அல்வா
அத்தியாயம் 25
டெரி கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ஃபோனை மோனிகா கையில் கொடுத்தார்.
“ரெனே, இப்போது சிராக்கூஸ் வருகிறாய் அல்லவா?”
“இல்லை சார். மலாகா. கான்சுலேட் ஆசாமிகளிடம் சொல்லிவிட்டேன். கொஞ்ச நாளைக்காவது மோனிகாவுடன் டிஸ்டர்பன்ஸ் இல்லாத ஹனிமூன்” சிரித்தான்.
கான்சுலேட் ஆசாமிகள் டெரியை மரியாதையாகப்பார்த்து “கேட் 247 சார். இன்னும் 15 நிமிடத்தில் ஃப்ளைட். நடக்கவே பத்து நிமிஷம் ஆகும்”
டெரி ரெனேவைக் கட்டி அணைத்தார். “வா. உன்னுடன் பழைய மாதிரி பேசவேண்டும்”
”எதற்கு சிராக்கூஸ்? உங்களுக்கு வரப்போகும் பேடண்ட் பணத்தில் மலாகாவையே வாங்கிவிடலாம். நீங்கள் வந்துவிடுங்கள்”
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தார்.
மோனிகா “நீ எப்போது எனக்குக் கதை சொல்லப்போகிறாய்?”
“இதோ போகிறாரே, டெரி, அவர் ஆறுமாதங்களுக்கு முன்னால் ஒருமுறை என்னை அழைத்தார். பேட்டரி ரிசர்ச் செய்யும்போது ஒரு புது கெமிகல் எதிர்பாராதவிதமாகக் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லி.”
“பர்ப்பெச்சுவல் பவர்?”
“அதையெல்லாம் நம்புகிறாயா நீ? அறிவியல் ரீதியாக அதெல்லாம் இம்பாஸிபிள். இது வேறு மேட்டர். இந்த கெமிகலுக்கு டிசி என்று பெயர் வைத்தார். டிசிக்கு எந்த தெரிந்த உப்யோகமும் கிடையாது. நேரடியாக மண்ணில் கிடைக்கும் உலோகம் அல்ல, ரேடியோ ஆக்டிவ் பவர் கிடையாது, இதை வைத்து பாத்திரமும் செய்ய முடியாது, பாமும் செய்ய முடியாது.”
“அப்புறம் என்ன யூஸ்?”
“ஒரே ஒரு யூஸ். எவ்வளவு சின்ன அளவாக இருந்தாலும், இந்த கெமிகலை சாட்டிலைட்களால் அடையாளம் காணமுடியும். சாதாரண அடையாளம் இல்லை. ஒரு சதுர அடிக்குள் எங்கே இருக்கிறது என்ற அளவுக்கு சாட்டிலைட்களால் பின்பாயிண்ட் செய்ய முடியும்..”
”அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?”
“அதற்காகத்தான் நானும் மீக்கும் மண்டையை உடைத்துக்கொண்டோம். அப்போது மீக் ஒரு தகவலோடு வந்தான்..”
“சொல்லு.”
“ஏகே என்னும் கலீல், எங்கள் டிபார்ட்மெண்ட் பார்வையில் ரொம்ப நாள் இருந்தவன். தீவிரவாதிகளோடு கனெக்ஷன் இருந்தாலும் வெளிப்பார்வைக்கு சாதாரண பிஸினஸ்மேன். அவன் வியாபாரத்தில் பெரிய நஷ்டம் என்பதுதான் தகவல்.”
***
அந்தக் கான்ஃபரன்ஸ் அறையில் நான்கைந்து பேர்தான் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருந்தார்கள். ரெனே பூப்பூவான சட்டை போட்டு ஷார்ட்ஸ், மீக் ஃபார்மல் உடை, டெரி குளிருக்கு ஒரு கவரால் போட்டிருந்தார். ஒரு ஆள் கோட் சூட்டுடன், ஒரு ஆள் ராணுவ உடையில்.
மீக் ப்ரொஜக்டர் போர்ட் அருகே நின்று கொண்டிருந்தான். போர்டில் கலீல் படம் போட்டு பிரதேச மேப்பில் அங்கங்கே பல குறியீடுகள் குறிக்கப்பட்டிருந்தன “நிறைய ப்ராப்பர்டி இருக்கிறது கலீலுக்கு. ஆனால் எல்லாம் நஷ்டத்தில். நாம் கான்சண்ட்ரேட் பண்ணப்போவது இந்த ரிஃபைனரி”
“அதைத்தான் மூட ப்ளான் செய்தாயிற்றே.”
”அங்கே ஒருவித க்ரீஸ் தயாரித்தார்கள். அது ஒரு ஸ்பெஷல் டைப். வேறெங்கும் கிடைப்பதில்லை”
“என்ன சொல்ல வருகிறாய்?” ரெனே பொறுமையிழந்து கேட்டான்.
“டெரிதான் உதவவேண்டும். ஒரு ப்ளாஸிபில் தியரி. அந்த க்ரீஸ் இல்லாவிட்டால் இவர் ப்ராடக்ட் வேலை செய்யாது என்று..”
டெரி முகவாயைச் சொறிந்தார். “ஆக்ஸிடேஷன்? ஆண்டி ஆக்ஸிடேஷன்..”
ரெனே திடீரென்று வெளிச்சமானான். “பர்ப்பெச்சுவல் பவர்!”
“நம்புவானா?”
“இல்லாவிட்டால் பர்ப்பெச்சுவல் பாம்!”
“திஸ் சவுண்ட்ஸ் பெட்டர்..”
***
“கொஞ்சம் கொஞ்சமாக கலீலைக் கவிழ்க்கும் வேலைகள் நடந்தன. வேகப்படுத்துவதற்காக ஃபைனான்ஸ் செல்லும் நிறைய வேலை செய்தார்கள்.”
“அவர்கள் என்ன செய்தார்கள்?” மோனிகா ஃப்ளைட் சீட்டில் உட்கார்ந்திருந்தாள். பெல்டை அணிந்துகொண்டு ரெனே தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.
“ப்ரஷர். வாங்கின கடனைத் திருப்பிக்கொடு என்று எல்லா வங்கிகளையும் ஒரேநாளில் கேட்கவைத்தார்கள். கலீலின் ரியல் எஸ்டேட்டின் விற்பனை ஆகாமல் பார்த்துக்கொண்டார்கள்”
”ஓ..”
“எதிர்பார்த்தது போலவே கலீல் விழுந்தான். அவன் டெரியைக் கடத்தப்போகிறான் என்று தெரிந்திருந்தாலும், எங்கே, எப்போது போன்ற தகவல்கள் தெரியாது. அதனால்தான் நான் சாலிஸ் ‘வேலை’யில் இருந்து டெர்மினேட் ஆகிக்கொண்டு மலாகா வந்துவிட்டேன்.மீக் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில்.”
“ஓஹோ.. மலாகா வந்தது கடமைதானா? காதல் இல்லையா?” மோனிகா சிணுங்கினாள்.
“அதுவும்தான்.. ஆனால் அவர்கள் கடத்தும்போது டெரியை மட்டும்தான் கடத்தினார்கள். கூடவே இருந்த கெமிகல்களை இல்லை”
“பிறகு?”
“மீக் ஒரு வழியில் போய் கலீலுடன் சேர, சில ஆதாரங்களைத் தேடினான். டெரி, நான் இல்லாமல் வேலை ஆகாது என்று என்னைக் கடத்தவைத்தார், நான் கெமிகல்களுடன் போனேன்”
“சரி.. பெரிய கேள்வி ஒன்று.. அந்த கெமிகல் பாம் இல்லைதானே?”
“நெருப்பு கூட பற்றாது. இனர்ட் கெமிகல்”
“பிறகு எப்படி அவர்கள் நம்பினார்கள்?”
***
ஜுலியனுக்கும் அதே கேள்வி இருந்தது. கேட்டான்.
“அதுவா.. அது ஒரு மாஸ்டர் ப்ளான். அந்த கெமிகல் 150 பேட்டரி பட்டனில் கலந்துவிட்டார்கள். இங்கே பேஸ் இல் தொடர்ச்சியாக அதைக் கண்காணித்துக்கொண்டிருந்தோம். சாட்டிலைட் ஃபோனில் ஒரு குறிப்பிட்ட கோடை ரெனே அடித்தான். புரிந்துகொண்டோம்.”
“பிறகு?”
“அங்குதான் கொஞ்சம் கஷ்டப்பட்டுவிட்டோம். ஹெலிகாப்டரில் 149 பட்டன்கள், மலைமேல் ஒரே ஒரு பட்டன். மலைமேல் இருப்பதுதான் ரெனே வைத்தது என்று ஊகித்து, அந்த இடத்துக்கு ஒரு மிஸைல் அனுப்பினோம். நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன இதை முடிக்க”
”அப்போதே கூட அவர்கள் அப்பாவைக் கொன்றிருக்கலாமே?”
“அங்கே ரெனே மூளை வேலை செய்தது. இந்த 23 டிஜிட்டும் எதோ ஒரு கோட், அல்காரிதம் என்று அவர்களை நம்பவைத்தான். அதே கோடை வைத்து மீக் மூளை இன்னும் அதிக வேலை செய்தது”
“மீக்? அவர் என்ன செய்தார்?”
“இல்லாத கோடை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்ததாகச் சொல்லி ஒரு ஃபார்முலா எல்லாம் தயார் செய்தான். கலீலுக்கு நம்பகமான ஆள் ஆனான்”
“மீக் அப்போதே தப்பித்திருக்கலாமே.. இப்போது அவர்?”
“ஆமாம். இட் வாஸ் அ ட்ராஜிக் லாஸ். அவர்கள் நம்ப மாட்டார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், மீக் அங்கேயே இருந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. எங்களுக்கு சரியான கன்ஃபர்மேஷன் தேவைப்பட்டது.. அந்த பேட்டரிகள் தீவிரவாதிகள் கையில்தான் இருக்கின்றன என்பதற்கு..”
வாக்கி டாக்கி சத்தம் போட்டது. “ஆஃப்கானிஸ்தானில் எட்டு பேர்.. லிபியாவில் நான்கு,பாரிஸில் ஐந்து”
“யாராவது உயிரோடு பிடிபட்டார்களா?”
“இல்லை. அமெரிக்காவில் 15 பேர்.”
சூட் ஆசாமி சிரித்தார். “ஸ்கோர் ஏறிக்கொண்டே போகிறது”
***
கலீல் டெலிவிஷனைப் பார்த்து அதிர்ந்தான். என்ன நடக்கிறது? இத்தனை இடங்களில், ஒரே நேரத்தில் அட்டாக். எல்லாம் ஷேக்கின் ஆசாமிகள்.
அமீர் ஃபோன் பதில் பேசவே இல்லை.
வேறு ஒரு எண்ணில் இருந்து ஃபோன் வந்தது. “மேடம்.. எங்கு போனார்கள் என்று தெரியவில்லை”
“என்ன தெரியவில்லை? நீங்கள்தான் கண்காணித்துக்கொண்டே இருக்கிறீர்களே.. எப்படி மாயமாய் மறைவாள் அந்த…”
“ஏமாற்றிவிட்டார்கள்.. மாலில் பாத்ரூம் உள்ளே சென்றவர் அவர், வெளியே வந்தது வேலைக்காரி”
“அவளுக்குத் தெரிந்திருக்கும். விசாரியுங்கள் அவளை”
“ஸாரி சார். உங்கள் கட்டளைப்படி அவள்தான் மேடம் என்று நினைத்து..முடித்துவிட்டோம்”
கோபமாக வைத்தான் ஃபோனை. அமீர் எங்கே? மறுபடி முயற்சித்தான்.
வைத்துவிடலாம் என்று நினைத்த நேரத்தில் பதில் சொன்னது ஃபோன்.
“அமீர்?”
“அமீர் இல்லை. நான் பாடிகார்ட்.. அமீர் இறந்துவிட்டார். கூடவே இருந்த நாலு பேரும். அந்த காப்டிவ்கள் இவர்களைக் கொன்றுவிட்டுத் தப்பித்துவிட்டார்கள்”
கலீலுக்குக் கண்கள் இருண்டன. நிமிர்ந்து பார்த்தபோது அரபி உடையில் ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்.
“யார் நீ?”
“ஷேக் அனுப்பினார்” உடைக்குள் கைவிட்டுத் துப்பாக்கியை எடுத்தான்.
***
ரெனே ஃப்ளைட் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தான். மோனிகா “இதையும் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்.” என்று தட்டைத் தள்ளினாள்.
“இன்னொரு கேள்வி..”
“கேளேன்..”
“நான் எப்படி சரியான நேரத்துக்கு அங்கு வந்து சேர்ந்தேன்?”
“உனக்கு ஒரு கச்சா முச்சா எஸ் எம் எஸ் வந்ததா?”
“ஆமாம். வந்தால் என்னை உங்கள் நம்பருக்கு ஃபார்வார்ட் பண்ணச் சொல்லி இருந்தீர்கள்”
“யெஸ். அது நானாக செட் செய்த எஸ் எம் எஸ். குறிப்பிட்ட நாளுக்குள் நான் தப்பிக்காவிட்டால், உனக்குத் தகவல் தர”
“அது என்ன தகவல் தந்தது?”
“ஃபார்வேர்ட் செய்தாயே, என் ஃபோன் பேஸ் இல் இருந்தது. பேஸ் உன் எண்ணைக் கண்டுபிடித்தது. உனக்கு நான் இருக்கும் லொகேஷனைத் தந்தது.”
“டைமிங்? அது எப்படி சாத்தியம்?”
“மீக். அவன் பேஸுக்கு கலீல் க்ரூப் நடவடிக்கையை தெரியப்படுத்திக்கொண்டு இருந்தான். பேஸ் ரெடி ஆனவுடன், நைஜீரிய ராஜா அவனுக்கு 500 மில்லியன் தருவதாக ஸ்பாம் மெயில் போயிருக்கும். உனக்கும் தகவல் வந்திருக்கும்”
”ரெடி ஆவது என்றால்?”
“அவர்கள் அந்த பேட்டரிகள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு பேட்டரியாகப் பிரிந்தபிறகு, தயார்.. ஒரு தீவிரவாதியைப்பிடிப்பது ப்ளான். ஒரே நேரத்தில் 150 பேரைப்பிடிப்பது.. மேஜர் ஆப்பரேஷன்..”
“அடேங்கப்பா.. பெரிய கதையாக இருக்கிறதே”
“எழுதிக் கிழுதி வைத்துவிடாதே. எல்லாம் கான்ஃபிடன்ஷியல்.. லோக்கல் போலீஸ் எதேச்சையாக தீவிரவாதிகளைப் பிடித்ததாகத்தான் வரலாறு சொல்லும்.. நான் கொஞ்சம் தூங்கட்டுமா?”
மோனிகாவுக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நல்ல தூக்கம் என்று தூங்கி இருப்பான்.
“மடியில் படுத்துக்கொள்”
***
“எப்படி ஏமாந்தீர்கள்?”
“அந்த ஆள் சொன்ன டெக்னாலஜி.. சாத்தியம்தான். வெடித்தும் காட்டினார்களே”
“இவ்வளவு சீப்பாக ஏமாந்திருக்கிறீர்கள். 100 பேருக்கும் மேல். ஏறத்தாழ பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் இப்போது.. என்ன சொன்னாய்.. டெக்னாலஜி.. சாத்தியமா?”
“ஆமாம். லாஜிக்கல், பாஸிபிள்”
“உனக்கு ஒரு மாதம் டைம். அதே டெக்னாலஜியைத் தயார் செய். இந்த 100 பேருக்கும் பதில் சொல்லவேண்டும் அவர்கள்”
ஷேக் டிவியை அணைத்தான்.
***
பிகாஸா இண்டர்நேஷனல் ஏர்போர்ட் வரவேற்க ரெனே அவசரமாக வெளியே வந்து சிகரெட்டைக் கொளுத்தினான்.
மோனிகா “அவசரம் வேண்டாம். நான் காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வர 15 நிமிஷம் ஆகும்”
ரெனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ஏர்போர்ட் வாசலில் கும்பல் குறைவுதான். இந்த ஃப்ளைட் ஒன்றுதான் போல் இந்த நேரத்தில்.
மீட்டிங் ஏரியாவிலிருந்து ஒருவர் திடீரெனத் துடிப்பாக உள்ளே ஓடி வெளியே வந்த பெண்ணைக் கட்டிக் கொண்டார்.
இந்தப்பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேனே. ரெனே யோசித்தான்.
“கவலைப்படாதே.. இங்கு யாரும் உன்னைக் கண்டு பிடித்தவிட முடியாது” அவனைக்கடக்கும்போது பேசிக்கொண்டே போனார்கள்.
“ஐ அம் நாட் லிஸா எனிமோர். என் பெயரைக்கூட மாற்றவேண்டும்” என்றாள் லிஸா.
- முற்றும்-














