இது என்ன நியாயம்?

இந்தியாவின் மிகமுக்கிய மருத்துவ நிறுவனம். அதன் தென்மாநில மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுஷ்மா. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஊழியர்களைச் சந்திக்கும் வேலை சுஷ்மாவுக்கு வந்துவிடும். போன், இமெயில் என்று எப்போதும் அவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

ஹைதராபாத்தில் மீட்டிங் முடிந்து, ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தபோது,  சேகரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான் கார்த்திக்.

‘சுஷ்மா  ரொம்ப நல்லா பழகறாங்க… அக்கறையா வீட்டைப் பத்தியும் என்னைப் பத்தியும் விசாரிச்சாங்க…’

‘ப்ரிலியண்ட் லேடி! எவ்வளவு பெரிய பிரச்னையை அவங்ககிட்ட கொண்டு போனாலும் ரெண்டே நிமிஷத்துல தீர்வு சொல்லிடுவாங்க. ஆபிஸ் வேலையா இருந்தாலும் சரி, சொந்தப் பிரச்னையா இருந்தாலும் சரி. நீ இப்பத்தானே சேர்ந்திருக்க… போகப் போக இன்னும் நல்லா புரிஞ்சுப்ப.’

‘அறிவு மட்டுமில்ல,  அழகாவும் இருக்காங்க!’

‘ஆரம்பத்துல அவங்க அழகைக் கண்டு நானும் திகைச்சிருக்கேன். பழகப் பழக அவங்க ஒரு பெண்ணுனோ, அழகுன்னோ எல்லாம் மறந்தே போச்சு.’

கார்த்திக் அடிக்கடி போன், மெயில் என்று தொடர்பில் இருந்தான். தம்பிக்கு வேலை, தங்கையை என்ன கோர்ஸ் சேர்த்துவிடுவது என்பதில் இருந்து சகலத்தையும் சுஷ்மாவிடம் ஆலோசிக்க ஆரம்பித்தான்.

புது ப்ராடக்ட் லாஞ்ச் செய்வதற்காக ஒரு கூட்டம். மூன்று நாள்கள் கொச்சியில். சுஷ்மா ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும். அவர்களை அடுத்த வெற்றிக்குத் தயார் செய்ய வேண்டும்.

மீட்டிங் இல்லாத அதிகாலை,  உணவு இடைவேளை, மாலை, இரவு நேரங்களில்தான் சுஷ்மாவால் ஊழியர்களைச் சந்திக்க முடியும். இரண்டாவது நாள் காலை 6 மணிக்கு போன் செய்து கார்த்திக்கிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டாள். அவன் குளித்து முடித்து வருவதற்குள் ஏழு மணியாகி விட்டது.

‘கார்த்திக், நாம லஞ்ச்ல மீட் பண்ணுவோம். இப்ப எனக்கு வேற அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு’ என்று கிளம்பிவிட்டாள் சுஷ்மா.

‘என்னடா, ஏழு மணிக்கு எல்லாம் ரெடியாயிட்டே, என்ன விஷயம்?’

‘சுஷ்மா வர்றேன்னாங்க… அதான்…’

‘சுஷ்மா என்ன உன்னை மாப்பிள்ளை பார்க்கவா வர்றா? அடுத்த டார்கெட் பத்திப் பேசப் போறா!’

‘உனக்குத் தெரியாது. நாங்க ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஆபிஸ் வேலை தாண்டி நிறையப் பேசியிருக்கோம். இப்ப எல்லாம் அவளே கூட என்னை போன்ல கூப்பிடறா… அக்கறையா பேசுறா. என் குடும்பத்தைப் பத்தி விசாரிக்கிறா…’

‘அவ நம்மள மாதிரி ஆளு இல்லடா. உன்னைவிட டபுளா சம்பாதிக்கிறா… நிறைய படிச்சிருக்கா. நீ அதிகமா கற்பனை பண்ணிக்காதேடா….’

மதிய உணவு வேளையிலும் சுஷ்மாவால் கார்த்திக்கைச் சந்திக்கமுடியவில்லை.

‘சாரி கார்த்திக். ரொம்ப டைட்டா இருக்கு. நீங்க எப்ப தூங்குவீங்க?’

‘நீங்க வர்றதுன்னா ராத்திரி முழுவதும் முழிச்சிட்டே இருக்கேன்…’

‘நான் ஒன்பது மணிக்கு வர்றேன். முக்கியமான விஷயம்.’

இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் குளித்து, நல்ல உடை அணிந்து காத்திருந்தான் கார்த்திக்.

பத்து மணிக்கு வந்தாள் சுஷ்மா.

இரவு நேரத்தில் எந்தவிதத் தயக்கமும் இன்றி கட்டிலில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள் சுஷ்மா. வீடு, அவன், அலுவலக வேலைகள் என்று கலந்துகட்டிப் பேசிக்கொண்டிருந்தாள். மணி பதினொன்று முப்பது.

‘கார்த்திக், நான் கிளம்பறேன். காலையில் பார்க்கலாம்.’

‘ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் சுஷ்மா…’

‘சொல்லுங்க..’

‘ஏன் இந்த வேலைக்கு வந்தோம்னு எப்பவாவது நீ கவலைப்பட்டதுண்டா?’

‘இந்த வேலை இப்படி இருக்கும்னு தெரிஞ்சுதான் வந்திருக்கேன் கார்த்திக். உங்களுக்கு என்ன திடீர்னு கவலை?’

’சுஷ்மா,  உனக்கு இருக்கற அழகுக்கும் அறிவுக்கும் நீ கஷ்டப்படாம வாழவேண்டியவ. கண்ட நேரத்துலயும் ஆம்பிள்ளை தனியா இருக்கிற இடத்துக்குப் போய் நீ பேச வேண்டியதை நினைச்சா எனக்குக் கவலையா இருக்கு.’

‘என்ன உளர்றே? ஆம்பிள்ளைகளும் மனுஷங்கதானே? என் வேலை விஷயமாத்தானே ரூமுக்குப் போறேன். உனக்கு என்ன குழப்பம்?’

‘உன்னை எனக்குப் புடிச்சிருக்கு. என்னை நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டா ராணி மாதிரி நான் உன்னைக் காப்பாத்துறேன்.’

‘என்ன பேசற கார்த்திக்? என் வேலையைப் பத்தி உனக்குக் கேவலமான அபிப்ராயம் இருக்கு. அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது. ஏதோ நான் குடும்பத்துக்காகக் கேவலமான வேலை செய்யறதாவும், என்னை நீ காப்பாத்தறதாகவும் கற்பனை பண்ணிக்காத.’

‘நீ என் குடும்பம், என்னைப் பத்திக் கவலைப்படும்போது நான் உன்னைப் பத்திக் கவலைப்படக்கூடாதா?’

‘உன் குடும்பப் பிரச்னை உன் வேலையைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகத்தான் நான் உனக்கு உதவி செஞ்சேன். இங்க இருக்கிறவங்களை விட நீ ரொம்பச் சின்னவன். அனுபவம் குறைவு. புத்திசாலித்தனம் இருந்தாலும் கொஞ்சம் சோம்பேறி. உன்னை மேலே கொண்டு வருவது என்னுடைய வேலை. அதுக்காக உனக்கு விருப்பமான விஷயங்களைப் பேசி,  நடுவில் உன் வேலையையும் கவனமா செய்ய வைக்கிறதுதான் என்னோட வேலை. அதை நான் சரியா செஞ்சிருக்கேன்.’

‘அப்ப என்னை நீ லவ் பண்ணலையா?  போன் பண்ணினது, மெயில் அனுப்பியது, சிரிச்சது எல்லாம் பொய்யா?’

‘எதுவும் பொய்யில்லை. ஆனா அதுக்கு லவ் என்ற அர்த்தமும் இல்லை.’

‘என்னை உனக்கு ஏன் பிடிக்கலை?’

‘இங்க பாரு கார்த்திக்,  நீ விரும்பினா நான் ஒண்ணும் பண்ண முடியாது. நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்கிட்ட அப்படி நடந்துக்கல. உன் புரிதல் ரொம்ப மோசமா இருக்கு… நான் வரேன். இந்த டார்கெட்டை நல்லா பண்ணினா உனக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கு…’

‘நீ யாரையாவது கல்யாணம் செய்யத்தானே போறே? என்னைப் பண்ணிக்கக்கூடாதா?’

‘முட்டாள்தனமா பேசாதே. என் கல்யாணம் எல்லாம் என் விருப்பம். அதில் உனக்கு ஒரு ரோலும் இல்லை.’

‘எனக்கு என்ன குறை? அழகில்லையா, படிப்பில்லையா?’

‘உலகத்துலயே நீ உன்னதமான ஆணாக இருந்தாலும் என்னை நீ நிர்பந்திக்க முடியாது.’

‘ஒரு நியாயமான காரணம் சொல், நான் விட்டுடறேன்.’

‘எனக்குத் திருமணம் ஆச்சு. குழந்தைகூட இருக்கு.’

‘நான் நம்ப மாட்டேன். எந்தப் புருஷனும் பணத்துக்காக இப்படி ஒரு வேலைக்கு பொண்டாட்டிய அனுப்ப மாட்டான்.’

‘உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்லா தூங்கு. நேரமாச்சு. எனக்கு ஆறு மணிக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. குட் நைட்.’

மறுநாள் காலை –

‘என்னடா, நேத்து நைட் சுஷ்மா கூட ரொம்ப நேரம் கடலை போலருக்கு! என்ன சொன்னா?’

‘ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். திடீர்னு கை பிடிச்சு இழுத்துட்டா. ஆடிப் போயிட்டேன். சாரி சொல்லி அனுப்பிட்டேன். இந்த மாதிரி பொண்ணுங்களை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. தப்பிச்சேன் வின்செண்ட்…’

***

அது ஒரு பெரிய விளம்பர நிறுவனம். எம்.டி-யின் மகள் காவ்யா. சமீபத்தில்தான் அவர் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். முதல் இரண்டு ஆண்டுகள் மேனேஜர்,  நிர்வாக அதிகாரி, ஜாயிண்ட் எம்.டி என்று பொறுப்பு ஏற்றுக்கொண்டவர்,  இன்று நிர்வாக இயக்குநர்.

காவ்யா சேர்ந்த புதிதில் ஏற்கெனவே பல வருடங்களாக வேலை பார்த்தவர்கள் எல்லாம் அவருக்குச் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அந்த நேரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேர்ந்திருந்த மாதவன் மற்றவர்களை விட வித்தியாசமாகத் தெரிந்தான். போட்டி விளம்பர நிறுவனங்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வான். புதுப்புது உத்திகளைப் பற்றிப் பேசுவான். வேலையைப் பற்றிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருந்தான்.

காவ்யாவுக்கு அவனுடைய அணுகுமுறை பிடித்திருந்தது. பல மீட்டிங்களுக்கு மாதவனை அழைத்தார். பல கஸ்டமர்களை இருவருமாகச் சேர்ந்து சென்று சந்தித்தார்கள். நிறைய ஆர்டர்கள் பெற்றார்கள். நேரம், காலம் பார்க்காமல் காவ்யாவுடன் மாதவன் வேலை செய்ததால் காவ்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. நல்ல புரிதலும் சுலபமான அணுகுமுறையும் இருப்பதால் வேலை செய்வது எளிதாக இருந்தது.

மாதவனின் வளர்ச்சி அலுவலகத்தில் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. கண்ணாடி அறையில் அவர்கள் கண்ணெதிரே காவ்யா – மாதவன் அமர்ந்து பேசினாலும் கூட வெளியில் மோசமான கமெண்ட்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாக எல்லா இடங்களிலும் சுலபமாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு காவ்யாவும் ஆளானார்.

அதுவரை ஒழுங்காக இருந்த மாதவனின் புத்தி கொஞ்சம் கோணலாக ஆரம்பித்தது.

‘மேடம் வீட்டுக்குப் போன பிறகும் கூட நான் போன்ல ஒரு மணிநேரம், ரெண்டு மணிநேரம் பேசிட்டே இருப்பேன். நேரம் போறதே தெரியாது!’

’நேத்து நானும் அவங்களும் கோயிலுக்குப் போனோம்.’ (புது ப்ராஜெக்ட் கையெழுத்து இடப் போகும்போது, வழியில் இருந்த பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டுச் சென்ற விஷயத்தை மறைத்து…)

‘மேடமும் நானும் பாம்பே போனபோது தாஜ் ஹோட்டலில் போட்டோ எடுத்தோம்.’

இப்படி வெறும் வாயை மென்றுகொண்டிருந்தவர்களுக்கு அவலைப் போட்டான் மாதவன். மாதவனின் செயலும் தெரியாமல், ஊழியர்களின் பேச்சும் தெரியாமல் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார் காவ்யா.

வருடங்கள் சென்றன. மாதவனுக்குப் பல ப்ரமோஷன்கள் வந்தன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் திறமைக்குக் கிடைத்த ப்ரோமோஷன்களாகப் பார்க்கப்படவில்லை. காவ்யா – மாதவன் உறவுக்குக் கிடைத்த பரிசாக பேசித் தீர்த்தார்கள்.

பணப்பிரச்னை காரணமாக வெளியேற்றப்பட்ட நிகில், ‘காவ்யா எல்லாம் பொம்பளையா? மாதவன் மாதிரி நினைச்சிட்டா… என்னைக் கூப்பிட்டா. வரலைன்ன உடனே பொய்க் காரணம் சொல்லி அனுப்பிட்டா’ என்றான்.

‘என்னைக் கூட ஒரு முறை பாம்பேல மீட்டிங்னு சொல்லி கூப்பிட்டாங்க. நான் உஷாராகி வரமாட்டேன்னு சொல்லிட்டேன்…’

**

ஒரு பெண் தன்னை ஒருவன் கூப்பிட்டான் என்று சொல்ல முடியாது. அது மிகக்கேவலமான விஷயம். ஆனால், ஒரு பெண் தன்னைக் கூப்பிடுகிறாள் என்பதில் ஓர் ஆண் பெருமைகொள்கிறான். தன்னிடம் நட்பாகப் பழகும் ஒரு பெண்ணைப் பற்றி, அந்த நட்புக்குக் களங்கம் கற்பிக்கும் வேலையை ஆண் தயக்கமின்றிச் செய்கிறான்.

பெரிய படிப்பு படித்து, நல்ல அறிவாளியாக இருக்கும் பெண்ணைக் கண்டு காதலிக்கும் நேரத்தில், அவள் செய்யும் வேலையைக் கேவலமாகப் பார்க்கும் பார்வை ஓர் ஆணுக்கு இருக்கிறது. அவன் ஏதோ அவளைக் காப்பாற்ற வந்த தேவதூதன் போலக் கற்பனை செய்துகொண்டு, அவள் விருப்பம் என்ன என்று அறியாமலே அவள் மீது உரிமைகொள்கிறான். தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.

‘அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்து ஜிஎம் கிட்ட கையெழுத்து வாங்கச் சொன்னா, ஜிஎம் கண்ணை மூடிட்டு கையெழுத்துப் போட்டுடறார். நாம போனா நாலு தடவை கரெக்‌ஷன் போடச் சொல்லி அனுப்பிடுவார்…’

’என்னதான் எம்டி கூடப் பேசறதுக்கு விஷயம் இருக்குமோ தெரியலை. எப்பப் பார்த்தாலும் இந்தம்மா போய் கடலை போடுது. அவரும் ஈன்னு சிரிச்சிப் பேசிட்டு இருக்கார்…’

‘ஒரு பர்மிஷன், லீவு கேட்டா சார் எவ்வளவு கத்தறார்? அந்தப் பொண்ணு போய் ஒரு சிரிப்பு சிரிச்சான்னா, உடனே கொடுத்துடறார்… எல்லாம் நேரம்…’

’அழகுங்கற தகுதியை வச்சிட்டு அது வேலைக்குச் சேர்ந்திருச்சு.’

‘பொண்ணுன்னு ஒரு தகுதியை வச்சிட்டு என்னம்மா ஆடறாங்க. அவ எல்லாம் என்ன எழுதறா? கதை, கவிதை எல்லாம் நிறைய பத்திரிகைகளில் வருது. யாரைக் கைக்குள்ள போட்டிருக்காளோ…’

‘இலக்கிய கூட்டம், நண்பர்கள் வட்டம்னு அந்தப் பொண்ணு சுத்தாத இடமில்லை. இவ கூட எல்லாம் புருஷன் எப்படித்தான் வாழறான்னோ தெரியலை.’

’பெண்ணியம் பேசறவங்க எல்லாம் பாலியல் சுதந்தரத்துலதான் வந்து நிப்பாங்க.’

‘போன தடவை அவளை வேறொருத்தன் கூடப் பார்த்தேன். இந்தத் தடவை இன்னொருத்தன் கூட. கேட்டால் ஆண் – பெண் நட்பைத் தப்பா பார்க்காதீங்கன்னு சண்டைக்கு வந்துடுவாங்க.’

***

பெண்கள் தலைமை பொறுப்பில் இருப்பதைச் சகிக்காதவர்கள் இயலாமையாலும் பொறாமையாலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்தான் ஒழுக்கம் பற்றிய  விமரிசனங்கள். இதில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் புறம் பேசுகிறார்கள். தாங்கள் பேசுவது தங்களைப் போன்று இன்னொரு பெண்ணைப் பற்றி என்று கூட பிரக்ஞை இன்றிப் பேசுகிறார்கள்.

ஒரு சிரிப்பு, ஓர் உரசல், கொஞ்சம் நெருக்கம் காட்டி எதையும் ஒரு பெண்ணால் சாதிக்க முடியும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்களை மட்டும் கேவலப்படுத்தவில்லை. ஆண்களையும் மிகமிக மோசமாகக் கேவலப்படுத்துகிறார்கள். ஒரு சிரிப்புக்கும் உரசலுக்கும் ஆண்கள் மசிந்துவிடுவார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

படிப்பு, திறமை, உழைப்பு இருந்தால் ஆணோ, பெண்ணோ உயர்ந்த நிலையை அடைய முடியும். பெண் சொந்தத் திறமையால் முன்னேறிச் செல்வதைக்கூட, பாலினத்தைக் காரணம் காட்டி, அதன் மூலம் உயர்ந்த நிலையை அடைவதாகக் கூறி, தங்களைத் தாங்களே இழிவு செய்துகொள்கிறார்கள்.

ஓர் ஆணும் பெண்ணும் நட்பாக இருப்பது இந்தச் சமூகத்தில் மிக கஷ்டமான காரியமாகவே இருக்கிறது. கல்வி, தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் முன்னேறினாலும் ஆழ்மனத்தில் பெண்களைப் பற்றிய பார்வைகள் மாறாத வரை இங்கு உண்மையான நட்பு நீடிக்க சாத்தியமே இல்லை. கண்காணாத தேசங்களில் இருந்து இணையத்தின் மூலம் ஏற்படும் ஆண் – பெண் நட்பு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஏதோ பிரச்னை காரணமாக விரிசல் விடும்போது, அதன் உண்மை சொரூபம் தெரிய ஆரம்பிக்கிறது. நட்பாக இருந்த காலகட்டத்தில் பேசிய விஷயங்கள், கடிதங்கள் அனைத்தையும் பொதுவெளியில் காட்டி, ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொள்கிறார்கள்.

நல்ல நட்புக்குப் பிரச்னை வராது. அப்படியே வந்தாலும் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாது. நாம் பழகுவது பெண் என்றோ, ஆண் என்றோ தோன்றாததுதானே சிறந்த நட்பாக இருக்க முடியும். அந்த நட்பில்தானே நம்பிக்கை இருக்கும்.

பெண் எதைச் செய்தாலும் சமூகம் அவளை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. அவள் இப்படித்தான் ஆணுடன் பழக வேண்டும். இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதப்படாத விதியை வைத்திருக்கிறது. பெண் எப்போதும் யாரும் தப்பாக நினைத்துவிடக்கூடாதே என்ற எண்ணத்தில் சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் மீறும் பெண்கள் மிகப்பெரிய சர்ச்சைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண் எப்படிப் பழக வேண்டும், எப்படி எழுத வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்?

சமூகத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதே போலத்தான் பெண்களின் ஒழுக்கம், நட்பு சார்ந்த விஷயங்களிலும் மாற்றம் வரும்போது இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னைகளைக் கண்டு அஞ்சி, பின்வாங்காமல், முன்னோக்கிச் செல்வதுதான் வரும் தலைமுறை பெண்களுக்குச் செய்யும் அற்புதமான காரியமாக இருக்க முடியும். இழக்காமல் எதையும் பெற முடியாது என்பது போல, இதுபோன்ற தடைகளைத் தாண்டி பெண்கள் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பெண்ணும் தன்னால் முயன்ற அளவு சிறு நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

[பெண்மனம், இந்த சீசனுக்கு இதோடு முற்றும்]

ஒரு மனைவியின் கதை

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி.

அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ்.

ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.

அரசியல், சமூகச் சிந்தனைகள், தத்துவம், இலக்கியம் போன்ற பல விஷயங்களை வெஸ்ட்பாலன் மார்க்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் நிறைய விவாதிப்பார்கள்.  ஜென்னிக்கு கவிதைகள் மீது தீராத ஆர்வம்.

அன்பும் பண்பும் திறமையும் கொண்ட ஜென்னியை எல்லோருக்குமே பிடித்துப் போகும். மார்க்ஸுக்கும் ஜென்னியைப் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.

பள்ளி இறுதி ஆண்டில், ‘எதிர்கால வேலை’ என்ற தலைப்பில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னார்கள். அதில் மார்க்ஸ் எழுதியவை…

‘மனிதன் என்பவன் தனக்காக மட்டுமே வாழ்பவன் அல்ல. அவன் சக மனிதனுக்காகவும் பாடுபட வேண்டும். தனக்காகப் பாடுபடுபவன் நல்ல சிந்தனையாளராக இருக்கலாம், நல்ல நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், நல்ல மனிதனாக இருக்க முடியாது.  மனிதகுலத்தின் பெரும்பான்மைக்குப் பயன்படக்கூடிய ஒரு வேலையைச் செய்தால், அதில் வரும் எந்தத் தடையும் நம்மை ஒன்றும் செய்துவிடாது. நம் தியாகத்தால் உலக மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதில் இருக்கும் உண்மையான சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும். அதுபோன்ற பணியையே நான் விரும்பி ஏற்கப் போகிறேன்.’

ஜென்னிக்கு மார்க்ஸைப் பிடிக்க அவருடைய அறிவும் மக்களுக்கான சிந்தனைகளும்தான் காரணம்.

தன்னைப் போலவே மார்க்ஸும் வழக்கறிஞராக வேண்டும் என்று அவர் அப்பா நினைத்தார். பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். ஜென்னிக்கும் மார்க்ஸுக்கும் பிரிவு துயரத்தை அளித்தாலும் இருவரும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டனர். மார்க்ஸ் தொடர்ந்து ஜென்னிக்குக் கடிதம் எழுதி அனுப்பினார். அந்தக் கடிதம் முழுவதும் காதல் கவிதைகளால் நிரம்பி வழியும். ஜென்னியும் இலக்கிய ரசம் மிகுந்த, காதல் கடிதங்களை வீட்டுக்குத் தெரியாமல் எழுதுவார்.

ஜென்னி – மார்க்ஸ் காதல் மார்க்ஸின் அப்பாவுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அவர் பயந்து போனார். தன் குடும்பம் மிகவும் சாதாரணமானது. ஜென்னியின் குடும்பம் செல்வாக்கு மிக்க பணக்காரக் குடும்பம். இவர்களின் காதலால் அருமையான நண்பர் வெஸ்ட்பாலனின் நட்பு உடைந்துவிடுமோ என்று நினைத்தார். ஜென்னியிடம் மார்க்ஸைத் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றார். மார்க்ஸிடம் காதலைத் துறந்துவிடும்படி கடிதம் எழுதினார். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

***

தத்துவத்தின் மீது மிகவும் ஈடுபாடுகொண்டார் மார்க்ஸ். புரட்சிகரச் சிந்தனையாளர்களின் இளம் ஹெகேலியர் இயக்கத்தில் இணைந்தார். 23 வயதில் டாக்டர் பட்டம் பெற்று ட்ரியர் திரும்பினார் மார்க்ஸ்.

அப்போது மார்க்ஸின் அப்பாவும் ஜென்னியின் அப்பாவும் மறைந்திருந்தார்கள். ஜென்னியின் அம்மாவுக்கு இவர்களின் திருமணத்தில் விருப்பமில்லை. திருமணம் தள்ளிப்போனது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 29 வயதில் ஜென்னி தன் அன்புக்குரிய மார்க்ஸை மணந்துகொண்டார்.

‘ரைனிஷ் ஷெய்டுங்’ பத்திரிகையில் அரசியல் விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ், விரைவில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரானார். கோபமுற்ற அரசாங்கம் அந்தப் பத்திரிகையைத் தடை செய்தது. மார்க்ஸை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது.

மார்க்ஸும் ஜென்னியும் பிரான்ஸ் சென்றார்கள். சிறிய வீட்டில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தார்கள். அவர்கள் திருமணத்தின் போது கிடைத்த பணத்தை ஒரு பெட்டியில் வைத்திருந்தார் ஜென்னி. அந்தப் பெட்டி எப்போதும் திறந்தே இருக்கும். பணம் தேவைப்படும் நண்பர்கள் அந்தப் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தங்களால் பிறருக்கு உதவ முடிவதை நினைத்து ஜென்னியும் மார்க்ஸும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

1844-ம் ஆண்டு ஜென்னி பெண் குழந்தைக்குத் தாயானார். தன் அன்பு மனைவியின் பெயரையே குழந்தைக்கு வைத்தார் மார்க்ஸ்.

ஜெர்மன் – பிரெஞ்சு புத்தகங்கள் தயாரிப்பில் ரூகேயுடன் சேர்ந்து வேலை செய்தார் மார்க்ஸ். அப்போது பிரெடரிக் ஏங்கெல்ஸ் அறிமுகம் கிடைத்தது.

***

இரண்டு ஆண்டுகளில் கையில் இருந்த பணம் காலி. ஜென்னிக்குப் பொருளாதாரக் கஷ்டம் வர ஆரம்பித்தது. அப்போது பிரஷ்யாவில் நெசவாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பெரிய மோதல் நடைபெற்றது. நெசவாளர்களுக்கு ஆதரவாகக் கட்டுரைகள் எழுதினார் மார்க்ஸ். கோபம் அடைந்த பிரஷ்ய அரசாங்கம், பிரான்ஸில் இருந்து மார்க்ஸை வெளியேற்றும்படி கட்டாயப்படுத்தியது. மார்க்ஸ் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றார். வீட்டில் இருந்த பொருள்களை விற்று, கிடைத்த பணத்தில் குழந்தைகளுடன் பிரஸ்ஸல்ஸ் போய்ச் சேர்ந்தார் ஜென்னி.

ஜென்னியின் அம்மா மகளுக்கு உதவி செய்வதற்காக ஹெலன் டெமூத் என்பவரை அனுப்பி வைத்தார். மூன்றாவது குழந்தையாக மகன் பிறந்தான். ஜென்னியும் மார்க்ஸும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.

அங்கும் அரசாங்கத்தை எதிர்த்து எழுத தடை வந்தது. மார்க்ஸுக்கு வருமானம் குறைந்தது. பிரான்ஸில் மன்னராட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் வழிகாட்டலில் அமைந்த கம்யூனிஸ்ட் லீக் போராட்டங்களை ஒன்றிணைத்தது. லூயி மன்னன் நாட்டை விட்டு ஓடினார். இடைக்கால அரசாங்கம் மார்க்ஸை அழைத்தது.

கிளம்புவதற்குள் ஒருநாள் நள்ளிரவு திடீரென்று மார்க்ஸைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பதறிப்போன ஜென்னி, அவரைப் பின் தொடர்ந்து சென்றார். ஜென்னியையும் கைது செய்து, சிறையில் தள்ளினார்கள். அந்தச் சிறையில் குற்றவாளிகள் நிரம்பியிருந்தனர். ஜென்னிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஒருபுறம் கணவர் கைது, இன்னொரு புறம் குழந்தைகள் தனியாக இருந்தனர். தாங்க முடியாத குளிர். சகிக்க முடியாத இரவாக அமைந்தது. மறுநாள் ஜென்னி மறுநாள் விடுதலை செய்யப்பட்டார். அம்மாவும் அப்பாவும் கைது செய்யப்பட்ட விஷயத்தால் பயந்துபோயிருந்த குழந்தைகள் ஜென்னியைக் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டனர். மார்க்ஸும் விடுதலையானார். வீட்டில் இருந்த பொருள்களை விற்று, பிரான்ஸுக்குச் சென்றார்கள்.

***

மீண்டும் அரசியல் சூழ்நிலை மாறியது. மார்க்ஸை வெளியேறும்படிச் சொன்னது. மார்க்ஸ் குடும்பம் லண்டனுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு ஹென்ரிச் என்ற குழந்தை பிறந்தது. மார்க்ஸ் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியில் இறங்கினார்.

மார்க்ஸின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அவர் எழுதும் கட்டுரைகள், புத்தகங்களை ஜென்னி பிரதியெடுப்பார். தன்னுடைய கருத்துகளை மார்க்ஸுடன் விவாதிப்பார். மார்க்ஸும் ஜென்னியின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பார்.

1850-ம் வருடம் மிகவும் மோசமான காலகட்டம். பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். உதவி செய்யவும் ஆள்கள் இல்லை. ஜென்னி உதவி கேட்டு நண்பருக்குக் கடிதம் எழுதினார்.

‘சரியான ஆகாரம் இல்லை. முதுகிலும் மார்பிலும் கடுமையான வலி. என் மார்பில் பால் சுரக்கவில்லை. குழந்தை பசியில் பலமாக உறிஞ்சியதில் தோல் வெடித்து, ரத்தம் அவன் வாயில் கொட்டியது… எங்களின் தேவை மிகவும் குறைவானதே. ஆனால், அதைப் பெறுவதுக்குக்கூட நாங்கள் மிகவும் போராட வேண்டியிருக்கிறது…’

ஒருநாள்…

‘ஜென்னி, நான் உனக்குத் தாங்க முடியாத கஷ்டத்தை அளித்து வருகிறேன். எனக்கு வருத்தமாக இருக்கிறது…’

’நாம் என்ன நமக்காகவா போராடுகிறோம்? பாட்டாளி மக்களுக்காகத்தானே போராடுகிறோம். அந்தப் போராட்டம் எந்தவிதத்திலும் என்னை நிலைகுலையச் செய்துவிடாது கார்ல். என்னை நினைத்து வருந்தத் தேவையில்லை. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவள். எனக்கு ஆதரவாக அன்பான கணவனாக நீ இருக்கும்போது எந்தக் கஷ்டமும் என்னை ஒன்றும் செய்துவிடாது…’

‘நீ என்ன சொன்னாலும் நம் வாழ்க்கை மிகவும் கடினமானது ஜென்னி.’

‘என்னுடைய கவலை எல்லாம் இதுபோன்ற பிரச்னைகளில் நீ கவலை அடைய வேண்டியிருக்கிறதே என்பதுதான். உன்னுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் இன்னும் நல்லவிதமான சூழல் அமைந்திருக்கலாம் கார்ல்.’

’நீயும் குழந்தைகளும்தான் என்னுடைய சந்தோஷங்கள் ஜென்னி. உங்களைப் பார்க்கும்போது எந்தக் கவலையும் என்னை அண்டுவதில்லை.’

வாடகை கொடுக்க முடியாததால் பல வீடுகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரஷ்ய அரசாங்கம் மார்க்ஸ் மீதும் அவருடைய தோழர்கள் மீதும் பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியது. ஜென்னிக்கு நரம்புத்தளர்ச்சி நோய் வந்தது. சிகிச்சைப் பெற வழியில்லை. சில காலங்களில் எட்வர்டுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. பரிதாபமாகக் குழந்தை இறந்துபோனது. ஜென்னியையும் மார்க்ஸையும் மகனின் இறப்பு மிகவும் பாதித்தது.

ஏங்கெல்ஸ் மற்றும் சில நண்பர்கள் அளித்த உதவியில் குடும்பம் பிழைத்தது. மார்க்ஸ் மீது கொலோன் கம்யூனிஸ்ட் சதி வழக்கு போட்டது பிரஷ்ய அரசாங்கம். அதிலிருந்து மீண்டு வருவதற்காக மார்க்ஸ் நிறைய உழைத்தார்.

சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த மகள் பிரான்சிஸ்கா, இறந்து போனாள்.

‘என் அருமை மகள் இறந்த துக்கம் ஒருபுறம். அவளை அடக்கம் செய்வதற்குப் பணமில்லாதது இன்னொருபுறம். ஐயோ… எந்த அம்மாவுக்கும் இந்தக் கொடுமை வாய்க்கக்கூடாது. அன்பு பிரான்சிஸ்கா, நீ பிறந்தபோது தொட்டில் வாங்க பணமில்லை… நீ இறந்தபோது சவப்பெட்டி வாங்க பணமில்லை… எப்படிப்பட்ட பெற்றோர் நாங்கள்!’ ஜென்னி கதறினார்.

வேறுவழியில்லை. பக்கத்து அறையில் இறந்த மகளை வைத்துவிட்டு, மீதிக் குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இரவு முழுவதும் ஜென்னியும் மார்க்ஸும் அழுதனர். நண்பர் ஒருவர் இரண்டு பவுண்ட் கொடுத்து, சவப்பெட்டி வாங்க உதவினார்.

அடுத்த சில ஆண்டுகளில் எட்கர் என்ற 8 வயது மகனும் இறந்துபோனான்.

‘நம் அன்பு குழந்தைகள் நான்கு பேரை இழந்த துயரம் என்னால் எப்போதும் தாங்கமுடியாத வலியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது கார்ல். அவர்களை நினைக்கும்போது என் ஆயுள் நீடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை…’

ஏழில் மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஏங்கெல்ஸ் அழைப்பின் பேரில் மார்க்ஸும் ஜென்னியும் சில காலம் அவர் வீட்டில் தங்கியிருந்தனர். மார்க்ஸ் ‘மூலதனம்’ எழுத ஆரம்பித்தார். ஒவ்வொன்றையும் சளைக்காமல் பல முறை பிரதி எடுத்துக் கொடுத்தார் ஜென்னி.

ஜென்னியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தவுடன் ஜென்னியும் குழந்தைகளும் அங்கு சென்றனர். பேத்திகளைக் கண்ட ஜென்னியின் அம்மா மகிழ்ந்து போனார். அங்கு சில காலம் தங்கியிருந்தார் ஜென்னி.

ஜென்னியின் பிரிவைத் தாங்க முடியாத மார்க்ஸ் கடிதம் எழுதினார். ‘அன்பு நிறைந்த ஒரு பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது!’

தாய் இறந்த பிறகு அவருக்குக் கிடைத்த சொத்துடன் வந்து சேர்ந்தார் ஜென்னி. ஓராண்டு பொருளாதாரப் பிரச்னையின்றி வாழ்ந்தனர். நண்பர்கள், அகதிகள் போன்றவர்களுக்குத் தேடிப் போய்ப் பண உதவி செய்தார் ஜென்னி…

***

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மார்க்ஸ் எழுதி வந்த கட்டுரைகள் குறைந்து போயின. அழையா விருந்தாளியாக வறுமை வந்து உட்கார்ந்துகொண்டது. வளர்ந்த குழந்தைகள் வீட்டில் இருந்தே படித்தனர். நாள்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமானது. மார்க்ஸ் வேலை தேடினார். கையெழுத்து மோசமாக இருந்ததால் வேலை கிடைக்கவில்லை. குழந்தைகளைத் தத்து கொடுத்துவிட்டு, ஏழைகள் வசிக்கும் இல்லத்தில் தானும் ஜென்னியும் சேர்ந்துவிடலாம் என்று கூட நினைத்தார் மார்க்ஸ்.

மீண்டும் உதவிக்கு வந்தார் ஏங்கெல்ஸ். நண்பர் ஒருவர் மார்க்ஸுக்கு சொத்து எழுதி வைத்து, இறந்து போனார். அதன் மூலம் மூலதனம் நூல் வெளியிடப்பட்டது.

‘இன்று மகத்தான நாள் கார்ல். நம் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.’

***

மார்க்ஸின் இரண்டு பெண்களும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். சில ஆண்டுகளில் பேரன், பேத்திகள் என்று மார்க்ஸின் குடும்பம் விரிவடைந்தது. மார்க்ஸ் வீட்டுக்கு அருகிலேயே ஏங்கெல்ஸும் குடிவந்தார். ஒருவழியாக வறுமை விலகியிருந்தது. வாழ்க்கையில் இனிமை வந்து சேர்ந்தது.

1880-ல் ஜென்னி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அது குணமளிக்க முடியாத நோய் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மார்க்ஸ் இடிந்துபோனார். ஜென்னியின் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். தன் பொருட்டு தன் கணவரோ, குழந்தைகளோ வருத்தப்படக்கூடாது என்று நினைத்த ஜென்னி, தன் நோயின் வலியை மறைத்துக்கொண்டு, நகைச்சுவையாகப் பேசினார்.

விரைவிலேயே மார்க்ஸும் நுரையீரல் நோயால் தாக்கப்பட்டார். தனியறையில் வைக்கப்பட்டார். பல வாரங்கள் ஜென்னியும் மார்க்ஸும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஓரளவு நோய் குணமானதும் மார்க்ஸ் ஜென்னியிடம் வந்தார்.

‘பக்கத்து பக்கத்து அறைகளில் இருந்தும் நம்மால் பார்க்க முடியாதது கொடுமையான விஷயம் ஜென்னி.’

‘ஆமாம் கார்ல். எவ்வளவோ காலம் நாம் பிரிந்து வசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் இந்தப் பிரிவு இவ்வளவு வலியைத் தந்தது இல்லை. உன் ஒரு கடிதம் அத்தனை துன்பத்தையும் மாயமாக்கிவிடும்.’

‘அன்பு ஜென்னி, நம் வாழ்க்கையில் நீ இன்பத்தை விட துன்பத்தையே அதிகம் பெற்றிருக்கிறாய். மிகவும் வருத்தமாக இருக்கிறது…’

‘இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிறைவைத் தந்திருக்கிறது கார்ல். சக மனிதனின் உயர்வுக்குப் பாடுபடுபவனே சிறந்த மனிதன். அதுபோன்ற வேலையில் கிடைக்கும் சந்தோஷமும் நிம்மதியும் வேறு எதிலும் கிடைக்காது என்று நீதானே சொல்லியிருக்கிறாய். நாம் இருவரும் அந்த வாழ்க்கையைத்தானே விரும்பி வாழ்ந்திருக்கிறோம்.’

பதில் சொல்லாமல் மார்க்ஸ் ஜென்னியின் கைகளைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

‘நம் கஷ்டங்களை மறந்துவிட்டேன் கார்ல். மீண்டும் ஒருமுறை வாழும் வாய்ப்புக் கிடைத்தால், நீயே கணவனாகவும், இதே கஷ்டங்களுடனும்தான் வாழ விரும்புகிறேன், கார்ல்.

மூலதனம் நூல் ஜெர்மனியில் மூன்றாம் பதிப்பு வர இருப்பதாகக் கேள்விப்பட்டேன். லண்டன் பத்திரிகை உன்னை சோசலிச சிந்தனையாளர் என்று கூறியிருக்கிறது. ஜெர்மன் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இவை எல்லாவாற்றையும் விட சந்தோஷம் வேறு உண்டா கார்ல்? நம் உழைப்பு வீணாகிவிடவில்லை. உலகம் முழுவதும் உன் சிந்தனை பரவும், பாட்டாளி வர்க்கம் பயன்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’

1881. டிசம்பர் 2. ஜென்னி இறந்து போனார். மார்க்ஸ் சுயநினைவிழந்தார். ஜென்னியின் இறுதிச் சடங்குகளை ஏங்கெல்ஸ்தான் செய்தார். ஜென்னியின் மறைவுக்குப் பிறகு மார்க்ஸ் தன்னை இழந்துவிட்டார். 15 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் ஜென்னியின் புகைப்படத்தை கையில் வைத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அவர் உயிர் பிரிந்தது.

***

ஜென்னி நினைத்தது போலவே மார்க்ஸ் உலகம் முழுவதும் அறியப்பட்டார். மார்க்ஸின் சிந்தனையால் உலகம் பல மாற்றங்களைக் கண்டது. பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த ஆயிரம் ஆண்டில் தலைசிறந்த சிந்தனையாளர் யார் என்ற கேள்விக்கு, கார்ல் மார்க்ஸை உலக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

குற்றமும் தண்டனையும்

அருணா அன்று

அருணா-அன்று

ருணா ஷண்பக். 20 வயது. மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஒரு டாக்டருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்தது. இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதில் அருணாவுக்குக் கூடுதல் சந்தோஷம். திருமண வாழ்க்கை, கணவன், குழந்தைகள் என்று கற்பனையில் திளைத்துக்கொண்டிருந்தார்.

1973-ம் ஆண்டு நவம்பர் 27. உடை மாற்றுவதற்காக மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்குச் சென்றார் அருணா. அதே மருத்துவமனையில் வார்ட் பாயாகப் பணியாற்றிய சோஹன்லால் பார்தா வால்மீகி என்பவன், பின்னால் வந்து தாக்கினான். நாயைக் கட்டி வைக்கும் சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். அருணாவுக்கு நடக்கும் கொடூரம் புரிவதற்குள் சுயநினைவு இல்லாமல் போய்விட்டது. சோஹன்லால் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நகை, பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாததால், அருணாவின் கண்கள் திறந்திருந்தும், பார்க்க முடியவில்லை. அவரால் பேச முடியவில்லை. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த 38 ஆண்டுகளாக அவர் வேலை செய்த கெம் மருத்துவமனை படுக்கையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார் அருணா.

உறவினர்கள் அதிர்ந்தார்கள். திருமணம் நின்றுபோனது. வழக்கு நடைபெற்றது. குற்றவாளி சோஹன்லால் கைது செய்யப்பட்டான். அவன் மீது திருட்டு, கொலை முயற்சி என்று இரண்டு வழக்குகள் போடப்பட்டன. அவன் இயற்கையான முறையில் உடல் உறவு வைத்துக்கொள்ளாததால், பாலியல் பலாத்காரம் வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. (என்ன கேவலமான சட்டம்! பெண்ணின் விருப்பம் இன்றி தொட்டாலே அது குற்றம்தானே?) ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

தண்டனை முடிந்த பிறகு சோஹன்லால் டெல்லி சென்று விட்டான். இந்த முப்பது வருடங்களில் அவனுக்குத் திருமணமாகி இருக்கலாம். அவனுடைய குழந்தைகளுக்கும் திருமணம் நடந்திருக்கலாம். பேரன், பேத்தி பிறந்திருக்கலாம். அவனுடைய வாழ்க்கையில் அந்த ஏழு ஆண்டுகள் மட்டுமே இயல்பு வாழ்க்கை சற்று மாறியிருந்திருக்கும். அதன் பிறகு அவனும் மற்றவர்களைப் போல இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்திருப்பான்.

அருணா இன்று

ஆனால் அருணா? உயிர் மட்டுமே இருக்கிறது உடலில். வேறு எந்த அசைவுகளோ, சிந்தனைகளோ இன்றி இருக்கிறார். அவருக்கு நேர்ந்த கொடுமை தெரியாது. பெற்றோர் இறந்து போன விஷயம் தெரியாது. திருமணம் நின்றுபோன விஷயம் தெரியாது. ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருந்தும் தன்னை வந்து யாரும் பார்ப்பதில்லை என்பது தெரியாது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்குத் தண்டனை கிடைத்த விவரமும் தெரியாது. அவன் சந்தோஷமாக எங்கோ வாழ்ந்து

கொண்டிருப்பதும் தெரியாது. தனக்கு வயது 58 என்றும் தெரியாது. தன்னுடய உருவம் எப்படி உருமாறியிருக்கிறது என்பதும் தெரியாது. வெளி உலகில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன, இப்போது பகலா, இரவா எதுவும் தெரியாது.

குற்றம் செய்தவன் குறைந்த தண்டனை அனுபவித்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டான். ஆனால் திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அருணாவுக்கு வாழ்நாள் முழுவதும் எத்தனை கொடூரமான தண்டனை?

அருணா அனுபவித்தது போதும், அவரைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கருணைக்கொலைக்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்பதால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனால் மருத்துவர்கள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் அவர் உயிர் பிரிவதற்கு உதவி செய்யலாம் என்று புதிய தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

ருச்சிகா கிர்ஹோத்ரா

பத்து வயதிலேயே தாயை இழந்தவர் ருச்சிகா. அப்பா, பாட்டி, தம்பியுடன் சண்டிகரில் வாழ்ந்து வந்தார். ருச்சிகாவும் அவர் தோழி ஆராதனாவும் டென்னிஸ் வீராங்கனைகள். தினமும் பயிற்சிக்காக டென்னிஸ் அசோசியேஷன் செல்வார்கள். அந்த அசோசியேஷனின் தலைவர் ரத்தோர் என்ற ஐபிஎஸ் அதிகாரி. அவருடைய மகளும் ருச்சிகாவுடன் படித்து வந்தார்.

ஒருநாள் பயிற்சிக்குச் சென்றபோது, தோழி ஆராதனாவை விரட்டிவிட்டு, ருச்சிகாவைப் பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார் ரத்தோர். ருச்சிகா போராடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆராதனா அதிர்ந்துபோனார். இருவரும் தப்பித்து வீடு வந்து சேர்ந்தனர். மறுநாளும் ரத்தோரின் கொடுமை தொடர்ந்தது. இருவரும் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். பெரும் போராட்டத்துக்குப் பிறகு ரத்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று ருச்சிகா, ஆராதனா குடும்பங்கள் மிரட்டப்பட்டன. ருச்சிகாவின் தம்பியை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார் ரத்தோர். ருச்சிகாவின் அப்பா மீது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அப்படியும் வழக்கு வாபஸ் பெறாததால், நடத்தை சரியில்லாதவள் என்று சொல்லி ருச்சிகாவை பள்ளியிலிருந்து நீக்க வைத்தார் ரத்தோர். அடுத்தடுத்து இன்னல்களைச் சந்தித்த 14 வயது ருச்சிகா, தன்னால்தானே இத்தனை துன்பங்கள் தன் அப்பாவுக்கும் தம்பிக்கும் என்று நினைத்து, 1991-ம் ஆண்டு விஷம் சாப்பிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

விஷயம் கேள்விப்பட்ட ரத்தோர் அன்று இரவு பார்ட்டி வைத்து, கொண்டாடியிருக்கிறார். வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ரூபி என்ற பெயரில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அளிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் வழக்கு மூடப்பட்டது. சில மாதங்களில் ரத்தோரின் சேவையைப் பாராட்டி, அரசாங்கம் கூடுதல் டிஜிபி பொறுப்பு அளித்தது.

அநியாயமாகத் தன் மகள் சாகடிக்கப்பட்ட விஷயம் கிர்ஹோத்ராவை நிம்மதி இழக்கச் செய்தது. தவறு செய்தவர் எந்தக் குற்றவுணர்வும் இன்றி வாழ்ந்துகொண்டிருக்க, தன் மகளின் இறப்பு மன உளைச்சலைத் தந்தது. மீண்டும் வழக்கு போடப்பட்டது. ஏராளமான தொல்லைகள். போராட்டங்கள். அவமானங்கள். 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தோர் செய்த குற்றத்துக்காக 6 மாத தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனை அளிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் சிரித்துக்கொண்டே பெயிலில் வெளியே வந்துவிட்டார் ரத்தோர்.

ஆருஷி தல்வார்

ஆருஷியின் பெற்றோர் பிரபலமான பல் மருத்துவர்கள். வசதியானவர்கள். பங்களாவில் வாசம். ஒரே பெண். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஆருஷி, ஒருநாள் இரவு அவருடைய அறையில் கொல்லப்பட்டார். மறுநாள் அந்த வீட்டின் வேலைக்காரர் ஹேமந்த் உடல் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலையில் இதுவரை சரியான துப்புக் கிடைக்கவில்லை. மிகவும் புத்திசாலித்தனத்துடன், மருத்துவம் தெரிந்த ஒருவரால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். கொலைக்கான காரணமும் தெரியவில்லை. எந்தவிதத் தடயமும் கிடைக்கவில்லை. வெளியில் இருந்து யாரும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, ஆருஷியின் பெற்றோர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்கிறது சிபிஐ. புரியாத புதிராக இருக்கிறது ஆருஷியின் வழக்கு.

பத்மினி

1992-ம் ஆண்டு சிதம்பரத்தில் பத்மினியின் கணவரை, திருட்டுக் குற்றத்தில் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். கணவருக்கு உணவு எடுத்துச் சென்ற பத்மினியை அவருடைய கணவரின் கண் முன்னே பல காவலர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். மறுநாள் பத்மினியின் கணவர் தூக்கில் தொங்கியதாக உடலை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் நடந்த இந்தக் கொடுமையைக் கண்டு நாடே அதிர்ந்து போனது.

**

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையின் சிறுகதைப் போட்டிக்காக ஏராளமான கதைகள் வந்து சேர்ந்தன. அதில் முதல் பரிசு பெற்ற கதையை எழுதியவர், ஆயுள் தண்டனை கைதி. அவர் தொடர்ந்து கதைகள் எழுதி வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை முடிந்து, அலுவலகத்துக்கு வந்தார். ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக அவர் தண்டனை அனுபவித்தார் என்பது மட்டும்தான் அதுவரை எங்களுக்குத் தெரிந்த விஷயம்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. சாந்தமான முகம். நிதானமான நடை. சூழ்நிலையால் குற்றவாளியாக மாறியிருப்பாரோ என்று நினைத்தேன். சற்று நேரம் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் சென்ற பிறகு இந்த விஷயம் தெரிய வந்தது.

’நீங்க எதுக்காக கொலை செய்தீங்க?’

‘ம்… அவ நல்லா தளதளன்னு இருப்பா. ஆசைப்பட்டுத் தொட்டேன். பயங்கரமா போராடி உயிரை விட்டுட்டா…’

‘அதை நினைச்சு இப்ப வருத்தப்படறீங்களா?’

’அவ செத்ததுலயோ, எனக்குத் தண்டனை கிடைத்ததிலேயோ வருத்தமே இல்லை. ஏதோ நடந்து முடிஞ்சிருச்சு…’

ஆறு ஆண்டுகள் தண்டனை முடிந்த சோஹன்லால் சக மனிதர்களைப் போல சுகமாக வாழ்கிறான். தன் மகள் வயதை ஒத்த பெண்ணைப் பாலியல் தொல்லை கொடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலை செய்ய வைத்த ரத்தோர், அரசாங்கத்தால் பதக்கம் பெற்று, பதவி உயர்வுகள் பெற்று, சமூகத்தில் பெரிய மனிதராக வலம் வந்து, ஓய்வும் பெற்றுவிட்டார். குற்றவாளி யார் என்றே சரியாக ஊர்ஜிதம் செய்ய முடியாமல் ஆருஷியின் வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொலையையும் குற்றமாக நினைக்காமல், தண்டனைக்கும் வருத்தப்படாமல் ஒருவரால் வாழ முடிகிறது.

அப்படியென்றால் மனத்தாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு, உயிரை விட்ட பெண்களுக்கு கிடைக்கும் நீதி என்ன? குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனைக்கு அர்த்தம்தான் என்ன?

மனம் திருந்தி வாழ்ந்தால் பரவாயில்லை. ஆனால் சில ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு, அல்லது செல்வாக்கை வைத்து தப்பி விட்டு, நாட்டில் நடமாடும் குற்றவாளிகளைக் கண்டு மேலும் குற்றங்கள் பெருகாதா?

இந்தியாவில்தான் பெண்கள் அதிக அளவில் வன்முறைகளுக்கு இலக்காகிறார்கள். ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறாள். பத்து நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிறாள். பணியிடங்களில் அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். முப்பது வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு நாடு முன்னேற முன்னேற குற்றம் குறைய வேண்டும். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தே வருகின்றன. பெண்களுக்கு நிகழ்த்தப்படும் குற்றங்களில் பெரும்பாலும் புகார் செய்யப்படுவதில்லை. பெற்றோரும் உறவினர்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களை அவமானமாகக் கருதுவதால் வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். ஒன்றிரண்டு குற்றங்களே பெரிய அளவில் வெளியே தெரிந்து, வழக்குகள் தொடரப்படுகின்றன.

அந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படியே பதிவு செய்தாலும் அந்த வழக்கு நியாயமாக நடப்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பணம், செல்வாக்கு, பதவி என்று பல விஷயங்கள் வழக்கின் போக்கை மாற்றிவிடுகின்றன. அப்படியும் சளைக்காமல் வழக்கைத் தொடர்ந்தால், தீர்ப்பு வருவதற்குள் இருபது வருடங்கள் வரை ஆகிவிடுகிறது. இவ்வளவு நீண்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, உடல்நிலை எவ்வளவு தூரம் வைராக்கியத்தோடு போராட வைக்க முடியும்? சில வழக்குகள் நடத்த பணம் இல்லாமல், தெம்பு இல்லாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. எல்லாம் கடந்து நீதி கிடைக்கும்போது, குற்றவாளிகளுக்குத் தண்டனை அற்பமாக அமைந்துவிடுகிறது. இல்லையென்றால் அந்தத் தண்டனைக்கு மேல் முறையீடு, பெயில் என்று வெளியே வந்து, மிகக் குறைந்த கால தண்டனையுடன் தப்பி விடுகிறார்கள்.

இங்கு குற்றம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் நீதி கிடைப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது! அருணா, ருச்சிகா, ஆருஷி… இன்னும் பெயர் தெரியாத பாதிக்கப்பட்ட பெண்கள் நியாயம் கேட்டு நம் முன் நிற்கிறார்கள். அவர்கள் நியாயம் கேட்பது அவர்களுக்காக மட்டுமில்லை, இனி இதுபோன்று எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.

இப்படித்தான் இருக்க வேண்டுமா பெண்கள்?

இரண்டு வாரங்களுக்கு முன் பத்திரிகைகளில் இந்தச் செய்தி வந்திருந்தது.

’சுங்க இலாகாவில் வேலை செய்யும் ஒரு பெண் அதிகாரிக்கு உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அந்தப் பெண் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோபம் அடைந்த அந்த அதிகாரி, ஆள்களை வைத்து, சினிமா பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை கத்தியால் குத்தியிருக்கிறார்.’

இதுதான் அந்தச் செய்தியின் சாராம்சம்.

செய்தியைப் படித்த நண்பர், ‘இந்தப் பொண்ணுக்கு இதெல்லாம் தேவையா?’ என்றார்.

’என்ன சொல்றீங்க?’

‘இந்தம்மா தனியா போய், படம் பார்த்துக்கிட்டிருந்திருக்கு. கத்தில குத்திட்டாங்க.’

‘அந்தப் பெண்ணோட உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததோட இல்லாமல், எதிர்ப்பு தெரிவிச்சதுக்குக் கத்திலயும் குத்திருக்கார். அதை நீங்க கண்டுக்காம, அந்தம்மா தனியா சினிமாவுக்குப் போனதைத் தப்பா சொல்றீங்களே… என்ன நியாயம்?’

’முழுசா தெரியாம கோபப்படாதீங்க. அந்தம்மா முதல்ல சித்து பிளஸ் டூன்னு ஒரு படம் பார்த்துட்டு, ரெண்டாவதா விருதகிரின்னு ஒரு படம் பார்த்துக்கிட்டு இருந்திருக்கு. சித்து பிளஸ் டூவை பாக்கியராஜ்கூட பார்க்க மாட்டார், அதைப் போய் தனியா இந்தம்மா பார்க்கணுமா? இதுக்கெல்லாம் சப்போர்ட்டுக்கு வராதீங்க’ என்றார்.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, பெண்கள் தனியாக சினிமாவுக்குப் போகக்கூடாது, அதுவும் இதுபோன்ற படங்களைப் பார்க்கக்கூடாது என்ற பார்வை. இன்னொன்று செய்தியை எப்படிப் போடுகிறார்கள் என்பது. பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமில்லாமல், கொலை முயற்சியிலும் இறங்கிய அந்த ஆணின் மீது கோபம் வருவதற்குப் பதில், அந்தப் பெண் எங்கே போனார், எத்தனை சினிமா பார்த்தார், என்ன மாதிரியான சினிமா என்று ஹைலைட் பண்ணியதில் பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றம் கண்டுகொள்ள வைத்துவிடுகிறது செய்தியின் தன்மை.

* * *

சாமியார் என்றால் சில சட்டதிட்டங்களைக் கட்டிவைத்திருக்கும் நம் சமூகத்தில், அந்தச் சாமியாரின் நடத்தையில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டபோது என்ன நடந்தது? நித்யானந்தாவைப் பற்றிய ஆராய்ச்சியை விட, மீடியா அதில் சம்பந்தப்பட்ட பெண் மீதுதான் முழுக் கவனத்தையும் செலுத்தியது. முதலில் அந்தப் பெண்ணின் பெயரை மறைத்து பரபரப்பை அதிகரித்தனர். பிறகு குறிப்புகள் கொடுத்து, மக்களின் சிந்தனை(!)யைக் கிளறி விட்டனர். இறுதியில் அந்தப் பெண்ணைக் காட்டினர். இதில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் நடந்துகொண்டன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்திகளைப் போட்டுத் தீர்த்து, ஓய்ந்தனர். இன்று அதே நித்யானந்தா ’சத்சங்’ நடத்துகிறார். பக்தர்கள் வருகிறார்கள். பத்திரிகைகள் ‘நித்யானந்தாவுடன் பேட்டி’ என்று நாசுக்குக் காட்டுகின்றன.

* * *

மீடியா பொதுவாகவே பெண்களை உடலாகவும் கிளுகிளுப்பு ஊட்டும் விஷயமாகவும் பார்க்கிறது. பெண்களைக் கேவலப்படுத்துவதோடு ஆண்களின் ரசனையையும் தரக்குறைவாக்கி விடுகிறது. கவர்ச்சிப் படங்கள் போடுவது, கிசுகிசு எழுதுவது என்று நெடுங்காலமாக ஒரே பணியை அசராமல் செய்து வருகின்றன பத்திரிகைகள். மிகப்பிரபலமான, கண்ணியமான பத்திரிகை என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிகையில் கூட, ஒரு நடிகையின் திருமண விஷயத்தைச் செய்தியாகப் போட்டுவிட்டு, அடைப்புக்குறிக்குள் ‘இவங்க தொப்புள் சூப்பரு’ என்று கமெண்ட் எழுதுகிறார்கள். எவ்வளவு கேவலமான செயல்.

* * *

பெண்கள் பத்திரிகைகள்?

ஆங்கிலத்தில் வரும் பெண்கள் பத்திரிகைகள், ஆண்களைக் கவரும் விதங்களில் பெண்களின் படங்களைப் போட்டு நிரப்பி விடுகின்றன. பொதுவாகத் தமிழில் வரும் பெண்கள் பத்திரிகைகளில் கவர்ச்சியாகப் பெண்களின் படங்களைப் போடுவதில்லை. ஆனால், அவர்கள் சொல்லும் விஷயங்கள் என்ன?

நன்றாக எப்படிச் சமைக்கலாம், விதவிதமான கோலங்களை எப்படிப் போடலாம், கைத்திறனை எப்படி வளர்த்துக்கொள்ளலாம், வீட்டை எப்படி அலங்கரிக்கலாம், உடலை எப்படிச் சிக்கென வைத்துக்கொள்ளலாம், எந்த உடை அணியலாம், அழகாக எப்படி இருக்கலாம்…

சுற்றி வளைத்து ஆண்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய விஷயங்களாகவே பாடம் நடத்துகின்றன இந்தப் பத்திரிகைகள். விதவிதமாகச் சமைத்துப் போட வேண்டும், கணவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டும், வீட்டைக் கண்ணாடி போல வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களை மீண்டும் மீண்டும் பெண்களின் மூளையில் ஏற்றுகின்றன. அதாவது இவை எல்லாம் பெண்களின் வேலைகள்… இவற்றை இன்னும் அழகாக, சுவையாக எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

இந்த விஷயங்களுக்கு ஏற்றாற்போல அழகுசாதனப் பொருள்கள், உடைகள், ஆபரணங்கள், எடை குறைப்பு நிறுவனங்கள், சமையல் பொருள்கள் என்று வியாபாரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்தப் பொருள்களுக்காகக் கட்டுரைகளா, கட்டுரைகளுக்காகப் பொருள்களா என்று அறியாவண்ணம் நுகர்வு கலாசாரத்தை அழுத்தமாகப் பதித்துவிடுகின்றன.

இப்படிப்பட்ட விஷயங்களுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ள பெண்கள், அத்திப்பூத்தாற் போல என்றாவது ஓர் இலவச இணைப்பில் உருப்படியான விஷயங்கள் வந்தால், ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். அதுவே சமையல் இணைப்பு என்றால் உடனே வாங்கி விடுகிறார்கள். பத்திரிகைகள் எதிர்பார்ப்பதும், வியாபார நிறுவனங்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.

பிரபல கடைகளில் வாங்கிய ஆடைகள், அணிகலன்களை பெண்களுக்கு அணிவித்து, இந்த ஆடை இந்த விலை, இந்த ஆபரணம் இந்த விலை என்று படம் போட்டு, விளக்கம் அளிக்கிறார்கள். நகை, விலை உயர்ந்த ஆடைகள் மீது ஆசை இல்லாத பெண்களைக் கூட, ‘இதில் ஏதாவது ஒன்றையாவது நம் வாழ்க்கையில் வாங்க முடியுமா?’ என்று ஏங்க வைத்துவிடுகிறார்கள்.

எந்த விரதம் இருந்தால் கணவருக்கு நல்லது, எந்தக் கோயிலுக்குப் போனால் என்ன பிரச்னை தீரும், அதற்கு பெண்கள் செய்ய வேண்டியவை என்ன என்று சொல்லி, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களை, எளிதில் சிறைப்படுத்தி வைத்துவிடுகின்றன.

ஒரு பிரபல பெண்கள் மாத இதழில், ‘உங்கள் கணவருக்கு மசாஜ் செய்வது எப்படி?’, ‘கணவரிடம் பாராட்டு வாங்குவது எப்படி?’ என்றெல்லாம் கவர்ஸ்டோரிகள் வருகின்றன. பெண்கள் பத்திரிகை என்ற பெயரில் ஆண்களைக் குறி வைத்து இதுபோன்ற விஷயங்கள் செய்யப்படுகின்றன. (பெரும்பாலான வீடுகளில் ஆண்கள்தானே பத்திரிகைகள் வாங்கித் தருகிறார்கள்!)

பெண்கள் பத்திரிகைகளில் வரும் கதைகள், அனுபவங்கள் எல்லாம் பெண்களைத் தியாகிகளாகச் சித்தரிக்கின்றன. எவ்வளவு பிரச்னை வந்தாலும் பெண் என்ற இலக்கணத்தை மீறாமல்,  வாழ்க்கையில் வெற்றி பெறுபவளே சிறந்த பெண் என்கிறார்கள்.

பெண்களின் உடல், மனம் சார்ந்த பிரச்னைகள், சாதாரண பெண்கள் சிறு தொழிலதிபர்களாக மாறிய விஷயங்கள் போன்றவை குறைவாக வந்தாலும் வரவேற்கத்தக்கவை.

* * *

தினசரி பத்திரிகைகளில் ‘பெண் கற்பழிப்பு’. ‘காதலனுடன் பெண் ஓட்டம்’. ’கள்ளக்காதலி’. ‘அழகிகள் பிடிபட்டனர்’… இப்படிப் பெண்ணின் ஒழுக்கம் சார்ந்த கண்ணோட்டத்திலேயே செய்திகள் வெளிவருகின்றன.

கற்பழிப்பு, கற்பு சூறை போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதே தவறு. கற்பு என்பது என்ன? அதை எப்படி அழிக்க முடியும்? பாலியல் பலாத்காரம் என்று அழைப்பதுதான் சரியான சொல்லாடலாக இருக்க முடியும்.

* * *

தொலைக்காட்சி சேனல்களில்…

‘அவளைக் கொல்ல வேண்டும்.’ ‘இவளை அவள் கணவனிடமிருந்து பிரிக்க வேண்டும்.’ ‘அவள் குழந்தையைக் கடத்தி, அவளைத் துடிதுடிக்கச் செய்ய வேண்டும்.’ ‘இவளைப் பைத்தியக்காரியாக மாற்றி ஓட வைக்க வேண்டும்.’ – இப்படி புரோமோ போட்டுவிட்டு, ‘அன்பாலே அழகான வீடு’ காணத் தவறாதீர்கள் என்று சொல்லும்போது, திகில் ஏற்படுகிறது!

ஒரு பிரபல சீரியலில் மாமியாரும் மகனும் சேர்ந்து மருமகளை, கடுமையாகத் திட்டினார்கள். மறுநாள் அந்த சீரியலின் வசனகர்த்தா அலுவலகம் வந்தார். ‘இப்படி யாராவது சண்டை போடுகிறார்களா? உங்களுக்கே இது அதிகமாகத் தெரியவில்லையா?’ என்று கேட்டபோது, ‘நேத்துதான் டிஆர்பி ரேட் எகிறிடுச்சு. அதுக்காகத்தான் இப்படி எழுதறோம்’ என்றார்!

ஒரு பெண்ணை நல்லவளாக, திறமைசாலியாக, பொறுமையாகக் காட்டுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை வில்லியாகக் காட்டுகிறார்கள். அதிலும் வில்லத்தனம் செய்யும் பெண்கள் வயதானவர்கள் என்றால் அநியாயத்துக்குத் திட்டுகிறார்கள், பில்லி சூனியம் வைக்கிறார்கள். இளம் பெண்கள் என்றால் குடிக்கிறார்கள் அல்லது ஆணை குடிக்க வைக்கிறார்கள்.

ஒரு கதாநாயகியை நல்லவளாகக் காட்டுவதற்கு என்னென்ன கொடுமைகளை அவளுக்குச் செய்யலாம்? கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு அல்லது இரண்டாவது மனைவி. குழந்தைப்பேறின்மை. நீண்ட காலம் கழித்து குழந்தை பிறக்க வைத்து, இறக்க வைத்துவிடுவது. மாமியார் கொடுமை. தொழிலில் போட்டி. உறவினர்கள், நண்பர்களின் துரோகம், பில்லி சூனியம் என்று ஒரு ஃபார்முலா போட்டு வைத்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகளில் ஒன்றிரண்டு நிமிடங்களே வந்தாலும் விளம்பரங்களின் தாக்கம் அதிகம். மாப்பிள்ளை, உடை எல்லாம் உறவினர்கள் தீர்மானிக்க, ‘நகை மட்டும் என்னுடைய சாய்ஸ்’ என்று சிரிக்கிறாள் ஒரு பெண். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அதனால் இந்த மசாலாப் பொடிகளை வாங்குகிறேன். என்னுடைய டாய்லெட் எனக்கு முக்கியம் அதனால் இந்த லிக்யூடைப் பயன்படுத்துகிறேன். குடும்பத்தின் ஆரோக்கியம் என் கையில், அதனால் இந்த சோப்பைப் பயன்படுத்துகிறேன். என் கணவரின் இதயத்தைப் பாதுகாப்பது என் கடமை, அதனால் இந்த எண்ணெய்யைப் வாங்குகிறேன். என் குடும்பத்தினர் பளிச்சென உடுத்தினால்தான் எனக்குப் பெருமை, அதனால் இந்த சோப்பு போட்டுத் துவைக்கிறேன்.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் காட்டும் பெண்களின் பிம்பத்தைத்தான் விளம்பரங்களும் பிரதிபலிக்கின்றன.

* * *

ஐரோப்பிய நாடுகளில் 16, 17-ம் நூற்றாண்டுகளில் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராட ஆரம்பித்தனர்.  18-ம் நூற்றாண்டில் சுதந்தரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் கேட்டு பிரான்ஸில் பெண்கள் போராடினார்கள். காலப்போக்கில் பல விஷயங்களில் வெற்றியும் பெற்றனர். 1911 மார்ச் 19ல் ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச மகளிர் பிரதிநிதிகள் கூடி, மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளைக்கூட இன்று மீடியாக்கள் வணிக மயமாக மாற்றிவிட்டன. பிரபலங்கள் வாழ்த்துச் சொல்ல, சிறப்புத் திரைப்படங்கள் போட்டுக் கொண்டாடிவிடுகிறார்கள்.

சமையல், வீட்டு வேலை, குடும்பம் தாண்டியும் பெண்கள் அறிந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ‘பெண்களுக்கு இது போதும்’ என்று நீங்களாகவே தீர்மானித்து விடாதீர்கள். இந்த விஷயங்களைத் தாண்டி எகிப்து புரட்சி, உலகப் பொருளாதாரம், பூமியின் வெப்பம் உயர்தல் போன்ற விஷயங்களைப் பெண்களாலும் அறிந்துகொள்ள முடியும். விவாதிக்க முடியும். தங்கள் பங்களிப்பைச் செலுத்த முடியும்.

பதில் சொல்லுங்கள் ரஜினிகாந்த்!

நம் நாட்டில் மக்களின் வாழ்க்கையோடு கலந்திருக்கிறது சினிமா. பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு சினிமாவைத் தவிர வேறில்லை.. 1989-ம் ஆண்டில் இந்தியாவில் யார் பிரதமர் யார் என்று கேட்டால் சற்று யோசிப்போம். ஆனால் ’அண்ணாமலை’ எந்த வருடம் ரிலீஸானது என்றால் சட்டென்று சொல்லிவிடுவோம். பார்த்த படங்கள் மட்டுமில்லை, இனி வரப் போகும் படங்கள், யார் நடிகர்கள், யார் டைரக்டர், எவ்வளவு செலவானது என்பது வரை எல்லாமே நமக்கு அத்துப்படி.

அதெல்லாம் இருக்கட்டும், சினிமாவில் பெண்களைப் பற்றி எப்படிச் சித்தரிக்கிறார்கள், நடிகைகளை எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்பது தனியாகவும் விரிவாகவும் பேசப்பட வேண்டியவை. பொதுவாக சினிமாவில் காட்டப்படும் விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருந்தாலும் சில சம்பவங்கள் நின்று யோசிக்க வைத்துவிடுகின்றன.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், ’எந்திரன்’ படம் மூலம் இன்று இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாராகிவிட்டார் என்கிறார்கள். அவர் பல் தேய்ப்பதிலிருந்து படுக்கப் போவது வரை இங்கு செய்திகள். குழந்தை முதல் பெரியவர் வரை அவருக்குத் தீவிர ரசிகர்கள். ரஜினிக்கு சினிமாவிலும் வெளியுலகிலும் இருக்கும் செல்வாக்கு எல்லோரும் அறிந்ததே.

ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகள் எல்லாம் அந்தந்த காலகட்டங்களில் பரவலாக வரவேற்பு பெற்றிருக்கின்றன. மேனேஜ்மெண்ட்டுக்கு உதவக்கூடிய வகையில் பஞ்ச் டயலாக்குகள் இருக்கின்றன என்று கொண்டாடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், ‘ரஜினி என்றால் பெண்களை உயர்வாக மதிப்பவர்’ என்ற கருத்து இருக்கிறதே, அவர் பெண்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று ஆராயத் தோன்றியது.

பொம்பள, அரசியல்வாதி ரெண்டு பேரும் நினைக்கறதை அடையறதுக்கு எதுவும் செய்வாங்க. ஆனா என்ன நினைக்கிறாங்கன்னு அவுங்களுக்கே தெரியாது.

இந்த வசனத்தை ஏதோ ஒரு படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்குச் சொல்லியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ‘பொம்பள’ என்று பொதுவாகத்தான் சொல்லியிருக்கிறார். பொம்பளை – அரசியல்வாதி என்ன விதமான ஒப்பீடு என்றே தெரியவில்லை. நினைக்கிறதை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், ஆனால் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. முதலில் சொன்ன வரியை, அடுத்த வரியிலேயே காலி செய்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே தெரியாது போலிருக்கிறது!

‘பொம்பளைங்க வீட்டு நிலமையை புருஷன்கிட்ட சொல்றதோட நிறுத்திக்கணும். அத தீர்க்குறது புருஷனோட கடமை.

பெண்கள் என்றால் கணவனுக்கு அடங்கி நடப்பவள். வீட்டைப் பார்த்துக்கொள்பவள். வாரிசைப் பெற்றுத் தருபவள். அவள் எந்த விஷயத்தையும் கணவனிடம் சொல்வதோடு நிறுத்த வேண்டுமே தவிர, அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கக்கூடாது. ’அடிமையின் பிரச்னையைத் தீர்ப்பது ஆள்பவரின் கடமை’ என்ற மனோபாவத்தில் புருஷனின் கடமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி அவள் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை, உரிமையும் இல்லை.

‘ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.

ஒரு கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக்கூடாது. கணவனின் கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டும். முடியாவிட்டால்? செத்துப் போய்விட வேண்டும். அதைத் தாண்டி வெளியே வந்து, தனியாக வாழக்கூடாது.

‘பொம்பளைய அடிக்கறவனுக்கும் ஊனமுற்றவங்களை அடிக்கிறவனுக்கும் என் அகராதியில் பொட்டைன்னு அர்த்தம்.

கோழையாகச் செய்யும் எந்தச் செயலும் இங்கு ‘பொட்டை’ என்ற அடைமொழியில் கேவலப்படுத்தப்படுகிறது. பெண்களை அடிக்கிறவனைக் கண்டிக்கும் தொனியில், பெண்களையே கேவலப்படுத்தி ‘பொட்டை’யாக்கி விடுகிறார்.

‘பொண்டாட்டிய புருஷன் மதிக்கலேன்னா நரகம். புருஷனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்.

புருஷனைப் பொண்டாட்டி மதித்து நடக்க வேண்டும் என்பதை வேறு விதமாக தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்காவிட்டால் நரகம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பொண்டாட்டி மதிக்காவிட்டால் ஏழேழு ஜென்மத்துக்கும் நரகமாம்! என்ன கொடுமை இது!

‘பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய வேலையில இருந்தாலும் வீட்டு வேலை செய்யாதவ பொம்பள இல்ல.

ஆமாம், நாட்டுக்கே பிரதமராக இருந்தாலும் எனக்கு நீ அடிமைதான். பெண்களுக்கு என்று இருக்கும் இலக்கணங்களில் முக்கியமாக இருப்பது வீட்டு வேலை செய்வதுதான். எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் வீட்டு வேலை செய்யவில்லை என்றால் அவளை எப்படிப் பொம்பளை என்று ஏற்றுக்கொள்வது? அடடா!

ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்.’

மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல பஞ்ச் போலவே தோன்றும். ஆனால் இந்த வசனத்தை, தன் தம்பியால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் பேசுகிறார். சிறையில் இருக்கும் அவர் தம்பியைக் காப்பாற்றும் விதத்தில்…

கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கட்டி வைக்கும் அபூர்வ நீதியை  சினிமா இன்னமும் பாதுகாக்கவே செய்கிறது. தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்ப வேண்டும், அவனுக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி, பாதிக்கப்பட்டவளுக்கே போனஸ் தண்டனை அளிக்கிறார்கள்.

‘புருஷன் வீட்டுல நடக்குறதை பிறந்த வீட்ல சொல்றவ பொம்பளை இல்லை.

புருஷன் வீட்டில் பிரச்னை இல்லையென்றால் பிறந்த வீட்டில் சொல்வதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? கஷ்டமோ, நஷ்டமோ கணவன் வீட்டில் என்ன நடந்தாலும் வெளியில் சொல்லக்கூடாது. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, கணவனின் பெருமையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் அவள் பொம்பளையே இல்லை.

‘ஒருத்தனை காதலிச்சிட்டு புருஷனாக்குறதை விட, புருஷனாக்கிட்டு காதலிக்கிறது நல்லது.

பெண்கள் காதலிப்பது தவறு.

‘பொம்பளைக்கு பொறுமை வேண்டும், அவசரப்படக்கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது. கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது. பயபக்தி வேணும், பஜாரித்தனம் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்.

இதில் பொம்பளை என்று வரும் இடங்களில் எல்லாம் ஆம்பிளை என்று போட்டாலும் ஒன்றும் வித்தியாசம் வந்துவிடப் போவதில்லை. ஆனால் பொறுமை, அடக்கம், அமைதி, கட்டுப்பாடு, பயபக்தி எல்லாம் இருந்தால்தான் அவள் பொம்பளை. இதில் எந்த ஓர் இலக்கணத்தை மீறினாலும் அவள் பெண்ணே இல்லை.

‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

அப்படி என்றால் பொம்பளை அதிகமா ஆசைப்படலாம், ஆண்கள் அதிகமாகக் கோபப்படலாமா? அதிகமா ஆசைப்படுகிற மனிதர்களும் அதிகமா கோபப்படுகிற மனிதர்களும் நல்லா வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று சொன்னால் என்ன?

‘பொம்பள புள்ளைங்க ஊர் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பள புள்ளைங்க வீட்டைச் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க.

அதாவது ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டும். பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு இருக்க வேண்டும். ஆண்கள் வீட்டில் இருந்தாலோ, பெண்கள் வெளியில் சென்றாலோ கெட்டுப் போய்விடுவார்கள். இந்தக் காலத்திலும் எவ்வளவு தைரியமாக இதுபோன்ற வசனங்களை அவரால் பேச முடிகிறது?

**

பெண்மை போற்றும் ரஜினியின் இந்த பஞ்ச் டயலாக்குகள், அவருடைய படங்களின் கால வரிசைப்படிதான் இங்கு அமைந்துள்ளன. ஆரம்ப காலங்களில் ரஜினி நடித்த படங்களில், இதுபோன்ற வசனங்களை அவரால் மறுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் விரைவிலேயே பெயரும் புகழும் கிடைக்கத் தொடங்கிவிட்டது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வந்துவிட்டது. அவருக்கு எந்த விஷயத்தையும் தீர்மானிக்கக்கூடிய சக்தி கிடைத்துவிட்டது. இதுபோன்ற வசனங்களைப் பேச மாட்டேன் என்று சொல்ல முடியும். கண்ணியமாக வசனங்களை எழுதச் சொல்லிக் கேட்க முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. (வசனம் என்னுடையதல்ல, வசனகர்த்தாவின் பொறுப்பு என்று சொல்லிவிட்டு, இமயமலைக்கு ஓடி விட முடியாது. மற்ற வசனங்களின் புகழ் எல்லாம் எப்படி அவரைச் சேருகிறதோ அதே போலத்தான் இந்த வசனங்களுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும்.)

சாதா ரஜினியாக இருந்து இன்று விஸ்வரூப வெற்றியாளராக வலம் வரும் ரஜினியிடம் தொழில்முறையில் பிரமாதமான பரிணாம வளர்ச்சி தெரிகிறது. அப்படி இருக்கும்போது அவருடைய பாபா, படையப்பா போன்ற சமீபகால படங்களில் கூட பெண்களைப் பற்றி இப்படி வசனம் பேசுவது எந்தவிதத்தில் நியாயம்?

ரஜினியிடம் சில கேள்விகள்…

* உங்கள் வீட்டிலும் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்தக் கொள்கைகளின் படியா வைத்திருக்கிறீர்கள்?
* உங்கள் மனைவியோ, மகள்களோ வீட்டுப் பிரச்னைகளைச் சொல்லிவிட்டு, கணவர்கள்தான் தீர்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார்களா? எந்த முடிவும் அவர்களாக எடுப்பது இல்லையா?

* பள்ளி, பிஸினஸ் என்று கொடிகட்டி பறப்பவர்கள், வீட்டு வேலைகளையும் செய்கிறார்களா?

* ’காதலிச்சிட்டு புருஷனாக்குறதை விட, புருஷனாக்கிட்டு காதலிக்கிறது நல்லது’ என்று சொன்ன உங்கள் வீட்டில் மனைவி, மகள்கள் அத்தனைபேரும் காதலித்துதானே திருமணம் செய்துகொண்டார்கள். ‘நல்லது’ என்றால் அதை உங்கள் வீட்டிலேயே பின்பற்றலாமே?

* பெண் என்றால் புடைவை கட்டி, கையெடுத்துக் கும்பிடத் தோன்ற வேண்டும் (சாத்வீகம்) என்று சொல்லும் நீங்கள், உங்கள் வீட்டில் அப்படித்தான் இருக்கிறார்களா என்று சொல்ல வேண்டும்.

ரஜினி பேசிய இந்த வசனங்களுக்கு உண்மையில் அவருடைய வீட்டில் இருந்தே எதிர்ப்பு வந்திருக்க வேண்டும்.

**

ரஜினி நிற்பது, பேசுவது, நடப்பது என்று ஒவ்வொரு விஷயத்தையும் ரசிப்பதோடு, கடைபிடிக்கவும் செய்கிறார்கள். டயலாக்குகளை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். காவடி எடுக்கிறார்கள். கற்பூரம் காண்பிக்கிறார்கள். எதைச் சொன்னாலும் நம்புகிறார்கள். படித்தவர், படிக்காதவர், கிராமம், நகரம் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் பஞ்ச் வசனங்களைக் கொண்டாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பெண்களைப் பற்றிய இதுபோன்ற வசனங்கள் அவர்கள் மனத்தில் எவ்வளவு மோசமான பிம்பங்களை ஏற்படுத்தியிருக்கும்!

’ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.’ ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும். பன்னிங்கதான் கூட்டமா வரும்.’ –  இதுபோன்ற பஞ்ச் வசனங்களைப் பேசினால் யாருக்கும் எந்தவித நஷ்டமும் இல்லை. புகழின் உச்சியில் இருந்துகொண்டு நல்ல விஷயங்களைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நச்சு விதைக்காமல் இருக்கலாம்.

பறவையே எங்கு இருக்கிறாய்?

1905-ம் ஆண்டு ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டறிந்தார்கள். இன்று வான்வழிப் பயணம் சர்வ சாதாரணமாகிவிட்டது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பாதுகாப்பு அதிகரித்து விட்டது.  ஆனாலும் விமானம் தரையிறங்கும் வரை எல்லோருக்கும் சிறிய படபடப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது.

நூறாண்டுகளுக்கு முன் குறைந்த தொழில்நுட்ப வசதியுடன் இருந்த விமானப் பயணங்கள் அனைத்துமே உயிருக்கு உத்தரவாதம் இல்லாதவைதான்.

**

அமெரிக்காவில் அட்சிசன் என்ற இடத்தில் 1897-ம் ஆண்டு பிறந்தார் அமெலியா எர்ஹாட். அவரும் அவருடைய தங்கையும் தாத்தா – பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார்கள். பிற குழந்தைகளைப் போலவே அமெலியாவும் பூச்சிகள் பிடிப்பது, மரம் ஏறுவது, நீச்சல் அடிப்பது, விளையாடுவது என்று இயல்பாகக் குழந்தைப் பருவத்தைக் கழித்தார்.

பத்து வயதில் தன் தந்தையுடன் ஒரு கண்காட்சிக்குச் சென்றார் அமெலியா. அப்போதுதான் அவர் கண்களில் ஒரு விமானம் பட்டது. ஆனால் அது அவ்வளவாகக் கவரக்கூடிய நிலையில் இல்லை.

அவருக்குப் பதினாறு வயதானபோது செய்தித்தாள்கள், பத்திரிகைகளில் வந்த பெண் சாதனையாளர்கள் பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்கினார். திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், சட்டம், இயந்திரப் பொறியியல் போன்ற ஆண்கள் கோலோச்சும் துறைகளில் பெண்கள் காலடி எடுத்து வைத்த செய்திகள் அவரை மிகவும் கவர்ந்தன.

1917-ம் ஆண்டு முதல் உலகப் போரில் பங்கு பெற்ற வீரர்கள் காயமுற்றதைக் கண்டார் அமெலியா. நர்ஸ் பயிற்சி எடுத்துக்கொண்டு, அவர்களுக்காக மருத்துவம் பார்த்தார்; உணவு தயாரித்துக் கொடுத்தார். அப்போது அமெலியாவுக்கு சைனஸ் பிரச்னை அதிகம் இருந்தது. கடுமையான தலைவலி, சுவாசக்கோளறுகளில் அவதியுற்றார். அந்தக் காலகட்டத்தில் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கும்போது நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். அதில் இயந்திரவியல் புத்தகங்கள் அதிகம்.

ஒருபக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் வேலை என்று இருந்த அமெலியாவுக்கு சாம் சாப்மென் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. சில மாதங்களில்…

‘அமெலியா, நீ இப்படிக் குழந்தைகளுடன் வேலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. திருமணத்துக்குப் பிறகு பெண்கள் வேலைக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை.’

‘சாம், உன் குணத்தை வெளிப்படுத்தியதுக்கு நன்றி. குட்பை.’

**

அமெலியா மீண்டும் ஒரு கண்காட்சிக்குத் தன் தோழியுடன் சென்றபோது, ஒரு சிவப்பு நிற விமானத்தை அருகில் பார்த்தார். அது ஏதோ ஒரு செய்தியை அவரிடம் சொல்வதாகப் பட்டது. விமானத்தின் மேல் அவருக்கு ஆர்வம் பிறந்தது.

1920-ம் ஆண்டு அமெலியா தன் அப்பாவுடன் ஒரு விமானதளத்துக்குச் சென்றார். அங்கு ஃப்ராங்க் ஹாக்ஸ் என்ற பைலட் அமெலியாவை அழைத்துக்கொண்டு, விமானத்தில் ஒரு சுற்று சுற்றி வந்தார். அந்தப் பயணம்தான் அமெலியாவின் வாழ்க்கையைத் திசை திருப்பியது.

அமெலியா விமானத்தை ஓட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கான பயிற்சியும் எடுத்துக்கொண்டார். அப்போது பைலட் பயிற்சி பெறுவதற்கு ஏராளமான சட்டதிட்டங்கள் இருந்தன.  கடினமான உழைப்பு தேவைப்பட்டது. ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகு, பழைய விமானம் ஒன்றை வாங்கினார் அமெலியா.

1922-ம் ஆண்டு அந்த விமானத்தில் 14,000 அடிகள் உயரம் பறந்த முதல் பெண் பைலட் என்ற சாதனையைப் படைத்தார் அமெலியா. அதனைத் தொடர்ந்து நிறைய முயற்சிகள். 1927-ம் ஆண்டு 500 மணி நேரம் தனியாளாகப் பறந்து மற்றுமொரு சாதனையை நிகழ்த்தினார். அந்த நேரத்தில் விமானங்களுக்கு விற்பனை பிரதிநிதியாக இருந்தார், செய்தித்தாள்களில் விமானங்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி வந்தார்.

**

1928-ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் வாய்ப்பு அமெலியாவைத் தேடி வந்தது. அந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பட்னம். அவர் புத்தகப் பதிப்பாளரும் கூட. விமானத்தில் ஒரு பெண்ணை அனுப்பி, அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க வேண்டும். அவருடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுத வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம்.

அமெலியாவுக்கு இந்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தன்னுடைய பறக்கும் ஆர்வத்துக்கு இது சரியான தீனி என்று நினைத்தார். இந்தப் பயணத்தில் அமெலியா ஒரு பயணி மட்டுமே. இருபது மணி நாற்பது நிமிடங்களில் அந்த விமானம் அட்லாண்டிக்கைக் கடந்து தரை இறங்கியது.

‘இந்தப் பயணம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. விமானத்தில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டையைப் போல்தான் நானும் பயணம் செய்திருக்கிறேன். மற்றபடி இதில் என்னுடைய திறமை எதுவும் வெளிப்படவில்லை’ என்று கூறினார் அமெலியா.

அவர் அப்படிச் சொன்னாலும் அரசாங்கமும் மக்களும் அட்லாண்டிக்கைக் கடந்த முதல் பெண் என்று அமெலியாவைக் கொண்டாடினார்கள். அமெலியா புத்தகம் எழுதினார். நிறைய இடங்களுக்குச் சென்று உரையாற்றினார். குறிப்பாக பெண்கள் இந்தத் துறையில் வருவதற்கு ஊக்கப்படுத்தினார். ஜார்ஜ் பட்னம் அமெலியாவின் புகழை எல்லோரும் அறியும் வண்ணம் பரப்பிக்கொண்டிருந்தார்.

அமெலியாவின் திறமை மேலும் மேலும் மெருகேறிக்கொண்டிருந்தது. அவருடைய தைரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. விடாமுயற்சி மலைக்க வைத்தது.

நேஷனல் ஏரோநாட்டிக் அசோசியேஷனின் துணைத்தலைவரான அமெலியாவுக்கு, பறக்கும் பெண்களுக்கான தனி அமைப்பு தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அமைப்பில் 99 பெண்கள் பைலட்டாக சேருவதற்கு விண்ணப்பித்தார்கள். அமைப்பின் பெயரே ’நைண்ட்டி நைன்ஸ்’, பெண்களுக்கு மனப்பயிற்சி, உடற்பயிற்சி, விமானப் பயிற்சி போன்றவற்றை அளித்தார். பெண்களுக்கான சட்டச்சிக்கள்களைத் தீர்த்து வைத்தார். அந்த அமைப்பின் முதல் தலைவராகவும் ஆனார் அமெலியா.

**

ஜார்ஜ் பட்னமும் அமெலியாவும் தங்கள் வேலை விஷயமாக அதிக நேரம் செலவிட நேரிட்டது. இருவருக்கும் ஏராளமான விஷயங்களில் ஒற்றுமை இருந்தது. நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது. விவாகரத்து பெற்றிருந்த ஜார்ஜ், அமெலியாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அமெலியாவுக்கோ திருமணத்தின் மீது விருப்பம் இல்லை. 6 முறை ஜார்ஜ் தன் விருப்பத்தைத் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

’அன்பு ஜார்ஜ்,

எனக்குத் திருமணத்தில் ஆர்வம் இல்லை என்பது தாங்கள் அறிந்ததே. திருமணம் என்று ஆன பிறகு அங்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் இருக்காது. என்னுடைய லட்சியத்தை விட்டுக்கொடுக்க நேரிடும். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பம் இல்லை. நான் இன்னும் சாதிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. நாம் நல்ல நண்பர்களாகவே இருக்கலாம்.’

‘அன்பு அமெலியா,

என்னைத் திருமணம் செய்துகொள்வதால் உன் திறமை வீணாகும் என்று நினைக்க வேண்டாம். அறிவும் துணிவும் உழைப்பும் கொண்ட ஒரு பெண்ணை நான் திருமணம் என்ற பந்தத்தில் வைத்து சிறைப்பிடித்து வைப்பேனா? திருமணம் ஆன பிறகும் நீ உன் விருப்பம் போல் செயல்படலாம். உன்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் நான் ஆதரவாக இருப்பேன். எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் உன் லட்சியத்தில் குறுக்கிட மாட்டேன். நம் திருமணத்தால் நீ இன்னும் பெரிய உயரத்துக்குச் செல்லப் போகிறாய் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். என்ன சொல்கிறாய் அமெலியா?’

12 வயது மூத்தவரான ஜார்ஜை திருமணம் செய்துகொள்வதில் அவருடைய அம்மாவுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அமெலியா மகிழ்ச்சியோடு திருமணத்துக்குச் சம்மதித்தார்.

தேவாலயத்தில் திருமண உறுதி ஏற்பின்போது,

‘அமெலியாவாகிய நான் என் கணவர் ஜார்ஜுக்கு அன்புடையவளாகவும் காதலுடையவளாகவும் அடங்கி நடப்பவளாகவும் இருப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்…’ என்று ஃபாதர் சொல்லச் சொல்ல…

’கணவரிடம் அன்பாகவும் காதலாகவும் இருப்பேன் என்று உறுதி ஏற்கிறேன். ஆனால் அடங்கி நடப்பேன் என்று சொல்ல மாட்டேன்…’ என்றார் அமெலியா.

‘என்ன சொல்கிறாய் அமெலியா?’

‘அவள் விருப்பப்படியே உறுதி ஏற்கட்டும்’ என்று சிரித்தார் ஜார்ஜ்.

**

வாழ்க்கை சுவாரசியமாகச் சென்றது. 1932-ம் ஆண்டு. ஜார்ஜும் அமெலியாவும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த யோசனை வந்தது. அமெலியா தனியாக அட்லாண்டிக்கைக் கடக்க விருப்பம் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் ஜார்ஜ்.

‘நீ வெற்றியுடன் திரும்பும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்’ என்று ஜார்ஜ் வழியனுப்பி வைத்தார். அமெலியா தனியாக விமானத்தை ஓட்டிச் சென்றார்.

வழியில் மோசமான வானிலை காரணமாக எங்கும் மேகங்கள் மறைத்திருந்தன.

அப்போதுகூட, ‘இந்தப் பயணத்தில் எனக்குக் கிடைக்கப் போகும் வெற்றி என்னைச் சார்ந்தது மட்டுமில்லை. ஒட்டு மொத்த பெண்களுக்கும் உத்வேகமூட்டக்கூடியது’ என்று நினைத்தார் அமெலியா.

எரிபொருள் மிகக்குறைவாக இருந்தது. ஆனாலும் பதற்றம் அடையவில்லை. மெதுவாக ஒரு சமவெளிப் பகுதியில் விமானத்தை இறக்கினார். அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவரிடம் விசாரித்தபோதுதான் அது அயர்லாந்தின் ஒரு பகுதி என்று தெரியவந்தது.

இந்தப் பயணத்தின் மூலம் அமெலியா இரண்டு சாதனைகளைச் செய்திருந்தார். ஒன்று, தனியாக ஒரு பெண் அட்லாண்டிக்கைக் கடந்திருப்பது, இன்னொன்று எங்கும் தரையிறங்காமல் பயணம் செய்திருப்பது.

அமெலியாவின் சாதனையைக் கொண்டாடினார் ஜார்ஜ். இருவரும் லண்டனில் சில காலங்கள் தங்கியிருந்தனர். திரும்பி வந்தவர்களுக்கு நியு யார்க்கில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேஷனல் ஜியாகிரபிக் சொஸைட்டி கொடுத்த ஸ்பெஷல் கோல்ட் மெடலை அமெலியாவுக்கு வழங்கினார் அமெரிக்க அதிபர். அந்த ஆண்டின் மிகச்சிறந்த பெண்ணாக அமெலியா கெளரவிக்கப்பட்டார்.

**

சாதனை மூலம் கிடைத்த புகழைக் கொண்டு, பெண்களுக்கான விஷயங்களில் அக்கறை செலுத்தினார். 1935-ம் ஆண்டு பர்டியூ பல்கலைக்கழகத்தில் கெஸ்ட் லெக்சரராக, வான்வழிப் பயணத் துறையில் பணியாற்றினார். தேசிய பெண்கள் கட்சியின் உறுப்பினராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்.

1937-ம் ஆண்டுக்குள் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி ஒப்பற்ற பெண்ணாக வலம் வந்தார் அமெலியா. அப்போது உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஆக்கிரமித்திருந்தது.

அமெலியாவுடன் ஃப்ரெட் நூனன் என்பவரும் சேர்ந்து உலகத்தைச் சுற்றி வரும் திட்டம் தயாரானது. அரசாங்கமும் மக்களும் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தனர். விமானம் கிளம்பும் நேரத்தில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு,  சிறிது நாள்கள் பயணம் தள்ளிப் போனது.

மீண்டும் விமானம் தயார்.

’ஜார்ஜ், நான் கிளம்புகிறேன். தரையிறங்கும் இடங்களில் உங்களுக்குக் கடிதங்களை அனுப்பி வைக்கிறேன்… நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’

‘நீ பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் அமெலியா…’

’என் விருப்பமும் அதுதான். உங்களைப் பார்க்க கண்டிப்பாகத் திரும்பி வருவேன் ஜார்ஜ்…’

ஜார்ஜ் விமானம் பறந்த திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டே வெகு நேரம் நின்றார்.

**

அமெலியாவுக்கு இந்தப் பயணம் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. பல நாடுகள். பலவித மக்கள். தரையிறங்கும் இடங்களில் தவறாமல் ஜார்ஜுக்கு கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்தார்.

மியாமி, வெனிசூலா, பிரேசில், ஆப்பிரிக்கா, இந்தியா, பர்மா, பாங்காக், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, லே, நியு கினியா என 22,000 மைல்களைக் கடந்தார் அமெலியா. இன்னும் 7,000 மைல்கள்தான். பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஹெளலாந்து தீவில் எரிபொருள் நிரப்ப வேண்டும்.

வானிலை மிகவும் மோசமாக இருந்தது. ரேடியோ சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை. அமெலியாவுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நேரம் கடந்தது. அமெலியாவிடம் இருந்து வந்த சமிக்ஞைகள் குறைந்துகொண்டே வந்தன. ஒருகட்டத்தில் எல்லாம் நின்றுபோனது. அமெலியாவும் நூனனும் மறைந்து போனார்கள்.

அமெரிக்க அரசாங்கம் பல மில்லியன் டாலர்களைச் செலவு செய்து வான் வழியாகவும் கடல் வழியாகவும் தேடும் பணியை மேற்கொண்டது. ஜார்ஜும் இரண்டு ஆண்டுகள் தன் சக்திக்கு மீறி அமெலியாவைத் தேடிக்கொண்டிருந்தார். இன்று வரை அமெலியா புரியாத புதிராகவே இருக்கிறார்.

அமெலியா ஜார்ஜுக்கு எழுதிய கடைசிப் பயணக் கடிதங்கள் புத்தகமாக வந்துள்ளது. ஜார்ஜும் அமெலியாவின் தங்கையும் அமெலியாவைப் பற்றி புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அமெலியாவைப் பற்றி திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன.

வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய சாதனைகளை 39 வயதுக்குள் செய்து முடித்துவிட்டார் அமெலியா. திருமண வாழ்க்கை ஆறே ஆண்டுகளில் முடிந்துபோனாலும் அமெலியா – ஜார்ஜ் முழுமையான, அர்த்தமுள்ள, காதல் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

**

ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால் அவள் தன் சுயத்தைத் தொலைத்துவிட வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதியாக இருக்கிறது. கணவன், குழந்தை, குடும்பம் என்று காரணங்களைக் காட்டி, பெண்களின் திறமைகளைப் புதைத்துவிடுகிறார்கள். பெண்களின் திறமைகளைப் பார்த்து திருமணம் செய்துகொள்ளும் அதே ஆண்கள், திருமணம் ஆன பிறகு அந்தத் திறமையையே குற்றமாகச் சாட்டுகிறார்கள். அமெலியா – ஜார்ஜ் வாழ்க்கை நமக்குச் சொல்கிற பாடம் இதுதான்.

ங்கா

உறவினர் ஒருவர் சில நாள்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கும் அவர் மனைவிக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாது என்றும் தன் மனைவியிடம் பேசிப் பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும் கூறினார்.

‘அத்தை உங்களுக்கு மாமா மகள்தானே? அவங்களை விரும்பித்தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?’

‘எனக்கு அவளைப் பிடிக்கலை. மாட்டேன்னுதான் சொன்னேன். அவளுக்கு மாப்பிள்ளை அமையலை. கடைசியில என் தலையில் கட்டிட்டாங்க. நானும் மனசைத் தேத்திக்கிட்டு, அவளுடன் வாழத்தான் விரும்பினேன். ஆனால் எதுக்கெடுத்தாலும் சண்டை. கல்யாணம் ஆன ஆறு மாதத்திலேயே பேச்சு வார்த்தை இல்லை. ஊருக்குத்தான் கணவன் – மனைவி. மூணு பிள்ளைகளுக்காகத்தான் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டியிருக்கு…’

**

பக்கத்து வீட்டுக்கு வேலை செய்ய வருவார் கலா. அன்று அவருடைய முகம் அழுது வீங்கியிருந்தது.

‘பாழாப் போன மனுசன் கல்யாணம் ஆனதிலிருந்தே தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கிறார். சம்பாதிக்கிற பணமெல்லாம் குடிக்கே போயிடுது. என்னோட சம்பாத்தியத்துலதாம்மா குடும்பம் ஓடுது. ரெண்டு பொண்ணுங்க. இப்பப் பொறக்கப் போறது என்னன்னு தெரியலை. அந்த ஆளு திருந்தற மாதிரி தெரியலை. செத்து ஒழிஞ்சாலாவது நிம்மதியா இருக்கலாம்…’

‘இவ்வளவு கஷ்டத்துலயும் ஏன் இத்தனைக் குழந்தைகள்…?’

‘அந்த ஆளுக்கு ஆண் குழந்தை வேணும்னு சொல்லி, என்னைக் குடும்பக் கட்டுப்பாடு செய்ய விடாமல் பண்ணிட்டார். அந்த ஆளோட சேர்ந்து வாழ விருப்பமில்லைன்னும் சொல்லிப் பார்த்துட்டேன். போன வருஷம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கூடப் போயிருக்கேன். ஒண்ணுக்கும் அந்த ஆளு சரி வரல. பொண்டாட்டிய புருஷன் கூப்பிடறப்ப என்னம்மா பண்ணறது? எல்லாம் என் தலைவிதி…’

**

அனிதா – ராகுல் இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள்.

‘அனிதா, அம்மா போன் செஞ்சாங்க.’

‘என்ன சொன்னாங்க?’

‘என்ன சொல்வாங்க? கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சே. எப்ப பேரனையோ, பேத்தியையோ கண்ல காட்டப் போறீங்கன்னு கேட்கறாங்க. என்ன சொல்லட்டும்?’

‘ரெண்டு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம்னு நாம ஏற்கெனவே முடிவு பண்ணிருக்கோமே ராகுல்…’

’அப்ப சொன்னேன்… ஆனா?’

‘என்ன ஆனா? எனக்கு இது முக்கியமான காலகட்டம். ரெண்டு வருஷத்துல பெரிய பொறுப்புக்கு வந்துடுவேன். அதுக்காகத்தான் இவ்வளவு நாளா கஷ்டப்பட்டு உழைச்சிட்டு வரேன். இந்த நேரத்துல குழந்தை உண்டாகி, லீவு போட்டு, பெத்து வளர்க்கறதுங்கறது ரொம்பக் கஷ்டம். என்னால ரெண்டுலயும் ஒரே நேரத்துல அதிகக் கவனம் கொடுக்க முடியாது…’

‘ரெண்டு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கிட்டாலும் நீ வேலையை விட்டு, பிரேக் எடுத்துக்கத்தானே போறே? அதுக்கு ஏன் இவ்வளவு சிரமப்படறே அனிதா?’

‘என்ன சொல்றீங்க? மெட்டர்னிட்டி லீவ் போட்டுட்டு, அப்பறம் வேலையில் சேர்ந்துடுவேன்…’

‘இங்க பாரு அனிதா, கொஞ்சம் ப்ராக்டிகலா பேசு. எனக்கு நல்ல சம்பளம். சொந்த வீடு இருக்கு. நீ சம்பாதித்துதான் இங்க எதுவும் நடக்கணும்னு ஒண்ணும் இல்லை. உன் விருப்பப்படி ஒரு வருஷம் கழிச்சுக் கூட குழந்தை பெத்துக்கலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா குழந்தை உண்டானதுக்குப் பிறகு நீ வீட்ல ஓய்வு எடுத்து, சந்தோஷமா இருந்தால்தானே குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்…’

‘உன் குழந்தையைப் பெத்து, வளர்க்கறதுதான் முக்கியம்னா இவ்வளவு படிச்சு, வேலையில் இருக்கிற என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டே ராகுல்? நீ சொல்றது உனக்கே அநியாயமா தோணலையா?’

‘கோபப்படாதே. மெட்டர்னிட்டி லீவுக்குப் பிறகு நீ வேலைக்குப் போனா உங்க அம்மாவோ, எங்க அம்மாவோதன் வந்து பார்த்துக்கணும். எங்க அம்மாவுக்குப் பார்த்துக்க முடியாது. உங்க அம்மாவால இங்க வர முடியாது. ஆளைத்தான் வச்சிக்கணும். அவங்க நல்லா பார்த்துப்பாங்கன்னு என்ன நிச்சயம்? நாம சம்பாதிக்கறதே நம்ம குழந்தை சந்தோஷமா, நல்லவிதமா வளர்க்கணும்கறதுக்காகத்தானே?’

‘என் படிப்பு… என் திறமை எல்லாம் என்ன ஆனாலும் உனக்குக் கவலை இல்லையா?’

‘குழந்தைக்கு மூணு, நாலு வயசு ஆனதுக்குப் பிறகு நீ வேலைக்குப் போகலாம் அனிதா. உன்னை என்ன வீட்டிலேயே இருக்கணும்னா சொல்றேன்…’

‘நீயும் நானும் ஒரே படிப்பு… கிட்டத்தட்ட ஒரே சம்பளம்… வேலையை விட்டுட்டோ அல்லது வீட்டிலிருந்தபடியே ஏதாவது வேலை செஞ்சிட்டோ ஏன் நீ குழந்தையைப் பார்த்துக்கக் கூடாது?’

‘என்ன சொல்ற? குழந்தையைப் பெத்துக்கற சக்தி பெண்கள் கிட்ட மட்டும்தான் இருக்கு. ஒரு அம்மா மாதிரி அப்பாவால குழந்தையைக் கவனிச்சுக்க முடியுமா அனிதா?’

‘குழந்தை பெத்துக்கறது மட்டும்தான் பெண்களுக்கு இயற்கை கொடுத்த விஷயம். பெத்ததுக்குப் பின்னால பெண்தான் வளர்க்கணும்கிறது என்ன கட்டாயம் ராகுல்?’

‘குழந்தை பெத்துக்கறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லை அனிதா. தாய்மைங்கிறது ரொம்பப் பெரிய விஷயம். குழந்தையை எப்படித் தூக்கணும், எதுக்காக அழுது, உடம்பு சரியில்லைன்னா என்ன செய்யணும்… எதுவுமே எனக்குத் தெரியாது. எனக்கு மட்டும் இல்லை, ஆம்பிள்ளைகளுக்குத் தெரியாது…’

’நாங்க மட்டும் பிறக்கும்போதே இதெல்லாம் கத்துக்கிட்டேவா பிறந்தோம் ராகுல்? நீ வீட்டிலிருந்து குழந்தையைக் கவனிச்சிக்கிறதுன்னா அடுத்த வருஷமே கூட குழந்தை பெத்துக்கலாம். என்ன சொல்ற?’

‘என்ன சீரியஸாவே பேசறீயா?’

‘இதுல என்ன விளையாட்டு?’

‘நான் வேலையை விடணும்ங்கிற பேச்சை விட்டுடு. உலகத்துல யாருமே செய்யாததை நான் உன்கிட்ட கேட்கலை அனிதா. ஒரு சராசரி ஆணுக்கு இருக்கிற எதிர்பார்ப்புதான். இதை நீ தப்புன்னு சொல்ல முடியாது.’

‘சரி. குழந்தை பெத்துக்கறதும் வளர்க்கறதும் பெண்களோட பொறுப்புன்னு சொல்ற இல்லையா? அப்ப குழந்தை பெத்துக்கற விருப்பத்தையும் என்கிட்டேயே விட்டுடு ராகுல்…’

‘குழந்தைங்கிறது நம்ம ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் அனிதா…’

‘மாத்தி மாத்தி சொல்லாதே. குழந்தை பெத்துக்கிறது என்னோட பொறுப்பு, வளர்க்கிறது உன்னோட பொறுப்பா?’

‘இல்ல… இல்ல…’

‘அப்ப குழந்தை விஷயத்தை என் விருப்பப்படி விட்டுடு…’

‘நீ விதண்டாவாதம் செய்யறே. உங்க அம்மா, அக்கா, ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிப்பாரு.’

‘நான் ஏன் அவங்ககிட்ட பேசணும் ராகுல்? உன்னைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். கல்யாணத்துக்கு முன்னால ’சரிசமமா நடத்துறேன், உன் விருப்பத்தை மதிக்கிறேன்’னு எல்லாம் சொன்னீயே?’

‘மத்த புருஷன்கள் மாதிரி உங்கிட்ட நான் நடந்துக்கிறேனா? நீ சமைச்சா சாப்பிடறேன். இல்லைன்னா உனக்கும் சேர்த்து ஹோட்டல்ல வாங்கிட்டு வரேன். அதைச் செய், இதைச் செய்யாதேன்னு எதுவும் சொல்லறதில்லை.’

‘ஆமாம் ராகுல், நீ எவ்வளவு பெரிய தியாகி! எத்தனை நாள் வெளியில் சாப்பிட்டிருக்க… எவ்வளவு பெருந்தன்மையா நடந்திருக்க… உண்மையிலேயே நீ சமமா நினைச்சிருந்தா நான் செய்யற வேலைகளை நீயும் பகிர்ந்து செய்திருக்கணும். உன்னைத் தப்பா சொல்லலை ராகுல். ஆண்களுக்கே உரிய குணம் இது. படிச்சு, பெரிய பொறுப்புல இருக்கறதால நீ மத்த ஆண்கள் மாதிரி நேரடியா உங்க குணத்தைக் காட்டிக்கிறது இல்ல…’

‘எந்த ஆம்பிள்ளையும் பிள்ளைப் பெத்துக்கறதுக்காக இவ்வளவு நேரம் மனைவிகிட்ட கெஞ்சிட்டு இருந்திருக்க மாட்டான். என்னைப் புரிஞ்சுக்க அனிதா…’

‘சாரி ராகுல். இதுல நான் விட்டுத் தர்றதா இல்லை.’

அன்று முழுவதும் மெளனமாகக் கழிந்தது. மறுநாள் காலை. அனிதா, ராகுலின் பெற்றோர் வந்து சேர்ந்தனர். தான் தோற்கப் போகிறோம் என்பது அனிதாவுக்குப் புரிந்துவிட்டது. மாமியார் கோபமாக இருந்தார். மாமனார் ஒன்றும் பேசவில்லை.

அனிதாவின் அம்மா அழுதார். அப்பா மிரட்டினார்.

‘வாழ்க்கைக்காகத்தான் வேலை. வேலைக்காக வாழ்க்கையைத் தொலைச்சிடாதே அனிதா. நல்ல மாப்பிள்ளை. நல்ல குடும்பம்…’

எல்லோரும் பேசிய பேச்சுகளுக்குப் பிறகு, அனிதாவுக்கே தான் ஏதோ கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிட்டது. கடைசியில் அனிதா சம்மதித்தாள். ராகுல் நன்றி சொன்னான்.

‘டெலிவரிக்கு முன்னால உனக்கு எவ்வளவு நாள் வேலை செய்ய முடியுமோ அவ்வளவு நாள் நீ ஆபிஸ் போகலாம்’ என்று சலுகை காட்டினார் மாமியார்.

**

பல ஆண்டுகள் கணவன் – மனைவி பேசிக்கொள்ளாமல் இருந்தாலும்,. போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்று கணவர் மீது புகார் கொடுத்தாலும் பெண்ணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கிறது.

பெண்ணும் ஆணும் சேர்ந்து அன்பும் காதலும் கலந்து குழந்தை பெற்றுக்கொள்வது என்பது நம் சமூகத்தில் பெரும்பாலும் இல்லை. அன்புக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லாமல்தான் இங்கு குழந்தை பிறப்பு நடைபெறுகிறது. தன்னிடம் பேசாத, தன்னை வெறுக்கும் கணவனாக இருந்தாலும் பெண் எப்படிக் குழந்தை பெற்றுக்கொள்ளத் துணிகிறாள்?

குழந்தை பிறப்பு என்பது இங்கு பெண்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இல்லை. அவள் குழந்தை பெற்றுத் தரும் ஓர் இயந்திரம். அந்த இயந்திரத்துக்கு அன்பு, காதல், சுயமரியாதை எல்லாம் இருக்க வேண்டியதில்லை.

குழந்தையை எப்போது பெற்றுக்கொள்வது, எத்தனைக் குழந்தைகள் வேண்டும் என்பதெல்லாம் இங்கு கணவன் மற்றும் கணவனின் பெற்றோர் சார்ந்த விஷயங்களாகவே பார்க்கப்படுகிறது.

திருமணமாகி நான்கு மாதங்கள் வரை அமைதியாக இருப்பார்கள். அதற்குப் பிறகு மெதுவாக மகன், மருமகளிடம் விசாரிப்பார்கள்.

‘முதல் குழந்தையைத் தள்ளிப் போடாதீங்க. அடுத்தது வேணா லேட்டா பெத்துக்கலாம்…’

ஓராண்டில் குழந்தை பிறக்கவில்லை என்றால், ஜோசியம், ஜாதகம், ஆலமரம், சாமி, சாமியார், விரதம் என்று ஆரம்பித்துவிடுவார்கள். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பிறக்கவில்லை என்றால், அறிந்தவர்கள், அறியாதவர்கள் யார் வேண்டுமானாலும் அறிவுரை, ஆலோசனை சொல்லத் தொடங்கிவிடுவார்கள்.

‘கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு? டாக்டர் கிட்ட போனீங்களா? யார்கிட்ட குறை? அந்த டாக்டர் ரொம்ப ராசியானவர்… இந்தச் சாமிகிட்ட வேண்டிகிட்டா கட்டாயம் குழந்தை பிறக்கும்…’

இப்படி விவஸ்தை இன்றி கேள்வி கேட்பார்கள்.

ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இல்லாவிட்டால்…? முன்பெல்லாம் பெண்ணுக்கு ’மலடி’ என்று பட்டம் கட்டி, கணவனுக்கு வேறொரு கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள்.

இன்று?

ஊருக்கு ஊர் கரு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் ஆரம்பித்து இருக்கிறார்கள். மற்ற எந்த மருத்துவமனைகளையும் விட இதுபோன்ற குழந்தைப்பேறு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்ய மக்கள் தயங்குவதில்லை. ‘எப்பாடு பட்டாவது எங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறந்துடணும்’ என்ற ஆசையை மருத்துவ உலகம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறது.

குழந்தை பெற்றுக்கொள்ளலாமா, எப்போது பெற்றுக்கொள்வது என்ற அடிப்படை உரிமைகள் கூட வளர்ச்சி பெற்றதாகச் சொல்லும் இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்குக் கிடையாது. ஆண்கள் மட்டுமின்றி, பெண்களே அது தனக்கான உரிமை என்று நினைப்பதும் இல்லை; அதைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை; அவர்களைச் சிந்திக்க விடுவதும் இல்லை.

இதுபோன்ற சூழலில் ஒரு பெண், தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து, ஒரு குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் என்ன ஆகும்? (இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் தத்தெடுக்கிறார்கள். சிலர் இரண்டாவது குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்கிறார்கள்.) அவள் அனிதாவைப் போல வாழ்க்கைக்காக விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். அல்லது தன் விருப்பத்துக்காக வாழ்க்கையை விட்டுக்கொடுக்க வேண்டும்.