கொஞ்சம் சென்னை, நிறைய வெண்ணெய்!

ஒரு பக்கம் சென்னை. மறுபக்கம் சச்சின். இருவரில் எவர் ஜெயித்தாலும் மகிழ்ச்சி என்பதால் உற்சாகத்துடன் ஐபிஎல்  ஐந்தாவது சீஸனின் முதல் போட்டியை ரசிக்கத் தொடங்கினேன். டாஸ் ஜெயித்து, சென்னையை பேட்டிங் செய்யப் பணித்தார் மும்பை கேப்டன் ஹர்பஜன்.

சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இருந்தது. அவருடைய சமீபத்திய ஆட்டங்கள் திருப்தி தராதவை என்பதால் அவர்மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. வழக்கம்போல, முரளி விஜய், பத்ரிநாத், ரெய்னா, பொலிஞ்சர் போன்ற நிலைய வித்வான்கள் இருந்தனர். மைக்கேல் ஹஸி இல்லாதது குறைதான். மும்பை அணியில் சச்சின், பொலார்ட், ராயுடு போன்றவர்கள் இருந்தனர். தென்னாப்பிரிக்காவின் லெவி மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார்.

சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. வந்தவுடனேயே மும்பை அணிக்காக ஒரு விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் சென்னையின் முரளி விஜய். ஆம். தொடக்க ஆட்டக்காரர் டு ப்ளெசிஸ் ஒற்றை இலக்கத்தில் ரன் அவுட். வழக்கமான ஒன் டவுன் பேட்ஸ்மேன் பத்ரிநாத் வரவில்லை. தோனியின் செல்லப்பிள்ளை ரெய்னா வந்தார். லெஃப்ட் – ரைட் காம்பினேஷன்தான் காரணம் என்று நம்புவோம்.

நான்காவது ஓவரில்தான் பந்து முதன்முறையாக எல்லைக்கோட்டைக் கடந்தது. சிக்ஸர். உபயம் ரெய்னா. அதே ஓவரில் விஜய் ஒரு பவுண்டரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹர்பஜனின் பந்துவீச்சைப் பார்க்க  முடிந்தது. அதிரடிகள் எதுவுமின்றி அடக்க ஒடுக்கமாக ஆறு ஓவர்கள் முடிந்தன. இரண்டு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள்.  இந்தப் போட்டியிலேனும் வான வேடிக்கை நிகழ்த்துவார் முரளி விஜய் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம். அடிக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்து அவுட் ஆனார். பத்து ரன்கள் மட்டும் எடுத்திருந்தார்.

எட்டாவது ஓவர் முடிந்தபோது அதுவரை இல்லாத நம்பிக்கைக்கீற்று திடீரென தட்டுப்பட்டது. ரெய்னாவும் ப்ராவோவும் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசினார்கள். ஒன்பதாவது ஓவரின் முடிவில் ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட். அப்போது ஸ்கோர் 69/2. பத்தாவது ஓவரை ப்ரக்யான் ஓஜா வீசினார். உடனடி பலன். சுரேஷ் ரெய்னா அவுட். முப்பத்தியாறு ரன்கள் எடுத்திருந்தார். அடுத்ததாக அதிரடி வீரர் அல்பி மோர்கெல் களமிறங்கினார்.

அடுத்தடுத்து ஓவர்கள் நகர்ந்தனவே தவிர, ஒன்றும் உருப்படியாக நடக்கவில்லை. சென்னை தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தது. ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த ப்ராவோ பத்தொன்பது ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  பன்னிரண்டு ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள். ரன் ரேட் ஏழு. தூக்கி நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அல்பி மோர்கல் அலட்சியாக தூக்கிக்கொடுத்துவிட்டு அவுட் ஆகிப் போனார். ஐந்தாவது விக்கெட்டும்  விழுந்தது.

கேப்டன் கூல் தோனி களமிறங்கினார். ஒன்றும் சிறப்பாக நடக்கவில்லை. பதினைந்து ஓவர்கள் முடிந்தபோது ஸ்கோர் 95/5. எஞ்சிய ஐந்து ஓவர்களில் ஏதாவது சாதித்தால் உண்டு என்ற நிலையில் சென்னை அணி இருந்தபோது தோனி ரன் அவுட். ஐபிஎல் சீஸன் 5ல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரரான ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இருபது ஓவர்களும் நின்று ஆடினாலே போதும் என்ற நிலையில்தான் அப்போது இருந்தது சென்னை அணி. போதாக்குறைக்கு, பத்ரிநாத்தும் பத்துரன்னில் பறந்துவிட்டார். ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்குத் தெரிந்தது.

ஆபந்பாந்தவன் அஸ்வின் களமிறங்கினார். பதினேழு ஓவர்கள் முடிந்தபோது  ஏழு விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள்.  அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியவே, 19.5 ஓவர்களில் 112 ரன்களுக்கு சென்னை அணி ஆல் அவுட். கோடிகளைக் குவித்து வாங்கப்பட்ட ஜடேஜாவின் ஆட்டம் வழமைபோல பல்லிளிப்பு. சென்னை அணியில் அதிக ரன்களைக் குவித்தவர் ரெய்னா (36 ) தொடர்ந்து இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றிய சென்னை அணியின் இந்த ஆட்டம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் இருந்தது. ஆனாலும் கேப்டன் தோனி என்பதால் ஏதோ புதிதாக சொதப்பியது போலத் தெரியவில்லை. நிற்க.

அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அலட்சியாக ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் பேட்டிங்கைத் தொடங்கியது மும்பை அணி. சச்சினும் லெவியும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரில் ஒரே ரன். அட்டகாசமாக ஆரம்பித்தது சென்னை அணி. இரண்டாவது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்தார் லெவி. மூன்றாவது ஓவரில் சச்சின் பவுண்டரி ஒன்றையும் சிக்ஸர் ஒன்றையும் விளாசினார்.

கொஞ்சமும் தயக்கமில்லாமல் அடித்து ஆடியது மும்பை. நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள். ஹர்பஜனின் தலைமையில் ஆடும்போது சச்சினின் பேட்டிங் திறன் மெம்படுமா என்று ஒரு கேள்வி  செட்மேக்ஸில் கேட்கப்பட்டது. சிரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஐந்தாவது ஓவரை வீசவந்தார் அஸ்வின். வெறும் மூன்று ரன்களே அடிக்கமுடிந்தது. அஷ்வினா, கொக்கா!

கோடீஸ்வரன் ஜடேஜாவுக்கு பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து வரவேற்பு கொடுத்தார் லெவி. பத்து ஓவரில் மேட்ச் முடியுமா அல்லது ஒன்றிரண்டு பந்துகள் கூடுதலாகத் தேவைப்படுமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். செய்வதறியாது திகைத்திருந்தார் கேப்டன் கூல் தோனி, வழக்கம்போல. எல்லோரும் எதிர்பார்த்தது போல சிக்ஸர் மழை  பொழிந்து, அரைச்சதம் அடித்தார் லெவி. அடுத்த பந்தில் அவுட்டும் ஆனார். 69 ரன்களுக்கு முதல் விக்கெட்.

மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுத்தர இருக்கின்றவராக எல்லோராலும் நம்பப்படும் ரோஹித் சர்மா களமிறங்கினார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, இந்தப் போட்டியில் அதிக ரன்களைக் குவிக்க இருப்பவர் ரோஹித் சர்மாவா, சுரேஷ் ரெய்னாவா என்று தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்தது. என்ன முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை.

ரோஹித் சர்மா வந்தார். இரண்டாவது பந்தை எதிர்கொண்டபோது அவருடைய முகம் சுருங்கியது. கீழே  கால்நீட்டி உட்கார்ந்துவிட்டார். பிசியோ வரவழைக்கப்பட்டார். சில நிமிடங்களுக்கு உடற்பயிற்சிகள் செய்தபிறகு அதிரடிக்குத் தயாரானார் ரோஹித். ஆனாலும் ரோஹித்துக்கு அத்தனை சிரமத்தைக் கொடுக்க விரும்பாமல், அவரை அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார் பொலிஞ்சர்.

விக்கெட் வீழ்த்திய சூட்டோடு சச்சினை நோக்கி பவுன்சரை அனுப்பினார் பொலிஞ்சர். அது சச்சினின் கையைத் தாக்கியது. காயம். பேட்டிங்கைத் தொடரமுடியாமல் பாதியிலேயே வெளியேறினார் சச்சின். சென்னை நினைத்தால் எப்படியும் விக்கெட் வீழ்த்தமுடியும் என்பதை இந்த நேரத்தில் பதிவுசெய்ய ஆசைப்படுகிறேன். பத்து ஓவர்கள் முடிந்தபோது மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள்.

மீண்டும் பந்துவீச வந்தார் அஸ்வின். அப்போது அவர் இரண்டு ஓவர்களில் பதினோரு ரன்களைக் கொடுத்திருந்தார். சென்னை அணியினரின் கைவிரல்கள் ஏன் இத்தனை பளபளப்பாக இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். கைகளில் வெண்ணெய் தடவி வந்துள்ளனர் என்பதை பிறகுதான் தெரிந்துகொண்டேன். அடடா, என்னவொரு ஃபீல்டிங். விசில் போடு! விசில் போடு!

பதினாறாவது ஓவரில் சதம் அடித்தது மும்பை அணி. ஒவ்வொரு ரன்னையும் உற்சாகம் பொங்க ரசித்து மகிழ்ந்தார் மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் திருமதி அம்பானி. கூடவே, அவருடைய மகன். பதினேழாவது ஓவரில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார் ஃப்ராங்க்ளின். பத்தொன்பது பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை அணி. மும்பை அணியில் அதிகபட்ச ஸ்கோரை அடித்தவர் ரிச்சர்ட் லெவி. ஐம்பது ரன்கள். அவரே ஆட்டநாயகன்!

0

முக்தர் அப்பாஸ் நக்வி

அய்யோ பாவம் விராத் கோஹ்லி!

திறமை இருக்கிறது. வேகம் இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லிக்கு எல்லாம் இருக்கிறது. இத்தனைக் குறுகிய காலத்தில் பதினோரு சதங்களை அடித்துள்ளது நம்ப முடியாத சாதனைதான்.

பெரிய அணி, சிறந்த பந்துவீச்சாளர் என்று எதைப் பற்றியும் கோஹ்லி கவலைப்படுவது இல்லை; எதிரணி பந்துவீச்சாளர்கள் கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு கலங்குவதில்லை; விக்கெட் விழுவதைக் கண்டு பதற்றம் கொள்வதில்லை. இமால இலக்குகளைக் கண்டு மலைப்பதில்லை; வெற்றி.. வெற்றி. அதை மட்டுமே இலக்காக வைத்து விளையாடுகிறார் கோஹ்லி. இப்படியான வீரர்கள் அமைவது  எப்போதாவது நடக்கும் விஷயம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்தியாவுக்கு நடந்திருக்கிறது.

ஓரிரு போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவது அல்லது முக்கியமான போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவது என்றில்லாமல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் கோஹ்லி. ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளில் நம்முடைய பெரிய வீரர்கள் அத்தனைபேரும் சொல்லிவைத்தது போல சொதப்பிய சமயத்தில், கோஹ்லி மட்டும் தன்னுடைய பங்களிப்பைக் கணிசமான அளவுக்குச் செய்தார். முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று, அவர் அடித்த சதம். நெருக்கடியான நிரம்பிய சமயத்தில் அடித்த சதம் அது.

அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் அந்த இமாலய ரன் குவிப்பைச் சொல்லவேண்டும்.  அதற்குரிய அங்கீகாரமாகவே அவருக்குத் துணை கேப்டன் பதவியைக்க் கொடுத்துக் கௌரவப்படுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.

வங்கதேசத்தில் நடந்த ஆசியக்கோப்பைப் போட்டியின்போது மூன்று போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடி, துணை கேப்டன் பதவிக்குத் தான் பொருத்தமானவனே என்று நிரூபித்திருக்கிறார் விராத் கோஹ்லி. வாழ்த்துகள்.

கோஹ்லியின் சாதனைகளை முன்னணி வீரர்கள் தொடங்கி முன்னாள் வீரர்கள் வரை அத்தனை பேரும் பாராட்டுகிறார்கள். புகழ்கிறார்கள். கோஹ்லியைப் புகழ்வதில் ஊடகங்களுக்கு இடையே போட்டாபோட்டி நடந்துகொண்டிருக்கிறது. எல்லா ஊடகங்களும் இப்போது கோஹ்லி புராணத்தைத்தான் விடாமல் பாடிக்கொண்டிருக்கின்றன.

ஊடகங்கள் கோஹ்லியைக் கொண்டாடும் விதத்தைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் மனத்துக்குள் மகிழ்ச்சிக்குப் பதிலாக அச்சமே உருவெடுக்கிறது. ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுவிட்ட சூழ்நிலையில் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை கோஹ்லியே இந்தியாவின் அடுத்த டிராவிட் என்ற தலைப்பில் ஒரு சேனல் நிகழ்ச்சி நடத்துகிறது. அதில் கருத்து சொல்வதற்கென்று பல முன்னாள் வீரர்கள் முன்னால் வந்து நிற்கின்றனர்.

அதற்குப் போட்டியாக இன்னொரு சேனல், ஒருநாள் போட்டிகளில் சச்சினின் இடத்தை கோஹ்லியால் மட்டுமே நிரப்பமுடியும் என்று அடித்துச் சொல்கிறது. அந்தக் கருத்தை வலியுறுத்த இன்னொரு முன்னாள் வீரர்கள் குழு ஆவேசமாக இயங்குகிறது. இன்னும் இன்னும் பல கருத்துகள். பல ஆசைகள். பல விருப்பங்கள்.

புதிய வீரர் ஒருவர் இப்படியான அதிரடிகளை நிகழ்த்திக்காட்டுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, பல காலகட்டங்களில் பல வீரர்கள் பல அதிரடிகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சாகசங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அசாரூதீன்,சச்சின் என்று பலரைச் சொல்லலாம்.

விஷயம் என்னவென்றால், அப்போதெல்லாம் ஊடகங்கள் அவர்களுடைய ஆட்டத்திறனையோ, சாதனைகளையோ, சாகசங்களையோ இந்த அளவுக்குத் தூக்கிப்பிடிக்கவில்லை. அந்த வீரர்கள் மீது அளவுக்கு அதிகமான விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சவில்லை. அதேசமயம், அந்த வீரர்களைச் சுத்தமாகக் கண்டுகொள்ளாமலும் விட்டுவிடவில்லை. பேசினர். பாராட்டினர். அளவோடு நிறுத்திக் கொண்டனர்.

ஆனால் கோஹ்லி விஷயத்தில் ஊடகங்கள் எல்லை மீறிப் போகின்றன. செய்தி சானல்கள், விளையாட்டு சானல்கள், பொதுவான சானல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள் என்று எல்லாவற்றிலும் கோஹ்லியைப் பற்றியே பேசுகின்றன. ஊடகங்கள் கொடுக்கும் கூடுதல் முக்கியத்துவம் காரணமாக கோஹ்லி புராணம் இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே போகும்.

அது எங்கே சென்று முடியும்?

வர்த்தக நிறுவனத்தினர் அவருடைய வீட்டுவாசலில் அணிவகுக்கத் தொடங்குவர். என்னுடைய  நிறுவனத்து விளம்பரத்தில் நடி என்பார்கள். திடீரென கோஹ்லிக்கு ரெஸ்ட் கொடுப்பார்கள். ஆமாம்.. இத்தனை அடிக்கிற அவருக்கு ஓய்வு தேவைதான் என்பார்கள். ஓய்வு நேரத்தில் விளம்பரப் படப்பிடிப்பில் பிஸியாகிவிடுவார்.

விளம்பரங்கள் காரணமாகப் பணம் சேர்கிறது என்றால் அந்த இடத்தில் அரசியல் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அரசியல் என்று இங்கே நான் சொல்லவருவது பெட்டிங், மேட்ச் பிக்சிங் போன்ற அம்சங்களை. மிகச்சிறப்பான முறையில் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அசாருதீன், ஜடேஜா, ஹன்ஸி குரோனே போன்ற வீரர்கள் புக்கிகளின் பிடியில் சிக்கினார்கள் என்பதை மறுக்கமுடியாது. மிக இளம் வயது கொண்ட, சாதனைகளை நிகழ்த்த ஆரம்பித்துள்ள கோஹ்லி போன்ற வீரர்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற அதிகபட்ச ஊடக வெளிச்சம் நல்லதல்ல.

கோஹ்லி இப்போது சிறப்பாக ஆடுகிறார். வாழ்த்துகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.  ஒருவேளை, வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளிலோ அல்லது அடுத்துவரும் போட்டிகளிலோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத பட்சத்தில் என்ன ஆகும்? இப்போது ஊதிவிடும் அத்தனை ஊடகங்களும் ஓவர்நைட்டில்  அவருக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள்.

கண்ணுக்குத் தெரிந்த உதாரணம் சச்சின். அவருடைய தொண்ணூற்றி ஒன்பது சதங்களையும் கொண்டாடியவர்கள், நூறாவது சதத்தை அடிப்பதற்குக் கால அவகாசம் எடுத்துக்கொண்டபோது என்ன பேசினார்கள்? எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்ட்து ஒரு சேனல். ஒழுங்காக ஆடாத சச்சினை நீக்கும் அளவுக்கு தேர்வுக்குழுவின் முதுகெலும்பு வலுவாக இல்லையோ என்று கேலி செய்தது ஊடகம். நரம்பில்லா நாக்குகள் நாலும் பேசின. நூறாவது சதத்தை அடிப்பதற்குள் தனக்குத் தரப்பட்ட நெருக்கடிகள் பற்றி சமீபத்தில் சச்சினே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ஆகவே, ஊடகங்கள் இப்போது அளவுக்கு மீறி கோஹ்லியைப் பாராட்டுவதையும் புகழ்வதையும்  ஊக்கமருந்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது.  அவை அனைத்தும் அவர் மீது திணிக்கப்படும் நெருக்கடிகள். கொடுக்கப்படும் அழுத்தங்கள். அவை கோஹ்லியின் இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும். எல்லா போட்டிகளிலும்  அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு  எழும்பும். இது எல்லோருக்கும், எப்போதும் சாத்தியமான விஷயமல்ல. இதன் காரணமாக, கோஹ்லிக்கு மெல்ல மெல்லப் பிரச்னைகள் ஏற்படும்.

இன்றைய நிலையில் கோஹ்லிக்கு உருவாகும் பிரச்னை இந்திய அணிக்கான பிரச்னை. ஆகவே, ஊடகங்கள் கோஹ்லியைத் துரத்தும் காரியத்தைக் கொஞ்சம் தள்ளிவைக்க வேண்டும். அவருடைய ஆட்டத்தை, அவருடைய போக்கைக் கொஞ்சம் தள்ளியிருந்து அமைதியாக வேடிக்கை பார்க்கவேண்டும். அதுதான் கோஹ்லிக்கு நல்லது. அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது. முக்கியமாக, இந்திய அணிக்கு!

0

தமிழ்

யோகி – சமுராய் – டிராவிட்

For someone who has played 164 Test matches and scored 13,200-plus runs, no tribute can be enough. All I can say is there was, and is, only one Rahul Dravid and there can be no other. I will miss him in the dressing room and out in the middle. – Sachin Tendulkar

22 கெஜம். இரண்டு பக்கமும் தலா  3 ஸ்டம்புகள். இந்தப் பரப்பின் நீளம் தான் ஒரு பேட்ஸ்மெனை கிரிக்கெட் விளையாட்டில் நிர்ணயிக்கிறது. கேட்பதற்கும், காண்பதற்கும் மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்த விஷயத்துக்குப்பின்தான் பல கனவுகளின் சரிவும், சில அசாதாரண நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. கிரிக்கெட் என்கிற விளையாட்டு ஆட ஆரம்பித்து இன்றோடு 135 வருடங்களாகிறது. இங்கிலாந்தில் கனவான்களின் விளையாட்டாக ஆட ஆரம்பித்து, பின்னர் இங்கிலாந்து ஆசியாவைக் காலனியாக்கி வைத்திருந்ததால், ஆசியாவில் பரவி, இன்றைக்கு ஆசிய அணிகள் பலம் பொருந்தியதாக மாறியிருக்கிறது.

இந்தியா கிரிக்கெட்டில் ஒரு தவிர்க்க முடியாத நாடு. லாலா அமர்நாத்திலிருந்து அந்தக் குடும்பத்திலேயே மூன்றாவது தலைமுறை ஆட தயாராக இருக்கிற இன்றைக்கு வரைக்கும் இந்தியாவில் உணவு, உடை, இருப்பிடம், செல்போனுக்கு பின் கிரிக்கெட் ஒரு அத்தியாவசியம். எல்லா தெருக்களிலும், ஏதேனும் நான்கு சிறுவர்கள் சுவரில் கரியில் கிறுக்கி ஆட ஆரம்பிக்கும் ஒரு எளிமையான ஆட்டம். இந்த எளிமையான, ஜனரஞ்சகமான ஆட்டத்துக்குப் பின்னான உழைப்பு யாருக்குமே தெரிவதில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்போதுதான் ஒரு சகாப்தம் முடிந்திருந்தது. சுனில் கவாஸ்கர் ஒரு இமயம். கபில்தேவ், விஸ்வநாத், ரோஜர் பின்னி, மதன்லால், சையது கிர்மானி, ஸ்ரீகாந்த், அமர்நாத், ரவி சாஸ்திரி, திலிப் வென்சர்கார், திலிப் தோஷி, மனீந்தர் சிங் பின்னாளில் மனோஜ் பிரபாகர், நவ்ஜோத்சிங் சிந்து, அசாருதீன், சஞ்சய் மஞ்ரேக்கர், அருண்லால், கெய்க்வாட் என நீண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் சுனில் கவாஸ்கருக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே நிலைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்திய டெஸ்ட் அணி என்பது சம்பிரதாயத்துக்கு இருந்து எல்லா நாடுகளுக்கும் போய் தோற்று வருவது என்பது வழமையாக இருந்தது. இதுதான் உலகக் கோப்பையை நாம் ஜெயித்த பிறகு நடந்தது.

நவீன இந்திய கிரிக்கெட் என்பது 1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, அசாரூதினில் ஆரம்பிக்கிறது. அசார் தான் இந்திய அணியில் ‘பீல்டிங்’ என்றொறு துறை இருக்கிறது என்பதை எடுத்து சொன்னவர். இந்திய அணியின் கேப்டன் பதவி பல்வேறு கைகள் மாறி, சச்சின் வேண்டாம் என மறுத்து சவுரவ் கங்குலியிடம் வந்து சேர்ந்தது.

சவுரவ் பெங்காலி. பெங்காலிகளுக்கே உரிய கோபக்கார இளைஞர்.  எதைச் செய்தாலும் வெறித்தனத்தோடு அணுகும் பார்வை. எல்லாவற்றிலும் முழுமூச்சாகப் போராடும் குணம். இந்திய கிரிக்கெட் “வயதுக்கு வந்தது” அப்போது தான். அங்கே தான் ஆரம்பித்தது இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம். சச்சின், சவுரவ், ட்ராவிட், லக்‌ஷ்மண், கும்ப்ளே என ஐவராக எழுந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முகத்தை ஒரேயடியாக மாற்றிய காலகட்டம். இதில் பின்னாளில் இணைந்தது சேவாக்கும், ஹர்பஜன் சிங்கும்.

90களின் ஆரம்பத்தில் அது நிகழ ஆரம்பித்தது. முதலில் ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தான் போன அணியில் தெண்டுல்கர். பின்னால் சவுரவ் கங்குலி, ராகுல் சரத் ட்ராவிட். அதன் பின்னால் லக்‌ஷ்மண். யாருமே நம்பவில்லை. ராகுல் ட்ராவிட். பதினாறு வருடங்களுக்குமுன், ஒல்லியாக, வெடவெடவென்று லார்ட்ஸில் 95 ரன்கள் அடிக்கும் போது யாருக்குமே நம்பிக்கையில்லை. இந்த மாதிரி நிறைய one match wonderகளை இந்தியா பார்த்திருக்கிறது. சச்சின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். child prodigy. ஆனால் ராகுல் ட்ராவிட் அந்த மாதிரி இல்லை. சச்சின் பம்பாய் கிளப்பிலிருந்து வந்த ஆள். ராகுல் ட்ராவிட்டுக்கு காட் பாதர்களே கிடையாது.

ஒரு காலத்தில் கிரிக்கெட் பம்பாயில் இருந்தது. சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர், ரவி சாஸ்திரி, திலிப் வென்சர்கார் எல்லாவற்றையும் தாண்டி, இந்தியா கொண்டாடும் சச்சின் தெண்டுல்கர். ஆனால் ஒவ்வொரு முறை பம்பாயிலிருந்து யாரோ இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக மாறும் போது, பெங்களூரிலிருந்து ஒருவர் அந்த ஸ்டாரின் பின்புலமாகவே இருந்திருக்கிறார். கவாஸ்கர் ஆடியபோது குண்டப்பா விஸ்வநாத். சச்சினுக்கு பின்னால் ட்ராவிட். பாம்பே பாய்ஸ் Vs. பெங்களூர் பாய்ஸ் என்று ஒரு பிரிவினை ஏற்படுத்தினால், ‘பம்பாய் பாய்ஸை’ விட ‘பெங்களூர் பாய்ஸ்’ முக்கியமானவர்கள். ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, ராகுல் ட்ராவிட். இந்த மூவர் மீதும் நம்மால் ஒரு அவதூறும் சொல்ல முடியாது. அத்தனை நேர்மை, அர்ப்பணிப்பு. இதில் ராகுல் ட்ராவிட் வேறு தளம்.

கிரிக் இன்ஃபோவில் ராகுல் ட்ராவிட்டின் புள்ளி விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். இது ராகுல் ட்ராவிடின் புள்ளிவிவரங்கள் பற்றியதல்ல. டெஸ்டில் 13000 சொச்ச டெஸ்ட் ரன்கள். ஒரு நாள் போட்டியில் 10000 சொச்ச ரன்கள். 70 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர். 300+ கேட்சுகள். டெஸ்டில் 30000 பந்துகளை சந்தித்த ஒரே வீரர். இன்ன பிற.

புள்ளிவிவரங்களோ, ட்ராவிட்டின் 2003 அடிலெய்டில் முதல் இன்னிங்க்ஸில் 200+, இரண்டாம் இன்னிங்ஸில் 70+ அடித்து ஜெயித்த இன்னிங்ஸோ, 2001 லக்‌ஷ்மனோடு கொல்கத்தாவில் அடித்த 180, ராவல் பிண்டியில் அடித்த 270, ஹெட்டிங்லியில் அடித்த 148, 2011 இங்கிலாந்து தொடரில் மொத்த இந்திய அணியும் ஊத்தி மூட, ஒரு முனையில் ட்ராவிட் மட்டும் அடித்த மூன்று சதங்களோ, முதலில் இறங்கி கடைசி வரை நின்று, நாம் பாலோ ஆன் வாங்கி, வெறும் பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் களத்துக்கு வந்து ஆடிய தீரமோ இன்னபிற புள்ளிவிவரங்களோ ட்ராவிடை முழுமையாக காட்டவேயில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது உடல் உழைப்பையும், கூர்மையான கவனிப்பையும், தொடர்ச்சியான “க்ரீஸ்” இருப்பையும், கடுமையான மனோ பலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சரியான ‘டொக்கு பேட்ஸ்மென்யா’ என்று சர்வசாதாரணமாக உதாசீனப் படுத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது என்பது கிரிக்கெட்டின் உச்சக்கட்டம். வெறுமனே சிக்ஸரும் பவுண்டரியுமாகப் பறக்கும் 20-20 களிப்பாட்டமல்ல அது. எப்படி வேண்டுமானாலும் ஆடலாம், ஆனால் ரன்கள் வந்தால் போதும் என்கிற மனப்பாங்கினை கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆடமுடியாது. டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது என்பது இமயமலையில் ஏறி எவரெஸ்ட் தொடுவதற்கு இணை. 20-20 என்பது பொழுதுப் போக்குக்காக ’ட்ரெக்கிங்’ போவது. இரண்டையும் ஒப்பிடவே முடியாது. இன்றைக்கு instant gratification தான் நிஜமென்று நம்பும், அதை நாடும் ஒரு தலைமுறைக்கு இதன் வேர்கள் புரிவது கடினம்.

ட்ராவிட் 16 வருடங்கள் இந்தியாவுக்காக எல்லா களங்களிலும் ஆடியது வெறும் ஆட்டமல்ல. அது ஒரு யோகியின் தவம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகங்கள் என்று எடுத்தால் இன்றைக்கு ஒரு 800 பெயர்கள் தேறும். ஆனால் நினைவில் நிற்பது வெகு சில பெயர்களே. அதற்கு காரணம், டெஸ்ட் கிரிக்கெட்டின் தேவைகள் மிக அதிகம். இந்த உழைப்பு, அர்ப்பணிப்பு, கவனம், தேர்ச்சி, இருப்பு, மனோபலம், உடல்தகுதி, பயிற்சி, சோர்வுறாமல் கூர்ந்து ஒவ்வொரு பந்தையும் கவனிப்பது என்பது சாமானியர்களுக்கு கைக்கூடிவராத ஒன்று.  அதை ட்ராவிட் தன்னுடைய அடையாளமாக மாற்றியிருக்கிறார். இதை சாத்தியப்படுத்த அவர் கொடுத்திருக்கும் உழைப்பு இந்திய அணியில் எவராலும் தரப்படாத உழைப்பு.

இதெல்லாம் சாத்தியமாவதற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று சின்ன வயதிலிருந்து உங்கள் நாடி நரம்பு ரத்தத்தில் கிரிக்கெட் ஊறி, பள்ளிப் போட்டிகளிலேயே நீங்கள் ஜீனியஸாக கருதப்பட்டாலேயொழிய இது சாத்தியமில்லை. இது சச்சின், சுனில் கவாஸ்கர், டான் ப்ராட்மேன் வழி. இன்னொன்று கிரிக்கெட் என்கிற விளையாட்டின் மீது பெருங்காதலாய் வசீகரித்து, ஒரு யோகமாகக் கொண்டு, அதை தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கைவரப் பெற்று அதிலிருந்து சாதனைகளை நிகழ்த்தத் தொடங்குதல். இது இன்றைக்கு ட்ராவிட்டின் வழி. இதுவே ஸ்டீவ் வாஹ் (ஆஸ்திரேலியா), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) ஜாக்கஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) போன்றவர்களின் வழி.

மால்கம் க்ளாட்வெல் எழுதிய Outliers என்கிறப் புத்தகத்தில் ஒரு துறையில் நீங்கள் ஜீனியஸாக 10,000 மணி நேரங்கள் பயிற்சி தேவை என்று ஒரு கணக்கு சொல்லியிருப்பார். 30,000 பந்துகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய ஒரே பேட்ஸ்மென் ராகுல் ட்ராவிட். சரியாக 5,000 ஒவர்கள். ஒரு ஒவர் 5 நிமிடங்கள் என்று கொண்டால் ஒவர் கணக்கில் மட்டுமே 500 மணி நேரங்கள். இது டெஸ்டில் ஆடிய ஒவர் கணக்கு மட்டுமே. ஒரு நாள் போட்டிகள், 20-20 போட்டிகள், கவுண்டி கிரிக்கெட், பயிற்சி நேரங்கள், ரஞ்சி கிரிக்கெட், முதல் தர கிரிக்கெட், அதற்கு முன் பள்ளியில் ஆடியது என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டால் 10,000 மணி நேரங்கள் சர்வசாதாரணம். ஜீனியஸ் என்பது எடிசன் சொன்னதுப் போல 1% Inspiration. 99% perspiration.

ட்ராவிட் பற்றிய புகழாரங்களில் குண்டப்பா விஸ்வநாத் சொன்னது “ஒரு உள்ளூர் போட்டியில் ட்ராவிட் ஒரு குறிப்பிட்ட பந்தில் அவுட் ஆகிவிட்டார். ட்ரெஸ்ஸிங் ரூம் வந்து பொறுக்க முடியாமல், மாலையில் பந்தினை கட்டித் தொங்க விட்டு, சுமார் 1000 முறை அந்த குறிப்பிட்ட திசையில் ஆடி பயிற்சி எடுத்தார்.” இதுதான் ட்ராவிட். எதுவுமே ட்ராவிட்டுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து தரப்படவில்லை. விடாத பயிற்சி. தொடர்ச்சியாக தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டே வருதல். தன்னுடைய ஆட்டத்தினை மேம்படுத்திக் கொள்வதில் இருந்த ஆர்வம். அர்ஜுனனுக்கு பறவையின் கண் தெரிந்ததைப் போல ட்ராவிட்டுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் – தன்னுடைய விக்கெட்டினை காப்பாற்றுதல். ரன் சேர்த்தல். இந்தியாவை வெற்றிக்குக் கொண்டு செல்லுதல். இதுதான் + இதுமட்டுமே.

F1 டிரைவர் அர்டன் சென்னா ஒரு முறை சொன்னார் “I don’t compete with others. I just constantly wanted to compete with myself”

இது தான் ட்ராவிட்டின் முகம். இந்தியாவில் புகழ்பெற்றிருக்கும் எல்லா வீரர்களுக்கும் ஒரு முகம் இருக்கிறது. சேவாக் – எதிரணியை துவம்சம் செய்வது. சச்சின் – எந்தக் களமாக இருந்தாலும் எதிரணியைத் திண்டாட வைப்பது. கங்குலி – ஸ்பின்னர்களை ஆடுவதில் ஜித்தன். லக்‌ஷ்மண் – லெக் சைட்டில் 200 பேர் நின்றாலும், அனாசியமாய் ரன் குவிப்பது. ஆனால், இது எல்லாம் இருந்தும், அது எதையுமே முன் வைக்காமல் ஒரு முனையில் ஒரு யோகியைப் போல தன்னுடைய வேலையினை எவ்வித ஆர்ப்பாட்டங்களுமில்லாமல் தொடர்ச்சியாக ஒரு well oiled machine போல செய்துக் கொண்டே, பின்புலத்தில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததுதான் ட்ராவிடின் முகம். ஹெல்மெட்டிலிருந்து வியர்வை கொட்ட, முகமெல்லாம் வியர்த்து ஊற்ற, ஒரு பக்கம் ட்ராவிட் நிற்கிறார் என்றால், கமெண்ட்ரியில் சர்வ சாதாரணமாக as long as Dravid is at one end, India is in safe hands என்பதை ஆட்டம் தவறாமல் கேட்கலாம்.

ஒரு ஜப்பானிய சமுராய் வீரன் தன் தலைமைக்கு கட்டுப்பட்டு போர்க்களத்தில் சண்டையிடுவான். வேண்டுமானால் உயிர் துறப்பான். ட்ராவிட்டும் சமுராய்தான். டெஸ்ட்டில் ஏழாவது இடத்திலிருந்து, முதல் இடத்தில் ஒபனிங் வரை அணிக்கு என்ன தேவையோ, அதற்காக ஆடியவர். உலகில் டான் பிராட்மேனுக்கு பிறகு சிறப்பான No.3 பேட்ஸ்மென் ட்ராவிட் என்று புள்ளி விவரங்கள் சொல்லும். ஆனால் ஆட்டத்தில் எந்த வரிசை என்பது ட்ராவிட்டுக்கு முக்கியமே இல்லை. எங்கு இறங்கினாலும், அணிக்கான பங்களிப்பையும், ஆட்டத்தினை இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றுவது மட்டுமே ட்ராவிட் என்கிற சமுராயின் குறிக்கோள்.

இன்றைக்கு ஜாகிர் கானோ, பிரவீண் குமாரோ, இஷாந்த் சர்மாவோ, ரோஹித் சர்மமோ, உத்தப்பாவோ தொடர்ச்சியாக மூன்று தொடர்கள் ஆடுவது கடினம். பிசிசிஐ அரசியல் ஒரு புறம் இருக்க, யாருமே முழுமையான உடல் தகுதியோடு இல்லை. ஆனால் ஒரு சீசனில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, கவுன்டி கிரிக்கெட் என்று ட்ராவிட் ஆடியிருக்கிறார். இந்த அர்ப்பணிப்பு, உடல்தகுதி, அணிக்கான பங்களிப்பு, உழைப்பு, சீன் போடாமல் இருத்தல், முக்கியமாக,  தொடர்ச்சியாக வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்காகவே அயராது தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்ட தன்மை என நீளும் குணநலன்களில், ட்ராவிட் வெறும் விளையாட்டு வீரர் இல்லை என்பது தெளிவாகும்.

மூன்று வருடங்கள் ப்ரோக்ராமர், இரண்டு வருடங்கள் டீம் லீட், அடுத்த வருடம் ப்ராஜெக்ட் லீட், அதற்கடுத்து ப்ராஜெக்ட் மேனேஜர், நடுவில் சில வருடங்கள் வெளிநாட்டு வேலை என டைம் டேபிள் போட்டு தன்னுடைய படிகளை நிர்ணயிக்கும் இன்றைய இளைஞர் சமுகத்துக்கு முன்னால் ட்ராவிட் ஒரு வேறு மாதிரியான ஆதர்சம். ரோல் மாடல். உண்மையான உழைப்பு, கடுமையான முயற்சி, வெற்றியைப் பற்றியே சிந்தனை, பிரபல்யத்துக்கான எந்த தடங்களும் இல்லாமல் தன்னுடைய துறையில் உச்சத்தினை அடைவதற்கான தொடர்ச்சியான மேம்படுத்தல், தன்னடக்கம், அமைதி, பிரபல்யத்தைத் தலைக்குக் கொண்டு போகாத குணம் என நீளும் தகுதிகள் old world virtues ஆக இருந்தாலும், அது தான் உலகின் நம்பர்.1 இல்லாமல் போனாலும், நம்பகமான ஒரு சாதனையாளனை முன்னிறுத்தியிருக்கிறது. இது தான் நிஜமான, கர்வப்படக்கூடிய வெற்றி. வாழ்நாள் சாதனை என்பதை வெறும் 39 வயதில் நிகழ்த்தி விட்டு இன்னமும் அமைதியாக இருக்கும் ஒரு மனிதனின், யோகியின், சமுராயின் வாழ்வனுபம்.

ட்ராவிடும் அப்படி தான். கிரிக்கெட் என்கிற விளையாட்டினை ரசிக்கிற, சுவாசிக்கிற, அணுஅணுவாய் வாசிக்கிற, சிலாக்கிக்கிற எல்லோருக்கும் ட்ராவிடின் ஆட்டம் பிடித்திருக்கும். ஏனெனில் இது வெறும் ஆட்டமல்ல. கொண்டாட்டம்.  ட்ராவிட்டின் கவர் டிரைவ் களை அப்படியே படம்பிடித்து கிரிக்கெட் பாடப் புத்தகத்தில் போடலாம். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கரின் கவர் ட்ரைவ்களில் அந்த perfection தெரியும். இடது கை ஆட்டக்காரர்களில் இங்கிலாந்தின் டேவிட் கோவர், மேற்கத்திய தீவின் கேரி சோபர்ஸ் போன்றவர்கள் ஆடும்போது அது தெரியும்.

கனக்கச்சிதம், ஸ்பஷ்டம் என்ற இந்த இரண்டு சொற்கள் இல்லாமல்  ட்ராவிடின் ஆட்டம்  முற்றுப் பெறாது. ஒரு கலையோ, வணிகமோ, விளையாட்டோ எப்போது ஆனந்தமாக, கொண்டாட்டமாக, முடிவுறா அனுபவமாக இருக்குமென்றால் அதுவே கதியாக, அதுவே ஒன்றாக உள்ளும் புறமுமாய் கலந்து அதை வெளிக்கொணரும்போது தான் அந்த கலைஞனின், விளையாட்டு வீரனின் ஆளுமை தெரிய வரும். இந்த ஆளுமை தான் ட்ராவிட். “Greatness was not handed to him; he pursued it diligently, single-mindedly ”

ஸ்டார் வார்ஸ் (Star Wars) ஜார்ஜ் லூகாஸ் இயக்கி உலகின் மிக பிரசித்திப் பெற்ற படம். ஸ்டார் வார்ஸில் எல்லா விதமான வீர, தீர சாகசங்களும், ’ஜெடாய்’(Jedi) க்களும், ஜந்துக்களும் வரும். ஆனால், ஸ்டார் வார்ஸ் கதாப்பாத்திரங்களிலேயே அமைதியும், தீர்க்கமும், அறிவும், மேன்மையும் கொண்டது ‘யோடா’(Yoda) என்கிற ’ஜெடாய்’களின் குரு. எவ்விதமான அலட்டல்களும் இல்லாமல், ஆனால் தீர்க்கமாக தன்னுடைய பார்வையினை முன்வைக்கும் ‘யோடா’ தான் ‘ஜெடாய்’களின் வழிகாட்டி.ஒய்வுக்குபின் ராகுல் ட்ராவிட் என்ன செய்யப் போகிறார் என்று தெரியாது. ஆனால் ஒரு ரசிகனாய், ஆர்வலனாய், கிரிக்கெட்டின் வாழ்நாள் உபாசகனாய் ராகுல் ட்ராவிட் இந்தியாவின் ‘யோடா’ வாக மாற வேண்டும். அவருக்கு தெரியாத நுணுக்கங்கள், ஆட்டத்திற்கு முன் எப்படி தயார் செய்தல், எப்படி அணுகுதல், எப்படி எதிர்கொள்ளல் என்று எதுவுமே இல்லை. நாளைய நட்சத்திரங்களுக்கு ஆர்வமிருக்கிறது; வெறியிருக்கிறது; ரன்கள் குவிக்கவேண்டுமென்கிற ஆசையிருக்கிறது. ஆனால் வழிகாட்ட தான் யாருமேயில்லை. ட்ராவிட் அந்தப் பணியை செய்ய வேண்டும்.

– நரேன்

You may not get anyone who will be able to replace Rahul Dravid but again you can not continue forever because it took 16 years and 13,000 runs in Test cricket to make a Rahul Dravid. – Sourav Ganguly

 

கிரிக்கெட் சூதாட்டத் தீர்ப்பு – சில குறிப்புகள்

சமீபத்தில், பாகிஸ்தானிய வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை கிரிக்கெட் சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாம் கருத வேண்டும். இந்தத் தீர்ப்பு, கிரிக்கெட் போட்டிகளின் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு ஐசிசி மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.

இந்த வழக்கு குறித்த அடிப்படைத் தகவல்கள் (வழக்கின் காரணம், வழக்கு ஆரம்பித்த விதம், வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள், வழக்கின் முடிவு போன்ற தகவல்கள்) இணையம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் நிலையில், இந்த வழக்கு குறித்த சில மேலதிக தகவல்களை மட்டும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த வழக்கு நடந்த விதம் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் கிரிக்கெட்டில் இருக்கும் சூழமைப்பை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். உலக அளவில் நடக்கும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் ஐசிசியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடக்கின்றன என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில், பாகிஸ்தானிய குடிமக்களுக்கு, இங்கிலாந்தில் இருக்கும் நீதிமன்றம் எப்படி தண்டனை வழங்குகிறது (எப்படி) – அவர்கள் ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் (எந்த நீதிமன்றம்) என்று வெளிவரும் செய்திகளின் அடிப்படையை நாம் முதலில் புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவைப் போல் அல்லாமல், இங்கிலாந்தில் பெட்டிங்கும் சூதாட்டமும் சட்டரீதியாக்கப்பட்டிருக்கின்றன. சூதாட்டம் கிரிமனல் குற்றமாக மாறாமல் தடுக்கும் பொருட்டு, Gambling Act 2005 என்ற சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த சட்டம் இங்கிலாந்தில் சூதாட்டம் மட்டும் பெட்டிங் நடக்கத் தேவையான நெறிமுறைகளைப் பற்றி விரிவாகவே பேசுகிறது. இந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன என்றும் Prevention of Corruption Act அடிப்படையிலும் CPS என்றழைக்கப்படும் Crown Prosecution Service இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வர் மீதும் கிரிமினல் வழக்கு தொடர்ந்தது.

இதற்கிடையில், சம்பவம் நிகழ்ந்த சில நாட்களிலேயே ஐசிசி, சல்மான் பட், ஆமிர், ஆசிஃப் ஆகிய மூவரையும் இடைக்கால நீக்கம் செய்து விட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்து கொண்டது. இதைத் தவிர, ஐசிசி மூன்று நபர்கள் கொண்ட குழுவை அமைத்து இந்த வழக்கை விசாரிக்கச் செய்தது. இந்தக் குழு இந்த மூவருக்கும் நீண்டகால தடையை விதித்தது. (சல்மான் பட் – 10 வருடங்கள்; ஆசிஃப் – 7 வருடங்கள்; ஆமிர் – 5 வருடங்கள்.) இந்தத் தடையை எதிர்த்து இவர்கள் மூவரும் ஸ்வட்சர்லாந்தில் இருக்கும் Court of Arbitration for Sport-இல் மேல் முறையீடு செய்தார்கள். Court of Artbitration for Sport நியுயார்க், சிட்னி மற்றும் ஸ்வட்சர்லாந்திலும் இருக்கின்றன. இவர்கள் மேல்முறையீடு செய்ய தேர்ந்தெடுத்திருப்பது ஸ்வட்சர்லாந்து நீதிமன்றத்தை, அவ்வளவே. இந்த மேல் முறையீடு குறித்த விசாரணை, CPS பதிவு செய்த கிரிமினல் குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதால், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், கிரிமினல் குற்றச்சாட்டிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஐசிசியின் Anti corruption Codeஇன் படி, ஊழலுக்கு எதிரான விதிமீறல், போட்டி நடக்கும் நாட்டின் சட்டதிட்டத்தின் படி, கிரிமினல் குற்றமாகப் பார்க்கப்பட்டால், அந்த நாட்டு விதியின் படி கிரிமினல் குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படும் வகையில் கிரிமினல் வழக்கு தொடர முடியும். இதற்கான ஷரத்துகள் Anti corruption Codeல் உள்ளன. அந்த வகையில், இங்கிலாந்து மண்ணில் நடத்தப்பட்ட கிரிமினல் குற்றம் என்ற காரணத்தால், மசார் மஜீத் தவிர்த்த மூவரும் பாகிஸ்தான் குடிமகன்களாக இருந்தாலும், அவர்கள் இங்கிலாந்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக கருத்தப்பட்டனர்.

இந்த வழக்கு முழுக்க முழுக்க இங்கிலாந்து அரசால் நடத்தப்பட்ட ஒரு வழக்கு. ஐசிசி நடத்தியதில்லை. ஐசிசி இலாகா சார்ந்த தடைகளை அமுல்படுத்தியிருக்கிறது அதுவும் மேல் முறையீட்டிற்காக Court of Artbitration for Sportஇல் நிலுவையில் இருக்கின்றது. அந்த மேல்முறையீடும் இப்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படலாம். தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஐசிசி வழங்கிய தடையை கணக்கில் எடுத்துக் கொண்டே ஒவ்வொருக்கும் தண்டனை வழங்கியிருக்கிறார். உதாரணத்திற்கு சல்மான் பட்டிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வாசகங்களின் ஒரு பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன். இது போலவே ஒவ்வொருவரின் தீர்ப்பிலும் ஐசிசியின் தடை கணக்கில் கொள்ளப்பட்டிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“I take fully into account the ICC ban and the effect it has on you, which in itself is a considerable punishment for a man in your position. This enables me to take a more lenient course, than I otherwise might. But for that ban, the sentence would have been of the same order as that which I would have imposed on Majeed if he had not pleaded guilty. You do not have the benefit of a plea but the effect of the ban on you is such that I can reduce the sentence I would otherwise have imposed to 30 months imprisonment on the conspiracy corruptly to accept money and 2 years on the gambling conspiracy, both to run concurrently”

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, இங்கிலாந்தில் இருக்கும் சட்டம் போன்றே கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் நிலவும் ஊழலைத் தடுக்கப் பல்வேறு நாடுகளும் சட்டரீதியான தீர்வை எடுக்க முனைந்திருக்கின்றன. கிரிக்கெட்டில் ஊழலில் ஈடுபடுபவர்களை கிரிமினல் குற்றவளிகளாக கருதவதற்கு வழி வகை செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அரசிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறது. அதே போல ஆஸ்திரேலியாவும், மேட்ச் ஃபிக்ஸிங் முதலான ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு 10 அண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கத்தக்க விதியை 2012 ஆம் அண்டு மார்ச் மாத வாக்கில் இயற்ற பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில், மஜீத் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டக் காரணத்தால், அவருக்கு கிடைத்திருக்கவேண்டிய 6 வருட தண்டனை (அதில் இரண்டு தண்டனைகள் சமகாலத்தில் கொடுக்கப்படுவதால் 4 வருட மொத்த சிறை), 4 வருடங்களாக குறைக்கப்பட்டு (அதில் சமகாலத்தில் கொடுக்கப்படுவதால் மொத்த 2 வருடம் 8 மாதம் சிறை) இருக்கிறது. அதே போல, ஆமிரும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய 9 மாத கால தண்டனை 6 மாதமாகக் குறைக்கப்பட்டு சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். மற்ற இருவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. சிறை தண்டனையைத் தவிர்த்து இவர்கள் அனைவருக்குமே அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முடிவு கிரிக்கெட் போட்டிகளில் சரிந்து வரும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் போராட்டத்தில், ஐசிசிக்கும் ஊழல் ஒழிப்பு அமைப்புக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாகவே இதைப் பார்க்கிறது. பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, ஊழலைத் தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆராய்ந்து மேற்கொள்ளும் படி, கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஐசிசி நியமித்த பாகிஸ்தான் டாஸ்க் ஃபோர்ஸ் என்று அழைக்கப்படும் சிறப்பு குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கை பற்றி கொஞ்சம் பேச வேண்டும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் அதற்கு உதவி செய்வதற்காக ஐசிசி ஒரு குழுவை நியமித்தது. அந்த குழு, இந்த ஊழல் சம்பவத்தின் பின்பு ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது – அதில், ஊழலைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை சிபாரிசு செய்திருந்தது.

கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, அவர்களது ஊதிய முறை, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகம், ஊடக தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் அலசி ஆராய்ந்து பல்வேறு சிபாரிசுகளை முன்வைத்தது. இந்த அறிக்கை, பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியத்தின் குறைபாடுகளை மெலிதாக குட்டியது என்றே சொல்லலாம். ஆனால், இந்த அறிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்க மறுத்தது, பின்னர் மறுத்ததை மறுத்தது. இறுதியில் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால், கிரிக்கெட் ஊழலின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் இருந்ததை ஐசிசி அறிந்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான பல துரித நடவடிக்கைகளிலும் கடந்த ஒரு வருடத்தில் ஈடுபட்டுள்ளது.

அவ்வகையில், கிரிக்கெட்டில் நடக்கும் ஊழலுக்கும், அவை தொடர்பான சூதாட்டங்களுக்கும், முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான சூழலை இந்த தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது தவிர வாரியங்கள் முறையான மேற்பார்வையும் மேற்கொண்டால், ஊழலின் கரங்களிலிருந்து கிரிக்கெட்டை பெரிதும் காப்பாற்றலாம் என்றே தோன்றுகிறது.

-கிருஷ்ணன் சந்திரசேகரன், பரத்வாஜ் ராமசுப்ரமணியன்

தொடர்புடைய வாசிப்பு:

  1. மசார் மஜீதுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை –www.thelawpages.com/court-cases/print_sentence.php?id=7585
  2. ஆமிருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை – .www.thelawpages.com/court-cases/print_sentence.php?id=7586
  3. ஆசிஃபுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை – www.thelawpages.com/court-cases/print_sentence.php?id=7587
  4. சல்மான் பட்டுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை –www.thelawpages.com/court-cases/print_sentence.php?id=7588
  5. Gambling Act 2005 – http://www.legislation.gov.uk/ukpga/2005/19/pdfs/ukpga_20050019_en.pdf
  6. ICC Anti Corruption Code – http://static.icc-cricket.yahoo.net/ugc/documents/DOC_C26C9D9E63C44CBA392505B49890B5AF_1285831667097_391.pdf
  7. பாகிஸ்தான் டாஸ்க் டீம் கொடுத்த ஆய்வறிக்கை – http://static.icc-cricket.yahoo.net/ugc/documents/DOC_6226857DD7DBD7C0F28AD1E90FD56E66_1309944065246_146.pdf
  8. இந்த ஊழல் விவகாரம் நிகழ்ந்த சமயத்தில் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை – http://solvanam.com/?p=10518

 

ராகுல் டிராவிட்டின் ஒருநாள் வாழ்க்கை

ராகுல் டிராவிட் செப்டம்பர் 2011ல் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அரணாக விளங்கிய டிராவிடின் திறமையை டெஸ்ட் போட்டிகளில் உலகம் அங்கீகரித்த அளவு, ஒரு நாள் போட்டிகளில் அங்கிகரிக்கவில்லை. கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்பவர்களை ஆல் ரவுண்டர் என்று சொல்வார்கள். ஆனால் டிராவிடின் கிரிக்கெட் காலத்திற்குப்பின் அவர்களைப் பாதி ஆல்ரவுண்டர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், விக்கெட் கீப்பிங், பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என்று அனைத்துத் துறைகளிலும் அவர் இயங்கியிருக்கிறார்.

2007க்குப் பின்னர், திராவிடின் ஒருநாள் போட்டி வாழ்க்கை ‘உள்ளே வெளியே’ விளையாட்டுப் போல ஆகிவிட்டது. 2007இல் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 2009ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டார், ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் (பொதுவாகவே இந்தியர்களின் பலவீனமாக கருதப்படுவது) தடுமாறிய ரோகித் சர்மாவுக்குப் பதிலாக. அப்போது காயம் காரணமாக வெளியே இருந்த சேவாக்கும் மீண்டும் சேர்க்கப்பட முடியாத நிலையிலிருந்ததால் அந்த இடத்தை நிரப்ப டிராவிட்டின் உதவியையே இந்திய கிரிக்கெட் போர்ட் நாடியது.

பின்னர் தென்னாப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளிலும் அவர் விளையாடினார்.இந்த இரண்டு போட்டித் தொடரிலும் அவரது சராசரி முறையே 33 மற்றும் 40. அதற்குப்பின் அவர் அணியிலிருந்து விலக்கப்பட்டர். இங்கிலாந்தில் தட்டுதடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியின் சரிவைத் தடுக்க மீண்டும் ராகுல் தேவைப்பட்டார். ஒருநாள் போட்டிக்கே தகுதியில்லாதவர் என்று வர்ணிக்கப்பவரை 20-20 போட்டிக்கும் சேர்த்துக்கொண்டது நகைமுரண்.

ராகுலை மீண்டும் ஒருநாள் போட்டியில் சேர்த்த செயல் ஏறக்குறைய அவரிடம் கிரிக்கெட் போர்ட் சரணாகதி அடைந்த செயலாகவே எனக்குத் தோன்றியது. மிகவும் சிக்கல் வாய்ந்த சூழ்நிலைகளில் தொழில் நுட்பமே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நிருபிப்பதைப் போல இந்த நிகழ்வுகள் அமைகின்றன. இது திராவிடுக்குத் தனிப்பட்ட முறையில் வெற்றி என்றாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய தோல்வி. இந்த நிலை நீடிக்காமல் இருக்க ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டிராவிட். திராவிட் அறிவித்திருக்கும் இந்த ஒய்வு அவருக்கு மிகத் தேவையானது, மரியாதைக்குரியது.

டிராவிட் ஒரு நாள்போட்டிகளுக்கும், T20 போட்டிகளுக்கும் லாயக்கற்றவர் என்ற பிம்பம் பொதுவாக எல்லோர் மனதிலும் உண்டு. ஆனால் ஒருநாள் போட்டிகளில் நீங்கள் டிராவிடின் ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால் அப்படிப் பேச முடியாது.

–    344 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் தொப்பி அவர் தலையில் இருந்திருக்கிறது

–    மொத்தம் 10889 ரன்கள் எடுத்திருக்கிறார்

–    மிகக் குறைந்த பந்துகளில் 50 அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம் யாருக்குத் தெரியுமா – மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் – டிராவிட்டுக்குத்தான்.

–    ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் மிக அதிக பேட்டிங் ஆவரேஜ் – தோனிக்கு அடுத்தபடியாக அவருக்குத்தான். இந்த வரியைப் படித்துப் புருவத்தைச் சுருக்குபவர்களுக்காக – (73 ஆட்டங்களில் இவர் விக்கெட்டின் பின் இருந்திருக்கிறார்; அந்த ஆட்டங்களில் மொத்தம் 2300 ரன்கள் – சராசரியாக 44.23.) முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கில்கிரிஸ்ட், சங்ககாராகூட இவருக்குப் பின்தான் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

–    ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ஜோடிகள், இதுவரை இரண்டு முறைதான் வந்திருக்கின்றன – அவை இரண்டிலும் டிராவிட் இருந்திருக்கிறார்.

–    இது தவிர இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கான ஜோடிகள் எடுத்த அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்புகள் இவருடையவை.

இப்படிப்பட்ட ஒரு ஆட்டக்காரரைத்தான் நாம் ஒருநாள் போட்டிக்கு லாயக்கற்றவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்தக் கூற்று முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். நவின கால கிரிக்கெட் மாறி விட்டதுதான் இந்தப் பிம்பத்திற்குக் காரணம். கிரிக்கெட் மெல்ல மெல்ல அதிரடி மட்டையாளர்களின் ஆட்டமாக மாறிக்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்படும் சராசரி ரன்கள் முந்தைய பத்தாண்டுகளைக் காட்டிலும் உயர்ந்து இருக்கிறது. முக்கியமாக 2001 முதலான பத்தாண்டுகளில் நடந்த ஆட்டங்களின் சராசரி ரன் ஓவருக்கு 4.93 ரன்கள். இதுவரை நடந்திருக்கும் ஒருநாள் போட்டிகளில் ஏறக்குறைய 49% ஆட்டங்கள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆடப்பட்டிருக்கின்றன. இதுவரை ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட ரன்களும் இதே விகிதத்தில்தான் இருக்கின்றன. இத்தனை அதிக ரன்களும், ஓவருக்கு 5 ரன்கள் விகிதத்தில் எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் போட்டியின் தன்மை எப்படி மாறியிருக்கிறது என்பது புலப்படும்.

குறிப்பாக டிராவிட் ஆடவந்த 1996 முதலான ஆட்டங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்று பார்த்தால் கிட்டத்திட்ட ஓவருக்கு 4.9 ரன்கள் சராசரியாக ஒவ்வொரு ஓவரிலும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் டிராவிடின் strike rate ஒருநாள் போட்டிகளில் 71%தான். அதாவது. அவர் ஒரு ஓவர் முழுவதும் விளையாடினால் அவரால் 4.3 ரன்கள்தான் எடுக்க முடிந்திருக்கிறது. அது மட்டுமன்றி, இந்திய மட்டையாளர்கள் மத்தியிலும் குறைந்தது 100 ஆட்டங்கள் ஆடி 2000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தவர்களின் பட்டியலில்கூட டிராவிட் மிகவும் பின்தங்கியே இருக்கிறார். இவருக்கும் கீழே பட்டியலில் இருப்பவர்கள், அவருக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களே. (கீழே இருக்கும் பட்டியலில் அவரது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகள் கணக்கில் கொள்ளப்பட்டவில்லை.)

மட்டையாளர்களுக்குச் சாதகமான ஃபார்மெட்டாக மாறிக்கொண்டிருக்கும் இந்த ஆட்ட வடிவில், அவரது குறைவான ஸ்ட்ரைக் ரேட் அவருக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல், அவரது பிம்பத்துக்குக் காரணமாக அமைந்தது என்று நான் கருதும் மற்றொரு காரணி – அவர் சம்பிரதாய முறையிலிருந்து கொஞ்சமும் வழுவாமல் கிரிக்கெட் விளையாடுவதே. டெண்டுல்கருக்கு ஒரு பேடில் ஸ்வீப், சேவக்குக்கு ஒரு ஊப்பர் கட், தோனிக்கு ஒரு ஹெலிகாப்டர் ஷாட், பீட்டர்சனுக்கு ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் இருப்பது போல, டிராவிடுக்கு ஒரு முத்திரை ஸ்ட்ரோக் கிடையாது. அவர் புதிய ஸ்ட்ரோக் எதையும் ரன் எடுக்கும் பொருட்டு உருவாக்கவில்லை. ஒருநாள் போட்டியில்கூட கடைசி வரை அவர் ஆடியது காப்பி புக் கிரிக்கெட்தான். ஒரு கவர் ட்ரைவுக்கு, பந்தின் அருகாமை வரை காலை நகர்த்தி (lean for the drive என்று சொல்வார்கள்) இன்றும் ஆடும் மிகச்சில கிரிக்கெட்டர்களில் இவர் முக்கியமானவர்.

டிராவிட்டிற்குச் சமமானவர்கள் என்று நான் உலக கிரிக்கெட்டில் கருதும் சிலரின் சாதனைகளை கீழே தந்திருக்கிறேன் அதைப் பார்த்தால் டிராவிடின் ஒருநாள் சாதனை யாருக்கும் குறைந்ததில்லை என்பது புலனாகும்.

(மேலே இருக்கும் படத்தில் ஹாஷிம் ஆம்லா, பீட்டர்சன், ட்ராட் போன்றோரையும் நான் சேர்க்கவே விரும்புவேன் – ஆனால் அவர்கள் டிராவிடின் காலத்திற்குச் சற்று பின்னால் வந்தவர்கள் என்பதால் அவர்களது சாதனையை டிராவிடோடு ஒப்பிட விரும்பவில்லை.)

ஒருநாள் போட்டிகளில் டிராவிட்டின் சாதனைக்கான முக்கியமான காரணம் அவர் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு போராளியாகவே இருந்திருக்கிறார். கடினமான விளையாட்டுச் சூழ்நிலைகளிலும், அட்டம் கைநழுவும் சூழ்நிலைகளிலும் இந்தியாவின் வெற்றிக்காகச் சுழன்றிருக்கிறது அவர் மட்டை.

அவரது கேரியரின் துவக்கம் போற்றத்தக்க வகையில் அமையவில்லை. 1996ல் உலகக்கோப்பையை ஏந்திய கையோடு சிங்கப்பூருக்கு விமானம் ஏறிய இலங்கை அணிக்கு எதிராக, சிங்கர் கோப்பையில் அறிமுகமானார். உலகக் கோப்பை ஆட்டத்தின் அரை இறுதியில் தோற்ற கவலையில் அழுதுகொண்டே ஓடிய வினோத் காம்ப்ளிக்கு, பதிலாக அணியில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தார் டிராவிட். 2 ஆட்டங்களில் 7 ரன்கள் – மிகச்சிறிய படாங் மைதானத்தில். இந்த மைதானத்தில்தான் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 50 விளாசி உலக சாதனையை ஏற்படுத்தினார் ஜெயசூர்யா.

அதன் பிறகு சார்ஜா – பாகிஸ்தானுக்கு எதிராக. அந்தத் தொடரும் அவருக்கு எந்த வகையிலும் பெயர் தரவில்லை. இதே கதை கொஞ்சம் தொடர்ந்தது – அவர் தனது முதல் 8 போட்டிகளில் எடுத்திருந்தது 63 ரன்களே. இதற்கு மேலும் அவர் மேல் நம்பிக்கை வைத்துதான் இந்திய அணி அவரை டொரண்டோவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சேர்த்தது. இந்த நம்பிக்கைக்கான காரணம் இன்னதென தெளிவாகச் சொல்ல முடியாவிட்டாலும், ரஞ்சியில் அந்த வருடம்தான் அவர் அரை இறுதியில் 153 ரன்களும், இறுதி ஆட்டத்தில் 114ம் அடித்திருந்தார் – இவை காரணங்களாக இருந்திருக்கலாம். அவரது இந்த ஆட்டமே அதே வருடத்தில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம்பட்ட மஞ்ச்ரேக்கருக்கு பதிலாக டிராவிட் களம் புகக் காரணமாக இருந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் டிராவிடின் ஆட்டம் அபாரமாக அமைந்தது – இது குறித்து சவ்ரவ் கங்குலி Signature Sourav நிகழ்ச்சியில் பேசியிருப்பதை நீங்கள் கேட்கவேண்டும். மேலும், அப்போதைய இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தவர் குண்டப்பா விஸ்வநாத் என்பதை ஒரு செய்தியாக மட்டுமே பதிவு செய்கிறேன்.

டிராவிட் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சேர்க்கப்பட்டதற்குக் காரணம் அவரது டெஸ்ட் ஆட்டங்கள் என்றால் மிகையில்லை. அப்போது டெஸ்டிற்கு தனி அணி, ஒருநாள் போட்டிகளுக்குத் தனி அணி, தனித் தனி அணித் தலைவர் போன்ற சித்தாந்தங்கள் எல்லாம் நிலை பெற்றிருக்கவில்லை. அதனாலேயே டிராவிட்டின் டெஸ்ட் போட்டி ஆட்டங்கள் அவரது ஒருநாள் போட்டிகளில் அவரது இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவியன. டொரண்டோ பயணம், டிராவிட்டுக்குச் சிறந்த மாற்றத்தைக் கொடுத்தது – 5 போட்டிகளில் 220 ரன்கள் – சராசரி 44 ரன்கள். இந்திய அணிக்கு மட்டுமல்ல டிராவிட்டுக்கும், தான் ஒருநாள் போட்டிகளில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது இந்தத் தொடர்தான்.

பின்னர் 1997 முதல் 1999 வரையிலான காலகட்டம் டிராவிட்டின் ஒருநாள் போட்டிகளில் காலூன்றுவதற்கு உதவிய காலம் என்று சொல்லாம் – மொத்தம் 2995 ரன்கள், 82 ஆட்டங்களில். இதில் டிராவிட் விஸ்வரூபம் எடுத்தது பெப்சி சுதந்திரக் கோப்பை. இந்தத் தொடர், கிரிக்கெட் ஆர்வலர்களால், சயித் அன்வரின் 194 ரன்களுக்காக நினைவில் வைத்துக் கொள்ளப்படுகிறது.  (சென்னையில் ஆட்டத்திற்கு சில மணிநேரங்கள்முன் பெவிலியன் கடைக்குச் சென்று, வாங்கிய மட்டையால் இந்தச் சாதனையைச் செய்தார் என்பது பிரபலமான பேச்சாக இருந்தது.) அந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றாலும் இந்தியாவின் பதிலடியை முன்னெடுத்துச் சென்றவர் டிராவிட். அவர் அடித்த 107 அன்வரின் மெகா ஸ்கோர் முன் மறைந்ததுவிட்டது. இந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து ஒன் டிராப் இடத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டார். அதேபோல 1998ம் அண்டு இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டபோது அதில் இந்தியாவின் பேட்ஸ்மேன்களில் பரிமளித்தவர் டிராவிட்.

இன்னுமொரு முக்கியமான ஆட்டம் 1999ல் நடந்த உலக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டம்.  இந்த ஆட்டம் மிக முக்கியமான ஆட்டமாக இருந்தது. இந்தப் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு சூப்பர் சிக்ஸில் இடம் உறுதி என்ற நிலையும் தோற்றால் சூப்பர் சிக்ஸுக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்ற நிலையும் இருந்தது. நடப்பு சாம்பியன்களாகவும், அட்டகாசமான ஃபார்மிலும் இருந்த இலங்கைக்கு எதிராக மிக அதிகமான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஒருநாள் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த ஜோடி என்ற பெருமையையும் டிராவிட் கங்குலி ஜோடி பெற்றது. காயமுற்ற மோங்கியாவுக்காக டிராவிட் விக்கெட் கீப்பிங்கும் செய்த போட்டி இது. பின்னர் இந்த பார்ட்னர்ஷிப் சாதனையை அவரே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முறியடித்தார்.

கேரியரின் இரண்டாம் பகுதியில் அவரது பங்கு பெரும்பாலும் அணியை ஒருங்கிணைத்துச் செல்வதாகவே இருந்தது. ஒரு பக்கத்தில் விக்கெட் வீழ்ந்துகொண்டிருந்தாலும், மறுபக்கத்தில் அரணாக இருந்து பல போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இந்த பணியின்போது, மூத்த கிரிக்கெட்டர்கள் என்றில்லை, இளைய தலைமுறையினருடனும் பல முக்கியமான போட்டிகளில் ஜோடி சேர்ந்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல சில ஆட்டங்கள்.

2000ம் அண்டு சார்ஜாவில் நடந்த கோகோ கோலா சாம்பியன்ஸ் போட்டியில், இந்திய அணியில் பேட்டிங் முழுவதுமே டிராவிட்டைச் சுற்றிதான் நடந்தது. முதல் பந்தில் ஆடத்துவங்கிய அவர் 45ம் ஓவரில்தான் ஆட்டமிழந்தார். அவரது ஆட்டத்தினாலே வலுவான இலக்கை நிர்ணயித்ததுடன், இந்தியா வெற்றியும் பெற்றது.

2002ல் மேற்கத்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், 324 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக இந்திய அணி அடைய டிராவிடின் ஆட்டமே காரணம். இந்த போட்டியில், பெரிய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த பின்னரும் யுவராஜ் சிங், கைஃப், சஞ்சய் பங்கருடன் சேர்ந்து விளையாடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் ஆட்டமிழக்கமல் அவர் எடுத்த ரன்கள் 109.

அதே போல 2006ம் ஆண்டு மேற்கத்திய தீவுகளுக்கு எதிராக கிங்க்ஸ்டனில் நடந்த போட்டியில் கைஃபுடன் அவர் இணைந்து ஆடி 45 ஓவரில் 251 ரன்கள் என்ற இலக்கை இந்தியா அடைந்து வெற்றி பெற்றது. இதிலும் அவர் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்தார்.

பொதுவாகவே அவருடைய சாதனைகள் மேற்கத்திய தீவுகளுக்கு எதிராக நன்றாகவே இருந்திருக்கின்றன. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் சராசரியாகவே இருந்திருக்கின்றது. 2007ல் அவர் அணியை விட்டு நீக்கப்படுவதற்கும் ஆஸ்திரேலியா சீரிஸும் காரணமாக அமைந்தது. அந்த தொடரில் அவர் 6 ஆட்டங்களில் மொத்தம் எடுத்ததே 51 ரன்கள்தான்.

ராகுல் டிராவிட் அளவிற்கு இந்திய கிரிக்கெட்டிற்கு முழுமையாக பங்களித்தவர்கள் யாரும் இல்லை – அணியின் தேவைக்கு ஏற்றபடி அவர் தன்னுடைய களங்களை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார், அவை அவருக்கு சௌகரியமில்லாதவையாக இருந்தாலும். இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கைகொடுத்ததிருக்கிறார் டிராவிட்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது ஒரு ஸ்பெஷலிஸ்ட்க்கான இடம். அவ்வளவு சுலபமான இடமல்ல. (இதன் அருமையை அறிந்தவர்களால் தோனியை குறை சொல்ல முடியாது.) பல காலம் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்க்கான இடம் சரியான ஆட்டக்காரரால் நிரப்பப்படாமலே இருந்தது. 2001ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஸ்டாண்டர்ட் பேங்க் மும்முனை போட்டியில், இந்திய அணிக்குக் கூடுதலான ஒரு பேட்ஸ்மேன் தேவைப்பட்டபோது, அந்தத் தொடருக்கான விக்கெட் கீப்பரான தீப் தாஸ் குப்தா அணியிலிருந்து நீக்கப்பட்டு லக்ஷ்மண் சேர்க்கப்பட்டார். அப்போது காலியாக இருந்த விக்கட் கீப்பர் பொறுப்பை ஏற்றுக்கொண்டர் டிராவிட். அதன்பிறகு தொடர்ச்சியாக அவர் விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார். அவருக்கு அந்தப் பொறுப்பு அதீத கஷ்டம் கொடுப்பதாகவே இருந்தது. அவர் இது குறித்து வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். பின்னர் பார்த்தீவ் படேல் அந்த இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் சரி வராமல், தோனியால் அந்த இடம் இப்போது நிரப்பப்பட்டிருக்கிறது. இப்போதுகூட நடந்த டெஸ்ட் போட்டியில், டிரவிட் தோனி பந்து வீசும்போது டிராவிட் கீப்பிங் செய்த தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே ரசித்திருப்பார்கள்.

டிராவிட் 2005 முதல் 2007 வரையிலான காலகட்டங்களில் இந்திய அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். சேப்பல் செய்த கூத்திற்குப்பின் கங்குலி கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர், இந்திய அணியை ஒருங்கிணைக்கும் சீனியர் ஒருவர் கேப்டனாக நியமிக்கும் தேவை ஏற்பட்டது. அந்த பொறுப்பு டிராவிட்டுக்கே கொடுக்கப்பட்டது. தோனி ஒரு ஸ்திரமான தலைவராக உருவாகும் காலம் வரை இந்தியத் தலைமை ஏற்றார் டிராவிட். அவர் தலைமையில் இந்தியா பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. உலகக் கோப்பையில், பங்களாதேஷிடமும், இலங்கையிடமும் உதை வாங்கினோம். சரியான சமயத்தில் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.

இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் என்று சச்சின் பார்க்கப்படுவது எவ்வளவு சரியோ அந்த அளவிற்கு சரி, டெஸ்ட் போட்டிகளின் அடையாளமாக டிராவிட் பார்க்கப்படுவதும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவருக்கான நியாயமான இடம் வழங்கப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. அவர் போன்ற ஒரு முழுமையான கிரிக்கெட் அளுமையை உலக அரங்கிலேயே அடையாளம் காட்டுவது அரிது. எதிர்காலத்தில், இந்தியாவிற்கு இன்னொரு சச்சின் கிடைக்கக்கூடும். பல சேவாக்குகளும், தோனிகளும் கிடைக்கக்கூடும். ஆனால், டிராவிட் போன்ற ஒரு ஆட்டக்காரர் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. Puristகளின் கடைசி பிரதிநிதியாக இந்திய அணியில் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தை ஆடிவிட்டு ஓய்வில் திரும்பியிருக்கிறார்.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தன்னை மற்ற ஆட்ட வடிவங்களிலிருந்து பிரித்துக்கொண்ட டிராவிட், இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெரும் அந்த நாளில்தான் anchor innings ஆடுபவர்களின் பங்கு கிரிக்கெட்டில் எவ்வளவு அளப்பரியது என்பதை நம்மால் உணர முடியும். ஆனால் அதுவரை டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்போடு இருக்கவேண்டும்.

-கிருஷ்ணன் சந்திரசேகரன்

 

பாண்டிங் உடைத்த டிவி

ரிக்கி பாண்டிங்

நேற்று ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயுடன் ஆடி வெற்றி பெற்றாலும் அந்த அணியின் காப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு பிரச்னையில் சிக்கியிருக்கிறார் என்று ஒரு ஆங்கில டீவி சானலில் ஒரு கொசுறு நியூஸ். பாண்டிங் ரன் அவுட் ஆனாராம். கோபத்தில் போகிற வழியில் இருந்த ஒரு டீ.வியைப் போட்டு உடைத்துவிட்டாராம். அவர் இல்லை என்று மறுக்கிறார். ஆனால் மாட்ச் நடைபெற்ற குஜராத் நகர கிரிக்கெட் வாரியக் குழுவினர் ஐசிசியிடம் முறையிட்டு இருக்கின்றனர். அங்கே நம்மூர் போல் எல்லாம் இலவச டீ.வி வினியோகம் கிடையாதே. புது டீவி கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்களோ என்னவோ. யார் கண்டது.

பத்தாததுக்கு இந்த பாண்டிங் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் எதையோ வேறு ‘அருளி’ இருக்கிறார். உலகக் கோப்பையில் ரொம்ப தண்ட டீம்களளோடு ஆட வேண்டியிருக்கிறதாம். நம்மூர் ரஞ்சி டிராபி போல் சுமார் டீம்கள் எல்லாம் ஒரு பக்கம், நல்ல டீம்களளெல்லாம் இன்னொரு பக்கம் ஆடினால் தேவலை என்றிருக்கிறார்.

நம் டீமைச் சொல்லவில்லை அய்யா, ஏன் கோபப்படுகிறீர்கள்! இந்த அயர்லேண்ட், கனடா என்று அடி படுவதற்கென்றே ஒரு கோஷ்டி வருகிறது பாருங்கள். அவர்களைச் சொல்லியிருக்கிறார். இது வேவையில்லாத பிதற்றல். அதற்காக தேவையான பிதற்றல் உண்டா என்று கேட்காதீர்கள்.

நியாயமாக இந்த மாதிரி சின்ன சின்ன டீம்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். உலக அரங்கில் ஆடுவது அவர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு பயிற்சி. எப்பேற்பட்ட எக்ஸ்பீரியென்ஸ். அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. மேலும், எத்தனை நாள் தான் பார்த்த முகங்களையே பார்த்துக் கொண்டிருப்பது. ஒரு சேஞ்சுக்காக புது அயிட்டங்களையும் கொஞ்சம் பார்த்துத்தான் வைப்போமே.

யார் கண்டது. 1979 ‘சிலோன்’ என்ற பெயருடன் ‘அலோனாக’ ஆடிய இலங்கை அணி 1996 உலகக் கோப்பையை வெல்லவில்லையா. அது போல் ‘வேணாடா’ என்று எல்லா அணிகளிடமும் கெஞ்சி அடி வாங்கும் ‘கானடா’ 2024 உலகக் கோப்பையை வெல்லாது என்று எப்படிச் சொல்ல முடியும்.

பாண்டிங் கிடக்கிறார் விடுங்கள். இப்படி நல்வாக்கு சொல்வதற்கு பதில் அவர் பேசாமல் ஆடும் க்ரவுண்டுகளில் எல்லாம் டீ.வியை உடைத்துக் கொண்டிருப்பது எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது.

இன்னொன்றை கவனித்தீர்களா? இது வரை ஆடிய அணிகள் பலவும் அநியாயத்துக்கு பீல்டிங்கில் கோட்டை விட்ட வண்ணம் இருக்கின்றன. நேற்று இங்கிலாந்து பீல்டிங்? அட அட அட. இந்திய அணி தோற்றது. ஒருத்தர் கையிலும் பால் நிற்கவே இல்லை. பீல்டிங் தான் இந்த லட்சணம் என்றால் கிரிக்கெட் ரூல்ஸ் பற்றிய அடிப்படை கூடவா இருக்காது கிரிக்கெட் என்கிற அற்புத ஆட்டத்தை நமக்கு அளித்த இங்கிலாந்திற்கு? ஸ்லாக் ஓவர்களில் 30 அடி வளையத்துக்குள் 4 பீல்டர்கள் இருக்க வேண்டும் என்ற ஆதார அறிவு கூட இல்லை. 3 பேர் தான் இருக்க, க்ரிஸ் ப்ரோட் போட பாட்ஸ்மென் அவுட் ஆக, அம்பயர் ‘நோ பால்’ என்று சிக்னல் கொடுத்து விட்டார்.

இதனால் அறிவது யாதென்றால் –

வேண்டாம். நாமெல்லோருமே அறிவோம்!

கண்றாவி பவுலிங்கும் கசுமால ஃபீல்டிங்கும்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதும் பத்தி இன்று ஆரம்பம். மார்க்கெடிங் மாயாஜாலம், விளம்பர மாயாஜாலம் நூல்களின் ஆசிரியரான சதீஷ், ஒரு கிரிக்கெட்டரும்கூட.  உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு என்னும் இவருடைய புத்தகம் இப்போது ரிலீஸ் ஆகிறது.

உலகக் கோப்பை ஒரு வழியாக ஆரம்பித்துவிட்டது. நமக்குத் தான் கை கால் கொள்ளவில்லை. இருக்காதா பின்னே? இந்திய மண்ணிலேயே உலகக் கோப்பை என்றால் சும்மாவா? நாள்தோறும் திருவிழா தான். பொழுதெல்லாம் கோலாகலம் தான். காணாததைக் கண்டது போல் குதிக்கிறோம். கண் மண் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த முறை இந்தியா கண்டிப்பாய், கட் அண்டு ரைட்டாய் வெற்றி பெற்றுவிடும் என்று நம்மில் பலரும் முடிவே கட்டிவிட்டோம். வெற்றி பெற்று கப்பை எங்கு வைப்பது என்று முடிவு செய்வது தான் பாக்கி. ம்ம்ம்ம்ம்ம்… ஆசை இருக்கு தாசில் பண்ண!

இது வரை ஐந்து மாட்சுகள் முடிவடைந்து விட்டன. இந்த மாட்சுகள் நடந்த லட்சணத்தை வைத்துப் பார்த்தால் ஒன்று நன்றாகப் புரிகிறது. மாட்சுகள் நடக்கும் பிட்சுகள் அநியாயத்துக்கு வெத்து வேட்டுகள். பிட்சில் லவலேசம் பவுன்ஸ் இல்லை. மருந்துக்குக் கூட ஸ்விங் இல்லை. ஸ்னானப் ப்ராப்த்திக்குக் கூட பிட்சில் புல்லோ, ஈரமோ இல்லாத கட்டாந்தரைகளை பிட்ச் என்று போர்டு போட்டு மாட்சுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். பவுலர்களுக்கு வேலையே இல்லை. வந்து எப்படிப் போட்டாலும் ஒரு எழவும் ஆகப் போவதில்லை. பேசாமல் விக்கெட் கீப்பரையே போடச் சொல்லலாம். அது கூட வேண்டாம். சும்மா கையை கட்டிக் கொண்டிருக்கும் அம்பயரையே பந்து போடச் சொல்லலாம். தரித்திரம் பிடித்த பிட்சுகளில் யார் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது!

பாட்டிங் ப்ராப்ளமே இல்லை. எவன் வேண்டுமானாலும் வந்து ஆடலாம். காசி பட கண்ணில்லாத ‘சீயான் விக்ரம்’ வந்து ஆடினாலும் அரை சதம் காரண்டி. அப்பேற்பட்ட ஒரு பிட்சில் ஒரு சோப்ளாங்கி அணியான பங்களாதேஷுடன் 370 ரன்கள் அடித்து விட்டோமாம். ஊரெல்லாம் ஒரே பேச்சு. சேவாக் அடித்தார். கோலி அடித்தார் என்று ஏகத்துக்கும் இறுமாப்பு. என்னவோ போங்கள். எனக்குத் தான் ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது.

இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். 370 அடித்தோம், இல்லை என்று சொல்லவில்லை. பங்களாதேஷ் என்ன அப்படி ஒரு பெரிய கொம்பா? சொல்லப் போனால் அது டீமே இல்லை! கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்னி சேனல் பார்க்கும் பாலகர்களின் தொகுப்பு. அந்த டீமுடன் 370 அடிக்கவில்லை என்றால்தான் அசிங்கம். சரி எதோ தெய்வ கடாட்சத்தில் அடித்துத் தொலைத்து விட்டோம். அதற்குப் பிற்கு ஒரு பவுலிங் போட்டோம் பாருங்கள். ஆஹா…ஆஹா….அதி அற்புதம். போட்ட பாதி பந்துகளுக்கும் மேல் பிட்சிலேயே படாமல் கிட்டத்தட்ட ஸ்கொயர் லெக் அம்பயர் காலின் அருகில் போய் பிட்ச் ஆகும் அளவுக்கு வைட் பந்துகள். ஓரிரு பந்துகள் அவர் காலை பதம் பார்த்ததாகக் கூடக் கேள்வி! ஸ்ரீசாந்த் போடும் அழகுக்கு நான்கு விக்கெட் கீப்பர்கள் வைத்தாலும் அவர்களையும் தாண்டி வைடாய் பவுண்ட்ரிக்கு போகும். எதோ பிட்சில் ஸ்பின் எடுப்பதால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் விக்கெட்டும் எடுத்துத் தொலைத்தோம். இல்லையேல் 370 பங்களாதேஷிற்கு முக்காமலேயே கிடைத்திருக்கும்.

அதோடு நம்மவர்களின் பீல்டிங்கைப் பார்த்தீர்களா? பீல்டிங் செய்ய வருவதற்கு முன் நம்மவர்கள் நாலு நெய் ரோஸ்டை வெண்ணெயை தொட்டுக் கொண்டு வெறும் கையில் சாப்பிட்டு கை அலம்பாமல் வந்ததைப் போல் அப்படி ஒரு தேவல். கையில் வரும் காட்சை கோட்டை விடுகிறோம். ரன் அவுட்டைத் தொலைக்கிறோம். கையில் பந்தைப் பிடிக்க முடிந்தால் தானேய்யா. அது சரி, பிடிக்க முடியவில்லை என்றால் நம்மவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்.

இந்த டீமை வைத்துக் கொண்டு ஜெயிப்போமா? பாட்டிங் ஏதோ தேறினாலும் தேறும். ஆனாலும் சொல்வதற்கில்லை. அடித்தால் அனைவரும் அடிப்பது. அவுட் ஆனால் அனைவரும் கோஷ்டி கானமாய் எதிர்க்கட்சி வெளிநடப்பு மாதிரி சேர்ந்து போவது என்று ஒரு வழக்கத்தை வைத்துத் தொலைத்திருக்கிறோம். அதையாவது விட்டுத் தள்ளுங்கள். நம்மவர்களின் பவுலிங்கை வைத்துக் கொண்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது. மகா தண்டம். வேண்டுமானால் நாங்கள் ஐம்பது ஓவர்கள் பாட்டிங் செய்கிறோம், ஆனால் பவுலிங் போடும் போது முப்பது ஓவர்கள் தான் போடுவோம். நாங்கள் ஐம்பது ஓவர்களில் அடித்ததை எதிர் அணியினர் 30 ஓவர்களில் அடிக்க சொல்லுங்கள் என்று ஐசிசியிடம் கேட்டுப் பார்கலாம். இந்த தண்ட பவுலிங்கை வைத்துக் கொண்டு இது கூட கொஞ்சம் ரிஸ்கான சமாசாரம் தான்.

இல்லை, இன்னொன்று செய்யலாம். பீல்டிங் செய்யும் போது 14 பேர் பீல்டிங் செய்வோம் என்று கோரலாம். ஆனால் அதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. நாம் தான் பாலை விட்டுவிட்டு புல்லை தேவும் ‘தேவாதி தேவர்’களை வைத்துக் கொண்டிருக்கிறோமே. என்னத்தை பீல்ட் செய்து என்னத்தை கிழிப்பது.

இந்த கன்றாவி பவுலிங்கையும் கேனத்தனமான பீல்டிங்கையும் வைத்துக் கொண்டு ஜெயிக்க வேண்டுமானால் நாம் முதலில் ஆடி ஒரு 400, 500 அடிக்க வேண்டும். ஒரு சான்ஸ் இருக்கலாம் வெற்றி பெற!

இப்பேர்ப்பட்ட சரித்திர தரித்திரங்களை வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டிய தலையெழுத்து நமக்கு. பேசமால் தலையில் அடித்துக் கொண்டு தலை ஸ்நானம் செய்து கை கழுவி வேறு வேலை பார்க்கப் போகலாம். ஆனால் என்ன, இந்த பாழாய்ப் போன மனசு தான் கேட்டுத் தொலைக்க மாட்டேன் என்கிறது. மதியம் 2.30 மணி ஆனால் புத்தி தானாய் டீவி முன் தான் போவேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது. அந்த மாட்சு முடியும் வரை ஏதோ நேர்த்திக் கடன் போல் எண்சாண் உடம்பும் தொலைக்காட்சியே சரணம் என்று விழுந்து தோப்புக் கரணம் போடுகிறது.

இதற்காகவாவது நம்மவர்கள் கோப்பையை வென்று தொலைத்தால் தேவலை…

[ஒரு மாதம் தொடரும்]

சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் உலகக் கோப்பை வரலாறு இங்கே.