ராமலிங்க ராஜுவும் வியாசர்பாடி பாபுவும்

சந்திரமௌலி - தம் குடும்பத்தினருடன்

கடந்த முப்பது வருட பத்திரிகையாளர் வாழ்க்கையில் சந்தித்த பெரிய மனிதர்களைப் பற்றித்தான் நான் இதுவரை எழுதிவந்தேன். ஆனால் சுவாரசியம் என்பது பிரபலங்களின் பிரத்யேக சொத்து இல்லை. சாதாரணமான மனிதர்கள்கூட எனக்கு நல்ல மேட்டர்களையும், அனுபவங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இந்த அத்தியாயத்தில் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

லீப் வருடமான 2000ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதியை ஒட்டி வெளியான குங்குமம் இதழில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பிறந்த நாள் கொண்டாடும் வாய்ப்பு பெற்ற பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்த சிறுவர்கள் சிலரை பேட்டி காண்டு எழுதித்தரும்படிச் சொன்னார், அப்போதைய குங்குமம் பொறுப்பாசிரியர் பாவை சந்திரன்.

பிப். 29ஆம் தேதி பிறந்தவர்களைத் தேடிக்கொண்டு போனது ஒரு சுவையான அனுபவம். பல பள்ளிகளுக்கும் போன் செய்து விசாரித்தபோது, ரொம்ப சுளுவாக “எங்க ஸ்கூல்ல பிப் 29 பிறந்த குழந்தைகள் யாரும் இல்லையே” என்று சொல்லிவிட்டார்கள். எனது அடுத்த டார்கெட் மருத்துவமனைகள். ரொம்ப நைசாகப் பேசி, அவர்களின் பழைய ரெக்கார்டுகளைத் தேடி முந்தைய லீப் ஆண்டுகளில் பிப்.29ல் பிறந்தவர்கள் பத்துப் பதினைந்து பேர்களின் வீட்டு முகவரிகளை தேடிப்பிடித்தோம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் பிறந்த குழந்தைகளின் அம்மா, அப்பாக்கள் பெயரும், முகவரியும் மட்டுமே கிடைத்தனவே தவிர, குழந்தைகளின் பெயர் விவரங்கள் கிடைக்கவில்லை.

அடுத்து அந்த முகவரிக்கு போட்டோகிராபர் சகிதம் படை எடுத்தேன். சில முகவரிகளுக்குப் போனபோது, “நீங்க கரெக்ட் அட்ரசுக்குத் தான் வந்திருக்கீங்க! ஆனால், நாங்க வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது. இதுக்கு முன்னாடி இருந்தவங்க விவரம் எங்களுக்குத் தெரியாதே!” என்றார்கள். இன்னும் சில முகவரிகளில் “எஙக மகள் பிரவசத்துக்கு வந்திருந்தா! அப்ப இந்த அட்ரச கொடுத்திருக்கா. அவ இப்போ நாக்பூர்ல இருக்காளே” என்கிற ரீதியில் பதில் வந்தது. இதெல்லாம் பரவாயில்லை; ஒரு வீட்டில், தம்பதிக்கு டைவர்ஸே ஆகி இருந்தது. கடைசியில் தேறியது ஐந்தாறுதான்.

அந்தக் குழந்தைகளைக் கேட்டபோது, பிப்ரவர் 28ஆம் தேதியே என் பிறந்த நாளைக் கொண்டாடிவிடுவோம்; மார்ச் முதல் தேதிதான் என் பர்த் டே கொண்டாடுவேன்; தமிழ் தேதியில் கொண்டாடுவோம்; மூணு வருஷதத்துக்கு நட்சத்திரப் பிறந்த நாள்; லீப் வருடத்தில் ஆங்கிலப் பிறந்த நாள்; பிறந்த நாளெல்லாம் கொண்டாடறதில்லை” என்று பலவிதமான பதில்கள் வந்தன.

***

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை ரிசர்வ் வங்கி ஊழியர் ஒருவர் பெயரைக் கேள்விப்பட்டபோது, ரொம்ப வித்தியாசமாக இருந்ததால், ரிசர்வ் வங்கிக்குச் சென்று அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அவருடைய பேரைக் கேட்டால் சர்ப்பிரைஸ் ஷாக் அடிக்கும். ஆம், மின்சாரம்!

அவருக்கு இப்படிப் பெயர் வைத்த பின்னணியைக் கேட்டபோது அவர் சொன்னது: ” பகுத்தறிவுவாதியான என் தாத்தா, எந்த ஒரு ஜாதி, மதம் சாராத பெயராக எனக்கு வைக்க விரும்பி, நிறைய யோசித்து எனக்கு சூட்டிய பெயர்தான் மின்சாரம். என் பெயரை முதல் முறையாக் கேட்கும் பலர், “என்ன! மின்சாரமா?” என்று கேட்டுவிடுவார்கள். இல்லயெனில், கேட்க நினைத்து, ஆனால் கேட்கத் தயங்கி கேட்காமல் விட்டுவிடுவார்கள்” என்றார். வீட்டில் குழந்தைகள் குறும்பு செய்யும்போது, இவர் அடித்தால், உடனே ” மிஸ்டர் கரண்ட்! கொஞ்சம் பவர் ஆஃப் பண்ணிக்கறீங்களா?” என்று இவரைக் கலாய்ப்பார்களாம்.

***

98ல் குமுதத்தில் சாந்தி என்ற சிறுமியைப் பற்றி எழுதினேன். தி. நகர் குண்டூர் சுப்பையா பிள்ளை ஸ்கூல் எட்டாம் கிளாஸ் மாணவியான அவர் மாநில அளவில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான நடத்திய இரண்டு பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றார். அவரது பேச்சு அவ்வளவு சூப்பராக இருந்ததால் பரிசளிப்பு விழாவிலும் அவரைப் பேச வைத்தார்கள். அந்த மாணவியை பேட்டி காண அவளது வீட்டுக்குப் போனேன். தி. நகர் ஆலையம்மன் கோவில் பகுதியில் இருக்கும் ஒரு குடிசையில் வசித்த சாந்தியின் அம்மா வீட்டு வேலை செய்பவர். அப்பா பஞ்சர் ஒட்டுபவர். அந்தக் குடிசை, குடும்பத்தின் வறுமையை படம் பிடித்துக் காட்டியது.

இப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்து சாந்திக்கு, அபாரமான பேச்சுத் திறமை எப்படி வந்தது? சாந்தி சொன்னார்: ” பள்ளியில் தலைமை ஆசிரியரும், தமிழ் ஆசிரியையும் கொடுத்த ஊக்கம்தான்” தினமும் தன் குடிசைக்குள்ளே பேசிப்பழகி தன்னைப் போட்டிக்குத் தயார்ப்படுத்திக் கொண்ட சாந்தி, ” எனக்கு விசுவின் அரட்டை அரங்கம் பார்க்கப் பிடிக்கும். ஆனால் எங்க வீட்டில் டீ.வி. கிடையாது” என்றார். (ஒரு வேளை இப்போது இலவச டீ.வி. கிடைத்திருக்கலாம்! )

***

மும்பைவாசியான விஸ்வனாதன் பற்றி நான் ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் ஒரு கட்டுரை படித்தேன். அதன் பின் மும்பை சென்றிருந்தபோது, டைஜஸ்ட் ஆபீசுக்கு போன் செய்து, விஸ்வனாதனின் விலாசம் கேட்டு வாங்கிக்கொண்டு, அவரை சந்தித்து பேட்டி கண்டேன். விஸ்வனாதனின் ஸ்பெஷாலிடி என்ன தெரியுமா? பெரும் செலவு பிடிக்கும் இதயம், சிறுநீரக அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ள வசதியில்லாத ஏழைகளுக்கு மருத்துவத்துக்கு பண உதவி செய்யும் அறக்கட்டளைகளின் விலாசங்களை சேகரித்து வைத்திருந்தார். உதவி தேவைப்படும் நோயாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் அவரைத் தொடர்பு கொண்டால், அகில இந்திய அளவிலான அறக்கட்டளைகளின் விலாசங்கள், விண்ணப்பங்கள், மற்றும் இதர முக்கிய தகவல்களை அவர் இலவசமாக வழங்குவார். சில அறக்கட்டளைகள், விஸ்வனாதன் சிபாரிசு செய்யும் நோயாளிகளுக்கு உடனடியாக உதவி செய்யும் அளவுக்கு அவருக்கு அறக்கட்டலைகள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. தள்ளாத வயதிலும், இப்படி ஒரு சேவை செய்துகொண்டிருந்த விஸ்வனாதன் ஒரு வித்தியாசமான மனிதர்தான்.

***

நேர்மையான, வித்தியாசமான ஆட்டோ காரர்கள் பற்றி ஒரு சில பேட்டிகள் எழுதியதுண்டு. ஒரு நாள் வள்ளுவர் கோட்டம் அருகில் “என் தாயின் நினைவாக, தினம் ஒருவருக்கு சவாரி இலவசம்” என்று எழுதப்பட்ட ஆட்டோவைப் பார்த்தேன். ஆட்டோவில் கஸ்டமர் யாருமில்லாததால், அப்படியே ஓரங்கட்டி, பேட்டியை ஆரம்பித்தேன். ” என் அம்மா மேல எனக்கு ரொம்ப பாசம்! அவங்க இறந்தவுடன், அவங்க நினைவா ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய நினைச்சேன். தினம் யாராவது ஒருவருக்கு இலவசமா சவாரி போறேன்” என்றார்.

பயணிகள் ஆட்டோவில் தவறவிட்டுச் சென்ற பணம், நகைகளை போலிசில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ டிரைவர்கள் பற்றி சில பேட்டிக் கட்டுரைகள் எழுதி இருந்தாலும், புதிய தலைமுறை பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை குறிப்பிடத்தக்கது. செய்தித்தாள்கள் படிப்பவர்கள் அத்தனை பேரும் ராமலிங்க ராஜுவைப் பற்றிப் படித்திருப்பீர்கள். ஆனால் எத்தனை பேர் வியாசர்பாடி பாபுவைப் பற்றிப் படித்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாது. இரண்டையும் படித்த எனக்கு ஒன்றுக்கொன்று துளியும் சம்மந்தமில்லாத இந்த இரண்டு பேர்களையும் ஒப்பிட்டு ஒரு சிறு கட்டுரை எழுதவேண்டும் என்று தோன்றியது. கட்டுரையின் தலைப்பு: ராமலிங்க ராஜுவும்  வியாசர்பாடி பாபுவும். அதன் முக்கியமான பகுதிகள் இதோ:

ஆந்திரப்பிரதேசம் பீமாவரத்தில் பிறந்த ராமலிங்க ராஜு விஜயவாடாவில் உள்ல லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கா சென்று ஒஹையோ பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார். அடுத்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்தார். வியாசர்பாடி பாபு பிறந்து, வளர்ந்தது வடசென்னையின் வியாசர்பாடியில்தான். பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்கினதில்லை.

கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி, டெக்ஸ்டைல் என்று பிசினஸ் நடத்திவிட்டு, 1987ல் இருபது ஊழியர்களுடன் சத்யம் கம்ப்யூட்டர் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்தார் ராஜு. அமெரிக்க நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்ப காண்டிராக்ட்கள் அபரிமிதமாகக் கிடைக்க சத்யம் நிறுவனம் மடமடவென்று வளர்ந்தது, தகவல் தொழில்நுட்பத் துறையின் மாமனிதர் விருது, ஆசியாவின் பிசினஸ் லீடர் விருது, என்று ஏராளமான விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டவர் ராமலிங்க ராஜு.

இப்போது 48 வயதாகும் வியாசர்பாடி பாபு, 25 வருடங்களுக்கு முன்னால் வாடகைக்கு ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். இப்போதும் ஆட்டோதான் ஓட்டிக் கொண்டிருக்கிறார். காலையில் எட்டுமணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டால், மீண்டும் வீடு திரும்ப இரவு எட்டுமணியாகிவிடும். தினசரி பெட்ரோல் மற்றும் இதர செலவுகள் போக 150 ரூபாய் வரை நிற்கும். மாதத்தில் அதிகபட்ச வருமானம் ஐந்தாயிரம் ரூபாய்.

வியாசர்பாடி பாபுவின் சாதனை என்ன தெரியுமா? தன் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் மறதியாக தவறவிட்டுச் சென்ற துணிபையில் இருந்த மூணரை லட்சம் ரூபாயுடன் மறுபடியும் அந்தப் பயணி தேடிக்கொண்டுவருவார் என்று அவரை இறக்கி விட்ட இடத்திலேயே காத்திருந்தார். இரண்டு மணிநேரமாகியும் அவர் வராததால், நேரே போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்தார். மறுநாள் செய்தித்தாளில் வெளியான “நேர்மையான ஆட்டோ டிரைவர்” பற்றிய செய்தியைப் படித்துவிட்டு, பணத்தைப் பறிகொடுத்தவர் போலிஸ் ஸ்டேஷனுக்கு வர, ஆட்டோ டிரைவர் வியாசர்பாடி பாபு அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, பணம் உரியவரிடம் சேர்க்கப்பட்டது. சென்னை மாநகர கமிஷனர் பாபுவின் நேர்மையைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசளித்தார். வியாசர்பாடி பள்ளி ஒன்றில், பள்ளிக்கூடமே போகாத பாபுவை சுதந்தர தினத்தன்று சிறப்பு விருந்தினராக அழைத்து, தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் கௌரவத்தை அளித்தார்கள்.

அமெரிக்கா சென்று எம்.பி.ஏ. படித்த ராமலிங்க ராஜு என்ன செய்தார் என்பதை உலகமே அறியும்.

இந்தத் தொடரை ஆர்வத்துடன் படித்து, கருத்து சொன்ன, சொல்ல நினைத்த, சொல்லாத எல்லோருக்கும் என் நன்றி. ஒரு தாற்காலிக இடைவேளை இப்போது. மீண்டும் சந்திப்போம்.

கல்கி பாட்டி

அத்தியாயம் 24

கணவர் கல்கியுடன் திருமதி ருக்மிணி

1998ல் அமரர் கல்கியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட சமயத்தில் சாவி பத்திரிகையின் ஆசிரியரான சாவியிடம், பேசிக்கொண்டிருந்தபோது, அவர் அமரர் கல்கி பற்றிய நினைவுகளை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நான், ” நானும், என் மனைவியும் அவ்வப்போது கல்கி ராஜேந்திரன் சார் வீட்டுக்குப் போய் திருமதி கல்கியோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். இப்போது எண்பது வயசுக்கு மேல் ஆகிவிட்டாலும் கூட, கல்கி, ராஜாஜி, டி.கே.சி. பற்றி எல்லாம் நிறைய விஷயங்களைச் சொல்லுவார். அவை எல்லாம் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்” என்றேன். “அவங்களை ஒரு இன்டர்வியூ பண்ணிக்கிட்டு வாங்களேன்” என்றார் சாவி.

1980ல் துவங்கியது கல்கி பத்திரிகையுடனான எனது எழுத்துப் பயணம். கல்கிக்கான தலையங்கம் எழுதும் செவ்வாய் கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் காலை வேலைகளில் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் வசித்து வந்த கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் வீட்டுக்குப் போய் அவருடன் கட்டுரைகளுக்கான ஐடியாக்கள் டிஸ்கஸ் செய்வதை, எழுதிய மேட்டர்களை கொடுப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவருடைய வீட்டிற்கு போகிறபோதெல்லாம் திருமதி கல்கியை நான் பார்த்ததுண்டு என்றாலும், ஒரு தருணம் முக்கியமானது. எனக்குத்  திருமணமானபோது, என்னையும், என் மனைவியையும் தன் வீட்டுக்கு அழைத்து ஒரு டின்னர் கொடுத்தார் கல்கி ராஜந்திரன். அப்போதுதான் திருமதி கல்கியுடன் நீண்ட நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவரை நமஸ்கரித்து, விடைபெற்றபோது, சில நிமிடங்களுக்கு அழகான தமிழில் சரளமான நடையில் எங்களை வாழ்த்திவிட்டு, “ரெண்டுபேரும் அடிக்கடி வந்து போங்கள்” என்றார்.

அதன் பிறகு நாங்கள் அவ்வப்போது மாலை நேரங்களில் சென்று கல்கி பாட்டியோடு (அப்படித்தான் நாங்கள் குறிப்பிடுவோம். அவருடைய பெயர்: ருக்மணி) பேசிக்கொண்டு இருந்துவிட்டு வருவோம். “வயசாயிடுத்தில்லையா? எல்லாம் மறந்து போயிடுத்து” என்று அடிக்கடி சொன்னாலும், அவர் சொன்ன மலரும் நினைவுகளைத் தொகுத்தால் ஒரு புஸ்தகமே போடலாம். எங்களிடம் பேசும்போது அமரர் கல்கியை அவர் ‘ கல்கி மாமா’ என்றே குறிப்பிடுவார்.

மாயவரத்திலிருந்து பத்து மைல் தூரத்தில் உள்ள தலையூர் என்ற கிராமத்தில் பிறந்த ருக்மணிக்கு மூல நட்சத்திரத்திரம் என்பதால் பெற்றோர் அவருக்கு ஜாதகமே எழுதவில்லை. பின்னாளில் ஜாதகம் கேட்டவர்களுக்கு, “இவளோட ஜாதகம் எழுதாம விட்டுப் போச்சு” என்று சொல்லி மூல நட்சத்திர நெகடிவ் பாயிண்டை சமாளித்தார்கள். பெண்ணை பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பவில்லை. “பள்ளிக்கூடமே போகாத நான், தமிழின் தலை சிறந்த எழுத்தாளருக்கு மனைவியானது என்ன ஒரு விசித்திரம்!” என்று சொல்லி சிரிப்பார். “திருமணமாகி, சென்னை மாம்பலத்தில் கல்கி மாமாவோடு தனிக்குடித்தனம் நடத்த வந்தபோதுதான், அவருக்கு இந்த விஷயமே தெரியும். ஆனாலும், அவர் கோபித்துக் கொள்ளவில்லை. “அதனாலென்ன? இனிமேல் கத்துண்டா போச்சு!” என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் தாளவில்லை. அதன் பிறகே நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன்” என்று கல்கி பாட்டி கூறினார்.

கல்கி பாட்டி தன் திருமணம் பற்றி சொன்னது கல்கியின் கதை போலவே படு சுவாரசியம். அவருக்குப் பன்னிரெண்டு வயதானபோது வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். யாராவது நல்ல மனிதராகக் கிடைத்தால் இரண்டாம் தாரமாகக் கொடுக்கலாம் என்று கூட ஒரு எண்ணம் இருந்தது. காரணம், அந்தக் காலத்தில் இரண்டாம்தாரம் கல்யாணம் செய்துகொள்கிறவர்கள் தன் இளம் மனைவியை அன்போடும், ஆசையோடும் வைத்துக் கொள்வார்கள்; நகை நட்டு வாங்கிப் போடுவார்கள் என்ற அபிப்ராயம் நிலவியது. உள்ளூர் நபர் ஒருவருக்கு மூன்றாம் தரமாக ருக்மணியைக் கேட்டபோது, அவரது பாட்டி, “உள்ளூர் சம்பந்தம் உள்ளங்கை புண் மாதிரி” என்று சொல்லி தடுத்துவிட்டார்.

கல்கிக்கு 25 வயதானபோது, அவர் தேசத்தொண்டு, சத்தியாகிரகம் என்று பிசியாக இருந்ததார். கல்கியின் உறவினர்கள், ருக்மணியை பெண் பார்க்க வந்தார்கள். வந்திருந்த பெரியவர்களுக்கு அவர் நமஸ்காரம் செய்தபோது ஊர் கோவிலில் அதிர்வேட்டு சப்தம் கேட்டது. உடனே எல்லோரும், நல்ல சகுனம்; சுவாமி அனுகிரகம் கிடைச்சாச்சு!” என்றார்கள். சிறிது நேரத்தில் இன்னொரு அதிவேட்டு சப்தம் கேட்டதும், ” ஜாதகம் கூட பார்க்கணும்னு அவசியமில்லை; ஒண்ணுக்கு, ரெண்டு தடவையா தெய்வ அனுகிரகம் கிடைச்சுடுத்து! அது போதும்” என்று சொல்லிவிட்டார்கள். கிருஷ்ண மூர்த்தி, ருக்மணி என்ன பெயர்பொருத்தம்! என்று வந்திருந்தவர்களில் சிலர் சிலாகித்தார்கள். திருமணத்தை இரு தரப்புப் பெரியவர்களும் நிச்சயம் செய்தார்கள். இந்த பெண் பார்க்கும் படலத்தில் கல்கி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்த கல்கி கடிதம் மூலம் தகவல் அறிந்ததும், ” நான் பெண்னைப் பார்க்காமல் நீங்களாக எப்படி நிச்சயதார்த்தம் செய்யப் போச்சு? இந்தக் கல்யாணத்தில் எனக்கு சம்மதமில்லை” என்று பதில் கடிதம் எழுதிவிட, கல்கியை சமாதானப்படுத்த அவரது அண்ணன் சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். “என் மரியாதைக்குரிய திரு.வி.க. விடம் போய் நியாயம் கேட்கலாம்” என்றார் கல்கி. விஷயத்தை கேட்ட திரு.வி.க., ” பெரியவர்கள் உன் நல்லதுக்குத்தான் எதையும் செய்வார்கள்! எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று சொல்ல, கல்கி தன் திருமணத்துக்கு சம்மதித்தார். மணமகன் தரப்பில் இப்படி ஒரு கலாட்டா என்றால், பெண் வீட்டாரிடம் சிலர், “காந்திக் கட்சியில் சேர்ந்து ஜெயிலுக்குப் போன வரனுக்கு பெண் கொடுக்கிறாயே! நன்றாக யோசித்துத்தான் முடிவை எடுத்தீர்களா?” என்று கேட்டார்கள்.

“அந்தக் காலத்தில் கதர் வேஷ்டி கட்டிக்கொண்டு, கதர் சட்டை அணிந்து ஜானவாச ஊர்வலம் சென்ற முதல் மாப்பிள்ளை இவராகத்தான் இருப்பார். முகூர்த்ததுக்குக் கூட முரட்டுக் கதர் வேஷ்டிதான் கட்டிக்கொண்டிருந்தார்.” என்று சொல்லுவார் பாட்டி.

திருமணமாகி ஒரு வருடம் வரை கல்கிபாட்டி பிறந்த வீட்டிலேயே இருந்தார். அதன் பின் கல்கி சென்னையில் மாம்பலத்தில் ஒரு வீடு பார்த்து, மனைவியை அழைத்துக் கொண்டு போனார். அதற்காக பிறந்த வீட்டிலிருந்து, பாட்டியை கல்கியின் சொந்த ஊரான புத்தமங்கலத்துக்குக் கொண்டு வந்து விட்ட நாளன்று, திடீரென்று கலியாணத்துக்காக பாட்டிக்குப் பிறந்த வீட்டில் போட்ட 16 பவுன் தங்க செயினைக் காணோம். (16 பவுன்! இன்றைய விலை நிலவரப்படி இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பு) புகுந்த வீட்டாருக்கோ, செயினை உண்மையிலேயே காணோமா, இல்லை பாட்டியின் பிறந்த வீட்டார் செயின் போடாமல் நாடகம் ஆடுகிறார்களோ என்று சந்தேகம். இது ஒரு பிரச்னையானது. கல்கி, தன் மனைவியைக் கூப்பிட்டு, ” சங்கிலி போட்டது உண்மையா?” என்று கேட்டார். பாட்டி “ஆமாம்” என பதிலளித்தார். அடுத்து, அது காணாமல் போயிடுத்தா?” என்று கேட்க, பாட்டி, அதற்கும் ‘ஆமாம்” என்று பதில் சொன்னார். உடனே எல்லோரையும் பார்த்து, ” இவள் சொல்வதை நான் நம்பறேன்; இனிமே இதுபத்தி யாரும் வாயைத் திறக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டார். கல்கியும், பாட்டியும் சென்னை வந்த பிறகு, புத்தமங்கலத்திலிருந்து, காணாமல் போன செயின் கிடைத்துவிட்டதாக தகவல் வந்தது.

கல்கிக்கு ஊஞ்சல் ஆடுவது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். வீட்டில் நடு ஹாலில் ஊஞ்சலில் அமர்ந்து வீசி ஆடினால் அவருக்கு கற்பனை ஊற்றெடுக்குமாம். கல்கியும், பாட்டியும் அடிக்கடி பீச்சுக்குப் போவார்களாம். கால்களில் அலைகள் தவழ, வெகுநேரம் நின்று கொண்டே கல்கி கடல் அலைகளையும், மணலில் சாய்ந்தபடி, கண்களை மூடிக்கொண்டு, ” அலை ஓசை எத்தனை அற்புதமாக இருக்கு!” எனறு சொல்லியும் ரசிப்பாராம். தமிழ் மட்டுமில்லாமல், ஆங்கிலப் படங்களுக்குக் கூட பாட்டியை அழைத்துக் கொண்டு போவாராம். இங்கிலீஷ் படத்துக்குப் போவதறகு முன்னால், படத்தின் கதையை ஒரு குழந்தைக்குச் சொல்வது போல சொல்லுவாராம்.

ராஜாஜி சொன்னதன் பேரில், கல்கி தம்பதி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்கு சென்றார்கள். அங்கே எல்லோருக்கும் சமமான சம்பளம். திருமணம் ஆனவர் என்றால் ஐம்பது ரூபாய், பிரம்மச்சாரி என்றால் இருபது ரூபாய்.ஆசிரமத்தில் ஓய்வு நேரத்தில் எல்லோரும் நூல் நூற்க வேண்டும். இப்படி நூற்கப்பட்ட நூல் முழுவதும் , பிறந்த நாள் பரிசாக காந்திஜிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ராஜாஜி ஒரு கை தேர்ந்த சாப்பாட்டு ரசிகர். அவ்வப்போது சமையல் டிப்ஸ்கள் கூட கொடுப்பார். தேங்காய் சட்னி அரைக்கிறபோது கொஞ்சம் இஞ்சி, வெங்காயம் போடலாம்; ரவா உப்புமா செய்கிறபோது ரவையை லேசாக வறுத்து, வாணலியில் கொதிக்கும் நீரில் அதைப் போடுவதற்கு முன்பாக கொஞ்சம் நெய் விட்டால், உப்புமா கெட்டி தட்டாது; புரூட் சாலட்டில் கொய்யாப் பழம் சேர்க்கக்கூடாது. சேர்த்தால், கொய்யா விதை பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டு புரூட் சாலட் சாப்பிட்ட சந்தோஷத்தையே கெடுத்துவிடும். இவை எல்லாம் கல்கி பாட்டிக்கு ராஜாஜி கொடுத்த டிப்ஸ்.

டி.கே.சி. பற்றி பாட்டி சொன்னது:” அவரைப் போன்ற ஒரு அன்பான மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அவர் சென்னை வருகிறபோது வெறும் கையோடு வரமாட்டார். கூடவே பலாப்பழம், அல்வா, புழுங்கல் அரிசி, வாழைத்தார், உளுந்து என பல ஐட்டங்களோடுதான் வந்து இறங்குவார். குற்றாலம் போனாலும், அவரது விருந்தோம்பலில் திக்குமுக்காட வேண்டியதுதான். டி.கே. சி. வீட்டு இரண்டு சமையல்காரர்களுடைய கைமணமும் அத்தனை உசத்தியானது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், பார்த்திபன் கனவும் இன்றும் முப்பத்து முக்கோடி தமிழ் பதிப்பாளர்களாலும் பதிப்பிக்கப்பட்டு, சக்கைப் போடு போட்டுக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். திருமதி கல்கியின் புத்தகம் ஒன்று 1998ல் வெளியாகியது எத்தனை பேருக்குத் தெரியும்? திருமதி கல்கி, கோலம் போடுவதில் நிபுணர். அவர் பல்லாண்டுகளாக காகிதங்களில் வரைந்து வைத்திருந்த கோலங்களைத் தொகுத்து, ஒரு ஆங்கிலப் புத்தகம் வெளிவந்தது. அந்தக் காலத்தில் கல்கி வீட்டுக்கு வரும் பலரும், பாட்டியிடம், ‘தெருவில் உங்க வீடு எது என்பதை வாசலில் போட்ட கோலத்தை வைத்தே சொல்லிவிடலாம்” என்பார்களாம்.

என் மகன் கௌதம் பிறந்தபோது ஒரு பிற்பகலில் கல்கி பாட்டியை அழைத்துக் கொண்டு, திருமதி விஜயா ராஜேந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். பாட்டி குழந்தையை தன் ஸ்டைலில் அழகுத்தமிழ் வார்த்தைகளில் ஆசிர்வதித்து, நாணயங்களை வைத்து சுற்றி, கொடுத்த சிறிய பட்டுத்துணி எங்களுக்கு இன்றைக்கும் பொக்கிஷம்.

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்..

அத்தியாயம் 23

நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் சென்னை தி. நகர் சௌத் போக் ரோடில் வசித்து வருகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது கொடுக்கப்பட்டபோது, சென்னை மாநகராட்சி எங்கள் தெருவின் பெயரை “செவாலியே சிவாஜி கணேசன் சாலை” என்று மாற்றியது. பொதுவாகவே எங்கே ஆட்டோ ஏறினாலும், தி. நகர் சௌத் போக் ரோடு என்றவுடன், சிவாஜி வீட்டு கிட்டேயா?’ என்று டிரைவர்கள் கேட்கத் தவறமாட்டார்கள். சிவாஜியின் பரம ரசிகர்களான என் வயதான உறவினர்கள் சிலர், ” சிவாஜியை அடிக்கடி பார்ப்பியா? ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்; என்னை சிவாஜியைப் பார்க்க கூப்பிட்டுக்கிட்டுப் போ!” என்று கட்டளையிடுவார்கள். நான் உடனே டாபிக்கை மாற்றிவிடுவேன்.

உண்மை என்னவென்றால் நானே முதல் மரியாதை படம் ரிலீசாகும் வரை சிவாஜி வீட்டின் பெரிய கேட்டைத்தான் பார்த்திருக்கிறேன். முதல் மரியாதை வெளியாகி, பெருத்த வரவேற்பைப் பெற்றவுடன், கல்கிக்காக அவரை சந்தித்தேன். சிவாஜி என்ற சிங்கத்தைப் பார்க்கப் அவர் வீட்டுக்குள் போன என் கண்களில் முதலில் பட்டது கம்பீரமாக ஒரு கண்ணாடி ஷோ கேசின் உள்ளே நின்றுகொண்டிருந்த ஒரு நிஜ சைஸ் புலி.

சிவாஜி நடந்து அந்த வரவேற்பு அறைக்குள் வந்தபோது, எனக்குள்ளே ஒரு இனம் தெரியாத சிலிர்ப்பு. பொதுவாக சினிமா உலகம் பற்றியும்,குறிப்பாக முதல் மரியாதை பற்றியும் அப்போது பேசினார். “நீங்கள் இத்தனை படங்களில் நடித்ததற்கும், முதல் மரியாதையில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டதும், ” முதல் மரியாதையில நான் எங்கே நடிச்சேன்? நீங்க நடிக்கவே வேணாம்; சும்மா வந்திட்டுப் போனா போதும்னு அந்த டைரக்டர் பாரதி(ராஜா) சொல்லிப்புட்டாரில்ல. அப்புறம் எங்க நான் நடிக்கறது?” என்றார்.

ஒரு முறை பாரதி ராஜாவை பேட்டி கண்டபோது, சிவாஜி சொன்னததை அவரிடம் சொன்னபோது, அவர் முதல் மரியாதையில் சிவாஜியை இயக்கிய அனுபவத்தை சொன்னார். ஆற்றங்கரையோர குடிசையில் ராதா கொடுத்த மீனை ருசித்தபடியே நீண்ட வசனம் சொல்ல வேண்டிய காட்சி. பாரதி ராஜா, ‘ஸ்டார்ட்’ சொன்னதும் சிவாஜி வசனம் பேச ஆரம்பித்தர். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. ஐம்பது, அறுபது வினாடிகளுக்குப் பிறகு, சிவாஜி மீண்டும் முதலிலிருந்து வசனத்தை சொல்ல ஆரம்பித்தார். பாரதிராஜாவுக்கும், மற்றவர்களுக்கும் எதற்காக மறுபடியும் வசனத்தை ஆரபித்து சொல்கிறார் என்று புரியவில்லை. ஆனாலும், அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொத்த வசனத்தையும் பேசி முடித்தபோது, பாரதி ராஜா கட் சொன்னார்.

எல்லோரும் சிவாஜியின் முகத்தையே பார்க்க, ” எதுக்காக ரெண்டாவது தடவை முதலிலே இருந்து வசனத்தை ஆரம்பிச்சேன்னுதானே பார்க்கறீங்க?  சொல்லிக்கிட்டே வரும்போது சின்ன தப்பு பண்ணனேனே? கவனிக்கலையா நீங்க? மறுபடியும் இன்னொரு டேக் எடுக்கறதுக்கு பதிலா, அதே டேக்லயே மறுபடியும் முதல்லே இருந்து வசனத்தை பேசிட்டேன்” என்று சொன்னார்.

இந்த சம்பவத்தை சொன்ன பாரதி ராஜா, வசனம் பேசிக்கிட்டே வரும்போது ஒரு கணம் தப்பு ஏற்பட்டாலும், தடுமாறாமல், அதை புத்திசாலித்தனமா சமாளிக்க ஆன் தி ஸ்பாட் முடிவு எடுத்து, மறுபடி வசனத்தை பேசின அவன்தான்யா பிறவி நடிகன். என் டைரக்ஷன்லயும் அவன் நடிச்சிருக்கான் என்பதுல எனக்குப் பெருமை! ” என்றார் பூரிப்புடன்.

குமுதத்தில் பத்திரிகையாளர் மணா ‘ நதி மூலம்’ தொடரில் சிவாஜியைப் பற்றி எழுதினபோது, அந்தக் கட்டுரையில் இடம் பெற வேண்டிய ஒரு பாக்ஸ் மேட்டரை என்னை எழுதும்படி சொன்னார்கள்.(உங்க ஏரியாதானே! சிவாஜி பத்தி ஒரு சின்ன மேட்டர். அவரைப் பார்த்திட்டு நீங்களே எழுதிடுங்களேன் என்று குமுதத்தில் சொல்லிவிட்டார்கள்) அதற்காக சிவாஜியை சந்தித்தேன். அப்போது சிவாஜி தன் ஆரம்ப நாட்களைப் பற்றி மிகவும் உருக்கமாகப் பேசினார். அதன் சுருக்கம்:

“என் அப்பா மன்றாடியார் பகத்சிங் டைப் தேசியவாதி. நெல்லிக்குப்பத்துல ரயிலுக்கு வெடிகுண்டு வைக்கிறது யாருன்னு திருவுளச்சீட்டு போட்டபோது என் அப்பா பெயர் வந்தது. பிளான்படி வெடிகுண்டு வெச்சிட்டு ஓடறப்போ, பிரிட்டிஷ்காரன் சுட்டுட்டான். கால்ல பலத்த அடி. ஓடி வந்து மண்டையில் ஒரு போடு போட்டான். கேஸ் நடந்து ஏழரை வருஷ ஜெயில் தண்டனைன்னு தீர்ப்பாச்சு.” சொல்லும்போதே சிவாஜியின் குரல் கம்மியது. “ஜெயிலுக்குப் போன நாலரை வருஷத்துக்கெல்லாம் விடுதலையாகி வந்தவரைக் காட்டி என் அம்மா எனக்கு  சொன்னாங்க, ” இவருதாண்டா உன் தகப்பனார்!”

அந்த சமயத்துல நாங்க விழுப்புரத்தை விட்டுட்டு, திருச்சிக்குப் பக்கத்துல சங்கிலியாண்டபுரம் என்கிற கிராமத்துக்கு வந்திட்டோம். அந்த கிராமத்துல நான் உருண்டு விளையாடாத இடமில்லை. அங்கே வருஷா வருஷம் கட்டபொம்மன் நாடகம் நடக்கும். அதைப் பார்க்கிறப்போ, நமக்கு இஞ்செக்ஷன் போட்டாப்புல இருக்கும்.நாமளும் நடிக்கணும்னு உடம்புல ஸ்பிரிட் ஏறும். அந்த வெறிதான் என்னை நாடகக் கம்பெனியில சேர வெச்சுது. அதற்கு அப்புறமும் நான் வாழ்க்கையில சந்திச்ச கஷ்டங்கள் ஏராளம்; சோகங்களும் சொல்லிமாளாது.

நான் இன்றைக்கு யாருக்காவது நன்றிக் கடன் பட்டிருக்கேன்னா அது ரெண்டு பேருக்குத்தான். ஒண்ணு ஆண்டவனுக்கு; இன்னொண்ணு பராசக்தி படத்தை தயாரிச்ச பார்ட்னரான பெருமாளுக்கு. ரொம்ப வெளிப்படையா சொல்லணும்னா என்னோட வாழ்க்கையும், வசதியும் பெருமாள் போட்ட பிச்சை” ரொம்ப உருக்கமாகப்பேசினார் சிவாஜி.

1997ல், சிவாஜிக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட்டபோது குமுதத்துக்காக சிவாஜியை சந்தித்தேன். மனுஷர் ரொம்ப ஜாலி மூடில் இருந்தார். இரண்டு சிறுமிகள் சிவாஜிக்கு பொக்கே கொடுத்தபோது, அவர்கள் இருவரையும் உச்சி மோந்து, முத்தமிட்டுவிட்டு, ” உங்க அப்பன் உங்களுக்கு சாப்பாடே போடறதில்லையா? இப்படி இளைச்சு போயிட்டீங்களே!” என்று ஜோக் அடித்தார் சிவாஜி. அந்த இரண்டு சிறுமிகள் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும்தான்! அவர்களுக்கு சோறு போடாத அப்பன் வேறு யார்? சாட்ஷாத் சூப்பர் ஸ்டார்தான்!

‘எனக்கு சுயநலம் குறைச்சல். மத்தவங்க சந்தோஷப்பட்டா, அதைப் பார்த்து சந்தோஷப்படற கலைஞன் நான். இவ்வளவு நாள் தகுதியான ஒருத்தன் இருக்கிறது தெரியாம இருந்து, இப்ப தெரிஞ்சு, தாதா சாஹேப் பால்கே விருது கொடுத்து கௌரவிச்சிருக்காங்களேன்னு நம் தமிழ் நாட்டு ஜனங்கள் எல்லாம் சந்தோஷப்படறதைப் பார்க்கிறபோது, எனக்கு ரெட்டை சந்தோஷமா இருக்கு.” என்று சிவாஜி சொன்னபோது அவர் முகத்தில் நிஜமாலுமே ரெட்டை சந்தோஷம்.

தொடர்ந்து பராசக்தி நாட்களைப் பற்றி நினைவு கூர்ந்தார் நடிகர் திலகம். ‘அது ரத்தக் கண்ணீர் வடிச்ச சோகமான காலம். சினிமா உலகம் இரும்புக்கோட்டை மாதிரி இருந்தது. புதுசா ஒருத்தன் அத்தனை சுலபமா உள்ளே நுழைஞ்சிட முடியாது. என்னை பலர் ஜீரணிச்சுக்கலை. ஒரு சவுண்டு இஞ்சினியர் நான் வசனம் பேசினதைப் பார்த்துட்டு, “மீன் மாதிரி வாயை தொறந்து, தொறந்து மூடி வசனம் பேசுறானே! இவனெல்லாம் நோ கட் பாடி”ன்னு சொன்னார். (நோ கட் பாடி என்பது ‘இவனெல்லாம் எங்கே தேறப்போறான்னு அர்த்தம் கொண்ட அந்தக் கால சினிமா உலக வார்த்தை)

‘உங்களுடைய நீண்டகால, நிலைத்த வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?” என்றபோது, ” நான் ஆறு வயசுல நடிக்க வந்தவன். மேடையிலதான் நான் நடிப்பை கத்துக்கிட்டேன் என்பதால, என் நடிப்புல எப்போதுமே ஸ்டேஜ் இன்ஃப்ளுயன்ஸ் உண்டு. ஆனால், காலத்தோட சேர்ந்து, நானும் என்னோட நடிப்பு பாணியை கொஞ்சம், கொஞ்சமா மாத்திக்கிட்டு வந்ததுதான் பெரிய பிளஸ் பாயிண்ட். எனக்கு கடவுள் பக்தி நிறைய உண்டு. உழைப்பின் மேல் நம்பிக்கை உண்டு. ஆரம்ப காலத்துல பலரும் என்னை அங்கீகரிக்க மறுத்தபோது, டைரக்டர் (கிருஷ்ணன்) பஞ்சு, ” நீ கவலைப்படாதே! பிற்காலத்துல எல்லாரும் உன்னத்தான் ஃபாலோ பண்ணுவாங்க!” என்று அடிக்கடி சொல்லுவார்.

இந்தியன் படத்தில் ஹாலிவுட் மேக்-அப் மேன் உதவியோடு கமல் முதியவராக நடித்தபோது, தேசிய அளவுல அங்கீகாரம் கிடைச்சது. ஆனா அவரைவிட குறைஞ்ச வயசுல அப்பர் வேஷத்துல தொண்டுக் கிழவராக நீங்க நடிச்சிருக்கீங்க. அந்தக் காலத்துலயே ஒரே படத்துல ஒண்ணுக்கொண்டு சம்மந்தமில்லாத ஒன்பது கேரக்டர்ஸ் பண்ணி இருகீங்க! அதுக்கெல்லாம் பெரிய அளவுல அங்கீகாரம் கிடைக்கலையேன்னு வருத்தப்பட்டதுண்டா?” என்று சற்றே தயக்கத்துடன் கேட்டேன். “அந்தக் காலத்துல ஏது இத்தனை வசதி? நானேதான் அப்பர்சுவாமிகளா மேக்-அப் போட்டுக்குவேன். அப்ப ஜனங்க ரசிச்சாங்க! இப்போ இருக்கறது மாதிரி நிறைய வசதிகள் இருந்தா இன்னும் என்னென்னவோ செய்திருக்கலாம்” என்று வருத்தம் கலந்த நழுவலாக பதில் வந்தது.

இந்தக் காலத்தில் சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் பற்றிய கேளவிக்கு அவர் ஒரு பஞ்ச் பதில் சொன்னார் பாருங்கள்! ” அந்தக் காலத்துல நான் (திறமையை) வெச்சிக்கிட்டு, வஞ்சனையா பண்ணினேன்? இந்தக் காலத்துல ஏகப்பட்ட பேர் வராங்க. இவங்க எல்லாம் (திறமையை) வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணறாங்க?” அப்பப்பா! அசந்து போனேன் நான். சிவாஜி மேலும் தொடர்ந்தார்: ” நடிகன்னா நிறைய திங்க் பண்ணணும். காலையில பாத் ரூம்ல நான் நிறைய யோசனை பண்ணுவேன். பகல்ல சாப்பிட்ட பிறகு, உடம்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தாலும், திங்க் பண்ணாம இருக்க மாட்டேன். நடிக்க வந்திட்டு, தீவட்டி மாதிரி நின்னா சீக்கிரமே வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

‘இத்தனை வருஷ அனுபவத்துல, இப்போ எப்படி நடிக்கணும்னாலும் ஃபூன்னு ஊதிடுவீங்க இல்லை?’

டைரக்டர் சீனை சொன்னதும், நான் செஞ்சு காட்டறேன். கொஞ்சம் கூட, குறைய இருக்கும். எப்படி வேணும்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு நடிச்சுக் காட்டுவேன். ஏதாவது சேஞ்ச் வேணுமென்றால் சொல்லுவார்கள். முதல் டேக்கில் அவர்களுக்கு முழு திருப்தி கிடைக்கலைன்னா, இன்னொரு டேக் போயிடுவேன். வீட்டுல இருந்தா வெட்டியா பொழுது போகும்; செட்டுல இருந்தா வசனம் பேசினா பொழுதுபோகும்; அதான் வித்தியாசம்.

“இத்தனை வருடங்களின் எத்தனையோ விதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், இன்னமும் நீங்கள் ஏற்று நடிக்க விரும்பும் கேரக்டர் ஏதாவது உண்டா?” என்று கேட்டதும், “ஓ! இருக்கே! பெரியார் வேஷத்துல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆண்டவன் அனுகிரஹம் இருந்தா நிறைவேறும்” என்றார். பதிலைக் கேட்டு நான் லேசாக சிரித்தேன். என் சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக, ‘ எதுக்கு சிரிக்கறே? பெரியாரா நடிக்க, ஆண்டவன் அனுகிரஹம் வேணும்னு சொன்னதுக்காகவா? பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு நிறைய இருக்கே?”

இப்போது அவர் சிரித்தார்.

முதல் கோடீஸ்வரன்

சின்னத்திரையில் அழுகாச்சி தொடர்கள் எடுத்தும், நடித்தும் கோடியில் சம்பாதித்தவர்கள் இருந்தாலும், அமிதாப் பச்சன் குவிஸ் மாஸ்டராக இருந்து நடத்தின சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியான கோன் பனேகா கரோர்பதியில் ஜெயித்து ஒன்றுக்குப் பின்னால் ஏழு பூஜ்ஜியங்கள் எழுதப்பட்ட காசோலையை வாங்கின முதல் இந்தியக் குடிமகன் என்ற பெருமைக்குரியவர் மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ் வர்த்தன் நவாதே. (அப்புறம் ஜனவரி, பிப்ரவரி என்று ஒரு வரி விடாமல் பிடித்தம் செய்து மீதித் தொகையைத்தான் கொடுத்தார்கள்)

அமிதாப்பின் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாகப் பார்த்த கோடானுகோடி பேரில் நானும் ஒருவன், சாதாரணமான ஒரு கதையைக் கூட தங்கள் கைவண்ணத்தில் திரைக்கதை என்ற நாகாசு வேலை செய்து, ஒரு சினிமாவாக எடுக்கும் வெற்றிகரமான ஃபார்முலாவைக் கடைபிடித்து, நமக்கு மிகவும் பரிச்சயமான குவிஸ் நிகழ்ச்சியை ஒரு விறுவிறுப்பான ஃபார்மேட்டில் கொடுத்து அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சிதான் கோன் பனேகா கரோர்பதி. ஆரம்பம் முதலே போட்டியில் வென்று கோடீஸ்வரன் ஆகப் போவது யார் ? என்ற கேள்வி எல்லோருக்கும் டென்ஷனான சஸ்பென்ஸ் கொடுத்தது.

கோடீஸ்வரன் ஆன ஹர்ஷ் வர்தன்னின் அப்பா மும்பை போலிசில் டெபுடி கமிஷனராக இருந்து ரிடையர் ஆனவர். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். போட்டியில் ஜெயித்தபோது ஹர்ஷ் வர்தன் ஏற்கனவே இரண்டுமுறை எழுதி வெற்றி கிட்டாத நிலையில் மீண்டும் ஐ.ஏ.எஸ். பரிட்சைக்கு தன்னைத் தீவிரமாக தயார்படுத்திக் கொண்டிருந்தார். அதற்குப் படித்த விஷயங்கள், இங்கே கைகொடுத்தன. (ஐ.ஏ.எஸ். ஆகியிருந்தால் நேர்மையான வழியில் ஒரு கோடி சம்பாதிக்க எத்தனை வருஷங்கள் ஆகி இருக்கும்?)

மும்பையைச் சேர்ந்த ஹர்ஷ் வர்தன் கரோர்பதியில் ஜெயித்தபோது, அவரது பேட்டி முதன் முதலில் மும்பை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கல்கிக்கு வாராவாரம் மும்பை செய்திகளை எழுதிக்கொண்டிருந்த ஜெயஸ்ரீராஜ், அவரை பேட்டி கண்டு கல்கியில் எழுதினார். அது வெளியாகி இரண்டு மாதங்கள் கழித்து, கிராஸ் வோர்டு புத்தகக் கடையில் சென்னைவாசிகளை நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவதற்கு வந்திருந்தார் ஹர்ஷ். சென்னையின் கே.பி.சி. நிகழ்ச்சி ரசிகர்கள் ஏராளமானவர்கள் அந்த நிகழ்ச்சிகு வந்திருந்தார்கள். அப்போது ஹர்ஷ் வர்தன் நவாதேவை பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது.

அன்றைய தினம் அவர் சொன்ன மிக முக்கியமான ஒரு செய்தி: ” கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஜெயித்த பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது; ஆனால் நான் மாறவில்லை” என்பதுதான்.

“ஹர்ஷ்! கரோர்பதி ஆன தருணம் எப்படி இருந்தது?”

“அது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு தருணம். ஒரு நிமிஷத்துக்கு எனக்கு ஒண்ணுமே புரியலை. அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கைத்தட்டல்; சந்தோஷக் கூக்குரல்கள். அமிதாப் என்னை வாழ்த்தி, கைகுலுக்கிவிட்டு, கட்டித் தழுவினபோதுதான் என்ன நடக்குது என்பதையே நான் புரிந்துகொண்டேன். அன்றைக்குப் போட்ட ஆட்டோகிராஃப்கள் எத்தனை என்பது எனக்குத் தெரியாது! திடீரென்று வந்த செலிப்ரட்டி ஸ்டேடஸ் காரணமாக சந்தோஷம் ஒரு பக்கம் என்றாலும், அதனைத் தொடர்ந்து தினமும் ஏகப்பட்ட போன் கால்கள். எப்படித்தான் எல்லோருக்கும் என் போன் நெம்பர் கிடைத்ததோ தெரியவில்லை; இன்னொரு பக்கம் தினமும் நூற்றுக் கணக்கான கடிதங்கள் வருகின்றன. முழு விலாசம் தெரியாதவர்கள், கே.பி.சி. கரோர்பதி ஹர்ஷ்வர்தன் நவாதே, மும்பை” என்று எழுதினால் கூடப் போதும், தபால் துறை ஊழியர்கள் என்னிடம் டெலிவரி செய்துவிடுகிறார்கள். பள்ளிகள் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் மத்தியில் பேச அழைக்கிறார்கள்; என் பங்கேற்பு அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தரும் என்பதால் முடிந்தவரை நானும் கலந்துகொள்கிறேன் ” என்றார்.

“கரோர்பதியில் ஜெயித்தது லக்கா?”

“எனக்கு ரொமபவே தெய்வ நம்பிக்கை உண்டு. ஆனால் குருட்டு அதிர்ஷ்டத்தில் துளியும் நம்பிக்கை கிடையாது. நிறைய உழைக்க வேண்டும்; உழைப்பு நிச்சயம் அதற்கேற்ற ஊதியத்தைக் கொடுக்கும்” என்றார்.

அறிவுபூர்வமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயித்தவருக்கு மாடலிங் வாய்ப்புகளும், சினிமாவில் நடிக்கவும் அழைப்பது பற்றிக் கேட்டபோது, “சினிமாவில் நடிப்பதில் எனக்குத் துளியும் ஆர்வமில்லை. கண்டிப்பாக ‘நோ’ சொல்லிவிட்டேன். இன்னொரு தமாஷ் தெரியுமா? சில பேர் எனக்கு பெண் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, வந்துவிட்டார்கள். சிலருக்கு என்னைவிட, நான் ஜெயித்த பணம்தான் அட்டிராக்ஷன். உள்ளூர் வங்கிகள் முதல் அயல்நாட்டு வங்கிகள் வரை தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, ஜெயித்த பணத்தை எங்களிடம் முதலீடு செய்யுங்கள் என்கிறார்கள்; இன்னும் சிலர், பங்கு சந்தையில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம் என ஆலோசனை சொல்கிறார்கள். ஆனால் எனக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்; இந்த திடீர் புகழ் தாற்காலிகமானது; இன்னொருவர் கரோர்பதி நிகழ்ச்சியில் ஜெயித்துவிட்டால், எல்லோரு கவனமும் அவர் மீது நகர்ந்துவிடும்; சிவில் சர்வீஸ் தேவு எழுதி, அப்பா போலவே போலிஸ் துறையில் பணியாற்றுவதுதான் என் லட்சியம்” என்றார்.

‘கோடி ரூபாய் ஜெயித்திருக்கிறீர்களே! உங்களுக்கென்று என்ன வாங்கிக்கொண்டீர்கள்? உங்கள் பெற்றோர்களுக்கு என்ன வாங்கிக்கொடுத்தீர்கள்?” என்ற கேள்விக்கு, ” நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பல ஊர்களுக்கும் போகவேண்டி இருப்பதனால், எனக்கு புது டிரஸ் நிறைய வாங்கிக்கொண்டேன். என் பெற்றோர்களுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.

“கரோர்பதி நிகழ்ச்சிக்குப் பிறகு, பல தரப்பினரிடமும் குவிஸ் நிகழ்ச்சி பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உபயோகமான டிப்ஸ் கொடுங்களேன்”

“நாள்தோறும் செய்தித்தாள், பத்திரிகைகள் படியுங்கள்; முக்கியமான விஷயங்களை மனதிலோ, டைரியிலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; எந்த தகவலுமே உபயோகமில்லாத தகவல் இல்லை; எப்போதாவது, எங்கேயாவது பயன்படும்”

கே.பி.சி. நிகழ்ச்சியில் அமிதாப், ஹர்ஷ் வர்தனிடம் கேட்க கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி கோடி ரூபாய் ஜெயித்த பிறகு, அவரிடம் பலரும் பல கேள்விகளைக் கேட்டாலும், தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணி தன்னிடம் கேள்வி கேட்டதைப் பற்றி சொன்னார். “நான் கோடி ரூபாய் ஜெயித்த செய்தி எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குடிசைப் பகுதி மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. அங்கே தான் எங்கள் வீட்டு வேலை செய்யும் பெண்மணியும் வசிக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட அவர், என்னிடம், ” ஐயா! நீங்க நிறைய பணம் ஜெயிச்சிருக்கீங்களாமே?” என்று கேட்டார். “ஆமாம்! கோடி ரூபாய்!: என்று நான் பதில் சொன்னேன். நான் சொன்னது அவருக்குப் புரியவில்லை, மீண்டும் ஒரு கேள்வி கேட்டார், ” கோடி ரூபாய்னா எவ்ளோ பெருசு?”

நான், ஹர்ஷ் வர்தன் நவாதேவிடம் விடைபெறும்போது, என் மனசை குடைந்துகொண்டிருந்த ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டேன். “ஹர்ஷ்! வரி போக எவ்வளவு பரிசு கொடுத்தார்கள்?” ஹர்ஷ் கூலாக சொன்னார், ” 45 லட்சம் ரூபாய் வரி பிடித்துக் கொண்டு மீதிதான் கைக்கு வந்தது. ஏறத்தாழ பாதி பரிசுப் பணத்தை வரியாக செலுத்தியது பற்றி எனக்கு துளியும் வருத்தமில்லை; நேர்மையான ஒரு குடிமகனாக அந்தக் கடமையை செய்த சந்தோஷம் கிடைத்தது!

இப்போது ஹர்ஷ் வர்தன் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்? அவருக்கு ஐ.பி.எஸ். கிடைத்ததா? எப்படி இருகிகிறது காக்கிச் சீருடை அனுபவம்? என அறிய ஆவலாக இருக்கிறேன்.

அமிதாப்பின் கரோர்பதி நிகழ்ச்சியை உல்டா பண்ணி சன் டீ.வி.யில் சரத் குமார் நடத்தியது கோடீஸ்வரன் நிகழ்ச்சி. அமிதாப்பின் நிகழ்ச்சிக்குப் பின்னணியில் மூளையாக இருந்து நடத்தியவர் சித்தார்த்த பாசு. அதே போல சரத் குமாரின் நிகழ்ச்சிக்கு மூளையாக இருந்தவர் போர்ன்விடா குவிஸ் புகழ் டெரிக் ஓ பிரயன். கொல்கத்தாகாரர். கோடீஸ்வரன் நிகழ்ச்சி சம்மந்தமாக அவர் சென்னை வந்திருந்தபோது, அவரை சந்தித்து பேட்டி கண்டேன்.

அப்போது அவரிடம், “டான்சனியாவின் தலைநகரம் என்ன? தூங்காத மிருகம் எது? எந்த வருடம் டுனிசியா சுதந்திரம் அடைந்தது? கணவனும், மனைவியுமாக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்? என்பது போன்ற பொது அறிவுத் தகவல்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு அவசியம்தானா? என்று ஒரு கேள்வியைக் கேட்டதும், “என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? அறிவு என்பது ஒரு மனிதனுக்கு அழிவில்லாத பொக்கிஷம். ஒரு முறை அதை நீங்கள் பெற்றுவிட்டால் அதன் பிறகு அதை அழிக்கவே முடியாது” என்றார். உடனே, நான், நீங்கள் சொல்லும் இதே கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே எங்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் கவிஞரான ஔவையார் ஒரு நாலு வரி செய்யுளில் சொல்லி இருக்கிறார். என்று சொல்லிவிட்டு, நான் பள்ளிக்கூடத்தில் படித்த “வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது” என்ற செய்யுளை சொல்லி, அதன் அர்த்தத்தையும் விளக்கினேன். ஆச்சரியப்பட்டுப் போனார் டெரிக்.

“எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்! அந்த செய்யுளை எனக்கு ஒரு காதிதத்தில் எழுதிக்கொடுங்கள். கோடீஸ்வரன் முதல் எபிசோடில் இதை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்றார். நானும் அப்படியே எழுதிக்கொடுத்தேன். கோடீஸ்வரன் முதல் எபிசோடை நான் பார்க்காததால், சரத் குமார் அதை சொன்னாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.

சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் சென்னை வந்திருந்த டெரிக்கிடம் கேஷுவலாகப் பேசிக்கொண்டிருந்தபோது, கோடீஸ்வரன் அனுபவம் பற்றிக் கேட்டேன். அவர் சொன்ன ஒரு வரி பதில், ” அதை ஏன் இப்போது நினைவு படுத்துகிறீர்கள்?”

ஆயுத காண்டம்

அத்தியாயம் 21

மோகன் தாஸ்

எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் தமிழக காவல் துறையில் பணியாற்றிய மோகன்தாஸ் ஒரு சுவாரசியமான மனிதர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்; இவரை ஆலோசனை செய்யாமல் எம்.ஜி.ஆர். முக்கிய முடிவுகளை எடுக்க மாட்டார்; எம்.ஜி.ஆருக்கு கண்ணும், காதும் மோகன்தாஸ்தான் என்றெல்லாம் சொல்வார்கள். அவர் ரிடையர் ஆனவுடன், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் அவர் வசித்த உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்த அவரது பிரத்யேக அறையில் (அதற்கு செல்லமாக “டென்” என்று பெயரிட்டிருந்தார்) கல்கிக்காக அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அதற்கு முன்பும், பின்னரும் கூட சில தடவைகள் அவரை சந்தித்திருக்கிறேன் என்றாலும், சொன்ன விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால், ரிடையர் ஆனதும் அளித்த பேட்டி முக்கியமானது.

அவர் உத்தியோகத்தில் இருந்தபோது விவரமாகப் பேச முடியாமல் போன விஷயங்கள் உட்பட சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். பழைய போட்டோக்கள் சிலவற்றை தன் சொந்த புகைப்பட ஆல்பத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். “நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானீர்கள்? மலையாளி என்பதால்தானா?” என்று கேட்டபோது, ” அவர் என்னை தமிழ்நாடு போலிசின் இன்டலிஜென்ஸ் பிரிவின் தலைவராக்கினார். 24 மணி நேரமும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பு அது. மாநிலம் முழுவதும் என்ன நடக்கிறது? என்பதை மட்டுமின்றி, பக்காவான இன்டலிஜென்ஸ் நெட் ஒர்க் மூலமாக அடுத்து எங்கே என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட அறிந்து முதலமைச்சருக்கு தெரிவிக்கக் கடமைப் பட்ட பதவி அது. எம்.ஜி.ஆரும், நானும் என்று இல்லை, ஒரு மாநில முதலமைச்சருக்கும், ஐ.பி. தலைவருக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கவே செய்யும்” என்று விளக்கியவர், தனது பதவிக்காலத்தில் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட சில சங்கடங்களையும் கூட தயங்காமல் பகிர்ந்துகொண்டார்.

“ஐ.பி. தலைவராக நான் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தது, பலருடைய பொறாமையை சம்பாதித்துக் கொடுத்தது. நான் என் மகள் திருமணத்துக்காக ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு கேரளாவுக்குப் போயிருந்த சமயம், மரியாதை நிமித்தம் அப்போதைய கேரள முதலமைச்சர் கருணாகரனை சந்தித்தேன். இரண்டே நிமிட சந்திப்புதான் அது என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் அதை அரை மணி நேர உரையாடல் என்று செய்தியாக்கிவிட்டது.

என்னை எப்படியாவது சங்கடத்தில் மாட்டிவிடவேண்டும் என்று காத்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரிடம் போய், ” நான் எம்.ஜி.ஆர்.பற்றிய ரகசியங்களை கருணாகரன் மூலமாக ராஜிவ் காந்திக்குச் சொல்லி அனுப்பி, எம்.ஜி.ஆர். மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக கதை கட்டிவிட, எம்.ஜி.ஆரும் அதை நம்பிவிட்டார். மகள் திருமணத்துக்கு பத்தே நாட்கள் இருந்த நிலையில், என் லீவை ரத்து செய்து, பணிக்குத் திரும்ப உத்தரவிட்டார். பணிக்குத் திரும்பிய என்னை, பழைய பதவியில் தொடர விடாமல், ஒரு டம்மியாக ஓரிடத்தில் உட்காரவைத்தார்கள்.  இந்த உதாசீனம் என்னை ரொம்ப பாதிக்கவே, ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்புறம் நிலைமை சீரடைய, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டேன்” என்றும் விளக்கினார்.

ஓய்வு பெற்ற பிறகு, எம்.ஜி.ஆர் பற்றி மோகன்தாஸ் ஒரு புத்தகம் கூட எழுதினார். “எம்.ஜி.ஆர்: தி மேன் அண்ட் தி மித் ” என்று தலைப்பு. அந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

ராஜிவ் காந்தி படுகொலை நடந்தபோது சிறப்பு புலனாய்வுக் குழு ராஜிவ் படுகொலையைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்ற கோணத்திலேயே புலனாய்வினை மேற்கொள்வது சரியல்ல என்ற அவரது கருத்து கூட சலசலப்பை ஏற்படுத்தியது. இதே கருத்தை அடிப்படையாக வைத்து மோகன்தாஸ்,  ஆங்கிலத்தில் ஒரு நாவல் கூட எழுதினார்.  ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், சந்திரா சுவாமி என்று எந்தப் பெயர்களையுமே நேரிடையாகக் குறிப்பிடாமல் நாவலில் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அந்த நாவலின் மூலமாக அவர் சொல்ல வந்தது, நம் ஊரில் இருக்கும் அந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள், தங்கள் தலைவரது ஊழல் காரணமாக கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைப் போக்கி, மீண்டும் ஆட்சிக்கு வர அந்த தலைவரையே பலியாக்கி, அனுதாப அலையை வீசச் செய்யும் வியூகத்தை வகுக்கிறார்கள். அந்தப் படுகொலையை, அந்தத் தலைவரின் மீது கோபம் கொண்ட அயல்நாட்டு போராளிக்குழுவின் மூலமாகச் செயல் படுத்துகிறார்கள். அயல் மண்ணின் போராளிக் குழு, தலைவரது படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிதான் என்பது அந்த நாவலின் ஹைலைட். அந்த நாவல் எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை.

மோகன்தாஸ் சி.பி.ஐ. யில் இருந்த நாட்களில் அவர் துப்பு துலக்கிய கேஸ்கள் பல. உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரது தம்பி தன் 60 வது பிறந்த நாளைக்கொண்டாடியதன் அடிப்படியில், விசாரணை நடத்தியதில் அந்த நீதிபதி பொய்யான வயது கொடுத்து வேலைக்குச் சேர்ந்தது அம்பலமானது.  அதன் பிறகு, அந்த நீதிபதி தானாகவே முன் வந்து பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதாகச் சொன்னார் மோகன்தாஸ்.

தன் சர்வீசின் ஆரம்ப காலத்தில் தூத்துக்குடியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொன்னார் மோகன்தாஸ். அப்போது தூத்துக்குடி ரௌடியிசத்துக்குப் பேர் போன ஊராம். அங்கே, இவர் கையாண்ட ரௌடி தூத்துக்குடி கொம்பன் கேஸ் மிகப் பிரபலம். அந்தக் கொம்பன், மேலே ஏழெட்டு கொலை கேஸ்கள் இருந்தன. ஆனால் அவன் மீது போலிஸ் கை வைத்தது இல்லை. அவனைப் பிடிக்க சரியான ஒரு தருணத்துக்கு பொறுமையோடு காத்திருந்து, சாமர்த்தியமாகப் பிடித்து, கோர்ட்டில் நிறுத்தி, அவனுக்கு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்தார் மோகன்தாஸ்.

அவர் சொன்ன இன்னொரு சுவாரசியமான கொலை வழக்கில் நான்கு பேர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் மூன்றாவது, நான்காவது நபர்கள் தங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று சொன்னார்கள். ஆனால் அந்த கேஸின் முதல் தகவல் அறிக்கையில் அந்த நான்கு பேருடைய பெயர்களுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மோகன்தாஸ் தீவிர புலன் விசாரணை நடத்தினார். துப்பு துலங்கியது. முதல் இருவரும்தான் கொலையோடு சம்மந்தப்பட்டவர்கள். பர்சனல் விரோதம் காரணமாகப் பழி வாங்கும் நோக்கத்துடன் மற்ற இரண்டு பேர்களின் பெயர்களும் கேஸில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட நாலு பேர்களில் தக்க ஆதாரங்களைத் திரட்டி முதல் இருவருக்குத்தான் கொலையில் சம்மந்தமுண்டு; மற்ற இருவரும் சம்மந்தமில்லாத அப்பாவிகளென்று நிரூபித்து, அந்த இருவருக்கும் விடுதலை கிடைக்கச் செய்தார்.  இதை நீதிபதிகள கூட பாராட்டினார்கள்.

மனைவியுடன்

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இந்தியா விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்துவந்த ஆதரவு நிலைபாடு அனைவருக்கும் தெரியும். விடுதலைப்புலிகள் மற்றும் இதர போராளிக் குழுக்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் மோகன்தாஸ். காக்கிச் சீருடைப் பணிக்காலத்தில் அவரது மாபெரும் சாதனை என்று நான் நினைப்பது அவர் விடுதலைப் புலிகளிடம்  நடத்திய ஆயுதப் பறிப்புதான். அது நடந்தபோது கூட அந்த ராஜ தந்திர வியூகம் பற்றி பற்றி விரிவாகப் பேசாத மோகன்தாஸ் ரிடைர்மென்ட்டுக்குப் பிறகு என்னிடம் விரிவாகப் பேசினார்.

மோகன் தாஸ் என்னிடம் விவரித்ததை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: “விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதமேந்தித் திரிந்து வந்த காலம் அது. வேதாரண்யம், சென்னை போன்ற ஒரு சில இடங்களில் நடந்த சம்பவங்கள் காரணமாக மத்திய அரசு போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என நினைத்தது. ஆனால் அதைச் செய்கிற பணியை எம்.ஜி.ஆரிடம் விட்டுவிட்டது. இது பற்றிப் பேச என்னை அழைத்தார் முதலமைச்சர்”

“விடுதலைப்புலிங்க கிட்டேயிருந்து ஆயுதங்களைப் பிடுங்கிடுங்க” என்றார் எம்.ஜி.ஆர். நான்,” அது இயலாத காரியம்”என்றேன். அவரோ,” எப்படியாவது செய்தே ஆகணும்” என்றார். “நிறைய உயிர்ச் சேதம் ஆகுமே?” என்று நான் சொல்ல,” மத்திய அரசுக்கு நான் வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார்.

மத்திய, மாநில அரசுகள், உள்நாட்டுப் பாதுகாப்பு, அயலுறவு விவகாரம், உள்ளூர் அரசியல் என பல பரிமாணங்கள் கொண்ட மிகவும் சிக்கலான ஆயுதப் பறிப்பை எப்படிச் செய்வது என்று தீவிரமாக யோசித்தேன். நான் ஸ்பெஷலாக உருவாக்கிய கமாண்டோ படையினரைக் கொண்டு இதனைச் செயல்படுத்த ஒரு திட்டம் வகுத்தேன். இது ரொம்பவும் ரகசியமாகச் செய்ய வேண்டிய விஷயம் என்பதால், முதலமைச்சருக்குக் கூட நீங்கள் உத்தரவிட்டபடி ஆயுதப் பறிப்பை செய்யப்போகிறேன்” என்று மட்டும் சொன்னேனே ஒழிய எப்போது என்று தேதியைச் சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் போராளிகளின் முகாம்கள் எங்கெங்கே உள்ளன? அவற்றில் உள்ள முக்கிய போராளிகள், அவர்களிடமிருக்கும் ஆயுதங்கள் என எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒவ்வொரு போராளி முகாமிற்கும் ஒரு கமாண்டோ சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “சமீபகாலமாக போராளிகள் ஆயுதங்களோடு திரிவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இன்னும் ஒரு வார காலத்துக்காவது நீங்கள் ஆயுதங்களை கையிலெடுக்காமல் இருக்கவேண்டும் என அரசாங்கம் நினைக்கிறது.” என்று சொன்னதும் அவர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள்.

“எல்லா ஆயுதங்களையும் உங்கள் முகாமிலேயே ஒரு அறையில் போட்டுப் பூட்டி, சாவியை நீங்களே வைத்துக் கொண்டால்போதும்” என்றதும் உடனடியாக அப்படியே செய்தார்கள். இப்படியாக தமிழகத்தின் ஒவ்வொரு முகாமிலும் ஆயுதங்கள் ஒரு பூட்டிய அறையில் முடக்கப்பட்டன; போராளிகள் நிராயுதபாணிகளானார்கள். கமாண்டோக்கள் நன்றி தெரிவித்துவிட்டுத் திரும்பிய அரை மணிநேரத்தில் நவீன ஆயுதங்கள் தாங்கிய ஸ்பெஷல் கமாண்டோ படையினர் போராளிகளின் பல்வேறு முகாம்களுக்கும் அதிரடியாகச் சென்று சுற்றி வளைத்தார்கள். ஆயுதங்கள் வைத்திருந்த அறைகளின் பூட்டைத் தகர்த்து அனைத்து ஆயுதங்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, என்ன நடக்கிறது என்று போராளிகள் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நவீன ஆயுதங்களுடன் வந்த கமாண்டோ படையினரை நிராயுதபாணிகளான போராளிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அன்றைக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றிருந்தார். டெலிபோனில், விவரம் சொன்னபோது,” சாவு ரொம்பவுமா? என்றார். “ஒரு கேஷுவாலிடி கூட இல்லை” என்றதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்” என்று அந்த  அத்தியாயத்தைச் சொல்லி முடித்தார் மோகன்தாஸ். இதில் ஆன்டி-கிளைமாக்ஸ் என்னவென்றால், ஆயுதப் பறிப்பு அமைதியாக நடந்து முடிந்துவிட்டாலும், அடுத்த சில நாட்களில் பிரபாகரன் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருக்க, எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார்.

அரசியல்!

குருடர்களின் யானை

அத்தியாயம் 20

லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப் பகுதிக்காக எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பேட்டி காண விரும்பினோம். அவரும் சம்மதித்தார். ஆழ்வார்ப்பேட்டை (இன்றைய)  டி.டி.கே. சாலையில் இருந்த அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். அந்த இடத்துக்கு ஜெயகாந்தன் சூட்டியிருந்த செல்லப் பெயர் ’மடம்’. எழுத்தாளர் ம. வே. சிவகுமாரிடம் கேட்டால் தனது மடத்து அனுபவங்களை மணிக்கணக்கில் சொல்லுவார்.

அந்தப் பேட்டியில் நாங்கள் கேட்ட ஒரு கேள்வி, “உங்கள் முதல் கதையை அச்சில் பார்த்தபோது எப்படி இருந்தது?” அதற்கு ஜே.கே.வின் பதில், “என் எழுத்தை அச்சில் பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது.”

இந்த பதில் எனக்கு  ஆச்சரியத்தை அளித்தது. அடுத்த சில நாள்களுக்கு நான் பலரிடமும் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடைய சக மாணவன் ஒருவன் இதையே குமுதத்துக்கு எழுதி அனுப்பினான், அது பிரசுரமானது. அதற்காக நான் அந்த மாணவருக்குப் பாராட்டு தெரிவித்தாலும், “அட! இந்த விஷயத்தை ஒரு பெரிய பத்திரிகைக்கு எழுதலாம் என்று நமக்குத் தோன்றவில்லையே!” என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

கல்லூரி நாளில்தான் என்றில்லை, எழுத ஆரம்பித்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டாலும், இன்றுகூட ஓர் அபாரமான மேட்டரைப் பத்திரிகையில் படித்தால் ’அட! இந்த சூப்பர் ஐடியா நமக்கு  வரவில்லையே!’ என்ற எண்ணம் எனக்கு வருகிறது.

****************

1986ல் ஜெயகாந்தனுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது. அப்போது நான் அவரைப் பேட்டி காணச் சென்றேன். பவ்யமாக “விருது கிடைத்துள்ள தகவல் எப்போது உங்களுக்குத் தெரியவந்தது? அதை அறிந்ததும் உங்களுடைய ரியாக்ஷன் என்ன?” என்று கேட்க ஆரம்பித்தேன்.

ஜே.கே. “உங்களுக்கு எப்படித் தெரியுமோ, அப்படிதான் எனக்கும் தெரிந்தது” என்று ஆரம்பித்தவர் ஒரு சின்ன இடைவெளி கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார், “ஒருவேளை விருது கிடைக்கப்போகிறது என்கிற விஷயம் எனக்கு முன்னாலேயே தெரிந்திருந்தாலும், அது எப்படித் தெரிந்தது என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை; பரிசெல்லாம் எனக்குப் புதுசில்லை; விருதுகள் என்னைப் பிரமிக்கவைக்கவில்லை” என்று பதிலை முடித்தார்.

“கொஞ்சகாலமாக எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்போல இருக்கிறதே! ஏன் இந்த  வனவாசம்?” என அடுத்த கேள்வியைக் கேட்டேன். “என்ன? வனவாசமா? அந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள்” என்றார். “பத்திரிகைகளில் எழுதவில்லை என்பதால் நான் ஆளே இல்லாமல் போய்விட்டேன் என்று அர்த்தமா? நான் இன்னமும் பிசிதான். கதைகள், கட்டுரைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லாம் என் சிந்தனையின் வெளிப்பாடுகள்!”

“ஆனால் வாரப் பத்திரிகைகளில் எழுதுவதில்லையே?” என்று கேட்டேன் நான். “நான் என்றைக்குமே அவர்களிடம் போய் நின்றதில்லை. அவர்களாக என்னிடம் வரும்போது எழுதித் தருகிறேன்” என்றார்.

“மாத நாவல் புற்றீசலில் நீங்களும் சிக்கிக்கொண்டுவிட்டீர்களே?” என்றதும் “இந்த ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியதே நான்தான். இன்றைக்கு அது ஒரு பெரிய பிஸினசாகிவிட்டது. எனக்கு வேண்டிய ஒரு சிலர் என்னை எழுதிக்கொடுக்கும்படி கேட்கிறார்கள். அவர்களுக்காக நான் எழுதித் தருகிறேன். தட்ஸ் ஆல்!” என்று பதில் வந்தது.

”வழக்கமாக எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைச் சினிமாவாக எடுக்க அனுமதி கொடுத்துவிட்டு, அது படமாக்கப்பட்டபிறகு, தங்கள் கதை சின்னாபின்னமாகிவிட்டதாகக் குறை சொல்கிறார்கள். நீங்கள் ஓர் எழுத்தாளர்மட்டுமில்லை, திரைப்பட இயக்குனரும்கூட. உங்கள் கதைகள் மற்றவர்கள் இயக்கத்தில் படமாகிறபோது அப்படி நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? உங்களுடைய “பாரிசுக்குப் போ” நாவல்கூட டி.வி. சீரியலாக ஒளிபரப்பாகப்போகிறதே?” என்ற கேள்விக்கு ஜே.கே. சொன்ன பதில் வெகு எதார்த்தமானது. “எனக்குத் திருப்திதான்! எழுத்து ஒரு மீடியத்திலிருந்து இன்னொரு மீடியத்துக்குப் போகும்போது சில மாற்றங்கள் அவசியமாகலாம். அவை கதையின் பெட்டர்மென்ட்டுக்காகதானே? மாற்றத்தை ஏன் காம்ப்ரமைஸ் என்கிறீர்கள்?”

அந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதுபற்றிக் கேட்டபோது பட்டென்று பதில் வந்தது, “மாணவன் பழையவன்; ஆசிரியர் பழையவர்; பள்ளிக்கூடம் பழையது; சூழ்நிலை பழையது; அப்புறம் எப்படி வந்தது புதிய கல்விக் கொள்கை?”

“சமீபகாலமாக நீங்கள் சினிமா ஒன்றும் எடுக்கவில்லையே?”

”முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளன்; சிந்தனையாளன்; சமூக மேம்பாட்டுக்காகச் சிந்திக்கிறேன். மக்கள் என்னைச் சிந்திக்கப் பணித்திருக்கிறார்கள். சினிமா ஒரு கிளை. அவ்வளவே!”

ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் கர்ஜித்துக்கொண்டிருந்த ஜெயகாந்தன் அப்போது காங்கிரஸ் கட்சியின் மேடைகளில் பேசத் தொடங்கியிருந்தார். ஏற்கனவே தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அனுபவம் அவருக்கு உண்டு. எனவே “உங்களுக்குத் தேர்தலில் நிற்கக் காங்கிரஸ்  கட்சியில் சீட் கொடுத்தால் போட்டி இடுவீர்களா?” எனக் கேட்டேன். “மாட்டவே மாட்டேன். இப்போது நான் அமர்ந்துகொண்டிருக்கிறேனே இந்த அரியணைக்கு வேறு எதுவும் ஈடாகாது” என்று சொல்லிவிட்டுப் பலமாக சிரித்தார்.

கடைசியாக, ”இன்று எழுதுகிற பலர் தங்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஜெயகாந்தன்தான் என்று சொல்கிறார்களே?” என்று கேட்டேன். அதற்கு ஜே.கே.வின் பஞ்ச் பதில், “குருடர்கள் தடவிப் பார்த்த யானைதான் இவர்கள் எல்லோருக்கும் ஜெயகாந்தன்”

*********************

கல்கியில் நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடர் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள், “இந்த தொடர்ல ஜே.கே.வைப் பத்தி எழுதறதுக்கு முன்னாடி அவரை ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வரணும்” என்றார் நாகேஷ். அவரும் நானும் கே.கே. நகரில் ஜெயகாந்தன் வீட்டுக்குப் போனோம்.

ஜெயகாந்தனுக்கு நாகேஷைப் பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷம். “பார்த்து எத்தனை நாளாச்சு!” என்று நெகிழ்ந்தார் நாகேஷ். ஜே.கே. வீட்டு மொட்டைமாடியில் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து நெடுநேரம் பல விஷயங்களை அசை போட்டார்கள்: வட சென்னையில் ஜே.கே மீட்டிங் பேசப் போனபோது நாகேஷும் கூடப் போனது, ஆழ்வார்ப்பேட்டை மடத்துக்கு வந்து மணிக்கணக்காக ஜே.கே. பல விஷயங்களைப் பற்றியும் பேச, நாகேஷ் ஒரு வார்த்தை பேசாமல் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தது, ஓர் அரசியல் தலைவரது பிறந்த நாள் விழாவுக்கு ஜே.கே.வை அழைக்க வந்திருந்த கல்லூரி மாணவர்களைக் கேள்விகளாலேயே பின்னி எடுத்துத் துரத்தியது, ’எதிர்நீச்சல்’ நாடகம் பார்க்க ஜே.கே.வை வீடு தேடிப்போய் அழைத்தது, அவரும் வந்து நாடகம் பார்த்துவிட்டுப் பாராட்டியது … இன்னும் பல.

திடீரென்று “ஜேகே! தொழுப்பேடு லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட் திறப்பதற்காகக் காத்திருந்தவேளையில் பிச்சை எடுத்தோமே! ஞாபகமிருக்கா?” என்றார் நாகேஷ். “என்ன பிச்சை எடுத்தீங்களா?” என்று நான் மிரண்டுபோய் கேட்டேன். “அதுவும் ஓர் அனுபவம்தானே?” என்றார் ஜெயகாந்தன். பின்னர் நாகேஷ் அந்தக் கதையை எனக்குச் சொன்னார்:

ஒருமுறை ஜெயகாந்தனும் நாகேஷும் இன்னொரு நண்பரும் காரில் சென்னைக்கு வந்துகொண்டிருந்தார்கள். வழியில் தொழுப்பேடு ரயில்வே லெவல் கிராசிங்கில் கேட் மூடியிருந்தது. அது திறக்கபப்டுவதற்காக நெடுநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.

“இப்போ என்ன பண்ணலாம்?” என்று ஜே.கே. கேட்டுவிட்டுத் தானே பதிலும் தந்தார். “பிச்சை எடுக்கலாமா?”

“என்ன சொல்றீங்க ஜே.கே.?” என்று நாகேஷ் மிரட்சியோடு கேட்க, “ஏன்? ரயில்வே கேட் திறக்கிறவரைக்கும் சும்மாதானே இருக்கணும்? பிச்சை எடுத்துப் பார்ப்போமே!”

அடுத்த சில நிமிடங்களில் இருவரும் பேன்ட், சட்டையைக் கழற்றிவிட்டு உள்டிராயரோடு ரோட்டோரத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். அந்தக் கோலத்தில் இவர்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ரயில்வே கேட் திறக்கும்வரை போகிறவர், வருகிறவர்களிடம் இவர்கள் பிச்சை கேட்க, சில்லறை சேர்ந்தது.

கடைசியாக, ”யாருக்கு எவ்வளவு தேறியது என கணக்குப் பார்த்தபோது, அதில்கூட ஜே.கே.தான் திறமைசாலி என்று தெரியவந்தது” என்று முடித்தார் நாகேஷ்.

அன்றைய சந்திப்பில் ஜே.கே. சொன்ன இன்னொரு சுவாரசியமான விஷயம், ஒருமுறை எழுத்தாளர் மணியன் ஜெயகாந்தனைப் பார்க்க வந்திருக்கிறார், “எம்.ஜி.ஆர். உங்களைச் சந்திக்க விரும்புகிறார். எப்போது வருகிறீர்கள்? நானே அழைத்துக்கொண்டு போகிறேன்”

பதிலுக்கு ஜே.கே. “அவருக்குதானே என்னைச் சந்திக்கவேண்டும்? நீங்கள் அவரை இங்கே அழைத்துக்கொண்டுவாருங்கள்” என்று சொல்ல, மணியன் அப்செட் ஆனாராம்.

இது நடந்து சில மாதங்களுக்குப்பிறகு ஏதோ ஒரு காரணத்துக்காகச் சென்னை மத்தியச் சிறைச்சாலைக்குச் சென்றார் ஜெயகாந்தன், அப்போது அங்கே தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த எம்.ஆர். ராதாவை சந்தித்தார். இந்தச் செய்தி பரவலாக வெளியானது. இதைப் படித்த எம்.ஜி.ஆர். “ஜெயகாந்தன் ஜெயிலுக்குப் போய் எம். ஆர். ராதாவைச் சந்தித்திருக்கிறார். ஆனால் அன்றைக்கு நான் அவரைப் பார்க்கவேண்டும் என்று சொன்னபோது என்னையே வரச்சொன்னாரே” என்று மணியனிடம் கேட்டிருக்கிறார்.

இந்த விவரத்தை மணியன் ஜே.கே.யிடம் சொன்னபோது பட்டென்று வந்த பதில், “எம்.ஜி.ஆரும் ஜெயிலுக்குப் போகட்டும்; அங்கே வந்து அவரைப் பார்க்கிறேன்.”

***********************

ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தபோது, அவரது நெருங்கிய நண்பரும் அவரது எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருமான கே. எஸ். என்கிற கே. சுப்ரமணியனிடம் ஜே.கே. பற்றிக் கேட்டு எழுதினேன். அப்போது அவர் சொன்ன ஒரு சம்பவம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.

ஒரு நாள் இரவு, ஜே.கே. வீட்டுக்கு ஒரு திருடன் வந்திருக்கிறான். அவர் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய்களைப் பறித்திருக்கிறான். ஆனால் அவன் பறித்துப் போட்ட தேங்காய்கள் கீழே விழுந்த சத்தத்தில் ஜே.கே. தூக்கத்திலிருந்து விழித்துவிட்டார். வெளியே வந்து பார்த்தால், மரத்தின் மேல் திருடன்!

மனிதர் பதற்றப்படவே இல்லை. ரொம்பக் கூலாக “மரத்தில தேங்காயெல்லாம் முத்திப்போச்சே, பறிக்க ஆள் இல்லையேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். நல்ல காலம் நீ வந்தே! எல்லாக் காய்களையும் பறிச்சுப் போடு, நீ பாதி எடுத்துக்கோ” என்றார்.

தேங்காய் திருட வந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. அன்று பறித்த தேங்காய்களில் ஆளுக்குப் பாதி!

சிரிப்பு சூப்பர் ஸ்டார்

அத்தியாயம் 19

” நான் சிவாஜிக்கு அடுத்து நாகேஷிடமிருந்துதான் அதிகம் கற்றுக்கொண்டேன். ஒருவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைவிட அவர் விஷயம் உள்ளவர் என்று தெரிந்தால் அவரை மதிக்கத் தெரிந்தவர் நாகேஷ். பாராட்டு, ஷீல்டு இதிலெல்லாம் அவருக்கு ஆர்வமில்லை. இவை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டவற்றில் சில. அவரது உடலைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடம்தான் அழுதிருப்பேன். அப்புறம் அவரது அற்புதமான நகைச்சுவை காட்சிகள் நினைவுக்கு வர பக்கத்தில் இருந்தவர்களுடன் அவற்றை நினைவுகூர்ந்து மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். இதுபோல வேறு யாருக்குச் சாத்தியம்? இப்போது இருக்கிறாரே, அந்த உயிரற்ற உடல்போலக்கூட மிகவும் தத்ரூபமாக என் படத்தில் நடித்திருக்கிறார். நம்மவர் படத்தில் அவருடன் நடித்தது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம். அவருக்காக நான் எழுதிய காட்சிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்ததும், அதற்காக நாகேஷுக்குச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததிலும் எனக்குதான் பெருமை.”

கமல்ஹாசன் என்னிடம் இப்படி நாகேஷ் பற்றி நெகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்த இடம், சென்னை பெசன்ட் நகர் மின் தகன மையம். நாகேஷின் வீட்டிலிருந்து புறப்பட்ட அவரது இறுதி ஊர்வலம் இன்னும் பெசன்ட் நகர் வந்தடையவில்லை. ஏற்கனவே அங்கே வந்து காத்துக்கொண்டிருந்தார் கமல். “இது பேட்டி காண்பதற்கான இடமோ, தருணமோ இல்லை. ஆனாலும், அடுத்த இதழ் கல்கியில் “நாகேஷ்: சிரிப்பு சூப்பர் ஸ்டார் ” என்று ஒரு கவர் ஸ்டோரிக்குத் திட்டமிட்டிருக்கிறோம். அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன்” என்றபோது கமல் ரொம்ப கேஷுவலாக “நீங்கள் கேட்கவில்லையென்றாலும்கூட நான் இங்கே நாகேஷ் பற்றிதான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்திருப்பேன்” என்று சொல்லிவிட்டுச் சொன்ன விஷயங்கள்தான் இவை.

நாகேஷ் தன் வாழ்க்கையைப் பற்றி இந்த உலகத்திலேயே என்னிடம்தான் ரொம்ப விரிவாகப் பேசி இருக்கிறார் என்று நான் பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள முடியும். சினிமா மூலம் கோடிக்கணக்கானவர்களைச் சிரிக்கவைத்த, சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிற நாகேஷ் சொந்த வாழ்க்கையில் பட்ட அவமானங்கள், வேதனைகள், ரணங்கள், சந்தோஷங்கள், சவால்கள் என்று சகலமான விஷயங்களையும் அவரே என்னிடம் சொல்ல, அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு வருடத்துக்கு வாராவாரம் கல்கியில் தொடராக எழுதியது எனக்குக் கிடைத்த அரிய பாக்கியம்.

கல்கியில் அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதலாம் என்ற நோக்கத்துடன் அவரைச் சந்தித்துப் பேசியபோது, சுமார் ஒரு மணிநேரம் நிறைய பேசிவிட்டு “இவற்றையெல்லாம் எதற்காகப் பத்திரிகையில் எழுதவேண்டும்? அதனால் யாருக்கு என்ன பயன்? ” என்று ஒரு போடு போட்டார். நானும் உடன் வந்திருந்த புகைப்படக்காரர் யோகாவும் அரை மணி நேரம் பேசி அவரைச் சம்மதிக்கவைத்தோம்.

அதன்பிறகு ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவர் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. பழைய விஷயங்களை நகைச்சுவை கொப்பளிக்கத் தேர்ந்த ரசனையுடன் குரலில் ஏற்ற இறக்கம் கொடுத்து அவர் மீண்டும் நினைவு கூரும்போது என்னை மறந்து சிரித்துவிடுவேன்.

நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன். அப்பா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரிசிக்கரே என்ற ஊரில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். குடும்பம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் வசித்தது. அப்பா ரொம்பக் கண்டிப்பான மனிதர். வீட்டில் நாகேஷுக்குச் செல்லப்பெயர் குண்டு ராவ். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையோடு கோவை பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் இன்டெர்மீடியட் சேர்ந்தார். இரண்டாவது வருடப் பரீட்சைக்குச் சில நாள்கள் முன்பாகக் கடும் அம்மை தாக்கியது. அது குணமடையும் தருவாயில் இரண்டாவது தாக்குதல். அடுத்து மூன்றாம் தடவையும் தாக்கியது. பிழைத்ததே பெரிய விஷயம்தான். பால் வழியும் முகத்தில் அம்மை தனது ஆட்டோகிராஃபைக் கிறுக்கிவிட்டுப் போனது. மனம் வெறுத்த நாகேஸ்வரன் வீட்டை விட்டு வெளியேறினான். இலக்கிலா வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. பலவிதமான வேலைகள். ஹைதராபாதில் ஒரு கூலித் தொழிலாளியாகக்கூட வேலை பார்த்திருக்கிறார்.

நாகேஷின் டான்ஸ் மூவ்மென்ட்களைத் திரையில் பார்த்து பிரமித்துச் சிரிக்கிறோமே, அதற்குப் பின்னால்கூட ஒரு கதை இருக்கிறது. ஒரு படத்தில் அவர் சரியாக நடனம் ஆடாதது கண்டு டைரக்டர் நாகேஷின் மனம் புண்படும்படியாக கமெண்ட் அடித்துவிட்டார். அன்று இரவுமுழுக்க அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, கிராமஃபோன் ரெக்கார்டு ஒலிக்க உண்ணாமல் உறங்காமல் பயிற்சி செய்து மறுநாள் டைரக்டரை ஆச்சரியப்படுத்தி மனதுக்குள் வெட்கப்பட வைத்தார் நாகேஷ்.

மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிகட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வற்றிப் போன தெப்பக் குளத்தைப் பார்த்து “அந்தப் பழைய நாள்கள் இனிமே வருமா? ஊஹூம்… வராது.. வரவே வராது… ” என்று தனக்குத்தானே புலம்பிய கிருஷ்ணசாமி அய்யர் என்பவர்தான் நாகேஷின் மிகப் பிரபலமான தருமி கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன். டைரக்டர் ஏ. பி. நாகராஜன் தருமி சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு சின்னக் கோடு போட்டார். நாகேஷ் ரோடு இல்லை, ஒரு தங்க நாற்கரச் சாலையே போட்டுவிட்டார். இன்றைக்கும் டி.வி.யில் தருமி நாகேஷ் – சிவாஜி காட்சியைப் பார்த்து ரசிக்கும் உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா? திருவிளையாடல் படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு நாகேஷுக்கு அழைப்புகூட அனுப்பவில்லை.

ஒருகட்டத்தில் நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினாலும் அவரது நகைச்சுவை உணர்ச்சிமட்டும் என்றுமே குறையவில்லை. ஒருமுறை இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அடித்த நச் கமெண்ட்: “சிலருக்கு டைமிங் சென்ஸ் நல்லா இருக்கு; சிலருக்கு டைம் நல்லா இருக்கு!”

வாழ்க்கையை வெகு எதார்த்தமாக எதிர்கொண்டவர் நாகேஷ். பண விஷயத்தில் அவர் வெகு கறாரான மனிதர் என்று சினிமா உலகில் சொல்வார்கள். ஆனால் தனிப்பட்டமுறையில் மிக எளிமையானவர். “எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே?” என்பார். சினிமா உலகத்தினரது வீட்டு வரவேற்பறையில் அவர்கள் வாங்கிய ஷீல்டுகளை ஷோ கேஸ் அமைத்துக் காட்சிக்கு வைப்பது சகஜம், ஆனால் நாகேஷ் வீட்டில் ஒரு ஷீல்டைக்கூடப் பார்க்க முடியாது. தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது நாகேஷுக்குப் பிடிக்காத விஷயம்.

”சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் வெளியான நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடருடைய முதல் அத்தியாயத்துடன் நாகேஷ், அவரது மூன்று மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்று அனைவரும் இருக்கும் ஒரு குரூப் ஃபோட்டோ போட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அந்த ஆசையை அவரிடம் தெரிவித்தபோது “அப்படி ஒரு ஃபோட்டோ இல்லை” என்றார். “பரவாயில்லை. ஒரு நாள் அனைவரையும் உங்கள் வீட்டுக்கு வரச்சொன்னால் ஒரு ஃபேமிலி குரூப் ஃபோட்டோ எடுத்துவிடலாம்!” என்றேன். ஆனால் “அதெல்லாம் சாத்தியமில்லை!” என்று சொல்லிவிட்டார். “இது என்ன சார் பெரிய விஷயம்? ஃபோன் நெம்பர் கொடுங்க! நானே பேசி ஏற்பாடு செய்திடறேன்” என்று வற்புறுத்தியபோது ‘இதை விட்டுடேன்! பிளீஸ்!” என்று சொல்லி அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

2009 ஜனவரியில் அவர் மரணம் அடைவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே உடல் நலமில்லாமல் இருந்தார். அவ்வப்போது அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். அப்படி ஒரு நாள் அவர் வீட்டுக்கு நான் சென்றிருந்த சமயம் இயக்குனர் கே. பாலசந்தரும் அங்கே வந்திருந்தார். தன் நெடுநாளைய நண்பனின் கைகளை வருடிக்கொடுத்தபடி “ராவுஜி! எப்படிடா இருக்கே?” என்று கே.பி. கேட்டார். பேச முடியாத நிலையிலும் நாகேஷின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை. அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நிழலாடுகிறது.

அன்று நாகேஷைப் பற்றிப் பழைய நினைவுகளை அசைபோட்டார் கே.பி. “நீர்க்குமிழி படப்பிடிப்பின் முதல் நாள் நாகேஷ் என்னை ’சார்’ என்று அழைத்தபோது எனக்குச் சங்கடமாக இருந்தது. இத்தனை நாளும் வாடா போடா என்று பேசுகிற நீ திடீரென்று என்னை சார் என்று கூப்பிட்டால் கிண்டல் பண்ணுவதுபோல இருக்கு” என்று நான் அவனிடம் சொன்னேன். அப்போது அவன் என்னைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் “நாம ரெண்டு பேரும் நெருங்கின நண்பர்கள்தான். ஆனால் நீ இங்கே டைரக்டர்; நான் நடிகன். நான் உனக்கு மரியாதை தரவேண்டும்; அப்போதுதான் யூனிட்டில் எல்லோரும் உனக்கு உரிய மரியாதை தருவார்கள்” என்றான்.”

”நாகேஷ் ஒரு கிரியேடிவ் ஜீனியஸ். காட்சியைச் சொல்லிவிட்டு ரிகர்சல் பார்க்கிறபோது சொன்னபடி செய்வான். அடுத்து டேக் போகிறபோது தானாகவே இன்னும் ஏதாவது சேர்த்துக்கொண்டு காட்சியைப் பிரமாதப்படுத்திவிடுவான். உதாரணமாக, வணக்கம் சொல்லியபடி உடம்பை வளைக்கிறதுபோல் ஒரு காட்சி. டேக்கின்போது வளைந்துகொண்டே வந்தவன் தானாகவே “இன்னும் கூடக் குனிய முடியும், ஆனா தரை இருக்கு” என்று ஒரு வசனத்தைச் சொல்லி அசத்திவிட்டான்” என்றார் கே.பி. நாகேஷின் மறைவுக்குப்பிறகு கே. பாலசந்தரது கவிதாலயா தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகத்தின் தொடக்கத்தில் நாகேஷின் படத்தை வைத்து அவரை உருக்கமாக நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் அவர்.

நாகேஷ் இன்று நம்மிடையே இல்லை; எனது ஆழ்ந்த அனுதாபங்கள்- அவரது குடும்பத்தினருக்கு அல்ல; அந்த மகத்தான கலைஞனை உரிய முறையில் கௌரவிக்கத் தவறிய இந்திய அரசாங்கத்துக்கு.