வால் ஸ்ட்ரீட் முற்றுகை

இந்தியாவோடு ஒப்பிடும்போது நாலில் ஒரு பங்கு மக்கள் தொகை. ஆனால் உலகின் சூப்பர் பவர். பூமிப் பந்தின் மூலை முடுக்குகளில் நடப்பவற்றைக் கழுகுக் கண்களோடு 24 மணிநேரமும் கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதி. அசுர ராணுவ பலம். எல்லாம் இருந்தும் அமெரிக்கா கடந்த சில வருடங்களாக பல்வேறு முனைகளில் சரிவுகளைச் சந்தித்துவருகிறது. புதிதான சவால்கள் என்று சொல்லிவிடமுடியாது – அமெரிக்கா ஏற்கெனவே சந்தித்தவைதான். எல்லாவற்றையும் சமாளித்து ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டெழும் சாமர்த்தியம் அமெரிக்காவுக்கு உண்டு. ஆனால் இப்போது நடப்பதுபோல ஒரே சமயத்தில் பல்முனைச் சவால்களைச் சந்திக்க நேர்வது அமெரிக்காவுக்குச் சற்றே புதிது.

வெள்ளை மாளிகை அதிபர் ஒபாமாவின் அறையில் இருக்கும் ஒரே இந்தியத் தலைவரின் படம் மகாத்மா காந்தி என்று ஒரு தகவல் உண்டு. ஒபாமாவும் அவ்வப்போது மகாத்மாவின் அகிம்சாரீதியான போராட்டங்களைச் சிலாகிப்பது உண்டு. யாருடன் டின்னர் சாப்பிட விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு காந்தியுடன் என்று அவர் சொல்லியிருக்கிறார். இன்று அவர் காந்தியின் சத்யாகிரகத்தை நியூ யார்க்கின் உலகப்புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் எதிர்கொள்கிறார்.

வால் ஸ்ட்ரீட் பற்றித் தெரியாதவர்களுக்குச் சுருக்கமாக. உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தையான நியூ யார்க் பங்குச் சந்தையும், நாஸ்டாக், நியூ யார்க் மெர்க்கென்டைல் எக்சேஞ்ச், நியூ யார்க் போர்ட் ஆஃப் ட்ரேட் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களும் இருக்கும் இடம். வால் ஸ்ட்ரீட்டில் பங்கு வர்த்தகம் சரிந்தால் உலகளவில் அது எதிரொலிக்கும் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்காவின் அசுர நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படும் இடம் நியூ யார்க் பங்குச்சந்தை. குறிப்பாக உலகளாவிய நிதி மற்றும் வங்கி நிறுவனங்கள்.

கடந்த நான்கு வாரங்களாக வால் ஸ்ட்ரீட்டை மக்கள் முற்றுகை இட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் கூட்டத்தின் அளவு கூடி, நூற்றுக்கணக்கில் ஆரம்பத்தில் இருந்தது இன்று ஆயிரக்கணக்காக ஆகியுள்ளது. அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் மக்கள் கூடி முற்றுகைப் போராட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது அரசுக்குப் பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

மக்கள் எதனால் முற்றுகை இடுகிறார்கள்? நம்மூரில் நிலம், கட்டடம் தொடர்பான ரியல் எஸ்டேட்டின் நிலவரம் நாம் அறிந்ததுதான். சென்னையில் நல்ல ஏரியாவில் வசதிகளோடு இரண்டு படுக்கையறை அபார்ட்மெண்ட் ஒன்று வாங்கவேண்டும் என்றால் குறைந்தது ஒரு கோடி ரூபாய் வேண்டும். கட்டுங்கடங்காது அசுரத்தனமாக விலை ஏறிக்கொண்டிருக்கிறது. சாமான்யர்களுக்கு வீடு என்பது எட்டாக்கனி. அமெரிக்காவிலும் 2005,-2006 வரை வீட்டுவிலை படிப்படியாக ஏறிக்கொண்டேபோய் உச்சகட்டத்தில் நின்றது. வாங்குபவர்கள் எல்லாருமே வங்கிகளிடமும் நிதி நிறுவனங்களிடமும்தான் கடன் பெற்று வீட்டை வாங்குவார்கள். கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் அதைச் சும்மா வைத்திருக்காமல் பத்திரங்களாக அந்தக் கடன்களை மற்ற நிதி நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்கள். இப்படிக் கைமாறிக் கைமாறி ஒரு கட்டத்தில் கடன் யாரிடம் இருக்கிறது என்பதே கடன் பெற்றவருக்குத் தெரியாது.

இம்மாதிரி வீட்டுக்கடன்களைக் கையாளும் அலுவலர்களுக்கு கடனையும் வட்டி விகிதத்தையும் பொருத்து கமிஷன் கிடைக்கும். கமிஷன் நிறையப் பெறவேண்டும் என்ற பேராசை கடன் அலுவலர்களை உந்த, இம்மாதிரி கொடுக்கும் கடன்களை உடனடியாகப் பெரிய நிறுவனங்களிடம் விற்றுக் காசு பார்க்கும் பேராசை நிதி நிறுவனங்களை உந்தியது. கடன் பெற்றவர்கள் வீட்டுக் கடன்களைச் செலுத்தத் தொடங்கியதும்தான் பிரச்னைகள் தொடங்கின. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தமாதிரி கடன் வாங்கத் தகுதி இல்லாதவர்களையெல்லாம் கண்ட இடத்தில் கையெழுத்து போடச்செய்து கண்மண் தெரியாமல் சகட்டுமேனிக்குக் கடன்கொடுத்துத் தள்ளியிருந்தார்கள். இம்மாதிரி கொடுத்த கடன்களையெல்லாம் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது பேலன்ஸ் ஷீட்டில் பெரும் சொத்தாகக் காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆளாளுக்கு வீடுகள் வாங்க, வீட்டு விலை ஆகாயத்துக்கு எகிறியது. ஒரு கோடி பெறுமானமுள்ள வீட்டை நான்கு கோடிக்கு வாங்கினார்கள். இப்படி வாங்கியவர்கள் மாதத் தவணையைச் செலுத்தமுடியாமல் திணற, வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. பத்து நூறு என்று தொடங்கி ஆயிரம் லட்சம் என்று பெருமளவு கடன்கள் செலுத்த முடியாமல் சொந்தக்காரர்கள் சாவிகளை ஒப்படைத்துவிட்டு வீடுகளைக் காலி செய்ய ஆரம்பித்ததும் பிரச்னை பூதாகாரமானது. சந்தையில் சகட்டுமேனிக்கு வீடுகள் குவிய, விலை பாதாளத்துக்கு விழுந்தது.

நான்கு கோடிக்கு வாங்கிய வீட்டை எழுபது எண்பது லட்சத்திற்குக்கூட விற்க முடியாமல் திணறினால் என்ன ஆகும்? முப்பது வருட காலக் கடன்களைப் பெற்றவர்கள் வாங்கிய முதல் சில வருடங்களில் செலுத்தும் மாதத் தவணைகளில் பெரும்பாலான தொகை வட்டியை அடைக்க மட்டுமே போய்விடும். வாங்கி ஐந்து வருடங்களில் அசல் மிகச் சொற்பமான அளவே குறைந்திருக்கும்.

ஒரு சிறிய கணக்கைப் பார்ப்போம்.

வீடு வாங்கிய விலை: நாலு கோடி. மாதத் தவணை – ஒரு லட்சம் (எண்பதாயிரம் வட்டி, இருபதாயிரம் அசல்). ஒரு வருட முடிவில் 2,40,000 மட்டுமே அசலில் கழிய பாக்கிக் கடன் 3,97,60,000 இருக்கும். விலை விழுந்ததால் வீட்டின் மதிப்பு எண்பது லட்சம்!

மாதத் தவணையைக் கட்ட முடியாமல் வீட்டை விற்றால் கிடைப்பது எண்பது லட்சம். வங்கிக்குக் கட்டவேண்டியது நாலு கோடி. என்ன செய்வார் வாங்கியவர்? சாவியைக் கொடுத்துவிட்டு வீட்டை ஜப்தி செய்ய விட்டுவிடுவார்.

வங்கிகள் வீட்டை ஜப்தி செய்தாலும் என்ன செய்யமுடியும்? அவர்கள் விற்றாலும் கிடைக்கப்போவது 80 லட்சம்தான். ஆனால் வரவேண்டிய தொகை நாலு கோடி. ஆக “வாராக் கடன்” என்று 3 கோடிக்கு மேல் கணக்கு எழுதுவார்கள். இப்படிப் பெருமளவில் எழுதினால் என்ன ஆகும்? லாபம் எதுவும் காட்ட முடியாமல் கடும் நஷ்டத்துக்கு உள்ளாகி, வங்கி திவாலாகிவிடும். வங்கிகளில் பணம் போட்ட வாடிக்கையாளர்களுக்குப் பட்டை நாமமும் ஒரு கை சுண்டலும்தான் மிச்சம்!

இப்படி நூற்றுக் கணக்கில் வங்கிகள் திவாலாகத் தொடங்கியதும்தான் சூழ்நிலையின் விபரீதம் எல்லாருக்கும் உறைக்க ஆரம்பித்தது. வேலையிழப்பு, சேமிப்பு இழப்பு, பங்குகளின் மதிப்பிழப்பு என்று எல்லாப் பக்கமும் அமெரிக்கப் பொது ஜனத்துக்கு அடிமேல் அடி. விழுந்த பொருளாதாரத்தினால் பல வணிக நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின. பழம்பெருமை வாய்ந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களான க்ரைஸ்லர், ஃபோர்ட் நிறுவனங்களும் திவாலாகும் நிலைக்கு வந்தன. இதன் சங்கிலித் தொடர் விளைவுகள் புரிகிறதா?

அவசர அவசரமாக அமெரிக்க அரசு தாற்காலிகக் கடனாக பல பில்லியன் டாலர்களை இந்த நிறுவனங்களுக்குக் கொடுத்துச் சமாளித்தது. (அவர்கள் அதை ஒன்றிரண்டு வருடங்களில் ஒழுங்காகத் திருப்பிக் கட்டியது வேறு விஷயம்.) சிட்டி பேங்க் உள்ளிட்ட உலகளாவிய பெரும் வங்கிகளும் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டவுடன் அமெரிக்க அரசு அதிரடியாக அரசு நிதியிலிருந்து பல பில்லியன் டாலர் தாற்காலிகக் கடனாக வழங்கி முட்டுக்கொடுத்தது. இது இப்படி இருக்க, இப்படி அரசுப் பணத்தில் (அதாவது மக்கள் பணத்தில்) மீட்டெடுக்கப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் மில்லியன் டாலர் கணக்கில் சம்பளம், படி, போனஸ் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நிறுவனத்தைவிட்டு வெளியேறினர்.

இதற்கு “கோல்டன் பாராசூட்” என்றொரு சொலவடை இருக்கிறது. அதாவது விமானம் விழுந்து காலியாக எல்லாப் பயணிகளும் சிவலோகம் போகும் தருணத்தில் பைலட் மட்டும் பிரத்யேகமான பாராசூட்டைக் கட்டிக்கொண்டு எல்லாரையும் அம்போவென்று விட்டுவிட்டுத் தான்மட்டும் குதித்துத் தப்பிப்பதைப் போல! எல்லாப் பக்கங்களிலும் விழுந்த அடிகளால் நொந்துபோயிருந்த அமெரிக்கர்களுக்கு இந்த நடவடிக்கைகள் எல்லாம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இருந்தது. அவ்வளவுதான்! “உங்களது பேராசைக்கு எல்லையே இல்லையா?“ என்று கொதித்து எழுந்தார்கள் அமெரிக்கர்கள்.

இதன் விளைவுதான் கடந்த ஒரு மாதமாகச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் வால் ஸ்ட்ரீட் முற்றுகை! இப்போராட்டங்கள் நியூ யார்க் நகரோடு நிற்காமல் இப்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக “பாஸ்டன் முற்றுகைப் போராட்ட”த்தைத் தொடங்கி நூற்றுக்கணக்கானோர் கைதாகியிருக்கிறார்கள். அரசுக்குப் பெரிய தர்மசங்கடமான நிலை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. ரிபப்ளிகன் கட்சி சார்பான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் விவாதங்களில் போட்டியிடும் ஆசாமிகள் ஒபாமாவைக் கிழிகிழியென்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனிமேல் தாங்க முடியாது என்ற நிலைக்கு அமெரிக்கர்கள் வந்துவிட்டார்கள். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது என்று சொல்வார்களே, – அதுதான் அமெரிக்கா விஷயத்தில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பொருளாதாரச் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், திவாலாகும் பெரும் நிறுவனங்கள், நிதியிருப்புக் குறைவு (ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க கஜானாவைவிட அதிக ரொக்கக் கையிருப்பு வைத்திருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!), டாலர் மதிப்பு சரிவு, வங்கிகளின் ஊதாரித்தனம், பேராசை, பங்குச் சந்தைச் சரிவு என்று உள்நாட்டுப் பிரச்னைகள். இன்னொரு பக்கம் வேலியில் போகும் ஓணானை மடியில் கட்டிக்கொண்ட கதையாக ஆக்கிரமிப்பு செய்துள்ள ஈராக், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் படைகளுக்காக ஒவ்வொரு நாளும் செலவாகும் பில்லியன் டாலர்கள்.

ஈராக்கிலிருந்து படிப்படியாக படைகளை விலக்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் அங்கு இதுவரை நிர்மாணித்திருந்த ராணுவத் தளங்கள், சாதனங்கள், ஆயுதங்கள், டாங்குகள், வண்டிகள் என்று கிட்டத்தட்ட முந்நூறு மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ளவற்றைத் திரும்ப அமெரிக்கா கொண்டுவர அதைவிட அதிகச் செலவாகும் என்பதால் அங்கேயே ஈராக்கியர்களுக்கு “தானமாக” கொடுக்க முடிவெடுத்த செய்தியும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதையெல்லாம் பார்த்த அமெரிக்கர்கள், தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.

இம்முற்றுகைப் போராட்டங்களில் விநோதமானது என்னவென்றால், அண்ணா ஹசாரே போன்று தலைவர் என்று யாரும் இல்லாமல் மக்களாகவே கூட்டம் கூடிப் போராட்டம் நடத்துவதுதான். தலைவன் இல்லாத மக்களின் சுயப் போராட்டம்! கிட்டத்தட்ட எகிப்து அல்லது சில அரபு நாடுகளில் நடைபெறும் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் போன்றது என்றும் சொல்லலாம்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா, எதிர்ப்பதா என்று ஆளுங்கட்சிக்காரர்களான டெமாக்ரடிக் கட்சியினர் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள். எதிர்த்தால் அதிபர் தேர்தலின்போது, மக்கள் ஒபாமாவுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள். ஆதரித்தால் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்ததுபோல ஆகிவிடும். சும்மா இருந்தால் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். இருதலைக்கொள்ளி உள்ளிட்ட எறும்பு நிலை!

இது பிசுபிசுத்துப் போகிற போராட்டமாகத் தெரியவல்லை. வடகிழக்கு மாகாணங்கள் தவிர இப்போது மற்ற நகரங்களிலும் சிறு குழுக்களாக மக்கள் கூட ஆரம்பித்துவிட்டார்கள். இது எந்நேரமும் பெரிய அளவில் வெடிக்கலாம். இப்படி வங்கி, நிதி நிறுவனங்கள், பெரும் முதலைகளான எண்ணெய் நிறுவனங்கள் என்று அசுர முதலாளிகளை எதிர்த்து நடைபெறும் இம்முற்றுகைப் போராட்டங்களுக்கு மக்களிடம் அபார ஆதரவு இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. அபிப்ராய பேதங்களும் இருக்கின்றன.

போன வாரம் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்ததால் உலகமே துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறது. “ஆப்பிளின் லாப சதவிகிதம் கிட்டத்தட்ட 25%. ஆப்பிளின் கையிருப்பு 80 பில்லியன் டாலர்கள். இதுவரை நன்கொடை என்று ஒரு நயாபைசாகூட அவர்கள் செலவழித்ததில்லை. ஆனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுடன், பெரும் கட்டுமானங்களுடன், ஏராளமான முதலீடுகளுடன் பெரும் தொழில் அமைப்பை நடத்திக்கொண்டிருக்கும் – எல்லார் வாயிலும் விழும் – எண்ணெய் நிறுவனங்களின் (இதயம் நல்லெண்ணை இல்லை – பெட்ரோல், கேஸ், இத்யாதி இத்யாதி) லாப சதவிகிதம் 5 அல்லது 6 சதவிகிதம்தான். இதில் யாரை எதிர்த்து மக்கள் போராடவேண்டும்?” என்றார் என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஒரு அமெரிக்கர்.

யோசிக்கவேண்டிய விஷயம்!

– வற்றாயிருப்பு சுந்தர்

கட்டற்ற வர்த்தக மண்டலங்கள்

சவரம் செய்யக் கூடிய ரேசர் எவ்வளவு இருக்கும்? $30 [ரூ.1320] இல்லை ஒரு டெலிபோன்? – $2,400 [ரூ.1,05,600] ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய்? – $180 [ரூ.7,920] இதெல்லாம் பணவீக்கம் தறிகெட்டு ஒடிக் கொண்டிருக்கும் ஜிம்பாப்வேயில் இல்லை. சோற்றுக்கு அல்லாடும் சோமாலியாவில் இல்லை. இவை 1992லிருந்து இன்று வரைக்கும் உலகமெங்கும் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் மூலம் ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் இன்வாய்ஸ்கள்.

கட்டற்ற வர்த்தக மண்டலங்கள்.

135 நாடுகளில், கிட்டத்திட்ட 3,000 கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் (Free Trade Zone – FTZ) இருக்கிறது. 2007-இல் இதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வர்த்தகம் US $400 பில்லியன் ( ரூ. 17,60,000 கோடிகள்). பனாமாவிலுள்ள கொலான் தான் உலகின் இரண்டாவது பெரிய கட்டற்ற வர்த்தக மண்டலம். 2008ல்  கொலான் செய்த பரிவர்த்தனைகள் மட்டுமே US$8.6பில்லியன் (ரூ.37,840 கோடிகள்)

கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் என்றால் என்ன?

கடலுக்கு பக்கமாகவோ, விமான தளங்களுக்கு பக்கமாகவோ, ஒரு நாட்டின் நிறுவனம் நடத்தும் விதிகளிலிருந்து விலக்குகள் அளிக்கப்பட்டு வர்த்தகத்தினை ஊக்குவிக்க அமைக்கப்படும் பிராந்தியம் தான் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள். சுருக்கமாய் மண்டலங்கள். மண்டலங்களில் வரி குறைவாக இருக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பு சலுகைகள், விலக்குகள், வரி குறைப்பு, சுங்கத் தீர்வை குறைப்பு என சலுகைகள் நீளும்.

உதாரணத்திற்கு சீனாவின் ஷென்சென் ஒரு பெரிய சிறப்புப் பொருளாதார மையம் (Special Economic Zone). அங்கே 15 கட்டற்ற வர்த்தக மண்டலங்கள், 17 ஏற்றுமதி செயல்பாட்டு மையங்கள், 5 தொழில்நுட்பம், பொருளாதார மையங்கள், 53 அதிநவீன நுட்ப உருவாக்க கேந்திரங்கள் மற்றும் 15 எல்லையடங்கிய பொருளாதார கூட்டுறவு மையங்கள் இருக்கின்றன.

பெரும்பாலான மண்டலங்களில் ஒரு நிறுவனம் துவக்குவது என்பது பரம சுலபம். அந்த ஊர் கார்ப்பரேட், நிறுவன விதிகளிலிருந்து பல விலக்குகள் மண்டலங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு துபாயில் நிறுவனம் தொடங்க ஒரு உள்ளூர் ஆள் கண்டிப்பாகத் தேவை. இதையே ரஸ்-அல்-கைமா, புஜைரா, ஜெபல் அலி மண்டலங்களில் தொடங்க உள்ளூர் ஆள் தேவையில்லை. இந்தியாவிலேயே அமீரகத்தின் வெவ்வேறு குடியரசின் பிரதிநிதிகள், அவர்கள் சார்ந்த மண்டலங்களில் நிறுவனத்தினை துவக்க எல்லா வேலைகளையும் செய்வார்கள். உதாரணத்திற்கு ரஸ்-அல்-கைமாவினுள் ஒரு நிறுவனம் தொடங்க ஆகும் மொத்த செலவு வெறும் ரூ.மூன்று இலட்சம்.

பிரச்சனை இந்த மண்டலங்கள் எதுவும் முழுமையான உள்ளூர் சட்டத்துக்குள் வராது. மண்டலங்கள் போடுவதே வரிகளுக்கு ‘கட்’ அடித்து விட்டு, வெளியே போவதற்கு தான். இது ஒரு இரு முனை கத்தி மாதிரியான பொருளாதார ‘மாடல்’. வரிகள், சுங்கத் தீர்வைகள் இருந்தாலே நம்மாட்கள் அதை ஏமாற்ற வழி கண்டுபிடிப்பார்கள். இல்லையென்றால் கேட்கவா வேண்டும்.

வர்த்தகம் சார்ந்த கருப்புப் பணப் பரிமாற்றம் என்பது கப்பலோட்ட துவங்கிய காலத்தில் ஆரம்பித்தது. எல்லா நாடுகளிலும் கடலுக்கு ஒட்டிய இடம் தான் பின்னாளில் மண்டலங்களாக மாறத் தொடங்கியது. இவைதான் சிங்கப்பூராகவும், துபாயாகவும், ஜிப்ரால்டராகவும், கபானாகவும், அயர்லாந்தாகவும், பனாமாவாகவும் மாறி உலக வர்த்தகத்தின் பெரும்பான்மை வர்த்தகத்தை தங்களுடைய மண்டலங்கள் வழியே ரூட் செய்ய ஆரம்பித்தன.

விலை குறைத்து/அதிகரித்து போடுதல்(under/over invoicing) என்பது உலகின் புராதனத் தொழிலுக்கு அடுத்ததாக நடந்து வரும் தொழில். மண்டலங்களில் இது இன்னமும் அதிகம். ஏனெனில் அங்கே கட்டுப்பாடுகள் குறைவு. நிறுவனம் நடத்துபவர்கள் பற்றி குறைவான தகவல்களே இருக்கும். பெரிய அளவிற்கு செக்கிங் நடக்காது. வெறும் பேப்பர்கள். இன்வாய்ஸ்கள் எல்லாம் வெற்றுப் பேப்பர்கள். அதில் இருப்பதை யாரும் பெரும் கவனமெடுத்து பார்க்க மாட்டார்கள்.

ஒரு வருடம் முன்பு வரை, உபயோகப் படுத்திய பெரிய க்ரேன்களை இந்தியாவில் உபயோகமற்றது (scrap) என்று சொல்லி இலட்சத்தில் வாங்கி கோடிகளில் விற்று, ஒட்டுமொத்த தூத்துக்குடி, திருநெல்வேலி ஏரியாக்களில் மண் அள்ளுகிறார்கள். இது எல்லாமே இப்படி மெனக்கெடாமல்,மண்டலங்களில் சுலபம்.

ரீ-பேக்கேஜிங், ரீ-லேபிலிங் மாதிரியான சமாச்சாரங்களில் தான் பெரும்பணம் கைமாறும். உதாரணத்திற்கு நானொரு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளன். எனக்கு வரும் ஆர்டர் – ஜெபல் அலியில் சரக்கு இறக்கிவிட்டு காசு வாங்கிக் கொள்ளுங்கள். நானும் சரக்கினை அனுப்பி காசு வாங்கிவிடுவேன். ஆட்டம் ஜெபல் அலியில் ஆரம்பிக்கும்.

ஜெபல் அலியில் இறங்கிய சரக்கின் லேபிள்கள் மாற்றப்படும். பேக்கேஜிங் மாறும். நான் உதாரணத்திற்கு ஒரு சட்டை $10 என்று விற்றிருந்தால், விலை வெறும் லேபிள், பேக்கேஜிங் மாற்றியதால் சடாலென $40 என்று மாறும். உண்மையில் என்னிடமிருந்து வாங்கிய அமீரகத்தில் வாங்கிய ஆளின் குறிக்கோள் ஆயத்த ஆடைகள் அல்ல. சிரியா / லெபனானில் இவர் யாருக்காவது ‘வேலைகள்’ செய்திருப்பார். அதற்கான கூலி தான் இது. நான் ஒரு லட்சம் சட்டைகள் அனுப்பியிருந்தால், அது என்னைப் பொறுத்தவரை $1 மில்லியன். ஆனால், வெறும் லேபிள்/பேக்கேஜிங் மாற்றி, விலை அதிகரித்து மாற்றி, அதுவே சிரியா / லெபனானில் $4 மில்லியனுக்கு போகும். எனக்கு சேர வேண்டிய ஒரு மில்லியன் போக, மீதம் இருக்கிற $3 மில்லியன் வெள்ளையாகிவிட்டது. ஏனெனில் இது ஏற்றுமதியில் சம்பாதித்தப் பணம்.

துபாயில் வரிகள் கிடையாது. நேரடியாக அதை வங்கியிலிருந்து காசாய் மாற்றி யாருக்கு வேண்டுமானாலும் தரலாம். $3 மில்லியன், முப்பது வழிகளில், முன்னூறு பேர்களுக்கு வெறும் 30 நிமிஷத்தில் போய்விடும். மேலே சொன்னது ஒரு சின்ன சாம்பிள். ஒரு வருடத்தில் துபாய் மண்டலங்கள் மட்டும் குறைந்தப் பட்சம் பல பில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை செய்யும். அதில் 10-20% இந்த மாதிரி வெளுப்பாக்கி, இஸ்திரி போடும் வேலை என்று கொண்டால், அதுவே குறைந்தப்பட்சம் $200 மில்லியன் டாலர்கள் ஒரு பில்லியனுக்கு. கிட்டத்திட்ட ரூ.880 கோடிகள். போதாதா.

போன வாரம் எழுதிய மென்பொருளுக்கும், மண்டலங்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. மென்பொருளில் ஒரளவிற்கு மேல் கை வைக்க முடியாது. ஆனால் மண்டலங்களில் அதை செய்ய முடியும். வருடத்திற்கு $400 பில்லியன் பரிவர்த்தனை நடக்கும் இடத்தில் சில பல பில்லியன் டாலர்கள் வெளுக்கப்பட்டால் யார் கவலைப்படப் போகிறார்கள்?

இந்தியாவில் பொருளாதார சுதந்திரம் என்று வலதுசாரி அறிவுஜீவிகள் கோஷம் போட்டு, கட்டற்ற வர்த்தக மண்டலங்களையும், சிறப்புப் பொருளாதார மையங்களையும் வளர்க்க நினைக்கிறார்கள். இதன் முழுமையான ஆழம தெரியாமல் காலைவிட்டால், பின்னாளில் தொப்பலாய் கரை ஒதுங்குவோம். ஒரே மகிழ்ச்சி, போன பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி சிறப்புப் பொருளாதார மையங்களுக்கும் வரி உண்டு என்று சொன்னது தான்.

மண்டலங்கள், மையங்கள், சிறப்பு சலுகை இடங்கள் என நாட்டின் பொருளாதாரத்தினைப் பெருக்க செய்யும் எல்லா விஷயங்களிலும் உள்ளூர ஒரு அபாயமிருக்கிறது என்பதை உணர வேண்டும். கராச்சி, பாகிஸ்தான் ஒரு முக்கியமான இடம். அமெரிக்காவில் இதை ஹார்வேர்டில் முதல் வகுப்பில் பாஸ் பண்ணிய ஆட்கள் பனாமா வழியாக விளையாடிய கதை கூகிளிட்டால் ஊர் சிரிக்கும்.

அடிப்படையில் கட்டற்றது என்று சொல்லும் எல்லா விஷயங்களின் உள்ளிருக்கும், கட்டற்ற சுதந்திரமும், எல்லைகளற்ற செளகர்யங்களும் பெரும்பாலான சமயங்களில் தவறாகவே பயன்படுத்தப் படுகிறது. பெரும்பாலான உலகளாவிய மண்டலங்களில் கருப்புப் பண கண்டறிதல், தணிக்கை, செயல்முறைகள், விதிகள் என எதுவும் தெளிவாக செய்யப்படுவதில்லை.

இன்னொரு அடிப்படைப் பிரச்சனை, ஒரு மண்டலம் தங்களின் தணிக்கையினை கடுமையாக்கினால், நிறுவனங்கள் உடனடியாக அடுத்த மண்டலத்துக்கு தாவி விடும். மண்டலங்களுக்கு இது பெரிய வாடிக்கையாளன், லாபம், சர்வைவல் பிரச்சனை. ஆக, எந்த மண்டலமும் வெளியே தாங்கள் எல்லாம் கடுமையாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னாலும், உள்ளுக்குள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

கரன்சிகள் இன்னொரு பிரச்சனை. பெரும்பாலான மண்டலங்களில் நடக்கும் பரிவர்த்தனைகள் உள்ளூர் கரன்சிகளில் நடப்பதில்லை. அது அமெரிக்க டாலர், யூரோ, சீன ரென்பி, ஜப்பானிய யென், ஸ்விஸ் ப்ராங்க் என நீளும். இது பல்வேறு வங்கிகளுக்கு அல்வா. ஒவ்வொரு கரன்சி மாற்றத்திற்கும் வரும் கமிஷனில் தான் பல டெஸ்குகளில் மேனேஜர்கள், தரகர்கள் தங்களின் சொத்தினை பெருக்குகிறார்கள். அவர்களுக்கு பணம் எப்படி வருகிறது, போகிறது என்கிற கவலையில்லை. பரிவர்த்தனைகள் தான் முக்கியம். இந்த கரன்சிகளை அடிக்கும் நாடுகளுக்கும் இது முக்கியம். ஆக உலக வர்த்தகத்தினூடே கருப்புப் பணப் பரிமாற்றம், வர்த்தகமும் நடக்கும். இதை தடுத்தாட்கொள்வது கடினம்.

கட்டற்ற வர்த்தகமே தவறு என்று சொல்லுதல் முட்டாள்தனம். ஆனால் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் தெரிந்தும், தெரியாமலும் உலகின் மிகப்பெரிய கருப்புப் பண வாய்க்காலாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

கல்லா நிரம்பும்……….

கருப்பு வெள்ளை கீ போர்ட்கள்

மென்பொருள் துறை. இந்தியாவில் இன்றைக்கு default ஆன விஷயம். மென்பொருளில் இல்லாமல் வேறு துறைகளில் இருந்தால் நாம் ஒரு படி கீழே. பெண்கள் சாப்ட்வேர் மாப்பிள்ளைகளுக்காகவும், ஆண்கள் சாப்ட்வேர் பெண்களுக்காகவும் வாழ்க்கையினை நிர்ணயித்துக் கொண்ட வேகம். ஜங்க் புட், பிட்சா, ஆண் பெண் பேதமின்மை, 14 மணி நேர வேலை, ஜீன்ஸ் டீசட்டையில் அலுவலகம், ப்ளாக்பெர்ரியில் வீங்கும் கட்டைவிரல்கள்.

கட்டற்ற சுதந்திரம், இணையத்தில் எல்லைகள் இல்லை. பத்தாவது படித்தவர் பி.ஏ எழுதலாம், எட்டாவது படித்தவர் எம்.ஏ எழுதலாம் என்கிற சீமான் டூட்டோரியல் விளம்பரங்களை பின் தள்ளியதில் முக்கிய பங்கு கணினி பயிற்சி நிறுவனங்களுக்கு. ஜாவா, டாட் நெட், சி ஷார்ப், ஆரகிள், எஸ் ஏ பி என எழுத்து இடியாப்பத்தில் முழி பிதுங்கி, ரேடியேஷன் தாங்கிக் கொண்டு ஒரு தலைமுறையே கணினி முன்பாக தன் எதிர்காலத்தை செதுக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மாநிலங்களும், நகரங்களும் அடுத்த தெருவாய் உருமாறி, நிறம் மாறி, சிகாகோ சிந்தாதரிப்பேட்டையாகவும், நியுயார்க் நங்கநல்லூராகவும், பாஸ்டன் பாலவாக்கம் பக்கத்திலும் வர செய்த துறை.  எட்டாவது படித்தவர் எஸ் ஏ பி படித்து கொஞ்சம் முக்கி முனங்கி தேறினால், அடுத்த மூன்று வருடங்களில் ’சியாட்டில் உங்களை வரவேற்கிறது’ போர்டினை, கையில் மினரல் தண்ணீர் பாட்டிலோடு கடக்கலாம். 🙂  கீக் (Geek) என்பது செக்ஸியாய் மாறிப் போனது கடந்த பத்தாண்டுகளில் தான்.

எல்லாமே ஒரு பெட்டி, செர்வர், கொஞ்சம் மூளை, நிறைய லாபம், உலகமுழுக்க வர்த்தகம் என விரியும் நிகர்மெய் சமுத்திரத்தில் கருப்புப் பண முதலைகள் நன்றாகவே நீந்துகின்றன.

மென்பொருள் என்பது பைனரியில் உருவான, ஒரு குறிப்பிட்ட வேலையை சிறப்புறவும், தொடர்ச்சியாகவும் செய்யக் கூடிய ஒரு வழி. மென்பொருள் அரிதான காலத்தில் ஆரம்பித்த இன்போஸிஸ் இன்றைக்கு பல பில்லியன் டாலர் நிறுவனம். மென்பொருளுக்கு விலை நிர்ணயிப்பது என்பது கடினம். ஏனெனில், எல்லாமே டிஜிட்டல் பைட்டுகள், இதன் சரியான விலையினை கண்டறிவதென்பது திருப்பதியில் மொட்டை தேடும் நிலை. ஒரு மென்பொருளின் விலை என்பது அதை வாங்குபவரின் திறனைப் பொருத்தது. இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது நம் கதை.

துபாயிலிருந்து பெரும்பணத்தினை இந்தியாவுக்கு மாற்றவேண்டும். வேறு எந்த வழியில் வந்தாலும் பிக்கல் பிடுங்கல்கள் அதிகம். வழியென்ன?

முதல்படி, இந்தியாவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தினை முதலில் வாங்க வேண்டும் அல்லது தொடங்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அது இருந்தால் இன்னமும் நல்லது. இந்த மென்பொருள் நிறுவனத்தின் வேலையே துபாய் முதலாளியின் பணத்தினை மாற்றுவது. நுட்பம் தெரியவில்லையெனில் பரவாயில்லை. ஊரில் சல்லிசாக கிடைக்கும் ஏதாவது ஒரு ஈ ஆர் பி, சி ஆர் எம், எஸ் ஏ பி இம்ப்ளிமெண்டேஷன் என்பது மாதிரியான ஜல்லிகளில் ஏதேனுமொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது வெளிப்பூச்சுக்கு. இது முதல் படி.

இரண்டாம் படி, துபாய் நிறுவனம் இந்தியாவில் யார் யாருக்கு காசு கொடுக்க வேண்டுமோ, அதை ஒரு லிஸ்ட் போடும். அந்த நிறுவனங்கள் எல்லாம் வெற்று இன்வாய்ஸில் இந்த மென்பொருள் நிறுவனத்துக்கு பொருளோ / சேவையோ அளிப்பார்கள். மென்பொருள் நிறுவனம், அத்தனை நிறுவனங்களிடத்திலும் கடன் வசதி பெற்றிருக்கும்.

மூன்றாம் படி, துபாய் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தினை உலக வர்த்தகத்தில் இருக்கும் ஜாம்பவான்களுக்கு ஈடாய் மாற்ற முதலில் எல்லாவற்றையும் கணினிமயமாக்க முனைவார்கள். சந்தையில் கிடைக்கும் விலையை விட, 50-100 மடங்கு விலையினை இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு கொடுப்பார்கள். இந்தியாவில் இருக்கும் பெருந்தலைகள், விஷயமறிந்தவர்கள் உடனே துபாய்க்கு போய் காண்ட்ராக்ட் போட்டு புர்ஜ் அல் அராபில் தங்கி, ஷாப்பிங் மால்களில் அர்மானி வாங்கி, ரஷ்யப் பெண்களோடு ஜல்சா பண்ணிவிட்டு இந்தியாவுக்கு வயர் ட்ரான்ஸ்பர் செய்து விட்டு தான் திரும்புவார்கள்.

நான்காவது படி, இந்தியாவுக்கு வரும் மொத்தப் பணத்தில் மென்பொருள் நிறுவனத்துக்கு எஞ்சும் பணத்தைத் தவிர மீதமத்தனைத்தும் போய் சேர வேண்டியவர்களுக்கு சரியாக பைசா பாக்கியில்லாமல் போய் சேரும். மென்பொருள் நிறுவனம், கடன் வசதி பெற்ற நிறுவனங்கள் அத்தனைக்கும் காசினை திரும்பக் கொடுக்கும். இது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருப்பதால் வரி ஏதும் கட்டத் தேவையில்லை. கேட்டால் அது ஒரு முழுக்க முழுக்க ஏற்றுமதி மட்டுமே செய்யும் நிறுவனம் (EOU – Export Oriented Unit) என்று சட்டத்தினைக் காட்டி, வரவேற்பறையில் காந்தியின் பொன்மொழிகளை ஒட்டியிருப்பார்கள். சத்யமேவ ஜெயதே.

மேலே சொன்னது போனத் தலைமுறை டெக்னிக். ஆனால் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட முறை இப்போது வந்திருக்கும் ’மென்பொருளை சேவையாக வழங்கல்’ (Software as a Service – SaaS) நிறுவனங்கள் வழியே செய்வது. வெப் 2.0 என்கிற கருத்தாக்கம் பரவ ஆரம்பித்த 2003ல் தொடங்கப் பட்ட மாடல் இது. இதில் யாரும் மென்பொருளை வாங்கத் தேவையில்லை. ஜிமெயில் உபயோகிப்பது மாதிரி, நேரடியாக தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு காசு. இதை வைத்துக் கொண்டு தான் சேல்ஸ்போர்ஸ் மாதிரியான நிறுவனங்கள் நேர்மையாகவே பில்லியன் டாலர் நிறுவனங்களாக மாறியிருக்கின்றன.

இது லேட்டஸ்ட் வழி. ஏதேனும் ஒரு உதவாத சேவையை இணையம் வழியே தருவதாக சொல்வது. அதற்கு ஊரெங்கும் சந்தாதாரர்கள் இருப்பதாக சொல்லிக் கொள்வது. துர்க்மெனிஸ்தான், லாட்டிவியா, செக் குடியரசு என்று சோற்றுக்கே லாட்டரியடிக்கும் ஊர்களிலிருந்தெல்லாம் சந்தாதாரர்கள் இருப்பார்கள். சின்ன, சின்ன பரிவர்த்தனைகளாக மாற்றி, ஊரெங்கும் காசினை வெஸ்டர்ன் யூனியன் மாதிரி சேவை வழியாக அனுப்பி, சந்தாதாரர்களாக்கி அவர்கள் உங்கள் சேவையினை உபயோகிக்காமலேயே காசு கட்டுவார்கள். இது தான் அடிப்படை.

பத்தாயிரம் குறு நிறுவனங்கள். ஒரு குறு நிறுவனத்தில் 10 நபர்கள். ஒரு நபருக்கு $25 என்றுக் கொண்டால் ஒரு மாதத்துக்கு $2,500,000 [கிட்டத்திட்ட 11 கோடி] வெளுப்பாக்கலாம். கிட்டத்திட்ட 7 பில்லியன் மக்கள் கொண்ட உலகில், இந்த சேவையை ’நம்ப’ பத்தாயிரம் நிறுவனங்கள் இருக்க முடியாதா என்ன ? ஆக ஒரு வருடத்துக்கு 132 கோடி எவ்விதமான கேள்வியும் கேட்காமல் வங்கியில் இருக்கும். வியாபார வருமானம் என்று நாகூசாமல் பொய் சொல்லலாம்.’நேர்மையாய் சம்பாதித்த காசு’.யாரும் கேள்வியே கேட்க முடியாது. அதையும் எதாவது ஒரு குறை வரி தேசத்தில் வைத்திருந்தால் செளகர்யம். வரியும் மிச்சம்.

இதையே வேறு விதமாகவும் செய்ய முடியும். உலக தீவிரவாத குழுக்கள் இப்போது உலகமெங்கும் பணத்தினை பரிமாற்றம் செய்ய நம்புவது எதுவாக இருக்க முடியும் ? வங்கிகள் – மாட்டிக் கொள்வார்கள். வெஸ்டர்ன் யூனியன் – அதிகமாக கேள்விகள் கேட்பார்கள். ஹவாலா – ஏற்கனவே ப்ளாக் லிஸ்டில் இருக்கக் கூடிய பரிவர்த்தனை. பின் எப்படி? இருக்கவே இருக்கிறது கூகிள்.

கூகிளின் வருமானம், கூகிள் தேடல் பக்கத்தில் வலதுப் பக்கத்தில் வரும் Ad Words மற்றும் பல்வேறு வலைப்பதிவுகள், தளங்கள், சமூக வலைப் பின்னல்களில் வரும் Ad Sense. இதுப் பற்றி விரிவாகத் தெரிந்துக் கொள்ள கூகிளை தடவுங்கள். சுருக்கமாக, நீங்கள் தேடும் சொல்லுக்கு இணையான விளம்பரங்கள் தான் இவை. இங்கிருந்து தான் உலகின் மிகப் பெரிய தீவிரவாத, போதைப் பொருள் வங்கி இயங்குகிறது.

முதல் படி, யாருக்கு பணம் வரவேண்டுமோ, அவர்கள் ஒரு வலைப்பதிவு தொடங்குவார்கள். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட குறிச் சொற்களை வைத்து தான் இது இருக்கும். ஒரு ப்ரெளசிங் சென்டரிலிருந்து ப்ராக்சி மாற்றி, ஐபி மாற்றி ஒரு கணினியே பல்வேறு ஐபிகளிலிருந்து ட்ராபிக் வருமாறு செய்யமுடியும். இதை உக்ரேனிய, ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய டீனேஜர்களிடத்தில் $100 கொடுத்தால் சர்வ சாதாரணமாக செய்வார்கள். 3 மாதங்களில் அந்த வலைப்பதிவுக்கு ட்ராபிக் ஏறிவிடும்.

தீவிரவாத, போதைப் பொருள் குழுக்கள் இதற்கென்றே இருக்கிறது. அவர்களும் ஒரு ஒன்றுக்கும் உதவாத இணையப் பக்கத்தினை வைத்துக் கொண்டு, சரியாக போன வலைப்பதிவு பயன்படுத்திய குறிச் சொற்களையே பயன்படுத்துவார்கள். கூகிளின் அல்காரிதம் தன் வேலையை சரியாக செய்து விட்டு, அடுத்த வேலையை பார்க்கப் போய்விடும். வலைப்பதிவில் இந்த இணையப் பக்கம் பற்றிய விளம்பரம் வரும். இது Ad Sense. இதில் வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட % கூகிளுக்கும், மீதம் எந்த இணையப் பக்கம்/பதிவில் ’கிளிக்’கப்பட்டதோ அவர்களுக்கு போகும். இது போதாதா. 30%+ கூகிளுக்குப் போனாலும், மீதப் பணத்தினை பைசா குறைவில்லாமல், நேரடியாக வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். அமெரிக்க டாலர் செக். கூகிளிடமிருந்து. பவுன்ஸாகாது. கணக்கில் பணம் ஏறிவிடும். கேள்விகள் இல்லை. பணம் கைமாற்றியாகிவிட்டது. கூகிள் போதும். இதில் Ad Sense னை எப்படி ஏமாற்றுவது என்று கூகிளில் தேடினாலே கிடைக்கும்.

மென்பொருள், இணையம் என விரியும் விர்ட்சுவல் வெளிகளில் யாருக்கும் யாரையும் தெரியாது. அடுத்த பக்கம் இருப்பவர் – ஆணா, பெண்ணா, அஃறிணையா என்று கண்டறிவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இது மாயவெளி. எல்லாமே சாத்தியம். நீங்கள் கண்டறிந்து முடிவதற்குள், பணம் பைட்டுகளாக மாறி, காண்டம் மாற்றும் நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் தாவியிருக்கும். இது எதிர்காலத்தில் இன்னும் விரிவடையும் வாய்ப்புகளதிகம்.

மேற்சொன்னதில் முக்கியமானது சிறப்புப் பொருளாதார மண்டலம். சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economic Zone – SEZ), கட்டற்ற வர்த்தக மண்டலம் (Free Trade Zone-FTZ), ஏற்றுமதி மண்டல முனையம் (Export Processing Zone – EPZ) என விரியும் இடங்களிலிருந்து பணம் வெளுக்கப்படுவது அடுத்த வாரம்.

கல்லா நிரம்பும்…..

O

நரேன்

காப்பீட்டு நிறுவனமே காப்பு!

We have seen how lax standards, excesses, or fraud can cause disproportinoate losses to insurance funds. – Alan Greenspan

காப்பீடு இன்றைக்கு ஒரு பெரிய துறை. ஆனால் அதன் ஆரம்பங்கள் சாதாரணமானவை. கப்பலில் வணிகம் செய்யும் வணிகர்கள், இயற்கை சீற்றங்களினால் பொருட்கள் பாதிக்கப்பட்டால் என்னவாகும் என்று யோசித்ததில் வந்தது தான் காப்பீட்டின் ஆரம்பம். இன்றைக்கு நீங்கள் நினைக்கும் எல்லா விஷயங்களுக்கும் காப்பீடு உண்டு.

சுருக்கமாய், காப்பீடு என்பது நீங்கள் எடுக்கும் ஒரு ரிஸ்க்’கின் பாதிப்புகளைக் குறைப்பது. எல்லா விதமான காப்பீடுகளுக்கும் இது தான் அடிப்படை. வாழ்க்கை சம்பந்தமான (Life), மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் சம்பந்தமான (non-life) என இரண்டு விதமாய் கழுகுப் பார்வையாய் காப்பீட்டினை பிரிக்கலாம்.

கருப்புப் பணம் இரண்டிலும் புழங்குகிறது. இரண்டின் வழியாகவும் உள்வந்து வெளியேறுகிறது. முதலில் லைஃப் காப்பீட்டினை எடுத்துக் கொள்ளலாம். இந்த தொடரின் ஆரம்பத்திலேயே எண்டோண்மெண்ட் பாலிசியில் என்ன கோல்மால் செய்யலாம் என்பதைப் பதிவு செய்திருப்போம்.

இப்போது சிங்கிள் ப்ரீமியம் பாலிசியில் நடக்கும் பணப் பரிமாற்றத்தினைப் பார்ப்போம். நாடு முழுவதும் இன்றைக்கு அரசு (எல் ஐ சி) மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் கடைபரப்பி இருக்கின்றன. எந்தவொரு பாலிசி இந்தியாவில் எடுத்தாலும், அதற்கு 15 நாள் காலக்கெடு இருக்கிறது. 15 நாட்களுக்குள் உங்களுக்கு அந்த பாலிசியின் கூறுகள், காப்பீடு தொகை, இன்னபிற ரைய்டர்கள் பிடிக்காமல் போனால், நீங்கள் அந்த காப்பீட்டினைத் திருப்பி விடலாம். நீங்கள் கொடுத்த பணம் அமைப்புரீதியான காசினை மட்டும் கழித்துக் கொண்டு திரும்பக் கொடுக்கப் படும்.

ஒரு தொழிலதிபர் ரூ.10 இலட்சத்தினை வெளுப்பாக்க நினைத்தால், அவர் செய்ய வேண்டியது சுலபம். முதலில் 3-4 தனியார் காப்பீடு தரகர்களை அழைக்க வேண்டும். இப்போது பெரும்பாலான தரகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீடு நிறுவனர்களுக்கு முகவர்களாக இருக்கிறார்கள். அந்த தொழிலதிபருக்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு செய்யவேண்டும், அதை சிங்கிள் ப்ரீமியம் பாலிசியாக எடுக்க விருப்பம் என்று சொல்லலாம். எல்லாரும் உடனடியாக அவரவர் கால்குலேட்டர்களில் கணக்குப் போட்டு நீங்கள் ரூ.10 இலட்சத்துக்கு கூட குறைய செலுத்தினால், அடுத்த 25 வருடங்களுக்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு கிடைக்குமென்கிற கணக்கு சொல்வார்கள். முகவர்களைப் பொறுத்தவரை ரூ.10 இலட்சம் ப்ரீமியம் என்பது ஜாக்பாட்.

இப்போது தொழிலதிபர் அந்தப் பத்தில் மூன்று இலட்ச ரூபாயை மட்டுமே வங்கிக் கணக்காக தரமுடியுமென்றும் மீதத்தினை பணமாகத் தருகிறேன் என்றும் சொல்லுவார். முகவர்கள் மென்று முழுங்குவார்கள். ஏனெனில் ரூ.50,000க்கு மேல் ப்ரீமியம் கட்டினால் அதில் PAN குறிப்பிடப் படவேண்டும் என்பது IRDA விதி. அதற்கு சுற்றல் வழி ரூ.49,999 பணமாக எடுத்து வெவ்வேறு நாட்களில் காப்பீடு நிறுவனத்துக்கு கட்டுவது. இந்த வெவ்வேறு நாட்களின் பணத்தினை சின்ன பாலிசிகளில் போடுவதாக கணக்கு காட்டுவது.

மொத்தமாய் மீதம் 7 இலட்சம் சேர்ந்தபின், சின்ன பாலிசி எடுக்காமல், பெரியதாய் ஒற்றை பாலிசி எடுக்க வைப்பதாக சொல்லி, காப்பீடு நிறுவனத்துக்கு முகவர்கள் தொழிலதிபரின் பணத்தினை மாற்றிவிடுவார்கள். பாலிசியும் வரும். பாலிசி கைக்கு வந்த நாளிலிருந்து 15 நாட்கள் வரை வாடிக்கையாளருக்கு உரிமையுண்டு. இந்த 15 நாளில் அவர் பாலிசி தேவையில்லை என்று திருப்பிவிடுவார். காப்பீடு நிறுவனமும் வாடிக்கையாளருக்கு செக் அனுப்பிவிடும். ரூ 7 இலட்சம் பணமாகக் கட்டியது, இப்போது காப்பீடு நிறுவனத்தாலேயே செக்’காக திருப்பப்பட்டு வங்கியில் வெளுப்பாக கணக்கு காட்டப்படும். தொழிலதிபர் ஸ்மார்ட்டாக இருந்தால், ஒரே நேரத்தில் பல தனியார் காப்பீடு நிறுவனங்களில் இடைவெளி விட்டு காசைப் போட்டு காசைத் திருப்பி வெளுப்பாக்கி விட்டு எஸ்ஸாவார்.

இதையே வேறு மாதிரியும் செய்யலாம். வங்கியில் இருக்கும் பணத்தினைக் கட்டி பாலிசியை எடுத்து விட்டு, அந்த பாலிசியின் மீது ஒரு கடன் எடுக்கலாம். அந்த கடன் பத்திரம், பாலிசியின் மீதிருக்கும். மேற்சொன்ன ரூ.10 இலட்சம் ப்ரீமியமே எடுத்தாலும், அதன்மீது 60-70% கடன் வாங்கலாம். ஏனெனில், காப்பீடு நிறுவனம் ஏற்கனவே தொழிலதிபரிடமிருந்து பணத்தினைப் பெற்று விட்டது. கடன் வாங்கினால், அது காப்பீடு நிறுவனத்திலிருந்து நேரடியாக அவரின் வங்கிக்கு செக்காகவோ, வங்கிப் பரிவர்த்தனையாகவோ வந்துவிடும். அதன் தவணைகளை கேஷ்ஷாக கட்டலாம். தனி முதலாளி நிறுவனமாகவோ, தனியார் நிறுவன இயக்குநராகவோ இருந்தால், அந்த கடனை liability யாக பாலன்ஸ் ஷீட்டில் காட்டி செலவினையும் குறைக்கலாம். இது கருப்பினை நேரடியாக ஒரே சமயத்தில் வெளுக்காமல், சட்டப்பூர்வமாக சம்பாதித்த பணத்தினை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு பணத்தினை வெளுப்பாக்கும் வழி.

மேலே சொன்னது தனியார் தன்னுடைய கருப்புப் பணத்தினை மாற்றும் வழி. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு எப்படி மாற்றுவது?

முதலில் கருப்புப்பணத்தினைப் பெற்றவர் ஒரு ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தினைத் துவங்குவார். அந்த நிறுவனம் நைஜீரியா மாதிரியான ஏதாவது ஒரு ஆப்ரிக்க நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடும். கருப்புப் பணம் வைத்திருப்பவர் லண்டனிலோ, துபாயிலோ, சிங்கப்பூரிலோ இருக்கும் ஏதாவது ஒரு சின்ன காப்பீடு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடுவார். கப்பலில் போகும்போது புயலோ, இயற்கைச் சீற்றங்களினாலோ, பைரைட்களாலோ, அல்லது கப்பல் நிறுவனத்தின் உதாசீனத்தாலோ ஏதாவது ஆகி, வாங்குபவருக்கு பொருள் சரியாகப் போய் சேரவில்லையென்றால், விற்றவருக்கு நஷ்டம். அந்த நஷ்டத்தினை ஈடுகட்ட காப்பீடு அவசியம். அந்த காப்பீட்டை தான் இந்த காப்பீடு நிறுவனத்தில் எடுப்பார்கள்.

பெரும்பாலான சின்ன காப்பீடு நிறுவனங்கள் இதற்கு ஒத்துக் கொள்ளும். இந்த நிறுவனங்கள் உடனடியாக தங்களுடைய ரிஸ்க்கினை குறைத்துக் கொள்ள, சுவிட்சர்லாந்து மாதிரியான ஊர்களில் இருக்கும் Re-insurance நிறுவனங்களில் எடுத்த காப்பீட்டின் மீது மறு காப்பீடு எடுத்துக் கொள்ளும். முக்கால்வாசி சின்ன காப்பீடு நிறுவனங்கள், இந்த மாதிரி பணத்தினை கடத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. அவர்கள் காப்பீட்டினை விற்றவருக்குக் கொடுப்பார்கள். கூடவே, அவரிடமிருந்து காப்பீடு தொகைக்கு ஈடான, அல்லது மேலான பணத்திற்கு ஏதாவது ஒரு முதலீடு சமாச்சாரத்தினை விற்பார்கள். அந்த முதலீடு சமாச்சாரம் குப்பையாய் உலகப் பொருளாதாரம் அடுத்த மூன்று மாதங்களில் 6% ஏறும் என்பது மாதிரியான அபத்தங்கள் நிரம்பியிருக்கும். அதற்கு தேவையான முதலீட்டினை, பணமாகவே விற்பவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

ஆக, ஏற்றுமதி செய்பவர் காப்பீடு எடுத்து விட்டார். முதலீடு சமாச்சாரத்தினை காப்பீடு நிறுவனத்தில் எடுத்துவிட்டார். கப்பல் சர்வநிச்சயமாக எங்கேனும் தரை தட்டும்; எஞ்சினில் தண்ணீர் போய் முழுகும்; பைரெட்கள் கடத்துவார்கள் என்றெல்லாம் காப்பீடு நிறுவனத்துக்கு செய்தியும், அதன் தரவுகளும் வரும். காப்பீட்டின் தொகை ஏற்றுமதி செய்பவரின் வங்கிக்கு வரும். இறக்குமதி செய்பவர் வேண்டுமென்றே ஒப்பந்தத்தில், இந்த வணிகம் நடைபெறாவிட்டால் பொருளின் மதிப்புக்கு ஈடான பணத்தினை தரவேண்டும் என்று போட்டிருப்பார்கள். ஏற்றுமதி செய்பவர் காப்பீடு நிறுவனத்திலிருந்து வந்த காசினை வங்கி வழியாகவே இறக்குமதி நிறுவனத்துக்கு தருவார்கள். காப்பிடு நிறுவனம், ஏற்றுமதி நிறுவனத்துக்கு முதலீடு சமாச்சாரம் நஷ்டமானதாக கணக்கு சொல்லும். ரீ இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அந்த பணம் வேறு விதமான டெபாசிட் தொகையாக போயிருக்கும்.

மொத்தத்தில் இதில் பங்குபெற்ற நான்கு நிறுவனங்களும் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் ‘நேர்மையான வழியில்’ வந்ததாக ஆடிட்டரிடம் சான்றிதழ் பெற்று சரக்கடிக்கப் போய்விடுவார்கள். மில்லியன் கணக்கில் வருடந்தோறும் இந்த வழியில் பணம் காப்பீடு டோபிகானாவில் வெளுப்பாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

1990களுக்கு பின்னான காலக்கட்டங்களில் புதியதாய் surety bond என்றொரு சமாச்சாரம் காப்பீடு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. ஸ்யூரிட்டி கடன் பத்திரமென்பது காப்பீடு நிறுவனம் மூன்றாம் நபராய் உள்நுழைந்து இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ரிஸ்க்கையும், இறுக்கத்தையும் குறைக்க உதவுவது.

உதாரணத்துக்கு, உங்களிடத்தில் நிலம் இருக்கிறது. ஒரு கட்டுமானப் பொறியாளர் அந்த நிலத்தில் கட்டிடம் கட்டி, ப்ளாட் போட்டு விற்க நினைக்கிறார். ஆனால் அவரிடம் இருக்கும் பணம், கட்டிடம் கட்டி விற்க மட்டுமே இருக்கிறது. ஆக இருவருக்கும் இடையில் பணப் பரிவர்த்தனை என்பது கட்டிடம் கட்டி முடிந்து, விற்ற பின்பு தான் பணத்தினை பங்குப் போடமுடியும். இந்நிலையில் நில உரிமையாளரான உங்களுக்கு பாதி கட்டிடத்தில் பொறியாளர் வேறு வேலை பார்க்கப் போய்விட்டால் என்னாவது என்கிற கவலையிருக்கும். அவருக்கு, பாதி கட்டிடத்தில் பண பரிவர்த்தனைகள் நடக்காத பட்சத்தில், உரிமையாளரான நீங்கள் மனசு மாறிவிட்டால் என்கிற கவலையிருக்கலாம். ஆக உங்களுக்கு வர வேண்டிய பணத்திற்கு என்ன உத்தரவாதம் ?

இந்த உத்தரவாதத்தை தான் ஸ்யுரிட்டி கடன் பத்திரம் வழியாக காப்பீடு நிறுவனம் நில உரிமையாளருக்கு வழங்கும். இதை எடுக்க வேண்டிய பொறுப்பு கட்டுமானப் பொறியாளருடையது. இங்கே தான் மாடர்ன் வெளுப்பாக்கல் ஆரம்பிக்கிறது. காப்பீடு நிறுவனத்தோடு பேசி வைத்துக் கொண்டு ஒப்பந்தம் மீறப்பட்டதாக சொல்லி, காப்பீடு நிறுவனத்தினை பணத்தினைக் கொடுக்க சொல்லலாம். காப்பீடு நிறுவனத்துக்கு பொறியாளரோ, அல்லது உரிமையாளரோ பணத்தினை கேஷாக தரலாம். அதையும் காப்பீடு நிறுவனம் வேறு வகையில் வாங்கிக் கொண்டு பரிவர்த்தனை செய்யலாம்.

இதன் லேட்டஸ்ட் இந்திய உதாரணம் மெடிக்ளெய்ம். உதாரணத்திற்கு பணத்தினை நேரடியாகக் கட்டினால் ரூ.250,000 ஆகக் கூடிய ஒரு சிகிச்சை, மெடிக்ளெய்ம் வழியே போகும்போது ரூ.450,000 ஆக காப்பீடு நிறுவனத்துக்குப் போகும். இதில் சம்பாதிக்கப்படும் கூடுதல் ரூ.200,000 மருத்துவமனைக்கும், அந்த காப்பீட்டில் இருக்கும் நபர்களுக்கும் பங்கு பிரிக்கப்படும். இந்தியாவின் பெரும்பாலான மெடிக்ளெய்ம் தரும் நிறுவனங்கள் ரீ இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் அதிக பணத்தினைக் கொடுத்து அதிக லெவரேஜ்ஜில் இருக்கும் நிறுவனங்கள். பணக்கார நோயாளிகள் முதலில் காசு கட்டி விட்டு, பின் தங்களின் மெடிக்ளெய்மை கொடுப்பதும் உண்டு. அது மருத்துவமனைக்கும், நோயாளிக்கும் இருக்கக் கூடிய நெருக்கத்தைப் பொறுத்து மாறக் கூடியது. காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வரும் பணத்தினை நோயாளி, கமிஷனை மருத்துவமனைக்கு வெட்டி விட்டு, எடுத்துக் கொள்வார். அவர் கணக்கில் அது காப்பீடு நிறுவனத்திலிருந்து வரும் பணம். எவ்விதமான கேள்வியும் இல்லை. உடலுக்கு உடலையும் பார்த்தாச்சு; பணம் வெளுப்பாச்சு.

காப்பீட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைகள் இன்னுமதிகம். ஆனால், அது சிக்கலான வலைப்பின்னல். இது தாண்டி, கப்பல் வாங்குவது, உயர்தர கார் வாங்குவது, உல்லாச படகுகளை குத்தகைக்கு எடுப்பது, காசினோக்களின் உள்ளிருக்கும் பணத்தினை பாதுகாப்பது என காப்பீடு புழங்கும் இடங்கள் அதிகம். இதில் எல்லாவற்றிலுமே பணத்தினைப் போட்டு எடுப்பதும், அல்லது காப்பீடு நிறுவனத்துக்கே குல்லா போடுவதும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

கல்லா நிரம்பும்………

O

நரேன்

ஆட்டம் பாம் ஆப்ஷன்கள்

Derivatives are the financial weapons of mass destruction – Warren Buffet

வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு தசாம்சமும் ஏதாவது புதிய நிதி முறைகள் கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதில் ஆடும் விளையாட்டில் தான் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள், முதலீட்டு தரகு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. கடந்த 40 வருடங்களில் கண்டறியப்பட்ட பல்வேறு நிதி முறைமைகள், உதவி செய்தது 40% என்றால் உபத்திரவம் கொடுத்தது 60%. இதில் பரிமாற்றப்படும் பணம், இதன் தரகு கமிஷன்கள், இதை செய்யும் சட்ட வழக்குரைஞர்களின் பங்கு, தணிக்கை செய்யும் ஆடிட்டர்கள், பணம் பரிவர்த்தனை செய்யப்படும் சந்தைகள், வரிகளற்ற சொர்க்கங்கள் என உலவும் கதாபாத்திரங்கள் ஒரு தனி உலகம். தொழில்மயமாக்கப்பட்ட பின் வந்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட சட்டபூர்வமான மாபியா கூட்டமிது.

டெரிவேட்டிவ்கள்* என்பது 80களுக்கு பின் நிதி வல்லுநர்களும், பெரு தரகு/முதலீட்டு நிறுவனங்களும் கண்டறிந்தவை. 90களில் பிஷர் ப்ளாக் & மைரோன் ஸோல்ஸ் என்கிற பொருளாதார நிபுணர்கள், இந்த ஆப்ஷன்களை ஆராய்ந்து வெளியிட்ட தியரி தான் இன்று வரைக்கும் ப்ளாக் – ஷோல்ஸ் தியரி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இவர்கள் 1997-இல் பொருளாதார நோபல் பரிசு பெற்றார்கள். இதை வைத்துக் கொண்டு கேம் ஆடிய லாங் டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட் நிறுவனம் 2000களின் பிற்பகுதியில் வீணாய் போய் பில்லியன்களில் பணம் இழந்தது. டெரிவேட்டிவ்கள் பற்றியும், கணினி சார்ந்த பங்கு வர்த்தகங்கள் பற்றியும் தெளிவாய் தெரிய Quants: The Alchemists of Wall Street என்கிற ஆவணப்படம் பாருங்கள்.

சுருக்கமாய், ஒரு பொருள், சேவையினை அடிப்படையாகக் கொண்டு, அதிலிருந்து அதன் கூறுகளை வைத்துக் கொண்டு, அதன் மேல் கட்டி எழுப்பப்படும் நிதி சார்ந்த வர்த்தக ஒலைகள் தான் டெரிவேடிவ்கள் (Derive from an underlying assets are called Derivatives) இதை தான் இந்தியாவில் யூக பேர வணிகம் என்கிற பெயரில் கங்கணம் கட்டிக் கொண்டு அடிக்கிறார்கள்.

2008 பொருளாதார மந்தம் ஏற்பட இந்த டெரிவேடிவ்களும், அந்த டெரிவேடிவ்களின் மீதான காப்பீடும் தான் காரணம். லேமென் ப்ரதர்ஸ் கீழே போனதற்கும், ஏஐஜியின் அரசாங்க கையேந்தலுக்கும் இதுவே அடிப்படை. டெரிவேடிவ்களை வைத்துக் கொண்டு விளையாடுவது என்பது அலைகள் வரும் ஒரத்தில் கட்டப்படும் மணல் வீடுகள். டெரிவேடிவ்கள் ஆட்டம் பாம்கள். வைத்துக் கொண்டு வீட்டையும் தகர்க்கலாம்; பாறைகளையும் உடைக்கலாம். உலகில் பாறைகளை உடைப்பவர்கள் குறைவு.

டெரிவேட்டிவ்களின் அடிப்படையே அது உருவாதன் உள்ளிருக்கும் சமாச்சாரம். இயற்கை வளங்கள், கரன்சி, நாட்டின் வட்டி விகிதங்கள் என எல்லாவற்றின் மேலேயும் டெரிவேட்டிவ் ஆப்ஷன்களை எழுப்பலாம். ஆக, கொஞ்சம் அடிப்படைகள் அசைந்தாலும் டெரிவேட்டிவ்களின் மூலம் மாறும் பணம் எக்கச்சக்கமாய் மாறும். உதாரணத்திற்கு கால் & புட் (Call & Put Options) என்றொரு நிதிவிஷயமிருக்கிறது.

ஆப்ஷன்கள் என்பவை ஒரு விதமான டெரிவேடிவ்கள். கால் ஆப்ஷன் என்பது ஆப்ஷன் விற்பவரிடம் வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட தொகையில் எதிர்காலத்தில் ஒரு டெரிவேட்டிவினை வாங்க போடும் ஒப்பந்தம். நன்றாக கவனியுங்கள். இது வெறும் ஒப்பந்தம், இதில் மார்ஜின் பணம் கட்டவேண்டும். எதிர்காலத்தில் அவர் சொல்லும் விலைக்கு அதை அவர் வாங்கக் கூடிய உரிமை கால் ஆப்ஷன் வாங்கியவருக்கு உண்டு; ஆனால் வாங்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. இதன் எதிர் தான் புட் ஆப்ஷன். எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்பது. இதுதான் கருப்புப் பணத்தின் ஆரம்பம்.

ஒன்றுக்கும் உதவாத உருப்படாத ஆப்ஷன்களை வாங்கி விற்பது என்பது ரொம்ப சுலபமான, சட்டப்பூர்வமான பண பரிமாற்றம். உ.தா. காசு பெற வேண்டியவர் ஒரு ஆப்ஷனை ஆரம்பிப்பார். எ.கா அரிசி. அடுத்த வாரம் தமிழ்நாட்டில் அரிசியின் விலை கிலோ ரூ.80 ஆகும் என்று வேண்டுமென்றே கால் ஆப்ஷன் எடுத்து, அதன்மேல் ரூ.40-50 இலட்சங்கள் செலுத்தி, அது வீணாகும் போது, அதை பணமாய் ஒரு ஒவர் தி கவுண்டர் (Over the Counter – OTC Exchange)இல் ’செட்டில்’ செய்தால் காசு பெற வேண்டியவருக்கு பணம் நேரடியாக போய்விடும்.

OTC சந்தைகள் இன்னும் செளகர்யம். எவ்விதமான பெரிய சட்டவிதிகளுக்கு (Compliance) உட்படாமல் இருப்பவை. இப்போது இன்னும் வசதி அதிகம். ஆன்லைனிலேயே OTCகள் உண்டு. பணம் இரண்டாவது ‘கிளிக்’கில் டிஜிட்டலாய் கரையும்; அடுத்தவர் கணக்கில் நிறையும். சட்டப்பூர்வமாய் அதை காசு கொடுப்பவர் நட்டக் கணக்கு காட்டலாம். காசு பெற்றவர் அதை சட்டப்பூர்வமாக எடுத்துக் கொண்டு போகலாம். எல்லாம் வங்கிகள், சந்தைகள் வழியே நடக்கும். மேலே சொன்னது ஒரு சாம்பிள். அதே பணத்திற்கு ஒரே நபரால் பல்வேறு எதிர்கால தினங்களில் வெவ்வேறு பண அளவில் எக்கச்சக்கமாக ஆப்ஷன்கள் எடுத்து பல மில்லியன் டாலர்களை மாற்ற முடியும்.

அகமதாபாத்தில் இது சர்வ சாதாரணம். கமாடிட்டி தரகர்களோடு கொஞ்சம் ‘நெருக்கமாய்’ பேசினால் அவர்கள் ராஜபாட்டை விரித்து எல்லா பணத்தையும் மாற்றிக் கொடுப்பார்கள். சிகாகோவில் நண்பர்கள் இருந்தால் போதும், உலகின் எந்த கமாடிடீடிக்கும் வலை விரிக்கலாம். வலை விரிப்பின் வழியே பணம் விக்டோரிய காலத்து ஒவியங்கள் போல தாராள மதர்ப்புடன் போக வேண்டிய இடத்துக்கு போகும். சராசரியாக ஒரு நாளைக்கு உலகெங்கிலும் பல பில்லியன் டாலர் ஆப்ஷன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன; பரிவர்த்தனையாகின்றன; பங்குச் சந்தைகளில் ‘செட்டில்’ செய்யப் படுகின்றன. ஒரு கேள்வியுமில்லை. Business is as usual.

கொசுறு-1: போன வாரம் வாசகர் கமெண்டில் P-Notes என்றழைக்கப்படும் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் பற்றி எழுத சொன்னார். அது நேரடியாக டெரிவேடிவ்களின் கீழ் வராது. அது ஒரு இந்திய அரசு சலுகை. வெளிநாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழி. எவ்விதமான ஆதாரங்களையும், பணம் சம்பாதித்த வழியையும் இதில் சொல்லத் தேவையில்லை. இன்னும் பெரிய சலுகையாக, எப்போது வேண்டுமானலும், உள்நுழைத்து, பணத்தினை வெளியேற்றலாம். பெரும் பண வர்த்தகம் இதில் நடக்கிறது. இதை எழுத வேண்டுமெனில், நம்முடைய ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், செபி, பரஸ்பர நிதி, காப்பீட்டாயம் (IRDA) பற்றி எழுத வேண்டும். அது அடுத்த தொடருக்கான மேட்டர் :))

கொசுறு-2: பிரணாப் முகர்ஜி அமெரிக்காவுக்கு போய் இந்த வார ஆரம்பத்தில் திருவாய் மலர்ந்தருளி, வெளிநாட்டு நிறுவனங்கள் $10 பில்லியன் (ரூ.45,000 கோடிகள்) வரை இந்திய பரஸ்பர நிதி திட்டங்களில் பணம் போடலாம் என்று சொல்லியிருக்கிறார். கருப்புப் பணத்தினை இந்தியாவுக்குள் உள்நுழைத்து வெளியேற்ற உதவும் அடுத்த திட்டம். ரூ.20 கோடி இருந்தால், ரிசர்வ் வங்கியில் அனுமதி வாங்கி நானும் இதன் எடிட்டரும் கூட அடுத்த பரஸ்பர நிதி நிறுவனத்தினை ஆரம்பித்து பில்லியன் டாலராய் உள்நுழைக்கலாம் 🙂

* A financial instrument whose price is related to an underlying commodity, currency, economic variable, financial instrument or security. The different types of derivatives include futures contracts, forwards, swaps, and options. They can be traded on exchanges or over-the-counter (OTC). Market traded derivatives are standard, while OTC trades are specific and customised.

உலகெங்கிலும் காப்பீடு என்பது ஒரு பெரிய இண்டஸ்ட்ரி. 2004 கணக்கு படி காப்பீட்டின் ப்ரீமியம் மட்டுமே கிட்டத்திட்ட $2.941 டிரில்லியன் (2941,000,000,000). அதிகமில்லை ஜஸ்ட் ரூ.1,32,34,500,00,00,000 (ஒரு கோடியே முப்பத்து இரண்டு இலட்சத்து முப்பத்து நான்காயிரத்து ஐநூறு கோடிகள்). இதில் கருப்புப் பணம் எப்படி வெளுப்பாகிறது என்பது அடுத்த வாரம்.

கல்லா நிரம்பும்……

O

நரேன்

ஷாக் மார்க்கெட்

போன திங்கள்கிழமை (20 ஜூன்) இந்தியாவின் மும்பை பங்குச் சந்தை 611 புள்ளிகள் குறைந்து பின் மேலெழுந்து 364 புள்ளிகள் சரிவோடு நின்றது. காரணம்: இந்திய அரசு மொரிஷியஸ்லிருந்து வரும் பணத்திற்கு வரி கட்டவேண்டும் என்கிற முடிவில் இருப்பதாக வந்த யூகங்கள். யூகங்களுக்கே சந்தை சரிகிறது. பெரிய தரகர்கள் அலறுகிறார்கள். இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு இதனால் குறையும்; இந்தியாவை வெளிநாட்டார்கள் சீந்த மாட்டார்கள் என்கிற ரேஞ்சுக்கு ’அருள்மொழிகள்’ வணிக நாளிதழ்களில், வணிக சேனல்களில் தொடர்ச்சியாக சொல்லப்படுகிறது. நாமென்ன அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறோம்? இது நிஜமானால் ? ஏன் மொரிஷியஸிலிருந்து வரும் பணத்திற்கு வரி கட்டமாட்டேன் என்று பெரு நிறுவனங்கள் அடம் பிடிக்கின்றன ?

மொரிஷியஸ் பற்றிய முன் கதை சுருக்கம் ஏற்கனவே எழுதியதே. சிம்பிளான காரணம், பங்குச் சந்தை கள்ளப் பணத்தினை வெள்ளையாக்கும் வழிகளில் முதன்மை வழி. மொரிஷியஸின் வழியே வரும் பெரும்பாலும் பணம், நியாயமற்ற வழிகளில் சம்பாதித்த பணம். அதை உலகமெங்குமிருக்கிற பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து, அதை உள்நுழைத்தால் சடாலென அந்த ஊர் பொருளாதாரம் மேலேற ஆரம்பிக்கும்.

முட்டாள் அரசாங்கங்களுக்கு இதன் அடிப்படை பெரும்பாலும் தெரியாது. நம்மூருக்கு காசு வருகிறது அது போதும் என்கிற மிதப்பில் வெளியாட்களை உள்ளே விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் விஸ்தரித்து, ஊரையும் கொஞ்சமாய் வளப்படுத்தியப் பின் ஆட்டம் ஆரம்பிக்கும். கட்டற்ற, நிபந்தனையற்ற அன்னிய முதலீடுகளை அனுமதிக்க வேண்டும் என்றொரு ’லாபி’ கிளம்பும். அந்த லாபி மெதுவாக அரசின் கொள்கைகளில் கை வைக்கும். இந்தியா மாதிரியான வெகு வேகமாக ‘முன்னேறிக் கொண்டிருக்கும்’ நாடுகளில் பணம் ரொம்ப முக்கியம். பணத்தினைக் கொண்டுவந்தால் எந்த கேள்வியும் கேட்காமல் திறந்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு சாமரம் வீச ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. அதீதி தேவோ பவ .

இந்த பங்குச் சந்தை முதலீடுகள், மாற்றங்கள், திருப்பங்கள், திடீர் ஏற்றம்/சரிவு, சரமாரியாக மாறும் பணம், தினசரி பரிவர்த்தனைகள், இன்சைடர் ட்ரேடிங், சந்தை திசைதிருப்பல்கள் என்பது பற்றி மட்டுமே தனி புத்தகம் எழுதுமளவுக்கு செய்திகள் இருக்கிறது. இப்போதைக்கு பங்குச் சந்தையினை வைத்துக் கொண்டு பணம் எப்படி உள்நுழைந்து, சட்டபூர்வமாய் வெளியேறி, வெளுப்பாகிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

பங்குச் சந்தை சாதாரணர்களுக்கு பெரிய புதிர். விஷயம் தெரிந்தவர்களுக்கு கிடைத்த ஆடுகளம். பங்குச் சந்தையில் பணம் வெளுப்பாவதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஒரு முக்கியமான விஷயத்தினை நினைவில் வைத்துக் கொள்வோம். பங்குச் சந்தை, விளையாட்டு போல ஒரு வழி.. ஆனால் பங்குச் சந்தையே ஒரு பெரிய கருப்புப்பண உருவாக்கும் தொழில் என்பதும் முக்கியம். இன்சைடர் ட்ரேடிங் (Insider trading) என்பது உலகமெங்கும் பங்குச் சந்தையில் வெகுவாக நடக்கக் கூடிய ஒரு ஏமாற்றுவேலை. இப்போது அமெரிக்காவில் மாட்டிக் கொண்டிருக்கும் கேலீயான் குழுமத்தின் (Galleon Group) தலைவர் ராஜரத்தினம், அவரோடு சேர்ந்து மாட்டியிருக்கும் இன்னபிற தொடர்புகள் முக்கியமாய் ரஜத் குப்தா போன்றவர்கள் செய்தது இன்சைடர் ட்ரேடிங். பங்குச் சந்தைக்குள்ளேயே பண்ணப்படும் பிராடுகளை பின்பு விரிவாக பார்ப்போம். இப்போதைக்கு, பங்குச் சந்தையினை ஒரு சேனலாக உபயோகித்து வெளுப்பது பற்றி மட்டும் பார்க்கலாம்.

பங்குச் சந்தை என்று இங்கே குறிப்பிடுவது வெறும் பங்கு பரிவர்த்தனைகள் மட்டுமல்ல. கமாடிடீஸ் என்னும் விளைப் பொருட்கள், இயற்கை வளங்கள் சார்ந்த சந்தை, ப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், ஹெட்ஜ் பண்ட்ஸ் என்று விரியும் கிளைகளை உள்ளடக்கியது. இவையெல்லாம் என்ன என்பது போக போக தெரியும்.

எப்படி நடக்கிறது?

நேரடி பணமாக இந்தியாவில் பங்குச்சந்தையில் போட முடியாது. அதனால், உங்களுக்கு ஒரு இடைநிலை நிறுவனம் தேவை. முக்கியமாய் உஸ்மான் சாலையில் இருக்கும் நிறுவனங்கள். ஜவுளிக்கடைகள்; நகைக் கடைகள்; உணவு விடுதிகள். பணத்தினைக் கொடுத்தால் அவர்கள் அவர்களின் கமிஷனைக் கழித்துக் கொண்டு, டிடியாகவோ, செக்-காகவோ நாம் சொல்லும் நிறுவனங்கள், நபர்களுக்கு தருவார்கள்.

அடுத்து வருவது பங்கு தரகு நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் தொடர்ச்சியாக பென்னி பங்குகள் (Penny stocks) என்றழைக்கப்படும் சந்தையில் அதிகமாக பரிவர்த்தனையாகாத பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு ஏகாதசி & கோ வின் பங்கு வெறும் ரூ.7.25க்கு போகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த பங்குகளை அவர்கள் எப்போதோ வாங்கி வைத்திருப்பார்கள். கடந்த மூன்று வருடங்களில் என்றைக்கு சந்தை கீழே விழுந்து அந்த பங்குகள் ரூ.5.00 க்கு போனது என்று பார்ப்பார்கள். அந்த நாளில் அந்த பங்குகள் நாம் சொல்லும் நிறுவனத்திற்கோ, தனி நபர்க்கோ மாற்றப்படும்.

ஒரு கோடி ரூபாய் மாற்ற வேண்டுமென்றால் அதன் சேவை கட்டணம் கிட்டத்திட்ட 10-12% மீதம் 88 லட்சம் இந்த மாதிரியான பென்னி பங்குகளில் ரூ.5.00 க்கு அன்றைக்கு வாங்கி, போடப்பட்டதாக காட்டப்பட்டு, இன்றைக்கு ரூ.7.25 க்கு விற்கப்படும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு மேல் பங்கினை வைத்திருந்து விற்றால் அதற்கு பரிவர்த்தனை வரிகள் மட்டுமே உண்டு. அதன் லாபத்திலும் பெரியதாய் வரிகள் விழாது. 88 இலட்சம் பங்கு விற்ற கணக்கில் கணக்கில் எந்த சுணக்கமும் இல்லாமல் வந்து விடும். Deal done.

சின்ன பரிவர்த்தனைகள் ரூ.10 கோடிக்கு கீழ் இருந்தால், இந்த பென்னி பங்கு வழியாக செய்யலாம். ஆனால் மாற்றவேண்டிய பணம் எக்கச்சக்கமாக இருந்தால், இது சரிவராது. அதற்கு நீங்களே ஒரு இடைத்தரகு நிறுவனத்தினை வாங்க வேண்டும். மேலே சொன்ன பென்னி பங்குகளுக்கு பதில் உலகளாவிய பங்குகளை வாங்கும் திறன் இருக்க வேண்டும். முக்கியமாய் ”தினப் பரிவர்த்தனைகள்” (Day trading) நடத்தும் நிறுவனமாய் இருப்பது நல்லது. அதிலும் கரன்சிகள், கமாடிடீகள், பங்குகள் பரிமாறும் இடைத்தரகு நிறுவனமாக இருந்தால் இன்னமும் செளகர்யம். ஒரு நாளைக்கு பரிவர்த்தனைகள் குறைந்தபட்சம் 100 கோடிகள் போல எந்த பணத்தை வேண்டுமானாலும் பரிமாற்றலாம்.

இந்திய பங்கு சந்தைகளில் ஒரு நாள் வர்த்தகம் குறைந்த பட்சம் ரூ.5,000 கோடியை தாண்டும். அதில் ரூ.100 கோடி என்பது ஒன்றுமேயில்லை. இந்தியாவிலேயே இதுவென்றால், உலகமெங்கும் பங்குச் சந்தைகளில் ஒரு நாளில் நடக்கும் பரிவர்த்தனைகள் பத்து டிரில்லியன் டாலர்களை தாண்டுமென்கிறார்கள். அதிலும் மொத்த உலக நாடுகளின் ஜிடிபி’யை விட 300 மடங்கு அளவுக்கு ஆப்ஷன்களும், டெரிவேட்டிவ்களும் (Derivatives) இருக்கின்றன என்று The Ascent of Money – Niall Fergusson என்கிற லண்டன் பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் எடுத்த ஆவணப்படம் சொல்கிறது. இது கிட்டத்திட்ட $423 டிரில்லியன் டாலர்கள் ($423,000,000,000,000 – ஒரு டிரில்லியன் என்பது ரூபாயில் 4,40,00,000,00,00,000 நான்கு கோடியே நாற்பது லட்சம் கோடிகள்) . உலகில் மொத்தமே ஆறேழு நாடுகள் மட்டுமே டிரில்லியன் டாலர் பொருளாதாரம் செய்கின்றன என்றறிக.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் என எல்லாரும் பண்ணியது எல்லாமே இது தான். விலை குறைவான பங்குகளை காசு கொடுத்து தரகர்கள் மூலம் வாங்க ஆரம்பிப்பது. இவையெல்லாம் கேஷாக பரிவர்த்தனை நடக்கக் கூடிய சாத்தியங்கள் இருப்பவை. கொஞ்ச கொஞ்சமாய் வாங்கி, பிரச்சார கும்பலை உருவாக்கி இந்த நிறுவனம் இந்தியாவின் அடுத்த டாட்டா, பிர்லா என்று பில்டப் கிளப்பி சில்லறை முதலீட்டாளர்களை உள்ளே கொண்டு வந்து பெரிய விலை வரும்போது மொத்தமாய் பங்குகளை விற்று, பணத்தினை சட்டபூர்வமாக்கி வெளியே வந்துவிடுவார்கள். இது சந்தை திசைதிருப்பல்கள் (Market manipulation) என்கிற வரையறைக்கு கீழே வரும். உலகின் பெரும்பாலான இரண்டாம் நிலை பங்குச் சந்தைகள் கிட்டத்திட்ட மாபியா கீழே தான் இருக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.

இதில் இரண்டு மாங்காய். ஒன்று கருப்புப் பணம் வெளுப்பானது. கூடவே லாபமும் சேர்ந்து விட்டது. சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதோ ராய் மீதும் இந்த மாதிரியான குற்றச்சாட்டு உண்டு. அவர் செய்தது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் அவருடைய சொந்த NBFC வழியே பணத்தினை பொதுமக்களிடமிருந்து வாங்கி அதை சந்தையில் போட்டு பெருக்கி, அதை மாற்றி, நட்டம் காண்பித்து, பணத்தினை இந்தியாவிலிருந்து வெளியேற்றினார்கள் என்கிற தகவலுண்டு. விரிவாக எழுதினால் என் வீட்டுக்கு டாட்டா சூமோ, ஆட்டோ வரும் அபாயங்கள் உண்டு 🙂

இதன் அடுத்த நிலை தான் ஆப்ஷன்ஸில் மாற்றுவது. ஆப்ஷன்ஸ், ப்யூச்சர்ஸ் (Futures), ஷார்டிங் (Shorting) மாதிரியான சமாச்சாரங்கள் பங்குச் சந்தைகளுக்கு மட்டுமே உரியவை. இந்த கட்டுரை இந்த முறைமைகளின் விரிவான விளக்கமல்ல. படு சுருக்கமாய் சொன்னால், ப்யூச்சர்ஸ்: நாளை ஒரு பொருள் / பங்கின் விலை ஏறும் என்று நம்பி அதை இன்றைக்கே வாங்குவது; ஷார்டிங் – ஒரு பொருள் / பங்கு / கரன்சி கீழேப் போகும் என்று நம்பி அதன் கீழ் விலைக்கு இன்றைக்கே சொல்லி வைப்பது; அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியினை முன்கூட்டியே கணித்து அதன் மூலம் மொத்த தேசமும் தெருவுக்கு வரும் என்று நம்பி, அதை ஷார்ட் செய்து பில்லியன் டாலர்கள் சம்பாதித்த புத்திசாலிகள் பற்றி ஒரு புத்தகமே இருக்கிறது. 🙂

ஆப்ஷன் ப்யூச்சர்ஸ் எல்லாமே வெறும் பேப்பர்கள். சமன்பாடுகள். கணக்குகள். அது தான் நிஜம். இதில் எப்படி உலகளாவிய ‘கேம்’கள் நடக்கிறது, எப்படி வெறும் பேப்பர்களையும், கணினிகளையும் வைத்துக் கொண்டு உலகமுழுவதும் நேற்று வரை சோற்றுக்கு சிங்கியடித்த ஆட்கள், ப்ரைவேட் சார்ட்டர்ட் ப்ளேன்களில் பறக்கிறார்கள் என்பது அடுத்த வாரம்.

கல்லா நிரம்பும்…..

O

நரேன்

கால்பந்தின் நிறம் கருப்பு

உலகம் முழுவதும் விளையாடும் ஒரு விளையாட்டு. இந்த ஒரு காரணம் போதும். கருப்புப் பணம், கள்ளப் பணம், வரி ஏய்ப்பு என சகல சாத்தான் குணங்களுக்கும் வடிகாலாக, விடிவெள்ளியாக கால்பந்து திகழ.

ஏன் ?

 1. கால்பந்து உலகளாவிய விளையாட்டு. உள்ளே நுழைவது சுலபம். 220 நாடுகளில் ஆடும் ஒரு விளையாட்டில் எக்கச்சக்க பின்வாசல்கள், எங்கு நுழைந்து எப்படி வேண்டுமானாலும் வெளியேறலாம்
 2. கால்பந்து கிளப்கள் அதன் பங்குதாரர்கள் என்பது ஒரு மேகி நூடுல்ஸ் சிக்கல். யார் யாரோடு தொடர்புடையவர்கள், ஒன்றினை நுனி எங்கு முடிகிறது, எங்கு தொடங்குகிறது என்று கண்டறிவது கடினம். இது ஆரம்பம் தான். சர்வதேச விளையாட்டு வீரர்கள், விளையாட்டு வீரர்கள் வாங்குதல்/விற்றல், பரிவர்த்தனைகள், டிவி உரிமம், இணைய உரிமம், கிளப்பின் ப்ரான்சைஸ் உரிமங்கள், வீரர்களின் மேனேஜர்கள், அவர்களின் நிறுவனங்கள், ஏஜெண்ட்கள், ஸ்பான்சர்கள், இடைநிலை தரகு நிறுவனங்கள், வீரர்களின் சொந்த/உரிமம் பெற்ற நிறுவனங்கள் என நீளும் இடியாப்ப சிக்கலில் பணத்தினை உள்நுழைந்து வெளியேற்ற பத்தாயிரம் வழிகள் எந்நேரமும் திறந்தே இருக்கின்றன.
 3. சட்டரீதியாகவும் கிளப்புகள் பிரச்சனைக்குரியவை. ஐரோப்பாவின் டாப் 20 கிளப்புகளும், இருவது வகையிலான சட்ட அமைப்பு முறையில் இருக்கின்றன என்பது தான் தொடக்கம். சிலவை தனியார் நிறுவனங்கள் (Pvt Ltd), சில பவுண்டேஷன்கள். இதிலேயே, அரங்கம் தொடர்பான வருமானம், விற்பனை பார்க்கும் டிவிஷன் உள்ளே இருக்கலாம்; தனி நிறுவனமாக இருக்கலாம். இது போலவே, வீரர்களை வாங்குவது/விற்பது நடத்துவதும் தனி நிறுவனம். உள்ளுக்குள் உள்ளாக என ஒரு கிளப்பின் பங்குதாரர்களையும், முதன்மை நிறுவனர்களையும் ஒட்டி பல்வேறு நிறுவனங்களும், பல அமைப்புரீதியிலான சட்டப்பூர்வமான வாசல்கள் (Entities) இருக்கும். அதனால், கணக்கு காட்டுதலும், நிறுவனங்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளின் தணிக்கை ரீதியான தொடர்ச்சிகளும் (audit trail) கண்டறிந்து, பகுத்தாய்ந்து முடிவுக்கு வருதல் சிரமம்.
 4. விளையாட்டு என்பதே அதிக ரிஸ்க் உள்ள சமாச்சாரம். அதிலும் வீரர்கள் அதை விட ரிஸ்க்கானவர்கள். ஒரு சீசனில் நன்றாக ஆடும் ஒரு வீரர், இன்னொரு சீசனில் மொக்கையாவார். ஊர் பேர் தெரியாமல் திடீரென எங்கிருந்தோ முளைக்கும் ஒரு வீரர் குறைந்த காலத்தில் உலகப் புகழ் பெறுவார். நாளை என்ன நடக்கும், ஒரு வீரர் எப்படி ஆடுவார் என்கிற தெளிவு இல்லாமல் இருப்பதாலேயே விளையாட்டு சுவாரசியமாகிறது. ஆனால், அதுவே கருப்புப் பண ஆட்களுக்கு சாதகமாகவும் மாறிவிட்டது. திடீரென ஒரு கிளப் டேவி பெக்கமை, $40 மில்லியன் கொடுத்து வாங்கும். இரண்டே வருடங்களில் இது $60 மில்லியன் ஆகலாம். அடிப்படையில் எவ்விதமான காரணமும் இருக்காது, ஆனாலும் இந்த மாதிரியான திடீர், குபீர் வருமான உயர்வுகள் சாதாரணம். விளையாட்டின் ஆதாரமே “culture of unpredicatability”. இது தான் சாதகமும், பாதகமும்.
 5. ஆப்ரிக்க, மத்திய தென்னமரிக்க நாடுகளிலிருந்து கால்பந்து ஆடும் வீரர்களுக்கு பணம் ஒரு பெரும்கனவு. அதனால் அவர்களை சுற்றி எப்போதும் ஒரு தரகர், ஏஜெண்ட் கூட்டம் இருந்து மனதினைக் கெடுக்கும். அவர்களை வைத்துக் கொண்டு, முதலாளிகளால் பணத்தினை சரமாரியாக கைமாற்ற முடியும்.
  உதாரணத்துக்கு அந்த வீரரை ஒரு ஐரோப்பிய கிளப் $10 மில்லியனுக்கு வாங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் $5 மில்லியன் மட்டுமே நேரடியாக போகும். மீதி பாதி, அவருடைய நாட்டில் ஏதேனும் ஒரு நிறுவனம் வழியாக கொடுக்கப்படும். அந்த பாதிபணம் நூற்றுக்கு நூற்றியம்பது விழுக்காடு கருப்புப் பணமே. இரண்டு வருடங்களில் அவரை வேறு ஒரு கிளப்புக்கு $15 மில்லியனுக்கு விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதலில் எடுத்த கிளப் அந்த $15 மில்லியனையும் நேரடியாக கேட்கலாம். லாபத்துக்கு லாபம். $5மில்லியன் கருப்புப் பணத்தையும் மாற்றியாகிவிட்டது.
 6. கால்பந்து ஒரு செலவு பிடிக்கும் விளையாட்டு. கிளப்பிற்கான வருமானம் என்பது அவர்கள் ஆடும் சீசனைப் பொறுத்து. ஆனால், வருடம் முழுக்க ஒரு கிளப்பினை நடத்த ஏகப்பட்ட பணம் தேவை. பயிற்சிகள், கருவிகள், சப்போர்ட் பணியாளர்கள் என அனுமார் வாலாய் நீளும் செலவுகளால் தான் ஒரு சில கிளப்புகளைத் தவிர உலகின் பெரும்பாலான கிளப்புகள் நட்டத்தில் ஒடுகின்றன. இந்த மாதிரி நட்டத்தில் ஓடும் கிளப்புகள் கிடைத்தால் அல்வா.நட்டத்தில் இருக்கும் கிளப்புகளுக்கு தேவை பணம். அதன் ரிஷி,நதிமூலங்கள் தேவையில்லை. அதன் பங்குதாரர்கள் காசு போடுகிறேன் என்று சொன்னால், முன்னால் ஆட்றா ராமா என்று குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாருமே இல்லாத ஸ்டேடியத்தில் டீ ஆற்றி விட்டு, டிக்கெட்டுகளை கிழித்துப் போட்டுவிட்டு வருமானம் வந்தது என்று சொல்லலாம். ஒரே நாளில் 10,000 பஜ்ஜி, போண்டாக்கள் விற்றது என வெள்ளையாக்கலாம். டம்மி நிறுவனங்கள் வைத்து ஸ்பான்ஸர் என்று சொல்லி கும்மியடிக்கலாம்.
 7. மேலே சொன்ன ஒரு காரணத்தினாலேயே அந்த லோக்கல் கிளப்பின் புரவலராக மாறியபின், அந்த கிளப் இருக்கும் நாட்டின் பெருந்தலைகளோடு மேட்ச் பார்க்கும் வாய்ப்பு சர்வசாதாரணமாக அமையும். எல்லா கிரிமினல்களுக்கும் ஒரு சமூக முகம் தேவை. அந்த சமூக முகம், ஒரு வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிளப்பினை தூக்கி நிறுத்திய முகம்;விளையாட்டினை ஊக்குவிக்கும் முகம்; மக்களுக்கு பிடித்த ஒரு விளையாட்டினை அங்கீகரித்த முகம். அந்த முகம் முக்கியம். அது கல்வித் தந்தையோ, கால்பந்து தந்தையோ!அதை வைத்துக் கொண்டு அந்த ஊரின் பெரிய மனிதர்களோடு உறவாடி தமக்கு தேவையானதை சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியத்தோடு தான் இந்த பண உள்நுழைவே நடக்கும். அதன் பிறகு இம்மாதிரியான பணத்தினை பல்வேறு தொழிகளில் அந்த ஊரில் போடலாம். யாரும் சந்தேகப் படமாட்டார்கள். ஏனென்றால், கால்பந்து கிளப்பினையே வாங்கியவரால், பிற காரியங்கள் செய்ய முடியாதா என்ன?

எப்படி ?

கால்பந்தினைப் பயன்படுத்திக் கொண்டு கருப்பினை வெளுப்பாக்கி நாமம் போடுவது மூன்று வழிகளில்.

 1. கிளப்பினை வாங்கல்
 2. கிளப்பினுள் காசு நுழைத்து அதை பல்வேறு நிறுவனங்களின் வழியே ’ஷட்டில்’அடித்து பின் வெளியேற்றுவது என்பது நம்பியார் காலத்து டெக்னிக். ஆனாலும், அதிலும் இப்போது பல்வேறு தளங்களில் வியாபாரம் நடக்கிறது. வெறுமனே வரிகளற்ற சொர்க்கங்களில் நிறுவனங்கள் வைத்து, அதன் வழியே பணத்தினைப் போட்டு எடுத்துக் கொண்டு போவது என்பது தாண்டி, கிளப்புகளின் பங்குகளை வெளிச் சந்தையில் விற்பது, கிளப்பின் உரிமத்தினையே பல்வேறு சிறு நிறுவனங்களாகப் பிரித்து அதையும் விற்பது என நீளும் சாகசங்களில், லேட்டஸ்ட், தனியார் வங்கிச் சேவை (private banking) இப்போது இந்த மாதிரியான பங்குகளை வாங்குதலும் நடக்கிறது. வரிகளற்ற தேசங்களில், கூட்டு நிதி நிறுவனங்கள் (Collective Sports Fund) வைத்துக் கொண்டு அதன் மூலம் பரிமாற்றப்படும் பணமும் இதில் அடங்கும்

 3. பரிவர்த்தனை சந்தை
 4. 1974-இல் வெறும் 11.4% மட்டுமே தேசிய அணியில் இருந்து பிற நாட்டுக்கு ஆடிய வீரர்கள். 2006 உலகக் கோப்பை கால்பந்தின் போது இது 53.1% உயர்ந்திருக்கிறது. வெறும் 30 வருடங்களில் கிட்டத்திட்ட பாதி டீம் பணத்துக்காக ஏதோ ஒரு கிளப்புக்கு ஆடிக் கொண்டிருக்கிறது.

  தொழில்ரீதியான கால்பந்து கிளப்புகளின் முக்கியமான வேலை வீரர்களை வாங்குதல் விற்றல் பரிவர்த்தனைகள் செய்தல். இது தாண்டி, வீரர்களுக்கான பணம் போகும் வழியும் முக்கியமானது. ஃபீஃபாவால் இதுவரை 4,000 ஏஜெண்ட்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தாண்டி, அங்கீகரிக்கப்படாத வீரர்களின் மாமா, மச்சான், சித்தப்பா பையன், பெரியப்பா பொண்ணு என நீளும் informal ஏஜெண்ட்களின் எண்ணிக்கை 100,000 தாண்டும். இவர்களின் வழியே நடக்கும் பரிவர்த்தனைகள் ஃபீஃபாவின் கீழ் வராது. இது தாண்டி, வீரர்கள் மேலாண்மை நிறுவனங்கள் (Sports Talent Firms) என்பது இன்னொரு ஜாதி. இவர்கள் தொழில்ரீதியான வீரர்களின் வருமானத்தினை நிர்ணயிப்பவர்கள். இந்தியாவில் ஏதோ ஒரு நிறுவனம் தான் கேப்டன் தோனியை ஐந்து வருடத்திற்கு ரூ.100 கோடிக்கு ஒப்பந்தப்படுத்தியிருக்கிறது. இதன் சட்ட திட்டங்கள், பணப்பரிவர்த்தனைகள் இன்னமும் ஒரு woodoo art.

 5. சூதாட்டம்
 6. ஜூது என்று மெட்ராஸ் பாஷையில் அழைக்கப்படும் சூதாட்டம் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களோடு கூடியது. ஆசியர்கள் தான் ஐரோப்பிய கிளப் புட்பாலில் அதிகப்படியாக சூதாடுபவர்கள். 2007 இண்டர்போல் நிலவரப்படி, 1300 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; 1088 ஜூது குகைகள் (Gambling Den) அழிக்கப்பட்டிருக்கின்றன. சூதில் ஒடிய தொகை மட்டும் ரூ.6,750 கோடிகள் ($1.5 பில்லியன்). சூதாட்டம் என்பது வெறும் பெட்டிங் மட்டுமல்ல. இதில் மேட்ச் ஃபிக்சிங் வகையறாக்களும் உண்டு. ஐரோப்பிய கிளப்புகளில் சில காசு வாங்கிக் கொண்டு, மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்கள் இருக்கின்றன. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

அடுத்த 3-5 வருடங்களில், விளையாட்டு வீரர்களின் ஆன்லைன் சந்தை வந்துவிடும் சாத்தியங்கள் இருக்கிறது. இதன் மூலம், இப்போதிருக்கும் ரெகுலர் பங்குச் சந்தைகளின் ப்யூச்சர்ஸ் /ஆப்ஷன்களுக்கு இணையாக கால்பந்து வீரர்களின் ப்யூச்சர்ஸ் /ஆப்ஷன்களும் வரலாம். நேரடியாக இல்லாமல் போனாலும், இது ஒரு பெட்டிங் ப்யூச்சர்ஸ் / ஆப்ஷன்ஸ் என்கிற வழியில் உள்நுழையலாம்.

கால்பந்து என்பது ஒரு விளையாட்டு. குதிரை ரேஸ், கிரிக்கெட், பேஸ்பால், பார்மூலா ஒன், ஹாக்கி என நீளும் பந்தயங்களில் பல பில்லியன் டாலர் பணம் வருடாவருடம் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் அசாரூதீன் காலத்தில் சொல்லப்பட்ட கிரிக்கெட் சூதாட்டமும், இப்போது ஆரம்பித்திருக்கும் ஐபிஎல் முதலாளிகளின் பண மாற்றமும், அடுத்த 5 வருடத்தில் நமக்கு புதிய பாடங்களையும், சாளரங்களையும் திறந்து வைக்கும்.

விளையாட்டே இவ்வளவு வினையென்றால், நிஜமான வினையில் எவ்வளவு விளையாட்டுகள் நடக்கும் ?

பங்கு சந்தை – பணம் ஜீவ நதியாய் ஓடக்கூடிய இடம். அங்கு கருப்புப் பணம் எப்படி உள்நுழைகிறது, மாற்றப்படுகிறது என்பது அடுத்த வாரம்.

– கல்லா நிரம்பும்…..

O

நரேன்