண்ணன் தம்பிகளிடையே பேசி வைத்துக் கொண்டு மூன்று வாரத்துக்கு ஒரு முறை ரிலீஸ் செய்வார்கள். இம்முறை இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட்டிருப்பது ஒரு அதிசயம்தான். குவாட்டர் கட்டிங் என்கிற ஆங்கிலப் பெயர் வைத்தால் வரி விலக்கு கிடைக்காது என்பதற்காக சம்மந்தமேயில்லாமல் “வ” என்று வைத்திருப்பது வரிவிலக்கை கேலி செய்வதா? இல்லை விலக்கு கொடுத்த அரசை கேலி செய்வதா? என்று யோசிக்க வைத்திருக்கிறது.

சிவா, எஸ்.பி.பி.சரண், வேகா, என்ற கலாய்க்கும் கூட்டணியுடன், எழுதி இயக்கியிருப்பவர்கள் தம்பதி சமேதரான புஷ்கர் – காயத்ரி.

பட்ஜெட் சுமார் : 2 1/2 கோடி.

வல்லக்கோட்டை

படம் ஓடுகிறதோ இல்லையோ, மூணு மாசத்திற்கு ஒரு படம் என்று ஏ. வெங்கடேஷ் ரிலீஸ் செய்துகொண்டுதானிருக்கிறார். அந்த லிஸ்டில் இம்முறை அர்ஜுனுடன் சேர்ந்திருக்கிறார். வழக்கமான ஆக்‌ஷன் ப்ளாக் கதைதான். தீடீர் என நட்பாகிப் போன ஒருவரின் குடும்பம் பெரிய பிரச்னையில் இருக்க, நண்பருக்கு பதிலாக இவர் அக்குடும்பத்திற்குப் போய் எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் கதை என்று சொல்கிறார்கள்.

மகேஷ்பாபுவின் அதடுவின் பாதிப்பு இருக்கிற கதையாகத்தான் தெரிகிறது.

அர்ஜுன், ஹரிப்பிரியா, வின்செண்ட் அசோகன், சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை தினா, திரைக்கதை இயக்கம் ஏ.வெங்கடேஷ்.

பட்ஜெட் : சுமார் ஐந்து கோடி

சித்திரப்பூவே போன்ற ஒன்றிரண்டு படங்களும் இன்று வெளியாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தியேட்டர் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் பாடாவதி தியேட்டர்கள்தான் அகப்படும். ஊரெங்கும் எந்திரன் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் படத்தின் செலவோடு செலவாக ஊருக்கொரு டெம்ப்ரவரி டெண்ட் கொட்டாய்கள் ஆரம்பிப்பதுதான் இனி வரும் காலத்தில் படங்கள் ஓட ஒரே வழி என்று தோன்றுகிறது.

தோழர்

புதிய தொடர் – அத்தியாயம் 1

பிரடரிக் எங்கெல்ஸ்

இயந்திரங்களுக்கு வியர்ப்பதில்லை. அவை ஓயாமல் பணியாற்றுகின்றன.  இயந்திரங்களுக்கு ஊதியம் கொடுக்கவேண்டியதில்லை. இயந்திரங்கள் மனிதர்களின் விரோதிகள்.  இயந்திரங்கள் மனிதர்களின் வேலைகளைப் பறித்து, அவர்களைப் பசியில் தள்ளி, கொல்கின்றன. நூற்றுக் கணக்கானவர்கள் பணியாற்றிய இந்தத் தொழிற்சாலையில் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களும் விரைவில் துரத்தப்பட்டுவிடலாம்.  நம் கண் முன்னால் நண்பர்களை, அவர்கள் குடும்பங்களை இயந்திரங்கள் சாகடித்திருக்கின்றன.  என்ன செய்யலாம்?

இயந்திரங்கள் தொடுத்திருக்கும் இந்தப் போரை நிராயுதபாணியாக எதிர்கொள்வது சாத்தியமில்லை. எனவே, அழித்துவிடலாம்.  தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.  தாக்குதலுக்கு எதிர் தாக்குதலே தீர்வு.  அழிவுக்கு அழிவே பதில்.  1811-ம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம்ஷயர், லங்காஷயர், யார்க்‌ஷயர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் துணி ஆலைகளில் ஒன்று கூடினர்.  ஆவேசத்துடன் இயந்திரங்களைத் தாக்க ஆரம்பித்தனர்.  வியர்க்காத, உழைக்காத, ஊதியம் கேட்காத இயந்திரங்களுக்குத் திருப்பித் தாக்கவும் தற்காத்துக்கொள்ளவும் தெரியவில்லை. உடைந்து நொறுங்கின. இனி விடியல் என்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.

இவர்கள் லுட்டைட்டுகள் (Luddities) என்று அழைக்கப்பட்டனர். நெட் லுட் (Ned Lud) என்பவரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதால் இந்தப் பெயர்.  கேப்டன் லுட், ஜெனரல் லுட் அல்லது கிங் லுட் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இந்த நெட் லுட், அடிப்படையில் ஒரு நெசவாளி.  நெட் லுட் பணியாற்றி வந்த ஆலையின் முதலாளி, ஒரு சமயம் அவரை சாட்டை கொண்டு அடித்துவிட்டார். லுட் வேலை செய்யாமல் சும்மா இருந்ததால் இந்தத் தண்டனை.  வெறுப்பும் கோபமும் கொண்ட லுட், ஸ்டாக்கிங் ஃபிரேம் என்று அழைக்கப்பட்ட நெசவாலை இயந்திரத்தை உடைத்துச் சேதப்படுத்தினார்.

1779 வாக்கில் இந்தச் சம்பவம், ஒரு சாதாரண நெசவாளியாக இருந்த நெட் லுட்டை, தொழிலாளர்களின் கதாநாயனாக உயர்த்தியது.  முதலாளியின் தண்டனைக்குப் பயந்து பணிந்துபோகாமல், துணிச்சலும் சுயமரியாதையும் கொண்டு நெட் லுட் தொடுத்த பதில் தாக்குதல் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  இன்னொரு பாடத்தையும் அவர்கள் இந்தச் சம்பவத்தில் இருந்து கற்றுக்கொண்டனர்.  முதலாளிகளுக்குப் பலம் கொடுக்கும் சக்தி எது?  நெட் லுட்டை எந்தத் தைரியத்தில் அவர் சாட்டையால் அடித்தார்? இயந்திரங்கள் கொடுத்த துணிச்சல்தானே?  எனவேதான், லுட் இயந்திரங்களைத் தாக்கினார்.  இந்த உண்மை புரிந்தபோது, நெட் லுட் ஆதர்சத் தலைவராக உருவெடுத்தார்.

இங்கிலாந்தில் உள்ள லெஸ்டர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நெட் லுட் இருக்கிறார் என்று அப்போது சொல்லி வந்தார்கள்.  நெட் லுட்டைப் பார்த்தவர்கள் யாருமில்லை.   ஆனால், அவரைப் பற்றிய செய்திகள் உலாவிக்கொண்டிருந்தன.  அவரது சாகசங்கள் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டன.  அவரைப் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றப்பட்டன. நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.   உண்மையில், நெட் லுட் என்று யாருமில்லை.  அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்.  ஆனால், நெட் லுட்டைத் தங்கள் தலைவராக ஏற்று அவர் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் உயிர்த்திருக்கும் ஒரு போராளி.

நெட் லுட்

1811-ம் ஆண்டு நெசவாலை இயந்திரங்களை உடைத்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய தொழிலாளர்கள் லுட்டின் வழி வந்தவர்கள்.  லுட் போலவே இவர்கள் இயந்திரங்களை நொறுக்குவதன் மூலம், முதலாளிகளை எதிர்த்தவர்கள்.  லுட்டின் அணுகுமுறை, தொழிலாளர்கள் மத்தியில் சிறிது காலம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது. பிரிட்டனில் பல தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன.  நாளடைவில், இந்த இயக்கம் அடக்கப்பட்டது. லுட்டைட்டுகள் ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். பலர், தூக்கில் இடப்பட்டனர். உடைபட்ட இயந்திரங்கள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டன.  உணவு இடைவேளையின்போது மட்டும் நெட் லுட் அவர்களிடம் தோன்றினார்.  நம்பிக்கையூட்டினார்.  தைரியம் அளித்தார்.  தொழிற்சாலை மணி அடித்ததும் அவர் விடைபெற்றுக்கொண்டார்.  இயந்திரங்கள் தொழிலாளர்களை இயக்க ஆரம்பித்தன.

1780-ம் ஆண்டு தொடங்கி பிரிட்டன் தனித்துவமாக மின்னத் தொடங்கியதற்குக் காரணம், இயந்திரமயமாக்கல். பிரிட்டிஷ் வர்த்தகர்கள் இயந்திர உற்பத்தியில் அதிக முதலீடு செய்தனர். வெப்பத்தாலும் நீராலும் இயங்கக்கூடிய பெரும் இயந்திரங்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டன. விவசாயம், உற்பத்தி, சுரங்கம், போக்குவரத்து, தொழில்நுட்பம் என்று அனைத்துத் துறைகளிலும் இயந்திரங்கள் நுழைந்தன. சமூக, அரசியல் வாழ்வில் இயந்திரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பிரிட்டனில், பஞ்சு உற்பத்தி 1785-ம் ஆண்டுக்கும் 1850-ம் ஆண்டுக்கும் இடையில் 50 மடங்கு அதிகரித்தது. இரும்பு, எஃகு ஆலைகள் பெருகின. புதிய கண்டுபிடிப்புகளும் வர்த்தக முறைகளும் உருவாயின. தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தியும் அதன் மூலம் லாபமும் பெருகியது. இயந்திரமயமாக்கல் ஒரு புதிய அரசியல், சமூக மற்றும் வர்த்தக சித்தாந்தத்தை முன்மொழிந்தது. வர்த்தகம் செய்ய முன்வருபவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும். எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு விதிக்கக்கூடாது. எந்தவிதமான குறுக்கீடும் கூடாது. முதலாளிகளை சுதந்தரமாக இருக்கவிட்டால் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள். புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிப்பார்கள். தொழில்மயமாக்கலைத் துரிதப்படுத்துவார்கள். லாபத்தைப் பெருக்குவார்கள். நாட்டின் வருவாயை உயர்த்துவார்கள். இந்தப் புதிய சித்தாந்தத்தை பிரிட்டனும் பிரிட்டனைத் தொடர்ந்து பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருந்த அதே சமயம் அபரிமிதமான ஏழைமையும் உருவாகிக்கொண்டிருந்தது. உற்பத்திக் கருவிகளைச் சொந்தமாக வைத்திருந்த முதலாளிகள் செழிப்படைந்து கொண்டிருந்த அதே சமயம், இந்த ஆலைகளில் பணியாற்றிக்கொண்டிருந்த கடைநிலை ஊழியர்கள் வறுமையில் சிக்கித் தவித்தனர். தொழிலாளர்கள் அதிக நேரம் பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்கள் பணிச்சூழல் அசுத்தமானதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது. உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே உணவு சமைக்கலாம். அதற்குத் தேவைப்படும் கூலி மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொழில்துறை நகரமாகத் திகழ்ந்த வடக்கு பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரம், தொழிலாளர்களின் நரகமாகவும் திகழ்ந்தது.

நிலக்கரிச் சுரங்கங்களில் குழந்தைகள் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டனர். கரி நிரப்பப்பட்ட வண்டிகளை இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு விலங்குகளைப் போல் இழுத்துச்சென்றனர். பணிக்கு இடையில் அவர்கள் காயமுற்றாலோ இறந்துபோனாலோ ஆலை முதலாளிகள் வருந்துவதில்லை. அவர்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய குழந்தைகளைத் தருவித்துக்கொண்டனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் அனைவரும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக, காலை முதல் இரவு வரை பணியாற்றினால்கூட அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச வருமானம் கிடைக்கவில்லை.

தொழிற்சங்கங்கள் அமைத்துக்கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஓரணியில் திரள்வதும் விவாதித்துக்கொள்வதும் கண்டிக்கப்பட்டது. இயந்திரங்களை எப்படி வெற்றிகொள்வது? தொழிலாளர்கள் திகைத்து நின்றனர். உடல் உழைப்பு அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. சமூக வாழ்வின் சவால்கள் அவர்களை மிரட்சிகொள்ள வைத்தது. எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்து தூக்கியெறியப்படலாம், கிடைத்துவரும் கூலியும் நின்றுபோகலாம் என்னும் யதார்த்தம் அவர்களை அச்சுறுத்தியது.

மாற்று தேடி பலர் மதத்திடம் தஞ்சம் புகுந்தனர். மார்க்சிய சிந்தனையாளரான ஜார்ஜ் தாம்சன் தொழிலாளர்களின் இந்தக் கையறு நிலையை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: ‘நாகரிக மனிதனுக்கு இருக்கும் பலவீனத்தின் வெளிப்பாடு மதம் ஆகும். இயற்கையைப் புரிந்துகொள்ளவும் வெல்லவும் முடியாத ஆதிகால மனிதன் மாய வித்தையின் ஆதரவை நாடியதுபோல், வர்க்க சமுதாயத்தைப் புரிந்துகொள்ளமுடியாத நாகரிக மனிதன், சமயத்தின் துணையை நாடுகிறான்.’

மதம் அவர்களை அமைதிப்படுத்தியது. இந்த உலகில் இல்லாவிட்டாலும் மேலுலகில் நிச்சயம் பொற்காலம் உண்டு என்று அவர்கள் காத்திருந்தனர்.

மதம் என்னும் அமைப்பு முதலாளிகளுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. தொழிலாளர்களின் விரக்தியையும் மன உளைச்சலையும் ஏக்கத்தையும், மிக முக்கியமாக, கோபத்தையும் மதம் நீர்த்துபோகச்செய்தது. மதம் ஒரு பக்கம் சேவையாற்றிக்கொண்டிருந்த அதே சமயம், முதலாளிகள் சில சீர்திருத்தங்களை அமல்படுத்தினர். தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதைத் தடை செய்யும் சட்டங்களை 1800-களில் பல ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்தன. (அமெரிக்கா, இதற்கு விதிவிலக்காக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட நியூ யார்க்கில் பதினாறு மணி நேரங்கள் குழந்தைகள் கடும் வேலை செய்துவந்தனர்.)

இயந்திரமயமாக்கலையும் முதலாளித்துவத்தின் அடக்குமுறையையும் எதிர்கொள்ள சோஷலிசமே சரியான பாதை என்றார் ராபர்ட் ஓவன்.  பிரிட்டன் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சோஷலிச சிந்தனையாளராக ராபர்ட் ஓவன் அறியப்பட்டிருந்தார். ஒரு துணி ஆலையில் உதவியாளராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த ராபர்ட் ஓவன், பருத்தி ஆலை ஒன்றின் உரிமையாளராக உயர்ந்தார். இதுநாள் வரை முதலாளிகள் நடத்தி வந்ததைப்போன்று இல்லாமல், ஒரு புதிய தொழிற்சாலையை இவர் நிர்மாணிக்க விரும்பினார். இதுநாள்வரை உலகம் கண்டிராத, தொழிலாளர்களைக் கசக்கிப் பிழியாத, அவர்களை அடிமைப்படுத்தாத ஓர் ஆலையை இவர் வடிவமைக்க விரும்பினார்.

ஸ்காட்லாந்தில் உள்ள நியூ லானார்க் என்னும் இடத்தில், ஓவன் ஓர் இயந்திரக் குடியிருப்பை வடிவமைத்தார். இங்கே இரண்டாயிரம் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டனர். சுத்தமான, சுகாதாரமான வாழ்விடமாக அது இருக்கும்படிப் பார்த்துக்கொண்டார்.

இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்யவேண்டிய அவசியம் தொழிலாளர்களுக்கு இங்கே இல்லை. ஆலைக்கும் குடியிருப்புக்கும் அருகே இசை அரங்கமும் நாடக அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன. 1825-ம் ஆண்டு, இன்னமும் மேம்படுத்தப்பட்ட ஒரு சமுதாயக்கூடத்தை இண்டியானாவில் உள்ள நியூ ஹார்மனியில் உருவாக்கினார் ஓவன். எதிர்காலத்தில் அமையவிருக்கும் சமத்துவ சமுதாயத்துக்கு இது முன்மாதிரியாகத் திகழும் என்று ஓவன் நம்பினார்.

ராபர்ட் ஓவனைப் போலவே பிரான்சில் உள்ள சார்லஸ் ஃபூரியயேவும் பல சமத்துவக்கூடங்களை நிறுவினார். தொழிற்சாலையோடு சேர்த்து தொழிலாளர்கள் வசிப்பதற்கான வாழ்விடங்களையும் இவை கொண்டிருந்தன. அரசாங்கங்கள் போதுமான நிலத்தையும் சுதந்தரத்தையும் அளித்திருந்ததால், இப்படிப்பட்ட சமத்துவக் கூடங்களை அமைப்பது எளிதாகவே இருந்தது. ஓவன், ஃபூரியே போன்றவர்களின் சோஷலிச முயற்சிகள் தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தன. ஆனால், இந்த முயற்சிகளைப் பிற முதலாளிகள் கண்டுகொள்ளவில்லை. ஓவன் எதிர்பார்த்ததைப்போல் முதலாளிகள் இவற்றை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. முதலாளிகள் மனம் மாறி தொழிலாளர்களுக்கு நல்ல பணிச்சூழலையும் நல்ல கூலியையும் வழங்குவார்கள் என்னும் ஓவனின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. நம் தலைவிதியை யாராலும் மாற்றமுடியாது என்று நொந்துகொண்டார்கள் தொழிலாளர்கள்.

பிரிட்டனின் தொழில் வளர்ச்சியைக் கண்டு ஐரோப்பிய நாடுகள் இயந்திரமயமாக்கலை தங்கள் நாடுகளிலும் அமல்படுத்த ஆரம்பித்தன.  பிரிட்டனுக்கு அடுத்தபடியாக, (விரைவில்) பிரிட்டனுக்கே போட்டி போடும் அளவுக்கு தொழில் வளம் கொண்ட சாம்ராஜ்ஜியமாக பிரஷ்யா (ஜெர்மனி என்ற நாடு பின்னர் உதயமாகும்போது அதில் பிரஷ்யாவையும் உள்ளடக்கும்…) உயர்ந்தது.  ஜெர்மனியின் வளர்ச்சி முதலில் தென்பட்டது  ரைன் மாகாணத்தில்.  மே 5, 1818 அன்று கார்ல் மார்க்ஸ் இங்கே பிறந்தார்.

இரு ஆண்டுகள் கழித்து, நவம்பர் 28, 1820 அன்று பிரெட்ரிக் எங்கெல்ஸ் இங்கே பிறந்தார்.  மார்க்ஸின் தோழர்.  மார்க்சியத்தின் தோழர்.

(தொடரும்)

‘கலகம் இனி இல்லை’ – ரோசா வசந்த்

தமிழ் பேப்பர் தீபாவளி சிறப்பிதழுக்கு ரோசா வசந்திடம் ஒரு பேட்டி கேட்டிருந்தோம். வசந்த், தன் வழக்கப்படி புகைப்படம் வெளியாவதை விரும்பவில்லை. எனவே தமிழ் பேப்பர் வழக்கப்படி ஒரு  ‘பொருத்தமான’ புகைப்படம், அருகில்.

நீண்ட காலமாக ஒரு விமரிசகராகத் தமிழிணையத்தில் இயங்கி வருபவர் நீங்கள். தமிழ் அரசியல், தமிழ் இலக்கியத் தளங்களில் நடைபெறும் சச்சரவுகளுக்கும் தமிழ் இணைய சச்சரவுகளுக்கும் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?

விமர்சகன் என்று எந்த அர்த்தத்தில் என்னை அங்கீகரிக்கிறீர்கள் என்று குழப்பமாக இருக்கிறது. உருப்படியாக எழுதாமல் பிரச்னை செய்பவன் என்ற அர்த்தம் மட்டும் பொருந்தி வருவதாக நினைக்கிறேன். எப்படியிருப்பினும் உங்கள் பரந்த மனத்துக்கு நன்றி.

நான் கலந்துகொண்ட சர்ச்சை தவிர, அண்மைக்கால வலைப்பதிவு சர்ச்சைகளை வாசித்ததில்லை. விதிவிலக்காக சந்தனமுல்லை மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடந்த சர்ச்சைகளை மட்டும் முழுவதும் வாசித்தேன். அடிப்படையில் ஒரு பெண் மீதான தாக்குதல் என்பதைத் தவிர, அந்தப் பிரச்னையில் பக்கவிளைவாக நடந்த மற்ற அனைத்தும், ‘சச்சரவு அரசியல்’ என்று தனியாகத் தலைப்பிட்டு  அலசும் வண்ணம், பல பரிமாணங்கள் கொண்டதாக இருக்கிறது.

இலக்கியவாதிகள் இணையத்தில் சண்டை போடத் தொடங்கிவிட்ட பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொள்ளவேண்டும். திண்ணை இதழ் பிரபலபமாக இருந்த 2000த்தின் தொடக்க காலத்திலேயே, முக்கிய சண்டைகளின் மையமாக ஜெயமோகன் இருந்திருக்கிறார். ஒருமுறை சாருநிவேதிதா கூட காட்டமாக  ‘How do you know I don’t f***?’ என்றெல்லாம் கேட்டு ஒரு கட்டுரை திண்ணையில் எழுதினார். அந்த வகையில், முந்தைய அரசியல்/இலக்கிய சச்சரவுகள் சாராமல், இணைய சச்சரவுகளுக்கு ஒரு தனி அடையாளம் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலோட்டமாக இலக்கியம் சாராத வலைப்பதிவு சண்டைகளையும்  மற்ற அரசியல்/இலக்கிய சண்டைகளையும் ஒரு வசதிக்கு வகைப்படுத்தி ஒப்பிட்டால், எனக்குத் தெரியும் வித்தியாசம் ஒன்றுதான். சிறு பத்திரிகை சார்ந்த சண்டைகளில் நாம் காணக்கூடிய ஒரு ஆழமான வெறுப்பை இந்த வலைப்பதிவு சண்டைகளில் காண முடியாது. எதிர் தரப்பு என்பதாகக் கட்டமைத்துக்கொண்ட ஒன்றின், தீவிர உழைப்பில் விளைந்த பொருளை, முற்றிலும் நிராகரிப்பது இந்த வெறுப்பின் முக்கியக் காரணியாகவும் இயங்குதலாகவும் இருக்கிறது. தமிழில் முக்கிய கவிஞர் அல்லது முக்கிய அறிவுஜீவி என்று ஒரு குறிப்பிட்ட தரப்பு நினைக்கும் ஒருவரை, அடுத்த தரப்பு ‘முழு குப்பை’ என்று சொல்வது சர்வ சாதாரணம். பொருள் ஈட்டும் போட்டி, அதிகாரம் போன்ற எதுவும் கலக்காமல், ஒரு அறிவுவெளியில் எதிர்த்தரப்பு நபரை ‘காலி செய்யும்’ ஆத்திரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஒரு கட்டுரை எழுதி, ‘அந்தாளை காலி பண்ணிட்டேன்’ என்று ஒருவர் சொல்வதைக் கேட்பது, தமிழ் அறிவுலகில் ரொம்பச் சாதாரணம்.  இந்த நோய், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இலக்கிய/அரசியல் செயல்பாடுகளில் பின்னர் பரவியதும், வேறு வழிகளில் உருவாகியதும் மிகவும் துரதிர்ஷ்டம். இத்தகைய வெறுப்பும்  நிராகரிக்கும் தன்மையும் தீவிரமான முறையில் வலைப்பதிவு சண்டைகளில் இடம்பெறுவதில்லை என்று நினைக்கிறேன்.

வலைப்பதிவு சண்டைகளின் பிரச்னைகள் நம் வெகுஜன சமூகத்தின் பிரச்னைகளுடன் நேரடித் தொடர்புள்ளவை; நம் சினிமாவின் பொலிடிகல் கரெக்ட்னெஸ் பிரச்னைகள் மாதிரி; இலக்கிய அரசியல் சண்டைகளில் இல்லாத ஒரு வெகுளித்தனமும் அதில் அடங்கி இருப்பதைக் காணலாம்.

வித்தியாசம் பற்றிக் கேட்டதால் இதைச் சொல்கிறேனே தவிர, பல இலக்கிய/அரசியல் சச்சரவுகளை  முக்கியமானதாக, வாசித்து பயனும் பாடமும் பெறவேண்டியதாகவே கருதுகிறேன்.

தீவிரமான அறிவுத்தளத்தில் செயல்பட விரும்பக்கூடியவர்களுக்கு இணையம் சரியான ஊடகமாக இல்லை என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் பார்வை என்ன?

அறிவுச் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள்தான், அதற்கான வெளியை இணையத்தில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். தீவிர அறிவுப் பரிமாற்றங்கள் இணையத்தில் நடப்பதை அறிவுத்துறைகள் சார்ந்த அனைவரும் அறிவர். தமிழ் வலைப்பதிவுகளின் பின்னூட்டக் களத்துக்குப் போய், அறிவுச் செயல்பாடு சாத்தியமில்லையே என்று புகார் செய்வதில் அர்த்தமில்லை.

இணையத்தின் பிரச்னை, மலிவாகக் கிடைக்கும் ஏகப்பட்ட விஷயங்கள். புத்தம் புதிதாக, அறிவுரீதியாகச் சொல்லப்பட்ட ஒரு மிக முக்கியமான கருத்தை, எளிதாகத் தாண்டிச் சென்று வேறு விஷயத்தைப் பேசப் போய்விடுவார்கள். மேலும் வாசிப்பவர் தீவிர கவனம் செலுத்தும் நிலையில் இல்லாமல், இணையத்தில்  வேறு வேலைகளுக்கு இடையில் மேய்ந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் நமது அடிப்படைப் பிரச்னை இணையத்தில் இல்லை.  தீவிரமான அறிவுச் செயல்பாட்டுக்குத் தமிழ் சூழலிலேயே ஆரோக்கியமான வெளி இருப்பதாகத் தெரியவில்லையே. முன்பைவிடப் பரவாயில்லை என்று சொல்கிற அளவில் இருக்கிறதே தவிர, நிலைப்பாட்டுச் சாய்வுகளின் முழு ஆதிக்கமில்லாமல், புதிய அறிவுச் சிந்தனையை அணுகும் மனோபாவம் இணையத்துக்கு வெளியேவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் அறிவுரீதியாகக் கவனம் செலுத்துபவர்களே மிகவும் குறைவு;  அவ்வாறு கவனம் செலுத்துபவர்களும் எந்த வகையில் ஒரு பாயிண்ட்டைப் பிடித்து, ஏற்கெனவே கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, எப்படி ஒன்றை நிராகரிக்கலாம் அல்லது எப்படி ஒன்றைத் தூக்கிப் பிடிக்கலாம் என்றுதான் இருக்கிறார்கள். தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஒவ்வாத அறிவுச் செயல்பாட்டுக்கு இடமளிக்க யாரும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. எந்தப் புதிய கருத்தையும் எழுதிவிடக்கூடிய இடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு விதிவிலக்கான தரப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தவகையில் இணையம் அறிவுச் செயல்பாட்டுக்கு மேலான இடமாகவே தெரிகிறது.

சிம்புவின் ஆண்குறி முதல் சமீபத்திய மலப்புழு வரை உங்களுடைய கட்டுரைகளின் தலைப்புகளில் நீங்கள் வெளிப்படுத்துகிற உக்கிரம், அதிர்ச்சி மதிப்புக்காகச் செய்யப்படுவதா? நீங்கள் எழுதும் பல தீவிரமான விஷயங்கள் இம்மாதிரியான பிரயோகங்களின்மூலம் மேலோட்டமான சர்ச்சைகளுடனேயே முடங்கிவிடுவதாக நீங்கள் கருதுவதில்லையா?

என்னைக் கேட்டால் வேறு என்ன சொல்லப் போகிறேன்? அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எதையும் செய்யவில்லை என்றுதான் சொல்வேன். வாசிப்பவர்கள்தான் முடிவு செய்யவேண்டும். உக்கிரமான வார்த்தைப் பிரயோகங்களுடன், என் தரப்பு தர்க்கத்தையும் தராமல் இருந்ததில்லை. அந்தத் தர்க்கத்தைக் கண்டுகொள்ளாமல், வார்த்தைகளை மட்டும் பிடித்துச் சிலர் தொங்கமுடியும் என்கிறபோது, அதற்கான வாய்ப்பாக அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவோ, கவனத்தைக் கவருவதற்காகவோ, இதைச் செய்வதில் இழப்பு எனக்குத்தானே.

விவாதங்களில் கடுமையான வார்த்தைகளில் எதிர்த்தரப்பை எதிர்கொள்ளக் கூடாது என்பதுதான் நான் கொண்டிருக்கும் நிலைப்பாடு. அதைச் செயலில் பல நேரங்களில் காட்ட முடிவதில்லை.  நீங்கள் குறிப்பிடும் வார்த்தைகள் எந்த வகை உரையாடலும் சாத்தியமில்லை என்று முடிவுக்கு வந்த கட்டத்திலேயே வருகிறது. அந்த எல்லாக் கட்டங்களிலும் எனக்கான நியாயம் ஒன்றை வைத்திருக்கிறேன்; என் பார்வையில்,  நாம் எதிர்வினை செய்யும் விஷயத்தைவிட மோசமாக எதையும் சொல்வதில்லை என்பதுதான் அது. இந்த நியாயத்தை எல்லாக் கட்டங்களிலும் என் தரப்பிலிருந்து விளக்கியிருக்கிறேன்.

இப்படிச் சொன்னாலும் நான் செய்த பல எதிர்வினைகள் தவறான முன்னுதாரணம் என்றுதான் இப்போது கருதுகிறேன். எல்லா தரப்புகளுடனும் உரையாடலுக்கான சாத்தியத்தை வளர்த்தெடுப்பதுதான் நோக்கமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது இல்லாவிட்டாலும், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உரையாடல் சாத்தியமாகலாம். இத்தகைய கடுமையான எதிர்வினைகள், எல்லா வாசல்களையும் அடைப்பதோடு, எதிர்த்தரப்பில் கருணைகொள்ளும் வேறு பலருடன் உரையாடுவதையும் சாத்தியமில்லாததாக ஆக்குகிறது. ஆகையால் நான் செய்ததற்கு, அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எனக்கான நியாயங்களை வைத்திருந்தாலும், அதை இப்போது சரி என்று நியாயப்படுத்த மாட்டேன்.

நீங்கள் கணிதத் துறையில் இயங்குபவர். ஒருபோதும் அதுகுறித்து எழுதாதது ஏன்? அறிவியல் தமிழின் அவசியம்போல கணிதத் தமிழும் அவசியம் என்று நீங்கள் கருதுவதில்லையா?

சில வருடங்கள் முன்பு, அரவிந்தன் நீலகண்டனுடன் நடந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான அற்பச் சண்டையில், சில தவறான தகவல்களை விளக்கும் பொருட்டு, திண்ணையில்  எழுதவென்று, கணிதச் சட்டகம் குறித்த ஒரு தொடர் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.  சில காரணங்களால் தொடரவில்லை. (சண்டையில் சிறுபிள்ளைத்தனமும் அற்பத்தனமும் என்னுடையது; தவறான தகவல்கள் அரவிந்தனுடையது.)

தமிழ் மணம்  நட்சத்திரமாக ஒரு வார அந்தஸ்து அளித்தபோது, குவாண்டம் கணித்தல் பற்றி ஒரு பதிவு எழுதினேன். ஒரு ஐந்து பதிவுக்காவது அதை இழுக்கவேண்டும் என்று நினைத்ததை இன்றுவரை தொடரவில்லை.

இதைத் தவிர, கணிதம் குறித்து எழுதாதற்கான முதல் காரணம் என் சோம்பேறித்தனம். தீவிர உழைப்பை அடிப்படையாகக் கொண்டு நான் இன்னும் எதுவுமே எழுதவில்லை. நான் எழுதும் விஷயங்களுக்கான அதிகபட்ச உழைப்பு யோசிப்பதும் தட்டச்சுவதும் மட்டுமே.  தமிழில் கணித சமாசாரங்கள் சிலவற்றை எழுத கலைச்சொற்கள், அதற்கான பாணி என்று பலவற்றைப் புதிதாக உருவாக்கவேண்டும். ஆரம்பக் கட்டம் என்று சொல்கிற நிலையில்கூட இல்லாமல், இதற்கான களஞ்சியம் வெற்றிடமாக இருப்பதால், பெரும் நேரமும் உழைப்பும் தேவைப்படும். அப்படிச் செய்தாலும் அது எத்தனைப் பேரைச் சென்றடையும், அதன் பயன் என்ன என்பது வேறு கேள்விகள்.

அடுத்த காரணம், Number theory எனப்படும் எண்ணியல் தவிர, சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த நவீன கணிதத்தின் எந்த முன்னேற்றத்தைப் பற்றியும், கணிதத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒருவருக்கு மேலோட்டமாகவாவது எப்படி விளக்குவது என்ற கேள்வி; இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவம் போன்றவற்றில் மேலோட்டமாக என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்று உத்தேசமாகச் சொல்ல முடியும்;  நவீன கணிதத்தில் அந்தச் சாத்தியம் கிட்டத்தட்ட பூஜ்யம்.

பெங்களூருவில் ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்குச் சென்றபோது, என் வேலை பற்றி விசாரித்தார். நான் கணிதத்தில் ஆராய்ச்சி செய்வதாகச் சொன்னேன். ‘மேதமெடிக்ஸ்ஸில் எல்லாம் ரிஸர்ச் பண்ண முடியுமா? ஐ நெவர் ந்யூ திஸ்’ என்று ஆச்சரியப்பட்டார். அது எப்படிச் செய்ய முடியும் என்று, அந்தக் கொஞ்ச நேரத்தில்,  விளக்க முயன்றேன். நான் ஏதோ விளக்கி முடித்தபின்,  ‘புதுப் புது ஃபார்முலா கண்டுபிடிப்பீங்களா?’ என்று கேடடார். இன்னும் பலர் இது குறித்து என்னிடம் கேட்டபோதும், நிறைவாக விளக்க முடிந்ததில்லை. இதில் இன்னொரு பக்கம் என்னவென்றால், ‘கணிதச் சட்டகத்துக்குள் செய்யப்படுவது மட்டுமே ஆராய்ச்சி, மற்றதெல்லாம் ஏற்கெனவே இருப்பதைத் திரும்பச் சொல்வது அல்லது கணிதத்திடம் தொழுதுண்டு வாழ்வது’ என்று நம்பும் கணித அடிப்படைவாதிகள் பலர் இருக்கிறார்கள்.

இன்னும் சுவாரசியமான ஒன்றை அண்மையில் எதிர்கொண்டேன். இயற்பியலின் பல தீர்வுகளும் கண்டுபிடிப்புகளும் கணிதச் சட்டகத்திலேயே நிகழ்கின்றன. நவீன கணிதத்தின் பல பிரிவுகளை அடித்தளமிட்டு, சட்டகத்தை உருவாக்கியவர்கள் பலரும் இயற்பியலாளர்களே. இயற்பியலாளர்களாகத் தொடங்கி, முழுமையாகக் கணிதவியலாளர்களாக மாறியவர்களும் உண்டு.

சில வாரங்கள் முன்பு, இந்தியாவின் முன்னணிக் கல்வி நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் இயற்பியலாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரமான கால்குலஸில்  உள்ள சில கருத்தாக்கங்களின், கணிதக் கறாரான வரையறைகளுடன்கூட அவருக்குப் பரிச்சயமில்லை என்று தெரிந்தது.  ஆனால் ஆர்வமும் தேவையும் இருந்ததால், காப்பி நேரத்தில் சந்திக்கும்போதெல்லாம் மொக்கை போட்டு, பல விஷயங்களை விளக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.  பல சந்தர்ப்பங்களில்,   ‘இப்படியெல்லாம் கறாராக எதற்கு இதை அணுகவேண்டும்’ என்பது போன்ற  கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் திணறடித்தார்.  அவர் பல நவீன கணித சமாசாரங்களைச் சரளமாகத் தனது ஆராய்ச்சி முடிவுகளுக்குப் பயன்படுத்துபவர். ஆனால் அதையெல்லாம் ஒரு கறாரான சட்டகத்தில் ஏன் செய்யவேண்டும் என்ற அவருடைய அபத்தமான கேள்விக்கான பதிலை என்னால் விளக்க முடியவில்லை.

ஆகையால் இந்த விஷயங்களை எல்லாம் மேலோட்டமான முறையில், பரந்த வெகுஜனப் பார்வைக்கு, அதுவும் தமிழில் செய்வது எப்படி என்பது சிக்கலான கேள்வி. இந்தச் சிக்கலை அணுகுவது ஒருவரின் வாழ்க்கை நேரத்தை விலை கேட்பதாகக்கூட இருக்கலாம். எனக்குக் கணிதத்தை வெகுஜனப்படுத்திப் பரப்புவதைவிட, இலக்கியத்திலும் அரசியலிலும்தான் ஆர்வம்.  எனினும் முன்பு செய்ய நினைத்த சில வேலைகளை எதிர்காலத்தில் மீண்டும் தொடங்கி முடிக்கும் நோக்கம் உண்டு.

சிறு பத்திரிகைக் குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் பழகியிருக்கிறீர்கள், இணைந்து செயலாற்றியிருக்கிறீர்கள். இன்றைய சிற்றிதழ் உலகு குறித்த உங்கள் பார்வை என்ன?

சிறு பத்திரிகை சார்ந்த சில நட்புகள் இன்னமும் உண்டு எனினும், இன்றைய (காலச்சுவடு, உயிர்மை, உன்னதம் போன்று  அடையாளத்தை உதிர்த்துவிட்டவை அல்லாமல் நிஜ) சிறுபத்திரிகைகளுடன் எனக்குத் தொடர்பு இல்லை. லக்ஷ்மி மணிவண்ணனின் ‘சிலேட்’ இதழ்கள், தி.கண்ணனின் ‘பிரம்ம ராக்ஷஸ்’, கடந்த 5 வருடங்களில் நான் பார்க்க நேர்ந்த சிற்றிதழ்கள். அதனால் இன்றைய நிலைமை குறித்துக் கருத்துச் சொல்ல முடியவில்லை. அறிவுச் செயல்பாட்டை விரிவாக்கவும் எளிதாக்கவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் சிற்றிதழ்கள் இணையத்துக்கு வரவேண்டும் என்பது என் கருத்து. அவை சம்பிரதாயச் சிற்றிதழ் அடையாளத்தை இழக்க நேரிடலாம் என்பது வேறு விஷயம்.

இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும் உங்களுடைய பல கவிதைகளில் ஆச்சரியமூட்டக்கூடிய வடிவ அமைதியும் வெளிப்பாட்டு நேர்த்தியும் உள்ளன. ஒரு கவிஞனாக உங்களுடைய முயற்சிகள் ஏன் தொடர்ச்சியாக வெளிப்படவில்லை?

கவிதைகளுடனான என் உறவு என்றும் முழு சுமுகமாக இருந்ததில்லை. எழுதுவதைப் பற்றிச் சொல்லவில்லை; கவிதை வாசிப்பதை பற்றிச் சொல்கிறேன். 1990-களின் மத்தியில், சில வருடங்களுக்கு, தமிழின் முக்கிய கவிஞர்களைத் தீவிரமாக வாசித்திருக்கிறேன். அதற்குப் பிறகு அபூர்வமாகத்தான் வாசிப்பது உண்டு. வருடக்கணக்கில் ஒரு கவிதைகூட வாசித்திராமல் கழிந்ததும் உண்டு.

சென்ற வருட இறுதியில், மன அழுத்தத்திலிருந்து விடுபட மகாபலிபுரம் போவது, சினிமா பார்ப்பது, வாசிப்பது என்று கழித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜாலியாக, ஒரு அனுபவத்தை வைத்து ‘மறதி’ என்ற கவிதையை எழுதினேன். எனக்கும் பிடித்திருந்தது. சில நண்பர்கள் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ராஜன்குறை பிடித்திருப்பதாகப் பின்னூட்டமிட்டார்.  கவிஞர் சங்கர ராம சுப்பிரமணியன், அவரே வந்து  நன்றாக இருப்பதாகச் சொன்னார். இப்படி உசுப்பிவிட்டதில், பின்னர் இன்னும் சில எழுதினேன்.  மற்றபடி கவிதை தொடர்ந்து எழுத, தீவிரமாகத் தொடர்ச்சியாகப்  பலவகைக் கவிதைகளை வாசிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது நீங்களும் நல்லவிதமாகச் சொல்கிறீர்கள். எதிர்காலத்தில் ஏதாவது நடந்தாலும் நடக்கும்.

பல இணைய சர்ச்சைகளின் தொடக்கப்புள்ளியாகவோ, பங்கேற்பாளராகவோ,  பதில் சொல்பவராகவோ இருந்து வருகிறீர்கள். இது உங்களுக்கு அலுப்பாக இல்லையா? பக்கம் பக்கமாகச் சர்ச்சைகளில் செலுத்தும் கவனத்தில் வேறு உருப்படியாக எழுதலாமே என்று தோன்றாதா உங்களுக்கு?

கடந்த சில வருடங்களாக வலைப்பதிவுகளில் புழங்காததால், சர்ச்சைகளில் ஈடுபடவில்லை. அதற்குமுன் எழுதியவற்றில் பெரும்பாலானவை சர்ச்சைகள் மட்டுமே.

சர்ச்சைகளில் ஈடுபடுவது என்பது முடிவு செய்து இறங்கிய விஷயமல்ல; பல நேரங்களில் தெருவில் வலித்துக்கொள்ளும் சண்டை போலத்தான். எதையாவது தடாலடியாகச் சொன்னபின் அல்லது, காட்டமாக எதிர்வினை செய்தபின், மேலும் மேலும் அதைத் தொடர்வது என்றுதான் இவை நிகழ்ந்தன. ஈகோ அல்லது நம் தரப்பைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற மதப்பற்றைப் போன்ற உணர்வு, இந்தச் சர்ச்சைகளை இழுத்துச்  சென்றன; பதில் சொல்லப்படாமல் எதிர்த்தரப்பின் பின்னூட்டம் இணையத்தில் இருப்பது, ஏதோ நாம் தோற்றுவிட்டது போன்ற பாதுகாப்பற்ற உளவியலை ஏற்படுத்துவதால், பணி சார்ந்த கட்டாயங்களை அலட்சியப்படுத்திவிட்டு சர்ச்சையில் ஈடுபடவைக்கிறது. இப்படிப்பட்ட தீவிரத்துடன் உருப்படியான வேலைகளைச் செய்ய முடிந்ததில்லை. உருப்படியான வேலை செய்வதற்கு முன்திட்டமும் தேவைப்படுகிறது.

ஆனால் சர்ச்சைகள் முழுக்கப் பயனற்றவை என்று நான் நினைக்கவில்லை.  அதை இன்னும் பொறுமையாக, உரையாடல்களுக்கான சாத்தியங்களுடன் எடுத்துச் செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.  இப்போது என் தரப்பைக் காப்பாற்றுவது அத்தனை முக்கியமில்லை  என்ற மனநிலைக்கு வந்து, அந்த மனநிலையைச் செயலிலும் வெளிப்படுத்தப் பயிற்சி செய்து வருகிறேன்.

ஈழம் குறித்த மிக ஆழமான அக்கறையைத் தொடக்கம் முதல் வெளிப்படுத்தி வந்திருக்கிறீர்கள். தமிழகத்தில் உங்களைப் போன்றவர்களின் இந்த அக்கறை உணர்வை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? அரசியல்வாதிகளின் போலி அக்கறை எடுபடுமளவு, அறிவுஜீவிகளின் கருத்துகள் சென்று சேர்கின்றனவா?

ஈழத்தில் கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கரங்கள் நடந்ததைக் கையாலாகாமல் செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். இதில்  நம் அக்கறை உணர்வை, ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்கிறார்களா என்றெல்லாம் யோசிப்பதில் அர்த்தமும் நியாயமும் இல்லை.

எல்லாவகை அரசியல்வாதிகளும் ஈழத்தமிழர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டார்கள். இதில்  காங்கிரஸ் போன்ற நேரடியான எதிரிகள் தொடங்கி, திமுக போன்று அரசியல் சுயநலத்துக்காகத் துரோகம் செய்தவர்கள் ஊடாக, தீவிர ஈழ ஆதரவு நிலைப்பாடு கொண்டிருக்கும் சீமான், நெடுமாறன் வரை அடக்கம். தற்போது நிலவும் யதார்த்தத்தில்,  இன்னமும் புலிகள் உயிர்த்தெழுந்து ஈழ லட்சியத்தைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தே பொய் சொல்லிக்கொண்டிருப்பவர்கள்தான், இதில் மிகவும் ஆபத்தானவர்கள். தமிழக அரசியல்வாதிகள் இனி உண்மையாக அக்கறை காட்டினால்கூட அதை ஈழத்தமிழர்கள் சீரியசாக எடுத்துக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. (அதேநேரம் நம்பி ஏமாறாமல்,  தேவைப்பட்டால் அதைச் சாதூரியமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் என் பரிந்துரை.)

தமிழகத்து அறிவுஜீவிகளை ஈழத்தமிழர்கள் தொடர்ந்து கவனிக்கிறார்கள்; அதன்  பாதிப்பும் அவர்கள் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் இருக்கிறது.  அ.மார்க்ஸ் தொடங்கி ஜெயமோகன் வரை அவர்கள் இடம் அளித்து வருகிறார்கள்.  வளர்மதி எழுதுவதைக் கவனிக்கிறார்கள். நாகார்ஜுனன் ஈழப்பிரச்னை தீவிரமாக இருந்தபோது நிறைய எழுதி, அவை விவாதிக்கவும்பட்டன.

நான் துண்டுக் கருத்துகளாக எழுதி, என் கோபத்தைக் காட்டியிருக்கிறேன்; பிரச்னைகளை அலசும் விதமாக எதுவும் எழுதவில்லை. பலமுறை எழுதத் தொடங்கி, என் மனக் குழப்பங்களால் தொடரவில்லை. நான் இன்னும் என்னை நிறைவாக வெளிப்படுத்தியிராததால், என்னை சீரியசாக எடுத்துக்கொள்ளக் காரணம் இல்லை.  ஆனால் பாரிஸிலும் டொரண்ட்டோவிலும் சந்தித்த ஈழத்தமிழர்கள், என்னைப் போன்ற ஒருவனின் கருத்துகளை அறிவதிலும், சீரியசாக எடுத்து விவாதிப்பதிலும் மிகவும் ஆர்வமாகவே இருந்தார்கள்.

தமிழ்நாட்டின் அடுத்த சட்டமன்றத் தேர்தல் பற்றி இன்னும் யாரும் பேசத் தொடங்காத சூழலில் நீங்கள் அதை ஆரம்பித்து வைக்கலாமே? அடுத்து வரும் தேர்தல் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்? வரும் தேர்தலைத் தீர்மானிக்கும் காரணிகளாக எவை இருக்கக்கூடும்?

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நான் தீவிர திமுக ஆதரவாளன். 1996-ல் திமுக வென்றபோது அண்ணா சாலையில் திமுகவின் தெருக்கொண்டாட்டங்களில் ஒரு ரசிகனாகக் கலந்துகொண்டேன்; 2001-ல் திமுக தோற்றபோது அழுகையே வந்தது; 2006 பற்றிப் பதிவுகள் எழுதியிருக்கிறேன்.

இதற்கு மாறாக, சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஈழப்பிரச்னை சார்ந்து, காங்கிரஸ்-திமுக கூட்டணி,  ஜெயலலிதாவை ஆதரித்தாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற என் கருத்தை எழுதியிருந்தேன். தற்போதைய யதார்த்தம் வேறு என்றாலும்,  இந்த ஆட்சி ஒழியவேண்டும் என்பதுதான் என் கருத்து.

எந்த அரசியலுக்காக, நாம் ஊழலுக்கும் இன்னும் பல சீர்கேடுகளுக்கும் பல சமூகவியல் விளக்கம் கொடுத்து திமுகவைத் தூக்கிப் பிடித்தோமோ, அந்த அரசியலுக்கு திமுகவால் இனி நன்மை எதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை. அடுத்து எல்லோருக்கும் தெரிந்த விஷயமான, ஒட்டுமொத்த தமிழகத்தின் எல்லா அதிகாரத்தையும், நுகர்வுக் களங்களையும்  ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆக்ரமித்திருப்பது. திமுக அனுதாபியான ஒரு நண்பன் சொன்னான்: ‘என்னமோ கலைஞர் குடும்பம்தான் தின்னு கொழிக்கறதாச் சொல்றாங்க, திருச்சில நேருதான் எல்லாம், யாராவது தலையிடறாங்களா?’ அதாவது குடும்பம் போக, இப்படி அடுத்த கட்டமாக ஒரு கூட்டத்துக்கும் கொள்ளையில் பங்கு கொடுக்கவேண்டி இருப்பதை,  எப்படி ஒரு பாசிடிவ் விஷயமாகச் சொன்னான் என்று எனக்குப் புரியவில்லை.  ஆகையால் இந்த ஆட்சி போகவேண்டியதற்கான காரணங்களை அடுக்க வேண்டியதில்லை.

நாம் கவனிக்க வேண்டிய விஷயம் வேறு. கலைஞர் குடும்பத்தின் இந்த ஆக்ரமிப்பையும் கொழிப்பையும் அனைத்து தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். ஆனாலும் தீவிர எதிர்ப்பலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சரியாகச் சொல்லவேண்டுமானல், ஒரு காலத்தில் மழை பொய்த்தால்கூட கருணாநிதியைத் திட்டும் மக்களும்  மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம்  கலர் டிவி, கேஸ் சிலிண்டர், ஒரு ரூபாய் அரிசி, காப்பீடு போன்றவை மட்டுமின்றி, இந்த அரசால் பணிநியமனம் போன்று பல்வேறு வகைகளில் லாபம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. என் புரிதலில் இதுவரையிலான அரசுகளில், தங்களுக்கு ஏதாவது செய்த அரசாக மக்கள் இந்த அரசைப் பார்க்கிறார்கள். இது, திமுகவினர் திட்டமிட்டுச் செய்ததுதான்; ஆனால் அதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தக் காரணங்களால் இதை நல்லாட்சி என்று சொல்லவரவில்லை. வேறு பக்கம் மக்கள் மிகத் தீவிரமான பொருளாதாரப் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்; கொள்ளையடிப்பதில் எந்த விஷயம் எதிர்காலத்துக்குத் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை. காவிரி போன்ற பிரச்னைகளில் முனகும் டெசிபல்களிலாவது குரல் கொடுக்கவேண்டும் என்று ஆள்பவர்களுக்குத் தோன்றவில்லை.

ஆனாலும் இந்தச் சூழலில் ஜெயலலிதா வெற்றி பெற்றால், முதலில் அதன் மூலம் கருணாநிதி குடும்பம் கொழிப்பதைத் தடுத்துவிட முடியாது. மத்திய ஆட்சியில் அவர்கள் கொண்டிருக்கும் பங்கு காரணமாக, அவர்களின் ஆக்ரமிப்புகள்  தொடரத்தான் செய்யும். அதேநேரம், மக்கள் லாபமடையும் வகையில் திமுக செய்ததை எல்லாம் கழுவித் துடைத்து, பின் புதிதாக குண்டக்க மண்டக்க என்று ஏதாவது ஜெயலலிதா செய்வார். மக்களுக்கும் இது குறித்த பயம் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர்கள் திமுகவைத் தோற்கடிக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே.

ஜெயலலிதா வெற்றி பெறாமல் திமுக ஆட்சியை அகற்றுவது என்ற வாய்ப்பு  இன்னமும் யதார்த்தத்தில் இல்லாததால்,  இந்தத் தேர்தலை எப்படி அணுகுவது என்று குழம்பம் உள்ளது.  ஈழப்பிரச்னையில் செய்த துரோகத்தை மட்டும் மனத்தில் வைத்து, இப்போது திமுக ஆட்சி போகவேண்டும் என்பதில் விவேகம் எதுவுமில்லை.

சென்ற தேர்தல்போல ஜெயலலிதா ஜெயித்தாலும் சரி, இந்த ஆட்சி போகவேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஒருவேளை கூட்டணிக் கட்சிகளின் பங்கு இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியாது என்ற ஒரு நிலை வந்தால் நல்லதாக இருக்கலாம்.  தேர்தல் நெருங்க நிலைமை மேலும் தெளிவாகலாம்.

தனிப்பட்ட முறையில் உங்களை அறியாத யாரும் உங்களை நெருங்க அஞ்சக்கூடிய தோற்றத்தைத்தான் உங்களுடைய இணையச் செயல்பாடுகள் இதுகாறும் பெருமளவு அளித்துவந்திருக்கின்றன. ஒரு கிளர்ச்சியாளராக அறியப்படுவதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது, இது உங்கள்மீது வலியத் திணிக்கப்பட்ட பிம்பமாக உணர்கிறீர்களா?

என்னை நெருங்க யாராவது அஞ்சினார்களா என்று நான் கேள்விப்பட்டதில்லை. மற்றபடி இணையத்தில் செய்வதெல்லாம் கிளர்ச்சியா? எந்த அர்த்தத்திலும் நான் கிளர்ச்சி செய்பவனாக என்னை உணர்ந்ததில்லை. இணையத்தில் கிளர்ச்சி செய்யும் சாத்தியம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஒரு குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையையும் வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, இணையத்தில் ஆக்ரோஷமான மொழியில் எழுதுவதில் கலகம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ‘குட்டி பூர்ஷவாவின் கலகம்’ என்று என் வலைப்பதிவுக்குத் தலைப்பிட்டது ஒரு சுய எள்ளல் மட்டுமே;  ‘நமக்குத் தொழில் முடிந்தவரை கலகம்’ என்று எழுதியிருப்பேன். கலகம் என்பது முடிந்தவரை செய்யக்கூடிய ஒரு வேலையா? அதன் சுய எள்ளலைப் புரிந்துகொள்ளாமல் நான் கலகம் செய்வதாகச் சிலர் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் புரிந்துகொண்டார்கள்.

இப்போது கலகம் என்ற வார்த்தையையும் நீக்கி விட்டேன். இனி அதுபோலச் செயல்படுவதில்லை என்பதுதான் என் உத்தேசம்.

மதம், சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுள் சார்ந்த உங்கள் நம்பிக்கைகள் அல்லது நம்பிக்கையின்மை அனைவருக்கும் தெரியும். உங்கள் சிறு வயதைத் திரும்பிப் பார்த்து, அங்கிருந்து இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்த விதத்தை விவரிக்க முடியுமா?

சிறு வயதில் மிகத் தீவிரக் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தேன்;  ஒருநாளின் பெரும் பொழுதை பெருமாள் வழிபாட்டில் செலவழித்த காலம் உண்டு. ஆழ்ந்த பக்தியும் மத நம்பிக்கையும் கொண்ட என் பெற்றோருக்கே கவலை அளிக்கும் அளவுக்கு என் பக்தி  தீவிரமாக இருந்தது.  சுஜாதாவின் பாதிப்பில், பல விஞ்ஞான சமாசாரங்களைத் தேடிப் படித்த பிற்காலங்களில்,  இந்தத் தீவிர நம்பிக்கைகள் அடிவாங்கின. கல்கி(?)யில் தொடராக வந்த ‘சித்ரலேகா’ என்ற ஹிந்தி(?) மொழிபெயர்ப்பு நாவலின்,  வெட்டி பைண்ட் செய்யப்பட்ட பிரதி பக்கத்து வீட்டிலிருந்து வாசிக்கக் கிடைத்தது. அதில் வாசித்த கடவுள், நீதி, தர்மம்  பற்றி நடக்கும் பல விவாதங்கள் என்னைப் பாதித்தன. என்னளவில் நானே சிந்தித்து முடிவுக்கு வந்து, கடவுள்/மத நம்பிக்கையில் இருந்து வெளிவர அந்த நாவல் ஒரு தூண்டுதலாக இருந்தது.

அதேநேரம், சூழல் காரணமாகவும் பொதுவாகத் தீவிர நிலைப்பாடுகளை எடுக்கும் என் குணம் காரணமாகவும், என்னிடம் சிறுவயதில் இந்துத்துவக் கருத்தியல் இயற்கையாக வந்து சேர்ந்திருந்தது. 14 வயதில், போப் இந்தியாவுக்கு வந்தபோது, நானும் ஒரு RSS நண்பனும், ‘போப்பை செங்கொடி காட்டி வரவேற்போம்’ என்று இரவு சுவர்களில் எழுதினோம்.

கல்லூரி முதல் ஆண்டில் கஞ்சா புகைக்கும் பழக்கத்துக்கு ஆட்பட்டேன். வட்டமாக கஞ்சா புகைக்க மாலை கூடும் கூட்டங்களில், திக நண்பர் ஒருவரும் வருவார்; சில விவாதங்களும் நட்புடன் நடக்கும்.  அவர் மூலம்  ‘மின்சாரம்’ என்ற திக எழுத்தாளர் எழுதிய, ‘சோ என்ற இரட்டை நாக்கு பார்ப்பனர்’ என்ற புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. நீண்டகால துக்ளக் வாசகனான என்னை, அந்தப் புத்தகம் கொதிநிலைக்குக் கொண்டுபோனது. மிக ஆக்ரோஷமாக அந்த நண்பரிடம் சண்டை போட்டேன். எல்லாவற்றையும் அவர் நிதானமாக எதிர்கொண்டதில், நான் எனக்குள் அந்தப் புத்தகத்தை எதிர்கொண்டு, தர்க்கம் செய்யவேண்டியிருந்தது. இதன் விளைவான சுயவிமர்சனத்தில் என் பல கருத்துகள் மாறத் தொடங்கின. அதற்குப் பின் சுற்றி  நடந்த பல சம்பவங்களும், என் தொடர்ந்த சிந்தனைகளும், தூத்துக்குடி மாவட்ட நூலகத்தில் வாசித்த அனைத்து பெரியார் தொகுப்புகளும் முற்றிலும் என்னை மாற்றிப்போட்டன. பிறகு பல நண்பர்கள், நிறப்பிரிகை என்று இந்தப் பாதிப்பு  பல விதங்களில் தொடர்ந்தது.

இன்னமும் கடவுள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளவைக்கும் அதிசயம் எதுவும் நிகழவில்லை என்றாலும், கடவுளை மறுப்பது எனக்கு இப்போது ஒரு முக்கியப் பிரச்னை இல்லை. அன்றாட வாழ்க்கையின் உணர்வுகளில் இருந்து வேறுபட்ட உணர்வுகளைப் பெற, ஜாலியாகக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வதுண்டு; சேவிப்பதில்லை. (கோயிலுடனான பிரச்னையும் கடவுள் அல்ல, இன்னமும் கோயிலுக்குள் அதிகாரத்துடன் நிலைகொண்டிருக்கும் பார்ப்பனியம் மட்டுமே.)

இறுதிக்கேள்வி. வீட்டில் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்களா? உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தாரின் மதிப்பீடு என்ன?

என் பெற்றோர் என்னை என்றும் புரிந்துகொண்டது கிடையாது. முழு அர்ப்பணிப்புடனான பக்தி,  கடவுள் மறுப்பு, எல்லாமே அவர்களைக் கலங்கடிக்கச் செய்தது. நான் கஞ்சா அடிப்பதைவிட, பெரியார் புத்தகத்தைப் படித்தது, அவர்களைப் பெரிதும் பாதித்தது. இதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.  ஆனால் நான் அவர்களுக்காகச் செய்த சில சமரசங்களையும்கூட அவர்கள் புரிந்துகொண்டதில்லை.  இன்றளவுக்கும் இதெல்லாம் தீவிரப் பிரச்னையாகவே இருக்கிறது.  இப்போதைய வாழ்க்கையில், மத நம்பிக்கையின்மையில் மட்டுமின்றி, என் அரசியல் நிலைப்பாடுகளையும் என் துணைவி முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறார்.

துணைவி கடவுள்(கள்) நம்பிக்கை கொண்டவர்; சரியாகச் சொல்லவேண்டுமானால் அந்த வசதியை இழக்க விரும்பாதவர். ஆயினும் எனது நிலைப்பாடுகள் எந்தப் பிரச்னையையும், வருத்தத்தையும், என்னைக் கட்டாயப்படுத்தும் எதிர்பார்ப்பையும் அவருக்கு அளித்ததில்லையாம்; எல்லாச் சந்தர்ப்பங்களிலும், எல்லாவற்றையும் சீரியசாகவே நான் அணுகுவது மட்டுமே, தனக்குக் கடுப்படிக்கும் பிரச்னையாக இருப்பதாக, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்படி அவரைக் கேட்டபோது சொன்னார்.

கேள்விகள்: தமிழ் பேப்பர் குழு

வசீகர சௌந்தர்ய ஸாரி

யார் யாரோ எழுதுகிறார்கள், சும்மா ஒரு நாள் நானும் கவிதை கிவிதை எழுதிப் பார்க்கிறேன் பேர்வழி என்று புறப்பட்ட கவிஞர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் முதல் கவிதையே அவருக்குத் தமிழ்கூறும் நல்லுலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகவாசகவெறியக் கண்மணிகளை உருவாக்கி விட்டதை, வந்த மடல்களில் இருந்து புரிந்துகொண்டோம். உறங்கிக்கிடக்கும் சமூகத்தை உசுப்பி எழுப்புவதல்லவா இலக்கியம் மற்றும் எலக்கியங்களின் தலையாய  பணி? அதைத் தன் முதல் படைப்பிலேயே சாதித்துவிட்டார் த.கா.செ.வெ.நெ.

எனவே இந்த தீபாவளித் திருநாள் முதல் கவிஞரின் கவிதைகளும் கிவிதைகளும் வாரம்தோறும் தமிழ் பேப்பரில் இடம்பெறும்.

கவிதை 1

ஏதேனும் ஒரு நொடியில்
கோபம் வந்துவிடுகிறது உனக்கு
உன் ஏதேனும் ஒரு செயல்
என்னைக் காயப்படுத்துகிறது
தழும்பில்லாக் காயங்களின்
வலிகளுக்கான களிம்பு
உன் விரல்கள் என் தலைகோதி
உன்னால் சொல்லப்படும்
“ஸாரிடா”.

கிவிதை 1

நதியைச் சூடும் மலரின் ஸ்பரிசம்
மென்விரல் அலையெனவென் தலைகோதும்
நின் அதரங்கள் அதிர்ந்துதிர்க்கும்
அவ்வொற்றைச் சொல்லில்
திரண்டிருந்த கோபப்பந்து
உருண்டு திரள்கிறது பாதரசச் சில்லுகளாய்
மீண்டும் கேளந்த
வசீகர செளந்தர்ய ஸாரியை.

கவிதை 2

பேருந்துப் பயணத்தின்
ஜன்னல் இருக்கை
மரங்கள் எதிர்வரும் வாகனம்
கடக்கும் வாகனங்கள்
’டாட்டா’ சொல்லும் சிறுவர்கள்
கீழ் வானச் சூரியன்
எப்பொழுதோ
தொலைந்துபோன தம்பியின்
முகம்.


கிவிதை 2

நெடுஞ்சாலை தன்னுள்
கபளீகரம் செய்கிறதென்னை
சாளரக் கம்பிகளினூடே
விரிகிறதோர் வையம்
பின்நடக்கும் மரங்கள்
எதிர்த்துறுமும் சகங்கள்
அந்தி சிந்தும் செந்தூரச் சிதறல்
தொலைந்தும் கடக்கவியலா-என்
தாய்மகனின் முகம்
கடந்தும் நிறைக்கிறது கண்களில்