கருணாநிதியின் தீக்குளிப்புப் பேச்சு!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா தெலுங்கு மொழியில் பேசி, வாக்குகளை வசீகரிக்கும் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். அவர் விட்ட பணியை அவருடைய அமைச்சர்கள் செய்துவருகின்றனர்.

அவரைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி சங்கரன்கோவில் சென்றார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடை தொடர்பாக பிரச்னை எழுந்தது. பிறகு அமைச்சர் அழகிரி, தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரைச் சந்தித்துப் பேசியபிறகு பிரச்னை தீர்ந்தது. சொன்னபடியே சங்கரன்கோவிலில் பிரசாரத்தில் ஈடுபட்டார் கருணாநிதி.  வழக்கம்போல பிரும்மாண்டமான கூட்டம். கூட்டணிக்கட்சித்தலைவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.

எல்லோரும் பேசியபிறகு கருணாநிதி பேசினார். அப்போது இடைத்தேர்தலின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். ஏன் திமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று பேசினார். இது இடைத்தேர்தல் மட்டுமல்ல; எடைத்தேர்தல் என்று தமக்கேயுரிய பன்ச் ஒன்றையும் வைத்தார். சங்கரன்கோவில் குறித்த தனது நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார். இப்போதைய டாபிகல் விவகாரமான திராவிட இயக்கம் நூற்றாண்டு, திராவிட – ஆரிய விவகாரம் பற்றியும் பேசினார்.  மின்வெட்டு பற்றி ஆவேசமாகப் பேசினார்.

எல்லாம் சரிதான். பேசவேண்டிய விஷயம்தான். ஆனால் அதன்பிறகு அவர் பேசியதுதான் சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்துப் பேசத் தொடங்கினார் கருணாநிதி.

‘நான் முதல்வராக இருந்தபோது அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு நூலகத்தில் நான்கு  லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள்.

அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான்.

ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.’

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. சிலர் மாற்றவே கூடாது என்று கடுமையாக எதிர்க்கிறார்கள். அந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் தங்களுடைய வாதங்களையும் எடுத்துவைக்கிறார்கள். அதைப்போலவே, நூலகத்தைக் காட்டிலும் மருத்துவமனை அமைவது எந்த அளவுக்கு அத்தியாவசியமான ஒன்று என்பதைப் பற்றியும் சில கருத்துகள் எழுந்துவருகின்றன. நூலக மாற்றம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் தொடர்ச்சியான விவாதங்கள்  நடந்துவருகின்றன. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்நிலையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனயோ வழிகள் இருக்கின்றன. நூலகத்தை மாற்றக்கூடாது என்று கோரிக்கை விடுக்கலாம். கோஷம் எழுப்பலாம்.  தனது கட்சியின்  பத்திரிகையில் எழுதலாம். கட்சித் தொண்டர்களையும் மக்களையும் ஓரணியில் திரட்டிப் போராட்டம் நடத்தலாம். ஊர்வலம் போகலாம். இப்படி, தனது எதிர்ப்பை ஜனநாயக ரீதியாகப் பதிவுசெய்வதற்குப் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

அவற்றில் பல வாய்ப்புகளை திமுக பயன்படுத்தியும் வந்துள்ளது. இருந்தும், ‘நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்’ என்று பேசுவது எந்தவகையில் சரியான பேச்சு என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

தீக்குளிப்பு என்பது தமிழகத்துக்குப் புதிய விஷயமல்ல. மொழிப்போர் நடந்த காலகட்டங்களில் தமிழுக்கு ஆதரவாகவும் இந்தித் திணிப்பைக் கண்டித்தும் மாணவர்கள், இளைஞர்கள் உணர்ச்சிவேகத்தில் தீக்குளித்துள்ளனர். அப்படித் தீக்குளித்தவர்களை, மொழிப்போர் தியாகிகள் என்று திராவிட இயக்கங்கள் என்று கொண்டாடுகின்றன. மொழிப்போருக்குப் பிறகும் வெவ்வேறு காலகட்டங்களில் பலரும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தீக்குளித்துள்ளனர். குறிப்பாக, ஈழப்பிரச்னையை முன்வைத்து.

இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆர் காலத்தில் திமுக தலைவருடைய கைதைக் கண்டித்து சிலர் தீக்குளித்துள்ளனர். வைகோவைத் திமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் தீக்குளிப்புகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம், தீக்குளிப்பு வேண்டாம்; தங்கள் இன்னுயிரை அவசரப்பட்டு இழக்கவேண்டாம் என்று உணர்ச்சிப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தவர் கருணாநிதி.

தீக்குளிப்பு என்பது காட்டுமிராண்டித்தனமான செயல்; நாகரிக முதிர்ச்சி நிலையில் இருக்கும் நாம் தீக்குளிப்பு போன்ற விஷயங்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்; எக்காரணம் கொண்டும் தீக்குளிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பேசக்கூடாது என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் தீக்குளிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியான செயலாக இருக்கமுடியாது.

வேண்டுமானால், ‘நான் தானே தீக்குளிப்பேன் என்று சொன்னேன். அடுத்தவரையா தீக்குளிக்கச் சொன்னேன்’ என்று கருணாநிதி கேட்கலாம். தலைவர் அப்படிச்சொன்னால் அதைத் தொண்டர்கள் தங்களுக்கு விடுத்த அழைப்பாகவே எடுத்துக் கொள்வார்கள் என்பது கருணாநிதி உள்ளிட்ட அத்தனைபேருக்குமே தெரிந்த சங்கதிதான்.

தொண்டர்களை உசுப்பேற்றுவதற்கு, உற்சாகப்படுத்துவதற்கு எத்தனையோ வாய்ப்பு வசதிகள் இருக்கின்றன. கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க கருணாநிதிக்கு இருக்கும் வாய்ப்புகள் அநேகம். ஆனால் இன்னமும் தீக்குளிப்பேன், உயிர் கொடுப்பேன் என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் முதிர்ச்சி அடைந்த கருணாநிதிக்கு அழகல்ல!

அருட்செல்வன்

என்கவுண்டர் அரசியல் – ஐந்து கொலைகள் போதுமா?

தேர்தலில் ஜெயித்த பிறகு ஆட்சி நடத்த போலீஸ் மட்டுமே போதும் எனும் எண்ணத்தில் இருக்கும் ஜெயலலிதா. எதிர்க்கும் துணிவில்லாத மனிதர்களை மட்டும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் தாக்குவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட காவல்துறை. செய்திகளில்கூட சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள். வெற்றிகரமான என்கவுண்டர், சுட்டு வீழ்த்தப்பட்ட கொள்ளையர்கள் என்பன போன்ற வர்ணனைகளை கொடுக்கும் பாக்கெட் நாவல் தரத்திலான ஊடகங்கள். இந்தக் கூட்டணி இருக்கும் வரை தமிழ்நாட்டில் என்கவுண்டர்கள் தொடர்கதையாகவே இருக்கும்.

அரசாங்கத்தின் தேவைக்காக என்கவுண்டர் செய்யும் பழக்கத்தை வீரப்பன் கொலை மூலம் ஆரம்பித்து வைத்தவர் ஜெயலலிதாதான். அதன் பிறகு இது ஒரு தொடர் நிகழ்வாகிவிட்டது. அதிகமாக ஜெய்சங்கர் படம் பார்க்கும் பழக்கம் இருக்கிறதா அல்லது அப்பிராமணர்கள் சொம்பு திருடியதற்காக கொல்லப்பட்டாலும் அதனை ஆதரிக்கும் சோ ராமசாமியை நண்பனாக கொண்டிருக்கும் பழக்கதோஷமா தெரியவில்லை, படுகொலைகள் வாயிலாகவே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இயலும் என நம்புபவர் ஜெயா. அவரது ஆட்சியில் என்கவுண்டர்கள் அதிகமாக நடக்கும்.  எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று அவர் பெருமிதம் கொள்வதும் நடக்கும்.

இந்தத் தருணத்தில் நாம் அச்சமடைய வேண்டியது ஜெயலலிதா பற்றியோ அல்லது போலீஸ் பற்றியோ அல்ல. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதிகாரமிருக்கையில் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் “இப்படி சுட்டாத்தான் அடுத்து கொள்ளையடிக்கனும்னு நினைக்கிறவனுக்கு பயம் வரும்” எனும் வாசகங்களோடு இதை ஆதரிக்கும் பொதுமக்கள்தான் அதி அபாயகரமானவர்களாக தெரிகிறார்கள். இவர்களில் பலர் எவன் தாலியறுந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு கூடங்குளம் மின்சாரம் வேண்டும் என்று சொல்பவர்கள்.

வங்கிக் கொள்ளைக்கு பதிலடியாக ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலரது புரிதல் இத்தோடு முடிந்துவிடுகிறது. ஒருவன் குற்றவாளியா இல்லையா என்று உறுதியாகும் முன்பே, குற்றத்துக்கு கொலைதான் தண்டனையா எனும் பரிசீலனைகூட செய்ய விரும்பாது அவன் கொல்லப்படுவது இவர்களுக்கு சம்மதம் என்றால், ஒன்று இவர்கள் கொலையை ரசிக்க பழகியிருக்க வேண்டும். அல்லது தன்னோடு தொடர்பில்லாத யாரோ ஒருவன் கொல்லப்படுவது பற்றி கவலையற்றவர்களாக இருக்கவேண்டும். சமூகத்தால் புறந்தள்ளப்படவேண்டிய இவர்களது கருத்து சமூகத்தின் பொதுக்கருத்தாக கட்டமைக்கப்படுகிறது. கருத்து ஏதுமில்லாதவர்கள் இதன் மூலம் இதனை தங்கள் கருத்தாக வரித்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

சென்னை வேளச்சேரி என்கவுண்டர் ஒரு போலி என்கவுண்டர் என்பதை தினமலரின் “சிறப்பு நிருபரே” கிட்டத்தட்ட ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் எழுப்பும் கேள்வி சுருக்கமானது. போலியா இருந்தாத்தான் என்ன? படம் நல்லாயிருக்கான்னு பாரு, டிவிடி போலியா இருந்தா உனக்கென்ன? மனித உரிமை ஆர்வலர்களைத் தேச விரோதிகளாக சித்தரிக்கும் வேலையை செவ்வனே செய்துவரும் இந்த வகை பத்திரிகைகள் அதற்காக சாதாரண மக்களை ரத்த வெறியர்களாக மெல்ல மெல்ல மாற்றுகின்றன. அதன்படியே மக்களில் பலரும் போட்டு தள்ளுடா அவனை என கவுதம் மேனன் படத்து வில்லனைப் போல கூவி குதூகலிக்கிறார்கள்.

அவர்கள் பேசுவதற்கான பாயிண்டுகளையும் இந்த ஊடகங்களே வழங்குகின்றன. கொள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டால் அடுத்து கொள்ளையடிப்பவனுக்கு பயம் வரும். சட்டம் அதிகமான வாய்ப்புக்களை குற்றவாளிகளுக்கு வழங்கி அவர்களைச் சுதந்தரமாக உலவவிடுகிறது. ஆகவே மக்களை பாதுகாக்க இந்த வழியை போலீஸ் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் போலி என்கவுண்டர் ஆதரவாளர்களின் வாதங்கள். இந்த வேட்டுச் சத்தத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நம் கண்ணில்படாது மறைந்து போயிருக்கிறது. இதுவரை ரவுடிகள் மற்றும் கொடூரமான கொலைகாரர்கள் எனும் பட்டியலில் வந்தவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் இப்போது கொள்ளையர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

நல்லது, தமிழகத்தை கொள்ளையர்களிடமிருந்தும் காப்பாற்றும் வெறி காவல்துறைக்கு வந்து விட்டதாக வைத்துக்கொள்வோம். ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மீதான எல்லா வழக்குகளும் நிரூபணம் இல்லாமல் தோற்றுவிட்டன. ஆகவே தங்கள் முயற்சிகள் வீணாகிவிட்டதாக பொங்கியெழுந்து ஒரு தோட்டாகூட காவல்துறையில் இருந்து புறப்படவில்லையே ஏன்? வங்கிக்கொள்ளையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மக்களை நேரடியாக கொள்ளையடித்த ஃபைனான்ஸ் நிறுவனங்களின் முதலாளிகளில் ஒருவனும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பணத்தை மீட்டுத்தா என்று சொல்லி வீதிக்கு வந்த மக்கள் மீது தடியடி நடந்திருக்குமேயன்றி அந்த நிறுவன முதலாளிகள் எவன்மீதேனும் போலீசின் லத்திக் கம்புகள் தொட்டுப்பார்த்திருக்குமா? இந்தக் கேள்விகள் எழ குற்றவாளிகள் மீதான இரக்கம் தேவையில்லை, குறைந்தபட்ச அறிவு போதும். அறிவு அதிகமாக இருந்தும் இந்த வினாக்கள் ஒருவனுக்கு வரவில்லை எனில் அவன் கொலைகளை நேசிக்கும் ஹிட்லர்தனத்துக்கு ஆட்பட்டிருக்கிறான் என்று பொருள் (உதாரணம் ரொம்ப பழசு என கருதினால் மோடித்தனம் என மாற்றிக்கொள்ளவும். நடுநடுவே இந்துத்வா, சர்வாதிகாரம் எல்லாம் போட்டுக்கொள்ளலாம்).

சமீபகால என்கவுண்டர்கள் அரசியல் காரணங்களுக்காகவே செய்யப்பட்டிருக்கின்றன. கோவை மோகன்ராஜ் என்கவுண்டர் திமுக அரசின் மீது இருந்த கடுமையான அதிருப்தியை தண்ணீர் தெளித்து ஆற்றுவதற்காகச் செய்யப்பட்டது. இப்போது நடந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக காட்டுவதற்கு நட்த்தப்பட்டிருக்கிறது. இதில் மக்கள் நலன் என்று எதுவுமே இல்லை. மக்கள் சிலரை மகிழ்விக்க என்று வேண்டுமானால் சொல்லலாம். குற்றங்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வளர்பவை. அதனை கட்டுப்படுத்த ஒருங்கினைந்த நடவடிக்கைகள் தேவையேயன்றி காவல்துறைக்கு கொலை செய்யும் அதிகாரம் வழங்கப்படுவது காவல்துறை மேலும் குற்றமிழைக்கவே வழிசெய்யும்.

சட்டத்தால் தண்டிக்க முடியாது என்பதால் காவல்துறைக்கு அதிகாரம் வழங்குவது சரியென்பது இந்திய சட்டங்களை அவமதிக்கிற செயல்தான். காவல்துறைக்கு அதீத சுதந்தரம் தருவது கொள்ளையர்களுக்கு சுதந்தரம் தருவதைவிட அபாயகரமானது. இருளர் இன பெண்கள் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் இன்னமும் சம்பந்தப்பட்ட போலீசாரை சம்பிரதாயமாகக் கூட கைது செய்யவில்லை. இதுவரை நடந்த லாக்அப் மரணங்கள் எதற்காவது தண்டனை தரப்பட்டிருக்கிறதா? குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள பிணைப்பு என்பது எல்லா என்கவுண்டர் ஆதரவாளர்களுக்கும் தெரியும். பிறகும் இவர்கள் என்கவுண்டரை ஆதரிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களது கொலைரசனையன்றி வேறொன்று இருக்க இயலுமா?

கொலைகாரன் கொல்லப்படவேண்டும் என்று இதற்கு முன்பான என்கவுண்டர்களில் வசனம் பேசப்பட்டது. இப்போது கொள்ளையர்கள் சாகட்டும் என அது வளர்ந்திருக்கிறது. நாளை அந்த விதி எந்த எல்லைக்கும் செல்லலாம். ஒருவன் கொல்லப்பட்ட பிறகு அவனை குற்றவாளி என நிரூபணம் செய்தால் போதும் எனும் நிலை முழுமையான ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு நம்மை இட்டுச்செல்லும். சன்மானத்துக்காக சாதாரண ஆடு மேய்க்கும் நபர்களை கொன்று அவர்களை தீவிரவாதிகள் என கணக்கு காட்டிய சம்பவங்கள் ஆந்திராவில் நடந்திருக்கின்றன. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இந்த வேலையை ராணுவம் செய்கிறது. கொள்ளையனை கொல்வது சரி என்று அனுமதிக்கும் மனம் உங்களுக்கிருந்தால், கொல்லப்பட்டவனை கொள்ளையனாக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது.

துப்பாக்கி போலீசின் கையிலிருக்கு ஒரு கருவியென்றால், போலீஸ் அரசாங்கத்தின் கையிலிருக்கும் ஒரு கருவி. என்ன சிக்கலென்றால் அரசின் கருவிக்கு சொந்த விருப்புவெறுப்பு உண்டு. ஆயுதத்துக்கு அதிகாரம் தந்தால் அது எஜமானனின் இலக்குகளை மட்டுமே தாக்கும். இலக்கு எப்போதும் நமக்கு பிடிக்காதவர்களாகவோ அல்லது தேவையற்றவர்களாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நமக்கு ஒரு வங்கிக்கொளையன் கொல்லப்படுவது நியாயம் என்று தோன்றினால் நம் மகனுக்கு மதிப்பெண் போடாத ஆசிரியர் கொல்லப்படுவது நியாயம் என்று தோன்றலாம். நம் எண்ணத்தில் வன்மத்தை சுமந்துகொண்டு பிள்ளைகளிடம் நேர்மையாக நடக்கும் பழக்கத்தை நாம் எதிர்பார்க்க இயலாது. எல்லோரிடத்திலும் மனிதாபிமானம் இருக்கவேண்டும் என நினைப்பது பேராசையாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டும் என நினைப்பது நிச்சயம் பேராசையல்ல. கொலையை விரும்புவது மனிதத்தன்மையற்ற செயல், அதை அரசாங்கம் செய்தாலும் இந்த விதி பொருந்தும்.

0

வில்லவன்

என்கவுண்டர் மனோபாவம்

எந்தவொரு கிரிக்கெட் பந்து வீச்சாளரும் பொறாமைப்படும் வகையில் காவல் துறை தனது என்கவுண்டர் திறமைகளை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்தெடுத்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரத்தைப் பாருங்கள். 2008ம் ஆண்டு 5 முறை குண்டு வீசி ஆறு விக்கெட் எடுத்திருக்கிறார்கள். 2009ல் இரண்டுக்கு இரண்டு என்னும் செட் கணக்கில் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. 2010ல் நல்ல முன்னேற்றம். ஐந்து வாய்ப்புகள், ஏழு விக்கெட். 2011ல் மேட்ச் நடைபெறவில்லை. 2012 அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது. இரு மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், ஒரே நாளில், ஐந்து விக்கெட்டுகள்.

‘சென்னை மக்கள் பலரும் இதனை சரியான நடவடிக்கை என்று வரவேற்றுள்ளனர்.’ கொள்ளையர்கள் என்கவுண்டர்: மக்கள் பாராட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் என்று தலைப்புச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.   தமிழகத்தின் மிகப் பெரிய என்கவுண்டர் இதுவே என்று கண்டறிந்து கொட்டை எழுத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். அதே சமயம், வங்கிக் கொள்ளையர் ஐவரையும் ‘மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக’  சொல்லும் காவல்துறையின் வாதங்களில் உள்ள ஓட்டைகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் செய்திகளையும் அலசல்களையும் மென்று புசித்தபடி தன் வழியில்  சென்றுகொண்டிருக்கிறது படித்தவர்கள் அடங்கிய பெரும்கூட்டம். பிடித்திருக்கலாம், கொன்றிருக்கவேண்டியதில்லை என்னும் அதிகபட்ச முணுமுணுப்புடன் விவாதம் முடித்துக்கொள்ளப்பட்டுவிட்டது. மேலதிகம் விவாதம் தொடராததற்குக் காரணம், கொல்லப்பட்டவர்கள் கொள்ளையர்கள் என்று நமக்கு நாமே கற்பித்துக்கொள்ளும் தர்க்க நியாயம்.

இந்த தர்க்கத்தை வைத்துதான் அப்சல் குருவைத் தூக்கில் போடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்தத் தர்க்கத்தை வைத்துதான் தீவிரவாதம் பற்றியும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் சில கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். எது சரி, எது தவறு என்று முடிவு செய்கிறோம். எதற்கு கேள்வி எழுப்பவேண்டும், எதை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கிறோம்.

செப்டெம்பர் 2011 பரமக்குடி சம்பவத்தை எப்படிப் பார்க்கிறோம்?  பட்டவர்த்தனமாகக் காவல் துறையினர் நடத்திய படுகொலை என்றா அல்லது ‘கலவரத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்றா? காஷ்மிர் பிரச்னையை எப்படி பார்க்கிறோம்? வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் பேராட்டங்களை? பெருகிவரும் விவசாயிகள் தற்கொலையை? பெருகிவரும் விலைவாசியை? அதிகரித்துவரும் ஏழை-பணக்காரன் இடைவெளியை? ஒவ்வொன்றிலும் இரு தரப்புகளின் வாதங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒரு தரப்பை ஏற்று, இன்னொன்றை நிராகரிக்கிறோம். எந்த அடிப்படையில்? சரி, தவறுகளுக்கான நம் அளவுகோல் என்ன?

சற்றே கண்களைத் திறந்து பார்த்தால் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தக் கேள்விகளைக் கடந்தே நாம் வந்திருக்கிறோம் என்பது தெரியவரும். பெரும்பாலான கேள்விகளுக்கு நாம் பதிலே அளிப்பதில்லை என்பதும் தெரியவரும். பதில் தெரியவில்லை என்பதைவிட தெரிந்துகொள்ள விருப்பமில்லை என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில் என்கவுண்டருக்குத் திரும்புவோம். குஜராத் 2002 கலவரத்தின்போது இப்படித்தான் பல என்கவுண்டர்கள் நடத்தப்பட்டன. மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். விசாரணையின்போது, சோராபுதின், இஷ்ரத் ஜெகன் கொலை வழக்குகளுக்கும் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. நேர்மையான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் கிட்டத்தட்ட காவல் துறையினரின் அத்தனை என்கவுண்டர்களும் தடுமாற ஆரம்பித்துவிடும். வீரப்பனைத் தேடுகிறோம் என்னும் போர்வையில் நிகழ்த்தப்பட்ட அராஜகங்களை மறக்கமுடியுமா? வாச்சாத்தியில் நடைபெற்ற அத்துமீறல்களை மன்னிக்கமுடியுமா? சாதிக் கலவரம் என்று முத்திரை குத்தி தமிழகத்தின் தென் மாநிலங்களில் இன்று வரை தொடரும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்திவிடமுடியுமா?

சர்வதேச அளவில் இந்த விவாதத்தை நகர்த்திச் சென்றால் ஓர் உண்மை புலப்படும். ஜனநாயக நாடு என்று நாம் அழைக்கும் அனைத்து நாடுகளும் Police-state ஆகத்தான் மாறியிருக்கின்றன. அரசு என்பது ஓர் ஒடுக்குமுறை கருவியாகவே நீடிக்கிறது. அது வன்முறையைப் பிரயோகித்தே ஆட்சி நடத்துகிறது. வீரப்பன் கொல்லப்பட்டதையும் சதாம் உசேன் கொல்லப்பட்டதையும் கடாபி கொல்லப்பட்டதையும் எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் பல ஒற்றுமைகளைக் காணமுடியும். காவல் துறைக்கும் ராணுவத்துக்கும் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கினால் மட்டுமே ஓர் அரசால் நிலைத்திருக்கமுடியும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ‘காந்தியின் இந்தியாவுக்கும்’ இதுதான் அடிப்படை.

0

மருதன்

வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்

‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

0

ஹரன் பிரசன்னா

செல்ஃபோனில் ஆபாசப் படம்

ஆபாசம் என்றால் சமஸ்கிருதத்தில் ‘அதைப் போன்ற’, ‘பிம்பம்’, ‘பொய்யான’, ‘தவறான’, ‘கற்பனையான’ … போன்ற பல பொருள்கள் உள்ளன. சிற்பம் என்பதற்கும் ஓவியம் என்பதற்கும் சமஸ்கிருதத்தில் சித்ர என்ற ஒரே வார்த்தைதான் பயன்படுகிறது. சித்ர = முழுவதுமான முப்பரிமாணச் சிற்பம். சித்ரார்த = புடைப்புச் சிற்பம் – அதாவது ஒரு பாதிதான் இருக்கும்; மீதிப் பாதி கல்லோடு உள்ளே போயிருக்கும். சித்ராபாச = ஓவியம். அதாவது சிற்பம் போன்றது, ஆனால் சிற்பம் அல்ல, அதன் பிம்பம் மட்டுமே. இங்கே ஆபாச என்றால் சிற்பத்தின் இரு பரிமாண பிம்பம் என்ற பொருள்பட வந்திருப்பதைக் காணலாம்.

தமிழில் ஆபாசம் என்றால் பாலியல் மேட்டர், அஜால் குஜால் விஷயம் என்று எந்த நூற்றாண்டில் ஆனதோ, அறியேன்.

பாஜக அமைச்சர்கள் இரண்டு, மூன்று பேர் செல்பேசியில் பிட்டுப் படம் பார்த்து அதுவும் நியூஸ் சானல் வீடியோவில் தெரிந்ததால் மாட்டிக்கொண்டார்கள். இவர்களை ஜெயிலில் போடவேண்டும் என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார் பெரியவர் அண்ணா ஹசாரே. பொதுமக்கள் பலர் கொதித்தெழுந்து கொந்தளிக்கிறார்களோ இல்லையோ, ஊடகங்கள் அதனைச் செய்கின்றன.

பாலுணர்வைத் தூண்டும் அசையும் அல்லது அசையாப் படங்களை, அதற்குரிய வயது வந்தவர்கள் பார்ப்பதில், என்னைப் பொருத்தமட்டில் தவறு ஏதும் இல்லை. இந்த ஆபாசப் படங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும், இவர்களை அமைச்சர்களாக ஆக்கியதே தவறு என்று புனிதர்கள் பலரும் கொந்தளிப்பது கோமாளித்தனமாக இருக்கிறது.

இவர்கள் செய்த குற்றம் என்ன? சட்டமன்றத்தில் இருக்கும்போது பார்த்தது. இதில் சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பாக ஏதேனும் இருந்தால் அதன்படி இவர்களுக்குத் தண்டனை வழங்கலாம். ஆனால் அமைச்சர் பதவியிலிருந்து விலகச் சொல்வது அபத்தம். அதுவும், பெரும்பாலான மக்கள் தமிழ், இந்தி, இன்னபிற லோக்கல் சினிமாப் படங்களில் வரும் அப்பட்டமான பாலியல் குத்து நடனங்களை விரும்பி ரசித்தபடியே, இந்த அமைச்சர்களைக் கேள்விக்குள்ளாவது பெரும் ஜோக்.

நான் பாலியல் கதைகளைப் படித்திருக்கிறேன். இனியும் படிப்பேன். பாலியல் படங்களைப் பார்த்திருக்கிறேன். இனியும் பார்ப்பேன்.

வயது வந்தவர்கள் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுதலில் எந்தவிதத் தவறையும் நான் காணவில்லை. மறைத்துத்தான் செய்யவேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை. என்ன, பொது இடங்களில் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளலாம். சட்டமன்றம், வழிபாட்டு இடங்கள் என்றால் கொஞ்சம் நாசூக்காக நடந்துகொள்ளலாம்.

வேலை செய்யும் இடங்களில், வேலைக்கான விதிகள் இதுபோன்ற செயல்களைத் தடை செய்திருந்தால் இதனைச் செய்யாமல் இருப்பதுதான் சரி. அதுவும் ஆண்கள், பெண்கள் சேர்ந்து வேலை செய்யும் இடங்களில் ஆண்கள் பாலியல் படங்களைப் பார்ப்பது என்பது அருகில் அமர்ந்திருக்கும் பெண்களுக்குச் சங்கடத்தை வரவ்ழைக்கும். அதனால்கூட அக்கம் பக்கம் பார்த்து சரியாக நடந்துகொள்வது நல்லது.

ஆனால் ஒரேயடியாக இதென்னவோ, கொலைக் குற்றம் என்பதுபோல நடக்கும் கூத்துகள் தாங்க முடியவில்லை.

இந்தக் கூத்திலும் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன:

1. பாஜகவினர், தம்மை இந்து மதத்தைக் காக்க வந்த சக்தியாகச் சொல்லிக்கொண்டு அலைபவர்கள். இந்துப் பாரம்பரியம், இந்து தர்மம், யார் எப்படி உடை உடுத்தலாம், நம் சம்ஸ்க்ருதி என்ன என்றெல்லாம் லெக்ச்சர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இனியாகிலும் இப்படியெல்லாம் செய்யாமல், நாமும் பிறரும் ஒன்றுதான், எல்லோருக்கும் ஆபாசப் படங்களைப் பார்க்கப் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு வேலண்டைன்ஸ் டே போன்ற நேரங்களில் யாருக்கும் பிரச்னை செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு புத்தி கொடுக்கட்டும்.

2. ஆபாசப் படம் பார்க்க, பாலியல் புத்தகங்களை விற்க தடை ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இணையத்தில் சவிதா பாபி தளம் ஒரு காலத்தில் முடக்கப்பட்டது. இதுபோன்ற சட்டபூர்வமான தடைகள் எல்லாம் விலக்கிக்கொள்ளப்படவேண்டும். இந்தச் சட்டச் சீர்திருத்தங்களை பாஜக முன்னின்று நடத்திவைத்தால் நன்றாக இருக்கும். கர்நாடக மாநிலத்திலிருந்தே ஆரம்பிக்கலாம்.

0

பத்ரி சேஷாத்ரி 

கருத்துரிமை : சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும்

1

சல்மான் ருஷ்டியின் The Satanic Verses நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான Nirbasan (எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது.

கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று சல்மான் ருஷ்டிக்கு காவல் துறையால் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை (கொலை மிரட்டல்களை உற்பத்தி செய்தவர்களே அவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது). தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டைத் தடுப்பவர்களையும் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி நடந்த சம்பவத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மொத்தத்தில் இரு எழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம். எழுத்தாளர்கள் இருவரும் இஸ்லாமியர்கள். இவர்களை எதிர்ப்பவர்களும் இஸ்லாமியர்களே. ருஷ்டிக்கு இரானின் கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.

வங்கதேசத்துக்கு இன்று வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும் முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; முன்அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை. மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.

2

படைப்பாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுவது இங்கு புதிதல்ல. ஒரு புத்தக விமரிசனத்தின் அடிப்படையில் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் ராஜிவ் காந்தி அரசால் அக்டோபர் 1988ல் தடை செய்யப்பட்டது. 1990கள் தொடங்கி எம்.எஃப். ஹுஸைனுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவரது ‘ஆபாசமான’ படைப்புகள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடியெடுத்து வைத்தால் போட்டிகள் நடைபெறாது என்று சிவ சேனா அக்டோபர் 2006ல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. 2002 குஜராத் படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Parzania  என்னும் திரைப்படத்தை குஜராத் திரையரங்குகளில் திரையிடமுடியவில்லை. இந்தியாவில் பிறந்த கனடா எழுத்தாளரான ரோஹிந்தன் மிஸ்தரியின் Such a Long Journey  பம்பாய் பல்கலைக்கழகப் பாடப்பட்டியலில் இருந்து அக்டோபர் 2010ல் நீக்கப்பட்டது. தன் தாத்தா பால் தாக்கரேயை அவமானப்படுத்தும் வகையில் அந்நாவல் எழுதப்பட்டதாக உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா கருதியதாலும், பால் தாக்கரேயை அவமானப்படுத்துவது ‘மராத்தியர்களின் உணர்வை அவமானப்படுத்துவதற்குச் சமம்’ என்பதாலும் அந்நாவல் மாணவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.

அவ்வாறே, ஏ.கே. ராமானுஜனின் ராமாயணம் பற்றிய கட்டுரை டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டது. வெவ்வேறு வடிவில் 300 ராமாயணப் பிரதிகள் மக்களிடையே நிலவி வருவதைச் சுட்டிக்காட்டியதற்காக சங் பரிவார் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு அடிபணிந்து இந்தக் கட்டுரை விலக்கிக்கொள்ளப்பட்டது. காஷ்மிர் பற்றி அருந்ததி ராய் வெளியிட்ட கருத்துகளுக்காக அவர் அச்சுறுத்தப்பட்டார். Joseph Lelyveld  எழுதிய Great Soul, காந்தி பற்றிய ‘சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கொண்டிருந்ததால்’, நூல் விற்பனை குஜராத்தில் தடை செய்யப்பட்டது.

சித்தார்த்த தேப் எழுதிய இந்தியா குறித்த பயண-வரலாற்று நூலின் (The Beautiful and the Damned) முதல் அத்தியாயம் சில்சார் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. குப்தா எலெக்ட்ரிக் எஞ்சினியர்ஸ் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தவரும் ஐ.ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்து தொடுத்த மானநஷ்ட வழக்கின் அடிப்படையில், முதல் அத்தியாயத்தை நீக்கி புத்தகம் அச்சிடப்பட்டது. அரிந்தம் சவுத்திரியின் வர்த்தக உலகை முன்வைத்து, புகழ், செல்வாக்கு, செல்வம் ஆகியவை இந்தியாவில் வளர்ந்த கதையை விவரிக்கும் அத்தியாயம் இது. தடையுத்தரவுக்குப் பிறகு முதல் அத்தியாயம் நீக்கப்பட்டுவிட்டதால் முன்னுரைக்குப் பிறகு நேராக 72ம் பக்கத்துக்குப் புத்தகம் நகர்ந்துவிடுகிறது.

ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.ஹெச். லாரன்ஸ், விளாதிமிர் நபகோவ், அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டுள்ளார் சித்தார்த் தேப். ‘இவர்களுடைய படைப்புகளையும் என் புத்தகத்தையும் படைப்புரிமை ஒன்றிணைக்கிறது.  ஒரு எழுத்தாளர் அச்சமின்றி, தணிக்கைத் தடையின்றி, மிரட்டலின்றி தன் கருத்தைப் பதிவு செய்யும் உரிமை பற்றியது.’ மற்றொன்றையும் குறிப்பிடுகிறார் சித்தார்த் தேப். ‘சமகால இந்தியாவின் வரலாறு முழுமையாக உலகம் முழுவதிலும் கிடைக்கும்போது, இந்தியர்களுக்குப் பகுதியளவு மட்டுமே கிடைக்கிறது என்பது சோகமான முரண்நகை.’ அவர் தொடர்கிறார். ‘ஆனால் இதுவே இந்தியாவின் நிகழ்கால போக்கு பற்றி சில விஷயங்களைச் சொல்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களையும் செல்வந்தர்களையும் பற்றி எவ்வளவுதான் ஆய்வுப்பூர்வமாக எழுதினாலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கவியலாது.’ தன் முன்னுரையை அவர் இவ்வாறு நிறைவு செய்கிறார். ‘…உண்மையைச் சொல்லவேண்டும் என்னும் முயற்சியில்தான் இந்நூலைத் தொடங்கினேன். 45 பக்கங்களை நீக்கியதன் மூலம் உண்மையின் ஒரு கை வெட்டப்பட்டுவிட்டாலும், மிச்சமுள்ள பக்கங்களில் போதுமான அளவுக்கு உண்மை நிறைந்துள்ளது என்றே நம்புகிறேன்.’

3

ஊடக தணிக்கை முறை குறித்து கபில் சிபல் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டது பரவலாக விவாதத்துக்கு உள்ளானது. கபில் சிபலின் கருத்துகளை அப்படியே ஏற்காவிட்டாலும், தணிக்கை முறை ஊடகங்களுக்குத் தேவை என்று புதிதாகப் பதிவியேற்றிருக்கும் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கூறியதும் விவாதத்துக்கு உள்ளானது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்று தகுந்தமுறையில் கட்டுப்படுத்தப்படும் நிலையில், ஊடகத்துறை மட்டும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பது சரியல்ல என்றார் கட்ஜு.

ஏன் தணிக்கை அவசியம் என்பதற்கு கபில் சிபல் சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை. மன்மோகன் சிங்கையும் சோனியா காந்தியையும் ‘அவதூறு’ செய்யும் வண்ணம் இணையத்தில் பல படங்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன என்றார். பிறகு ‘மத உணர்வுகள் காயப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகத் தணிக்கை தேவை’ என்றார். பிறகு, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தகுந்தமுறையில் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றார். எதிர்ப்புகள் வலுத்ததும், ‘ஊடகம் தனக்கான ஒழுங்குமுறைகளை வகுத்துக்கொள்ளவேண்டும்’ என்று மட்டுமே தான் குறிப்பிட்டதாகச் சொல்லி வாதத்தை முடித்துக்கொண்டார்.

தணிக்கை முறை குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரபுலக எழுச்சி, ஆக்குபை வால்ஸ்ட்ரீட் என்று உலகம் தழுவிய அளவில் நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் இணையத்தளம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஒரே சமயத்தில் ஆளும் வர்க்கத்தின் பிரசாரக் கருவியாகவும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் ஆயுதமாகவும் இணையத்தளம் திகழ்கிறது என்பதால் எங்கே, எப்படி, எத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது என்று தெரியாமல் அரசாங்கங்கள் குழம்பிக்கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக்கொள்ளும் என்னும் மார்க்சிய உண்மையை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

4

நாம் இருவகையான தணிக்கை முறைகளைப் பற்றி இங்கே உரையாடிக்கொண்டிருக்கிறோம். சட்டப்பூர்வமான தணிக்கை முறை. சட்ட விரோதமான தணிக்கை முறை. தன் நாட்டின் பிரஜைகள் எப்படிப்பட்ட படைப்புகளை நுகரலாம், ஊடகங்கள் எப்படிப்பட்ட செய்திகளை அளிக்கலாம் என்பதை ஓர் அரசு நிர்ணயம் செய்து, சில விஷயங்களைத் தணிக்கை செய்கிறது. அதன்படி பல்வேறு காரணங்களுக்காக ஒரு படைப்பு சட்டப்படி தணிக்கை செய்யப்படுகிறது. ஆபாசமான, வக்கிரமான படைப்புகள், வன்முறையைத் தூண்டும் படைப்புகள், தேசத்தை பிளவுபடுத்தும் படைப்புகள் என்று வகைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் அளவுகோல்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த அளவுகோல்களை மீறும் படைப்புகள் முழுமையாகவோ பகுதியளவிலோ தணிக்கை செய்யப்படும். இது முதல் வகை தணிக்கை முறை. உதாரணத்துக்கு, டி.ஹெச். லாரன்ஸின் Lady Chatterley’s Lover, நபகோவின் Lolita ஆகிய நாவல்கள், அதிலுள்ள ‘ஆபாச உள்ளடக்கம்’ காரணமாகத் தணிக்கை செய்யப்பட்டன.

இரண்டாவது வகை தணிக்கை முறை, சட்டவிரோதமானது. சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் எம்.எஃப். ஹுஸேனும் சட்டவிரோதமான தணிக்கை முறையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள். முறைப்படி இவர்களது படைப்புகள் தணிக்கை செய்யப்படவில்லை; தடை செய்யப்படவும் இல்லை. ஆனாலும், இவர்களுடைய படைப்பு சுதந்தரம் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய மத பீடங்களும் அவர்களுடைய தீவிரவாத சித்தாந்தங்களும்தான். மாறாக, சித்தார்த்த தேபும் அருந்ததி ராயும் சட்டப்பூர்வமான தணிக்கையையும் ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்துத்துவத் தீவிரவாத அமைப்புகள் அரசியல் செல்வாக்கு பெற்றவையாக இருப்பதால் அவர்களுக்கு ஒவ்வாத படைப்புகள் வெளிவருவதில்லை. வெளிவந்தாலும் பலவந்தமான முறையில் தணிக்கை செய்யப்படுகிறது. (அருந்ததி ராய்மீது சுமத்தப்பட்ட தேச விரோத வழக்கு ஓர் உதாரணம்). இஸ்லாமிய அமைப்புகளுக்கு அப்படிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றாலும் அவர்களுடைய எதிர்ப்புகளுக்கு அரசு பணிந்துபோவதற்குக் காரணம் இஸ்லாமிய சமூகத்தின் ஓட்டுகளைப் பெறுவதுதான். சல்மான் ருஷ்டி விவகாரத்திலும் தஸ்லிமா நஸ்ரின் விவகாரத்திலும் அரசு அமைதி காத்ததன் பின்னணி இதுவே.

ஒரு படைப்பாளிக்குக் கட்டற்ற சுதந்தரம் அளிக்கப்படவேண்டும் என்று கோருபவர்கள் சட்ட விரோதமான தணிக்கை முறையை மட்டுமல்ல, அரசின் சட்டப்பூர்வமான தணிக்கையும்கூட சேர்த்தே எதிர்க்கிறார்கள். எது ஆபாசம் என்பதை எப்படி நிர்ணயம் செய்வது? எது வன்முறை? எது மத வெறுப்பு? எது தேச நலனுக்கு விரோதமானது? அளவுகோல்களை யார் நிர்ணயிப்பது? ஏன் நிர்ணயிக்கவேண்டும்? எது தனக்கு வேண்டும் என்பதை நுகர்வோர்தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர அரசோ பிற அமைப்புகளோ அல்ல என்பது இவர்களுடைய வாதம். மேலும், இந்த இரு வகை தணிக்கை முறைகளுக்கும் இடையில் பெரும்பாலும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை என்பதையும் நாம் காண்கிறோம். ஆளும் வர்க்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான கருத்துகள் இரு வகைகளிலும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.

5

அனைவருக்குமான கருத்துச் சுதந்தரம் என்பது சாத்தியமா? யாரும் எதைப் பற்றியும் பகிரங்கமாக விமரிசனம் செய்யலாமா? எந்தவொரு சமூகத்திலும் இது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. முதலாளித்துவ சமூகமாக இருந்தாலும் சரி, சோஷலிச, கம்யூனிச சமூகமாக இருந்தாலும் சரி. முறைப்படுத்தலும் கட்டுப்படுத்தலும் இல்லாத கருத்துச் சுதந்தரம் சாத்தியமில்லை. கவனிக்கப்படவேண்டிய விஷயம், இந்த முறைப்படுத்தல் யாருக்கு ஆதரவாக அல்லது எதற்கு எதிராக நிகழ்த்தப்படுகிறது என்பதைத்தான். உதாரணத்துக்கு, ஆக்குபை வால்ஸ்ட்ரீட் போராட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ஒபாமா அரசு ஒரு சதவீத பெரும் பணக்காரர்களை ஆதரிக்கிறதா அல்லது 99 சதவீத பிற அமெரிக்கர்களை ஆதரிக்கிறதா? இருவருடைய நலன்களும் கேள்விக்கு உள்ளாகும்போது, இருவருடைய நலன்களும் எதிரெதிராக நிறுத்தப்படும்போது, அரசாங்கம் யாருடைய நலனைத் தேர்ந்தெடுக்கிறது? ஆக, எந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக ஒரு அரசாங்கம் திகழ்கிறது என்பதைப் பொறுத்தே தணிக்கை முறையின் சரி, தவறுகளை நாம் விமரிசிக்க முடியும். இதன் பொருள், எதிர்க் கருத்துகளுக்கு இடம் கொடுக்கப்படக்கூடாது என்பதல்ல. இதுபற்றி பின்னர் விரிவாக உரையாடலாம்.

அலெக்ஸாண்டர் சோல்ஷனிஸ்டன், போரிஸ் பாஸ்டர்நாக் போன்றோரைச் சுட்டிக்காட்டி சோவியத் யூனியனில் படைப்பாளிகளின் கருத்துரிமை பறிக்கப்பட்டது என்று அலறும் அறிவுஜீவிகள் சல்மான் ருஷ்டியின் படைப்புரிமையையும் எம்.எஃப். ஹுஸைனின் படைப்புரிமையையும் ஒன்றுபோல் பாவிப்பார்களா? அவ்வாறு பாவிக்கவில்லை என்பதைத்தானே ஏ.கே. ராமானுஜனின் படைப்புரிமையும் அருந்ததி ராயின் கருத்து சுதந்தரமும் பறிக்கப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன?

6

சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விவாதங்களில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் ‘ஜனநாயகத்தின் தோல்வி’ பற்றிய கவலை.  இந்த இரு எழுத்தாளர்களின் படைப்பு சுதந்தரம் பறிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டதாகப் பல படைப்பாளிகளும் அறிவுஜீவிகளும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக ‘இந்தியர்களாகிய நாம் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்’ என்று இவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

ஆனால், சல்மான் ருஷ்டியின் செயல்பாடுகளை மற்றொரு படைப்பாளியான தஸ்லிமா நஸ்ரினே ஏற்கவில்லை என்பதுதான் உண்மை. ஃபத்வா என்றதும் பயந்து முல்லாக்களிடம் மன்னிப்பு கேட்டு, இப்போது உயிருக்கு ஆபத்து என்றதும் இந்தியாவுக்கு வருவதைத் தள்ளிப்போட்ட சல்மான் ருஷ்டி உண்மையில் ஒரு ‘கோழை’ என்று விமரிசிக்கிறார் தஸ்லிமா நஸ்ரின். ஒரு வகையில் இது உண்மைதான். ருஷ்டியோடு ஒப்பிட்டால் தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துகள் கூர்மையானவை; சமூக அக்கறை மிக்கவை. இஸ்லாத்தை மட்டுமல்ல இந்து மதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட ஏனைய மதங்களில் உள்ள பிற்போக்குத்தனங்களைத் தொடர்ந்து காட்டமாக விமரிசித்துக்கொண்டிருக்கிறார் தஸ்லிமா. ருஷ்டியின் எழுத்துகளில் (நான் வாசித்தவரை) அத்தகைய சமூக நோக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு படைப்பாளி சமூக அக்கறையுடன் மட்டும்தான் எழுதவேண்டுமா என்று எதிர்கேள்வி வரும். வேண்டியதில்லை என்று வைத்துக்கொண்டால், அத்தகையவர்களுக்காக எதற்காக நாம் அனைவரும் குரல் கொடுக்கவேண்டும்? சமூக அக்கறை இல்லாத ஒருவரது படைப்புகளை எதற்காக சமூகம் அக்கறையுடன் பரிசீலிக்கவேண்டும்?

சாதிய ஒடுக்குமுறைகளைத் தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்னை இந்தியர்களின் பிரச்னை அல்ல. அது தலித் சமூகத்தின் பிரச்னை. நக்ஸலைட்டுகள் என்னும் பெயரில் பழங்குடிகள் வேட்டையாடப்படுவது இந்தியப் பிரச்னை அல்ல. அது பழங்குடிகளின் பிரச்னை. விடுதலை வேண்டி போராடும் காஷ்மிரிகளின் பிரச்னை, இந்தியப் பிரச்னை அல்ல. அது காஷ்மிரின் பிரச்னை. இவர்களுடைய பேச்சுரிமையும் எழுத்துரிமையம் கருத்துரிமையும் அதிகார வர்க்கத்தின் பூட்ஸ் கால்களுக்குக் கீழே நசுங்கி கிடக்கின்றன. ஆனாலும், சல்மான் ருஷ்டியால் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளாமல் போனதைத்தான் நாம் நமது தேசிய அவமானமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுஜீவிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அது சாத்தியமில்லை. காரணம், எழுத்தாளர்கள் மக்களைக் காட்டிலும் மேலானவர்கள் அல்லர். மக்களுடைய உரிமைகளைக் காட்டிலும் மேலான உரிமைகளை அவர்கள் கோரமுடியாது. கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே!

0

மருதன்

சோ : ‘மோடியாக ஆசைப்படுகிறார் ஜெயலலிதா!’

தமிழ் பேப்பர் வாசகர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நான் கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவரும் காரியங்களுள் ஒன்று துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வது. காரியம் என்று சொன்னதை யாரும் தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது. நேற்று (14 ஜனவரி 2012) நடந்த 42வது ஆண்டு விழாவில் கூடுதல் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டேன். காரணம், விழா நடந்த இடம், வள்ளுவர் கோட்டம்.

ஆறரை மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் மூன்றரை மணிக்கெல்லாம் நியூஸ் சேனல்களில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடத் தொடங்கிவிட்டது. அத்வானியும் மோடியும் சென்னை வந்துள்ளனர்; சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பதாக. அடித்துப் பிடித்து வள்ளுவர் கோட்டத்தைத் தொட்டபோது மணி ஐந்தரை. தேசிய பிரமுகர்கள் வந்திருந்ததால் எக்கச்சக்க பாதுகாப்புக் கெடுபிடிகள். உள்ளே நுழைந்தபோது வள்ளுவர் கோட்டம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.

துக்ளக் சோ, மியூசிக் அகாடமியில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். காமராஜர் அரங்கத்தில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். வள்ளுவர் கோட்டத்தில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். அடுத்த ஆண்டு நேரு ஸ்டேடியத்துக்குத்தான் போகவேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல விஷயம். நிறைய மெகா ஸ்க்ரீன் டிவிக்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆடிட்டோரியத்தில் இடம் கிடைக்காதவர்கள் காரிடார் உள்ளிட்ட கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து கொண்டனர்.

வாசகர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி. முதலில் கேள்வி கேட்டவர் மைலாப்பூரில் இருந்து கல்பனா. எடுத்த எடுப்பிலேயே பெண் வாசகரா என்று தனக்கேயுரிய பாணியில் அலுத்துக்கொண்டார் சோ. முக்கியமாக, ஜெயலலிதா பற்றி நக்கீரனில் வெளியான செய்தி பற்றிக் கேட்டார் ஒரு வாசகர். நக்கீரனில் அப்படித்தான் செய்தி போடுவார்கள்; அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், அந்தச் செய்தியை ஹிந்து பத்திரிகை எடுத்து முதல் பக்கத்தில் போட்டது தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகச் சொன்னார் சோ. நக்கீரனில் படிக்காதவர்கள் எல்லாம் ஹிந்துவில் பார்த்துத்தான் செய்தியைத் தெரிந்துகொண்டார்கள். நக்கீரனில் வெளியானதை அழகாக மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் நக்கீரன் அளவுக்கு ஹிந்து தரம் தாழ்ந்து செயல்பட்டிருக்கவேண்டாம் என்று ஆதங்கப்பட்டார் சோ.

மன்மோகன் சிங்கையும் கபில் சிபலையும் வார்த்தைகளால் வதம் செய்துகொண்டிருந்தார் சோ. ஸ்பெக்ட்ரம் விஷயத்துல எதுவுமே நடக்கல..ராஜா மேல எனக்கு கான்ஃபிடன்ஸ் இருக்குன்னார் மன்மோகன் சிங். என்ன ஆச்சு? திஹார்ல இருக்கார் ராஜா. அடுத்து, சிதம்பரம் மேல தப்பே இல்லன்றார் இப்போ. அடுத்து அவருக்கு என்ன ஆகப்போகுதுன்னு தெரியல. மன்மோகனை விடுங்க. இந்த கபில்சிபல் இருக்காரே.. அடேயப்பா.. எதை எடுத்தாலும் இல்ல.. இல்லங்கறார். ஸ்பெக்ட்ரத்துல இழப்பா.. இல்லவே இல்லன்னார். காமன்வெல்த் ஊழல்லயும் இல்ல.. இல்லன்னார். இப்போ சிதம்பரம் விஷயத்துலயும் அதையேத்தான் செய்றார். இது எந்த அளவுக்கு போயிடுச்சுன்னா, யாரோ சிலர் சிதம்பரம் தீட்சிதர்கள்னு சொல்லிட்டு பிரசாதம் கொடுக்கப் போயிருக்காங்க..இவரு வழக்கம்போல சிதம்பரம்லாம் இல்ல இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார்.

மேடையில் அத்வானி, மோடி என்ற பெயர்கள் அடிக்கடி உச்சரிக்கப்பட்டன. குறிப்பாக, மோடியின் பெயருக்கு வந்த கைத்தட்டல்கள் அதிரடி ரகம். அத்வானி நாட்டின் மிகப்பெரிய தலைவர் என்றும் மோடி அவருடைய லெஃப்டினண்ட் என்றும் வர்ணித்தார் சோ. மோடி போன்ற செயல்திறன் மிக்க ஒரு தலைவரை நாம் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது மாபெரும் முட்டாள்தனம் என்றார். ரஞ்சி டிராஃபியில் சிறப்பாக விளையாடும் வீரரை தேசிய அணியில் இடம்பெறச் செய்வதுதான் புத்திசாலித்தனம். குஜராத்தில் சிறப்பாக செயல்படும் மோடியை தேசிய அரசியலுக்குக் கொண்டுவருவது புத்திசாலித்தனம் என்றார்.

அத்வானியை அண்ணாதுரையுடன் ஒப்பிட்டுப் பேசினார் சோ. கட்சிக்குள் திறமையுள்ள பல தலைவர்களை வளர்த்துவிட்டவர் அண்ணாதுரை. அவர்களுடைய முன்னேற்றம் தன்னை பாதிக்கும் என்று அவர் எப்போதுமே நினைத்ததில்லை. அந்த அளவுக்கு தன்னம்பிக்கை பெற்றவராக இருந்தார் அண்ணாதுரை. அவரைப் போலவே அத்வானியும் தன்னம்பிக்கை நிரம்பியவர். வாஜ்பாயைப் பிரதமராக முன்மொழிந்தவரே அத்வானிதான். மோடிக்கும் வழிகாட்டவேண்டியவர் அத்வானிதான் என்றார் சோ. அர்த்தம் புரிந்து ரசித்தனர் துக்ளக் வாசகர்கள்.

அன்னா ஹஸாரேவை வெளுத்துவாங்கினார் சோ. உண்ணாவிரதம் இருக்கிறேன் என்கிறார்; முடித்துவிட்டேன் என்கிறார்; உடம்பு சரியில்லை என்கிறார்; காங்கிரசை எதிர்த்துப் பிரசாரம் செய்வேன் என்கிறார்; பிறகு இல்லை என்கிறார். படுகுழப்பமான ஆசாமியாக இருக்கிறார். போதாக்குறைக்கு, கிரண் பேடி. ஒரு கொடியை வைத்துக்கொண்டு மேடைக்கு மேடை ஆட்டிக்கொண்டிருக்கிறார். கிரிக்கெட் மேட்சில் சியர் லீடர்ஸ் ஆட்டுகிறார்களே, அதைபோல என்றபோது கோட்டம் குதூகலித்தது.

இடையில் யாரோ ஒருவர் கொடுத்த துண்டுச்சீட்டு சோவிடம் தரப்பட்டது. கருணாநிதி பற்றிப் பேசச் சொல்லி அதில் எழுதியிருப்பதாகச் சொன்னார் சோ. அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர், சிவாஜி படத்துல நாகேஷையும் சேர்த்துக்கச் சொல்வாங்க. எதுக்கு? காமெடிக்கு. அந்த மாதிரி நான் எவ்ளோ சீரியஸான விஷயம்லாம் பேசிட்டு இருக்கேன். இடையில கருணாநிதி பத்தி பேசணுமாம்.

கருணாநிதிக்கு சமீபகாலமா என்ன பேசறதுன்னே தெரியல.. மாத்தி மாத்தி பேசறார். தான் தோத்ததுக்குக் காரணம் தேர்தல் ஆணையம்னு முதல்ல சொன்னார். அப்புறம் பார்ப்பான்லான் சூழ்ச்சி பண்ணித் தோற்கடிச்சுட்டதா சொன்னார். அதுதான் எப்படின்னு எனக்கு புரியல. ஒருவேளை விஜயகாந்த் அய்யர், சரத்குமார் சாஸ்திரிகள், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கனபாடிகள், ஜவாஹிருல்லாஹ் அய்யங்கார் இவங்கள்லாம் சேர்ந்து ஜெயலலிதாவை ஜெயிக்க வச்சுட்டதா சொல்றாரோ? என்று சொன்னபோது வாசகர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசறார் தெரியுமா? தலையில பயங்கரமான அடி விழுந்தா ஒண்ணுமே புரியாது. எங்கே இருக்கோம்னே தெரியாது. அந்த மாதிரி தேர்தல் தோல்வியால கருணாநிதி தடுமாறிப் போயிருக்கார். அதனாலதான் மாத்தி மாத்தி பேசறார். இப்போ தோனி சொல்றார் இல்லயா.. பேட்டிங்காலதான் தோல்வி..இல்ல இல்ல.. பௌலிங்காலதான் தோல்வி.. ஃபீல்டிங் மோசம்.. அம்பயர் சரியில்ல.. அந்த மாதிரி!

கருணாநிதி சொன்னதைக் கேட்டாலும் பிரச்னை, கேட்காமல் விட்டாலும் பிரச்னை. என்னுடைய பேச்சைக் கேட்டு கலைஞர் டிவியில் பங்குதாரர் ஆனதுதான் கனிமொழி செய்த தவறு என்கிறார் கருணாநிதி. அவர் பேச்சசைக் கேட்டா என்ன கதிக்கு ஆளாகணும்ங்கறதுக்கு இதைவிட என்ன பெரிய உதாரணம் வேண்டும் என்று கேட்டார் சோ. சொந்த பெண்ணுக்கே இப்படியாப்பட்ட ஆலோசனையைக் கொடுக்கற கருணாநிதி, தமிழ்நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆலோசனைகளைக் கொடுப்பார்னு நினைச்சுப் பாருங்க என்றார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்னு ஒண்ணு போட்டங்க. அதுக்கு என் பெயரை வைக்காதீங்கன்னு சொன்னாராம் கருணாநிதி. அதையும் மீறி பெயர் வைச்சுட்டாங்களாம். இப்போ அந்தத் திட்டம் காலி. ஆக, கருணாநிதி சொல்றதைக் கேட்டாலும் பிரச்னை. கேட்கலைன்னாலும் பிரச்னை. ஆக, கருணாநிதி பேச்சைக் கேட்டா உருப்பட முடியாதுன்னு அர்த்தம். அப்போ கருணாநிதி என்ன செய்யணும்? ஒதுங்கி இருக்கணும்.

கலைஞர் என்றால் என்ன? சாஸ்திரி அல்லது ஆர்டிஸ்ட். இப்போ ரஜினிகாந்த் ஒரு கலைஞர். அவரையும் சாஸ்திரின்னு சொல்லலாம். சத்யராஜ் சாஸ்திரின்னும் சொல்லலாம். கருணாநிதி நிறைய கல்யாணங்கள் பண்ணி வச்சிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காக அவரை சாஸ்திரின்னு சொல்லலாம் தப்பில்ல என்றார். கருணாநிதியைப் பற்றியே எதற்காக அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கேட்கிறீர்களா? அதற்கும்
பதில் சொன்னார் சோ. “சிலதையெல்லம் மீதி வைக்கக்கூடாது, அதற்காகத்தான்!’ இதுதான் சோ கொடுத்த பதில். அத்துடன் நிறுத்தவில்லை. “இதை ஏடிஎம்கே புரிஞ்சுக்கணும்’ என்றார். எந்த அர்த்தத்தில் சொல்கிறார் என்று புரியவில்லை.

அத்வானியைப் புகழ்ந்தது போலவே மோடியையும் புகழ்ந்தார் சோ. மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றிப் பேசினார். மோடி போல சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க ஜெயலலிதா ஆசைப்படுகிறார். தவறில்லை. ஆனால் அதற்கு இப்போது இருப்பது போல அல்லாமல் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும். அப்போதுதான் மோடியுடன் போட்டி போடமுடியும் என்றார்.

அத்வானி புகழ்ந்தாயிற்று. மோடியை மெச்சியாயிற்று. கருணாநிதியைத் திட்டியாயிற்று. அடுத்து, ஜெயலலிதாவைப் பாராட்டியாக வேண்டும். ஆரம்பித்தார். சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து நீக்கிய செயலைப் பாராட்டினார். அந்தக் காரியத்தைச் செய்ததில் ஜெயலலிதா காட்டிய துணிச்சலையும் நேர்த்தியையும் சிலாகித்தார். தவறு நடக்கிறது என்று தெரிந்தால் எத்தனை துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கிறார் ஜெயலலிதா என்பதற்கு இதுதான் சரியான உதாரணம் என்றார். ஜெயலலிதா தற்போது பெற்றுவரும் வெற்றி எம்.ஜி.ஆரால் கூட பெறமுடியாத வெற்றி என்றார்.

அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிக்குத்தான் அதிக பங்களிப்பு இருக்கப்போகிறது என்றார் சோ. அந்த அளவுக்கு வலிமையுள்ள கட்சி அதிமுக மட்டுமே என்பதையும் சொல்லத் தவறவில்லை. ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பு அது இது என்று சொல்லி மோடி பிரதமராக முடியாத பட்சத்தில் பாஜக ஆதரவு பெற்ற அமைச்சரவை அமைக்கும் சூழ்நிலை உருவாகுமானால் ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஆதரவளிக்கவேண்டும் என்றார். ஆண்டுவிழாவின் அர்த்தம் அரங்கேறியது. துக்ளக் வாசகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.

மன்மோகன் சிங் வீக்கான பிரதமர்னு அத்வானி சொல்லிட்டார். அவ்ளோதான். இந்த மனுஷன் எல்லா மேடைலயும் அதையே பேசறார். “என்னை அத்வானி வீக்கானவர்னு சொல்லிட்டார்… அதுல எனக்கு வருத்தம்’னு சொல்றார். யாரோ ஒருத்தர் கேட்டாங்க..தேவே கௌடாவை விடவா இவர் வீக்கானவர்னு.. ஆமாங்க.. அவராவது தூங்கணும்னு நினைச்சா தைரியமா தூங்கிடுவார். ஆனா இவர் அப்படி இல்லயே என்றார் சோ.

விழாவில் அத்வானியும் மோடியும் பேசினார்கள். கடந்தமுறை வெடிகுண்டு ஆபத்தில் இருந்து காப்பாற்றியமைக்கு ஜெயலலிதாவுக்கு நன்றி கூறினார் அத்வானி. அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி இயற்கையான கூட்டணி என்றார் அத்வானி. கொம்புத் தேனுக்கு யாரும் ஆசைப்படலாம்! துக்ளக் சோவை ஒன் மேன் க்ருசேடர் என்று வர்ணித்தார் அத்வானி. அதாவது, நான் தனி ஆளாம், எனக்குப் பின்னால யாருமே இல்லயாம்.. அதைத்தான் சொல்றார் அத்வானி என்றார் குறுக்கிட்டுப் பேசிய சோ.

மோடி பேசும்போது பல தமிழ் வார்த்தைகள் வந்தன. திருக்குறள் ஒன்றையும் சொன்னார். ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கொடுப்பதில் தமிழக வாக்காளர்கள் திறமையானவர்கள் என்று சொன்னார் மோடி. பரவாயில்லை. 1996 மற்றும் 2006 தமிழக தேர்தல் முடிவுகளை நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார் நரேந்திர மோடி. ஆச்சரியம்தான்!

0

ஆர். முத்துக்குமார்