அதிசயம்!

பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.

ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.

பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அமைதியாக.

’எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?’

‘தெரியவில்லை, சொல்லுங்கள்!’

’அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!’ என்றார் பூசாரி. ‘இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’

‘நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய். ‘ஆனால், எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.’

‘அதென்ன?’

அமைதியாகச் சொன்னார் பான்கெய். ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்!’

விடுபடும் வழி

ஒரு ஜென் துறவி. தியானத்தில் அமர்ந்திருந்தார்.

அவருடைய சிஷ்யர்களில் ஒருவன் குருவை அணுகினான். ’ஒரு சந்தேகம்’ என்றான்.

‘என்ன சந்தேகம்?’

‘தினமும் எழுகிறோம், தியானம் செய்கிறோம், சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், இந்தச் சங்கிலியில் இருந்து விடுபட வழியே கிடையாதா?’

‘உண்டே!’

‘என்ன வழி?’

‘எழவேண்டும், தியானம் செய்யவேண்டும், சாப்பிடவேண்டும், தூங்கவேண்டும், அவ்வளவுதான்!’

‘என்ன குருவே சொல்கிறீர்கள், ஒன்றும் புரியவில்லையே!’

‘புரியாவிட்டால், தினமும் எழுந்திரு, தியானம் செய், சாப்பிடு, தூங்கு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் துறவி.

ஓடிவிடு!

ஜென் துறவி ஒருவர். மிகவும் வயது முதிர்ந்தவர். பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது.

ஆகவே, அவர் தனது சிஷ்யர்களை அழைத்தார். ‘எனக்குப்பின் இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவது யார் என்று தீர்மானிக்கவேண்டும்’ என்றார். அதற்கு ஒரு போட்டியும் அறிவித்தார்.

போட்டி இதுதான்: சிஷ்யர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கவிதை எழுதித் தரவேண்டும், அதில் சிறந்த கவிதை எதுவோ அதை எழுதியவர்தான் ஆசிரமத்தின் புதிய தலைவர்.

உடனடியாக, சிஷ்யர்கள் கவிதை எழுத உட்கார்ந்தார்கள். சிறந்த சொற்கள், அற்புதமான கருத்துகள், பிரமாதமான சிந்தனைகளைக் கொட்டி நிரப்பிய பல கவிதைகளை அவர்கள் எழுதிச் சமர்ப்பித்தார்கள்.

அந்தத் துறவி எல்லாக் கவிதைகளையும் படித்தார். கடைசியாக அவர் தேர்ந்தெடுத்தது, ஒரு சமையல்காரனின் கவிதையை!

‘என்னது? இந்தச் சமையல்காரனா எங்களுக்கெல்லாம் குரு?’ மற்ற சிஷ்யர்கள் அதிர்ந்துபோனார்கள். ‘இதை நாங்கள் ஏற்கமுடியாது!’

‘நான் வைத்த போட்டியில் அவனுடைய கவிதைதான் வெற்றி பெற்றிருக்கிறது. அவர்தான் அடுத்த குருநாதர்’ என்றார் துறவி. சிஷ்யர்கள் எத்தனை முரண்டு பிடித்தபோதும் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால் எரிச்சலடைந்த சிஷ்யர்கள் அந்தச் சமையல்காரரைக் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட துறவி அவரை ரகசியமாக அழைத்தார். தன்னுடைய மேலாடை மற்றும் பாத்திரத்தை அவரிடம் கொடுத்து வாழ்த்தினார்.

அன்று இரவு, அந்தச் சமையல்காரர் ஆசிரமத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். வேறோர் கிராமத்தில் சென்று தங்கிக்கொண்டு தியானமும் கல்வியுமாக நேரம் செலவிட்டு ஞானம் பெற்றார், பெரிய ஜென் மாஸ்டரானார்!

நன்றி சொல்ல ஒருவன்

ஷிசிரி கோஜுன் என்ற ஜென் துறவி. அவருடைய ஆசிரமத்துக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான்.

திருடனைப் பார்த்த துறவி பயப்படவில்லை. பதறவில்லை. ‘உனக்கு என்ன வேணுமோ, எடுத்துக்கோப்பா!’ என்று சொல்லிவிட்டார்.

இதைப் பார்த்த திருடனுக்கு ஆச்சர்யம். ஆனால் அதற்காக வலியக் கிடைப்பதை விடமுடியுமா? கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு கிளம்பினான்.

அவன் புறப்படும் நேரம், ஷிசிரி கோஜுன் அவனை அழைத்தார். ‘கொஞ்சம் பொறுப்பா!’

‘என்ன சாமி? போலிஸைக் கூப்பிடப்போறீங்களா?’

‘அதெல்லாம் இல்லை. என்கிட்டேயிருந்து இத்தனை பொருள் எடுத்துகிட்டுப் போறியே, எனக்கு நன்றி சொல்லமாட்டியா?’

‘சொல்லிட்டாப் போச்சு. ரொம்ப நன்றி!’ என்றான் திருடன். ஓடி மறைந்துவிட்டான்.

சில நாள்கள் கழித்து, போலிஸ் அந்தத் திருடனைப் பிடித்துவிட்டது. அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். சாட்சி சொல்ல ஷிசிரி கோஜுனை அழைத்தார்கள். அவரும் வந்தார். நீதிபதிமுன் நின்றார். ‘ஐயா, இந்த இளைஞனை எனக்குத் தெரியும். ஆனால் இவன் திருடன் இல்லை!’ என்றார்.

‘என்னங்க சொல்றீங்க? எல்லாரும் இவனைத் திருடன்னுதானே சொல்றாங்க?’

‘இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இவனுக்குச் சில பொருள்களைக் கொடுத்தேன். அவன் அதற்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான். கணக்கு சரியாகிவிட்டது!’

ஒரே அடி!

ஒரு சிஷ்யன் தியானத்தில் அமர்ந்திருந்தான். அப்போது அவனுடைய குருநாதர் அந்த வழியாக வந்தார்.

‘குருவே, ஒரு விஷயம்’ என்றான் சிஷ்யன்.

‘என்ன?’

‘நீங்கள் சொன்ன ஜென் அம்சங்களை நான் முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிட்டேன் என்று உணர்கிறேன்’ என்றான் அவன்.

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘இதோ, என்னைப் பாருங்கள், தியானத்தில் உட்கார்கிறபோது ‘நான்’ என்கிற அந்த உணர்வு கரைந்து இல்லாமல் போய்விடுகிறது. எனக்குள் முழு வெறுமைதான் நிரம்பியிருக்கிறது!’

அவன் பேசிக்கொண்டே போக, குருநாதர் பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்தார். அவன் முதுகில் ஓங்கி அடித்தார்.

‘ஆ!’ என்று அலறியபடி எழுந்தான் அவன். ‘ஏன் என்னை அடித்தீர்கள்?’ என்று கோபப்பட்டான்.

‘நான் முழுவதும் வெறுமையால் நிரம்பிவிட்டேன் என்றாயே’ என்று புன்னகை செய்தார் குருநாதர். ‘அப்படியானால் இப்போது இந்தக் கோபம் எங்கிருந்து வந்தது? அந்த வெறுமையிலிருந்தா?’

இரண்டு கண்கள்

ஒரு ஜென் மாஸ்டர். அவரைச் சந்திக்க இளைஞன் ஒருவன் வந்தான். வணக்கம் சொன்னான். ‘ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்’ என்றான்.

‘என்ன சந்தேகம்?’

‘எனக்குப் பெரிய வாள் வீரனாகவேண்டும் என்று ஆசை’ என்றான் அந்த இளைஞன். ‘அரசரின் கையால் பரிசும் பாராட்டும் வாங்கவேண்டும், அப்புறம் நான் அவருடைய  படையில் சேரவேண்டும், பல போர்களில் ஜெயித்துச் சரித்திரத்தில் இடம் பிடிக்கவேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறேன். தப்பா?’

‘தப்பில்லை’ என்றார் ஜென் மாஸ்டர். ‘ஆனால், உனக்கு வாள்வீச்சு எந்த அளவு தெரியும்?’

‘இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்!’

‘ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய இலக்கைக் கற்பனை செய்து சந்தோஷப்படுவது இயல்புதான்’ என்றார் அந்த ஜென் குரு. ‘ஆனால் ஒரு விஷயம் புரிந்துகொள், உனக்கு உள்ளது இரண்டே கண்கள், அதில் ஒன்றை இலக்கின்மீது வைத்துவிட்டால், பாதையில் கவனம் பாதியாகிவிடும். அதற்குப் பதில் இரண்டு கண்களையும் இங்கே திருப்பினால், நீ விரும்பும் இலக்கைச் சீக்கிரம் சென்று அடையலாம், புரிகிறதா?’

மிச்சம் உள்ளது எது?

 

சியோனொ என்ற பெண் துறவி. புக்கொ என்ற ஜென் மாஸ்டரிடம் கல்வி கற்றுவந்தார்.

ஏனோ, பல வருடங்களாகப் படித்தும், பயிற்சி எடுத்தும்கூட சியோனொவுக்கு ஞானம் கிடைக்கவில்லை. இதில் அவருக்கு மிகவும் வருத்தம்.

ஒரு பௌர்ணமி ராத்திரி. சியோனொ ஆற்றில் தண்ணீர் பிடித்துக்கொண்டு ஆசிரமத்தை நோக்கி நடந்தார்.

சியோனொ தூக்கி வந்த குடம் மிகப் பழையது. பாதி வழியில் அது கீழே விழுந்து உடைந்துவிட்டது. தண்ணீர் தரையெங்கும் சிந்தி வீணாவதைப் பார்த்த சியோனொவுக்கு, ஞானம் பிறந்தது. ஒரு கவிதை எழுதினார்:

‘நான் என்னால் முடிந்தவரை இந்தக் குடத்தைக் காப்பாற்றப் பார்த்தேன்,
முடியவில்லை, உடைந்துவிட்டது,
இப்போது இந்தக் குடத்தில் துளி தண்ணீரும் மிச்சமில்லை,
இப்போது இந்தத் தண்ணீரில் துளி நிலாவும் மிச்சமில்லை!’