உறக்கமற்றவன்

அத்தியாயம் 15

சமீபத்தில் பெரும் வெற்றியடைந்த ‘களவாணி’ படத்தின் டைரக்டர் சற்குணமும், அப்படத்தில் கதாநாயகனாக நடித்த விமலும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே நண்பர்கள். வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், சினிமா அவர்களை ஒன்று சேர்த்தது. ஒரே அறையில்தான் வாழ்க்கை ஓடியது. இருவரில் யாருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்து முன்னேறுகிறார்களோ, அவர் மற்றவரை கை தூக்கிவிட வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டார்கள். பசங்க படத்தில் விமலுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சற்குணத்திற்கும் களவாணி படம் இயக்குகிற வாய்ப்பு வந்தது. முன்பே தீர்மானித்தபடி விமல்தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்தார் சற்குணம். இருவருமே வெற்றிப் படிக்கட்டில் நிற்கிறார்கள் இப்போது.

இன்றைய முன்னணி இயக்குனர் லிங்குசாமி பல வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நகரில் சிறு அறையில் தங்கியிருந்தார். அவரோடு தங்கியிருந்த நண்பர்களில் நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி ஆகியோர் இன்று இயக்குனராக தங்கள் லட்சியத்தை அடைந்துவிட்டார்கள். (படம் வெற்றியா? தோல்வியா? அது வேறு விஷயம்) அப்போது லிங்குசாமியின் அண்ணன் சுபாஷ் சந்திர போஸ் என்பவர்தான் தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து அதில் கிடைக்கும் சம்பளத்தில் தன் தம்பியின் கனவுகளை நிறைவேற்ற உதவிக் கொண்டிருந்தார். இன்று லிங்குசாமியின் படக்கம்பெனிக்கு முதலாளி இந்த சுபாஷ்தான்.

சீமானின் அறையில் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் ஒன்று இருந்து கொண்டேயிருக்கும். அது அவரே வாய்ப்புக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்த காலம். இருந்தாலும், தனது உழைப்பில் வருகிற பணத்தை இவர்களுக்கு இலவச சாப்பாடு போட்டே அழிப்பார் சீமான். அதில் அவருக்கு அப்படியொரு சந்தோஷம். இப்படி அங்கு தங்கியிருக்கும் உதவி இயக்குனர்கள் சக தோழர்களின் சட்டையை கூட போட்டுக் கொண்டு சென்றுவிடுவார்கள். சில நேரங்களில் சீமானின் சட்டையையும் சேர்த்து!  இங்கதானடா சலவை செஞ்சு வச்சுருந்தேன். சரி… யாரோ ஒரு தம்பி போட்டுட்டு போயிருக்கான் போலிருக்கு என்று அவர்களின் சுதந்திரத்தை சுலபமாக சகித்துக் கொள்கிற பெரிய மனசு இருந்தது அவருக்கு.

கவிஞர் அறிவுமதியின் தியாகம் இன்னும் பெரிசு. இவரது அலுவலகத்தில் எப்போதும் வந்து போய் கொண்டிருப்பார்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சிய வெறி கொண்ட இளைஞர்கள். இவர்களின் திறமையைப் பார்த்து யாரிடமாவது அசிஸ்டென்ட் டைரக்டராகவோ, பாடலாசிரியராகவோ சேர்த்துவிடுவார் அறிவுமதி. இவரது அலுவலகத்தில் இலவசமாக உண்டு, உறங்கி இன்று மிகப்பெரிய இடத்திலிருக்கிறார்கள் அநேக இயக்குனர்கள். என் தம்பிங்க நிறைய பேரு எழுதுறாங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க. நான் ஒதுங்கியிருக்கேன் என்று பல வருடங்களாகப் பாடலே எழுதாமல் இருந்த அற்புதமான மனம் கொண்டவர் அறிவுமதி. பல வருட இடைவெளிக்கு பிறகு வற்புறுத்தி இவரை மீண்டும் பாடல் எழுத வைத்திருக்கிறார் டைரக்டர் கரு.பழனியப்பன்.

அறிவுமதி, பாலாவை பாலுமகேந்திராவிடம் சேர்த்துவிட்டதே தனிக் கதை. அப்போது அறிவுமதி பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். ஒவ்வொரு நாளும் பாலாவையும் ஷுட்டிங்குக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அங்கு போகிற பாலா படப்பிடிப்பிற்கு தேவையான வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். ஷுட்டிங் களேபரத்தில் யார் இந்த வாலிபர் என்பதை கூட கவனிக்காமல் தனது வேலையில் கவனமாக இருப்பார் பாலுமகேந்திரா. இப்படியே நாட்கள் பல கடந்தது. ஒரு நாள் டைரக்டரின் வீட்டுக்கு பாலாவை நேரடியாக அழைத்துச் சென்ற அறிவுமதி, இவன உங்ககிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்கணும் என்று சொன்னார். அவரை ஏற இறங்க பார்த்த பாலுமகேந்திரா, தம்பி இதுக்கு முன்னாடி யாருகிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தே என்று கேட்க, பாலா சொன்ன பதில்தான் தமாஷ். “உங்ககிட்டதான்…!”

உதவி இயக்குனர்களின் அவலத்தை நன்கு உணர்ந்தவர் கவிஞர் அறிவுமதி. அவர்களுக்காகவே உதவி இயக்குனர்களின் குரல் என்றொரு பத்திரிகையை தொடங்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அதை துவங்கவே முடியாமல் போனது அவரால்.

ரட்சகன், ஜோடி ஆகிய படங்களில் டைரக்டர் பிரவீன்காந்த் யூனிட்டில் உதவி இயக்குனராக இருந்தவர்கள்தான் ஏ.ஆர்.முருகதாஸ், வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரன், எஸ்எம்எஸ் பட இயக்குனர் ராஜேஷ், மலையன் பட இயக்குனர் கோபி ஆகியோர். இந்த கோபிக்கு முன்பே படம் இயக்குகிற வாய்ப்பு கிடைத்து வெற்றிக் கொடியும் நாட்டிவிட்டார் முருகதாஸ். ஆனாலும் தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யத் தயாராக இருந்தார் அவர்.

ஆர்.எஸ். அந்தணன்

கரண், ஷம்மு நடித்த மலையன் என்ற படத்தை இயக்கிய பின்பும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கோபியை. எது? வறுமையும் விதியும். ஆனால் இப்பவும் ரூம் வாடகை, மெஸ் பில் ஆகியவற்றை முருகதாஸ், சுசீந்திரன் மாதிரி இவருடைய ஆரம்ப காலத் தோழர்கள்தான் கவனித்துக் கொள்கிறார்களாம். ஒரு எஸ்எம்எஸ் அனுப்புனா போதும். நான் இருக்கிற இடத்துக்கே பணத்தை கொடுத்தனுப்புற அன்பு தோழர்கள் இவங்க. நீ ஜெயிக்கிற வரைக்கும் உன்னை பார்த்துக்கறது எங்க பொறுப்பு. நீ முயற்சியை கைவிட்றாதே என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். நானும் முயன்று கொண்டேயிருக்கிறேன் என்கிறார் கோபி.

எனவே இயக்குனராகும் கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களே, இந்தக் குழு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பாரம் குறையும். பலன்கள் விளையும்.

உங்கள் கனவுகள் நிஜமாக அட்வான்ஸ் வாழ்த்துகள்.

-முற்றும்-

உறக்கமற்றவன்

அத்தியாயம் 14

இன்று பிரபலமாக இருக்கும் டைரக்டர் ஒருவரின் நண்பர் செந்தமிழன். இவரும் சிந்து நதிப்பூ, பீஷ்மர், பயமில்லை ஜெயமுண்டு என்ற சில படங்களை இயக்கியவர்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரபல இயக்குனரும் இவரும் டைரக்டர் பவித்ரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார்கள். படப்பிடிப்பு இருந்தால் சாப்பாடு. இல்லையென்றால் படப்பிடிப்பு நடைபெறும் காலங்களில் வருகிற பேட்டாவை சேர்த்து வைத்து அடுத்த ஷூட்டிங் வரை அதில் வாழ்க்கை ஓடும். இந்த சேமிப்பை வைத்துக் கொண்டு மூன்று வேளை சாப்பாடு சிக்கல் என்பதால் மதியம் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்களாம்.

இவர்களை தொடர்ந்து கவனித்து வந்த பக்கத்து ரூம் நண்பருக்கு இவர்கள் மேல் பரிதாபத்தின் மேல் பரிதாபம். தனது சைக்கிளையும் கொடுத்து இரண்டு அன் லிமிட்டடு மீல்சுக்கான பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார் சாப்பிட. வடபழனியில் இப்போது அமைந்துள்ள ஓட்டல் சரவணபவனுக்கு எதிரில் இருக்கிற குமர பிரசாத் என்ற ஓட்டல் அன்றைய தினங்களில் ரொம்ப ஃபேமஸ். வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே போனார்கள் இருவரும். மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தால் சைக்கிளை காணவில்லை. அந்த காலத்தில் நூதனமான முறையில் திருடுகிற சைக்கிள் திருடர்கள் இருந்தார்கள். பூட்டப்பட்டிருந்தாலும் பின் சக்கத்திற்கு கீழே ஒரு வீல் கட்டையை வைத்து தள்ளிச் சென்று விடுவார்களாம். அந்த நூதன ஆசாமிகள்தான் இவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள்.

பக்கத்து ரூம் நண்பர் சொன்ன வார்த்தை இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது என்கிறார் செந்தமிழன். “நீங்க தரித்திரம் புடிச்சவங்கடா. உங்களுக்கு போய் இரக்கப்பட்டேன் பாரு….”

இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் அந்த பிரபல டைரக்டர் யார் என்று சொல்லிவிடுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இன்று அவர் இருக்கிற உயரம் வேறு. அவர் விருப்பம் இல்லாமல் அவரது பெயரை சொல்வது அவ்வளவு நாகரிகம் இல்லை என்கிறார் செந்தமிழன்.

இன்னொரு பிளாஷ்பேக் இது. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், கவுண்டமணி ஆகியோர் வாய்ப்புக்காக அலைந்த காலங்களில் ஒன்றாகத்தான் தங்கியிருந்தார்கள். நாள் முழுக்க பட்டினி என்பதுதான் அவர்களின் சராசரி மெனு. இதில் கவுண்டர் மட்டும் கெட்டி. ஒரு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக வேலைக்கு சேர்ந்துவிட்டார். நாடகமோ, சினிமாவோ கிடைத்தால் அன்றைக்கு லீவு போட்டுவிடுவாராம். வேலை பார்க்கும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் பார்சல் மட்டும் கூடாது.

ரூமில் பட்டினி கிடக்கும் நண்பர்களுக்காக ஒரு காரியம் செய்வாராம் கவுண்டர். வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, தோசையை மெல்லிசாக பார்சல் செய்து வயிற்றில் கட்டிக் கொள்வாராம். அதன்மேல் வேட்டியை இறுக்கமாக கட்டிக் கொண்டு தோசை கடத்தல் செய்வாராம். எல்லாம் தன் தோழர்களுக்காக.

நாம் கூறியதுபோல இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைத்தான் இன்னமும் அனுபவிக்கிறார்கள் அநேக உதவி இயக்குனர்கள். பெருகி வரும் விலைவாசி. வீட்டு வாடகை. இதையெல்லாம் சமாளித்து இங்கே அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே இவர்களுக்கு ஒரு படத்தை இயக்கிய சந்தோஷத்தை கொடுக்கிறது என்பதுதான் சகித்துக் கொள்ளவேண்டிய உண்மை. முன்பு வடபழனியை சுற்றி வாடகைக்கு குடியிருந்த உதவி இயக்குனர்கள் இன்று வாடகை பிரச்சனையால் இடம் மாறிவிட்டார்கள். பல கிலோ மீட்டர்கள் தள்ளிப் போய் வாழ வேண்டிய துர்பாக்கியம். எனக்கு தெரிந்த ஒரு உதவி இயக்குனர் காஞ்சிபுரத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறார். இன்னொருவர் அரக்கோணத்திலிருந்து. எப்படித்தான் தினந்தோறும் அவ்வளவு தூரம் போய் வருகிறார்களோ?

தங்கர்பச்சான் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போதும் சரி, கிடைத்து பணியாற்றிக் கொண்டிருந்த போதும் சரி.  சொந்த ஊரான கடலூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். சென்னைக்கும் கடலூருக்கும் பஸ் பாஸ் வாங்கி வைத்துக் கொண்டு பேருந்துகளிலேயே பல வருடங்களை கழித்தவர் இவர். இவரை போன்றவர்கள் எல்லாம் இலக்கை மட்டுமே குறி வைக்கிற அர்ஜுனன்கள் என்பதால்தான் இந்த போக்குவரத்து போராட்டம் வெகு சுலபம் ஆனது.

யாரிடமாவது உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றால் அவர்கள் கேட்கிற முதல் கேள்வி, தம்பி வீடு எங்க இருக்கு? அல்லது ரூம் எங்க இருக்கு? பைக் வச்சுருக்கியா? என்ற கேள்விகள்தான். நள்ளிரவு வரை பணியாற்றிவிட்டு செல்ல வேண்டும். அதிகாலையில் வந்து நிற்க வேண்டும். இரண்டுக்கும் சவுகர்யமான தூரத்தில் இந்த உதவி இயக்குனர் இருக்க வேண்டும். இதுதான் வேலைக்கு சேர்த்துக் கொள்ள நினைப்பவர்களின் எண்ணம். அவசியம் கருதிய இந்த கேள்விகளுக்கு இந்த உதவி இயக்குனர்களால் என்ன பதில் சொல்ல முடியும்?

தமிழ் சினிமாவிலேயே ரொம்ப சபிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். நள்ளிரவில் கூட ஷூட்டிங் முடிந்து எல்லாரும் சென்ற பின் கடைசி ஆளாகதான் இவர்கள் கிளம்ப வேண்டும். அதிகாலை ஷூட்டிங்காக இருந்தால் முதல் ஆளாக இவர்கள்தான் நிற்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில்தான் உறக்கம், கனவு, இத்யாதி எல்லாம்!

இப்பவும் வெற்றி பெற்ற இயக்குனர்கள் கொடுக்கிற பேட்டியைக் கேட்டால் ஒரு விஷயம் புரியும் நமக்கு. அத்தனை பேரும் சிறு சிறு குழுவாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள் இந்த சென்னையில். வாழ்ந்தும் வருகிறார்கள். வாடகையைச் சமாளிக்க, கதை விவாதம் செய்ய, வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ள என்று இந்த குழு வாழ்க்கை அவர்களுக்கு அரு மருந்தாக இருக்கிறது.

– தொடரும்

உறக்கமற்றவன்

”அத்தியாயம் 13

ஒரு சீரியல் ஐநூறு எபிசோடுகளைக் கடந்துவிட்டால் அதன் ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அது தன்னாலே ஓடி பணத்தைக் கொட்டும் என்கிறார்கள் சின்னத்திரை ஏரியாவில்.

இந்தச் சீரியல்களில் வேலை செய்கிற உதவி இயக்குனர்களுக்குத் தினக்கூலியாக (அதாவது ஒரு கால்ஷீட் – 8 மணி நேரத்துக்கு) நானூறு ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவே ஒன்றரை கால்ஷீட் (12 மணி நேரம் – காலை 9 லிருந்து இரவு 9 வரை) என்றால் அறுநூறு ரூபாய் சம்பளம். மாதத்தில் இருபது நாள்கள் வேலை இருக்கும் என்பதுதான் இந்தத் தொழிலில் கிடைக்கிற உத்தரவாதம். மாதம் முழுக்க வேலை செய்கிற உதவி இயக்குனர்களும் இருக்கிறார்கள். தினசரி சம்பளத்தைக் கணக்கிடுகிற ஒரு சில கம்பெனிகள் இப்போது அதைவிடக் குறைவாக ஒரு சம்பளத்தை நிர்ணயித்து மாதச் சம்பளமாகக் கொடுத்துவிடுகிறார்களாம்.

அசோசியேட் டைரக்டர்களுக்குத் தினசரிச் சம்பளத்துடன் சேர்த்து தனி மாதச் சம்பளமும் வழங்கப்படும். தினந்தோறும் ஒரு கால்ஷீட்டுக்கு 750 ரூபாயும், ஒன்றரை கால்ஷீட்டுக்கு ஆயிரம் ரூபாயும் வாங்குகிறார்கள் இவர்கள். இந்த அசோசியேட் இயக்குனர்கள் படப்பிடிப்பில் கவனிக்கிற முக்கியமான வேலை பிராம்ப்ட்டிங். அதாவது நடிகர்களின் டயலாகை எங்காவது ஓரமாக நின்றுகொண்டு உரக்கச் சொல்லிக்கொடுப்பது. இவர்கள் சொல்லச் சொல்ல நடிகர் நடிகைகள் கிளிப்பிள்ளைபோலப் பேசுவார்கள். இங்கு ரீ-டேக் அதிகம் இல்லை என்பதால்தான் இப்படி ஒரு முறை. பின்பு தனியாக டப்பிங் இருக்கும் இவர்களுக்கு.

வசனகர்த்தாவோடு தொடர்பில் இருக்கும் உதவி இயக்குனருக்குதான் வீடு வாசல் தெரியாத அளவுக்கு வேலை இருக்குமாம். பல நேரங்களில் வசனகர்த்தா வீட்டிலேயே பழியாகக் கிடந்து நள்ளிரவில் வசனங்களை வாங்கிக்கொண்டுபோய் ஒப்படைப்பதும் நடக்கும். இவர்கள்மட்டுமல்ல, படப்பிடிப்பில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் மறுநாளைக்குத் தேவையான பிராப்பர்டிகளைத் தயார் செய்துவிட்டு வீட்டுக்குப் போய்ப் படுக்கவே இரவு 12 ஆகிவிடும். இந்தச் சிரமத்தை குறைப்பதற்காகவே மறுநாள் காலையில் பத்து மணிக்குதான் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.

தினந்தோறும் சீரியல் ஒளிபரப்பப்படுவதால் தினமும் ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவேண்டும் இந்த உதவி இயக்குனர்கள். இதில் முன்கதைச் சுருக்கத்தையும் சொல்ல வேண்டும். மார்க்கெட்டிங் டீமுடன் கலந்து பேசி விளம்பரங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கவேண்டும் என்பதைக் கேட்டு அதற்கு ஏற்றதுபோல சீரியலின் நேரத்தைக் கூட்டியோ குறைத்தோ எடிட்டிங் செய்யவேண்டும்.

அதுகூடப் பரவாயில்லை. திடீரென்று மார்க்கெட்டிங் எக்சியூட்டிவ் ஃபோன் செய்து ”ஒரு விளம்பரத்தைச் சேர்க்கணும். அறுபது செகன்ட் எடிட் பண்ணிக் கொடுங்க” என்பார். ஆனால் அதற்குமுன்பே முக்கியமான ஒரு காட்சியில் நிறுத்தி சீரியலுக்குத் ’தொடரும்…’ போட்டிருப்பார் இயக்குனர். அந்த பெப் குறையாத அளவுக்கு எடிட் செய்து இந்த 60 வினாடி விளம்பரத்தை இணைக்கிற பொறுப்பும் இந்த உதவி இயக்குனருக்குதான்!

சின்னத்திரை, பெரிய திரை இவ்விரு பிரிவுகளில் பணியாற்றும் உதவி இயக்குனர்களில் யாருக்குப் பெரிய எதிர்காலம் என்றால், நிச்சயமாகப் பெரிய திரையாளருக்குதான். சின்னத்திரையில் பணியாற்றுகிறவர்கள் அன்றாடச் சம்பளம் வருகிறதே என்று வாழ்க்கையை தொலைப்பவர்கள். குடும்பம், வாழ்க்கை என்று எதையும் அனுபவிக்கமுடியாமல் திணறும் இவர்களால்தான் நாம் தினந்தோறும் குடும்பக் கதைகளைக் காணமுடிகிறது, முரண் சுவை!

ஓர் உதவி இயக்குனருக்குத் தீராத வயிற்றுவலி. தானாகச் சரியாகிவிடும் என்று பொறுத்திருந்தவர் வலியின் உச்சகட்டத்தில் மருத்துவரிடம் போனார். அவர் சில மாத்திரைகளை எழுதி, ”இதை ரெண்டு நாள் தொடர்ந்து சாப்பிடுங்க. சரியாகிவிடும்” என்றார்.

இரண்டு நாட்கள் கழிந்தது. ம்ஹும். மறுபடியும் டாக்டரிடம் ஓடோடி வந்தார் உதவி இயக்குனர். அவர் ஏதேதோ டெஸ்ட்களை எழுதிக் கொடுத்தார். எப்படியோ, யார் புண்ணியத்திலோ அந்த டெஸ்ட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ரிசல்டுக்காக மறுபடியும் டாக்டரிடம் வந்தார் உதவி இயக்குனர். எல்லாவற்றையும் ஆராய்ந்த மருத்துவர், “தம்பி நீங்க என்ன தொழில் செய்யறீங்க?” என்றார்.

“சார் நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன்” என்றார் உதவி.

“என்ன தம்பி. இதை முன்னாடியே சொல்லக் கூடாதா? இந்தாங்க. இதுல நூறு ரூபா இருக்கு. போயி சரவணபவன்ல வயிறாரச் சாப்பிட்டுட்டு வாங்க. எல்லாம் சரியாயிரும்” என்றார் மருத்துவர்.

செரிக்கவே செரிக்காத எத்தனையோ நிஜங்களில் இதுவும் ஒன்று. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடர்கிறது இந்த அவலம். படப்பிடிப்பு தினங்களில் மட்டும் வயிறார சாப்பிடும் இவர்கள் படப்பிடிப்பு இல்லாத காலங்களில் படுகிற பாடு பெரும் பாடு. உதவி இயக்குனராகச் சேர்வதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும் சிலருக்கு. ஊரிலிருந்து ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னைக்கு வந்திருப்பார்கள். முதலில் வேறு வேலை பார்க்கப் பிடிக்காமல் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் சுற்றி வரும் இவர்களைப் பார்த்தவுடனே அறிந்து கொள்வது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. இப்படி வந்த நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் காலம் தந்த படிப்பினையால் வீடு புரோக்கர்களாகவும், கல்யாண வீட்டில் பந்தி பரிமாறுகிறவர்களாகவும் மாறிவிட்டார்கள். இத்தனைக்கும் நடுவிலே சினிமா கனவுமட்டும் அவர்களை இன்னும் துரத்திவருவது பரிதாபமான உண்மை.

-தொடரும்

உறக்கமற்றவன்

அத்தியாயம் 12

படப்பிடிப்பில் திருமுருகன்

படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பாண்டியராஜன் கலகலப்பானவர். சேர்ந்த புதிதில் தான் செய்த காரியத்தை இப்போதும் நினைத்து நினைத்து சிரிப்பாராம் அவர். யோவ்… ஷாட் ரெடி. போய் ஆர்ட்டிஸ்ட்டை அழைச்சுட்டு வா என்று கூறினார் டைரக்டர். அடுத்த வினாடி பாண்டியராஜன் என்ன செய்தார் தெரியுமா?

நின்ற இடத்திலிருந்தபடியே தூரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு மூத்த நடிகரைக் கைதட்டி அழைத்தார். அவர் திரும்பிப் பார்த்ததும், ஏங்க… உங்களை டைரக்டரு கூப்பிடுறாரு என்றார் எவ்வித தயக்கமும் இல்லாமல். சம்பந்தப்பட்ட நடிகரும் அதிர்ந்து, டைரக்டரும் நடுநடுங்கிப் போனார். யோவ். இப்படியெல்லாம் யாரையும் கூப்பிடக் கூடாது. அருகில் போய் மரியாதையாகத்தான்  கூப்பிடணும். புரியுதா என்று சொல்லிக் கொடுத்தார்.

தங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராக சமீபத்தில்தான் சேர்ந்தார்  தமிழ்செல்வன். அடிப்படையில் கவிஞரான இவருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் பல வருடக் கனவும், போராட்டமும். முதல் படத்திலேயே பெரிய இயக்குனரிடம் தொழில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு. சந்தோஷம் தாங்க முடியவில்லை அவருக்கு. களவாடிய பொழுதுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார் தங்கர்பச்சான். இப்படத்தில் பிரபுதேவாதான் ஹீரோ.

கொஞ்சம் அதிர்ஷ்டசாலி தமிழ்ச்செல்வன். நேரடியாக பிரபுதேவாவுக்கு வசனங்களைப் படித்துக் காட்டும் வேலையைக் கொடுத்தார் தங்கர்பச்சான். பெரும் ஆர்வத்திலிருந்த தமிழ், டயலாக்கை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஏற்ற இறக்கங்களோடு படித்துக் கொண்டே லேசாக நடித்தும் காட்டினார் பிரபுதேவாவுக்கு.

பொதுவாகப் பெரிய ஹீரோக்கள் இதை விரும்ப மாட்டார்கள். படத்தின் இயக்குனரே கூட சொல்லிக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாது அவர்களது ஈகோ. இத்தனை படத்தில் நடிச்சிட்டோம். நமக்கு போய் நடிக்க சொல்லித் தருவதா என்று அலட்டிக் கொள்வார்கள். அதிலும் உதவி இயக்குனர்கள் நடிப்புச் சொல்லிக் கொடுத்தால் எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள். இதையெல்லாம் அறிந்திருக்கவில்லை தமிழ். அதற்காக இவரை பிரபுதேவா கடிந்து கொள்ளவும் இல்லை. ஆனால், சிரித்துக் கொண்டே “நீங்க புதுசா சேர்ந்திருக்கீங்க போலிருக்கு. கரெக்டா?” என்று கேட்டதுடன் “நீங்க டயலாக்கை மட்டும் படிங்க. எப்படி நடிக்கணும் என்பதை நான் பார்த்துக்கிறேனே… உங்களுக்கு எதுக்குக் கஷ்டம்” என்றார் மிக மிக நாகரிகமாக.

ஏதோ இவராக இருந்ததால் தப்பித்தார் தமிழ். இல்லையென்றால்?

இன்னும் சில உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள். மிக சினேகாமாகப் பழகுவார்கள் நடிகர் நடிகைகளிடம். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தப் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே இவர்களை கதை சொல்லி கவிழ்த்து கால்ஷீட் வாங்கி அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற வெறியோடு பழகுவார்கள். இது எப்போதாவது ஒரு கட்டத்தில் இயக்குனருக்குத் தெரியவரும்போது அந்த யூனிட்டிலிருந்தே பாதியில் நீக்கப்படுவார்.

நம்மிடம் வேலை செய்து கொண்டிருப்பவன் அதற்குள் படம் எடுக்க அனுமதிப்பதா? கூடவே கூடாது என்ற மன அழுத்தத்தால் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஒருவேளை தனது உதவி இயக்குனர் சொல்கிற கதை அந்த ஹீரோவுக்குப் பிடித்துப் போய்விட்டால் இந்தக் கதையில் கவனம் இல்லாமல் போய்விடும். இப்போது நடிக்கிற படத்தை விட இது முன்பே ரிலீஸ் ஆகிவிட்டால் நமக்கு பெரிய பிரேக் கிடைங்குமே என்று அந்த ஹீரோ நினைத்தால் இன்னும் சுத்தம். இந்தப் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு நல்ல கதை சொன்ன அந்த டைரக்டரை இழுத்துக் கொண்டு சென்று விடுவார். இந்த அபாயங்களிலிருந்து தப்பிக்கத்தான் தன்னிடம் பணியாற்றுகிற உதவி இயக்குனர் ஹீரோவிடம் கதை சொல்ல முயல்கிறார் என்று தெரிந்தாலே யூனிட்டிலிருந்து விரட்டி விடுவார் இயக்குனர். இது போல ஏராளமான உதவி இயக்குனர்கள் பாதியில் நீக்கப்பட்ட சம்பவங்கள் கோடம்பாக்கத்தில் ஏராளம்.

இப்படியெல்லாம் அவசரப்படாமல் தனக்கான காலம் வரும் வரைக்கும் காத்திருந்து வெற்றி பெறுவதுதான் முறை. அதுதான் அழகும் கூட!

இதெல்லாம் சினிமாவில். சின்னத்திரையில்? அங்கும் உதவி இயக்குனர்கள் உண்டே?

சைஸ்தான் சின்னதே தவிர, பெரிய திரையை விட இதில் பணியாற்றுகிற உதவி இயக்குனர்களின் பணி ரொம்பவே அதிகம். இரவு தெரியாது. பகல் தெரியாது. வேலை வேலை வேலை… இது ஒன்றுதான் சின்னத்திரை உதவி இயக்குனர்களின் ஒரே தாரக மந்திரம். ஒரு நாள் தாமத்தித்தால் கூட சீரியல் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் ஓடிக் கொண்டேயிருப்பார்கள். இதில் டிஆர்பி ரேட்டிங் என்ற அரக்கனின் விரட்டலையும் சமாளிக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் சமாளிக்கிற இவர்களை சினிமாவில் யாரும் உதவி இயக்குனராகச் சேர்த்துக் கொள்வதில்லை. சீரியல்ல வேலை பார்த்திருக்கேன் என்று சொன்னால், அப்படியா பிறகு பார்க்கலாம் போயிட்டு வாங்க என்பதுதான் பதில்!

இவர்கள், எல்லாவற்றையும் ஸ்லோவாகச் சிந்திப்பார்கள் என்று நினைப்பார்களோ என்னவோ? ஆனால் இதே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் ஒருவர் திருமுருகன். இவரிடம் பணியாற்றிய அதே உதவி இயக்குனர்கள்தான் சினிமாவிலும் பணியாற்றினார்கள். அப்படியிருந்தும் இவரது எம்(டன்) மகன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

இன்றைய தினம் சின்னத்திரை ஷங்கர்கள் திருச்செல்வமும், திருமுருகனும்தான். இவர்கள் சுமார் பத்து உதவி இயக்குனர்களை வைத்திருக்கிறார்கள். இது தவிர நான்கு டீம் தனியாக செயல்படும். ஒரு டீமுக்கு ஒரு அசோசியேட் இயக்குனர். மூன்று உதவி இயக்குனர்கள் இருப்பார்கள். ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடக்கும். சுமார் ஒரு மாத எபிசோடுகளை முன்பே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு.

50 முதல் 100 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானால்தான் ஒரு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கும். ஆனால் நாம் சொன்ன திருச்செல்வம், திருமுருகன் போன்ற இயக்குனர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. இவர்கள் சீரியலுக்கு முதல் வாரத்திலிருந்தே டிஆர்பி ரேட்டிங் வந்து விடும். எனவே இவர்களிடம் சேர்வதற்கு பலத்த போட்டியே இருக்கிறது சின்னத்திரையில். அதுமட்டுமல்ல, இவர்கள் சுதந்திரமாக சிந்திக்கலாம். மற்றவர்களுக்குப் பிரச்னையே வேறு. டிஆர்பி ரேட்டிங்குக்கு தகுந்த மாதிரிதான் கதையை நகர்த்தவே வேண்டும். எனவே கதை விவாதத்தில் துவங்கி கை வலிக்க வசனம் எழுதுகிறவர் வரைக்கும் டென்ஷனோ டென்ஷன்தான் தினந்தோறும். என்னய்யா பண்றீங்க? டிஆர்பி ரேட்டிங் இந்த வாரம் குறைஞ்சிருக்கு. அந்த கேரக்டரை புடிச்சு சாவடிங்க என்று தயாரிப்பாளரே கதறுகிற அளவுக்கு போகும் நிலைமை.

தினந்தோறும் கல்யாணம், தினந்தோறும் கச்சேரி என்பதால் சினிமா மாதிரி எல்லா வேலைகளையும் ஒருவரே இழுத்துப் போட்டுக் கொள்ள மாட்டார். கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, டைரக்ஷன் என்று ஒரு டஜன் ஐட்டங்களை டைட்டிலில் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் ஒரு சில திரைப்பட இயக்குனர்கள். அப்படி ஆசை இருந்தாலும் பணியாற்ற முடியாதளவுக்கு நெருக்கடி இருக்கும் சின்னத்திரை இயக்குனர்களுக்கு. அதனாலேயே திரைக்கதையை ஒருவரும், வசனத்தை ஒருவரும், டைரக்ஷனை வேறொருவரும் கவனிப்பார்கள். இங்குதான் உதவி இயக்குனர்களின் பணியே துவங்குகிறது.

திரைக்கதையை வாங்கிக் கொண்டு போய் வசனகர்த்தாவிடம் கொடுப்பது. அவரிடமிருந்து வாங்கிக் கொண்டுபோய் டைரக்டரிடம் கொடுப்பது. இது ஒரு சில உதவி இயக்குனர்களின் தினசரி பணியாக இருக்கும். மற்றவர்களுக்கு ஸ்பாட் வொர்க்!

ஒரு சீரியலைத் துவங்கும் முன் எபிசோட் ப்ளோ சாட் என்று ஒரு திட்ட வரைபடத்தைப் போடுகிறார்கள் இந்த குழுவினர். ஒரு குடும்பம். அதற்கு எதிரான இன்னொரு குடும்பம். இந்த இரு குடும்பத்திலிருந்து பிரிகிற கேரக்டர்கள் எத்தனை பேர். அவர்களின் சொந்தங்கள், நண்பர்கள் என்று ஆலமரக் கிளைகளைப் போல அது இஷ்டத்துக்கு விரியும். முதல் ஐம்பது எபிசோடுகளில் வருகிற ஒரு கேரக்டர் திடீரென்று ஐநூறாவது எபிசோடில் நுழைவதெல்லாம் இந்தக் கிளையின் சூட்சுமம்தான். இந்த வரைபடம்தான் எவ்வித கேரக்டரையும் மறந்துவிடாமல் கடைசிவரை இழுத்துச் செல்ல உதவும். இப்படி ஒரு சார்ட்டை உதவி இயக்குனர்கள் இல்லாமலா உருவாக்க முடியும்?

– தொடரும்

உறக்கமற்றவன்

அத்தியாயம் 11

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அன்புவின் அனுபவம் ஒரு டைப்பான சுவாரஸ்யம். தாஜ்மஹால் படப்பிடிப்பு. கதாநாயகி ரியாசென் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு கண்ணீரோடு மாட்டு வண்டியில் பயணிப்பது போல காட்சி. கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு அழகான பிரதேசத்தில் படமாக்கிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. குளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்ற வித விதமான கோணங்களில் படமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார் அன்பு. புது மணப்பெண்ணான ரியாசென் கழுத்தில் அணிந்திருக்க வேண்டிய தாலி மிஸ்சிங்.

டைரக்டரிடம் சொன்னால் இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க என்று அடி விழுந்தாலும் விழும். ஏனென்றால் இந்த தவறுக்கு பொறுப்பு கன்ட்டினியுடி பார்க்க வேண்டிய உதவி இயக்குனர்தான். அவ்வளவு பதற்றத்திலும், நைசாக ஒரு காரியம் செய்தார் அன்பு. ஒளிப்பதிவாளர் கண்ணனின் காதருகே போய் விஷயத்தைச் சொன்னார். முதலில் திடுக்கிட்ட அவர், அந்த ஷாட் முடிகிற வரைக்கும் காத்திருந்தார்.

பிறகு மெல்ல பாரதிராஜாவிடம் போய், அந்தப் பொண்ணு மாலையை கழட்டுற மாதிரி ஒரு ஷாட் எடுத்துரலாமே என்றார். ம்ம்ம்.. சரிய்யா என்றார் அவரும். அந்த இடைவெளியில் ஒரு தாலியை அவசரம் அவசரமாக ரியா கழுத்தில் மாட்டினார்கள். அதையும் ஜாக்கெட்டுக்குள் பதுங்கியிருப்பது மாதிரி மாட்டினார்கள். மாலையைக் கழற்றும்போது ஜாக்கெட்டுக்குள்ளிருந்து அந்தத் தாலி வெளியே வருவது போலவும் ஒரு ஷாட் எடுத்தார் கண்ணன். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒளிப்பதிவாளரிடம் சரண் அடைந்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்பதும் ஒரு யுக்தி.

இப்படி ஒவ்வொன்றையும் ஆரம்பித்தால் எல்லா திரைப்படத்திலிருந்தும் ஒரு காட்சி தேறும் என்பதால் அடுத்தப் பகுதிக்குப் போவோமோ?

நடிகர் நடிகைகளைக் கையாளும் விதம் :

செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்துக் காட்டியதைப் போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.

உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தைச் சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஷாட் போகும். அதிலும் முடியவில்லை என்றால் அடுத்தது. இப்படி ஷாட்டுகள் தொடர்ந்து கொண்டே போகும்போது ‘ஷாட் ஒன்று இரண்டு’ என்று உரக்கச் சொல்லிக்கொண்டே கிளாப் அடிப்பார் உதவி இயக்குனர். ஒன்று இரண்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போய் ஷாட் நம்பர் பத்து என்று சொல்கிறபோது எவ்வளவு நம்பிக்கையோடு அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும், முகம் இருண்டுவிடும் நடிகருக்கு. அதனால் புத்திசாலி உதவி இயக்குனர் என்ன செய்வார் தெரியுமா?

ஷாட் ஒன்… ஷாட் டூ என்று அடுக்கிக் கொண்டேயிருப்பார். ஒரு கட்டத்தில் அதை நீளவிடாமல் திடீரென்று ஷாட் ஒன் ஏ என்று சுருக்கிக் கொள்வார். அது பி, சி என்று நகருமே தவிர பத்தை நோக்கிப் போகாது. இந்த எண்ணிக்கை யுக்தி மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய விஷயமாகத் தெரியாது. உளவியல் ரீதியாகப் பார்த்தால் கிரேட்! அடிக்கடி ரீ டேக் வாங்குகிற ஹீரோ சோர்வடைய மாட்டார் அல்லவா?

இன்னொரு விஷயம். எவ்வளவுதான் நெருங்கிப் பழகிய நடிகர் என்றாலும் பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதையை உதவி இயக்குனர் என்பவர் கொடுத்தே ஆக வேண்டும். அந்த நேரத்தில் முதுகைத் தட்டிப் பேசுவது, மேலே விழுந்து நசுக்குவது போன்ற கீழ் குணங்களோடு நடந்து கொண்டால் அது அவரது எதிர்காலத்தையே குழி தோண்டிக் கூடப் புதைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.

அஜீத் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் நித்யா. படப்பிடிப்பு முடிந்தால் பணி முடிந்ததென்று வீட்டுக்கு போய்விடுகிறவர் அல்ல அஜீத். தனது யூனிட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்களோடு பேட்மிட்டன் ஆடுவார். வீட்டுக்கு வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். இப்படியே அஜீத்திடம் மிக நெருங்கிப் பழக ஆரம்பித்தார் நித்யா. இந்தப் பழக்கம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், நித்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து அவரை விரைவில் இயக்குனராக்கிவிட வேண்டும் என்று அஜீத்தே ஆசைப்படுகிற அளவுக்கு.

விதி இருக்கிறதே, அது தேர் ஏறியும் வரும். சில நேரங்களில் திண்ணையிலும் படுத்திருக்கும். இந்த பாழாய்ப் போன விதி, நித்யாவுக்கு அவர் சொன்ன ஒரு ஜோக்கில் குடியிருந்தது. ஒரு மாலை நேரம் அஜீத் வீட்டுக்குப் போயிருந்தார் நித்யா.

சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். ஜோக்கடிப்பார்கள். அந்த ஜோக்குக்கு அவர்களே குய்யோ மொய்யோ என்று குரல் விட்டு சிரிப்பார்கள். அப்படியே ஓடிவந்து அந்த ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மையும் ஒரு தாக்கு தாக்குவார்கள். அதாவது நமது முதுகில் ஓங்கி தட்டிவிட்டு சிரிப்பார்கள். இவர்கள் ஜோக் சொல்ல ஆரம்பிக்கும்போதே பாதுகாப்பான தூரத்தில் நின்று அதை ரசிக்கப் பழகியிருப்பார்கள் சக தோழர்கள். நித்யாவும் அப்படி ஒரு ஜோக்காளிதான்.

திருமதி அஜீத்தும் அந்த சந்திப்பின்போது இருந்தார். ஏதோ ஒரு ஜோக் சொல்லிவிட்டு அப்படியே எழுந்து ஓடிப்போய் அஜீத்தின் வயிற்றில் குத்திவிட்டார் நித்யா. கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கக் கூடிய பெரிய ஜோக் போலிருக்கிறது. அதற்கேற்றாற்போன்ற முரட்டுக் குத்து அது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி கோபத்தில் விருட்டென்று எழுந்து உள்ளே போக, முகத்தில் வலியைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமானார் அஜீத். அந்த அறையே வேறொரு மூடுக்குப் போனது. “சரி, நான் நாளைக்கு வர்றேன்” என்று கிளம்பினார் நித்யா. மறுநாள் அவர் போனபோது பழைய அஜீத்தைப் பார்க்க முடியவில்லை அவரால். நித்யா அஜீத்தை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அந்த சம்பவத்தால் நிறைவேறாமல் போனது. பல வருடங்களுக்குப் பின் அவர் எடுத்த ‘வேதா’ என்ற படமும் ஓடவில்லை. நித்யாவுக்காக காத்திருந்த ஒரு பெரிய வாழ்க்கையை வெள்ளந்தியான அவரது குணமே காவு வாங்கியது.

நடிகர், நடிகைகளைப் படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும்.

மீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவேன் கதவை தட்டி, ஷாட் ரெடி சார். வாங்கன்னு சொல்வது அவ்வளவு நாகரிகம் அல்ல. அப்படியென்றால் என்ன செய்வதாம்? பெரும்பாலும் இந்த கேரவேன் கதவுகளுக்கு வெளியே தங்கள் மேக்கப் மேனையோ காஸ்ட்யூமரையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் நடிகர்கள். அவர்களிடம் சொல்லி கதவை திறக்க செய்யலாம். அப்படி திறக்கிற நேரத்தில் தனது வருகையை அவர்களுக்கு அறிவித்துவிட்டு கீழேயே நிற்கலாம்.

டைரக்டர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் ஒரு காமெடி செய்தார்.

அது அடுத்தவாரம்.

உறக்கமற்றவன்

அத்தியாயம் 10

பொக்கிஷம் - பத்மப்ரியா

சேரன் இயக்கிய பொக்கிஷம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது. கொல்கத்தாவில் வேலை பார்க்கும் கதாநாயகன், நாகப்பட்டிணத்தில் இருக்கும் பத்மப்ரியாவுடன் தினமும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்வது போல ஏராளமான காட்சிகளை அமைத்திருந்தார் சேரன். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்தது. சில முக்கியமான காட்சிகளை அங்குள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் எடுக்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளுடனும் கொல்கத்தா கிளம்பியது படக்குழு. கடைசி நேரத்தில்தான் ஒரு கழுத்தறுப்பு சம்பவம். படப்படிப்புக்கு பர்மிஷன் வாங்கித் தரவேண்டிய புரடக்ஷன் மேனேஜருக்கு தவிர்க்க முடியாத சங்கடம். நான் வர ஒரு வாரம் ஆகும். எப்படியாவது மேனேஜ் பண்ணிக்குங்க என்று இவர்களை மட்டும் அனுப்பி வைத்துவிட்டார். டம்மியாக இவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தயாரிப்பு நிர்வாகி நமக்கு பிரயோஜனப்பட மாட்டார் என்பதை அங்கு சென்று இரண்டே நாட்களில் புரிந்து கொண்டார் சேரன்.

வேறு வழியில்லாமல் உதவி இயக்குனரான ஜெயந்தனிடம் தயாரிப்பு நிர்வாகி வேலையை தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டார். கல்கி வார இதழில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தவர் ஜெயந்தன். எல்லாவற்றையும் விட ஆங்கிலத்தில் பேசக் கூடியவர் என்பதால்தான் இந்த பொறுப்பு.

கொல்கத்தாவுக்கு போய் இறங்கிய முதல் நாளே பெரிய கண்டத்திலிருந்து மீண்டார் ஜெயந்தன். அது பெரிய சுவாரஸ்யம்… இந்த படத்தின் முதுகெலும்பே சேரன் பத்மப்ரியாவுக்கு இடையேயான கடிதப் போக்குவரத்துதான். கொல்கத்தாவின் தலைமை அஞ்சலகத்தில் படம் எடுக்க பர்மிஷன் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவு தூரம் போனதற்கு அர்த்தமே இல்லை. ஆனால் அங்கு நடந்த அந்த சம்பவம் இருக்கிறதே, அது அத்தனை பேரையும் ‘பேக்கப்’ செய்திருக்கும் சென்னைக்கு.

கொல்கத்தாவில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றாலும் அங்குள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்தான் அனுமதி கடிதம் வாங்கவேண்டும். ஜெயந்தனும் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்தார். அவரது பாக்கெட்டில் அந்த அதிகாரிக்கு தருவதற்காக தயாராக கவரிடப்பட்ட ஐயாயிரம் ரூபாய் பத்திரமாக இருந்தது. [எப்போதும் எல்லா இடங்களிலும் நடப்பது இது.]

அவரிடம், தமிழ் நாட்டிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறோம் என்பதை கூறியவர், இதற்கு முன்பு எத்தனை படங்கள் எடுத்திருக்கிறோம். எத்தனை முறை மாநில அரசின் விருதுகளை வாங்கியிருக்கிறார் இந்த இயக்குனர் என்பதையெல்லாம் ஒரு பயோ-டேட்டாவாக தயார் செய்து எடுத்து சென்றிருந்தார் ஜெயந்தன். அதையெல்லாம் அதிகாரியின் டேபிளில் பவ்யமாக வைத்தார். அவர் படித்துவிட்டு இவர் பக்கம் திரும்பியதும், கையில் இருந்த லஞ்ச கவரை மெதுவாக அவர் டேபிளின் ஓரத்தில் வைக்க, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அதையும் ஒரு பயோ-டேட்டா கவரோ என்ற நினைப்புடன் பிரிக்க ஆரம்பித்தார் அதிகாரி. உள்ளே பணம் இருப்பதை பார்த்ததும் அவரது மீசை துடிக்காத குறை. கண்கள் சிவக்க ஜெயந்தனை பார்த்து ஆங்கிலத்தில் பொறிய ஆரம்பித்தார்.

பிறகுதான் புரிந்தது ஜெயந்தனுக்கு, அதிகாரி ஒரு கம்பீரமான கம்யூனிஸ்ட் என்பது. அவர் தன்னை கெட் அவுட் என்று சொல்வதற்குள் இடையே குறுக்கிட்டு ‘காம்ரேட்….’ என்றார் கம்பீரமாகவும் அன்பாகவும்! “நானும் உங்களை மாதிரிதான். ஒரு கம்யூனிஸ்ட்” என்றவர், மளமளவென்று தான் படித்த கம்யூனிசம் தொடர்பான புத்தகங்களை பற்றி பேச ஆரம்பித்தார். இறுதியாக “சார். இப்படியே எங்க ஊர்ல பழக்கிட்டாங்க. ஆனால் உங்க ஊர்ல இப்படியெல்லாம் இல்லை என்பதை பார்த்ததும் எனக்கு பெருமையா இருக்கு. ஐ சல்யூட் யூ காம்ரேட்” என்றார்.

சட்டென்று அந்த அறையில் ஏசி போட்ட மாதிரி குளிர்ந்தார் காம்ரேட் அதிகாரி. பிறகென்ன? அஞ்சல் அலுவலகத்தில் மூன்று நாட்கள் படம் எடுக்க பர்மிஷன் கிடைத்தால் போதும் என்று நினைத்த இவர்களுக்கு பத்து நாட்கள் பர்மிஷன் கொடுத்தார் அதிகாரி. இதுதான் ஒரு உதவி இயக்குனரின் சாமர்த்தியம்.

அங்கே கம்பீரமாக போலீஸ் அதிகாரியிடம் பேசிய அதே ஜெயந்தன் நாகூரில் பிச்சையெடுக்காத குறையாக அலையவும் நேரிட்டது. இது உதவி இயக்குனர்களின் விதி!

பொக்கிஷம் படத்திற்காகதான் இந்த சோதனையையும் அனுபவித்தார் அவர். சேரனும் அவரது அப்பாவும் பத்மப்ரியா வீட்டில் பெண் கேட்பதற்காக நாகூர் வருவார்கள். வந்தவர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி போட்டு விருந்து கொடுப்பது போல காட்சி. இலையில் நிறைய மட்டன் எலும்புகள் கிடக்க வேண்டும் என்று நினைத்தார் சேரன். இரண்டு இலை நிறைய மட்டன் எலும்பு திரட்டிகிட்டு வந்திருங்க என்று கட்டளையிட்டார் ஜெயந்தனிடம்.

அங்குதான் வந்தது சோதனை. இவர்கள் போயிருந்த நேரத்தில்தான் மட்டன் விலை தாறுமாறாக ஏறியிருந்தது. யார் வீட்டுக்குப் போனாலும் சிக்கன் எலும்புகள்தான் தேறின. டைரக்டர் கேட்டது மட்டன் எலும்பு. சார் ஸ்கிரிப்ட்ல வேணும்னா சிக்கன்னு மாத்திக்கலாமா என்று கேட்க முடியாது. கேட்டால் தெரியும் சங்கதி! வேறு வழியில்லாமல் அந்த மத்திம டவுனை சுற்றி சுற்றி வந்தார்கள் ஜெயந்தனும் மற்றொரு உதவி இயக்குனரும்.

ஒரு ஓட்டலில் இவர்கள் கேட்ட மட்டன் எலும்பு கிடைத்தது. ஆனால் முதலாளி கைகாட்டிய இடம், ஓரமாக வைக்கப்பட்டிருந்த எச்சில் தொட்டி. தம்பி அதுல சாப்டுட்டு போட்ருப்பாங்க. நீங்களே கைய விட்டு எடுத்துக்கங்க என்றார் அவர். ஈகோவை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு தொட்டியில் கைவிட்டார்கள் இருவரும். நிறைய கிடைத்தன எலும்புகள். அப்படியே சேரனின் பாராட்டும்.

நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தோம். இப்படி போய் எச்சில் தொட்டியில் கை விடுவதா என்று அவர் நினைத்திருந்தால், பொக்கிஷம் படத்திலிருந்து பாதியிலேயே வீட்டுக்கு வந்திருக்க வேண்டியதுதான்!

– தொடரும்

உறக்கமற்றவன்

அத்தியாயம் 9

ரிலீஸ் தினத்தன்று தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களின் கருத்தை அறிவதும், அதை உடனுக்குடன் இயக்குனருக்குச் சொல்வதும் கூட உதவி இயக்குநர்களின் பணிதான். ஏனென்றால் இந்தப் படம் போனாலும் அடுத்தப் படத்தில் இந்த இயக்குனருடன்தானே வேலை பார்க்க வேண்டும்?

சில நேரங்களில் கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களுக்கு உதவி இயக்குனர்களை அனுப்பி வைப்பார் டைரக்டர். எந்த இடத்தில் ரசிகனுக்கு போர் அடிக்கிறது. எந்த இடத்தில் கதை தொய்வடைகிறது. எந்த இடத்தில் ரசிகன் எழுந்து வெளியே செல்கிறான் என்ற அத்தனை விவரத்தையும் இயக்குனருக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த விவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்கிற அவர், சில காட்சிகளுக்கு இங்கிருந்தே கட் கொடுப்பார். தியேட்டர் தியேட்டராகச் சென்று டைரக்டர் குறிப்பிட்ட பகுதிகளை கட் செய்வதும், அப்படி கட் செய்யப்பட்ட பிலிம்களை மீண்டும் சென்னைக்குக் கொண்டு வருவதும் உதவி இயக்குனர்களின் பணிதான்.

படம் வெற்றி என்றால் பத்திரிகை விமர்சனங்களைத் தொகுத்து ஒரு பைண்டிங் காப்பியாகத் தயாரித்து இயக்குனரிடம் தரலாம். அதுவே தோல்வி என்றால் டைரக்டர் முகத்தில் விழிப்பதே கொஞ்சம் சிரமம்தான். சுமார் ஒரு மாத காலத்திற்காவது இஞ்சி தின்ற எபெக்டில் இருப்பார் அவர். இந்த நேரத்தில்தான் அவரை அடிக்கடி சென்று பார்க்க வேண்டும். அற்ற குளத்து அறுநீர் பறவையாக ஓடிவிடும் உதவி இயக்குனர்களை அவர் மறப்பதே இல்லை. மதிப்பதும் இல்லை.

சில படங்கள் உலகப் பட விழாக்களில் கலந்து கொள்கிற அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இருக்கும். அத்தகைய படங்களுக்குத்தான் உதவி இயக்குனர்களின் பணி அவசியம் தேவைப்படும். இந்தப் படங்களில் இடம் பெறும் ஒவ்வொரு டயலாக்கும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சப் டைட்டில் போடப்படும். கோடம்பாக்கத்தில் அதற்கென்றே தனி திறமைசாலிகள் இருக்கிறார்கள். அப்படியென்றால் உதவி இயக்குனர்களின் வேலை என்ன? இப்படி சப் டைட்டில் போடுவதற்கு வசதியாக படத்தின் பிரதியைக் கொடுத்து உதவுவது. சப் டைட்டில் போடப்பட்ட படத்தின் டிவிடியை உலகப் படவிழா குழுவுக்கு அனுப்பி வைப்பது போன்ற வேலைகளை கவனிக்கலாம்.

ஊருக்குப் போவதைப் போல லக்கேஜோடு போய் இறங்குவது மட்டும் உதவி இயக்குனர்களின் வேலையல்ல, போருக்குப் போவதைப் போல புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் படப்பிடிப்பில். எங்கு, எப்போது, என்ன நடக்கும் என்பதை யாரால் அறிய முடியும்?

அந்நியன் படத்தில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் ஒரு கராத்தே ஃபைட் பார்த்திருப்பீர்கள். ஒருவர் முதுகில் ஒருவர் ஏறி வேக வேகமாக ஓடுவார்கள். இந்தக் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது நாலைந்து ஃபைட்டர்களின் முகங்கள் சுவற்றில் மோதி தாவங்கட்டை பிளந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதையெல்லாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் முதுகில் கட்டப்பட்ட ரோப், பில்டிங்குக்கு அந்தப் பக்கம் உள்ள லாரியில் இணைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அந்த லாரியை இயக்க வேண்டும். லாரி நகரும்போது அதில் கட்டப்பட்டிருக்கும் ரோப்பும் உயரும். இதில் அலாக்காக தூக்கிச் செல்லப்படும் ஃபைட்டர்கள் கீழே நிற்கிற மற்ற ஃபைட்டர்களின் முதுகில் ஏறி ஓடுவதைப் போல காட்சி அமையும். இந்த லாரியை இயக்கும் போது குறிப்பிட்ட ஒரு புள்ளியில் சென்று மிகச் சரியாக நிறுத்த வேண்டும். ஷூட்டிங்கின் போது டிரைவர் வண்டியை நிறுத்த வேண்டிய அந்த இடத்தில் ஒரு மார்க் மட்டும் வரையப்பட்டிருந்ததாம்.

இதை மேற்பார்வையிடுவது ஒரு உதவி இயக்குனர். இவரது கட்டுப்பாட்டையும் மீறி அந்த குறிப்பிட்ட புள்ளியை தாண்டி லாரி நிறுத்தப்பட்டதால் வேகமாக மேலே உயர்த்தப்பட்ட இவர்கள் மேலே உள்ள சுவற்றில் மோதி சிதைந்தவைதான் இந்த முகங்கள். இதற்கு உதவி இயக்குனர் என்ன செய்வார்? அது டிரைவரின் தவறுதானே என்று உச் கொட்டினாலும், அவர் சற்று கடுமையாக சில விஷயங்களை பின்பற்றியிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம். அந்த லாரி டிரைவர் வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்தால் கூட அந்த மார்க்கை தாண்டி சிறிதளவு கூட முன்னேற முடியாதபடி ஒரு பெரிய மரக்கட்டையை போட்டிருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா?

சரி போகட்டும். நாம் உதவி இயக்குனர்களின் சாதுர்யத்தைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம்? இதே அந்நியன் படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று. படித்தபின் டைரக்டர் ஷங்கரின் மீது உங்களுக்கு கோபம் கூட வரலாம்.

அந்நியனுக்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு படத்தில். விக்ரம் ஏன் அப்படி ஒரு மன நோயாளி ஆனார் என்பதற்கான வலுவான காரணம் அது. அன்பான தங்கையை மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இழந்திருப்பார் விக்ரம். சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சார வயர் விழுந்து கிடக்கும். அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவள் இறந்திருப்பாள் என்பதுதான் கண்ணீர் வரவழைக்கும் அந்த பிளாஷ்பேக். சிறுவயது விக்ரமுக்கு தங்கையாக அனு என்ற சிறுமி நடித்திருந்தாள்.

மின்சாரம் தாக்குவது போல காட்சியை எடுத்து முடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல, இந்தப் பெண் தன் குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பானவளாக இருந்தாள் என்பதை உணர்த்தவும் ஏராளமான காட்சிகள் முன்பே எடுக்கப்பட்டுவிட்டன. சிறிது நாட்கள் கழித்து இறந்து போன அந்தச் சிறுமியை பாடையில் ஏற்றிக் கொண்டு போவது போல காட்சிகளை எடுக்க விரும்பினார் ஷங்கர்.

ஸ்ரீபெரும்புதூரில் படப்பிடிப்பு. ஒரு குறுகலான தெருவையும், ஒரு வீட்டையும், சாவு வீட்டுக்கான செட்டப்பையும் அங்கே ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஸ்பாட்டுக்கு வந்த சிறுமிக்கு காட்சியை விளக்கினார் உதவி இயக்குனர். அவ்வளவுதான். அழ ஆரம்பித்துவிட்டாள் அந்த சிறுமி. “நான் பொணமா நடிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். யார் யாரோ பேசினார்கள். எந்தெந்த முறையிலோ கெஞ்சினார்கள். அவளது பெற்றோர்கள் சொல்லியும் மசியவில்லை அவள். ஷங்கரும் முடிந்தவரை சொல்லி பார்த்தார். அப்படி நடிக்க முடியாது என்பதற்கு அவள் சொன்ன காரணம், “நான் பிணமாக நடித்துவிட்டு ஸ்கூலுக்கு போனால் என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்னை பேய் என்று கிண்டல் செய்வார்கள். அதனால் முடியாது” என்றாள்.

இப்படியே நேரம் போய் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது யூனிட். இந்த சிறுமியை நீக்கிவிட்டு வேறொரு சிறுமியை நடிக்க வைக்கலாம் என்றால், இதற்கு முன்பு எடுத்த காட்சிகள் எல்லாவற்றிலும் இந்த சிறுமியை மாற்றியாக வேண்டும். ரீ ஷூட் என்றால் ஏகப்பட்ட பொருட் செலவு, நேர விரயம். என்ன செய்வது? அப்போதுதான் ஒரு உதவி இயக்குனர் ஷங்கரின் காதில் கிசுகிசுத்தார். “தூக்க மாத்திரை கொடுத்து அனுவை தூங்க வச்சிரலாமா?”

வேறு வழி? மதிய சாப்பாட்டில் தூக்க மாத்திரையைக் கலந்தார்கள் சிறுமிக்கு. அடுத்த அரை மணி நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிய அனுவை வைத்து எல்லா காட்சிகளையும் படம் பிடித்தார்கள். படம் வெளியான பின்புதான் இப்படி ஒரு காட்சியில் நடித்ததே அவளுக்குத் தெரிய வந்தது. நியாயமாகப் பார்த்தால், இது நியாயமில்லைதான். ஆனால் ஒரு உதவி இயக்குனரின் குறுக்கு யோசனை பெரும் சிக்கலில் இருந்து இயக்குனரை விடுவித்தது அல்லவா?

– தொடரும்